26 JUN, 2025 | 07:13 AM

அபிலாஷனி லெட்சுமன்
இந்தியாவின் கேரள கடற்பரப்பில் இடம்பெற்ற MSC என்ற கப்பல் விபத்தினால் தொன் கணக்கான பிளாஸ்ரிக் துகள்கள் தென் ஆசிய கடற்பரப்பில் கலந்துள்ளளன. பிளாஸ்ரிக் துகள்களினாலான மாசாக்கத்தினால் இலங்கை பாதிக்கப்படுகின்றமையால் அதற்கான பொறுப்புக்கூறலை சிவில் சமூக அமைப்புக்கள் கப்பல் நிறுவனங்களிடம் கோருகின்றன.

கொழும்பு 07 இல் அமைந்துள்ள தேசிய நூலகத்தில் புதன்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து தகவல் வெளியிடுகையிலேயே சிவில் அமைப்புக்கள் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளன.
“எக்ஸ்பிரஸ் பேரள் (X-Press Pearl) அனர்த்தம் இடம்பெற்று 4 ஆண்டுகளின் பின்னர் பிளாஸ்ரிக் துகள்கள் தெற்காசியா மற்றும் இலங்கைக் கரையோரங்களை அலைகளினூடு வந்தடைவதை கிறீன் பீஸ் தெற்காசியா வன்மையாக கண்டிக்கின்றது” என Centre for Environmental Justice இன் தலைவர் ஹேமந்த விதானகே தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும், தெரிவிக்கையில்,
2025 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி எம். எஸ். சீ. எல்சா - 3 (MSC ELSA 3) எனும் கப்பல் கேரளக் கடற்கரையில் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அதே கடற்பரப்பில் ஜூன் 9 ஆம் திகதி முதல் தீப்பிடித்து எரிந்து வரும் மற்றொரு பாரிய சரக்குக் கப்பலான வான்ஹாய் 503 (WAN HAI 503) இலிருந்து மேலதிக கொள்கலன்கள் காணாமல் போனமையையும் பெரும் அச்சுறுத்தலாக காணப்படுகினது. இதற்கு நாம் கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.
தெற்காசிய கடற்பரப்பில் சில வாரங்களுக்குள் குறிப்பிடத்தக்க அளவு எரிபொருள், நச்சுப்பொருட்கள் மற்றும் பிளாஸ்ரிக் துகள்களைக் கொண்ட இரண்டு கொள்கலன் கப்பல் மூழ்கியிருப்பது அல்லது மூழ்கும் அபாயத்திற்கு உள்ளாகி இருப்பது என்பது முன்னெப்போதும் இல்லாத ஒரு நிலமையாகும்.
பருவப்பெயர்ச்சிக் காலநிலை மற்றும் பருவகால நீரோட்டங்களால் ஆபத்தான பதார்த்தங்கள் கேரளா, தமிழ்நாடு மற்றும் இலங்கையின் கடலோரப் பல்வகைமை மற்றும் உள்ளூர் சமூகங்களை நோக்கி நகர்ந்து வருகின்றது. இதனால் கடல்சார்குழல், மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றின் பொருளாதாரங்களுக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிறீன் பீஸ் (Greenpeace) மற்றும் பிற கூட்டணி அமைப்புக்கள் இந்தியாவின் இரண்டு மாநிலங்கள் மற்றும் இலங்கைக் கடற்கரையின் மாதிரிகளை பரிசோதனை செய்தபோது பிளாஸ்ரிக் துகள்கள் மற்றும் இரசாயனங்கள் ஆகியவை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் MSC ELSA3 கப்பல் விபத்தினையே சுட்டிக் காட்டுகின்றன.
"எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் அனர்த்தத்திலிருந்தே இலங்கை இன்னும் மீளவில்லை. அவ்வாறிருக்க தற்போது இன்னொரு மாசாக்கத்தினை எதிர்கொள்கின்றோம். இது வெறும் விபத்து அல்ல. மாறாக இது ஒரு ஒழுங்குமுறையின் தோல்வி மற்றும் நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மையே ஆகும். எனவே மாசாக்கத்தை பொறுப்பேற்கச் செய்ய வலுவான பிராந்திய வழிமுறை எமக்கு தேவை என மேலும் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த உயிர்ப்பல்வகைமையியல் திட்டத்தின் ஒருங்கிணைந்த ஆராய்ச்சியாளரும் வழிப்படுத்துனருமாகிய ககனி ரணசிங்க தெரிவிக்கையில்,
"ஏற்கனவே உள்ள பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழல் உணர்திறன்மிக்க பிரதேசங்கள் மற்றும் கடலோர பிரதேசங்கள் எவ்வாறு இத்தகைய தவிர்க்கப்படக்கூடிய கப்பல் விபத்துக்களால் மோசமடைகின்றன என்பதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகின்றது.
பிளாஸ்ரிக்கின் துகள்கள் சிறியதாக இருந்தாலும் அவை எமது சுற்றாடல், சமூகம், சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கம் அளவிடமுடியாதது. அவை நச்சுத் தன்மையை உறிஞ்சவும் வெளிவிடவும் கூடியவை, கடல்வாழ் உயிரினங்களின் சுவாசத்தை பாதிக்க கூடியவை, மற்றும் சூழலில் பல தசாப்த காலத்திற்கு நிலைத்து நிற்கக்கூடியவை.
பிளாஸ்ரிக் உற்பத்தியை நிறுத்த அல்லது ஒழுங்குமுறைப்படுத்த தீவிரமான நடவடிக்கை எடுக்காதுவிடின் நாம் எமது நீரை பிளாஸ்ரிக் கூழாக மாற்றிக்கொள்கின்றோம் என தெரிவித்தார்.

தெற்காசிய அமைப்பின் பிரசாரகர் அனிதா இதன்போது கருத்து தெரிவிக்கையில்,
"எக்ஸ்பிரஸ் பேர்ள்” இன் விபத்திற்கு நான்கு ஆண்டுகளின் பின்னர் இன்னொரு கப்பல் விபத்தினால் இலங்கையின் கரையோரம் மீண்டும் ஆபத்தை எதிர்நோக்குகின்றது. தன்னார்வலர்களினதும் பொது மக்கள் குழுவினதும் உதவியுடனும் அதனை மீட்டிருந்தோம்.
இலங்கை அரசாங்கம் தூய்மைப்படுத்தும் முயற்சி எடுத்துக்கொண்டிருந்த நிலையில் இத்தகைய அனர்த்தங்களுக்கு பொறுப்பான தனியார் நிறுவனங்கள் முழுமையாக பொறுப்பேற்காத போது தூய்மைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் செலவு வீணாக பொது மக்களின் மீதே சுமத்தப்படுகின்றது என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.
மேலும் "இந்த அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற தன்மையின் தொடர்ச்சி முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். கப்பலிற்குரிய தனியார் நிறுவனமே அதற்கான செலவை கொடுக்க வேண்டுமே தவிர மக்கள் அல்ல. இலங்கை அரசாங்கம் பொருளாதார நட்டத்திற்கும் உயிர்ப்பல்வகைமை இழப்பிற்கும் எம்.எஸ்.சி இனை பொறுப்பேற்க செய்ய வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
Climate Action Now அமைப்பின் சுற்றுச்சூழல்சார் செயற்பாட்டாளர் மெலனி குணதிலக தெரிவிக்கையில்,
எல்லைதாண்டிய பிளாஸ்ரிக் மாசுபாடு கடலினுள் சிந்தப்படும் பிளாஸ்ரிக் துகள்கள் மற்றும் பிற அபாயகரமான பொருட்கள் ஆகியவை ஒரு நாட்டின் எல்லைக்குள் மட்டும் இருப்பதில்லை. மாறாக அவை கடந்து பிராந்தியம் முழுவதும் எல்லைகளை உள்ள கடற்சூழலையும் கரையோரப் பிரதேசங்களையும் பாதிக்கின்றது.
இந்த தொடர்ச்சியான சம்பவானது அபாயகரமான சரக்குகளின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதிலும் பிளாஸ்ரிக் உற்பத்தியின் உலகளாவிய உற்பத்தியின் அதிகரிப்பையும் கட்டுப்படுத்துவதிலும் உள்ள அமைப்பு ரீதியான தோல்வியை வெளிப்படுத்துகின்றது.
எனவே, அரசாங்கம் பிராந்தியங்களின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் மாசாக்கத்திற்கு காரணமான மாசாளர்களை பொறுப்பேற்கச் செய்யவும் சுகாதார ரீதியில் பாதிக்கப்படக் கூடிய சமூகங்களை பாதுகாக்கவும் உணர்திறன்மிக்க சூழலியல் அமைப்புக்கள் மற்றும் கடல்வாழ் உயிரியல் பல்வகைமை ஆகியவற்றிற்கான அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கவும். தொடர்புடைய சர்வதேச விதிகளை ஆதரிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.
எனவே, கிறீன்பீஸ் ஆனது மெடிரறேனியன் கப்பல் நிறுவனத்திடம் (MSC) இருந்து கப்பலிலிருந்த சரக்குப் பொருட்களின் முழுமையான வெளிப்படைத்தன்மையையும் விரைவான துப்பரவு நடவடிக்கையையும், விபத்தினால் ஏற்பட்ட தாக்கத்தின் சுதந்திரமான மதிப்பீட்டிற்கும் எம். எஸ். சீ எல்சா 3 கப்பல் விபத்தினால் ஏற்பட்ட வாழ்வாதார இழப்பு உயிர்ப்பல்வகைமை இழப்பு ஆகியவற்றிற்கான இழப்பீட்டு திட்டத்தை மேற்கொள்ளவும் வலியுறுத்துகின்றது.
மேலும் எம். எஸ். சீ நிறுவனமானது அனர்த்தம் குறித்து இதுவரை எந்த தகவலையும் வெளியிடாமல் உள்ளது. எனவே பொறுப்பு என்பது வெறும் வார்த்தை அல்ல என்பதும் எம். எஸ். சீ நிறுவனத்திற்கு நினைவூட்டுகின்றோம்.










https://www.virakesari.lk/article/218456