பல்லாண்டு பல்லாண்டு - சுப.சோமசுந்தரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
- சுப.சோமசுந்தரம்
மனிதர்களில் பெரும்பாலானோர் தம் மரணத்தைப் பற்றிப் பேசுவதை, ஏன் நினைப்பதையே விரும்புவதில்லை. "அது வரும்போது வரட்டுமே !" என்று கடந்து போவதோ அல்லது நழுவி விடுவதோ எளிது. ஒரு நாள் தற்செயலாக ஒரு அருமையான நிகழ்வைக் காணும் பேறு பெற்றேன். தாத்தா ஒருவர் தம் பேரனிடம், "எலேய், தாத்தா செத்துப் போனா எப்படி டான்ஸ் ஆடுவே ?" என்று கேட்டார். அவர்கள் சமூகத்தில் வயதானோர் சாவைக் (வெளிப்படையாக) கொண்டாடும் வழக்கம் இருக்கலாம். உடனே அப்பேரன் ஆடிக் காண்பிக்கவே, அந்தத் தாத்தா கைதட்டி ரசித்தார். தம் சாவைத் தாமே கொண்டாடும் இவரின் முதிர்ச்சி எனக்கும் வாய்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அன்று என் மரணத்தையும் கற்பனையில் ரசித்தேன். அந்த மரணத்திற்கு என்னைத் தயார் செய்வதற்கே எனது எஞ்சியுள்ள வாழ்க்கை என்று எனக்குத் தோன்றியது.
எனது வீட்டிற்கு மிக அருகில் இருக்கும் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு எனது உடலைத் தானம் செய்வதாய் எழுதிக் கொடுத்தேன் (என் மரணத்திற்குப் பிறகுதான் !). எனது நண்பரும் குருநாதர்களில் ஒருவருமான பேராசிரியர் ஒருவர் அதனைச் சமூக வலைத்தளங்களில் பதிவிடச் சொன்னார். முதலில் எனக்குத் தயக்கம் இருந்தது. இதில் நான் தனியன் இல்லையே ! பலர் இல்லாவிட்டாலும், இச்சமூகத்தில் சிலர் இதுபோல் எழுதிக் கொடுத்தது உண்டே ! என் நண்பர்கள் சிலரே உண்டு. எனவே பொதுவெளியில் நான் பதிவிடுவது சுய விளம்பரம் ஆகாதா ? இக்கேள்விகளுக்கு என் பேராசிரியர் பதிலோடு வந்தார், "எதை எதையோ பதிவிட்டு மக்கள் சுய விளம்பரம் தேடும் காலகட்டத்தில் இது இன்னொரு சுய விளம்பரமாக இருந்து விட்டுப் போகட்டுமே !இதனால் பெரும் பயன் ஒன்று உண்டு. மிகவும் சாதாரண விஷயங்கள் கூட நம்மில் பலருக்குப் பல நேரங்களில் தோன்றுவதில்லை. மற்றவர் செயல்படுத்துவதைப் பார்த்த பின்பே நாமும் செய்யலாமே எனத் தோன்றுகிறது. அதில் இதுவும் ஒன்றாக இருக்கட்டுமே !". உண்மைதான். சமீபத்தில் அநேகமாக எல்லோருக்கும் தோன்றும் ஒரு சாதாரணச் செயல்பாட்டிற்கு சாட்சிக் கையொப்பமிட எனது இன்னொரு குருநாதரை அழைத்தேன். அவர் மிக்க மகிழ்ச்சியுடன் வந்தது மட்டுமல்லாமல் தாமும் அது போன்று விரைவில் செயல்படுத்த வேண்டும் எனக் கூறினார். என்னை விடப் பத்து வயது மூத்த என் குருவானவர்க்கு நான் வழிகாட்டியாய் இல்லாவிடினும், ஒரு நினைவூட்டலாய் அமைந்ததை இவ்விடத்தில் பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது. எனவே உடல் தானத்தின் மூலமாக இறுதிச் சங்கு வேண்டாம் என முடிவெடுத்தபின் சுய விளம்பரம் எனும் சங்கை எடுத்து நானே முழங்கி விடுகிறேனே !
இந்த உடல் தானம் தொடர்பில் மேலும் ஒரு அனுபவப் பகிர்வு உண்டு. நான் எழுதிக் கொடுத்த உடல் தானம் சிறப்பு என்றால் அச்சிறப்பின் பெரும்பகுதி என் மனைவி, மக்களையே சாரும். என் உடல் தானத்திற்கு அவர்கள் எழுதித் தந்த சம்மதம் மலையினும் மாணப் பெரிது. இறை நம்பிக்கையுள்ள என் மனைவி அந்த நம்பிக்கை இல்லாத என்னிடமும் பிள்ளைகளிடமும் தன் கருத்தைத் திணிக்க முற்படுவதில்லை. எங்களை எங்களின் கருத்துகளோடும் முன்னுரிமைகளோடும் ஏற்றுக்கொண்ட என் மனைவி எங்களுக்கான வரம். அவள்தன் சாமியால் (!) எங்களுக்காகவே படைக்கப்பட்டு இருப்பாளோ என்னவோ ! எனவே என் கருத்தையும் உணர்வையும் அறிந்து என் உடல் தானத்திற்கு அவள் எழுதிக் கொடுத்த சம்மதம் இயல்பான ஒன்றாகவே அமைந்தது. பகுத்தறிவாளர்களாகவே வளர்ந்த எனது இரு பெண் பிள்ளைகளும் முதலில் தயக்கம் காட்டியது நான் எதிர்பாராத ஒன்று. இறையிலும் மதத்திலும் நம்பிக்கை இல்லாத அவர்களுக்கு ஈமச்சடங்குகள் முதலிய சம்பிரதாயங்கள் ஒரு பொருட்டே அல்ல. அவர்களது தயக்கத்திற்குக் காரணங்கள் இரண்டு. முதலாவது, அவர்கள்தம் தந்தையின் மரணத்தை இப்போதே நினைத்துப் பார்ப்பதினால் ஏற்படும் அதிர்வு; இரண்டாவது, தம் தந்தையின் உடல் கூறு போடப்படுவது அவர்கள் நினைத்தே பார்க்க விரும்பாதது. இவற்றில் முதலானதை நான் எளிதாய் எதிர் கொண்டேன். "இவ்வாறு எழுதித் தரும் மகிழ்ச்சியில் நான் நூறு வருடங்கள் வாழலாம். உதாரணமாக ஒருவர் தம் பிள்ளைகளுக்கு உயில் எழுதி வைத்த பின்பு உடனே மரணிக்க வேண்டும் என்பதில்லை; எச்சரிக்கையாய் இருக்கிறார் என்று பொருள்". இரண்டாவது காரணத்திற்குப் பின்வருமாறு கேட்டேன், "தந்தையின் இறந்த உடல் செந்தழலில் வேகும்போது உங்களுக்குச் சுடாதா ? உடல் வேகும்போது சுருண்டு கொள்ளுமே, அப்போது சுடுகாட்டில் வெட்டியான் எனப்படும் அத்தொழிலாளி கழியால் அடித்துச் சமன் செய்வாரே ! அப்போது உங்களுக்கு வலிக்காதா ? மின் மயானம் எனின் உங்கள் உடலில் அந்த மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு ஏற்படாதா ?". போதாக்குறைக்கு எனது தோழர் பேரா.வ.பொன்னுராஜ் அவர்களை என் பிள்ளைகளிடம் பேசச் சொன்னேன். அவர் மீது அவர்களுக்கு அளப்பரிய அன்பும் மரியாதையும் உண்டு. "மண்ணோ நெருப்போ உண்ணப் போகும் உடலை வைத்து மாணாக்கர் சிலர் படித்துவிட்டுப் போகட்டுமே ! சமூகத்திற்கு அவர்கள் கற்றது பயன்படும். அவர்கள் படித்தபின் மீண்டும் அவ்வுடல் மண்ணில் புதையுண்டு மரத்திற்கு உரமாகும். ஒரு மனிதன் நன்றாக வாழ்ந்தபின் அழியும் உடலுக்கு இதற்கு மேல் என்ன மரியாதை இருக்க முடியும் ?" - இவை அவர் பேசியவை. இவற்றை முழுமையாக ஏற்றுக் கொண்டு என் பிள்ளைகளும் மன நிறைவோடு தம் சம்மதத்தை எழுதித் தந்தார்கள். நான் கற்றவையும் பெற்றவையும் நன்றாகவே அமைந்த நிறைவு எனக்கு. இந்த அனுபவப் பகிர்வு உங்கள் அனைவருக்கும் உதவும் எனும் நோக்கத்திலேயே !
எல்லாம் சரிதான். ஆனால் இறை நம்பிக்கை, மதச் சடங்குகளில் நம்பிக்கை என நம்பிக்கைகளிலேயே வாழும் மனிதர்களுக்கும் இது தொடர்பில் சமாதானம் உண்டா ? உண்டு. இறந்தபின் நீங்கள் உங்கள் இறைவனை சந்திக்க அல்லது இறைவனிடத்தில் கரைந்திட இந்த உடலை எடுத்துக் கொண்டா செல்வீர்கள் ? உங்கள் கூற்றின்படி உங்கள் ஆன்மாதானே இறை தேடும் ? இந்தப் பாழும் உடலை வைத்துக்கொள்ள முடியாமல்தானே அதனை மண்ணில் புதைக்கிறீர்கள் அல்லது சிதையில் தள்ளுகிறீர்கள் ?
எனவே யாராக இருந்தாலும், வாழும்போது ஒரு திறந்த புத்தகமாக வாழ்ந்தோமோ என்னவோ, செத்த பின்பு உறுதியாய் ஒரு பயனுள்ள புத்தகமாய் அமைவோமே ! உடல் தானம் எழுதிக் கொடுத்தபின் இந்த மன நிறைவுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்வோமே !