பெலன் டி'ஓர் விருது விழா 2025: அதிசிறந்த வீரர் உஸ்மான் டெம்பிலி, அதிசிறந்த வீராங்கனை ஆய்ட்டானா பொன்மாட்டி
Published By: Vishnu
24 Sep, 2025 | 07:22 PM
![]()
(நெவில் அன்தனி)
பிரான்ஸ் நியூஸ் மெகஸின் (பிரான்ஸ் செய்தி சஞ்சிகை) மற்றும் பிரெஞ்சு கால்பந்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றினால் வருடாந்தம் வழங்கப்படும் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான பெலன் டி'ஓர் விருதை பாரிஸ் செய்ன்ட் ஜேர்மெய்ன் கழக வீரரும் பிரான்ஸ் தேசிய வீரருமான உஸ்மான் டெம்பிலி வென்றெடுத்தார்.
அதி சிறந்த வீராங்கனைக்கான பெலன் டி'ஓர் விருதை மூன்றாவது தொடர்ச்சியான வருடமாக பார்சிலோனா மற்றும் ஸ்பெய்ன் மத்திய கள வீராங்கனை ஆய்ட்டானா பொன்மாட்டி வென்றெடுத்தார்.
பிரான்ஸ் தேசத்தில் பாரிஸ் நகரில் அமைந்துள்ள தியேட்டர் டு சாட்லே அரங்கில் கடந்த திங்கட்கிழமை இரவு 69ஆவது பெலன் டி'ஓர் விருது விழா கோலாகலமாக நடைபெற்றது.
இவ் விழாவில் அதி சிறந்த வீரருக்கான பெலன் டி'ஓர் விருதை உஸ்மான் டெம்பிலி வென்றெடுத்தார். இந்த விருதை அவர் முதல் தடவையாக வென்றதுடன் அவ்விருதை கன்னீர்மல்க பெற்றுக்கொண்டார்.
நடந்து முடிந்த 2024 - 2025 கால்பந்தாட்ட பருவ காலத்தில் தனது அதிசிறந்த கால்பந்தாட்ட நுட்பத்திறன்மூலம் பாரிஸ் செய்ன்ட் ஜேர்மெய்ன் கழகத்திற்கு நான்கு சம்பியன் பட்டங்களை உஸ்மான் டெம்பிலி கிடைக்கச் செய்திருந்தார்.
ஐரோப்பிய சுப்பர் கிண்ணம், ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக், உள்ளூர் இரட்டைப் பட்டங்களான லீக் 1, கூப் டி பிரான்ஸ் ஆகிய நான்கு சம்பியன் பட்டங்களையே பாரிஸ் செய்ன்ட் ஜேர்மெய்ன் வென்றிருந்தது.
மூன்றாவது தொடர்ச்சியான விருது
பார்சிலோனா மற்றும் ஸ்பெய்ன் வீராங்கனை ஆய்ட்டானா பொன்மாட்டி மூன்றாவது தொடர்ச்சியான வருடமாக பெலன் டி'ஓர் விருதை வென்று வரலாறு படைத்தார்.
2014இலிருந்து பார்சிலோனா கழகத்தில் தொடர்ந்து விளையாடி வரும் பொன்மாட்டி, நடந்து முடிந்த கால்பந்தாட்ட பருவகாலத்தில் தனது கழகத்தின் மூன்று பிரதான வெற்றிகளில் பெரும் பங்காற்றி இருந்தார்.
லீகா எவ், கொப்பா டி லா ரெய்னா, சுப்பர்கோப்பா ஆகிய சம்பியன் பட்டங்களை பார்சிலோனா கழகம் வென்றிருந்தது.
அத்துடன் 2025 யூரோ கிண்ண இறுதிப் போட்டிக்கு ஸ்பெய்ன் முன்னேறுவதில் பொன்மாட்டி முக்கிய பங்காற்றி இருந்தார்.
2023 பீபா மகளிர் உலகக் கிண்ண சம்பியனான ஸ்பெய்ன் அணியில் இடம்பெற்ற பொன்மாட்டி, மகளிர் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் பட்டங்களை 3 தடவைகள் வென்றெடுத்த பார்சிலோனா அணியிலும் அங்கம் வகித்திருந்தார்.
ஏனைய விருதுகள்
* உயிராபத்துக்களை எதிர்நோக்கும் சிறுவர்களுக்கும் இளையவர்களுக்கும் உதவும் காருண்ய மன்றத்துக்கான சொக்ரேட்ஸ் விருது - ஸானா காருண்ய மன்றம்
* வருடத்தின் அதிசிறந்த ஆடவர் கழகம் - பாரிஸ் செய்ன்ட் ஜேர்மெய்ன்
* வருடத்தின் அதிசிறந்த மகளிர் கழகம் - ஆர்சனல் கழகம்
* அதிக கோல்களைப் போட்ட வீரருக்கான ஜேர்ட் முல்லர் விருது - விக்டர் ஜியோக்ரஸ் (ஸ்போட்டிங் சி பி ஃ சுவீடன் - 52 போட்டிகளில் 59 கோல்கள்) அவர் இப்போது ஆர்சனல் கழகத்திற்காக விளையாடி வருகிறார்.
* அதிக கோல்களைப் போட்ட வீராங்கனைக்கான ஜேர்ட் முல்லர் விருது - ஈவா பஜோர் (பார்சிலோனா ஃ போலந்து - 46 போட்டிகளில் 43 கோல்கள்)
* வருடத்தின் அதிசிறந்த ஆடவர் அணி பயிற்றுநருக்கான ஜொஹான் க்ருய்வ் விருது - லூயி என்ரிக் (பாரிஸ் செய்ன்ட் ஜேர்மெய்ன் கழகம் - 4 சம்பியன் பட்டங்கள்)
* வருடத்தின் அதிசிறந்த மகளிர் அணி பயிற்றுநருக்கான ஜொஹான் க்ருய்வ் விருது - சரினா வீக்மான் (இங்கிலாந்து - ஐரோப்பிய கிண்ண சம்பியன்)
























