கவிதைப்-பூங்காடு

நட்பு. .

Tue, 11/04/2017 - 19:05

நட்பு. .

இருளின் முன் ஒளியாய் 

உறவின் முன்  பாலமாய் 

து ன்பத்தின் முன் துணையாய் 

நோயின் முன் மருந்தாய் 

சோகத்தின் முன் சுகமாய் 

தாகத்தின்முன் நீராய் 

மரணம் வரை துணையாய்

மரணித்த பின்னும் நினைவாய் 

வாழ்வதே நட்பாகும். ..........

.

 

 

Categories: merge-rss

முதல் வசந்தப் பாடல் ...............வ.ஐ.ச.ஜெயபாலன்

Sun, 09/04/2017 - 05:49

ஈழப்போர் முறிந்தபின் வந்த 
2010 வசந்த காலத்தில் கண்ணீரோடு எழுதிய கவிதை.
*
முதல் வசந்தப் பாடல்
வ.ஐ.ச.ஜெயபாலன்
*
சுனாமிக்குச் பிந்திய வசந்தத்தில்
மீனவ குப்பங்களில்.
பூத்த மரங்களின் எச்சங்களில்
குயில்கள் பாட
மாலைசூடிய குழந்தைகள்
எசப்பாட்டுப் பாடியதை
கண்ணீரூடு பார்த்தது போல
இன்றும் கரைந்தபடி..
.

மனிதனின் வாழும் ஆசையை
எந்தக் கொம்பனாலும் கொம்பியாலும்
பறித்து விட முடியாது என்றபடி
வருடந் தோறும்
கீரோசீமா நாகசாக்கியில்
செறிகள் மலர்கிறதுபோல
என் மண்ணிலும் முறிந்த வேம்புகள்
மலர்கின்றன.. .
.

இற்றை வசந்த இப்பூந் தென்றலில்
சுட்டெரிக்கப் பட்ட எங்கள்
சோலைகளின் எச்சங்களில்
பிள்ளைகளின் மதளைக் கூவலில் காமுற்று
குயில்கள் பாடுகின்றன
.

பாதைகளில் கால் மிதிக்க
உயிர் கிழிகிறது.
குலதெய்வங்களின் கல்லறைகளை உடைத்து
எலும்புகளோடும் தலை மயிரோடும்
வீதிக் குண்டு குழிகளை நிரவுகிறார்கள் கொடியோர். 
.

இரணியா இரணியா
எங்கள் பிள்ளைகளின் கனவுகள்
ஒவ்வொரு தூணிலும் இருக்கும்
துரும்பிலும் இருக்குமடா..
சாம்பலை உதறியபடிக்கு
இடிபாடுகளை விலக்கிக்கொண்டு
உயிர்தெழுகிறது வாழ்வு,.
.

ஊர் உலகோடு பாரிபோல் பகைத்த
இருண்ட நாட்களே போ..
எங்கள் கிரேத யுகத்து முதல் வசந்தமே வா..
.

இற்றை வசந்த இப்பூந்தென்றலில்
வைகலும் சுதந்திர
வாழ்வையே எண்ணினோம்.

 
 
 
 
 
 
 
 
 
Categories: merge-rss

தேநீர் கவிதை: சுடரின் நெருப்பொன்று...

Fri, 07/04/2017 - 07:16
தேநீர் கவிதை: சுடரின் நெருப்பொன்று...

 

 
jwala_3151768f.jpg
 
 
 

ஒரு

தீபத் திரியிலிருந்து

இன்னொரு திரியை

சுடர்விக்கும் நெருப்பென்பது

வளர்கின்றதா...

தேய்தலடைகிறதா?

தீயைப் பயிரிட்டு

வெளிச்ச அறுவடை.

முதல் சுடரின்

பிள்ளைகளெனலாமா

மற்றவற்றை

இல்லை நகல்களா...

ஒற்றைச் நெருப்பில்

ஏற்றிய ஆயிரம் சுடர்களின் தீ

ஒன்றா

பலவா

இன்னொரு விளக்கை

உயிர்வித்த

சுடரின் நெருப்பு

அடையும் மரணமென்பதும்

மரணமாயிருப்பதில்லை...

ஒதுங்க

இடமிருந்தும்

பெருமழையின்

கண்ணாடிக் கல்லெறிதலை

ரசித்து வாங்கி

நனைய நனைய பறப்பதும்

சிறகு சிலிர்த்து

மழைக்குள்

இன்னொரு மழை பெய்விப்பதுமாய்

கொண்டாடும்

ஒற்றைச் சிறுபறவைக்கானதாய் இருக்கலாம்

இன்றைய பொழிவு.

இரவின்

அழுக்கை

கழுவிக் கழுவி

விடியலில் வென்றது மழை.

உச்ச

வேகத்தில்

உறுமிப் பாய்கின்றன வாகனங்கள்

விபத்தில் இறந்தவனின்

சவ ஊர்வலத்தில் சிதறிய

மலர்களை நசுக்கியபடி..

அகால

அலைபேசி அழைப்பு

அதிர்ந்து தயங்கும் விரல்கள்

இறந்த நண்பனின் எண்.

சுடரின் நெருப்பொன்று...

http://tamil.thehindu.com

Categories: merge-rss

சின்ன சின்ன கவிதைகள்

Tue, 04/04/2017 - 15:46

என்னவளே ...
நீ காலை மாலை பூக்கும் ...
மலராக இருந்து விடு ...
அப்போதுதான் 
வாடவேமாட்டாய் ...!

&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

Categories: merge-rss

தாய் தந்தை கவிதைகள்

Sun, 02/04/2017 - 03:25

பேசமுடியாத வயதில்.....
அழுகை மூலம் குழந்தையின்.....
நோயையும் பசியையும்.....
கண்டறியும் ஞானி தாய்......!

பொதுவாக.........
வெட்டினால் உறவு பிரியும்....
தொப்பில் கொடியை வெட்டிய.....
பின்னரே உறவு பெருகும்.......!

^^^
கவிப்புயல் இனியவன்
தாய் தந்தை கவிதைகள்
 

Categories: merge-rss

எங்கள் கதை - ஜெயபாலன்

Wed, 29/03/2017 - 04:39

கெரிலா போர் உதிகளைக் காடுகளைக் கைவிட்டு

வெளிகளிலே முடிசூடி எழுந்த கதை எங்கள் கதை

எங்களது காடெல்லாம் எதிரி ஆழ ஊடுருவ,

பெரு வெளியின் பொறிக்குள்ளே,

வீரமுடன் படை நடத்தி வீழ்ந்த கதை எங்கள் கதை.

Categories: merge-rss

அமரர் அசோகமித்திரன் - அஞ்சலியும் கவிதையும் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Fri, 24/03/2017 - 12:19

அமரர் அசோகமித்திரன் அவர்களுக்கு என் அஞ்சலிகளும் பிரிய பிரியாவிடையும்
*
1976 அல்லது 1977ம் வருடத்தில் யாழ் பல்கலைக்கழக முதல்வர் கலாநிதி கைலாசபதியின் அழைப்பின்பேரில் எழுத்தாளரும் அப்போதைய கணயாழி ஆசிரியருமான அசோக மித்திரன் இலங்கைக்கு வருகை தந்தார். யாழ் பல்கலைக்கழக மாணவர் தலைவன் என்கிற முறையில் நானும் அமரர் அசோகமித்திரன் அவர்களது வரவேற்பிலும் நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றினேன். அவர் தமிழ் நாடு திரும்புகையில் எனதும் சேரனதும் கவிதைகள் உட்பட ஈழத்து எழுத்துகள் சிலவற்றை எடுத்துச் சென்றார். 

 அமரர் அசோகமிதிரன் கணையாழி இதழில் ”பாலி ஆறு நகர்கிறது” என்ற எனது கவிதையை வெளியிட்டதன்மூலம் தமிழகத்துக்கு என்னை அறிமுகம் செய்தார். சேரன் கவிதைகளையும் அவர்தான் முதலில் வெளியிட்டிருக்கக் கூடுமென என நினைக்கிறேன். 
 *
வன்னியில் 1968ம் ஆண்டு யோகபுரம் தமிழ் பாடசாலை மலரில் வெளிவந்த “பாலி ஆறு நகர்கிறது” கவிதையையே எனது முதல் கவிதை. அதற்கு முன்னர் நான் எழுதிய ஒரு குறுங்காவியம் உட்பட அனைத்துக் கவிதைகளிலும் பாரதியாரினதும் சித்தர்களதும் பரசீகக் கவிஞர் உமர் கையாத்தினதும் சாயல் இருந்ததால் அவற்றை எல்லாம் வீசி எறிந்துவிட்டேன். பின் சங்கத்தைப் படித்தபோது உமித் தணலில் சுடரும் பொன்போல ஐந்திணையுள் வாழ்வாய் உயிர்த்த எனது கலைஞான மரபைக் கண்டுகொண்டேன்.
*
என் அன்பர் அமரர் அசோகமித்திரன் எனது முதல் கவிதையை தமிழகத்தில் வெழியிட்டு சரியாக நார்பது ஆண்டுகள் நிறைகிறது. இத்தருணத்தில் அமரரின் நினைவாக அவருக்குப் piடித்த எனது கவிதையை படையலிடுகிறேன்.
*

பாலி ஆறு நகர்கிறது
- வ.ஐ.ச.ஜெயபாலன்
*

அங்கும் இங்குமாய்
இடையிடையே வயல் வெளியில்
உழவு நடக்கிறது
இயந்திரங்கள் ஆங்காங்கு
இயங்கு கின்ற ஓசை
இருந்தாலும்
எங்கும் ஒரே அமைதி
*
ஏது மொரு ஆர்ப்பாட்டம்
இல்லாமல் முன் நோக்கி
பாலி ஆறு நகர்கிறது.
ஆங்காங்கே நாணல்
அடங்காமல் காற்றோடு
இரகசியம் பேசி
ஏதேதோ சலசலக்கும்.
எண்ணற்ற வகைப் பறவை
எழுப்பும் சங்கீதங்கள்.
துள்ளி விழுந்து
‘துழும்’ என்னும் வரால்மீன்கள்.
*

என்றாலும் அமைதியை
ஏதோ பராமரிக்கும்
அந்த வளைவை அடுத்து
கருங்கல் மறைப்பில்
அடர்ந்துள்ள நாணல் அருகே
மணற் கரையில் ஒரு மருங்கம்
ஓங்கி முகடு கட்டி
ஒளி வடிக்கும்
மருத மர நிழலில்
எங்கள் கிராமத்
எழில் மிகுந்த சிறு பெண்கள்
அக்குவேறு ஆணிவேறாய்
ஊரின் புதினங்கள்
ஒவ்வொன்றாய் ஆராய்ந்து
சிரித்து
கேலி செய்து
சினந்து
வாய்ச் சண்டை யிட்டு
துவைத்து
நீராடிக் களிக்கின்றார்.
ஆனாலும்
அமைதியாய்ப்
பாலி ஆறு நகர்கிறது
*

அந் நாளில்
பண்டார வன்னியனின்*
படை நடந்த அடிச் சுவடு
இந்நாளும் இம்மணலில்
இருக்கவே செய்யும்
அவன்
தங்கி இளைப்பாறி
தானைத் தலைவருடன்
தாக்கு தலைத் திட்டமிட்டு
புழுதி படிந்திருந்த
கால்கள் கழுவி
கைகளினால் நீரருந்தி
வெள்ளையர்கள் பின் வாங்கும்
வெற்றிகளின் நிம்மதியில்
சந்றே கண்ணயர்ந்த
தரை மீது அதே மருது
இன்றும் நிழல் பரப்பும்
அந்த வளைவுக்கு அப்பால்
அதே மறைப்பில்
இன்னும் குளிக்கின்றார்
எங்களது ஊர்ப் பெண்கள்

ஏது மொரு
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
பாலி ஆறு நகர்கிறது.
*
1968

* பண்டார வன்னியன் -ஈழத்து தமிழ் வன்னிப் பகுதியைப் பரிபாலித்த குறுநில மன்னன். 1803இல் கச்சிலை மடு போரில் வெள்ளையரால் கொல்லப் பட்டவன்.

Categories: merge-rss

பூமி

Sat, 18/03/2017 - 06:05

பூமி

 

17352081_10154781885608801_8626858608526

கேட்டினால் மேவிப் பெருகிய பாலியாற்றைப்போல 
பேராராய்ப் பெருக்கெடுத்த நம் குருதி
உதுமானியப் பேரரசின் சிறைகளுக்குள்
சிந்தப்பட்ட ஆர்மீனியரின் குருதி

வற்றி வறண்ட நெடிய சமுத்திரம்போல்
புழுதியாய் கிளம்பி நமக்கெடுத்த தாகம்
பாலைவனங்களில் கருகிய
தார்பூரரின் தாகம்

தணல் மூண்ட பெருங்காடுபோல்
தீயாய் நாம்மை துவட்டிய பசி
பட்டினியோடு மூச்சடங்கிய
கம்போடிய வியட்நாயிமரின் பசி

தலை அறுக்கப்பட்ட பறவைபோல்
அனல் படரத் துடித்த நம் வயிறு
பசியால் மடிந்த 
உக்கிரேனியரின் ஒட்டிச்சுருங்கிய வயிறு

விசமேற்றி இறந்த மீன்களின் மூடா விழிகள்போல்
நஞ்சுறைந்து வாடிய நம் இருதயம்
நாஸிகளின் விஷ வாயுவால் முட்டி வெடித்த
யூதர்களின் இருதயம்

கிழிந்த செவ்வரத்தம் பூக்கள்போல்
விந்துக்கரை படிய குதறி வன்புணரப்பட்ட நம் யோனிகள்
உகூட்டு ஆண்குறிகள் பிய்த்தெறிந்து
குருதி உறிஞ்சிய 
ருவாண்டா துட்சிகளின் யோனிகள்

எனதன்பு மகளே! 
எல்லா வழிகளாலும் அழிக்கப்பட்டவர்களின் 
இப் பூமியில்தான்
உன்னைப் போலவே
மீண்டெழுந்தவர்களும் உண்டு.
¤

தீபச்செல்வன்

நன்றி: குங்குமம்

https://goo.gl/AQbgJl

Categories: merge-rss

வர்ணப் பட்டதாரி

Thu, 16/03/2017 - 06:05
 1 person, standing

வர்ணப் பட்டதாரி

சிலந்திகள் கூடு கட்டி
கரப்பொத்தான்கள் குடியிருக்கின்றன
பட்டத் தொப்பியில்

தூசி பிடித்துக் கிடக்கிறது
பட்டச்சான்றிதழ்

பிரதியெடுத்து
களைத்துப்போய்க்கிடக்கிறது
பெறுபேற்றுப் பத்திரங்கள்

வாசிக்கப்படாதிருக்கும்
சுயவிபரத்துடன்
இனி சேர்த்துக்கொள்ளலாம் 
சுவருக்கு வர்ணம் பூசும் 
அனுபவத்தையும்

நாட்கூலி செய்து
பல்கலைக்கழகம் அனுப்பிய பிள்ளை
நாட்கூலியுடன் 
வீடு திரும்புவதை
பார்திருக்கும் வயதான தந்தைக்கு
அதிகரித்தது நெஞ்சுவலி

தோய்த்து அயன் செய்து
மடிப்புக்குலையாமலருக்கும் மேற்சட்டையை
பார்த்தடியிருக்கும் தாய்
சீமெந்துத் தூள்களுடன்
சோற்றைக் குழைத்து உண்ணும் பிள்ளையை
நினைத்துப் பசிகிடந்தாள்

சுவருக்கு வர்ணம் பூசும்
ஒரு பட்டதாரியின்
உடலில் சிந்திய வர்ணங்கள் 
வரைந்தது வேலையற்ற வாழ்வை

-தீபச்செல்வன்

http://deebam.blogspot.com/2017/03/blog-post_12.html

Categories: merge-rss

அவள் மனித தேவதை

Wed, 15/03/2017 - 05:36

அவள் மனித தேவதை
--------------------------------
சூரியனின் பிரகாசதுக்கும்.......
சந்திரனின் குளிர்மைக்கும்.....
பிறந்தவள் என்பதால்.............
என்னவள் மனித தேவதையவள்.............!

பூக்களின் இதழ்களால்.....
திருமேனியானவள்.....
இசைக்கருவியின் இழைகளால்....
உடல் நரம்பானவள்..........
மெல்ல பேசினால் கூட........
மேனியது சிவக்கும்...........
நரம்புகள் இசைபாடும்.............!

மின்னல் கூட அவளை............
தீண்டமுடியாது மின்னனைவிட.......
சக்திகொண்ட கண்ணை......
கொண்டவள் என்பதால்............
கொவ்வை பழத்தை உதடாக......
கொண்டவள் என்றில்லை.........
கொவ்வைப்பழம் இவளிடம் .....
அழகை பெற்றதென்பேன்...................!

&
கவிப்புயல் இனியவன்
அவள் மனித தேவதை 01
 

Categories: merge-rss

பால் சுரக்கும் ஆண்கள்.

Tue, 14/03/2017 - 10:08

பால் சுரக்கும் ஆண்கள்.

தாத்தாவை சீண்டி விட்டு 

தாவி ஓடுகையில் தாவிவரும் 

கைத்தடியும் காலில் பட்டுவிட

பாதத்தில் பால் சுரக்கும்.

 

அழுக்கு முந்தானையில்

அதிரசம் முடிந்து வைத்து 

உனக்குத்தான், ஒழிச்சு சாப்பிடு 

என்ற பாட்டியின் பாசத்தில் - என் 

கேசத்தில் பால் சுரக்கும்.

 

கன்னத்தில் நீர் உறைந்திருக்க 

கட்டிலில் தான் படுத்திருக்க 

தான் அடித்த தழும்பில் பரிவுடன்  

தடவிடும் தந்தை கையில் பால் சுரக்கும்.

 

அண்ணனுக்கு அடித்ததென்று 

கன்னத்தில் அடித்துவிட்டு கிட்ட வந்து 

பாக்கட்டில் பணம் வைக்கும் 

சித்தப்புவிடம் பால் சுரக்கும்.

 

ஆடுபுலி ஆடடத்தில் அளாப்பி 

விளையாட அக்காவும் அழுதுநிக்க 

அங்குவரும் மாமாவின் கையின் 

கிளுவந் தடியில்  பால் சுரக்கும்.

 

எண்ணை வைக்க அடம்பிடிக்கும் 

என்னை இழுத்துவைத்து ரண்டு குட்டும்

 நாலு குத்தும் அம்மா போட உச்சியிலும்

முதுகிலும் உண்மையாய் பால் சுரக்கும்.

 

எகிறிவரும் எட்டுவயது மகள் 

பாய்ந்து மார்பினில் ஒட்ட 

பக்குவமாய் பற்றிக் கொள்ளும் 

பத்து விரலும் பால் சுரக்கும்.

 

எழுதும் பேனாவை ஒன்று பறிக்க - எழுதிய

தாளை இரண்டு இழுக்க தாத்தாவை 

தள்ளி விட்டு  முதுகில்  துள்ளியாட 

பேரனின் தேகமெங்கும் பால் சுரக்கும்....!

 

யாழ் இணையம், சுய ஆக்கம் சுவி....!

 

 

Categories: merge-rss

பால் சுரக்கும் ஆண்கள்.

Tue, 14/03/2017 - 10:08

பால் சுரக்கும் ஆண்கள்.

தாத்தாவை சீண்டி விட்டு 

தாவி ஓடுகையில் தாவிவரும் 

கைத்தடியும் காலில் பட்டுவிட

பாதத்தில் பால் சுரக்கும்.

 

அழுக்கு முந்தானையில்

அதிரசம் முடிந்து வைத்து 

உனக்குத்தான், ஒழிச்சு சாப்பிடு 

என்ற பாட்டியின் பாசத்தில் - என் 

கேசத்தில் பால் சுரக்கும்.

 

கன்னத்தில் நீர் உறைந்திருக்க 

கட்டிலில் தான் படுத்திருக்க 

தான் அடித்த தழும்பில் பரிவுடன்  

தடவிடும் தந்தை கையில் பால் சுரக்கும்.

 

அண்ணனுக்கு அடித்ததென்று 

கன்னத்தில் அடித்துவிட்டு கிட்ட வந்து 

பாக்கட்டில் பணம் வைக்கும் 

சித்தப்புவிடம் பால் சுரக்கும்.

 

ஆடுபுலி ஆடடத்தில் அளாப்பி 

விளையாட அக்காவும் அழுதுநிக்க 

அங்குவரும் மாமாவின் கையின் 

கிளுவந் தடியில்  பால் சுரக்கும்.

 

எண்ணை வைக்க அடம்பிடிக்கும் 

என்னை இழுத்துவைத்து ரண்டு குட்டும்

 நாலு குத்தும் அம்மா போட உச்சியிலும்

முதுகிலும் உண்மையாய் பால் சுரக்கும்.

 

எகிறிவரும் எட்டுவயது மகள் 

பாய்ந்து மார்பினில் ஒட்ட 

பக்குவமாய் பற்றிக் கொள்ளும் 

பத்து விரலும் பால் சுரக்கும்.

 

எழுதும் பேனாவை ஒன்று பறிக்க - எழுதிய

தாளை இரண்டு இழுக்க தாத்தாவை 

தள்ளி விட்டு  முதுகில்  துள்ளியாட 

பேரனின் தேகமெங்கும் பால் சுரக்கும்....!

 

யாழ் இணையம், சுய ஆக்கம் சுவி....!

 

 

Categories: merge-rss

இரோம் சர்மிலா பிறந்தநாள் இன்று

Tue, 14/03/2017 - 05:23

இரோம் சர்மிலா பிறந்தநாள் இன்று. அவர் குறித்து எழுதிய கவிதை ஒன்று

கூப்ரூ மலையின் மகள்

மரட்சியுடன் திரியும் மான்கள் நிறைந்திருக்க
செம் மல்லிகை பூத்திருக்கும்
கூப்ரூ மலையின் மகளே
நெடிய விரத்தினை முடித்து உணவருந்து!

துப்பாக்கிகளின் விற்பனைக்கான பூமியில்
இனியும் பசியோடிராதே!

உருகிய உன்னுடலருகே நின்றவுன் சனங்கள்
ஒவ்வொரு உணவு வேளையிலும்
கோப்பைகளைத் தூக்கும்போதடைந்த 
குற்ற மனம் இனியேனும் தணியட்டும்

வற்புறுத்தப்பட்ட உணவுத் தண்டணையும்
மூக்கில் சொருகப்பட்ட உணவுக் குழாய்ச் சிறையும்
இத்தோடு முடிந்துபோக
நெடுநாளாய் மறந்த உணவைக் கையிலெடு

நிர்வாணங்களினால் போரிட்ட
மணிப்பூரிகளின் பசியை சுமந்து
வெறு வயிற்றில் கனவு நிறைத்த 
இரும்புப் பெண்ணே
ஏதுமறியாக் குழந்தை போல
மிதமானது உன் இருதயம்.

சாவு விளையாடப்
பசியால் வறண்டு பாலைபோலத் தகித்த 
உன்னுடல் வலிய ஆயுதம்

மரணம் நெருங்க மறுத்து 
தோல்வியை தழுவச் செய்த
கொதித்தடங்கா உன் குரல் பெருந்தீ

தோழியே, குண்டுகளின் உற்பத்திக்கான பூமியில்
இனியும் உன் மெல்லிய இதயத்தால் போரிடாதே

யோனிகளுக்குள் இராணுவக் குறிகளைச் சொருக
துப்பாக்கிகளை நீட்டும் அதிகாரம்
காரணமேதுமின்றிக் கைதாக்கவும்
காணமல் போகச் செய்தலுக்குமாக ஆண் மக்கள்
எதிர்காலம் மாண்ட குழந்தைகள்
எல்லாத் திசைகளிலும் சூரியனை எதிர்பார்க்கும் விழிகள்
துளியேனும் வேறுபாடற்றன நம் நிலங்கள்

எம் பிரியமிகு
கூப்ரூ மலையின் மகளே
திலீபனைப் புதல்வனாய் பெற்ற எம் தேசமறியும்
நெடிதுயிர்த்தவுன் பசி வேட்கையை போக்கியிராதது 
பல்லாண்டுகளின் பின்னரான உணவு

விடுதலைப் பசியில்
உழலும் உன் இருதயம்
¤

இரோம் சர்மிலாவுக்கு

தீபச்செல்வன்

நன்றி: குமுதம்

17309113_10154772856918801_8631978617444

Categories: merge-rss

உயிர் காக்கும் விவசாயின் உயிர்

Sun, 12/03/2017 - 15:31

உயிர் காக்கும் விவசாயின் உயிர்
------------------------------------------------

ஆண்டவன் படைப்பில் அதிசயப்பிறவி.......
உலகுக்கே உணவுகொடுக்கும் விவசாயி........
தன் கையில் சேற்றுடன் சோற்றை உண்பார்.....
எம் சோற்றில் ஒருகல் வராமல் காத்திடுவார்.....!
............................ஆளவேண்டிய விவசாயியின்று
............................அடங்கிகிடக்கிறான் வீட்டினிலே
............................கூழைபிசைந்து குடிக்கவழியில்லாமல்
............................குறுகிக்கிடக்கிறான் குடிசையிலே
நிலத்தை பண்படுத்தியவன் வாழ்க்கை.......
நிலைகுலைந்து போனதெதனால்.........
பணத்தை பத்துவட்டிக்கு கொடுக்கும்.....
பாழாய்போன பணப்பிணம் தின்னிகளால்.......
..........................ஒட்டு துணியோடு வயலிலே
..........................உச்சிவெயிலில் உலாவிவருவர்
..........................நட்டு நடு ராத்திரியில் காவலிருந்து
..........................அறுவடையை காத்திடுவர் கண்விழித்து
பயிருக்கு அடிக்கும் நஞ்சை எதற்காய்....
பாடையில் போகவதற்கு குடிக்கிறார்கள்
பயிர்கடனை கொடுக்க வழிதெரியாமல்
பாதியிலே உயிரை மாய்க்கிறார்கள்.......!

&
என் உயிர் விவசாயிகளுக்கு
உங்கள் மகனின் கவிதை
கவிப்புயல் இனியவன்

Categories: merge-rss

பஞ்ச வர்ணக்காதல் கவிதை

Sun, 12/03/2017 - 07:26

விழியால் அனுமதி கொடுத்தாய்......
மொழியால் இதயம் நுழைந்தாய்....
அசைவுகளால் ஆட்டிப்படைக்கிறாய்....
துடிக்கும் இதயத்தை வலிக்கவைக்கிறாய்....
எப்போது நொடிக்கு நொடி பார்ப்பது...?

^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை

Categories: merge-rss

வற்றாப்பளை கண்ணகி வழக்குரை காதை

Wed, 08/03/2017 - 17:30
வற்றாப்பளை கண்ணகி வழக்குரை காதை
 
vattapalai%2Bkannaki.jpg
 
 
 
வண்டில் பூட்டி வந்து
வயல் வெளியிலிருந்து
கோவில் முற்றத்தில் பானை வைத்து
பாற்பொங்கலிட்டு
விடியும் பொழுதுவரை
கடல் நீரில் எரியுமுன் விளக்கின் ஒளியில்
முகம் பரப்பியிருக்க
ஏழு கன்னியரிலொருத்திபோலான என் தோழி 
இம்முறையும் திரும்பவில்லை
 
குருதியூறி ஓலங்களால் நிரம்பிய 
இதேபோலொரு வைகாசியில் 
அவள் காணாமற் போனதும் இவ்வெளியிற்தான்
 
சுடுமணல்போல் இருதயம் தகித்துக் கிடக்க
இருண்ட தாழைமரங்களுக்குள் 
கேட்கும் ஒற்றைக்குரல்கள்
அவள் குறித்தொரு இரகசியமும் சொல்லவில்லை
 
உடைந்த குரலில் ஆயிரம் கண்கள் கசிய
தனித்தலைபவனின் காலடிகளைத்
தொடரும் நாரைகளும் 
மௌனம் கலைத்தேதும் பேசவில்லை
 
02
அன்று உன் முன்னே  
குழந்தைகளை துரத்திச் சுட்டழித்த
ஹெலிகெப்டர்கள் இன்றுன்மீது 
குருதி மொச்சையடிக்கும் பூக்களை 
வீசக் கண்டு சிவக்கின்றனவுன் கருங்கண்கள் 
 
பண்டார வன்னியன் படைவெல்கையில்
கண்களால் நகைத்த வன்னித் தாய்
ஓயாத அலைகளில் குதூகலித்தாளெனப் பாடிய 
இடைச்சிறுவன் தொலைந்ததும் இக்கடலில்தான்
 
நீதிக்காய் மதுரையை எரித்து
கோபத்தை தணிக்க நீ வந்துறைந்த
வற்றாக் கடலில் 
நம் பிணங்கள் மிதக்கையில்
எப்போதும் நகைக்கும் உன் தாமரை கண்கள் 
வெகுண்டு துடித்தனவாம்
 
உன் முன் எதிரி எமை கொன்று வீசுகையில்
புன்னிச்சை காய்களால் 
பறங்கித்துரையை துரத்தியபோல்
பகைவரைத் துரத்தியிருந்தாலென்ன?
உன் முன் எமைநோக்கி எதிரிகள் குண்டெறிந்தபோது
கள்வரின் கண்களை மறைத்ததுபோல்
பகைவர் கண்களைக் குருடாக்கியிருந்தாலென்ன? 
 
நீ மட்டுமே பார்த்திருந்தாய்
அடிமையை எதிர்த்தவெம் முதுகுகளை கூனச் செய்தனர்
எம் வானத்துச் சூரியனை வீழ்ந்துருகச் செய்தனர்
எம் நட்சத்திரங்களைக் கருக்கினர்
உன் பூர்வீக ஜனங்களை நாடற்றவர்களாக்கினர்
 
நீ மட்டுமே பார்த்திருந்தாய்
கைப்பற்றிய என் குழந்தைகளை
யுத்த வெற்றிப் பொருட்களாய் காட்சியப்படுத்தியதை
சரணடைந்த என் சனங்களை
இன்னொரு தேச அடிமைகளாய் துன்புறுருத்தியதை
வெள்ளைக் கொடி ஏந்திய என் போராளிகளின் மார்பில்
துப்பாக்கிகளால் துளையிட்டதை 
 
மாபெரும் தாகம் நிரம்பிய நம் குரல் 
உன் முன்பேதான் கரைக்கப்பட்டது
மாபெரும் தகிப்போடிருந்த நம் கனவு 
உன் முன்பேதான் புதைக்கப்பட்டது. 
 
உன் தலைவன் கோவலனை கொலை செய்கையில் 
நீயடைந்த ஆற்றாத் துயரம்போல்
பாண்டிய மன்னனை தேடிச்செல்கையில் 
நீயடைந்த வெஞ்சினம்போல்
உன் கணவன் குற்றமற்றவன் என வெகுண்டழுந்து
நீ உடைத்தெறிந்த பொற்ச் சிலம்புபோல்
நீதிக்காய் ஆவேசத்துடன் 
கொதித்துச் சிதறிய மாணிக்கப் பரல்கள்போல்
புன்னகை கழன்று கண்ணீர் பிரவாகித்து 
பெருங்கடலானவுன் கண்களைப் போல்
பொங்கி வழியுமொரு
வைகாசி விசாகப் பொங்கல் போல்
ஊதி வெடிக்கின்றன நம் இருதயங்கள்
 
03
முள்ளிவாய்க்காலெதிரே
நந்திக்கடலோரமிருந்து 
ஆயிரங்கண்களால் 
யவாற்றையும் பார்த்திருந்த சாட்சியே
நீ கண்டிருப்பாய்
என் காதலி என்ன ஆனாளென?
 
ஆடுகளுமற்று 
பாற்புக்கை காய்ச்சி
உன் தலையில் பேனெடுக்கும் 
இடைச் சிறுவர்களுமற்றிருக்கும் நந்திவெளியில் 
நூற்றாண்டுகளாய்த் தனிமையிருக்குமுன் போல்
திரும்பி வராத தோழிக்காய் உழல்கிறேன்
 
நீதிக்காய் வழக்குரைத்து
நெடுஞ்செழியனை நடுங்கச்செய்து
அநீதியை சாம்பாலாக்கிய நந்திக்கடலரசியே
காணமற்போன என் காதல்  தோழியை மீட்க
முல்லைக் கடல் பட்டின
அநீதிச் சபைக்கு வந்தொரு வழக்குரைப்பாயா? 
¤
 
தீபச்செல்வன்
 
பண்டார வன்னியன்:  வெள்ளையருக்கு எதிராக போரிட்ட வன்னி அரசன். ஓயாத அலைகள்: இலங்கை இராணுவத்தை தோற்கடித்து முல்லைத்தீவை கைபற்றிய விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கை. வற்றாப்பளை: மதுரையை எரித்த பின்னர் கண்ணகி ஈழத்தில் வன்னியில் வந்து இறுதியாக தங்கிய ஊராக நம்பப்படுகிறது. இது ஈழ இறுதி யுத்தம் நடந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்கால் அருகிலும் நந்திக்கடல் வெளியிலும் உள்ளது. 
 
நன்றி: குமுதம் 'தீராநதி' பங்குனி 2017

http://deebam.blogspot.ca/2017/03/blog-post_8.html

Categories: merge-rss

அரை மனிதர்களாக இன்னும் எத்தனை காலம் வாழப்போகின்றோம்?

Tue, 07/03/2017 - 22:17

1
அரை மனிதர்களாக இன்னும்
எத்தனை காலம் வாழப்போகின்றோம்?

அனைத்துலகப்பெண்கள்நாள்
ஆண்டுதோறும் சிறப்பாக,
உலகெங்கும் கொண்டாடப்பட,
அழுவதே நாளாந்த வாழ்வாகிப்போன
அவலம் சுமக்கும் பெண்கள் உலகம் 
ஒன்று உள்ளது என்பது
எத்தனை பேருக்கு தெரியும்? 

உறவுகள் தொலைத்தவர் துயரை
எத்தனைபேரால் புரிந்திட முடியும்?
இழப்புக்கள் தரும் வலிகளோடு
அனுதினமும் போராடி போராடி,
அழுவதைத்தவிர வழியே இல்லாமல்
அல்லாடி அல்லாடி அவலம் சுமக்கும்
எங்கள் தாயகப்பெண்கள் நிலை
எத்தனை பேருக்கு தெரியும்?

வாழ இடமின்றி தத்தளித்து தவித்து
உயிரே போனாலும் சரி 
எம் நிலம் மீட்க
எமக்காக நாமே போராடுவோம் என
தனித்து நின்று போராடும்
எங்கள் மண்ணின் பெண்கள்
அன்றாடம் படும் அவலங்கள்
எத்தனை பேரால் உணரப்படும்.
உயிர்ப்பயம் இருந்த போர்க்காலங்களில்
உரிமையுள்ளவர்களாக தலைநிமிர்ந்து
துணிவுடன் செயற்பட்ட எம் பெண்கள்
கூனிக்குறுகி வாழும் கொடுமைக்குள்
சிக்குண்டு தவிக்கும் அவலநிலை இன்று.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி
அனுதினமும் கண்ணீருடன் போராடும் 
எம் பெண்களுக்கு நீதி கிடைக்காமல் 
நீளும் பயணங்கள் தொடர்கின்றன
சொந்த நிலத்தில் வாழ முடியாமல்
தங்கள் நிலத்துக்காக தாமே போராடும்
முடிவுடன் அறப்போராட்டங்கள் தொடர்கின்றன

நாளும் நாளும் போராடும் நிலையில்
அன்றாட வாழ்வினை நடத்திட வழியில்லை
ஆனாலும் அயராது போராடும் அவலநிலை
யாருக்கு புரியும் இவர்கள் உள்ளக்குமுறல்?
இவர்கள் மனவலிகளை எவரால் உணரமுடியும்
 

அச்சமே வாழ்வாக ஆதரவில்லா சூழலில்
நித்தம் நடுநடுங்கி வாழும் அவலம் எம்மண்ணில்.
எத்திக்கிலிருந்து எவன் வந்து தங்கள் அன்பு
பிள்ளைகளை பிடித்து செல்வானோ என
தத்தளிக்கும் சோகம் நாளும் தொடரும் கொடுமை.

பள்ளிக்கு சென்று பாடம் படிக்க விரும்பும்
தங்கள் பிள்ளைகளின் எண்ணம் ஈடேற
வழியே இல்லையா என அன்னையர்கள்
ஏங்கி தவிக்கும் அவலம்.

உறவுகளை பறிகொடுத்துவிட்டு
உள்ளம் உடைந்து உருக்குலைந்து
நடைப்பிணமாக வாழும் கொடுமை.
இதுதான் எம் மண்ணில் இன்றைய
மக்களின்  அவல வாழ்நிலை.

புதினத்தாள்களிலும் இணையத்தளங்களிலும்
வெற்று சேதிகளாக இவற்றை படித்துவிட்டு
அடுத்த பக்கத்துக்கு நகரும் 
அரை மனிதர்களாக இன்னும்
எத்தனை காலம் வாழப்போகின்றோம்?

உலகே உனக்கு கண்ணில்லையா
என கேள்விகள் கேட்க எமக்கு தெரிகின்றது.
உணரவேண்டியவர்கள்,புரியவேண்டியவர்கள்
எமக்குள் எண்ணில்லாதோர் என்பதை
எண்ணிட ஏன் மறந்தோம் நாம்?

பட்டால்தான் வலிகள் புரியும் என்பது
மானிடநேயம் புரியாதவர் சொல்லும் வார்த்தை.
சின்னத்திரைகளிலும்,வெள்ளித்திரைகளிலும்
அழுது வடிக்கும் நடிகர்களை பார்த்து
கண்ணீர் சொரிய முடிகின்ற 
எம்மவர்கள் பலருக்கு
உண்மை மனிதர்களின் துயரம்
எப்படி புரியாமல் போனது? 

உறவுகளின் இழப்பின் வலிகளை 
உணர முயல்வோம்.
தவித்து துடிக்கும் அவர்களுக்கு
தோள்கொடுத்து துணைநின்று
வலிமை அளிக்க நாம் உள்ளோம் என
வாக்கு கொடுப்போம்.
அவர்கள் வாழ்வின் விடிவுக்காக
உறுதியுடன் உழைப்போம் என
உரத்து சொல்வோம்,செயற்படுவோம்

மந்தாகினி

 

 

 

 

 

 

Categories: merge-rss

கிறிஸ்மஸ் விடுமுறை நாள் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Tue, 07/03/2017 - 13:24
 
வீச மனமின்றி வைத்திருந்த உருப்படாத பழைய கவிதை ஒன்றை எடுத்து மீழப் புனைந்துள்ளேன். எப்படி இருக்கு?
 
 
*
கிறிஸ்மஸ் விடுமுறை நாள்
வ.ஐ.ச.ஜெயபாலன்
*
விடுமுறைத் தூக்கத்தை
மதியப் பசி கலைக்க
எழுந்தேன்.
வீடு சா அமைதியில்.
*
மூலையில் மினுக் மினுக்கென
தனித்த கிறிஸ்மஸ் மரம் ஒளிரும்.
இன்று இரட்டிப்புக் கூலியென
வேலைக்கு ஓடிவிட்டாள் மனைவி.
குளிர்ப்பெட்டி நிறையப் பழசிருக்கு
சூடாக்கித் தின்னலாம்.
வெளியே வெண்பனிப் பெயலின்
இரைச்சல் அமுக்கி ஓங்குதே
என் பசிமறந்த பிள்ளைகளின் கும்மாளம்.
*
சன்னலுக்கு வந்தால்
கீழே முன்றிலில்
வெப்ப ஆடைப் பொதிகளாய்ச் சிறுவர்கள்
தம்போல் ஒருவனை
வெண்பனியில் வனைகின்றார்.
சிறுமி ஒருத்தி
கறட் கிழங்கால் மூக்கு வைத்துக்
கைகொட்டிச் சிரிக்கிறாள்.
தேர்ந்த சிற்பியாய்
கண் என்றும் வாய் என்றும்
கற்கள் பதிக்கிறார் பையன்கள்.
*
நாளை உருகிவிடும் என்றாலும்
இன்று தனித்த நம் சிறுசுகள் உருகாது
குதூகலிக்க வைக்குதே
முற்றத்துப் பனிமனிதன்.
நாளை குப்பையில்தான் எனினும்
இன்நாளை ஒளிர வைக்குதே
என் பிள்ளைகளின் கிறிஸ்மஸ் மரம்.
*
நீண்ட தூக்கமும், பெருஞ் சமையலும்
மது விருந்தாடலும்
தந்திர காதல் வேட்டையும்
புணர்வதுமாய் கழிகிற விடுமுறைகளில்
பிணிவாய்ப் படுகிற அன்னிய வாழ்வு
மூலைக் கிறிஸ்மஸ் மரத்தில்
முற்றத்துப் பனி மனிதனில்
கொண்டாடும் குளந்தைகளின் கூச்சலில்
உயிர் பூக்குதே.
*
நாளை முற்றத்தில் கரட் கிழங்கையும்
குப்பையில்
கிறிஸ்மஸ் மரத்தையும் பார்த்து
இரண்டுமே ”வீண்” என்பாள்
ஆதிசேடனுன், அட்லஸுக்குத் துணையாய்
இந்த உலகத்தை சுமக்கும் என் மனைவி.
*
வீண் என்கிற வார்த்தைதான்
வீணாக்குது நம் வாழ்வை.
Categories: merge-rss

இவையே எனக்கு சிறந்தவை

Mon, 06/03/2017 - 13:59

இவையே  எனக்கு சிறந்தவை
------------------------------------

பிறந்த நாட்டில் ....
பிறந்த ஊரில் ....
ஒருபிடி மண் தான் ....
எனக்கு ....
பொன் விளையும் பூமி .....!

பேசும் மொழிகளில் ....
எந்த மொழியில் ....
கலப்படம் இல்லையோ ....
அந்த மொழி ....
எனக்கு தாய் மொழி ..........!

பேசும் போது எவரின்.....
மனம் புண்படவில்லையோ ......
எந்த சொல் மனதை ......
காயப்படுத்தவில்லையோ ......
அந்த மொழியே எனக்கு .....
செம்மொழி ..............!

பேசிய வார்த்தைகளால் .....
கிடைத்த புகழைவிட.....
பேசாமல் விட வார்த்தைகளால் .....
நான் பெற்ற இன்பமும் .....
நன்மையும் எனக்கு .....
நோபல் பரிசு ................!

நாடார்த்திய விழாக்களில் ......
உறவுகள் நட்புகள் .......
முகம் சுழிக்காமல்......
நாடார்த்திய விழாவே .......
எனக்கு .......
பொன் விழா .........!

பாடிய பாடல்களில் ......
இசையமைக்காமல் .....
பாடிய பாடல் .....
அம்மா இங்கே வா வா ....
ஆசை முத்தம் தா தா ......
என்ற பாடல் தான் ......
எனக்கு ......
தேசிய விருது பாடல் ....!

என் சராசரி அறிவை .....
சாதனையாளர் கற்கும் ....
கூடத்தில் என்னையும் .....
கற்பிக்கவைத்து .....
என்னை இன்று ஒரு .....
சாதனையாளனாக்கிய .....
என் ஆசானே எனக்கு ......
முழு முதல் கடவுள் .....!

பசிக்கும் குழந்தையின் .....
அழுகுரல் கேட்க்காமலும் .....
கை நீட்டி பசிக்காக .....
உதவி கேட்காத ...
முதியவரையும் .......
தெருவில் காணாத நாள் ....
எனக்கு .....
சொர்க்கத்தில் தூங்கிய நாள் .....!

எனக்கு வயது பத்து .....
என் தம்பிக்கு வயது எட்டு .....
தம்பியை அடித்த அவன் ....
நண்பனை நான் அடித்தேன் ....
அந்த நாள் நான் ஏதோ....
மாவீரன் போல் நினைத்த ....
நாள் - எனக்கு மனதில் ...
மல்யுத்த வீரன் நினைப்பு ......!

நாற்பது பேர் கொண்ட .....
வகுப்பறையில் .....
முதல் மாணவனாய் வந்து ....
பரிசுபெற்று மேடையை ....
விட்டு இறங்கியபோது ....
நான் நடந்த நடை தான் 
எனக்கு ......
ராஜ நடை .........!

&
கவிப்புயல் இனியவன் 
 

Categories: merge-rss

தோல்வியை ரசி வெற்றியை ருசி

Wed, 01/03/2017 - 14:46

முயற்சி மனிதனின்.....
மூலவேர் -அதை.......
விருட்ஷமாக்குவது........
பயிற்சி.......................!!!

பயிற்சி போதாதெனின்......
தோல்வியென்னும்............
கிளை தோன்றும்..................
முயற்சி  தோற்பதில்லை.......!!!

வெற்றியின் போது........
ஓரக்கண்ணில் வருவது........
ஆனந்த கண்ணீரல்ல..........
தோல்வி தந்த வெள்ளை நிற.......
இரத்தம்...................!!!

&
தோல்வியை ரசி வெற்றியை ருசி
கவிப்புயல் இனியவன்

Categories: merge-rss