வாழும் புலம்

சர்வதேச சுயாதீன விசாரணையின் ஊடாக மாத்திரமே அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடையமுடியும் - சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டு

2 months 3 weeks ago

Published By: Vishnu

19 Sep, 2025 | 05:36 AM

image

(நா.தனுஜா)

இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் உள்ளகப்பொறிமுறை ஊடாகவன்றி, சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையின் ஊடாக மாத்திரமே அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடைந்துகொள்ளமுடியும் என சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேசிய கனேடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் 'இலங்கையில் சர்வதேச பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல்' எனும் தலைப்பிலான கலந்துரையாடலொன்று கடந்த வாரம் ஜெனிவா ஊடக அமையத்தில் நடைபெற்றது. தேசிய கனேடியத் தமிழர் பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ருக்ஷா சிவானந்தனால் தொகுத்தளிக்கப்பட்ட இக்கலந்துரையாடலில் சர்வதேச குற்றவியல் வழக்கறிஞரான அலைன் வேனர், சர்வதேச சட்டத்தரணி மரியம் பொஸ்டி, பாலியல் மற்றும் பாலின வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையாளர் ஜுலி டுபே கக்னன், தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஸ்ரீ ஞானேஸ்வரன் (நிகழ்நிலை முறைமையில்) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அவர்கள் உள்ளகப்பொறிமுறைகள் மூலமாகவன்றி, சுயாதீன சர்வதேச விசாரணைகளின் ஊடாக மாத்திரமே இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யமுடியும் என்ற விடயத்தைப் பொதுவாக வலியுறுத்தினர்.

அதன்படி இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து சுட்டிக்காட்டிய ருக்ஷா சிவானந்தன், உள்நாட்டில் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு சர்வதேச பொறுப்புக்கூறல் செயன்முறையொன்று உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டார். அத்தோடு பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் தப்பிப்பிழைத்தோரின் நம்பிக்கையை வென்றெடுத்ததும், குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறவைக்கக்கூடியதும், தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கக்கூடியதுமான சர்வதேச சுயாதீன விசாரணை மற்றும் வழக்குத்தொடரல் பொறிமுறையை விரைவாக ஸ்தாபிக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் பிரஸ்தாபித்தார்.

அதேவேளை நிகழ்நிலை முறைமையில் உரையாற்றிய வடமாகாணத்தைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் தமிழ் சிவில் சமூக அமையத்தின் செயற்பாட்டாளர் ஸ்ரீ ஞானேஸ்வரன், 1948 ஆம் ஆண்டு முதல் தமிழ்மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இனவழிப்பு யுத்தம், இனவழிப்பு கலவரம், இனப்படுகொலை, அரச அனுசரணையுடனான கண்காணிப்பு, ஒடுக்குமுறை, அத்துமீறல், கைது, வன்முறை, சித்திரவதை, பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல், சிங்களமயமாக்கல், வலிந்து காணாமலாக்கப்படல்கள், காணி சுவீகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் பற்றி விளக்கமளித்ததுடன் அவை இப்போதும் தொடர்வதாக விசனம் வெளியிட்டார். அதுமாத்திரமன்றி அண்மையில் கண்டறியப்பட்ட செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியானது நம்பகத்தன்மை வாய்ந்ததும், சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணைப்பொறிமுறையொன்று உடனடியாக நிறுவப்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று இதுகுறித்து கருத்துரைத்த சர்வதேச குற்றவியல் வழக்கறிஞர் அலைன் வேனர், தமிழ்மக்களின் மீண்டெழும் தன்மையைப் பாராட்டியதுடன் நீதிக்கான தொடர் போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். அத்தோடு இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஆதாரங்களைத் திரட்டுவதற்கான ஐ.நாவின் முயற்சியை அங்கீகரித்த அவர், இருப்பினும் சர்வதேச சுயாதீன விசாரணையின் ஊடாக மாத்திரமே அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடையமுடியும் என்றார்.

மேலும் ஆதாரங்கள் முறையாக ஆவணப்படுத்தப்பட்ட முழுமையான வழக்கு கோப்புகளை தயாரிக்கவேண்டிய முக்கிய வகிபாகத்தை தமிழ்ச்சமூகம் கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அலைன் வேனர், பல்வேறு தேசிய நீதிமன்றங்கள் மற்றும் சட்ட ஏற்பாடுகள் ஊடாக தமிழர்களின் நீதியைக்கோரும் செயன்முறை தொடரவேண்டும் என வலியுறுத்தினார்.

அடுத்ததாக, 'பொறுப்புக்கூறல் சார்ந்த முயற்சிகளை சீராக வடிவமைப்பதில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும், தப்பிப்பிழைத்தோருக்கும் முக்கிய பங்குண்டு. குறிப்பாக சான்றுகளை ஆவணப்படுத்துவதிலும், நீதியை முன்னிறுத்திய பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதிலும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் தனிப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் முன்னரங்கில் நின்று பணியாற்றுகின்றனர்' என சர்வதேச சட்டத்தரணி மரியம் பொஸ்டி தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/225465

இரண்டு வருடங்ளுக்கு ஆணையை நீடியுங்கள் ; பொறுப்புக்கூறல் தொடர்பில் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளிடம் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூட்டாக இணைந்து வேண்டுகோள்

3 months ago

16 Sep, 2025 | 09:02 AM

image

நா.தனுஜா

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தொடரும் அதேவேளை, இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரு வருடங்களுக்கு காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு மற்றும் கண்காணிப்பு நாடுகளிடம் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச பேரவை ஆகிய சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு மற்றும் கண்காணிப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான புதிய பிரேரணையொன்றைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் உங்களால் ஆரம்பிக்கபட்டிருக்கும் நிலையில், இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கக்கூடிய வகையில் வலுவானதொரு பிரேரணையை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகமொன்றை ஸ்தாபிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடு வரவேற்கத்தக்கது எனினும், அத்தகைய கட்டமைப்பொன்றை ஸ்தாபித்து, அதனை முழுமையாக இயங்கச்செய்வதற்கு மாதங்களோ அல்லது வருடங்களோ ஆகலாம். 

அதுமாத்திரமன்றி அதனைச் செய்வதற்கான போதுமான அரசியல் தன்முனைப்பு வெளிக்காட்டப்படவேண்டும். அத்தோடு சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகம் ஸ்தாபிக்கப்படும் எனக் கூறுவது மாத்திரம் போதுமானதன்று. மாறாக அதுகுறித்து நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும், அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இதுவரையில் குறைந்தபட்சம் சுமார் 10 வெவ்வேறு ஆணைக்குழுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னரும் கூட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவில்லை. குற்றவாளிகளைப் பாதுகாக்கும் உள்ளகப்பொறிமுறைகள் மீது பாதிக்கப்பட்ட தரப்பினரும், அவர்களது குடும்பத்தினரும், இழப்புக்களுக்கு முகங்கொடுத்த சமூகத்தினரும் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துடன் தொடர்புகளைப்பேணி வந்திருக்கிறார்கள். 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தொழில்நுட்ப உதவிகளுடன் உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரையில் அர்த்தமுள்ள முன்னேற்றங்கள் எவையும் அடையப்படாத நிலையில், இம்முன்மொழிவு மீண்டுமொரு தோல்விக்கே வழிவகுக்கும்.

அதுமாத்திரமன்றி பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புகள் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாப்பதற்கான கட்டமைப்பு என்பன நம்பத்தகுந்த உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கு மிக அவசியமானவையாகும். எனினும் அவரை தற்போது நடைமுறையில் இல்லை.

மாறாக நீதியைக்கோரிப் போராடுபவர்கள் அரசாங்கத்தினதும், பாதுகாப்புத்தரப்பினரதும் தொடர் அடக்குமுறைகளுக்கு உள்ளாகிவருகின்றனர்.  எனவே 2015 ஆம் ஆண்டு பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்ட செயற்திறன்மிக்க சர்வதேச பங்கேற்பின்றி, தனித்த உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறையினால் பாதிக்கப்பட்ட தரப்பினரின் ஆதரவையும், பங்கேற்பையும் உறுதிப்படுத்தமுடியாது. 

கடந்த 2024 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில், கடந்தகால மீறல்கள் தொடர்பிலும், மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது. இலங்கையில் சர்வதேச மனிதாபிமானச்சட்டத்துக்கு எதிரான மிகமோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகள் ஊடாகக் கண்டறியப்பட்டன.

இருப்பினும் உள்ளக நிலைமாறுகால நீதிப்பொறிமுறைக்கான நம்பத்தன்மையை சிறுபான்மையின மக்கள் மத்தியில் கட்டியெழுப்புவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் தவறிவிட்டன.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தொடரும் அதேவேளை, இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரு வருடங்களுக்கு காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

https://www.virakesari.lk/article/225193

பிரித்தானியா, கனடா உள்ளிட்ட 6 நாடுகள் இணைந்து ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்துள்ள புதிய பிரேரணை

3 months ago

Published By: Priyatharshan

10 Sep, 2025 | 08:34 AM

image

பிரித்தானிய, கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், இலங்கை தொடர்பான ஒரு புதிய தீர்மான வரைவு (A/HRC/60/L.1) ஒன்றை சமர்ப்பித்துள்ளன. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், ஐக்கிய இராச்சியம், கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து  இலங்கை தொடர்பான ஒரு புதிய தீர்மான வரைபை சமர்ப்பித்துள்ளன.

சமர்ப்பிக்கப்ட்டுள்ள தீர்மான வரைபில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்தத் தீர்மானம், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

2024 செப்டம்பர், நவம்பர், 2025 மே மாதங்களில் நடைபெற்ற ஜனாதிபதி, பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களைத் இந்த தீர்மானம் வரவேற்றுள்ளது.

அத்துடன், ஊழல் மற்றும் பொருளாதார முறைகேடுகளுக்குப் பொறுப்புக்கூற அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அது அங்கீகரித்துள்ளது.

அனைத்துத் தரப்பினராலும், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) உட்பட, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு முழுமையான பொறுப்புக்கூறல் அவசியம் என்று தீர்மானம் வலியுறுத்துகிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைத் தீர்மானம் கவனத்தில் கொள்கிறது. எனினும், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இச்சட்டத்தின் கீழ் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவதை அது கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது. 

எனவே, இச்சட்டத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தி, அதனை நீக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்துகிறது.

இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பான பல வழக்கு விசாரணைகள் தீர்க்கப்படாமல் இருப்பது குறித்து தீர்மானத்தில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளை சர்வதேச தரங்களுக்கு இணங்க அகழ்வதற்குத் தேவையான நிதி, மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப வளங்களைப் பெறுவதற்கு சர்வதேச உதவியை நாட வேண்டும் என்றும் இலங்கை அரசை இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.

பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்த்துப் போராடுவதன் மூலம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தீர்மானம் வலியுறுத்துகிறது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பான முக்கிய வழக்குகளில் மீண்டும் விசாரணைகளைத் தொடங்குவதையும், சுதந்திரமான சட்டவாளர் அலுவலகத்தை நிறுவுவதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளைத் தீர்மானம் வரவேற்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தின் செயல்பாடுகளை மேலும் நீட்டிக்கவும், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்து வாய்மொழி மற்றும் எழுத்துபூர்வ அறிக்கைகளை எதிர்கால அமர்வுகளில் சமர்ப்பிக்கவும் இந்தத் தீர்மானம் கோருகிறது. 

https://www.virakesari.lk/article/224686

தமிழர்களின் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் கோரிக்கையை ஆதரிக்கிறோம் - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவிப்பு

3 months ago

09 Sep, 2025 | 09:23 PM

image

(நா.தனுஜா)

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் தமது கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், தமிழர்களின் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வலியுறுத்தலை தாம் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் எலும்புக்கூடுகள், சிறுவர்களின் உடைகள் மற்றும் குழந்தைகளின் பால் போத்தல் உள்ளிட்ட பொருட்களுடன் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியானது யுத்தகாலத்தில் இடம்பெற்ற அட்டூழியங்களை நினைவுறுத்தும் வகையில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதி நிலைநாட்டப்படுவதுடன் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சுயாதீன விசாரணையையும், உண்மையான பொறுப்புக்கூறலையும் கோருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இத்தகைய மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்துக்கு வட கரோலினா ஒரு வீடாக இருப்பதனையிட்டுப் பெருமிதமடைவதாகவும், இந்த மனிதப்புதைகுழி அகழ்வை அடுத்து அதுபற்றித் தன்னைத் தொடர்புகொண்டு பேசிய தனது தொகுதி மக்களை நினைத்துப்பார்ப்பதாகவும் காங்கிரஸ் உறுப்பினரான டெபோரா ரோஸ் அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி தமிழர்களின் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வலியுறுத்தலை தான் ஆதரிப்பதாகவும் அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/224676

ஐ.ஓ.எம் அனுசரணையுடன் விசேட செயற்திட்டத்தை வடிவமைக்கிறது ஐ.நா

3 months 1 week ago

விசேட செயற்திட்டத்தை வடிவமைக்கிறது ஐ.நா

Published By: Vishnu

05 Sep, 2025 | 03:30 AM

image

(நா.தனுஜா)

நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் நிலவும் காணிப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கிலான விசேட செயற்திட்டமொன்று சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையினால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் நிலங்களுக்கான எல்லை நிர்ணயம், படையினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் தனியார் காணிகள், அரச கட்டமைப்புக்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரால் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணி சுவீகரிப்புக்கள் என்பன உள்ளடங்கலாக காணி சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் சமகாலத்தில் இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ளன.

இப்பிரச்சினைகளுக்கு சுமுகமானதும், நியாயமானதுமான முறையில் தீர்வுகாணும் நோக்கில் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் (ஐ.ஓ.எம்.) அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையினால் விசேட செயற்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.

அத்தோடு இச்செயற்திட்டத்தின்கீழ் அரச கட்டமைப்புக்கள், பாதுகாப்புத்தரப்பினர், சிவில் சமூக அமைப்புக்கள், படையினர் வசமுள்ள தனியார் காணிகளின் உரிமையாளர்கள் உள்ளடங்கலாக இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரும் உள்வாங்கப்படுவர் எனவும் தெரியவருகிறது.

மேலும் இச்செயற்திட்டத்தின் ஊடாக வட, கிழக்கில் காணிப்பிரச்சினைகளுடன் தொடர்புடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தல்,  படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல், எல்லைகளை உரியவாறு மீள்நிர்ணயிப்பதற்கு அவசியமான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களை உள்ளகக் கட்டமைப்புக்களுக்கு வழங்கல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/224244

இலங்கை அரசின் இன அழிப்பு நோக்கத்துக்கான சான்றாகிறது செம்மணி ; இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரையுங்கள் - இணை நாடுகளுக்கு புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாகப் பரிந்துரை

3 months 1 week ago

02 Sep, 2025 | 06:00 PM

image

(நா.தனுஜா)

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் இணையனுசரணை நாடுகளால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை வரைவில் சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலை வலுப்படுத்தல், ஆக்கபூர்வமான முறையில் இழப்பீடுகளை வழங்கல், மீள்நிகழாமையை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய 3 பிரதான கூறுகளை உறுதிப்படுத்துவதற்கு ஏதுவான விடயங்கள் உள்ளடக்கப்படவேண்டும் என சர்வதேச நாடுகளில் இயங்கிவரும் 18 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் இணையனுசரணை நாடுகளுக்கு கூட்டாகப் பரிந்துரைத்துள்ளன.

இதுகுறித்து பிரித்தானியத் தமிழர் பேரவை, புதுடில்லி தமிழ்ச்சங்கம், ஜேர்மனி தமிழர் கொள்கைப் பேரவை, சுவிட்ஸர்லாந்து தமிழ் நடவடிக்கைக் குழு என்பன உள்ளடங்கலாக பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா, ஜேர்மனி, நெதர்லாந்து, கனடா, அயர்லாந்து, தென்னாபிரிக்கா, சுவிட்ஸர்லாந்து, மொரீஸியஸ் ஆகிய நாடுகளைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் 18 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டிணைந்து இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகள், பேரவையில் அங்கம்வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பிவைத்திருக்கும் பரிந்துரை ஆவணத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை கடந்த ஏழு தசாப்த காலமாக தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பிலும், போர்க்குற்றங்களிலும், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களிலும் ஈடுபட்டிருப்பதுடன் அதன் விளைவாக சுமார் பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் நாட்டை விட்டு அகதிகளாகத் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை உள்ளிட்டவற்றைத் தொடர்ந்தும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்கிறது. சாட்சியங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்திய நீதி இன்னமும் நிலைநாட்டப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலை வலுப்படுத்தல், ஆக்கபூர்வமான முறையில் இழப்பீடுகளை வழங்கல், மீள்நிகழாமையை உறுதிப்படுத்தக்கூடியவகையில் அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய 3 பிரதான விடயங்களை முன்னிறுத்தி உடனடி நடவடிக்கையைக் கோரும் வகையில் எதிர்வரும் இம்மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய பிரேரணை வரைவு அமையவேண்டும்.

குறிப்பாக அண்மையில் யாழ். செம்மணியிலும், திருகோணமலையின் சம்பூரிலும், மன்னாரிலும் கண்டறியப்பட்டுள்ள மனிதப்புதைகுழிகளும், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்குச் சொந்தமானவை உள்ளடங்கலாக அங்கு அடையாளங்காணப்பட்ட மனித எச்சங்களும் இலங்கை அரசின் இனப்படுகொலை நோக்கத்துக்கான வலுவான ஆதாரங்களாகக் காணப்படுகின்றன. எனவே ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை 1948 தொடக்கம் இப்போது வரை நிகழ்த்தப்பட்ட சகல அட்டூழியங்கள் தொடர்பிலும் ஆதாரங்களை திரட்டும் வகையில் விரிவுபடுத்தப்படவேண்டும்.

அதேபோன்று இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உடனடியாகப் பாரப்படுத்துவதற்கு அவசியமான வலுவான ஆதாரங்களுடன்கூடிய 15 - 20 முக்கிய வழக்குகளை அடையாளம் காணவேண்டும்.

அடுத்ததாக இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றங்களுக்குப் பரிந்துரைத்தல், உலகளாவிய நீதிப்பொறிமுறையை நடைமுறைப்படுத்தல், இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை ஒன்றை ஸ்தாபிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் ஐ.நா பொதுச்சபைக்குப் பரிந்துரைக்கப்படல் என்பவற்றுக்கான கூறுகள் புதிய பிரேரணையில் உள்ளடக்கப்படவேண்டும்.

அத்தோடு படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவித்தல், தமிழர் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணித்தல், மீள்குடியேற்றம், நிலையான வாழ்வாதாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டு முன்னெடுப்பதற்கு சர்வதேச அனுசரணையுடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், ஐ.நா நிபுணர்கள் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் இடைக்கால உள்ளகக் கட்டமைப்பொன்று நிறுவப்படவேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/224054

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: பிரித்தானியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் புலம்பெயர் தமிழர்கள்!

3 months 2 weeks ago

7bd69738-01e2-46e5-bbca-779b5d60d270.jpg

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: பிரித்தானியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் புலம்பெயர் தமிழர்கள்!

”செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியை பெற்றுக்கொடுக்க முடியும்” என புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு நேற்று லண்டன் டவுனிங் ஸ்ட்ரீட்டில் இடம்பெற்ற  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.

‘இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு, கண்ணீரால் நினைவுக்கூரப்படும் உயிர்கள்’ என்ற தொனிப்பொருளில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

7bd69738-01e2-46e5-bbca-779b5d60d270.jpg?resize=600%2C450&ssl=1

ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதுடன், இலங்கையில் காணாமலாக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியை வழங்க முடியும் என வலியுறுத்தினர்.

அத்துடன் பாதிக்கப்பட்ட தரப்பாக தமிழர்களுக்கு சர்வதேச விசாரணையொன்று இங்கு இடம்பெறுவதன் ஊடாகவே நீதியை பெற முடியும் எனவும், இந்த விடயத்தில் மனித உரிமைகளை நிலைநாட்ட பிரித்தானிய அரசாங்கம் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள்  வலியுறுத்தி வருகின்றனர்.

செம்மணி மனித புதைகுழியில் பல 50 இற்கும் அதிகமான எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எனவே, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெறுவதன் ஊடாகவே செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிகளில் கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

f4ee3c2d-2789-4886-a4b9-294593b61c01.jpg?resize=600%2C450&ssl=1

https://athavannews.com/2025/1445381

Checked
Tue, 12/16/2025 - 19:52
வாழும் புலம் Latest Topics
Subscribe to வாழும் புலம் feed