எங்கள் மண்

வாழ்க்கையில் மறக்கமுடியாத மனிதர்களை 2009 இதே நாளில்...

2 months 2 weeks ago

வாழ்க்கையில் மறக்க முடியாத மனிதர்களை 2009 இதே நாளில் தான் இறுதியாக சந்தித்தேன்.

மூலம்:- புவியரசன்.


2009 மே 14 மதியம் ஒரு மணிக்குப்பின்னர் இறுதியாக எனது போர்க்கால ஊடகப்பணிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணம். வழமை போலவே மக்கள் மீதான தாக்குதல்களையும் பாதிக்கப்பட்ட மக்களையும் வீடியோ எடுத்துவிட்டு, அதனை வெளியில் அனுப்புவதற்காக முகாமுக்குச் செல்கிறேன்.

மக்கள் மணித்தியாலயத்திற்கு மணித்தியாலம் எவ்வாறு தமது பதுங்கு குழிகளை எப்படி இடம் மாற்றினார்களோ அதே போலத்தான் விடுதலைப்புலிகளும் தமது இடங்களை மாற்ற வேண்டிய நிலை.


ஒவ்வொரு நாளும் நெருக்கடிகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. 13ஆம் திகதி இடம்பெற்ற எறிகணைக் களஞ்சிய வெடி விபத்தில் என்னுடைய வீடும் அதில் இருந்த பெறுமதிமிக்க ஆவணங்களும் எரிந்துபோயின. அதை இந்த இடதில் சொல்வது விடயத்தை நீட்டிச்செல்லும் என்பதால் அதனை இதில் சொல்லவில்லை.

எனது வீடு எரிந்ததால் எனக்கு மாற்றி உடுத்துவதற்கு எந்த உடையும் இல்லை. ஒரு சறம் மட்டுமே மிச்சம். அந்த சாறத்துடன் முகாமுக்கு செல்கிறேன். முகாமில் (புலிகளின் குரல் பொறுப்பாளர்) யவான் அண்ணர் என்னைப் பார்த்ததும், "என்னடா காயப்பட்டிட்டியோ?.. என்ன?.." என்றார். 

நான், "இல்லை அண்ணை, என்ர வீடு நேற்று எரிஞ்சு போச்சு," என்றேன். 

"அப்ப வீட்ட யாருக்கும் பிரச்சினையோ? அம்மா எப்படி இருக்கிறா?" 

"இல்லை அண்ணை, ஆட்களுக்கு ஒண்டும் பிரச்சினை இல்லை. வீடு தான் எரிஞ்சுபோச்சு..." 

என்றவாறு நான் வேலையை கவனிக்கத் தொடங்கினேன். அப்போது யவான் அண்ணர் அருகிலிருந்த புலித்தேவன் அண்ணர் அவர்களைப்பார்த்து, 

"புலித்தேவன், புவியரசனுக்கு ஏதாவது ஒழுங்கு செய்து கொடுங்கோ," என்கிறார். 

அவரும் அதற்கு, "சரி, பார்ப்போம்," 

என்று தலை அசைக்க... என்னுடைய இறுதி நாள் வேலையை தொடங்குகிறேன்...

***

குறிப்பு:- திரு.சிவகரனின் (Siva Karan) முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது.

சமராய்வு
No image previewவாழ்க்கையில் மறக்கமுடியாத மனிதர்களை 2009 இதே நாளில்...
வாழ்க்கையில் மறக்க முடியாத மனிதர்களை 2009 இதே நாளில் தான் இறுதியாக சந்தித்தேன். மூலம்:- புவியரசன். 2009 மே 14 மதியம் ஒரு மணிக்குப்...

அவள் எனது செஞ்சோலைச் சகோதரி: முள்ளிவாய்க்கால் நினைவுப் பகிர்வு!

2 months 2 weeks ago

வருடங்கள் கடந்தாலும் குத்திக்கிழிக்கும் ரணங்களாக ஈழத்தின் இறுதிப்போர் அமைந்து விட்டது. வன்முறையால் பறிக்கப்பட்ட உயிர்களுக்கான நிரந்தரத் தீர்வுக்காய் இரவும் பகலும் தனிமையில் விம்மும் எங்கள் கண்ணீரின் நிறுவைகள் இன்னும்? போதவில்லையா?

எப்படிக் கடந்து போகமுடியும்? இழந்துபோனவை இரத்தமும் சதையுமாய் உயிரோடு உயிரூட்டிய உயிர்களல்லவா? எத்தனை விதமான சாவுகள் கண்டோம். பதுங்குகுழியை மூடியது குண்டுகள்.

குற்றிகள் பாறிண்டு பிரண்டன. பாதுகாப்பு வலையங்கள் என அறிவித்த இடங்களில் தானே பதுங்குகுழிகளை அமைத்தோம். பிறகெப்படி குண்டுகளை கிபீர் விமானங்கள் கொட்டின? பாதுகாப்பு இடங்களை நோக்கி ஏன் ஆட்டிலெறித் தாக்குதல்கள்?

பதுங்குகுழிகளுக்குள் சமாதியாகியோர் ஆயிரமாயிரம். மூடிய குழிகளைக் கிண்டிக்கிளறி எடுத்து மீட்கப்பட்ட, மூச்சுத் திணறியோரில் நானும் ஒருத்தி.

எந்த ஒரு காயமும் இல்லாமல் மயக்கத்தில் கிடந்த என் மகன் மயக்கம் தெளிந்து எழுந்தபோது மகிழ்ச்சி மேலீட்டால் “அப்பா ” என்ற ஒற்றைச் சொல்லுடன் ஏன் உயிர் விட்டான்? தீராத வேதனையை ஏன் எனக்குள் தந்தான்?

நடமாடும் பிணமானதே என் வாழ்வு.

அக்கினிக் குஞ்சுகளில் சிறிது பெரிது உண்டோ? உயிரிலும் சின்ன உயிர் பெரிய உயிருண்டோ? காலங்கள் ஓடினாலும் வளராத தளிர்முகத்தின் கெஞ்சல்களும் குறும்புகளும் இரத்தத்தை சாகடிக்குதே.

பதுங்குகுழி அமைக்க முன்னரே வெறும் பதுங்குகுழிக்குள் இறந்தவர் தொகை மடங்கு. மரங்களில் பறவைகள் தொங்குவது போல மனித அங்கங்கள் தசைத் துண்டங்கள் தொங்கியதை எப்படி மறப்பது. பாதுகாப்புக்காய் எழுந்து ஓடும்போது “சலுக் சலுக்” என கால்களைப் புதைத்த தசைத் துண்டங்கள் யாருடையவை? 

சாணியை மிதித்தது போல் தசைத்துண்டங்களை மிதித்து ஓடினோம். உடலில் உயிர் சுமந்த பிணங்களாய் ஆயிரம் ஆயிரம் அவலங்களை மன மயானத்தில் திரும்பத் திரும்ப தகனம் செய்யும் நடமாடும் சுடலையர் ஆனோம்.

இறந்தவரோடு இறக்காமல் எஞ்சிய எச்சங்களாய் நடந்தவற்றை சொல்லி இறந்தவரிற்கு நீதிகோரி நீதியை நிலைநாட்ட எஞ்சினோமா? தலைபாறி விழுந்த தென்னைகளும் வேரோடு சாய்ந்த விருட்சங்களும் கணப்பொழுதில் உருக்குலைந்த காட்சிகளும் கண்ட சாட்சியர் நாங்கள்.

முள்ளிவாய்க்கால் கரையோர வீதியால் இறப்பர் சிலிப்பருடன் கொதிகொதிக்கும் வெயிலில் நடந்தொருநாள் வந்தேன். என்னுடன் முன்னும் பின்னும் பலர் வந்தனர். சிலர் தெரிந்தவர்கள். எங்களைக் கடந்து ஒரு உழவு இயந்திரத்தில் காயப்பட்ட பலரை ஏற்றியபடி சென்று கொண்டிருந்தது.

பின்னால் காயப்பட்ட சிலர் விழுவதுபோல் தொங்கிக் கொண்டிருந்தார்கள். கைக்குழந்தையையும் அணைத்தபடி “அண்ணோய்…. அண்ணோய்…." எனக் கத்திக்கொண்டு என்னை மறந்து ஓடினேன். என்னுடன் இன்னொரு பெண்ணும் கத்தியபடி என்னருகில் ஓடி வந்தாள். எறிகணைகள் தலையை உரசுவது போல் கூவிக்கொண்டு கடற்கரைகளில் வெடித்தன.

பிரக்ஞை அற்று ஓடினோம், கத்தியபடி.

எங்கள் கூவல்கள் கதறல்கள் ஓட்டுநருக்குக் கேட்க வாய்ப்பில்லை. அவன் ஓட்டுநர் அவதானிப்புக் கண்ணாடியில் பார்த்துவிட்டு உழவியந்திரத்தை நிறுத்தினான். ”அண்ணா, இஞ்ச பின்னுக்கு ஆட்கள் கீழ விழப்போகினம்,” எனக் கத்தினேன். என்னோடு வந்த பெண்ணும் கத்தினாள்.

“நீங்களும் சாகப் போறியளோ? நானும் எத்தினை பேரைத்தான் செத்தபின் தூக்குவது? இதெல்லாம் செத்த பிணங்கள். ஓடிப்போய் உயிர் தப்புங்கோ,” எனக்கத்திப் பேசிவிட்டு உழவியந்திரத்தை நகர்த்தினான்.

'ஆமி' சரமாரியாகப் பொதுமக்கள் நடமாடும் இடங்கள் மீது எறிகணைகளை ஏவத் தொடங்கினான். "அக்கா இஞ்ச வா…,” எனக் கையில் பிடித்திழுத்து பதுங்குகுழிக்குள் இறக்கினாள் ஆரணி. அவள் எனது செஞ்சோலைச் சகோதரி. முழக்கங்கள் குறைந்ததும் தேனீரூற்றித் தந்தாள். "வேண்டாமடா, இப்ப தான் குடிச்சனான்," எனப் பொய் உரைத்தேன்.

"என்ர அக்காவுக்குப் பொய் சொல்லத் தெரியாது," எனச் சொல்லி, தேனீருடன் ரொட்டியும் தந்தாள். அமிர்தமாய் இருந்தது. எனது பையில் இருந்து எனக்கு சலுகை அடிப்படையில் கிடைத்த திரிபோசா பைகளில் ஒன்றை அவள், "வேண்டாம், வேண்டாம்," என்று மறுத்தபோதும் கொடுத்துவிட்டு நகர்ந்தேன். 

சாப்பிட்டது உற்சாகமாக இருந்தது. என் வரவுக்காய் காத்திருக்கும் எனக்காக எஞ்சியிருந்த இரண்டு உயிர்களின் முகங்களைக் காண ஓட்டமும் நடையுமாக இருப்பிடம் நோக்கி நகர்ந்தேன்.

- வன்னிமகள், எஸ்.கே.சஞ்சிகா. -

குறிப்பு:- முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது.

https://www.samaraivu.com/2018/05/blog-post_26.html

வலிகளைச் சுமந்த அந்த நாட்கள்: நினைவுப் பகிர்வு!

2 months 2 weeks ago

வீரம் விளைந்த வன்னி மண்ணில் வலிகள் சுமந்த அந்த நாட்களை, அந்த ஒவ்வொரு மணித் துளிகளையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

வெள்ளையரிடம் அடிபணிய மறுத்த பண்டாரவன்னியன் காக்கை வன்னியனின் காட்டிக் கொடுப்பினால் வெள்ளையரால் தோற்கடிக்கப்பட்டதுதான் வன்னிராச்சியம் என்கின்றது வரலாறு.

தங்களிடம் அடிபணிய மறுத்த தமிழர் சேனையை உலக நாடுகளின் ஆதரவோடும் ஒத்துழைப்போடும் காட்டிக்கொடுக்கும் எட்டப்பர்களின் துணையோடும் வெற்றிகொண்டதாக சிங்களம் மமதையில் துள்ளுகின்றது.

இந்த வெற்றியைப் பெறுவதற்காக சிங்களம் அரங்கேற்றிய கொடூரம், மனித இனம் என்றுமே சந்தித்திருக்காதது.

அந்த அவலங்களின் கதையினை உங்களிடம் சொல்லவும் என்னிடம் சொற்கள் இல்லை. அந்த நாட்களை நினைவு மீட்கையில் நெஞ்சம் உறைகிறது.

தமிழன் குருதி உறைந்த அந்த மண்ணில் எத்தனை தமிழர்களின் உயிர்கள் உறைந்து போயின. வன்னியெங்கும் இப்போது தமிழர்களின் உடலங்கள் விதைக்கப்பட்ட பூமியாக மாறியிருக்கின்றது. எங்களின் குருதி தோய்ந்த அந்த மண்ணில் இன்று சப்பாத்துக் கால்கள் சுதந்திரமாக நடமாடித் திரிகையில் நெஞ்சு இன்னும் வெடிக்கிறது.

மன்னாரில் தொடங்கிய தமிழர்களின் ஓட்டம் கிளிநொச்சியையும் தாண்டித் தொடரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. கிளிநொச்சியுடன் முடிந்ததடா தமிழன் கதை என்று பரந்தன், தர்மபுரம், விசுவமடு, உடையார்கட்டு, தேவிபுரம், புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, மாத்தளன் முள்ளிவாய்க்கால் வரை நடந்தன தமிழரின் கால்கள். இந்த அழிவிற்குத்தான் இவ்வளவுதூரம் நடந்து வந்தோமா? என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.

2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அளவில் கிளிநொச்சியினை விட்டு நடக்க வெளிக்கிட்டோம். 2009 மே-17 முள்ளிவாய்க்கால் வரை நடந்துகொண்டே இருந்தோம். இந்த நெடும் பயணத்தில் எத்தனை எத்தனை அழிவுகளை நாம் சந்தித்தோம்!

கிளிநொச்சியில் இருந்து எனது குடும்பமும் இடப்பெயர்வினைத் தொடங்கியது. கிளிநொச்சி நகரின் ஒரு பகுதியில் ஓலைக் குடிசையில் வசித்துவந்தது என் குடும்பம். நாளாந்தம் கூலி வேலையினைச் செய்து எனது குடும்பத்தினை பார்க்கவேண்டிய கட்டாயத்தில் நான். போர் தொடங்கியதன் பின்னர் கூலிவேலை கிடைப்பது கூட மிகக் கடினமாக மாறியிருந்தது. குடும்பத்தை நான்தான் காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் ஆபத்தான கூலிவேலைகளை நான் செய்யமுற்பட்டேன்.

அதாவது, அன்று அக்கராயன் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சி பகுதிகளுக்குள் தங்கியுள்ள மக்கள் சூனியப்பிரதேசமாகக் காணப்படும் அவர்களின் வாழ்விடங்களுக்கு உழவு இயந்திரங்கள், இருசக்கர உழுபொறிகள் (லான்ட்மாஸ்ரர்) பேன்றவற்றில் சென்று அவர்களின் வீட்டுக்கூரை, யன்னல்கள், ஓடுகள், 'சீற்' போன்றவற்றை கழட்டி ஏற்றுவதற்காக நானும் செல்கின்றேன். 

நாள் ஒன்றிற்கு 150 ரூபா அல்லது 200 ரூபாதான் தருவார்கள். இவ்வாறு இருக்கும்போதுதான் எனது குடும்பம் கிளிநொச்சியினை விட்டு இடம்பெயரவேண்டிவந்தது. கிளிநொச்சியும் அரச படையினரின் எறிகணைத் தாக்குதலின் நகரமாக மாறுகின்றது. ஒரு மாட்டுவண்டிலில் ஏற்றும் பொருட்களை மிதிவண்டியில் முன்னும் பின்னுமாக கட்டிக்கொண்டு நானும் எனது குடும்பமும் தருமபுரம் பகுதி நோக்கி நகர்கின்றோம். அங்கு இருப்பதற்கு இடம் இல்லை. இரவிரவாக எறிகணைகள் வீழ்ந்துவெடிக்கும்சத்தங்கள் காதைப்பிளக்கின்றன.

இந்நிலையில் எனது குடும்பத்திற்காக நான்கு தடிகள், ஒரு யு.என்.எச்.சி.ஆர் வழங்கிய 'தறப்பாள்' ஒன்றினையும் எடுத்துச் சென்றிருந்தேன். ஒரு வீதியின் ஓரத்தில் தடிகளை நட்டு 'தறப்பாளினை' இழுத்துக்கட்டினேன். எங்களிடம் கிடந்த அரிசியை, அன்று காலை அம்மா கஞ்சி காச்ச அதுதான் அன்றைய உணவானது. 

ஓரிரு வாரங்கள் நகர்ந்தன. அடுத்தகட்ட உணவிற்கு கையில் பணம் இல்லை. அப்போது தருமபுரம் - பரந்தன் வீதியால் 'கன்டர்', உழவு இயந்திரங்கள் சென்று வந்தன. கிளிநொச்சி மக்களின் வீடுகளைக் கழட்டுவதற்காக அந்த வீட்டு உரிமையாளர்கள் கூலிக்கு ஆட்களைக் கேட்கின்றார்கள் என்று அறிந்தேன். 

அந்த வேலையைச் செய்வதற்காகச் சென்றேன். அப்போதுதான் நான் கிளிநொச்சியைப் பார்க்கமுடிந்ததது. எப்படி இருந்த கிளிநொச்சி இப்படியாகிக் கிடக்கின்றதே என்று வியப்பில் விழுந்தேன். கிளிநொச்சி நகரில் வாழ்ந்த ஒரு முதலாளியின் வீடு அது. அந்த வீட்டின் 'சீற்' மற்றும் வீட்டுப் பொருட்களை ஏற்றுவதற்காத்தான் நான்வந்தேன். அவரின் வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களையும் பத்திரமாகக் கழற்றி, ஏற்றிவிட்டு கிளிநொச்சியின் நகர்ப்பகுதி ஏ.9 வீதிக்கு ஊர்தி ஏறுகின்றது. 

அப்போது, அது சிங்கள மகாவித்தியாலயம் அமைந்த பகுதி. அதில் நின்று பார்க்கும் போது இரண்டாம் உலக யுத்தத்தின் காட்சிப் படங்கள்தான் என் நினைவிற்கு வந்தன. நகரின் பெரு விளையாட்டுத் திடல்வரை மயானம் போல் காட்சி அளிக்கின்றது. 

மக்கள் நடமாட்டங்கள் இல்லை. எறிகணைத் தாக்குதலில் மரங்கள் ஆங்காங்கே விழுந்து கிடக்கின்றன. வீதியின் ஓரங்களில் உள்ள வீடுகள், கட்டடங்கள் அனைத்தும் எறிகணை மற்றும் வான் தாக்குதல்களால் சிதறிக்கிடக்கின்றன. இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு விழுந்துகிடந்த தென்னைமரம் ஒன்றில் நான்கு தேங்காயினை எனது வீட்டுத் தேவைக்காகப் பிடிங்கிகொண்டு ஊர்தியில் ஏறினேன். 

இதுதான் நான்கண்ட இறுதிக் கிளிநொச்சி நகரம். நகரமாக இருந்தது அப்போது நரகமாக மாறியிருந்தது. பரந்தன் - புதுக்குடியிருப்பு வீதியின் கரை ஓரங்கள் எங்கும் மக்களின் குடில்களும், 'தறப்பாள்' கொட்டில்களும் நிறைந்து கிடந்தன. தண்ணிக்காகவும் உணவுக்காகவும் காத்திருக்கும் மக்களை வீதிகளில் பாக்கக்கூடியதாக இருந்தது. 

வீதிகள், மரங்களின் கீழ் எல்லாம் மக்கள் வெள்ளம். மக்கள் செல்லும் இடங்களில், முதலில் செய்வது பதுங்ககழி வெட்டுவதுதான். அதன்பின்னர், அதற்கு மேல் கொட்டில்போட்டு அதற்குள் இருப்பதுதான். இவ்வாறுதான் எனது குடும்பத்தை நான் மண் அணைசெய்து, குண்டு விழுந்தாலும் சிதறுதுண்டுகள் அடிக்காத வண்ணம் பாதுகாக்க முயற்சிக்கின்றேன். 

ஆனால், மண்வெட்டி இல்லை. மண்ணைப் பக்கத்தில் இருந்து வெட்டிப்போட முடியாது. அருகில் எல்லாம் குடும்பங்கள் குடியேறிவிட்டன. இவ்வாறு மக்களின் செறிவு அதிகரிக்கத் தொடங்குகின்றது. ஆங்காங்கே எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன. தொலைதூர எறிகணைகள் கூவி வரும்போது மக்கள் அலறியடித்து ஓடிப்பதுங்கும் காட்சிகள் என் கண்முன்னே நிழலாடுகின்றது. அதைவிடக் கொடுமை, மிகை ஒலி விமானங்கள் தாழப்பறந்து வீசும் குண்டுகள். அதன் சிதறு துண்டுகள் ஒரு கிலோ மீற்றர் தூரம்வரை பாதிப்பினை உண்டுபண்ணும்.

தருமபுரம் பகுதி எதிரியின் எறிகணைத் தாக்குதலின் முழுமையான பகுதியாக மாறுகின்றது. நாங்கள் விசுவமடு நோக்கி நகரலாம் என்று எண்ணி வெளிக்கிட்டோம். ஒருநாள் இரவு நகரவெளிக்கிட்டால் எங்கு செல்வது? வீதியால் விலத்தமுடியாத மக்கள் நெரிசல். அந்தவேளையில் எனக்கு நினைவிற்கு வந்தது, யாழ்ப்பாண இடப்பெயர்வை முன்னிட்டு புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதிய அந்தப் பொன்னான பாடல் வரிதான். "பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது போகுமிடம் தெரியாமல்..." என்ற வரி என்னை நினைக்க வைத்தது. 

சிறியவர்கள், பெரியவர்கள், வயது முதிர்ந்தவர்கள் எல்லாம் தங்களால் இயன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டும், எடுத்துக்கொண்டும் எங்குபோவது என்று தெரியாமல் இப்போதும் நகர்ந்துகொண்டிருந்தார்கள். எறிகணைகள் விழும் சத்தம் தொலைவில் கேட்பதாக இருந்தால் அந்த இடத்தில் தங்குவதாக எனது நிலைப்பாடு இருந்தது. இவ்வாறு நகர்ந்து வந்த மக்கள் விசுவமடு, தொட்டியடிப் பகுதியின் விளையாட்டுத் திடலில் மக்கள் குடியேறுகின்றார்கள். அவர்களுடன் நானும் எனது குடும்பமும் அன்று இரவு 'தறப்பாளை' விரித்துவிட்டுப் படுத்து உறங்கினோம்.

அவசரத்திற்கு செல்வதற்கு அருகில் பற்றைக்காடுகள் உள்ள இடமும் தண்ணீர் வசதிகள் கொண்ட இடத்தினையும் தான் பார்த்துப் பார்த்து மக்கள் தங்கிக்கொள்கின்றார்கள். இந்த நிலையில் மழையும் பெய்யத் தொடங்குகின்றது. இழுத்துக் கட்டின தறப்பாள் கொட்டிலுக்குள் வெள்ளம் வருகின்றது.

மண்ணைவெட்டி அணையாகக் கட்டி அதற்குள்தான் எனது குடும்பம் உறங்கிக்கொண்டிருக்கிறது. எங்களிடம் ஒருதொகை நெல் கிடந்தபடியால் அதனைக் குற்றி அரிசியாக்கி கஞ்சியும் சோறுமாகச் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சாவுகளும் மலிந்துகொண்டிருந்தன.

ஒவ்வொரு வீடும் இழப்புக்களைச் சந்தித்துக்கொண்டே இருந்தது. கொட்டும் மழையில் மக்கள் ஒருபுறம், விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் போராளிகள் மறுபுறம் என்று இழப்புக்கள் அதிகரித்துக்கொண்டு இருந்ததேதவிர குறையவில்லை.

மருத்துவமனைகள் உள்ளிட்ட அரச செயலகங்கள் அனைத்தும் இடம்பெயர்ந்து, இடந்தெரியாத இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நிவாரணம் கொடுப்பதாக ஒர் இடத்தில் வானொலி ஊடாக அறிவித்தால், அந்த இடம் தேடிப்பிடிக்கப் போகும்போது எறிகணை வீழ்ந்து அதில் மடிந்த மக்கள்தான் இருப்பார்கள். இவ்வாறுதான் அன்றும் பல நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருக்கையில், படையினரின் நகர்வும் வேகமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

மக்கள் நெரிசலாகிக் கொண்டிருந்தார்கள். இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருந்தன. தற்போது விசுவமடுவினை விட்டும் வெளியேறவேண்டிய நிலை. அடுத்து எங்கு செல்வது என்று தெரியாது. ஆனாலும் நடந்துகொண்டே இருக்கின்றோம். அங்கங்கே வீதிகளிலும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக்கொண்டிருக்கின்றன. 

நீண்டதூர எறிகணைகள் மக்கள் வாழ்விடங்களில் வீழ்கின்றன. குறிப்பாக அன்று அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் வாழ்கின்றார்கள். காடுகள், புற்தரைகள், சுடலைகள், வீதி ஓரங்கள் போன்ற அனைத்துப் பகுதிகளிலும் மக்களின் 'தறப்பாள்' கொட்டில்கள் காணப்படுகின்றன. இதற்கிடையில் அரசவானொலியில் வெள்ளைக்கொடி கட்டி இருங்கள் என்று அறிவித்ததாகச் சொன்னார்கள். அதனையடுத்து 'தறப்பாள்' கொட்டில்களின் மேல் வெள்ளைக்கொடிகளைக் கட்டிப் பாத்தோம். ஆனால், அதன் மீதும் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன.


மழை பெய்துகொண்டிருக்கின்றது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் மக்களின் இடப்பெயர்வு நடந்துகொண்டிருக்கின்றது. எங்காவது சென்று இருந்தால் போதும் என்ற நிலையில் மக்கள் நகர்ந்துகொண்டிருந்தார்கள். நகர்கின்றோம், நகர்கின்றோம் நகர்ந்துகொண்டே இருந்தோம். தேராவில் குளம் நிரம்பிவிட்டது. அதனால் அதன் குளக்கட்டால் செல்லமுடியாது. மாற்றுவழிப் பாதை அமைத்து அதன் ஊடாகத்தான் மக்களும் ஊர்திகளும் நகர்ந்துகொண்டிருக்கின்றன.

இவ்வாறு நகர்ந்து சென்றால் மறுபக்கத்தால், அதாவது ஒட்டுசுட்டானில் இருந்து முன்னேறும் படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தேவிபுரப் பகுதியில் இருப்பதாக இருந்தால் அங்கும் இடம்இல்லை. தேவிபுரம் ஊடாக இரணைப்பபாலை பகுதி நோக்கி நகர்ந்து அங்கு ஒரு தென்னந்தோப்பில் எனது குடும்பம் இடம்பிடித்துக்கொண்டது. 

ஆனாலும், இடங்கள் சுருங்கச் சுருங்க வாழ்வதற்கு இடமில்லை. மலம் கழிக்க இடமில்லை. குடிக்க நீர் இல்லை. ஒழுங்கான குளிப்பில்லை. இரவில் இருக்கும் இடத்திற்கு அருகில் கிடங்குகிண்டித்தான் மலம் கழித்துவிட்டுப் புதைப்பது. இது ஒருபுறம், மறுபுறம் உணவுப்பொருட்களுக்குப் பெருந் தட்டுப்பாடு. அதற்காக அலைந்துதிரிவது என்றால் அதனைவிடத் துன்பம் வேறெதுவும் இல்லை. கடைகளில் ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபாவிற்கு மேல் வந்துவிட்டது.

ஒரு கிலோ சீனி 500 ரூபாவைக் கடந்துவிட்டிருந்தது. குழந்தைகளுக்கான பால்மா இல்லை. என்ன செய்வதென்று தெரியாத நிலையில் பெற்றோர்கள். பணம் இருப்பவர்கள் பணத்தைக் கொடுத்து வாங்குகின்றார்கள். மற்றவர்களின் நிலை? 

வன்னியைப் பொறுத்தமட்டில், மூன்று இலட்சம் மக்களில் குறைந்தது ஒரு இலட்சம் மக்கள்தான் இவ்வாறான நிலையை ஈடுசெய்யக் கூடியவகையில் இருப்பார்கள். விவசாயத்தையே நம்பி வாழ்ந்த மக்களிடம் நெல்லைத் தவிர வேறு எதுவும் இல்லை. இப்போது அதுவும் இல்லாத நிலையில்தான் நகர்ந்துகொண்டிருக்கின்றது வாழ்வு. 

கப்பலில் சாமான் வருகிறதாம் என்று அரசாங்க அதிபர்கள் கதைக்கின்றார்கள். இரண்டாம் மாதம் அளவில் மாத்தளன் பகுதியில் சாமான்களுடன், அதுவும் குறைந்த அளவு உணவுப் பொருட்களுடன் கப்பல் வந்தது. ஆனால், யானைப் பசிக்கு அது சோளப்பொரிதான் வந்தது. உணவுப்பொருட்கள் கொண்டுவந்த கப்பல் காயமடைந்த மக்களை ஏற்றிக்கொண்டு சென்றதுதான் ஒரு ஆறுதல்.

இப்போது இரணைப்பாலையில் இருந்தது எனது குடும்பம். அங்கும் இடம் இல்லாத நிலையில் சுழன்று சுழன்று ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தேன். இன்று ஓர் இடத்தில் இருந்தால் அதற்குப் பக்கத்தில் 'கிபீர்' விமானங்கள் தொடராகத் தாக்குகின்றன என்று மாற்று இடத்தில் இருந்தால், அங்கு தொடராக எறிகணைகள் வந்து வீழ்கின்றன. இவ்வாறான நிலையில் எங்கு செல்வது என்று தெரியாமல் வீதியின் வாய்க்கால் பகுதி பள்ளமாகக் காணப்படுகின்றது. செல்வீழ்ந்து வெடித்தால் சிதறுதுண்டுகள் பறக்காதுதான். ஆனால், தலைக்குமேல் விழுந்தால் அது காலம் என்று என் உறவுகளுக்குச் சொல்லிக்கொண்டு, அந்த வாய்க்காலில் தறப்பாளினை இழுத்துக் கட்டியபடி அதற்குள் இரவுப் பொழுதினைக் கழித்தோம்.

மக்கள் எல்லாம் பொக்கணை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றார்கள். பொக்கணைப் பகுதியில் இருந்துவரும் மக்களைக் கேட்டேன், "அங்கு இடம் இருக்கிறதா," என்று. ஒருவர் சென்னார் “இவ்வளவு நாளும் இடம்பார்த்தா வந்தனாங்கள். போறபோற இடங்களிலை இருக்கத்தான் வேண்டும். போ, நீ அங்க போ! இங்க இருக்காத. செல் வந்தோண்டு இருக்கு,” என்று அவசர அவசரமாகச் சொல்லிவிட்டு அவர் தனது குடும்பத்தை அழைத்துக்கொண்டு செல்லப்போனார். 

அவர் சென்று ஐந்து நிமிடங்கள் கழியவில்லை, இரணைப்பாலைச் சந்திக்கு அருகில் தொடராக எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன. என்னுடன் இவ்வாறு கதைத்துவிட்டுச் சென்றவர் செல்லில் காயம் அடைந்துவிட்டார்.

யாரையும் யாரும் காப்பாற்ற முடியாத ஒரு நிலை. காயம் அடைந்தாலும் அவனை வந்து தூக்குபவன் அடுத்த எறிகணையில் இறந்துவிடுவான். இதுதான் அன்று மக்களின் கண்முன் நடக்கும் நிகழ்வு. இதனைவிடக் காயம் அடைந்தவர்களுக்கு மருந்து இல்லை. மருத்துவமனைகள் காயமடைந்த மக்களால் நிரப்பிவழிகின்றன.

இவ்வாறான நிலையில் மக்கள் எல்லாம் அந்த குடாப்பகுதியான பழைய மாத்தளன், புதுமாத்தளன், அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், ஒற்றைப்பனையடி, சாளம்பன், கரையாம்முள்ளிவாய்க்கால், வெள்ளாம் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளை நோக்கிச் செறிவாக நகர்ந்துவிட்டார்கள். 05.04.2009 அன்று புதுக்குடியிருப்புப் பகுதி முழுவதும் படையினர் தங்கள் வசப்படுத்திவிட்டார்கள்.

மக்கள் அனைவரும் அந்த முள்ளிவாய்க்கால் குடாவிற்குள் அடைக்கப்பட்டு விட்டார்கள் என்பது தெட்டத்தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கின்றது. நான் எனது குடும்பத்துடன் கடற்கரையை அண்டிய இடத்தைத் தெரிவு செய்தேன். அங்கெல்லாம் எறிகணை வீழ்ந்துவெடிக்காது என்ற நினைப்பு எனக்கு. ஆனால், அதற்குமாறாக கடலில் இருந்து கப்பல்கள் பீரங்கித் தாக்குதல்களைத் தொடுத்தன. அதிலும் 'கிளஸ்ரர்' எனப்படும் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை நான் கண்ணூடாக அப்போதுதான் கண்டேன்.

இதற்குள்தான் ஒரு கிலோ அரிசியின் விலை ஆயிரம் ரூபாயினைத் தாண்டிவிட்டது. ஒரு கிலோ சீனியின் விலை 1500 ரூபாவினைத் தாண்டிக்கொண்டிருக்கின்றது. சமைப்பதற்கு உரிய உணவுப் பொருட்கள் இல்லை. ஒரு தேங்காயைக் காணமுடியாது. என்னசெய்வது என்று தெரியாத நிலையில் மக்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றார்கள். 

சில கடைகளின் உரிமையாளர்கள் அந்தக் கொட்டில்களில் வைத்துக்கொண்டு மிகமிக உயர்ந்த விலைக்குப் பொருட்களை விற்பனை செய்துவருகின்றார்கள். கடலில் தொழில்செய்ய முடியாது. ஆனால், வலையினை வீசி மீன் பிடிக்கின்றார்கள். எதிரியின் குண்டுகள் கடலிலும் வீழ்ந்துவெடிக்கின்றன. அதற்கும் அஞ்சாமல் ஒருநேரமாவது சாப்பிடவேண்டும், தங்களின் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்பதற்காக உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் நந்திக்கடல் பகுதியிலும் பெருங்கடல் பகுதியிலும் மீன்பிடிக்கின்றார்கள். 

அதனை விற்பனை செய்கின்றார்கள். அதனைவைத்து உணவுத் தேவையைப் பூர்திசெய்கின்றார்கள். வெற்றிலை சாப்பிடுபவர்கள் ஆலம்விழுதினைச் சாப்பிடுகின்றார்கள், தேனீர் குடிப்பவர்கள் சுடுதண்ணீர் குடிக்கின்றார்கள். மில்லில் இருந்து வெளிவரும் உமியைப் புடைத்து, அதன் குறுநலை எடுத்துக் கஞ்சி காய்ச்சிக் குடிக்கின்றார்கள். ஏன், அங்கு பற்றைகளில் காணப்படும் அடம்பன் கொடியின் கிழங்கினை அவித்து சாப்பிட்டுக் கூட மக்கள் இருக்கின்றார்கள். 

இவற்றுக்கு மத்தியில் எறிகணைத் தாக்குதல்கள், நாள் ஒன்றிற்கு இருபதிற்கு மேற்பட்டதடவை மிகையொலி விமானங்கள் நடத்தும் தாக்குதல்கள், இதனைவிட கடலில் இருந்து நடத்தப்படும் தாக்குதல்கள் என முழுமையான கொலை வலயத்திற்குள் மக்கள் இருந்தார்கள். 

எறிகணைகளில் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள கைவசம் எஞ்சியிருந்த சாறிகள், சாறங்களை எல்லாம் சிறுசிறு பைபோல் தைத்துவிட்டு அதற்குள் மண்ணைப்போட்டுச் சுற்றிவர அடுக்கிவிட்டுத்தான் படுத்துறங்க வேண்டியிருந்தது. விழுந்து வெடித்துக்கொண்டிருக்கும் எறிகணைகளுக்கு மத்தியில் விடியுமுன்னரே கடற்கரைக்குச் சென்று மலம் கழித்துவிடவேண்டும். விடிந்துவிட்டால் அதற்கு வழியில்லை. இதனால், ஆண், பெண் அடையாளம் தெரியாத அந்த அதிகாலைப் பொழுதில் எல்லோரும் கடற்கரையை முற்றுகையிட்டார்கள்.

எனது கொட்டிலுக்கு முன்னால் ஐம்பது மீற்றர் தூரத்தில் நின்ற நாவல்மரத்தின் கீழ் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நடக்கப்போகும் விபரீதத்தை அறியாத அந்த சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த இடத்தில் திடீரென எறிகணைகள் வந்து வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. அந்தச் சிறுவர்கள் பதுங்குகுழிகளுக்குள் செல்வதற்கு முன் கண்முன்னாலேயே வீழ்ந்து மடிந்தார்கள். 

என் கண்முன்னாலேயே மூன்று சிறுமிகள் துடிதுடித்து மடிந்ததை இன்னும் கண்கள் மறக்கவில்லை. இறந்தவர்களைப் புதைப்பதற்குக் கூட இடமில்லாது மக்கள் செறிந்திருந்தார்கள். தங்கள் தறப்பாளுக்கு அருகிலேயே அவர்களைப் புதைத்துவிட்டு அதற்கு அருகிலேயே அவர்களும் படுத்திருந்தார்கள்.

சில இடங்களில் மக்கள் இராணுவத்தின் பிடிக்குள் அகப்பட்டிருந்தார்கள். எஞ்சியிருந்த மக்கள் சிலரும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் போவோமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில்தான், 20.04.2009 அன்று புதுமாத்தளன் பகுதியில் ஊடறுத்து வந்தேறிய படையினர் ஒரு இலட்சம் வரையான மக்களைச் சிறைப் பிடிக்கின்றார்கள். இதன்போது பெருமளவான மக்கள் படுகொலை செய்யப்படுகின்றார்கள்.

இவ்வாறு இருக்க மக்கள் பண்டமாற்று செய்யும் காலகட்டமாக அந்தக்காலகட்டம் மாற்றமடைந்திருந்தது. ஒரு 'பொயின்ட்' இரத்தம் கொடுத்துவிட்டு ஒரு பால்மா பை வாங்கியது, ஒரு கிலோ அரிசி கொடுத்துவிட்டு அரைக் கிலோ மீன் வாங்கியது, ஒரு கிலோ செத்தல்மிளகாய் கொடுத்து, ஒரு கிலோ சீனி வாங்கியது, ஒரு மூட்டை சீனி கொடுத்து ஒரு உழவு இயந்திரம் மற்றும் உந்துருளி வாங்கியவர்களும், ஒருபவுண் நகைகொடுத்துவிட்டு நெல் மற்றும் பணம் வாங்கியவர்களுமாக அன்று பண்டமாற்று முறைக்கு மக்கள் மாற்றமடைந்திருந்தார்கள். 

இடையிடை மக்களுக்குக் கஞ்சிகொடுக்கும் கொட்டில்களில் மக்கள் எறிகணைகள் விழுமோ என்ற அச்சத்துடன் குவிந்திருந்தார்கள். கரையாம்முள்ளிவாய்கால் பகுதியில் நான் எனது குடும்பத்துடன் கஞ்சி எடுத்துவிட்டு வந்துகொண்டிருக்கின்றேன். அப்போது அந்தக் கொட்டிலின் அருகில் எறிகணை வீழ்ந்து வெடிக்கின்றது. அதில் இருபதிற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்படுகின்றார்கள். அவர்கள் அனைவரும் கஞ்சிக்காக காத்துநின்றவர்கள். உயிரிழக்கும் மக்களைப் புதைப்பதற்குக் கூட வழியில்லாமல் போனது நிலைமை!

நாள் 03.05.2009 வலைஞர்மடம் பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த முல்லைத்தீவு மருத்துவமனை மீதும் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அதில் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த மக்கள் உயிரிழக்கின்றார்கள். அடுத்த சில நாட்களில் உயிரிழந்தவர்கள் போக எஞ்சியவர்கள் இராணுவத்தின் முழுமையான ஆக்கிரமிப்பிற்குள் செல்லவேண்டிய நிலை. 

முள்ளிவாய்க்கால் பக்கமான இரட்டைவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பகுதிகள் ஊடாக நகர முற்படுகின்றார்கள். நந்திக்கடல் பகுதியில் ஏரியால் கடந்து சென்று வற்றாப்பளை பகுதியிலும் கரை ஏறுகின்றார்கள். போகும் வழியெங்கும் மனித உடலங்கள். வழியில் கிடந்த உடலங்கள் எண்ணில் அடங்காதவை. நாங்கள் வட்டுவாகல் பாலத்தினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம். அந்தப் பகுதியால் வந்த படையினரின் 'ராங்கிகள்' பல அடுக்கடுக்காக நகர்ந்துகொண்டிருக்கின்றன. 

அந்த 'ராங்கிகள்' பார்ப்பதற்குப் புதிதாக இருந்தன. சீனாவின் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்ததை அந்த உயிர் போகும் நேரத்திலும் காணமுடிந்தது. கண்முன்னே செத்துக்கிடக்கும் உடலங்கள் மீது அந்த டாங்கிகள் ஏறி செல்கையில் மனம் விம்மி வெடிக்கின்றது. இவற்றை எல்லாம் தாண்டித்தான் எங்கள் உயிர்கள் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் செல்கின்றது.


படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த நாங்கள் படையினரின் சப்பாத்துக் கால்களால் உதைவாங்கிக்கொண்டு நகர்கின்றோம். பிச்சைக்காரர்களுக்குப் பிச்சை போடுவதுபோல அவர்கள் எங்களின் பசிக்கு உணவுகளை வீசி எறிந்தார்கள். அதிலும் `போலி’ 'போலி' என்று சிங்களத்தால் சொல்லும் வார்த்தைகள் எங்களை நிலைகுலையவைத்தன. இவை அனைத்தையும் தாங்கிக்கொண்டு நகர்ந்துகொண்டிருந்தன, வலுவிழந்த எங்களின் கால்கள்.

இத்தனை அவலங்களைக் கடந்துவந்தபின்பும் மீண்டும் மக்களைச் சோதனைகளுக்கு உள்ளாக்கியது சிங்களத்தின் வதைமுகாம் வாழ்க்கை. உயிர்தப்பிய பலரின் உயிர்கள் இங்குவைத்தும் பிடுங்கப்பட்டன. முகாங்களுக்குள் இருந்தும் காணாமல் போகத் தொடங்கினார்கள் தமிழர்கள். இளைஞர்களும், யுவதிகளும் கைதுசெய்து, கொண்டு செல்லப்பட்டார்கள். 

இவ்வாறு வதைமுகாம் வாழ்கை பற்றி இதற்கு மேலும் சொல்லத் தேவையில்லை. மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மித்த கதைதான் அதுவென்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்த வாழ்வு வாழ்வதற்காகவா அன்று உயிர் தப்பினோம் என்று இன்று தங்களுக்குள் வெந்துகொண்டிருக்கின்றார்கள் அந்த மக்கள்.

- எல்லாளன் -

குறிப்பு:- முகநூலில் இருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது.

https://www.samaraivu.com/2018/05/blog-post_61.html

போரின் இறுதி நாட்களில் நடந்தவற்றை விவரிக்கும் ஒரு மதகுருவின் வாக்குமூலம்!

2 months 2 weeks ago

முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை ‘சமூக சிற்பிகள்‘ அமைப்பினர் [The Social Architects -TSA]* கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். 

அவ்வாறு வெளியிடப்பட்டிருக்கின்ற 09 உண்மைக்கதைகளில் ஒரு கதையின் மொழியாக்கம் இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது.[சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 'போர் வலயமற்ற' பகுதியில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்களைப் பராமரிக்கும் விடுதியைச் சேர்ந்த சில எண்ணிக்கையான சிறார்களை பராமரிக்கும் பணியில் இராசதுரை ஈடுபட்டிருந்தார்.

அவர் கூறுகிறார்,


நாங்கள் கிளிநொச்சியை விட்டு இடம்பெயர்த்தப்படுவதற்கு முன்னர் தேவாலய வளாகத்தில் நான் ஆறு பதுங்குகுழிகளை அமைத்திருந்தேன். இதேபோல் வன்னி முழுவதிலும் பல பதுங்குகுழிகளை நாங்கள் அமைத்திருந்தோம். ஒவ்வொரு தடவையும் நாங்கள் இடம்பெயர்த்தப்படும் போதும் முதலில் பதுங்குகுழிகளை அமைப்பதே எமது பிரதான பணியாக இருந்தது.

கிளிநொச்சி வைத்தியசாலை மீது தாக்குதல் மேற்கொண்டிருந்த வேளையில், அங்கே நான் நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தேன். மருத்துவமனைகளை குறிவைத்து தாக்குதல் நடாத்துவதானது யுத்த தந்திரோபாயமாகும். வன்னியில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், மக்கள் வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றபோதெல்லாம், சிறிலங்கா இராணுவத்தினர் முதலில் வைத்தியசாலைகளைக் குறிவைத்தே தாக்குதல் நடாத்தினர்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், பல ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். ஆனால் அவர்களுக்கு கொடுப்பதற்குத் தேவையான மயக்க மருந்து இல்லாததால் அங்கு கடமையாற்றிய வைத்தியர்கள் மயக்க மருந்து வழங்காமலேயே காயமடைந்தவர்களின் உடல் உறுப்புக்களை வெட்டி அகற்ற வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

உண்மையில் இங்கு கடமையாற்றிய வைத்தியர்கள் ‘இயந்திரங்கள்’ போலவே செயற்பட்டனர். காயமடைந்த மக்கள் ஆகக் கூடியது ஒரு சில நிமிடங்களே சத்திரசிகிச்சை அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர் காயமடைந்த பிற நோயாளிகளுக்கு தொடர்ந்து சத்திரசிகிச்சை வழங்கப்பட்டது.

உடையார்கட்டு என்ற இடத்தில் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மீது ‘பொசுபரசுக் குண்டுகள்’ வீசப்பட்டன. இந்த வகைக் குண்டுகள் வீசப்பட்டதும் கறுப்பு நிறப் புகை வெளியேறும். அத்துடன் இந்தக் குண்டு எங்கு வீசப்படுகின்றதோ அங்கே உள்ள அனைத்தும் எரிந்து கருகிவிடும். இந்த வகைக் குண்டு வீசப்பட்டவுடன் அதன் சுவாலை ‘தறப்பாலில்’ பற்றி அதன் பகுதிகள் மக்கள் மீது விழுந்தவுடன் மக்கள் எரிகாயங்களுக்கு உள்ளாகினர்.

பொசுபரசுக் குண்டொன்று வீசப்பட்ட போது அதன் சுவாலைகள் வாழை இலைகள் மீது படர்ந்து பின் அங்கிருந்த மனிதர் ஒருவரின் உடலிலும் பற்றிக் கொண்டது. இதனால் மிக மோசமான முறையில் குறிப்பிட்ட மனிதர் எரிகாயங்களுக்கு உள்ளாகினார். இதனை நான் நேரில் பார்த்தேன். பொசுபரசுக் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி மிக மோசமான எரிகாயங்களுக்கு உள்ளான பலர் யுத்த வலயத்திலிருந்து அகற்றப்பட்டு, கப்பல் மூலம் மேலதிக மருத்துவத்திற்காக கொண்டு செல்லப்பட்டனர்.

கொத்துக் குண்டுகள் முதலில் பரந்தன் பகுதியிலேயே வீசப்பட்டன. பல வகையான கொத்துக் குண்டுகளை சிறிலங்கா இராணுவத்தினர் பயன்படுத்தினர். கொத்துக் குண்டொன்றின் பிரதான குண்டு வானில் வெடித்துச் சிதறி பல சிறிய துண்டுகளாக உடைகின்றது. இரணைப்பாலை என்ற பிரதேசத்தில் வீசப்பட்ட கொத்துக் குண்டொன்று பல வர்ண நாடாக்களைக் கொண்டிருந்தது. இதனால் இவ்வகைக் குண்டானது சிறுவர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துக் கொண்டது. சிறுவர்கள் பல வர்ண நிறங்களால் கவர்ச்சிமிக்க வகையில் உருவாக்கப்பட்டிருந்த இக் கொத்துக் குண்டின் பகுதிகளை தொட்ட போது அவை வெடித்துச் சிதறிய சம்பவங்களும் உண்டு.

ஜனவரி 25, 2009 அன்று ஒரு நிமிடத்தில் வெடித்த எறிகணைகள் எத்தனை என்பதை நாம் எண்ணிக்கொண்டோம். நாங்கள் ஐந்து மதகுருமார்கள், அருட்சகோதரிகளைக் கொண்ட ஒரு குழு, பெற்றோரை இழந்த பிள்ளைகள் ஆகியோர் ஒன்றாக பதுங்குகுழிக்குள் இருந்தோம். அந்த வேளையில் நாம் இருந்த பகுதியை நோக்கி பல் குழல் எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ஒரு நிமிடத்தில் 60 குண்டுகள் வெடித்ததை நாம் அவதானித்தோம்.

நான் உண்மையில் மிகப் பயங்கரமான, கோரமான நாட்கள் சிலவற்றைப் பற்றி எடுத்துக் கூறவேண்டும். மே 17,2009 அன்று யுத்தம் முடிவுற்றதாக சிறிலங்கா அரசாங்கத் தரப்பினர் வானொலிச் செய்திகள் மூலம் அறிவித்துக் கொண்டிருந்தனர். அத்துடன் சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் எஞ்சியுள்ள புலி உறுப்பினர்களை தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் சிறிலங்கா அரசாங்கத் தரப்பு அறிவித்துக் கொண்டிருந்தது.

மிகக் கோரமான அந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த பதுங்குகுழியில் எம்மில் ஐந்து மதகுருமார்கள், பெற்றோரை இழந்த 40 சிறார்கள் மற்றும் அருட்சகோதரிகள் சிலரும் தஞ்சம் புகுந்திருந்தோம். எம்மிடம் CDMA தொலைபேசி ஒன்றும், சற்றலைற் தொலைபேசி ஒன்றும் இருந்தன.

நாம் முதலில் எமது ஆயர் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டோம். பின்னர் இறுதி யுத்த நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்த பிரிகேடியர் சவீந்திர டீ சில்வாவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டோம். சவீந்திர டீ சில்வா தற்போது ஐ.நாவுக்கான சிறிலங்காத் தூதராகக் கடமையாற்றுகிறார். வெள்ளைக் கொடிகளை உயர்த்திப் பிடித்தவாறு பதுங்குகுழிகளை விட்டு வெளியேறுமாறு பிரிகேடியர் எம்மைக் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் 2009 மே 17 பிற்பகல் வேளையில் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு நாம் எமது பதுங்குகுழிகளை விட்டு வெளியேற முயற்சித்தோம். ஆனால் இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

யுத்த வலயத்தை விட்டு நாம் வெளியேறுவதற்கு முன்னர் இறுதி நான்கு நாட்களாக நாம் எதையும் சாப்பிடவுமில்லை. அத்துடன் நீர் கூட அருந்தவில்லை. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஒரு பிஸ்கட்டைப் பெற்றுக் கொள்வதே மிகவும் கடினமாக இருந்தது. கைவிடப்பட்ட பதுங்குகுழி ஒன்றில் விடுதலைப் புலிகளின் மிகவும் சக்தியை வழங்கவல்ல 10 உணவுப் பொதிகளை நாம் பெரும் போராட்டத்தின் பின் பெற்றுக் கொண்டோம். அப் பொதிகளை நாம் அறுபது பேரும் பகிர்ந்து உண்டோம்.

மே 17 இரவு, நான் கிட்டத்தட்ட 50 தடவைகள் வரை ஜெபமாலை செபம் செய்திருப்பேன். நாங்கள் கடற்கரைக்கு மிக அருகில் இருந்ததால் எமது பதுங்குகுழிகள் ஆழமற்றதாக காணப்பட்டன. இந்த இரவு முழுவதும் இராணுவச் சிப்பாய்கள் பதுங்குகுழிகளுக்குள் கைக்குண்டுகளை வீசி மக்களைக் கொலை செய்தனர். அந்த இரவு என்னுடன் இருந்த பெற்றோரை இழந்த சிறார்கள் “பாதிரியாரே, நாம் இங்கே சாகப் போகின்றோம்” எனக் கூறினார்கள்.

அடுத்த நாட் காலை அதாவது மே 18, இராணுவ வீரர்கள் எம்மை நெருங்கி வந்துகொண்டிருந்த போது, நாம் இரண்டாவது தடவையாகவும் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு பதுங்குகுழிகளை விட்டு வெளியேற முயற்சித்தோம். நாம் எம்மை அருட்சகோதரர்கள் என இனங் காண்பிப்பதற்காக அருட் சகோதர, சகோதரிகளின் அடையாளம் காட்டும் எமது வெள்ளைச் சீருடைகளை அணிந்திருந்தோம். மூன்று தடவைகள் நாம் வெளியேற முயற்சித்தோம். ஆனால் இந்த மூன்று தடவைகளும் சிறிலங்கா இராணுவச் சிப்பாய்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். அவர்கள் கிட்டத்தட்ட 115 மீற்றர் தூரத்தில் நின்றவாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இராணுவச் சிப்பாய்கள் எம்மை நோக்கி பெரிய குரலில் கத்தினார்கள், “நீங்கள் விடுதலைப் புலிகள், நாங்கள் உங்களைச் சுடப்போகிறோம்” என்றார்கள். அதன்பின்னர் அவர்கள் எம்மை வெளியே வருமாறு கட்டளையிட்டார்கள். அதனைத் தொடர்ந்து அருட்சகோதரிகள் மற்றும் பெற்றோரை இழந்த 40 சிறார்கள் ஆகியோருடன் நாம் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு பதுங்குகுழிகளை விட்டு வெளியேறினோம். வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு முழங்கால்களில் இருக்குமாறு அவர்கள் எமக்கு கட்டளையிட்டனர்.

அதில் நின்ற சிறிலங்கா இராணுவ வீரன் ஒருவன் சிங்கள மொழியில், “ஒவ்வொருவரையும் கொலை செய்யுமாறு எமது கட்டளைத் தளபதி எமக்கு கட்டளையிட்டுள்ளார்” எனக் கூறினான்.

எமது மேலாடைகளைக் களையுமாறு அவர்கள் எமக்கு கட்டளையிட்டனர். அதன் பின்னர் “நாம் அருட்சகோதரர்கள் எனவும் இவர்கள் சிறார்கள்” எனவும் வாதிட்டோம். அத்துடன் நாம் ஏற்கனவே பிரிகேடியருடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் குறிப்பிட்டோம். அதன் பின்னர் நாம் பிரிகேடியரிடம் தொடர்பு கொண்ட CDMA தொலைபேசி இலக்கத்தை அந்த இராணுவ வீரர்களிடம் கொடுத்தோம். உடனே அவர்கள் தொடர்பு கொண்டு நாம் ஏற்கனவே தொடர்பு கொண்ட விடயத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

நாம் கிட்டத்தட்ட ஓரிரு மணித்தியாலங்கள் வரை இராணுவத்திடம் வாதாட்டம் மேற்கொண்டோம். எமக்கு முன் நின்ற அந்த இராணுவத்தினர் தமது முகத்தைச் சுற்றி கறுப்பு நிறத் துணியால் இறுகக் கட்டியிருந்தனர். கொலை செய்வதற்கு தருணம் பார்த்துக் காத்திருக்கும் மிருகங்கள் போல அவர்கள் காணப்பட்டனர். CDMA தொலைபேசியில் பிரிகேடியருடன் தொடர்பு கொண்ட பின்னரே எம்முடன் வாதாடிய குறித்த வீரனின் கோபம் தணிந்திருந்தது.

இது ஒருபுறமிருக்க, எம்மிலிருந்து சற்று தூரம் தள்ளி இராணுவ வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் மக்கள் சிலர் நிற்பதை நாம் கண்ணுற்றோம். இவர்கள் எம்மைப் போன்று இறுதி வரை பதுங்குகுழிகளுள் ஒழிந்திருந்தவர்கள் ஆவர். அந்த மக்களில் பலர் காயமடைந்திருந்தனர்.

இறுதியில், எம்மை அவ் இராணுவத்தினர் துருவித் துருவி சோதனை செய்தனர். எங்கள் ஒவ்வொருவரும் ஒரு கைப்பையை மட்டுமே எடுத்துச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதில் நின்ற இராணுவ வீரன் ஒருவர் எமது அருட்சகோதரர்களில் ஒருவரை காலால் உதைத்தான். உடனே அவர் கீழே விழுந்துவிட்டார்.

அவர்கள் எம்மை இரு பிரிவுகளாகப் பிரித்தனர். ஒவ்வொரு குழுவிலும் 30 பேர் இருந்தோம். இதனால் நாம் கொஞ்சம் வேகமாக நகர முடிந்தது. வீதியோரங்களில் எரிந்து கொண்டிருந்த வாகனங்கள் மற்றும் அந்த வாகனங்களின் கீழ் இறந்தபடி கிடந்த மக்களின் உடலங்களைக் கடந்தவாறு நாம் சென்றுகொண்டிருந்தோம். நரகத்தைப் போன்று அந்த இடம் காட்சி தந்தது.

“நாங்கள் பிரபாகரனை, பொட்டு அம்மானை, ஏனைய எல்லாத் தலைவர்களையும் கொலை செய்துவிட்டோம். இப்போது நீங்கள் எமது அடிமைகள்” என சிரித்தவாறு கூறினார்கள்.

காயமடைந்த மக்களுக்கு உதவுமாறு நாம் சிறிலங்கா இராணுவத்திடம் கேட்டுக்கொண்டோம். அத்துடன் காலால் உதைக்கப்பட்ட குறித்த அருட்சகோதரருக்கும் உதவுமாறு கேட்டுக்கொண்டோம். அவர்கள் காயப்பட்ட மக்களை சாலம்பன் என்ற இடத்துக்கு கூட்டிச் சென்றார்கள். ஆனால் அவர்கள் இதய வருத்தமுடைய அந்த அருட்சகோதரனைத் தம்முடன் கூட்டிச் செல்லவில்லை. இதய வருத்தத்தால் அவதிப்பட்ட அந்த அருட்சகோதரனுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படவில்லை. அவருக்கு அப்போது 38 வயதாகவே இருந்தது. அவரை அந்த இடத்திலேயே விட்டு விட்டு இராணுவத்தினர் வெளியேறினர்.

நாம் பின்னர் பேருந்து ஒன்றில் சாலம்பன் என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டோம். அவர்கள் எமது ஆடைகளைக் களைந்து எம்மை நிர்வாணப்படுத்திய பின்னரே சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன் பின்னர் அவர்கள் எம்மை மண்டபம் ஒன்றுக்குள் கொண்டு சென்றனர். அங்கே “நாங்கள் உங்களது தலைவர்களைக் கொன்றுவிட்டோம். ஆனால் அவர்களில் சிலர் தற்போதும் உயிருடன் உள்ளனர். உங்ளுக்குள்ளேயே அவர்கள் இருக்கிறார்கள். ஆகவே விடுதலைப் புலிகள் யாராவது இருந்தால் உடனடியாக எம்மிடம் வந்து உங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்” என இராணுவத்தினர் அறிவித்தல் விடுத்தனர்.

ஆனால் தமது பெயரைப் பதிவதற்கு எவரும் முன்வரவில்லை. அதன் பின்னர் அருட்சகோதரர்கள் எல்லோரையும் விடுதலைப் புலிகள் என முத்திரை குத்திய அவர்கள் எமது பெயர்களைப் பலாத்காரமாக பதிவு செய்து கொண்டனர். இந்த நேரத்தில், “நாங்கள் மதகுருமார்கள்” என உறுதியாகக் கூறியதுடன் எமது அடையாள அட்டைகளையும் அவர்களிடம் காண்பித்தோம்.

கருணா குழுவைச் சேர்ந்த பலர் யுத்தத்தின் இறுதியில் எமது மக்களுடன் கலந்திருந்தனர். அவ்வாறு அங்கு இருந்தவர்களுள் ஒருவரை நான் முதலில் வன்னியில் சந்தித்திருந்தேன். இவர் என்னை மதகுரு என அடையாளப்படுத்திக் கொண்டார். நாம் நான்கு அருட்சகோதரர்களும் பிரிகேடியரைச் சந்திப்பதற்காக முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். எம்முடன் சேர்ந்து பயணித்த அந்தச் சிறார்களை அங்கேயே விட்டுவிட்டுச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழி தெரியவில்லை.

நாம் அதே இடத்துக்கு திரும்பி வந்தபோது, எம்முடன் வந்த அந்தச் சிறார்கள் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டிருந்தனர். அத்துடன் புலிகள் உறுப்பினர்கள் என அவர்களின் பெயர்கள் பலாத்காரமாக பதியப்பட்டன. இதன் பின்னர், நாம் செட்டிக்குளம் என்ற இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டோம். அந்த இடத்தை அடைவதற்காக நாம் இரு நாட்கள் வரை உணவின்றி பேருந்திலேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது.

நாங்கள் பேருந்தில் புதுக்குடியிருப்பு வீதியால் கூட்டிச் செல்லப்பட்ட போது, மணி பிற்பகல் 6.30 ஆக இருந்தது. புதுக்குடியிருப்புக்கு அருகிலுள்ள மந்துவில் என்ற இடத்தை நாம் கடந்து சென்ற போது மிகப் பயங்கரமான காட்சியைக் காணவேண்டியிருந்தது. கிட்டத்தட்ட 300 வரையான இறந்த நிர்வாணமாக்கப்பட்ட உடலங்களை சிறிலங்கா இராணுவத்தினர் ஒன்றுகுவித்துக் கொண்டிருந்தனர்.

இதனை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த உடலங்கள் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் ‘ரியூப் லைற்றுக்கள்’ பொருத்தப்பட்டிருந்தன. அத்துடன் இதனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த இராணுவ வீரர்கள் அந்த உடலங்களை படம் பிடித்தனர். பார்ப்பதற்கு அது ஒரு கொண்டாட்டம் போல் காணப்பட்டது. அங்கே குவிக்கப்பட்ட்டிருந்த அந்த மக்கள் அந்தப் பிரதேசத்தில் கொல்லப்பட்டிருப்பார்கள் என நான் கருதுகிறேன்.

நாம் மெனிக்பாம் முகாமில் குடியேற்றப்பட்டு முதல் ஒரு வாரமும் குடிப்பதற்கான நீரைப் பெற முடியவில்லை. பசி போக்க உணவு கிடைக்கவில்லை. மலசலகூடவசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. எமது முகாமுக்குள் வெளி ஆட்கள் வருவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இதனை ‘விடுதலைப் புலிகளின் முகாம்’ எனவும் ‘வலயம் 04′ எனவும் அழைத்தனர்.

எமது முகாமிலிருந்த மக்கள் கொலை செய்யப்படுவார்கள் என கருதப்பட்டது. எமது வாழ்வு ஆபத்தில் உள்ளதாக நாம் கருதினோம். எமது முகாமில் கிட்டத்தட்ட 40,000 பேர்வரை தங்கவைக்கப்பட்டனர். 16 பேர் படுத்து உறங்குவதற்காக சீனாத் தயாரிப்பான நீல நிறத் தறப்பாள் ஒன்று வழங்கப்பட்டது. இதனால் பெண்கள் கூடாரத்திற்குள்ளும், ஆண்கள் அதற்கு வெளியேயும் படுத்து உறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் எம்மை மிருகங்கள் போல் நடாத்தினர்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தளவில் சிறிலங்கா அரசாங்கமும், இராணுவப் புலனாய்வுத் துறையும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாண வீதிகளில் உள்ள விளம்பரப் பலகைகளில் ‘ஒரு நாடு ஒரு மக்கள்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இத மக்களைப் பெரிதும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கப் படையினர் அக்கராயன், முருகண்டி, வற்றாப்பளை ஆகிய மூன்று இடங்களிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். இவ்விடங்களில் சிங்கள மக்களுக்கான வீடுகள் கட்டப்படுகின்றன. வடக்கு மாகாணத்தின் மையமாக மாங்குளம் அமைக்கப்படவுள்ளது. இங்கு கிட்டத்தட்ட 300,000 மக்களைக் குடியேற்ற சிங்கள அரசாங்கம் திட்டமிடுகிறது.

ஒவ்வொரு பட்டினத்திலும் இன விகிதாசாரத்தை பேண அரசாங்கம் முயற்சிக்கிறது. இதனால் வடக்கில் உள்ள குடிசன பரம்பலில் மாற்றத்தைக் கொண்டு வர அரசாங்கம் திட்டமிடுகிறது. ஏற்கனவே நாவற்குழியில் சிங்களவர்கள் குடியேறுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழில் மொழியாக்கம் – நித்தியபாரதி

https://www.samaraivu.com/2018/05/blog-post_85.html

மே-16: பிணக்கிடங்கில் இருந்து மீண்டவரின் நினைவுப் பகிர்வு!

2 months 2 weeks ago

நான்கு பக்கமும் இராணுவம் முன்னேறி வந்துகொண்டிருந்தான். சிறிய நிலப்பரப்பில் பல்லாயிரக் கணக்காக மக்கள் நிரம் பிவழிந்தார்கள். நடப்பதற்குக் கூட முடியாது தள்ளுப்பட்டு ஒருவர்பின் ஒருவர் சென்றுகொண்டிருந்தோம்.

முள்ளிவாய்க்கால்போல் வட்டுவாகல் எமக்கு சாதகமாய் அமைந்திருக்கவில்லை. காடும் சேறும் சகதியுமாகவே இருந்தது. ஈரநிலத்தில் சிறுவர்கள் பெரியவர்கள் என படுத்திருந்தார்கள்.

இராணுவம் முன்னேறிவர எமது பொருட்களையும் முன்னகர்த்திக் கொண்டே சென்று கொண்டிருந்தோம். விடுபட்ட பொருட்கள் எடுப்பதற்கென்று மீண்டும் திரும்பிச் சென்று எடுத்துவருவதும், மீண்டும் போவதுமாக இருந்தோம்.

இரண்டு கால்களிலும் காயப்பட்டு நடக்கமாட்டாத எம் உறவொருவரை தூக்கிச் சென்றுகொண்டிருந்தோம். ஆனால், எம்மால் அவரைத் தூக்கிச்செல்ல முடியாமலே இருந்தது. ஏனென்றால், எமது உடல்நிலை திடமாக இல்லை. காய்ஞ்ச மாடு கம்பில பட்டு விழுந்த நிலைதான் எமது நிலையும்.

அவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் சனநெரிசலில் பல மணிநேரப் போராட்டத்தோடு கொண்டுவந்து சேர்த்துவிட்டு, மீண்டும் செல்ல ஆயத்தமானோம்,

எறிகணைகள் விழ ஆரம்பித்திருந்தது. எப்படியாவது திரும்பிச்சென்று பொருட்கள் எடுத்துவரப் புறப்பட்டோம். எமக்கருகில் பல எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கத்தொடங்கியன. ஓடிச்சென்று பதுங்ககழிக்குள் குதிப்பதும் ஓடுவதுமாக இருந்தோம். அவ்வாறு ஓடிச்சென்று கொண்டிருக்கும்போது எறிகணை ஒன்று எம் அருகில் விழுவதுபோல் உணர்ந்தோம்.

பெரிய ஆலமரம் ஒன்றின்கீழே 'வக்கோ' எனப்படும் இயந்திரத்தால் வெட்டப்பட்ட பெரிய கிடங்கு ஒன்று இருந்தது. சரி, அதற்குள் குதிப்போம் என்று ஓடினோம். மரத்தில் கொழுவியபடி 'சேலன்' ஏறிக்கொண்டிருந்த நிலையில் போராளி ஒருவர் படுத்திருப்பதைக் கண்டேன்.

ஓடிச்சென்று, "அண்ணா, எறிகணை வருகுது. பங்கருக்க போவம், வாங்கோ," என்று கையைப்பிடித்து இழுத்து எழுப்பினேன். அவர் எழும்பமுடியாது கிடந்தார். என்னாலும் தூக்கமுடியாமல் இருந்தது.

அதன்பின்னர்தான் பார்த்தேன், அவர் காயத்தால் 'சேலன்' ஏறிக்கொண்டிருந்த நிலையில் இறந்துகிடப்பதை. எமக்கு அருகில் எறிகணைச் சிதறுதுண்டுகள் பறந்தடித்தன. எறிகணைகளுக்குப் பயத்தில அகழிக்குள்ள குதிச்சிட்டம். குதிச்ச பிறகுதான் தெரிஞ்சது, அது பிணக்கிடங்கென்று.

போராளிகளின் உடல்கள், பொதுமக்களின் உடல்கள் என்று 15 உடல்கள் அளவில் அந்தக் கிடங்கில் இருந்தன. இலையான்கள் மொய்த்தபடி காணப்பட்டன. பாரிய காயப்பட்ட உடல்களின் இரத்தவாடை குமட்டலை ஏற்படுத்தியது.

கிடங்கிலும் இருக்கமுடியாது. வெளியிலும் வரமுடியாது. எறிகணைகள் நின்றால்மட்டுமே வரமுடியும் என்ற நிலை. எனினும் நான் கிடங்கைவிட்டு மேலே ஏறிவிட்டேன்.

மனமெல்லாம் வேதனையில் துடித்தது. இப்படியே விட்டுட்டு, இந்தக் கிடங்கைக் கூட மூடாமல் உடல்களை போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்களே என்று மனம் எண்ணியது. 

இராணுவம் நெருங்கி வந்துகொண்டிருந்ததால் நாம் பொருட்கள் எடுக்கச் செல்வதைக் கைவிட்டு, திரும்பிவந்துவிட்டோம். நாம் திரும்பி வரும்போது எறிகணைகள் வெடித்து இறந்த உடல்கள் அப்படியே ஆங்காங்கே பரவிக் கிடந்தன. காயத்திற்கு மருந்துகட்டுவதற்கே ஒருவரும் இல்லை என்ற நிலை.

இது நடந்தது இறுதி நாளான மே-16 என்பதால் பாரிய காயக்காரர்கள் முறையான சிகிச்சைகள் இன்றி, இரத்தம்போயே இறந்துகொண்டிருந்தார்கள்.

எம்மவர்களைப் புதைப்பதற்குக் கூட முடியாமல் அப்படியே விட்டுட்டு வந்தோம் என்று நினைக்கும்போது மனம் வேதனையில் துடிக்கிறது.

***

குறிப்பு: முகநூலில் இருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது.

https://www.samaraivu.com/2018/05/16.html

மே-12, பெருங்கடல் கரையை அண்டிய மறிப்புவரிசை: ஒரு நினைவுப் பகிர்வு!

2 months 2 weeks ago

இறுதி நாட்களில்...2009:மே:12


Screen-Shot-2012-09-12-at-8.09.24-PM.jpg

கப்பல் ரோட்டு எனப்படும் ஜோர்தான் கப்பல் கரையொதுங்கிய இடத்திற்குச் செல்லும் வீதியை அண்மித்தே எமது நிலைகள் அன்று பின்னகர்த்தப்பட்டிருந்தன.

இரவுபகல் பாராது சண்டை நடந்தவண்ணமிருந்தது. அன்று மாலைதான் தெரிந்தது காலையில் நாம் இருந்த இடத்தையும் இராணுவம் கைப்பற்றிவிட்டதென்று.

பரந்தன் முல்லை பிரதான வீதியில் நந்திக்கடலை அண்மித்த பகுதியை ஒட்டியிருந்த மக்களும் கடுமையான ஷெல்வீச்சின் காரணமாகவும் ரவைகளின் சூடுகள் அதிகமாக இருந்ததாலும் வட்டுவாகல் நோக்கி நகர்ந்து செல்வது ஓய்ந்துகொண்டிருந்தது.

நாம் இருந்த இடத்தின் தரையமைப்பு மேட்டுப்பகுதி என்பதனால் எவரும் வெளியே நடமாடக்கூடாது என்று பொறுப்பாளர் சொன்னதால் எங்கும் போகாது பதுங்ககழிக்கு உள்ளேயே முடங்கினோம்.

சண்டை நடந்துகொண்டிருந்த முன்னரங்கு சில மீற்றர் தொலைவில் தான் இருந்தது. நாம் இருந்த பகுதிக்கு கிழக்குப் பக்கமாக நூறு நூற்றைம்பது மீற்றர் தள்ளி சில கல்வீடுகள் இருந்தன.

இரண்டு நாட்கள் குளிப்பு இல்லாததால் பகுதிப் பொறுப்பாளரிடம் சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த கிணற்றடியில் குளிக்கச் சென்று இரண்டு மூன்று வாளிகள் வார்த்திருப்பேன், பகல் சாப்பிட்ட புழுங்கல் அரிசி சோறும் அரைவேகல் பருப்பும் தன்வேலையைக் காட்டியது... சடுதியான வயிற்றுழைவு!

அந்த நாட்களில் மலம்கழிப்பது என்பது ஓர் மரணப்போராட்டம். ஏப்பிரல் மாதம் நின்ற இடத்தில் இருந்து கூப்பிடு தூரம்தான் கடற்கரை. அதிகாலையில் சென்றால் கடற்கரை மணலில் ஓர் குழியைத் தோண்டி காலைக் கடனை முடித்துவிடுவோம்.

சில நாட்கள் போக அங்கும் மக்களின் பெருக்கம் அதிகரித்தது. சிலவேளைகளில் எதிரியின் பராவெளிச்சம் எங்களை எழுந்து ஓடவைத்துவிடும்.

ஆனால், அந்த இடத்தில கடற்கரையும் இல்லை மலசலகூடங்களும் இல்லை. எங்கட போராளிகள் பி.வி.சி குழாயை சூடுகாட்டி விரித்து மலசலகூட கோப்பை போல் செய்துவைத்திருந்தனர். சுவருக்குப் பதிலாய் தறப்பாள் நான்கு பக்கமும் மறைத்திருந்தது.

கிணறு இருந்த இடம் அந்த தற்காலிக மலசலகூடத்தில இருந்து ஒரு பத்துமீற்றர் தான் இருக்கும். ஒருமாதிரி வயிற்றோட்டத்தோடு போராடிமுடிந்தது. வெளியே வந்து கிணறு நோக்கி நடந்துபோனபோது ஷெல் கூவிற சத்தம் வரவர அண்மித்தது. என்னையறியாமலே நிலத்தில் வீழ்ந்து படுத்துவிட்டேன்.

சத்தத்தோடு அதிர்வு ஒருமுறை என்னை உலுப்பியது. மணலைத் தட்டிவிட்டு எழுந்து பார்த்தால் கிணறு இருந்த இடத்தில் எவ்வித தடயமும் இல்லை. ஆட்டிலெறி எறிகணை என்பதால் உயிர்பிழைத்தேன். வயிற்றோட்டம் என்னைக் காப்பாற்றிவிட்டது என்று நண்பர்களுக்கு கூறி சிரித்தது தான் மிச்சம். இது நான் உயிர்தப்பிய இரண்டாவது தருணம்.

இரவானது. எமது பதுங்ககழிக்குள் வெளிச்சம் இல்லை. அருகே எறிகணை விழுத்து வெடித்து வெளிச்சம் ஏற்படுத்தும் போதுதான் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடிந்தது. மூன்றுபேர் இருந்தோம். மெல்லிய குரலில் பேசியபடி, இரவில் வேவுக்காரன் வருவான், இருக்கிறதை காட்டிக்கொள்ளக்கூடாது என்று பேசிக்கொண்டோம்.

இடைவிடாத ஷெல்லடியால் அன்று வழங்கல் எடுக்க எவரும் போகவில்லை. பக்கத்து பதுங்ககழிக்குள் இருந்த சக பெண் போராளிகள் மாவில் சுட்ட ரொட்டியோடு தேநீரும் தந்துவிட்டு, "அண்ணையாக்கள், இனி எப்ப தேநீர் கிடைக்குமோ தெரியாது," என்றுவிட்டு தமது பதுங்ககழிக்குள் சென்றுவிட்டனர்.


***

-வன்னியூரான்-

குறிப்பு:- முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது.


https://www.samaraivu.com/2018/05/12.html

இயக்குநரும் ஊடகவியலாளருமான அன்பரசனின் கடைசி நேர அனுபவங்கள்

2 months 2 weeks ago

Sriram+the+husband+of+Isaipriya.jpg

ஆண்டு 2009 இன் இறுதி யுத்த காலத்தில் சிறிலங்காப் படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்துவதை (வீடியோ) ஒளிப்பதிவு செய்த ஊடகவியலாளர்களில் அன்பரசனும் முக்கியமானவர். "சனல்-4" தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் “எறிகணைத்தாக்குதல் இடம்பெறும் சமயத்தில் நீங்கள் 'வீடியோ' எடுக்கவேண்டாம், படுங்கோ” என்று சொல்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த ஒளிப்பதிவுக் காட்சியை அன்பரசனே எடுத்திருந்தார். அன்பரசனின் அனுபவங்களை இங்கே பதிவுசெய்கின்றேன்.

அன்றைய நாட்களில் ஒரு வீடியோவை தரவேற்றுவது என்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தது. உழவு இயந்திரத்தின் மேல் மண் மூட்டைகள் அடுக்கி, அதற்கு கீழே படுத்துக்கொண்டு ஒரு மடிக்கணனியில் தான் எல்லா ஒளிப்பதிவுக் காட்சிகளையும் நான் வெளிநாடுகளுக்கு அனுப்பினேன். ஒரு கட்டத்துக்குப் பிறகு எங்களால் ஒளிப்பதிவு எடுக்கமுடியாமல் போய்விட்டது.

எடுத்த ஒளிப்பதிவுகளையும் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாதென்றாகிவிட்டது. இரத்தமும் சதையுமாக அழுகுரல்களோடு சேர்ந்த குண்டுச்சத்தங்களையும் காட்சிப்படுத்திய என் ஒளிப்படக் கருவியும் (கமரா) ஓய்ந்து போனது. இனி என்ன செய்யலாம் என்று யோசித்தேன். இனியாவது குடும்பத்திற்கு சாப்பாடு ஏதும் கிடைக்குமோ என்று தேடி அலைவோம் என முடிவெடுத்தேன். 

எனது நண்பன், "ஒரு களஞ்சியத்துக்குள் அரிசி கிடக்காம், போய் எடுப்பமா?" என்றவுடன் நானும் அவனும் அவ்விடத்திற்குப் புறப்பட்டுப் போனம். சரியான எறிகணை வீச்சு. அங்கயும் இங்கயும் ஒரே பிணங்கள். எல்லாவற்றையும் கடந்து, சாப்பாட்டுக்காக அங்கே போய்ப் பார்த்தபோது மூன்று பேர் இறந்து கிடந்தார்கள்.

அவர்களைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு நெல்லு மூட்டை ஒன்றைத் தோளில் போட்டுக்கொண்டு வேகமாகத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். மிக அருகில் ஆமி நிக்கிறான். இருந்தாலும் பசி எங்களுக்கு ஒரு துணிவைத் தந்திருந்தது. 

நானும் நண்பனும் நெல்லைத் தூக்கிவருவதைப் பார்த்த சனங்களும் அந்த களஞ்சியத்துக்கு ஓடிப்போனார்கள். திடீர் என எறிகணைகள் தொடர்ச்சியாக வீழ்ந்து வெடித்து அந்த உணவுக் களஞ்சியம் ஒரே புகைமண்டலமாக மாறியது. அவ்விடத்துக்குப் போனவர்கள் ஒருவரும் தப்பவில்லை. 

என்னுடன் வந்த நண்பன், “இன்னும் கொஞ்சம் நல்லகாலம் (அதிர்ஸ்ரம்) இருக்கு” என்று சொல்லிக்கொண்டே எமது வீட்டுக்காரர் இருந்த இடத்திற்கு ஓடினோம். பசிக்கொடுமை, தண்ணீர் பற்றாக்குறை இவற்றைத் தேடிப் போயே பலர் எறிகணைத் தாக்குதலில் மாண்டிருக்கிறார்கள். 

மரணகளத்தில் நின்று மனிதத்தைக் காக்கத் துடித்தோம். அன்றைய நாட்களின் மீள்நினைவுகள் வரும் போது மனம் பதறுகிறது. எல்லாம் கைமீறிப்போய்விட்டதே…! இனி என்ன நடக்கப்போகிறது என்றே விளங்வில்லை. எனது கையில் இருந்தபடியே சிறுவன் ஒருவனின் உயிர் பிரிந்தது. 

என்னால் அந்தப் (யதுசன்) 13 வயதுப் பாலகனை மறக்கமுடியாமல் இருக்கின்றது. இறுதியாக இயங்கிய வைத்தியசாலை ஒன்றில் இறந்து கிடந்தவர்களை ஒளிப்பதிவாக்கி விட்டு திரும்பும்போது இறந்த உடல் ஒன்றில் என் கால் இடறிவிழப்பார்த்தேன். நிதானித்து நின்று யாரோ தெரிந்தவர் போல என்று உற்றுப்பார்த்த்தேன். 

அது “கணேசு மாமா”. “என்ர முகத்தை கடைசியாகப் பார்த்திட்டு போ,” என்று சொல்வதைப் போலக் கிடந்தார். அப்பொழுது இறந்தவர்களின் உடலங்களை ஓரமாக அடுக்கிக்கொண்டிருந்த காவல்துறை உறுப்பினர் ஒருவர், “இவர்தான் கணேசு மாமா, தெரியுமா,” எனக் கேட்டார். அவருக்கு அந்த நேரம் சொல்வதற்கு வார்த்தைகள் ஒன்றும் என்னிடம் இருக்கவில்லை.

கணேசு மாமா வன்னியின் சிறந்த நகைச்சுவை நடிகர். இவரைத் தெரியாதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். 

எனது உற்ற நண்பன் சிறிராமுடன் (இசைப்பிரியாவின் கணவர்) 15 ஆம் திகதி இரவு கதைத்தேன். “நாளை இரவுக்கு இறங்கப்போறம். நான் தான் கொமாண்டர் மச்சான். ஒரு கை பாப்பம். இரும்புக் கோட்டைக்குள்ள போகப்போறம். வெற்றியெண்டா சந்திப்பம். இல்லாட்டி அலுவல் முடிந்தது மச்சான்”. “நீ, இசைப்பிரியாவை கூட்டிக்கொண்டு போ,” என்று சொன்னது காதுக்குள் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. 

சிறீராம் என்னிடம் சொன்னவற்றை எப்படி மறப்பது? இசைப்பிரியாவின் இறுதிச்சந்திப்பும் இறுதி வார்த்தைகளும் இப்போதும் நினைத்தால் மனதை வாட்டுகின்றது. மே-14ஆம் நாள் எமது பதுங்ககழிக்குள் விழுந்த எறிகணை வெடித்திருந்தால் இத்தனை துயரங்களையும் பார்த்திருக்கமாட்டேன். 

ஆனால், நான்கு குடும்பங்கள் இன்று இல்லாமல் போயிருக்கும். 16 ஆம் நாள் மாலை 6 மணியளவில் தளபதி பானு அண்ணனின் இறுதி வார்தைகள் இன்னமும் கேட்கின்றன. 

“இன்னும் ஏன்ரா நிக்கிறாய்? கூட்டிக்கொண்டு போகக் கூடியவர்கள் கூட்டிக்கொண்டு போங்கோ. எல்லாம் முடிஞ்சிது”. 

ஆனால், அந்த மாலைப் பொழுதில் அவரும் இன்னும் மூன்று போராளிகளும் எதிர்த் திசையாக நடந்தார்கள். 'நாங்களும் படையினர் பக்கம் போகப்போறம்,' என்ற பயத்துடன் அன்றைய இரவினை வெடிச்சத்தங்களுடன் நகர்த்தினோம்.

நள்ளிரவினைத் தாண்டி, அதாவது நாள்-17 அதிகாலை பாரிய குண்டுச்சத்தங்கள் நந்திக்கடல் பக்கமாகக் கேட்டது. கேப்பாப்புலவுப் பக்கமாக முல்லைத்தீவில் இருந்து பல்குழல் எறிகணைகள் தொடச்சியாக விழுந்து வெடிப்பதில் தூரத்தை கணிக்கமுடிந்தது. 

நான் மனைவிக்கு, “சிறிராமாக்கள் அங்கால போய்ற்றாங்கள் போல, தூரத்தில சத்தங்கள் கேட்குது," என்று சொன்னவாறே அன்றைய இரவுப் பொழுதினைக் கழித்தேன். எனக்கு ஒரே யோசினையாக இருந்தது. 

“டேய், நீ இசைப்பிரியாவைக் கூட்டிக்கொண்டு போ,” என்று சிறிராம் சொன்னவன். 

நான் எவ்வளவு கேட்டும் அவா வருவதாக இல்லை.

“அண்ணை, உங்களோட இன்னொரு போராளியும் வாறா, நானும் வந்தால் உங்களையும் பிடிப்பான். வந்தால் சிறிராமுடன் தான் வருவன். இல்லாட்டில் வரமாட்டன்,” 

என்று கூறிய அவளின் வார்த்தைகளின் கனதி அப்போது அந்தச் சூழலில் எனக்குத் தெரியவில்லை. இப்போது வலிக்கிறது.

***

குறிப்பு:- 'பதிவு' இணையத்தில் இருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது.

https://www.samaraivu.com/2018/05/16.html

"எல்லோரும் போங்கோ, எங்களைப் பற்றி யோசிக்க வேண்டாம்!" முள்ளிவாய்க்காலில் கரும்புலி

2 months 2 weeks ago

அவன் முகம் எனக்கு நினைவில்லை. அவன் தன்னுடைய முகத்தைக்கூட காட்ட விரும்பவில்லை என்றே நினைக்கிறேன். 2009 மே 18 அதிகாலை 2.45. முள்ளிவாய்க்காலின் இறுதி அத்தியாயங்கள் உன்னத உயிர்த்தியாகங்களின் மத்தியில் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் அந்தக் கணப்பொழுது. எங்கும் பிணக்குவியல் பிணங்களைப் பார்ப்பதற்கு கூட வெளிச்சம் இல்லை. ஆங்காங்கே வீழ்ந்து வெடிக்கும் எறிகணைகளின் கந்தகத்தீயின் வெளிச்சத்தில் பிணங்களை மக்கள் கடந்து கொண்டிருக்கின்றனர். எனது குடும்பமும், இன்னும் மூன்று குடும்பங்களையும் நான் ஓரிடத்தில் வைத்துக்கொண்டிருக்கிறேன்.

மக்கள் கூட்டமாக எங்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றனர். புதுக்குடியிருப்பு முல்லை வீதி மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அடிக்கு மேல் அடி வைத்து நகரும் மக்கள் கூட்டத்தின் நடுவே எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன. எங்கும் கூக்குரல். வெடிச்சத்தம் மிக அண்மையில் கேட்கத்தொடங்குகிறது. இராணுவம் எமக்கு அருகில் வந்துவிட்டான் என்பதை துப்பாக்கி வெடிகளின் சத்தம் உறுதிப்படுத்துகிறது. இந்த நிலையில் தொடர்ந்தும் அந்த இடத்தில் இருக்க முடியாது என உணர்கிறேன். ஆனாலும் மக்கள் செல்லும் வீதி இராணுவத்தின் எறிகணைத்தாக்குதலால் அதிர்ந்து கொண்டிருக்கிறது. வீதிக்கும் இறங்க முடியாது தொடர்ந்து அந்த இடத்தில் இருக்கவும் முடியாது விரைவாக நான் முடிவெடுக்க வேண்டிய நேரம்.

இராணுவத்தால் சுடப்படும் துப்பாக்கி ரவைகள் எனது குடும்பம் மறைந்திருக்கின்ற இருசக்கர உழவு இயந்திரப்பெட்டியில் பட்டுத் துழைக்கின்றன. இனி வேறு வழியில்லை அந்த இடத்திலிருந்து வெளியேறியே தீரவேண்டும். எனது குடும்ப அங்கத்தவர்களையும் எனது பாதுகாப்பிலிருந்தவர்களையும் வெளியேறுமாறு உத்தரவிடுகிறேன்.

அப்போது ஒரு கரும்புலி வீரன், இராணுவம் தாக்குதல் நடாத்திக்கொண்டிருக்கும் பக்கமாக நான் இருக்கும் இடத்திற்கு எதிர்ப்பக்கமாக புழுதி படிந்த சேட்டுடன் - ஒரு மெல்லிய உருவம், போராளிகள் வழமையாக நீழக்காற்சட்டைக்கு மேலாக இடுப்பில் மடித்துக்கட்டியிருக்கும் சறம், கையில் PK L.M.G., தன்னால் எவ்வளவுக்கு சுமக்க முடியுமோ அவ்வளவு LMG ரவைகளுடன் - நாங்கள் பதுங்கியிருப்பதை உணர்ந்த அந்தக் கரும்புலி வீரன் கட்டளை இடுகிறான்.

"எல்லோரும் போங்கோ!... இங்கை இருக்காதிங்கோ!... இனி ஒருவரும் இங்க இருக்க வேண்டாம். பாதை திறந்தாச்சு, எல்லோரும் போங்கோ! தயவு செய்து இருக்காதையுங்கோ...."

அந்த கரும்புலி வீரனின் கையில் இருக்கும் PK L.M.G இராணுவத்தை நோக்கி தீச்சுவாலையை ஊமிழ்கிறது. அதன் மங்கலான ஒளியில் அந்த வீரனின் முகம் என் கண்ணுக்கு புலப்படவில்லை. அவன் உருவம் மட்டுமே தெரிகிறது. மீண்டும் கரும்புலி வீரன் "எல்லோரும் போங்கோ, எங்களைப் பற்றி யோசிக்க வேண்டாம், நாங்கள் வரமாட்டம். நீங்கள் போங்கோ. உங்களுக்காகத்தான் நாங்கள் வெடிக்கப்போகிறோம். எங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், எல்லோரும் போங்கோ...," என்கிறான்.

இராணுவத்தின் துப்பாக்கிச்சூடு எமக்குப்படாதவாறு பாதுகாப்புக்கொடுத்து எதிரிக்குத் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறான் அந்த கரும்புலி வீரன். எனது குடும்பமும் ஏனையவர்களும் பாதுகாப்பாக அந்த இடத்திலிருந்து வெளியேறுகிறோம். நாங்கள் நான்கு குடும்பங்கள் தான் அந்த இடத்திலிருந்து இறுதியாக வெளியேறியிருக்க வேண்டும். அந்தப்பகுதியில் பொது மக்கள் இல்லை என்பதை ஊகித்த அந்தக் கரும்புலி வீரன் தனது கடமையை அந்த இடத்திலிருந்து முடித்துக்கொண்டு இராணுவம் முன்னேறிக்கொண்டிருக்கும் திசை நோக்கித் தனது துப்பாக்கியால் சுட்டபடி நகர்கிறான். 

அந்த வீரனை நான் திரும்பித்திரும்பிப் பார்த்தவாறு நடக்கிறேன். என் கண்ணுக்கு எட்டியவரை அவனது துப்பாக்கி ஓயவில்லை.

முள்ளிவாய்க்கால் மண் வெறுமனே சோகத்தை மட்டும் சுமக்க வில்லை. உலகில் எந்த இனத்திற்கும் கிடைக்காத உன்னத புருசர்களையும் எமது மக்களுக்கு அடையாளமிட்டது.

***

குறிப்பு:- சிவகரன் (Siva Karan) என்னும் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது.

https://www.samaraivu.com/2018/05/blog-post_14.html

போருக்குப் பின்னரான ஈழத்தமிழர் வாழ்வு - சமூகத்தின் ஆழ்ந்த காயங்களும் மீண்டெழும் சக்தியும்

2 months 2 weeks ago

unnamed%20(7).png

போருக்குப் பின்னரான ஈழத்தமிழர் வாழ்வு என்பது, ஒரு தேசத்தின் நீடித்த போர் ஏற்படுத்திய ஆழமான காயங்களையும், அதிலிருந்து மீண்டுவர ஒரு சமூகம் மேற்கொள்ளும் அசாதாரணமான முயற்சிகளையும் ஒருசேரப் பிரதிபலிக்கிறது. 2009 ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்னர், வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்ச் சமூகங்கள் பல்வேறு சமூக, பொருளாதார, உளவியல் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இவை குறித்த ஆழமான புரிதலுக்கு, நம்பத்தகுந்த தரவுகள் மற்றும் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இங்கே முன்வைக்கிறேன்.

1. காணாமல்போனோர் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலியும் நீதிக்கான தேடலும்:

போருக்குப் பின்னரான மிக முக்கியமான மற்றும் ஆழமான சமூகக் காயங்களில் ஒன்று, காணாமல்போனோர் பிரச்சினை ஆகும். இலட்சக்கணக்கான மக்கள், குறிப்பாகத் தமிழர்கள், இலங்கை அரச படைகளாலும், துணை இராணுவக் குழுக்களாலும், விடுதலைப் புலிகளாலும் காணாமல்போகச் செய்யப்பட்டதாகப் பல அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. 1980களின் பிற்பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 60,000 முதல் 100,000 வரையிலான காணாமல்போனோர் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக Amnesty International 2017 இல் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டின் இறுதிப் போரின்போது, சரணடைந்த விடுதலைப் புலிகள், மருத்துவமனைகளில் இருந்த தமிழ் மக்கள், இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்த தமிழர்கள் ஆகியோர் குறிப்பாக இலக்கு வைக்கப்பட்டனர்.

காணாமல்போனவர்களின் தாய்மார்களும் மனைவியருமே இப்போராட்டத்தின் முகங்களாக நிற்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, பிள்ளைகளைத் தனியாக வளர்க்கும் சவால்களையும் எதிர்கொள்கின்றனர். நீதிக்கான அவர்களின் அயராத போராட்டம் தொடர்கிறது. 2016 இல், காணாமல்போன 65,000 இற்கும் அதிகமானோரின் உறவினர்களுக்கு 'இன்மைச் சான்றிதழ்' (certificate of absence) வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இது சொத்துக்களை தற்காலிகமாக நிர்வகிக்கவும், தற்காலிகப் பாதுகாவலராகச் செயல்படவும் உதவுகிறது. இருப்பினும், இது நீதிக்கான உண்மையான தீர்வாக அமையவில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு.

2. நிலப் பிரச்சினைகளும் இனப்பரம்பல் மாற்றங்களும்:

இலங்கையில் நிலம் என்பது இன மோதலின் முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருந்துள்ளது. போருக்குப் பின்னரும், வடகிழக்குப் பிரதேசங்களில் நிலப் பிரச்சினைகள் ஒரு தொடர்ச்சியான சவாலாகவே உள்ளன. பாதுகாப்புப் படைகளின் நில ஆக்கிரமிப்புகள், உயர்பாதுகாப்பு வலையங்கள், அரச ஆதரவுடன் நடைபெறும் காணி அபகரிப்புகள், மற்றும் பௌத்த மதகுருமார்களின் தலையீடுடன் கூடிய புனிதப் பிரதேசங்கள் என்ற பெயரிலான நில ஆக்கிரமிப்புகள் ஆகியவை தமிழ்ச் சமூகங்களிடையே பெரும் அச்சத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்தியுள்ளன (ReliefWeb, ஆகஸ்ட் 2024).

குடிசன இடப்பெயர்வு, நிலத்திற்கான வரையறுக்கப்பட்ட அணுகல், அரசியல் ஸ்திரமின்மை மற்றும் சுருங்கிவரும் பொருளாதார வாய்ப்புகள் ஆகியவை விவசாய நிலப் பயன்பாட்டில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திரும்பிய மக்கள் தமது சொத்துக்களை இரண்டாம் நிலை ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்படுவதைக் காண்கின்றனர். இது தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் வரலாற்று ரீதியான இருப்பையும் அச்சுறுத்துகிறது.

3. முன்னாள் போராளிகளின் சமூக-பொருளாதார மீளிணைவும் சவால்களும்:

போர் முடிவடைந்த பின்னர், முன்னாள் விடுதலைப் புலிகள் போராளிகளை சமூகத்துடன் மீளிணைப்பது ஒரு முக்கியச் சவாலாக இருந்தது. இலங்கை அரசாங்கம் 2009 முதல் 2011 வரை விரிவான புனர்வாழ்வுத் திட்டங்களை மேற்கொண்டது. இதில் தொழில் தொடங்குவதற்கும், பின்னர் கடன் அடிப்படையிலான மீளிணைப்புத் திட்டங்களும் அடங்கும்.

இருப்பினும், பலர் காயங்கள், போதிய திறன்கள் இல்லாமை, சந்தைகளுக்கும் கடன்களுக்கும் போதிய அணுகல் இல்லாமை போன்ற காரணங்களால் பொருளாதார ரீதியாக முன்னேற முடியவில்லை (ResearchGate, 2014). வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்கள் உத்தரவாதங்களைக் கோருவதால் முன்னாள் போராளிகள் கடன் பெறுவதிலும் சிரமங்களை எதிர்கொண்டனர். பொருளாதார நல்வாழ்வுக்கும் நீண்டகால அமைதிக்குமான தொடர்பு வலுவாக இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. பாலின ரீதியான பாகுபாடுகளும், பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்களும் முன்னாள் பெண் போராளிகளின் மீளிணைப்பைப் பெரிதும் பாதித்தன.

4. பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரச் சவால்கள்:

போர் காரணமாக வடகிழக்கு மாகாணங்களில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கணவனை இழந்த, கணவர் காணாமல்போன அல்லது உடல்ரீதியாக பாதிக்கப்பட்ட பல பெண்கள் குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் சுமக்க வேண்டியுள்ளது. இவர்களுக்கு சமூக, கலாச்சார, உடல்நல, தளபாடங்கள் மற்றும் பொருளாதார ரீதியான பல சவால்கள் உள்ளன (University of Bath research portal).

பாரம்பரிய சமூகக் கட்டுப்பாடுகள், பரம்பரைச் சொத்து அல்லது கடன் சார்ந்த விடயங்களில் ஆண்களை மையப்படுத்திய விதிமுறைகள், மற்றும் பொதுத் துறையில் குறைந்த அரசியல் பங்களிப்பு ஆகியவை இவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளன. வேலைவாய்ப்பின்மையும், குறைந்த கூலியும் இவர்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. வடக்கில் பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 16% ஆகவும், கிழக்கில் 18% ஆகவும் உள்ளது. இது நாட்டின் சராசரியை விடவும் மிகக் குறைவு (FAO, Conflict and women's status in the North and East of Sri Lanka 1).

5. உளவியல் ரீதியான காயங்களும் மனநலப் பிரச்சினைகளும்:

நீண்டகாலப் போர் ஈழத்தமிழர்களிடையே ஆழமான உளவியல் காயங்களை ஏற்படுத்தியுள்ளது. மனச்சோர்வு, பதட்டம், மன உளைச்சல், அதிர்ச்சிகரமான அனுபவங்களுக்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறுகள் (PTSD) போன்ற மனநலப் பிரச்சினைகள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிடையே கணிசமாக அதிகமாக உள்ளன (NCBI, மே 2024).

சமூகத் தூரம், மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமை, களங்கம், மொழித் தடைகள், மற்றும் மனநலச் சேவைகளுக்கான அணுகல் இல்லாமை ஆகியவை சிகிச்சையைப் பெறுவதற்கான தடைகளாக உள்ளன. உயிர் இழப்புகள், குடும்ப உறுப்பினர்களின் காணாமல்போதல், இடம்பெயர்வு, மற்றும் வறுமை ஆகியவை மனநலப் பிரச்சினைகளை மேலும் மோசமாக்குகின்றன.

6. இளைஞர் வேலைவாய்ப்பின்மையும் பொருளாதார மீட்சி சவால்களும்:

வடகிழக்கு மாகாணங்களில் இளைஞர் வேலைவாய்ப்பின்மை ஒரு பெரும் சமூகப் பிரச்சினையாகும். கல்வித் தகுதிகள் இருந்தபோதிலும், குறிப்பாகப் பட்டதாரிகளிடையே வேலையின்மை அதிகமாக உள்ளது (ResearchGate, ஆகஸ்ட் 2025). இது நம்பிக்கையின்மை, சமூக அமைதியின்மை, மற்றும் சமூகப் பிரச்சனைகளை அதிகரிக்க வழிவகுக்கிறது.

போரினால் பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்புகள், குறைந்த முதலீடுகள், சந்தை அணுகல் இல்லாமை, மற்றும் அரசின் பாகுபாடு ஆகியவை இப்பகுதிகளின் பொருளாதார மீட்சியைப் பாதிக்கின்றன. கண்ணிவெடிகள், உயர்பாதுகாப்பு வலயங்கள், மற்றும் பொருளாதார வாய்ப்புகள் இல்லாமை ஆகியவை வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்றன (UK Parliament, டிசம்பர் 2023).

7. கலாச்சாரப் பண்பாட்டு அழிவும் அடையாள நெருக்கடியும்:

போரும், போருக்குப் பின்னரான அரசக் கொள்கைகளும் தமிழர்களின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. மாவீரர் துயிலும் இல்லங்கள் இடிக்கப்பட்டமை, நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டமை, மற்றும் போர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் ஆகியவை தமிழர்களின் நினைவுகளையும், கலாச்சார அடையாளத்தையும் அழிக்கும் முயற்சிகளாகப் பார்க்கப்படுகின்றன (Sri Lanka Campaign, மே 2024).

இது ஒரு சமூகத்தின் கூட்டு நினைவகத்தையும், கலாச்சாரப் பாரம்பரியத்தையும் இழக்கும் நிலையை ஏற்படுத்துகிறது. மொழி, கலை, மற்றும் மரபுகள் மீதான புறக்கணிப்பும், ஆக்கிரமிப்பும் ஒரு சமூகத்தின் அடையாள நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

மீண்டெழும் சக்தி (Resilient Strength of the Community):

மேலே குறிப்பிட்ட ஆழமான காயங்கள் இருந்தபோதிலும், ஈழத்தமிழ்ச் சமூகம் வியக்கத்தக்க மீண்டெழும் சக்தியைக் காட்டுகிறது.

  • சமூகப் பிணைப்புகள்: குடும்பப் பிணைப்புகள், சமூக ஒற்றுமை, மற்றும் புலம்பெயர் உறவுகளின் ஆதரவு ஆகியவை கடினமான காலங்களில் மக்களுக்குப் பெரும் துணையாக நிற்கின்றன.

  • விடாமுயற்சி: வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதிலும், கல்வியைத் தொடர்வதிலும், சமூக நீதிக்காகப் போராடுவதிலும் மக்கள் பெரும் விடாமுயற்சியைக் காட்டுகின்றனர்.

  • கல்வியின் முக்கியத்துவம்: கல்விக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம், எதிர்காலத் தலைமுறையினரைத் தயார்படுத்துவதற்கான ஒரு கருவியாக உள்ளது.

  • குரலற்றவர்களின் குரல்: காணாமல்போனோர் உறவுகளின் தொடர்ச்சியான போராட்டங்கள், அநீதிக்கு எதிராகப் போராடுவதற்கான ஒரு முன்மாதிரியாக அமைகின்றன.

  • புலம்பெயர் சமூகத்தின் பங்கு: புலம்பெயர் தமிழ்ச் சமூகங்கள் தங்கள் சொந்த மண்ணில் உள்ளவர்களின் வாழ்வாதாரத்திற்கும், மீள்கட்டுமானத்திற்கும் கணிசமான ஆதரவை வழங்கி வருகின்றன.

முடிவுரை:

போருக்குப் பின்னரான ஈழத்தமிழர் வாழ்வு என்பது, ஒருபுறம் போரின் ஆழமான காயங்களையும், மறக்க முடியாத வலிகளையும் தாங்கி நிற்கிறது. மறுபுறம், அந்த வலிகளுக்கு மத்தியிலும் மீண்டெழும் சக்தியையும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் கொண்டுள்ளது. நீதிக்கான தேடல், நிலப் பாதுகாப்பிற்கான கோரிக்கைகள், வாழ்வாதார மேம்பாடு, உளவியல் ஆதரவு மற்றும் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாத்தல் ஆகியவை இந்தக் கலந்துரையாடலின் மையக் கருக்களாகும்.

இந்தக் காயங்கள் குணமடையவும், மீண்டெழும் சக்தி முழுமையாக வெளிப்படவும், நியாயமான மற்றும் நிலையான அரசியல் தீர்வு, மனித உரிமைகளின் பாதுகாப்பு, பொறுப்புக்கூறல், மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி ஆகியவை அத்தியாவசியமானவை. தமிழ்ச் சமூகத்தின் வலிமையையும், அமைதியான மற்றும் கௌரவமான வாழ்வுக்கான அவர்களின் உறுதிப்பாட்டையும் அங்கீகரித்து, அதற்கான வழிகளைத் திறந்துவிடுவதே எதிர்காலத்திற்கான ஒரே வழி.

Posted by S.T.Seelan (S.Thanigaseelan)

https://vellisaram.blogspot.com/2025/08/blog-post_11.html#more

எதிர்த்துப் போராடினாலே வாழ்வு எனகளமுனைக்கு வந்த சிவம் அண்ணர்!

2 months 3 weeks ago

எதிர்த்துப் போராடினாலே வாழ்வு எனகளமுனைக்கு வந்த சிவம் அண்ணர்!

Vhg ஆகஸ்ட் 13, 2025

AVvXsEj1oLxNCt3DuijYEBmY8igj3pXyeskc5TXgDykSostbhwpayU-kBgN6J-9fEqFYIGvmdrPHq6rAt_xZtaBYWYCTXxCTT5lDfFylFh-ZB0SHpji_Qa51_5gOOBgNsEUNB__35CkEg5i-O4yKJqE9c8-QCU8xwd3hoiJi4118eJJqwDVQNjmbUzuZ6sdABSYm

(-பசீர் காக்கா -)

"ஒரு செய்தி நூறு வீதம் உண்மையானது என நீங்கள் நம்பும் வரையில் அதனை ஊடகங்களுக்குச் செய்தியாகவோ கிசுகிசுப்பாகவோ தேவையற்ற சந்தேகங்களை உருவாக்கும் வகையிலோ வெளியிடக் கூடாது." 

இது தமிழ் ஊடகத்துறையில் ஜாம்பவானாகத் திகழ்ந்த எனது வழிகாட்டி கோபு ஐயா(எஸ் .எம் கோபாலரெத்தினம்) எனக்கு கற்பித்த பால பாடம். இதனைச் சொன்னால் பரபரப்புச்  செய்தி அரசியல்தான் வடக்கில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையே  உருவாக்கி விட்டது.இதனையே நாமும் செய்வதில் என்ன தவறு? என இன்றைய youtube காரர்கள் கேட்கக்கூடும். 

இன்று வரை சிங்களவர்களுக்கு நிகராக இல்லாவிட்டாலும் வட கிழக்கில் தமிழர்கள் தமது உழைப்புக்கு கேற்றவகையில் பெறும் கூலி, காணி உரிமை,பாதுகாப்பு போன்ற விடயங்களில் இருந்து எட்டிய தூரத்திலேயே மலையகத் தமிழர்கள் இருக்கின்றார்கள். இவற்றைக் கருத்திற் கொண்டு சிவம் அண்ணரின் போராட்டப்  பங்களிப்புக் குறித்து அவரது இறுதிச் சடங்கு முடியும் வரை அமைதி காப்பதே எமது கடமை என முடிவெடுத்தேன்.

பொதுவாக 1990 க்குப் பின் பங்களித்தவர்கள் தங்களது ஊகங்கள், சந்தேகங்களை உண்மையானவை என நிறுவ முயன்று வரலாற்றைத் திசைதிருப்ப முயல்கிறார்கள். அவர்களாவது பங்களித்தவர்கள் என்ற வகையில் விடலாமென்றால் போராடத் துணிச்சல் அற்று களத்திலிறங்கத் தயாரில்லாமல் தேவலோக வாழ்க்கை தேடித் திரிந்தவர்களும் சிவமண்ணரின் வரலாற்றில் குழப்பத்தை உருவாக்க முயல்கின்றார்கள்.

அதனால்தான் 78 ல் இயக்கத்தில் இணைந்து  (76 அல்ல )  பின்னர் விலகிய பின் தனிப்பட்ட தகராறில் வெட்டிக் கொல்லப்பட்ட  (சாவகச்சேரி  பகுதியில் ) சிவம் என்பவரின் வரலாற்றுப்  பெட்டியை சிவம் அண்ணர் என்ற போராட்ட இயந்திரத்தில் கொழுவ முனைகிறார்கள். அதேபோல சிவத்தான் என்ற பெயரில் மட்டக்களப்பு அணியிலிருந்து வடக்கில் கணிசமான பங்களிப்பை செய்த பின் கருணா அம்மானுடன் போனவரின் வரலாற்றை இதே இயந்திரத்தில் கொழுவ முனைகிறார்கள்  1990 பின் பங்களித்தவர்கள். 

தமிழரின் ஆயுதப் போராட்ட  வரலாற்றில் தங்களது பங்களிப்பை செய்ய முனைந்தவர்களை அவதானித்தால் அவர்கள் பொதுவாக 17 வயது முடிந்த பின் போராட வேண்டுமென முடிவெடுத்திருப்பார்கள். தாம் எதிர்பார்த்த வகையில் எல்லாம் நடக்கவில்லை என்பதாலோ, வேறு பல்வேறு காரணங்களாலோ 33- 34 வயதில் போரா ட்டத்திலிருந்து விலகி விடுவார்கள்.

பின்னர் அவர்கள் சொந்த வாழ்க்கையில் கூடிய கவனமெடுப்பர். எங்கள் சிவமண்ணாவோ  அந்த 34 வயதில் போராளியானவர். 1983 ல் இந்தியா வழங்கிய இரண்டாவது முகாமில் பயிற்சி பெற்றவர்.

1977 ஆம் ஆண்டு இனக்கலவரத்தைக் தொடர்ந்து தமிழர் தாயகமே தமிழர்களுக்குப் பாதுகாப்பு என எண்ணி மலையகம் – பசறையிலிருந்து வடகிழக்குக்கு இடம் பெயர்ந்தோர்களில் இவரும் ஒருவர். இவர் குடியேறிய இடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான புல்லுமலை. எப்போதுமே நாம் ஓடிக்கொண்டிருக்கமால் எதிர்த்து நின்று போராட வேண்டும் என்ற தீர்மானத்தை செயற்படுத்த அவர் தேர்ந்தெடுத்த இயக்கம் தான் தமிழீழ விடுதலைப்புலிகள்.

சிறையிலிருந்து தப்பிப்பது என்பது வேறு சிறையை உடைத்து அங்கிருந்து  கைதியை விடுவிப்பது என்பது வேறு. வெலிக்கடைப்  படுகொலையைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிர்மலாவை மீட்டெடுத்ததையே சிறையுடைப்பு என்று சொல்லலாம்.

1.துவிச்சக்கர வண்டியில் சென்று மேற்கொள்ளப்பட்ட  சிறையுடைப்பு என்ற நடவடிக்கை என்று உலகில் வேறுறெதனையையும் சுட்டிகாட்ட இயலாது.

2. இரண்டே இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் சென்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது.

3.மீட்கப்பட்டவரை துவிச்சக்கர வண்டியிலேயே கொண்டு சென்றமை என்ற வரலாறு இந்த நடவடிக்கைக்கு உண்டு.

மட்டக்களப்பு சிறைக்குள் சென்ற நாலு போராளிகளில் ஒருவரான சிவமண்ணார் தனது பலத்தை திரட்டி காலாலேயே உதைத்து இக் கதவை உடைத்து நிர்மலா வெளியில் வர உதவினார். நிர்மலா எந்த அறையில் இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த போது தன்னை அடையாளம் காட்டும் வகையிலான நடவடிக்கையை நிர்மலா  மேற்கொண்டார்.

இந் நடவடிக்கைக்காகத்  திட்டமிடும்போது சிறைக்காவலருக்கான சீருடை அணிவதற்குப் பொருத்தமான உடற்கட்டுடையவராகவும், சிங்களம்

தெரிந்தவராகவும் இருந்ததனால்  இவரையே   முதன்மையானவராக கொண்டு திட்டமிடப்பட்டது

சிறைக் கதவைத் திறக்க முன்னர் அதிலுள்ள சிறு ஓட்டைவழியாக உள்ளிருந்து  வெளியே பார்ப்பார்கள்.அவ்வேளை வேறு சிறையிலிருந்து கைதிகளைக் கொண்டு வருபவர் போல ஒருவர் தோற்றமளிக்க  வேண்டும். தனக்கான  பணியை இவர் மிடுக்குடன் மேற்கொண்டார். கதவு திறக்கும் வேளையில்தான் நிலைமையின் விபரீதத்தை புரிந்துகொண்டு கதவைமூட முயன்றனர் சிறைக்காவலர்கள்.எனினும் அந்த போராட்டத்திலும் சிவமண்ணன் தனது பங்கை காத்திரமாக வெளிப்படுத்தினார்.

இவ் வேளையில் தான் சிறையிலிருக்கும் நிர்மலாவை மீட்க்கத்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதை உணர்ந்த கடமையிலிருந்த பொறுப்பதிகாரி நிர்மலாவின் அறைக்கதவின் திறப்பை எடுத்துக்கொண்டு ஓடி ஒளிந்து கொண்டார். சிவமண்ணர்  உட்பட உள்ளே சென்ற நால்வரும் உடனடியாக செயலில் இறங்கினர்.பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் அறிவிக்க எடுத்த  முயற்சி முடியடிக்கப்பட்டது. 

தொடர்ந்து சிவமண்ணரின் உதையின் வேகம் ,பலம் என்பன வெளிப்பட காரியம் கை கூடியது. தொடர்ந்து பின்னாளில் நடைபெற்ற களுவாஞ்சிக்குடி மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலையத் தாக்குதல்களிலும் தனது காத்திரமான பங்களிப்பை வெளிப்படுத்தினார் சிவம் அண்ணர்.

மட்டக்களப்பு - அம்பாறைமாவட்டப்  போராளிகள் இவர் மீது மிகவும் மதிப்பு வைத்திருந்தனர். தன்னை விட மிகக் குறைந்த வயதினையும் அனுபவத்தையும் உடைய போராளிகளையும் மதித்தே நடந்து கொண்டார். பல்வேறு துறை நடவடிக்கைகளிலும்  இவர் பங்களித்தார் .

 வாழ்வில் எல்லோருக்கும் ஏற்றம் இறக்கம் உண்டுதானே. எக்காலத்திலும்  திமிராகவோ, துவண்டுபோகாமலோ பணியாற்றியவர் என்றால் இவரையே  உதாரணம் காட்டலாம் .

பிற்காலத்தில் கோப்பாவெளி கிராமத்தில் வாழ்ந்த போது கிராம அபிவிருத்திச் சங்கம், ஆலய நிர்வாகம் போன்றவற்றில் தலைவராக விளங்கினார் என்றால் இவரது  கடந்த கால வரலாறு பற்றி மக்கள் இவர் மீது கொண்ட பெரும் மதிப்புதான் காரணமாகும்.  

தனது போராட்ட வரலாறு பற்றி இவர் வெளியில் சொல்லிக்கொள்வதில்லை. ஆனால் அவரின் பங்களிப்பு பல்வேறு துறைகளிலும் இருந்தது. என்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டுமல்லவா? பெறுமதியான எடுத்துக் காட்டான வாழ்வல்லவா அவருடைய வரலாறு.

https://www.battinatham.com/2025/08/blog-post_76.html

வீரமுனை படுகொலையும் மறுக்கப்பட்ட நீதியும்.!

2 months 3 weeks ago

வீரமுனை படுகொலையும் மறுக்கப்பட்ட நீதியும்.!

கிருஷ்ணகுமார்

ஆகஸ்ட் 13, 2025

AVvXsEjep6N30o-iPzRQHvsHt-H2r7Rhf92poYf40FHhWCV4JmBA82YqRrRS__DOkx2MSoPLkuOV1XZi9RrQtZg5AsggEf2GJostKRizZLDbX7GEM4edEYNPgW7jeW8BbUF1btcaOcRrJAZW3cLkM3URqyiSBQycHJhdwK_HvU_7ZN96Gb4wMGEZTUF7fPkAEqE8

வீரமுனை என்பது கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழமையானதும் பாரம்பரியமானதுமான பிரதேசமாகும். சோழ இளவரசிகளில் ஒருவரான சீர்பாத தேவியினால் 08ஆம் நூற்றாண்டில் அபிவிருத்திசெய்யப்பட்ட மிகவும் பாரம்பரியத்தினைக்கொண்ட கிராமமாகும். நூறு வீதிம் இந்துக்களைக்கொண்ட இக்கிராமத்தின் ஆலயமானது வரலாற்றுசிறப்பு மிக்கது மட்டுமல்ல கண்டியை தளமாக கொண்டு ஆட்சிசெய்த வாலசிங்கன் மன்னனின் மகன் இராஜசிங்கனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பொன் விளையும் விவசாய காணி பட்டயம் செய்யப்பட்டிருந்தது. இதன்காரணமாக சம்மாந்துறையினை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல சிங்கள பேரினவாதிகளுக்கும் இந்த ஆலயத்தின் மீது தொடர்ச்சியான பார்வையிருந்தேவந்தது. நானும் வீரமுனையை பிறப்பிடமாக கொண்டவன். 1990ஆம் ஆண்டுவரையில் வீரமுனையிலேயே இருந்துவந்தோம்.

வீரமுனை-சம்மாந்துறை எல்லைப்பகுதியிலேயே எங்கள் வசிப்பிடமிருந்தது. அதன்காரணமாக நான் அறிந்த காலம் தொடக்கம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவந்தோம். குறிப்பாக 1988ஆம் ஆண்டு ஒரு தடவை வீரமுனை தீக்கிரையாக்கப்பட்டபோது எங்களது வீட்டில் இருந்த பொருட்களை எங்களது வீட்டுக்கு அருகிலிருந்து சகோதர இனத்தவர்கள் அள்ளிச்சென்றதை கண்டதாக எனது தந்தையார் தெரிவித்தார். இதேபோன்று எனது தந்தையின் மோட்டார் சைக்கிளும் அவ்வாறே ஒருவரிடமிருந்து மீட்கப்பட்டது. நாங்கள் வீரமுனையில் தொடர்ச்சியாக எதிர்கொண்டுவந்த பிரச்சினையே 1990ஆம் ஆண்டு பூதாகரமான அழித்தொழிப்பாக அமைந்தது.

1989ஆம் ஆண்டுக்கும் 1990 ஆண்டுக்கும் இடையில் வீரமுனை மக்கள் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்தார்கள். இரவோடு இரவாக பல தடவைகள் இடம்பெயர்ந்த அனுபவங்கள் எனக்கும் உள்ளது.வீரமுனையிலிருந்து காரைதீவுக்கு பல தடவைகள் இடம்பெயர்ந்திருக்கின்றோம். இதேபோன்று வீரச்சோலைக்கும் இடம்பெயர்ந்து சென்ற அனுபவம் இருக்கின்றது.

அதிலும் 1990ஆம் ஆண்டு ஜுன்,ஜுலை,ஆகஸ்ட் மாதம் என்பது வீரமுனை மக்களினால் என்றும் மறக்கமுடியாத நாளாகும். அம்பாறையிலிருந்து இராணுவம் தமிழர் பகுதியை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தபோது பல்வேறு அட்டூழியங்களை செய்ததுடன் அதற்கு துணையாக முஸ்லிம் ஊர்காவல் படையினரும் மாறியிருந்தனர். வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தில் எங்கள் குடும்பம் இருந்தது. இதனைப்போன்று வீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயம் மற்றும் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றில் வீரமுனை,வீரச்சோலை,மல்வத்தை,வளத்தாப்பிட்டி,மல்லிகைத்தீவு ஆகிய பகுதிகளிலிருந்து தமது உயிரை பாதுகாப்பதற்காக அனைவரும் தஞ்சமடைந்திருந்தனர்.

முகாமிலிருந்த காலப்பகுதியில் தினமும் அழுகுரல்களே கேட்கும்.முகாமிலிருந்து தமது வீடுகளுக்கு சென்றவர்களை காணவில்லை,முகாமிலிருந்து வெளியில் சென்றவர்களை கொண்டுபோரார்கள் என்று தினமும் அழுகுரல்களே ஒலிக்கும். இரவு வேளைகளில் அழுகுரல்களே கேட்கும். அச்சம் நிறைந்த சூழலே காணப்படும். எங்களது முகாம்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கம் வந்துசெல்லும் செஞ்சிலுவை சங்கம் வந்துசென்றால் அதன் பின்னர் இராணுவ வாகனங்கள் ஊர்காவல் படையினர் சூழ வருகைதந்து முகாம் முற்றாக சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்து இளைஞர்கள்,குடும்பதினர் என பஸ்களில் ஏற்றிச்செல்வார்கள். ஆனால் அவர்களில் யாரும் திரும்ப வரமாட்டார்கள்.எங்களது தந்தையை இரண்டு தடவை கொண்டுசெல்வதற்கு இராணுவம் முயற்சிசெய்தபோது அங்கிருந்த பெண்கள் தமது பாவடைகளுக்குள் மறைத்து எங்களை பாதுகாத்ததை இன்று நினைக்கும்போதும் அச்சம் ஏற்படும். இவ்வாறு பல தடவைகள் எங்களது முகாம்கள் சுற்றிவளைக்கப்பட்டு பஸ்களில் பலர் நூற்றுக்கணக்கானவர்கள் ஏற்றிச்செல்லப்பட்டபோதிலும் அதில் யாரும் திரும்பி வந்ததாக எனக்கு நினைவில் இல்லை. ஒரு தடவை எமது ஆலய வளாகத்திற்குள் மனித தலையொன்று எரிந்த நிலையில் கிடந்ததை இன்றும் மறக்கமுடியாத நினைவு இருக்கின்றது. ஒவ்வொரு தடவையும் இராணுவத்தினர் சுற்றிவளைப்புக்கு வரும்போது அவர்களுடன் முஸ்லிம் ஊர்காவல் படையினர் அதும் தமக்கு தெரிந்த நபர்கள் வந்திருப்பதாக அக்காலத்தில் பலர் பேசுவதை நான் கேட்டிருக்கின்றேன். வீரமுனை படுகொலை நடைபெற்றபோது விசேட அதிரடிப்படையினரின் உதவியுடனேயே முஸ்லிம் ஊர்காவல் படையினர் வந்ததாக அந்த முகாமிலிருந்த மக்கள் சாட்சி பகிர்ந்தனர். அதுவும் சம்மாந்துறை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு வீரமுனை ஆலயம் மற்றும் பாடசாலைகளுக்குள் புகுந்து வெட்டியும் சுட்டும் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை முன்னெடுத்தாக இதனை நேரில் கண்டவர்கள் இன்றும் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்த படுகொலைகளுக்கான நீதியான விசாரணைகள் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லையென்பதே அனைவரது கவலையாகவும் இருக்கின்றது.

குறிப்பாக இந்த படுகொலைகள் நடைபெற்ற நிலையில் வீரமுனை உட்பட முகாமிலிருந்த மிகுதியான மக்கள் திருக்கோவில்,தம்பிலுவில் போன்ற இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு அகதிமுகாம்களில் வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் வீரமுனை உட்பட அனைத்து கிராமங்களும் முற்றாக சூறையாடப்பட்டது. வீரமுனை மக்கள் வீரமுனைக்கு வரும்போது எதுவும் இல்லாத நிலையிலேயே வந்து குடியேறினார்கள்.

இவ்வளவு அநியாயங்கள் வீரமுனை மக்களுக்கு அருகில் புட்டும் தேங்காய் பூவுமாக இருந்தவர்களின் உதவியுடன் நிகழ்த்தப்பட்டபோதிலும் அவர்கள் நடந்த அநியாயங்களுக்கு இதுவரையில் தமிழ் மக்களிடம் வருத்தம்கூட தெரிவிக்காத நிலையே இன்றுவரையில் இருந்துவருகின்றது. அதனையும் தாண்டி தமது கிராமத்தின் தனித்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்படவிருந்த வரவேற்பு கோபுரத்தினையும் அமைக்கவிடாமல் தடுக்கும் சக்திகளே அன்று வீரமுனையின் அழிவுக்கு துணையாக நின்றவர்களாக இருக்கலாம் என்பது எனது எண்ணமாகும். வீரமுனை கிராமம் என்பது வெறுமனே வந்தேறுகுடிகள் அல்ல அந்த மண்ணின் பூர்வீக குடிகள். இரு இனங்களும் தங்களுக்குள் ஒன்றுபட்டு வாழ்வதன் ஊடாக எதிர்காலத்தில் சகவாழ்வினை ஏற்படுத்தமுடியும். வெறுமனே ஒரு இனத்தின் கலாசாரத்தினையும் பண்பாடுகளை புதைத்துவிட்டு தாங்கள் வாழ நினைத்தால் அது எவ்வாறான நிலைக்கு கொண்டுசெல்லும் என்பதை உண்மையான மனித நேயத்தினை மதிக்கும் அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

வீரமுனை மக்கள் தங்களுக்கு நடந்த அநீயாயங்களை மறந்து தமது சக மதத்தவருடன் கடந்தகால கசப்புகளை மறந்துவாழும் நிலையில் தாங்கள் வரவேற்பு கோபுரம்போன்றவற்றிற்கு காட்டும் எதிர்ப்பானது எதிர்கால சமூகத்தின் மனங்கள் வடுக்களை ஏற்படுத்தும் என்பதை இனியாவது உணர்ந்துசெயற்படவேண்டும். 

தொடரும்………………….

https://www.battinatham.com/2025/08/blog-post_167.html

சிறுகதை - 184 / 'குண்டுகளின் மத்தியில் ஒரு காதல்'

2 months 4 weeks ago

சிறுகதை - 184 / 'குண்டுகளின் மத்தியில் ஒரு காதல்'

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்களில், முல்லைத்தீவு ஒரு சிதைந்த நிலமாக, ஆனால் இன்னும் நம்பிக்கையின் கல்லறையாக இருந்தது. பசி குண்டுகளை விட சத்தமாக அலறியது. என்றாலும் சரியான உணவின்றி, ஆனால் இன்னும் நம்பிக்கையில் உயிர் வாழும் மக்கள் அங்கு நிறைந்து இருந்தனர். மருந்தின்றி துடிக்கும் குழந்தைகள், குண்டுகளின் வெடிப்பினால் ஏற்பட்ட நஞ்சு கலந்த காற்றினாலும் மக்களுக்கு பயம் கலந்து இருந்தது. வீடுகளும் நிலங்களும் எரிந்தன. குழந்தைகள் பால் இல்லாமல் அழுதனர். வயதான பெண்கள் மருந்து இல்லாமல் மயக்கமடைந்தனர். மௌனம் கூட பயமாகத் தோன்றியது. அங்கே விழுந்து கிடந்த பிணங்களை அகற்றவோ அல்லது யார் எவர் என்று அடையாளம் காணவோ அல்லது எத்தனை என்று எண்ணுவதற்கோ அங்கு ஒருவரையும் காண முடியவில்லை. இரதம் நீர்போல் ஓடிக்கொண்டு இருந்தது. பொதுமக்கள் பதுங்கு குழிகளில் ஒழிந்து, வேகவைத்த இலைகளையும் பிரார்த்தனைகளையும் பகிர்ந்து கொண்டனர். அப்படியான அந்தச் சிதைந்த மண்ணில், ஒரு இளம் பெண் போராளி – மதி – படுகாயமடைந்து, ஒரு தற்காலிக மருத்துவமனைக்குள் தடுமாறி நுழைந்தாள். அவள் முகத்தில் சோர்வு தெரிந்தது, ஆனால் அவள் கண்கள் அமைதியான உறுதியைக் கொண்டிருந்தன.

அங்கு 28 வயதான டாக்டர் கஜன், எஞ்சிய மருந்துகளால் உயிர்களை காக்க முயன்று கொண்டு இருந்தார். அவர் சோர்வடைந்த மனதுடன் கைகளை பிசைந்து கொண்டு உட்கார்ந்து இருந்த பொழுது, எந்த வித சலனமும் இன்றி மெதுவாக அடிமேல் அடி வைத்து வந்த மதியின் கோலத்தைக் கண்டு அவன் திகைத்து விட்டான். என்றாலும் அவள் கண்களும் அவன் கண்களும், அந்த சூழலிலும் சல்லாப்பித்துக் கொண்டன. மதியின் கண்ண்களில், அந்த வேதனையிலும் ஒரு அசைக்க முடியாத உறுதி நிலைத்து இருந்தது. கஜன் அதில் ஒரு மின்னலை உணர்ந்தார். ஆனால் அவன் தன கடமையை மறக்கவில்லை. உடனடியாக அவர் அவளுடைய காயங்களை மெதுவாக சுத்தம் செய்தார்.

“உன் பேர் என்ன?” என்று மெதுவாகக் கேட்டான்.

“மதி,” அவள் வேதனையிலும் கிசுகிசுத்தாள்.

“நீ தோட்டாக்களையும் நம்பிக்கையையும் சுமந்து சென்றாயா?”

அவள் லேசாகச் சிரித்தாள். “தோட்டாவை விட நம்பிக்கையை அதிகமாக நான் என்றும் சுமப்பேன்" தள்ளாடும் நிலையிலும் திமிராகப் பதிலளித்தாள்.

அவன் சிகிச்சை அளிக்கும் பொழுது, அவனது கண்கள் எனோ அவளையே ரசித்துக்கொண்டு இருந்தது. அவள் சிரித்தாள்: "மூச்சுக்கே இடமில்லாத போர்க்களத்தில் நிஜமான காதல் முளைக்குமா?". ஆனால் அவன் மெதுவாக அவள் காதில் குனிந்து சொன்னான், "மீள முடியாத இடத்தில்தான் பாசம் பிறக்கிறது."

முதலில், மெளனத்தில் வந்த பார்வைகள். பின்னர் ஒரு புன்னகை. பின் சில வார்த்தைகள். உடைந்த தங்குமிடத்தில், இரவுகள் குண்டுகளால் சூழப்பட்டன, விடியல்கள் விரக்தியுடன் வந்தன. ஆனாலும் காதல் மலர்ந்தது - மென்மையாகவும் ரகசியமாகவும். அவர்கள் கிசுகிசுப்பாகப் பேசினார்கள், திருடப்பட்ட புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர்.

ஒரு நாள் அந்த தற்காலிக மருத்துவமனையின் சாலைகளில் அவ்வளவாக கூட்டம் இல்லை. நாலப்பக்கமும் குண்டுகள் முழங்கி கொண்டிருந்தது. தெருவெல்லாம் குருதி ஆறு ஓடி கொண்டிருந்தது. எட்டுத்திக்கும் மரண ஓலங்கள், ஆண்களின் அலறல்கள் பெண்களின் கதறல்கள். ஆர்ப்பரித்து ஓடிய இரத்த வெள்ளங்களில் பல்லாயிரக்கணக்கான சடலங்கள். மூக்கை பழுது பார்க்கும் பிணவாடைகள். கைக்கடிகாரங்கள் அணிந்திருந்த கைகள், திருமண மோதிரங்கள் அணிந்திருந்த விரல்கள், விலையுயர்ந்த காலணி அணிந்திருந்த கால்கள், பால்சுரந்த கொங்கைகள் என அங்குமிங்குமாக சிதறிகிடந்தது ஏராளம் ஏராளம். வான் மழை கூட பெய்ய மறுத்த அந்த நிமிடங்களில் வானூர்திகள் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தது அது ஒரு மூடர் கூட்டத்தின் இரத்த வெறி கொண்டாட்டம்.

அப்பொழுது மதி மருத்துவமனை கட்டிலில் படுத்திருந்தபடி, “நாம் வேறொரு காலத்தில் பிறந்திருந்தால்...” என்று அவள் தொடங்கினாள்.

“நீ இன்னும் என் வாழ்க்கையில் நுழைவாய்,” என்று அவன் பதிலை முடித்தான்.

வெளியே, அரசாங்கப் படைகள் தங்கள் பிடியை இறுக்கிக் கொண்டிருந்தன. உணவு லாரிகள் தடுக்கப்பட்டன. பொதுமக்கள் கடத்தப்பட்டனர். பெண்கள் துன்புறுத்தப்பட்டனர். வாழ்க்கைக்கு பாதுகாப்பான ஒரு இடமும் காணவில்லை, ஏன் தாயின் கருப்பை கூட பாதுகாப்பாக இல்லாத காலம் அது! அவள் அவனை ஒரு முறை கிண்டல் செய்தாள்:

“நான் போர்முனைக்குத் திரும்பிய பிறகு, உன் அன்பான இந்த நோயாளியை நீ மிஸ் பண்ணுவாயா?”

"நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன், உன்னுடன் இருக்க ஒரு டாக்டராக என்னிடம் உள்ள அனைத்தையும் நான் விட்டுவிடுவேன்,” என்று அவன் அதற்க்கு பதிலளித்தான்.

போரின் இருளில் அவர்களின் இதயங்கள் தொட்டன. மதிக்கு காயங்கள் மட்டுமல்ல, உள்ளத்தின் பயமும் இருந்தது. கஜன் அவற்றையெல்லாம் பொறுமையுடன் சிகிச்சையளித்தார். காயங்களை மட்டும் அல்லாது, உறவின் வெதுவெதுப்பையும் சேர்த்து அளித்தார்.

கட்டிலில் படுத்தபடி அங்கு சுற்றிலும் நடப்பவைகளை மெல்ல கவனித்து கொண்டிருந்தாள் அவள். அவளின் பதினாறு நாள் காதலுக்கு கிடைக்க போகும் பரிசை எண்ணி மட்டும் திக்குமுக்காடி போய் இருந்தாள்.

அவள் கண்களும் அவன் கண்களும், குண்டுகளின் சொற்ப நேர அமைதிகளுக்கிடையில், அந்த சொற்ப இடைவெளியில், சல்லாப்பித்து கொண்டிருந்தன. முகத்தில் வியர்வை துளிகள் வழிய இதழில் காதல் கசிந்து கொண்டிருந்தது. அவன் வலது கை அவள் கன்னங்களை வருடி கொண்டிருந்தது அவன் இடக்கையோ அவள் இடுப்பின் அளவினை அளந்து கொண்டிருந்தது. அவள் இரு கைகளும் அவன் பின்னந்தலையில் பின்னப்பட்டிருந்தது!

மக்கள் பட்டினியில் வாடினர். ஒரு தேயிலை சாயமும், ஒரு பசியும், ஒரு கண்ணீரும் மட்டும் இருந்தது. அரசுப் படைகள் அனுதாபம் காட்டவில்லை. உதவிகளைத் தடுத்தனர். பெண்கள் இழிவுகளுக்கு ஆளாகினர். இளைஞர்கள் காணாமல் போனார்கள்.

அந்த சூழலில் தான் அவள் இன்னும் மருத்துவ முகாமில் கொஞ்சம் பாதுகாப்பாக, முழுமையாக குணமடைவதற்காக இருந்தாள். அங்கே அவள் சிரிப்பும், கஜனின் இதயமும் நெருக்கமாக மாறியது. அவள் மேலும் அவனை ஈர்த்தாள். அது அவள் வசிகரமா அல்லது அவன் பலவீனமா என்று ஆராய்வது தேவையற்றது. ஏனேன்றால் அது காதலின் இலக்கண விதி.

அவனும் அவளும், கொஞ்சம் போர் ஓய்ந்த நேரத்தில், ஒரு சாயங்காலம் குளத்தங்கரைக்கு குளிப்பதற்காக சென்றார்கள். அங்கே குளக்கரைக்கு பக்கத்தில் 'பங்களா'வென்று ஒரு காலத்தில் மரியாதையாக கூறியது, இப்போது அந்தக் கட்டிடத்தின் கூரையில் பல துவாரங்கள் காணப்பட்டன. கீழ்த்தரை குண்டும் குழியுமாயிருந்தது. திண்ணைக்குப் பாதுகாப்பு" அல்லது "காவலாகவும் அலங்காரமாகவும் அமைந்திருந்த மூங்கில் வேலி பல இடங்களில் முறிந்து விழுந்து கிடந்தது. பங்களாதான் இப்படி என்றால், பங்களாவுக்கு எதிரில் இருந்த அந்த குளமும் களை குன்றிக் காணப்பட்டது. குளத்தில் தண்ணீருக்குக் குறைவில்லை. ஆனால் முன்னொரு காலத்தில் கரையோரமாக வளர்ந்திருந்த அலரிச் செடிகளையும் செம்பருத்திச் செடிகளையும் இப்போது காணவில்லை. குளத்தின் படித்துறை பாசி பிடித்தும் இடிந்தும் காணப்பட்டது. அவனும் அவளும் குளக்கரையில் இடிந்த படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டார்கள். சிறிது நேரம் மதி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேயிருந்தாள். சுற்றுப்புறத் தோற்றத்தில் இன்னும் ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதாக அவளுக்குத் தோன்றிக் கொண்டேயிருந்தது. பளிச்சென்று அது என்ன என்பது புலனாயிற்று. "கஜன் ! குளத்தின் மேலக்கரையில் இருந்த சவுக்கு மரத்தோப்பு எங்கே?" என்று கேட்டாள். "அதை வெட்டி விறகாக்கி விட்டார்கள்?" என்றான் கஜன்.

அவனின் வகிடு எடுத்து [முடியை பிரித்து] வழித்து வாரிய தலைமயிர், புருவம் உயர்த்திய சீரிய கண்கள், அளவான சிரிப்போடு இதழ்கள், மரண வாடையின் நெடி வீசும் அந்த சூழலிலும் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள் மதி. அவனும் அவளை ஏறெடுத்து பார்த்துக்கொண்டே இருந்தான். அவனை அவள் கண்கள் சுற்றி சுற்றி வந்தது. காதல் அனுக்கள் கசிந்து இருவரையும் கிளர்ச்சி அடையச் செய்தது.

'தடாகத்தில் மீனிரண்டு காமத்தில் தடுமாறி

தாமரைப்பூமீது விழுந்தனவோ?!

இதைக்கண்ட வேகத்தில், பிரம்மனும் மோகத்தில்

படைத்திட்ட பாகந்தான் உன் கண்களோ?!

காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கிரு

கால்கள் முளைத்ததென்று நடை போட்டாள்..

ஜதி என்னும் மழையினிலே

ரதியிவள் நனைந்திடவே,

அதில் பரதம்தான் துளிர்விட்டு

பூப்போலப் பூத்தாட..

மனமெங்கும் மணம் வீசுது – எந்தன்

மனமெங்கும் மணம் வீசுது'

["ஜதி என்னும் மழையில்" அல்லது "இசையின் மழையில்"]

என்று அவன் முணுமுணுத்துக்கொண்டு இருந்தான்.

என்றாலும் அவளுக்கு காதலை விட கடமை பெரிதாக இருந்தது. "நான் இனி உடனடியாக போர்க்கழகத்துக்கு திரும்பணும், கஜன்." என்றாள் மதி. ஆனால் கஜனோ: "மதி, நீயில்லாமல் இந்த முகாமே வீணாகிவிடும். என் வலிமை, என் நம்பிக்கை எல்லாம் நீதான் " என்றான். "நான் போராளி. என் காதலுக்கும் எல்லை இருக்கு டாக்டர்." அவள் மறுத்தாள்

அவர்களின் அந்த குறுகிய கால உறவு இருவருக்கும் சங்க இலக்கியக் காதலை நினைவுபடுத்தியது. "அர்ஜுனனின் மகன் அபிமன்யு விராடனின் மகள் உத்தராவை மணக்கிறான் என்றாலும், அபிமன்யு போரில் இறப்பதால், அவர்களின் காதல் விரைவில் முடிவடைந்து விட்டது, டாக்டர் கஜன், நானும் ஒரு போராளி, அது தான் தூர விலக விரும்புகிறேன். இங்கே உங்கள் முன் இருந்தால், ஒரு வேளை இன்று மாதிரி நான் தடுமாறிவிடுவேன். நீங்கள் வாழவேண்டியவர், என்னை விட்டுவிடுங்கள்" என்றாள் மதி. ஆனால் கஜன் குழம்பி இருந்தான்.

எத்திறத் தாள்நின் இளங்கொடி? உரைஎன

குருகுபெயர்க் குன்றம் கொன்றோன் அன்னநின்

முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால்

பருகாள் ஆயின்இப் பைந்தொடி நங்கை

ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி

காமற் கடந்த வாய்மையள் என்றே

தூமலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப (5: 12-18)

அந்த குழப்பத்தில் அவனுக்கு உதயகுமாரன், மணிமேகலை ஞாபகம் வந்தது. மணிமேகலை தவநெறி புகுந்தவள் என்பதால், அதற்கு இடையூறாக இருக்கும் உதயகுமாரனின் காதலை, அவனின் தகுதி செல்வாக்கு போன்றவற்றைக்கூட பார்க்காமல், அவனை, அவனின் காதலை தூக்கி எறிந்தாள். இன்று மதியும் அப்படியே!

"உன்னை சொல்லி குற்றமில்லை

என்னை சொல்லி குற்றமில்லை

காலம் செய்த கோலமடி

கடவுள் செய்த குற்றமடி

மயங்க வைத்த கன்னியர்க்கு

மணம் முடிக்க இதயமில்லை

நினைக்க வைத்த கடவுளுக்கு

முடித்து வைக்க நேரமில்லை"

அவன் மனம் மௌனமாக பாடியது! அவளுடைய இறுதிக் காலைப் பொழுதில், கஜன் அவளுக்கு பாதி பிஸ்கட்டை - அவன் பாக்கெட்டில் இருந்த கடைசி பிஸ்கட்டையும் கொடுத்தான். மற்றும் படி உப்பில்லா காஞ்சி இன்னும் அங்கு இருந்துகொண்டு தான் இருந்தது.

“உன்னுடைய மீட்பு சிற்றுண்டி,” என்று அவன் நகைச்சுவையாகச் சொன்னான். அவள் முதல் முறையாக - முழுமையாக, அழகாக - சிரித்தாள். அந்த நொடியே வான்வெடி தாக்கியது. குண்டு விழுந்தது. பூமி பிளந்தது. மதி சிதைந்தாள். புகை நீங்கியதும், எஞ்சியிருப்பது சிவப்பு மண், இடிபாடுகள் மற்றும் அமைதியின் கசப்பான சுவை மட்டுமே. மதி போய்விட்டாள். கஜன் மட்டும் உயிரோடு!

கஜன் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார், ஆனால் மீண்டும் ஒருபோதும் முழுமையாக இல்லை. அவளுடைய இரத்தம் அவன் நினைவுகளைக் கறைபடுத்தியது, அவளுடைய சிரிப்பு ஒவ்வொரு அமைதியான மணி நேரத்திலும் எதிரொலித்தது.

அவர்களின் காதல் இறக்கவில்லை.

அமைதியிலும், மண்ணிலும், பல கதைகளைப் புதைத்த ஒரு போரின் வடுக்களிலும் அது நிலைத்திருந்தது!!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

........................................................................................

சிறுகதை - 184 / 'குண்டுகளின் மத்தியில் ஒரு காதல்' [200 வார்த்தைகளில்]

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்காலத்தில், முல்லைத்தீவு சிதைந்த நிலமாக இருந்தது — பட்டினி, பீரங்கி தாக்குதல்கள், பயம் நிரம்பிய நாட்கள். அந்தப் பூமியில் காயமடைந்த இளம் பெண் போராளி மதி, ஒரு தற்காலிக மருத்துவமனைக்குள் தடுமாறி நுழைந்தாள்.

அங்கே, 28 வயதான டாக்டர் கஜன், குறைந்த மருந்துகளுடனும் துடிப்பான மனதுடனும் உயிர்களை காப்பாற்றிக் கொண்டிருந்தார். மதியின் கண்களில் அவர் வீரத்தையும் வேதனையையும் பார்த்தார். மௌனத்தில் ஏதோ மின்னி இருவரையும் ஈர்த்தது. அதில் ஒரு காதல் தீபம் ஒளிர்ந்தது.

இரவும் பகலும் வெடிப்புகளால் அச்சமுற்றிருந்தன. ஆனால், காயங்களுக்கு மருந்து போடுவதற்கும் மரணத்தைத் தவிர்ப்பதற்கும் இடையில், அவர்கள் திருடப்பட்ட அரவணைப்பு தருணங்களை மறக்கவில்லை. ஒரு விடியற்காலை, பிஸ்கட்டை அவளிடம் ஒப்படைத்த அந்த நிமிடத்தில், வான்வழித் தாக்குதல் பூமியையே பிளந்தது. புகை நீங்கியபோது, இரத்தத்தில் மதியின் உடல் துண்டு துண்டாக கிடந்தது.

கஜன் உயிர் தப்பினார் — அந்த காதல் மரணிக்கவில்லை — அது மண்ணில், மெளனத்தில், அவன் விழிகளில் வாழ்ந்துகொண்டே இருந்தது!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

துளி/DROP: 1830 [சிறுகதை - 184 / 'குண்டுகளின் மத்தியில் ஒரு காதல்']

/ எனது அறிவார்ந்த தேடல்: 1248

https://www.facebook.com/groups/978753388866632/posts/30719807144334530/?

"என் இனமே என் சனமே” (செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழிகளில் புதைந்த வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு கற்பனைச் சிறுகதை)

3 months 2 weeks ago

"என் இனமே என் சனமே”

(செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழிகளில் புதைந்த வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு கற்பனைச் சிறுகதை)

மேல் வானம் தாழ்வாகத் தொங்கியது, அதுவும் துக்கம் அனுசரிப்பது போல. சிவப்பு பூமியின் அடியில், நீண்ட நேரம் அலறல்கள், பிரார்த்தனைகள் மற்றும் கனவுகளுடன் மங்கின. முப்பத்தி மூன்றாவது மண்டை ஓடு மெதுவாகத் தோண்டி எடுக்கப்பட்டதால், இந்த வாரம் அமைதி மீண்டும் உடைந்தது. அதன் அருகில் - ஒரு சிறு குழந்தையின் பள்ளிப் பை, காலத்தால் மங்கிப்போனது, ஆனால் அதன் இருப்பு பல கதைகளைச் சொல்லப்போகுது. மறக்கப்பட்ட ஒரு தாலாட்டை உச்சரிப்பது போல, தமிழ் எழுத்துக்கள் அதன் குறுக்கே நடனமாடின.

அந்தக் செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அருகே, கூடியிருந்த பார்வையாளர்களிடையே, ஐம்பது அகவை மதிக்கத்தக்க அனந்தி என்ற பெண், 1996 ஆம் ஆண்டு ஒரு சோதனைச் சாவடியில் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காணாமல் போன தனது தம்பி சிவகுமாரின் புகைப்படத்தை கையில் ஏந்தி நின்றாள். "கண்ணா, நீ அழுதாயா? உன்னைப் பேச அனுமதித்தார்களா? நீ இறந்தபோது நீ தனியாக இருந்தாயா?" இப்படியான அவளின் மனஉளைச்சலுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை, அவள் பதில்களை எதிர்பார்க்கவும் இல்லை.

ஆனால் இன்று, ஏதோ மாற்றம் ஏற்பட்டது. குழந்தையின் எலும்புகளுக்கு அருகில் ஒரு சிறிய கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டது. அவளுடைய இதயம் பதைபதைத்தது. அவள் கண்கள் கலங்கின. ஒருகாலத்தில் தம்பி அந்தக் கண்ணாடியை, பக்கத்து வீட்டுக்காரரின் குழந்தைக்கு வாங்க உதவியிருந்தார் என்பது, அவளுக்குத் திடீரென நினைவில் வந்தது.

1948-இல் சுதந்திரம் வந்தபின் தொடங்கியது – ‘சிங்களமொழி மட்டும்’, கல்வித் தரப்படுத்தல், நில ஆக்கிரமிப்பு, மற்றும் சிறைகள் இல்லாத கொலைகள்!

அதன் உச்சியில் – 1996: கிருஷாந்தி குமாரசுவாமி. ஒரு பள்ளிச்சிறுமி. செம்மணி இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது. தாயார், சகோதரர், உறவினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது வரை முறையான விசாரணை அல்லது அதற்கு ஏற்ற நீதி இல்லை. எதோ ஆரம்பித்தார்கள். தீர்ப்பளித்தார்கள். கிடங்கில் போட்டார்கள். புண்ணிய புத்த பூமியில் புத்தரின் முறையான போதனையைக் கேட்க ஒருவரும் இல்லை. அங்கொன்று இங்கொன்றாக பலர் பரந்து இருக்கிறார்கள். ஆனால், மௌனமாக? ஏன் புத்த சிலைகள் கூட ஆக்கிரமிப்பில் தான் ஈடுபடுகிறது! அவர்களின் உடல்கள் செம்மணியில்த் தான் புதைக்கப்பட்டன. அவள் எண்ணங்கள் பின்னோக்கி நகர்ந்தன.

இன்று, தடயவியல் நிபுணர் எச்சங்களின் மீது மண்டியிட்டு எதோ தேடுகிறார். அவருடன், கூட இருந்த தொல்பொருள் பேராசிரியர் மண் வடிவங்களை ஆய்வு செய்கிறார். மேலும் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அறிவியலைப் பயன்படுத்தி திகிலை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அவ்வளவு மட்டும் தான். அது மட்டும் தான் அவர்களால் முடியும் !

இவை சாதாரண மரணங்கள் அல்ல. இவை போரில் உயிரிழந்தவை அல்ல. இவர்கள் பொதுமக்கள் - பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், கடைக்காரர்கள் - கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்கள். மீட்கப்பட்ட எலும்புகள், பழிவாங்கலைப் பற்றி கிசுகிசுக்கவில்லை ஆனால் அவை சாட்சியைக் கோருகின்றன. அவை நீதியைக் கேட்கின்றன. ஆனந்திக்கு அவை தன்னிடம் கேட்பது போலவே இருந்தது!

அவள் செம்மணியில் கூடியது துக்கம் பின்பற்ற மட்டுமல்ல, உண்மை அறிந்து நினைவு கூருவதற்காகவும். மண்ணில் உள்ள எலும்புகள் வெறும் அட்டூழியத்தின் சான்றுகள் மட்டுமல்ல - அவை தமிழ் தேசத்தின் ஆன்மாவின் துண்டுகள் என்பதை எடுத்துக் காட்டவுமே!

அவள் அந்தக் கண்ணாடியைப் பற்றி சொல்ல நினைத்தாள், ஆனால் கேட்கத்தான் அதிகாரிகள் இல்லை. அங்கு இருந்த படை வீரர்களும் அரச அதிகாரிகளும் அவளை, அகழாய்வு செய்பவர்களிடமோ, அதை மேற்பார்வையிடம் நீதிபதியிடமோ செல்ல அனுமதிக்கவில்லை. ஆனால், அவளை காவல் நிலையத்தில் வந்து சொல்லும்படி கட்டளையிட்டனர்.

காவல் நிலையத்தில் எத்தனை முறைப்பாடுகள், சான்றுகள் தூங்கிக் கிடக்கின்றன என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். அது அவளின் அனுபவம் கூட.

அவள் அன்று இரவே மக்களுக்கு தன் இணையத் தளத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்தாள்.

என் இனமே என் சனமே …

நம்மை அழிக்க முயன்றவர்கள், நம்மை மறக்கச் சொல்லுகிறார்கள்.

ஆனால், இந்தக் குழந்தைகளின் எலும்புகள் பேசுகின்றன. கண்ணாடியும் பாடசாலைப் பையும் சத்தமில்லா சாட்சிகள்!

சம தருமம் இல்லா நீதியின் முகத்தை, நீதி மன்றமில்லாத இராணுவ கெடுபிடியை, இன அழிப்பின் பிசாசை, இந்த செம்மண் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!

நாம் அழக்கூடாது. நாம் பேச வேண்டும். நாம் பதிவு செய்ய வேண்டும்.

செம்மண் நாம் உறங்கும் இடமல்ல — நம் சத்தியத்துக்கான மன்றம்!

அங்கு புதைந்துள்ள ஒவ்வொரு எலும்பும், “நீதி” என்றொரு குரல்!

நீதி ஒரு நாள் பிறக்கும். அந்த நாளுக்காக — நாம் மறவாமலிருப்பதே நாம் செய்யும் பெரிய போராட்டம்!

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]


"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 10

3 months 2 weeks ago

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 10

[This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.]

பகுதி: 10 / 'மே பௌர்ணமி நாளில் விஜயன் இலங்கையில் தரையிறங்க முடியுமா?'

புத்தர் ஒரு முழு மதி நாளில் மே மாதம் இறந்ததாக நம்பப் படுகிறது. வடகிழக்கு பருவமழை [The Northeast monsoon] நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி காலங்களில் பொதுவாக செயலில் இருக்கும். ஆனால், மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், இலங்கையை நோக்கி பயணிக்க துணையாக எந்த பருவக்காற்றும் [Monsoonal wind] இருக்காது. எனவே கப்பல் காற்று துணை இல்லாமல், சும்மா கடலில் மிதக்கத் தான் விடமுடியும் [as the ship was left to drift], அப்படி என்றால், நீரிழப்பு மற்றும் பட்டினியால் [de-hydration and starvation] அவர்கள் இறக்கவேண்டிய சூழ்நிலைதான் இருந்து இருக்கும். திரும்பியும் இந்தியாவின் மேற்கு கடற்கரையை உடனடியாக அணுகவும் முடியாது. காரணம் அவர்கள் தென்மேற்கு பருவக்காற்றுக்கு [South-West Monsoonal wind] காத்திருக்க வேண்டும். பருவக் காற்று ஒரு ஆண்டு நிகழ்வாகும். [Monsoonal wind changes are annual events] தென்மேற்கு பருவக்காற்று அவர்களை மீண்டும், ஆரம்பித்த இடத்துக்கே [இந்தியா] கொண்டு போகும். எனவே, விஜயன் புத்தர் பரிநிர்வாணம் (பொதுவாக பரிநிர்வாணம் என்ற சொல் உடல் இறப்பிற்கு பின்னர் பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு பிறவா நிலையை அடைவதே ஆகும் / parinirvana) அடைந்த மே மாத பௌர்ணமி தினத்தில் கட்டாயம் இலங்கையை அடைந்து இருக்க முடியாது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் படுகிறது.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நம்பிக்கை வேறு, அறிவியல் வேறு. எவரின் நம்பிக்கையையும் நான் திறனாய்வு செய்யவில்லை, ஆனால் அறிவியல் ரீதியாக அதற்கான உண்மையான வாய்ப்பு உண்டா இல்லையா என்று மட்டும் அலசி ஆராய்ந்தேன்! தீபவம்சத்தின் 17 ஆவது பாடத்தின் தொடக்கத்தில், இலங்கை ஒரு நீல் சதுர வடிவானது [rectangular shape] என்று குறிப்பிடுகிறது. அதாவது, இலங்கை எனும் சிறந்த தீவு முப்பத்திரண்டு யோசனை நீளமும், பதினெட்டு யோசனை அகலமும் கொண்டது, அதன் சுற்றுப்பாதை நூறு யோசனை; அது கடலாலும், ஒரு பெரிய புதையல் சுரங்கத்தாலும் சூழப்பட்டுள்ளது. அது ஆறுகள், ஏரிகள், மலைகள் மற்றும் காடுகளைக் கொண்டுள்ளது என்கிறது. இங்கு யோசனை என்பது பழங்காலத்தில் தூரத்தை அளக்க பயன்படுத்தப் பட்ட ஒரு வேத கால அலகாகும். இதன் சரியான அளவு சரியாகத் தெரியவில்லை. அறிஞர்களிடையேக் கருத்து வேறுபாடே நிலவுகிறது. இது 4 மைல்களிலிருந்து 9 மைல் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எனவே தீபவம்சத்தை எழுதியவர்களுக்கு அனுராதபுரத்தின் வடக்கு பக்கத்தைப் பற்றி தெரியாது அல்லது அதைப் பற்றி அறிவு இல்லை என்று கருதலாம். இணைக்கப்பட்ட இலங்கை படத்தில், அனுராதபுரத்தில் இருந்து இலங்கையின் வடக்கு பக்கம் குறுகிப்போவதை காண்க. அதை, கீழே உள்ள இலங்கை வரைபடத்தில், தடித்த கோட்டில் குறித்து காட்டப்பட்டுள்ளது.

இதுவரை, விஜயனின் வருகை, அவரது தோழர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவை விவாதிக்கப்பட்டது. விஜயனைத் தொடர்ந்து, விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் தொடரும்.

Part: 10 / 'Can Vijaya land in Sri Lanka on May full moon day?'

The Buddha died on a full moon day in the month of May. The Northeast monsoon is active in the months of November, December, January and February, see the Lanka map given below. There is no prevailing Monsoonal wind during March, April and May to assist them towards Lanka, and they would have died of de-hydration and starvation, as the ship was left to drift. There is no way that they could have turned around to reach the Western coast of India, to the ports of Suppara and Bharukaccha, as they had to wait for the South-West Monsoonal wind. Monsoonal wind changes are annual events. The South-West Monsoon would have brought them back to the place where they started. The story of Vijaya is a hoax and it is invented by the monks for their wellbeing, and to erase the trace of the aboriginal inhabitants of Lanka.

The starting verse of the chapter 17 of the Dipavamsa describes Lanka as rectangular shape country. The author or the authors of the Dipavamsa never had the knowledge of the country North of Anuradhapura. See the Lanka map below with the narrowing landscape North of Anuradhapura with thicker outline. Arrival of Vijaya, his companions, and its historical relevance have been discussed so far, and the narrative about the consequent kings and the related affairs will follow.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 11 தொடரும் / Will Follow


Checked
Tue, 11/04/2025 - 20:48
எங்கள் மண் Latest Topics
Subscribe to எங்கள் மண் feed