எங்கள் மண்

அல்பிரட் துரையப்பா முதல் அற்புதன் வரை.

6 hours 12 minutes ago

                  தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.

                  எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.

                 பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

               அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.

            

               அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.

                வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.
 

பாகம்1

 

 

நெடுந்தீவில் நெடுவூர்த் திருவிழா ஆகஸ்ட் 4 ஆரம்பம்!

5 days 13 hours ago
23 MAR, 2024 | 04:36 PM
image

உலகம் முழுவதும் பரந்து வாழும் நெடுந்தீவின் உறவுகளை ஒன்றிணைத்து பிரதேச அபிவிருத்தியினையும் உள்ளூரில் வாழும் உறவுகளினதும் வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கில் நெடுந்தீவில் எதிர்வரும் ஆகஸ்ட் 4 முதல் 10 வரை நெடுவூர்த் திருவிழா நடைபெறவுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நெடுவூர்த் திருவிழாவின் ஏற்பாட்டாளரும் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கிருபாகரன் தர்மலிங்கம் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 

கடந்து போன இனப்போரினாலும் பொருளியல் போரினாலும் சிதறுண்டு போனோரெல்லாம் உலகின் பல பாகங்களிலும் வெளி மாவட்டங்களிலும் பரந்து வாழும் இச்சூழலில் எமது தாய்மண் உறவுகள் ஒன்றிணைந்து கடந்த கால வாழ்வியலை மகிழ்வோடு மீட்டுப் பார்க்கும் அழகிய தருணமாக இந்த நெடுவூர்த் திருவிழா அமையும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

இவ்விழாவில் பல்துறை சார்ந்த நிகழ்வுகளை உறவுகளின் பங்களிப்புடன் நடத்துவதற்கு நாம் எண்ணியுள்ளோம். 

இதன்மூலம் நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தியினையும் உள்ளூரில் வாழும் உறவுகளினது வாழ்வியலையும் மேம்படுத்துவதே எமது நோக்கம் என்றார்.

https://www.virakesari.lk/article/179517

நான் கண்ட யாழ்ப்பாணம்!!

2 weeks 6 days ago

spacer.png

spacer.png

spacer.png

நான் கண்ட யாழ்ப்பாணம்!!

40 வருடங்களின் பின்பு ஒரு மாத சுற்றுலாவாக இலங்கை சென்றேன். நான் 75, 80ளில் பார்த்த அதே கோலத்தில் தான் யாழ்ப்பாணம் இன்றும் இருக்கின்றது. கார்பெட் ரோட்டுக்களையும் வீடுகளின் வாசல் கேட்டுக்களையும் தவிர பெரிய மாற்றம் ஒன்றும் நடந்து விடவில்லை.

உலக நகர வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது யாழ்ப்பாணம் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இருக்கின்றது. அங்கே  இருப்பவர்களுக்கு அதன் தாக்கம் தெரியாது உலக நகரங்களை பார்த்த ஒருவருக்கு இதன் தாக்கம் நன்கு தெரியும்.

யாழ்ப்பாண நகரத்து கடைகளில் முன்னால் உள்ள குப்பைகளும் அசுத்தமும் யாழ் மாநகர சபையின் செயல் திறன் எப்படி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டியது. மட்டக்களப்பு நகரம் யாழ்ப்பாண நகரத்தை விட சுத்தம் சுகாதாரத்தில் மேலோங்கி இருந்ததை அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிட அழகும் தனியார் பேருந்துகளின் அழகும் அலங்கோலமாக இருந்தது. ஆபிரிக்க நாடுகளைத் தவிர மற்றய நாடுகளில் தனியார் பஸ்களும் அரசு பஸ்க்களும் போட்டி போட்டு வீதிகளில் ஓடுவதை பார்க்க முடிவதில்லை.

அரசு பேருந்துகளும் டிப்பர் வாகனங்களும் ரோட்டில் வரும்பொழுது எமன் எதிரே வருவது போல எண்ணம் தோன்றுகிறது. அவ்வளவு ஆபத்து நிறைந்ததாக வீதிகளில் ஓடுவதை நான் நேரடியாக பார்த்தேன். அரசு பேருந்துகள் போதையில் ஓட்டுபவர்களை விட மிகவும் ஆபத்தான முறையில் ஓட்டுகிறார்கள் என்பதை எல்லா இடங்களிலும் அவதானிக்க முடிந்தது.

ராணுவ முகாங்கள் எல்லா இடங்களிலும் அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. பூங்காக்கள் போல ராணுவ முகாங்கள் இருப்பது மிகவும் அழகாக இருக்கிறது. ஆனாலும் இவ்வளவு ராணுவ முகாங்கள் வட பகுதிக்கு தேவையா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.

பலாலியில் ஒரு வீதி நேரடியாக ராணுவமுகாமுக்கே சென்றுவிட்டது. பின்பு நான் சுதாஹரித்துக் கொண்டு பாதையை மாற்றினேன். வீதி பிரியும் இடத்தில் எந்தவித அடையாளமும் இல்லாததால் நான் ராணுவ முகாமுக்குள் சென்று விட்டேன். ஆனாலும் அங்கே காவலுக்கு நின்றவர்கள் எந்தவித பதட்டப்படவும் இல்லை. புண்முகத்துடன் நின்றார்கள். நானும் அவர்களுக்கு கைகாட்டி விட்டு திரும்பி வேறு பாதையால் சென்றுவிட்டேன். அவர்கள் எல்லோரும் தங்கள் பாட்டில் தங்கள் கடமையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களுடன் எந்தவித பிரச்சனையோ அல்லது சோதனைகளோ நடைபெறுவதாக தெரியவில்லை. ஆனாலும் ராணுவ முகாங்கள் அதிகமாகத்தான் இருக்கின்றது.

வன்னியில் காடுகள் சார்ந்த பல பகுதிகளில் ராணுவ முகாங்கள் மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த சிறிய நாட்டுக்கு இவ்வளவு ராணுவ முகாங்கள் தேவையா என்று எனது மனதுக்குள் கேள்வி எழுந்தது.

உலகம் மாறிவிட்டது, உணவு வழங்கும் முறைகள் உணவு உண்ணும் முறைகள் எல்லாம் மாறிவிட்டது. ஆனாலும் யாழ்ப்பானத்தில் உள்ள எந்த ஒரு உணவகத்திலும் அல்லது டீக்கடையிலோ பேப்பர் கப்பில் ஒரு காப்பியையோ அல்லது டீயையோ ( Take away ) பெற்றுக் கொள்ள முடியவில்லை. இது  நல்ல சுகாதார தரத்துக்கு இன்னும் இவர்கள் முன்னேறவில்லை என்பதை காட்டியது. அதனால் நான் எந்த ஒரு கடையிலும் டீயோ காப்பியோ குடிக்கவில்லை. காரணம் சாதாரண கடைகளில் டீ கப்பை சுத்தம் செய்யும் முறை சுகாதாரத்துக்கு ஏற்ற முறையல்ல.

யாழ்ப்பாணத்தில் யாரும் முகம் பார்த்து புன்னகைத்துக் கொள்வதில்லை. ஒருவரை ஒருவர் முறைத்து பார்ப்பது போலத்தான் பார்த்துக் கொள்கிறார்கள். காரணம் ஒருவரை ஒருவர் தெரியாததாகவும் இருக்கலாம் அல்லது பயமாகவும் இருக்கலாம் அல்லது இவரை பார்த்தால் தனக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்றும் எண்ணலாம் எப்படி இருந்தாலும் மகிழ்ச்சி இல்லாதவர்களாகவும் மற்றையவர்களை பார்த்து புன்னகைக்க தெரியாதவர்களாகவும் இருப்பது கவலையாக இருந்தது.

உண்மை உரைகல்

பெண்கள் பாடிய தமிழீழ எழுச்சிப் பாடல்களில் வெளிப்படும் அக உணர்வுகளின் சிறப்பு | தொடர்

4 weeks ago

----> பிறேமலதா பஞ்சாட்சரம்

 

 

ஈழப்போராட்டம் என்பது தமிழின வரலாற்றில் ஒப்பற்ற உன்னதமான உயிர் தியாகங்களும் பல நூற்றாண்டு காலங்களின் பின்னர் தமிழ்ர்களின் வீரத்தையும் மாற்றான் முன் மண்டியிடாத மானத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டியதோடு மரபுவழியாக தமிழினம் பெண்ணுக்கு வழங்கி நின்ற பெருமையை நிலைநாட்டிய பெருமையையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த குமரிக்கண்ட நாகரிகமும் தமிழர் நாகரீகமென நிறுவவப்பட்ட சிந்துவெளி நாகரிகமும் தாய்வழி சமூகமாகவே உள்ளன என்பது தொல்லியல் ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்டுள்ளன. பெண்ணை பெருமைப் படுத்திய குமரிக்கண்ட எஞ்சிய சான்றாக இன்றும் நிலைத்து நிற்பது உலகின் மிகப் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்றான மதுரை மாநகரில் பாண்டிய மன்னர்களால் (கடைச்சங்ககாலத்தில் ) எழுப்பட்ட மீனாட்சி அம்மன் ஆலயம் ஆகும்.பாண்டிய மன்னனுக்கு ஒரே மகளாக பிறந்து ஆண்களைப் போன்று போர்க்கலையில் சிறந்து விளக்கிய அங்கயற்கண்ணியான மீனாட்சிக்கு எழுப்பப்பட்டுள்ள இவ்வாலயம் இற்றைக்கு 2500 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. தமிழர்களின் பண்பாட்டுடன் பின்னிப்பிணைந்த பெண்களை பெருமைப்படுத்தும் நிகழ்வுகள் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களிலும் பண்டைய தமிழக கல்வெட்டுகளிலும் பரவலாக காணக்கிடக்கின்றன .

தமிழீழ விடுதலைப் போராட்டமும் பெண்களும்

தமிழீழ விடுதலைப் போராட்டமும் பிற்கால சோழப் பேரரசைப் (கி.பி. 10-12 ஆம் நூற்றாண்டுகள் ) போன்று அரசியல், நிர்வாகம், ஆட்சிமுறை, நீதிவழங்கல் , கலை இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளிலும் பெண்களின் பங்களிப்புக்கு இடம் கொடுத்ததோடன்றி சோழப் பேரரசு சாதிக்காத வகையில் ஆண்களுக்கு சரிநிகராக பெண்களும் போர்க்களத்தில் போர்புரியவும் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இரும்பனை மனமொத்த கரும்புலிகளாகி எதிரியின் இலக்குகளை தகர்த்து சாதனை படைக்கவும் களமமைத்துக் கொடுத்தது.

பொதுவாக ஒரு நாட்டின் இலக்கியத்துறை வளர்ச்சியடைகின்ற காலம் அந்நாட்டில் நிலவும் அமைதியான சூழ்நிலையைப் பொறுத்தே இடம்பெறுகின்றது. உதாரணமாக பிற்கால சோழப்பேரசு விரிவடைந்து சோழ நாட்டில் அமைதி சூழ்ந்திருந்த காலப்பகுதியிலேயே இலக்கியத் துறை மிகவும் செழுமையடைந்துள்ளது. அனால் ஈழத்தில் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுதே இலக்கியத்துறையும் வளர்ச்சி கண்டுள்ளமையானது தமிழ் மொழியின் செவ்வியல் காலமான (classical age ) சங்க காலத்தின் போர் இலக்கியங்கள் போன்று தமிழினத்தின் தற்கால இலக்கியத் துறைக்கு பங்களிப்புச் செய்துள்ளமையை மறுதலிக்க முடியாது .

உலகில் உள்ள ஏனைய விடுதலைப்போராட்ட வரலாற்றிலில்லாதவாறு ஈழப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பொழுதே விடுதலைப்புலிகள் தமது அரசியல், போரியல் , பொருளாதார,தொழிநுட்ப, மருத்துவ துறைகளைப் போன்று கலைகளையும் வளர்தெடுத்தனர். கலைகளையும் கலாச்சாரத்தையும் வளர்க்கும் நோக்குடன் கலைபண்பாட்டுக் கழகத்தை நிறுவி அதனூடாக இயல், இசை , நாடகம் போன்ற முத்தமிழின் வளர்ச்சிக்காக ஆவன செய்திருந்தார்கள். குறிப்பாக விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக்கழகத்தினரால் 1991, 1992 ஆம் ஆண்டுகளில் முத்தமிழ் விழாக்களையும் 1995 இல் நல்லூரில் மூன்று நாட்கருத்தரங்கினையும் 1998 இல் புதுக்குடியிருப்பில் இருநாட் கருத்தரங்கினையும் 2003 இல் திருகோணமலையில் இசை, நடன, நாடக விழாவினையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம் நாடாத்தியிருந்தமையை குறிப்பிடலாம்.

போர்க்கால இலக்கியத்துறை வளர்ச்சியில் தமிழீழ பெண்களின் பங்களிப்பு

போர்க்கால இலக்கியதுறைப் பங்களிப்புக்கு தமிழீழ பெண்களின் பங்களிப்பும் முக்கியமானது. கவிதைகள், சிறுகதைகள் போன்றனவற்றில் மட்டுமன்றி தமிழீழ எழுச்சிப் பாடல்களிலும் பெண்களின் பங்களிப்பு கணிசமாக உள்ளது.

குறிப்பிடும்படியாக1985ல் சென்னை தமிழியல் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்த “அக்கரைக்குப் போன அம்மாவுக்கு” என்ற கவிதைத்தொகுதி 1980-1985 ஆண்டுகளுக்கிடைப்பட்ட ஈழத்தமிழரின் அவல வாழ்வை பதிவு செய்திருக்கின்றது .1991 ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட ஆகாய கடல் வெளிச் சமரில் வீர காவியமான கப்டன் வானதி சிறந்த போராளிக் கவிஞர். விடுதலைப்புலிகனின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த தமிழினி அவர்கள் சிறந்த கவிஞரும் சிறுகதை எழுத்தாளருமாவார். 2004இல் வெளியிடப்பட்ட வன்னி மண்ணின் இரணையூர் பாலசுதர்சினி அவர்களின் “அனுபவ வலிகள்” என்ற கவிதைத் தொகுதி போர்கால அனுபவங்களின் வலிகளை வடித்துள்ளது.

புலிகளின்குரல் வானொலியில் பணியாற்றிய போராளி கலைஞரான தமிழ்க்கவி அவர்கள் நாடகத்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியமையையும் வெற்றிச்செல்வி, கஸ்தூரி , மலைமகள் தமிழவள் , அம்புலி போன்ற போராளிக் கலைஞர்கள் தமிழீழ இலக்கியத துறைக்கு பங்களிப்பு செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கவிதைகள் , சிறுகதைகள் , நாடகங்கள் போலல்லாது ஈழப்போராட்ட இலக்கியத்துறை வளர்ச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களின் பங்களிப்பு மிகக்கணிசமானது. இப் பாடல்கள் தனியே போராட்டத்தைப் பற்றி மட்டுமல்லாது, தமிழீழ தேசியத் தலைவர், மாவீரர்கள், போராளிகள், போர்க்கள சாதனைகள், தமிழின வரலாறு , தமிழர்களின் வீரம், பாரம்பரியம், தமிழர் தேசம் , இனவழிப்பு , போர்தந்த வடுக்கள், மாவீரரர்கள் போன்ற பல்வேறு விடையங்களை பாடுபொருட்களாக கொண்டு பாடப்பட்டுள்ளன. இப்பாடல்கள் மக்களுக்கு விடுதலை உணர்வினை ஊட்டி விடுதலைப் போராட்டத்தில் இணைந்து செயல்பட உந்துசக்தியாக இருந்துள்ளதுடன் சிறந்த போர்க்கால இலக்கியங்களாகவும் திகழ்வதற்கு அவை இசைவடிவில் கேட்போரின் இதயத்தை தொட்டுவிடும் அழகான ஆழமான கருத்துக்களையும் அழகிய மொழி நடையையும் கொண்டுள்ளமையும் காரணிகள் எனலாம்.

ஆரம்பகாலத்தில் விடுதலைப்புலிகளின் எழுச்சிப் பாடல்கள் தமிழகத்த்திலிருந்து வெளிவந்தன. அரம்பகால தமிழீ கவிஞர்களான புதுவை இரத்தினதுரை, காசி ஆனந்தன், வாஞ்சிநாதன் போன்ற கவிஞர்களும், கவிஞர் இன்குலாப் போன்ற தமிழகத்துக் கவிஞர்களும் எழுதியிருந்தார்கள். தேனிசை செல்லப்பா , டி.எம். செளந்தரராஜன், மனோ, மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், பி.சுசீலா, வாணிஜெயராம், சுவர்ணலதா போன்ற பல பாடகர்கள் பாடியிருந்தார்கள். 1990 களிலில் தமிழீழத்தில் இருந்தே இப்பாடல்கள் வெளிவரத் தொடங்கின. தமிழீழ தேசியக் கவிஞரான புதுவை இரத்தினதுரை, மாமனிதர் கவிஞர் நாவண்ணன் , மேஜர் சிட்டு, தமிழவள், உதயலட்சுமி, மார்ஷல், செ.புரட்சிகா, மலைமகள் போன்ற கவிஞர்களின் உருவாக்கத்திலும் எஸ்.ஜி.சாந்தன், மேஜர் சிட்டு , ஜெயா சுகுமார், வசீகரன், திருமலைச்சந்திரன், நிரோஜன், திருமதி பார்வதி சிவபாதம், மணிமொழி, தவமலர், பிறின்சி, சந்திரமோகன், இசையரசன், அருணா, கானகி, தவமலர், மாங்கனி, பிரியதர்சினி போன்ற பாடகர்களின் பங்களிப்புடனும் ஏராளமான பாடல்கள் வெளிவந்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்ணப்பட்டுக்கழகத்தினர் இப்பாடல்களில் பெரும்பாலானவற்றை இசையமைத்து வெளியிட்டுள்ளனர்.

இசைத்துறையில் பெண்களின் பங்களிப்பை முன்னிறுத்தும் பொருட்டு தமிழீழ மகளிர் கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ மகளிர் இசைக்க்ழுவினர் என்ற தனியான பிரிவுகளையும் விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியிருந்தனர்.

பெண்களால்பாடப்பட்டுள்ள பாடல்களில் அக உணர்வு வெளிப்பாடு

சங்க கால இலக்கிய பாடல்கள் போன்று தமிழீழ விடுதலை புலிகளின் எழுச்சிப் பாடல்களில் பொதிந்துள்ள ஆழ்ந்த கருத்துக்கள் அகவயமானவை ( “inner field” ) எவை புறவயமானவை (“outer field”) எவை என பிரித்துக் பார்க்கின்ற போது அகவுணர்வுகளை (emotional ) எடுத்துக்காட்டுகின்ற பெரும்பாலான பாடல்கள் பெண்களால் பாடப்பட்டுள்ளன. புற (material) நிலை சார்ந்த பெரும்பாலான பாடல்கள் ஆண் பாடகர்களால் பாடப்பட்டுள்ளன.

பெண்களால் பாடப்பெற்ற பல பாடல்களில் பாடுபொருள்களாக தாயன்பு, காதல், நட்பு, பிரிவு , பரிவு, கோபம், தனிமை , வீரமரணம் ஒன்றை தாங்கும் பெண்மையின் மனநிலை, கையறு நிலை போன்ற ஆழமான உணர்வுகளை பாடல்களாக பாடுகின்ற பொழுது அவை கேட்போர் மனக்கண்முன் ஈழப்போர்சூழலில் வாழ்ந்த மக்களின் பல்வேறுபட்ட இழப்புக்கள், தியாகங்கள் ஒப்புவிக்கை (அர்ப்பணிப்பு / dedication ) போன்ற உணர்வுகளை புரிந்து கொள்ள வழிவகை செய்கின்றன.

அகவுணர்வுகளின் ஆழத்தை எடுத்துக்காட்டுகின்ற சில பாடல்களையம் அவற்றின் தன்மையையும் பாப்போமாகில் தமிழீழ எழுச்சிப் பாடல்களில் மிக அரிதாக காதல் உணர்வை வெளிப்டுத்தும் பாடலான “தென்னம் கீற்றில் தென்றல் வந்து வீசும் தமிழ் தேசமெங்கும் குண்டு வந்து வீழும்” என்ற பாடலில் வருகின்ற பெண்குரலில் ஒலிக்கும் வரிகளான

“நிலவு வந்து பொழியும் நேரம் நீவரவில்லை
நான் நீண்ட நேரம் காத்திருந்தேன் பதில் வரவில்லை
ஊர்முழுதும் ஓலம் நான் உறங்கி வெகுகாலம்
உறங்கி வெகு காலம் நீ ஒடிவந்தால் போதும்..”

என்ற பாடல்வரிகளிலுள்ள கவித்துவமானது பிரிவின் வலியின் ஆழத்தை சொல்கின்றது. இவ்வரிகள் சங்ககால நூலான குறுந்தொகையிலுள்ள 138வது பாடலான “கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே-” என்ற பாடலில் தோழி யின் கூற்றாக சங்ககாலத் தலைவியின் பிரிவாற்றாமையை தலைவனுக்கு உணர்த்துகின்ற பாடல் வரிகளை நினைவு படுத்துகின்றது.

 

“கண்மணியே கண்ணுறங்கு
காவியமே நீயுறங்கு
பொன் முடி சூடிய பூச்சரமே
எந்தன் பூங்குயிலே நீயும் கண்ணுறங்கு”

என்ற தாலாட்டுப் பாடலில் தன் குழந்தையை உருவகப்படுத்தும் தமிழீழ தாய் ஒருத்தி மணிமகுடம் பூண்டு உறங்குகின்ற ஒரு இளவரசனாக தன்குழந்தையை ஒப்பிட்டு குழந்தை பிறந்தபொழுது தனக்கிருந்த செல்வச் சீர்சிறப்பை தன்பாடலூடாக வெளிப்படுத்துகின்றாள். அப்பாடலின் இரண்டாவது பந்தியில் தனது கையறு நிலைய நினைந்து

“செல்வந்த வேளையில் நீ பிறந்தாய்
இன்று ஷெல் ( Shell ) வந்து
உன்னப்பன் போய்முடிந்தான்”

என்று தாலாட்டுவதன் ஊடாக தந்தையின்றிய அவர்களுடைய எதிர்கால வாழ்வில் இழையோடியுள்ள துயரை எடுத்துக் காட்டுகின்றது. மேலும் இப்பாடலின் இறுதியப் பகுதியிலேயே அத்தாய் “ஆராரோ… ஆரிரரோ” என வழமையான தாலாட்டு பாடல் போல் தாலாட்டாது “ஆரிரரோ…ஆராரோ.”.என பாடுகின்றாள். தாலாட்டு பாடலில் ‘ஆராரோ ஆரிரரோ’ என்பதில் முன்னதைவிடப் பின்னது விரைவாகப் பாடப்படுகின்றதற்கான காரணம் ஏணையை (தூளி) அதன் இயல்பான மையத்திலிருந்து ஆட்டி விடுகின்றபோது, அது விலகிச்செல்லும் வேகத்தைவிட மீண்டுவருகின்ற வேகம் விரைவாக இருக்கும் இவ்வேணையின்ஆட்ட வேகத்திற்கு அமையவே தாலாட்டு மெட்டும் அமைகின்றது. இப்பாடலானது “ஆரிரரோ…ஆராரோ”…என முடிவதற்கான காரணம் அத்தாயின் உள்ளத்தில் தேங்கிக் கிடந்த வலியை அல்லது வெளிப்படுத்திய பொழுது அவள் தனது குழந்தை தூங்கும் ஏணையை விரைவாக ஆட்டியிருப்பாள் அதனாலேயே அது போன வேகத்தை விடவும் வந்த வேகம் குறைவானதாக இருக்கும் என்ப தனை இப்பாடலினை கேட்பவர் மனதில் பதிய வைக்க வேண்டி இப்பாடலின் வரிகளை அமைத்த ஈழகவிஞரது புலமை எத்தகையது என வியக்கத் தோன்றுகின்றது.

தமிழீழ கலைபண்பாட்டுக்கழகத்தால் வெளிப்பட்ட நெருப்பு நிலவுகள் என்ற இறுவட்டில் தன்தாயின் நினைவாக இருக்கின்ற பெண்புலி மகள் ஒருத்தி தன்நெஞ்சில் தேங்கியுள்ள தாய்ப்பாசத்தையும் தான் போராடவேண்டிவந்த சூழ்நிலையையும் விபரித்து பாடுகின்ற ஒரு பாடல் “நீரடித்து நீர் இங்கு விலகாது அம்மா நெஞ்சில் உந்தன் பாசம் என்றும் அகாலாது அம்மா” என்கிறது. அப்பாடலில் வருகின்ற ஒரு பந்தியில்

“வெற்றி மகளாய் வருவேன் பெருமைப்படு அம்மா
வீழ்ந்து விட்டால் குழியினிலே நீரை விடு அம்மா
சுற்றி வந்து தீபம் ஒன்று ஏற்றி விடு அம்மா
சூழ்ந்திருக்கும் உறவை பார்த்து கவலை விடு அம்மா”

என்று தனது தாய்க்கு கூறுவதன் ஊடக தான் போர்க்களத்தில் இருந்து வெற்றி மகளாக திரும்பி உயிருடன் வருவேனாகில் தன்சாதனையை எண்ணி பெருமை கொள்ள வேண்டும். தான் களத்தில் வீரமரணம் அடைந்துவிட்டால் தனது புனித விதைகுழியில் நீரை விட்டு தீபமேற்றி செல் என்று கூறுகின்றாள். ( பாடலை கேட்க  https://bit.ly/2spp2x5 )

தமிழீழ விடுதலைப்புலிகள் தமது மாவீரர்களின் வித்துடல்களை புதைக்கும் நிகழ்வில் “புதைத்தல்” என்ற சொல்லை பயன்படுத்துவது இல்லை மாறாக “விதைத்தல்” என்ற சொல்லையம் புதைக்கப்படும் உடலுக்கு “வித்துடல் “என்ற சொல்லையும் பயன்படுத்தினார்கள். விதையில் இருந்து மரம் மீண்டும் முளைப்பதைபோன்று மாவீரரர்கள் மீண்டும் எழுவார்கள் இதனாலே விதையை மண்ணில் இட்டபின்னர் நீர் விடுவதைப் போன்று தன்னை விதைத்த பின்னர் நீரை இட்டுச் செல்லுமாறும் தன்னையே நினைத்து வருந்திக் கொண்டிராது ஏனைய சகோதர சகோதரிகள் மற்றும் தந்தையை எண்ணி தான் மறைந்த கவலையை விடுமாறும் கூறுகிறாள் .

திருக்குறளில் வரும் பிரிவாற்றாமை கூறுகின்ற பின்வரும் குறள் வரிகள் அத்தாயினுடைய மனநிலையாக இருக்குமென்றெண்ணி அம்மகள் மேற்கண்டவாறு கூறியிருப்பாளோ என இங்கே எண்ணத் தோன்றுகின்றது.

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை. ( குறள் எண் : 1151 )

பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல் என்று அத்தாய் எண்ணி விபரீதமான முடிவேதும் எடுக்கக் கூடாது என்பதற்காக இவ்வாறு கூறியிருப்பாளோ என எண்ணத் தோன்றுகின்றது. அதாவது போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில் சாதாரணமான ஒருகுடும்பத்தின் உயிர்ப்பாதுகாப்பு அல்லது தற்பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் ஆதலால் தனது வீரமரணத்தை தாங்குகின்ற சக்தி அத்தாய்க்கு தனது ஏனைய பிள்ளைகளையும் தந்தையை எண்ணியும் வரவேண்டுமென்பதை இப்பாடல் ஊடக மறைபொருளாக விளக்கப்பட்டுள்ளது .

பெண்புலி போராளிகள் இருவரின் நட்பின் ஆழத்தையும் தோழிகளில் ஒருவரின் வீரமரணம் மற்றய தோழியின் மனதில் ஏற்படுத்திச்சென்றுள்ள தாக்கத்தின் வலியின் வெளிப்பாட்டினையும் சொல்லுகின்ற பாடல் “தோழி என் தோழி என் உயிரில் கலந்த தோழி” என்கின்ற பாடல். இப்பாடலை தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனம் வெளியீடுப் பிரிவினர் வெளியிட்டுள்ளனர். இப் பாடலில் பின்வரும் வரிகள்

“மண்ணில் பாசம் கொண்ட வேளை உனது பாசம் தந்தாய்
என்னில் தோன்றும் நிழலைப் போல தினமும் ஓரம் நின்றாய்”

அதாவது நிழலைபோல என்றென்னறும் பிரியாதவாறு இணைந்த உயிர் நட்பைப் பற்றி சொல்கின்றது. இத்தகைய உவமை பொருந்திய பாடல் ஒன்று அகநாநூறுறில் கபிலர் என்னும் புலவரால் பாடப்பட்டுள்ளது.

தோழி ஒருத்தி தனக்கும் தனது தலைவிக்கும் இடையிலான உறவு இருதலைப்புள்ளினைப் (இரண்டு தலை கொண்ட ஓருருவப் பறவை) போன்று பிரியாது என்றும் இணைந்திருப்பது என்று கூறுகின்றாள்.

“யாமே பிரிவு இன்று இயந்து துவரா நட்பின்
இருதலைப் புள்ளின் ஓருயிரம்மே”(பா.12, 4-5)

 

இப் பாடலில் வருகின்ற

என்னை பரிவுடன் தழுவிடும் தாயாய்
செல்லக் குறும்புகள் புரிந்திடும் சேயாய்
துன்பம் தொடர்கின்ற பொழுதினில் தோளாய்
எந்தன் இதயத்தை வருடி நீ வாழ்ந்தாய் -இன்று
என்னை தனியே தவித்திடச் சொல்லி நீயேன் பிரிந்து போனாய்

பாடல் அடிகள் தாய் தந்தை சகோதரர்கள் என்ற உறவுக்கு கூட்டுக்குளே வாழ்ந்த ஈழத்துப் பெண்கள் விடுதலை வேட்கையுடன் போராட செல்கின்ற பொழுது அப்பெண்களுக்கு அவர்களது குடும்பத்தினரின் பிரிவினை ஆற்றும் வழியாக அவர்களது தோழிகள்தான் திகழ்கின்றார்கள் என்பதை கூறி நிற்கும் சான்றாக இருக்கிறது. ( தொடரும் )

 

https://www.samakalam.com/பெண்கள்-பாடிய-தமிழீழ-எழு/

புலிகளின் சண்டியன் உந்துகணை - சிறுகுறிப்பு

1 month ago

https://eelavarkural.wordpress.com/2020/10/13/seatigers-boat/

 

ltte-made-shell.jpg?w=444&h=312

 

மூன்று தண்டவாளக் கம்பிகளை இணைத்து ஒரு ஆயுதத்தை உருவாக்கினார்கள். அதன் சக்தி எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை ஆராய முகமாலைப் பகுதியின் ஒரு வெளியில் தெருநாய்களைப் பிடித்து கட்டிவிட்டு அந்த ஆயுதத்தை இயக்கி அதன் சக்தியினை மதிப்பீடு செய்தார்கள் .

ஆம் அது மெதுவாக தண்டவாளத்தில் ஓடி ஆசைந்தபடி தன் இலக்கை நோக்கி நகர்ந்து சென்று வெடித்துச் சிதறியது. அதன் சத்தம் ஆறேழு கிலோமீற்றர்களுக்கு அதிர்ந்தது. 800 மீற்றர் சுற்றுவட்டத்தை அழித்திருந்தது அங்கு விடப்பட்ட தெருநாய்கள் காணாமல் போயிருந்தன. அந்தக் கண்டுபிடிப்பிற்கு சண்டியன் எனப் பெயரிட்டனர்.

ஆம் அந்தச் சண்டியன்தான் முகமாலைப் பகுதியில் முன்னேறிய இராணுவங்களைக் கொன்றுகுவித்துக்கொண்டிருந்தது. இருந்தும் தலைவரின் பணிப்பிற்கு அமைய அவ் ஆயுதத்தைப் பாவிக்காமல் விட்டிருந்தனர். அதற்குக் காரணம் அவ் ஆயுதம் பாரிய உயிர்ச்சேதங்களையும் அழிவுகளையும் உண்டுபண்ணியதனாலயே அதைத் தடைசெய்தார்கள். எங்கள் போராட்டத்தை சரியான முறையில்த்தான் செய்திருந்தோம் என்பதற்கு இவ்வாயுதம் கைவிடப்பட்டதே பெரும் சான்று.

ஒரு ஆயுதத்தையல்ல, இதுபோல பல ஆயுதங்களை உற்பத்தி செய்தனர் எங்கள் வீரர்கள்.

எதுவித வளங்களும் இல்லாதபோதும் எதிரி ஏவிய குண்டுகளை குடைந்து அதன் மருந்தில் உற்பத்தி செய்த ஆயுதங்கள்தான் எத்தனை எத்தனையோ அந்தக் கண்டுபிடிப்புக்களுக்காக நூற்றுக்கணக்கான மாவீரர்களைத் தியாகம் செய்திருந்தது இந்த மண் அந்த மண்ணில்தான் நாம் இப்போ சோம்பறிகளாக குந்தியிருக்கின்றோம் எங்கள் நிலங்கள் தரிசுநிலமாக மாறிக்கொண்டிருக்கின்றது …

 

 

 

---------------

கூடுதல் படங்களும் மேலதிக படிமங்களும் இதற்குள் உள்ளன.

 

சிங்கப்பூர் ஜெனரலை வியக்க வைத்த தமிழர் தளபதி

1 month 2 weeks ago
சிங்கப்பூர் ஜெனரலை வியக்க வைத்த சமர்க்கள நாயகன்

எங்களுக்கு வாழ்க்கையில் சண்டை தெரியாது ஆனால் நீங்கள் எத்தனையோ சண்டை களங்களை பார்த்துள்ளீர்கள். உங்களை பார்க்கும்போது பெருமையாக உள்ளது என சிங்கப்பூர் ஜெனரல் விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி பிரிகேடியர் பால்ராஜை நோக்கி கூறியதாக தமிழரசு கட்சியின் தலைவர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமிழ் தேசிய கலை இலக்கிய பேரவைனுடைய ஏற்பாட்டில் எழுத்தாளர் நா. யோகேந்திர நாதன் எழுதிய 34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு எனும் நூல் கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் மகாதேவா ஆசிரமத்தின் தலைவர் சி மோகன பவன் உட்பட படைப்பாளிகள் அதிபர் ஆசிரியர் மற்றும் படைப்பாளிகள் பொதுமக்கள் அரசியல் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்ந்தும் சிறீதரன் தெரிவிக்கையில்...

https://tamilwin.com/article/kilinochchi-book-release-event-1707921777

எமது கிராமத்தின் வரலாறு

1 month 2 weeks ago

எழில் மிகுந்த இலங்கை மாதாவின் வடபகுதியின் பிரதான நகரம் யாழ்ப்பாணம். இம் மாவட்டத்தின் தெற்குப் பகுதியாக அமைந்துள்ள சாவகச்சேரி தொகுதியைக் கொண்ட பகுதி தென்மராட்சியாகும். தென்மராட்சியின் தென் மேற்குப் பகுதியில் சுமார் 6 கி.மீற்றர் தொலைவில் அமைந்துள்ள அழகிய கிராமம் கைதடி நாவற்குழி தெற்குப் பகுதியாகும். இதன் எல்லைகளாக கிழக்குப் பகுதி தென்னஞ்சோலைகளாலும் மறவன்புலோ மேற்கும், தெற்கு கடலாலும், மேற்கு தென்னஞ் சோலையும் பனைவளமும் கொண்டதாகவும் இயற்கை எழில் கொண்ட பசுமை நிறைந்த பகுதிகளாகவும் அமைந்துள்ளன.

image

இக்கிராமம் கைதடி நாவற்குழி தெற்காக இருந்தாலும் கோவிலாக்கண்டி என்றால் தான் அநேகருக்கு தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. கைதடி நாவற்குழி தெற்கு மக்கள் அநேக காலமும் தாமும் தன்பாடும் என்ற நிலையில் சந்தோசமாகவும் அமைதியாகவும் எந்தவிதமான கோபதாபம் பிணக்குகளின்றி வாழ்ந்து வந்தனர். இவர்கள் ஆதிமுதல் “பெரும்படை” என்னும் தெய்வத்தையே தமது குலதெய்வமாக வழிபட்டு வந்தனர். வழமையாக வருடாந்தம் பங்குனி மாதம் கொண்டாடப்படும் பெரும் பொங்கல் தினத்தையே பெருவிழாவாகக் கொண்டாடி வந்தனர். ஒரே சமூகமாக இருந்து சிறப்பாக வாழ்ந்த இவர்களைப் பிரிக்க வேண்டுமென்ற சிலரின் தீய எண்ணத்தாலோ ஏதோ ஒரு காரணத்தாலோ ஒரு பொங்கல் தினத்தன்று இவர்களுக்கிடையே பிரச்சனைகளும், மனஸ்தாபங்களும், குரோதங்களும் ஏற்பட்டு இரண்டாகப் பிரிந்து ஒரு பகுதியினர் தமக்கொன அதே பெயரில் இன்னொரு “பெரும்படை” என்னும் கோயில் அமைத்து வழிபடத் தொடங்கினர். அன்று தொடங்கிய பகை நீண்ட காலம் வேண்டத்தகாத சண்டை சச்சரவுகளையும் போட்டி பொறமைகளையும் இவர்களுக்கிடையே வளர்த்தது. இது இவர்களுக்கு ஒரு சாபக்கேடாக அமைந்து இவர்களின் சீரான வாழ்வைச் சீரழித்தது.

image

இம் மக்கள் கடற்கரையையண்டி வாழ்ந்தபடியால் கடல்படு திரவியம் தேடும் தொழிலே பிரதான தொழிலாக அமைந்துள்ளது. குறிப்பிட்ட சிலர் விவசாயத்தையும் தம் தொழிலாகக் கொண்டனர். அக்காலம் போதிய போக்குவரத்து வசதி இன்மையால் தாம் பெற்ற சரக்கைத் தனங்கிளப்பிற்கு நேரேயுள்ள கடற்கரையிலிருந்து காவுதடி கொண்டு சாவகச்சேரிச் சந்தையில் விற்றுப் பணமாக்கினர். இந்த நிலை வீண் சிரமத்தையும் கஷ்டத்தையும் கொடுத்ததைக் கண்டு ஒரு சில பெரியவர்களினதும் நல்ல உள்ள கொண்டவர்களது மன எண்ணத்தின்படியும் தம் கடற்கரையிலே தாம் பிடித்த சரக்கை விற்பனை செய்து சம்பாதிப்பதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டது.

கூட்டுறவுச் சங்கம் உதயம்

இம்மக்களை ஒன்றுபடுத்தி இவர்களது வாழ்வைச் சிறப்புறச் செய்யவும் வீணான குரோதங்களை இல்லாமற் செய்யும் நோக்கத்திற்கும் ஒரு ஸ்தாபனம் தேவைப்பட்டது. அதன் நிமித்தம் கூட்டுறவுச் சங்கம் உதயமானது. அதன் தலைவராக தச்சன்தோப்பைச் சேர்ந்த அறிவு மிக்க திருவாளர் முருகேசு காசிப்பிள்ளையும், செயலாளராக திரு கனகர் சதாசிவம், பொருளாளராக திரு வேலுப்பிள்ளை பொன்னம்பலம் ஏனைய சிலர் நிர்வாக உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப் பெற்றுள்ளனர். இந்நிகழ்வு 1951ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளது.

சந்தை ஆரம்பம்

கைதடி நாவற்குழி தெற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் சந்தையைச் செயற்படுத்தும் நோக்கத்தோடு கடற்கரையோரம் சிறு கொட்டிலை அமைத்தது. நல்ல நாளாக சித்திரைப் பரணி தினத்தன்று வியாபாரம் தொடங்கத் தீர்மானித்தனர். இதனை விளம்பரப்படுத்தும் வகையில் பல ஊர்களுக்கும், மக்களுக்கும் தெரியப்படுத்தினர். அன்றைய தினம் தொடக்கத்தில் குறைவான எண்ணிக்கையுள்ளோர் சமூகம் கொடுத்து மீன் வகைகளைக் கொள்வனவு செய்தாலும் நாளடைவில் – காலப்போக்கில் மக்கள் அநேகம் பேர் கூடவும் வியாபரம் பெருகவும் வழி உண்டாயிற்று. வியாபாரத்தைக் கண்காணிக்க மகேசனும், சிப்பந்தியாக திரு.வி.சின்னத்துரையும் நியமிக்கப் பெற்றனர். சிப்பந்தி நகைச்சுவையாக “காத்தடி கொண்டு காவினதெல்லாம் அந்தக்காலம், இப்போ கையிலே தூக்கி கரையிலை வைப்பது இந்தக் காலம்” எனக் கவிதையும் யாத்துப்பாடியது இப்போதும் காதில் கேட்கின்றது.

கூட்டுறவுச் சங்கத்தின் சேவை

கூட்டுறவுச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டதும் ஆரம்பத்திற் குறிப்பிட்ட ஒரு தொகையினர் அங்கத்துவராகச் சேரப் பின்னடித்தாலும், ஏனையவர்களோடு சங்கம் வளர்ச்சியடையத் தொடங்கியது. சங்கத்திற்கு ஒரு பெயர் வைப்பதற்காக பூசாரி க.சதாசிவம் பூசை செய்யும் வைரவர் கோயில் முன்றலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கடற்றொழில் இலாகாவைச் சேர்ந்த திரு சோமசுந்தரம் என்னும் உயர் அதிகாரியால் “ஸ்ரீ மகாவிஷ்ணு கடற் தொழில் கூட்டுறவுச் சங்கம்” என்னும் பெயர் மொழியப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. சங்கம் வளர்ச்சியடைந்து அங்கத்துவர்களுக்கு கடன் வசதி, வலை, கம்பு, வள்ளம் போன்ற உபகரணங்களையும் பெற்றுக் கொடுத்தது. இதனைக் கண்ட ஏனையோரும் அங்கத்துவர்களாகச் சேரத் தொடங்கினர்.

கடற்கரை வீதி வரலாறு

image

கூட்டுறவுச் சங்கத்தின் முதலாவது வருடாந்தப் பொதுக்கூட்டம் கடற்கரை மைதானத்தில் 1952ஆம் ஆண்டு நடைபெற்றது. அக் கூட்டத்திற்கு அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு வே.குமாரசாமி அவர்கள் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். கோவிலாக்கண்டி சந்தியில் இருந்து கடற்கரை வரையான பாதை மோட்டார் வாகனமன்றி துவிச்சக்கர வண்டி கூட செல்ல முடியாதளவு பெரும் மண் தரையாக இருந்தபடியால் பாராளுமன்ற உறுப்பினர் தமது மோட்டார் வாகனத்தை திரு.வே.சிவசுப்பிரமணியம் ஆசிரியரது வீட்டில் நிறுத்தி விட்டு கூட்டம் கூடும் இடத்திற்கு நடந்தே வந்தார். மக்களும் மேளதாளத்தோடு மாலை அணிவித்து மிகவும் மரியாதையாக அழைத்து வந்தனர். அன்றைய தினம் தனது பேச்சின் போது, தான் இவ்விடத்திற்கு மோட்டார் வாகனத்தில் வரமுடியாது நடந்தே வரவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. அடுத்த முறை இவ்விடத்திற்கு வருவதாயிருந்தால் தனது மோட்டார் வாகனத்திலேயே இவ்விடம் வந்து இறங்குவேன் எனக் கூறினார். அவர் அப்பொழுது பாராளுமன்றத்தில் செல்வாக்குள்ளவராகவும் இருந்தபடியால் குறுகிய காலத்தில் வீதிக்கு ரூபா 10000/= ஒதுக்கப்பட்டது. அப்போது சதத்தில் பணப் புழக்கம். இப்போது இத் தொகை பத்துக் கோடிக்குச் சமனாகும். இவ் வீதியை புனரமைக்க காரைநகைரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அவரும் விரைவில் வீதியைச் சீரமைத்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினரும் தாம் கூறியவாறு மோட்டார் வாகனத்தில் வந்திறங்கினார். இவ் வீதி சீரமைக்கப்பட்டதால் கிராமமும் மக்களும் பெரிதும் அபிவிருத்தியடைந்ததோடு பெற்றவராயினர். பல நன்மைகளும் கிடைக்கப் பெற்றவராயினர். இவ்வேளை இக் கிராமத்து மக்களை ஒன்று படுத்துவதில் திரு.க.சதாசிவமும் திரு.வே.பொன்னம்பலமும் பெரிதும் முயற்சியெடுத்தனர். ஓரளவு வெற்றியும் நிறைவும் பெற்றனர்.

பாடசாலை ஆரம்பம்

image

இக்கிராமத்துப் பிள்ளைகள் ஆரம்பக் கல்வியை யா/கோவிலாக்கண்டி மகாலக்குமி வித்தியாசாலையில் கற்று வந்தனர். ஐந்தாம் வகுப்பு வரையுள்ள அப்பாடசாலையிற் கற்றவர்கள் அதனோடு தமது கற்றலையும்,சிலர்நாலாந்தரத்தோடும் நிறுத்தியுள்ளனர். இதற்கு அவர்களது போக்குவரத்து வசதியீனமும் வறுமையும் காரணமாக அமைந்துள்ளது. இக்காலத்தில் நான் க.பொ.சா/தரப்(SLC) பரீட்சையில் சித்தியடைந்து க.பொ.உ/ தரம்(HSC) சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கற்று வந்த வேளையில் திரு.ந.இளையப்பா ஆசிரியர் அவர்களைச் சந்தித்த வேளையில், இக் கிராமத்துப் பிள்ளைகள் தொடர்ந்து கல்வி கற்காமல் நிறுத்தியதைச் சுட்டிக்காட்டி, அவர்களுக்கு என ஒரு பாடசாலையை எமது கிராமத்திலே ஆரம்பித்தால் அவர்கள் தொடர்ந்து கற்கச் சந்தர்ப்பம் உண்டாகுமென, ஆண்டவன் அருளால் உதித்த எனது எண்ணக் கருத்தினை வெளிப்படுத்தினேன். அதற்கு அந்த நல்ல உள்ளம் கொண்ட பெரியவரும் தானும் வேண்டிய உதவி செய்வதாகவும் பாடசாலையை ஆரம்பிக்கும்படியும் கூறினார். அப்போதுள்ள சமூக, சமுதாய சூழ்நிலை இக் கைக்காரியத்துக்கு கடும் எதிர்ப்பும், பகையும் கிடைக்கும் என்றுணர்ந்தும் நல்லதொரு காரியத்துக்கு ஆண்டவன் பக்க பலமாக துணைநிற்பான் என்ற அசையாத துணிச்சலோடும், நம்பிக்கையோடும் பாடசாலை ஆரம்பிக்கத் தொடங்கினேன். பாடசாலை நடாத்துவதற்கு ஒரு இடம், கட்டிடம் தேவைப்பட்டது. அப்பொழுது கடற்றொழிளாருக்கென கட்டிடம் ஒன்று புதிதாகக் கட்டப் பெற்ற நிலையில் இருந்தது. அதனை சங்க நிர்வாகிகளுடன் கதைத்துப் பெற்றுள்ளேன்.

image

1960 ஆம் ஆண்டு புரட்டாதித் திங்கள் 30.09.60 நவராத்திரி காலத்தின் விஜயதசமியன்று பாராளுமன்ற உறுப்பினர் திரு.வ.ந.நவரத்தினம் அவர்களைக் கொண்டு திறப்பதற்கு தீர்மானித்த வேளை அவர் அவசியம் பாராளுமன்றம் செல்ல வேண்டியிருந்ததால் துணைவியார் திருமதி இரகுபதி நவரத்தினம் அவர்களை அனுப்பியிருந்தார். அந்த அம்மையாரும் சமூகம் கொடுத்து அன்றைய தினம் பாடசாலையை அங்குரார்ப்பணம் செய்து ஆரம்பித்து வைத்தார். இப்பாடசாலை இக் கிராமத்தில் தொடக்கி வைக்கப் பெற்றதால் பிரிந்து நின்றவர்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையாகவும் பழைய பகைமைகளை மறந்து சந்தோஷமாகவும் வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.

image

பாடசாலையை அரசு பொறுப்பேற்பதாக இருந்தால் நிரந்தரக் காணி, நிரந்தரக் கட்டிடம் தேவைப்பட்டது. இதற்காக இப்போது பாடசாலை அமைந்துள்ள காணியை உரியவர்களான திரு.மு.கனகர், திரு.ம.ஆறுமுகம், திருமதி ம.சின்னாச்சி என்போரிடம் இருந்து பெருமுயற்சி எடுத்து சம்மதம் பெறப்பட்டது. உடனே நொத்தரிசுக்கு கிளாக்கராக இருந்த திரு.வ.செல்லத்துரை என்பவரைக் கொண்டு உறுதி எழுதப்பட்டது. இனி நிரந்தரக் கட்டடம் கட்ட வேண்டும். அதற்குரிய கல், சீமெந்து பாடசாலைக் காணிக்கு கொண்டு வர முடியாத நிலை. அந்தளவுக்கு புழுதி மணல் நிரம்பிய பாதை. திரு.சு.கந்தையா என்பவர் தனது மெசினில் கொண்டு வரும் கல், சீமெந்தை தற்போது ஆலடி அம்மன் கோயிலாகவிருக்கும் இடத்தில் பறித்துவிட்டுப் போய் விடுவார். அப்போது எம்மிடம் வண்டில் மாடு இருந்தமையால் மாடுகள் இழுக்கக்கூடிய அளவு கல், சீமெந்தை ஏற்றி பாடசாலைக் காணிக்கு கொண்டு வந்து சேர்த்தேன். ஏனைய உதவிகள் பெற்றோராலும் கிடைக்கப் பெற்று கட்டிடம் கட்டி முடிக்கப் பெற்றது. கிணற்றினைத் திரு.வியாழரத்தினமும் அவரது மகன் தியாகராசா உடன் நானும் சேர்ந்து வெட்டினோம். மேசன் திரு.வ.சிதம்பரநாதனுக்கு நான் உதவியாளராக இருந்து கிணறு கட்டி முடிக்கப்பட்டது.

image


அப்பொழுது இப் பாடசாலைக்கு பயிற்றப்பட்ட ஆசிரியரான திருமதி அ.இளையப்பா அவர்கள் தலைமை ஆசிரியராகவும், திரு.வே.இராமர், செல்வி.வி.சிவபாக்கியம், செல்வி.சி.இராசேஸ்வரி பின்பு செல்வி.சி.சின்னக்குட்டி ஆகியோர் உதவி ஆசிரியர்களாகவும் கடமையாற்றினர். வகுப்புகள் தரம் | தொடக்கம் தரம் V வரையுமே நடைபெற்றன.

அரசு பொறுப்பேற்றல்

அப்போதுள்ள கல்விச் சட்டத்தின்படி பாடசாலை ஆரம்பித்து சில மாதங்களில் பொறுப்பேற்க வேண்டிய நிலையிருந்தும் எதிர்ப்புகள் காரணமாக காலதாமதமாகியது. அப்போது மத்துகம் தொகுதி பா.உறுப்பினராக இருந்த திரு. பங்குவில என்பவரை இங்குள்ள அவரது நண்பர் பாடசாலை விடயமாகக் கதைத்ததனால் அவர் பாராளுமன்றத்தில் எமது பாடசாலையின் விபரம், நிலைமையை எடுத்துக் கூறியதால் அப்போதைய கல்வி அமைச்சர் திரு.வை.துடாவையின் உத்தரவின் பேரில் யாழ் கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றிய கல்வியதிகாரி திரு.எஸ். முத்துலிங்கம் அவர்கள் 1963 ஆம் ஆண்டு தை மாதம் 30ந் திகதி பாடசாலைக்கு சமூகம் கொடுத்து அரசாங்க பாடசாலையாகப் பதிவு செய்து பொறுப்பேற்றதை சம்பவத் திரட்டுப் புத்தகத்திலும் பதிவு செய்துள்ளார். இவ் வைபவம் இக்கிராமத்தின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

image

இதனைத் தொடர்ந்து பாடசாலை வளர்ச்சி அடையத் தொடங்கியது. 1964ஆம் ஆண்டு திரு. V.S.கந்தையா அவர்கள் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றதிலிருந்து அந்த வருடமே கிராமசபை அங்கத்தவர் திரு.வே.பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றதும், பரீட்சைகளில் மாணவர் திறமை காட்டி கல்வியில் முன்னேற்றமடைந்ததும், பெற்றார் தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றதும் மறக்க முடியாதவையாகும்.  1965, 1966 ஆகிய இரு வருடங்கள் ஆசிரிய பயிற்சி பெற்று 1967 ஆம் ஆண்டு தொடக்கம் க/புசல்லாவை சரஸ்வதி ம.வியில் 6 வருடங்கள் கடைமையாற்றி விட்டு இப் பாடசாலைக்கு மாற்றம் பெற்று வந்த பொழுது ஆண்டு 9 வரையும் உள்ள பாடசாலையில் ஆண்டு 5 வரையும் இருப்பதைக் கண்டு அதிபர் திரு.வே.நாகராசாவுடன் முரண்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. 1975ஆம் ஆண்டு அதிபர் தரம் கிடைத்து மன்னார் மாவட்டத்திலுள்ள ம/கள்ளியடி அ.த.க பாடசாலைக்கு அதிபராக நியமனம் பெற்றேன். ஒன்பது வருடங்கள் அம்மாவட்டத்தின் பாடசாலைகளில் கடமையாற்றி விட்டு 1984ஆம் ஆண்டு யா/ கைதடி முத்துக்குமாரசாமி ம.வி.க்கு பிரதி அதிபராக நியமனம் பெற்றேன். அப்பொழுது யா/கல்வித் திணைக்களத்தில் பிரதம கல்வி அதிகாரியாக கடமையாற்றிய திரு.கு.சோமசுந்தரம் அவர்களின் வேண்டுகோளின் பேரில் இப்பாடசாலைக்கு அதிபராக நியமனம் பெற்றேன். அப்பொழுது பதில் அதிபராக கடமையாற்றிய செல்வி இ.வசந்தாதேவி பாடசாலைப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்.

image

1984ம் ஆம் ஆண்டு பாடசாலைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நான் 5ம் வகுப்புக்கு மேல் வகுப்புகள் வைப்பதற்கு முயற்சி எடுத்தேன். கொத்தணி முறையில் நிர்வாகம் இயங்கிய காலம் கைதடிக் கொத்தணி அதிபர் திரு.சோ.கணேசலிங்கம் தலைமையில் நடந்த அதிபர்கள் கூட்டத்துக்கு கல்விப் பணிப்பாளர் திரு. மன்சூர் அவர்களும் சமூகம் கொடுத்திருந்தார். அவரிடம் இப்பாடசாலையில் 6ம் வகுப்பு வைக்க வேண்டிய தேவைகளை எடுத்துக் கூறியதோடு அது பற்றிய கடிதமும் கொடுத்துள்ளேன். கொத்தணி அதிபர், ஏனைய அதிபர்கள் யாவரும் ஒத்துழைப்பு நல்கியதால் கல்விப் பணிப்பாளர் உடனடியாக 6ம் வகுப்பு வைப்பதற்கு அனுமதி தந்துள்ளார். அடுத்த வருடத்தில் இருந்து 6ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி கற்க சந்தர்ப்பம் உண்டானது. 9ம் வகுப்பு வைப்பதற்குக் கல்வி அமைச்சிலிருந்து அனுமதி கிடைக்க வேண்டும். அதற்கு இங்குள்ள கல்வித் திணைக்கள அதிகாரிகள் சிபார்சு செய்ய வேண்டும். நானும் பலமுறை வேண்டுதல் செய்தும் அவர்களும் ஏதோ காரணங்களைக் கூறி சிபார்சு செய்வதைப் பின் போட்டுக் கொண்டு வந்தார்கள். இந்தநிலையில் திருமதிபுஸ்பாகணேசலிங்கம் அவர்கள் சாவகச்சேரி கோட்டக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய காலத்தில் மாணவர்கள் மேல் வகுப்பு படிப்பதற்குப் படும் கஷ்டங்களையும், போக்குவரத்து வசதியின்மையையும், வறுமை நிலையையும் எடுத்துக் கூறியதன் பேரில் இதனை நன்குணர்ந்து 9ஆம் வகுப்பு வைப்பதற்கு சிபார்சு செய்தமையை இந்நேரம் நன்றியுடன் நினைவு கூருகின்றேன். தொடர்ந்து ஏனைய வகுப்புகளும் வைக்கப் பெற்று 1996ஆம் ஆண்டு க.பொ.சா/தரப் பரீட்சை எழுத வேண்டியிருந்த பொழுது பொல்லாத காலமாக நாட்டில் யுத்தம் மூண்டது. இக் கால இடைவெளிக்குள் மாணவர்கள் கல்வியில் அதீத முன்னேற்றம் கண்டனர். கல்வி அதிகாரிகளின் பாராட்டுதலையும் நன்மதிப்பையும் பெற்றனர். இப்பாடசாலையில் பன்னிரண்டு வருடங்கள் அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் என்னோடு ஒத்துழைத்துக் கடமையாற்றிய ஆசிரியர்களின் கடமையுணர்ச்சி, அர்ப்பணிப்பான சேவை, ஆக்கபூர்வமாக கல்விப்பணி, மாணவர்களைக் கல்வியில் முன்னேற்றம் காணச் செய்தமையோடு பாடசாலைக்குப் பெரும் புகழையும் பெருமதிப்பையும் தேடித் தந்தன. இதனால் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற நல்ல அதிபர் தெரிவில் மாவட்ட மட்டத்தில் நல்ல அதிபராகத் தெரிவுத் தெரிவு செய்யப் பெற்று கல்விப்பணிப்பாளர் திரு.இ.சுந்தரலிங்கம் அவர்களால் பாராட்டப்பெற்றுச் சான்றிதழும் பெற்றுள்ளேன். இந்தப் பெருமை எனக்கு கிடைக்கச் செய்தமை இக்காலத்தில் கடமையாற்றிய ஆசிரியர்களையே சாரும் என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இக்கால இடைவெளி எல்லைக்குள் பாடசாலை அபிவிருத்தியோடு கிராமத்தின் அபிவிருத்தியிலும் பங்கு பெறும் வாய்ப்பு உண்டானது. தலைமையாசிரியர் திரு.V.S.கந்தையா அவர்களது பெரும் பங்களிப்புடன் கைதடி நாவற்குழி தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இச் சங்கத்தின் மூலம் பாடசாலை வீதி, பாடசாலை கடற்கரை வீதி, புதிய கிணறு கட்டியது, ஒழுங்கைகள் திருத்தம் போன்ற பணிகள் செய்யப் பெற்றன.

உணவு 

இக் கிராமத்து மக்கள் சங்கக் கடையிலேயே அத்தியாவசியமான அரிசி,மா,சீனிபருப்பு போன்றவற்றைகூப்பன் முறையில் பெற்றனர். இச் சங்கக்கடை கைதடி நாவற்குழி வடக்கிலுள்ள முருக மூர்த்தி கோயிலுக்கருகில் அமைந்துள்ளது. இம் மக்கள் பெரும் வயல் வெளியைத் தாண்டியே நடந்து சென்று பொருள்களைப் பெற்று வந்தனர். மாரி, மழை காலங்களில் பெரும் இடர்ப்பாடுகளைச் சந்தித்தனர். இதனால் ஒரு பகுதியினர் கைதடி நாவற்குழி (வடக்கு) பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலும், ஒரு பகுதி மக்கள் கோவிலாக்கண்டி மத்தி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலும் கூப்பன் பொருட்களைப் பெற்று வந்தனர். நாளடையில் இவ்விரு சங்கத்தினரும் இக் கிராமத்திலேயே இரு கிளைகளை நிறுவி திரு.சி.சங்கரப்பிள்ளை ஒரு கிளைக்கு மனேஜராகவும், திரு.க.கனகரத்தினம் என்பவரை ஒரு கிளையின் மனேஜராகவும் நியமித்து பொருட்களை விநியோகித்து வந்தனர். இந்த இழிநிலையைப் போக்கும் முகமாக நாம் எமது கிராமத்துக்கென பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஒன்றை நிறுவ முயற்சி எடுத்தோம். அப்போது உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த திரு.க.சிவப்பிரகாசம் என்பவரும் அரியாலையைச் சேர்ந்த கூட்டுறவுப் பரிசோதகர் திரு.க.பொன்னுத்துரை என்பவரும் பெரும் உதவி செய்தனர். கூட்டுறவுப் பரிசோதகருக்கு அவர் வேண்டுதலின் பேரில் இம் மக்களின் தொகை விபரங்களை வேலையாள், சாதாரணம், பிள்ளை, குழந்தை என்ற வகையில் வகைப்படுத்தியும் மேலும் வேண்டிய விபரங்களையும் வழங்கி உதவினேன். அப் பெரியவர்களது முயற்சியினால் இப் பகுதிக்கு கைதடி நாவற்குழி தெற்கு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் என தனியாக சங்கம் உருவானது. இதற்கும் கடைசி நேரத்திற் பல இடைஞ்சல்கள் ஏற்பட்டன. அவற்றை எழுத நான் விரும்பவில்லை.

தென்மராட்சி மேற்கு பல நோக்குக் கூட்டுறவுச் சங்க சமாசத்திலிருந்து பொருட்கள் கொண்டு வரப்பட்டு திரு.க.ஐயாத்துரை என்பவரது வீட்டின் ஓர் அறையில் வைக்கப்பட்டு வியாபாரம் தொடங்கப் பெற்றது. திரு.க.கனகரத்தினம் மனேஜராகக் கடமையாற்றினார். திரு.வே.பொன்னம்பலம் அடிக்கடி கண்காணித்து சங்க வருவாயைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறியதால் ஓரிரு வருடங்களில் சங்கம் பெரும் இலாபத்தை ஈட்டியது. அந்த இலாபப் பணத்தைக் கொண்டே புதிதாகக் கட்டிடம் கட்டப் பெற்றுள்ளது. அதுவே இப்போதுள்ள சங்கக் கட்டிடமாகும்.

உடை

கைதடி நாவற்குழி தெற்கு கி.அ.சங்கத்தின் தலைவராக இருந்த நானும் செயலாளரான திரு.ஆ.கந்தையாவும் கிராம அபிவிருத்திச் சிறு கைத்தொழிற் திணைக்களத்தினருடனும் தொடர்பு கொண்டபடியால் மீசாலையிலிருந்து ஒரு தையற் பயிற்சி ஆசிரியர் இங்கு வந்து தையல் பயிற்சி வகுப்புகளை பயிற்றுவித்தார். புதிய வடிவில் சட்டைகளை அமைக்கவும், விதம் விதமாக றேந்தைகள் பின்னவும், அழகான வகை வகையான தையற் பயற்சிகளையும் நடாத்தினார். இப் பயிற்சியால் பெண்களும் குறிப்பாக இளம் யுவதிகளும் நன்மையடைந்தனர். கண்காட்சியும் நடாத்தப்பட்டது.

வைத்தியம்

கைதடி நாவற்குழி ஸ்ரீ மகா விஷ்ணு க.தொ.கூ. சங்கம் அதன் நிர்வாகத் திறமையால் இலங்கையில் முதற் தரமான சங்கமாகக் கணிக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது கடற்றொழிற் திணைக்களப் பணிப்பாளர் திரு.பீற்றர் அவர்கள் இங்கு சமூகம் கொடுத்து விருந்துபசாரத்தில் பங்கு பற்றிய பொழுது இங்கு வைத்தியத் தேவையை எடுத்துக் கூறிய பொழுது தான் கொழும்பு சென்று சுகாதாரப் பகுதியினருடன் கதைத்து ஒழுங்குபடுத்துவதாகக் கூறினார். சில மாதங்களின் பின் கைதடி வைத்தியசாலையிருந்து வைத்தியரும், உதவியாளரும் வார நாட்களில் இரண்டு நாட்கள் சமூகம் கொடுத்து வைத்திய சேவை ஆற்றினர். சிலரது வேண்டுகோளினால் ஏனைய கிராம மக்களும் பயன் பெறும் பொருட்டு ஆசிரியை திருமதி இராசம்மா வீட்டுக்கு மாற்றினர். பின்னர் மறவன்புலோவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்போது எந்த இடத்திலும் வைத்திய வசதி இல்லை.

மின்சாரம்

image

நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள், பாடசாலை, கோயில்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றுக்கு மின்சாரத்தின் அவசிய தேவை பற்றி கைதடி நாவற்குழி தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராக இருந்த பொழுது, அப்போதைய யாழ் மாவட்ட அமைச்சருக்கு மின்சாரத்தின் அவசிய தேவை பற்றிக் கடிதம் எழுதினேன். அவரிடமிருந்து எனது விடயம் கவனத்தில் எடுக்கப்படும் எனப் பதிற் கடிதம் கிடைத்தது. சாவகச்சேரிப் பிரதேச உதவி அரசாங்க அதிபராக இருந்த திரு.சுந்தரம்பிள்ளை அவர்களுடன் மின்சாரத்தின் தேவை பற்றிக் கதைத்த பொழுது அப்பிரதேசம் நீண்ட வயல் வெளிப்பிரதேசம், அதிக பணம் தேவைப்படும், ஆசிய பவுண்டேசனுக்கு தெரியப்படுத்துகின்றேன், கிடைத்தால் உங்கள் அதிஷ்டம் எனக் கூறினார். சில மாதங்களின் பின் எமது பகுதிக்கு மின்சாரம் வழங்க அனுமதி கிடைத்ததாகவும், அது கோவிலாக்கண்டி பகுதிக்குப் போக இருப்பதாகவும் தகவல் அறிந்தோம். உடனடியாக மாவட்ட அமைச்சரது கடிதத்துடன் நான் தனஞ்செயன் என்பவருடன் அரசாங்க அதிபரைச் சந்தித்து கடிதத்தையும் காட்டி இது எமது பகுதிக்கே வரவேண்டியது என்றும், உதவி அரசாங்க அதிபருடன் கதைத்த விடயத்தையும் கூறினேன். அவர் உடனடியாக சுன்னாகத்தில் உள்ள மின்சாரசபை அதிகாரிகளைச் சந்திக்கச் சொன்னார். உடனே சுன்னாகம் சென்று மின்சாரசபை உயர் அதிகாரிகளைச் சந்தித்து விடயத்தை எடுத்துக் கூறினேன். அவர்களும் நாளை மின்சாரக் கம்பங்களை ஏற்றிக் கொண்டு வாகனம் வரும். கைதடிச் சந்தியிலிருந்து வாகனத்தை மறித்து அவர்களுக்கு இடத்தைக் காட்டும்படியும் கூறினார்கள். அடுத்த நாட் காலை கைதடிச் சந்தியிற் காத்திருந்த வேளை மின்சாரம் பொருத்துவதற்கான வாகனம் தூண்களை ஏற்றிக் கொண்டு வந்தது. அதனை மறித்து வாகனத்தில் ஏறி இடத்தைக் காட்டினேன். கடற்கரையிலிருந்து தூண்கள் பறிக்கப்பட்டு விரைவில் வேலைகளைத் தொடங்கினார்கள். முதலாவது தூண் தற்போது வயலோரம் அம்மன் கோயில் செல்லும் வீதியில் தேங்காய் உடைத்து கற்பூரம் கொழுத்தி நாட்டப்பட்டது. திரு.க.ஆறுமுகம் இந்த இறைபணியைச் செய்தார். விரைவாக மின்சார வேலைகள் செய்து முடிக்கப் பெற்றது. மக்களும் ஒளி வெள்ளத்தில் மூழ்கி மகிழ்ச்சி கொண்டாடினர். இதுவே மின்சாரம் கிடைத்த வரலாறு. இதனைத் தொடர்ந்து கிராம அபிவிருத்திக்குப் பல வேலைத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இவ்வாறன பணிகள் தொடங்கவும் நிறைவேறவும் ஏதே ஒரு மாபெரும் சக்தி துணை நின்றதை உணர்கின்றேன்.

வாழ்க்கை முறைகளும் வழிபாடுகளும்

image

ஆரம்ப காலம் இம் மக்கள் கூட்டுறவு வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வந்தனர். ஒரே காணிக்குள் பல வீடுகளைக் கட்டியும் ஒரே வீட்டில் சில குடும்பங்களுடனும் வாழ்ந்து ஒருவருக்கொருவர் ஒத்தாசையும் உதவியும் புரிந்தும் உணவு வகைகளைப் பங்கிட்டுக் கொடுத்தும் சந்தோசமாக வாழ்ந்து
வரலாயினர்.

பனை ஓலையாலும், கிடுகுகளாலும் வேயப் பெற்றதும், கிடுகுகளால் மறைப்புத் தட்டிகள் அமைத்தும், மண் தரையுமாக வீடுகள் அமைந்துள்ளன. வேலிகளை கிடுகளாலும், அலம்பல் எனும் தடிகளாலும், மட்டை வரிந்தும் மறைப்புச் செய்தனர். தற்போது மாற்றமடைந்து கல்வீடுகளாகவும் மதில் சுவர்களாகவும் மாறியுள்ளன.

கிராமத்தில் நடக்கும் இன்ப துன்ப நிகழ்வுகளில் சகலரும் பங்கு பற்றியும் சில நாட்கள் அவ் வீட்டிலேயே தங்கி நின்று உதவி செய்தும் தமதன்பை வெளிப்படுத்தினர்.

ஆதிகாலம் தொட்டு இவர்களது வழிபாட்டுத் தலங்களாக பெரும்படை அம்மன் கோயில், மகாவிஷ்ணு ஆலயம், வைரவர், வீதிகளில் சிறு கட்டிடங்களில் அமைந்த அம்மன் ஆலயங்கள் என அமைந்துள்ளன. இரண்டாகப் பிரிந்து நின்றவர்கள் தற்போது சகல ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டு வருவது மகிழ்ச்சியைத் தருவதோடு ஒற்றுமையையும் வளர்ப்பது ஆண்டவன் அருளாகும்.

இத்தோடு முன்பள்ளி பாடசாலை, அறநெறிப் பாடசாலையும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கிராமத்தின் வளர்ச்சியில் கைதடி நாவற்குழி ஸ்ரீ மகாவிஷ்ணுக.தொ.கூசங்கம், ஸ்ரீ மகாவிஷ்ணு சனசமூக நிலையம், ஸ்ரீ மகாவிஷ்ணு விளையாட்டுக்கழகம் போன்றவை அரும் சேவையாற்றி வருகின்றன. இன்னும் மறைந்து கிடக்கும் உண்மைகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். இக்கிராமம் மேன்மேலும் சிறப்புறவும் அபிவிருத்தியடையவும் இக்கிராம மக்கள் உறுதுணையாக இருப்பதோடு குறிப்பாக அறிவுசால் பெரியவர்கள் இளைஞர்கள் யுவதிகள் அனைவரும் ஒத்துழைத்தும் நல்சேவையும் ஆற்றி கிராமத்தைச் செழிப்புறச் செய்வார்களாகுக.

வே.இராமர்
ஓய்வு நிலை அதிபர்

https://raamu.vaathiyaar.blog/

Download PDF file

 

தமிழ்நெற்றின் நிதி, அதன் சுயாதீனத் தன்மை மற்றும் தமிழ் வாதாடு தளத்தின் உருவாக்கம்

1 month 2 weeks ago

தமிழ்நெற் ஒரு மின்னஞ்சற் பட்டியாக (mailinglist) 1995 நடுப்பகுதியில் நோர்வேயின் பேர்கன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், இணையத்தள செய்தி நிறுவனமாக 1997 ஜூன் மாதம் ஒஸ்லோவில் இருந்து அமெரிக்கா, பிரித்தானியா, ஸ்கொட்லான்ட், கனடா போன்ற இடங்களில் இருந்தோரின் துணையுடன் இயங்கலாயிற்று.

1998 ஆம் வருட ஆரம்பத்தில், நோர்வேயின் நீதி அமைச்சின் கீழ் இயங்கிய குடிவரவுத் திணைக்களம் அறிவித்திருந்த குடியேற்றவாசிகளுக்கும் அவர்களின் தாயகத்துக்குமான செய்திப் பரிமாற்றத்துக்கான ஓர் உதவித்திட்டத்தின் கீழ் சுயாதீனமாக நிதியைத் தமிழ்நெற் தேடிப் பெற்றுக்கொண்டது.

எனினும், இரண்டு வருடங்களுக்குள் அந்த நிதியைத் துண்டிக்கும் வகையில் இலங்கை அரசு நோர்வே வெளிவிவகார அமைச்சினூடாக மறைமுக அழுத்தங்களை மேற்கொண்டது.

இதைத் தொடர்ந்து தமிழ்நெற்றுக்கான நிதியூட்டம் முழுமையாகச் சுயாதீனமானதாக, ஆசிரியர் பீடத்தவரின் பொருளாதார முயற்சிகளிலும் பொதுமக்களின் பங்களிப்பிலும் தங்கியிருப்பதாக மாத்திரமே அமையவேண்டும் என்று அதன் ஆசிரியபீடம் முடிவெடுத்துக்கொண்டது.

அமெரிக்காவில் ஆரம்பத்தில் இருந்தே, குறிப்பாக மாமனிதர் சிவராம் அவர்கள் 1997 ஒக்ரோபரில் எம்மோடு இணைய முன்னர் இருந்தே, செயற்பட்டு வந்த மூத்த ஆசிரியர் ஒருவரின் சுயாதீன நிதித் திரட்டலோடு தமிழ்நெற் இயங்கலானது.

அதேவேளை நோர்வேயின் ஒஸ்லோ பல்கலைக்கழக விஞ்ஞானப் பூங்காவில் (Oslo Research Park) ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கி (Everbit Systems Development AS) அது ஈட்டிய வருவாயில் தமிழ்நெற்றின் பல வேலைகள் நடந்தேறின. தமிழ்நெற்றில் தற்போதும் பயன்படுத்தப்படும் உள்ளடக்க முகாமைத்துவ அமைப்பு (Content Management System / CMS) மற்றும் அதன் தொழில்நுட்பத் தளம் அங்கேயே உருவானது. இன்றும் அதே அடிப்படையில், பிரத்தியேக வழங்கியில் (Dedicated Server) அது இயங்கி வருகிறது.

எமது சொந்தத் தொழில் நுட்பம் என்பதால் பாதுகாப்பையும் இறுக்கமாகக் கட்டிக் காக்கமுடிகிறது. இலங்கை அரசு 2007 இல் தமிழ் நெற்றைத் தாக்குவதற்கு வெளி நிறுவனங்களை வாடகைக்கு அமர்த்தவும் தயார் என்று அறிவித்திருந்தது. இதனால் எமது வழங்கியின் மூல இணைய எண் (IP) வெளியில் தெரியாதவாறு Advanced DDoS Mitigation வெளி நிறுவனம் ஒன்றால் வழங்கப்படுகிறது. மேலும், அண்மைய வருடங்களில் மெய் நிகர் முகாமைத்துவத் தளம் (Virtualization Management Platform), முகில் கணின வழங்கியாகவும் (Cloud based VPS) ஒன்றுக்கு மேற்பட்ட மூல இணைய எண்களுடன் தொழில் நுட்பம் ஆசிரியபீடத்தினாலேயே கையாளப்பட்டு வருகிறது. YouTube வீடியோக்களைப் பாதுகாப்பதற்காக, பிரத்தியேகமான வீடியோ தள வழங்கி ஒன்றில் வீடியோக்களை பாதுகாத்தும் வருகிறோம். தற்போது (2021 இல்) பயநிடை (API) நுண்சேவைகள் (Micro services) அடங்கிய தரவமைப்பாக (Data Structure) தமிழ்நெற்றை மாற்றிவருகிறோம்.

இதற்கிடையில் தமிழ்நெற்றையும் குறித்த ஆய்வுப் பூங்காவில் இயங்கிய நிறுவனத்தையும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளையும் சில தமிழ்த் தரப்புகள் முன்னெடுத்திருந்தன. ஆனால், அந்த நடவடிக்கைகளால் குறித்த நிறுவனத்தினதோ அல்லது தமிழ்நெற் இணையத்தளத்தினதோ சுயாதீனத்தன்மையைக் கட்டுப்படுத்த முடியாதவாறு பாதுகாக்கவேண்டிய நிலைமை தோன்றியது. குழப்ப நடவடிக்கைக்கு ஆளானவர்களிற் சிலரும் தமது கோரிக்கைகளை, உண்மைநிலை உணர்ந்து, பின்னாளில் கைவிட்டுவிட்டனர்.

இந்த நூற்றாண்டின் முதல் நாளான 01 ஜனவரி 2000 அன்று தமிழ்நெற் ஆசிரிய பீடம் அதன் அறக்கட்டளையில் இருந்து நிர்வாகரீதியாக விடுபட்டு, சிவராம், சிறிதரன், ஜெயச்சந்திரன் ஆகிய ஆசிரியர்கள் மூவரின் பொறுப்பில் சர்வதேச ரீதியாக நிர்வகிக்கப்பட்டது.

சிவராம் அவர்களைத் தமிழ்நெற்றில் இருந்து ஓரங்கட்ட, அல்லது வெளியேற்ற, முன்னெடுக்கப்பட்ட முனைப்புகளை எதிர்கொண்டு தமிழ்நெற் தனது சுயாதீனத் தன்மையைப் பேணுவதில் மிகவும் உறுதியாகச் செயற்படவேண்டி இருந்தது.

இவ்வாறு ஆசிரிய பீடத்தவரின் சுயமுயற்சியிலேயே தமிழ்நெற் தனது மூல நடவடிக்கையின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாத்துவந்தது.

எனினும், ஒஸ்லோ விஞ்ஞானப் பூங்காவில் இயங்கிய நிறுவனத்தை மாமனிதர் சிவராமின் படுகொலைக்குப் பின்னர் நடாத்தமுடியாத நிலை தமிழ்நெற் நிறுவக ஆசிரியருக்கு உருவாகியதால் அந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. தமிழ்நெற்றின் நாளாந்தச் செய்திகளைக் கவனிக்கும் வேலைக்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டியிருந்தது.

ஆங்கிலத்தில் வெளிவந்துகொண்டிருந்த தமிழ்நெற் ஜேர்மன் மொழியிலும், பிரெஞ்சு மொழியிலும் வெளியாகவேண்டும் என்ற விருப்பு தமிழ்த் தேசிய மட்டங்களில் பரவலாக முன்வைக்கப்பட்டபோது, செய்திகளின் மொழிபெயர்ப்புக்கு ஐரோப்பாவில் மூவர் தொழில் ரீதியாக வேலைக்கமர்த்தவேண்டிய சூழலில் சில மாதங்கள் தமிழீழ நடைமுறை அரசின் பணிப்பின் பேரில் அதற்குரிய நிதிப் பங்களிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

தவிரவும், 2009 இற்குப் பின்னர் தமிழ்நெற்றின் நிதிச் செலவுகளுக்குச் சிக்கல் ஏற்பட்ட தருணங்களில் சில அமைப்புகள், குறிப்பாக அவற்றில் இருந்த பொறுப்பாளர்கள் முடிவுகளை மேற்கொண்டு, தாமாக முன்வந்து சில நிதிசார்ந்த சிக்கல்களில் இருந்து விடுபட உதவியும் இருந்தார்கள்.

எனினும், எத்தருணத்திலும் எமது மூல நடவடிக்கையான ஆங்கில செய்திச் சேவையின் எந்த ஒரு பணிக்கும் வேறு எங்கிருந்தும் நிதியூட்டம் பெறப்படவில்லை. ஆசிரியபீடத்தில் இருந்தோரின் முயற்சியாலும் பொதுமக்களின் நேரடிப் பங்களிப்பாலும் மட்டுமே சுயாதீனமான முறையில் நிதியூட்டம் செய்யப்பட்டுவந்தது.

காலப் போக்கில் சில அவசியமான முயற்சிகளில் நிதியற்ற சூழலிலும் அகலக் கால் வைத்து செயற்படவேண்டிய நிலை உருவாகியபோது ஆசிரியபீடத்தவர்கள் சுமைதாங்கிகளாக நிதிச் சுமையை சொந்தத் தோள்களில் சுமக்கவேண்டிய நிலையும் உருவாகியது. இதற்காக ஆசிரியபீடத்தவர் தனிப்பட்ட கடன்களைப் பெற வேண்டிய சூழலும் தோன்றியது.

தமிழ்நெற் முன்னெடுக்க விரும்பிய பலகணி எனும் நேர்காணல் முயற்சிக்கு பிரித்தானியாவில் சிலர் பரோபகார மனதோடு உதவினார்கள். கருவிகள் சிலவற்றைக் கொள்வனவு செய்ய முடிந்தாலும், வேலைத்திட்டத்தை முறையாக முன்னெடுப்பதற்குரிய கலையகத்தை அமைத்துக்கொள்வது சாத்தியமற்ற ஒன்றாகியது. இதற்கும் எமது சுயாதீனத் தன்மை பற்றிய நிலைப்பாடே காரணமாகியது.

சுயாதீனத் தன்மையைக் கைவிட்டு சில அமைப்புகளுடன் இயங்கும் தெரிவை மேற்கொண்டிருந்தால் பிரித்தானியாவில் ஓரிடத்தில் எமது கலையகம் உருவாகியிருக்கும். ஆனால், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பை நாம் கருத்திற்கொண்டே பின்வாங்கவேண்டியிருந்தது.

பலகணி போன்ற நடவடிக்கைகளில் ஊடக ரீதியாக அகலக் கால் வைத்துச் செயற்படுவதற்கும் அவசியமான முயற்சிகளைத் தொடர்வதற்கும் மட்டுமல்ல, நாளாந்தச் செய்திகளைத் தயாரித்து வெளியிடுவதற்குக் கூட நிதியற்ற சூழல் உருவாகியது. எனினும் எமது சுயாதீன நிதியூட்டல் என்ற விடயத்தில் நாம் எப்போதும் போல மிகவும் தெளிவான நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் உள்ளோம்.

தமிழ்நெற் மீதான பொருளாதாரச் சுமைகளில் இருந்து விடுபட தொலைதூரத்தில் இருக்கும் பரோபகார உள்ளம் கொண்ட ஒருவர் உதவியதால் நிதிசார் நெருக்கடிகளில் இருந்து தமிழ்நெற் விடுபட்ட போதும் பெரும்பணிகள் சிலவற்றைத் தொடரமுடியாமல் பின்வாங்கவேண்டியிருந்தது.

தமிழ்நெற்றின் மூல வேலைக்குரிய நிதி சுயாதீனமானதான முறையில் திரட்டப்படவேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே நாம் கடைப்பிடித்துவரும் பொதுவிதியைக் கைவிடாது நிதியூட்டம் செய்வது மிகவும் சிரமமானதொன்றாகியுள்ளது. ஆசிரியபீடத்தவர்கள் சிலர் நாட்டமிழக்கும் போது அல்லது அவர்களது தனிப்பட்ட வருவாய் பின்னடைவு காணும்போது தமிழ்நெற்றுக்கான நிதியூட்டலும் சிக்கலாகிவிடுகின்றது. அது மட்டுமல்ல பொதுமக்களிடம் சென்று நிதிசேகரிக்கும் திறமையும் ஆசிரியபீடத்தில் மீதமானோருக்கு இருக்கவில்லை.

இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர், 2018 இல், எமது கடந்த காலச் செயற்பாடுகளை, குறிப்பாக நிதி தொடர்பான விடயங்களை, முழுமையான ஒரு மீளாய்வுக்கு உட்படுத்தி அதன் பின்னரே தமிழ் வாதாடு தளம் என்ற அணுகுமுறையைச் செயற்படு தளமாக வகுத்துக்கொண்டோம். பொதுவெளியில் இதுவரை வெளிவராதிருந்த தமிழ்நெற்றின் சுயாதீனத் தன்மை குறித்த உண்மைகள் சொல்லப்படவேண்டும் என்பதையும் முடிவெடுத்துக்கொண்டோம்.

தமிழ்நெற் என்ற ஊடக வேலைக்கு அப்பால் பொது முன்னெடுப்புகள் பரவலான பங்களிப்போடும் சுயாதீனத் தன்மையோடும் வேறொரு தளத்தில் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற முடிவுக்கும் வந்தோம்.

அவ்வாறு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில் வேறு அமைப்புகளும் நிதிப் பங்களிப்பை வெளிப்படைத் தன்மையோடு மேற்கொள்ள முடியும். அனைவரும் பிளவுகளைத் தாண்டி ஒருங்கிணைந்து வேலை செய்யும் வாய்ப்பை ஒரு தளமாக உருவாக்கமுடியும்.

இன அழிப்புக்கான சர்வதேச நீதிக்கான பொருத்தமான கோரிக்கைகள், ஆதாரங்கள், நடவடிக்கைகளுக்குரிய சரியான திசையில் ஈழத்தமிழர் தேசத்தை இட்டுச்செல்லும் வழிமுறை அனைத்து வேலைத்திட்டங்களிலும் முதன்மையானது என்ற வகையில் தமிழ் வாதாடு தளத்தின் அணுகுமுறையை வகுத்துக்கொண்டோம்.

அங்கு துடிமத் தளப் பொறிமுறையே பிரதானமாக அடையாளம் காணப்பட்டது.

அறிவைக் கடத்தும் நூலாக்கம் போன்ற பெரும் நிதித் தேவையோடு முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தமிழ்நெற்றால் அடுத்ததாகத் தொடரப்படவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டோம்.

வழமைபோல தமிழ்நெற் ஆசிரியபீடம் எவ்வித பொருளீட்டும் நோக்கற்றுச் செயற்படும். எமது ஆசிரியர்கள் தமது நேரத்தை மட்டுமல்ல, பொருளாதாரத்தையும் சேர்த்தே தமிழ்நெற்றின் சுயாதீனத் தன்மையைப் பேணிவந்துள்ளார்கள். தொடர்ந்தும் மக்கள் பங்களிப்போடு தமிழ்நெற் தன்னை மீளுருவாக்கம் செய்துகொள்ளும் வகையில் அதற்குரிய நிதித்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில இணையத்தள மற்றும் செய்திநிறுவன வேலைகளுக்கும் அப்பால் நூலாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகையில் அவை தனிவேறான நிதித் திரட்டலோடு நேரடியான மக்கள் பங்களிப்போடு, ஆசிரியபீடத்தில் இருந்து வேறுபட்டு, பொதுப்படையான தன்மையோடு கையாளப்படவேண்டும் என்ற முடிவையும் மேற்கொண்டுள்ளோம்.

இதற்கு தமிழ்நெற் அறக்கட்டளை மற்றும் அதைப்போன்ற பொருளாதார இலாபநோக்கற்ற அறக்கட்டளைகள் வேறேதும் இருப்பின் அவற்றையும் அணுகலாம் என்றும் முடிவுசெய்துள்ளோம்.

2020 இன் இறுதியிலும் 2021 இன் ஆரம்பத்திலும் இரண்டு நூல்வெளியீடுகளை தமிழ்நெற் அமேசனூடாக மிகவும் குறைந்த செலவில் வெளியிட்டது. இது ஒரு முன்னோடி நடவடிக்கையே.

அவற்றில் ஒன்று கையடக்கமான இளைய தலைமுறைக்குரிய ‘தமிழும் ஈழத்தமிழும்’ (Tamil And Eezham Tamil) என்ற ஆங்கில நூலாகும். மறைந்த பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் தமிழ்நெற்றுக்காக எழுதிய அறிமுகம் ஒன்றே சிறிய கைநூலாக வெளியாகியது.

அதைப் போல, ‘தமிழ்த் தேசத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும்’ (The Fall and Rise of the Tamil Nation) என்ற ஆங்கில நூலின் மறுபதிப்பு தகுந்த உரிமை பெற்று உரிய பின்னிணைப்புகளின் சேர்ப்போடு வெளியிடப்பட்டது. தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரும் தமிழர் சுயாட்சிக்கழகத்தை ஆரம்பித்து தமிழ் இறைமைச் சிந்தனைப் பள்ளியின் முன்னோடியாகிய வ. நவரத்தினம் அவர்கள் எழுதிய நூலே அதுவாகும்.

இவற்றை அமேசனில் அனைவரும் பெற்றுக்கொள்ளலாம்.

அதைப்போல வேறு ஒரு தொகுப்பை தமிழ்நெற் அறக்கட்டளை, மாற்றுச் செய்திநிறுவன வலையமைப்பு அறக்கட்டளை மற்றும் தமிழ் வாதாடு தளம் இணைந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகவும் குறைந்த செலவில் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளோம். இவற்றுக்கான நிதிச்செலவை சில பரோபகார நல்லெண்ணம் கொண்டவர்கள் பொறுப்பேற்றுள்ளார்கள்.

செய்தி, நூலாக்கம், மற்றும் கருத்து நிறுவனமான தமிழ்நெற்றுக்கு அப்பாற்பட்ட பொதுவான செயற்பாடுகளில் வேறு சில அமைப்புகளும் தேவைக்கேற்ப இணைந்து செயற்படும் வகையில் தமிழ் வாதாடு தளத்தின் ஊடாக வெளிப்படைத் தன்மையோடு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது சிறப்பாக அமைந்துள்ளது. இன அழிப்பு நீதிக்கான துடிமத்தள உருவாக்கத்தையும் வேறு பல வேலைத்திட்டங்களையும் பரவலான பங்கேற்புடன் தமிழ் வாதாடு தளம் முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டது என்பது மன நிறைவு தரும் செய்தி.

 

https://www.tamilnet.org/

தியாகத்தின் இமயங்கள் | தொடர்

2 months ago
சில மறைமுகக் கரும்புலிகளின் வரலாறுகள்

 

எழுத்தாளர்: சிறீ இந்திரகுமார்
மூலம்: விடுதலைப் புலிகள் இதழ் (04.09.08)
எழுத்துணரியாக்கம்: தமிழ்நாதம், 12 செப். 2008 (http://www.tamilnaatham.com/articles/2008/sep/special/sriindrakumar20080912.htm)

 

எப்படி இவர்களுக்கு முகங்களில்லையோ, முகவரிகளில்லையோ, அதே போலத்தான் எத்தகைய அறிவாலும், எத்தகைய ஞானத்தாலும் கணிப்பீடு செய்யக்கூடிய வகையில் இவர்களது உள்ளகமும் இல்லை.

இங்கே எமுதப்பட்டுள்ளவை எல்லாம் இவர்களோடிணைந்த சில சம்பவங்கள் மட்டுமே. அந்தச் சம்பவங்களினூடு, உங்களால் முடிந்தால் அவர்களது மனவுணர்வுகளை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்; அவர்களின் சிந்தனைப் போக்கின் தன்மைகளை உய்த்தறிந்து கொள்ளுங்கள்.

தனிமனித அபிலாசைகளுக்கு அப்பால் – சுயத்தின் சிறைகளை உடைத்துக் கொண்டு அவர்களது சிந்தனையோட்டம் விரிந்தபொழுது – ஈடினையற்ற தேசபக்தியுடன், தமதுடலோடு தமதுயிரோடு ~தம்மையே தியாகம் செய்யத் துணிந்தவர்கள் அவர்கள்.

ஓயாத எரிமலையாக சதா குமுறிக்கொண்டிருந்த நெஞ்சுக்குள் ஆற்ற முடியாத தாகமாக எழுந்து கொண்டிருந்த சுதந்திர வேட்கையைத் தணிக்க எதுவும் செய்யவும், எங்கேயும் செய்யவும் தயாரான நெஞ்சுரத்தோடு அவர்கள் பயணம் போனார்கள்.

ஒரு மாறுபாடான – முற்றிலும் எதிர்மாறான தள நிலைமைக்குள் நின்று அவர்கள் எவ்விதமாக இவற்றைச் சாதித்திருப்பார்கள் என்பதை, ஆற அமர இருந்து, உள்ளத்தைத் திறந்து சிந்தித்துப் பாருங்கள்.நெஞ்சு புல்லரிக்கும்; உயிர் வேர்க்கும்.

அவர்கள் – கண்களுக்கு முன்னால் விரிந்து கிடந்த இன்றைய ~நவீன நாகரிகத்தின் தாலாட்டில் தான் உறங்கினார்கள்;. புலிகளின் ஒழுக்க வாழ்வின் உயரிய மரபை மீறிவிடச் செய்யும் சூழ்நிலைக்குள் தான் உலாவந்தார்கள்; இவற்றுக்குள் வாழ்ந்தும் – எதற்கும் அசையாத இரும்பு மனிதர்களாக நெருப்பைக் காவித்திரிய எப்படி அவர்களால் முடிந்தது?

வெளிப்படையாக – அந்த உல்லாச வாழ்வோடு கலந்து சீவித்த போதும், உள்ளுக்குள் – இதய அறைகளின் சுவர்களுக்குள் – தாயக விடுதலையின் வேட்கையை மட்டுமே சுமந்து கொண்டு, பகைவனின் அத்திவாரங்களைக் குறிவைத்துத் தேடி அலையும் அபூர்வமான நெஞ்சுரம் எங்கிருந்து இவர்களுக்குள் புகுந்தது?

பகைவனின் இலக்கை அழிக்கும் தன் நோக்கினை அடைவதற்காக, தன்னையழிக்கவும் துணிந்த இந்த அதிசய மனவுணர்வை எப்படி அவர்கள் பெற்றார்கள்?

தாயகத்துக்காகச் செய்யப்படும் உயிர் அர்ப்பணிப்புகளில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என்பது தான் உண்மை. ஆனாலும், இங்கென்றால் – வெடி அதிரும் கடைசி நொடிப்பொழுது வரை – பரிபூரணமான ஒரு ~போர்ச் சூழ்நிலை அந்த வீரனது மனநிலையை அதே உறுதிப்பாட்டோடு பேணிக்கொண்டேயிருக்கும். ஆனால் அங்கு……….?

அது முற்றிலுமே தலைகீழான ஒரு தளநிலைமை. மானிட இயல்புணர்வுகளைத் தூண்டி – அவற்றுக்குத் தீனிபோட்டு – சுய கட்டுப்பாட்டை இழக்கச் செய்து – மன உறுதிப்பாட்டைச் சிதைத்து விடக்கூடிய உல்லாசத்தின் மடி அது.

அதில் படுத்துறங்கி – பகை தேடி, வேவு பார்த்து, ஒழுங்கமைத்து, குறி வைத்து வெடிபொருத்திப் புறப்பட்டு, மனிதக்குண்டாகி………. எல்லாவற்றையும் தானே செய்வதோடு – பகையழிக்கும் போது தனையழிக்கும் போதும் கூட – தன்பெயர் மறைத்துப் புகழ் வெறுக்கின்ற தற்கொடை, ஒரு அதியுயர் பரிமாணத்தை உடையது. உயிர் அர்ப்பணத்தில் அது உன்னதமானது ஈடு இணை அற்றது. இந்த வியப்புமிகு தியாக உணர்வை இவர்களுக்கு ஊட்டியது எது?

இவையெல்லாம் – அந்த ~நிழல் வீரர்களினது பன்முகப்பட்ட தோற்றப்பாட்டின் ஓரிரு பக்கங்கள் மட்டுமே. சொல்லப்படாத பக்கங்கள் நிறைய உண்டு; அவை எழுத முடியாத காவியங்கள்;; அவர்கள் முழுமையாக எழுதப்படும் போது – படிக்கின்றவர்கள் விறைத்துப் போவார்கள்;; ஆன்மா உறைந்து சிலையாவார்கள்.

எப்படி அவர்கள் எதிரியின் உச்சந்தலையில் கூடாரமடித்தார்கள்……….? கூடாரமடித்து – அவனது மண்டை ஓட்டைத் துளையிட்டு அவர்கள் உள்ளே நுழைந்தது எப்படி……….? நுழைந்து – அவனது மூளையின் பிரிவுகளையல்லவா அவர்கள் குறிவைத்தார்கள். அது எப்படி……….? எவ்விதமாக இவையெல்லாம் சாத்தியமானது……….? எத்தகைய மதிநுட்பத்தோடு நகர்வுகளை மேற்கொண்டு, இந்த அதியுயர் இராணுவ சாதனைகளை அவர்கள் படைத்திருப்பார்கள்……….? இந்த விவேகத்தையும் புத்திக்கூர்மையையும் இவர்களுக்கு ஊட்டி, அவர்களை நெறிப்படுத்தி வளர்த்தது எது?

உண்மையிலேயே இவையெல்லாம் மேனி சிலிர்க்கச் செய்யும் விந்தைகளே தான்; நம்புதற்கரிய அற்புதங்கள் தான்!

மன ஒருமைப்பாட்டோடு தங்களைத் தாங்களே வழிப்படுத்தி, எங்கள் இயக்கத்தின் உயரிய விழுமியங்களைக் காத்த அந்தப் புனிதர்கள்; தான் அழியப்போகும் கடைசிப்பொழுதுகளிலும் நிதானத்துடனும் விவேகத்துடனும் செயலாற்றி, பகைவனின் இலக்குகளை அழிப்பதில் மட்டுமே குறியாக இருந்த அந்தக் கரும்புலிகள்; ~முகத்தை மறைத்து, புகழை வெறுத்து, மனித தியாகத்தின் இமயத்தைத் தொட்டுவிட்ட பிரபாகரனின் குழந்தைகள்……….

இனிப் படியுங்கள்

நிதர்சனம், புலிகளின்குரல் உருவாக்கத்தின் காரணகர்த்தா பரதன் வாழ்க்கை வரலாறு

2 months 1 week ago

நீ சென்ற இடமெல்லாம் ஒளியானதே, தமிழ் வரலாறு உலகெங்கும் பதிவானதே !

A01A0D37-68A7-4157-89D0-FD34792AD932.jpe

நிதர்சனம், புலிகளின்குரல் வானொலி உருவாக்கத்தின் காரணகர்த்தாவும், அவற்றின் முதன்மைப் பொறுப்பாளருமாகிய பரதன் அண்ணாவைப் பற்றி அவருடன் நீண்ட காலமாய் பழகியவனும், ஒன்றாக செயற்பட்டவன் என்ற காரணத்தினாலும் அவர் பற்றிய முக்கியமான கருத்துப் பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

பரதன் அண்ணா 83ஆம் ஆண்டு தன்னை முழுநேர உறுப்பினராக புலிகளுடன் இணைத்துக் கொண்டார். 1987இல் தான் எனக்கு அவருடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

ஆரம்பத்தில் திலீபன் அண்ணாவுடன் நிதர்சனம் முகாமிற்கு செல்வேன். அப்போது பரதன் அண்ணாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் செல்வதோ நடுச்சாமம். அப்போது அவர் அடுத்த நாள் ஒலிபரப்பிற்கான வேலைகளை செய்து கொண்டிருப்பார். பரதன் அண்ணாவின் முகாமிற்கு செல்வதென்றால் எமக்கு பெரும் ஆசை. காரணம் அந்த சாமத்திலும் சுடச்சுடப் பாணும் ஜாம் அல்லது பட்டரும் இருக்கும். ஆனால் அவருக்கு வெறும் தேநீர் மாத்திரம் போதும். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், எமது போராளிகள் இராப் பகலாக கண் விழித்து தங்கள் வேலைகளை திறம்பட செய்தவர்கள். பரதன் அண்ணாவைப் பொறுத்தவரை வளமில்லாத காலத்திலும் வளமான படைப்புக்களை தான் ஒலி, ஒளிபரப்ப வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். ஒவ்வொரு பதிவுகளும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமான பிடிவாதத்தில் இருந்தார்.

தன்னை விளம்பரப்படுத்தாத ஒரு மனிதர். தலைவரின் கனவை கிட்டண்ணாவுடன் சேர்ந்து நனவாக்கியவர். நேர்த்தியென்ற பேச்சு வருகின்ற போது கிட்டண்ணாவையே உதாரணமாகக் காட்டுவார் பரதன் அண்ணா. காரணம் ஒருமுறை அவர்களது முகாமிற்கு காலையிலேயே கிட்டண்ணா போயிருக்கின்றார். முகாம் துப்புரவாக இல்லை. ஒருவர் மட்டுமே வேலை செய்துகொண்டிருந்தார். மற்றவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவரே முகாமை சுத்தம் செய்யத் தொடங்கி விட்டார். அயர்ந்த தூக்கத்திலிருந்தவர்களை எழுப்பவுமில்லை. இரவிரவாக வேலை செய்து களைத்துத் தூங்குகின்றனர் என்று அவருக்குத் தெரியும். ஆயினும் சத்தம்கேட்டு விழித்துக் கொண்டவர்கள் அசடுவழிய நின்றனர். இந்தச் சம்பவத்தை மறக்க முடியாது என்று பரதன் அண்ணா அடிக்கடி கூறுவார்.

இந்திய இராணுவத்துடனான போரின் போது ஒலி, ஒளி நாடாக்களை பத்திரப்படுத்துவது மிகவும் சவாலான விடயம். ஈரத்தன்மை புகாதவாறு புதைக்க வேண்டும். அதனை திறம்படச் செய்து முடித்தார் பரதன் அண்ணா.

இந்திய இராணுவத்தின் முதற்குறியே நிதர்சனமாக இருந்தது. காரணம் நிதர்சனத்தின் செய்திகள் ஒளிப்படங்கள் எல்லாம்  இந்திய வல்லரசிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.  இதற்கு மூலமாக இருந்தவர் பரதன் அண்ணா.

88 காலப்பகுதியில் கொழும்பில் மீண்டும் அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இருவருக்கும் வெவ்வேறு வேலைகள். அவர் அப்பொழுது முதலாவது ஒலிநாடா உருவாக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். பின்னர் அது ‘புயல்கால ராகங்கள்’ என்ற பெயரில் தென்னிந்திய கலைஞர்களின் பங்களிப்பால் தரமான ஒலிநாடாவாக வெளியிடப்பட்டது. அதில் பாடிய மனோ, வாணி ஜெயராம் ஆகியோர் பாடி முடித்த பின்னர் அழுதுவிட்டார்கள் என்று குறிப்பிட்டார். அவ்வளவு சிறப்பாக அமைந்தது அவரது ஆரம்ப முயற்சி. இதற்கான பாடல் வரிகளை காசியண்ணா, புதுவையண்ணா, இன்குலாப் ஆகியோர் எழுதியிருந்தனர்.

அக்காலகட்டத்தில் இலங்கையின் அதிபராக இருந்த பிரேமதாசா அவர்களுடனான பேச்சுவார்த்தைக் காலம். ஒலி – ஒளிபரப்பு சாதனங்களை எல்லாம் வாங்குவதற்கு ஏற்ற காலமாகவும் திட்டமிடப்பட்ட நேரமாகவும் காணப்பட்டது. அதற்கு முன் தலைவரை சந்திக்க வேண்டும். வன்னிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. பரதன் அண்ணாவிற்கு அதுவொரு புது அனுபவம். நானே அடிக்கடி சென்று வருவேன்.

சில நேரங்களில் தலைவரை சந்திக்க நாள் கணக்கில் காத்திருக்க வேண்டும். அந்த காத்திருக்கும் காலத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. நாங்கள் வவுனியாவில் கிடாய்ச்சூரி என்னுமிடத்தில் ஒரு ஆதரவாளர் வீட்டில் நின்றிருந்தோம். ஆதரவாளரின் மகன் வந்து உங்களுக்கு பால் பிளேன் ரீயோ, சும்மா பிளேன் ரீயோ வேணும்? என்று கேட்டார். சிரிப்பை அடக்கிக் கொண்டு சும்மா பிளேன் ரீ என்று சொல்லி விட்டு அவர் பிளேன் ரீ கொண்டு வந்த பின் அவரை இருத்தி சரியாக சொல்வது எப்படியென பரதன் அண்ணா சொல்லிக் காட்டினார். பின்பு அவர் புத்தகத்துடன் வந்து பரதன் அண்ணாவிடம் பாடம் கற்றது வேறு விடயம். இதை நான் இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், ஒரு விடயத்தை பகிடியாக சிரித்து விட்டு கடந்து செல்பவரல்ல அவர். சரியானதை சொல்லிக் கொடுத்து நேர்ப்படுத்தும் சீரிய பண்பு கொண்டவர் தான் பரதன் அண்ணா.

தலைவரை சந்திக்க வந்த பின்பு இலத்திரனியல் கொள்வனவிற்காக நித்தியண்ணாவுடன் சிங்கப்பூர் சென்று அங்கு தான் பெரிய கொள்வனவை முடித்து வந்தார். லொறி நிறைய இலத்திரனியல் சாதனங்கள். அந்த நேரமே கோடிக்கணக்கான பெறுமதி கொண்டவை. கட்டுநாயக்காவிலிருந்து மணலாறு செல்லும் வரை STF இன் பாதுகாப்பிலேயே கொண்டு போய் சேர்க்கப்பட்டது. பின்னாளில் இதை வைத்து தான் தர்மேந்திரா கலைக்கூடம் உருவானது.

1990இல் இந்திய இராணுவம் வெளியேறி எமது கட்டுப்பாட்டில் எமது பிரதேசம் வந்த பின், இருவரும் சேர்ந்து பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் நிதி நிர்வாகத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டேன். ஆரம்பமே பெரும் சவாலாகத்தானிருந்தது. புதிதாக எல்லாவற்றையும் நிறுவ வேண்டும். ஒரு ஒழுங்கான வடிவமைப்பின் கீழ் நேர்த்தியாக செய்து முடித்ததில் அவரின் சகலதுறை ஆளுமையும் புலப்பட்டது.

நிதர்சனம், புலிகளின்குரல் வானொலிச் சேவைகள் 90இல் மிகுந்த தரத்துடன் தொடங்கப்பட்டது. சொற்ப ஆட்களுடன் ஆரம்பித்த இச் சேவை மிகப்பெரும் விருட்சமாக பரிணமித்தது. பரதன் அண்ணாவின் நிர்வாகத் திறமையால் பலாலி வீதியில் பெரிய அலுவலகம் உருவாக்கப்பட்டு அங்கு அமலன் அரங்கம் அமைக்கப்பட்டு அங்கேயே ஒலி – ஒளிப் பதிவுகள் செய்யப்பட்டன. ஒலி – ஒளிபரப்பின் தரத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்தார் பரதன் அண்ணா. எந்தவொரு விட்டுக்கொடுப்பிற்கும் இடமிருக்காது.

நிலக்கீழ் ஒலி – ஒளிப்பதிவுக்கூடம் அமைக்கத் தீர்மானித்து, அதற்கான வரைபடம் பரதன் அண்ணாவால் வரையப்பட்டு, அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. மேலிருந்த மரங்கள் வெட்டப்படாமல் அதனைச் சுற்றியே நிலம் அகழப்பட்டு, நிலக்கீழ் அறை உருவனது. பார்ப்பவர்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக மிகவும் கவனத்துடன் பலமாகவும், நேர்த்தியாகவும், அழகாகவும் பாதுகாப்பனதாகவும் உருவாக்கிய பெருமை அவரையே சாரும். படப்பிடிப்பு போராளி தர்மேந்திரா நினைவாக தர்மேந்திரா கலையகம் உருவானது. குறைந்த செலவில் தரமானதாக உருவானதில் தலைவராலும் பாராட்டப்பட்டோம்.

பரதன் அண்ணா எவ்வளவு கண்டிப்பானவரோ அந்தளவிற்கு கரிசனையும் உடையவர். அது போராளிகளாக இருந்தாலும் சரி, பொது மக்களாக இருந்தாலும் சரி அதற்கு சில உதாரணங்களைக் கூறலாம்.

எனக்கு நான்கைந்து நாட்களாக உடம்பு வலியுடன் கூடிய காய்ச்சல் இருந்தது. சாதாரண காய்ச்சல் என்று பனடோலைப் போட்டுவிட்டு எனது வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். நாளாக நாளாக குறையவில்லை. என்னைப் பார்த்த பரதன் அண்ணா என்ன நவீனத்தார் ஒரு மாதிரியாக இருக்கிறாய். உடம்பு சரியில்லையோ என்று கேட்டார். காய்ச்சல் போலிருக்கிறது என்றேன். வா ஆஸ்பத்திரிக்குப் போவோம் என்றார். இல்லை பனடோல் போட்டனான். ஆக ஏலாது விட்டால் போவோம் என்று சொன்னேன். நீ போய் படப்பு என்று சொன்னார். எனக்கு கொஞ்ச வேலை இருக்கிறது. முடித்துவிட்டு படுக்கிறேன் என்று சொன்னேன். அதைப் பிறகு செய்யலாம். படுத்து எழும்பினால் சுகமாயிருக்கும். போய் படு என்று சொல்ல, நானும் அறைக்குள் சென்று படுத்துவிட்டேன். சிறிது நேரம் செல்ல நடுங்கத் தொடங்கி விட்டது. சத்தம் கேட்டு வந்து பார்த்தவர் நல்லா கூடிற்றுது போல என்று சொல்லி, வாகனம் தர்மேந்திராவில் நிற்கிறது. எடுத்துக்கொண்டு வாறன் என்று கூறி போர்வையால் போர்த்ததும், பயங்கரமாக குலப்பன் அடிக்கத் தொடங்கி விட்டது.

அடுத்த கணமே என்னைத் தூக்கிக் கொண்டு அருகிலிருந்த திருநெல்வேலி நேர்ஸிங் ஹோமிற்கு போனார். எனக்கோ கதைக்க முடியாத நடுக்கம். என்னைப் பரிசோதித்த மருத்துவர் சிவபாதசுந்தரம், இது சாதாரண காய்ச்சல் இல்லை. இரத்தப் பரிசோதனையின் மூலம் தான் கண்டுபிடிக்கலாம் என்றும், உடனடியாக இரத்தப் பரிசோதனையை போய் செய்யும்படியும் கூறினார். அதற்குள் மணியண்ணாவும் வாகனத்தைக் கொண்டுவந்து விட்டார். இரத்தப் பரிசோதனையில் கடுமையான நெருப்புக் காய்ச்சல் என்றும் உடனடியாக அதற்கான மருந்து ஏத்த வேண்டும் எனவும், ஆனால் மருந்துக்குத் தட்டுப்பாடு. எங்கிருந்தாவது கொண்டு வந்தால் தான் காப்பாற்ற முடியும் என்றும் சொன்னார். பரதன் அண்ணாவின் முகம் மாறிவிட்டது. அதை வெளிக்காட்டாமல் எனது தலையைத் தடவி நீ ஒன்றுக்கும் யோசிக்காதை நான் மருந்தோடுதான் வருவேன் என்று கூறி, திலகனை என்னோடு நிற்கும்படியும் சொல்லி விட்டு சென்றார். சிலமணித்தியாலங்கள் கழித்து மருந்தோடுதான் வந்தார். உடனடியாக மருந்து ஏற்றத் தொடங்கி விட்டார்கள்.

வேலைப் பழுவிலும் அடிக்கடி வந்து பார்த்து மருத்துவரிடமும் கதைத்துவிட்டு தான் போவார். ஒரு வாரத்தின் பின் காய்ச்சல் குறைந்து விட்டது. அந்த சமயத்தில் என்னைப் போல் பெண் பிள்ளை ஒருவருக்கும் காய்ச்சல். மருந்து ஏற்ற வேண்டும். மருத்துவர் பரதன் அண்ணாவிடம் நிலைமையைக் கூறி மருந்தை அந்தப் பிள்ளைக்கும் கொடுங்கள். பொது மக்களோ, போராளியோ உயிர்தான் அவர்களுக்காகத் தானே நாம் போராடுகின்றோம் என்று கூறி அந்தப் பிள்ளையையும் பார்த்து ஆறுதல் கூறினார். அந்தப் பிள்ளை சுகமாகி தாயாருடன் எமது முகாமிற்கு வந்திருந்தார். தாயார் பரதன் அண்ணாவின் கையைப் பிடித்து அழுத அந்த நெகிழ்வான தருணம் இன்னும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு.

அவரின் நிர்வாகத் திறமை பார்ப்போரை வியக்க வைக்கும். அவரது ஆளுமையின் கீழ் நிதர்சனம், புலிகளின்குரல், தமிழீழ வானொலி, புகைப்படம், ஒலி, ஒளி நாடா வெளியீடுகள், பயிற்சி வகுப்புகள் என அவரின் ஆளுமை வியாபித்திருந்தது. பொறுப்பாளன் என்றால் பொறுப்பேற்கும் பக்குவமும் வேண்டும். இதற்கு ஒரு சம்பவம் தலைவரின் மாவீரர் நாள் பேச்சு ஒலிபரப்பில் நடந்தது. அப்போது புலிகளின்குரல் ஒலிபரப்பிற்கு சிவா அண்ணா பொறுப்பாகவிருந்தார். தலைவரின் மாவீரர் நாள் உரையின்போது தடங்கல் ஏற்பட்டது. ஒழுங்காக தயாரிக்கப்பட்ட உரையின் ஒலி நாடாவிற்குப் பதிலாக வேறு போடப்பட்டு விட்டது. பின் இடைநிறுத்தி மீண்டும் ஒலிபரப்பப்பட்டது. தலைவரின் உரையில் எப்படி இது நடக்கச் சாத்தியம் என்று இன்றுவரை புரியவில்லை. எல்லாம் சரிபார்க்கப்பட்டுத் தான் இறுதியாக ஒலிபரப்புக்குக் கொடுக்கப்படும். உடனடியாக தலைவரிடம் சென்று தவறுக்குத் தானே பொறுப்பேற்றுக் கொண்டார்.

தவறிழைத்தது அவரல்ல. ஆனாலும் தான் முழுவதற்கும் பொறுப்பு என்பதால், அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். தலைவரும் பரவாயில்லை. பரதன் அடுத்தமுறை இப்படி நடக்காமல் நீங்களே நேரடியாக நின்று கவனியுங்கள் என்று சொல்லியனுப்பானார். இந்த நிகழ்வு அவரை வெகுவாகப் பாதித்திருந்தது. அதற்குப் பின் தனி ஒலிநாடாவில் பதியப்பட்டு அவரே நேரடியாகச் சென்று கொடுத்து கவனித்துக் கொள்வார்.

அவரது ஒலிபரப்பில் உருவான முதலாவது குறும்படம் ‘இனியொரு விதி’ தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய தயாரிப்பு வேலைகள். ஞானரதனின் எழுத்துருவாக்கம். நாவண்ணன் அவர்களின் மகள், ஸ்ரீராம் (படப்பிடிப்பு போராளி, பின்நாளில் கிழக்கு மாகாண கடற்புலிகளின் தளபதி) நடித்திருந்தனர். பரதன் அண்ணாவிற்கு உதவியாளராக நான் இருந்தேன். நாவற்குழிக்கும், கைதடிக்கும் இடைப்பட்ட குளத்துடன் சேர்ந்த வயல் வெளியில் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒலி ஒளிக் கோவைகளின் பின்னர் 30 நிமிட குறும்படம் தயாரானது. தயாரானவுடன் தலைவர் எமது முகாமிற்கு வந்து படத்தைப் பார்வையிட்ட பின்னர் அவருடைய முகத்தில் ஒரு பெருமிதம். நல்லாச் செய்திருக்கிறியள். முப்பது நிமிடம் என்றீர்கள் கெதியாய் முடிந்து விட்டது என்றார். இந்த வார்த்தைக்காகத்தான் பரதன் அண்ணாவும், நாமும் காத்திருந்தோம். விரைவாக முடிந்து விட்டது என்றால் பெரிய வெற்றி தானே.

பின்னர் வெளியீட்டு விழா ஸ்ரீதர் திரையரங்கில் நடைபெற்றது. அங்கு தான் முதல் ஒளிபரப்பு வெளியானது. பல நாட்கள் நிறைந்த மக்களுடன் இனியொரு விதி ஒளிபரப்பானது.

அதைத் தொடர்ந்து உதயம் ஒலிநாடா உருவானது. இதற்கான ஒலிப்பதிவுகள் யாழ். ரமணன் குழுவினரின் இசையமைப்பில் தர்மேந்திரா கலையகத்தில் நடைபெற்றன. சில பாடல்களுக்கு தவில், நாதஸ்வர இசை சேர்க்கப்பட்டது. இதன் போது ஒரு துயர் நிகழ்வும் ஏற்பட்டது. அருகில் இருந்த வீட்டுக்காரர் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார். அதற்காக அடுத்த நாள் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டு இறுதிக் கிரியைகளின் பின்பு தான் மீண்டும் ஒலிபரப்பு நடைபெற்றது. இந்த ஒலிப்பதிவில் வீரமணி ஐயரின் பங்கும் மிகவும் முக்கியமானது.

முழுக்க முழுக்க தமிழீழக் கலைஞர்களைக் கொண்டு தர்மேந்திரா கலையகத்தில் உருவான முதலாவது ஒலிநாடா இதுவாகும். இதன் வெளியீடும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

சண்டைகள் உக்கிரமடைந்திருந்த நேரம், அப்பொழுது கிட்டண்ணா லண்டனில் இயங்கிக் கொண்டிருந்தார். அவர் பரதன் அண்ணாவிடம் அந்த நேரத்தில் நடந்த நிகழ்வுகளையெல்லாம் ஆவண ஒளிவீச்சாக செய்து அனுப்பும்படி கூறியிருந்தார். அதற்கான வேலைகள் தொடங்கிய நிலையில் பரதன் அண்ணா ஒன்றில் மட்டும் தெளிவாக இருந்தார். தரமானதும், அதேநேரம் மேலைத்தேய ஊடகங்களுக்கு இணையாகவும் இருத்தல் வேண்டும் என்பது தான் அது.

அந்த நேரம் தான் மாங்குளம் முகாம் மீதான தாக்குதல் முடிவிற்கு வந்த நேரம். வேறு இடங்களில் சண்டை மிகவும் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. எமது படப்பிடிப்பு போராளிகள் பெரும் குண்டு மழையிலும் தம்மால் எடுக்கக்கூடிய காட்சிகளையெல்லாம் எடுத்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். போராளிகளின் வீரம், மக்களின் அவலங்கள் அவர்களின் காட்சிகளில் சாட்சியங்களாக அமைந்தன. அவற்றில் இருந்து ஒரு தரம் வாய்ந்த ஒரு ஒளிவீச்சு ஆவணம் உருவானது. இதில் பல பிரதிகள் எடுக்கப்பட்டு கிட்டண்ணாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. நித்திரையற்றதன் விளைவாக உடல் அசதி காட்டத் தொடங்கியது.

அடுத்த நாள் தலைவரின் மாவீரர் நாள் உரைக்கான ஒலி, ஒளிப்பதிவுகள் நடைபெறவிருந்தது. அதற்கான ஆயத்தங்களையும் செய்ய வேண்டும். மறுநாள் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து விட்டு மீண்டும் ஒருமுறை எல்லாவற்றையும் சரிபார்த்துக் கொண்டோம். வருபவர்களுக்கான உணவுகளும் தயாராகி விட்டது. பரதன் அண்ணாவும், கிருபாவும் பங்கருக்கு சென்று விட்டனர். மீண்டும் ஒலிப்பதிவுக் கருவிகளைப் பரிசோதிப்பதற்கு ஆயத்தமானேன். நான் முன்வாசலில் உள்ள கதிரையில் இருந்து கொண்டு காவலில் நின்ற ரஞ்சனிடம் வாகனம் வாகனம் வந்தால் சொல்லு என்று சொல்லிவிட்டு அசந்து தூங்கி விட்டேன். ஜெயம் அண்ணா வந்து எழுப்பும் மட்டும் வாகனம் வந்து நின்றது தெரியாது. திடுக்கிட்டு முழித்து பின்பக்கம் செல்ல முயன்ற போது, அண்ணை அருகில் வந்து விட்டார். நவீனன் என்று கூப்பிட்டு கேட்ட முதல் கேள்வியே எத்தனை நாள் நித்திரை கொள்ளவில்லை என்பது தான். அதற்குள் பரதன் அண்ணாவும் வந்துவிட்டார். கிட்டண்ணாவிற்கு அவசரமாக ஒளிநாடா அனுப்ப வேண்டியிருந்ததால், இரண்டு நாளாக நித்திரையில்லை என்று சொல்ல, அதற்கு தலைவர் இரவு நித்திரை முழித்து வேலை செய்தால் கட்டாயம் பகலில் குறைந்தது மூன்று மணிநேரமாவது நித்திரை கொள்ளுங்கள் என்றார். நீங்களும் தான் என்று பரதன் அண்ணாவைப் பார்த்துச் சொன்னார்.

நான் இதைக் குறிப்பிட்டதன் நோக்கம் தலைவர் போராளிகளிடத்தில் எவ்வளவு அக்கறையும், கரிசனையும் கொண்டவர் என்பதற்கான சிறு உதாரணமே. அண்ணை ஒலிப்பதிவு முடித்துப் போகவே நடுச்சாமம் ஆகி விட்டது. அடுத்த நாள் அடுத்த ஓட்டத்திற்குத் தயாராகி விடுவோம். இரண்டு நாட்களில் அடுத்த ஒரு பெரிய நிகழ்வுக்கான தயார்ப்படுத்தல்.

அது புலிகளின் குரல் வானொலியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா. யாழ். இந்துக் கல்லூரி மண்டபத்தில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு, விழாவும் தொடங்கி விட்டது. அதில் நல்லூர் ஸ்ரீதேவி வில்லிசை் குழுவினரின் வில்லுப்பாட்டு நடைபெற்றுக் கொண்டிருந்தது. பொருளாதாரத்தடை பற்றி பேசியவர் சவர்க்காரத்தை தடை செய்து விட்டு என்று கூறி… அப்போதைய ஜனாதிபதியின் சாதி பற்றி மறைமுகமாக மேடையில் பேசியதை அவதானித்த பரதன் அண்ணா, உடனடியாக அவர்களது நிகழ்ச்சியை நிறுத்தி திரை போடச் சொன்னார். அவர்களை மண்டபத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டு விழாவிற்கு வந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை விளக்கி எங்களுடைய நிகழ்வில் நடந்த இந்தச் சம்பவத்திற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இதில் இரண்டு விடயங்கள் புலனாகியது. ஒன்று கொள்கைப் பற்று, மற்றையது முடிவெடுக்கும் திறன்.

அந்த நிகழ்வு எல்லோராலும் பாராட்டப்பட்டு புலிகளின் நிலையை வலியுறுத்திய பேசுபொருளாகவும் அமைந்தது. அதேநேரம் எதிரியைக்கூட மதிக்கும் மாண்பாயும் அமைந்தது. இதை தலைவர் அறிந்தவுடன், பரதன் செய்தது தான் சரி. இது மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்றார்.

நான் இவற்றையெல்லாம் எழுதுவதன் காரணம் தேசத்தின் மீதும், தேசியத் தலைவர் மீதும் எவ்வளவு பற்றுறுதியோடிருந்தார் என்றும், அவரின் ஆற்றலும் அர்ப்பணிப்புகளும் சாதாரணமல்ல; ஊடகத்துறையில் அவர் ஏற்படுத்திய தாக்கங்களை தெரியப்படுத்தவுமே.

சில வருடங்களின் பின் நான் வேறு வேலைக்கு சென்று விட்டேன். அவரும் வேறு திசை. நாட்டில் அவரைக் கடைசியாகக் கண்டது 1996ஆம் ஆண்டின் முற்பகுதியில் மாங்குளத்திற்கும், கனகராயன் குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு குடிசையில். அவர், வினோ அக்கா, இரு பிள்ளைகள். இவர்களுடன் பரதன் அண்ணாவின் அப்பா, அம்மாவும். அந்த நேரம் மிகவும் கஷ்டம். மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருந்த நேரம். இடப்பெயர்வின் வலி அது. பின் அங்கிருந்து ஒருவாறாக இலண்டனுக்கு குடும்பத்துடன் வந்து விட்டார். நான் மீண்டும் பரதன் அண்ணாவைச் சந்தித்தது 1999ஆம் ஆண்டு. நான் இலண்டன் வந்தவுடன் முதலில் வந்து பார்த்தது பரதன் அண்ணா தான்.

அப்பொழுது அவர் இலண்டனில் ஒளிப்படம் எடுக்கும் பணியை செய்து கொண்டிருந்தார். அவருடன் பல நிகழ்வுகளில் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பை எனக்குத் தந்தார். அந்தச் சமயத்தில் தான்  மூன்றாவது கண்(THIRD EYE) என்னும் ஒளிப்பட நிறுவனத்தை தொடக்கி நடத்தினார். அவரால் இரண்டு ஒளி நாடாக்களும் (UN TOLD STORY / MY NEIROUR IN SRI LANKAN TAMIL) தயாரித்து வெளியிடப்பட்டது.

அவர் தொடாத துறைகளே இல்லை. அவருக்கு எல்லாமே தெரிந்திருந்தது. அவருடைய கனவே எமது போராட்டத்தின் முழுமையும் ஆவணப்படுத்தி அதை அடுத்த சந்ததியும் அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் உருவாக்க வேண்டும் என்பது தான். அவர் எந்தவொரு சூழ்நிலையிலும் தேசத்தின் மீதும், தேச மக்களின் மீதும் தேசியத் தலைவர் மேலும் கொண்டிருந்த கொள்கைப் பற்றும், அவர்கள் மீதான பற்றுறுதியிலும் விலகவேயில்லை.

அவரின் கனவை நனவாக்க முன்னோக்கிச் செல்வோம்

உங்கள் நினைவுகளுடன் நவீனன்.

சமாதான காலத்தில் நெடுந்தீவுக் கடலில் எரிந்த மூன்று தீபங்கள்

2 months 3 weeks ago
  • எழுத்தாளர்: தெரியவில்லை

 

6.2.2003 அன்று இரவு மன்னார் கிராஞ்சி கடற்கரை கடற்புலிகளின் முகாமில் இருந்து மீன்பிடி வள்ளத்தில் பயணம் தொடங்கியது. 4 கரும்புலிகளின் இருந்தனர். நான் மட்டும் கடற்புலி போராளி. படகின் மேல்தளத்தில் நான் தூங்கி கொண்டு இருந்தேன். 

எனக்கு உரிய பணி வள்ளத்தில் பிரயாணம் மட்டுமே. 4 கடற்கரும்புலிகள் தான் வள்ளத்தின் மாலுமிகள். நான் ஒரு பிரயாணி.

7.02.2003 அதிகாலை 3 மணிக்கு நெடுந்தீவை கடக்கும் போது இயந்திரம் பழுது படுகிறது. நீண்ட முயற்சி செய்தும் இயந்திர பழுதை திருத்த முடியவில்லை. இலங்கை கடற்படை டோரா படகு எம் வள்ளத்தை அவதானித்தது. அருகில் வந்தது.

இந்தக் காலத்தில், மன்னாரில் லெப்டினன் கேணல் பகலவன் அண்ணா பொறுப்பாளர். அடுத்த நிலையில் சுடரொளி அண்ணா இருந்தார். இன்று லண்டனில் இருக்கிறார். உடன் பகலவன் அண்ணா, சுடரொளி அண்ணா, சூசை அண்ணா தொடர்பில் வந்தார்கள். நிலமை விளங்கப்படுத்தப்பட்டது.

சூசை அண்ணா, சுடரொளி அண்ணாவிற்கு கட்டளை இட்டார், கடற்புலிகளின் முகாமில் இருக்கும் வேகமான படகில் சென்று நிலமையை நேரில் பார்க்கச்சொல்லி. 

நிலமை இப்படி இருக்க இலங்கை டோரா எம்மை நெருங்கியது. அச்சம் இன்றி எந்த ஒரு தடுமாற்றமும் இன்றி நாம் ஐவரும் இருந்தோம். 

இலங்கை கடற்படை டோரா படகு எம்மீது மோதும் அளவிற்கு வந்தது. எம் வள்ளத்தை அணைக்க தயார் ஆனது.
இந்த நிலையில் சுடரொளி அண்ணாவின் படகும் எம்மை நெருங்கியது. 

உடனே கடற்படைக்கு சொன்னோம், "நீங்கள் எம்மை பரிசோதிக்க முடியாது. நாங்கள் கடற்புலிகள். மீன்பிடிக்க சென்றோம். இயந்திர கோளாறு காரணமாக நிற்கிறோம். எம்மை கரைக்கு கொண்டு செல்ல எமது படகு வந்து விட்டது" என்று. 

ஆயினும் இலங்கை கடற்படை எம் வள்ளத்தை வலுக்கட்டாயமாக தங்களின் முகாமுக்கு கட்டி இழுக்க தொடங்கியது.

நிலமை விபரீதம் ஆனது. இதை அவதானித்து கொண்டு இருந்த சூசை அண்ணா உடனே உத்தரவு இட்டார், என்னை சுடரொளி அண்ணா இருக்கும் படகில் ஏறு என்றார். நான் ஏறினேன். என்னோடு இன்னொரு கரும்புலி வீரனையும் இணைத்துக்கொண்டு வள்ளத்தை விட்டு சுடரொளி அண்ணா இருக்கும் படகில் ஏறினேன்.

அடுத்து சூசை அண்ணா இலங்கை கடற்படைக்கு கூறினார், "எமது வள்ளத்தை விட்டு விடுங்கள். இப்போ போர் நிறுத்த காலம். நாங்கள் போர் புரிய வரவில்லை" என்று. பலதடவை கூறியும் இலங்கை கடற்படை கேட்கவில்லை.

மீன்பிடி வள்ளத்தில் இருக்கும் கரும்புலிகள் நாம், பகலவன் அண்ணா, சூசை அண்ணா அனைவரும் ஒரே அலைவரிசையில் வந்தோம், அனைவரின் உரையாடலையும் எல்லோரும் கேட்டு கொண்டு இருந்தோம். எமக்கு நிலமை புரிந்து விட்டது. அந்த நேரத்தில் ஒரு அமைதி. கரும்புலிகள் மூவரும் ஒரே இடத்தில் இருந்து மூவரும் தங்கள் கைகளை பற்றி பிடித்து கொண்டு புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று கூறி வெடிமருந்தை வெடிக்க வைக்க தீயானது கடலில் மூண்டது. கூட இருந்தவர்கள் கடலினில் கரைந்து போக என் இதயம் வலியின் வேதனையை அனுபவித்தது. அதி வேகமாக கரைவந்து சேர்ந்தோம். என் சுவாசம் கூட அழுதது.

தலைவன் பிரபாகரன் புலிகளின் கப்பலின் நிறத்தை மாற்ற சொன்னதால் தப்பிய கப்பல்

2 months 3 weeks ago
  • எழுத்தாளர்: தெரியவில்லை

 

புலிகள் அமைப்பில் இருந்தால் புலியாக இருத்தல் வேண்டும். எனது நீண்ட பயணத்தில் பல ஆயிரம் போராளிகளின் பல சாதனைகள். அதில் தான் புலிகள் இயக்கம் பாரிய வெற்றியை தன்னகத்தே கொண்டு இருந்தது.

நானே பல சாதனைகளுக்கு சொந்தக்காரன். எனக்கு புலிகள் பற்றி வியாக்கியானம் கூறக்கூடாது. நாம் தாம் புலிகள். எம்மோடு நின்ற ஆயிரம் ஆயிரம் வீரர்கள் தான் புலிகள். 

நான் ஒரு கணப்பொழுதில் சாதித்து இவை:

2001 ஆண்டு இந்தியா-அவுஸ்டேலியா கிரிகெட் விளையாட்டு சென்னையில் நடை பெற்றுக்கொண்டு இருந்த நேரம் புலிகளின் இரண்டு கப்பல்கள் சென்னையில் இருந்து 70 கடல்மைல் தூரத்தில் நின்று கொண்டு இருந்தது.

மஞ்சோசி என்ற கப்பலில் இருந்து கொய் என்ற கப்பலுக்கு பொருட்களை மாற்றி ஏற்றிக்கொண்டு இருந்தோம்.

கொய் கப்பலுக்கு கப்டனாக ரஞ்சன் அண்ணாவும் மஞ்சோசிக்கு கப்பலுக்கு ரவிசங்கர் கப்டனாகவும் இருந்தனர். அப்போது தான் ரவிசங்கர் கப்டனுக்கு சேவையை பாராட்டி ஓய்வு வழங்க தலைவன் முடிவு செய்கின்றார். சாளையில் பொறுப்பாளராக இருந்த ரஞ்சன் அண்ணாவை கப்பலை பொறுப்பெடுக்க தலைவன் கட்டளை இட ரவிசங்கர் கப்டனுக்கு ஓய்வுக்காக கப்பல் மாறுகின்றார்.

மஞ்சோசி கப்பலில் இருந்து பொருட்களை இறக்கி கொண்டு இருந்த நேரம் நான் கப்பல் தெலைக்காட்சி அன்ரனாவை திருப்பினேன். தொலைகாட்சி படம் ஏதும் இழுக்கின்றனவா என்று பார்க்கவே அவ்வாறு செய்தேன். அந்நேரத்தில் இந்திய தூர்தர்சன் தெலைக்காட்சியில இந்திய-அவுஸ்ரெலிய கிரிக்கெட் விளையாட்டு போய்கொண்டு இருந்தது. நான் உடனே ரவிசங்கர் கப்டனுக்கு அதைக் கூறினேன். அவர் மகிழ்ந்தார். அடுத்த கப்பலான கொய்யில் கப்டன் ரஞ்சன் அண்ணாவுக்கும் கூறினேன். பொருட்கள் அனைத்தும் மாற்றப்பட்டது. இரு கப்பல்களும் இணைந்தே இருந்தது. கடல் அமைதியாக இருந்தது. அனைவரும் கிரிக்கெட் பார்க்கத் தொடங்கினார்கள்.

சில மணி நேரத்தில் இந்திய கடலோர காவற்படையின் விமானம் இரண்டு எமது கப்பலை நல்ல பதிவாகவே நெருங்கியது. எமக்கு என்ன செய்வதெற்னு என்று புரியவில்லை. உடனே இரண்டு கப்பல்களின் இயந்திரத்தையும் இயங்க வைத்தோம். இரண்டு கப்பல்களும் வேறு வேறு திசைக்கு ஓட தொடங்கிய போது மஞ்சோசி கப்பலை ரவிரங்கர் கப்டன் வேகத்தை குறைத்து ஓடினார்.

கொய் கப்பலி ஆயுதங்கள் அதிகம் என்பதலும் ஆட்லறியும் உள்ளதாலும் வெகமாக ஓடவிட்டு மஞ்சோசி கப்பல் மெதுவாக ஓடிக்கொண்டு இருந்தது. அந்நேரம் இந்திய கடற்படை கப்பல் ஒன்று எம்மை நெருங்கியது. நாமும் திசை மாற்றாமல் சிங்கபூர் போவது போல் சென்று கொண்டு இருந்தோம். 2 மணிநேரம் எமக்கு பின்னால் பின் தொடர்ந்த இந்திய கடற்படை கப்பல் மொதுவாக எம்மை விலத்தி சென்னை துறைமுகத்திற்கு திருப்பிக்கொண்டு சென்றது.

அந்த நேரத்தில் இந்திய கடற்படை இலங்கை கடற்படைக்கு அறிவிக்கின்றது, சந்தேகத்திற்கு இடமான பச்சை நிற கப்பல் முல்லைதீவுக்கு 300 கடல்மை தூரத்தில் செல்கின்றது என்று. இலங்கை கடற்படை உடனே எம்மை நோக்கி வரத்தொடங்கியது.

சாளையில் இருந்த தொலைதொடர்பு ஒட்டுக்கேட்கும் பிரிவு இந்த செய்தியை சூசை அண்ணாவுக்கு கூற, சூசை அண்ணா நிலமையை தலைவனிடம் கூற, தலைவின் கட்டளை வருகின்றது கப்பலின் நிறத்தை மாற்றச்சொல்லி.

ரவிசங்கர் கப்டன் எம்மை அழைத்து விசயத்தை கூறினார். தலைவன் கப்பலின் நிறத்தை மாற்ற நினைத்ததை நானும் லெப்டினன் கேணல் செம்பகச்செல்வனும் செயல்வடிவம் கொடுக்கத் தொடங்கினோம். கயிற்றில் பலகை கட்டி கப்பலின் வெளிப்புறத்திற்கு இறங்கினோம். 

சவால் நிறைந்தது. கப்பல் ஓடிக்கொண்டே தான் இருக்கின்றது. கடல் அலைகள் மோதுகின்றது. பயங்கரமான நிலமை. மனதில் உறுதி எடுத்தோம். 

கப்பலில் குகா என்ற பொதுமகனும் வள்ளுவன், சகாதேவன் என்று சிலரும் இருந்தனர். அவர்கள் அனைவரும் நாங்கள் கப்பலில் வெளிப்புறத்தில் தொங்கிகொண்டு இருந்து கேட்கும் பொருட்களை எமக்கு தந்தனர். பெயின்ட்களை தருவார்கள், உணவு, தண்ணீர் என்று அனைத்தும் மரணத்தின் விழிம்பில் இருந்து குகா பலதடவை எம்மோடு இணைத்தார். 

நிறம் மாற்றினால் கப்பல் தப்பும் இல்லையேல் 12 பேர் வீரமரணம். அத்தோடு கப்பலில் இருந்த அனைத்து பொருட்களையும் புலிகள் இழப்பார்கள் என்ற நிலமை புரிந்தது. எப்படிப்பட்ட சாவல்!

இந்த நிலையை மாற்ற எம்மிடம் கிறே நிறம் தான் அதிகமாக இருந்ததால் உடனே இருவரும் இணைந்து கப்பலின் நிறத்தை பல மணிநேர போராட்ரத்திற்கு மத்தியிலும் பல மணிநேர கடும் முயற்சியாலும் கப்பல் நித்தை மாற்றினோம்.

எம் இருவராலும் இயங்க முடியவில்லை. கப்பலின் நிறத்தை மாற்றும் வரை அதிக அளவான சக்தியுடன் இயங்கி கொண்டு இருந்த நாம் நிறத்தை மாற்றிய பின் எமது உடல் நிலை மேசமானது.

ஒரு பெரும் கப்பலுக்கு நிறம் மாற்றுவது என்பது கற்பனையில் நடக்காது. ஆனால் நாங்கள் இருவர் நடத்தினோம். உடனே கப்பலின் மேல் தளத்திற்கு நாம் இருந்த பலகையை தூக்கியே எடுத்தார்கள். நாம் கப்பல் தளத்திலே வீழ்ந்து படுத்து இருந்தோம்.

சில மணி நேரத்தில் இலங்கை கடற்படை நெருங்கியது. எம்மை அழைத்தது. ரவிசங்கர் கப்டன் ஆங்கில புலமை மற்றும் கடல் அனுபவம் அதிகம் கொண்டவர் என்பதால் இலங்கை கடற்படைக்கு சவால் விடும் விதமாக பேசினார்.

எமது கப்பலில் உடனே நாம் இந்தோனேசிய கொடி கட்டினோம். சில மணிநேரம் எம்மை பின் தொடர்ந்த இலங்கை கடற்படை எமது கப்பலை நிறுத்தச்சொல்லி கட்டளையிட ரவிசங்கர் கப்டன் மறுத்துவிட்டு எமது பாதையில் சென்றார். நாம் யாரும் கப்பலுக்கு வெளியில் வரவே இல்லை. அறைகளின் உள்ளே இருந்தோம். இலங்கை கடற்படை தொலை நோக்கி வைத்து எமது கப்பலை பார்கின்றார்கள். கப்பலில் சந்தேகத்திற்கு இடமான எதுவும் இல்லை என்று முடிவு செய்து இலங்கை கடற்படை திரும்பிக்கொண்டு திருகோணமலை துறைமுகம் சென்றது.

நாம் பூமி பந்தின் மத்திய பிரதேசத்தை தாண்டிச் சென்று எமது கப்பலை நிறுத்தி ஓய்வு எடுத்து கொண்டோம். தலைவனின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்த தருணங்களின் இதுவும் ஒன்று. தலைவன் கப்பலின் நிறத்தை மாற்ற சொன்னதால் நான் இன்று வரலாறு கூறுகின்றேன்.

இன்று அந்த கப்பலும் இல்லை, கூட இருந்த நண்பன் செம்பகச்செல்வனும் இல்லை. வள்ளுவன், குகா, சகாதேவன் ரவிசங்கர் கப்டன் என்று பலர் இருக்கின்றோம். அதை சில மணிநேரத்தில் மாற்றியோர்; நேரியன் மற்றும் செம்பகச்செல்வன் என்ற இரு கடற்புலிகள் ஆவர்.

செய்சின் கப்பலின் ஓட்டையை அடைத்த கதை

2 months 3 weeks ago
  • எழுத்தாளர்: தெரியவில்லை

 

2002.06.15 திகதி அன்று செய்சின் கப்பல் சுமத்திரா தீவிற்கு அண்மையில் பூமப்பந்தின் நடுவில் 0 பாகையில் நின்று கொண்டு இருந்தோம். கப்பல் கப்டன் எஸ்.கே இருந்தார். தலைமை இயந்திர பொறிஞராக நண்பன் இளங்கதிர் இருந்தான்.

இளங்கதிர் இயந்திர பகுதியில் கப்பலின் கீழ் பகுதியில் கழிவு நீர் கழிவு ஒயில் அகற்றி கொண்டு இருந்த நேரம் கப்பலில் ஓட்டை ஒன்று திடீரென வந்து விட்டது. கப்பலுக்குள் கடல் நீர் எங்களை தூக்கி எறியும் வேகத்தில் கப்பலுக்குள் ஏறியது. இயந்திரத்தின் கீழ் தளம் வரை வலு வேகமாக உள் நுழைந்தது. அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த நேரத்தில் நானும் நண்பன் ஜெனர்தனனும் உள்ளே இறங்கினோம்.

தண்ணீர் வேகம் எங்களை தாக்கியது. சிறிய அளவிலான துவாரத்தில் புகுந்து இயந்திர அடிப்பகுதிக்கு சென்று அங்கே துவாரம் வீழ்ந்த இடத்தை இருவரும் இணைந்து கையில் கொண்டு சென்ற சிறிய துணியை வைத்து இருவரும் அழுத்தி பிடிப்பது என்ற நோக்கம். தண்ணீர் துவாரத்தை முதல் நிறுத்துவோம் அதன் பின் கப்பலுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றுவோம் என்பது திட்டம்.

நானும் நண்பனும் துவாரம் விழுந்த இடத்தை கடினமாக போராடி 20 நிமிடத்திற்குப் பின் சென்றடைந்தோம். துவாரத்தையும் அழுத்தி விட்டோம். கப்பலுக்குள் நீர் வரத்தை தடுத்து விட்டோம். இருந்தும் எங்கள் இருவரின் கைகளை கடல் நீர் தள்ளுகின்றது. எங்களுக்கு வாழ்வா சாவா என்ற நிலை. கைகள் எடுத்தால் மரணம் என்ற நிலையை உணர்ந்த நாம் இருவரும் உடல் வலிமையை மன வலிமையை அதிகரித்துக்கொண்டு கைகளை அசைக்காது இருந்தோம். எங்கள் தலை மட்டும் நீருக்கு வெளியில் இருந்தது. 

பல மணி போராட்டத்தின் பின் கப்பலுக்குள் இருந்த நீரை வெளியேற்றி விட்டார்கள். நாங்கள் இருவரும் நீரில் பல பணி நேரம் கைகள் அசைக்காமல் இருந்ததால் - அதே நேரம் நாம் எங்கள் சக்தியை தேவையில்லாமல் வெளியில் விடாமல் இருப்பதற்காக கதைத்துக்கொள்ளவும் இல்லை. எங்கள் சக்தியை ஒரு கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருந்தது.

நீரை வெளியேற்றிய பின் நண்பன் இளங்கதிர் இருவருக்கும் தேனீர் கொண்டு வந்து இருவருக்கும் பருக்கிவிட்டான். தேனீர் குடித்தவுடன் சிறிய உசாரானது. எமது கைகள் அசைக்கவே இல்லை. வெளியில் சென்றான் இளங்கதிர்.

எஸ்.கே உள்ளே வந்தார். நிலமையை பார்த்தார். எங்கள் இருவரின் நிலை எஸ்.கேயை கவலை கொள்ள வைத்தது. வெளியில் சென்ற எஸ்.கே இளங்கதிர் உடன் சில மணித்தியாலத்தில் இரண்டு கம்பிகள் ஒட்டிய தட்டை கொண்டு வந்து இரண்டு முனைக்கும் இறுக்க சொன்னார்.

எம் கைகள் எடுத்த உடனே நீர் பாயும். அந்த நேரத்தில் தகட்டை வைத்து அழுத்தி கம்பிகளால் இறுக்க வேண்டும். திட்டம் சரியாக இருந்தது.

நாம் இருவரும் கைகளை நகர்தினோம். நீர் கப்பலுக்குள் பாய்ந்தது.

எங்கள் கைகள் இயங்க மறுத்தது. நண்பன் இளங்கதிர் கடினமாக போராடிக்கொண்டு இருந்தான். நாங்களும் இயங்க மறுத்த கையை வாழ்வா சாவா என்ற கேள்வில் கைகளை இயக்கி இளங்கதிருக்கு உதவினோம். இரு தகட்டையும் இறுக்கி விட்டோம். உள்ளே வந்த நீரை வெளியேற்றி அந்த பகுதியேல்லாம் கடல் நீர் இல்லாமல் துடைத்து எடுத்து நன்னீர் போட்டு துடைத்தோம்.

எங்கள் உடல் கைகளை இயக்க மறுத்தது. எங்களை தூக்கி வெளியேற்றினார்கள், நண்பர்கள். கப்பலுக்கு மேல் தளத்தில் படுக்க வைத்தார்கள். சில மணி நேரத்தில் துவாரம் விழுந்த இடத்தை சுற்றி சீமெந்து போட்டு அந்த பகுதி அனைத்தும் அடைத்து விட்டார்கள்.

கப்பல் துவாரம் விழுந்த தகவல் கேபி அண்ணாவுக்கும் சூசை அண்ணாவுக்கும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இருவரும் எங்கள் செய்தி என்ன என்று பார்த்து கொண்டு இருந்தார்கள். கப்பல் மீட்ட கதையை கப்பல் கப்டன் எஸ்.கே இருவருக்கும் கூறி மகிழ்ந்தார். கப்பலில் இருந்த அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சியில் குதுகலித்து இருந்தார்கள். எம்மால் காக்கப்பட்ட கப்பல் இன்று அத்தனை வீரர்களுடனும் கடலில் கரைந்து விட்டது. வீரவணக்கம். 

கப்பல் வரலாறு தொடரும்….

 

https://yarl.com/forum3/uploads/monthly_2024_01/large.318825823_1305785940212303_5698621076466929847_n.jpg.f0cbfefa22b80cff84acd2df5afed95f.jpg

 

large.319092480_905027497543981_75215785

 

பாலா அண்ணையை கடலால் அனுப்பிய கதை

2 months 3 weeks ago

1998 ஆண்டு சாளைத்தொடுவாயில் நீர் வரத்து அதிகரித்து இருந்தது. சாளை தொடுவாய் உடைத்து நன்னீர் கடலை நோக்கி பாய்கின்றது. சாளையில் இருந்த எல்லா வினியோக படகுகளையும் சாளைத்தொடுவாய் நோக்கி நகர்த்துகின்றோம்.

அக்காலத்தில் சாளை பொறுப்பாளராக கரும்புலி லெப். கேணல் ரஞ்சன் அண்ணா இருந்தார். இராண்டாம் நிலைப்பொறுப்பாளராக மாவீரர் லெப்டின் கேணல் சுபன் அண்ணா இருந்தார். சுபன் அண்ணா செங்கொடி படகின் கட்டளை அதிகாரியாகவும் இருந்தார். நான் ஓட்டியாக இருந்தேன். 

1998 ஆண்டு இறுதி மாதம். கடும் காற்றும் கடலலை கடுமையாகவும் இருந்தது. கடற்பிராயணம் கடுமையானதாக இருந்தது.

ஜெயசிக்குறு எதிர்சமர் கடுமையாக இருந்த காலம். தலைவர் அடிக்கடி எமது சாளை முகாம் நோக்கி வந்து போவது வழமையாக இருந்தது. தலைவருக்கும் ஓய்வாகவும் இயல்பாக இருக்கவும் எமது சாளை முகாம் இருந்தது. 

அந்த காலப்பகுதியில் அன்ரன் பாலசிங்கம் அண்ணா கடும் சுகவீனம் அடைந்து இருந்தார். இலங்கை ஐனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்கா அவர்களிடம் புலிகள் உதவி கேட்டு இருந்தார்கள். புலிகள் கேட்டது மனிதாபிமானம். ஆனால் இலங்கை அரசு புலிகளுக்கு கூறியது டீல் . யாழ்பாணம் செல்லும் கடல்வழி பயணத்திற்கு கடற்புலிகள் தடையாக இருக்க கூடாது என்றும் யாழ்பாணம் செல்லும் இராணுவ கப்பல்களை கடற்புலிகள் தாக்க கூடாது என்றும் டீல். அந்த நாளே தலைவர் சாளைக்கு வந்தார். 

சாளை தொடுவாய்க்கு வந்து படகுகளை பார்வை செய்தார். சூசை அண்ணா கொஞ்ச நேரம் செல்ல வந்தார். சூசை அண்ணா வரும் வரை எம் தேசத்தின் தலைவன் எம்முடனே இருந்தார். நாங்கள் கடலுக்கு செல்வதற்கு படகுகளை தயார்படுத்திக்கொண்டு இருந்தோம்.
 
அந்த நேரத்தில் சூசை அண்ணா வந்தார். பின் இருவரும் இணைந்து படகுகளை பார்வை இட்டனர். எமது செங்கொடி படகை நீண்ட நேரம் பார்வை இட்டுச் சென்றனர். நாம் கடலுக்கு சென்று அடுத்த நாள் காலை வந்தோம்.

படகு கட்டுமான பொறுப்பாளர் சாளைக்கு வந்தார். ஆதித்தன் அண்ணா எமது படகை அளவு எடுத்துச் சென்றார்.

பின் நடந்தது வரலாற்று பதிவு.

அது ஒரு அற்புதமான தருணம். அன்று ஒருநாள் காலை ஆதித்தன் அண்ணா எமது செங்கொடி படகின் மேற்பரப்பில் கூரை மாதிரியான வடிவில் நீர் அடிக்காதவாறு இருக்க கூரை பாகம் ஒன்றை கொண்டு வந்து பொருத்தினார். 

அதே நாள் நாம் கடலுக்கு செல்வதற்காக படகை தயார் செய்து கொண்டு இருக்கும் போது இயந்திரத்தில் அனுபவம் வாய்ந்த மாவீரர் லெப். கேணல் கடாபி அண்ணா மற்றும் மாவீரர் லெப். கேணல் டிக்கான் அண்ணா ஆகியோர் படகின் இயந்திரத்தை பார்கின்றனர். சுத்தம் செய்கின்றனர். இயந்திரத்தின் அனைத்து பரிசோதனைகளையும் மாவீரர் லெப். கேணல் கடாபி அண்ணா மேற்கொண்டு இருந்தார். நாம் எரிபொருள் நிரப்பி படகை சுத்தம் செய்து கொண்டோம். ஆயுதம் வைத்திருப்பவர்கள் ஆயுதத்தை சுத்தம் செய்து இருந்தனர். செங்கொடி படகு வீதியோரத்தில் மருதமரம் அணைவில் எப்போதும் நிறுத்தப்பட்டு இருக்கும். 

சாளைத்தொடுவாய் நீர் அதிகமாக இருந்தது. 

ஒரு கணப்பொழுதில் வந்தது, தலைவனின் வாகனம். இறங்கினார் தலைவர். வேக நடை போட்டு நடந்து வரும் தலைவரின் கண்கள் பிரகாசித்து கொண்டு இருந்தது. தொடர்ந்து  சூசை அண்ணாவின் வாகனம் வந்தது. தொடர்நது தமிழ்செல்வன் அண்ணாவின் வாகனம் வந்தது. அதில் இருந்து அடெல் அன்ரி இறங்கினார். எமக்கு புரிந்து விட்டது என்ன நிகழப்போகின்றது என்று. எமக்கு மகிழ்ச்சி, எமது படகில் நாம் கொண்டு செல்லப் போகின்றோம் என்று!
  
சூசை அண்ணாவுடன் சுடரொளி அண்ணா நின்று கொண்டு இருந்தார்.
 
நான் நினைக்கின்றேன், அன்று மருத்துவ பிரிவு பொறுப்பாளர் றேகா அண்ணா வந்ததாக நினைவு இல்லை. குறிப்புக்கு மட்டும்.

அன்ரன் பாலசிங்கம் அண்ணாவை வாகனத்திலிருந்து இறக்கி மெதுமெதுவாக தள்ளுவண்டி மூலம் தள்ளிகொண்டு வந்து படகில் ஏற்றினார்கள். அடெல் அன்ரியை எமது படகில் ஏற்றப்பட்டது. எமது படகில் படுகை எல்லாம் போடப்பட்டு சிறப்பாக செய்து இருந்தோம்.

உடனடியாக சூசை அண்ணா படகில் உள்ள போராளிகளை மாற்றம் செய்தார்.  இயந்திர பொறிஞர் மாற்றம் நடந்தது. சுடரொளி அண்ணாவை கட்டளை அதிகாரியாக ஏற்றினார். கட்டளை அதிகாரியாக இருந்த சுபன் அண்ணா ஓட்டியாக மாற்றம் செய்யப்பட்டது. என்னை இறங்க சொன்னார் சூசை அண்ணா.

இப்படி மாற்றம் செய்து கொண்டு இருக்கும் போது தலைவர் சூசை என்று அழைத்து, "சூசை படகில் ஏறி நீர் போகலாம்!" என்றார். அங்கு நின்ற கடற்புலி போராளிகளுக்கு தூக்கி வாரிப்போட்டது. 

சூசை அண்ணாவை கடலுக்கு அனுப்பவதா? ஒன்று நடந்தால் நிலமை என்ன ஆகும்? அப்போது அருகில் நின்ற தலைவன் இருக்கின்றார் என்ற வைராக்கித்துடன் பணிகளை தொடங்கினோம். அனைத்து படகையும்  கடலுக்கு அனுப்பினோம்.

செங்கொடி படகு செல்லும் போது தொடுவாய் இரண்டு பக்கமும் கடற்புலிகள் சென்று நின்றுகொண்டு இருந்தனர். 

படகு பயணம் ஆனது. கடலின் அலை அடி அதிகமாகவும் காற்றின் வேகம் பலமாகவும் இருந்தது. எல்லா போராளிளும் கை காட்டி அனுப்பி வைத்தோம்.

பிற்பாடு தமிழ்செல்வன் அண்ணா சென்று விட்டார். வெளியில் இருந்து வந்த சிலர் சென்று விட்டனர். ஆனால் எமது தேசத்தின் தலைவன் எமது படகுகளின் கட்டுபாட்டு அறைக்குச் சென்று சூசை அண்ணாவிற்கு பதில் பொறுப்பில் இருந்தார்.
 
தலைவர் சற்றும் தூங்காமல் படகுகளை அவதானித்து கொண்டு இருந்தார். அப்போது மதி தான் கட்டுப்பாட்டறை பொறுப்பளர். அபிமஞ்சு அண்ணாவும் இருந்தார். சாளை கடற்புலி போராளிகள் யாரும் தூங்கம் கொள்ளாமல் கடலையே பார்த்து கொண்டு இருந்தோம்.
 
100 கடல் மை தொலைவில் காத்து நின்றார் கௌசிகன் அண்ணா, புதிய கப்பலுடன். அன்டன் பாலசிகம் அண்ணா ஏற்றப்பட்டார். அடெல் அன்ரிக்கு சரியாக சத்தி, உடற்சோர்வு என்று பல இருந்தது.

கப்பல் தொடரை பின் தொடர்கின்றேன்.

சாமம் கடந்து சூசை அண்ணாவின் படகு வந்தது. தொடுவாய்க்கு உள்ளே வந்த படகை நாம் எல்லோரும் இணைந்து கரைக்கு கொண்டுவந்து மருத மரத்தில் கட்டினோம். சூசை அணணா சிரித்தபடி இறங்கினார்.
 
தலைவன் உடன் வந்து கைகொடுத்து கூட்டி வீதிவரை சென்றார். சூசை அண்ணா சற்றும் எதிர்பார்க்கவில்லை. போராளிகள் நாமும் இதை எதிர்பாக்கவில்லை. பின் இருவரும் இணைந்து கட்டுப்பாட்டறை நோக்கி சென்றனர். பின்னர் அங்கிருந்தபடி அனைத்து படகையும் கரை சேர்த்துவிட்டு தலைவர் சென்றார்.
 
பின் 3 நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் பிற்பகல் தலைவனுக்கு போராளிகளுடன் சந்திப்பு நடக்க தயாராக இருந்தது. சாப்பாடு தயார் ஆனது. ஐஸ்கிறீம் எல்லாம் வந்தது. சந்திக்கும் இடம் எல்லாம் தயாரானது. எமக்கு மதியம் தகவல் வருகின்றது, குமாரவேல் ஊடாக, தலைவருக்கு சரியான காச்சல் என்றும் தலைவருக்கு காச்சல் கூடியது என்றும். போராளிகள் ஆகிய நாம் நொந்து போனோம்.

பின் சில நாட்களுக்குப் பிறகு எமது முகாமிற்கு வருவது போல் வந்தார். இந்த முறை கடாபி அண்ணா கூட இருந்தார்.

இந்த கதையும் தொடரும்…….

  • எழுத்தாளர்: அறியில்லை

வான்கரும்புலிகளை தமிழீழம் கொண்டு வந்த கண்ணீர் கதை

2 months 3 weeks ago
  • எழுத்தாளர்: அறியில்லை

வான்கரும்புலிகளான ரூபன் சிரித்திரன் அண்ணாக்களை உலகத்துக்கு தெரியப்படுத்திய பாரிய கடமை & பொறுப்பு கடற்கரும்புலி லெப். கேணல் ரஞ்சன் அண்ணா மற்றும் கௌரியையே சாரும்.

மூருவருடனும் நீண்ட நாட்கள் பழகி இருக்கிறேன் என்பதில் கொஞ்சம் கவலை அதிகம் தான். இதில் கௌரி என் நண்பனும் கூட. இப்போதும் இந்த கதாபாத்திரத்தின் நாயகன் இருக்கிறான்.

10.03.2003 அன்று கடற்புலிகளின் கப்பல் முல்லைதீவில் இருந்து 200 கடல் மைல் தூரத்தில் வந்து கொண்டு இருந்தது. அந்த தகவல் இந்தியாவால் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது.

இந்திய கடற்படை இலங்கை கடற்படைக்கு கொடுத்த சாயுரா என்ற பாரிய கப்பலை புலிகளின் கப்பல் நோக்கி செலுத்தப்படுகிறது. புலிகளின் ராடாரில் படவில்லை.

ஒரு மீன்பிடி வள்ளத்தில் கௌரி எமது கப்பலை நோக்கி சென்று கொண்டு இருக்கிறான் கௌரி. கடற்புலிகளின் கப்பல் கெளரியை எதிர்பார்த்து நின்ற போது அங்கே வந்தது, சாயுரா. புலிகளின் கப்பலை வழி மறித்தது. 

இதை தெரிவிக்க ரஞ்சன் அண்ணா கெளரியை தொடர்பு கொண்ட போது, கௌரி எமது கப்பலை நோக்கி வர இன்னும் ஒரு மணி நேரம் பிடிக்கும் என்று முடிவெடுக்க, அனைத்தையும் உணர்ந்த ரஞ்சன் அண்ணா உடனே கௌரி வள்ளத்தை நோக்கி கப்பலை செலுத்துகிறார். சாயுரா பின்தொடர்ந்து செல்கிறது. சாயுரா கடற்புலிகளின் கப்பலை தாக்கவில்லை. ஆனால் சாயுராவின் கண்ணில் கௌரியின் மீன்பிடி வள்ளம் தெரியவில்லை.

ரஞ்சன் அண்ணா உடனடியாக வான்கரும்புலி ரூபன்-சிரித்திரன் ஆகியோரை கெளரியின் வள்ளத்தில் இறக்கி விடுகிறார். உடனே கப்பலை திருப்புகிறார் ரஞ்சன் அண்ணா. கப்பலும் மீன்பிடி வள்ளமும் நிக்காமல் ஓடியபடி அணைத்து தான் ரூபன் சிரித்திரன் அண்ணாக்களை ஏற்றினார்கள். கடினமான பணி.

கௌரி திருகோணமலை சல்லி நோக்கி மீன்பிடி வள்ளத்தை செலுத்துகிறான். கப்பலை குறி வைத்து தாக்குகிறது சாயுரா.

சூசை அண்ணா கண்காணிப்பு குழுவை தொடர்பு கொண்டு எமது வணிக கப்பல் ஒன்று வழிமறிக்கப்பட விபரத்தை அறிவிக்கிறார். கண்ணாணிப்புக் குழு சொன்னது, கடற்படையிடம் போகும் படியும் அவர்கள் பரிசோதனை செய்து விட்டு விடுவார்கள் என்றும். அதிர்ந்த சூசை அண்ணா ரஞ்சன் அண்ணாவை தொடர்பு கொண்டு சொன்ன போது ரஞ்சன் அண்ணா சிரித்தார்.

சாயுராவின் தாக்குதல் அதிகரிக்கின்றது. 

கப்பல் முழுவதும் எரிபொருள் ஊற்றப்படுகிறது. வெடிமருந்தை வெடிக்க வைக்கப்படுகிறது. கப்பல் கடலில் மூழ்கின்றது. கடலினில் காவியம் நடைபெறுகிறது. மாண்டு போன அத்தனை பெரும் என் ஆருயிர் நண்பர்கள்!

ரூபன்-சிரித்திரன் அண்ணாக்கள் திருகோணமலை சல்லி கடற்கரைக்கு வந்து சேருகிறார்கள். அங்கு இருந்து வன்னிக்கு வந்தார்கள். 

ரூபன்-சிரித்திரன் அண்ணாவை பத்திரமாக பாதுகாத்து கொண்டு வந்த அத்தனை பேரும் காவியமாகி விட்டார்கள். கௌரி மட்டுமே சாட்சியாக உள்ளான்.

அதன் பின் ரூபன்-சிரித்திரன் அண்ணாக்கள் வான்கரும்புலியாக வெடிக்கிறார்கள். வீரவணக்கம் ரூபன்-சிரித்திரன்  அண்ணாக்கள்.

இருவருடனும் இரண்டு மாதங்கள் நன்கு பழகியவன் நான். இந்து மாகடலில் இருந்து செங்கடல் சென்று வந்துள்ளோம். 

கப்பலில் மாண்டு போன அனைவரும் என் ஆருயிர் நண்பர்கள். இவர்களை நெஞ்சில் நிறுத்த இதயம் கனக்கிறது. வீரவணக்கம்

இவர்களை விட்டு கரைக்கு வந்து 3 நாட்களின் பின் என்னையே கௌரி தான் கொண்டு வந்தான். நன்றி கௌரி

Checked
Fri, 03/29/2024 - 04:26
எங்கள் மண் Latest Topics
Subscribe to எங்கள் மண் feed