தமிழகச் செய்திகள்

கமிஷனர் ஜார்ஜ் அதிரடி மாற்றம்: ஆணையராக கரண் சின்ஹா நியமனம்- தேர்தல் ஆணையம்

Sat, 25/03/2017 - 07:02
கமி‌ஷனர் ஜார்ஜ் அதிரடி மாற்றம்: ஆணையராக கரண் சின்ஹா நியமனம்- தேர்தல் ஆணையம்

 

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கோரிக்கையை ஏற்று கமிஷனர் ஜார்ஜ் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். புதிய ஆணையராக கரண் சின்ஹாவை நியமித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

 
 
 
 
  ஆணையராக கரண் சின்ஹா நியமனம்- தேர்தல் ஆணையம்
 
சென்னை:

ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

அ.தி.மு.க. 2 அணிகளாக உடைந்து இடைத்தேர்தலை சந்திக்கிறது. அ.இ.அ.தி.மு.க. அம்மா (சசிகலா அணி) கட்சி சார்பில் டி.டி.வி.தினகரனும், அ.இ.அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா (ஓ.பன்னீர்செல்வம் அணி) கட்சி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள்.

தி.மு.க. வேட்பாளராக மருது கணேஷ் களத்தில் உள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா தனித்து போட்டியிடுகிறார். பா.ஜனதா, தே.மு.தி.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட நிலையில் டி.டி.வி.தினகரன் தொப்பி சின்னத்திலும், மதுசூதனன் இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள். இதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் வித்தியாசமான தேர்தல் களமாகவே காட்சி அளிக்கிறது.

அங்கு போட்டியிட 127 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 82 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

ஆர்.கே.நகரில் வெற்றியை ருசிக்க அ.தி.மு.க. அணிகள் மற்றும் தி.மு.க. இடையே கடும் பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.

இதற்கிடையே அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. ஆர்.கே.நகரில் பதட்டமான சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இன்னும் சில தினங்களில் துணை ராணுவ படையினரும் ஆர்.கே.நகருக்கு வருகை தர உள்ளனர்.

இடைத்தேர்தல் ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக டெல்லியில் இருந்து தேர்தல் பார்வையாளர் பிரவீன் பிரகாஷ் நேற்று வருகை தந்தார்.

ஆர்.கே.நகர் தேர்தலை நடத்தும் அதிகாரியான பிரவீன் நாயருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அசம்பாவிதங்கள் ஏதுமின்றி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. அதற்கு தேவையான ஏற்பாடுகளை முழுவீச்சில் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதனால் அரசியல் கட்சியினருக்கு இணையாக தேர்தல் அதிகாரிகளும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தில் சுறுசுறுப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.

இதற்கிடையே தி.மு.க. சார்பில் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புகார் செய்யப்பட்டது.

தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, மாநில தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு இது தொடர்பான மனுவை தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பி இருந்தார்.

அதில் கமி‌ஷனர் ஜார்ஜ் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுபவர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர், ஒருதலைபட்சமாக செயல்பட வாய்ப்பு உள்ளது. சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கமி‌ஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரிலேயே ஐ.பி.எஸ். அதிகாரிகள் செயல்பட்டனர். எனவே ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தார்.
 
4BC36825-FF3F-4C25-9EF3-3D193203E094_L_s


இதனை தொடர்ந்து கமி‌ஷனர் ஜார்ஜ் இன்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. இடமாற்றம் செய்யப்பட்டிருக்கும் ஜார்ஜுக்கு புதிய பணியிடம் எதுவும் வழங்கப்படவில்லை.

அவருக்கு பதிலாக சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனரையும் தேர்தல் ஆணையம் உடனடியாக அறிவித்தது.

சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. கரண் சின்ஹா, புதிய போலீஸ் கமி‌ஷனராக நியமிக்கப்பட்டார். இவர் இன்று அல்லது நாளை பொறுப்பேற்க உள்ளார்.

இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஜார்ஜ் கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்-அமைச்சரானதும், 2012-ம் ஆண்டு சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனராக நியமிக்கப்பட்டார். 19-9-2012 அன்று முதல் முறையாக பொறுப்பேற்றார். அதன் பின்னர் தேர்தல் நேரங்களில் மட்டுமே அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போதும், சட்டமன்ற தேர்தலின் போதும் மாற்றப்பட்டிருந்தார்.

இடையில் சில காலம் மட்டுமே கமி‌ஷனர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த ஜார்ஜ், 2-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/25111958/1075908/EC-order-to-Police-Commissioner-george-transferred.vpf

Categories: Tamilnadu-news

'குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்து, மத்திய அரசின் நிலைப்பாடு என்ன' என, இரு வாரங் களுக்குள் பதிலளிக்கும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

Fri, 24/03/2017 - 19:28
gallerye_235809831_1737467.jpg

புதுடில்லி:'குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்து, மத்திய அரசின் நிலைப்பாடு என்ன' என, இரு வாரங் களுக்குள் பதிலளிக்கும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. அதே போல், நீதித் துறை மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கும், இது போன்ற தடை விதிப்பது குறித்து பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

 

Tamil_News_large_1737467_318_219.jpg

'குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், தேர்தலில் போட்டியிடவும், நீதித் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பதவியை தொடர வும், வாழ்நாள் முழுவதும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்த வழக்கு, நீதிபதிகள், ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா அமர்வு முன், நேற்று, மீண்டும் விசாரணைக்கு
வந்தது.

அப்போது, வழக்கு தொடர்ந்துள்ள, டில்லி, பா.ஜ., நிர்வாகியும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதிட்டதாவது: குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட

தடை விதிக்க வேண்டும். அதே போல், தண்டனை பெற்ற நீதித் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகளும், வாழ்நாள் முழுவதும் அப்பதவியில் தொடருவதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சிறப்பு கோர்ட்களை அமைக்க வேண்டும்.
இது தொடர்பாக, ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்துள்ள தேர்தல் கமிஷன், எங்க ளுடைய பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. தேர்தலில் குற்றவாளி கள் போட்டியிடுவதை தடுக்கவும், குற்றவாளி களின் கையில் அரசியல் போவதை தடுக்கவும், தண்டனை பெற்றவர்கள், தேர்தலில் போட்டி யிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அமர்வு, இது குறித்து, மத்திய அரசு, இரு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என, உத்தரவிட்டது. அப்போது குறுக்கிட்ட, மத்திய அரசின் சார்பில்
ஆஜரான, மூத்த வழக்கறிஞர், 'ஏற்கனவே, சுப்ரீம் கோர்ட்டின் மற்றொரு அமர்வு, இது போன்ற ஒரு வழக்கை விசாரித்து வருகிறது.

அதற்காக தயார் செய்துள்ள பதில் தயாராக உள்ளது. இரு நாட்களில், பதில் மனுவை தாக்கல் செய்கிறோம்' என்றார்.'மற்றொரு அமர்வு முன், இது போன்ற வழக்கு இருந்தா லும்,இந்த வழக்கின் விசாரணையும் தொடரும்' என, அமர்வு கூறியுள்ளது. அதை தொடர்ந்து, வழக்கு, ஏப்., 18க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தேர்தல் கமிஷன்ஆதரவு: முன்னதாக, இந்த

 

வழக்கு, கடந்த வாரத்தில் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் கமிஷன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:

தண்டனை பெற்றவர்கள், தேர்தலில் போட்டி யிட வாழ்நாள் தடை விதிப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். அது போல, தண்டனை பெற்ற வர்கள், நீதித் துறையிலும், அரசு நிர்வாகத்தி லும் தொடருவதற்கும் தடை விதிக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள், நீதித் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் மீதான வழக்குகளை, உடனடியாக விசாரிக்க, தனி கோர்ட் அமைக்க வும் ஆதரவு அளிக்கிறோம். அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு, இதில் முடிவுஎடுக்க வேண்டும். மனுதாரரின் கோரிக்கைகளில் நியாயம் உள்ளதால், அதை ஆதரிக்கிறோம். தேர்தலில் போட்டியிட, குறைந்தபட்ச கல்வித் தகுதி மற்றும் வயது உச்சவரம்பு

நிர்ணயிப்பது குறித்து, பார்லி., தான் முடிவு செய்ய வேண்டும். இதற்காக, அரசியலமைப்பு சட்டத் தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். தேர்தல் கிரிமினல் மயமாக கூடாது என்பதை, தேர்தல் கமிஷன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதில் நடவடிக்கை எடுக்க, தேர்தல் கமிஷனுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வேண்டும் என்றும் கோரி வருகிறோம். தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாக வும் நடக்க வேண்டும்.

குற்றவாளிகள் இல்லாத ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1737467

Categories: Tamilnadu-news

’சசிகலா மக்களை மொட்டையடித்தார்... தினகரன் தொப்பி போடுகிறார்...!’ - சாடும் தீபா அணியினர்

Fri, 24/03/2017 - 19:00
’சசிகலா மக்களை மொட்டையடித்தார்... தினகரன் தொப்பி போடுகிறார்...!’ - சாடும் தீபா அணியினர்

 

'தமிழக மக்களை மொட்டையடித்து விட்டு சிறைக்குச் சென்றுள்ளார் சசிகலா. அடுத்து, மக்களுக்கு தொப்பி போட ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக நிற்கிறார்' என்று எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவைத் தலைமைச் செய்தி தொடர்பாளர் செல்லராஜாமணி  தெரிவித்தார். 

 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். தீபாவின் பிரசார வியூகம் குறித்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் செல்லராஜாமணி  கூறுகையில், "தேர்தலில் தீபா, போட்டியிடக்கூடாது என்று சசிகலா அணியினர் செயல்பட்டுவருகின்றனர். வேட்பு மனுதாக்கல் செய்ய மதியம் 12.45 மணிக்கு நாங்கள் சென்றோம். ஆனால் ஒரு மணியளவில் அங்கு வந்த டி.டி.வி.தினகரனை முதலில் வேட்பு மனுதாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிகள் அனுமதித்தனர். எங்களை அரைமணி நேரம் காத்திருக்க வைத்தனர். 
வேட்பு மனு பரிசீலனைத் தொடங்குவதற்கு முன்பே தீபாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாகத் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பினர். டி.டி.வி.தினகரனின் வேட்பு மனுவுக்கு கடும் ஆட்சேபனைத் தெரிவிக்கப்பட்டதால் எங்கள் மனுவை பரிசீலனை செய்ய காலதாமதமாகியது. தீபா தாக்கல் செய்த வேட்பு மனுவில் கணவர் பெயர் இல்லை என்றும், ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்கள் தீபாவை முன்மொழிந்து கையெழுத்திடவில்லை என்றும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதற்கு தேர்தல் அலுவலர், 'கணவர் பெயரைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்பது அவசியமில்லை' என்றார். அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் முன்மொழிந்த கையெழுத்தையும் கொடுத்தோம். இதன்பிறகு தீபாவின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 


ஏற்கெனவே மாதவன் குறித்த தகவல்களைத் தெரிவித்துவிட்டார் தீபா.  மாதவன் மூலம் தீபா வளர்ச்சிக்குத் தடைசெய்ய சசிகலா அணியினர் சதிசெய்தனர். அந்தச் சதியை முறியடித்து விட்டோம். வேட்பு மனுவில் மாதவனின் பெயரைக் குறிப்பிடாததது தீபாவை குறித்து நிலவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

தேர்தல் ஆணையமும், காவல்துறையும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. இதனால் மத்திய அரசுப் பணியில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை தேர்தல் பணிகளில் பயன்படுத்த வேண்டும்.
ஜெயலலிதாவின் மரணத்தில் மக்களுக்கு சந்தேகம் உள்ளது. சசிகலா, அவரது குடும்பத்தினர் மீது மக்களுக்கு சந்தேகம் இருக்கும் சூழ்நிலையில் மக்களை மொட்டையடித்து முதல்வராக சசிகலா திட்டமிட்டார். அதற்குள் அவர் சிறைக்குச் சென்று விட்டார். தற்போது, சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு தொப்பி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த தொப்பியை மக்களுக்குப் போட டி.டி.வி.தினகரன் முயற்சிக்கிறார். அதற்கு மக்கள் ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்கள். ஏனெனில் எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. மற்றும் இரட்டை இலைச் சின்னத்தைக் கூட சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரால் காப்பாற்ற முடியவில்லை. அவர்களால் எப்படி மக்களைக் காப்பாற்ற முடியும். ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு சசிகலா, பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் மதுசூதனன். மேலும் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சமயத்தில் முதல்வர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். முதல்வராக இருந்த அவரால் கூட ஜெயலலிதாவைப் பார்க்க முடியவில்லை. இவர்களின் சுயரூபம் மக்களுக்குத் தெரியும்" என்றார். 

http://www.vikatan.com/news/tamilnadu/84507-deepa-supporters-make-fun-of-dinakarans-party-symbol-hat.html

Categories: Tamilnadu-news

ஆர்.கே நகரில் போட்டியிடும் கங்கை அமரனுக்கு ஆதரவில்லை: இளையராஜா மகன் அதிரடி!

Fri, 24/03/2017 - 18:55
ஆர்.கே நகரில் போட்டியிடும் கங்கை அமரனுக்கு ஆதரவில்லை: இளையராஜா மகன் அதிரடி!
on: மார்ச் 24, 2017

ilai

ஆர்.கே நகர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் கங்கை அமரனுக்கு தனது ஆதரவில்லை என யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க சார்பில் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுகிறார். இவர் இளையராஜாவின் தம்பியாவார்.

இந்நிலையில் இளையராஜாவின் இளைய சகோதரர் பாஸ்கரின் மகளான வாசுகி தேர்தலில் போட்டியிடும் கங்கை அமரனுக்கு வாழ்த்து தெரிவித்து நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

அந்த டிவீட்டில் இளையராஜா மகன் யுவன் சங்கர் ராஜாவையும் டேக் செய்திருந்தார். அதற்கு, மறுப்பு தெரிவித்த யுவன் நான் இதை ஆதரிக்கவில்லை என டீவீட் செய்தார்.

இது டிவிட்டரில் வைரலானது. இளையராஜா – எஸ்.பி.பி விவகாரத்தில் கங்கை அமரன் இளையராஜாவை கடுமையாக சாடினார்.

அதனால் தான் இளையராஜாவின் மகனான யுவன் சங்கர் ராஜா அவரை ஆதரிக்க மறுத்துள்ளார் என செய்திகள் உலா வருகிறது.

http://lankasee.com/2017/03/24/ஆர்-கே-நகரில்-போட்டியிடு-2/

Categories: Tamilnadu-news

சசிகலாவை திட்டி கடிதம் எழுதும் தமிழக மக்கள்: திக்குமுக்காடும் சிறை நிர்வாகம்

Fri, 24/03/2017 - 18:49
சசிகலாவை திட்டி கடிதம் எழுதும் தமிழக மக்கள்: திக்குமுக்காடும் சிறை நிர்வாகம்

 

 
sasikala

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே. சசிகலாவுக்கு நாள்தோறும் ஏராளமான கடிதங்கள் வந்து குவிவதாக சிறை நிர்வாகம் கூறியுள்ளது.

சசிகலாவுக்கு வந்த கடிதங்களில் ஏராளமானவை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணம் என்று கூறி சசிகலாவை சபித்து எழுதப்பட்டிருப்பதாக பரப்பன அக்ரஹார மத்திய சிறை நிர்வாகம் கூறியுள்ளது.

பிப்ரவரி 15ம் தேதி சிறையில் சரணடைந்த நாள் முதல் தற்போது வரை 'சசிகலா, மத்திய சிறைச்சாலை, பரப்பன அக்ரஹாரா, பெங்களூர் - 560100' என்ற முகவரிக்கு சசிகலாவுக்கு நூறுக்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்து குவிந்திருப்பதாகவும், அதில் அதிகமான கடிதங்கள் அவரை குற்றம்சாட்டியும், சபித்தும் எழுதப்பட்டிருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சிறைக் கைதிகளுக்கு வரும் அனைத்துக் கடிதங்களையும் சிறைத் துறை அதிகாரிகள் படித்துப் பார்த்த பிறகே, கைதிகளிடம் ஒப்படைப்பது வழக்கம். அதுபோலத்  தான் சசிகலாவுக்கு வரும் கடிதங்களையும் நாங்கள் படித்துப் பார்த்துக் கொடுக்கிறோம்.

கடிதங்களை இளவரசி படித்துப் பார்த்துவிட்டு மோசமாக இருக்கும் கடிதங்களை அவரே கிழித்துப் போட்டுவிடுவார். ஆரம்பத்தில் சசிகலா தனக்கு வரும் கடிதங்களை படித்து வந்தார். தற்போது படிப்பதை நிறுத்திவிட்டார் என்று சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் சேலம், தருமபுரி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, விழுப்புரம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்த இந்த கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு சில கடிதங்கள்தான் சென்னையில் இருந்து வந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamani.com/

Categories: Tamilnadu-news

112 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக சசிகலா மீது புகார்: காஞ்சீபுரம் போலீசார் அதிரடி விசாரணை

Fri, 24/03/2017 - 11:51
112 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக சசிகலா மீது புகார்: காஞ்சீபுரம் போலீசார் அதிரடி விசாரணை

 

சிறுதாவூரில் கங்கை அமரன் பங்களா உள்பட 112 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக சசிகலா மீது அளிக்கப்பட்ட புதிய புகாரின் அடிப்படையில் காஞ்சீபுரம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 காஞ்சீபுரம் போலீசார் அதிரடி விசாரணை
 
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள சிறுதாவூர், பையனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் நிலங்கள் வாங்கியதில் மோசடி நடந்திருப்பதாக தற்போது புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 9-ந்தேதி அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

சிறுதாவூர் பகுதியில் சசிகலா குடும்பத்தினர் பல்வேறு நபர்களிடம் இருந்து வாங்கிய 112 ஏக்கர் நிலம் முறைகேடாக வாங்கப்பட்டுள்ளது. அங்கு நிலம் வைத்திருந்தவர்களை மிரட்டி பல்வேறு சர்வே எண்களில் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் அரசு புறம்போக்கு நிலங்களும், குளம் குட்டைகளும் அடங்கியுள்ளன. ஓய்வு பெற்ற ராணுவ வீரரான கண்ணன் என்பவரிடமிருந்தும் அவருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்துள்ளனர்.

சினிமா இயக்குனர் கங்கை அமரன் மற்றும் அவரது மனைவி மணிமேகலை பெயரில் பையனூர் கிராமத்தில் இருந்த 22 ஏக்கர் நிலமும் அபகரிக்கப்பட்டுள்ளது.
 
CEF5B280-E0AA-41EF-A2CC-CADBDDF0FFB5_L_s


இது தொடர்பாக கடந்த 2000-ம் ஆண்டு காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுபற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான ஜெயராமன் வெங்கடேசன் என்பவரே இந்த புகார் மனுவை அளித்திருந்தார்.

சசிகலா மீதான புகார் பற்றி விசாரணை நடத்த காஞ்சீபுரம் மாவட்ட நில அபகரிப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து நில அபகரிப்பு பிரிவு போலீசார் இது தொடர்பாக விசாரணையை தொடங்கி உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கண்ணன் மற்றும் அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ஜெயராமன் வெங்கடேசன் ஆகியோர் தாங்கள் அளித்த புகார் தொடர்பாக மேலும் தகவல்களை தெரிவிப்பதற்காக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள அபகரிப்பு பிரிவுக்கு வந்திருந்தனர். அங்கு புகார்தாரரான கண்ணனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சசிகலாவுக்கு எதிரான புகார் மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள். இந்த புகாரின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

கங்கை அமரனுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தில் அவர் கட்டியிருந்த பங்களாவும் இருந்தது. இதனோடு சேர்த்து தான் 112 ஏக்கர் நிலத்தை சசிகலா தரப்பினர் அபகரித்துள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாவை பறி கொடுத்தது பற்றி இயக்குனரும் இசை அமைப்பாளருமான கங்கை அமரனும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரபரப்பாக குற்றம் சாட்டி இருந்தார்.

நான் எனது பங்களாவை இழப்பதற்கு சசிகலாவே காரணம் என்றும், அதனை விற்கமாட்டேன் என்று தொடர்ந்து கூறி வந்த நிலையிலும் என்னிடம் இருந்து மிரட்டி பங்களாவை பறித்துக் கொண்டனர் என்று கூறி இருந்தார்.

இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே சசிகலா மீதான நில அபகரிப்பு புகாரை போலீசாரை விசாரிக்க தொடங்கி இருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/24162755/1075782/kancheepuram-police-probe-land-grabbing-complaint.vpf

Categories: Tamilnadu-news

‘இரட்டை இலைக்கு உரிமை கோரினாரா பன்னீர்செல்வம்?!’ - ஆணைய விவாதத்தில் என்ன நடந்தது?

Fri, 24/03/2017 - 07:19
‘இரட்டை இலைக்கு உரிமை கோரினாரா பன்னீர்செல்வம்?!’ - ஆணைய விவாதத்தில் என்ன நடந்தது?

ஓ.பன்னீர்செல்வம்

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட 127 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 'தேர்தல் ஆணையத்தால் சின்னம் முடக்கப்பட்ட கவலையில் இருந்து நிர்வாகிகள் முழுமையாக மீளவில்லை. தொப்பி சின்னத்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்குமா?' என்ற கவலையும் அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. 

கோடை வெயிலின் வெப்பத்தையும் தாண்டி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் தகித்துக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் போட்டியிடும் மதுசூதனன், இரட்டை மின் கம்பம் சின்னத்தை தேர்வு செய்திருக்கிறார். எங்களுக்குப் போட்டியே இல்லை என்ற கணக்கில் தி.மு.க வேட்பாளர் வலம் வருகிறார். "இரட்டை இலை சின்னம் கைவிட்டுப் போனதில் டி.டி.வி.தினகரன் உள்பட கட்சி நிர்வாகிகள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். 'ஆர்.கே.நகரில் தோற்றுவிட்டால், ஆளும் பா.ஜ.க இன்னும் வேகமாக நம்மை வீழ்த்தும் முயற்சியில் இறங்கும்' என்பதை அறிந்து, பிரசாரப் பணிகளில் வேகம் காட்டுகின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அமைச்சர்களும் அட்டவணைப்படி தொகுதி மக்களை சந்தித்து வாக்கு கேட்க உள்ளனர்.

பன்னீர்செல்வம் அணியினரோ, 'ஆர்.கே.நகரில் நாங்கள் வெற்றி பெற்றால், ஒட்டுமொத்த அ.தி.மு.கவும் எங்கள் கைகளுக்கு வந்துவிடும். அம்மா மரணத்தில் உண்மையைக் கண்டுபிடிக்க, எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்' எனப் பேசி வருகின்றனர். தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்னைகளைவிடவும், ஜெயலலிதா மரணத்துக்கு நீதி கேட்கும் தேர்தலாகவே மாற்றிவிட்டனர். தி.மு.கவினரோ, தொகுதிக்குள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் 'செயலற்ற அரசாக அ.தி.மு.க அரசு இருக்கிறது' என்பதை சுட்டிக் காட்டும் வகையில் பிரசாரம் செய்கின்றனர். மற்ற கட்சிகள் சமுதாய பலத்தைக் குறிவைத்துக் களமிறங்கியுள்ளன" என்கின்றனர் வடசென்னை அரசியல் பிரமுகர்கள். 

அன்வர்ராஜா'ஆர்.கே.நகர் தேர்தல் களம்தான் இரட்டை இலையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்குமா?' என அ.தி.மு.க எம்.பி அன்வர்ராஜாவிடம் கேட்டோம். "இரட்டை இலையை எங்களுக்குத்தான் ஆணையம் ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். பாரபட்சத்தோடு எங்களைப் புறக்கணித்துவிட்டனர். முலாயம் சிங் யாதவின்  குடும்பத்தில் பிரச்னை வந்தபோது, தேர்தல் ஆணையம் தலையிட்டு சமரசம் செய்து வைத்தது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த அகிலேஷ் யாதவ் வசம் கட்சியை ஒப்படைத்தது. ஆனால், அ.தி.மு.க விவகாரத்தில் இப்படியொரு சிக்கல் ஏற்படவே இல்லை. 'சின்னத்தை கையாள்வதற்கு சின்னம்மாவுக்குத் தகுதியில்லை'  என்பதுதான் பன்னீர்செல்வம் அணியின் வாதம். 'கட்சியின் பொதுச் செயலாளராக அவர் தேர்வு பெற்றது தவறு. அதே அடிப்படையில் சின்னத்தை ஒதுக்கீடு செய்வதற்கும் அவர் தகுதியற்றவர். கட்சி சார்பான அவருடைய நடவடிக்கைகள் எதுவும் செல்லாது. அ.தி.மு.கவின் உள்கட்சி விதிகளின்படி, பொதுச் செயலாளருக்கு அடுத்தநிலையில் அவைத் தலைவர் மதுசூதனன் இருக்கிறார். அவர் கையில் கட்சியின் அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும்' என ஆணையத்தில் வாதிட்டனர். எந்த இடத்திலும் பன்னீர்செல்வம் சார்பாக வாதிட்டவர்கள், 'எங்களுக்கு சின்னம் ஒதுக்குங்கள்' என்று எந்த இடத்திலும் கேட்கவில்லை. அவர் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரியிருந்தால்கூட பரவாயில்லை. பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்து முன்மொழிந்துவிட்டு, புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படும் வரையில் தற்காலிக பொதுச் செயலாளருக்கு அனைத்து அதிகாரங்களும் இருக்கின்றன என அறிவித்தவரே பன்னீர்செல்வம்தான். இவை அனைத்தும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

எனவே, நிரந்தர பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படும் காலம் வரையில் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் தற்காலிக பொதுச் செயலாளர் மேற்கொள்வதற்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு. 'இரட்டை இலையை ஒதுக்கும் அதிகாரமும் சசிகலாவுக்கு உண்டு' என்று எங்கள் தரப்பில் வாதிட்டோம். கட்சியின் 37 எம்.பிக்களும் 122 எம்.எல்.ஏக்களும் 57 மாவட்ட செயலாளர்களும் எங்கள் பக்கம் உள்ளனர். நாங்கள் இந்த மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கிறோம். இரட்டை இலை சின்னத்துக்காகவும் மறைந்த முதல்வருக்காகவும்தான் மக்கள் இந்த அரசைத் தேர்வு செய்தனர்.

இந்தநிலையில், இரட்டை இலை சின்னத்தில் நாங்கள் போட்டியிடுக் கூடாது என்பதில் எந்தவித நியாயங்களும் இல்லை. தேர்தல் ஆணையத்தின் முடிவு பாரபட்சமானது. இந்த விவகாரத்தில் சட்டரீதியாகவே வெற்றி பெறுவோம். எங்களுக்கு எதிராக இப்படியொரு உத்தரவு வருவதற்குக் காரணமே பா.ஜ.க அரசுதான். பன்னீர்செல்வத்தைக் கையில் வைத்துக் கொண்டு பா.ஜ.க அரசு சில காரியங்களைச் செய்கிறது. தமிழ்நாட்டில் பா.ஜ.கவுடன் கூட்டு சேருவதற்கு எந்தக் கட்சியும் தயாராக இல்லை. பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக செயல்பட்டால், அதன்மூலம் சில இடங்களில் வெற்றி பெறலாம் என அவர்கள் கணக்கு போடுகின்றனர். 'பா.ஜ.கவின் பினாமி ஓ.பி.எஸ்' என்பதை வரக் கூடிய காலங்களில் மக்கள் உணர்வார்கள். இதைப் பற்றி பகிரங்கமாக பேசுவதற்கு மற்றவர்கள் ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் சொல்வதுதான் உண்மை. எங்களை அழிக்க நினைக்கிறது பா.ஜ.க. தொண்டர்களுக்காக எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி இது. எங்கள் ரத்தத்தை அவர்கள் உறிஞ்சுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்றார் கொந்தளிப்புடன். 

http://www.vikatan.com/news/tamilnadu/84463-did-o-panneerselvam-claim-rights-for-two-leaves-symbol-what-happened-in-the-meeting.html

Categories: Tamilnadu-news

இதை 'வெறும் இடைத்தேர்தல்' எனக் கடந்து விட முடியாது..! ஆர்.கே.நகர் எழுப்பும் கேள்விகள்

Thu, 23/03/2017 - 19:01
இதை 'வெறும் இடைத்தேர்தல்' எனக் கடந்து விட முடியாது..! ஆர்.கே.நகர் எழுப்பும் கேள்விகள்

இரட்டை இலை

ட்சியின் நிறுவனரான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடவேண்டிய அ.தி.மு.க., இரண்டு, மூன்றாகப் பிளவுபட்டு, எம்.ஜி.ஆர். காட்டிய இரட்டை இலைச் சின்னத்தைத் தொலைத்துவிட்டு பரிதாபமாகக் காட்சியளிக்கிறது. அ.தி.மு.க. தேர்தல் சின்னத்தை இழப்பது, இது இரண்டாவது முறை. முதல்முறை எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர், கட்சியையும், ஆட்சியையும் யார் வழி நடத்துவது என்பதில் ஏற்பட்ட மோதல், கட்சியில் பிளவை ஏற்படுத்த ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்தது. அப்போது, இரு தரப்பும் கட்சிக்கு உரிமை கோரியதால், 1989 பொதுத்தேர்தலின்போது இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டு, ஜானகிக்கு இரட்டை புறா, ஜெயலலிதாவுக்கு சேவல் சின்னம் கிடைத்தது.

1989-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், இரட்டை இலைச் சின்னத்தை இழந்து இரு தரப்பும் நின்றபோது, தேர்தல் முடிவுகள் பிரச்னையைத் தீர்த்துவைத்தன. மக்கள் யார் பின்னால் நிற்கிறார்கள் என்பதை உணர்த்தியது அந்தத் தேர்தல். ஜெயலலிதா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற, அதைப் பயன்படுத்தி கட்சியைத் தனதாக்கிக்கொண்டார்.

இரட்டை இலை

28 ஆண்டுகளுக்கு பின்னர்...

28 ஆண்டுகளுக்குப் பின்னர்  தற்போது மீண்டும் அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டுள்ளது. அன்று பொதுத் தேர்தலின்போது முடக்கப்பட்டது. இன்று இடைத்தேர்தலின்போது முடக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இல்லாமல் நடக்கும் தேர்தல் என்பதே, அ.தி.மு.க-வுக்கு பலவீனம்தான். இந்தச் சூழலில், இரட்டை இலைச் சின்னம் இல்லை. அ.தி.மு.க. பெயரைப் பயன்படுத்த முடியாது. எல்லாவற்றுக்கும் மேல், கட்சி மூன்றாக உடைந்து சின்னாபின்னமாகி இருக்கிறது. அ.தி.மு.க-வுக்கு இது பேரதிர்ச்சி தரக்கூடியது.

'1989-ம் ஆண்டு நடந்தது பொதுத்தேர்தல். இது, இடைத்தேர்தல்தானே. இந்த வெற்றி, தோல்வி, கட்சி யார் பக்கம் என்பதை எப்படி முடிவு செய்வதாக அமையும்?' என்ற கேள்வி எழக்கூடும். நியாயமான கேள்வியும்கூட. ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெறும் இடைத்தேர்தல் என நாம் கடந்துவிட முடியாது. ஏராளமான திருப்பங்களும்  சுவாரஸ்யங்களும் சவால்களும் நிறைந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்.

அ.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் தினகரன்

சசிகலா தரப்பு போட்ட கணக்கு !

இரட்டை இலை முடக்கப்பட்டதில் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது, சசிகலா தரப்பு. 'நிச்சயம் கட்சி சின்னம் முடக்கப்படாது' என்றே சசிகலா தரப்பு நம்பியது. அதற்கு, அவர்கள் சொன்ன கணக்கு கவனிக்கத்தக்கது. உத்தரப்பிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சியில் இதே போன்று முலாயம் சிங், அகிலேஷ் ஆகியோர் உரிமைகொண்டாடியபோது... பொதுக்குழு உறுப்பினர்கள், எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள், எம்எல்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, அதில் பெரும்பான்மையானவர்கள் அதாவது 80 சதவிகிதம் பேரின் ஆதரவு இருந்த அகிலேஷ் யாதவ் வசம் சைக்கிள் சின்னத்தையும், கட்சியையும் ஒப்படைத்தது தேர்தல் ஆணையம்.

அதேபோன்று இப்போது கணக்கிட்டால், மொத்தம் அ.தி.மு.க-வில் உள்ள 2,141 பொதுக்குழு உறுப்பினர்கள், 50 எம்பி-க்கள், 135 எம்எல்ஏ-க்கள் என மொத்தம் 2,326 பேரில் கிட்டத்தட்ட 2250-க்கும் மேற்பட்டோர் தங்கள் பக்கமே இருக்கிறார்கள். எனவே அ.தி.மு.க-வும், சின்னமும் எங்களுக்கே இதில் எந்தச் சிக்கலும் இல்லை என நம்பினர். பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது என்பதை இப்போதைக்கு தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக்கொள்ளாது என நம்பினர்.

தினகரன் வேட்பு மனுத்தாக்கல்

சசிகலா தரப்புக்கு வெற்றி ஏன் முக்கியம்?

அதேபோன்று, பொதுச் செயலாளர் நியமனத்தை இப்போதைக்கு தேர்தல் ஆணையம் கணக்கில்கொள்ளவில்லை. அதே சூழலில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை மட்டுமே கணக்கில்கொண்டு கட்சியும், சின்னமும் யாருக்கு என்பதை முடிவு செய்யவும் இல்லை. சசிகலா தரப்பு சொல்லும், 'இது உட்கட்சிக் குழப்பம்' என்பதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. அதே சூழலில், "சுமார் 20 ஆயிரம் பக்கங்கள்கொண்ட இந்த ஆவணங்களை ஆய்வுசெய்ய கால அவகாசம் வேண்டும். அவசரப்பட்டு ஏதேனும் ஒன்று சொல்லி, பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக இடைக்காலமாக இந்தச் சின்னம் முடக்கப்படுகிறது" என்றே தெரிவித்துள்ளது.

இரட்டை இலைச் சின்னம் என்பது அ.தி.மு.க-வுக்கு மிகப்பெரிய பலம். அதை இழந்து நிற்பது என்பது மிகப்பெரிய பலவீனம். அதுவும் இப்படி நெருக்கடியான சூழலில் பெரும் இடரை ஏற்படுத்தக்கூடும். சசிகலா தரப்புக்கு இது மிக முக்கியமான தேர்தல். இந்தத் தேர்தலில் வென்றால், கட்சியும் ஆட்சியும் எங்களுக்குத்தான் என்பதை அவர்கள் நிலைநிறுத்த முடியும். இந்தத் தேர்தலில் வென்றால், தினகரன் முதல்வராக முடியும். இந்தத் தேர்தலில் வென்றால்தான் விமர்சனங்களை எதிர்கொள்ளமுடியும். எனவே, தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என சசிகலா தரப்பு பாடுபடும்.  

ஒருவேளை, இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தால், சசிகலா தரப்பில் உள்ளவர்கள் அங்கேயே இருப்பார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. தற்போது, 122 எம்எல்ஏ-க்கள் சசிகலா தரப்பில் இருக்கிறார்கள். இதன் எண்ணிக்கை குறைந்தால், ஆட்சியை இழக்கக்கூடும். மக்களின் நம்பிக்கையைப் பெறத் தவறிவிட்டார்கள் எனச்சொல்லி, கட்சி மேலும் பலவீனமடையக்கூடும். இதைத் தவிர்க்க, வெற்றி பெற்றே ஆகவேண்டிய அவசியம் தினகரனுக்கு உள்ளது.

மதுசூதனன் வேட்புமனுத்தாக்கல்

உற்சாகத்தில் பன்னீர் தரப்பு...

இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். உண்மையில் சின்னம் முடக்கப் பட்டதை பன்னீர்செல்வம் தரப்பு கொண்டாடவேசெய்கிறது. சின்னம் முடக்கப்பட்டது பன்னீர் அணிக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளித்துள்ளது. பன்னீர்செல்வம் அணி வலுப்பெறும் வாய்ப்பு கூடியிருப்பதாகவே கருதப்படுகிறது.

இந்தத் தேர்தலில் பன்னீர்செல்வம் தரப்பு வென்றால், மக்கள் ஆதரவு எங்களுக்குத்தான் எனச்சொல்லி, கட்சியின் நிர்வாகிகளை வளைத்து, கட்சிக்கு உரிமைகொண்டாட முடியும். பன்னீர்செல்வம் தரப்புக்கு 'மின் விளக்கு' சின்னம் கிடைத்துள்ளது. இரட்டை இலையோடு தொடர்பு படுத்தி பிரச்சாரத்தைத் துவக்கி இருக்கிறார்கள். மக்கள் சக்தி எங்கள் பக்கம்தான் எனச்சொல்லும் பன்னீர்செல்வம் தரப்பு, அதைத் தெரிவிக்க தேர்தலில் வென்றாக வேண்டும். தேர்தலில் தோல்வியைத் தழுவினால், இப்போது இருக்கும் உற்சாகத்தை  பன்னீர் தரப்பு இழக்கக்கூடும். எனவே, பன்னீர் தரப்புக்கு இந்த வெற்றி மிக முக்கியம்.

ஸ்டாலின்

இப்போது கூட வெற்றி கைவசமாகவில்லை என்றால்...?

அ.தி.மு.க. மூன்றாகப் பிரிந்து தேர்தலைச் சந்திக்கிறது. இந்தச் சூழலில் தி.மு.க. வெற்றிபெறவேண்டியது அக்கட்சிக்கு மிக முக்கியம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், தி.மு.க. ஆட்சியைப் பிடித்திருக்கும். வெற்றியை நெருங்கி வந்த தி.மு.க., மக்கள் சக்தி எங்களைத்தான் ஏற்கும் என்பதை நிரூபிக்கவேண்டிய நேரம் இது. அ.தி.மு.க-வுக்கு இணையான பலம் கொண்ட கட்சி எனச் சொல்லிக்கொள்ளும் தி.மு.க., இந்தத் தேர்தலில் பெரும் வெற்றியைப்  பெறவேண்டியது மிக அவசியம்.

ஒரு வேளை இந்தத் தேர்தலில் தி.மு.க. தோல்வியைத் தழுவினால், பலவீனமான கட்சியாகப் பார்க்கப்படும். மக்கள் சக்தி தி.மு.க-வை ஏற்கவில்லை என்பதாக அமையும். தனக்கு எதிரே நிற்கும் கட்சி மிகப் பலவீனப்பட்டு, மூன்றாக உடைந்து தேர்தலைச் சந்திக்கும்போது கூட தி.மு.க-வால் வெற்றிபெற முடியவில்லை என்பது அக்கட்சிக்கு மிகப்பெரிய பலவீனத்தை ஏற்படுத்தும். விரைவில் பொதுத் தேர்தலே வரும் என தி.மு.க. தலைவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை அப்படி ஒரு சூழல் வந்தால், இடைத்தேர்தல் முடிவு கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கும். இதை தி.மு.க-வினர் உணர்ந்தே இருக்கிறார்கள்.

தீபா

பலத்தை நிரூபிக்க முயலும் பிற கட்சிகள்...

இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படும்' என்பதை முதன்முதலில் உறுதியிட்டுச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியது, பி.ஜே.பி. மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்திலும், வடக்கில் சில மாநிலங்களிலும் வென்று ஆட்சி அமைத்துள்ள பி.ஜே.பி., தமிழகத்தில் நடக்கும் இந்தத் தேர்தலை மிக முக்கியமானதாகவே கருதுகிறது. மக்களுக்கு அறிமுகமான திரைத்துறை பிரபலமான கங்கை அமரனை களம் இறக்கியுள்ள பி.ஜே.பி., இந்தத் தேர்தலில் பெரும் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதை இலக்காக்கியுள்ளது. தமிழகத்தில் தாங்கள் பலம் மிக்கவர்களாக இருக்கிறோம் என்பதை உணர்த்த, இந்தத் தேர்தலை பி.ஜே.பி. பயன்படுத்திக்கொள்ள முயல்கிறது.

இவர்களோடு அ.தி.மு.க-வில் தீபா அணி, தே.மு.தி.க., மார்க்சிஸ்ட், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் பலத்தைக் காட்ட மோதுகின்றன. ஜெயலலிதாவின் வாரிசு என்ற அடைமொழியோடு தேர்தலைச் சந்திக்கும் தீபாவும், மக்கள் நலக்கூட்டணியை உடைத்து, தேர்தலைச் சந்திக்கும் மார்க்சிஸ்ட்டும் தேர்தலில் தங்கள் பலத்தை நிரூபிக்கவேண்டியது அவசியமாகிறது.

அதிகாரப்பூர்வ அ.தி.மு.க. யார்? மக்கள் சக்தி யார் பின்னால் இருக்கிறது? தி.மு.க-வின் பலம் என்ன? பி.ஜே.பி. தமிழகத்தில் கால் பதிக்க முடியுமா? எனப் பல கேள்விகளுக்கும் பதிலாக, இந்த இடைத்தேர்தல் முடிவுகள் அமையும். ஆகையால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை வெறும் இடைத்தேர்தலாகக் கடந்துசெல்ல முடியாது.

http://www.vikatan.com/news/coverstory/84418-we-cant-take-this-as-just-by-election-problems-faced-by-rk-nagar-people.html

Categories: Tamilnadu-news

தொப்பியுடன் மனு தாக்கல்:தினகரன் காமெடி

Thu, 23/03/2017 - 18:54
தொப்பியுடன் மனு தாக்கல்:தினகரன் காமெடி
 
 
 

சென்னை:ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி யிடும் தினகரன், திடீரென தன், 'கெட்டப்'பை மாற்றி, தனக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான தொப்பியை அணிந்து வந்து, காமெடி செய்தது, எம்.ஜி.ஆர்., ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்து உள்ளது.

 

Tamil_News_large_173675320170323234148_318_219.jpg

ஆர்.கே.நகர் தொகுதியில், சசி அணி சார்பில், சசிகலா அக்காள் மகன் தினகரன் போட்டியிடு கிறார். அவருக்கு தேர்தல் கமிஷன், ஆட்டோ ரிக் ஷா சின்னம் ஒதுக்கியது. அதை வேண்டாம் என, தொப்பி சின்னத்தை பெற்றனர்.

நேற்று காலை, தினகரன் தன் ஆதரவாளர் களுடன் சென்று, வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, தன் சின்னமான தொப்பியை தலையில் அணிந்தபடி, மனு தாக்கல் செய்தார்.அவர், திடீரென தொப்பி அணிந்து வந்ததை, நெட்டிசன்கள்,சமூக வலைதளங்களில் கிண்டல் அடித்தனர்.

'ஆட்டோ ரிக் ஷாவை துாக்கி சுற்ற முடியாது. தொப்பி அணிந்து பிரசாரத்திற்கு சென்றால், வெயிலில் இருந்து தப்பலாம். வாக்காளர்களுக்கு எளிதாக தொப்பி வழங்கலாம் என்பதாலும், தினகரன் தொப்பி சின்னத்தை பெற்றுள்ளார்' என, கிண்டல் அடித்து உள்ளனர்.
இந்நிலையில், தினகரன் தொப்பி அணிந்து,எம்.ஜி.ஆர்., போல் வந்தது, எம்.ஜி.ஆர்., ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, எம்.ஜி.ஆர்., ரசிகரான, ஆர்.கே.நகரை சேர்ந்த சீனிவாசன், 50, கூறியதாவது:

 

ஜெ., இறந்ததும், சசிகலா, ஜெ., போல் உடை அலங்காரத்தை மாற்றினார். அப்படியும், மக்களிடம் செல்வாக்கு பெற முடியவில்லை; வெறுப்பையே சம்பாதித்தார். அதேபோல், எம்.ஜி.ஆரின் அடையாளமான தொப்பியை, தினகரன் சின்னமாக பெற்றுள்ளார்.

தொப்பி அணிந்து வந்தால், எம்.ஜி.ஆர்., போன்று செல்வாக்கை பெற முடியாது. மக்க ளின் வெறுப்பை தான் சம்பாதிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1736753

Categories: Tamilnadu-news

பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்!

Thu, 23/03/2017 - 17:07
பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்!

ashokamithran

பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85. சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது.  இவரின் இயற்பெயர், தியாகராஜன். பதினெட்டாவது அட்சக்கோடு, தண்ணீர், இன்று, ஆகாசத்தாமரை, ஒற்றன், மானசரோவர், கரைந்த நிழல்கள் ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். இவரது 'அப்பாவின் சிநேகிதர்' சிறுகதை தொகுப்புக்காக 1996-ல் சாகித்ய அகாடமி விருதை வென்றார்.

செகந்திராபாத்தில் பிறந்த இவர், தனது 21-வது வயதில் சென்னைக்குக் குடியேறினார். இவருக்கு, தமிழ்நாடு அரசு மும்முறை பரிசுகள் வழங்கி கவுரவித்துள்ளது. இலக்கியச் சிந்தனை விருதுகளை 1977-ம் ஆண்டிலும், 1984-ம் ஆண்டிலும் இருமுறை பெற்றுள்ளார். 2007-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் விருதைப் பெற்றார். சாரல், இலக்கியச் சிந்தனை, அக்சரா ஆகிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். 

http://www.vikatan.com/news/tamilnadu/84441-writer-ashokamithran-passes-away.html

Categories: Tamilnadu-news

‘இதைவிட வேறு அவமானம் என்ன வேண்டும்?!’ - கொந்தளிக்கும் சசிகலா குடும்ப உறவுகள்

Thu, 23/03/2017 - 07:11
‘இதைவிட வேறு அவமானம் என்ன வேண்டும்?!’ - கொந்தளிக்கும் சசிகலா குடும்ப உறவுகள்

தினகரன்

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.கவில் ஏற்பட்ட புயல், 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மையம் கொண்டுள்ளது. 'அ.தி.மு.கவில் பிளவு நீடிப்பதையே மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு விரும்புகிறது. வி.என்.ஜானகியோடு ஜெயலலிதா முரண்பட்டபோது, இரட்டை இலை விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் ராஜீவ்காந்தி. தற்போது அப்படியான எந்த அவசியமும் பிரதமர் மோடிக்கு இல்லை' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார் சசிகலா. ஆட்சி அதிகாரத்தை நோக்கியும் அவர் வேகம் காட்டியபோது, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க பிளவுபட்டது. 'அ.தி.மு.கவின் சட்டவிதிகளின்படி சசிகலா தேர்வு செய்யப்படவில்லை' என்பதை தேர்தல் ஆணையத்தில் தெரிவித்தது ஓ.பி.எஸ் அணி. இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க சார்பில் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 'இரட்டை இலைச் சின்னத்தை அவருக்கு ஒதுக்கக்கூடாது. நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க' என தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்தார் மைத்ரேயன் எம்.பி. இதற்கு சாட்சியாக ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்களையும் சமர்ப்பித்தார். டி.டி.வி.தினகரன் தரப்பில் இருந்தும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதம், அ.தி.மு.கவின் துணை அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளின் ஆதரவுக் கடிதம் என ஏராளமான ஆவணங்களை காட்சிப்படுத்தினர். இதற்கிடையில், சசிகலா குடும்பத்துக்குள்ளும் அதிகார மோதல் வெடித்தது. 'டெல்லியில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என திவாகரன் தரப்பினர் வரிந்து கட்டிக் கொண்டு களம் இறங்கினர். சசிகலாவுக்கு ஆதரவாக வாதாட முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் அனுமதியைப் பெற்றார் திவாகரன். தேர்தல் ஆணையத்தில் நடந்த வாதத்தின் முடிவில் இரண்டு தரப்புக்கும் சின்னம் கிடைக்கவில்லை. 'ஏப்ரல் 17-ம் தேதிக்குள் ஆவணங்களை அளிக்குமாறு' தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

சசிகலா"தமிழ்நாட்டுக்கு டிசம்பருக்குள் தேர்தலைக் கொண்டு வருவது குறித்து டெல்லி வட்டாரத்தில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. 'தேர்தல் ஆணையத்தில் கட்டாயம் வெற்றி பெறுவோம்' என தினகரன் ஆட்கள் டெல்லியில் முகாமிட்டிருந்தனர். கடைசி நாட்களில், 'ஆணையத்தின் முடிவு எதிராகப் போகலாம்' என்பதை அறிந்து, திவாகரன் தரப்பினர் டெல்லியில் தங்கியிருந்தனர். காங்கிரஸ் தலைமையில் உள்ளவர்களைத் தொடர்பு கொண்டு, அடுத்தக்கட்ட ஆலோசனைகளையும் கேட்டனர். ஆனால், முடிவு எப்படி இருக்கும் என்பதை பன்னீர்செல்வம் அணியினர் முன்பே யூகித்துவிட்டார்கள்" என விவரித்த ஆளும்கட்சியின் நிர்வாகி ஒருவர், நேற்று நடந்த விவகாரங்களை நம்முன் பட்டியலிட்டார். "இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி ஆணையம் உத்தரவிட்டதை தினகரன் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. மிகவும் சோர்ந்து போய்விட்டனர்.

நேற்று அவர்கள் தீவிர ஆலோசனையிலும் இறங்கினர். ' உங்களால் எதையும் சரியாகச் செய்ய முடியவில்லை. நீங்கள் நம்பிய ஆட்கள் எல்லாம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டனர். தவறான ஆட்களை நம்பி களத்தில் இறங்கிவிட்டீர்கள். இந்த விவகாரத்தை எப்படி அணுக வேண்டும் என்பதைக்கூட உங்களால் கணிக்க முடியவில்லை' என தினகரன் தரப்பினரை நோக்கிக் குற்றம் சுமத்தினர். அவரது தரப்பினரோ, ' நமக்கு ஆதரவாக இருந்தவர்கள் கடுமையாக வேலை பார்த்தார்கள். அவர்களை நாம் குறை சொல்ல முடியாது. பொதுச் செயலாளர் பதவி நீடித்திருப்பதற்குக் காரணமும் அவர்கள்தான். நம்மை மீறிய சக்தி விளையாடும்போது நாம் என்ன செய்ய முடியும்?' என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

திவாகரன்இதையடுத்து, திவாகரன் குடும்பத்துக்கு மூத்தவரான அந்த நபர் பேசும்போது, 'நம்மை நெகட்டிவ் சக்தி என்று டெல்லியில் ஆள்பவர்கள் நினைக்கிறார்கள். அவர்களை நாம் ஆதரித்தாலும் எதிர்த்தாலும் நம்மை அடிப்பார்கள். இப்போது கோழையாக அடி வாங்கி வந்திருக்கிறோம். இதைவிட வேறு அவமானம் என்ன வேண்டும்? தொடக்கத்தில் இருந்தே அவர்களை நாம் வலுவாக எதிர்த்திருக்க வேண்டும். நாம் அப்படிச் செய்யாமல் அமைதியாக இருந்ததால், வீரமணி, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் நம்மை ஆதரித்த முஸ்லிம் அமைப்புகளும் விலகிச் சென்றுவிட்டனர். மத்திய அரசை எதிர்த்திருந்தால், இந்தளவுக்கு தோல்வி வந்து சேர்ந்திருக்காது. இதைத்தான் நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன். நம்மால் அவர்களுக்கு ஆக வேண்டிய காரியம் என்று எதுவும் இல்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் தி.மு.க ஆதரித்தாலே பா.ஜ.கவுக்குப் போதுமானது. நம்முடைய ஆதரவை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இனி சின்னத்தை மீட்க நாம் கடுமையாக போராட வேண்டியது இருக்கும்' எனக் கொந்தளித்தார். இதையடுத்து சட்டரீதியாக செய்ய வேண்டிய காரியங்கள் குறித்து விவாதித்து வருகின்றனர்" என்றார் விரிவாக. 

"அ.தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என பா.ஜ.க மேலிடம் விரும்பவில்லை. அவர்கள் பிளவுபட்டு இருப்பதையே தங்களுக்கான ஆதாயமாகப் பார்க்கின்றனர். 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தாலும், மூன்றாவது இடத்துக்குள் வந்துவிட வேண்டும்' என பா.ஜ.க நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதற்கேற்ப பிரசார வியூகத்தையும் அமைத்து வருகின்றனர். இப்போதுள்ள சூழலில் களத்தில் அ.தி.மு.க என்ற கட்சி போட்டியிடவில்லை. தொகுதிக்குள் பணபலத்தைக் காட்ட டி.டி.வி.தினகரன் முயற்சித்தாலும், அதை முறியடிக்கவும் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். 'தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது?' என்பதை உணர்ந்து கொள்ள முடியாத நிலைக்கு, அ.தி.மு.க நிர்வாகிகள் தள்ளப்பட்டுள்ளனர். அ.தி.மு.க அரசு முழுமையாக பதவிக்காலத்தை நிறைவு செய்யுமா என்பதும் சந்தேகம்தான்" என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர். 

http://www.vikatan.com/news/tamilnadu/84377-losing-two-leaves-symbol-is-the-biggest-shame-weve-ever-faced---sasikala-faction-in-anger.html

Categories: Tamilnadu-news

சசிகலா- பன்னீர்செல்வம் அணியினருக்கு கட்சிப் பெயர், சின்னம் ஒதுக்கீடு!

Thu, 23/03/2017 - 06:39
சசிகலா- பன்னீர்செல்வம் அணியினருக்கு கட்சிப் பெயர், சின்னம் ஒதுக்கீடு!

leterrrr_11202.jpg

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு 'தொப்பி' சின்னத்தையும், பன்னீர்செல்வம் அணிக்கு 'இரட்டை மின்கம்பம்' சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக மூன்றாக உடைந்தது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தலைமையில் ஓர் அணியும் உருவானது. இதனிடையே, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் சசிகலா அணியில் டி.டி.வி. தினகரனும், பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிடுவேன் என்று அறிவித்த தீபா இன்னும் மனுத்தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.

இதற்கிடையில், இரட்டை இலைச் சின்னம் கேட்டு சசிகலா, பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். நேற்று இரண்டு தரப்பினர் வழக்கறிஞர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி முன்னிலையில் வாதிட்டனர். இதைத் தொடர்ந்து, இரட்டை இலைச் சின்னத்தை இரண்டு அணியினருக்கும் தர முடியாது என்றும், அ.தி.மு.க பெயரை பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் தடைவிதித்தது. மேலும், நாளைக்குள் (இன்று) கட்சியின் பெயர், சின்னங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, சசிகலா அணியினர், 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அம்மா' என்ற கட்சிப் பெயரையும், தொப்பி, கிரிக்கெட் மட்டை, கத்தரிக்கோல், ஆட்டோ போன்ற சின்னங்களை பரிந்துரை செய்தனர். இதேபோல், பன்னீர்செல்வம் அணியினர் 'அதிமுக புரட்சித்தலைவி அம்மா ' என்ற பெயரையும், 'இரட்டை மின்கம்பம்' சின்னம் கேட்டு பரிந்துரை செய்தனர்.

இதனிடையே, சசிகலா அணிக்கு 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அம்மா' என்ற கட்சிப் பெயரையும், 'தொப்பி' சின்னமும், பன்னீர்செல்வம் அணிக்கு 'அ.இ.அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா' என்ற பெயரும், 'இரட்டை மின்கம்பம்' என்ற சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/84376-party-symbols-allotted-for-sasikala-and-opanneerselvamss-team.html

Categories: Tamilnadu-news

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்! ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு

Thu, 23/03/2017 - 05:50
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்! ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு

ஆர்.கே.நகர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் சந்தித்துப் பேசியநிலையில், இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் திடீரென அறிவித்துள்ளார்.

Rajinikanth

ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க, சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி, பா.ஜ.க, தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த்தை கடந்த செவ்வாய்க்கிழமை பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன், போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் நடந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்புக்குப் பின்னர் இருவரும் கட்டியணைத்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கங்கை அமரன், ரஜினிகாந்த் பா.ஜ.க.வை ஆதரிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதனிடையே, பா.ஜ.க.வுக்கு ரஜினிகாந்த் ஆதரவு அளிப்பார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிரடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

My support is for no one in the coming elections.

http://www.vikatan.com/news/tamilnadu/84372-actor-rajinikanth-not-ready-to-support-anyone-in-rknagar-election.html

Categories: Tamilnadu-news

இனி சசிகலா குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக சிறைக்குப் போவார்கள்!

Wed, 22/03/2017 - 21:14
இனி சசிகலா குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக சிறைக்குப் போவார்கள்!

சவால் விடும் மதுசூதனன்

 

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன். 1991-ம் ஆண்டு தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் வென்று, ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பும், பரபரப்பும் தொகுதிக்குள் இயல்பாகவே எழுந்துள்ளது. அவரைச் சந்தித்தோம்...

‘‘வடசென்னையில் மதுசூதனன் என்றாலே ஒரு டெரரர் இமேஜ் இருக்கிறதே... தொகுதி மக்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்?’’

“என்மீது சொல்லப்படும் ‘டெரர்’ எல்லாம் கட்டுக்கதை. நான் அமைதியான ஆளு. என் வீட்டு வாசலில் உட்கார்ந்திருக்கும் இவர்கள் வேலைக்குப் போனால் தினமும் நூறோ, இருநூறோ சம்பளம் கிடைக்கும். ஆனால், இங்கே வந்து கிடக்கிறார்கள். நான் அவர்களுக்கு என்ன பெரிதாகக் கொடுக்க முடியும்? பாசத்தையும், அன்பையும்தான் கொடுப்பேன். இந்தக் கூட்டத்தைப் பார்க்கிறவர்கள் டெரராக நினைக்கிறார்கள்.”

p8.jpg

‘‘ஊடகங்கள்தான் உங்கள் பிம்பத்தை வேறுமாதிரி கொண்டுபோய்விட்டன என்று சொல்ல வருகிறீர்களா?’’

“அதானே உண்மை! சசிகலா குடும்பம் செய்த அத்தனை அக்கிரமங்களுக்கும், கட்சிக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை மாதிரி தொண்டர்கள் பெயரைப் பயன்படுத்திக்கொண்டார்கள். இப்போது மக்களும் நாங்களும் தெளிவாகிவிட்டோம். இப்போது சந்தர்ப்பவாத, சதிகாரக் கும்பல், தினகரனுக்கு ஓட்டு கேட்டு, பிரசாரத்துக்குப் போனால் மக்கள் சும்மா விடுவார்களா? அதை ஆர்.கே.நகரில் நீங்கள் பார்க்கத்தானே போகிறீர்கள்.”

‘‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என இரண்டு முதல்வர்களுடன் இருந்துள்ளீர்கள். இவர்களுடனான உங்கள் மறக்க முடியாத அனுபவத்தைச் சொல்லுங்களேன்?’’

‘‘ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்காக இரண்டு முதல்வர்களுடனும் நான் சண்டை போட்டிருக் கிறேன். தலைவர் முதலமைச்சராக இருந்தபோது, ஆர்.கே.நகர் தொகுதியின் குடிநீர்ப் பஞ்சத்தைத் தீர்க்கறதுக்கு, புதிய ஏரித் திட்டம் ஒன்றைக் கொண்டுவர நினைத்தார். தொகுதிக்காரன் என்ற முறையில் என்னிடமும் இதுகுறித்து கேட்டார். ‘தலைவரே, பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் ஐயாயிரம் பேரை இங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு ஒரு ஏரியை உருவாக்கினால், அவர்கள் எங்கே போவார்கள்? பெரிய மனதுவைத்து நீங்கள் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்றேன். ‘நான் காலத்துக்கும் குடிநீர் பஞ்சம் போக்க வழி சொன்னால், நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களே’ என்று சொல்லிவிட்டு, கோபத்துடன் கிளம்பிப் போய்விட்டார். மறுநாள் செய்தித்தாளில் பார்த்தால், ஆர்.கே.நகரில் உள்ள ஐந்து நகர்களின் சீரமைப்புக்கு நிதி ஒதுக்கீடுசெய்து தலைவர் கொடுத்த அறிவிப்பு வந்திருந்தது.

இங்கே இருக்கும் ஜெ.ஜெ. நகர், ஒரு காலத்தில் குப்பைமேடு. வெள்ளம் வந்தால் வீடுகளுடன் சேர்ந்து, மக்களும் மிதப்பார்கள். 1993-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த அம்மாவை அங்கே அழைத்துப் போய் காட்டினேன். நிலைமையைப் பார்த்துவிட்டு, சீரமைப்புக்கு மிகப் பெரிய தொகையை ஒதுக்கினார். சீரமைப்புப் பணி முடிந்ததும், ஜெ.ஜெ. நகர் பகுதி மக்களோடு, திருவல்லிக்கேணி ரயில்வே மேம்பாலத்தின் கீழே வசிக்கும் ஏழைகளுக்கும் இங்கு ஒரு பகுதியை ஒதுக்கி உத்தரவைப் போட்டுவிட்டார். நான் பதறிப்போய் அம்மாவைப் பார்த்தேன். ‘ஆர்.கே.நகரில், போஜராஜ நகர் போன்ற இடங்களில் மக்கள் வாழமுடியாத சூழ்நிலை இருக்கிறது. மிகுதியான இடங்களை இதே தொகுதி மக்களுக்குத்தான் கொடுக்கவேண்டும் அம்மா’ என்று முறையிட்டேன். ‘உங்க தொகுதிப் பாசம் உங்களை விட்டுப்போகாதே’ என்று கோபமாய் முறைத்தார். ஆனால், தலைவர் போலவே அம்மாவும் மறுநாள் ஜெ.ஜெ. நகர் மக்களுக்குப் போக எஞ்சிய இடத்தை போஜராஜ நகர் மக்களுக்கு ஒதுக்கி அறிவிப்பை வெளியிட்டார்.

p8aaa.jpg

தலைவரும் சரி, அம்மாவும் சரி, ‘தொகுதி மக்களுக்காக இப்படி வீம்புப் பிடிக்கிறானே’ என்று என்னிடம் கோபப்பட்டு இருக்கிறார்களே தவிர... வேறெந்த கோபமும் என்மீது அவர்களுக்கு இல்லை. இப்படி என்னைப்போல ‘தொகுதி மக்களுக்காகக் கட்சியின் தலைமையுடன் சண்டை போட்ட மானஸ்தன் இங்கே போட்டியிடுகிறான்’ என்று ஒரு ஆளைக் காட்டுங்கள், பார்க்கலாம்.

கிழக்கு மேற்காக தனித்தனி தீவு போல கிடந்த ஆர்.கே.நகரை இணைக்கும்விதமாக வைத்தியநாதன் மேம்பாலத்தைக் கட்டியவன் நான். இப்போது அதன் மீது நின்று கொண்டுதான் எல்லாக் கட்சிக்காரங்களும் ஓட்டு கேட்கிறார்கள். இதே பகுதியில் உள்ள பட்டேல் நகர் ரயில்வே இடம் சம்பந்தமாக டெல்லி வரை போய், ரயில்வே அமைச்சரிடம் பேசி, இடத்துக்கு உண்டான தொகையை ரயில்வேக்குக் கொடுத்து வாங்கினேன். அப்படி வாங்கிய இடத்தில்தான் இன்று குடிநீர் வாரியத் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. மக்களின் தண்ணீர்ப் பிரச்னை தீர்ந்திருக்கிறது.”

‘‘இந்தத் தேர்தலில் டி.டி.வி.தினகரனை மட்டும்தான் எதிரியாகப் பார்க்கிறீர்கள். பிற கட்சிகள் எதிரிகளாகத் தெரியவில்லையா?’’

“தலைவரும், அம்மாவும் உருவாக்கிய மக்கள் சொத்துதான் அ.தி.மு.க. அதிலிருந்து ஒரு சின்னத்துண்டுதான் எகிறிப்போய் இருக்கிறது. அந்த சின்னத்துண்டிலும், ஒரு துண்டுதான் தினகரன். ‘ஒரு காலத்துல அது நம் வீட்டில் கிடந்த துண்டாச்சே’ என்றுதான் அதைப்பத்திப் பேசுகிறேன். மற்ற கட்சிகள் பற்றி பேச என்ன இருக்கிறது? அதி.மு.க-வுக்கு போட்டிக் கட்சியே இல்லை.”

p8a.jpg

‘‘ஜெயலலிதா இறந்த பின், சசிகலாவை தலைமையேற்க வரவேற்ற முதல் ஆள் நீங்கள்தானே?’’

“அந்தப் பாவத்துக்குத்தானே இப்போது பிராயச்சித்தம் தேடிக்கொண்டிருக்கிறேன். என் பாவத்தை நான் கழிக்க வேண்டாம் என சொல்றீங்களா? அவங்க, கட்சியைக் காப்பாத்துவாங்கன்னு நினைத்தேன். ஆனால், தம்பிதுரையைவைத்து, கட்சி சொத்துகளைக் குடும்பச் சொத்தாக மாற்றத் துடித்தார்கள். தமிழ்நாட்டில் இருக்கிற கட்சி சொத்துகளைக் காப்பாற்ற, செங்கோட்டையனுக்குப் பதவி கொடுத்து வைத்துக் கொண்டார்கள்.

கோடானுகோடி தொண்டர்களுக்கும் எனக்கும் தெரிய வேண்டிய ஒன்று இருக்கிறது, அது அம்மாவின் மரண ரகசியம். அதை அந்தக் கும்பல் சொல்லியே ஆகவேண்டும். அதுவரை மக்களும் விடமாட்டார்கள்; அம்மாவின் ஆன்மாவும் விடாது. இனி, சசிகலா குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக சிறைக்குப் போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

ரவுடிகளையும், ஆதரவான போலீஸ் அதிகாரிகளையும் கையில் வைத்துக்கொண்டு உருட்டி மிரட்டி தேர்தலை நடத்தி ஜெயிக்கலாம் என்று திட்டம் போட்டு வைத்திருக்கிறார்கள். திருமண மண்டபங்களை வாடகைக்குப் பிடித்து, அங்கே கூலிப்படையினரைத் தங்க வைத்திருக்கிறார்கள். கூவத்தூரில் பாதுகாப்புக்குப் போன ரவுடிகள் ஆர்.கே.நகருக்குள் வந்துவிட்டார்கள். சிறையில் இருப்பவர்களுடன் பேசி, இங்கிருந்தபடி அசைன்மென்ட் கொடுக்கிறார்கள். உளவுத்துறை போலீஸார் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் மிரட்டல்களைத் தாண்டித்தான் இத்தனை பேர் என்னுடன் இருக்கிறார்கள்.’’

‘‘தி.மு.க-வில் இருக்கும் சேகர்பாபு உங்கள் உறவினர் என்பதால் இந்தத் தேர்தலில் நீங்கள்...’’

(அவசரமாகக் குறுக்கிட்டு) “எத்தனை வருஷமா இதே கேள்வி சுற்றுமோ தெரியவில்லை. எனக்கும் சேகர்பாபுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இளைஞர்களை ஆளாக்கி விடற ஒரு வேகத்துல, பல பொறுப்புகளைப் படிப்படியா கட்சியில் வாங்கிக் கொடுத்தேன். என்னோட மைத்துனர் ஜேப்பி மூலமா அவர் மேலே போய்விட்டார். அவ்வளவுதான்! சேகர்பாபு செய்ததுகூட பலமுறை என் தலையில் வந்துதான் விடிந்தது. சேகர்பாபு என் உறவினரா எப்படி ஆனார் என்றே தெரியவில்லை. ஒரு வதந்தியைத் தொடர்ந்து அணையாம கிளப்பி விடுகிற கும்பல் இன்னும் ஊரில் இருக்கத்தான் செய்கிறது’’ என்றவர், வாக்குக் கேட்பது போல் கும்பிட்டு விடைபெற்றார்.

http://www.vikatan.com/juniorvikatan

Categories: Tamilnadu-news

‘சதி’கலா குடும்பச் சண்டை! - திவாகரன் Vs தினகரன்

Wed, 22/03/2017 - 19:37
மிஸ்டர் கழுகு: ‘சதி’கலா குடும்பச் சண்டை! - திவாகரன் Vs தினகரன்

 

ஆர்.கே.நகர் தொகுதியிலிருந்து பறந்து வந்தார் கழுகார். சிறகுகளில் இருந்து செய்திகள் சிதறுவதற்கு முன் அனல் கொட்டியது. ‘‘கோடை வெயிலை மிஞ்சுவதாக பிரசார அனல் இருக்கிறது. அந்தப் பிரசார அனலை மிஞ்சுவதாக இருக்கிறது, சசிகலா குடும்பத்துக்குள் நடக்கும் அரசியல்” என்று பீடிகை போட்டார் கழுகார்.

‘‘அதை முதலில் சொல்லும்” என்றோம்.

‘‘அ.தி.மு.க-வை சசிகலா குடும்பம் கைப்பற்றி விட்டது என்று வெளியில் இருப்பவர்கள் மொத்தமாகச் சொன்னாலும் அதனை அந்தக் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ‘கட்சியை தினகரன் கைப்பற்றிவிட்டார்’ என்றே பிரித்துச் சொல்கிறார்கள். ஜெயலலிதா இறந்ததும், கட்சி சசிகலா கைக்கு வந்தது. ‘கட்சி திவாகரனுக்கு, ஆட்சி நடராசனுக்கு’ என்று சசிகலா பங்கு பிரித்துக் கொடுத்ததை அப்போதே சொல்லி இருந்தேன். நீரும் அட்டைப் படமாக வெளியிட்டு இருந்தீர். தினகரன், போயஸ் கார்டன் வீட்டில் இருந்தும், டாக்டர் வெங்கடேஷ், தலைமைக் கழகத்திலிருந்தும் நிர்வாகத்தைக் கவனிப்பார்கள் என்றும் சொல்லப்பட்டது. அடுத்த சில நாட்களில் மாமனும் மச்சானும் - அதாவது தினகரனும் வெங்கடேஷுமே அனைத்தையும் அபகரித்தார்கள். சித்தப்பா நடராசனையும் மாமா திவாகரனையும் ஓரம் கட்ட ஆரம்பித்தார் தினகரன். அடுத்தடுத்த நாட்களில் காட்சிகள் மாறின. சசிகலா சிறைக்குப் போனதால் அனைத்துக்கும் முழுப்பொறுப்பாக தினகரன் வந்தார். தன்னையும் வெங்கடேஷையும் மட்டும் கட்சிக்குள் சேர்த்துக்கொள்வதாக சசிகலாவிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார் தினகரன். தனக்கு துணைப்பொதுச்செயலாளர் பதவியையும் வாங்கிக்கொண்டார். இப்போது ஆர்.கே.நகர் வேட்பாளராகத் தன்னையே அறிவித்துக்கொண்டார்.”

p44.jpg

‘‘தினகரன் தேர்தலில் போட்டியிடுவதை சசிகலா குடும்பத்தினர் விரும்பவில்லையோ?”

‘‘சசிகலாவே விரும்பவில்லை என்றுதான் சொல்கிறார்கள். சசிகலாவை சிறையில் சந்தித்தபோது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றி தினகரன் பேசினாராம். தேர்தலில் நிற்கும் தனது ஆசையையும் வெளிப்படுத்தினாராம். ‘இப்போதைக்குத் தேர்தலில் நிற்க வேண்டாம்’ என்று சசிகலா சொல்லி அனுப்பியதாகச் சொல்கிறார்கள். ஆனால், யார் பேச்சையும் கேட்கும் நிலைமையில் தினகரன் இல்லை. நடராசன் உடல்நலமில்லாததால் அமைதியாகி விட்டார். ‘கல்லீரலில் பிரச்னை. மனைவி சிறைக்குள் போனதால் இனிமேல் ஆக்டிவ் பாலிடிக்ஸ் வேண்டாம்’ என்று நடராசன் நினைப்பதாகச் சொல்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள். ஆனால், திவாகரன் அப்படி இருக்கப் போவதில்லை. சசிகலா, தனக்கு அடுத்த இடத்தை திவாகரனுக்குத்தான் தருவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார்கள், அவரின் ஆதரவாளர்கள். நடராசன் நடத்திய பொங்கல் விழாவில் திவாகரனும் மைக் பிடித்து மத்திய அரசுக்கு சவால் விட்டதற்கு இதுதான் காரணம். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற அன்று, தமிழக கவர்னர் வித்யா சாகர் ராவை, தனது மகனோடு தனியாகச் சந்தித்து நட்பு ஆக்கிக்கொண்டதன் பின்னணியாக அரசியல் ஆசையைத்தான் சொல்கிறார்கள். இதனை தினகரன் ரசிக்கவில்லை!”

‘‘ஓஹோ!”

‘‘இவர்கள் இருவருக்குமான மோதல் வெளிப்படையாக வெடித்தது, திவாகரனின் சம்பந்தி ஜெயச்சந்திரன் விஷயத்தில். திவாகரனின் மகளை, ஜெயச்சந்திரனின் மகன் திருமணம் செய்துள்ளார். ஜெயலலிதா இறந்ததும், தனது சம்பந்திக்கு உளவுத்துறை நிர்வாகப் பிரிவு கூடுதல் எஸ்.பி பதவியை திவாகரன் வாங்கித் தந்தார். அப்போது முதலமைச்சராக பன்னீர்செல்வம் இருந்தார். இந்த நியமனத்தை  தினகரன் ரசிக்கவில்லை. ‘திவாகரனின் சம்பந்தியை உளவுத்துறையில் எப்படி போடலாம்?’ என்று சசிகலாவிடம் தினகரன் சண்டை போட்டதாகச் சொல்கிறார்கள்.  ‘ஜெயச்சந்திரனை டி.ஜி.பி ஆபீஸுக்கு கொண்டு வரலாமா என்றுதான் என்னிடம் திவாகரன் கேட்டார். உளவுத்துறை பொறுப்பு என்று சொல்லவில்லை’ என சசிகலா பதில் சொன்னாராம். ‘ஜெயச்சந்திரனை அந்த இடத்திலிருந்து மாற்றுங்கள்’ என்று தினகரன் சொல்ல, ‘உடனடியாக அப்படிச் செய்தால் ஏதாவது பிரச்னை வரும். அமைதியாக இரு’ என்று அமுக்கிவைத்தார் சசிகலா. இதுவே திவாகரன் - தினகரன் மோதலுக்கு அடித்தளம் அமைத்தது. காபந்து அரசின் முதல்வராக இருந்தபோது, ஜெயச்சந்திரனை கன்னியாகுமரி மாவட்ட கூடுதல் எஸ்.பி.யாக தூக்கி அடித்தார் பன்னீர்.”

‘‘ம்ம்..”

p44a.jpg‘‘பன்னீர் விலகி, சசிகலாவும் சிறைக்குப் போய், எடப்பாடி முதலமைச்சரானதும், இந்த நிலை மாறும் என எதிர்பார்த்தார் திவாகரன். ஆனால்,  கரூருக்கு மாற்றப்பட்டார் ஜெயச்சந்திரன். இப்படி ஒரே மாதத்தில் திவாகரனின் சம்பந்தி பந்தாடப்பட்டார். அதோடு, ‘அ.தி.மு.க.வில் இனி குடும்ப ஆதிக்கம் இருக்காது’ என்று தினகரன் பேட்டி அளித்தார். இன்னொரு டி.வி பேட்டியில், ‘நடராசன், மகாதேவன், திவாகரன் உள்ளிட்டோர் எப்போதுமே அ.தி.மு.க-வுக்குள் வரமாட்டார்கள்’ என்று சொன்னார். ‘எங்களை வரக்கூடாது என்று சொல்ல தினகரன் யார்?’ என்று கொந்தளிக்கிறார்கள் திவாகரனும் மகாதேவனும்!”

‘‘ம்!”

‘‘இந்தப் பஞ்சாயத்து, போயஸ் வீட்டில் பெரிதாக வெடித்திருக்கிறது. பெங்களூரில் தங்கியிருந்தபடி சசிகலாவுக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்துவரும் இளவரசியின் மகன் விவேக்கை சென்னைக்கு வரவழைத்து விசாரணை நடந்தது. திவாகரனும் மகாதேவனும் இன்னும் பல சொந்தங்களோடு வந்து, ‘உண்மையில் தினகரன் ஆர்.கே.நகரில் போட்டியிட சசிகலா சம்மதம் சொன்னாரா? அந்த சந்திப்பில் சசிகலா வேறு என்ன சொன்னார்?’ என்றெல்லாம் விவேக்கிடம் விசாரித்தார்கள். ஆனால், விவேக் எதுவும் சொல்லவில்லை என்கிறார்கள்...”

‘‘ஓஹோ!”

‘‘திவாகரன்தான் ரொம்பவே கொந்தளித்தாராம். ‘எதுவாக இருந்தாலும் சசிகலா சொல்லட்டும். அவரே அமைதியாக இருக்கும்போது தினகரன் ஏன் தேவையில்லாமல் பேச வேண்டும். நாளையே சசிகலா துணைப்பொதுச்செயலாளர் பதவியை தினகரனிடம் இருந்து திரும்பப் பெறலாம். நான் கட்சிக்குள் வரமுடியாது எனச் சொல்வதற்கான அதிகாரம் தினகரனிடம் இல்லை. கட்சியின் பொதுச்செயலாளரான சசிகலாதான் அந்த முடிவை எடுக்க முடியும்’ என அவர் எச்சரித்ததாக, அவரின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ‘என் கட்டுப்பாட்டில் 20 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அவர்களை வைத்து நான் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். அப்புறம் இந்த அதிகாரம் எல்லாமே காணாமல் போய்விடும்’ என்று தினகரனுக்கு அவர் சவால் விட்டதாகப் பேச்சு. பல அமைச்சர்கள் இப்போது திவாகரனிடம் தொடர்புகொண்டு பேசிவருகிறார்கள். அவர்களை எல்லாம் அமைதியாக இருக்கச் சொல்லி இருக்கிறார் திவாகரன்.’’

‘‘திவாகரன் ஆட்களுக்கு செக் வைத்திருப்பாரே தினகரன்?”

‘‘அதுதான் இல்லை. ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட பலரையும் தினகரன் கட்சிக்குள் சேர்த்து வருகிறார் அல்லவா? அதில் தன்னுடைய ஆதரவாளர்களையும் நைசாக உள்ளே சேர்த்துவிட்டார் திவாகரன். சசிகலா வரை பரிந்துரை போய்தான் இவரது ஆட்கள் சேர்க்கப்பட்டார்களாம். ‘எதுவாக இருந்தாலும் நேரடியாக அமைச்சர்கள், அதிகாரிகளிடம் சொல்ல வேண்டாம். என் மூலமாகச் சொல்லுங்கள்’ என்று தினகரன் சொன்னதையும் சசிகலா குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் ரசிக்கவில்லை. ‘தினகரன் வென்றால் கட்சியில் அவர் ஆதிக்கம் நிலைத்துவிடும். அடுத்து அவர் முதல்வர் ஆகிவிடுவார்’ என்று நினைக்கிறார்கள் இவர்கள். ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்குப் பிறகு இந்த மோதல் இன்னும் அதிகம் ஆகலாம்!” என்று மூச்சுவிட்ட கழுகாரிடம், ‘‘தீபா பேரவையில் நடக்கும் கலாட்டாக்களைப் பார்த்தீரா?” என்று கேட்டோம்!

சிரித்தபடியே ஆரம்பித்தார். ‘‘சீரியஸ் மோதல்களுக்கு நடுவே சிறுபிள்ளைகள் சண்டை நடக்கும்போது, ‘அந்தப் பக்கமாகப் போய் விளையாடுங்க’ என்று சொல்வது போலத்தான் தீபா - மாதவன் மோதலைச் சொல்ல வேண்டி உள்ளது. கணவன் - மனைவி சண்டை, அமைப்பை உடைத்து சந்தி சிரிக்க வைத்துவிட்டது.  ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’ தொடங்கப்பட்டதில் இருந்து, குழப்பங்களுக்கும் சண்டைகளுக்கும் பஞ்சமே இல்லை. முதலில், கட்சி நிர்வாகிகள் புதிய பட்டியலை தீபா வெளியிட்டார். ‘அவருக்கு வேண்டியவர்களும், அவரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைத்தவர்களும் மட்டுமே பொறுப்புகளில் இருக்கிறார்கள்’ என்று அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பெரிய மாற்றங்கள் எதுவுமின்றி மற்றொரு நிர்வாகிகள் பட்டியலை தீபாவின் கணவர் மாதவன் வெளியிட்டதாகத் தகவல் பரவியது. இதனால் தீபாவுக்கும், மாதவனுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னை காரணமாக, பலர் அங்கிருந்து விலகி மாற்றுக் கட்சிகளில் இணைந்துவருகின்றனர். இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி இரவு, ஜெயலலிதா சமாதிக்குச் சென்ற மாதவன் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், ‘தீபாவைச் சுற்றி அரசியல் சூழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதனால், நான் அந்த அமைப்பிலிருந்து வெளியேறி, விரைவில் புதிய கட்சியை ஆரம்பிப்பேன்’ என்றார். ‘தீபாவை முதலமைச்சர் ஆக்குவதற்காகத்தான் இந்தப் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளேன்’ என்றும் அதில் காமெடியைச் சேர்த்துள்ளார்!”

‘‘ஹா... ஹா... நம் மக்களுக்கு சுவாரஸ்யமாக பொழுது போகும் போலிருக்கிறதே!’’

‘‘ஆமாம்! ஆனால், இதை வெறுமனே காமெடியாகப் பார்க்க முடியாது. தீபாவை விட்டு மாதவன் ஏன் விலகினார் என்று கேட்டால், மாதவன் ஆட்கள் சொல்லும் காரணம் தலையைச் சுற்ற வைக்கிறது. ‘தீபாவைச் சுற்றி சசிகலா ஆட்கள்தான் இருக்கிறார்கள். நடராசன் சொல்லித்தான் ஓ.பன்னீர்செல்வத்துடன் தீபா சேரவில்லை. நடராசன் - சசிகலா கட்டுப்பாட்டில்தான் தீபா இருக்கிறார். இது பிடிக்காமல்தான் மாதவன் வெளியேறினார்’ என்கிறார்கள் மாதவன் ஆட்கள். ஆனால், தீபா தரப்பு, ‘தீபாவின் கணவராக இருந்தாலும், மாதவனுக்கும் தீபா பேரவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சசிகலா தரப்பு எப்போதோ மாதவனை விலைக்கு வாங்கிவிட்டது’ என்று சொல்கிறது. விலை போனதாகச் சொல்வதை இரண்டு பேருமே மறுக்கிறார்கள். ஆனால், பணம் இதில் விளையாடி இருப்பது தெரிகிறது!”

‘‘கடைசியில் மாதவன் கட்சி ஆரம்பித்தாரா இல்லையா?”

‘‘இந்தப் பிரச்னைக்குப் பிறகு தீபா வீட்டுக்கு மாதவன் போகவில்லையாம். தன் நிர்வாகிகள் வீட்டிலும், பொது இடங்களிலும், கட்சி தொடங்குவதற்கான ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகிறார். முதலில் சி.ஐ.டி நகரில் உள்ள ஒரு நிர்வாகி வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாக அறிவித்து, பின் 19-ம் தேதி ஞாயிறு அன்று மதுரவாயல் பாக்யலட்சுமி மகாலுக்கு அனைத்துத் தொண்டர்களையும் வரச் சொல்லி இருக்கிறார். அந்தப் பிளானும் கேன்சலாகி... அதற்கடுத்து, கோயம்பேடு, திருவொற்றியூர் எனத் தொண்டர்களை அலையவிட்டிருக்கிறார். கடைசியாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், ‘இன்னும் சில தினங்களில் கட்சி ஆரம்பிக்கப்படும். தீபாவை முதல்வராக்குவதே என் கடமை. அதற்கு தீபா என் பக்கம் வரவேண்டும்’ என்றார், மாதவன். இதனால், அவரது ஆதரவாளர்கள் நொந்து போயிருக்கிறார்கள்!”

‘‘சேகர் ரெட்டியை அமலாக்கத் துறை கைது செய்திருக்கிறதே?”

‘‘சி.பி.ஐ வழக்கில் கைதாகியிருந்த சேகர் ரெட்டி, அதில் ஜாமீன் பெற்று வெளியில் வந்ததும் அமலாக்கத் துறை கைது செய்திருக்கிறது. சிறையில் இருந்தபோதே அவரைக் கைதுசெய்திருக்க முடியும். ஆனால், சிறையில் வைத்து முறையாக விசாரிக்க முடியாது என்று அமைதி காத்தார்களாம். வெளியில் வந்ததும் இப்படி, தான் கைதாகலாம் என்பது சேகர் ரெட்டிக்கும் தெரிந்திருக்கிறது. இந்தக் கைது ‘பன்னீருக்கு வைக்கப்பட்ட செக்’ என்கிறார்கள். உமது நிருபரை விசாரிக்கச் சொல்லும்’’ என்று ஒரு ‘லீட்’ கொடுத்துவிட்டுப் பறந்தார் கழுகார். 

அட்டை ஓவியம்: கார்த்திகேயன் மேடி

p44b.jpg‘‘நான் ராஜினாமா செய்துவிடவா?’’

.தி.மு.க-வின் ஆட்சிமன்றக்குழு கூடி டி.டி.வி.தினகரனை வேட்பாளராக அறிவித்த நேரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்தார். இந்த அறிவிப்பை அவருக்குத் தெரியாமலே வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. ‘ஆர்.கே. நகரில் வெற்றி பெற்றால் நீங்கள் முதல்வராவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?’ என்று தினகரனிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘‘நிச்சயம் இல்லை. இன்றைய முதல்வரின் செயல்பாடு மக்களால் பாராட்டப்படுகிறது. எனவே, அ.தி.மு.க அரசின், தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்’’ என்றார்.

இந்நிலையில், சேலத்தில் இருந்த எடப்பாடி, அவசரமாக தினகரனுக்கு ஒரு தகவல் அனுப்பி இருக்கிறார். ‘‘இவர் இப்படித்தான் சொல்வார். அப்புறம் ஒருவர் ஒருவராக, ‘தினகரன் முதல்வராக வேண்டும்’ என ஆரம்பிப்பார்கள். ஆர்.கே. நகரிலேயே ‘முதல்வர் வேட்பாளர்’ என்று பிரசாரம் செய்வார்கள். எனக்கு சங்கடமாக இருக்கும். நான் இன்றைக்கே ராஜினாமா செய்துவிடுகிறேன். அவர் முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டு தேர்தலில் போட்டியிடட்டும். எனக்கு எந்த வருத்தமும் இல்லை’’ என்று எடப்பாடி சொல்லி அனுப்பிய தகவல் வந்து சேர்ந்ததும் பதறிவிட்டார் தினகரன். ‘‘இன்னும் எஞ்சியிருக்கும் நான்கரை ஆண்டு காலத்துக்கும் எடப்பாடி பழனிசாமியே முதல்வராகத் தொடர்வார்’’ என்று உடனடியாகச் சொன்னார் தினகரன்.

ஆனாலும், கொங்கு மண்டலம் கொந்தளிப்பில்தான் இருக்கிறது. கடந்த 18-ம் தேதி, அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைக்க கோவை வந்தார் எடப்பாடி பழனிசாமி. அவரை வரவேற்று உள்ளாட்சித் துறை அமைச்சர்  p44aa.jpgஎஸ்.பி.வேலுமணியும், அவரின் ஆதரவாளர்களும் கொடுத்த பத்திரிகை விளம்பரங்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பழனிசாமி படங்கள் மட்டும் இருந்தன. சசிகலா, தினகரன் படங்கள் இல்லை.

சசிகலா எதிர்ப்பு நிலைப்பாட்டை கொங்கு மண்டல அமைச்சர்கள் சிலர் எடுத்துள்ளனர். ஒருவேளை தேர்தலில் தினகரன் ஜெயித்தால், எடப்பாடியின் முதல்வர் பதவி பறிபோகும் என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அதனால்தான், இப்போதிலிருந்து எதிர்ப்பைக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியும், தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் ஒரு ரகசிய ஆலோசனைக்கூட்டம் நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.

வேலுமணியின் சிஷ்யர்களில் ஒருவரான சூலூர்     எம்.எல்.ஏ கனகராஜ், குவாரி விவகாரம் ஒன்றில் அதிருப்தியாகி அணி மாறப்போவதாக மீடியாக்களிடம் சொல்ல, தினகரன் தரப்பு அதிர்ந்துபோனது. அப்போதைக்கு சமாதானப்படுத்தினாலும், மதில் மேல் பூனையாகத்தான் கனகராஜ் இருக்கிறாராம். ஈரோட்டில் தோப்பு வெங்கடாசலம் நிலையும் கேள்விக்குறியாக இருக்கிறது. சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு நடந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதால் ரொம்பவும் சுணங்கிப்போயிருக்கிறார். இவரை தினகரன் கூப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

p44c.jpg

அப்போது ஏன் வரவில்லை?

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தம்பி நடனசிகாமணியின் மனைவி ராணிமல்லிகா மறைந்துவிட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்த விழுப்புரம் போயிருந்தார் ஸ்டாலின். இதே விழுப்புரம் நகர தி.மு.க செயலாளராக இருந்த செல்வராஜ், கடந்த செப்டம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு அஞ்சலி செலுத்த ஸ்டாலின் வரவில்லை. அது மட்டுமில்லை, செல்வராஜ் மறைவுக்குப் பிறகு காலியாக இருக்கும் நகரச் செயலாளர் பதவிக்கு இன்னும் வேறு யாரையும் நியமனம் செய்யவில்லை. இதையெல்லாம் சொல்லிக் குமுறுகிறார்கள் விழுப்புரம் தி.மு.க-வினர்.

p44d.jpg

குழப்பத்தில் உடைந்த கூட்டணி!

மீண்டும் ஒருமுறை உடைந்திருக்கிறது மக்கள் நலக் கூட்டணி. ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஒருமித்த முடிவு எடுக்க முடியாததால் கூட்டணி உடைந்ததாகக் காரணம் சொல்லப்படுகிறது. போட்டியிடுவதில் உறுதியாக இருந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ‘ஸ்டாலின் கேட்டதால், தி.மு.க-வை ஆதரிக்கலாம்’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் சொல்லியிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகளோ, இந்த இரண்டு முடிவுகளையும் ஏற்கவில்லை. டி.டி.வி.தினகரன் சார்பில் திருமாவளவனிடம் பேசியிருக்கிறார்கள். ஆனால், வெளிப்படையாக அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவிப்பதில் அவருக்குத் தயக்கம்.  அதனால், ‘போட்டியிடப் போவதில்லை. எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை’ என்ற முடிவை திருமாவளவன் எடுத்து, தி.மு.க பக்கம் சாய இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் தடுத்து, அதே முடிவை எடுக்க வைத்தாராம்.

http://www.vikatan.com/juniorvikatan

Categories: Tamilnadu-news

ஜெயலலிதா போல் போராடி இரட்டை இலை சின்னத்தை பெறுவோம் - டி.டி.வி. தினகரன்

Wed, 22/03/2017 - 18:36
ஜெயலலிதா போல் போராடி இரட்டை இலை சின்னத்தை பெறுவோம் - டி.டி.வி. தினகரன்

தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தான் முடக்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா போல் போராடி சின்னத்தை மீட்போம் எனவும் அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

 
 
 
 
ஜெயலலிதா போல் போராடி இரட்டை இலை சின்னத்தை பெறுவோம் - டி.டி.வி. தினகரன்
 
சென்னை:

தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தான் முடக்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா போல் போராடி சின்னத்தை மீட்போம் எனவும் அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டுள்ளது.
ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற இரு அணிகளுக்கும் இடையே பலத்த போட்டி ஏற்பட்டது. அதன்பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே தர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மனு கொடுத்தனர். இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டது.
9453FA03-8048-419E-B2A8-B34B416E6361_L_s
இந்நிலையில், அக்கட்சியின் அதிகாரப்பூர்வமான சின்னமான இரட்டை இலையை முடக்கி வைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது குறித்து சர்ச்சை நீடிப்பதால் தற்போது சின்னத்தை யாருக்கு என்ற முடிவை எடுக்கமுடியவில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியிருப்பதாவது:-

இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது தற்காலிகமானது தான். ஜெயலலிதா போல் போராடி இரட்டை இலை சின்னத்தை பெறுவோம். தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு எங்களுக்கு ஓர் அனுபவம் தான். இவ்விவகாரத்தில் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெறுவோம்.
7209E429-ABDA-4D40-AD8F-C4B97A4AF06B_L_s
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதனால் வேறு யாருக்கும் வெற்றி வாய்ப்பு இல்லை. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதில் யாருடைய பின்புலம் இருந்தாலும் அது குறித்து கவலை இல்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவதில் இருந்து எந்த மாற்றமும் இல்லை.நாளை காலை 11 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய இருக்கிறேன். மாற்று சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/23000213/1075429/we-will-appeal-legaly-against-election-commission.vpf

Categories: Tamilnadu-news

"இரட்டை இலை சின்னம் யாருக்கும் இல்லை" - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Wed, 22/03/2017 - 18:03
"இரட்டை இலை சின்னம் யாருக்கும் இல்லை" - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

 

images_23327.jpg

 

ரட்டை இலை சின்னத்துக்காக ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கும், சசிகலா அணியினருக்கும் இடையே பெரும் போராட்டம் நடந்து வந்தது. இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் வாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், 'இரட்டை இலை' சின்னம் யாருக்கும் கிடையாது என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அ.தி.மு.க.வின் சட்ட விதிகளின் படி, தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது. சசிகலா குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு, அதற்கான தண்டனையையும் பெற்று வருபவர். எனவே நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்று வரும் ஒருவர், அரசியல் நடவடிக்கைகளில் எப்படி ஈடுபட முடியும்? இதுகுறித்து சட்ட ஆணையம் ஏற்கனவே, தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்து வந்தது. தேர்தலில் போட்டியிடக்கூட தகுதியில்லாத சசிகலா, எப்படி தேர்தல் வேட்பாளரை அறிவிக்க முடியும்? என்று பன்னீர்செல்வம் தரப்பினர் வாதத்தை முன் வைத்தனர். அதற்கு சசிகலா தரப்பினரோ 'எங்கள் வேட்பாளரை சசிகலா தேர்வு செய்யவில்லை. அ.தி.மு.க.வின் ஆட்சிமன்றக் குழுதான் தேர்வு செய்தது.' என்று மறுவாதம் செய்தனர். 

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் ஆர்.கே நகர் தேர்தலில் 'இரட்டை இலை' சின்னம் யாருக்கும் கிடையாது என்றும், கட்சியின் பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவுக்குப்பின், இரண்டாவது முறையாக 'இரட்டை இலை சின்னம்' முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/politics/84357-no-one-has-the-right-for-admk-logo-and-name.html

Categories: Tamilnadu-news

முடக்கப்பட்டது இரட்டையிலை.

Wed, 22/03/2017 - 17:51

முடக்கப்பட்டது இரட்டையிலை.

Categories: Tamilnadu-news

“தீபா கேட்டதும்... பன்னீர்செல்வம் மறுத்ததும்!” - முன்னாள் நிர்வாகி சொல்லும் தகவல்

Wed, 22/03/2017 - 08:25
“தீபா கேட்டதும்... பன்னீர்செல்வம் மறுத்ததும்!” - முன்னாள் நிர்வாகி சொல்லும் தகவல்

தீபா

தெளிவற்ற அரசியல் நிலைப்பாடுகளால் தீபா அணியின் ஆதரவுக்கூட்டம் கரைய ஆரம்பித்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் ஒற்றை பதிலுக்காக பதைபதைப்போடு காத்திருக்கும் ஓ.பி.எஸ் அணிக்கு இப்போது சற்று ஆறுதலாக இருப்பது தீபா அணியிலிருந்து இங்குவந்துசேரும் ஆதரவாளர்கள்தான். 

ஜெயலலிதா மறைவுக்குப்பின் அவரது அண்ணன் மகளான தீபா, சசிகலாவுடனான கடந்த கால கசப்புகளை மனதில் கொண்டு அதிரடியாக சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். ஓ.பி.எஸ் சசிகலாவுடன் சுமூகமாக இருந்த இந்த நாட்களில் , சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் இருந்த தொண்டர்கள் சாரி சாரியாக திரண்டுவந்து தீபாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். தீபாவுக்கு ஆதரவுக்கூட்டம் பெருகிவந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக அதிமுகவில் பல நிகழ்வுகள் அரங்கேறின. முதல்வர் பதவியை ஓ.பி.எஸ் ராஜினாமா செய்த சில நாட்களில் சசிகலாவுக்கும் அவருக்கும் இடையே பனிப்போர் உருவாகி சில தினங்களில் தனி அணியாக உருவெடுத்தார் அவர். 

சசிகலா முதல்வராவதற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில் அவர் சிறைப்பறவையாகிவிட, எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். சுமார் 1 டசன் எம்.பி எம்.எல்.ஏக்களுடன் இப்போது தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கிறது ஓ.பி.எஸ். அணி. 
ஆச்சர்யம் என்னவென்றால் ஓ.பி.எஸ் தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்தபின்னும் தீபா வீட்டு வாசலில் கூட்டம்மொய்த்தபடி இருந்ததுதான். ஆனால் கடந்த ஒருவார காலமாக தீபா மற்றும் அவரது கணவரின் அறிக்கை மற்றும் பேட்டிகளால் கலகலக்க ஆரம்பித்திருக்கிறது எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை கூடாரம்.

தீபாபேரவை ஆரம்பித்தபோது சசிகலா அணிக்கு கிலி கொடுத்த முதல் இடம் காஞ்சிபுரம். அதிமுகவின் மேற்கு மாவட்ட கழக பிரதிநிதியான ஆர்.வி.ரஞ்சித்குமார் என்பவர்தான் காஞ்சிமாவட்டத்தில் தீபா ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து, பேரவை சார்பாக அன்னதானம், நலத்திட்ட உதவிகள் என காஞ்சியை தினம் தினம் அதகளம் செய்தவர். ஆனால் நேற்று அதிரடியாக ஓ.பி.எஸ் அணியில் ஐக்கியமாகி தீபாவுக்கே கிலி கொடுத்திருக்கிறார். 

தீபாவுக்கு அரசியலுக்கே உரிய பக்குவமோ, சாதுர்யமோ இல்லை என குற்றஞ்சாட்டி விலகியிருக்கும் அவரிடம் பேசினோம்.

ஓரே நாளில் தீபா அணியில் இருந்து ஓ.பி.எஸ் அணிக்கு தாவியது ஏன்?

அதிமுகவைப் பொறுத்தவரை அம்மாதான் எல்லாமே எங்களுக்கு. அவர் இறப்பு சாதாரணமாக இல்லாமல் மர்மமான முறையில் நிகழ்ந்ததால் என்னைப்போன்ற லட்சோப லட்சத் தொண்டர்கள் சசிகலா மீதான அதிருப்தியில் மனம் புழுங்கிக்கொண்டிருந்தோம். அப்போது தீபா துணிச்சலாக சசிகலாவை எதிர்த்து அரசியலுக்கு வந்தது ஆறுதலாக இருந்தது. அம்மாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை அவிழ்க்க அவரால் மட்டுமே முடியும் என்பதால் தொண்டர்களைத் திரட்டி அவரை சந்தித்தேன். தொடர்ந்து அவருக்கு மக்கள் ஆதரவு பெருகுவதற்கான பணிகளில் ஈடுபட்டேன்.

அவரை ஆதரித்த எங்களின் ஒரே நோக்கம், அம்மாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சை அவிழ்ப்பது, சசிகலாவின் குடும்ப ஆதிக்கத்திலிருந்து அதிமுகவை மீட்டெடுப்பது, எம்.ஜி.ஆர் அண்ணா, காமராஜர் போல் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக்குவது இவைதான். ஆனால் என்ன காரணத்தினாலோ ஆரம்பத்திலிருந்தே இவற்றில் அவர் அக்கறை காட்டவில்லை. 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடுத்தபோது, ரத்த உறவுகள்தான் விசாரணை கேட்கமுடியும் என நீதிபதி அதை தள்ளுபடி செய்தார். ஜெயலலிதாவின் ரத்த உறவுகளில் சசிகலாவுக்கு எதிர்ப்பு நிலை எடுத்த தீபா மட்டுமே வழக்கு தொடுக்கமுடியும் என்ற நிலையிலும் அதில் அவர் அக்கறை காட்டாதது இன்றுவரை அதிர்ச்சியாக இருந்தது எனக்கு. 
மேலும், அதிமுகவில் இத்தனை பிளவுக்கும் காரணம் சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் தலையீடு மட்டுமே. அவர்கள் வெளியேறினால் அதிமுக திரும்ப ஒன்றுபடும். அதனால் சசிகலாவை விரட்டிவிட்டு கட்சியையும் இரட்டை இலைச் சின்னத்தையும்  கைப்பற்றும் முயற்சிகளில் இறங்காமல் திடுதிப்பென பேரவை அறிவிப்பை வெளியிட்டார். புதியதாக ஒரு அமைப்பை துவங்கினால் அதிமுகவில் நமக்குள்ள உரிமையை நாமே விட்டுக்கொடுப்பதுபோல் ஆகிவிடுமே என அதற்கு நாங்கள் தெரிவித்த எதிர்ப்பை அவர் பொருட்படுத்தவில்லை

ஆர்.வி ரஞசித்குமார்பேரவையை துவக்கிய பின் அது கட்சியாக மாறும் என்றார்களே, அதுவரை பொறுக்கமுடியாதா..?

பேரவை துவக்கியபோதே பல சர்ச்சைகள். கட்சியை நடத்தும் நிர்வாகத்திறமை அவரிடம் இல்லாதது, யார் யார் பேச்சையோ கேட்டு அறிக்கையும் பேட்டியும் கொடுத்தது என  ஆரம்பத்திலேயே எதுவும் சரியில்லாமல் நடந்தது. இதில் அவரை நம்பி வந்த என்னைப்போன்ற ஆயிரக்கணக்காணோர் மனம் புழுங்கினர். இந்நிலையில் ஓ.பி.எஸ் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அப்போதும் எல்லாம் சரியாகிவிடும் என பேரவைப் பணிகளில் சுணக்கம் காட்டாமல் தொடர்ந்து செயல்பட்டேன். இந்நிலையில் ஓ.பி.எஸ் தரப்பு தீபாவுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தார். அம்மாவின் மர்ம மரணம், போயஸ் கார்டனை நினைவு இல்லமாக்குவது உள்ளிட்ட பிரச்னைகளை கையிலெடுத்தது ஓ.பி.எஸ் அணி. அவரின் அழைப்பை ஏற்று இணைந்து செயல்படுவது எதிர்காலத்திற்கு நல்லது என நிர்வாகிகள் பலர் கருத்து சொன்னார்கள். அதற்கு ஒப்புக்கொண்டாலும் ஓ.பி.எஸ் உடனான சந்திப்பில் அவரது அரசியல் பக்குவமின்மையையே வெளிப்படுத்தினார். 

கட்சியில் உறுப்பினராகி 5 ஆண்டுகள் ஆகவில்லையென்ற சட்ட விதிகளின்படிதான் சசிகலாவை ஓ.பி.எஸ் எதிர்க்கிறார். இந்த அடிப்படையையே புரிந்துகொள்ளாமல் அதிமுகவில் இன்னமும் அடிப்படை உறுப்பினராகக் கூட ஆகாத இவர் எடுத்த எடுப்பில் கட்சியின் உயர்பதவியான பொதுச்செயலாளர் பதவியை கேட்டு ஓ.பி.எஸ் தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்தார். சட்ட சிக்கலை எடுத்துச்சொல்லி முதலில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி தருவதாகவும், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நிற்கவைப்பதாவும் அவர்கள் வாக்குறுதி தந்தனர். 

'தமிழகம் முழுவதையும் பயணம் செய்யுங்கள். இன்னும் ஆதரவு பெருகும். பின்னர் கட்சி முழுமையான நமது கட்டுப்பாட்டில் வந்தபின் உரிய முக்கியத்துவம் அளிப்போம்' என்றனர். ஆனால் தனக்கு பெரிய மக்கள் செல்வாக்கு இருப்பதாக கற்பிதம் செய்துகொண்டு அதை ஏற்றுக்கொள்ளாமல் தன் அரசியல் எதிர்காலத்தை கெடுத்துக்கொண்டார். 

இப்போதுள்ள அரசியல் சூழலில் இது பெரிய வாய்ப்பு. இதைப் பயன்படுத்திக்கொண்டால் பேரவையை வளர்க்கலாம் என ஆலோசனை சொன்னதை அவர் ஏற்கவில்லை. அரசியலில் பெரிய அனுபவமும் இல்லை. அனுபவசாலிகள் சொல்வதை கேட்பதும் இல்லை. இதுதான் அவரது பலவீனம். 

அதிமுகவில் கொ.ப.செ ஆக தன் அரசியல் பயணத்தை துவக்கி அத்தனை போராட்டங்கள், எதிர்ப்புகளை சந்தித்து அரசியலில் அதிகாரங்களை அடைந்தவர் ஜெயலலிதா. அவரின் வாரிசு என்பவர் இந்த வரலாற்றை அறியாமல் கட்சியின் உயர் பதவிக்கு உழைக்காமல் வர நினைப்பது நியாயமா என்று அப்போதே என்னைப்போன்றவர்களுக்கு அதிருப்தி உண்டானது. பக்குவமற்ற அவரது நடவடிக்கைகள் தொடர்ந்ததால் இனி அவருடன் சேர்ந்து செயல்படுவது சாத்தியமில்லை என உணர்ந்தேன். என் ஆதரவாளர்களும் அந்த முடிவுக்கு வந்திருந்தனர்.

ஆர்.வி ரஞ்சித்குமார்

தலைமை என்ற முறையில் அவரது முடிவுகளை ஏற்கவேண்டும் அல்லவா..?

அம்மாவின் வாரிசாக எண்ணியே அவரது தலைமையை ஏற்றிருந்தோம். ஆனால் பேரவையின் எந்த முடிவுகளையும் அவர் எடுக்கவில்லை என்பது பின்னர்தான் தெரிந்தது. அதுதான் பிரச்னையே. முதலில் அவரின் கணவர் மாதவன் முடிவுகளை எடுத்தார். பிறகு டிரைவர். இப்போது யார் எனத் தெரியவில்லை. இப்படி யாரையோ நம்பி கட்சி நடத்தினால் எதிர்காலத்தில் பேரவை விளங்காது என்பது என் 20 வருட அரசியல் வாழ்வில் நான் கண்ட உண்மை.

மேலும் பேரவையின் அலுவலகத்தில் கட்சி அடையாளமில்லாத நபர்கள் வளையவருகிறார்கள். காதில் கடுக்கன், கடுகடு வார்த்தை என அவர்களின் நடவடிக்கை எதுவும் கட்சிக்கு பொருத்தமில்லாதவை. கணவருக்கும் அவருக்குமே எந்த ஒரு விஷயத்திலும் ஒருமித்த கருத்து இல்லை. யாரை எதிர்ப்பதாக அவர்கள் சொல்கிறார்களோ அவர்களுடனேயே அவர்களில் யாரோ ஒருவர் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இப்போதும் கூட கட்சி துவங்கப்போவதாக சொல்லிய அவரது கணவர், தீபாவின் பின்னணியில் தீய சக்தி இருப்பதாக சொல்கிறார். 

இதுதவிர அவருக்கு அரசியல் தலைவருக்குரிய ஒரு பக்குவம் துளியும் இல்லை. பல்வேறு ஊரிலிருந்து அவரைக்காண வரும் தொண்டர்கள் காலையிலிருந்து வாசலில் காத்திருப்பார்கள். வீட்டிலேயே இருந்தாலும் பிற்பகலில்தான் சந்திப்பார். மாலை அணிவிப்பதையோ சால்வை அணிவிப்பதையோ ஒரு உற்சாகமாக பெறமாட்டார். ஏதோ முதல்வராகவே ஆகிவிட்டவர்போல் நடந்துகொள்வார். சால்வையை பணிவோடு வாங்காமல் ஒருகட்டத்தில் பாதுகாவலரை வைத்து வாங்க ஆரம்பித்தார். அது தொண்டர்களை அவமதிப்பதாக இருந்தது. இந்த விஷயங்கள் எல்லாம் என்னை யோசிக்கவைத்தது.

ஓ.பன்னீர்செல்வம்

எங்கள் வருத்தமெல்லாம் சின்ன வயதில் இத்தனை பெரிய பொறுப்பு கிடைக்கப்பெற்ற ஒருவர், தனக்குள்ள பிரபல்யத்தை பயன்படுத்திக்கொள்ளவில்லையே என்பதுதான். குறைந்தது அம்மாவின் மர்ம மரணத்தில் உள்ள முடிச்சைக்கூட அவிழ்க்க அவர் முயற்சி எடுக்காதது என்னைப்போன்றவர்களுக்கு வேதனை தந்ததால் இனி இங்கு பயணிப்பது வீண் என உணர்ந்து ஓ.பி.எஸ்ஸை சந்தித்து என் ஆதரவாளர்களுடன் இணைந்தேன். 

 

 

ஆர்.கே. நகரில் மதுசூதனன் வெல்வாரா?

நிச்சயம் வெல்வார். அம்மாவிற்குப்பிறகு அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை தெரிவிக்கப்போகும் தேர்தல் இது. தொண்டர்களின் மனநிலையை பிரதிபலிக்கப்போகும் இந்த தேர்தலில் மதுசூதனன் நிச்சயம் வெற்றிபெறுவார். தேர்தல் முடிவுக்குப்பின் தீபாவும் தன் நிலையை உணர்ந்து ஓ.பி.எஸ் பக்கம் வருவார். அதுதான் அவரது எதிர்காலத்திற்கும் நல்லது என முடித்தார் ரஞ்சித்குமார்.

http://www.vikatan.com/news/tamilnadu/84250-this-is-why-i-am-leaving-deepa-peravai-says-a-functionary.html

Categories: Tamilnadu-news

சசிகலாவுக்காகக் களமிறங்கிய சல்மான் குர்ஷித்! -திவாகரன் குடும்பத்தின் 'திடீர்' மூவ்

Wed, 22/03/2017 - 06:45
சசிகலாவுக்காகக் களமிறங்கிய சல்மான் குர்ஷித்!  -திவாகரன் குடும்பத்தின் 'திடீர்' மூவ்

சசிகலா-தினகரன்

' இரட்டை இலை சின்னம் யாருக்கு?' என்ற கேள்விக்கான பதில், இன்று மாலை தெரிந்துவிடும். ' தேர்தல் ஆணைய விவகாரத்தை நேரடியாக சசிகலாவே கையில் எடுத்துவிட்டார். தினகரன் தரப்பினர் ஆதிக்கம் செலுத்துவதையும் அவர் விரும்பவில்லை. திவாகரன் மகன் ஜெயானந்த் மேற்பார்வையிலேயே அனைத்து விவகாரங்களும் கையாளப்படுகின்றன' என்கின்றனர், அ.தி.மு.க நிர்வாகிகள். 

ஆர்.கே.நகர் தொகுதிக்கு, வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. அ.தி.மு.க வேட்பாளராக டி.டி.வி.தினகரன் களம் இறங்குகிறார். வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, சசிகலா குடும்பத்துக்குள் முட்டல், மோதல்கள்  அதிகரித்துவிட்டன. குறிப்பாக, ' பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவின் ஒப்புதல் பெறாமலேயே தன்னைத்தானே வேட்பாளராக அறிவித்துக்கொண்டார் தினகரன். இந்த நடவடிக்கையை சசிகலா ரசிக்கவில்லை' என்கின்றனர், கார்டன் வட்டாரத்தில் உள்ளவர்கள். இதுகுறித்து நம்மிடம் விரிவாக விளக்கினர். " சொத்துக்குவிப்பு வழக்கில், கடந்த மாதம் 15-ம் தேதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. அவர், சிறை சென்ற நாளில் இருந்து அவருடைய தம்பி திவாகரன் உள்ளிட்ட குடும்ப உறவுகள் யாரும் பெங்களூரு பக்கமே தலைகாட்டவில்லை. காரணம், டி.டி.வி.தினகரன், டாக்டர்.வெங்கடேஷ் உள்ளிட்டவர்கள்... ஆட்சி அதிகாரத்திலும் கட்சி அதிகாரத்திலும் கோலோச்சி வந்ததுதான். ஐஏஎஸ் பணியிட மாற்றம், நிர்வாகிகள் சேர்ப்பு போன்ற பல விஷயங்களில் தன்னிச்சையாகவே இயங்கிவந்தார் தினகரன். இந்நிலையில், ஆர்.கே.நகர் வேட்பாளர் விவகாரத்திலும் சசிகலா கவனத்துக்குத் தவறான தகவல்களைக் கொண்டுசென்றார். ' நிர்வாகிகள் போட்டியிடுவதற்கே பயப்படுகின்றனர்' என சசிகலாவிடம் கூறினார். வேட்பாளராக அவர் தன்னைத்தானே அறிவித்த அன்று, ' அக்கா சொல்லித்தான் இத்தனையும் நடக்கிறதா?' எனக் கொந்தளித்தார் திவாகரன்.

ஜெயானந்த்இதன்பின்னர், தன்னுடைய மகன் ஜெயானந்தை பெங்களூரு சிறைக்கு அனுப்பி சசிகலாவை சந்திக்க வைத்தார். கட்சியில் நடக்கும் விவகாரங்கள் அனைத்தையும் சசிகலாவிடம் எடுத்துக் கூறினார்.                   ' இப்படியே போனால், நம் கையைவிட்டு அனைத்தும் பறிபோய்விடும்' என விளக்கியுள்ளனர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, ' தேர்தல் ஆணைய விவகாரங்களை திவாகரனே பார்த்துக்கொள்ளட்டும்' என உறுதியாகக் கூறிவிட்டார். இன்று காலை தேர்தல் ஆணையத்தில் நடக்கும் விசாரணையில், திவாகரன் மகன் ஜெயானந்த் கலந்துகொள்கிறார். அவருடன் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்க இருக்கிறார். ' நம்முடைய தரப்பு வாதத்தை எடுத்து வைக்க சல்மான் குர்ஷித் சரியானவர்' என சசிகலா சொன்னதையடுத்து, டெல்லியில் தங்கியிருந்து அவருடைய அனுமதியைப் பெற்றார் திவாகரன். பன்னீர்செல்வம் அணிக்காக தேர்தல் ஆணையத்தில் வாதாட, முன்னாள் அமைச்சர் கபில் சிபலை அணுகியுள்ளனர். இதை அறிந்து, காங்கிரஸ் தொடர்புகள் மூலம் அதைத் தடுத்து நிறுத்தியது சசிகலா தரப்பு. இந்த நடவடிக்கைகள் எதுவும் தினகரனுக்குத் தெரியாது. இன்று, தேர்தல் ஆணையத்தில் நடக்கும் விசாரணையில், டெல்லி பிரதிநிதி என்ற அடிப்படையில் தளவாய் சுந்தரம் வருவதையும் திவாகரன் தரப்பினர் விரும்பவில்லை" என்றார் விரிவாக. 

" கார்டன் நிர்வாகத்தை டாக்டர் வெங்கடேஷ் கவனித்துவருகிறார். ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருக்கும் விவேக் ஜெயராமன், சில தொழில்களைக் கவனித்துவருகிறார். பெங்களூரு சிறைக்குச் செல்வதற்கு முன்னதாக கட்சி நிர்வாகத்தை தினகரன் கையில் ஒப்படைத்தார், சசிகலா. சிறைக்குள் நடக்கும் விவகாரங்களை முழுமையாக அறிந்த விவேக், தினகரன் பக்கம் சாய்ந்துவிட்டதையும் கொந்தளிப்புடன் கவனித்துசல்மான் குர்ஷித்வந்தது திவாகரன் தரப்பு. கட்சி மற்றும் ஆட்சியின் அனைத்து முடிவுகளையும் சசிகலா ஒப்புதல் இல்லாமலேயே தினகரன் செய்து வருவதாகவும் ஆவேசப்பட்டனர். ' கட்சியை விட்டு சசிகலா நீக்கப்பட்ட நேரத்தில், அதை வரவேற்று மொட்டை அடித்துக்கொண்டவர்களை எல்லாம் தினகரன் கட்சியில் சேர்த்துவிட்டார்' என 'நமது எம்.ஜி.ஆர்-ல் வந்த அறிவிப்புகளையும் சசிகலாவிடம் காண்பித்தனர். இப்படி நடக்கும் என்பதை அறிந்து, ' சசிகலா குடும்பத்தில் இனி யாருக்கும் இடமில்லை' எனப் பேசி வந்தார் தினகரன். ' குடும்ப உறவுகளுக்கு இடமில்லை என்றால், இவருக்கும் சசிகலாவுக்கும் என்ன சம்பந்தம்? இவர் குடும்ப உறுப்பினர் இல்லையா?' எனக் கேள்வி எழுப்பத் தொடங்கினர். ஐஏஎஸ் பணியிட மாற்றம், அரசு ஒப்பந்தங்கள் என அனைத்திலும் தினகரன் சொல்வதே சட்டமாக இருக்கிறது. பணியிட மாற்றம் தொடர்பாக குடும்ப உறவுகள் ஏதேனும் சிபாரிசுக் கடிதம் கொடுத்தால், சம்பந்தப்பட்ட நபரை தொலைதூரத்துக்கு பணியிட மாற்றம்செய்யும் பணிகளிலும் இறங்கினார். 'இனியும் பொறுத்திருக்க முடியாது' என்ற நிலையில்தான், அனைத்து விவகாரங்களையும் சசிகலா கவனத்துக்கு எடுத்துச் சென்றோம். அதன்பின்னர்தான், டெல்லி விவகாரங்களைக் கையாளும் பொறுப்பை திவாகரனிடம் ஒப்படைத்தார்" என்கிறார் மன்னார்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

" மத்திய அரசின் முழுப் பார்வையும் பன்னீர்செல்வம் அணியின் பக்கமே இருக்கிறது. எந்தச் சூழ்நிலையிலும் இரட்டை இலை சின்னம் சசிகலா பக்கம் சென்றுவிடக்கூடாது' என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கட்சியின் பொதுக் குழு உறுப்பினர்கள், பேரவை நிர்வாகிகள் உள்பட ஆறாயிரம் பேரின் கையெழுத்துடன்கூடிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்திருக்கிறோம். ' கட்சியின் உறுப்பினர் அட்டைகூட சசிகலாவிடம் இல்லை' என்பதை ஆதாரத்துடன் ஆணையத்தின் பார்வைக்கு சமர்ப்பித்திருக்கிறோம். அ.தி.மு.க நிர்வாகிகளின் ஒட்டுமொத்த ஆதரவும் எங்களுக்கே இருக்கிறது. ஒரு சில நிர்வாகிகள், ஆதாயத்துக்காக சசிகலா பக்கம் நிற்கின்றனர். கட்சியின் சின்னம் எங்கள் கைக்கு வந்துவிட்டால், மற்றவர்களும் எங்கள் பின்னால் வருவார்கள். ' ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் மதுசூதனன் போட்டியிடுவது உறுதி' என்கின்றனர் பன்னீர்செல்வம் அணியினர் நம்பிக்கையோடு. 

'இரட்டை இலை யாருக்கு?' என்ற கேள்விக்கான பதில், இன்று மாலைக்குள் முடிவுக்கு வந்துவிடும். ' ஆட்சி அதிகாரத்தில் யாருக்கு செல்வாக்கு?' என சசிகலா குடும்பத்தில் நடக்கும் சண்டைகள் அவ்வளவு எளிதில் முடிக்கு வருவது போல தெரியவில்லை. 

http://www.vikatan.com/news/tamilnadu/84277-why-did-salman-khurshid-stand-for-sasikala---divakarans-surprising-move.html

Categories: Tamilnadu-news