மாவீரர் நினைவு

திருமதி சீலாவதி என்ற 5 போராளிகளின் சிங்களத் தாய்

6 days 13 hours ago

சிங்களத் தாயாரான திருமதி சீலாவதி அவர்களின் 5 பிள்ளைகளும் தவிபு அமைப்பில் போராளிகளாகயிருந்தனர். அவர்களில் 3 பேர் மாவீரர்களாயினர். கப்டன் சிவரூபன், வீரவேங்கை சிவரூபன், வீரவேங்கை இளமயில் ஆகியோரே மாவீரர்களாயினர்.

இவரின் ஏனைய இரு பிள்ளைகளில் ஒருவரை இயக்கத்திலிருந்து இயக்கமே விடுவித்தது, பெற்றாரிற்கு உதவிக்காக. எனினும் அவர் கிபிர் வான்குண்டுவீச்சில் 2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இறந்து போனார். மற்றையவர் பேருக்குப் பின்னர் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

இவரின் கணவர் தமிழராவார்.

என் பார்வையில் தமிழீழ மாணவர் அமைப்பு

6 days 15 hours ago

இன்று தமிழீழ மாணவர் எழுச்சி நாள். தமிழீழ மாணவர்களிடையே புரட்சிகர விடுதலைக் கருத்தூட்டல்களுடனான தமது உரிமைகளுக்காக்குரல் கொடுக்கும் நாளாக இன்றைய நாள் அமைந்திருக்கின்றது. இந்த நாளை எமது விடுதலைப் போராட்டத்தில் முன்னோடியும் ”எதிரியிடம் உயிரோடு பிடிபடுவதை விட உயிரை மாய்ப்பதே மேல்” என்ற சித்தாந்தத்துக்கு நஞ்சுண்டு தன் உயிரை விதையாக்கி, உயிரூட்டிய பெருமகனுமாகிய பொன்சிவகுமாரின் நினைவுகளைச் சுமந்தபடி மாணவர்கள் எழுச்சி கொள்ளும் நாள். இந்த நாளில் மாணவர்களுக்கென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிப் பிரிவு ஒன்று இயங்கியதும் அதன் செயற்பாட்டு நிகழ்நிரல்கள் எவ்வாறு அமைந்தன என்பது பற்றியும் எனக்கு நினைவிருப்பவற்றை இப்பத்தியில் தொகுத்துள்ளேன்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு பக்கங்களும் பல உன்னதமான விடயங்களை கொண்டிருக்கின்றன. அதில் ஒற்றைப் பக்கம் தான் மாணவர் அமைப்பு. தமிழீழ தேசியத்தலைவரின் எண்ணச் சிந்தனையிலும் தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் உறுதியான நம்பிக்கையிலும் விதையிடப்பட்டது தான் மாணவர் எழுச்சிக்கான களம். எமது விடுதலைப் போராட்டத்தில் மக்களின் பங்களிப்பு, மகளிரின் பங்களிப்பு என தேசக்கடமைகள் விரிந்து கிடந்த போது விடுதலைக்கான எழுச்சியின் படிக்கல்லை மாணவர்களிடம் இருந்து உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடே இந்தக் களத்தின் திறவுகோள்.

1985 ஆம் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியில் மாணவர் இயக்கம் உருவாக்கப்பட்டது. அவ்வமைப்பின் முதலாவது பொறுப்பாளராக பொறுப்பெடுத்தார் முரளி என்ற போராளி. அவரின் தீவிர முயற்சியின் பெறுபேறு தமிழீழ மாணவர்களின் எழுச்சி மிக்க செயற்பாடுகளாக உருமாறியது. பெரும் சாதனைகளைச் செய்த போராளிகளை உருவாக்கவும், தமது உரிமைகளுக்காக புதுப் புதுப் போராட்டக் களங்களை உருவாக்கவும் தமிழீழ மாணவர்களுக்கு புது வழிகளைத் திறந்தது மாணவர் இயக்கம்.

அனைத்து தமிழீழ மாணவர்களையும் எழுச்சி மிக்க தமிழீழ உணர்வாளர்களாக மாற்றுவதற்கும் தமிழீழ மாணவர்களுக்குத் தேவையான கல்வி வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவும் உருவாக்கம் கண்ட மாணவர் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையின் கீழ் இயங்கிய கிட்டத்தட்ட 54 உப பிரிவுகளுக்குள் மிக முக்கியமான பிரிவாக இயங்கத் தொடங்கி 2009 மே 18 வரை தனது பணியை சிறப்பாக செய்து வந்தது.

கல்வி ஒடுக்குமுறையால் மற்றும் வெட்டுப்புள்ளித் திட்டத்தால் உயர்கல்விகளை தொடர முடியாமல் தமிழ் மாணவர்களை ஒடுக்க நினைத்த சிங்களத்துக்கு பெரும் எழுச்சி மூலம் பதில் சொல்லவும், பாதிக்கப்பட்டிருக்கும் எம் தமிழ் மாணவர் சமூகத்தின் அரசியல் பொருளாதார விழுமியங்களில் வளர் தாக்கங்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வியலை மேம்படுத்தவும், பொறுப்பாளர் முரளி தன் துவிச்சக்கர வண்டியோடு வயல்வெளிகளிலும் புற்றரைகளிலும் குச்சொழுங்கைகளிலும் என்று பயணிக்கத் தொடங்கினார். இதனூடாக விடுதலை பற்றியும் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் மாணவர்களிடையே பெரும் கருத்துப் பரம்பல்களை விதைத்து அவர்களுக்குள் ஒரு விழிப்புணர்வை உருவாக்கி அவர்களை புரட்சிகர விடுதலைப் பாதையில் பயணிக்க வைத்தார். அதை நிரூபிக்கும் விதமாக,

“எம் மக்களில் எதிர்காலத்தை நோக்கி “ என்ற பெரும் பொருட்காட்சி ஒன்றை மாணவர்கள், கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், பொருளியலாளர்கள் என்று அனைத்து தமிழீழ வளங்களையும் ஒருங்கிணைத்து வளமற்ற தமிழீழம் என்று கருத்தாடல் செய்து கொண்டிருந்தவர்களுக்கு தமிழீழம் வளமுள்ளது என்று அடித்துக் காட்டினார். தமிழீழத்தில் உள்ள அனைத்துத்துறை வல்லுனர்களும் ஒருங்கிணைக்கப்பட்டால் தமிழீழம் சுய பொருளாதார நாடாக அமையும் என்ற செயற்பாட்டு நிலையை உறுதிப்படுத்தினார். இதுவே மாணவர் இயக்கத்தின் முதல் வெற்றியாக பதியப்பட்டது. அதன் பின்பு அறிவியல் கழகங்கள் தமிழீழ பரப்பெங்கும் உருவாக்கப்பட்டன. அதனூடாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் மெருகூட்டப்பட்டது மட்டுமல்லாது போட்டிகள், கருத்தரங்குகள் என்று வளர்நிலையை நோக்கிப் பயணிக்க வைத்தார் பொறுப்பாளர் முரளி.

23.12.1987 இந்திய இராணுவத்தின் கோப்பாய் பகுதியில் நடந்த சுற்றிவளைப்பு ஒன்றில் இருந்து தப்பிக்க முனைந்த போது நடந்த நேரடிச் சண்டையில் தமிழீழ மாணவர் இயக்கத்தின் பொறுப்பாளர் மேஜர் முரளியாக வீரச்சாவடைந்தில் இருந்து அவரால் நிலைநிறுத்தப்பட்ட தமிழீழ மாணவர் இயக்கம், 2009 மே 18 ஆம் நாள் விடுதலைப் போராட்டம் மௌனிக்கும் வரை பல பத்து பொறுப்பாளர்களால் நிர்வகிக்கப்பட்டு தமிழீழ மாணவர்களுக்கு தன் பணி செய்தது.

தமிழீழ மாணவர் அமைப்பின் இறுதிப் பொறுப்பாளராக இருந்தவர் கண்ணன் அல்லது இளந்திரையன் என்று அழைக்கப்படுகின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட போராளி. மேஜர் முரளி முதல் கண்ணன் வரை பொறுப்பாளர்களாக பணியாற்றியவர்களும் அவர்களுடன் பணியாற்றிய போராளிகளும் தளராத துணிவோடு இறுதி நாள்வரை மாணவர்களுக்கான கல்விப் பணியில் ஈடுபட்டார்கள்.

யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி தமிழீழ நிர்வாக கட்டமைப்புக்கள் இருந்த 1995 இற்கு முன்பான காலத்தில் யாழ்ப்பாணத்தில் தனது நடுவப்பணியகத்தை நிறுவியும் அதன் பின்பான காலத்தில் வன்னிப் பெருநிலப்பரப்புக்குள் நிர்வாக கட்டமைப்புக்கள் நகர்த்தப்பட்ட பின்பு கிளிநொச்சி, மாங்குளம், புதுக்குடியிருப்பு, மல்லாவி என்று தன் நடுவகத் தளங்களை நிறுவி தென்தமிழீழம் வடதமிழீழம் என்று அனைத்து பிரதேசங்களிலும் மாணவரமைப்பு தன் பணியாற்றி வந்தது. 2001 ஆம் வருடத்துக்கு பின் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் நடுவப்பணியகத்தை நிறுவிக் கொண்டது. சுற்றி வர தேக்கு மரங்களால் சூழப்பட்ட நல்ல இயற்கையின் சூழலில் அமர்ந்திருந்த நடுவப்பணியகம் தனது பணிகளை அதற்கான பொறுப்பாளர்களூடாக பணியாற்றியது.

மாணவர் அமைப்பு தனது கட்டமைப்பை பல வழிகளில் நிறுவிக் கொண்டது. பொறுப்பாளர், துணைப்பொறுப்பாளர், நிர்வாகப் பொறுப்பாளர் என்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள், கோட்டப் பொறுப்பாளர்கள் என்றும் போராளிகள் பொறுப்புக்களை வகித்த அதே நேரம் வெறும் கற்றல் செயற்பாடுகள் மட்டுமல்லாது, தேசிய எழுச்சி நீரோட்டத்தில் மாணவர்களை வழிப்படுத்தவும் ஏராளமான திட்டவரைவுகளோடு பணியாற்றியது மாணவரமைப்பு.

க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் போன்ற பரீட்சைகளுக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு நடாத்தப்படும் பரீட்சை வழிகாட்டுதல் செயலரங்குகளும் முன்னோடிப் பரீட்சைகளும் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் வெற்றித் திறவுகோளாக அமைந்ததை மறுக்க முடியாது. இந்த நிலையில் நான் நினைக்கிறேன், 1997 ஆம் வருடமாக இருக்க வேண்டும் க.பொ.த சாதாரண தர முன்னோடிப் பரீட்சையில் அதி விசேட சித்தி பெற்ற மாணவர்கள் சிலரை தேசியத்தலைவர் சந்தித்து அவர்களுக்கான மதிப்பளிப்பு ஒன்றை செய்திருந்தமை மிக முக்கியமாகின்றது. இத்திட்டம் தமிழீழ கல்விக்கழகம் மற்றும் தமிழீழ மாணவர் அமைப்பு என்ற இரு கட்டமைப்புக்கள் இணைந்து செய்த செயற்றிட்டம் என நினைக்கின்றேன். (இதன் உண்மைத்தகவல் எனக்கு நினைவில்லை தேசியத்தலைவர் சந்தித்தாரா அல்லது அவரின் கையெழுத்துடனான சான்றிதழ் வழங்கப்பட்டதா என்று நினைவு வருக்குதில்லை இந்த தகவலை உறுதிப்படுத்த என்னால் முடியவில்லை தயவு செய்து தெரிந்தவர்கள் உறுதிப்படுத்துங்கள். )

வசதிகள் அற்ற பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கான உதவிதொகைக் கொடுப்பனவுகள் மாதாந்தம் வழங்குவதில் இருந்து கற்பதற்கு வசதிகள் அற்ற பள்ளிப் பிள்ளைகளுக்கான சிறுவர் இல்லங்கள் வரை மாணவரமைப்பால் உருவாக்கப்பட்டநிர்வகிக்கப்பட்டது. இதற்கு உதாரணமாக மல்லாவியில் இயங்கிய ஆண்கள் இல்லமான மாறன் மற்றும் பெண்கள் இல்லமான சாந்தி மற்றும் கற்சிலைமடுவில் இயங்கிய சிறுவர் இல்லம். ( பெயர் நினைவில்லை) ஆகியவை சான்றாகின்றன. இது மட்டுமல்லாது பல இடங்களில் பல சிறுவர் இல்லங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. அதை விட ஒவ்வொரு மாவட்டப் பொறுப்பாளர்களின் அலுவலகங்களிலும் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

கணனி பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டு அடிப்படைக் கணனிப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அடிப்படை வசதிகளற்ற பல கிராமங்களில் கல்வி படிக்கல்லை தொட வேண்டும் என்பதற்காக கிராமிய கல்வி அபிவிருத்தி நிலையங்கள் “கல்வி வளர்ச்சிக் கழகம் “ என்ற பெயரில் உருவாக்கப்பட்டு மாலைநேரக் கல்வி இலவசமாக வழங்கப்பட்டன. இவை தவிர, மாதாந்த சஞ்சிகைகள் வெளியிடப்பட்டு அவை மாணவர்களுக்கு அறிவியல் விஞ்ஞான வளர்ச்சியை பற்றிய அறிவூட்டல்களை செய்தன. இதை விட ஒவ்வொரு கிராமங்களிலும் அடிப்படைக் கணனி கற்கைகளை அறிமுகம் செய்வதற்காக சுழற்சி முறையிலான கணனி செயலமர்வுகள் செய்யப்பட்டு மாணவர்கள் முதல் பெற்றறவர்கள் வரை தொழில்நுட்பக் கல்வியின் அவசியங்கள் பற்றித் தெளிவு படுத்தப்பட்டு தொழில்நுட்ப அறிவு ஊட்டப்பட்டது.

முரளி என்ற தொலைத்தொடர்பாடல் நிலைய பெயரைக் கொண்ட மாணவரமைப்பின் நடுவப்பணியக தொலைத்தொடர்புக் கருவியில் ஒலிக்கும் குரல்கள் அனேகமான நேரங்களில் மாணவர்களின் வளர்ச்சி பற்றியே ஒலிக்கும். தேசிய எழுச்சி நீரோட்டத்தில் தமிழீழ மாணவர் அமைப்பும் தமிழீழ கல்விக் கழகமும் இணைந்து எம் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் செய்த பணிகளை வரிசைப்படுத்த என்னால் முடியவில்லை. ஆனாலும் என் நினைவில் இருந்தவன்றை கொஞ்சமேனும் தொட்டுச் செல்கின்றேன்.

மேஜர் முரளி தொடக்கம் லெப். கேணல் ராணிமைந்தன், லெப் துளசி, …. வீரவேங்கை சக்கரவர்த்தி, லெப். புயல்வீரன், வீரவேங்கை கோபி என தமிழீழ தேசத்துக்கான விதைகளாக மாணவரமைப்பு பல போராளிகளை விதைத்துள்ளது. அந்த வரிசை மிக நீளமானது. அந்த வரிசையை அறிந்தவர்கள் பட்டியலிடுங்கள்…

குறிப்பு: தயவு செய்து இக்கட்டுரையை பகிருங்கள் பிரதி செய்து பதிவேற்றாதீர்கள் இக்கட்டுரையில் சிறு தகவல் உறுதிப்படுத்தல் செய்ய வேண்டி உள்ளது. அதை நான் செய்தால் நீங்கள் பிரதி எடுத்து பதிவேற்றும் போது தவறி விடும்.

மீள் பதிவு.

எழுதியது : இ.இ.கவிமகன்

நாள் 06.06.2022

கவிமகனின் தன் அப்பாவின் நினைவுகள்

6 days 15 hours ago

குறிப்பிட்ட 1-3 கிலோமீட்டர் பரப்பளவு. வல்லாதிக்க நாடுகளின் உதவிகளோடு முப்படைகளும் ஒருங்கிணைந்து தாக்கும் களமாக மாறி இருக்கிறது அந்த குறுகிய நிலப்பரப்பு. கந்தக நெடியும் குருதி நெடியையும் தவிர வேறெதும் இல்லாத இருண்ட பொழுது.

மூடிய பதுங்ககழி இல்லை. திறந்தநிலை பதுங்ககழி வெட்ட எங்களால் முடியவும் இல்லை. நந்திக்களி அவ்வளவு திடமான மண். அதனால் பெரும்பாலும் சின்ன சின்ன கிடங்குகளே எம் அரண். அதை விட்டால் துணிகளில் நிரப்பப்பட்ட மண். அதுவும் இல்லை என்றால் திறந்தவெளியே எம் அரண்.

திரும்பும் இடமெங்கும் பிணக்காடு. “ஐயோ அம்மா என்னைக் காப்பாத்துங்கோ “ என்ற அலறல்.

காயப்பட்டுவிட்ட போராளி மைத்துனனின் பிள்ளைகள் இருவரையும் தூக்கிக் கொண்டு நடைப்பிணமாக நடந்து கொண்டிருக்கிறேன் நான். இல்லை இல்லை தவழ்ந்து கொண்டிருக்கிறேன்.

அப்பா வட்டுவாகல் பக்கம் போவம்.

நான் வரேல்ல நீங்கள் எல்லாரும் போங்கோ…

கழுத்தில் இருந்த தகட்டையும் குப்பியையும் தடவிப்பார்த்தபடி அப்பா கூறுகிறார்.

அம்மா குளறுகிறா.

அப்பாவின் கையைப் பிடித்து இழுத்தபடி வட்டுவாகல் நோக்கி நகர்கிறா.

அப்பாவின் எழுத்துக்கள் (கட்டுரைகள் சிறுகதைகள் கவிதைகள் )அடங்கிய 4-5 உரப்பைகளை நாங்கள் தங்கி இருந்த பங்கருக்குள் போட்டு அதற்குள்ளையே அப்பாவின் ஆவணங்களையும் போட்டு அவசரம் அவசரமாக கொஞ்ச மண்ணை எடுத்து மூடிவிட்டே நகர்ந்து கொண்டிருக்கிறேன். அதற்குள் அப்பா அண்ணனுடன் தளபதிகளுடன் போராளிகளுடன் என எடுத்த ஏராளமான படங்களும் இருந்தன. அவை கண்டெடுக்கப்பட்டால் எல்லோருக்கும் பிரச்சனை வரலாம் என்ற பயத்தில் உயிரைக் காக்கப் போராடிய நேரத்திலும் அவற்றை மண்ணுக்குள் புதைத்துவிட்டேன்.

எதற்கும் அழாத என் அப்பா தன் உயிராக காத்தவற்றை நான் மண்ணுக்குள் மூடிய போது அழுதார். அவரது அழுகை அதற்கு மட்டுமல்ல தான் நேசித்த தமிழீழம் தாம் தமிழீழத் தேசிய தலைவரின் அணியில் ஒன்றிணைந்து அமைக்கத் துடித்த சுதந்திர தேசம் மீண்டும் அடிமையாக கண்முன்னே பகைவன் காலடியில் செல்லும் அந்த பொல்லாத நிலையையும் எண்ணி விழி கலங்கினார்.

அப்பா மட்டுமல்ல தளபதிகள் போராளிகள் மட்டுமல்ல ஆயிரம் ஆயிரமாய் அவர்களை நேசித்து அண்ணனை நேசித்து நின்ற தமிழீழ மக்களும் தான். ஒருபுறம் உயிர் பிரியும் நாளி எப்போதும் வரலாம் என்ற அச்சம். மறுபுறம் எம் தாய்நிலத்தைவிட்டு வலசைப் பறவைகளைப் போல போகிறோமே என்ற அங்கலாய்ப்பு.

காலுக்கடியில் தட்டுப்படும் பிணங்களும் அறுந்து விழுந்து கிடக்கும் உடல் துண்டுகளும். ஐயோ ஐயோ ஐயோ என்ற அலறல்களும் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கிறது.

“55, பப்பா லீமா, லீமா சேரா, டாங்கோ சேரா “ என்று பல ஆயிரம் சங்கேத பாசைகளினூடாக அழைத்துக் கொண்டிருக்கும் எங்கட அண்ணாக்களின், அக்காக்களின் வோக்கிகளின் சத்தம் இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் துப்பாக்கிகள் ஓயவில்லை. இயங்க மறுக்கவில்லை.

வானிலிருந்தும் கடலிலிருந்தும் தரையில் இருந்தும் வரும் ஒவ்வொரு உயிர்கொல்லிக் குண்டுகளின் சிதறல்கள் ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் எம் தேசத்தை புண்ணாக்கிக் கொண்டிருக்கிறது.

இதேநாள் முன்னிரவு என் இரண்டு சித்தப்பாக்களின் இரண்டு தங்கைகளின் உயிரை ஒரு ஆடலரி எறிகணை என் கையருகே பறித்த போது கையறுநிலையில் இருந்த நான் இன்று என் உயிரைக் காப்பாற்றிவிட எதிரியின் கட்டுப்பாட்டை நோக்கி போய்க்கொண்டிருக்கிறேன்.

“அம்மா நானும் உங்களோடு வரவா” என்னையும் உங்கட பிள்ளை என்று சொல்லிக் கூட்டிப் போறீங்களா?

முடி வெட்டிய நிலையில் காயப்பட்ட பெண் போராளி ஒருத்தி அம்மாவிடம் கேட்கிறா. நான் நினைக்கிறேன் உறவுகள் என யாரும் அங்கே இல்லாத சகோதரியாக இருக்கலாம். அல்லது உறவுகளைப் பறிகொடுத்திருக்கலாம். கையில் பெரிய அளவில் காயப்பட்டிருந்தா. போராளிக்கான மிடுக்கு பறிபோயிருந்தது. என் தங்கை ஒருத்தி தன் உடைகளை அவாவுக்காக கொடுக்கிறாள். அதை அணிந்து சாதாரண பெண்ணாகிறா அந்தப் போராளி.

இறுதியாக தான் போட்டிருந்த பச்சையுடையை தன் நெஞ்சோடு அணைத்தபடி,

“ அம்மா எல்லாம் முடிஞ்சு போச்சல்ல?”

அப்பா ஒருமுறை அவாவைத் திரும்பிப் பாக்கிறார்.

அவாவின் விழிகள் கலங்கிப் போயிருந்தன.

அப்பாவுக்கோ அம்மாவுக்கோ எனக்கோ அவாவுக்குச் சொல்லுவதற்கு எதுவும் இருக்கவில்லை.

நினைவோடு: இ.இ.கவிமகன்.

16.05.2025

எல்லாம் முடிஞ்சு போச்சு.

6 days 15 hours ago

பசியும் பல்லாயிரம் நினைவுகளும் இரத்த வாடையும் பிணங்களின் நாற்றமும் மட்டுமே எம்முள் எஞ்சி இருந்தது.

வட்டுவாகல் பாலத்துக்கு சென்று முல்லைத்தீவில் சரண்டைவோம் என்று மக்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள். நாமும் அவர்களுக்குள் கலந்து கொண்டோம்.

அங்கிருந்து வந்துகொண்டிருந்த சூட்டு வலு இப்போது நாம் வட்டுவாகல் பாலம் சென்றால் நிச்சயமாக சாவைத்தான் தரும் என்று உணர்த்தியது. அதனால் என்னுடைய காயப்பட்டு எங்களால் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் இருந்து மீட்டுக் கொண்டுவர முடியாது கைவிடப்பட்ட போராளி மைத்துனனின் இரு பிள்ளைகளையும் அணைத்தபடி நிலத்தில் விரித்திருந்த தறப்பாளில் படுத்துக் கிடக்கிறேன். அருகருகே பனங்கிழக்கு அடுக்குகளைப் போல மக்கள்.

மருமகனும் மருமகளும் பசியிலும் பயத்திலும் அழுதுகொண்டிருக்கிறார்கள். அருகில் பல குழந்தைகளின் அழுகுரல்கள். மாமா பசிக்குது என்று மருமகள் என்னிடம் கெஞ்சுகிறாள். அவளுக்கு அம்மா அப்பாவை காணவில்லை என்ற ஏக்கம் வேறு.

வாய் திறந்து பசிக்குது என்று கூற முடியாத மருமகன் என்னை கட்டிப்பிடித்தபடி தாயின் அரவணைப்புக்காக ஏங்கியபடி அழுது கொண்டிருக்கிறான். என்னிடமோ என் அம்மா அப்பாவிடமோ எதுவும் இல்லை.

பச்சைத்தண்ணீர் கூட தீர்ந்துவிட்ட நிலை. தலைநிமிர்த்த முடியவில்லை. முல்லைத்தீவுப்பகுதியில் இருந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்தும் வரும் கந்தகக் குண்டுகளும் எறிகணைகளும் ரவைகளும் எந்த நிமிடமும் எங்களை உணவாக்க காத்திருக்கின்றன.

இருந்தும் சின்னப்பிள்ளைகள் பசியில் துடிப்பதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. மருமக்களை அம்மாவிடமும் சித்தப்பாவின் தங்கையிடமும் கொடுத்துவிட்டு மைத்துனனும் நானும் குனிந்தபடி திசைதெரியாது நகர்கிறோம். கையில் இரண்டு போத்தல்கள். எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்பது மட்டுமே எமது ஏக்கம். மெதுவாக குனிந்தநிலையில் நகர்கிறோம்.

நிரையாக நாலைந்து பனைமரங்கள் நிமிர்ந்து நிற்கின்றன. எதிரில் இருந்து வரும் குண்டுகளை தம்மில் தாங்கியபடி அரைகுறை உயிரில் தவித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் அருகில் ஒரு “ஐ பங்கர்” என்று சொல்லப்படும் சிறிய ஒரு பதுங்ககழி. அதற்குப் பக்கத்தில் பனைமரத்துக்கு கீழே இறுதியாக நான் பார்த்த அண்ணா ஒருவனினதோ அல்லது அக்காவினதோ ஒரு வோக்கி. அதை பற்றியபடி ஒரு கரம். அக்கரத்துக்கு சொந்தமாக இருக்கலாம் என்று நம்பக்கூடியதாக வரி உடையில் சிதறிய ஒரு உடல்.

அழுகை கண்ணை அடைக்கிறது. எப்படி வாழ்ந்தம்? எதற்கும் அஞ்சாமல் அண்ணனின் நிழலில் வாழ்ந்த நாம் இப்போது எல்லாத்துக்குமே அஞ்சும் பாவிகளாக ஊர்ந்து கொண்டிருக்கிறோமே என்ற சொல்லமுடியாத துக்கம் தொண்டையை அடைத்தது.

இரண்டு மூன்று மீட்டர்கள் நடந்த போது கால்கள் இடறின. கால்களுக்கிடையில் தட்டுப்பட்டது உயிரற்ற உடல்கள் என்பதை பார்க்காமலே உணரக்கூடியதாக நாற்றம் வந்தது.

அவற்றின் அருகே ஒரு உடுப்புப்பை கிழிந்த நிலையில் கிடக்கிறது. அதற்குள்ளிருந்த ஒரு நெஸ்டமோல்ட் டின் தெரிந்தது. ஓடிச்சென்று அதை எடுத்தேன். பைக்குள் இருந்த ஒரு அல்பம் வெளியே வீழ்ந்தது. பள்ளிச்சீருடையில் அழகாக வாரியழுத்த இரட்டைச் சடையோடு ஒரு சிறுமியும் அவளின் சகோதரனும் சிரித்தபடி ஒரு நிழல்படத்தில் நின்றார்கள். ஒருவேளை கால்கள் இடறிய போது தட்டுப்பட்ட உடல்களுக்குள் அவர்களும் உயிரற்று இருந்திருக்கலாம்.

நான் அதைப்பற்றி எல்லாம் எண்ணிக்கொண்டிருக்காமல் நெஸ்டமோல்ட் டின்னை எடுத்து குலுக்கிப் பார்க்கிறேன். கிட்டத்தட்ட முக்கால் டின் அளவுக்கு மா இருந்தது. பெரும் சந்தோசம். உதடுகள் புன்னகைத்தன.

டின்னைப் பிடித்திருந்த கை கொஞ்சம் பிசுபிசுத்தது. என்னவென்று பார்த்தேன் கையில் இரத்தம். டின்னைத் திருப்பிப் பார்க்கிறேன் டின்னிலும் குருதிபட்டிருந்தது. அப்பையினை பார்த்தேன் குருதி அதிலும் இருந்தது. அப்போது தான் அல்பத்திலும் குருதி பட்டிருப்பது புரிந்தது.

ஒருவேளை அந்த நிழல்படத்தில் புன்னகைத்துக் கொண்டிருந்த அக்குழந்தைகளின் குருதியாகக் கூட இருக்கலாம். மனம் ஓவென்று கத்தி அழவேண்டும் போல எண்ணியது. இருந்தும் அடக்கிக்கொண்டு “ என்ட மருமக்களுக்கு கொஞ்சம் பசி தீர்க்க உதவும் இது” சொல்லியபடி நகர்கிறேன்.

மைத்துனனோ “ அண்ண இரத்தம் எல்லாம் பட்டுக்கிடக்கு அதை எடுக்காத அண்ண” என்கிறான். எனக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை. குழந்தைகளின் பசியைப் போக்க இப்போது அது மட்டுமே மனதில் நிலைத்த எண்ணம். “பரவாயில்ல வா”

நெஸ்டமோல்ட் டின் மடித்துக் கட்டிய என் சாறத்துக்குள் பத்திரப்படுத்தப்படுகிறது. எப்படியாயினும் பசிக்குது மாமா என்று அழுதுகொண்டிருக்கும் அக்குழந்தைகளின் பசியில் கொஞ்சத்தையாவது இப்போது என்னால் நிவர்த்தி செய்ய முடியும்.

திரும்பி அவர்களிடம் நடக்கிறேன். சிதறிக்கிடந்த கரத்தில் அமைதியாக கிடந்த அந்த வோக்கி திடீர் என்று உயிர் பெற்று யாரையோ அழைத்தபடி இருக்கிறது. அது எதுவும் அப்போது எனக்கு செவியில் விழவில்லை. பள்ளிச்சீருடையில் புன்னகைத்தபடி இருந்த குழந்தைகளின் குருதியில் தோய்ந்து போய்க்கிடந்த அந்த நெஸ்டமோல்ட் மாவினால் என் மருகர்களின் பசியாற்ற கொஞ்சமாவது முடியுமே என்பதை மட்டுமே என் மனம் சொல்லிக்கொண்டது…

நான் நடந்து கொண்டே இருந்தேன்….

நினைவுகளுடன்: இ.இ.கவிமகன்

17.05.2025

வட்டுவாகல் பாலத்திற்குள்ளால் நகர்கின்ற போது

6 days 15 hours ago

வட்டுவாகல் பாலத்தில் கால் மடக்கி இருக்க முடியாத நெருக்கத்தில் மக்கள் அமர்ந்திருக்கிறார்கள். இரண்டு பக்கமும் இரத்த நாற்றம் எடுத்த வட்டுவாகல் நீரேரியின் நீர் மெலிதாக அசைந்து அசைந்து அந்த பாலத்தில் மோதிக் கொண்டிருக்கிறது. அதற்குள் குப்பைகளைப் போல என்னவோ எல்லாம் மிதந்து கொண்டிருந்தன. உயிரற்ற உடலங்கள் என்று விடியும்வரை எமக்குத் தெரியாது. இருண்டுவிட்ட எங்கட தேசத்தில இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக எதிரியிடம் சரண்டைய முண்டியடித்தபடி நிற்கிறார்கள். எம் தலைக்கு மேலாக முல்லைத்தீவில் இருந்து வீசப்படும் எறிகணைகள் எம்மைத் தாண்டிப் போய் வீழ்ந்து வெடிக்கின்றன.

என் பிள்ளைகளைப் போல பாதுகாத்துவிடத் துடித்த என் மருமக்களை இறுக அணைத்தபடி நானும் ஒருவனாக அந்த நீண்ட கூட்டத்துக்குள் இருக்கிறேன். இறுதிவரை சிறிய முதலுதவி செய்யக் கூடியதாக மருத்துவப் பை ஒன்றைக் கைவிடாது என் தோழில் வைத்திருந்தேன். அப்போது எனக்கு பெரிதாகத் தெரிந்த சொத்துக்களில் அந்த நெஸ்டமோல் டின்னும் இதுவுமே இருந்தன.

அதற்குள் பெரிதாக ஒன்றும் இல்ல. நானே அம்மப்பாவின் வேட்டிகளைக் கொண்டு உருவாக்கிய “பீல்ட்கொம்ரேசர்” என்று இராணுவப்பாசையில் சொல்லக்கூடிய இரத்தத்தைக் கட்டுப்படுத்தும் துணி போன்று சுருட்டப்பட்டுக்கிடந்த நீண்ட வேட்டித் துண்டுகளே இருந்தன. அதனோடு ஓரிரண்டு பனடோல்கள் மட்டுமே இருந்தன.

ஒருவேளை திடீர் என்று யாருக்காவது காயம் வந்தால் அதைக்கொண்டு இரத்தத்தைக் கட்டுப்படுத்தும் முன்னேற்பாடு அது. அதுகளைக் கொண்டு வந்ததால் அதை வைத்து எதிரி எதாவது பிரச்சனை தரலாம் என்ற பயம் வந்ததனால் என் சித்தப்பா அவற்றை எறியச்சொல்கிறார். அதனால் வட்டுவாகல் நீரேரி அதை தனக்குள் வாங்கிக் கொண்டது.

நேற்று குருதியில் நனைந்து கிடந்த நெஸ்டமோல்ட் டின் இப்போது வெறுமையாகி இருந்தது. சின்னவர்கள் அதை முடித்துவிட்டார்கள். அதனால் அதையும் எறிகிறேன். எங்கள் உடல்கள் குருதி நாற்றத்தாலும் பயத்தினாலும் ஒடுங்கிப் போய் கிடந்தது. குரல்வளை நீருக்காகவும் இரைப்பை சாப்பாட்டுக்காகவும் ஏங்கிக் கொண்டிருந்தன.

அதைவிட எங்கள் முன்னே நீண்டு கிடந்த வரிசையைத் தாண்டி கனரக ஆயுதங்களைத் ஏந்திக் கொண்டு முறைத்தபடி நின்ற சிங்கள கொடூரர்களின் அடுத்தது என்ன செய்யப்போகிறார்கள் என்று எண்ணி மனமும் உடலும் நடுங்கிக் கொண்டிருந்தன. இரு எறிகணைகள், இரண்டே இரண்டு எறிகணைகள் அந்த இடத்தில் வீழ்ந்து வெடித்தால் போதும் நாம் அனைவரும் உடல்சிதறிப் பலியாகிடுவோம்.

அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதுவும் தெரியாத பதட்டமான நிலை. திடீர் என்று எமக்கு பின்னால் இருந்து சில துப்பாக்கி வேட்டுக்கள். என் அருகில் இருந்த சிலர் காயப்படுகிறார்கள். என் சகோதரன் ஒருவன் முதுகில் காயமடைகிறான். குருதி கொப்பளிக்கிறது. அவலத்தின் ஓசை வானில் எழுந்தது. இன்னமும் நாங்கள் யுத்த பிரதேசத்துக்குள் தான் இருக்கிறோம் என்பது புரிந்தது. ஐயோ ஐயோ என்று அத்தனைபேரும் குளறுகிறார்கள். நாங்கள் அப்பாவி மக்கள் எங்களை சுடாதீர்கள் என்று கத்துகிறார்கள். இதையெல்லாம் பார்த்து நகைக்கிறது எம்மைச் சுற்றி நின்ற சிங்கள வல்லூறுகள்.

பீறிட்ட குருதியை கட்டுப்படுத்த எதுவும் இல்லை. கொஞ்ச நேரத்துக்கு முன் நீருக்குள் எறிந்த வேட்டித்துண்டுகளை திரும்பிப்பார்க்கிறேன். அவை நனைந்து போய் கிடந்தன. காயப்பட்டவர்களை அணைத்தபடி குருதி வரும் இடங்களுக்கு ஏதோ ஒன்றை கிழித்துக் கட்டுகிறார்கள் உறவுகள்.

மீண்டும் மீண்டும் ஏவப்பட்டுக்கொண்டிருக்கும் எறிகணைகளின் வீச்சு கொஞ்சம் தூரவாக சென்று வெடித்தது. எம் தலைகளுக்கு மேலாக துப்பாக்கி ரவைகளும் எம்மை தாண்டிச்சென்றன.

வழமை போல் பாதுகாப்பு வலையம் என்று ஓரிடத்தில் மக்களை குவிய வைத்து இனவழிப்பு செய்ததைப் போல வட்டுவாகல் பாலத்தில் முண்டியடித்தபடி கூடிநிற்கும் எம் எல்லோரையும் இதில் வைத்தே சுட்டுக் கொல்லப்போகிறது இந்த சிங்கள வல்லூறுகள் என்று எனக்குத் தோன்றியது.

நாங்கள் தங்கி இருந்த பதுங்ககழிக்கு அருகில் மூடிய நிலையில் உருவாக்கப்பட்டிருந்த பதுங்ககழி ஒன்றில் நான்கு நாட்களுக்கு முன் பத்துப்பேருக்கு மேல் ஒரே ஒரு எறிகணைத் தாக்குதலால் இறந்த சம்பவம் கண்ணுக்குள் வந்தது. அதைப் போலவே இப்போதும் நடக்கப்போவதாகவே உள்மனம் சொல்கிறது. மனமும் உடலும் நடுங்குகிறன. நான் மருமகனை இறுக கட்டியணைத்தபடி அவன் அழுவதை நிறுத்த முயற்சிக்கிறேன். பாவம் ஒன்றரை வயதுக் குழந்தை அனுபவிக்க கூடாத எல்லா துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறான்.

திடீர் என்று ஏதோ ஆரவாரம். முன்னே வரச்சொல்லி சொல்லி சிங்களத்தில் கட்டளைகள். சிறிய நேரத்தில் தமிழிலும் கட்டளை. வட்டுவாகல் பாலத்தில் இருந்து இறுதியாக என் மண்ணை ஒருமுறை திரும்பிப் பார்க்கிறேன். அது குருதிக்காடாக சோர்ந்துபோய் பிணங்களைச்சுமந்து கிடக்கிறது. மருமகனை அணைத்தபடி எழுந்து கொள்கிறேன். கொலைவெறி ஆடிய சண்டைக்களத்தில் இருந்து தப்பி வந்து பலிக்களத்துக்கு இழுத்துச்செல்லப்படும் பலிக்கடாக்களைப் போல எம்மை வரிசையில் கொண்டு சென்றார்கள் கொடிய சிங்கள இராணுவம்.

நடைப்பிணமாக நடந்து கொண்டிருந்தோம். முப்பது வருடங்களாக லீமா சேராவையும்,கிலோ9 ஐயும், அல்பாவையும் அழைத்துக்கொண்டருந்த வோக்கிகள் அப்போது எனக்குப்புரயாத சிங்களத்தில் யாரையோ அழைத்துக்கொண்டிருந்தன…

நினைவுடன் இ.இ.கவிமகன்

18.05.2025

இறுதிப்போரில் இறுதி நேரப் பிரிவு

6 days 15 hours ago

தங்கள் குடும்பங்களை பிரிகின்றனர் பல போராளிகள்.

“மூத்தவள் என்னோடு நிற்கட்டும் இளையவளைக் கூட்டிக்கொண்டு நீ அவன்ட கட்டுப்பாட்டுக்குள்ள போ முடிஞ்சால் பிறகு வந்து சந்திக்கிறன்”

சில போராளிகள் இவ்வாறு தான் தமக்கானவர்களை வழியனுப்பினர்.

சில இணைகள் தம்முடன் வாருங்கள் என்று அழைக்க மனமற்று அழுகின்றார்கள். அவர்களும் வீர உச்சங்களின் இணைகள் அல்லவா? அதனால் கலங்கிய விழிகளோடு ஒரு பிள்ளையை என்றாலும் காத்துவிட வேண்டும் என்று எதிரியின் கட்டுப்பாட்டு நிலைகளை நோக்கி நகர்கின்றனர்.

சில இணைகள் தம்முடையவர்களை விட்டுப் போக முடியாது அழுது குளறிக்கொண்டிருக்கிறார்கள். இறுதிவரை உறுதியோடு களமாடிய வேங்கைகள் வர மறுக்கின்றனர். குழந்தைகள் கையைப் பிடித்து இழுக்கின்றனர்.

“அப்பா வாங்கோ / அம்மா வாங்கோ “ என்று கத்துகின்றனர் கதறுகின்றனர். உங்கள விட்டிட்டு போகமாட்டம் என்று அழுகின்றனர். இருந்தும் அக்குழந்தைகளின் முகங்களை, அவர்களின் அழுகையினை அவர்களின் பிரிவை விட தாய் மண்ணை எதிரியிடம் விட்டு வர முடியாது தவித்த போராளிகள் அவர்களை விட்டு வந்து கொண்டிருக்கும் எதிரியை நோக்கிச் செல்கிறார்கள். குழந்தைகளை கட்டிப்பிடித்து முத்தமிட்டு தன் இணையிடம் கொடுத்துவிட்டு திரும்பிப்பார்க்காது துப்பாக்கிகளை இறுகப்பற்றியபடி எதிரியை நோக்கி போகின்றார்கள்.

அதுவரை கண்முன்னே சாவும் பட்டினியும் எம்மரவை உலுக்கி எடுத்தது. இருந்தாலும் களமாடிய வேங்கைகள் உயிருடன் என்றோ ஒருநாள் மீள்வார்கள் என்று நம்பி உறவுகள் காத்திருப்பார்கள் பலர் மீண்டு வருவார்கள். சிலர் மீளமாட்டார்கள். அவர்கள் எமக்காக காவியமாகி இருப்பார்கள்.

இப்போது அவ்வாறில்லை.

இது பயங்கர மணித்துளி. சுற்றிவர முட்கம்பி வேலிகளைப்போல கந்தகக்குண்டுகளால் நிரப்பப்படும் குறுகிய பிரதேசத்தில் தம் இணையை இனி காண்போமா இல்லையா என்ற உத்தரவாதம் எதுவும் இல்லாத பொழுதில் அவர்கள் தம் இணைகளைப் பிரிந்தார்கள். மனதுக்குள் துடித்தாலும் கொண்ட இலட்சியத்தின் உறுதி அவர்களின் துப்பாக்கிகளை இறுகிப்பற்ற வைக்கிறது.

இது ஒரு புறம் இருக்க சிலர் இணையாகவே கரத்தில் ஏந்திய துப்பாக்கிகளை இறுகப்பற்றிக் கொள்கின்றனர். குறுக்கும்மறுக்கும் வரும் ரவைப் பின்னல்களுக்குள் அவர்கள் இருவரும் இணையாகவே எதிரியை எதிர்கொள்கின்றனர். சிலர் குழந்தைகளை உறவுகளிடம் கையளித்துவிட்டு உறுதியோடு நிற்கிறார்கள்.

இன்னொரு புறம்,

அம்மா பிள்ளையை பிடித்து இழுக்கிறாள். அப்பா கெஞ்சுகிறார் “எங்களுடன் வா “என்று. பிள்ளை வர மறுக்கிறது. தங்கை அண்ணனை, தம்பி அக்காவை, அண்ணன் தங்கையை, அக்கா தம்பியை என்று கெஞ்சுகிறார்கள். “ஆமியட்ட போவம் வா சரணடைந்தால் உயிருக்கு உத்தரவாதம் தருவதாக அறிவிக்கிறாங்கள் தானே வாடா ” என்று வற்புறுத்துகிறார்கள்.

பற்றி இருந்த கையினை விலக்கியபடி நீங்கள் போங்கோ நான் வரேல்ல. என்னால வர முடியாதும்மா என்னை நினைச்சுக் கொண்டிருக்காமல் உடம்பை கவனமா பாருங்கோ நான் போறன் என்று நெஞ்சில் இருந்த கோள்சரை இறுக்கிக் கொள்கிறார்கள் பல போராளிகள்.

அவர்கள் நிச்சயமாக ஒன்றை அறிவார்கள். இது எமது விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்போகும் இறுதிமணித்துளிகள் இவை. உயிர்களுக்கு எப்போதும் உத்தரவாதம் இல்லை. இருந்தாலும் எதிரியிடம் மண்டியிட்டு அடிமையாக சாவதை விட வரும் எதிரியில் ஒருவனையாவது வீழ்த்திவிட்டு பெருமையாக சாகலாம் என்ற உறுதி அவர்களுக்குள் இருந்தது. அதனால் தான் அவர்களால் தம் உயிரான உறவுகளைப் பிரிய முடிந்தது.

திரும்பித் திரும்பிப் பார்த்தபடி எதிரியின் பிரதேசத்துக்குள் நாங்கள் நகர்ந்து கொண்டிருக்க அவர்கள் எம் தாயகத்தை வன்பறித்து வந்து கொண்டிருக்கும் எதிரியன் கதை முடிக்க நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

திடீர் திடீர் என்று பெரும் வெடியோசைகள் தனித்தனியாக பாரிய சத்தமாக கேட்கின்றன. என் நினைவுக்குத் தெரிந்தவரை அவை பெரும்பாலும் எங்கள் வேங்கைகள் கட்டியிருந்த வெடியங்கிகளின் வெடிப்போசைகளாகவே இருக்கக்கூடும்.

நாங்கள் அடிமைகளாக எதிரியினை நோக்கி….

அவர்களோ உறுதிமிக்கவர்களாக எதிரியை நோக்கி…

வெடியோசைகள் கேட்டவண்ணமே இருக்கின்றன.

முள்ளிவாய்க்கால் நினைவுகளுக்கு முடிவில்லை.

நினைவுடன்: இ.இ. கவிமகன்

18.05.2025

லெப். பரிமளா (தளிர்)

6 days 15 hours ago

அன்புடன் குமுதினி அக்கா…!

எப்பிடி நீ சுகமா இருக்கிறியா என்று எழுதிடத்தான் என் விரல்கள் துடிக்கிறது. ஆனால் நீ உன் நண்பிகளோடு இணைந்து தமிழீழ தேசத்துக்காக உன்னை விதையாக்கிவிட்டாய் என்ற தூய்மையான திமிர் எழுந்து என்னை “நினைவுக்கல்லுக்குள் நீ நலமாக உறங்குகிறாயா? என்று தான் கேட்க சொல்கிறது. நீ எப்படி நிம்மதியாக உறங்குவாய்? அந்த நிம்மதியை நாங்கள் உனக்குத் தரவில்லையே. உன் நிம்மதியாக உறக்கத்துக்கு கூட சந்தர்ப்பத்தை தராது எங்கள் தேசத்தை எதிரியிடம் கைவிட்டு விட்டோமே.

குமுதினி அக்கா என்று தான் உனை நான் அழைப்பேன். என் பெரியப்பாவிற்கு நீ மூன்றாவதாக பிறந்தவள். சிறு வயதில் இருந்து நீ அமைதியின் உருவம். உன்னை நேசித்தவர்களுக்கு அது நன்றாகவே தெரியும். அக்கா அக்கா என்று உங்களோடு திரிந்த காலங்கள் நெஞ்சுக்குள் வந்து வருத்தத்தை தருகிறது. கரவை மண்ணில் கூடி இருந்து களித்த ஒவ்வொரு வினாடிகளும் நெஞ்சுக்கள் நின்று வருத்தத்தை தருகிறது. நீ ஊட்டி விட்ட சோற்று பருக்கைகள் என் குருதியின் அணுக்களில் நின்று கொண்டு உன்னை தேடுகிறது.

அக்கா 1994 ஆம் வருடம் நீ என்னையும் எங்களையும் விட்டு தேசக்கடமைக்காக பயணித்துவிட்டாய். உன் சித்தப்பாக்கள் தூக்கிய ஆதே ஆயுதங்களை உன் தோழில் சுமக்க துணிந்து சென்று விட்டாய். நானோ உனைத் தேடி அழுவதை தவிர வழியற்றுப்போய்விட்டேன். எங்கே நீ என்று யாருக்கும் தெரியவில்லை. உன் விடுதலைப்பணி அடிப்படைப்பயிற்சிகளை முடித்துக்கொண்டு மாலதி படையணியில் தொடர்கிறதாக ஒருநாள் என் தந்தை வந்து கூறிய போது, “அக்காவை நாங்கள் பார்க்க ஏலாதா அப்பா” என்ற வினாவை கேட்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அப்பா மறுத்துவிட்டார். அதற்கு சந்தர்ப்பம் இல்லை என்றார். நீ சிறப்பு பயிற்சி ஒன்றில் நிற்பதால் சந்திக்க முடியாது என்றார். நான் ஏமாற்றத்தோடு அப்பாவை பார்த்த பின் பெரியப்பாவை பார்த்தேன். அவர் விழிகள் கலங்கி இருந்தது.

காலங்கள் மெல்ல அல்ல வேகமாகவே கரைந்து போனது. ஊரில் இருந்து நாம் மல்லாவிக்கு வன்பறிப்பாளர்களால் இடம்பெயரவைக்கப்பட்ட போது நீயும் வன்னிக்கு நகர்ந்திருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால் நியமாக நீ எங்கே என்பது யாருக்கும் தெரியாது. நீ படையணியோடு. நாங்கள் படகேறி எங்கள் குடும்பங்களோடு.

வன்னிக்கு வந்தும் காலங்கள் ஓடின. என் தந்தை தன் தேசப்பணியோடு. நீ உன் பணியோடு. என் சித்தப்பாவும் நானும் பெரியப்பாவும் பெரியம்மாவும் உன்னைத் தேடித்தேடி அலைந்து கொண்டிருந்தோம்.

“கருப்பட்டமுறிப்பு” மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் ஒலுமடு தாண்டி வரும் ஒரு சிறு கிராமம். அங்கு தான் நீ உன் படையணியோடு நிற்பதாக உன் படையணி போராளியாக இருந்த எங்கள் உறவுக்காற சகோதரி கூறிய அடுத்த பொழுது உன்னைத்தேடி சித்தப்பாவின் ஈருருளி நகர்ந்தது. முன்னால் இருந்து “கெதியா சித்தப்பா கெதியா “ என்று விரட்டிக்கொண்டிருந்தேன் நான். ஒரு நிமிசம் கூட மணித்தியாலங்களைப்போல நகர்ந்தது. அந்த கிரவல் கூட ஒழுங்காக போடப்படாத காட்டு வீதியில் எங்கள் பயணம் உன்னைத் தேடித் தொடர்ந்தது.

உன் முகாம் வந்து சேர்ந்தோம். காவல் கொட்டிலில் நின்ற உன் தோழியிடம் “தளிர் அக்காவின் தம்பி நான் அக்காவ பார்க்க வேணும்.” சித்தப்பாவ கதைக்க விடாமல் நானே கேட்டேன். தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை தோழில் கொழுவிய அந்த அக்கா என் கையை பிடித்துக் கொண்டு என் பெயரைக்கேட்டா. “இப்ப எதுக்கு என்ட பெயர் அக்காவ வரச்சொல்லுங்கோ நான் பார்க்க வேணும்.” என்று அதிகாரமா சொன்னேன். அவாவுக்கு சிரிப்பு வந்திருக்க வேணும் என்று நினைக்கிறேன். கையில பிடிச்சு மெதுவா கிள்ளிப்போட்டு என்ன மிரட்டுறாய் என்று பொய் கோவத்தோடு உள்ளே சென்றா. காத்திருப்புக் கொட்டிலில் உனக்காக காத்திருக்கத் தொடங்கினோம். நீ வருவாய் வருவாய் என்று அந்த அக்கா போன திசையில் பார்த்துக்கொண்டிருந்தேன்.

மீண்டு வந்த அந்த அக்கா “தளிர் இங்க இல்ல ஆள் ஒரு பயிற்சிக்காக வேற இடத்துக்கு போயிட்டா நீங்கள் சந்திக்க முடியாது” என்று சொல்லி எங்களை திருப்பி அனுப்பிவிட்டா. நாட்கள் வருடத்தை தின்று தீர்த்தது. யாழ்ப்பாணத்துக்கான பாதை திறக்கவென்று “வெற்றிநிச்சயம் (ஜெயசிக்குறு )” என்று பெயர் வைத்து வவுனியாவில் இருந்து கிளம்பிய இராணுவ நடவடிக்கை பேரலையாக எழுந்து ஆர்ப்பரித்தது. அப்போது எங்கள் படையணிகளின் தாண்டிக்குளத்தில், புளியங்குளத்தில் கனகராயன்குளத்தில் என தொடரான முறியடிப்பு நடவடிக்கைகளில் காலுடைந்து நொண்டியபடி நகர்ந்து கொண்டிருந்தது ஜெயசிக்குறு எனும் அரக்கன்.

A9 வீதியை குறுக்கறுத்து வன்னியை துண்டாடியபடி யாழ்ப்பாணத்துக்கான பாதையை திறப்பதுவே அந்த அரக்கனின் நோக்கம். அதை முறியடித்து சிறீலங்காவின் படையகத்துக்கு பெரும் அதிர்வை கொடுத்துக்கொண்டிருந்தன விடுதலைப்புலிகளின் அணிகள்.

அந்த நேரத்தில் தான் “மன்னகுளம்” பகுதியில் வைத்து ஒரு பெரும் திணறடிப்பை செய்தன தலைவன் படையணிகள். அதில் உன் படையணியும் பெரும் சாதனைகளை நிகழ்த்தியது. அதில் நீயும் ஒருத்தியானாய். மகனாருக்கு நிகரானவர்கள் என்று உன் போன்ற மகளாரும் நொண்டிய அரக்கனுக்கு செவியில் உரத்து உரைத்த சண்டை அது. உன் துப்பாக்கியின் ஒவ்வொரு ரவைகளும் தமிழீழ வரலாற்றை எழுதின. நாங்களோ எங்கோ தூரக் கேட்கும் தொடர் வெடிச்சத்தங்களில் பயந்து போய் கிடந்தோம். உனக்கோ இருட்டுக்கும் பயம் இல்லை. கொல்ல வந்த பகைக்கும் பயம் இல்லை. வெடித்த வெடிகளுக்கும் பயம் இல்லை. அதனால் தான் மழையென பொழிந்த வெடிக்குள்ளும் உன் கரங்கள் உறுதியாக எதிர்த்து நின்றன.

அக்கா நீ அன்று நிகழ்த்தியது சாதனையல்ல என் வாழ்வுக்கான தியாகம். நான் வாழ வேண்டும் என்று நீ உன்னை ஈந்த ஈகம் அது. நீ உன்னை எனக்காக தியாகித்தாய். நானோ பள்ளியுடையில் பரபரத்துக்கொண்டிருந்தேன்.

அக்கா நீ வீரச்சாவாம். தகவல் அப்பா ஊடாக வீட்டுக்கு வந்து சேர்ந்தது. முத்தையன்கட்டில் பெரியப்பாவும் பெரியம்மாவும் அக்காவும் இருந்தார்கள். நாங்கள் மல்லாவியில். பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்தோம். உன் திருவுருவப்படம் தான் எனக்காக காத்திருந்தது. நீ உன் வித்துடலைக் கூட நான் பார்க்க கூடாது என்று நினைத்துவிட்டாய் போல. உயிருடன் உன்னைப் பார்க்காத இந்த தம்பி உயிரற்று வீழ்ந்துவிட்ட உன் வித்துடலையுமா பார்க்க கூடாது அக்கா? அழுத விழிகளைத் துடைத்துக் கொண்டிருந்த என்னை ஒரு கரம் பற்றியது.

கருப்பட்டமுறிப்பில் நீ நின்ற முகாமில் காவல் காத்த அதே அக்கா.

தம்பி அன்று நீங்கள் வரும் போது அக்கா உள்ள தான் நின்றவா. ஆனால் நீ தன்னை பார்த்தவுடன் “ வா வீட்ட போவம் “ என்று கேட்டால் தன்னால பதில் சொல்ல முடியாது. அவன் அழுவான் என்னை கண்டால் அழுவான் என்று திரும்பத்திரும்ப சொல்லி அழுததாக கூறினா. அதுமட்டுமல்ல உன்னை மறைந்திருந்து பார்த்தா என்றும் கூறினா.

அக்கா, உன்னை பார்க்கத்தானே ஓடி வந்தனான். எனக்கு அக்கா தங்கை யாரும் இல்லை. சிறு வயது முதல் பெரியப்பாவின் அல்லது பெரியம்மாவின் பிள்ளைகளான நீங்கள் தானே சகோதரங்கள். உங்களைத்தானே நேசித்தபடி வளர்ந்தேன். இப்படி இருக்க ஏன் உன்னை பார்க்க வந்த என்னை பார்க்காமல் தவிர்த்தாய்? அப்படி நான் என்ன கேட்டுவிடப்போகிறேன் என்னோடு வீட்டுக்கு வா என்று தானே. அதற்கு நீ இல்ல அக்கா இப்ப வரமாட்டன் பிறகு வாறன் என்று ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் தானே.

கேட்டுக்கேட்டு அழ நெஞ்சம் தவித்தது. ஆனால் ஒரு முறையேனும் உன் திருமுகத்தை காண வந்த அன்புத்தம்பியை பார்க்காமல் தவிர்த்து விட்டு நிரந்தரமாக போய்விட்ட உன்னோடு கதைக்க கூடாது என்று அந்த சின்ன வயசு கவிக்கு கோவம் வந்தது அக்கா.

அக்கா, உன் தம்பி இப்போது வளர்ந்து ஒரு மகனின் அப்பா ஆகிவிட்டேன். உன் அக்காவுக்கு 3 பிள்ளைகள். நாங்கள் அனைவரும் நலம். என்ன ஒரே கவலை. உன்னைப்போலவே உன் அப்பா, சித்தப்பாக்கள் அத்தை என்று அனைவரும் என்னை விட்டு உன்னோடு வந்துவிட்டார்கள். நீ கண்ட தமிழீழ கனவும் நனவாகாமல் போய் மீண்டும் தான் அந்நிய தேசத்து அகதியாக்கப்பட்டுவிட்டேன். தனித்து நிற்கும் வெளிநாட்டு வாழ்க்கை ரம்ப கசக்கிறது. உங்களோடு மண் வீடு கட்டி விளையாடிய சின்ன வயசு திரும்பி வராதா என்று மனம் ஏங்குகிறது.

அக்கா,

இறுதியாக முள்ளிவாய்க்காலில் அடிமையாக எதிரியின் கால்களைக்கு மிதிபட்டு நாம் ஏற்றப்பட்ட பேரூந்து ஊர்ந்து வந்து கொண்டிருந்த போது காற்றுப் போன நிலையில் நீ உறங்கும் முள்ளியவளை துயிலும் இல்லத்தின் முன் நின்றுவிட்டது. அப்போது தான் உன்னை தேடினேன். அக்கா நீ உறங்கிக் கொண்டிருந்த அந்த புனித பூமி புனிதமற்ற புத்தனின் பேரர்களினால் மிதிக்கப்பட்டுக் கொண்டிருந்த கோலத்தை பார்க்க முடியாது தலையை திருப்பிக்கொண்டேன்.

உன்னை இனி பார்க்க முடியாது என்று தெரிந்தும் ஏக்கத்தோடு உன் இருப்பிடத்தை பார்த்துக்கொண்டு வந்த அந்த நொடி இன்றும் நினைவிருக்கிறது அக்கா.

நிம்மதியற்ற உன் ஆத்மாவுக்கு என்னால் என்ன சொல்லி விட முடியும்? நீங்கள் கண்ட கனவை தொலைத்து விட்டோம். இருந்தாலும் உன் மீதும் உண் தோழர்கள் மீதும் உள்ள நேசத்தை. உறுதி குலைந்து விடாமல் இறுதி வரை பயணிப்பேன் என்பதை மட்டுமே சொல்ல முடியும்.

தேடும் விழிகளோடு அன்புத் தம்பி

அன்புடன் : இ.இ.கவிமகன்

நாள் 20.11.2025

கப்டன் உமையாளன்.

6 days 15 hours ago

2006 மார்கழி 4 ஆம் நாள், நீயும் நானும் சந்தித்த முதல் நாள். நீ உயரமானவன் என்பதால் அந்த கல்லூரியின் பின்வரிசையையே ஆக்கிரமிப்பாய். முதன்நாளிலும் அப்படித்தான். மெல்லிய நீல கோடு போட்ட சேட் என்று நினைக்கிறேன். உன் புன்னகையை ஒரு தடவை பார்த்துவிட்டு முன்னாலே புரொஜெக்டரின் ஊடக வெளிவந்து வெண்ணிற திரையில் ஒளிர்ந்து கொண்டிருந்த கற்றலுக்கான எழுத்துக்களை பார்த்தேன். முதல் நாள் எந்த அறிமுகமும் இல்லை. மணிவண்ணன் உன் பெயர் என்பதை மட்டுமே அறிந்தேன்.

நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தது. எம் கல்லூரி நாட்கள் இனிமையாக கழிந்தது. நீ கல்வியில் ஒரு படி மேலே இருந்தாய். உன் சிந்தனை முழுவதும், உன் இலக்கு முழுவதும் ஒரே ஒரு விடயத்தில் தான் குவிந்து நின்றது. அந்த பாடத்திட்டத்தின் ஒவ்வொரு நிலைகளையும் சிறப்பாக கற்றுத் தேற வேண்டும். அந்த நோக்கத்தில் மட்டுமே உன் ஒவ்வொரு வினாடிகளையும் நீ செதுக்கிக் கொண்டாய்.

கேணல் சார்ள்ஸ் அண்ணாவின் வீரச்சாவு நிகழ்வில் நீ வரி உடையுடன் வருவதை கண்ட எம்மில் பலருக்கு அதிர்ச்சி. நீ ஒரு போராளியா என்ற அங்கலாய்ப்பு. அதுவரைக்கும் நீ ஒரு போராளி என்பதை எம்மில் ஒரிருவரைத் தவிர மற்றவர்கள் அறிந்திருக்கவில்லை. அன்று எல்லோருக்கும் தெரிந்தது நீ காக்கும் உன்னை பற்றிய இரகசியத்தின் தன்மை.

படையப்புலனாய்வின் பணிகளை விரிவாக்கும் செயற்றிட்டம் ஒன்றுக்காக நீ கற்க வந்திருந்தாய். வெளிமாவட்டத்தில் தங்கி இருக்கும் இரகசிய போராளிகளுக்கான தொடர்பாடல்களை ஏற்படுத்துவது தொடர்பாக ஒரு மென்பொருளை உருவாக்க நீ முனைந்தாய். இரகசிய போராளிகள் பற்றிய இரகசிய விபரக்கோவைகளை பாதுகாக்கும் மென்பொருளையும் உருவாக்க முனைந்தாய். நிச்சயமாக அவை மட்டுமல்ல அதை விட நிறைய மென்பொருள்களை உருவாக்கி இருக்க வாய்பிருந்திருக்கும். இருப்பினும் அவற்றின் முழு விபரங்களை நான் அறிந்திருக்கவில்லை.

கிட்டத்தட்ட 1.5 வருடங்கள் ஒன்றாக இருந்தோம். அந்த உயர் தொழில்நுட்பக்கற்கை முடிந்து அவரவர் பணிகளுக்கு திரும்ப முந்திய பொழுதொன்றில் உன் உயிரொன்றையும் எமக்கு அறிமுகப்படுத்திவிட்டு நீ உன் பணிக்குத் திரும்பிவிட்டாய்.

காலம் நகர்ந்து தொலைந்தது. 2008 ஐப்பசித்திங்கள் நாங்கள் கிளிநொச்சியில் இருந்து நகர்ந்து விசுவமடுவில் எமது கல்லூரியை அமைத்தோம். நீ படையகப்புலனாய்வின் படையணியில் ஒருவனாகி விட்டாய். நிர்வாக வேலைகள் குறைந்து களமுனை உன்னை அழைத்துக்கொண்டது. உன் கரங்கள் நீ விரும்பிய ஆயுதத்தை வெளிப்படையாக பற்றிக்கொண்டது.

நாங்கள் நடைப்பிணங்களாக நடந்து கொண்டிருக்க நீ உன் அணியோடு எதிரியை மறித்து முறியடிப்புச்சமரை செய்து கொண்டிருந்தாய். சுதந்திரபுரத்தில் என் வீட்டுக்கு திடீர் ஒன்று ஒருநாள் வந்தாய். அது உன் உயிரின் சந்திப்புக்கான நாளென்று நான் நினைக்கிறேன். ஏதேதோ எல்லாம் கதைத்துக்கொண்டிருந்தாய். பாணும் சம்பலும் சாப்பிட்டாய். “அம்மா இது தான் உங்கட கையால சாப்பிடுற கடைசிச்சாப்பாடோ தெரியாது” சொல்லிவிட்டு அம்மாவிடம் முறையான திட்டையும் வாங்கியபடி சென்று விட்டாய்.

உன்னை அதன் பின் சந்தித்தது நீ காயப்பட்டு சில நாட்கள் மருத்துவ ஓய்வுக்காக வந்து இரட்டைவாய்க்காலில் நின்ற போது. இருவரும் நீண்ட நாட்களின் பின் கிணற்றடியில் ஒன்றாக குளித்தோம். பழைய கதைகள் கதைத்தோம். சிரித்தோம் கவலைப்பட்டோம். மீண்டும் பிரிந்துவிட்டோம். நீ களமுனை நோக்கி நான் கடற்கரையில் இருந்த என் தறப்பாள் கொட்டகை நோக்கி.

திடீர் என்று ஒரு நாள். எங்கள் நண்பன் சசி வந்தான். நீ ஒரு அணியை வழிநடாத்தியபடி எதிரியின் எல்லை தாண்டி உள்நுழைய முற்பட்ட போது சிங்கள வல்லாதிக்கப்படைகளின் சினைப்பர் அணியால் தாக்கப்பட்டதாய் கூறினான். நீ உள்நுழைந்தது பாதை ஏற்படுத்திய உடனே உள்நுழைய காத்திருந்த தன் அணியை பின்நகருமாறு கட்டளை வந்ததால் தான் மீண்டு விட்டதாகவும் கூறினான். அவன் கண்கள் கலங்கின. பழகிய நாட்கள் நெஞ்சுக்குள் குருதியோட்டத்தை அதிகரிக்க வைத்து இதயத்துடிப்பு அதிகரித்தது.

உன்னை எப்படியாவது இறுதியாகப் பார்த்துவிட துடித்து இருவரும் இரட்டைவாய்க்கால் துயிலுமில்லம் ஓடி வந்தோம். ஆனால் உன்னை காணமுடியவில்லை. அவர்கள் விதைத்துவிட்டார்கள். உறவினர்கள் யாரும் இல்லை. ஆனால் அதை தாண்டி நண்பர்கள் நாங்கள் அருகில் இருந்தோம். உனக்காக அழ உன்னை நேசித்தவர்கள் இருந்தோம். எமக்காக உயிர் ஈந்த உயிர் தோழனே உன்னை ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டோமா என்று ஏக்கத்தோடு வந்தவருக்கு நீ வேறு நண்பர்களினால் விதைக்கப்பட்டுவிட்டாய் என் செய்தி மட்டுமே கிடைத்தது.

உன் விதைகுழியின் மேல் விழியில் இருந்த வழிந்த நீரை படையலாக்க மட்டுமே எங்களால் முடிந்தது. நீ படைக்கத் துடித்த தமிழீழத்துக்காக நீ விதையாகிவிட நாமோ உன் கனவுகளை முள்ளிவாய்க்காலில் புதைத்துவிட்டு ஏதிலியாகிவிட்டோம்.

நண்பனே…!

சேர்ந்திருந்த நாட்கள் கொஞ்சம் எனிலும் நினைவுகள் ஏராளமடா.

அருகில் இருந்தும் உன் திருமுகத்தை பார்க்க முடியாத வேதனையோடு உன் விதைகுழியில் ஒரு பிடி மண்ணைப் போட்டு இறுதி வழியனுப்பலை செய்ய முடியாத துயரத்தோடு…

இ.இ.கவிமகன்

நாள்: 22.11.2025

செஞ்சேரா…

6 days 15 hours ago

மேஜர் செஞ்சேரன்

நீ எங்களின் நீலக் கடலில் சாதித்தவன். உன்னை அறிமுகம் இல்லாத கடற்புலிகள் மிகக் குறைவென்றே நான் நம்புகிறேன். ஏனெனில் அப்படித்தான் உன் பணி இருக்கும். நிர்வாக போராளியாக இருந்த நீ படிப்படியாக ஒரு பொறுப்பாளனாக உயர்ந்ததை யாரும் மறக்க மாட்டோம். 1996 மல்லாவி மண்ணுக்கு நானும் நீயும், எனது குடும்பமும் உனது குடும்பமும் இடம்பெயர்ந்து வந்தோம். உனது தம்பி ( சித்தியின் மகன்) எனது நெருங்கிய தோழனாகிய போது தான் நீ எனக்கு அறிமுகமாகினாய். அப்போதெல்லாம் அகிலன் அண்ணா என்று தான் உனை அழைப்பேன்.

நீங்கள் இரட்டைக் குழந்தைகள். ஒரே வயிற்றில் பிறந்த மற்றவன் நிமலன். உங்கள் இருவரையும் இனங்கண்டு கொள்வது என்பது மிக மிக கடினமான ஒன்று. அடிக்கடி உன்னை நிமலன் அண்ணா என்றும் அவனை அகிலன் அண்ணா என்றும் மாறி அழைத்திருக்கிறேன். உன் தம்பி தான் “டேய் மண்டு அது நிமலன் அண்ணா இல்ல அகிலன் அண்ணா “ என்பான். எப்படியோ நீங்கள் இருவருமே என் அண்ணன்களாகிப் போன நாட்களில் மல்லாவியில் உன் குடும்பமும் என் குடும்பமாகியதை நீ நன்றாகவே அறிவாய்.

நான் நினைக்கிறேன் 1999 என்று. திடீர் என்று நீ காணாமல் போனாய். காரணம் உடனடியாகவே எமக்கு நன்றாகவே தெரிந்தது. நிமலன் அண்ணாவை தனிய விட்டு எப்படி உன்னால் போக முடிந்தது? உன் அக்கா அழுது குழறினா. ஏற்கனவே ஒரு தம்பியையும் தன் கணவனையும் போராட்டத்துக்காக அனுப்பிவிட்டுத் தினமும் கடவுளிடம் மன்றாடிக்கொண்டிருக்கும் உன் அக்காவை விட்டு எப்படி போக முடிந்தது? உன் அம்மா பற்றி யோசித்தாயா? அப்பாவின் இறப்புக்கு பின் உங்கள் அனைவரையும் எவ்வளவு போராட்டத்தோடு வளர்த்து வந்தா? உன் குட்டி மருமகள்? இது எதுவுமே உனக்கு அன்று தோன்றவில்லையா அகிலன் அண்ணா?.

ஓ… இது தான் தேசம் மீதான காதலா? உன்னோடு கூடப்பிறந்தவன் மீதான பாசத்தை விட அம்மா அக்கா என்று குருதியில் ஒன்றாகிய உறவுகளின் மீதான அன்பை விட தேசம் மீதான காதல் அதிகம் என்பது இது தானா? நீ உன் காலத்தின் கட்டளையை நிறைவேற்ற நீல வரியுடுக்கத் துணிந்து சென்றுவிட்டாய். உறவுகளோடு நாங்களும் நீ எம்மோடு அருகில் இல்லாத வெறுமையை நினைத்து கஸ்டப்பட்டோம்.

நீண்ட நாட்களுக்குப் பின் நானும் நிமலன் அண்ணாவும் உனைக் காணவென்று கைவேலிப்பகுதியில் இருந்த உன் முகாமுக்கு வந்திருந்தோம். நீ அங்கில்லை மாத்தளன் முகாம் ஒன்றுக்கு சென்றுவிட்டதாக கூறினார்கள். சந்திக்க முடியாத ஏமாற்றத்தோடு திரும்பி வந்து கொண்டிருந்தோம். அந்த காட்டுப்பாதைக்குள் ஈருருளி எம்மை சுமந்து கொண்டு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியை நோக்கி சென்று கொண்டிருக்க உன் பொறுப்பாளர் வந்தார். நீ என்று நினைத்து நிமலன் அண்ணைக்கு சில விடயங்களைச் சொல்ல தொடங்கினார். நிமலன் அண்ணையோ “ அண்ண நான் செஞ்சேரன் இல்லை செஞ்சேரனின் தம்பி நிமலன்” என்றான்.

“ டேய் உங்களோட பெரிய பிரச்சனையடா… என்று புன்னகைத்தார். நாங்களும் புன்னகைத்தபடி நகர்ந்துவிட்டோம்.

மருதங்கேணி மண் தமிழீழத்துக்காக தந்த செஞ்சேரா, திடீர் என்று ஒருநாள் விடுமுறையில் வந்தாய். அந்த குறுகிய விடுமுறை நாட்கள் எம் எல்லோருக்கும் சந்தோசமான நாட்கள். ஒட்டங்குளம் , பேராறு , வவுனிக்குளம் அது இது என்று மல்லாவியின் அழகிய இடம் அனைத்திலும் நின்று நிழல்படம் எடுத்து மகிழ்ந்த அந்த நாட்கள் அத்தனையும் பசுமையானவை. பெரும்பாலும் நாங்கள் நால்வரும் தான் சுற்றித்திரிந்தோம். படிக்க மறந்தோம். உன்னோடு மகிழ்ந்திருக்கவே விரும்பினோம். நாட்கள் கடந்து நீ மறுபடியும் முகாம் திரும்ப வெளிக்கிட்ட போது மனமின்றியே விடைபெற்றோம்.

2001 ஐப்பசி மாதம் 21 அன்று உன் அண்ணா தேசத்துக்காக ஆகுதியாகிப்போக மல்லாவி மண் துடித்தது. நீயும் சோர்ந்து போய் இருந்தாய். அதே நேரம் உன் அக்காவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தான். அவனே உன் அண்ணாவாகி போய்விட்டான். அண்ணனின் பெயரையே அக்கா தன் குழந்தைக்கு வைத்தா. உயிரோடும் உதிரத்தோடும் ஒன்றாகிய தன் சகோதரனை தினமும் தன் மகனின் முகத்தில் பார்க்கத் தொடங்கினா.

தேசப்பணிக்காக நீ மீண்டும் நிமிர்ந்தெழுந்து சென்றுவிட்டாய். அடிக்கடி சந்திப்பது குறைந்து போனது. உன் பணி அதிகமாக கடல் மீது இருப்பதாக அறிந்தோம்.

செஞ்சேரா, எம் தேசம் பெரும் வெற்றிகளைப் பெற்று யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதிகள் எம் கைகளில் வந்த போது, நீயும் உன் தோழர்களும் மருதங்கேணியை அண்டிய பகுதிகளிலே பணியாற்றினீர்கள். சமாதானம் (2002 ) என்ற பொல்லாத உயிர்கொல்லி எம் மீது திணிக்கப்பட்ட போது அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும். ஆனால் அதிகமாக நின்று கதைக்க உனக்கு நேரம் இருக்காது நீ ஓடிக்கொண்டே இருப்பாய். ஒரு நாள் உனை சந்திக்க வந்திருந்த என்னோடு பேசிக்கொண்டிருந்தாய். அப்போது கிபிர் வருவதற்கான எச்சரிக்கை வந்ததோ என்னவோ அவசரமாக என்னை அனுப்பி விட்டு உன் படகையும் அதற்கான எரிபொருளையும் பாதுகாப்பாக வைத்திருந்த இடத்துக்கு ஓடினாய். ஏனெனில் உன்னை விட உன் உயிரை விட அவற்றின் மீதே உனக்கு அதிகமான நேசம். அவற்றை காத்திட வேண்டும் என்ற துடிப்பு அதனால் நீ ஓடினாய்.

2006.08.11 ஆம் நாள் மீண்டும் மருதங்கேணி விட்டு இடம்பெயர வேண்டிய சூழல். அங்கிருந்து நகர்ந்து வள்ளிபுனம் பகுதியில் அம்மாவும் அக்காவும் இருந்தார்கள். 2007 மார்கழித் திங்கள் அக்காவுக்கு குழந்தை பிறக்க இருந்தது. வரப்போகும் குழந்தையை எதிர்பார்த்து பெரும் மகிழ்வு.

மருத்துவமனையில் அக்கா பிரவசத்துக்காக அனுமதிக்கப்பட்ட அதே நேரம், பருத்தித்துறை கடற்பகுதியில் உன் படகிற்கும் சிங்கள கடற்படையினருக்கும் இடையில் கடும் மோதல் உருவெடுத்தது. நீ உன் அணியினரோடு கடுமையான சண்டையிட்டாய். உனக்கு உதவிக்காக எமது சண்டைப்படகுகள் விரைந்தன. எதிரியின் டோராக்களை ஓட ஓட அடித்துத் துரத்தின. ஆனாலும் உன் படகு எதிரியின் குண்டடிபட்டு இயங்கு நிலையில் இல்லை. தாக்குதலை தாங்கிக்க முடியாது ஓடிய சிங்களத்தின் சண்டைப்படகுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மீண்டும் முழு வேகத்துடன் எம் படகுகள் மீது பாய்ந்தன. அந்த பாச்சலில் நீ எம்மை விட்டு பிரிந்து விட்டாய் என்ற செய்தி எங்கள் செவிகளுக்குள் ஆறாத துயரத்தோடு வந்து சேர்ந்தது.

அக்காவை பார்க்க வீட்டுக்குச் சென்ற எனக்கு உன் அதிர்ச்சி செய்தியே கிடைத்தது. உன் நண்பர்கள் வந்தார்கள். சம்பவத்தை கூறினார்கள். வீடு அதிர்ந்து போனது. ஐயோ ஐயோ என்ற குரல்கள் வானெழுந்தன. அருகில் இருந்த உறவுகள் வீட்டில் கூடினார்கள். மஞ்சள் சிகப்பு கொடிகள் உன் வீடெங்கும் நிறைந்து கிடந்தன. தகரக்கொட்டகை போடப்பட்டு புலிக்கொடியின் முன்னே நீ திருவுருவப்படமாக இருந்தாய். பூக்கள் உன் மேல் மாலைகளாகவும் இதழ்களாகவும் கிடந்தன. நெஞ்சு வெடிக்கும் சோகம் எங்கள் எல்லோருக்கும் நிறைந்து கிடந்தது.

அகிலன் அண்ணா. டேய் செஞ்சேரா, எப்படிடா உன் பிரிவை இந்த குடும்பம் தாங்க போகிறது? அக்காவுக்கு எப்படிடா நாங்கள் உன் வீரச்சாவை சொல்வது? அம்மா எத்தனை இழப்புக்களை தாங்குவா? உன் சகோதரனை எப்படிடா நாங்கள் தேற்றுவது? பதில் இல்லாத வினாக்கள் வந்து நினைவுகளை உலுப்பியது.

நீ விரும்பி இருந்தால் உன் அணியோடு கடலில் குதித்து நீந்திக் கரை சேர்ந்திருக்கலாம். ஆனால் நீங்கள் நேசித்த உங்கள் படகினை விட்டு வர மாட்டம் என்று எதற்காக பிடிவாதமாக நின்றீர்கள். ஓ…நான் ஏற்கனவே கேட்டதைப்போல இது தான் தமிழீழ தேசம் மீதான உங்கள் காதல் அல்லவா.

நீ சென்று விட்டாய். இப்போது உன் அக்கா மடியில் மகன் ஒருவன் செஞ்சேரனாக வந்து பிறந்துவிட்டான். அவன் முகத்தில் இனி வரும் காலம் எல்லாம் அக்கா உன்னைக் காண்பாள். உன் மருமக்கள் இருவரின் முகத்திலும் அம்மா உன்னையும் அண்ணாவையும் வாழ்நாள் முழுவதும் காண்பா. நாங்களும் உங்கள் நினைவோடே அவர்களை காண்போம்…

உன் அக்காவின் இணையும் இறுதி நாளில் முல்லைத்தீவில் வைத்து வலிந்து காணாமலாக்கப்பட்டுவிட்டார். அவரின் இருப்பையும் நாம் யாரும் அறிய முடியவில்லை.

அண்ணா உன்னை இறுதியாக கண்ட அன்று எனக்காக நீ ஒரு பரிசு தந்தாய். அதில் தேசத்தின் அண்ணன் நீல வரியோடு நிற்கும் படமும் மறுபுறம் கடற்புலிகளின் இலட்சனையும் பிரதிபண்ணப்பட்டிருந்தது. அதை என் உந்துருளியின் சாவியில் அதை நான் கொழுவி வைத்திருந்தேன். 2009 மே 16 ஆம் நாள் இரவு வரை அதை நான் தவற விடவில்லை. கவனமாக பாதுகாத்தேன். ஆனால் எதிரியின் காலடிக்குள் அடிமையாக சென்ற அந்த பொல்லாத நாளில் உன் பரிசையும் என் அப்பாவின் தகட்டோடும் எழுத்துக்களோடும் சேர்த்து நாங்கள் தங்கி இருந்த பதுங்ககழிக்குள் போட்டு தாட்டுவிட்டேன்.

அதுவும் உன்னைப் போலவே அமைதியாக உறங்கும். ஆழ்கடலின் அலைகளுக்குள் நீ அமைதியாகி விட்ட பொழுது இன்றும் நெஞ்சுக்குள் வந்து நெருடிக்கொண்டிருக்கிறது.

செஞ்சேரன் அண்ணனுக்காக,

இ.இ.கவிமகன்.

நாள் :24.11.2025

(மாவீரர்) கணேசினி - பூவொன்று புயலானது!

6 days 16 hours ago

பூவொன்று புயலானது! ❤️💛

பலாலி கிழக்கை பூர்வீக இடமாக கொண்ட கந்தசாமி-சின்னத்தங்கச்சி இணையரிற்கு இளைய மகளாக பிறந்தவள் தான் விஜயராணி. குடும்பத்திலே அவளுக்கு 3சகோதரர்களும் 1சகோதரியுமாக, அவளது குடும்பம் பலாலியிலே மிகவும் செளிப்புடன் வாழ்க்கையை வாழ்ந்துவந்தனர்.

விஜயராணி தனது ஆரம்பக்கல்வியை பலாலி வடக்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையிலே கற்றாள்,பின்னர் 1990.ஆனி.15 > பலாலி இடப்பெயர்வு காரணமாக தனது கல்வியை கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயத்திலும்

(தற்போது மத்திய கல்லூரியாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது) பின்னர் அச்சுவேலி- பத்தைமேனியில் வசித்த காலத்தில்- இடைநிலைக்கல்வியை அச்சுவேலி புனித தெரேசாள் மகளீர் கல்லூரியிலுமாக கற்றிருந்தாள். சிறுவயதிலிருந்தே மிகவும் துடிப்பானவளாக, பயமறியாதவளாக தன்னை வளர்த்துக்கொண்டவள், குறிப்பாக அன்றைய கால கட்டத்தில் வீதியால் செல்லும் சிங்களப் படைகளுடன் வாய்ச்சண்டை போடுவாள். எங்கட மண்ணில உவங்களுக்கு இங்க என்ன வேலை என்று அவள் அடிக்கடி தனக்குள் முனுமுனுத்துக்கொள்வாள்.

2002 காலப்பகுதியிலே தாயின் இழப்பு அவளையும் அவளது குடும்பத்தையும் மிகவும் பாதித்திருந்தது. அந்த இழப்பிலிருந்து மீள்வதற்கு விஜயராணி மிகவும் கஷ்டப்பட்டாள், ஏனெனில் அச்சுவேலி வைத்தியசாலையில் அவளது மடியிலே தாயின் உயிர்பிரிந்தது அவளை மிகவும் வாட்டியிருந்தது!

2001/2002 போர்நிறுத்த ஒப்பந்தத்தின் நிமிர்த்தம் > விடுதலை பு*லிகளின் அரசியல் பிரிவினர் யாழ்குடாநாட்டுக்கு வருகை தந்திருந்த காலம் அச்சுவேலியிலே ஆண்,பெண் அரசியல் பிரிவு போராளிகள் தமது பணிகளை பக்கத்து பக்கத்து வீடுகளிலிருந்து மேற்கொண்டனர். பெண் போராளிகளுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட விஜயராணி அவர்களுடன் மிகவும் பாசத்தோடு பழகலானாள், பின் அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து உணவு உபசரிப்பு வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தாள்.

தானும் அவர்களை போன்று தேசத்துக்கான தனது கடமையை செய்யவென எண்ணி 2003ம் ஆண்டின் பிற்பகுதியிலே பெண்போராளிகளின் உதவியுடன் வன்னிநோக்கி தனது தேசத்துக்கான பயணத்தை ஆரம்பித்தாள். 3மாத அடிப்படை பயிற்சியை பெற்றுக்கொண்டவள் பயிற்சிப்பாசறையிலே மிகவும் திறம்பட செயற்பட்டு தன்னை புடம்போட்டுக்கொண்டாள்.

இயக்கம் அவளுக்கு இட்ட பெயர் 'கணேசினி'.

கணேசினியை 2ம் லெப். மாலதி படையணி உள்வாங்கிக்கொணடது. அன்றிலிருந்து அவள் சக தோழிகளுடன் மிகவும் பாசத்துக்குரியவளானாள். சிறிது காலத்தின் பின்னர் லெப்.கேணல் குட்டிசிறீ மோட்டார் படையணி கணேசினியை உள்வாங்கியது!

கணேசினி வன்னிக்கு சென்று இயக்கத்திலே சேர்ந்திருந்தமையால் அவளது தந்தையும் மூத்த சகோதரனும் மற்றும் சகோதரியும் வன்னிக்கு இடம்பெயர்ந்தனர். இளைய சகோதரன் இவளுக்கு பின்னர் தன்னையும் போராட்டத்தோடு இணைத்துக்கொண்டார்.

வன்னியிலே தனது சகோதரியின் திருமண நிகழ்வுக்கு வருகை தந்தவள், காதிலே தோடும் போடச் சம்மதிக்கவில்லை, கழுத்திலே ஓர் சிறிய செயினை எல்லோரது வற்புறுத்தலால் போட்டுக்கொண்டாள். அவளவு தூரம் இயக்க மரபை மிகவும் இறுக்கமாக்கிக்கொண்டாள்.

2006.ஆகஸ்ட்.11 போர் மீள வடபோர் முனையிலே ஆரம்பமானது.

முகமாலை, மன்னார் என களமுனைகள் மாறி மாறி மிகவும் உறுதியுடன் போரிட்டாள். வாகனங்கள் ஓடவும் திறமைாக கற்றுத்தேர்ந்திருந்தாள். படிப்படியாக தனது திறமையினூடாக தன்னை வளர்த்துக்கொண்டவள் பின்னர் லெப்.கேணல் குட்டிசிறீ மோட்டார் படையணியின் ஓர் பகுதி தாக்குதலணி பொறுப்பாளராக உயரும் அளவுக்கு தன்னை மாற்றியிருந்தாள்.

இறுதிக்கட்ட போர் உக்கிரமடைந்து மன்னார் களமுனை வழியாக சிங்கள இராணுவம் படிப்படியாக முன்னேறி கிளிநொச்சி வழியாக பரந்தனை ஊடறுத்து முல்லைத்தீவு நோக்கிய போர்ச்சூழல் உச்சம் பெற்ற காலப்பகுதியில் 2009 தை/ மாசி மாதமளவில் அவளது தந்தையும் மூத்த சகோதரனும் அவளை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தபோது அவர்கள் கேட்டுக்கொண்டது நீ என்ன செய்யப்போகிறாய் என்று? அவள் கூறிய பதில்- நீங்கள் பாதுகாப்பாக சனங்களோடு போங்கோ, என்னை எதிர்பார்க்க வேண்டாம், இயக்கம் என்ன முடிவு எடுக்குதோ அதே முடிவு தான் தானும் என கூறிய பின் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டாள். அந்த சந்திப்பு தான் அவர்கள் அவளை இறுதியாக கண்டது.

பின்னர் 10.03.2009 அன்று நடந்த சமரிலே கணேசினி தன்னை ஈழ மண்ணின் விடுதலைக்காக பல்லாயிரம் மாவீரர்கள் வரிசையிலே தன்னையும் இணைத்துக்கொண்டாள்! 15ம் திகதியளவிலே தான் வீரச்சாவு செய்தி கிடைத்ததாக சக பெண்போராளிகள் வாயிலாக பின்னர் அறியக்கிடைத்தது.

மாவீரர் கண்ட கனவு நிச்சயம் ஓர் மெய்ப்படும் என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கை!

  • குறிப்பு: கணேசினி அவர்களது வீரச்சாவுக்கு பின்னர் இயக்கம் அவளுக்கு வழங்கிய தரநிலை பற்றி யாரேனும் அறிந்திருப்பின் இங்கே குறிப்பிடவும்.

நன்றி.

27.11.2025

dwd.jpg

வீரவேங்கை சந்திரபாபு

6 days 16 hours ago

எனது மாமாவின் மகன் , மைத்துனன் , என்னைவிட இரண்டு வயது தான் அதிகம் ,ஆறடி உயரம் , சிறுவயதிலிருந்தே மிகுந்த ஆளுமையானவர் , விளையாட்டு கிரிக்கெட் முதல் கொண்டு கல்வி வரை மட்டுமல்லாது தமையனோடும் எங்களோடு போடும் குத்து சணடை தொடக்கம் விளையாட்டு வரை எப்போதும் அவர் இருந்தால் அது எங்களுக்குச் சிறிய திருவிழாதான்.

என் மாமா மாவட்ட நீதிபதியாக கடமையாற்றியவர் முதலில் மட்டக்களப்பு , சாவகச்சேரி பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றியவர் . அதனால் ராகவனும் மட்டக்களப்பு , முதல் சாவகச்சேரி இந்து கல்லூரியிலும் , யாழ் இந்து கல்லூரியிலும் கல்வி பயின்றவர் .

சிறுவனாக இருக்கும் போதே மிக உயர்ந்த சிந்தனை கொண்டு இருந்தவர் , ஒரு விமான ஓட்டியாக படிப்பேன் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். யாழப்பாணத்தில் மிக அரிதானவர்கள் தான் டாக்டர் , என்ஜெனியரை தாண்டி பறக்கிற உயர்ந்த சிந்தனைகளை கொண்டவர்கள் .

யாழ் இந்து கல்லுரியில் 8 பாடங்களிலும் " D" எடுத்தவர்கள் இவன் மட்டும் முக்கியமானவனல்ல இவனது உற்ற நண்பர்களும் தான் , இன்னும் அவர்கள் இவனை இறுதி வழியனுப்ப வந்து அழுது கொண்டு இருந்தது இன்னும் மறக்கமுடியாது .

வல்வை வைத்தீஸ்வரன் சிவன் கோயில் தான் எங்களுக்கு குல தெய்வம் , ஸ்கூல் லீவு விட்டு ஊருக்கு வந்தால் கோயில் பந்தம் பிடிப்பது முதல் அந்த சுற்று வட்ட வீடுகள் எல்லாம் நாங்கள் கால் பதித்த இடம் தான் .

நாங்களும் வீட்டில் விக்கிரங்கள் வைத்திருக்கின்றோம் , எங்கட வீட்டுக்கு அவர்கள் வந்தால் என் முருகன் சாமிக்கு கொடி ஏற்றி 10 நாளில் தேர் , பூங்காவனம் தீர்த்தம் எல்லாம் வைப்போம் நான் தான் ஐயர் , அவர்கள் வீட்டுக்கு நாங்கள் போனால் பிள்ளையார் சாமிக்கு கொடி ஏற்றி திருவிழா நடத்தி 10ம் நாள் தீர்ததமாடுவோம் . அவர் தான் ஐயர் . உண்மையான கோயில விட இங்க பக்தியும் , ஒழுக்கமும் உண்மையாக இருக்கும் .

அவனோட கதையை நான் சுருக்கமாக சொல்லோணுமென்றால் , நானும் அவனும் கடைசியாக சந்தித்தது கோண்டாவிலில் 1990 களில் தமிழீழ விடுதலை புலிகள் மாணவர் அமைப்பு (SOLT ) பொறுப்பாளர்களுக்கான போது கூட்டம் நடைபெற்றது .

நான் வடமராட்ச்சியில் இருந்தும் , அவர் வலிகாமத்திலிருந்தும் சென்றிருந்தோம் , அது போர் முனைக்கு எங்களை தயார் படுத்துவதாக இருந்தாலும் , அவர்கள் இறுதி இலக்கு ஒன்றுதான் . டேய் " நாங்க சந்தித்ததை வீட்டில சொல்லாதே என்றான் " அதற்கு பிறகு அவன் கதைத்தது அப்பவும் இப்பவும் சரியாக விளங்கவேயில்லை . பின்னாளில் அதை சொல்லுவதற்கு தைரியமும் வரவில்லை .

அவர் ஒரு தனித்துவமான ஆளுமை.

அந்த வயதில், அந்த காலத்தில், அத்தகைய உயர்ந்த சிந்தனையும் தைரியமும் கொண்டவரை

நான் வேறு யாரிடமும் காணவில்லை.

இன்றும் — ஒருபோதாவது ராகவன் திரும்பி வருவானோ என

எங்கள் பிள்ளைகளிள் கூட தேடல் உண்டாகி விடுகிறது.

இது நடந்து கொண்டிருப்பது 1990 காலம் ..

இலங்கை சட்ட அரசாங்கத்தில் மிகவும் முக்கியமான , பொறுப்பான பதவிகளில் நீதித்துறை முக்கியமானது , யாழ் மாவட்ட நீதிபதிக்கு யப்பானிலிருந்து புதிய கார்களை இறக்குமதி செய்து அரசாங்கம் வழங்கியிருந்தது , அவரது 16 வயதில் கொழும்பிலிருந்து தானே ஒட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார் .

சில நாட்களிலேயே விடுதலை புலிகள் பாசறையில் சேர்ந்தார்.

மாமாவின் பதவி காரணமாக இந்த விஷயம் எங்களில் யாருடனும் முறையாக பகிரப்படவுமில்லை. .

கிட்டத்தட்ட ஆறு மாதங்களே.

ஒருநாள் சில போராளிகள் என் வீட்டின் வாசலில் மறைந்த வீரரின் உடலுடன் வந்தனர்.

"சந்திரபாபு வீடு இதுதானா?" என்று கேட்டபோது

நான் பதட்டத்தால் "இல்லை, இங்கே அப்படி ஒருவரில்லை" என்றேன்.

மனம் கேற்கவில்லை , மேலே சென்று உடலை பார்த்தேன்.

அது எங்கள் ராகவன் தான்.

கோட்டை சமரில் வீரமரணம் அடைந்திருந்தார்.

ஆம் கோட்டை சமரில் அவர் வீர்மரணமடைந்துவிட்டார். அடுத்த கணங்கள் எவ்வாறு போனது என்று விபரிக்கமுடியாது .

35 ஆண்டுகள் கடந்தாலும் இன்னும் அவன் விடுமுறைக்கு வந்து ஆழ்மனதில் சில வேளை விளையாடுவான் .

இன்னும் அந்த வீரன் அவரது குரல் இன்றும் என் உள்ளத்தில் ஒலிக்கிறது. திரும்பிப் போக முடியாத காலத்துக்கு எதிரே. குற்றஉணர்வுடன் வாழ்கின்றோம்

Navajeevan Anantharaj

மேஜர் கலையரசன் - துரோகத்தால் வீழ்த்தப் பட்டவன்

6 days 16 hours ago

விடுதலைப் பு*லிகள் ஒருதலைப் பட்சமாக போர் நிறுத்தம் செய்திருந்த காலப்பகுதியது என நினைக்கின்றேன்

எனது மாமா வேலை நிமித்தம் மன்னார் பெருநிலப் பரப்பில் ஒரு முக்கிய பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார்

விடுதலை பு*லிகளின் கட்டுப் பாட்டுப் பகுதியில் இருந்த எங்களது வீட்டிற்கு மாமா அவ்வப்போது வந்து போவார்..

தாய் மாமன் மாரை யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும் அப்படித்தான் நானும் என் குட்டி மாமா மீது அதீத நேசம்...

அன்று ஒரு நாள் மாலை மங்கும் நேரம் எங்கள் வீட்டில் மாமா தேனீர் அருந்திக் கொண்டிருந்தார். மாமாவோடு போராளிகள் அல்லாத இரண்டு அண்ணா மார்களும் இருந்தனர் அவர்களும் எமக்கு பரிட்சயமானவர்களே ... மாமா அவ்வப்போது வீட்டிற்கு வரும்போது இவர்களும் கூட வருவார்கள்..

அன்றுதான் நான் மாமாவை உயிருடன் பார்கப்போகும் இறுதி நாள் என்பதை அறியாமல் மாமாவுக்கு அருகில் இருந்து தேனீர் அருந்திக் கொண்டிருந்தேன். தன் தம்பிக்கு தான் கொடுக்கும் இறுதித் தேனீர் அதுவென அறியாமல் எனது அம்மா...

தம்பி கவனம் ஆ*மி ஒரே ஆக்களிட்ட உன்னத்தான் கேக்கிறானாம் போய் வாறது கவனம் என்றார் மாமாவிடம் இருந்து பதிலில்லை ஒரு கேலியான சிரிப்பு..

ஆ*மி என்னை என்ன செய்து விட முடியும் என்பது போல இருந்தது அந்த சிரிப்பு..

அம்மாவின் எச்சரிக்கைக்கான பதில் அருகில் இருந்த போ*ராளி அல்லாத அந்த அண்ணாவிடம் இருந்து வந்தது...

அக்கா நாங்கள் செத்தால் தான் கலையரசன் சாகுவான் நீங்கள் ஒண்ணும் யோசிக்காதையுங்கோ.....

படு பாதகர்கள் மாமாவையும் இப்படித்தான் நம்ப வைத்திருப்பார்கள் போல...

தேனீர் அருந்தி முடித்ததும் அவசர அவசரமாக புறப்பட்டுச்சென்றார்கள்.

சரியாக மூன்றாவது நாள் எமது காதோரம் வந்த செய்தி எம்மை அதிர்சியடைச் செய்தது ..

துயரத்தின் எல்லைக்கே சென்று வந்தேன்.

வாழ்க்கைப் பட்டான் கண்டல் பகுதியில் கலையரசன் வீர*ச் சாவாம்..

மாமா யாரை நம்பி பயணித்தாரோ அவர்களே அவரின் நடமாட்டம் பற்றி தகவல் வழங்கியதாக மாமாவின் போ*ராளி நண்பர்கள் மூலம் அறிந்து கொண்ட போது இன்னும் வலித்தது...

இப்படி எத்தனை ஆயிரம் துரோகங்கள்

எத்தனை ஆயிரம் சாவுகள்...

என் குட்டி மாமா மட்டுமல்ல எம் இனமே துரோகத்தால் தான் ........

என் மாமா கலையரன்

அண்ணா வல்லவன்

நண்பன் நிலவன்

நண்பன் யாழ்வேந்தன்

அறிவு அண்ணா

சுதா அண்ணா

ரகுராம் அண்ணா

நீலவண்ணன் அண்ணா

சோ அண்ணா

இவர்களோடு எம் இனத்தின் விடியலுக்காய் வித்தாகிப் போன ஆயிரமாயிரம் வேங்கைகளுக்கும் என் வீர வணக்கங்கள்.

Moris Fernando - Muththooran  (Muththooran)


கப்டன் அகத்தியன்

6 days 16 hours ago

இறுதி வரை உறுதியாக நின்றாய்.

பிரிகேடியர் தமிழ்செல்வன் அண்ணாவின் இறுதி வணக்க நிகழ்வு தான் உனக்கும் எனக்குமான இறுதி சந்திப்பு.

தமிழ்செல்வன் அண்ணாவின் விதை குழியருகில் செல்ல நீண்ட நேர காத்திருப்பு. அத்தனை நேரமும் அவருக்கும் உனக்கும் இடையிலான சம்பாசனைகளை எனக்குள் விதைத்துக்கொண்டு வந்தாய்.

விதைகுழியருகில் வந்துவிட்டோம். நீ முன்னால் நான் உன் பின்னால். கையில் ஏந்திய மண்ணினை வித்துடலின் மேல் மெதுவாக தூவினோம். கையை நெஞ்சில் வைத்து மரியாதை செய்தாய். விழிகள் அருவியாக கரைந்தன. பாதங்களை உறுதியோடு முன்னால் வைத்து நகர்ந்தோம்.

அப்போது

“ மச்சான் விரைவில எனக்கும் இப்பிடி மண் போடுவாய் என்று நினைக்கிறன். எதுக்கும் புலிகளின்குரலைக் கேளு ஈழநாதத்தை தினமும் பாரு“ என்று கூறினாய். அது உன்னைப் போன்ற விடுதலைப் போராளிகள் வாழ்வில் சாதாரணமான கதை. நண்பனே நீ எனக்கு கூறிய அந்த வார்த்தைகளை பொதுமகனான நானும் சாதாரணமாகவே கடந்து போனேன்.

ஆனால்,

அன்றொருநாள் உன் செய்தி வானேறி தொலைத்தொடர்பினூடாக வந்து புலிகளின்குரல் வானொலியினூடு எங்கள் செவிகளுக்கு வந்து சேர்ந்தது. பிரபா வீரச்சாவாம். அருந்தவத்தார்ர பெடியன் பிரபா வீரச்சாவாம்.

விழிகள் பனித்தன. உன் குரல் இன்னும் இன்னும் செவிகளுக்குள் ரீங்காரம் இசைத்தபடியே இருக்கிறதடா.

நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வல்லாதிக்க சக்திகளால் இடம்பெயரவைத்த பொல்லாத பொழுதுகளை கடக்க முடியாது தவித்த 1996 ஆம் ஆண்டின் சித்திரைத் திங்களின் ஒரு நாளில் ஏதியிலாக உன் ஊர் முற்றத்தில் வந்து இறங்கிய என்னை அரவணைத்தது உன்னைப் போன்ற உறவுகள் தான்.

யோகபுரம் தாய் எம்மை கல்விக்காக அரவணைத்த போது முதன்முதலாக உன்னைக் கண்டேன். நிரந்தரமாக கற்கும் மாணவன் நீ. நானோ இடம்பெயர்ந்து வந்தவன். அதனால் என்னை அருகில் இருக்க விடுவார்களா என்ற ஏக்கத்தோடு வந்தவனை கையை பிடித்து பக்கத்தில் இருத்திய அந்த பொழுதில் ஆரம்பித்தது நண்பா உனக்கும் எனக்குமான உறவு.

அன்றில் இருந்து 2007 கார்திகைத்திங்கள் 7 ஆம் நாள்வரை சந்தோசமாக தான் இருந்தோம்.

தேசத்துரோகிகள் செய்த காட்டிக்கொடுப்பெனும் கொடூரத்தினால் நீ உன்னை நீயே தற்கொடையாக்கிய செய்தி வந்த போது அழுவதை தவிர வேறென்ன இருக்கும் நண்பா…?

அருந்தவத்தார்ர பெடியா வீரவணக்கமடா..

விழியில் நீருடன் உன் கூட்டாளி இ.இ.கவிமகன்

லெப். கேணல் சிவநேசன்

6 days 16 hours ago

நண்பா உன்னுடைய கனவுகள் மிக நீண்டது…பயணத்தின் பாதையில் உன்னை தவற விட்டு விட்டோம்…. உன்னைப் பற்றி அதிகம் எழுத வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் இந்த முகநூல் அதற்கு உகந்ததல்ல…

அது ஒரு காலம்…ஸ்கந்தபுரம் தொடக்கம் பூநகரி கௌதாரி முனை வரை பயணமும் பாதையும் எங்களுடைய யாழ்ப்பாணத்து கடமைகளை கதைகளை சொல்லும்…கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் விமானத்தை விட நாங்கள் வேகமாக யாழ்ப்பாணத்துக்கு சென்ற நாட்கள் பல…

ஒருமுறை உனக்கும் பிரதீப் மாஸ்டருக்கும் சின்னதாக சண்டை.. எங்களுடைய முகாமுக்கு வந்து யாரிடமாவது பாதை இருக்கிறதா என்று நீ காத்திருந்த அந்த நினைவுகள் இன்றும் என் நினைவில்…உன்னுடைய தேசக்கடமை உன் உயிரை விட மேல் என்பது உன்னுடைய ஒவ்வொரு செயல்பாடுகளும் எங்களுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தது…

பூநகரி வாடி அடியில் இருந்த எங்களுடைய உணவுச் சாலை…விமான தாக்குதலுக்குள் அகப்பட்டுவிட்டது…அன்று அதிர்ஷ்டவசமாக நீ தப்பி விட்டாய்…காயமடைந்தவர்களை வைத்தியசாலை அனுப்பிவிட்டு நீ வந்து நீ கூறிய வார்த்தைகள்…என்னுடைய சாவு யாழ்ப்பாணத்தில் தான் அதுவரை எனக்கு சாவில்லை…உன்னுடைய துணிவு தான் உன்னை குறுகிய காலத்தில் உன்னை எல்லோர் மத்தியிலும் உயர்த்திப் பார்த்தது…

எங்களை எல்லோரும் படிக்காத பல்கலைக்கழக மாணவர்களாகத்தான் பார்த்தார்கள் ஆனால் எங்களுக்கும் படிப்புக்கும் சம்பந்தமில்லை…உன்னை பார்த்து பலர் கேட்பார்கள் பார்க்க மருத்துவத் துறை மாணவன் போல் இருக்கிறாய் என்று…நீ தலையை ஆட்டிக் கொண்டு சிரிக்கும் அந்த சிரிப்பு எப்பொழுதுமே மிக அழகானது…

இப்பொழுது பசுமையோடு ஓடிக் கொண்டிருக்கிறேன் நண்பா ஓய்வுகளை தொலைத்து…ஓய்வு கிடைக்கும் பொழுது உன்னுடைய தேசத்திற்கான கடமைகளையும் பயணத்தையும் வரலாறாக எழுதுவேன்…நேற்றைய தினம் நீ மண்ணை முத்தமிட்ட நாள் உன்னுடைய ஆன்மா இளைப்பாறட்டும் நண்பா அமைதியாக…பிரார்த்தித்துக் கொள்கிறேன் சக நண்பனாக…

விதைப்பது நமது கடமை…

தரன் ஸ்ரீ💐

வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம்

செல்வன் பஞ்சாட்சரம் குணேந்திரன் (எல்லாளன்) | வீரவணக்கம்

6 days 16 hours ago

“அந்தச் சிரிப்பும் கடைசி வார்த்தைகளும்...”

2006 ஆம் ஆண்டு மே மாதமளவில் அவனை கடைசியாக சந்தித்திருந்தேன். உடலாலும் மனதாலும் சோர்ந்திருந்தான்.

அதற்கு ஒரு மாதம் முன்பு வீதியால் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்திருந்தான். ஓட வழியின்றி இரண்டு மூன்று மதில்களால் ஏறி பாய்ந்தவனால், அதிக குருதிப்பெருக்கத்தால் ஒரு கட்டத்தில் இயலவில்லை. அருகில் தெரிந்த வீடொன்றின் மலசலகூடமொன்றில் சென்று படுத்துவிட்டான் - இல்லை மயங்கிவிட்டான். சிறிது நேரத்தில் அங்கு வந்த வீட்டின் அம்மா, இவனை அடையாளம் கண்டு கொண்டுள்ளார். உடனடியாக சறமொன்றினால் காயத்தை கட்டிவிட்டு தனக்கு தெரிந்த மருத்துவபீட மாணவன் ஒருவருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

உடனேயெ சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அவனுக்குரிய அவசர மருத்துவ உதவிகளை செய்துவிட்டு பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச்சென்று மேலதிக சிகிச்சை வழங்கினர். அதன்பின் அவனுக்கு பல்கலைகழக நூலகமும் சிற்றுண்டிச்சாலையுமே வீடாகிற்று.

நான் மீண்டும் சந்தித்த போது, அவனில் இருந்த பழைய உறுதியும் தீவிரமும் மங்கியிருந்தது. தன் இறுதிக்காலம் நெருங்கிவிட்டதென்றே எண்ணியிருப்பான் போல. ஆனால் எனக்கு அது கடைசி சந்திப்பென்று புரியவில்லை.

பழைய அதே புன்னகையுடன் 'இப்பவும் அந்தப்பிள்ளைய பார்க்கிறனியா? படிடா, நல்லா இருக்கனும்' என்றான். அவனது புகைப்படம் பார்க்கும்பொழுதெல்லாம் அந்தச்சிரிப்பும் கடைசிவசனங்களும் எனக்குள் வந்து தொலைக்கும்.

'நான் இறந்தபின் என்னோட பள்ளிக்கூடத்தில ஒரு போட்டோ கூட வைக்கமாட்டிங்க என்னடா?' இந்த ஒரு வார்த்தைக்கு பின் என்னால் அவனுடன் பேசமுடியவில்லை.

பல்கலைக்கழகத்தை விட்டு வெளியே வந்த பின்னும் அவன் அதே இடத்தில் இருந்தபடி வேலியால் பார்த்துக்கொண்டே இருந்தான்.

மாணவர் ஒன்றியத் தலைவராக — சுனாமி அனர்த்த மீட்பு உட்பட பல தளங்களில் தன் நேர்த்தியான தலைமைத்துவத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டியவன்.

நாம் சுனாமி பற்றிய செய்தியை அறிந்த வேளையில், அவன் ஏற்கனவே பல சடலங்களை மீட்டதுடன், அல்லல்பட்ட பலரை ஆலயங்களிலும் பொதுமண்டபங்களிலும் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான்.

அது ஒன்றே அவனது அர்ப்பணிப்பிற்கு சான்றாகும்.

17 வயதில், அந்த நேரத்தில் எமக்கு மோட்டார் சைக்கிள் — அதுவும் கிளட்ச் மொடல் — என்றால் தொட்டுப் பார்த்ததில்லை.

ஒரு நாள் வேலை அலுவலாகச் செல்லும் பொழுது, “மோட்டார் சைக்கிள் ஓடுவியா?” என்றான்.

“அய்யோ, தெரியாது,” என்றேன்.

சட்டென்று கரைக்கெடுத்தவன், “இந்த பிடி... ஓடு,” என்றான்.

“அடேய், ஸ்டார்ட் அடிக்கமாட்டன்டா! எங்கயாச்சும் மதிலுக்க விட்டிரப்போறன்,” என்றேன்.

“நீ நினைக்கிற மாதிரி இதெல்லாம் பெரிய விஷயமில்லடா... இந்தா,” என்று சொல்லிக் கொண்டு வெறும் ஐந்து நிமிடங்களில் கற்றுத்தந்து,

அன்றைய நாள் முழுதும் என்னையே ஓடவைத்தான்.

2008 ஆம் ஆண்டு தை 21 இல் நான் சந்தித்த அந்த இடத்திற்கு சற்று அருகில் தான் சுடப்பட்டு இறந்திருந்தான்.

கடந்த மூன்று நாட்களாக அவனது நினைவுகள் மீண்டும் வந்து உறுத்திக்கொண்டே இருக்கின்றன. ஆம் அவனின் அந்த இரத்தக்கறை படிந்த சறத்திற்கு வயது 19.

எல்லாளன் என்ற குணேந்திரன் - நயினாதீவிலிருந்து வைத்தியர் கனவுடன் வந்து தன் கனவினை அகலமாக்கிய மாறாப்புன்னகை

Ellalan.jpg

கப்டன் ஆதி & கப்டன் உத்தமன்

6 days 16 hours ago

01-11-2008 அன்று பகல் 2.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு செல்ல முற்பட்டபோது , கூட இருந்த ஒருவரால் காட்டி கொடுக்கப்பட்டு அரியாலை பகுதியில் இராணுவம் சுற்றிவலைத்தபோது நடைபெற்ற நேரடி தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்டார். இதே சம்பவத்தில் கப்டன் உத்தமன் எதிரியிடம் அகப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக குப்பி கடித்து வீரச்சாவை தழுவிக்கொண்டார்.

https://www.facebook.com/amal.raj.108

சிறு கதை - 190 / கார்த்திகை தீபம் – 27 நவம்பர் 2025

1 month ago

சிறு கதை - 190 / கார்த்திகை தீபம் – 27 நவம்பர் 2025

இன்று கார்த்திகை தீபம். ஆனால் இந்த நாள், தீபத்தின் ஒளி மட்டுமல்ல — மண்ணுக்குள் உறங்கும் நினைவுகளின் நெஞ்சைத் திறந்து வைக்கும் நாள் இது.

இரவு வானம் கருந்துகிலும் அணிந்து, சோகமும் நம்பிக்கையும் கலந்த நட்சத்திரங்களால் நிரம்பிக் கிடந்தது. மெல்ல வீசும் காற்றில், எரியும் விளக்குகளின் புகையோடு கலந்த தூப வாசனை — அது எந்த ஆலயத்திலிருந்தும் அல்ல … அது ஒரு வரலாற்றின் உயிர்வாசனை.

ஆதித்தன், கைப்பிடி அளவு எண்ணெய் விளக்கை தன் உள்ளங்கையில் தாங்கியவாறு, மெதுவாக அந்த நினைவுத் திடலுக்குள் நுழைந்தான்.

புல்லின் மேல் இன்னும் பனித்துளிகள். சின்னச் சின்ன மண் மேடுகளில் சிவப்பு – மஞ்சள் ரிப்பன் கட்டப்பட்ட குச்சிகள். ஒவ்வொரு தீபமும் ஒரு உயிர். ஒவ்வொரு சுடரும் ஒரு கதை.

அங்கே அவள் நின்றிருந்தாள்.

சாம்பிராணி நிறச் சேலையில், கரும்பச்சை மேல்சட்டையுடன் —
முகத்தில் சோகமில்லை, ஆனால் ஒரு பெரும் அமைதி.

அந்த அமைதி தான் அவனைத் திடீரென தடுத்து நிறுத்தியது.

“நீங்க…” என்றவாறு அவள் பார்வை அவன்மேல் தங்கியது.

“நான் ஆதித்தன்…” என்றான் மெல்ல.
“நான் இங்கே வணங்க வரவில்லை … தேட வந்தவன்.”

அவள் மெதுவாக ஒரு விளக்கைத் தன் முன்னால் வைத்து ஏற்றினாள்.

“தேடுபவர் எல்லாம் இழந்தவர்கள்தான்,” என்றாள்.
“சிலர் மனிதரைத் தேடுவார்கள்… சிலர் தங்களைத் தாங்களே தேடிவிடுவார்கள்…”

ஒளி அவள் முகத்தில் விழ, அவள் ஒரு நிழலும் ஆனாள்… ஒரு தீபமும் ஆனாள்.

“எவர் நினைவுக்கு?” என்று அவன் கேட்டான்.

“எனக்குத் தெரியாத ஒருவருக்கு…
ஆனால் அவர் இல்லையென்றால், நான் இன்று இங்கே இருக்க மாட்டேன்,” என்றாள்.

ஒரு கணம் —
வானம் இன்னும் கருமையானது போல தோன்றியது.
பிறகே — அருகிலிருந்த நூறு தீபங்களும் ஒன்றாக மினுங்கின.

அந்த ஒளி —

அவனுக்குள் புதைந்திருந்த தந்தையின் முகத்தை எழுப்பியது.
அண்ணனின் குரலினை ஒலிக்க வைத்தது.
அம்மாவின் வாசத்தை மீட்டுக் கொண்டுவந்தது.

“நீங்க பயப்படவில்லையா ?” என்றான்.

“இல்லை,” என்றாள்.
“தீபம் எரிய பயந்தா, இருளே ராஜா ஆகிவிடும்…”

அவன் சிரித்தான்.
மூன்று வருடங்களாகச் சிரிக்க மறந்த உதடுகள் —
இன்று கார்த்திகையின் காரணமாக சிரித்தன.

அவள் பெயர் தீபிகா.

ஒரே எழுத்தை மாற்றினால் போதும் —
அவளே ஒரு தீபம்.

அவள் தன் கைகளால் இன்னொரு விளக்கை ஏற்றி அவனிடம் கொடுத்தாள்.

“இது உங்களுக்கல்ல,” என்றாள்,
“உங்களுக்குள் இன்னும் வாழ்கிறவர்களுக்கு…”

அவன் கண்களில் நீர் தேங்கியது.

அதே நீரில்தான் —
ஒரு காதல் முளைத்தது.

அது உடனடியான காதல் இல்லை.
அது தோன்றி வளர்ந்த தீபக்குஞ்சு.

மௌனத்தில் ஏற்பட்ட உறவு.
கண் மொழியில் உருவான
இரு உள்ளங்களும் இணைந்த நிலை
வலியில் மலர்ந்த நம்பிக்கை.

தூரத்தில் ஒரு பழைய பாடல் ஒலித்தது :

"விளக்கேற்றும் இரவினிலே
விழிகளில் விழுந்த கனவினிலே
அகம் திறக்கும் அன்பினிலே
உலகம் மறந்த தருணமிதே..."

அவர்கள் இருவரும் ஒன்றாக நின்றிருந்தனர்.
மற்ற எந்தச் சொற்களும் தேவையில்லை.

இந்த கார்த்திகை தீபம் —

ஆதித்தனுக்கு, அகதி என்ற அடையாளத்தை அழித்தது.
தீபிகாவுக்கு, புதுவாழ்வு என்ற அர்த்தத்தைக் கொடுத்தது.

நூறு தீபங்கள் முன்
இரு இதயங்கள்
ஒரே சுடரில்
ஒன்றாயின.

2025 நவம்பர் 27
அன்று எரிந்த தீபம்…

இன்னும்
அவர்களின் உள்ளத்தில்
அணையாமல்
எரிகிறது.

விளக்கின் சுடர் காற்றில் ஆடியது.

ஆனால்
அது அணையவில்லை.

அந்த இரவின் அமைதி — சொற்கள் இல்லாத சங்கீதம்.
நூற்றுக்கணக்கான உயிர்களின் மௌன ஒலி காற்றில் நின்று கொண்டிருந்தது.

ஆதித்தனும் தீபிகாவும் ஒன்றாக நிற்பதாலோ,
அல்லது அவர்களைச் சுற்றி திரண்ட நினைவுகளாலோ,
இந்த மண் ஒரு கணம் உயிர்பெற்றது போலவே இருந்தது.

“நீங்க எங்கிருந்திங்க?” என்று தீபிகா திரும்பவும் கேட்டாள்.

“பல இடங்களில்…” என்றான் அவன்.
“ஆனா எந்த இடத்திலும் இல்லை.”

அவளுக்குப் புரிந்தது.
இது ஒரு அகதியின் பதில்.
நாட்டை இழந்த ஒரு ஆணின் வாக்கியம்.

அவள் சொன்னாள்:

“நீங்க இங்கே இருக்கிங்கன்னு மட்டும் தான் இப்போ முக்கியம்.”

அந்த வார்த்தைகள் காற்றை அல்ல, அவன் உள்ளத்தைக் குத்தியன.
முதன்முறையாக — அவன் “உள்ளே” உணர்ந்தான்.

அவர்கள் இருவரும் மெதுவாக நடக்கத் தொடங்கினர்.
தீபங்கள் இடையே அமைந்த அந்த குறுகிய பாதை — இரண்டு உலகங்களையும் இணைக்கும் ஒரு பாலமாக இருந்தது.

ஒவ்வொரு விளக்கும் கடந்து செல்லும் போது தீபிகா ஒரு பெயரைச் சொன்னாள்.

ஒரு சகோதரன்…
ஒரு காதலன்…
ஒரு சிறுவன்…
ஒரு தாய்…

ஆதித்தனுக்கு தெரியாத முகங்கள்.
ஆனால் அவன் உணர்ந்து கொண்டிருந்த வலி.

“நீங்க இங்கே ஒவ்வொருவருக்கும் விளக்கு ஏற்றுறீங்களா?” என்றான்.

“இல்லை…”
“நான் என் எதிர்காலத்துக்காக ஏற்றுறேன்,” என்றாள்.

அவன் திடீரென நின்றான்.

“எதிர்காலம்?”

“ஆமா…
இந்த மாதிரி ஒரு நாள்ல
என் குழந்தை
விளக்கு ஏத்த வேண்டாம்னு எதிர்காலம்.”

அந்த ஒரு வாக்கியம்
அவனுக்குள் ஒரு நாடு உருவாக்கியது.

அவன் கண்களில் ஒரே நேரத்தில் இருளும்,
ஒரே நேரத்தில் ஒளியும் பளிச்சிட்டன.

முதல் முறையாக,
அந்த மண்ணை அவன் மன்னித்தான்.
அந்த வானத்தை அவன் ஏற்றுக் கொண்டான்.

அவர்கள் அருகே ஒரு சின்ன பையன் வந்து நின்றான்.
அவன் கைவிரலில் அழிக்காத மெழுகு.

“அண்ணா… உங்க விளக்கு அணையுது” என்றான்.

ஆதித்தன் சிரித்தான்.

“அது வெளிச்சம் முடிவதால இல்லை,
காற்று பயப்படுத்துறதால தான்.”

அருகே நின்ற தீபிகா ஒரு குச்சியை எடுத்து அவன் விளக்கை மீண்டும் ஏற்றினாள்.

அந்தச் சுடர் —
இருவர் உள்ளங்களையும் ஒன்றாக எரிய வைத்தது.

அது விளக்கின் சுடர் அல்ல.

அது நம்பிக்கையின் நெருப்பு.

அன்றிலிருந்து…

அவர்கள் தினமும் சந்திக்கவில்லை.

ஆனால்,
வாரம் ஒருமுறை,
அதே நினைவுத் திடலில்,
ஒரே நேரத்தில்,
விளக்குடன் வந்தனர்.

ஒன்றும் பேசாது,
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பார்கள்.

பேசத் தொடங்கிய நாள்,
மழை பெய்த நாள்.

மண்ணின் ஈரம் மணந்த இரவு.

“நீங்க போர்ல யாரையாவது இழந்திருக்கீங்களா?” என்று அவள் கேட்டாள்.

அவன் தூரத்தை பார்த்தான்.

“இழக்காம இருக்கிறவங்க யாரு தீபிகா?”
“நான் என்னையே இழந்தேன்.”

அவள் மெல்ல அவன் கைமீது தன் கையை வைத்தாள்.

“அப்படின்னா, இப்ப நான் உங்க கண்ணாடி…”
“உங்களையே திரும்ப காட்டுறவன் மாதிரி…”

அவன் பேசவில்லை.

விசும்புதல் மட்டுமே பதிலாய் இருந்தது.

அந்த நாள்தான்,
கார்த்திகாவின் துணி நிறமான
சிவப்பும், மஞ்சளும்
அவனுக்குப் ‘கொடி’யானது.

அந்த இரவுதான்,
ஒரு கன்னத்தின் மீது
முதல் முத்தம் விழுந்தது.

அது ஆசையல்ல.

அது —
மீட்பு.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[[ஒரு வருடம் கழிந்தது

27 நவம்பர் 2026.

அதே இடம்.

ஆனால் இப்போது —
இரண்டு அல்ல,
மூன்று விளக்குகள்.

நடு விளக்கு —
புதிய உயிரின் சுடர்.

தீபிகா மெதுவாக கிசுகிசுத்தாள்:

“இது நம்ம நினைவுகளின் குழந்தை…”

ஆதித்தன் அந்த தீபத்தை பார்த்தவண்ணம் சொன்னான்:

“இது இனி மரணத்துக்கான நாள் இல்லை…”
“இது பிறப்பு நாளாகும்…”

அந்த வானத்தில்
ஒரு நட்சத்திரம் கூடுதலாகத் தோன்றியது.

அது மாவீரன் அல்ல.
அது —
வாழும் வீரன்]]

துளி/DROP: 1920 [சிறு கதை - 190 / கார்த்திகை தீபம் – 27 நவம்பர் 2025]

https://www.facebook.com/groups/978753388866632/posts/32568321442816415/?

"🕯️ நவம்பர் 27 தீபத் திருநாள்"

1 month ago

"🕯️ நவம்பர் 27 தீபத் திருநாள்"

“🕯️ நாம் ஏன் தீபம் ஏற்றுகிறோம்?“

ஒவ்வொரு நவம்பர் 27 ஆம் தேதியும்
தமிழ் உலகம் நினைவுகூருகிறது
போரை அல்ல, அரசியலை அல்ல —
மக்களை, உயிர்களை, கனவுகளை!

சம உரிமைகளுக்கான .....
கண்ணியத்திற்கான .....
தாயகத்திற்கான .....
குழந்தைகள் பயமின்றி வாழ்வதற்கான ....
நவம்பர் 27 அழைப்பிற்கு செவிகொடுத்தது
வெறுப்பின் தீயால் அல்ல
நம்பிக்கையின் ஒளியால் —
நாம் விளக்கை ஏற்றுகிறோம் —
உலகம் தங்கள் ஒளியைத்
தாங்கிக்கொள்ள மறுத்துவிட்டதால்!

நீதி அவர்களைப் பேச மறுத்துவிட்டதால் -
திரும்பி வராத மக்களின் பெயர்களைக் கிசுகிசுக்கிறோம்!

நாம் துக்கப்படுகிறோம் —
ஏனென்றால் நாம் மனிதர்கள்
மேலும் அவர்களும் மனிதர்கள்!

நாளையத் தலைமுறைக்கென்று
கண்ணீரிலே விதைத்த
மறக்க முடியாத கனவொன்று
எம் இதயத்தில் எழுகிறது!

அந்தக் கனவே —
நவம்பர் 27 தீபம்,
அணையாத நினைவு!

========================

“வன்னியின் குரல்கள்”

மாங்குளம் முதல் ஒட்டுசுட்டான் வரை
குழந்தைகள் வயல்களில் மகிழ்ந்தனர்
காற்றில் பறக்கும் தென்னோலை போல
கிளிநொச்சியில் கனவுகள் பின்னின!

பனை மரங்களின் கீழ் குடும்பங்கள் கூடி
புதுக்குடியிருப்பில் உண்டு பேசி பகிர்ந்தனர்
ஆனால் போர் ஒரு அழிப்பேரலையாக வந்தது
எல்லாவற்றையும் அடித்துச் சென்றது!

சுதந்திரபுரம் குண்டுகளால் நடுங்கியது
மந்துவில் மதிய வேளையும் இருட்டானது
வலையர்மடத்தில் கூடாரங்கள் நிரம்பி வழிந்தன
வட்டுவாகலில் உலகம் மறுபக்கம் திரும்பியது!

இறுதியாக —

முள்ளிவாய்க்கால் கைவிடப்பட்ட மக்களின்
இறுதி மூச்சானது!

இன்று நவம்பர் 27
வன்னியின் ஒவ்வொரு கிராமத்திற்கும்
ஒவ்வொரு நதிக்கும்
ஒவ்வொரு வயலுக்கும்
ஒவ்வொரு வீட்டிற்கும்
ஒரு தீபம் ஏற்றுகிறோம்!

ஏனென்றால்,

அவர்களின் மண் இரத்தம் சிந்தினாலும்
உண்மை இன்னும் நிலைத்திருக்கிறது —
உடைக்கப்படாமல், தோற்கடிக்கப்படாமல்.

======================================

“முள்ளிவாய்க்கால் மறவாத நினைவு”

உலகம் கண்களை மூடிய போது
முள்ளிவாய்க்கால் அமைதியாக அலறியது!
தாய்மாரின் வெற்றுக் கரங்களுக்கும்
தந்தையர் தோண்டும் கல்லறைகளுக்கும்
நிமிர்ந்து நின்ற பனை சாட்சியானது!

மே மாதம் 2009 இல்
உலகம் காணாத பெரும் துயரம்
சில நாட்களில் அரங்கேறியது!
இல்லாமல் போனவர்களின் பிரதிபலிப்பு
ஏரியில் தெளிவாய் தெரியுது
வானமும் சாட்சி சொல்லுது!

பென்சிளை பிடிக்கும் குழந்தைகள்
குண்டின் நெருப்பிற்கு மூச்சைப் பிடித்தன
அவர்களின் குற்றம் தமிழராகப் பிறந்ததே!

புகையில் மறைந்தன கிராமங்கள்
குடும்ப வரலாறும் சேர்ந்து எரிந்தன!
மனிதகுலம் அழித்ததை
பிரபஞ்சம் வைத்திருக்கும் என்று -
மக்கள் தங்கள் பெயர்களை
காற்றிடம், விண்மீன்களிடம், கிசுகிசுத்தனர்!

வன்னியின் இறுதி அலறல்கள்
ஒலியின் அலையில் கரைந்தபோது -
புதிய மௌனம் எழுந்தது!
முழு மக்களும் கத்திப் புரண்டு
கண்ணீருக்கு அப்பால் அழுதபோது
அந்த மௌனம் உருவாக்கியது!

=====================================

“🕯️ எமது வாக்குறுதி“

உங்கள் நினைவு மறையாது
உங்கள் கதைகள் கடலுடன் கரையாது
உங்கள் முகங்கள் மங்காது!

இழந்த ஒவ்வொரு குழந்தைக்கும்
ஒரு தீபம் எழும்பும்
ஒவ்வொரு கனவு முடியும்போதும்
ஒரு பாடல் தொடங்கும்
ஒவ்வொரு குரல் மௌனிக்கும்போதும்
ஒரு புதிய தலைமுறை பேசும்!

இதனால்தான் நவம்பர் 27 வாழ்கிறது
போரின் நினைவாக அல்ல —
மீண்டும் ஒருபோதும் அனுமதிக்கப்படாது
மீண்டும் எப்போதும் அது மறக்கப்படாது
மீண்டும் எப்போதும் அந்த உண்மை அழிக்கப்படாது
என்ற ஒரு உறுதிமொழியாக!

====================================

“உலகம் பதிலளிக்க வேண்டிய நாள் இது ”

குற்றத்தை உலகம் பெயரிட
சங்கிலிகளை உடைத்து சத்தியம் மலர
பொய்களின் நிழலில் இருந்து
நீதி வெளியே வர -
முள்ளிவாய்க்கால் அமைதியாக இல்லை
அது பதிலுக்காக காத்திருக்கிறது!

உலகம் கண்களை மூடினாலும்
வன்னிமண் எலும்புகளை பாதுகாக்கிறது
யாரும் சேகரிக்கா விட்டாலும்
கடல் உடல்களை வைத்திருக்கிறது
ஐ.நா. மண்டபங்கள் செவியை மூடினாலும்
காற்று அழுகைகளைச் சுமந்து செல்கிறது!

நீதி ஒரு மெதுவான நதி என்றாலும்
ஆறுகள் தங்கள் பாதையை மறப்பதில்லை!

ஒரு நாள், முள்ளிவாய்க்கால்
உலக நீதிமன்றத்தில் பேசப்படும்
ஒரு நாள், மணல் பிளந்து
உண்மை புயலாக எழும்
ஒரு நாள், உலகம் வாய்திறந்து
மௌனத்திற்கு பதிலளிக்கும்!

அந்த நாள் வரும்போது
நாம் ஏற்றி வைக்கும் விளக்குகள்
நினைவால் மட்டுமல்ல
வெற்றியாலும் ஒளிரும்!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"🕯️ The Flame of November 27"
------------------------------------------

“🕯️ Why We Light the Lamp?“

Every November 27, the Tamil world remembers
Not war, not politics —
But the people. The lives. The dreams.

The ones who left home in school uniforms
And never returned.
The ones who answered the call
Not out of hatred,
But out of hope —
Hope for equal rights,
Hope for dignity,
Hope for a homeland
Where children could grow without fear.

We light the lamp
Because the world refused to hold their light.
We whisper their names
Because justice refused to speak them.
We mourn
Because we are human —
And because they were too.

========================

“Voices of the Vanni”

From Mankulam to Oddusuddan,
the Vanni once bloomed
with fields of paddy
and laughter of children.

In Kilinochchi,
dreams were woven
like coconut leaves in the wind.

In Puthukkudiyiruppu,
families gathered under palm trees,
sharing meals, stories, futures.

But the war came like a wave—
sweeping everything.

In Suthanthirapuram,
the earth trembled with shells.
In Manthuvil,
the sky turned dark at noon.
In Valaiyarmadam,
tents overflowed with the wounded.
In Vattuvaagal,
the world turned its face away.

And at last—
Mullivaikkal,
the final breath of a people
cornered by fate
and abandoned by humanity.

Today, we light a lamp
for every village of the Vanni,
every river, every field, every home
scarred by the war.

For even if their soil still bleeds,
their truth still stands—
unbroken, undefeated.

================================

“Mullivaikkal and the Unbroken Memory“

When the world turned its eyes away,
The shores of Mullivaikkal learned to scream in silence.
Palm trees stood as witness-towers,
Watching mothers run with empty arms,
And fathers dig graves with trembling hands.

The lagoon held the reflection
Of a thousand fleeing shadows,
But the sky held the truth —
No place on earth
Has ever swallowed so much sorrow
In so few days.

Children who should have held pencils
Held their breath instead,
While shells carved fire
Into the crowded sands.
Their only crime:
Being born Tamil.

Villages disappeared in smoke,
Pages of family history burned,
Yet the people whispered their names
To the wind, to the stars,
Hoping the universe might hold
What humanity destroyed.

And when the final screams dissolved
Into the sound of waves,
A new silence rose —
The silence that forms
When an entire people
Has cried beyond tears.

=============================

“🕯️ The Promise We Carry“

We will not forget.
We will not allow the sea
To swallow their stories.
We will not allow time
To blur their faces.

For every child lost,
A lamp will rise.
For every dream ended,
A song will begin.
For every voice silenced,
A new generation will speak.

This is why November 27 lives in us.
Not as a memory of war —
But as a pledge:
Never again.
Never forgotten.
Never erased.

=================================

“The Day the World Must Answer”

Mullivaikkal is not quiet—
it is waiting.

Waiting for the world
to name the crime.
Waiting for truth
to break its chains.
Waiting for justice
to step out of the shadows.

The earth still holds the bones
the world refused to see.
The sea still keeps the bodies
no one came to collect.
The wind still carries the cries
that never reached the UN halls.

But justice is a slow river—
and rivers do not forget their path.

One day,
Mullivaikkal will be spoken
in the courtrooms of the world.
One day,
the truth buried in sand
will rise like a storm.
One day,
the world will answer
for the silence it kept.

And when that day comes,
the lamps we light
will glow not only with memory—
but with victory.

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

துளி/DROP: 1919 ["🕯️ நவம்பர் 27 தீபத் திருநாள்"

https://www.facebook.com/groups/978753388866632/posts/32568135796168313/?

🕯️ ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு தீபம் / “A Lamp for Every Soul”

1 month 1 week ago

🕯️ ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு தீபம் / “A Lamp for Every Soul”


ஓ… முள்ளிவாய்க்கால் ஆன்மாக்களே
காற்றில் அலையும் ஜீவன்களே
அலைகளுடன் நகரும் மென்மையானவர்களே
உங்களின் முன் தலை குனிந்து வணங்குகிறோம்!

உங்கள் துன்பம் மறக்கமுடியாதது
உங்கள் பெயர்கள் மறையமுடியாதது
உங்கள் கனவுகள் எங்களால் வாழட்டும்!

குழந்தைகளைப் பாதுகாத்த தாய்மார்களுக்கும்
கதிரவனைக் காணாத குழந்தைகளுக்கும்
நம்பிக்கையை மட்டுமே சுமந்த இளைஞர்களுக்கும்
நாங்கள் இந்த தீபத்தை ஏற்றுகிறோம்!

உங்களை கைவிட்ட உலகிற்கு
இந்த தீபம் வழிநடத்தட்டும்!
நாங்கள் வழங்க முடியாத பாதுகாப்பை
அமைதி சூழ்ந்து கொடுக்கட்டும்!

முள்ளிவாய்க்காலின் ஆன்மாக்களே
நாங்கள் உங்களைப் போற்றுகிறோம்
உங்களுக்காகப் பேசுகிறோம்!

ஒவ்வொரு தீபத்திலும்
ஒவ்வொரு கண்ணீரிலும்
ஒவ்வொரு இதயத் துடிப்பிலும்
உங்களை நினைவில் கொள்கிறோம்!

🕯️ உங்கள் ஒளி நிலைத்திருக்கட்டும்
🕯️ உங்கள் உண்மை உயரட்டும்
🕯️ உங்கள் நினைவு என்றென்றும் ஒளிரட்டும்!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


“A Lamp for Every Soul”

O spirits of Mullivaikkal,
restless in the wind,
gentle in the waves
we bow our heads before you.

May your suffering
never be forgotten.
May your names
never fade from memory.
May your dreams
live through us.

To the mothers who shielded their children,
to the babies who never saw the sunrise,
to the youth who carried only hope
we light this lamp.

May this flame guide you
where the world failed you.
May peace hold you
in the embrace we could not give.

O souls of Mullivaikkal
we honour you.
We speak for you.
We remember you
in every lamp,
every tear,
every heartbeat.

🕯️ Let your light endure.

🕯️ Let your truth rise.

🕯️ Let your memory shine forever.

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

துளி/DROP: 1910 [🕯️ ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு தீபம் / “A Lamp for Every Soul”]
https://www.facebook.com/groups/978753388866632/posts/32502659262715967/?

மாமனிதர் நடராஜா ரவிராஜ் நினைவு தினம்.

1 month 3 weeks ago

Maamanithar-Raviraaj-600x849-1.jpg

raviraj.jpg

ஈழத்தமிழருக்காக தனது இறுதி மூச்சுவரை அல்லும் பகலும் பாடுபட்ட ஒரு இளம் அரசியல்வாதியை இழந்து இன்றோடு 19 ஆண்டுகள் கடந்தது.

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி மாமனிதர் நடராஜா ரவிராஜ்.

Babu Babugi

Checked
Fri, 01/02/2026 - 10:28
மாவீரர் நினைவு Latest Topics
Subscribe to மாவீரர் நினைவு feed