<span style='font-size:30pt;line-height:100%'>எனக்கு மதம் பிடிக்கவில்லை. </span>
தருமி என்பவர் எழுதிய வலைப்பதிவில் இது சம்பந்தமாக கனக்க எழுதியுள்ளார்,எந்தவித கண்ணாடிகளும் இன்றி ஆளமாக சிந்திப்பவர்கள் வாசிக்கலாம், நல்ல பதிவு.ஒரு சில வரிகள் கீழே,
7.) நம் உலகம் சூரியக் குடும்பத்தில் ஒரு சிறிய பகுதி; இந்தச் சூரிய குடும்பமோ 'பால் வீதி'யின் மிக மிகச் சிறிய பகுதி; இந்த பால் வீதியோ ஒரே ஒரு காலக்ஸி; இதுபோல் எண்ணிக்கையிலடங்கா காலக்ஸிகள். அப்படியென்றால், பரந்துபட்ட இந்த பிரபஞ்சத்தில் நம் உலகம் எவ்வளவு இத்தனூண்டு (insignificant)! ஆனால், பாருங்கள் எல்லா சமயங்களுமே anthropocentric-ஆக, மனித குலத்தை மட்டுமே கடவுள்கள் சுற்றி சுற்றி வந்ததாகப் பேசுவது,...அவர்களை மட்டுமே உய்விக்க அவதரித்தார்கள் என்பது...யோசித்துப் பாருங்களேன்..எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.
9.) இந்தக் கடைசிக் கேள்வியை எனக்காக கொஞ்சம் நின்று நிதானமாக யோசிச்சு, அசை போட்டு, மெல்ல ஒரு முடிவுக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு முக்கியமான கேள்வி; நடுநிலையோடு யோசித்தால் என் முடிவை நீங்கள் எதிர்க்க முடியாதென்ற நம்பிக்கை எனக்கு. மூட நம்பிக்கையோ, என்னவோ!!
NO RELIGION IS UNIVERSAL. எந்த சமயமுமே உலகம் தழுவிய சமயமாக இல்லவே இல்லை.
நம் இந்திய இந்துக் கடவுளர்கள் எங்கெல்லாம் 'சஞ்சரித்தார்கள்'? வடக்கே இமயம் - கைலாயம். தெற்கே குமரி முனை. இந்த இந்திய துணக் கண்டத்தைவிட்டு வெளியே செல்லாத கடவுளர்கள். கொஞ்சம் தாண்டியதாகக் கூறினால் 'அடுத்த நாடு' இலங்கை சொல்லலாம். காரணம் என்ன? கிரேக்க நாட்டு கடவுளர்கள் நம்ம முருகன் மாதிரி அங்கே உள்ள மலைகளில் வாசம் செய்வதான கதை. ஆபிரஹாமிய மதங்களில் வரும் சம்பவங்கள் மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டில் வரும் அனைத்து தீர்க்க தரிசிகளின் செயல்பாடுகளும் அரேபிய நாட்டு எல்லைகளுக்குள்ளேயே நடந்ததாகத்தான் சொல்லப் படுகிறது. அத்தனை தீர்க்க தரிசிகளில் யாருமே மற்ற கண்டங்களிலோ, ஏனைய நாடுகளிலோ பிறந்ததாகவோ, அதிசயங்கள் (திமிங்கிலத்தின் உள்ளே மூன்று நாட்கள் இருந்தது போன்று...)நடத்தியதாகவோ இல்லை.
இதற்குக் காரணம் என்ன?
மனிதர்கள் தங்களுக்குத் தெரிந்த நிலப்பரப்பில் தாங்களே உருவாக்கிக்கொண்டதே சமயங்கள்; தங்கள் சாயலில் உருவாக்கியவைகளே கடவுளர்கள்.(Ludwig Feuerbach in the nineteenth century and Sigmund Freud in the twentieth century hold that “our view of God is merely a psychological projection of our own image of ourselves - perhaps our actual selves, perhaps our ideal selves - on the universe as a whole....... The image of God as a divine father has strong Freudian overtones”.)Reason and religion" An introduction to the Philosophy of Religion by Rem B. Edwards pp 285. இதை ஒட்டியே இன்னொரு அறிஞர், If triangles have gods, their gods would be triangles. என்றார். மனிதன் தன்னை வைத்தே தனது கடவுள்களைப் படைத்தான் என்பதே என் எண்ணம்.
வாசிக்கும் நம்பிக்கயாளர்களுக்கு - அவர்கள் எந்த சமயத்தினைச் சார்ந்தவராக இருப்பினும் - கோபம் வரலாம்; நம்பிக்கையின்மையால் சிரிப்பும் வரலாம். அவர்களுக்கு ஒரு சொல்: இந்த 'முடிவு'க்கு வர எனக்கு ஏறத்தாழ 15 நீண்ட ஆண்டுகள் ஆயிற்று. ஒரு நாளில் வந்த, எடுத்த முடிவல்ல. எந்த மதத்தின் மேலுள்ள வெறுப்பாலோ அல்லது வேறு எந்தக் காரணத்தாலோ எடுத்த அவசர முடிவல்ல. நீங்களும் நன்றாக நேரம் எடுத்துக்கொண்டு, மெல்ல யோசித்து,..........
அப்படியே நீ சொல்வதுபோல மனிதன்தான் கடவுளைப்படைத்தான் என்றால், அப்படித் தோன்றிய மதங்களின் நோக்கம் என்ன? அப்படிப் படைத்த நம் முன்னோருக்கு அதற்குரிய நோக்கம் என்ன? - என்பது உங்கள் கேள்வி.
பதில்: எனக்கும் தெரியாது. ஆயினும், இப்படி இருக்குமா?
1. Policing the society? ஒழுங்கா நல்லவனா இருன்னு சொன்னால் யார் கேட்பார்கள். பொய்சொன்ன வாய்க்கு போசனம் கிடைக்காது என்றால்தான் ஒரு பயம் வரும். அந்த பயம் வரத்தான் புத்திசாலி முன்னோர்கள் சமயங்களை ஆரம்பித்திருப்பார்களோ? அதனால்தானோ எல்லா மதங்களும் கடவுளையும், தண்டனைகளையும் சேர்த்தே சொல்லி நம்மை மிரட்டி வைத்திருக்கின்றன?
2. Psychotherapy? இது என் வாழ்க்கையில் நானே அனுபவித்தது. யாரிடமும் முழு நம்பிக்கையை நாம் வைக்க முடியுமா? எல்லாரிடமும் நம் மன அழுத்தங்களை, வெளியில் சொல்ல முடியா சோகங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா? எல்லா வேதனைகளையும் எப்போதும் பகிர்ந்து கொள்ள முடியுமா? முடியாது. நம் தனிப்பட்ட ஆற்றல்கள் தோற்கடிக்கப் படும்போதும், தாங்க முடியா சோகத்தில் மனம் அல்லாடும் போதும், இது ஏன், இது ஏன் எனக்கு, இது ஏன் எனக்கு இப்போது என்று அடுக்கடுக்காய் வரும் வேதனைகளை முழுங்க முடியாமல் மனம் திணறி, உடல் தவிக்குக்போது நமக்கென ஒரு துணை வேண்டாமோ?
வேதனைகள், ஏமாற்றங்கள் வரும்போது நம்மைத் தாங்க ஒரு தோள் வேண்டுமென நினைக்காதார் யார்? மேற்சொன்னமாதிரி நேரங்களில், மனிதத் தோள்கள் ஆறுதல் கொடுக்கமுடியாத நேரங்களிலும் நாம் முழுமையாகச் சரணடைய ஒரு 'இடம்' வேண்டும்.(கண்ணதாசனின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன! இதோ அந்த வரிகள் - மனத்தின் வேதனையை அனுபவித்துச் சொல்லும் அந்தக் கவிதை வரிகள்:
எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும் - எவ்வளவு சரியான வரிகள். பல துயர நேரங்களில் இந்த மனித குலத்தின் மேல் வெறுப்பு வருவதில்லையா?
என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்
வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால்
உறங்குவேன் தாயே)
எந்த வித அச்சமும், தயக்கமும், வெட்கமும் இல்லாமல் நாம் சரணடையச் செல்லும் அந்த இடம்தான் கடவுள் என்ற concept. பூட்டி கிடந்த கோவிலின் முன்னால் இரவு நேரத்தில் போய் தனியாக உட்கார்ந்து அழுதது இன்னும் நினைவில் இருக்கிறது.
ஆற்றமுடியாத சோகங்களை காலம் ஆற்றும் - மெல்ல;
ஆனால், அதே சோகங்களை கடவுள் நம்பிக்கை போக்கும் - உடனடியாக.
இதைப் புரிந்து, வாழ்ந்து, பட்டுணர்ந்து, தெளிவு பட்ட நம் மனித சமுதாயத்தின் முன்னோர்கள் நமக்காக ஏற்படுத்திக் கொடுத்த 'சுமைதாங்கித் தூண்கள்' நம் கடவுளர்கள். அவைகள் கற்கள்தான்; வெறும் சுதைகள்தான். ஆனால், மனதிற்கு இதம் அளிக்க மனிதனால், மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்ட கற்பனைப் பாத்திரங்கள்.சிறு வயதில் கடவுள் பயம் தேவை - மனத்தை நல்வழிப் படுத்த; வயதும், மனமும் வளர வளர அந்தக் கடவுள் concept தேவையில்லை; செத்த பிறகு மோட்சமாவது, நரகமாவது. இருக்கும்போது உன்னையும் என்னையும் 'மனிதம் உள்ள மனிதனாக' வைத்திருக்க வந்ததே மதமும், கடவுளும். இந்த 'வெளிச்சத்திற்கு'(இதைத்தான் enlightenment? என்கிறார்களோ?) வந்த பின், இல்லாத கடவுள் மனிதனுக்கு எதற்கு?
மனிதம் போதுமே
http://dharumi.blogspot.com/2005/09/68.html