உலக நடப்பு

அமெரிக்காவின் கூற்றை ஈரான் மறுப்பு – “உளவியல் போர்” என கடும் குற்றச்சாட்டு

3 weeks 2 days ago

அமெரிக்காவின் கூற்றை ஈரான் மறுப்பு – “உளவியல் போர்” என கடும் குற்றச்சாட்டு

21 Mar, 2026 | 11:41 AM

image

(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)

மத்திய கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளை குறைக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்தை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தக் கருத்துக்கள் உண்மையற்றவை மட்டுமல்லாது, உலக சந்தைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் “உளவியல் போர்” என ஈரான் கடுமையாக சாடியுள்ளது.

ஈரானிய உயர்மட்ட அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகமான சி.என்.என். க்கு வழங்கிய தகவலின் படி, பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் குறைக்கப்பட்டதாக எந்தவிதமான உறுதியான மாற்றங்களும் காணப்படவில்லை. “எதிரியின் இராணுவ நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார அதிர்வுகளை கட்டுப்படுத்தவும், பங்குச் சந்தையில் நிலவும் பதற்றத்தை சமாளிக்கவும் டிரம்ப் இத்தகைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் என ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் சுமார் 20 சதவீதத்தை கட்டுப்படுத்தும் முக்கியப் பகுதி ஆகும். இந்நிலையில், அதன் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதன் விளைவாக, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை பரல் ஒன்றுக்கு 112 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. மேலும், Goldman Sachs வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, இந்த விலை உயர்வு 2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈரானிய அதிகாரி ஒருவர், “டிரம்பிற்கு ஒரு தற்காலிக பதில் அளிப்பதற்குப் பதிலாக, அவருக்கு ஒரு வரலாற்றுப் பாடம் கற்பிக்க வேண்டும் என தெஹ்ரான் முடிவு செய்துள்ளது” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலைமைகள் மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய பொருளாதாரத்திலும் அதிர்வுகளை உருவாக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/241549

இந்திய பெருங்கடலில் போர் அபாயம்!!!

3 weeks 2 days ago

இந்திய பெருங்கடலில் போர் அபாயம்!!!

--- --- ---

*முதன் முதலில் 4ஆயிரம் கிலோ மீற்றருக்கு அப்பால் ஈரான் தாக்குதல்...

*ஆனால், உலகலாவிய அச்சுறுத்தல் அல்ல என்கிறது ஈரான்

*டியாகோ கார்சியா மீதான தாக்குதல் அபாயத்தை ஏற்க மறுக்கும் அமெரிக்க - பிரித்தானிய ஊடகங்கள்...

--- --- ---

மத்திய இந்தியப் பெருங்கடலில் பூமத்திய ரேகைக்கு (Equator) தெற்கே அமைந்துள்ள டியாகோ கார்சியா (Diego Garcia) மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல், அமெரிக்க - பிரித்தானிய கூட்டு செயற்பாட்டை தடுக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நான்காயிரம் கிலோ மீற்றர்களுக்கு அப்பால் ஒரு நேர் வழிப் பாதையில் கூம்பு வெட்டாக பயணிக்கக் கூடிய (Intermediate-Range Ballistic Missiles - IRBMs) ஏவுகணைகளை ஈரான் தாக்குதலுக்கு முதன் முதலில் பயன்படுத்தியதாக, த வோள்ஸ்ட்ரீட் ஜேர்னல் (the wall street journal) செய்தி தளம் கூறுகிறது.

டியாகோ கார்சியா ஈரானில் இருந்து 4 ஆயிரம் கிலோ மிற்றர் (2, 300 இல் இருந்து 2. 500 மைல்கள்) வரையான தூரத்தில் அமைந்துள்ளது.

ஆகவே இத் தாக்குதல், அமெரிக்க - இந்திய கூட்டுப் படைத்தளத்திற்கு மாத்திரமல்ல. இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்தோ - பசுபினக் பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் என்ற தொனியில் அச் செய்தி விமர்சித்துள்ளது.

அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தியப் பெருங்கடலின் மையத்தில் உள்ள அமெரிக்க - பிரித்தானிய கூட்டு இராணுவத் தளம் அமைந்துள்ள டியாகோ கார்சியா மீது ஈரான் இரண்டு இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தவோல் ஸ்ரிற் ஜேர்னல் செய்தித் தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

இடை மறிப்புச் செய்யப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் சிலர் கூறியபோதும், அதனை உறுதிப்படுத்த முடியிவ்லை எனவும் அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க போர்க்கப்பல் SM-3 இன்டர்செப்டர் (SM-3 interceptor) டியாகோ கார்சியா தரித்து நிற்கிறது.

30 கிலோ மீற்றர் சதுரப் பரப்பைக் கொண்ட டியாகோ கார்சியாவில் அமெரிக்க - பிரித்தானிய கூட்டுப்படைத் தளம் அமைந்துள்ளது.

டியாகோ கார்சியாவில் ஆக குறைந்தது 4 அயிரம் பேர் மாத்திரமே வாழ்கின்றனர். படையினரும் படைகளுக்கு உதவியளிக்கும் பணியாளர்களும் அங்கு அதிகமாக வாழ்கின்றனர்.

இத் தாக்குதல் ஊடாக, உலகின் எந்தப் பகுதிகளுக்கும் தன்னால் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்த முடியும் என்றும், அமெரிக்க தளங்களை இனம் காண முடியும் எனவும் ஈரான் காண்பித்துள்ளது.

அமெரிக்க - பிரித்தானிய படை உயர் அதிகாரிகள், அதிர்ச்சியடைந்துள்ளதாக எக்கனமிக்ஸ் ரைம்ஸ் (economictimes) இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது.

ஈரான் ஏவுகணை தாக்குதலை 2,000 கிமீ (1,250 மைல்கள்) வரை கட்டுப்படுத்தியுள்ளதாக. கடந்த மாதம் இந்தியா டுடேக்கு (India Today)அளித்த பேட்டியில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் ஆராச்சி கூறியிருந்தார்.

ஆனாலும், டியாகோ கார்சியா மீது ஈரான் நடத்திய தாக்குதல் உலகளாவிய அச்சுறுத்தலாக மாற முயற்சிக்கவில்லை என்று அப்பாஸ் ஆராச்சி சுட்டிக்காட்டியதாக எக்கனமிக்ஸ் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் அமெரிக்க - பிரித்தானிய நாடுகளை மையப்படுத்திய பிரதான ஆங்கில செய்தி ஊடகங்கள், தாக்குதல் பற்றிய “அச்சம்” - “ஆபத்து” போன்றவற்றை நேரடியாக ஏற்கத் தயங்குவதை அவதானிக்க முடிகிறது.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

துருக்கி மற்றும் ஓமன் மீதான தாக்குதல்களுக்கும் ஈரானுக்கும் எந்த தொடர்பும் இல்லை: உச்ச தலைவர் கமேனி

3 weeks 2 days ago

துருக்கி மற்றும் ஓமன் மீதான தாக்குதல்களுக்கும் ஈரானுக்கும் எந்த தொடர்பும் இல்லை: உச்ச தலைவர் கமேனி

Published By: Vishnu

21 Mar, 2026 | 04:21 AM

image

துருக்கி மற்றும் ஓமானைக் குறிவைத்து சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈரானிய ஆயுதப் படைகளுக்கோ அல்லது அவற்றின் கூட்டாளிகளுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்று ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி வலியுறுத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதல்கள் ஈரானால் எந்த வகையிலும் திட்டமிடப்படவில்லை என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

இந்தத் தாக்குதல்கள் ஈரானின் எதிரிகளால் நடத்தப்படும் 'போலிக் கொடி' தாக்குதல்கள் என்றும், அல்லது பொறுப்பை மற்றொரு தரப்பின் மீது சுமத்தும் நோக்கத்தில் செய்யப்படும் சதிச் செயல்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அண்டை நாடுகளுக்கு இடையே நிலவும் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் சீர்குலைப்பதற்காக எதிரிகள் இத்தகைய தந்திரங்களைப் பயன்படுத்துவதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

https://www.virakesari.lk/article/241523

டியாகோ கார்சியா அமெரிக்க – பிரித்தானிய கூட்டு இராணுவத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

3 weeks 2 days ago

டியாகோ கார்சியா அமெரிக்க – பிரித்தானிய கூட்டு இராணுவத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

21 Mar, 2026 | 11:11 AM

image

(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்க – பிரித்தானிய கூட்டு இராணுவத் தளமான டியாகோ கார்சியா (Diego Garcia) மீது ஈரான் இரண்டு நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்த முயன்றதாக The Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட தகவலின்படி, ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளும் குறித்த இராணுவத் தளத்தைத் தாக்கவில்லை. இதனால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவல்களின் படி, ஒரு ஏவுகணை நடுவானில் பயணிக்கும்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்துள்ளது. மற்றொரு ஏவுகணை தளத்தை நோக்கி வந்தபோது, அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று ‘SM-3’ வகை இடைமறிப்பு ஏவுகணையை ஏவி அதைத் தடுக்க முயன்றுள்ளது.

எனினும், அந்த இடைமறிப்பு முயற்சி முழுமையாக வெற்றியடைந்ததா அல்லது ஏவுகணை தானாகவே கடலில் விழுந்ததா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.

இந்தத் தாக்குதல் எப்போது இடம்பெற்றது என்பது தொடர்பான துல்லியமான கால விபரங்கள் வெளியிடப்படவில்லை. மேலும், வெள்ளை மாளிகை அல்லது பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் இதுகுறித்து இதுவரை அதிகாரபூர்வ கருத்து வெளியிடவில்லை.

டியாகோ கார்சியா தளம், அமெரிக்காவின் நீண்ட தூர போர் விமானங்கள், கடற்படை நடவடிக்கைகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான முக்கிய மூலோபாய மையமாகக் கருதப்படுகிறது.

ஈரானிலிருந்து சுமார் 4,000 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்தத் தளத்தை குறிவைத்து தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது, பிராந்திய மோதல்கள் மேலும் விரிவடையும் அபாயத்தை சுட்டிக்காட்டுவதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்தச் சம்பவம், மத்திய கிழக்கு மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியங்களில் நிலவி வரும் இராணுவ மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களை மேலும் தீவிரப்படுத்தக்கூடியதாகக் கருதப்படுகிறது. மேலும் தகவல்கள் வெளியாகும் நிலையில், சர்வதேச சமூகத்தின் கவனம் இந்தச் சம்பவத்தின் மீது திரும்பியுள்ளது.

https://www.virakesari.lk/article/241542

முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!

3 weeks 2 days ago

trump49-1773931643.jpg?resize=750%2C375&

முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!

ஈரானுக்கு எதிரான போரில் தமது இலக்குகளை அடைவதற்கு அமெரிக்கா மிகவும் நெருங்கி வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இராணுவ நடவடிக்கைகளை நிறைவு செய்து போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருவதாக அவர் தனது ‘Truth’ சமூக ஊடகக் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) பயன்படுத்தும் ஏனைய நாடுகள், அதனைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அந்தப் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள கடும் அழுத்தங்களைக் குறைக்கும் நோக்கில், ஈரான் மீதான எண்ணெய் விற்பனைத் தடையை அமெரிக்கா 30 நாட்களுக்குத் தற்காலிகமாக நீக்கியுள்ளது.

அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் இது குறித்த அறிவிப்பை நேற்று (20) வெளியிட்டார்.

அமெரிக்க – இஸ்ரேலிய போர் பதற்றங்களுக்கு மத்தியில், எரிசக்தி தட்டுப்பாட்டைத் தவிர்க்க இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மார்ச் 20 முதல் ஏப்ரல் 19 வரை கப்பல்களில் ஏற்றப்படும் ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்ய ‘பொதுவான உரிமம்’ வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெசென்ட் தனது ‘X’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, “சுமார் 140 மில்லியன் பீப்பாய் ஈரானிய எண்ணெயை உலக சந்தைக்குக் கொண்டு வருவதன் மூலம், தற்காலிக எரிசக்தி தட்டுப்பாட்டை அமெரிக்கா சீர்செய்யும் , இது உலகளாவிய விநியோகச் சங்கிலியை விரிவுபடுத்த உதவும் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் ரஷ்யாவைத் தொடர்ந்து, ஈரான் மீதும் அமெரிக்கா தனது தடைகளைத் தளர்த்துவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1469471

அமெரிக்க ராணுவ தளங்கள் மீதான இரான் தாக்குதலால் ஏற்பட்ட சேதம் எவ்வளவு?

3 weeks 2 days ago

அமெரிக்க ராணுவ தளங்கள் மீதான இரான் தாக்குதலால் ஏற்பட்ட சேதம் எவ்வளவு?

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகள்

பட மூலாதாரம்,Planet labs PBC and Airbus

படக்குறிப்பு,அல் சாதர் மற்றும் அல் ருவைஸ் (ஐக்கிய அரபு அமீரகம்) ஆகிய இடங்களில் உள்ள ரேடார் தளங்களுக்கு ஏற்பட்ட சேதம்

கட்டுரை தகவல்

  • டேனியல் புஷ், வாஷிங்டன் செய்தியாளர் மற்றும் பால் பிரௌன் & அலெக்ஸ் முர்ரே, பிபிசி வெரிஃபை

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா பயன்படுத்தும் ராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட இரானிய தாக்குதல்களால், போரின் முதல் இரண்டு வாரங்களில் 800 மில்லியன் டாலர் மதிப்புக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதாக புதிய பகுப்பாய்வு கூறுகிறது.

இதில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரை தொடங்கிய ஒரு வாரத்திற்கு பிறகு இரான் நடத்திய ஆரம்பகட்ட பதிலடி தாக்குதல்களில் பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டதாக, வியூகம் மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் (CSIS) ஆய்வறிக்கை மற்றும் பிபிசி மேற்கொண்ட பகுப்பாய்வின்படி தெரியவந்துள்ளது.

அப்பிராந்தியத்தில் அமெரிக்க சொத்துகள் மீது நடத்தப்பட்ட இரானிய தாக்குதல்களால் ஏற்படுத்தப்பட்ட முழு சேதத்தின் அளவு இன்னும் தெளிவாக தெரியவில்லை.

ஆனால் அமெரிக்க ராணுவ உள்கட்டமைப்பின்மீது 800 மில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, முன்பு வெளியான தகவலைவிட அதிகமாக உள்ளது, இது இந்த மோதல் நீடிக்கும் நிலையில் அமெரிக்காவுக்கு அதிக செலவு ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.

"அப்பிராந்தியத்தில் அமெரிக்க தளங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் அவ்வளவாக பதிவு செய்யப்படவில்லை," என சிஎஸ்ஐஎஸ்-ன் மூத்த ஆலோசகரும் அந்த ஆய்வறிக்கையின் இணையாசிரியருமான மார்க் கேன்சியன் கூறுகிறார். "இது அதிகமானதாக தோன்றினாலும், மேலதிக தகவல்கள் கிடைக்கும் வரை முழு தொகை குறித்து தெரியவராது."

இதுகுறித்த கருத்தை பெற பிபிசி அமெரிக்க பாதுகாப்பு துறையை தொடர்புகொண்டது. அத்துறை இந்த போரை வழிநடத்தும் அமெரிக்க மத்திய கட்டளை பிரிவிடம் கேட்குமாறு கூறியது. ஆனால், அங்குள்ள அதிகாரிகள் இதுகுறித்து கருத்து கூற மறுத்துவிட்டனர்.

ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகள் முழுவதிலும் உள்ள அமெரிக்காவின் வான் பாதுகாப்பு மற்றும் செயற்கைக்கோள் - தொடர்பு அமைப்புகள் உள்ளிட்ட மற்ற சொத்துகள் மீது இரான் குறிவைத்து பதிலடி தாக்குதலை நடத்திவருகிறது.

ஜோர்டானில் உள்ள வான் பாதுகாப்பு தளத்தின் தாட் (Thaad) ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கான அமெரிக்க ரேடார் மீது குறிப்பிடத்தக்க அளவில் சேதம் ஏற்படுத்தப்பட்டது.

அமெரிக்க பாதுகாப்பு துறையின் பட்ஜெட் ஆவணங்களை சிஎஸ்ஐஎஸ் மதிப்பாய்வு செய்ததன்படி, இந்த ரேடார் அமைப்பு சுமார் 485 மில்லியன் டாலர் மதிப்புடையது. நீண்ட தொலைவு பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிப்பதற்கு இத்தகைய வான் பாதுகாப்பு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

அப்பிராந்தியத்தில் அமெரிக்க படைகளால் பயன்படுத்தப்படும் அமெரிக்க தளங்கள் மற்றும் ராணுவ தளங்களின் கட்டடங்கள், வசதிகள் மற்றும் மற்ற உள்கட்டமைப்புகள் மீது இரான் நடத்திய தாக்குதல்களால் மேலும் கூடுதலாக 310 மில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பிபிசி வெரிஃபையால் ஆய்வு செய்யப்பட்ட செயற்கைக்கோள் படங்களின்படி, குறைந்தது மூன்று வான் பாதுகாப்பு தளங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இரான் தாக்கியுள்ளது. குறிப்பிட்ட அமெரிக்க சொத்துகளை குறிவைக்கும் இரானின் முயற்சிகளை இந்த தொடர்ச்சியான தாக்குதல்கள் சுட்டிக்காட்டுகின்றன. அப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் குறித்து டெஹ்ரானுக்கு ரஷ்யா உளவுத்தகவலை வழங்கியதாக கூறப்படுகிறது.

குவைத்தில் உள்ள அலி அல்-சலீம், கத்தாரில் உள்ள அல்-உதெய்த் மற்றும் சௌதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் ஆகிய மூன்று வான் பாதுகாப்பு தளங்கள் மீது இந்த மோதலின் வெவ்வேறு கட்டங்களில் புதிய சேதங்கள் ஏற்படுத்தப்பட்டதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

பிப்ரவரி 28 அன்று இரான் மீது தாக்குதல்களை தொடங்குவதில் இஸ்ரேலுடன் அதிபர் டொனால் டிரம்ப் இணைந்ததிலிருந்து, அமெரிக்கா ராணுவ சேவை உறுப்பினர்கள் 13 பேரையும் இழந்துள்ளது.

அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்பட்டுவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் செய்தி முகமை (Hrana) ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 1,400 குடிமக்கள் உட்பட 3,200 பேர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிட்டுள்ளது.

இரானின் அணுசக்தி திட்டத்தை அழித்தல், அதன் ராணுவ வலிமையை சிதைத்தல் மற்றும் பிராந்தியத்தில் இரான் ஆட்சிக்கு ஆதரவாக உள்ள குழுக்களை முடிவுக்குக் கொண்டு வருதல் எனும் தன்னுடைய இலக்குகளை அடைவதில் அமெரிக்கா தொடர்ந்து பயணிக்கிறது என டிரம்ப் தெரிவித்தார்.

"நாங்கள் இரானில் மிகவும் சிறப்பாக செயல்பட்டுவருகிறோம்," என வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிரம்ப் தெரிவித்தார்.

ஆனால், கிட்டத்தட்ட மூடப்பட்ட ஹோர்மூஸ் நீரிணை, மோதல் எவ்வளவு காலம் நீடிக்கும் மற்றும் மோதலுக்காக டிரம்ப் துருப்புகளை தரையில் களமிறக்குவாரா என்பதில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால் உலக பொருளாதாரம் மீது தாக்கம் ஏற்பட்டது.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகள்

பட மூலாதாரம்,Source: Planet Labs PBC, 2026

படக்குறிப்பு,தாக்குதலுக்கு முன்பு

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகள்

பட மூலாதாரம்,Source: Planet Labs PBC, 2026

படக்குறிப்பு,தாக்குதலுக்கு பின்

அமெரிக்காவைச் சேர்ந்த முக்கிய சேவை வழங்குநர்கள் செயற்கைக்கோள் படங்களை வெளியிடுவதற்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளால், அப்படங்களின் பகுப்பாய்வு தடைபட்டுள்ளது.

ஆனால், அப்பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ நலன்களுக்கு எதிரான இரானின் பதிலடி நடவடிக்கைகளில் சில குறிப்பிட்ட போக்குகளைக் கண்டறிய இயலும்.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீது இரான் தாக்குதல் நடத்தியதிலிருந்தே, ரேடார் மற்றும் செயற்கைக்கோள் அமைப்புகள் மீது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நவீன ராணுவ நடவடிக்கைகளின் மிகவும் முக்கிய மையமாக அவை திகழ்கின்றன.

குறிப்பாக, செயற்கைக்கோள் படங்கள் இரு ரேடார் குவிமாடங்கள் மீது ஏற்படுத்தப்பட்ட சேதங்களை காட்டின - அவை மிகவும் முக்கியமான உபகரணங்களை பாதுகாப்பதற்கான அமைப்புகளாக உள்ளன. சேதத்தின் அளவைக் கணிக்க இயலாவிட்டாலும், அந்த அமைப்புகளே சேதமடைந்திருக்க அதிக வாய்ப்புள்ளது.

குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளமான அரிஃப்ஜான் முகாம் மற்றும் சௌதி அரேபியாவில் அமெரிக்க விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள பிரின்ஸ் சுல்தான் வான் பாதுகாப்பு தளத்தில் உள்ள ரேடார் தளங்கள் தாக்கப்பட்டன. பிரின்ஸ் சுல்தான் வான் பாதுகாப்பு தளம் குறித்த படங்கள், தாட் வான் பாதுகாப்பு அமைப்பின் ரேடார் பாகம் ஒன்றிலிருந்து புகை எழுவதைக் காட்டுகின்றன.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்களில், தாட் அமைப்புகளுக்கு மேலும் அதிகமான சேதம் ஏற்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த சேதத்தின் மதிப்பு குறித்து தெளிவாக தெரியவில்லை. இந்த சேதங்களால், தாட் அமைப்புகளை தென் கொரியாவிலிருந்து மத்திய கிழக்குக்கு அமெரிக்கா இடமாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இரானின் பதிலடித் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள், போருக்காக அமெரிக்காவுக்கு ஏற்பட்ட மொத்தச் செலவுகளில் ஒரு சிறு பகுதியாகும்.

போரின் முதல் ஆறு நாட்களுக்கு 11.3 பில்லியன் டாலர் செலவானதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்ததாகக் கூறப்படுகிறது. சிஎஸ்ஐஎஸ் (CSIS) தகவலின்படி, முதல் 12 நாட்களுக்கு 16.5 பில்லியன் டாலர் செலவானது.

போருக்கு நிதியளிக்க மேலும் 200 பில்லியன் டாலரை அமெரிக்க பாதுகாப்பு துறை கோரியுள்ளது. பாதுகாப்பு துறை செயலாளர் பீட் ஹெக்சேத் அத்தொகை "மாறக்கூடும்" என தெரிவித்தார்.

"கெட்டவர்களை கொல்வதற்கு பணம் தேவைப்படுகிறது," என ஹெக்சேத் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg45g7jqlro

அமெரிக்கா இல்லாமல், நேட்டோ ஒரு காகிதப் புலி!

3 weeks 2 days ago

அமெரிக்கா இல்லாமல், நேட்டோ ஒரு காகிதப் புலி!

Mar 20, 2026 - 09:37 PM

அமெரிக்கா இல்லாமல், நேட்டோ ஒரு காகிதப் புலி!

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு உதவாத நேட்டோ கூட்டாளிகளை 'கோழைகள்' என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

"அமெரிக்கா இல்லாமல், நேட்டோ ஒரு காகிதப் புலி!" என்றும் டிரம்ப் தனது 'ட்ரூத்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும் “அணுசக்தியால் இயங்கும் ஈரானைத் தடுக்கும் போராட்டத்தில் அவர்கள் சேர விரும்பவில்லை. இப்போது, அவர்களுக்கு மிகக் குறைந்த ஆபத்துடன், அந்தப் போராட்டம் இராணுவ ரீதியாக வெல்லப்பட்டுவிட்ட நிலையில், தாங்கள் செலுத்த நிர்பந்திக்கப்படும் அதிக எண்ணெய் விலைகளைப் பற்றிப் புகார் கூறுகிறார்கள். 

ஆனால், அந்த அதிக எண்ணெய் விலைகளுக்கு ஒரே காரணமாக இருக்கும் ஒரு எளிய இராணுவ நடவடிக்கையான ஹோர்முஸ் நீரிணையை திறக்க உதவ அவர்கள் விரும்பவில்லை. மிகக் குறைந்த ஆபத்துடன், இதைச் செய்வது அவர்களுக்கு மிகவும் எளிது. கோழைகள், நாங்கள் இதை நினைவில் கொள்வோம்!”
என நேட்டோ உறுப்பு நாடுகளை விமர்சித்து பதிவிட்டுள்ளார். 

அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு நடவடிக்கைக்கு முன்பு, டிரம்ப் உதவுமாறு வலியுறுத்திய எந்த நாடுகளும் ஈரான் மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட மறுத்துவிட்டன. 

இதனால் சமீப நாட்களாக நேட்டோ மீதான தனது விமர்சனங்களை ட்ரம்ப் தீவிரப்படுத்தியுள்ளார். 

பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, வளைகுடா பிராந்தியம் முழுவதும் தெஹ்ரான் பதிலடித் தாக்குதல்களை தொடர்ந்துவருகிறது. 

மேலும் ஹார்முஸ் நீரிணையையும் மூடியுள்ளது. இதனால் உலகெங்கும் எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

https://adaderanatamil.lk/news/cmmz3drp1000b356pt06kl7ui

ஹோர்மூஸ் நீரிணையை கடந்து சென்ற சுமார் 100 கப்பல்களில் எந்தெந்த நாட்டு கப்பல்கள் உள்ளன?

3 weeks 2 days ago

ஹோர்மூஸ் நீரிணையை கடந்து சென்ற சுமார் 100 கப்பல்களில் எந்தெந்த நாட்டு கப்பல்கள் உள்ளன?

இரானியப் படைகள் அப்பகுதியில் கப்பல் போக்குவரத்து மீது அவ்வப்போது தாக்குதல்களை நடத்திய போதிலும், மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து ஹோர்முஸ் நீரிணை வழியாக 100க்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றுள்ளன என்று பிபிசி வெரிஃபை பகுப்பாய்வு செய்த தரவுகள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • கெய்லின் டெவ்லின், டாம் எடிங்டன், யி மா

  • பிபிசி வெரிஃபை

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஹோர்மூஸ் நீரிணை அருகே அவ்வப்போது கப்பல்கள் மீது இரான் தாக்குதல்களை நடத்திய போதிலும், மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து ஹோர்மூஸ் நீரிணை வழியாக 100க்கும் சற்று குறைவான கப்பல்கள் கடந்து சென்றுள்ளன என்று பிபிசி வெரிஃபை பகுப்பாய்வு செய்த தரவுகள் தெரிவிக்கின்றன.

உலகின் பரபரப்பான கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான இதன் வழியாக இன்னும் சில எரிசக்தி மற்றும் அன்றாடப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டாலும், பிப்ரவரி 28 அன்று இரான் போர் தொடங்கியதிலிருந்து தினசரி போக்குவரத்து சுமார் 95% குறைந்துள்ளது.

கூட்டு கடல்சார் தகவல் மையத்தின் கூற்றுப்படி, போருக்கு முன்பு ஒரு நாளைக்கு சுமார் 138 கப்பல்கள் இந்த நீரிணை வழியாகச் சென்றன. இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பகுதியை சுமந்து சென்றது.

கப்பல் போக்குவரத்து பகுப்பாய்வு நிறுவனமான கெப்லர் வழங்கிய தரவுகள், இந்த மாதத்தில் இதுவரை 99 கப்பல்கள் மட்டுமே இந்த குறுகிய நீரிணையைக் கடந்துள்ளதை காட்டுகின்றன. இது ஒரு நாளைக்கு சராசரியாக 5 முதல் 6 கப்பல்கள் மட்டுமே ஆகும்.

இந்த பயணத்தை மேற்கொள்ளும் கப்பல்கள் மற்றும் அவை எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்து பிபிசி வெரிஃபை ஆய்வு செய்தது.

ஹோர்மூஸ் நீரிணை

எந்தெந்த கப்பல்கள்

சமீபத்தில் இந்த பாதையைக் கடந்த கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கு இரானுடன் தொடர்புடையவை என்று பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது.

இதில் இரானில் பதிவு செய்யப்பட்ட14 கப்பல்களும், இரானின் எண்ணெய் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு தடைகளை எதிர்கொள்ளும் பிற கப்பல்களும் அடங்கும்.

ஒன்பது கப்பல்கள் சீனாவுடன் தொடர்புடைய முகவரிகளைக் கொண்ட நிறுவனங்களுக்குச் சொந்தமானவை, அதே சமயம் ஆறு கப்பல்கள் இந்தியாவைத் தாங்கள் சேருமிடமாகக் குறிப்பிட்டுள்ளன.

இரானுடன் தொடர்பில்லாத சில கப்பல்கள் அந்நாட்டின் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளதையும் இந்த பகுப்பாய்வு வெளிப்படுத்துகிறது. இதில் கிரேக்க நிறுவனங்களுக்குச் சொந்தமான கப்பல்களும் அடங்கும்.

நீரிணையை வெற்றிகரமாகக் கடக்கும் சில கப்பல்கள் வழக்கத்தை விட நீண்ட பாதையைத் தேர்ந்தெடுப்பதாகத் தெரிகிறது.

பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட ஓர் எண்ணெய் கப்பலின் பயணத் தரவுகள், அது மார்ச் 15 அன்று நீரிணை வழியாகச் செல்லும்போது, நடுப்பகுதியில் உள்ள வழக்கமான பாதையைத் தவிர்த்து, இரானியக் கடற்கரைக்கு மிக நெருக்கமாகப் பயணித்ததைக் காட்டுகின்றன.

சிவலிக் கப்பல் இந்தியாவின் முந்தரா துறைமுகத்தை வந்து சேர்ந்தது

பட மூலாதாரம்,PTI

படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணையை கடந்து வந்த இந்திய கப்பல்

திட்டம் என்ன?

அமெரிக்க பாதுகாப்பு சிந்தனைக் குழுவான ரேண்ட் கார்ப்பரேஷனின் மூத்த ஆராய்ச்சியாளர் பிராட்லி மார்ட்டின், அந்த கப்பல் "இரானிடமிருந்து வந்த சில அறிவுறுத்தல்களுக்கு இணங்கி" செயல்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார்

அந்த கப்பல் பயணித்த பாதையானது, அங்கு கண்ணிவெடிகள் இருப்பதையோ அல்லது இரானிய அதிகாரிகள் அந்த கப்பலை எளிதாக அடையாளம் காண்பதற்கான முயற்சியையோ குறிக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

கப்பல்கள் தங்கள் பாதையை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குள்ளாவதன் மூலம், அவை இரானின் கடல் எல்லைக்குள்ளும் இரானின் கடல்சார் விதிகளுக்குள்ளும் நுழைகின்றன என்று விண்ட்வார்ட் கடல்சார் பகுப்பாய்வை சேர்ந்த மிச்செல் வைஸ் பாக்மேன் கூறுகிறார்.

"தாக்குதல் மற்றும் கண்ணிவெடிகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் இரான் இந்த நீரிணையை மூடி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்பதே நான் இதிலிருந்து தெரிந்துகொள்வது".

"அதனால்தான் அனைவரும் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதையில் செல்வதற்கு பதிலாக, இரானின் கடல் எல்லைப் பகுதியை ஒட்டியே செல்ல வேண்டியுள்ளது," என்று அவர் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த கடற்படை பகுப்பாய்வு மையத்தின் மைக்கேல் கோனலும், கப்பல்கள் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுப்பதை ஒப்புக்கொள்கிறார்.

''வரையறுக்கப்பட்ட பாதையில் சென்றால் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று இரானிய அதிகாரிகளுடன் அவர்கள் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கலாம்.''

ஹோர்மூஸ் நீரிணையை கடந்து வந்த இந்திய கப்பல்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணையை கடந்து வந்த இந்திய கப்பல்

கப்பல் போக்குவரத்தின் முன்னுள்ள அச்சுறுத்தல்கள்

மோதல் தொடங்கியதிலிருந்து, இரானியக் கடற்கரையை ஒட்டி 20 வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். இவை அனைத்தும் ஹோர்மூஸ் நீரிணையின் நேரடி அருகாமையில் மட்டும் நடக்கவில்லை.

மார்ச் 11 அன்று, தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்ட 'மயூரி நாரி' என்ற சரக்குக் கப்பல் அந்தப் பாதையைக் கடக்க முயன்றபோது, இரண்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டது.

வரையறுக்கப்பட்ட பாதையில் சென்றால் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று இரானிய அதிகாரிகளுடன் அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கலாம்.

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,மயூரி நாரி கப்பல் மார்ச் 11 அன்று தாக்கப்பட்டது.

அந்த கப்பலின் 23 ஊழியர்களில் மூன்று பேரை இன்னும் காணவில்லை.

கப்பல் தாக்கப்பட்டபோது அவர்கள் என்ஜின் அறையில் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தப்பிப்பிழைத்த ஊழியர்கள் "கடலில் இரண்டு வெடிப்புகளால் தாக்கப்பட்டபோது மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகினர்" என்று அக்கப்பலின் உரிமையாளர்கள் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தனர்.

அதே நாளில் கிரேக்கத்துக்குச் சொந்தமான 'ஸ்டார் க்வினெத்' மற்றும் அமெரிக்காவிற்குச் சொந்தமான 'எம்டி சேப்சீ விஷ்ணு' ஆகிய இரண்டு கப்பல்களும் தாக்கப்பட்டன.

"வணிகக் கப்பல் போக்குவரத்துப் பாதைகள் போர்க்களங்களாக மாற முடியாது," என்று எம்டி சேப்சீ விஷ்ணுவின் உரிமையாளர் பிபிசி வெரிஃபையிடம் கூறினார்.

இராக் அருகே கப்பல் நங்கூரமிட்டிருந்தபோது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். எரியும் கப்பலில் இருந்து தப்பிக்க 28 ஊழியர்களும் தண்ணீரில் குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று எஸ்வி அஞ்சன் தெரிவித்தார்.

"அவர்கள் படை வீரர்கள் அல்ல... அவர்கள் உலகளாவிய வர்த்தகத்தை இயங்க வைக்கும் தொழில் வல்லுநர்கள்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

துபை அருகே உள்ள வணிக கப்பல்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,துபை அருகே உள்ள வணிக கப்பல்கள்

நிலவியல் அமைப்பை சாதகமாக பயன்படுத்தும் இரான்

டிரோன்கள், ஏவுகணைகள், அதிவேகத் தாக்குதல் படகுகள் மற்றும் கண்ணிவெடிகள் எனப் பலதரப்பட்ட அச்சுறுத்தல்கள் ஒரு கடுமையான சவாலை ஏற்படுத்துகின்றன என்று கிங்ஸ் கல்லூரியின் ஃப்ரீமேன் வான் மற்றும் விண்வெளி நிறுவனத்தை சேர்ந்த அருண் டாசன் கூறுகிறார்.

"மெதுவாகவும் கவனமாகவும் செயல்படும் ஒரு பாரம்பரிய கண்ணிவெடி அகற்றும் கப்பல் வான்வழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களுக்கு உள்ளாகும்போது, கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து அவற்றைச் செயலிழக்கச் செய்வது மிகவும் கடினம்," என்று அவர் கூறினார்.

நீரிணையின் நிலவியல் அமைப்பையும் இரான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த நீரிணை குறுகலாகவும் ஆழம் குறைவாகவும் இருப்பது மட்டுமின்றி, அதன் கடற்கரைப் பகுதி மலைப்பாங்கானது.

ஹோர்மூஸ் நீரிணை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணை

இது இரான் உயரமான இடங்களிலிருந்து தாக்குதல்களை நடத்த அனுமதிக்கிறது. இதனால் கப்பல்கள் எதிர்வினையாற்றுவதற்கு மிகக் குறைந்த நேரமே கிடைக்கிறது.

கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்காக, பல கப்பல்கள் ஏஐஎஸ் (ஏஐஎஸ் - தானியங்கி அடையாள அமைப்பு) எனப்படும் தங்களின் கண்காணிப்பு அமைப்பைத் திட்டமிட்டு அணைத்து வைப்பதாக தெரிகிறது.

"இந்தக் கப்பல்களில் பெரும்பாலானவை தங்கள் கண்காணிப்பு சாதனங்களை அணைத்தபடி கடந்து செல்கின்றன" என்கிறார் கெப்லர் நிறுவனத்தைச் சேர்ந்த டிமிட்ரிஸ் அம்பாட்ஸிடிஸ்.

ஓமன் வளைகுடாவிற்குள் நுழையும்போது தங்களின் கண்காணிப்புக் கருவிகளை அணைப்பதன் மூலம், படகுகள் வரைபடங்களிலிருந்து மறைந்து விடுகின்றன. பின்னர் பல மணிநேரங்கள் அல்லது நாட்களுக்குப் பிறகு மற்றொரு இடத்தில் மீண்டும் தோன்றுகின்றன.

இது கப்பல்கள் தங்கள் இருப்பிடத்தை மறைக்க உதவினாலும், நீரிணையில் கப்பல்களின் இருப்பிடத்தைக் கண்காணிக்கும் கெப்லர் போன்ற நிறுவனங்களுக்கு சவால்களை ஏற்படுத்துகிறது.

"அனைத்துத் தகவல்களும் எங்களது பகுப்பாய்வாளர்களால் நேரடிச் சரிபார்ப்பு மற்றும் செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன," என்று அம்பாட்ஸிடிஸ் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார்.

கூடுதல் தகவல் : டேனியல் பலம்போ மற்றும் ஜோசுவா சீதம்

கிராபிக்ஸ் : டாம் ஷீல்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c203r13d2rzo

உக்ரைனுக்கு ஏவுகணை பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

3 weeks 3 days ago

உக்ரைனுக்கு ஏவுகணை பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

March 20, 2026 5:53 pm

உக்ரைனுக்கு ஏவுகணை பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

மத்திய கிழக்கில் நடைபெறும் போரின் காரணமாக உக்ரைனுக்கு ஏவுகணை பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி விலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஈரானுடனான இஸ்ரேல்–அமெரிக்க போர் நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறார் என ஜெலென்ஸ்கி  குற்றஞ்சாட்டியுள்ளார்.

அது உக்ரைனை பலவீனப்படுத்துவதோடு, அமெரிக்காவின் ஆதரவு மற்றும் வளங்களையும் வேறு திசைக்கு திருப்பும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“புடினுக்கு, ஈரானில் நீண்டகால போர் ஒரு நன்மை. இது எரிசக்தி விலைகளை பாதிப்பதோடு, அமெரிக்காவின் ஆயுத கையிருப்பையும், வான்வழி பாதுகாப்பு உற்பத்தியையும் குறைக்கிறது. இதனால் நமக்கும் வளங்களின் பற்றாக்குறை ஏற்படுகிறது” என ஜெலன்ஸ்கி மேலும் கூறியுள்ளார்.

https://oruvan.com/ukraine-faces-missile-shortage/

மின்சார வரியை குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகிறது

3 weeks 3 days ago

மின்சார வரியை குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகிறது

Mar 20, 2026 - 06:40 AM

மின்சார வரியை குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகிறது

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மின்சாரத்திற்கான வரிகளைக் குறைக்கும் யோசனை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழியும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. 

இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் தெரிவித்துள்ளதாவது, 

சில சந்தர்ப்பங்களில், எரிவாயுவை விட மின்சாரத்திற்கு 15 மடங்கு வரை அதிக வரி விதிக்கப்படுகிறது. இது இவ்வாறு இருக்க முடியாது. 

மின்சார வரி விகிதங்களைக் குறைக்கவும், எரிபொருட்களை விட மின்சாரத்திற்கு குறைந்த வரி விதிக்கப்படுவதை உறுதி செய்யவும் நாங்கள் முன்மொழிவோம். 

நிறுவனங்கள் நிலக்கீழ் எரிபொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாற்று வழி முறைகளை நோக்கி நகர்வதற்கு உதவும் முதலீடுகள் மூலம், தொழில்துறைக்கு நிதி உதவியை வழங்குமாறும் அவர் ஐரோப்பிய தலைவர்களிடம் முன்மொழிந்துள்ளதாகக் கூறினார். 

ஈரானில் மோதல் தொடங்குவதற்கு முன்னிருந்த நிலையை விட, தற்போது ஐரோப்பாவில் எரிவாயுவின் விலையானது இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmmy7a7ei0001356p6zcrngn1

இரானிய எண்ணெய் மீதான தடைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கும் அமெரிக்கா

3 weeks 3 days ago

இரானிய எண்ணெய் மீதான தடைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கும் அமெரிக்கா

இரானிய எண்ணெய் மீதான தடைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கும் அமெரிக்கா

பட மூலாதாரம்,EPA

இரானில் தாங்கள் நடத்தி வரும் போரினால் எரிசக்தி சந்தைகளில் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த அமெரிக்கா போராடி வரும் நிலையில், பகுதியளவிலான இரானிய கச்சா எண்ணெய் மீதான தடைகளை நீக்குவது குறித்து அந்நாடு பரிசீலித்து வருகிறது.

அமெரிக்காவின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் ஃபாக்ஸ் நேர்காணல் ஒன்றில் இந்த யோசனையை முன்வைத்தார், ‘சர்வதேச அளவில் அதிக எண்ணெய் கிடைக்க இது உதவும்’ என்றும் கூறினார்.

மத்திய கிழக்கு போர் காரணமாக கப்பல் போக்குவரத்து மற்றும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் எரிசக்தி விலைகள் உயர்ந்து வருகின்றன.

இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டால், அது நீண்டகால அமெரிக்கக் கொள்கையின் ஒரு வியக்கத்தக்க மாற்றமாக அமையும். மேலும் இது மிகவும் நிச்சயமற்ற பலனைக் கொண்ட ஒரு நடவடிக்கையாக இருக்கும்.

இது கச்சா எண்ணெய் விலைகளில் குறைந்த அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்தும் என்றும், இரானிய ஆட்சிக்குச் செல்லும் நிதியை இது அதிகரிக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

போருக்கு முன்பு, இரானில் இருந்து வெளியேறும் எண்ணெயை வாங்கும் முதன்மை நாடாக சீனா இருந்தது; அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் விதித்த தடைகள் காரணமாக பெரும் தள்ளுபடி விலையில் அந்த எண்ணெய் பேரல்களை அது பெற்று வந்தது.

வியாழக்கிழமை (மார்ச் 19) அன்று ஃபாக்ஸ் பிசினஸ் நிகழ்ச்சி ஒன்றில் அளித்த நேர்காணலில், “விற்பனைக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிப்பது, இந்தியா, ஜப்பான் மற்றும் மலேசியா போன்ற எண்ணெய் தேவைப்படும் பிற நாடுகளுக்கு அந்த விநியோகங்களில் பெரும்பகுதியைத் திசைதிருப்ப உதவும் என்றும், அதே நேரத்தில் சீனாவை ‘சந்தை விலையை’ செலுத்த நிர்பந்திக்கும்” என்றும் பெசென்ட் கூறினார்.

ஏற்கெனவே கடலில் இருக்கும் இரானிய கச்சா எண்ணெய் மீதான விற்பனைக் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அவர் கூறினார், இது சுமார் 140 மில்லியன் பேரல்கள் ஆகும். இது 10 முதல் 14 நாட்களுக்கு உலகளாவிய எண்ணெய் விலைகளைக் குறைக்கும் என்று அவர் மதிப்பிட்டுள்ளார்.

ஆனால், சாத்தியமான இந்த விலக்கு எவ்வாறு செயல்படும் அல்லது விற்பனை மூலம் கிடைக்கும் பணம் இரானிய அரசாங்கத்திற்குத் திரும்பச் செல்வதைத் தடுப்பதற்கான விதிகளை இது உள்ளடக்குமா என்பது குறித்த விரிவான தகவல்களை பெசென்ட் தெரிவிக்கவில்லை. இந்த முன்மொழிவு குறித்த கூடுதல் விவரங்களை வழங்க அமெரிக்க கருவூலத் துறை மறுத்துவிட்டது.

இரானிய எண்ணெய் மீதான தடைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கும் அமெரிக்கா

ஜப்பான் பிரதமர் முன்பு ‘பேர்ல் ஹார்பர்’ குறித்துப் பேசிய டிரம்ப்

3 weeks 3 days ago

ஜப்பான் பிரதமர் முன்பு ‘பேர்ல் ஹார்பர்’ குறித்துப் பேசிய டிரம்ப்

ஜப்பானியப் பிரதமர் முன்பு ‘பேர்ல் ஹார்பர்’ குறித்துப் பேசிய டிரம்ப்

பட மூலாதாரம்,EPA/Shutterstock

படக்குறிப்பு,ஜப்பானியப் பிரதமர் சனாயே டகாயிச்சி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

இரான் மீதான தாக்குதல் குறித்து ஜப்பான் மற்றும் பிற நட்பு நாடுகளுக்குத் தெரிவிக்கவில்லை என்றும், ஏனெனில் அது ஆச்சரியம் அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று தான் விரும்பியதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

ஜப்பானியப் பிரதமர் சனாயே டகாயிச்சியுடன் ஒரு கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது டிரம்ப் இந்த கருத்தைத் தெரிவித்தார்.

இரு தலைவர்களின் இந்தச் செய்தியாளர் சந்திப்பின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது, மேலும் இது குறித்துக் கருத்துகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

செய்தியாளர் சந்திப்பில், அதிபர் டிரம்ப்பிடம், 'தாக்குதலுக்கு முன்பு, அது குறித்து ஜப்பான் போன்ற தனது ஐரோப்பிய மற்றும் ஆசிய நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா ஏன் தெரிவிக்கவில்லை?' என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், "ஒன்று, நாங்கள் அதிக சமிக்ஞைகளை கொடுக்க விரும்பவில்லை. நாங்கள் உள்ளே நுழைந்தபோது, மிகத் தீவிரமாகச் செயல்பட்டோம். நாங்கள் யாரிடமும் இதைப் பற்றிச் சொல்லவில்லை, ஏனென்றால் நாங்கள் ஆச்சரியப்படுத்த விரும்பினோம். இத்தகைய ஆச்சரியங்கள் குறித்து ஜப்பானை விட நன்றாக அறிந்தவர்கள் யார் இருக்கிறார்கள், சரியா?" என்று கூறினார்.

இதற்கிடையில், டிரம்ப் பேர்ல் ஹார்பர் (Pearl Harbor) குறித்தும் குறிப்பிட்டார்.

இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் அமெரிக்கக் கடற்படைத் தளமான பேர்ல் ஹார்பர் மீது தாக்குதல் நடத்தியது.

ஜப்பானியப் பிரதமர் சனாயே டகாயிச்சி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வியாழக்கிழமை (மார்ச் 19) வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார்.

ஜப்பான் பிரதமர் முன்பு ‘பேர்ல் ஹார்பர்’ குறித்துப் பேசிய டிரம்ப்

‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு

3 weeks 3 days ago

‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு

‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம்,Getty Images

இரான் மீதான போர் குறித்து நேற்று (மார்ச் 19) உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “எவ்வளவு காலம் தேவையோ அதுவரை போர் நடக்கும், நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு இந்தப் போரில் வெற்றி பெறுவோம்” என்று கூறியுள்ளார்.

இரானின் ஏவுகணை மற்றும் டிரோன் ஆயுதக் கிடங்கு, ஏவுகணை ஏவுதளங்கள், மற்றும் ஏவுகணை பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் போன்ற அணுசக்தி உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட, இரானில் இஸ்ரேலிய ராணுவம் அழித்து வரும் அனைத்து விஷயங்களையும் நெதன்யாகு பட்டியலிட்டார்.

“இரானியத் தொழில்துறையை இதற்கு முன்பு நாம் தாக்காத வகையில் அழித்து வருகிறோம், ஆனால் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் உள்ளன, அதை நாம் செய்யப்போகிறோம்” என்றும் அவர் கூறினார்.

“இஸ்ரேல் தான் அமெரிக்காவை இரானுடனான மோதலுக்குள் இழுத்துச் சென்றது என்ற ‘போலிச் செய்தியை’ தான் அகற்ற விரும்புவதாக” நெதன்யாகு கூறினார்.

"அதிபர் டிரம்ப் என்ன செய்ய வேண்டும் என்று யாராவது அவரிடம் போய் சொல்ல முடியும் என்று உண்மையிலேயே நீங்கள் நினைக்கிறீர்களா? அதற்கு வாய்ப்பே இல்லை," என்று அவர் கூறினார்.

“டிரம்ப் எப்போதும் அமெரிக்காவிற்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும் எது நல்லது என்று அவர் நினைக்கிறாரோ அதன் அடிப்படையிலேயே தனது முடிவுகளை எடுக்கிறார்" என்றும் அவர் தெரிவித்தார்.

‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு

ஹோர்மூஸ் நீரிணையில் சுங்க கட்டணம் வசூலிக்க இரான் பரிசீலனை

3 weeks 3 days ago

ஹோர்மூஸ் நீரிணையில் சுங்க கட்டணம் வசூலிக்க இரான் பரிசீலனை

ஹோர்மூஸ் நீரிணை, இரான்

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,கோப்புப் படம்

உலக நாடுகள் ஹோர்மூஸ் நீரிணையைப் பயன்படுத்த இரானுக்கு சுங்க கட்டணம் மற்றும் வரிகள் செலுத்துவதை கட்டாயமாக்கும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக இரான் நாடாளுமன்ற உறுப்பினர் சோமயே ரஃபீ தெரிவித்துள்ளார்.

கப்பல்களின் பயணம், எரிபொருள் மற்றும் உணவுப் போக்குவரத்துக்கு ஹோர்மூஸ் நீரிணை பாதுகாப்பான பாதையாக பயன்படுத்தப்படுகிறது என்றால் இந்த கட்டணங்கள் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

இஸ்னா செய்தி முகமையின் வெளியான செய்தியின்படி, இரான் தலைநகரில் உள்ள வலியசர் சதுக்கத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியபோது இந்தக் கருத்தை அவர் தெரிவித்திருந்தார்.

"நமது எதிரிகளின் முந்தைய சௌகரியங்களை அவர்களுக்கு இல்லாமல் செய்துவிட்டோம். அவர்களால் இந்த யதார்தத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை." என்றார்.

ஹோர்மூஸ் நீரிணையில் சுங்க கட்டணம் வசூலிக்க இரான் பரிசீலனை

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!

3 weeks 3 days ago

F-35.jpg?resize=750%2C375&ssl=1

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!

ஈரானின் மீது போர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தபோது, அமெரிக்காவின் F-35 ரக மறைமுகத் தாக்குதல் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் அவசரமாகத் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

விமானி உயிர் தப்பி, தற்போது சீரான நிலையில் உள்ளார். 

ஆனால், இந்தச் சம்பவம் குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தனது வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி அந்த விமானத்தை வெற்றிகரமாகத் தாக்கியதாக ஈரான் கூறியுள்ள நிலையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

இதன் மூலம், தற்போதைய மோதலின் போது அமெரிக்காவின் மிகவும் மேம்பட்ட ஜெட் விமானங்களில் ஒன்றை தெஹ்ரான் தாக்குவது இதுவே முதல் முறையாக இருக்கலாம். 

இந்தக் கூற்றை வொஷிங்டன் முழுமையாக உறுதிப்படுத்தவில்லை, ஆனால் ஈரானியத் தாக்குதல் என்று நம்பப்படும் ஒன்றால் அந்த விமானம் தாக்கப்பட்டதை அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் செய்தித் தொடர்பாளரான கேப்டன் டிம் ஹாக்கின்ஸ், 

ஐந்தாம் தலைமுறை ஜெட் விமானம் ஈரான் மீது ஒரு போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது தரையிறங்க நிர்பந்திக்கப்பட்டதாகக் கூறினார்.

விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது, விமானியும் சீரான நிலையில் உள்ளார் என்று கூறிய அவர், இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இது ஏன் கவனிக்கப்பட வேண்டிய விடயம்

F-35 லைட்னிங் II என்பது சாதாரண போர் விமானம் மட்டுமல்ல; அது அமெரிக்க மற்றும் நேச நாடுகளின் வான் சக்தியின் முதுகெலும்பாகவும், இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் மேம்பட்ட போர் விமானங்களில் ஒன்றாகவும் பரவலாகக் கருதப்படுகிறது.

ஒரு விமானத்துக்கு 100 மில்லியன் டொலருக்கும் அதிகமான செலவில், 19க்கும் மேற்பட்ட நாடுகளால் இயக்கப்படும் அல்லது ஆர்டர் செய்யப்பட்ட F-35, உலகின் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானமாகும்.

இது மறைந்திருந்து தாக்கும் திறன், மேம்பட்ட உணர்விகள் மற்றும் வலையமைப்புப் போர் திறன்களை ஒருங்கிணைத்து, வான்வழிப் போர் நடத்தப்படும் விதத்தை அடியோடு மாற்றியமைக்கிறது.

இதன் பிரதான விடயம் மறைந்திருந்து தாக்கும் திறனாகும். 

இந்த விமானம் அதன் வடிவம், பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் உள்ளக ஆயுதக் கிடங்குகள் மூலம் ரேடார் கண்டறிதலில் இருந்து தப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்தமாக இது எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்த விமானத்தை கண்காணிப்பதையோ அல்லது குறிவைப்பதையோ மிகவும் கடினமாக்குகிறது.

https://athavannews.com/2026/1469336

ஈரான் ஆட்சி “இன்னும் நிலைத்துள்ளது” ஆனால் இராணுவ திறன்கள் பெரிதும் சிதைந்துள்ளன – அமெரிக்க தேசிய உளவுத்துறை

3 weeks 3 days ago

ஈரான் ஆட்சி “இன்னும் நிலைத்துள்ளது” ஆனால் இராணுவ திறன்கள் பெரிதும் சிதைந்துள்ளன – அமெரிக்க தேசிய உளவுத்துறை

19 Mar, 2026 | 04:10 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

ஈரானின் ஆட்சி தற்போது “உறுதியாக” தொடர்ந்தாலும், அதன் தலைமை மற்றும் இராணுவத் திறன்கள் மீதான தாக்குதல்களால் அது பெருமளவில் சிதைந்துள்ளதாக அமெரிக்க தேசிய உளவுத்துறையின் பணிப்பாளர் துளசி கப்பார்ட் (Tulsi Gabbard) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் குழுவில் நடைபெற்ற விசாரணையில் சாட்சியமளித்த அவர், ஈரான் தொடர்பான உளவுத்துறை மதிப்பீடுகள், தற்போதைய மத்திய கிழக்கு நிலைமை மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாக விளக்கமளித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களால் ஈரானின் இராணுவ கட்டமைப்பு மற்றும் அணுசக்தி உள்கட்டமைப்புகள் “பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன” என உளவுத்துறை மதிப்பிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஈரான் தற்போது அதன் அணுசக்தி திட்டத்தை மீண்டும் மீட்டெடுக்க முயற்சிப்பதாகவும், முன்னைய சேதத்திலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தலா (Imminent Threat) என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க துளசி கப்பார்ட் மறுத்தார். “எது அச்சுறுத்தல் என்பதை தீர்மானிப்பது ஜனாதிபதியின் அதிகாரம்” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து உளவுத்துறை முன்னதாகவே கணித்திருந்ததாகவும், அதற்காக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், ஈரான் அந்த நீரிணையை தன் கட்டுப்பாட்டில் எடுக்கக்கூடும் என்ற அபாயமும் முன்கூட்டியே மதிப்பிடப்பட்டதாக கூறப்பட்டது.

காங்கிரஸ் விசாரணையின் போது, சிஐஏ பணிப்பாளர் ஜோன்ன் ரொட்க்ளிஃப் (John Ratcliffe) உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னாள் பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரி ஒருவர் ஈரான் “உடனடி அச்சுறுத்தல் இல்லை” எனக் கூறி பதவியிலிருந்து விலகியிருந்த நிலையில், ரொட்க்ளிஃப் அதற்கு மாறாக, ஈரான் நீண்டகாலமாக அமெரிக்காவிற்கு நேரடி அச்சுறுத்தலாகவே இருந்து வருவதாக வாதிட்டுள்ளார்.

விசாரணையின் போது, ஈரானின் அணுசக்தி திட்டம் “முற்றிலும் அழிக்கப்பட்டது” என்ற எழுத்துபூர்வ அறிக்கையின் சில பகுதிகளை துளசி கப்பார்ட் வாசிக்கவில்லை எனக் கூறப்பட்டதால் அரசியல் சர்ச்சை எழுந்தது.

இதுகுறித்து கேள்வி எழுப்பிய செனட்டர் ஒருவர், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிலைப்பாட்டுக்கு முரணான பகுதிகள் தவிர்க்கப்பட்டதா என சந்தேகம் வெளியிட்டார். இதற்கு பதிலளித்த கப்பார்ட், அறிக்கை நீளமாக இருந்ததால் சில பகுதிகள் சுருக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

2025 ஜூனில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் அணுசக்தி திறனை குறிவைத்து நடத்திய 12 நாள் இராணுவ நடவடிக்கைகளின் பின்னணியில் இந்த தற்போதைய அரசியல் மற்றும் உளவுத்துறை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

https://www.virakesari.lk/article/241381

ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதலைத் தணிக்க ஜீ - 7 நாடுகளுடன் கனடா முன்னெடுக்கும் கூட்டு முயற்சி

3 weeks 4 days ago

ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் மோதலைத் தணிக்க ஜீ - 7 நாடுகளுடன் கனடா முன்னெடுக்கும் கூட்டு முயற்சி

Published By: Digital Desk 3

19 Mar, 2026 | 03:42 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

ஈரான் மற்றும் அமெரிக்கா–இஸ்ரேல் இடையேயான மோதல்களைத் தணித்து, பிராந்திய போர் மேலும் விரிவடைவதைத் தடுப்பதற்காக ஜீ -7 நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைந்து ஒரு கூட்டு இராஜதந்திர முயற்சியை கனடா முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand), மோதலின் தீவிரத்தைக் குறைக்கும் நோக்கில் ஒரு “கொள்கை ஆவணத்தை” (Document of Principles) தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த ஆவணம், பிராந்தியத்தில் போர் பரவுவதைத் தடுப்பதோடு, பொதுமக்கள் மற்றும் அண்டை நாடுகளுக்கு ஏற்படும் தாக்கங்களை குறைப்பதற்கும் உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

லண்டனில் பிரிட்டன் வெளியுறவுச் செயலர் யவெட் கூப்பர் (Yvette Cooper) உடன் நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் பேசிய அனிதா ஆனந்த், பிரான்ஸ் தலைமையில் நடைபெறவுள்ள அடுத்த ஜீ -7 கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த மோதலில் கனடா நேரடியாக இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும், எதிர்காலத்திலும் அதில் பங்கேற்கும் திட்டம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அதேவேளை, ஹோர்முஸ் நீரிணை பாதிக்கப்பட்டதால் உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து கவலை தெரிவித்தார்.

கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) சமீபத்தில் டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் கூறிய கருத்துகளை மேற்கோள் காட்டிய அனிதா ஆனந்த், “மத்திய சக்திகள் (Middle Powers)” ஒன்றிணைந்து செயல்பட்டால் உலக அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்தார்.

அமெரிக்காவுடனான வர்த்தக சிக்கல்களுக்கு மத்தியில், கனடா தனது சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருவதாகவும், கடந்த ஆறு மாதங்களில் நான்கு கண்டங்களில் 12-க்கும் மேற்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா அல்லாத நாடுகளுடன் வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஈரான் மீண்டும் தாக்கப்பட மாட்டோம் என்ற உறுதியை கோரினாலும், தற்போதைய சூழலில் அத்தகைய உத்தரவாதம் வழங்குவது சிக்கலானதாக உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கியமான சவால்கள் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.

https://www.virakesari.lk/article/241376

ஈரான் போருக்காக 200 பில்லியன் டொல‍ரை கோரும் பென்டகன்!

3 weeks 4 days ago

Pentagon.jpg?resize=750%2C375&ssl=1

ஈரான் போருக்காக 200 பில்லியன் டொல‍ரை கோரும் பென்டகன்!

ஈரான் போருக்கு நிதியளிப்பதற்காக 200 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை அமெரிக்க காங்கிரஸிடம் கோருவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு பென்டகன் வெள்ளை மாளிகையைக் கேட்டுக்கொண்டுள்ளதாக ஒரு மூத்த நிர்வாக அதிகாரியை மேற்கோள் காட்டி வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஈரானுக்கு எதிரான போருக்கு அமெரிக்க மக்களின் ஆதரவு மந்தமாக இருப்பதாலும், ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருவதாலும் இந்த நிதிக் கோரிக்கை காங்கிரஸில் ஒரு பெரிய அரசியல் போராட்டத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அந்தப் பத்திரிகை விளக்கியுள்ளது.

இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், பெப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தப் போர் நிதி வலு சேர்க்கும் என்றும், மோதலின் போது பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் என்றும் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையின் அறிக்கை தெரிவிக்கிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆகின்றன. 

இதுவரை அமெரிக்கப் படைகள் 7,800-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளன, 8,000-க்கும் மேற்பட்ட போர் விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளன, மேலும் 120-க்கும் மேற்பட்ட ஈரானியக் கப்பல்களைச் சேதப்படுத்தியுள்ளன அல்லது அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை கூறியுள்ளது.

போரின் முதல் வாரத்திலேயே, அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளுக்காக 11 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை செலவிட்டிருந்தது. 

தற்போது மேலதிகமாக செலவிடப்படும் 200 பில்லியன் டொலருடன் சேர்த்து, போருக்கான அமெரிக்காவின் மொத்தச் செலவினம், 2025 ஆம் ஆண்டில் 356.51 பில்லியன் டொலர்களாக இருக்கும் ஈரானின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பாதியை விட அதிகமாக இருக்கக்கூடும் என ‘World Meters‘ அமைப்பு தெரிவித்துள்ளது.

2026 நிதியாண்டிற்கான பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டிற்காக 838.5 பில்லியன் டொலரை காங்கிரஸ் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதாகவும் செனட் நிதி ஒதுக்கீட்டுக் குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2026/1469194

இரானின் போர் பதிலடியை முன்னெடுத்த லரிஜானி மரணம் - இனி என்ன நடக்கும்?

3 weeks 4 days ago

இரானின் போர் பதிலடியை முன்னெடுத்த லரிஜானி மரணம் - இனி என்ன நடக்கும்?

கருப்பு உடையில் அலி லாரிஜானி

பட மூலாதாரம்,Anadolu via Getty Images

படக்குறிப்பு, இரான் நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் பிரமுகர்களில் ஒருவராக லரிஜானி நீண்டகாலமாகக் கருதப்படுகிறார்.

கட்டுரை தகவல்

  • அமீர் அசிமி

  • பிபிசி பாரசீக சேவை

  • 18 மார்ச் 2026

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில், இரானிய பாதுகாப்பு தலைவர் அலி லரிஜானி கொல்லப்பட்டார். ஒரு முக்கியமான தருணத்தில் இஸ்லாமிய குடியரசின் மிகவும் அனுபவம் வாய்ந்த செல்வாக்கு மிக்க கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரை இஸ்ரேல் கொன்றுள்ளது.

லரிஜானி ஒரு ராணுவத் தளபதி அல்ல, ஆனால் அவர் இரானிய அரசின் உத்தி ரீதியான முடிவுகளை வடிவமைப்பதில் ஒரு மையமான நபராக இருந்தார்.

தேசிய பாதுகாப்பு உயர் கவுன்சிலின் செயலாளராக போர், ராஜதந்திரம் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த முடிவெடுக்கும் மையத்தில் அவர் அமர்ந்திருந்தார்.

அவரது குரல் இந்த அமைப்பு முழுவதும், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான இரானிய அரசின் மோதலை நிர்வகிப்பதில் அதிக மதிப்பைக் கொண்டிருந்தது.

இரானின் போர் பதிலடியை நிர்வகித்த லரிஜானி மரணம் - இனி என்ன ஆகும்?

பட மூலாதாரம்,Getty Images

பிப்ரவரி 28 அன்று அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்ட பிறகு, லரிஜானி எதிர்ப்பு தொனியை வெளிப்படுத்தினார். இரான் ஒரு நீண்ட மோதலுக்குத் தயாராக இருப்பதாக குறிப்பால் உணர்த்தினார்.

அவரது மரணம், ஒரு சில வாரங்களுக்குள் பல மூத்த இரானிய அதிகாரிகள் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்ட ஒரு விரிவான தாக்குதல் நடவடிக்கைக்கு மத்தியில் நிகழ்ந்துள்ளது. இந்த முறைமை, போர்க்காலத்தில் இரானிய அரசுத் தலைமை அமைப்பை பலவீனப்படுத்தும் ஒரு தொடர்ச்சியான முயற்சியைக் காட்டுகிறது.

மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதிலும், லரிஜானி பெரும்பாலும் இரான் நாட்டிற்குள் ஒரு யதார்த்தவாதியாக விவரிக்கப்பட்டார்.

அவர் சித்தாந்த விசுவாசத்தை ஒரு நடைமுறை ரீதியான அணுகுமுறையுடன் இணைத்தார்.

பேச்சு மூலம் தாக்கத்தை ஏற்படுத்துவதை விட கணக்கிடப்பட்ட உத்திகளுக்கு முன்னுரிமை அளித்தார்.

மேற்கத்திய சக்திகளுடனான பேச்சுவார்த்தைகளில் அவர் மிகுந்த சந்தேகத்துடனேயே இருந்தார், ஆனால் சீனாவுடனான இரானிய அரசின் நீண்டகால ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் ஒரு தூதராகச் செயல்படுவது உட்பட, முக்கிய ராஜ்ஜீய முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.

லாரிஜானி மற்றும் பிற அரசியல்வாதிகள் மற்றும் மதகுருமார்கள் இரான் கொடிக்கு அருகில் நிற்கிறார்கள்.

பட மூலாதாரம்,Anadolu via Getty Images

படக்குறிப்பு,அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களின் முதல் சுற்றில் கொல்லப்பட்ட இரானிய முன்னாள் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி உடன் லரிஜானி (இடமிருந்து நான்காவது) இருக்கும் படம்.

மூன்று முக்கிய பொறுப்பு

அவரது மரணம் குறித்த செய்தி வந்த நேரத்தில், லரிஜானி மூன்று முக்கிய நெருக்கடிகளை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார்.

போர்தான் அதில் முதலாவது நெருக்கடி. இரான் ஒரு நீண்ட போராட்டத்திற்குத் தயாராக வேண்டும் என்றும், ஹோர்மூஸ் நீரிணையை மூடுவது உட்பட, பிராந்தியம் முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும் போரை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.

இரண்டாவது, உள்நாட்டு அமைதியின்மை ஆகும். இது பொருளாதார பிரச்னைகளுடன் தொடங்கியது. ஆனால் விரைவில் இஸ்லாமியக் குடியரசை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்ட பரந்த போராட்டங்களாக மாறியது. இவை நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களைக் கொன்ற ஒடுக்குமுறையைச் சந்தித்தன.

மூன்றாவது, இரானிய அரசின் அணுசக்தித் திட்டம் மற்றும் முடங்கிப்போயுள்ள அமெரிக்காவுடனான மறைமுக பேச்சுவார்த்தைகள் ஆகும். இவை இரண்டுமே ராணுவத் தாக்குதல்களால் ஏற்கெனவே சீர்குலைக்கப்பட்டிருந்தன.

அவர் கொல்லப்பட்டது இந்த விவகாரங்களைத் தீர்க்கப்படாமல் விட்டுள்ளதுடன், மிகவும் பலவீனமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் இன்னும் அறியப்படாத ஓர் அடுத்த தலைமைக்கு இவற்றை மாற்றுகிறது.

உலகளாவிய எரிசக்தி சந்தைகளைச் சீர்குலைப்பதன் மூலம் இரான் ஓரளவு மீண்டு வரும் தன்மையைக் காட்டினாலும், அது தொடர்ச்சியான வான் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது.

எந்தவொரு புதிய மூத்த பிரமுகரும் உடனடியாக இலக்கு வைக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்வார்.

லரிஜானி

பட மூலாதாரம்,Getty Images

எதை நோக்கி செல்லும்?

இது அதிகாரத்தை ராணுவத்தை நோக்கி மேலும் நகர்த்தக்கூடும்.

அதிபர் மசூத் பெசெஷ்கியனின் சமீபத்திய கருத்துக்கள், மூத்த தலைமைச் செயலிழந்தால் நடவடிக்கை எடுப்பதற்கான விரிவான அதிகாரம் ஆயுதப்படைப் பிரிவுகளுக்குத் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளதை உணர்த்துகின்றன.

நடைமுறையில், இது முடிவுகள் விரைவாக எடுக்கப்படுவதைக் குறிக்கலாம், ஆனால் குறைந்த மத்திய ஒருங்கிணைப்புடன் இருக்கும்.

அடுத்த தலைமைகளை தேர்ந்தெடுத்து நிர்வகிப்பதில் தலைமை சிரமப்படுவதற்கான அறிகுறிகளும் உள்ளன. இரானிய அரசு பொது அறிவிப்புகளைத் தாமதப்படுத்தியுள்ளதுடன், புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி உள்ளிட்ட சில பிரமுகர்களைப் பெரும்பாலும் வெளி உலக கண்ணில் படாமல் வைத்துள்ளது.

இது பாதுகாப்பு காரணங்களுக்காகவா அல்லது உள் நிச்சயமற்ற தன்மையாலா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

குறுகிய காலத்தில், இதன் விளைவு மிகவும் நிலையற்ற ஒரு சூழ்நிலையாக இருக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக போரில் கடினமான ராணுவ நிலைப்பாடு மற்றும் உள்நாட்டில் கடுமையான ஒடுக்குமுறை போன்றவற்றுக்கு வழிவகுக்கலாம்

இருப்பினும், காலப்போக்கில், மூத்த தலைவர்களைத் தொடர்ந்து இழந்து வரும் ஓர் அமைப்பு, குறிப்பாக 90 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு நாட்டில், திறம்படச் செயல்படுவது கடினமாக இருக்கும்.

லரிஜானியின் மரணம் ஒரு தனி தலைவரின் இழப்பு மட்டுமல்ல. இது போரின் போக்கு மற்றும் இரானிய அரசின் நிலைத்தன்மை ஆகிய இரண்டையுமே பாதிக்கக்கூடிய ஒரு தலைமைத்துவ நெருக்கடியை தீவிரப்படுத்தும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg8gv84yklo

கட்டார், ஈரான் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

3 weeks 4 days ago

கட்டார், ஈரான் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

Mar 19, 2026 - 07:11 AM

கட்டார், ஈரான் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

ஈரானுக்குச் சொந்தமான 'தெற்கு பார்ஸ்' இயற்கை எரிவாயு வயல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் பாதுகாப்புப் படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளன. 

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலான ஈரானின் தெற்கு பார்ஸ் பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், அந்த எரிவாயு வயலுக்கு அருகில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன், அமெரிக்கா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் இந்தத் தாக்குதலின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். 

அதன்படி, கத்தார் நாட்டின் ராஸ் லாஃபான் தொழில் நகரத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதுடன், அங்குள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையமொன்று சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டார் மீது ஈரான் 5 ஏவுகணைகளை ஏவியுள்ளதாகவும், அவற்றில் 4 ஏவுகணைகளை கட்டார் முறியடித்த போதிலும், ஒரு ஏவுகணை ராஸ் லாஃபான் நகரில் விழுந்து வெடித்ததாக கட்டார் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள கட்டார், இது தனது தேசிய பாதுகாப்புக்கும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் நேரடி அச்சுறுத்தல் எனத் தெரிவித்துள்ளது. அத்துடன், தனது இறையாண்மையைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாகக் கூறியுள்ள கட்டார், அங்குள்ள ஈரான் இராணுவத்தினர், பாதுகாப்புப் படையினர் மற்றும் பணியாளர்களை 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. 

இதேவேளை, சவுதி அரேபியாவின் ரியாத் நகர் மீது ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை முறியடிக்கப்பட்ட போது, அதன் சிதறல்கள் விழுந்ததில் நால்வர் காயமடைந்துள்ளனர். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் விமானப்படை தளம் மற்றும் அபுதாபி நகர் மீதும் ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ள போதிலும், அவை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன. 

ஈரானின் இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்ரேலும் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. முதன்முறையாக வடக்கு ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன், ஈரானின் தாக்குதலில் டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்த 3 விமானங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சிவில் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கட்டார் அமீர் ஆகியோருடன் ஆலோசனைகளை நடத்தியுள்ளதாகவும் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmmwst1y30002356p13s3r9de

Checked
Mon, 04/13/2026 - 13:50
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe