02 Jul, 2025 | 01:22 PM

ரொபட் அன்டனி
இந்தியா இலங்கையின் மிகவும் நம்பகமான நண்பராகவும், மிகவும் நம்பத்தகுந்த பங்காளியாகவும் உள்ளது என்பதை தெரிவிக்கிறோம். நிபந்தனை இல்லாமல் நாங்கள் உதவிகளை செய்கிறோம். பதிலுக்கு நாங்கள் எதையும் கேட்பதில்லை. நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தை வளர்ப்பதிலும், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் நீடித்த உறவுகளை உருவாக்குவதிலும் இலங்கையின் உதவி மட்டுமே எங்களுக்குத் தேவையாகும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
இன்று நாம் இதுவரை கண்டிராத மிகச் சிறந்த உறவைக் கொண்டிருக்கிறோம் என்று நான் உறுதியாக கூறுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை வந்துள்ள இந்திய பெரு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுக்கான வரவேற்பு நிகழ்வு கொழும்பு ஐ.டி.சி. ரத்னதீப ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே உயர்ஸ்தானிகர் இதனை குறிப்பிட்டார்.
இலங்கை வந்துள்ள சஞ்சீவ் பூரி தலைமையிலான இந்தியாவின் பெரு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் குழு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது. ஜனாதிபதி, பிரதமர், வலுசக்தி அமைச்சர் ஆகியோரையும் சந்தித்து முதலீட்டு சந்தர்ப்பங்கள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.
இந்நிலையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் மேலும் உரையாற்றிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இலங்கையில் நல்ல அறிகுறிகளைக் காட்டும் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். இது வெறும் அரசாங்கம் மட்டுமல்ல. இந்தியாவின் பரந்த சமூகமும், வணிகங்களும் அதன் ஒரு பகுதியாக, ஒரு தேசிய முயற்சியாக எங்கள் முயற்சிகளை ஆதரிக்கின்றன.
இந்த பிரதிநிதிகள் குழு மிக விரிவான துறைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், நமது உறவின் கிட்டத்தட்ட அனைத்து பரிமாணங்களையும் உள்ளடக்கியிருப்பதற்காகவும் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
கடந்த ஆறு மாதங்களாக எமது உறவில் நாம் கண்ட மிகப் பெரிய வெற்றிகளின் பின்னணியில்தான் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. கடந்த டிசம்பரில் ஜனாதிபதி அனுர குமார இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்துடன் இது தொடங்கியது. அவர் பதவிக்கு வந்த பின்னர் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு விஜயம் அதுவாகும். அதைத் தொடர்ந்து ஏப்ரலில் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் மிக வெற்றிகரமான இலங்கை விஜயம் இடம்பெற்றது.
புதிய அரசாங்கத்தால் இலங்கையில் வரவேற்கப்பட்ட முதல் தலைவர் இந்திய பிரதமர் மோடி என்பது, எமது பார்வையில், இருதரப்பு உறவின் மிக அத்தியாவசியமான தன்மையைப் பிரதிபலிக்கிறது. நாங்கள் 'அண்டை நாடுகள் முதலில்' என்ற கொள்கையைக் கொண்டுள்ளோம். ஆனால் இலங்கை சில விஷயங்களிலாவது 'இந்தியா முதலில்' என்பதை நிரூபித்துள்ளது. இது ஒரு மிக மிக நேர்மறையான அறிகுறியாகும்.
ஜனாதிபதியின் விஜயத்தின்போது வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை மற்றும் பின்னர் பிரதமரின் விஜயத்தின்போது கையெழுத்திடப்பட்ட பல ஒப்பந்தங்கள் மூலம் எமது உறவை முன்னோக்கிக் கொண்டு செல்ல ஒரு மிக மிக வலுவான அடிப்படை உள்ளது. இது உறவின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்தியுள்ளது.
இணைப்பு, டிஜிட்டல்மயமாக்கல், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பு ஆகியவை எமது உறவின் ஐந்து முக்கிய தூண்களாகும். இவற்றில் ஒவ்வொன்றும் முன்னேறியுள்ளன. ஒவ்வொன்றும் புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன.
நாங்கள் இலங்கைக்கு மிக ஆழமாக அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த 13 அல்லது 14 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு மடங்குக்கும் அதிகமாக உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
2022இல் நாங்கள் இலங்கைக்கு வழங்கிய அவசரகால உதவியின்போது வழங்கப்பட்ட கடன்களுக்கான மறுசீரமைப்பு இம்பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியா இலங்கையின் மிகவும் நம்பகமான நண்பராகவும், மிகவும் நம்பத்தகுந்த பங்காளியாகவும் உள்ளது என்பதைத் தெரிவிக்கிறோம்.
நிபந்தனை இல்லாமல் இதை நாங்கள் செய்கிறோம். பதிலுக்கு நாங்கள் எதையும் கேட்பதில்லை. நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தை வளர்ப்பதிலும், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் நீடித்த உறவுகளை உருவாக்குவதிலும் உங்கள் உதவி மட்டுமே எங்களுக்குத் தேவையாகும்.
இந்த நன்மைகள் இலங்கைக்கு அதிகமாக இருந்தாலும் நாங்கள் பொருட்படுத்தமாட்டோம், ஏனென்றால் இலங்கை எமது சகோதர நாடு, இன்று நாம் இதுவரை கண்டிராத மிகச் சிறந்த உறவைக் கொண்டிருக்கிறோம் என்று நான் உறுதியாக கூறுவேன் என்றார்.
நிபந்தனைகள் இன்றியே இலங்கைக்கு உதவுகிறோம்; பதிலுக்கு நாங்கள் எதையும் கேட்பதில்லை - சந்தோஷ் ஜா | Virakesari.lk