1 day 21 hours ago
ம் ....வரதட்ஷனை இல்லாதவர்களை யாரும் பெண் பார்ப்பதில்லை, காதலிப்பதில்லை. தன் பெண் வாழவேண்டுமென்பதற்காகவே எத்தனையோ பெற்றோர் கடன் வாங்கி கலியாணத்தை நடத்தி பின் கடன் அடைக்க முடியாமல் தற்கொலை செய்துள்ளார்கள். வரதட்ஷனை கொடுக்க மாட்டேன் என அடம்பிடிப்பவர்கள் வாழ்நாள் எல்லாம் வாழாக்குமரி எனும் பட்டம். தன் பெண்ணுக்கு திருமணமாகிவிட வேண்டுமென பல லட்ஷங்களை செலவிடும் பெற்றோர் மாப்பிள்ளையின் தொழில், குடும்ப பின்னணி ஆராய்வதில்லை, பின் பெண் திரும்பி பிறந்த வீட்டுக்கு வந்தால் குடும்ப கௌரவம் போய் விடும், ஏனைய பிள்ளைகளுக்கு வரன் வராமல் போய்விடுமென சமாதானம் செய்து புகுந்த வீட்டுக்கே அனுப்பி வைக்கிறார்கள், அல்லது தமது பெற்றோர் பட்ட கஷ்ரம், படும் கஸ்ரம் கண்டு மேலும் கஷ்ரப்படுத்தாமல் தவறான முடிவை எடுக்கிறார்கள். இதுவே ஆண் வீட்டடாருக்கு வசதியாக போய்விடுகிறது. கிடாய் வளர்ப்பது போல் சீதன சந்தையில் விற்று விட தீனி போட்டு வளர்க்கிறார்கள், நல்ல பண்பை, தன் மானத்தை சொல்லிக்கொடுப்பதில்லை. காதலித்து தந்தையாகிய பின்னும் சீதனம் என்றவுடன் வாயைப்பிளந்துகொண்டு இன்னொரு கலியாணத்திற்கு சம்மதிக்கிறார்கள். நம்பிய பெண்ணை கைவிட்டு அசிங்கப்படுத்துகிறார்கள். இதுவே பெண் செய்தால் ஏற்றுக்கொள்வதில்லை. பெற்றோர் பெண்குழந்தைகளை வெறுப்பதற்கும் சிறுவயதில் திருமணம் செய்து வைப்பதற்கும், சீதன தொகை உயர்வுக்கும் காரணமாகிறது. அதிக சீதனம் கொடுப்பதோடு வாழ்நாள் பிரச்சனைகளையும் ஏற்படுத்திக்கொள்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு நிச்சயம் செய்கிறார்கள் பின் வேறொரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் காரணம், சீதனச்சந்தையில் அதிக விலைகொடுத்து வாங்கிவிட்டார்கள். சீதனம் எனும் பிரச்சனையால் கரையேறாக் குமரிகளும் தன்மானம் கெட்ட கழுதைகளும் பெரும் சுமையாக உள்ளது. படித்த பெண்ணுக்கு அதிக வரதட்சனை. காரணம் பெண்ணை விட படித்த, மேலான வேலை பார்க்கும் மாப்பிளை என்பதால். படித்த மேலான வேலை பார்க்கும் ஆணுக்கு ஒரு பெண்ணை காப்பாற்ற முடியாதா? அப்படிப்பட்டவரை நம்பி எதற்கு பெண்ணை ஒப்படைகிறார்கள். இது சீதனமுமல்ல அந்தப்பெண்ணை பராமரிப்பதற்கு அளிக்கப்படும் தொகை, பிச்சை. அந்தப்பெண், பிள்ளை பெற மாட்டேன் என்றால் சம்மதிப்பார்களா? அல்லது அதற்கு பணம் கொடுப்பார்களா மாப்பிள்ளை வீட்டார்? சீதனத்தையும் கொடுத்து அந்த வீட்டுக்கு சம்பளமில்லாமல் மாடாய் உழைக்கிறாள் பெண். அதில் பெண் குழந்தை பிறந்தால் அது வேறு அவள்தான் தாக்கப்படுகிறாள். குழந்தை பெறாவிட்டாலும் வசை பாடுகிறார்கள், வேறு கலியாணம் செய்கிறார்கள். சீதனம் கொடுப்பது, பிள்ளை பெறுவதற்கு மட்டுமே பெண்ணை வாங்குகிறார்கள். அவளுக்கும் மனதுண்டு, ஆசை, விருப்பு வெறுப்பு உண்டு என்பதை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆணிற்த் தான் குறைபாடு என்பதை ஏற்க மறுக்கிறார்கள்.
1 day 22 hours ago
அரசின் மனித உரமை மீறல்கள் VS புலிகளின்மனித உரிமை மீறல்கள் – ஒன்றுக்கொன்று சமனாகுமா? நடராஜா_குருபரன் புலிகளின் துணுக்காய் முகாம் சமன் = செம்மணி மனிதப் புதைகுழி அல்ல! ஜே.வி.பியின் கொலைகள் சமன் = பட்டலந்தை வதை முகாம் அல்ல! 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தெற்கின் குடிமக்கள் கொல்லப்பட்டதல்ல. அனுராதபுரம், காத்தாண்குடி படுகொலைகள் + தற்கொலைத் தாக்குதல்கள் சமன் = முள்ளிவாய்க்கால் அல்ல! அரசுகள் செய்த தவறுகளும், ஆயுத அமைப்புகள் செய்த தவறுகளும் ஒழுக்கம், பொறுப்பு, சட்டம் என்பவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன. இரண்டையும் சமமாகக் மதிப்பிடுவதென்பது “திட்டமிட்டு மெதுவாக ஒழுங்குபடுத்தப்பட்ட துஷ்பிரயோகத்துக்கும்”, “தற்காப்பு அல்லது எதிர்ப்புச் செயல்களுக்குமான” வேறுபாட்டை நீர்த்துப் போகச் செய்துவிடும். அது நீதிக்கே விரோதமானது. குறிப்பாக “அரசுகள் செய்யும் மனித உரிமை மீறல்களை, யுத்தக் குற்றங்களை ஆயுத அமைப்புகள் செய்யும் மீறல்களுடன் ஒப்பிட்டு சமப்படுத்த முயலும் போது, மனித உரிமைகள், அதிகாரம் சார் ஒழுக்கநெறிகள், அரசியல் நியாயம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்க வேண்டும். ஒரு நாடு அல்லது குடிமக்களின் அரசு என்பது சட்டத்தால், மக்களால், சர்வதேச ஒப்பந்தங்களால் கட்டுப்படுத்தப்படும் ஒரு அதிகார அமைப்பு. மக்களின் பாதுகாப்பு, உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவை அரசின் அடிப்படை கடமைகளாக உள்ளன. அதனால், அரசு செய்த செய்யும் தவறுகள் "சாதாரணக் குற்றங்கள்" அல்ல அவை அதிகாரத்தையும், நம்பிக்கையையும் சிதைப்பது, சமூகத்திற்கே எதிரானது. அரசு மனித உரிமைகளை மீறும்போது, அது சட்ட ஒழுங்கின் மேல் தன்னுடைய உரிமையை இழக்கும். அவ்வாறு செய்யும் போது, அது அதிகாரத் தவறை மட்டுமல்லாமல், சமூக ஒழுங்கைப் பற்றிய புரிதலையும் பிழையாக்குகிறது. ஆனால் பெரும்பாலான ஆயுத அமைப்புகள் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்பெற்ற அமைப்புகள் அல்ல. அவை அரசுக்கு எதிராக, சட்டத்திற்கு பறம்பாக உருவாகின்றன. அவை பெரும்பாலும் ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பு முயற்சிகளாகவும் தோன்றுகின்றன. அரசிடம் அதிகாரமும் பொறுப்பும் இரண்டும் உள்ளன.ஆயுத அமைப்புகளிடம் குறிப்பட்ட அளவில் அதிகாரம் இருக்கலாம், ஆனால் பொறுப்புக்கட்டமைப்பு நிச்சயமற்றது. இதுவே அவற்றை அரசுகளுடன் ஒப்பீடு செய்ய முடியாத முக்கிய புள்ளியாகிறது. அரசும், அதற்கு சமமாக ஆயுதஅமைப்புகளும் தவறு செய்தார்கள் - தவறு செய்கிறார்கள் என்ற சமப்படுத்தல்கள் அரசியல் சீரழிவுக்கு வழிவகுக்கும். இது அதிகாரத்தின் தவறுகளையும், வன்முறையின் பிறழ்வுகளையும் சமமாக்கும் தோற்றத்தை உருவாக்குகிறது. இதனால், சமூகங்கள் வன்முறையின் காரணங்களை புரிந்துகொள்ளாமல், இருவரையும் ஒரே அளவில் நிராகரிக்கும் நிலையை அடைகின்றன. ஒருவேளை ஒரு ஆயுத இயக்கம் மனிதாபிமானமற்ற தாக்குதல்களை, பழிவாங்கல்களை, சித்திரவதைகளை, கொலைகளை செய்தது என்றால் அது தவறானதே. ஆனால் அதனைச் செய்வதற்கான சூழ்நிலைகளையும், அரசியல் ஒடுக்குமுறைகளையும், அடக்கு முறைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். சமூகவியல் பார்வையில், அது ஒரு வன்முறையின் வடிவக் குரல் (violence as political expression) என்ற கருத்து நிலவுகிறது. அதனைத் தவிர்த்து தவறுகளை மதிப்பீடு செய்வது, சமூகத்தின் அடிப்படை அமைப்பு ஏற்கும் வன்முறையை மறைக்கும் நிலையாகிவிடும். அரசுகள் உலகளாவிய ஒப்பந்தங்களுக்கு (UDHR, Geneva conventions, etc.) கையெழுத்திட்டுள்ளன. அதனால் அவர்களின் செயல்கள் ஒரு சர்வதேச நியாயக் கோட்பாட்டின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. மாறாக ஆயுத அமைப்புகள் பெரும்பாலும் அந்தப் பொறுப்புகளுக்கு உட்பட்டதாகவோ – உட்பட்டிருப்பதாகவோ இருப்பதில்லை. மக்கள் மீது ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடும், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும், தவறாக நடந்துகொள்ளும் கட்டமைக்கப்பட்ட அரசே, எதிர்ப்பு உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. ஆக அரசின் தவறுகளை - சட்டவியல், ஒழுக்கநெறி, சர்வதேச ஒப்பந்தம் ஆகிய அனைத்தையும் மீறும் கட்டமைக்கப்பட்ட துஷ்பிரயோகமாக சர்வதேச சட்டங்கள் வரையறுக்கின்றன. ஆயுத அமைப்பின் தவறுகள், பொறுப்பு இன்மை, சட்டப்பூர்வ அடையாளம் இன்மை, அல்லது அரசியல் கோணத்தின் கீழ் எதிர்ப்பு வன்முறை என இவை அனைத்தையும் கொண்ட ஒரு குழப்பநிலையாக கருதப்படுகின்றன. அதனால் "அவர்கள் செய்தார்கள், நாமும் செய்தோம்" என்பது நீதியின் மொழியல்ல. ஒவ்வொரு செயலையும் அதன் அதிகார பின்புலத்தோடு, அரசியல் சூழலோடு, சமூகக் காரணங்களோடு மட்டுமே மதிப்பீடு செய்யவேண்டும். மனித உரிமை மீறல்கள் பற்றி நாம் பேசுகிறோம். அவை பெரும்பாலும் இரு திசைகளில் நிகழ்கின்றன. ஒரு பக்கம் அரசுகள் – சட்டமும் அதிகாரமும் கையில் கொண்ட அமைப்புகள் – மக்கள் மீது வன்முறையை பிரயோகிக்கின்றன. மறுபக்கம், ஆயுதங்களைத் தூக்கிய இயக்கங்கள், எதிர்ப்பின் அரச எதிர்ப்பின் பெயரால், சில வேளைகளில் அத்துமீறல்களில் ஈடுபடுகின்றன. இவை இரண்டுமே தவறுதான். ஆனால், இவை இரண்டையும் ஒரே தட்டில் – ஒரே தராசில் வைத்து எடையிட முடியாது. ஒரு அரசு என்பது தனிப்பட்ட ஒருவரின் செயல்கள் அல்ல. அது ஒரு கட்டமைப்பின் நிழல். அதனை சட்டம் ஒழுங்கு, பொறுப்புக் கூறல் பதிலளிக்கும் கடப்பாடு, அதிகாரம், உரிமை என அனைத்தும் சூழ்ந்திருக்கின்றன. அதனால் அரசுகள் செய்வது சாதாரண தவறு அல்ல – அது தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நம்பிக்கையை சிதைப்பதாக, துரோகிப்பதாக அடையாளப்படுத்தப்படும் போர்குற்றம் செய்கிற அரசும், சித்திரவதை செய்கிற அதிகாரியும், நீதியின் முன் கொண்டுவரப்பட வேண்டியவர்களே. ஆனால் விடுதலை இயக்கங்களும், ஆயுத குழுக்களும் பெரும்பாலும் ஒரு அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் பிறக்கின்றன. அவற்றின் வன்முறைகளையும், செயல்களையும் தயவுதாட்சன்யம் இன்றி விமர்சிக்க வேண்டும். வெளிப்படுத்த வேண்டும் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், அந்த வன்முறையின் பிறப்பிடமும், கண்ணீரோடு சேர்ந்த கோபமும், கவலையும் சரியாக மதிப்பீடு செய்யப்படுவது அவசியம். ஒரு அரசு, தன்னுடைய குடிமக்களை வஞ்சிக்கையில், அந்த வஞ்சனையில் ஏற்பட்ட பிளவு, சில சமயங்களில் பாறைகளை பிளக்கும் நதியாக ஆயுதப் போராட்டமாக உருவெடுக்கின்றன. அந்த நதி திசை தவறி ஓடினாலும், அதன் பிறப்பிடம் – அரசின் அநீதி என்பதை மறக்கக் கூடாது. அதனால், அவர்கள் சித்திரவதை செய்தார்கள், இவர்கள் செய்ததில் என்ன தவறு?” என்ற வாதம், நீதியின் வேரில் நைவேதியமிட்டுவிடும். இரு பக்கமும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக இருவரையும் ஒரே தரத்தில் சமப்படுத்துவது, அதிகாரமற்றவரின் அழுகையையும், அதிகாரத்துடன் செய்கிற அடக்குமுறையையும் ஒரே கோடில் வரைவது போல ஆகிவிடும் அது ஒரு தவறான ஒப்பீடாகிவிடும். அதிகாரத்தின் பெயரில் செய்யப்படும் வன்முறைக்கும், அதிகாரமற்றவரின் எதிர்ப்பின் வன்முறைக்கும் இடையே ஒழுக்கமும் சட்டமும் வரையக்கூடிய வரம்புகள் உள்ளன. அரசுகளுக்கு சட்டப் பிணையங்கள் உள்ளன. அவை சர்வதேச ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. அவை மனித உரிமைகளை காக்கவே ஏற்படுத்தப்பட்டவை. அந்த அரசுகளே அந்த உரிமைகளை மீறும்போது, அது வன்முறையைவிட மோசமான ஒரு துரோகமாகிவிடும். அரசியல், சமூகம், நீதிமுறை – இவை மூன்றும் அதிகாரத்தின் தரக்கோலாக இருக்க வேண்டும். ஆனால், அவை அதிகாரவந்தத்துக்கு பணிந்து விடும் பொழுது, ‘நீதி’ என்ற வார்த்தையே அர்த்தமற்றதாக மாறிவிடும். நம் பார்வை நுணுக்கமாக இருக்க வேண்டும். தவறுகள் இருதரப்பிலும் இருக்கலாம். ஆனால், அவற்றை சமப்படுத்துவதில் உள்ள குற்றவுணர்வின்மையான தன்னிலை நம்மை மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும். அரசுகள் நிழல்களை விழுங்கும்போது, அந்த நிழல்களில் அடியெடுத்துச் செல்லும் எச்சங்களும் கூட நாம் மறக்கக்கூடாத உண்மைகள். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை புலிகளின் துணுக்காய் முகாமோடு ஒப்பீடு செய்து அதனை நீர்த்துப்போகச் செய்ய முனைவோர் இதனை கருத்தில் கொள்ள வேண்டும். #ஞாபகங்கள் #nadarajah_kuruparan #journalist # நடராஜா_குருபரன் https://www.facebook.com/share/p/1ZRkwXtxcE/
2 days 2 hours ago
02 JUL, 2025 | 05:27 PM

(எம்.மனோசித்ரா)
செம்மணி – சித்துபாத்தி மனித புதைக்குழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படக் கூடிய சகல ஒத்துழைப்புக்களும் வழங்கப்படுமென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (02) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி – மனித புதைக்குழி தொடர்பில் ஜூன் 29ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது தொடர்பில் அரசாங்கத்தின் அறிக்கை குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சினால் அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படக் கூடிய சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம்.
தற்போது இது தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் எம்மால் வேறு கருத்துக்கள் எதனையும் வெளியிட முடியாது. எவ்வாறிருப்பினும் இது குறித்த தகவல்கள் அரசாங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
செம்மணி – சித்துபாத்தி பகுதியில் இனங்காணப்பட்ட மனித புதைக்குழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் சிறுவர்கள் பயன்படுத்தக் கூடியவாறான நீல நிற பையொன்று மீட்கப்பட்ட நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை (01) பொம்மை உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. தற்போது இது தொடர்பில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையிலேயே அரசாங்கம் தனது நிலைப்பாட்டை இவ்வாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/219028