நாட்காட்டி
கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்)
	தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற தளபதி கேணல் ராயூ அவர்கள் புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார்.
	ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார்.
நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுரியமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்து முடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும்.
ஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும் தண்டனைகள் போராளிக்கு வேதனையைக் கொடுப்பதாக இருக்கக்கூடாது, பதிலாக விழிப்பைக் கொடுப்பதாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவர் கற்றறிந்த விடயங்களை இயலுமானவரை அவரின்கீழ் செயற்படும் போராளிகளுக்குக் கற்றுக்கொடுக்க அவர் தவறியதில்லை.
அதேபோல் போராளியொருவர் புதிய விடயம் ஒன்றை அவருக்குச் சொல்ல விளையும் போது ஒரு மாணவனின் மனநிலையோடு அவற்றைச் செவிமடுத்துக் கற்றுக்கொள்ளவும் அவர் தவறியதில்லை. அவருடைய இந்தக் குணாம்சமே பொறியியற்றுறைப் போராளிகளிடமிருந்து பல புதிய கண்டுபிடிப்புக்கள் வெளிவரக் காரணமாக அமைந்தது.
முடியாது என்றால் முயற்சிக்கவில்லை என்பதே ராயு அண்ணையின் வாக்காக இருந்தது. புதிய முயற்சிகளை ஆதரித்து ஊக்குவிக்கும் அதேவேளை, தேவையற்ற பொருள் மற்றும் வள விரயங்கள் எவற்றையும் அவர் அனுமதித்ததே கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் எந்தவொரு வேலையிலும் முழுத்திருப்தி அடைந்துவிட மாட்டார்.
ஒவ்வொரு கருவியையும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதாகத்தான் அவருடைய அறிவுரைகள் எப்போதும் இருக்கும். போராளிகளிடம் வேலைகளை ஒப்படைத்து விட்டு அந்த வேலைக்குரிய நுட்பங்கள் அப்போராளிகளின் சுய சிந்தனையிலிருந்து வெளிப்படவேண்டும் என்று எதிர்பார்ப்பார். அவ்வாறு அவர்களின் சிந்தனையில் உருவாகும் நுட்பங்களை அவர்களிடம் கற்றறிந்து அவற்றை மேம்படுத்துவது பற்றிக் கலந்தாலோசிப்பார்.
ராயு அண்ணை தன்னுடைய போராட்ட வாழ்க்கையை லெப்.கேணல் ராதா அவர்களுடன் ஒரு தொலைத்தொடர்பாளராகத் தொடங்கினார். அவ்வாறு தொடங்கிய அவரது போராட்டச் செயற்பாடு அவரை ஒரு மாபெரும் சாதனையாளனாக உயர்த்தியது எனில் அவரின் அறிவினை நோக்கிய விடாத தேடலே மிகமுக்கிய காரணமாகும்.
விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பலவற்றின் பின்னால் ராயு அண்ணையின் வெளித்தெரியாத செயற்பாடுகள் பல இருந்தன. தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவான “கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவன”த்தின் ஆணிவேர் ராயு அண்ணை என்றால் அது மிகையன்று.
விடுதலைப் புலிகளின் தொடக்ககாலத் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் பங்கு அளப்பரியது. ஒரு தொலைத்தொடர்பாளனாக இருந்தபோது தான் பெற்றுக்கொண்ட அனுபவம் மற்றும் தான் கற்றறிந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தொலைத்தொடர்புக்கான ஒரு தனித்துறையினைக் கட்டியெழுப்பும் பணியினை மேற்கொண்டார். உலகமே வியந்துபார்த்த விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்புக் கட்டமைப்பின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் உழைப்பு ஒவ்வொரு கட்டத்திலும் மறைபொருளாக இருந்தது.
இந்தியப் படையினருடனான போர்க்காலப் பகுதி. மணலாற்றுக் காட்டுப்பகுதியில் இந்தியப் படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்த நேரம். இராணுவத்தினரின் நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக தலைவரின் சிந்தனையில் உதித்த “ஜொனி” மிதிவெடிக்கு அப்போதிருந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வடிவம் கொடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும்.
கடலிலே முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் போடப்பட்டு அதற்கான பணிகள் ராயு அண்ணையிடமும் அப்போதைய கடற்புறா (கடற்புலிகள் என்று பெயர் பெறுவதற்கு முன் இயங்கிவந்த விடுதலைப் புலிகளின் கடல் நடவடிக்கை அணி) தளபதியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
முன்னெப்போதும் நடத்தப்படாத ஒரு புதியவகைத் தாக்குதலாக அப்போது அந்தக் கடற்கரும்புலித் தாக்குதல் இருந்தது. வெடிபொருள் தொகுதியை எவ்வாறு படகில் பொருத்துவது, எந்த வடிவில் பொருத்துவது என்பன தெரியாமல் இருந்த விடயங்கள். ஆயினும் ராயு அண்ணை அவற்றைச் செய்து முடித்தார்.
பலகட்டப் பரிசோதனைகளைச் செய்து அவற்றிலிருந்து ஒரு வடிவத்தினைச் செய்து உருவாக்கியிருந்தார். ராயு அண்ணை இதனை திறம்பட முடித்துவிடுவார் என்ற தலைவரின் நம்பிக்கையை நிரூபித்துக் காட்டினார். அன்றிலிருந்து தன்னுடைய இறுதிக் காலம்வரை கடற்கரும்புலிகளின் தாக்குதற் படகுகளிற்கான வெடிமருந்துத் தொகுதியினை மேம்படுத்துவதற்காக அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.
தொடக்க காலத்திலிருந்து மோட்டார் மற்றும் எறிகணைகளின் செயற்பாடுகளைக் கற்றறிந்து புலிகளின் சுயதயாரிப்பான “பசிலன்” எனும் எறிகணைச் செலுத்தியின் தயாரிப்புக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தார். இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியபோதே புலிகளின் பசிலன் பீரங்கிகள் சிறிலங்கா இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக அமைந்திருந்தன. யாழ்.கோட்டை, மாங்குளம் போன்ற முகாம்கள் கைப்பற்றப்பட்ட தாக்குதல்களில் இப்பீரங்கிகளின் பங்கு அளப்பரியன.
1996 ம் ஆண்டு “ஓயாத அலைகள்-01” இராணுவ நடவடிக்கை மூலம் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற்றியபோது இரண்டு ஆட்லறிகள் புலிகள்வசம் வீழ்ந்தன. இயக்கத்தைப் பொறுத்தவரை அவை அப்போது பரிச்சயமற்ற பொருட்களாகவே இருந்தன.
இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட மட்டுப்படுத்தப்பட்டளவிலான கையேடுகள் மற்றும் இதர அறிவியல் ஏடுகள் என்பவற்றின் உதவியுடன் அவ்விரு ஆட்லறிகளையும் பரிச்சயமிக்க போராயுதங்களாக மாற்றியதில் ராயு அண்ணையின் பங்கே முதன்மையானது. முதன்மையானது என்பதைவிட முழுமையானது என்பதே பொருத்தமாக இருக்கும்.
அக்காலப் பகுதியில் அவர் இரவில் நித்திரை கொள்வதே அரிதான விடயம். பொதுவாக ஆட்லறிகளுக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதிகள் (Fire Control) அவ் ஆட்லறிகளின் தயாரிப்பு நிறுவனங்களினால் வழங்கப்பட்டவையாகவே இருக்கும். முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியும் அவ்வாறானதொன்றே. நிறைவான ஆட்லறிச் சூட்டுக்கு அவற்றின் செயற்பாடு போதுமானதாகவே இருக்கும்.
ஆயினும் ராயு அண்ணை அதனோடு திருப்திப்பட்டு விடவில்லை. சுயமாக ஆட்லறிக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியினை உருவாக்கும் பணியில் போராளிகளை ஈடுபடுத்தினார். சாதாரண சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியைவிட மேம்பட்ட பல வசதிகளோடு சூடுகளை வேகமாகவும் மேலும் துல்லியமாகவும் வழங்கக்கூடியவாறு பல்வேறுபட்ட வசதிகளுடன் புதிய சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதி அவரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டது.
சிறிலங்கா படையதிகாரிகளாலேயே விடுதலைப் புலிகளின் ஆட்லறி சுடுதிறன் வியப்பாகப் பார்க்கப்படும் அளவுக்கு அதை வளர்த்தெடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும். வேகமான செயற்பாடு மற்றும் துல்லியமான சூடு என்பவற்றினூடாக பீரங்கிப் படையணியின் நம்பகத்தன்மை போராளிகளிடமும் வளர்ந்திருந்தது.
ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் என்ற குறியீட்டுப் பெயரிலமைந்த தொடர் நடவடிக்கைகள், ஆனையிறவுக்கான சமர் போன்றவற்றில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப் படையணியின் செயற்பாடு முக்கியமான பங்கினைப் பெற்றிருந்தது.
சிறிலங்கா அரசினை சமாதானம் நோக்கி இழுத்துவந்த சமரான தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் எதிரியின் தீச்சுவாலையை எதிரியை நோக்கியே திருப்பிவிட்டதில் ஒருபுறத்தில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப்படை பெரும் பங்காற்றியது எனில் மறுபுறத்தில் ராயு அண்ணையின் சிந்தனையில் உருவான கவச எதிர்ப்புக் கண்ணிகள் தம்பங்கினையும் ஆற்றின.
அப்போதிருந்த சூழலில் கண்ணிவெடிகளை உருவாக்குவதற்குத் தேவையான பொருட்களை உடனடியாகப் தருவிக்கமுடியாத நிலை. ராயு அண்ணையின் சிந்தனையோ கண்ணிவெடி தயாரிப்பதற்கு என்ன பொருட்கள் தேவையென்ற நிலையிலில்லாமல், இருக்கும் பொருட்களைக்கொண்டு எவ்வாறு கண்ணிவெடி தயாரிக்கலாம் என்பதாக இருந்தது.
பல்வேறு காரணங்களால் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட எதிரியின் எறிகணைகள் எதிரிகளின் கவசங்களையே குறிவைக்கும் கண்ணிவெடிகளாக உருவெடுத்தன. ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எதிரியின் கனவு அப்போது தகர்க்கப்பட்டது.
1992 ம் ஆண்டின் நடுப்பகுதி. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரிவுகளுக்குரிய போராளிகள் சிலர் சிறுத்தைப் படையணியின் பயிற்சிக்குச் செல்வதற்காக மாவட்டத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தோம். அங்குதான் சிறுத்தைப் படையணியின் முதலாவது ஆண்கள் அணிப் போராளிகளுக்கான தெரிவு நடைபெற்றது.
சிறுத்தைப் படையணியின் சிறப்புத் தளபதியாகவிருந்த ராயு அண்ணையே படையணிக்கான போராளிகளைத் தெரிவு செய்வதற்கு வந்திருந்தார். அன்று ராயு அண்ணையின் மூலம் தெரிவாகி, சிறுத்தைப் படையணி, பின்னர் பொறியியற்றுறை ஆகியவற்றில் அவரின் கீழ் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு தந்தையாய், சகோதரனாய் அவர் போராளிகளை வழிநடாத்தினார்.
ஒவ்வொரு விடயங்களைக் கவனித்துக்கொள்வதற்கும் அவர் பொறுப்பாளர்களை நியமித்திருந்த போதிலும், போராளிகளுக்கான உணவு, உடை என்று அனைத்து விடயங்களிலும் கவனமெடுத்து நடந்துகொண்டார். போராளிகள் தமக்குள் கதைக்கும் போது அவரை “அப்பா” என்றே விழிப்பது வழமை. அந்தளவிற்கு அவர் ஒரு தந்தையாக போராளிகள் மனதில் இடம்பிடித்திருந்தார். அவருக்குத் தலைவரால் வழங்கப்பட்டிருந்த பல்வேறுபட்ட பணிகளுக்கு மத்தியில் தன்னால் வளர்த்தெடுக்கப்படும் போராளிகள் என்ற கரிசனையோடு எம்மை உருவாக்கிய விதம் என்றுமே நெஞ்சை விட்டகலா நினைவுகள்.
1993 ம் ஆண்டின் இறுதிப்பகுதி. தென்மராட்சியில் ஓரிடத்தில் எமக்கான சிறப்புப் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. திசைகாட்டி நகர்வுப் பயிற்சிகளை நாம் முகாமிற்கு வெளியேதான் மேற்கொள்வதுண்டு. தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் காணப்படும் சதுப்புநிலக் காடுகளே இவ்வாறான நகர்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. நகர்வுகளுக்கான தொடக்க மற்றும் முடிவுப் புள்ளிகளாக இப்பகுதிகளில் அமைந்திருக்கும் சிறிய கோவில்களே தெரிவுசெய்யப்படும்.
அனைத்து அணிகளதும் நகர்வுகளை தானே நேரில் வந்து கண்காணிப்பதுடன் அந்தந்த இடங்களிலேயே நகர்வு உத்திகளைக் கற்றுத்தருவார். நகர்வில் ஈடுபடும் போராளிகளுக்கான உணவுப் பொருட்களை தானே எடுத்துவருவார். இருந்தபோதிலும், போராளிகளைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கவும் தண்டிக்க வேண்டிய இடத்தில் தண்டிக்கவும் அவர் தவறுவதில்லை.
ஒருமுறை எமது நகர்வு புத்தூரிலிருந்து தென்மராட்சியின் வரணிப் பகுதி நோக்கி இருந்தது. இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட சதுப்புநிலக் காடுகளே நகர்வுப் பகுதியாக பயிற்சி ஆசிரியரால் தேர்வுசெய்யப்பட்டிருந்தது. எமது நகர்வுக்காக ஒவ்வோர் அணிக்கும் குறிப்பிட்டளவு குடிநீரே தரப்படும். மேலதிகத் தண்ணீரை நாம் எங்கும் பெறக்கூடாது என்பது கட்டளை.
அன்று எமது நகர்வுகளைக் கண்காணிப்பதற்காக வந்த ராயு அண்ணையின் வாகனம் சேற்றில் புதைந்துவிட எமது அணியினரே அதனை வெளியெடுக்கும் பணியினையும் செய்யவேண்டியதாகிவிட்டது. அந்தக் களைப்பின் காரணமாக எமக்கு வழங்கப்பட்ட தண்ணீரையும் குடித்து முடித்துவிட்டோம்.
ஆனால் போக வேண்டிய மீதித் தூரமோ இன்னும் அதிகமிருந்தது. இடையிலிருந்த கோவில் கிணறு ஒன்றில் மேலதிக தண்ணீரை நிரப்பிவிட்டோம். பயிற்சி ஆசிரியர் தண்டனை வழங்கினாலும் ராயு அண்ணை காப்பாற்றிவிடுவார் என்று எமக்கு நாமே சமாதானமும் சொல்லிக்கொண்டோம்.
பயிற்சி ஆசிரியருக்கும் விடயம் போய்விட்டது. நாம் காரணத்தைக்கூறி தண்டனையிலிருந்து தப்பலாம் என முயற்சித்தோம். ஆனால் ராயு அண்ணையின் பதில் எம்மால் நிராகரிக்க முடியாததாக இருந்தது. அவர் கூறியது இதுதான். “நீங்கள் சிறப்புப் படையணிப் போராளிகள். நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும் இடங்களில் போதியளவு வளங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது.
நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும்போது திட்டமிடப்படாத எதிர்பாராத பணிகள் காத்திருக்கலாம். அதற்கெல்லாம் உங்களை நீங்கள் தயார்ப்படுத்த வேண்டுமாயின் நீங்கள் இவ்வாறான சாக்குப்போக்குகள் சொல்ல முடியாது”. இதன்பிறகும் எம்மால் அவருடன் எதைக் கதைக்க முடியும்? தண்டனை உறுதி. எமதணிக்கான அடுத்துவந்த நகர்வு குடிநீரின்றி முடிந்தது.
1993 ம் ஆண்டு பலாலிப் படைத்தளத்தினுள் கரும்புலித் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்குத் தலைவரினால் திட்டமிடப்பட்டிருந்தது. கரும்புலிகளுக்கான வெடிமருந்துத் தொகுதிகளை உருவாக்குவதற்கான பணி ராயு அண்ணையினால் அவரின் கீழிருந்த வெடிமருந்துப் பயிற்சிபெற்ற போராளியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அவருடன் அப்போது வெடிமருந்துப் பயிற்சியினை மேற்கொண்டிருந்த நாமிருவரும் அவ்வேலையில் இணைக்கப்பட்டிருந்தோம். ராயு அண்ணையோ, வேலையை ஒப்படைத்ததோடு நில்லாமல் வேலையின் ஒவ்வொரு கட்டத்திலும் தானும் எம்முடன் கூடவிருந்து அந்த வேலைகள் நிறைவடைந்தபோது, நாமே தனித்து அவ்வேலைகளைச் செய்யுமளவிற்கு எம்மை உருவாக்கி விட்டிருந்தார்.
ஒவ்வொரு விடயங்களைச் செய்யும்போதும், அவ்விடயங்களில் அவர் காட்டும் ஈடுபாடு மிகவும் நேர்த்தியானது. அதே நேர்த்தியினையே போராளிகளிடமும் வேலைகளில் எதிர்பார்ப்பார்.
எனது உடல்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இயலாமை காரணமாக என்னால் பயிற்சியினைத் தொடர முடியவில்லை. சிலகாலம் வைத்தியசாலையில் இருக்கவேண்டியிருந்தது. இனிமேல் பயிற்சியில் ஈடுபடவே முடியாது என்ற நிலை. அடுத்து என்னவென்று தெரியாத சூழல்.
அவ்வாறான சூழ்நிலையிலிருந்து என்னை மீட்டு எனக்குப் பொருத்தமான பணிகளில் என்னை ஈடுபடவைத்து, எனது உடல்நிலையில் ஏற்பட்ட இயலாமை என்னையும் எனது போராட்டச் செயற்பாட்டையும் பாதிக்காது காத்தது ராயு அண்ணையே. அவரின் அணுகுமுறைகள் எப்போதுமே போராளிகளிடமிருந்து அவர்களது செயற்பாடுகளைத் தனித்தன்மையோடு வெளிக்கொணர்வதாகவே இருக்கும்.
ஒவ்வொரு போராளியிடமும் இருக்கும் தனித்தன்மைகளைச் சரியான முறையில் இனங்கண்டு அதனை வெளிக்கொணர்வதில் அவருக்கு நிகர் அவரேதான். ஆயினும் கொடிய புற்றுநோய் அவரைச் சிறிதுசிறிதாக அரித்துக்கொண்டிருந்த விடயத்தை அவரால் அறிந்துகொள்ள முடியாததாகவே காலம் அவருக்குத் தீர்ப்பெழுதி விட்டது.
அடிக்கடி வந்துபோகும் வயிற்றுவலியினை அவர் சாதாரண வயிற்றுவலியாக எண்ணியே மாத்திரைகளைப் பாவிப்பதோடு நிறுத்திக்கொண்டார். நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தபோதுகூட அவர் இயங்கிக்கொண்டேயிருந்தார், அனைவரையும் இயக்கிக்கொண்டுமிருந்தார்.
தீச்சுவாலை முறியடிப்புச் சமரின்போதே ராயு அண்ணையால் முழு உற்சாகமாகப் பணியாற்ற முடியாதபடி அவரது உடல்நிலை தளர்ந்திருந்தது. ஆனாலும் அந்த மூன்று நாட்களும் அவர் முழுமையாகப் பாடுபட்டார். நோய் முற்றியநிலையில் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் வடகடலில் ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் நின்ற இராணுவத்தினருக்கான எரிபொருள் வழங்கலைச் செய்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மீதே அத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல் அக்கப்பல் தீப்பிடிக்கவுமில்லை, மூழ்கிப் போகவுமில்லை.
வழமையாகவென்றால் ராயு அண்ணையிடம் ஓடிவந்து நடந்த சிக்கல்களை ஆராய்ந்து அதற்குரிய மாற்றுத் திட்டங்களை அறிந்துகொள்வார்கள். ஆனால் இப்போது ராயு அண்ணையின் உடல்நிலை மிகமிக மோசமாக இருந்தது.
இந்நிலையில் எப்படி அவரைப் போய்க் கரைச்சல் படுத்துவது என்று கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை நினைத்தார். ஆனாலும் தாக்குதல் பிசகியதைக் கேள்விப்பட்ட ராயு அண்ணையே நேரடியாக தளபதி சூசையையும் தொடர்புடைய மற்றப் போராளிகளையும் அழைத்து விடயத்தைக் கேட்டறிந்தார்.
படுத்த படுக்கையில் இருந்தும்கூட அக்கப்பலை மூழ்கடிப்பதற்கான வெடிபொருள் நுட்பம் பற்றிய ஆலோசனையைக் கடற்புலிகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். பின்னாளில் அவர் சொல்லிக் கொடுத்த அந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் மூலம் படையினரின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
பின்னாளில் அவரின் பெயரிலேயே தலைவரால் உருவாக்கப்பட்ட ‘கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவனப் பொறுப்பாளர்களில் ஒருவரிடம் தலைவர் சொன்ன வார்த்தைகள் “நீங்கள் அனைவரும் சேர்ந்தாவது ராயுவின் இடத்தினை நிரப்ப முயற்சிக்க வேண்டும்”.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் விழிமூடிய இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுநாள்
	ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதிமூச்சுவரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான்.ஆவணி 25 ஆம் நாள் அம்மன்னனின் நினைவுநாளாக நினைவுகூரப்படுகிறது.
	முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. அது நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் “பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான்” எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அக்கல்லில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமாக அவனின் நினைவுநாளாகக் கொண்டாடி வந்தார்கள் தமிழர்கள்.தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்தபின் இந்நினைவுநாள் மாற்றப்பட்டது. ஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்டபின் 1997 ஆம் ஆண்டில் பண்டார வன்னியின் நினைவுநாள் ஆவணி 25 ஆம் நாள் என அறிவிக்கப்பட்டது.
	ஆவணி 25 இற்கும் பண்டார வன்னியனுக்கு என்ன தொடர்பு?
	**********************************************************************************
	அந்தக்காலத்தில் முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது வன்னிமை முற்றாகப் பறிபோய்விடவில்லை. பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது.
	வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான். அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றியதாக வரலாற்றுக் குறிப்புகளுண்டு. அந்தநாள்தான் ஆவணி 25.
	பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளையே தற்போது பண்டாரவன்னியனின் நினைவுநாளாக நினைவுகூர்கின்றோம்.
	வன்னியில் பண்டார வன்னியன் நினைவுச் சின்னம் உடைப்பு.
	************************************************************************************
	வன்னியில் பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம் சிங்கள காடையர்களால் உடைக்கப்பட்டுள்ளது.
	வன்னியிலும், யாழ் குடாநாட்டிலும் தமிழ் மக்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், வரலாற்றுப் பெறுமதி மிக்க அமைவிடங்கள் அடையாளங்கள் என்பன திட்டமிட்ட வகையில் இப்போது அழிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் பரவலாக வெளியாகியுள்ளமை தெரிந்ததே. இந்தப் பிரதேசங்களில் இராணுவத்தினரும் போலீசாரும் பெரும் எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். இந்த நிலையிலேயே இவ்வாறாக தமிழ் மக்களின் வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்படுவது பறறிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வன்னியில் முல்லைத்தீவு மாவட்டம் கற்சிலைமடுவில் பண்டார வன்னியனுக்கு ஆங்கிலேயரினால் அமைக்கப்பட்டிருந்த நினைவுக் கல்லும் இவ்வாறே உடைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டைகள் நடைபெற்ற வேளையில்கூட இந்த நினைவுச்சின்னத்திற்குப் பாதிப்பு ஏற்படவில்லை. இந்தப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அங்கு மீள்குடியமரச் சென்றதன் பின்னரும் அந்த நினைவுக் கல் எவ்விதமான பாதிப்பும் இன்றி இருந்துள்ளது. ஆனால் நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறுவதற்கு ஒருவாரம் வரையில் இருந்த போது, இந்த நினைவுக் கல் உடைக்கப்பட்டுள்ளது. இது விஷமிகள் சிலரின் கீழ்த்தரமான வேலையாகவே கருதப்படுகின்றது.
	
	இந்த நினைவுக் கல் உடைந்து கிடக்கும் இடத்திற்கு அருகில் உடைந்த மண்டபம் ஒன்றும், பொதுநோக்கு மண்டபம் ஒன்றும் இருக்கின்றன. விளையாட்டு மைதானமும் இருக்கின்றது. இந்த விளையாட்டு மைதானத்தை ஊர் இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். எனினும் உடைந்து கிடக்கின்ற வரலாற்றுச் சின்னமாகிய பண்டார வன்னியனின் நினைவுக்கல் கவனிப்பாரற்று கிடக்கின்றது. இதனைப் பராமரிப்பதற்கு எவருமே இன்னும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கயற்கண்ணியின் நினைவு நாள்
அங்கயற்கண்ணியின் நினைவு நாள்
செந்தளிர்களின் செங்குருதியால் செந்நிறமான செஞ்சோலை
செந்தளிர்களின் செங்குருதியால் செந்நிறமான செஞ்சோலை
படுகாயமடைந்த பல மாணவிகள் தமது அவயங்களை இழந்துள்ளனர் சிலர் கைகள், கால்கள் இரண்டையும் இழந்துள்ளனர்
குருதியில் தோய்ந்து கண்ணீரால் கழுவப்படும் தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14' ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது... அழுது... ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும்.
முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை' சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது. பேரினவாத அரச படைகளின் நான்கு அதிவேக யுத்த விமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகளும் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்ததுடன் 155 இற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி காணப்பட்டன. காயமடைந்தவர்களில் 25 மாணவிகளது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பலர் அவயவங்களை இழந்திருப்பதாகவும் சிலர் கைகள், கால்கள் இரண்டையும் இழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தர்மபுரம், கிளிநொச்சி ஆகிய பொது வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். தமது பிள்ளைகள் தங்கியிருந்த பகுதி மீது குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதை அறிந்த பெற்றோர் அலறியடித்தவாறு செஞ்சோலை வளாகத்துக்கு ஓடிவந்தனர். கொல்லப்பட்டவர்களில் தமது பிள்ளையும் உள்ளாளா என்ற ஏக்கத்துடன் இறந்து கிடந்த மாணவிகளைத் தேடிய குடும்பத்தினர் கொல்லப்பட்ட தமது பிள்ளை தான் என தெரிந்ததும் கதறிய கதறல்கள் அங்கிருந்த அனைவரையும் அழவைத்தது. "பத்து நாளும் என்னால விட்டிட்டு இருக்க ஏலாதுண்டு முதலில் மாட்டேன் என்டுதான் சொன்னன். ஆனால், நல்ல விஷயம் எண்டு எல்லாரும் சொன்னதால தான் விட்டனான். கடைசியில இப்படியாப்போச்சு" என தலையில் அடித்து கதறிய தாயாரொருவர் தன் மகளைத் தூக்கி வா வீட்ட போவோம் என கேட்டதும் அனைவரும் கதறியழுதனர். செஞ்சோலை வளாகத்தில் அப்பாவி மாணவிகளை தறிகெட்ட சிங்களப் படை கொன்றது மாத்திரமல்லாமல் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திலுள்ள சிறுவர் போராளிகளெனக் கூறி வெளியுலகுக்கு உண்மையை மூடிமறைக்க இனவெறி அரசாங்கம் முயல்வது அனைவரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது. செஞ்சோலை வளாகம் புலிகளின் பயிற்சி முகாமெனவும் அங்கு சிறுவயது போராளிகளே இருந்ததாகவும் கூறி 2004 ஆம் ஆண்டு தமது விமானமொன்று எடுத்த படமொன்றையும் காட்டியுள்ளன காட்டுமிராண்டிப் படைகள். இதைவிட ஒருபடி மேலே சென்ற பேரினவாத அரசின் அமைச்சரும் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக பேசவல்லவருமான கெஹகிலிய ரம்புக்வெல,"கொல்லப்பட்டது சிறுவயது போராளிகள். அரசுக்கெதிராக செயற்படும் எவராயினும் அதாவது வயது, பால் வேறுபாடின்றி கொல்வோம்" என தமது அரசும் இனவெறிபிடித்தே அலைகின்றது என்பதனை பறைசாற்றினார்.
ஆனால், சம்பவ இடத்திற்கும் வைத்தியசாலைகளும் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்ட போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் `யுனிசெப்'பும் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மாணவிகள் என்பதனை வெளிப்படுத்தியது. எனினும், தனது பொய்ப் பிரசாரத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ. ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்த ஜனாதிபதி இந்த பொய்யையே மீண்டும் கூறியுள்ளார். இதேவேளை, இந்த தாக்குதல்களுக்கு பழிக்குப் பழிவாங்கிவிடுவார்களென்ற அச்சத்தில் தெற்கிலுள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அப்படியானால் அங்கே வல்லிபுனத்தில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி தமிழ் மாணவிகள் தான் என்பதனை அரசு மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை எவரும் இலகுவில் புரிந்துகொள்வார்கள்.
பத்துநாள் பயிற்சிப்பட்டறை
உண்மையில் கொல்லப்பட்டவர்கள் யார்? ஏன் அங்கு கூடியிருந்தார்கள்? காலை 7 மணிக்கு அவர்கள் என்ன செய்தார்கள்? முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வல்லிபுனம் மக்கள் குடியிருப்புகள் நெருக்கமாகவுள்ள பகுதி. குடாநாட்டிலிருந்து 1995 இல் இடம்பெயர்ந்து வன்னிக்கு சென்றவர்களுக்கு இதை நன்கு உணர்ந்து கொள்ளமுடியும். அங்கு தான் `செஞ்சோலை' வளாகமும் உள்ளது. செஞ்சோலை என்றதும் தாயகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றாக தெரியும். இந்த வளாகத்திலுள்ள அருகில் பல நலன்புரி நிலையங்கள், வேறு பல சிறுவர் இல்லங்கள் என பலவுள்ளன. மனிதநேய நடவடிக்கைகள் நிறைந்த ஒரு பகுதியே வல்லிபுனம்.
இந்த செஞ்சோலை வளாகத்தில் தற்போது செஞ்சோலை சிறுமியர் இல்லத்தைச் சேர்ந்தவர்களில்லை. இந்த வருடம் ஜனவரியில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட புதிய வளாகத்துக்கு சிறுமியர்கள் சென்றுவிட்டனர். ஆனால், வள்ளிபுனம் - செஞ்சோலை வளாகம் தொடர்ந்தும் செஞ்சோலை வளாகமாகவே உள்ளது. இங்கு வதிவிட பயிற்சிப்பட்டறைகள் நடாத்தப்படுவது வழமையானதொன்று. காரணம் ஏற்கனவே சிறுமியர் இல்லமாக இது செயற்பட்டமையால் மாணவிகள் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு வசதியாக இவ்வளாகம் இருப்பதே. அத்துடன், இந்த வளாகம் ஐ.நா. அமைப்புகளூடாக பயிற்சிப் பட்டறைக்கான இடமென இலங்கை அரசாங்கத்தாலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பல காரணங்களால் இங்க பல பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்றுவந்தன. அதேபோன்றதொரு பயிற்சிப் பட்டறை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இலங்கை அரசின் விமானப் படை கோரத்தாண்டவமாடி தமிழரை துன்பத்தில் வாடவிட்டுள்ளது.
கடந்த 11 ஆம் திகதி முதல் இச்செஞ்சோலை வளாகத்தில் க.பொ.த. உயர்தர மாணவிகளுக்கான 10 நாள் வதிவிட பயிற்சி நெறி நடைபெற்றுவந்தது. இந்தப் பயிற்சி நெறியின் 3 ஆம் நாளின் போதே இப்பேரனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சமூக தலைமைத்துவ திறன்கள், முதலுதவி, பால் சமத்துவம் தன்னம்பிக்கையை கட்டியெழுப்புதல், வினைத்திறனுடனான நேர முகாமை மற்றும் குழு வேலை போன்றவற்றில் மாணவிகளுக்கு பயிற்சியளிப்பதனை நோக்கமாகக் கொண்டே இப்பயிற்சிப் பட்டறை நடைபெற்று வந்தது. இதன்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 500 க.பொ.த. உயர்தர மாணவிகள் கலந்துகொண்டிருந்தனர் எனத் தெரியவருகின்றது.
செய்தி கேட்டுக்கொண்டிருந்த மாணவிகளே அதிகளவில் கொல்லப்பட்டனர்.
"காலை 7 மணியளவில் மாணவிகள் ஒன்றுகூடலுக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். அவர்களில் பலர் தற்போதைய யுத்த சூழ்நிலை குறித்து அறிய வானொலியில் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இதன்போதே விமானங்கள் வட்டமிட்டு 16 குண்டுகளை அடுத்தடுத்து வீசின. செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களே நேரடியாக தாக்குதலுக்கு இலக்காகினர். இதில் அதிகளவானோர் கொல்லப்பட்டதுடன் பலருக்கு பின்புறத்தில் மோசமான காயங்கள் ஏற்பட்டன. வேறு வேலைகளிலிருந்த மாணவிகள் அருகேயிருந்த காட்டுப் பகுதிகளுக்குள் ஓடிவிட்டனர்" என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் விடுத்திருக்கும் இடைக்கால அறிக்கை கூறுகின்றது. தீயிலிருந்தும் மின்னிலிருந்தும் எவ்வாறு தப்புவது, அதேபோல இரசாயன பதார்த்தங்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பாயிருப்பது, விமான தாக்குதல்களிலிருந்து எவ்வாறு தப்புவது, நாடகங்கள், இசை, நகைச்சுவை மூலமான தனிநபர் வெளிப்பாடுகள் போன்ற பயிற்சிகள் ஆசிரியர்களாலும் துறைசார் நிபுணர்களாலும் கற்பிக்கப்பட்டதாக அவ்அறிக்கை தெரிவிக்கின்றது.
இதேவேளை, இந்தப் பயிற்சிப்பட்டறை குறித்து தமிழீழ கல்விக் கழக பொறுப்பாளர் இளங்குமரன் கூறுகையில்;
"இதுவொரு வருடாந்த பயிற்சிப்பட்டறை. கிளிநொச்சி கல்வி வலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சி நெறிக்கு பெண்கள் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நிலையம் நிதியுதவியையும் ஆதரவையும் வழங்கியிருந்தது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட 18 பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தர மாணவிகளும் வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட பெண்களும் இப்பயிற்சியில் பங்கெடுத்திருந்தனர்.
சிங்கள அரசு தமிழ்ச் சமூகத்தின் கல்வி உரிமையை மறுத்துள்ளது. வரலாற்றில் சிங்கள தீவிர வாதிகள் எப்போதும் தாக்கியே வந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாணவர்கள் திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுவது இதுதான் முதற்தடவையல்ல. அரசின் முப்படைகளினதும் வெறியாட்டத்தால் அப்பாவித் தமிழர்கள் பட்டபாடு வார்த்தைகளால் எழுதிவிடமுடியாது. ஏனெனில் அந்த வலியை பதிவுசெய்யும் ஆற்றல் இந்த வார்த்தைகளுக்கு இல்லை.
இரு தசாப்தங்களுக்கு மேலாக தொடரும் போரில் பேரினவாத அரச படைகள் பாவித்த மிகப் பயங்கரமான விமானங்கள் பல. அவை விடுதலைப் புலிகளை தாக்கியதை விட பொதுமக்களையே பலிகொண்டன. இன்று தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறி புலத்திலுள்ளவர்களானாலும் சரி வட, கிழக்குக்கு வெளியே இருக்கும் வளர்ந்தவர்களானாலும் சரி விமானத் தாக்குதல்களில் அனுபவப்பட்டவர்களாக இருப்பார்கள். அன்று ஹெலி, சீ.பிளேன், சியாமாச் செட்டி, அன்ரனோவ், சகடை (பட்டப்பெயர்), புக்காரா என தொடங்கி தமிழரின் உயிர்குடித்த விமானங்கள் தாயகத்தின் வானில் தலைகாட்ட முடியாத நிலையில் `மிக்' என்றும் `கிபிர்' என்றும் `சுப்பசொனிக்' என்றும் அப்பாவி தமிழரின் உயிர்குடிக்க அனுப்பப்படுகின்றன. இலங்கை விமானப் படைகள் தமிழர் தாயகத்தின் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்கள் ஏராளம். இதில் பள்ளி மாணவர்கள், பச்சிளம் குழந்தைகளை வகைதொகையின்றி பலியெடுத்த வரலாறு மிகக் கொடியது.
நாகர்கோவில் மத்திய பாடசாலை சிறார்களின் படுகொலை
அன்று 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி சின்னஞ்சிறுசுகளின் கலகலப்பான பேச்சுக்களுடன் நாகர் கோவில் மத்திய பாடசாலை பூஞ்சோலையாக காணப்பட்டது. பகல் 12.30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணி... ஆக்கிரமிப்பு படைகளின் `புக்காரா' விமானங்கள் குண்டுகளை மாறி மாறி கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத பிஞ்சுகள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்த கொலை வெறிபிடித்தவர்களின் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது 40 அப்பாவிகள் ஒட்டுமொத்தமாக ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது சிறுவன் வரை அடங்குகின்றனர்.
இது பாடசாலை மாணவர்கள் படையினரால் கூண்டோடு அழிக்கப்பட்ட மற்றுமொரு சம்பவம். இதைவிட மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் ,வயோதிபர்களென எதுவித வேறுபாடுகளுமின்றி கொல்லப்பட்ட சம்பவங்கள் ஏராளம். `குமுதினி' படகில் (நெடுந்தீவுக்கும் குறிகட்டுவானுக்குமிடையில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள படகு) பயணித்த பலரை 1984 ஆம் ஆண்டு கடற்படை வெட்டியும் குத்தியும் கொன்றது. இதில் 6 மாத பச்சிளம் பாலகன் துப்பாக்கியிலுள்ள கத்தியால் கடற்படையினரால் குத்திக் கொலை செய்யப்பட்டான். மூன்று முறை அந்த பிஞ்சு நெஞ்சில் குத்தி கொன்ற கடற்படை இன்றும் தமிழர் தாயகத்திலேயே நிலை கொண்டுள்ளது. இவ்வாறு இலங்கை அரசின் முப்படைகளும் மேற்கொள்ளும் தாக்குதல்களால் அப்பாவித் தமிழ் மக்கள் இழந்த உயிர்கள், உடைமைகள் ஏராளம். ஆனால் தமது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு அதற்குப் பொய்யான,வொப்பான விளக்கங்களை பேரினவாதிகள் மாத்திரமன்றி சிங்களத்துவ ஊடகங்களும் கூறிவருகின்றன.
இதற்கு தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறியுள்ளதை பதிலாக முன்வைக்கலாம். "இனவெறி - இதயமற்றோர் நடத்திய முல்லைத்தீவு படுகொலைக்கு சமாதானம் சொல்வது போன்ற சண்டாளத்தனம் கொடுமையானது". இலங்கையில் நடைபெறும் அராஜகங்களுக்கு இந்த பழமொழியும் நன்றாக பொருந்தும் - "பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்பதே அது.
-தினக்குரல்
வீரமுனை கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை
1990 ஆகஸ்ட் 12 - கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாளின் 26 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இன வன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 சூன் மாதம் முதல் சூலை மாதம் வரை தஞ்சம் புகுந்திருந்தனர்.
இக்காலகட்டத்தில், ஆகத்து 12 ம் நாளன்று இவற்றினுள் புகுந்த (சிறிலங்கா இராணுவப்படை மற்றும் ) ஊர்காவல்படைக் கும்பல் ஒன்று 400க்கும் அதிகமான தமிழ் மக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர்.
இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 55 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
அதிகமானோர் படுகாயமுற்றனர்.
அவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இதுவரையில் இல்லை.
இந்த படுகொலை குறித்து எந்த விசாரணையும் கூட இதுவரையில் இல்லை. நடந்தது இனப்படுகொலை என அறிந்தும் உலகம் இது பற்றி பேசவில்லை. மனிதம் உள்ள மனிதர்களே நீங்களும் மறந்து போவீர்களோ?
வல்வை படுகொலையின் நினைவு
வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் புரிந்த அட்டுழியங்கள்!!!
1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை வழமை போல தொடங்கியது.
ஒகஸ்ட் 2 ஆம் திகதி இச் சம்பவம் நடைபெற 3, 4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் ஆடினர். யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவே, அங்கிருந்து தப்பி வரவோ முடியவில்லை. வெறியாட்டம் முடிந்து இந்திய இராணுவம் முகாம்களுக்கு திரும்பிய பின் வல்வெட்டித்துறைக்கு சென்று பார்த்தவர்களால் நடைபெற்ற கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை.
63 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர். ஆண், பெண், முதியோர் வேறுபாடு இன்றி.
100 பேர் அளவில் காயமடைந்திருந்தனர்.
123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன.
45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன.
வல்வை சனசமூக நிலையம் (நூலகம்) தீயிடப்பட்டிருந்தது, பல ஆயிரக்கணக்கான நூல்கள். தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன் நூலகத்தில் இருந்த காந்தி, நேரு, நேதாஜி, இந்திராகாந்தி போன்ற தலைவர்களின் படங்கள் கூட நொருக்கப்பட்டு தீயிடப்ப்ட்டு இருந்தன.
176 மீன்பிடி வள்ளங்கள் எரிக்கப்பட்டன.
எங்கும் சடலங்கள், அவல ஓலங்கள், தீக்கொழுந்துகள், காயமடைந்த, கொல்லப்பட்ட உறவினர்களின் அவலக்குரல்கள். காலங்கள் பல சென்றாலும் இன்றும் வல்வெட்டிதுறை மக்களின் மனங்களில் ரண வடுவாக அச்சம்பவம் இருந்து வருகிறது. ஒரே குடும்பத்தில் 3 பேர் கூட கொல்லப்பட்டிருந்தனர்.
வல்வெட்டிதுறையில் நடைபெற்ற இக்கோர தாண்டவம் பற்றி எந்த ஒரு இந்திய ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. இன்று கூட எத்தனை இந்தியருக்கு இது பற்றி தெரியும் என்பது கேள்விக் குறியே?
முதன் முதலாக லண்டனில் இருந்து வெளிவரும் FINANCIAL TIMES இன் டெல்லி நிருபர் DAVID HOUSEGO நேரில் சென்று பார்த்த பின்பே FINANCIAL TIMES இன் 17.08.89 இதழில் இச்செய்தி வந்தது.
அதன் பின்னரே லண்டனில் இருந்து வெளிவரும் TELEGRAPH பத்திரிகையும் 13.08.89 இல் இச் செய்தியைப் பிரசுரித்திருந்தது. 24.08.89 லேயே இந்தியாவில் இருந்து வெளிவரும் INDIAN EXPRESS பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்திய அரசானது திட்டமிட்டே இச் செய்திகளை இந்தியாவில் இருட்டடிப்பு செய்தது இதற்கு இந்திய
பத்திரிகைகள், பிற ஊடகங்கள் யாவும் துணை போயிருந்தன. தமிழர் எனும் காரணத்தினால் இந்திய அரசோ, இலங்கை அரசோ இவர்களுக்கு நீதி வழங்க முன்வரவில்லை.
வல்வெட்டித்துறை மட்டுமல்ல ஈழத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு குடிமகனும் இந்திய இராணுவம் புரிந்த கொலைகள், கொள்ளைகள், பாலியல் கொடுமைகள், சித்திரவதைகள், வீடழிப்பு, சொத்தழிப்பு போன்றவற்றை சந்தித்தே இருக்கின்றனர். உண்மை சிலருக்கு சுடலாம் ஆனால் இவை என்றும் மறைந்துவிடாது மக்களின் மனங்களில் இருந்தும், வரலாற்றின் பக்கங்களில் இருந்தும்.! இது பற்றி வல்வை படுகொலை எனும் நூல் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவந்து அவனபடுத்தப்பட்டது குறிபிடக்தக்கது.
இது பற்றி இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கனடாவிலிருந்து சேது மாதவன் அவர்கள் தனது சமுக வலைத்தளத்தில் 26 வருடங்களின் பின் இன்று இவ்வாறு எழுதியுள்ளார்.
வல்வை படுகொலைகள் நடந்து வருடங்கள் 26 ஓடிவிட்டன. அந்த பயங்கர நாட்களின் பல நிகழ்வுகள் இப்பொழுதும் என்நெஞ்சில் நிற்கின்றன. கலாதேவன், பாபு ஆட்கள் வீட்டில் நின்றபோது தாக்குதல் நடக்கப் போவதாகவும் உடனே வீட்டை விட்டு ஒடுமாறும் கூறிய அவர்கள் எதிர்வீட்டுத் தம்பி தரா ( இப்பொழுது மருத்துவர் சிவபாலன் ) . அந்த அவசர கணத்தில் கலாதேவன் அண்ணா வீட்டார் வீட்டை விட்டு வெளிக்கிடும் முன்னே ஆரம்பித்த யுத்தம். பயத்தில் அவர்களுக்கு உதவாது விட்டுவிட்டு ஓடிய என் கோழைத்தனம். அன்று மினி சினிமா செல்லவிருந்து கடைசி நேரத்தில் மனதை மாத்தி அதற்குப் போகாத நானும் கித்துளும். ஓடு ஓடு என்று ஓடி இன்பருட்டி கிராமத்தில் ஓடும் வழியில் சந்தித்த நண்பர்களுடன் தங்கியது. வழியில் திக்கத்தில் கண்ட புலிகளின் தாக்குதல் அணியினர். கூட ஓடிவந்த நண்பனை துப்பாக்கிக் காயத்துடன் வைத்திய சாலையில் விட்டுவிட்டு ஓடிவந்து வழியில் எங்களுடன் இணைந்த நவநீதன். வேறு வழியில் ஓடி வல்வெட்டியில் புகலிடம் அடைந்திருந்த வேளையில் மட்டுமட்டாக உயிர் தப்பிய என் குடும்பத்தினர்.சந்தியில் இந்தியன் Army விட்டுவிட்டுப்போன உடல்களில் தனது கணவனினது உடலும் இருக்குமோ எனத் தேடிய சிதம்பரநாதன் teacher. அவருடன் சேர்ந்து ஒவ்வொரு உடலாக செக் பண்ணிய என் அம்மா. இவ்வாறு பல சம்பவங்கள் மனதில் நிற்கின்றன.
எல்லாம் முடிந்த பின்னால் பார்த்த பொழுது எம் நண்பர்கள் உறவினர்கள் பலர் எம்மை விட்டுப் போய்விட்டதை அறிந்து கொண்டோம். மதி, செல்வானந்த வேல், ரவி அண்ணா, சங்கர் அண்ணா, புஸ்பா அண்ணாவின் அம்மா, அவரது சகோதரன், ராதன் அண்ணாவின் அப்பா அவரது அண்ணா என பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. மயிரிழையில் உயிர் தப்பிய பலரது கதைகளும் ஒவ்வொன்றாக எம்மை வந்தடைந்தன. அதை நினைக்கும் பொழுது 26 வருடங்களின் பின்பும் என் உடல் மெல்ல நடுங்குகிறது.
இதன் மூலம் அந்த ஆபத்தான தருணங்களில் எமக்கு அதரவு அளித்து எம்மைப் பாது காத்த வல்வெட்டி, கம்பர்மலை, இமையாணன், திக்கம், பொலிகண்டி, இன்பருட்டி, தொண்டைமானாறு , உடுப்பிட்டி, மயிலியதனை, காட்டுப்புலம், நெல்லியடி, கரணவாய், வதிரி, மந்திகை, பருத்தித்துறை, சக்கோட்டை ஆகிய ஊர்களைச் சேர்ந்த அன்புள்ளம் மிக்க மக்களுக்கு வல்வெட்டித்துறை மக்கள் சார்பாக நன்றி கூறுகிறேன்.
அன்று உயிர் நீத்த எம்மக்கள் அனைவருக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள்.
அன்றைய தினத்தில் உயிர் நீத்த இந்திய இராணுவ வீரர்களுக்காக அவர்களது உறவுகளும் இன்றும் அழுது கொண்டிருப்பார்கள் எனும் யதார்த்தம் நெஞ்சை நெருடுகிறது. யுத்தம் ஏற்படுத்தும் வடுக்கள் எப்பொழுதும் ஆழமானவை.
யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் ” சென். பீற்றர்ஸ் ” தேவாலயம் படுகொலையின் நினைவின் நாள்
	இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக அப்பாவிப் பொதுமக்களை பலி கொண்ட அரச படைகளின் முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கை..1995.07.09 ஆம் திகதியன்று வட பகுதியில் பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் தாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்த முன்னேறிப் பாய்ச்சல் இராணுவ நட வடிக்கையை வலிகாமம் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகள் ஊடாக ஆரம்பித்தனர். இராணுவத்தினரின் இந்த நடவடிக்கைக்கு உதவும் விதத்தில் இராணுவத்தினர் முன்னேற முயன்ற பகுதிகளில் விமானப் படையினர் விமானக் குண்டு வீச்சுக்களை மேற் கொண்டனர். இராணுவத்தினர் தமது குடியிருப்புப் பகுதிகளை நோக்கி முன்னேற முயற்சிப் பதைக் கண்டு பயந்த அப்பகுதிகளிலிருந்த மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான பிரதேசங்களுக்கு நகரத் தொடங்கினர்.
	அந்த விதத்தில் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறிய மக்களில் ஒரு பெரும் தொகையினர் நவாலி சென்.பீற் றேர்ஸ் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தனர். அன்று மாலை வேளையில் குறிப்பிட்ட அந்தத் தேவாலயத்தை இலக்கு வைத்து விமானப் படையினரின் புக்காறா விமானங் கள் மேற்கொண்ட விமானக்குண்டுத் தாக்கு தலில் அங்கு தங்கியிருந்த 153 பொதுமக்கள் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.150 பேருக்கு மேலானோர் காயங்களுக்கு உள்ளாகினர்.
	நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயம் மீதான தாக்குதலின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் (09.07.2015) இன்றாகும். வரலாற்றில் அந்த இரத்தக்கறை படிந்த நாளின் துன்ப, துயரங்களை இலகுவில் மறந்துவிட முடியாது. அன்றைய வேளையில் (09.07.1995) ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஆட்சியாளர் களாலும் பாதுகாப்புப் பிரிவினராலும் மேற்கொள்ளப்பட்ட படுகொலை இதுவா கும். மூன்று குண்டு வீச்சு விமானங்கள் ஒரே நேரத்தில் இந்த கோர தாக்குதலை மேற்கெண்டன.
	குறிப்பிட்ட தினத்தன்று அதிகாலையி லிருந்து பலாலி இராணுவ முகாமிலிருந் தும் அளவெட்டி, சண்டிலிப்பாய் பகுதிகளி லிருந்தும் ஊர்மனை நோக்கி நாலாபுற மும் ஷெல் பீரங்கி தாக்குதல்கள் மேற் கொள்ளப்பட்டன.
	திடீரென வலிகாமம் தென்மேற்கு, வலி. மேற்கு, வலி.தெற்கு பகுதிகளில் உள்ள மக் கள் குடியிருப்புகளை நோக்கி காலை 5.40 மணியளவில் இருந்து மும் முனைத் தாக்கு தல் படையினரால் மேற்கொள்ளப்பட்டன. அன்றைய தினம் காலை வலிகாமம் பகுதி யில் உள்ள மக்கள் உடுத்த உடைகளு டனும் கையில் அகப்பட்ட உடைகளுட னும் கண்ணீரும் கம்பலையுமாக இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர்.
	மாட்டுவண்டிகளிலும் சைக்கிள்களி லும் கால்நடையாகவும் லான்ட் மாஸ்ரர் களிலும் வட்டுக்கோட்டை, சங்கரத்தை, வளுக்கையாற்றுவெளி, நவாலி வீதி, நவாலி ஆனைக்கோட்டை பிரதான வீதி, சங்குவேலி, கட்டுடை மானிப்பாய் பிர தான வீதி வழியாக அவர்கள் சென்றனர். அவ்வேளையில் சகல வீதிகளிலும் எறி கணை தாக்குதல், ஹெலி தாக்குதல்கள் நடந்த வண்ணம் இருந்தன. வீதிக்கு வீதி சடலங்கள், காயமடைந்த வர்களை எடுத்துச்செல்லக்கூடிய அள விற்கு வாகன வசதிகளோ, மருந்தகங்களோ, வைத்தியசாலைகளோ இருக்கவில்லை. யாவும் செயலிழந்துவிட்ட அவலநிலை.
	காயமடைந்தவர்கள் சிகிச்சையின்றி, முதலுதவிச்சிகிச்சையின்றி, இரத்தம் வெளியேறிய நிலையில் உயிரிழந்த அந்த நாளைய நிலைமையை இலேசில் மறந்து விடமுடியாது.
	அன்றைய தினம் தமது சொந்த இடங் களைவிட்டு வெளியேறி குடாநாட்டின் பல்வேறு வீதிகளினூடாக மக்கள் திரள் திரளாக நவாலி சென்.பீற்றர் தேவாலயத் திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் களைப்படைந்த நிலையில் தஞ்சமடைந்தனர்.
	அவ்வேளையில் விமானம் மூலம் 13 குண்டுகள் தொடர்ச்சியாக மக்கள் குவிந்தி ருந்த இரு ஆலயங்கள் மீதும் வீசப்பட்டன. சில கணங்களில் எங்கும் “ஐயோ’ என்ற அவலக் குரல்கள் அப்பகுதியை அதிர வைத்தன. விமானக் குண்டு வீச்சுக் கார ணமாக 153 பேர் உடல் சிதறி கையிழந்து கால் இழந்து தலையிழந்து குற்றுயிராக கிடந்த கொடூரக்காட்சி இன்றும் மறக்க முடியாததாகும். இந்தக் கொடூர சம்பவத்தில் 153 பேர் உடல் சிதறி பலியானதுடன் பெரும் எண் ணிக்கையானோர் ஊனமானார்கள்.
	இத்தாக்குதல் சம்பவத்தின் நினைவாக நவாலி வடக்கு புலவர் வீதியிலும், நவாலி புனித பேதுறுவானவர் வீதியிலும் நினைவு சின்னங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. *
	147 அப்பாவிக் குடிமக்களை கணப்பொழுதில் பலியெடுத்த நவாலி தேவாலயம் மீதான விமானத் தாக்குதல்
	தமிழர் தாயக வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத இரத்தக்கறை படிந்த கோரமான கொடூரநாள் 09.07.1995 ஆகும்.
	அந்த நவாலி படுகொலையின் நினைவை ஒரு கணம் மீண்டும் மீட்டுப்பார்க்கின்றோம்.
	இந்தக் கொடுமையான பலியெடுப்பு சர்வதேச சமூகத்தையே மிகவும் மனவருத்தத்திற்கு உள்ளாக்கியதுடன் மக்களை சொல்லெணாத்துயரத்திற்கு இட்டுச் சென்றது.
	கடந்த 09.07.1995 தமிழர் வரலாற்றில் இரத்த ஆறு ஓடிய ஒரு கோரமான கொடிய நாள். அன்றுதான் நவாலி சென்.பீற்றர்ஸ் மற்றும் முருக மூர்த்தி ஆலயம் (சின்னக்கதிர்காமம்) அழிந்து அப்பாவியாக இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை காவுகொண்ட நாள்.
	முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்காவின் பணிப்புரையின் பேரில் வலிகாமம் பகுதியில் ஷெல் ரொக்கட் தாக்குதலில் அதிர்ந்து கொண்டிருந்த வேளையில், விமானப்படையினால் ஆடப்பட்ட ஓர் இனப்படுகொலையாகும்.
	வரலாற்றில் இந்த இரத்தக்கறை படிந்த நாட்களை, நிகழ்வுகளை மறக்க முடியாது. தமிழினம் மறக்காது என்று அன்றைய நிகழ்வையொட்டி லண்டன் பி.பி.சி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.
	முன்னேறிப்பாய்தல் எனப்பெயர்கொண்ட `லீட்போர்வேட்’ இராணுவ நடவடிக்கையை வலிகாமம் பகுதியில் தொடங்கிய இராணுவத்தினர் பலாலியிலிருந்தும் அளவெட்டியிலிருந்தும் மிகக்கொடூரமான முறையில் ஷெல் தாக்குதல்களையும் குண்டுத்தாக்குதல்களையும் மேற்கொண்டிருந்தனர்.
	திடீரென 09.07.1995 அன்று வலிகாமம் தென்மேற்கு, வலிகாமம் மேற்கு வலி. தெற்கு, வலி.வடக்குப்பகுதியிலுள்ள மக்கள் குடியிருப்புக்கள், ஆலயங்கள் அரச மற்றும் பொது நிறுவனங்களை நோக்கி காலை 05.20 மணியிலிருந்து விமானத்தாக்குதல்களும் ஷெல் தாக்குதல்களும் தாறு மாறாக பாரிய சத்தங்களுடன் நடத்தப்பட்டன.
	அன்றைய தினம் காலை வலிகாமம் பகுதியிலுள்ள மக்கள் உடுத்த உடுபுடவைகளுடன் கையில் அகப்பட்ட பொருட்களுடன் கண்ணீரும் கம்பலையுமாக வெளியேறிய காட்சிகள் இன்றும் மறக்க மடியாத ஒரு நிகழ்வாக தமிழர் மனதில் வடுவாக பதிந்துள்ளது.
	கால்நடையாகவும் சைக்கிள்களிலும் தள்ளுவண்டிகளிலும் மாட்டு வண்டில்கள், முச்சக்கர வண்டி மூலமாகவும் வழுக்கையாறு வெளி நவாலி ஆனைக்கோட்டை பிரதான வீதி கட்டுடை மானிப்பாய் பிரதான வீதி வழியாக கைக்குழந்தைகள், வயோதிபர், முற்றாக எழுந்து நடக்க முடியாதவர்கள் என பலரும் பல இன்னல்களை சுமந்த வண்ணம் சென்றனர்.
	அவ்வேளையில், சகல வீதிகளிலும் ஹெலிகொப்டர் தாக்குதல் அகோரமான ஷெல் தாக்குதல்களினால் வீதிக்கு வீதி காயப்பட்டவர்கள், இறந்தவர்கள், காயமடைந்து இரத்தம் சிந்திக்கொண்டிருந்தவர்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல வாகனங்களும் இல்லை.
	வாகனங்களை இயக்குவதற்கான எரிபொருட்களும் அற்ற பொருளாதார தடையான மந்தமான காலப்பகுதியாகும்.
	இதேநேரம், காயமடைந்தவர்கள் ஏதோ ஒரு வழியின் ஊடாக எடுத்துச் செல்லப்பட்டால், அவர்களைக் காப்பாற்ற மருந்தகங்களோ, வைத்தியசாலைகளோ இயங்கமுடியாத அவலநிலை.
	இறுதியில் காயமடைந்தவர் சிகிச்சையின்றி இறந்த நிகழ்வுகளையும் மறக்க முடியாது.
	அன்றைய தினம் குடாநாட்டின் பல்வேறு வீதிகளினூடாக நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயத்திலும், நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் தாகம் தீர்ப்பதற்காக அமர்ந்து களைப்பாறினர்.
	அவ்வேளையில், யாழ். நகரப் பகுதியில் இருந்து அராலி நோக்கி வந்து கொண்டிருந்த விமானம் தொடர்ச்சியாக விமானம் மூலம் 13 குண்டுகள் தான்தோன்றித்தனமாக மேற்படி இரு ஆலயங்கள் மீதும் வீசப்பட்டன.
	அவ்வளவுதான்! நவாலிக்கிராமம் ஒரு கணம் அதிர்ந்து வீதிகள் தடைப்பட்டு, மரங்கள் முறிந்து வீழ்ந்து, வீடுகள் தரைமட்டமாகி, மதில்கள் வீழ்ந்து பாரிய புகை மூட்டம் காணப்பட்டது.
	நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயமும் நவாலி சின்னக்கதிர்காம முருகன் ஆலயமும் மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் அதிர்ந்தன.
	சுமார் 153 பேர் அந்த இடத்திலேயே குடாநாட்டின் பல்வேறு இடத்தைச் சேர்ந்தவர்கள் பலியானார்கள்.
	இந்த நிகழ்வில் இக்கொடூரச்சாவானது கையிழந்து, காலிழந்து, தலையிழந்து, உடல்சிதறி குற்றுயிராகக் கிடந்த நிகழ்வுகளை எம்மால் மறந்துவிட முடியாது.
	சுமார் 360 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை அளிக்காத நிலையில் நீண்ட நேரம் இரத்தம் சிந்தி பலர் உயிர் இழந்ததை காணக்கூடியதாக இருந்தது. அன்றைய தாக்குதலில் பொது மக்கள் சேவையில் நேரடியாகப் பங்கு கொண்ட வலி.தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த கிராம அலுவலர்களான நவாலி வடக்குப் பிரிவு கிராம அலுவலர் செல்வி.ஹேமலதா செல்வராஜா அவர்களும், சில்லாலைப் பிரிவு கிராம அலுவலரான பிலிப்புப்பிள்ளை கபிரியேல்பிள்ளை அவர்களும் ஸ்தலத்தில் பலியான அரச சேவையாளர்கள், எவராலும் இவர்களை முறக்கமுடியாது.
	அன்றையதினம் மக்கள் தொண்டுப்பணியில் ஈடுபட்டு உணவு, குடிநீர் வழங்கிக் கொண்டிருந்த 48 தொண்டர்களும் அந்த இடத்தில் துடி துடித்து உயிர் இழந்ததை மறக்கமுடியாது.
	9 ஆம் திகதியான ஜூலை நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயத்திலும், நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் வருடா வருடம் நினைவுகூரும் வழிபாடுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
	மேற்படி 1995 ஆம் ஆண்டு நவாலி இனப்படுகொலை தொடர்பாக நவாலி வடக்கு சோமசுந்தர புலவர் வீதியிலும்,நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயப்பகுதியிலும் படுகொலைச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கரும்புலிகள் நினைவு நாள்
மகிழடித்தீவு படுகொலை
முதல் தமிழீழ தற்கொடையாளர், தியாகி பொன். சிவகுமாரன் வீர வணக்க நாள்
	
	முதல் தமிழீழ தற்கொடையாளர்,   தியாகி பொன். சிவகுமாரன்  வீர வணக்க நாள் -- 05.06.2017
	பொன். சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 – ஜூன் 5, 1974)
ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.
சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இனவாதத்திற்கெதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்தார்.
யாழ் மண்ணின் உரும்பிராயில் பிறந்த சிவகுமாரன் அவர்கள் சிறு பராயத்திலிருந்தே அநீதிகளைக் கண்டு கொதித்தெழுகின்ற, அவற்றைத் தட்டிக்கேட்கின்ற இயல்புடையவர்.மக்கள் மீதான சிங்கள ஆட்சியாயர்களின் கொடுமை நிறைந்த ஒடுக்குமுறைக்கெதிராக போராட வேண்டுமென்ற துடிப்புடன் சிவகுமாரனால் மேற்கொள்ளப்பட்ட போராட்டச்செயற்பாடுகள் சரியான அரசியல் அடித்தளத்தைக் கொண்டவை. தொலைநோக்கு அடிப்படையில் அமைந்தவை.
தியாகி பொன்.சிவகுமாரனின் போராட்டச் செயற்பாடுகள் சிலவற்றை மீட்டுப்பார்ப்பதன் மூலம், தமிழ் மக்கள் மனங்களில், குறிப்பாக இளைஞர்கள் மனங்களில் விடுதலைக்கான பேரெழுச்சியை ஏற்படுத்திய அம்மாவீரனின் வரலாற்றை உள்வாங்கிக்கொள்ள முடியும். அதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலை வென்றெடுக்கப்பட்டு, அடிமைத் தழைகள் நீங்கிய வாழ்வமைய வேண்டுமென்பதற்காக போராடிய சிவகுமாரனின் இலட்சியத்தாகத்தின் ஆழத்தை அறிந்து கொள்ள முடியும்.
புரட்சியும் எழுச்சியும் இளைஞர் சமூகத்திடமிருந்து தான் தோற்றம் பெறுகின்றது. எனவே, தமிழ் மாணவர்களின் கல்வியைச் சீரழிப்பதன் மூலம் மக்களை எளிதாக அடிமைப்படுத்த முடியும் என்ற மூலோபாயத்தை சிங்கள அரசுகள் திடமாக நம்பி செயற்பட்டு வந்திருக்கின்றன. கல்வியில் பின்னடைவை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கலாம், போர்க்குணத்தை மழுங்கடிக்கலாம், சுதந்திர உணர்வைச் சிதைக்கலாம் என்ற நோக்கத்தில் காலங்காலமாக அவை செயற்பட்டு வந்திருக்கின்றன. (இன்றைய காலத்தில்கூட பல பாடசாலைகளும் பாடசாலைகளை அண்டிய பகுதிகளும் இராணுவ முகாம்களாக இருப்பதைக் கூற முடியும்.)
தமிழ் மாணவர்களின் கல்வி மீது கத்தி வைக்கும் ஆரம்பக்கட்டம் ஆயிரத்துத் தொழாயிரத்து எழுபதுகளில், சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் தரப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டதோடு நிகழ்ந்தது. இது போன்ற அக்கிரமங்களை எதிர்த்துப் போராடும் இலக்கோடு உயர்கல்வி மாணவர்கள் ஒருங்கிணைந்த தமிழ் மாணவர் பேரவை தோற்றம் பெற்றது. 1971ல் தமிழ் மாணவர் பேரவையில் இணைந்த சிவகுமாரன் அவர்கள் சில தோழர்களை ஒருங்கிணைத்து சிங்கள அரசுக்கும் தமிழ்த் தேச விரோத சக்திகளுக்கும் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார்.
கல்வித் தரப்படுத்தலை அமுல்படுத்திய சிறிமா அரசின் துணை அமைச்சராகவிருந்த சோமவீர சந்திரசிறி பயணம் செய்த வாகனத்திற்கு நேரக்கணிய வெடி வைப்பதோடு ஆரம்பமானது சிவகுமாரனது ஆயுதப்போராட்ட வரலாறு (செப் 1970). இச்சம்பவத்திலிருந்து சிங்கள அமைச்சர் உயிர்தப்பிய போதும், அச்சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைதான சிவகுமாரன் சிறையில் மோசமான சித்திரை வதைகளுக்குட்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் துரோகத்தனத்தை புரிந்து வந்த யாழ்-நகரமேயர் அல்பிரட் துரையப்பா மீதும் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டார் (பெப் 1971). அம்முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. துரையப்பா மீதான தாக்குதல் காரணமாக கொலை முயற்சிக் குற்றம் சுமத்தப்பட்டு, 3 ஆண்டுகள் கொடுமையான துன்றுத்தல்களுடன்கூடிய சிறைவாழ்க்கையின் பின்னர், தனது 23வது வயதில் விடுதலையானார். ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. மிகவும் உறுதியோடு போராட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்தார்.
மூன்று ஆண்டுச் சிறை வாழ்க்கையின் பட்டறிவு மூலம் போராட்டம் தொடர்பான பல நடைமுறை யதார்த்தங்களை சிவகுமாரன் உணர்ந்து கொண்டார். போராட்டச் செயற்பாடுகள் தொடர்பான இரகசியங்களை வரவழைப்பதற்காக சிங்களப் படைகளும் சிறிலங்கா காவல்துறையும் போராளிகள் மீது கோரமான சித்திரவதைகளை மேற்கொள்ளும் போது உண்மைகள் வெளிப்பட நேர்ந்தால் போராட்டத்திற்கு உதவுகின்ற மக்கள் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும், போராட்டத்தின் இலக்கு பாதிக்கப்பட்டு பின்னடைவு ஏற்படும், அத்தோடு போராட்டம் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டுவிடும் ஆகியனவே சிறை வாழ்க்கை மூலம் சிவகுமாரன் பட்டறிந்த யதார்த்தம். எனவே, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடும் சூழல் ஏற்படின் சயனைற் உட்கொண்டு உயிரைப் போக்கிக்கொள்வதன் மூலமே போராட்டத்தை முன்னகர்த்த முடியுமென்ற முடிவை எடுத்தார்.
போராட்ட முறைமையென்பது கொள்கைகளை முன்னிறுத்தி உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழியேயன்றி, போராட்ட முறைமையே கொள்கையாக வரித்துக்கொள்ள முடியாதென்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தார். எனவே,போராட்ட முறைமைகள் காலத்திற்கும் சூழலுக்குமேற்ப மாற்றமடைய வேண்டுமென்பதில் ஆழமானதும் தெளிவானதுமான கருத்தைக் கொண்டிருந்தார். தமிழ் மக்களின் அபிலாசைகளையும் உரிமைகளையும் நிலைநிறுத்தும் பொருட்டு அமைதி வழியில் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டங்களையும் பெரிதும் மதித்து ஏற்றுக்கொண்டார். சிறையில் இருந்த காலங்களில் உணவு மறுப்புப் போராட்டங்களை முன்னெடுத்தார்.
	அத்தோடு தமிழ் மக்களுக்கெதிரான சிங்களத்தின் கொடுமைகளுக்கும் அநீதிகளுக்குமாக மட்டும் சிவகுமாரன் போராடவில்லை. தமிழ்ச் சமூகத்திற்குள் புதைந்திருந்த சமூக அடுக்குகளைப் பொசுக்கும் முயற்சிகளிலும் அவர் பின்நிற்கவில்லை. சாதியம், பெண் அடக்குமுறைப்போக்கு, மணக்கொடை போன்ற சமத்துவ வாழ்வுக்குப் புறம்பான போக்குகளையும் துணிந்து நின்று எதிர்த்தார்.
	சிறிமா அரசானது, 1974 ஜனவரியில் யாழப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட 4வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைக் குழப்பும் கீழ்த்தனமான நோக்கில் பல இடையூறுகளை விளைவித்தது. ஆனாலும் மாநாட்டு ஒழுங்கமைப்பாளர்களின் உறுதியான செயற்பாட்டால் மாநாடு பெரும் மக்கள் எழுச்சியுடன் நடந்தேறியது. இவ் வெற்றியின் பின்னணியில் சிவகுமாரன் மிகவும் உத்வேகத்துடன் செயற்பட்டார் என்பதும் வரலாற்றில் பதிவான ஒன்று.
பின்னர் மாநாட்டுக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் மீது சிங்களக் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சிறிலங்கா காவல்துறையின் இந்த மிலேச்சத்தனமான படுகொலையை நேரில் கண்ட சிவகுமாரன் கொதித்தெழுந்தார். அப்படுகொலைக்கு உடந்தையாகவிருந்த உதவிக் காவல் அதிகாரி சந்திரசேகராவைப் பழிவாங்குவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.
சிவகுமாரன் விடுதலை என்ற உன்னத இலட்சியத்திற்காக உண்மையான அர்ப்பணிப்புடனும் தொலைநோக்குடனும் செயற்பட்டவர். தமிழ் மக்களின் விடியலுக்காக போராடிய தியாகி பொன்.சிவகுமாரன் அவர்கள் களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த தருணத்தில் எதிரிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற உயர்ந்த இலட்சியத்தைத் தாங்கி சயனைட் அருந்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளனாய் 1974ம் ஆண்டு யூன் 5ம் நாள் தியாகி பொன் சிவகுமாரன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
வீரச்சாவால் தன்னுயிரைத் தியாகம் செய்துவிட்ட அம்மாவீரனின் நாமம் தமிழீழத்திலும் தமிழர்கள் வாழும் உலகப்பரப்பெங்கும் விடியலின் பெயரை உச்சரித்தபடி நின்று நிலைக்கும்.
	
	
ஊடகவியலாளர் நடேசனின் நினைவு தினம்
யாழ். நூலகம், எரிக்கப் பட்ட தினம். 31. 05.1981
	 
  
 
	சிங்கள இனவாதிகளால் எரிக்கப்பட்ட, தமிழர்களின் சொத்துகளில் ஒன்றான.... 
	யாழ்,நூலகம் எரிக்கப்பட்ட 36 ம் ஆண்டின் நினைவுகள்.....[ 31. 05.1981 -- 31.05.2017 ]
தமிழர்களின் அறிவுப் புதையாலாக விளங்கிய யாழ்.நூலகத்தை சிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 31 ஆண்டுகள் சாம்பலாகிவிட்டது. தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரும் நூலகமாக 97000 புத்தகப் புதையல்களைக் கொண்டு தமிழரின் அறிவுக் கருவூலமாக திகழ்ந்த யாழ் பொது நூலகம் சிங்கள காடையர்களால் 1981 மே 31ஆம் நாள் நல்லிரவிற்கு மேல் எரித்து சாம்பலாக்கப்பட்டது.
	ஒருசிலரது முயற்சியால் சிறு நூலகமாக 1933 இல் ஆரம்பிக்கப்பட்டிருந்த யாழ் நூலகம் காலப்போக்கில் தனிப்பட்ட ரீதியில் நூல்ளை சேகரித்து வைத்திருந்தவர்களது பங்களிப்புடன் வளர்ச்சியடைந்தது. பல்வேறு பழமையான நூல்கள் பழங்காலத்து ஓலைச்சுவடிகள் பத்திரிகைகள் என சேகரிக்கப்பட்டு நூலகம் மேம்படுத்தப்பட்டது.
	திட்டமிட்டு தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய்து வந்த சிங்கள இனவாதத் தலைமைகளின் கண்ணை உறுத்திக் கொண்டிருந்த தமிழரின் அறிவுப் புதையல்களின் பாதுகாப்பிடமாகத் திகழ்ந்த யாழ் பொது நூலகத்தை முற்றிலுமாக அழத்துவிட தீர்மாணித்து முடித்தும் விட்டார்கள்.
தமிழர்களது விடுதலைப் போராட்டம் தீவிரம் பெற பல்வேறு காரணங்கள் இருந்தாலும் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நிகழ்வானது முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. கல்வித் தரப்படுத்தல் சட்டத்தை கொண்டுவந்து தமிழர்களது உயர்கல்வி வாய்ப்பிற்கு சாவுமணியடித்த சிங்கள இனவாத அரசு ஒட்டுமொத்தமாக தமிழர்களின் அறிவுக் கருவூலத்தை தீக்கிரையாக்கிய சம்பவம் தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகத்தை சிங்கள இனவெறி பாசிச அரசின் பேய்யாட்டத்திற்கு பறிகொடுத்து 31 ஆண்டுகள் வரலாற்றில் சாம்பலாகிப் போய்விட்டன. அதனை ஈடுகட்ட ஒவ்வொரு தமிழனும் வரலாற்றை பாதுகாத்து தமிழர் வரலாற்றை மீட்டெடுக்க இந்நாளில் அல்ல எந்நாளும் உறுதி ஏற்க வேண்டும் என வரலாற்றுக் கடமையுணர்வுடன் வேண்டி நிற்கின்றது.
*******************
	ஒரு இலட்சம் புத்தகங்களுடன் எரிந்து சாம்பரான நூலகம்.
	1972 ஆம் ஆண்டு இலங்கை சோஷலிச குடிரயசு யாப்பினை ஆட்சேபித்தும் நிராகரித்தும் தந்தை செல்வா நிர்ப்பந்தித்து இருந்த காங்கேசன்துறைக்கான பாராளுமன்ற இடைத் தேர்தலில் தந்தை செல்வாவுக்கு எதிராக நிறுத்தப்பட்ட சிறிமாவோ பண்டார நாயக்கவின் முக்கூட்டரசு வேட்பாளர் தோழர் வ. பொன்னம்பலம் 16,000 அதிகப்படி பெரும்பான்மை வாக்குகளால் தாம் தோற்றகடிக்கப்பட்டதுமே மக்கள் தீர்ப்பை மகேஸ்வரன் தீர்ப்பாக ஏற்றுக்கொண்ட தோழர் பொன்னம்பலம் தாம் சார்ந்த இலங்கைப் பொதுவுடைமைக் கட்சியில் இருந்து தமது சகாக்களுடன் விலகியவராக செந்தமிழர் இயக்கத்தை ஆரம்பித்து தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியில் ஓர் இணைந்த அமைப்பாக அதனையும் இணைத்துக் கொண்டிருந்தார்.
ஆகவே, தந்தை செல்வாவின் மறைவுக்குப் பின் 1977 ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் எதிர்வரவிருந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது போர்த்துகேயரிடம் போரில் இழக்கப்பட்ட தமிழீழ அரசினை மீள் வித்துப் புதுப்பிப்பதற்கு தமிழீழ வாக்காளரிடம் ஆணை கோரும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பாக எதிர்கொள்ள முடிவு செய்தது.
எனவே, அந்த ஒரே கோரிக்கையை மட்டுமே பிரஸ்தாபிப்பதாக அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிப்பதில் தோழர் வ.பொன்னம்பலமும் உரிய பங்களிப்பை நல்கியிருந்தார். சம்பந்தப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபன வாசகம் உரைத்தவாறு கோரப்பட்ட ஆணையைத் தமிழ் மக்கள் வழங்குமிடத்து தெரிவு செய்யப்படும். பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு தேசிய நிர்ணய சபையாக அமர்ந்து ஒரு சுதந்திர, இறைமையுள்ள, சோஷலிச, ஜனநாயக தமிழீழ அரசை நிறுவும் யாப்பை நிறுவி அதனை எய்த முயலும் சமகாலத்தில் இலங்கையின் பாராளுமன்றத்தையும் மேற்படி இலக்கை எய்துவதற்கான ஒரு மேடையாக உபயோகிப்பார்கள் என்றே உறுதியளித்திருந்தது.
	1977 ஆம் ஆண்டு ஜூலைப் பொதுத் தேர்தலின் போது வடகிழக்கு வாழ் வாக்காளர் பதினெட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை மேற்படி கோரிக்கைக்கு ஆதரவாகத் தெரிவு செய்ததன் மூலம் தம்மிடம் கோரப்பட்ட ஆணையை அபரிமிதமாகவே வழங்கியிருந்தனர்.
	ஆயினும், தமிழ் வாக்காளரிடம் கோரிப்பெறப்பட்டிருந்த மேற்படி ஆணையை உதாசீனம் செய்தவர்களாக தமிழீழ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு தேசிய நிர்ணய சபையாக அமர்ந்து சுதந்திர இறைமையுள்ள சோஷலிச ஜனநாயக தமிழீழ அரசிற்கான யாப்பைத் தயாரிக்கும் பணியைத் தவிர்த்து விலக்கியவர்களாக இலங்கை பாராளுமன்றத்தை வெறும் மேடையாகவே மட்டும் உபயோகிக்க தலைப்பட்டதுடன் நில்லாது இலங்கைப் பாராளுமன்றத்தில் அதன் யாப்பிற்கு விசுவாசமுள்ள ஓர் எதிர்க் கட்சியாகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர்.
	மேலும், சுதந்திர முறைமையுள்ள சோஷலிச ஜனநாயக தமிழீழ அரசை நிர்மாணிப்பதற்கு தங்களை அர்ப்பணித்திருக்க வேண்டிய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புறக்கணித்து பிரதமர் ஜே.ஆர். ஜெயவதனவின் சூழ்ச்சிக்கு இணங்கி மாவட்ட அபிவிருத்திச் சபைகளை இருகரம் நீட்டி ஏற்றுக் கொண்டும் இருந்தனர். இருப்பினும் யாழ். மாநகர முன்னாள் முதல்வர் டாக்டர் ச.அ. தருமலிங்கம் தலைமையில் “சுதந்திரன்’ ஆசிரியர் கோவை மகேசன், ஈழவேந்தன் போன்றோர் அதனை ஆட்சேபித்து மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களைப் புறக்கணிக்குமாறு கோரி மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய தலைப்பட்டனர். மக்கள் ஆதரவும் அவர்களுக்குச் சார்பாகவே மாறத் தலைப்பட்டது.
	அத்தகைய எதிர்ப்புகளின் மத்தியில் 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி யாழ். நாச்சிமார் கோவில் வீதியில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ். மாநகர முதல்வர் இராஜா விசுவநாதன் தலைமையில் நடந்து கொண்டிருந்த சமயம், தேர்தலை ஆட்சேபித்து ஆயுதக் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தால் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட மேலும் இருவர் காயமடைந்தனர்.
	அதன் நிமித்தம் கட்டுப்பாடுகளை மீறிய காவல்துறையினர் கட்டுமீறி நிகழ்த்திய அனர்த்தங்களால் நாச்சிமார் கோவில் வீதியில் ஆரம்பித்த தீத்தாண்டவம் யாழ். நகரையே தீக்கிரையாக்கிற்று. யாழ். மத்திய பேருந்து நிலையத்தைச் சூழவிருந்த கடைகள் தீயினால் பொசுக்கப்பட்டன. யாழ். பிரதான வீதியில் இருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பணியகம் எரியுண்டது. பாட்டன் மேதரின் வர்த்தக நிறுவனம் மற்றும் டாக்டர் செபஸ்தியாம் பிள்ளையின் இல்லமும் சேதமுற்றன.
	இவை அனைத்திற்கும் மேலாக யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் இல்லம் முழுமையாக எரிந்து சாம்பாராக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் வெ. யோகேஸ்வரனை அவரது மனைவியுடன் அத்தீயில் பொசுக்க மேற்கொள்ளப்பட்ட எத்தனத்தில் இருந்து அற்புதமாக உயிர் பிழைத்த இருவரும் வீட்டின் பின் புற மதிலால் பாய்ந்து ஓடி ஓளிய நேர்ந்தது.
1981 ஆம் ஆண்டு மே 31 இல் ஆரம்பித்து வைக்கப்பட்ட தீத் தாண்டவம், மறுநாளான ஜூன் முதல் நாளிலும் தொடர்ந்தது. அன்று நிகழ்த்தப்படவிருந்த பண்பாட்டுப் பேரவை நாடும் உலகமும் அறியவராது தடுக்கும் ஓர் எத்தனமாக முழு யாழ்ப்பாண குடாநாட்டிலும் அப்போது வெளிவந்து கொண்டிருந்த ஒரே ஒரு நாளேடான ?ஈழ நாடு? பத்திரிகைப் பணிமனை முதலில் தீக்கிரையாக்கப்பட்டது. முதல் நாள் நிகழ்த்தப்பட்டிருந்த அடாவடித்தனமான அட்டூழியங்களையடுத்து காவல்துறையினர் ஓர் உத்தியோகப்பற்றற்ற ஊரடங்கு ஆணையைப் பிறப்பித்திருந்தது.
ஜூன் 04 ஆம் திகதி நடைபெறவிருந்த யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்லைக் கண்காணிப்பதற்காக தெற்கில் இருந்து தருவிக்கப்பட்டிருந்த விஷேட காவல் துறையினர் யாழ்.பொது நூலகத்துக்குப் பின்னால் இருந்த துரையப்பா விளையாட்டரங்கிலும் அதன் முன்னால் இருந்த யாழ். மத்திய கல்லூரியிலும் தங்கவைக்கப்பட்டிருந்தனர். யாழ். பொது நூலகத்தையும் துரையப்பா விளையாட்டரங்கையும் அடுத்ததாக வடக்கிற்கான உதவிப் பொலிஸ்மா அதிபர் பணிமனையும் நகரின் மத்திய பொலிஸ் நிலையமும் அமைந்திருந்தன. நகரிலோ உத்தியோகப்பற்றற்ற ஊரடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலை.
இருந்த போதிலும் பொது மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறையினரால் திராவிட சிற்பவியல் பாங்கில் நிர்மாணிக்கப்பட்டிருந்ததும் தென்னாசியாவிலேயே மிகப் பெரியதும் 98,000 க்கும் அதிகமான புத்தகங்களையும் தேடற்கரிய கையெழுத்துப் பிரதிகளை உடையதுமான யாழ்ப்பாணப் பொது நூல் நிலையம் மனுக்குலத்துக்கே விரோதமான ஒரு குற்றச் செயலாகவும் பண்பாட்டுப் படுகொலையாகவும் தீயிட்டுப் பொசுக்கப்பட்டது.
இத்தகைய ஓர் பண்பாட்டுப் படுகொலை இத் தீவின் வரலாற்றில் இது முதல் நிகழ்வும் அல்ல! இறுதி நிகழ்வும் அல்ல!! கோட்டை இராசதானியின் சேனாதிபதி சப்புமல் குமாரயா யாழ்ப்பாணம் இராசதானி மீது படையெடுத்து வந்தபோது நல்லூர் நாயன்மார்க் கட்டில் இருந்த யாழ்ப்பாண இராசதானியின் தேசிய சரஸ்வதி நூலகம் அது உள்ளடக்கியிருந்த அரும் பெரும் சித்த வைத்திய நூல்களுடன் தீயினால் முற்றாகப் பொசுக்கப்பட்டது. யாழ்ப்பாண இராசதானியின் வேந்தர்கள் சிறந்த சித்த வைத்திய நிபுணர்களாக விளங்கியதுடன், தாமே பல மருத்துவ நூல்களை எழுதியிருந்ததும் தெரிந்ததே! ?சரஸ்வதி? நூலகம் அவற்றையும் உள்ளடக்கியிருந்தது.
	அது வரலாற்றில் முற்பட்ட நிகழ்வாக இருந்தால், யாழ். பொது நூலகம் அழிக்கப்பட்டதன் பின் காஸா நகரில் சுவிடிஸ் மக்களால் அன்பளிப்பாகத் தரப்பட்டிருந்த “குளோப்’ நூலகமும் அவ்வாறே அழிக்கப்பட்டிருந்தது. மேலும், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி நூலகம் 1984 ஆம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் முதல் நாளில் அதன் நூற்று ஐம்பது வருடகால புத்தகச் சேர்வுகளுடன் பாதுகாப்புப் படையினரால் தீயினால் அழிக்கப்பட்டது. சென்னை “இந்து’ பத்திரிகையின் சிறப்பு நிருபர் ஜி. பார்த்தசாரதி தமது யாழ்ப்பாணச் சுற்றுப் பயணத்தின் பின் இதனை அதன் செப்டெம்பர் 28 ஆம் திகதிய இதழில் அம்பலப்படுத்தியிருந்தார்.
	யாழ்ப்பாணப் பொது நூல் நிலையம் தீயில் பொசுங்குவதை யாழ். சம்பத்திரிசியார் கல்லூரி மேல் மாடியில் இருந்து காண நேர்ந்த யாழ்ப்பாணத்தின் நடமாடும் நூலகமாகப் போற்றப்பட்டு வந்தவரான பன்மொழிப் புலவர் வண. பிதா தாவீதடிகள் பேரதிர்ச்சியடைந்தவராக மூர்ச்சித்து மரணமானார். இந்த ஜூன் முதல் நாள் அடிகளாரின் இருபத்தேழாவது நினைவு தினமாகும்.
யாழ். அரசாங்க முகவராக அப்போது பதவியில் இருந்த யோகேந்திரா துரைச்சாமி தமது உத்தியோகபூர்வ வதிவிடத்தில் வாழாது யாழ். மாணிக்கூட்டுக் கோபுரத்தை அடுத்துள்ள தமது தந்தையின் “மகேந்திரா’ இல்லத்திலேயே வசித்து வந்தார். யாழ். பொது நூலகம் எரிந்து கொண்டிருப்பதை யாழ். மாநகர ஆணையாளருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தவர் யாழ். அரசாங்க முகவரே.
தகவல் தெரிந்ததும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த காவல்துறையினரின் உத்தியோகப்பற்றற்ற ஊரடங்கு சட்டத்தையும் பொருட்படுத்தாது மாநகர ஆணையாளர் சி.வி.கே. சிவஞானம் மாநகரசபை ஊழியர் சிலரையும் உதவிக்கு உடன் அழைத்துக் கொண்டு ஸ்தலத்துக்கு விரைந்தவர் அங்கு நகர மண்டபம், சுப்பிரமணிய பூங்கா, நூலகம் மற்றும் திறந்த வெளியரங்கு காவலர்களின் ஒத்துழைப்புடன் தீயை அணைப்பதற்குப் பெரிதும் முயன்றார். ஆயினும் காவல் துறையினரோ அதனை அனுமதியாது அவர்களை அங்கிருந்து விரட்டிவிட்டனர். ஆகவே, வேறுவழியின்றி மாநகர ஆணையாளர் சி.வி.கே.சிவஞானம் காரைநகர் கடற்படையினருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உதவி கோரியிருந்தார். கடற்படையினர் உதவிக்கு விரைந்து வந்திருந்தபோதும் அதற்குள் நூலகம் பெரிதளவு முழுமையாகவே அழிந்துவிட்டது.
ஊர் வாயை உலை மூடியால் மூடும் ஓர் எத்தனம் போன்றே யாழ்ப்பாணத்தில் தாம் நிகழ்ந்தவிருந்த பண்பாட்டுப் படுகொலை குறித்த தகவல் செய்தி ஊடகங்களுக்கு எட்டாதிருக்கச் செய்யும் முற்காப்பு நடவடிக்கையாகவே “ஈழநாடு’ பணிமனை முன்கூட்டியே தீக்கி?ரயாக்கப்பட்டிருந்தது.
ஆகவே, யாழ்.பொதுநூலகம் அழிக்கப்பட்டிருந்த காட்சியை நேரில் சென்று கண்டிருந்தோர் புறநீங்கலாக யாழ்.குடாநாட்டினுள் வசித்தவர்களுக்குத்தானும் அச்சம்பவம் செய்தியாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. தலைநகர் கொழும்பில் இருந்து வெளியிடப்பட்ட ஊடகங்களுக்கோ அச்சம்பவம் வெறும் தகவலாகத்தானும் எட்டியிருக்கவில்லை. எனவே, தலைநகர் கொழும்பில் வெளியிடப்பட்ட பத்திரிகைகளோ இலத்திரனியல் ஊடகங்களோ யாழ். பொதுநூலகத்துக்குச் சம்பவித்திருந்த பேரழிவு குறித்து ஒரு வார்த்தைதானும் பிரஸ்தாபியாதிருந்தமை புரிந்து கொள்ளக்கூடியதே.
சா.ஆ.தருமரத்தினம்.
	 
  
  
  
  
  
 
மட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் அவர்களின் வீரவணக்க நாள்
இனப் படுகொலையின் உச்சநாள். தமிழீழம் சிதைத்து அழிக்கப் பட்ட நாள்.
	   
   
	 
  
இனப் படுகொலையின் உச்சநாள். தமிழீழம் சிதைத்து... அழிக்கப் பட்ட நாள் மே 18, 2009.
சர்வதேச நாடுகளின் துணையுடன் , தேசத் துரோகிகளினதும், தமிழீழ விரோதிகளினதும் முழுமையான ஒத்துழைப்புடன்..... பொய்மை புனைந்து, உலகை ஏமாற்றி, தன்னை நியாயப் படுதித்தியபடி வீரமிக்க தமிழீழ தேசத்தை சிங்கள இன வெறியரசு கோழைத்தனமாக ஆக்கிரமித்துக்கொண்ட நாள்.
21-ம் நூற்றாண்டில் மனிதம், அதன் உரிமைகள்... பற்றிய புதிய கருத்தேற்றங்கள் சபைகள் தோறும் நிறைந்து விரவிக்கிடக்க... இலட்சக்கணக்கான தமிழர்களை பலிகொண்டு, பல்லாயிரக்கணக்கான தமிழர்களை அங்ககவீனர்களாக்கி, மூன்று இலட்சத்திற்கும் மக்களை கைதிகளாக்கி அடைத்து வைத்தபடி, விடுதலைப் போராளிகளை சித்திரவதை செய்து, படுகொலைகள் செய்து, தமிழீழத்தை... சிங்கள தேசம் முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்ட தினம்.
	  
   
	 
  
	 
  
	 
 
	 
  
	 
    
	 
  
  
 
	  
 
"தமிழீழ விடுதலைப் புலிகள்" அமைப்பு ஆரம்பிக்கப் பட்ட தினம்.
	
தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இன்று மே 5-ம் தேதியன்று 40-வது அகவையில் கால் பதிக்கிறது.1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17-வது வயதில், “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார்.
அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பை (எல்.ரி.ரி.ஈ) 1976-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி தொடங்கினார்.
தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை தனது சிறந்த கட்டுப்பாடான நெறிப்படுத்தலினாலும், தனது அயாரத உழைப்பாலும், தமிழ் மக்களின் ஆதரவாலும் மிகப் பெரிய அமைப்பாக மாற்றினார்.
தமிழர்களுக்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து, உலகின் பார்வையைத் தம்மகத்தே மூன்றாவது ஈழப் போரின் போது திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் உலக படை வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு முன்னூதாரணமாகத் திகழ்ந்தார்கள்.
உலக வல்லரசுகளின் இராணுவப் படிமுறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கிய பல சிறந்த தாக்குதல்களின் மூலம் உலகின் பார்வையைத் தம்மகத்தே திருப்பிய விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் ஓயாத அலைகள் தாக்குதல்கள் போராட்டத் தந்திரோபாயங்களையெல்லாம் புரட்டிப் போட்ட மரபு வழித் தாக்குதலாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
அத்தோடு எதிரி உச்சவிழிப்பில் இருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த ஆனையிறவு இராணுவத் தளம் மீதான முப்பரிமாணத் தாக்குதலை தமது திட்டமிடலின்படியே நடத்தி மூன்று மாத காலத்தில் படைகளை அகற்றி உலகில் தமக்கெனத் தனி அங்கீகாரம் பெற்றார்கள் விடுதலைப்புலிகள். அத்தோடு பல முறியடிப்புச் சமர்கள் குறிப்பாக யாழ். தேவி முறியடிப்புச் சமர், சூரியக்கிரன முறியடிப்புச் சமர், ஜெயசிக்குறு எதிர்ச்சமர், தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என பல முறியடிப்புச் சமர்களின் மூலம் தமது தற்காத்தல் போராட்ட முறையை உலகிற்குப் பாடவிதானமாக்கிய விடுதலைப்புலிகளின் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் 18 மாதங்களாக நீடித்த ஒரு பாரிய சமராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
	முப்படைகளையும் அதற்கான சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுமாணத்தோடு உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் அவற்றிற்கான தனிச்சீருடைகள், முகாம்கள் என அவற்றைப் பராமரித்ததோடு அவற்றின் சண்டையிடும் திறன் மூலம் இந்தியப் பிராந்தியத்திற்கே படைபல அச்சமேற்படுத்தும் படையணிகளாக அவற்றை சிறீலங்கா மற்றும் அவற்றின் நேச நாடுகள் நோக்குமளிவிற்குப் பேணிப் பாதுகாத்தனர்.
	இராணுவப் படைக் கட்டுமாணத்தின் கீழ் பல சிறப்புப் படையணிகளைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் ஜெயந்தன் படையணி, சிறுத்தைப் படையணி, மகளீர் படையணி, சார்லஸ் அன்ரணிப் படையணி, மோட்டார்ப் படையணி, ஆட்லறிப் படையணி, டாங்கிப் படையணி என இன்னும் பல பிரிவுகளையும் திறம்படச் செயற்படுத்தி வந்தனர்.
குறிப்பாக ஈழப் போர் நான்கில் தமிழீழ தேசப் படையணிகள் முழுப் பரிமாணம் பெற்றதற்கான அடையாளமாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வான்புலிகளின் தோற்றமும் அவற்றின் செயற்பாடும் மிக நேர்த்தியான தாக்குதல்கள், உச்ச இலக்குகள், இலாவகமாகத் திரும்பித் தளமடையும் செயற்திறன் என ஒரு வான்படைக்கான அங்கீகாரத்தை அதற்கு வழங்கியிருந்தது.
போராட்டத்தின் பெயர் சொல்லவல்ல 70-க்கும் மேற்பட்ட சிறந்த தளபதிகளைக் கொண்டிருந்தார்கள் தமிழீழ விடுலைப்புலிகள். பல வல்லாதிக்க சக்திகளின் ஆதரவு இன்றி சிங்கள இனவாத அரசை எதிர்கொண்டு போராடினார்கள்.
ஆயுதங்களை மௌனிப்பதாக முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் அறிவிக்கும்வரை கொண்ட கொள்கை மீதான பற்று உறுதியுடன் போராடிய தமிழர்களின் போராட்ட சக்தி தோற்றம் பெற்ற நாள் தமிழர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாகும்.
	
	
உதயன் பத்திரிகை நிறுவம் தாக்கப்பட்ட நாள்
கேணல் மனோ மாஸ்டர் நினைவு நாள்
மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் ‘தராக்கி’ அவர்களின் நினைவு நாள்
மட்டக்களப்பு மண்ணில் பிறந்து ஊடகத்துறையில் சிறந்து விளங்கிய தராக்கி என்றழைக்கப்பட்ட தர்மரட்ணம் சிவராம் சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஊடக போராளி மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் ‘தராக்கி’ அவர்களின் ஒன்பதாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ம் ஆண்டு ஏப்ரல் 28 ம் திகதி கடத்தி செல்லப்பட்டு மறுநாள் ஏப்ரல் 29 ம் திகதி சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொலை செய்யப்பட்டர்.
ஊடகத்துறை வரலாற்றில் மிகவும் சவால் நிறைந்த காலகட்டத்தில் துப்பாக்கி முனைகளின் அச்சுருத்தல்களுக்கு மத்தியில் தனது கருத்துக்களின் ஊடாக உண்மைகளை உரக்கச்சொன்ன மிகவும் துணிச்சல் மிக்க ஊடகப் போராளியாக திகழ்ந்த ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் ஆவர்.
‘தராக்கி’ மற்றும் ‘எஸ்.ஆர்’ ஆகிய புனைபெயர்களில் சிவராம் பல ஆக்கங்களை எழுதிவந்திருந்தார். ஆங்கில ஊடகத்துறை மூலமே சிவராம் தன்னை ஊடகவியலாளராக அறிமுகப்படுத்தினார். எனினும் பிற்காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆக்கங்கள் எழுதுவதை சிவராம் நிறுத்திக்கொண்டார்.
இந்த நிலையில், 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி “நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன்.அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடிவிடமாட்டேன்.” என்று வீரகேசரி வார வெளியீட்டில் சிவராம் கட்டுரையொன்றை எழுதியிருந்தார்.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் பலரை கணினி யுகத்திற்குள் கொண்டுவந்த பெருமையும் சிவராமையே சாரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பத்தி எழுத்தாளராக அரசியல் ஆய்வாளராக படைத்துறை ஆய்வாளராக பல்வேறு பரிமாணங்களை கொண்ட சிவராம் ஆரம்பத்தில் 1980 களில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) முழுநேர செயற்பாட்டாளராக மாறிய சிவராம் 1990 களின் நடுப்பகுதியில் அதன் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமாகக் கடமையாற்றியவர்.
	வாழ்க்கை குறிப்பு
	***************
	சிவராம் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பில் மகேஸ்வரி, புவிராஜகீர்த்தி தர்மரட்ணம் அகியோருக்கு மகனாகப் பிறந்தார். சிவராமின் தந்தையார் கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அவரின் பாட்டனார் சபாபதிப்பிள்ளை தர்மரத்தினம் (வன்னியனார்) 1938-ஆம் ஆண்டில் மட்டக்களப்பின் இரண்டாவது தெரிவு செய்யப்பட்ட இலங்கை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.
சிவராம் 1989 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் யோகரஞ்சனி என்பவரை வாழ்க்கைத் துணையாக ஆக்கிக்கொண்ட சிவராமிற்கு வைஸ்ணவி, வைதேகி என்ற இரு மகள்களும் சேரலாதன் என்ற மகனும் உள்ளனர்.
ஆரம்பக்கல்வியை புனித மிக்கேல் தேசியப் பாடசாலையில் கற்றார். அதைத் தொடர்ந்து கொழும்பில் அக்குவானாஸ் கல்லூரியில் தொடர்ந்தார். பல்கலைக்கழகத்திற்கு தெரிவான இவர் பேராதனைப் பல்கலைகழகத்தில் அனுமதிபெற்றார். செப்ரெம்பர் 1981இல் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற அவர் ஆங்கிலத்தினையும் ஒரு பாடமாகக் கொண்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே அங்கு பயின்ற பின்னர் அரசியல் ஈடுபாட்டினாலும் 1983 இல் இடம்பெற்ற இனக்கலவரங்களினாலும் பல்கலைக்கழகக் கல்வியைக் கைவிட்டார்.
	மாமனிதர் சிவராமின் இறுதிக் கட்டுரை.
	*********************************
	சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் சிவராம் அவர்கள் 24.04.2005 அன்று வெளியான வீரகேசரி வாரஇதழில் ‘எரிக் சொல்ஹெய்மின் வருகைகளும் தமிழ்த் தேசியத்தின் நெருக்கடிகளும்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் முழுவடிவம். இக் கட்டுரையே அவர் எழுதிய இறுதிக் கட்டுரையாகும்.
	எரிக் சொல்ஹெய்மின் வருகைகளும்
	தமிழ்த் தேசியத்தின் நெருக்கடிகளும்
- தராக்கி டி.சிவராம் -
நோர்வேயின் சிறப்பு சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வருகிறார். போகிறார். அவர் வரும்போதும் போகும்போதும் தமிழ் ஊடக ஆரவாரம் ஒன்று கிளம்பும். அது மக்களிடையே ஏதோ நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை மீண்டும் ஏற்படுத்தும். அவர் வந்த வழியே திரும்பிப் போவார். ஊடக ஆரவாரங்கள் அடங்கும். பின்னர் வழமைபோல அது இது என்று எமது வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும். சொல்ஹெய்ம் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு நல்ல மாற்றம் விரைவில் ஏற்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டாக்கக்கூடிய வகையில் அறிக்கை விடுகிறார். அல்லது செய்தியாளர்களுக்குக் கருத்துச் சொல்கிறார்.
இன்னும் சில கிழமைகளில் சுனாமிப் பொதுக்கட்டமைப்பு வந்துவிடும் என அவர் இம்முறை இங்கு வருவதற்கு முன்னர் ஒரு வெளிநாட்டுச் செய்தி நிறுவனத்திற்குச் செவ்வி கொடுத்திருந்தார். அது மட்டுமன்றி புலிகளின் மட்டு-அம்பாறை படைத் தளபதி பானுவைச் சந்தித்த பின்னர் பொதுக்கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டுமென்று சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் மிக ஆர்வத்துடன் இருப்பதாக அவர் அழுத்திக் கூறினார்.
பொதுக்கட்டமைப்பு கிடைக்கப்போவதில்லை. ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்கப் போவதில்லை என்பதுதான் சிறிலங்காவின் அரசியல் நுனிப்புல் மேய்ந்தவர்களுக்குக்கூட மிகமிக அப்பட்டமாகப் புரிந்திடக்கூடிய உண்மையாகும். இதில் யாருக்கும் இம்மியளவும் சந்தேகம் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதற்காக பொதுக்கட்டமைப்பு வழங்கப்பட்டால் தாம் சந்திரிகாவின் அரசிலிருந்து வெளியேறிவிடுவோம் என ஜே.வி.பி மிகத் தெளிவாக அமெரிக்கப் பிரதிநிதி கிறிஸ்ரினா ரொக்காவிடம் கூறிவிட்டது.
இங்கு நாம் சொல்ஹெய்ம்மைக் கடிந்து கொள்ளமுடியாது. எம்மை இலவு காத்த கிளிகளாக்கும் நோக்குடன்தான் அவர் இங்கு வருகிறார் என்றோää சந்திரிகா அரசு எமது காதில் வழமைபோல் பூச்சுற்றுவதற்கு அவர் மலர் கோத்துக் கொடுக்கிறார் என்றோ நாம் அவரைக் கண்டனம் பண்ண முடியாது. ஏனெனில் அவர் எமது உடன்பாட்டுடனேயே இலங்கையின் இன முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான அனுசரணையாளராக அமர்த்தப்பட்டார். ஏதோ ஒரு தீர்வோ அல்லது அதைநோக்கிய முன்னேற்றமோ வருகிறது என்றுதான் அவர் சொல்வார். சொல்ல முடியும். அவருடைய கதையில் எடுபட்டு பேயராகுவதா இல்லையா என்பது எம்மைப் பொறுத்தது.
பொதுக்கட்டமைப்பு ஏற்படுத்துமாறு பல வெளிநாடுகள் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. புலிகளின் தடையை நீடித்து வரும் அமெரிக்காகூட இதையே வலியுறுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி பொதுக்கட்டமைப்பு சரிவராவிடின் புலிகளுக்கு நேரடியாகவே உதவி வழங்குவதற்கான ஏற்பாடொன்று உண்டாக்கப்படல் வேண்டுமென சில நாடுகள் கருதத் தலைப்பட்டுள்ளன. இதைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசிற்கு நேரடியான எந்த வழியும் தற்போது இல்லை. எனவே இக்கட்டமைப்பு உண்டாக வேண்டும் என்பதில் தானும் அக்கறையாக இருக்கிறேன் என சிறிலங்கா அரசு அறிக்கை விடுகிறது. அக்கறையாக இருக்கிறோம் ஆனால் சில விடயங்களைப் பேசி முடிவெடுக்க வேண்டியிருக்கிறது எனக் கூறிக்கொண்டிருந்தால் காலம் எப்படியாவது உருண்டோடி விடும். அந்த ஓட்டத்தில் உதவி வழங்கும் நாடுகளும் புலிகளும் தமிழ் மக்களும் பொதுக்கட்டமைப்பு என்ற விடயத்தை வழமைபோல மறந்துவிடுவார்கள் என சிறிலங்கா அரசு கணக்குப் போடுகிறது. சொல்ஹெய்மினுடைய வருகைகளும் கூற்றுக்களும் இந்தக் கணக்கிற்கு மிகவும் வலுச்சேர்க்கின்றன. வடக்குக் கிழக்கின் உடனடி மனிதாபிமானத் தேவைகளை நிறைவேற்றுவதற்கென ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது ( Sihrn) உங்களுக்கு ஓரளவு ஞாபகம் இருக்கும் அதையும் அதன் பின்வந்த சில ஒழுங்குகளையும் சிறிலங்கா அரசு இப்படித்தான் பம்மாத்திற்று. அப்போதும் சொல்ஹெய்ம் வந்து போனார். இரு தரப்பும் ஏதோவொரு உடன்பாட்டை அண்மித்துக் கொண்டிருப்பதாக அறிக்கை விட்டார். அவருடைய ஒவ்வொரு வருகையையும் விழுந்தடித்துக்கொண்டு எமது ஊடகங்கள் ஆரவாரப்படுத்தின. (இதில் தமிழ்நெற்றும் விதிவிலக்கல்ல) நடந்ததோ ஒன்றுமில்லை. மாறாக தமிழ் பேசும் மக்களை பேய்க்காட்டிக்கொண்டு அவர்களை ஒற்றையாட்சி அமைப்பிற்குள் வாழப்பழக்குவதற்கு சொல்ஹெய்மின் வருகைகளும் அதையொட்டி எழும் எதிர்பார்ப்புக்களும் அரிய வாய்ப்பாக அமைந்தன அமைகின்றன.
ஏலவே கூறியதுபோல இதில் நாம் நேர்வேயையோ அதன் சிறப்பு தூதுவரையோ குற்றஞ்சாட்டவும் முடியாது. குறை கூறவும் முடியாது. அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். இதில் அவதானமாக இருக்கவேண்டும் என்ற கேள்வி உடனே தோன்றும். முதலாவது சொல்ஹெய்மின் வருகையைச் சுற்றி உண்டாகும் ஊடக ஆரவாரத்தில் மக்கள் அறிந்திருக்க வேண்டிய சில அடிப்படை உண்மைகள் அடிபட்டுப் போகின்றன.
இந்த உண்மைகள் மறைந்துபோவது நுட்பமாகச் செயற்படும் சிங்கள மேலாண்மையாளர்களுக்கு மிக வாய்பாகிவிடுகிறது. ஏன்? பொதுக்கட்டமைப்பு விடயத்தை எடுத்துக்கொள்வோம். வாழ்விட அழிவுகள் இடப்பெயர்வு அகதிகள் என்பவற்றை பற்றியதே இந்தப் பொதுக்கட்டமைப்பாகும். இந்த மூன்றையும் எப்படி எதிர்கொள்வது எப்படி இவற்றிற்குத் தீர்வு காண்பது என்பது பற்றியதாகவே புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் நடைபெற்ற ஆறுசுற்றுப் பேச்சுக்களும் அமைந்திருந்தன. நடந்ததென்ன? ஒன்றுமேயில்லை. வாழ்விட அழிவுகளைச் சரிசெய்வது என்றாலோ இடம்பெயர்ந்த மக்களைக் குடியமர்த்துவது என்றாலோ தேவைப்படுவது முதலில் நிலம். பின்னர் பணம். இவையிரண்டுமே சிறிலங்கா அரசின் அசைக்கமுடியாத கட்டுப்பாட்டில் உள்ளன. நிலத்தையும் நிதியையும் இவையிரண்டையும் உரிய முறையில் பயன்படுத்துவதற்குத் தேவையான நிறைவேற்று அதிகாரத்தையும் (executive power) எந்தவொரு கட்டமைப்பிற்கும் பகிர்ந்தளிப்பதை சிறிலங்காவின் அரசியல் யாப்பு தடைசெய்கிறது. இதனாலேயே போரில் அழிந்துபோன எமது வாழ்விடங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கும் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கும் எந்தவொரு வலுவானதொரு கட்டமைப்பை உருவாக்குவதில் புலிகளும் ரணில் அரசும் தோல்வி கண்டனர். இவ்வாறான ஒரு கட்டமைப்பு சிறிலங்கா சட்டத்திற்கு முரணானதாக இருக்கும் என அப்போது சிங்களச் சட்டவல்லுனர்கள் சுட்டிக்காட்டினர். அதுமட்டுமின்றி அப்படியொரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டால் அதை சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்க வேண்டுமென சில சிங்கள மேலாண்மையாளர்கள் வழக்குத் தாக்கல் செய்யப்போவதாகவும் அச்சுறுத்தினர். இவையெல்லாம் ரணில் அரசுக்கு நல்ல சாட்டாகிவிட்டன. சுனாமிப் பொதுக்கட்டமைப்பு என்பதும் வாழ்விட அழிவுகள் இடப்பெயர்வு அகதிகள் என்பவை பற்றியதே. எனவே அதை ஏற்படுத்துவதில் மேற்கூறிய அடிப்படை முட்டுக்கட்டைகள் உண்டாகுவதை எவ்வகையிலும் தடுக்க முடியாது. சுனாமிப் பொதுக்கட்டமைப்பு என்பது வெறுமனே வெளிநாட்டு உதவிப் பணத்தைப் பெறுவது மட்டுமல்ல. அது அடிப்படையில் நிலம் பற்றியதாகும். மக்கள் குடியமரும் இடங்களுக்கு மின்சாரம் நீர் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்துகொடுப்பது பற்றியதாகும். இவற்றைவிட மேலாக மேற்படி அலுவல்களைச் செய்வதற்கான அதிகாரம் பற்றியதாகும் இந்த சுனாமிப் பொதுக்கட்டமைப்பு விடயமாகும். சிறிலங்காவின் அரசியல் யாப்பு முற்றாகத் தூக்கியெறியப்படாமல் ஒரு வலுவுள்ள சுனாமிப் பொதுக்கட்டமைப்பு எப்படி சாத்தியம் என்பது கேள்விக்குறி. இதனாலேயே சிறிலங்கா அரசு சுனாமிப் பொதுக்கட்டமைப்பு விடயத்திலும் மிக நுட்பமாகப் பம்மாத்து விடத் தொடங்கிவிட்டது. இந்தப் பேய்க்காட்டலுக்கு சொல்ஹெய்மின் வருகைகளும் அறிக்கைகளும் வலுச்சேர்க்கின்றன என்பதுதான் இங்கு மீண்டும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.
இதில் இருக்கும் ஒரு பேராபத்தைப் பலரும் கவனிக்கத் தவறுகின்றனர். 1976 இலேயே நாம் தனித் தமிழ் ஈழமே எமது சிக்கலுக்கு ஒரே தீர்வு என்ற நிலைக்குத் தள்ளப்படுவதற்கு அன்று எமக்கிருந்த காரணங்களைவிட இன்று 29 ஆண்டுகள் கழித்து மிக வலுவான காரணங்கள் காணப்படுகின்றன. ஆனால் அப்போதிருந்த அரசியல் ஒருமைப்பாடு வெகுசன எழுச்சி முனைப்பு என்பன இன்று மழுங்கிக் காணப்படுகின்றன. அது மட்டுமன்றி அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் எமது மக்களிடையே இருந்த அரசியல் முனைப்பும் எழுச்சியும்கூட மழுங்கிக் காணப்படுகின்றன. அது மட்டுமன்றி அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் எமது மக்களிடையே இருந்த அரசியல் முனைப்பும் எழுச்சியும்கூட மழுங்கிப் போவதை நாம் காண்கிறோம். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. காலத்திற்குக் காலம் ஏதோ ஒரு தீர்வு வரப்போகிறது என ஏற்படுத்தப்படும் எதிர்பார்ப்புகளும் இதில் ஒன்று என்பதுதான் உண்மை. நாங்கள் பேயராக்கப்படுகிறோம் என்ற தன்மான உணர்வு மமக்களிடையே கூர்மையடைந்தமையாலேயே எமது போராட்டம் எழுச்சியடைந்தது. அந்த அரசியல் எழுச்சியும் முனைப்புமே எமது போராட்டம் தடம்புரளாமல் இருக்க உதவின. இவை மழுங்கிப் போகுமாயின் நாம் சலுகைகளுக்காகச் சோரம் போகின்ற கேவலமானதொரு கூட்டாகி விடுவோம். எந்த ஒரு அரசும் அரசியல் ஒருமைப்பாடும் அறிவுமுள்ள ஒரு சமூகத்தை ஏமாற்றும்போது அந்த அரசுக்கும் அந்த மக்களுக்கும் முரண்பாடுகள் கூர்மையடைவது தவிர்க்க முடியாதது. இவ்வாறான முரண்பாடுகள் ஒருகட்டத்தை அடையும்போது அவை தமக்கெதிரான போராட்டங்களாக வெடிக்காமல் இருக்க அரசுகள் பலவழிகளைக் கையாள்கின்றன. அவற்றில் ஒன்று மாய எதிர்பார்ப்புகளை உண்டாக்குவதாகும்.
கருணா குழுவின் சாட்டில் சிறிலங்கா படைகள் கிழக்கில் கெடுபிடிகளை அதிகரித்து வருகின்றன. பொருளாதார வளர்ச்சியும் வேலைவாய்ப்புகளுமின்றி வடக்கு-கிழக்கில் எமது மக்கள் இன்னமும் வாழ்கின்றனர். போர் அழிவுகள் இன்னமும் மாறாது உள்ளன. யாழ்ப்பாணத்தில் தமது காணிகளையும் வீடுகளையும் ஊர்களையும் சிறிலங்கா படைகளிடம் பறிகொடுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னமும் நாதியற்றுக் கிடக்கின்றனர். தமிழ்மொழி புறக்கணிப்பு இன்னமும் தொடர்கிறது. இப்படியே பல இன்னல்களைக் கூறிச் செல்லலாம்.
இவற்றையெல்லாம் விட சுனாமியும் பேரழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இன்றுவரை எதற்கும் தீர்வில்லை. ஆனால் இவையெல்லாம் எமது மக்களிடையே எந்தவிதமான அரசியல் கோபத்தையும் உண்டாக்கவில்லை. இந்த இன்னல்கள் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு எதிராக அவர்கள் அணிதிரளவில்லை. திரட்டப்படுவதிலும் அதிகம் நாட்டம் காட்டுவதில்லை. யாழ்ப்பாணத்திலோ மன்னாரிலோ வவுனியாவிலோ மட்டக்களப்பிலோ அரசியல் பேரணிகளுக்கு வருகின்ற மக்களின் தொகை வீழ்ச்சியடைந்துள்ளது என்பது மறைக்க முடியாத உண்மை. அவர்களிடம் விடுதலை உணர்வு இருக்கின்றது. ஆனால் அது அரசியல் ரீதியாக அணிதிரளும் அளவுக்கு எழுச்சியுள்ளதாக இல்லை.
எரிக் சொல்ஹெய்ம் வருகிறார். அவரைப் புலிகள் சந்திக்கிறார்கள். சிரித்துக்கொண்டே கைகுலுக்குகிறார்கள். எல்லாம் சுமூகமாகப் போகிறது என்பதுபோல் மகிழ்ச்சியாகப் பேசுகிறார்கள். இப்படியான செய்தி விம்பங்களை பொதுமக்கள் திரும்பத் திரும்பக் காணும்போது அவர்களை அறியாமல் உளவியல் தாக்கம் ஒன்று ஏற்படுவது இயல்பு.
விரைவில் எமக்கு தீர்வு கிடைக்கப்போகிறது என்ற உளப்பாங்கை இந்த விம்பங்கள் மக்களிடம் உண்டாக்குகின்றன. அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் சொல்ஹெய்மின் கூற்றுக்களும் அமைந்துவிடுகின்றன. இவையெல்லாம் நமது மக்களிடையே எழக்கூடிய அரசியல் சு10ட்சுமங்களைத் தணிக்கின்றன. “ஏதோவொரு தீர்வு அண்மித்துவிட்டது. எனவே நாம் எமதுபாட்டில் இருப்போம்” என்ற அரசியல் மலட்டுத்தனம் அவர்களிடையே பரவுகிறது.
புதிய மக்கள் படை (New Peoples Army-NPA ) என்பது எண்பதுகளில் உலகின் மிகப்பெரிய கெரில்லா இயக்கங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அது போராடி வந்தது. கடந்த பல ஆண்டுகளாக npa நோர்வேயின் அனுசரணையோடு பிலிப்பைன்ஸ் அரசுடன் அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகிறது. (அமெரிக்காவின் பின்னணியிலேயே நோர்வே அங்கும் அனுசரணையாளராக அமர்த்தப்பட்டது) NPA ஐ ஒரு பயங்கரவாத இயக்கமாக ஏலவே அமெரிக்கா தடைசெய்திருந்தது. அமைதிப் பேச்சுக்களில் குறிப்பிட்ட காலம் ஈடுபட்டு வந்தால் தன்மீதான தடையை அமெரிக்கா நீக்கும் எனவும்ää தனக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்குமெனவும் npa எதிர்பார்த்திருந்தது. ஆனால் npaய இன் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த பிலிப்பைன்சின் கிராமப்புற ஏழை மக்களிடம் காணப்பட்ட அரசியல் முனைப்பும் எழுச்சியும் பேச்சுக்கள் நடந்த காலத்தில் படிப்படியாக வீழ்ச்சியடையலாயின. இன்று npய வலுவிழந்த ஒரு அமைப்பாக காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறது.
NPA ஐ புலிகளோடு ஒப்பிட முடியாதென சிலர் கூறலாம். படைபலத்தில் புலிகள் NPA ஐ விட பலநூறு மடங்கு வலுவுள்ளவர்களாக இருப்பது உண்மையாயினும் மக்களின் அரசியல் முனைப்பு வீழ்ச்சியடைவது பற்றிய யதார்த்தத்தை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும்.
எமது போராட்ட எழுச்சி மக்களிடையே மழுங்கடிக்கப்படாமல் இருக்கவேண்டுமாயின் நாம் சில வேலைகளை செய்தல் நல்லது. முதலாவது நமது கையில் திட்டவட்டமாக எதுவும் கிடைக்கும்வரை நாம் அதுபற்றிய ஊடக ஆரவாரத்தை சற்றேனும் குறைக்கவேண்டும். பிழையான எதிர்பார்ப்புக்களை மக்களிடம் ஏற்படுத்தும் செய்தி விம்பங்களை கூடியளவு தவிர்க்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக சிறிலங்கா அரசு எமக்கு எதையுமே தரப்போவதில்லை என்ற உண்மையை மக்களிடம் மீண்டும் மீண்டும் சொல்லவேண்டும். அதிலும் குறிப்பாக சொல்ஹெய்ம் வந்துசெல்லும் ஒவ்வொரு முறையும் அதை நாம் உரத்துக் கூறவேண்டும்.
ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்த நாள்
ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் ஆனது, இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்க்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.
35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது, பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக்கேணியில் இருந்து கடல்வழியே தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவிலான படை நகர்வொன்றை முன்னெடுத்தனர். கடற்புலிகளின் படகுகளில் 1200 வரையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள், தாளையடி முகாம் மீதிருந்து வரக்கூடிய எதிரியின் தாக்குதல்களை எதிர்நோக்கியவாறு, குடாரப்புப் பகுதியில் தரையிறங்கும் குறிக்கோளுடன் கடல்வழியாகப் பயணித்தனர்.
குடாரப்பு தரையிறக்கச் சமர் ஈழப்போராட்ட வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய சாதனைகளில் இது முக்கியமானது. மிகப்பெரிய நாடுகளின் படைத்துறைக்கு ஈடான உத்தியுடனும் வளத்துடனும் ஒரு மரபுவழித் தரையிறக்கத்தை தமிழரின் விடுதலைச்சேனை நிகழ்த்தியிருந்தது. அதன்மூலம் வெல்லப்பட முடியாததாக பலராலும் கருதப்பட்ட மிகமுக்கிய இராணுவத் தளமான ஆனையிறவும் அதைச்சுற்றியிருந்த மிகப்பெரும் படைத்தளமும் புலிகளால் மீட்கப்பட்டது.
சவால்களை ஏற்றுச் சமர் செய்யக்கூடாதென்பது கெரிலாப் போராளிகளுக்கான பொதுவிதி. ஓயாத அலைகள் மூன்று என்ற தொடர் நடவடிக்கையில் முதலிரு கட்டங்களும் வன்னியின் தெற்கு மற்றும் மேற்கு முனைகளில் முன்னேறியிருந்த படையினரை விரட்டியடித்து மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டிருந்தது.
மூன்றாம் கட்டம் மூலம் வன்னியின் வடக்கு முனையில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி உள்ளடக்கிய கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து பரந்தன் படைத்தளமும் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட கடற்கரைப் பகுதியிலிருந்து நாலாம் கட்டத்துக்கான பாய்ச்சல் தொடங்க இருந்தது. 26.03.2000 அன்று மாலை வெற்றிலைக்கேணிக் கடற்கரையில் போராளிகள் அணிவகுத்து நிற்கிறார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ஈழப்போராட்டத்தில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்திய போரியற் சாதனையொன்றை நிகழ்த்த அவர்கள் ஆயத்தமாகி நின்றார்கள்.
வெற்றிலைக்கேணியிலிருந்து கடல்வழியாக எதிரியின் கட்டுப்பாட்டிலிருக்கும் தாழையடி உட்பட்ட மிகப்பலமான கடற்கரையை மேவிச்சென்று, குடாரப்புப் பகுதியில் புலிகளின் அணிகள் தரையிறங்க வேண்டும்; தரையிறங்கிய அணிகள் ஆனையிறவுத் தளத்துக்கான முக்கிய வினியோகப்பாதையான கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொள்ள வேண்டும் என்பதே திட்டம்.
தரையிறக்கம் செய்யப்பட வேண்டிய படையணி மிகப்பெரியது. ஆயிரத்து இருநூறு வரையான போராளிகளை ஒரேயிரவில் தரையிறக்க வேண்டும். தரையிறக்கத்தைத் தடுக்க எதிரி சகலவழிகளிலும் முயல்வான். கடலில் முழுக் கடற்படைப் பலத்தோடும் எதிரி தாக்குவான். கடற்கரையிலிருந்தும் டாங்கிகள் மூலம் நேரடிச்சூடு நடத்தி கடற்புலிகளின் படகுகளை மூழ்கடிப்பான். விடிந்துவிட்டால் எதிரியின் வான்படையின் அகோரத் தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டிவரும்.
மிக ஆபத்தான பணிதானென்றாலும் அதைச்செய்தே ஆகவேண்டும். கடற்புலிகள் அந்தப் பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செய்துமுடித்தனர். மாலை புறப்பட்ட படகணிகள் ஆழக்கடல் சென்று இரண்டுமணிநேரப் பயணத்தில் தரையிறங்க வேண்டிய பகுதியை அண்மித்தது. எதிர்பார்த்தது போலவே கடலில் கடும்சண்டை மூண்டது. இரவு 8.30 இற்கு கடலில் சண்டை தொடங்கியது. 16 டோறாப் பீரங்கிப் படகுகள் அடங்கிய தொகுதியுடன் சண்டை நடந்தது.
தாக்குதலணிகளைத் தரையிறக்கவேண்டிய படகுகளுக்கு எதுவித சேதமும் ஏற்படாவண்ணம் கடற்புலிகளின் தாக்குதற் படகுகள் சண்டை செய்தன. கடுமையான சண்டைக்கிடையில் விடிவதற்குள் வெற்றிகரமாக அணிகள் கடற்கரையில் தரையிறக்கப்பட்டன.
முதற்கட்டமாக தரையிறக்க அணிகளைக் காவிச் சென்ற ஏழு விநியோகப் படகுகளும் வெற்றிகரமாக அணிகளைத் தரையிறக்கின. தரையிறங்கிய அணிகள் தொண்டமானாறு நீரேரியைக் கடந்து அதிகாலைக்குள் கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொண்டனர்.
அவர்கள் தரையிறங்கிய நேரத்தில் ஏற்கனவே உட்புகுந்திருந்த கரும்புலிகள் அணி பளையிலிருந்த ஆட்லறித் தளத்தைக் கைப்பற்றி பதினொரு ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்திருந்தனர். தரையிறங்கி நிலைகொண்ட அனைத்து அணிகளையும் பிரிகேடியர் பால்ராச் அவர்கள் நேரடியாக களத்தில் நின்று ஒருங்கிணைத்து வழிநடத்தினார். அவருக்குத் துணையாக துணைத் தளபதிகளாக சோதியா படையணித் தளபதி துர்க்கா, மாலதி படையணித் தளபதி விதுஷா, சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதி (பின்னர் பிறிதொரு நேரத்தில் இரணைமடு குளத்தில் குளிக்கும் போது நீரில் முழ்கி சாவடைந்த) லெப்.கேணல் ராஜசிங்கன், விக்ரர் கவச எதிர்ப்பணிக்குத் தலைமை தாங்கிக் களமிறங்கியிருந்த இளங்கீரன் ஆகியோர் செயலாற்றினர்.
புலிகள் இயக்கம் இப்படியொரு தரையிறக்கத்தைச் செய்யுமென்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இவ்வகையான முயற்சிகள் புலிகளின் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதோடு, தற்கொலைக்கு ஒப்பானது என்றே எல்லோரும் கருதியிருந்தனர். உண்மையில், தற்கொலைக்கு ஒப்பானதுதான்.
வன்னித் தளத்தோடு நேரடி வழங்கலற்ற நிலையில் பெருந்தொகைப் போராளிகள் எதிரியின் பகுதிக்குள் சிறிய இடமொன்றில் நிலையெடுத்திருப்பது தற்கொலைக்கு ஒப்பானதுதான். தரையிறங்கிய அணிக்கான உணவு விநியோகத்தைக்கூடச் செய்யமுடியாத நிலை. கடலில் மிகக் கடுமையான எதிர்ப்பை எதிரி கொடுத்தான். தரையிறக்கம் தொடர்பான செய்தியை எதிரி அறிந்தபோது முதலில் திகைத்தாலும், ஆனால் அவ்வளவு பேரையும் கொன்றொழிப்பது என்பதில் எதிரி தெளிவாக இருந்தான். தன்னால் அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழிக்க முடியுமென்று எதிரி நம்பினான்.
புலிகளின் போரிடும் வலுவுள்ள முக்கிய அணிகள் அங்கிருந்ததும், முக்கியமான போர்த் தளபதிகள் அங்கிருந்ததும் அவனுக்கு வெறியேற்றியது. அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழித்தால் புலிகளின் கதை அத்தோடு முடிந்துவிடுமென்று கணித்திருந்தான்.
வெற்றிலைக்கேணியிலிருந்து குடாரப்புவரை அரசபடையினரின் மிகவலுவான படைத்தளப் பகுதியாக இருந்தது. தரையிறக்கத்தின் முன்பே கடல்வழியான தொடர்ச்சியான விநியோகம் சாத்தியப்படாதென்பது தெளிவாக உணரப்பட்டது. ஆகவே தரைவழியாக விநியோகத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதே நியதி. அதன்படி வெற்றிலைக்கேணியிலிருந்து கடற்கரை வழியாக குடாரப்பு வரை நிலத்தைக் கைப்பற்ற வேண்டும். தரையிறங்கிய அடுத்தநாளே தாளையடி, மருதங்கேணி, செம்பியன்பற்றுப் பகுதிகளைக் கைப்பற்றி குடாரப்பு வரை தொடர்பை ஏற்படுத்தும் சமர் தொடங்கிவிட்டது.
இத்தாவில் பகுதியில் கண்டிவீதியைக் குறுக்கறுத்திருந்த புலியணிகளை முற்றாக அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த எதிரிப்படையோடு கடும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், இத்தாவிலில் நிலைகொண்டிருக்கும் படையணிக்கு விநியோகத்தை ஏற்படுத்த புலியணிகள் கடுமையான சண்டையைச் செய்தன.
இரண்டுநாள் எத்தனிப்பின் முடிவில் தாளையடி உட்பட்ட மிகப்பலமான படைத்தளங்களைக் கைப்பற்றி தரையிறக்க அணிக்குரிய தரைவழியான வழங்கலை உறுதிப்படுத்திக் கொண்டனர் புலிகள். அதுவரை சரியான விநியோகமில்லாது, இருந்தவற்றை மட்டும் பயன்படுத்தி நிலத்தைத் தக்கவைத்துக் கொண்டிருந்த தரையிறக்க அணி ஆசுவாசப்படுத்திக் கொண்டது.
அணிகள் சீராக்கப்பட்டு (மீளொழுங்கு படுத்தப்பட்டு), தொடர்ந்து சண்டை நடந்தது. கண்டிவீதியைக் குறுக்கறுத்திருக்கும் புலிகளை முற்றாக அழிப்பதற்கு எதிரி தனது முழுவளத்தையும் பயன்படுத்தினான். கவசவாகனங்கள், ஆட்லெறிகள், கனரகப் படைக்கலங்கள் என்று சகலதும் பயன்படுத்தினான். மிகமிக மூர்க்கமாகத் தாக்கினான். ஆனாலும் புலிவீரரின் அஞ்சாத எதிர்ச்சமரில் தோற்றோடினான்.
கவசப்படைக்குரிய பல கவசவாகனங்கள் அழிக்கப்பட்டன; சேதமாக்கப்பட்டன. புலியணி நிலைகொண்டிருந்த பகுதி சிறியதாகையால் மிகச்செறிவான ஆட்லறிச் சூட்டை நடத்துவது எதிரிக்கு இலகுவாக இருந்தது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டபின் அவ்வழியால் சென்றவர்கள் அப்பகுதியைப் பார்த்திருப்பர். அழிக்கப்பட்ட கவசவாகனங்கள் வீதியோரத்தில் நிற்பதையும் இத்தாவில் பகுதியில் ஒரு தென்னைகூட உயிரோடின்றி வட்டுக்கள் அறுக்கப்பட்டு மொட்டையாக நிற்பதையும் காணலாம். அவ்வளவுக்கு அகோரமான குண்டுத்தாக்குதல் புலியணிமீது நடத்தப்பட்டது. ஆனாலும் அப்பகுதியைத் தொடர்ந்து தக்கவைப்பதில் உறுதியாக இருந்து வெற்றியும் கண்டனர் புலிகள். ஆனையிறவுத் தளம் முற்றாகக் கைப்பற்றப்படும்வரை முப்பத்துநான்கு (34) நாட்கள் இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு அதைத் தக்கவைத்துக்கொண்டனர் கேணல் பால்ராச்சின் தலைமையிலான புலியணியினர்.
(வரலாற்றுப் புகழ்வாய்ந்த மாமுனைத் தரையிரக்கத்தில் நீருக்குள்ளால் 120 மி.மீ. கனரகப் பீரங்கியை இழுத்துச்சென்றனர் பெண்புலிகள்)
தரையிறங்கிய சிலநாட்களுக்குள் ஆனையிறவைக் கைப்பற்றும் முயற்சியொன்றைப் புலிகள் மேற்கொண்டபோது, அது தோல்வியில் முடிவடைந்தது.
பின்னர் சிலநாட்களில் வேறொரு திட்டத்தைப் போட்டு மிக இலகுவாக, மிகக் குறைந்த இழப்புடன் ஆனையிறவுப் பெருந்தளம் முழுவதையும் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். இயக்கச்சியைக் கைப்பற்றியதோடு தானாகவே எதிரிப்படை ஆனையிறவிலிருந்து தப்பியோடத் தொடங்கிவிட்டது.
ஒழுங்குமுறைப் படுத்தப்பட்ட பின்வாங்கல் போலன்றி, அனைவரும் தங்கள் தங்கள் பாட்டுக்குச் சிதறியோடினர். தாம் பயன்படுத்திய ஆட்லறிகள் முழுவதையும்கூட அழிக்க முடியாத அவசரத்தில் விட்டுட்டு ஓடினர். அவர்களுக்கு இருந்த ஒரே பாதையான ஆனையிறவு – கிளாலி கடற்கரைப் பாதை வழியாக ஓடித்தப்பினர்.
முடிவில் ஆனையிறவு தமிழர்களிடம் வீழ்ந்தது. ஆனையிறவு மட்டுமன்றி மிகப்பெரும் நிலப்பகுதி – கண்டிவீதியில் முகமாலை வரை – கிழக்குக் கடற்கரையாகப் பார்த்தால் சுண்டிக்குளம் முதல் நாகர்கோவில்வரை என்று மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டது. அனைத்துக்கும் அடிநாதமாக இருந்தது அந்தத் தரையிறக்கம்தான்.
சிங்களப்படை அப்படியொரு தரையிறக்கத்தைச் செய்ய கனவிலும் முனையாது. 1996 இல் அரசபடையால் அளம்பிலில் அவ்வாறு செய்யப்பட்ட தரையிறக்கமொன்று பெருத்த தோல்வியில் முடிவடைந்து இராணும் மீண்டும் தப்பியோட நேரிட்டது. ஆனால், புலிகள் மிக வெற்றிகரமாக படையணிகளைத் தரையிறக்கி, ஒரு மாதத்துக்கும் மேலாக எதிரியின் மிகக் கடுமையான எதிர்த் தாக்குதலைச் சமாளித்து நிலைகொண்டிருந்ததோடு, இறுதியில் எதிரியை முற்றாக வெற்றிகொண்டனர்.
கரும்புலி அணியினரால் தகர்க்கப்பட்ட ஆட்டிலெறிகள்
பளை ஆட்டிலெறித் தளத்தைத் தகர்ப்பதற்கு 26.03.2000 அன்று இரவு விடுதலைப் புலிகளின் சிறிய அணியொன்று மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. முதல்நாளே கடல்வழியாக எதிரியின் பகுதிக்குள் ஊடுருவிவிட்டிருந்தனர் அவ்வணியிலுள்ளவர்கள். அதுவொரு கரும்புலியணி. ஆண்போராளிகளும் பெண்போராளிகளும் அதிலிருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பளையை அண்டிய பகுதியில் இரகசியமாக நகர்ந்துகொண்டிருந்தார்கள்.
அப்போது, ஆனையிறவுத் தளம் எதிரியின் வசமிருந்தது. அன்று இரவுதான் வரலாற்றுப் புகழ்மிக்க குடாரப்புத் தரையிறக்கம் நடைபெற இருந்தது. இவர்கள் நகர்ந்துகொண்டிருக்கும் அதேநேரத்தில் கடலில் தரையிறக்க அணிகளைக் காவியபடி கடற்புலிகளின் படகுகள் நகர்ந்துகொண்டிருந்தன. குறிப்பிட்ட கரும்புலி அணிக்குக் கொடுக்கப்பட்ட பணி, பளையிலுள்ள பாரிய ஆட்டிலெறித் தளத்தை அழிப்பதுதான்.
பின்னொரு சமரில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் வர்மனின் தலைமையில் அவ்வணி பளை ஆட்டிலெறித் தளத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. முழுவதும் எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதி. எந்த நேரமும் எதிரியோடு முட்டுப்பட்டு சண்டை மூளக்கூடும். இயன்றவரை அவ்வணி இடையில் வரும் சண்டைகளைத் தவிர்க்கவேண்டும். இலக்குவரை வெற்றிகரமாக, சலனமின்றி, எதிரி அறியாவண்ணம் நகரவேண்டும். அவ்வணியில் மொத்தம் பதினொரு பேர் இருந்தார்கள்.
குறிப்பிட்ட ஆட்டிலெறித்தளம் வரை அணி வெற்றிகரமாக நகர்ந்தது. நீண்டநாட்களாக துல்லியமான வேவு எடுத்திருந்தார்கள். அதுவும் அந்த அணியை வழிநடத்திய வர்மனும் ஏற்கனவே வேவுபார்க்கச் சென்றவர்களுள் ஒருவனாவான். எனவே, அந்த அணியை இலகுவாக இலக்குவரை நகர்த்த அவனால் முடிந்தது.
ஆட்டிலெறித் தளத்தின் சுற்றுக் காவலரண் தொடருக்கு மிக அருகில் வந்துவிட்டார்கள். இனி சண்டையைத் தொடக்கி காவலரணைத் தகர்த்து உள்நுழைய வேண்டியதுதான். இந்த நிலையில் காவலரணிலிருந்து 25 மீற்றர் தூரத்தில் அணியினர் இருக்கும்போது எதிரியே சண்டையைத் தொடக்கிவிடுகிறான்.
தடைக்குள்ளேயே அவ்வணியின் முதலாவது வீரச்சாவு நிகழ்கிறது. கரும்புலி மேஜர் சுதாயினி என்ற வீராங்கனை முதல்வித்தாக விழுந்தாள். சண்டை தொடங்கியதும் கரும்புலியணி உக்கிரமான தாக்குதலைத் தொடுத்துக்கொண்டு காவரணைக் கைப்பற்றுகிறது. மின்னல் வேக அதிரடித் தாக்குதலில் எதிரி திகைத்து ஓடத் தொடங்குகிறான். தாக்குதல் நடத்துவது பத்துப்பேர் கொண்ட சிறிய அணியென்பதை அவன் அனுமானிக்கவில்லை. ஆட்டிலெறித் தளத்தைப் பாதுகாத்து நின்ற நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் சண்டை தொடங்கிய மறு நிமிடமே ஓட்டமெடுத்துவிட்டனர். ஆட்டிலெறித் தளம் எஞ்சியிருந்த பத்துப்பேர் கொண்ட அணியிடம் வீழ்ந்த்து.
ஆட்டிலெறிகள் முழுமையாகக் கைப்பற்றப்பட்டன. மொத்தம் பதினொரு ஆட்டிலெறிகள் இருந்தன. ஓடிய எதிரி பலத்தைத் திரட்டிக்கொண்டு மீண்டும் தளத்தைக் கைப்பற்ற வருவான். இருப்பதோ பத்துப்பேர் மட்டுமே. இது தாக்கியழிப்பதற்கான அணி மட்டுமே. மீண்டும் கைப்பற்றவரும் எதிரியோடு சண்டைபிடிக்க முடியாது. ஆனாலும், போதுமான நேரம் இருந்தது. எதிரி உடனடியாக தளத்தைக் கைப்பற்ற முனையவில்லை. குறிப்பிட்டளவு நேரம் தளத்தைக் கட்டுப்பாட்டுள் வைத்திருந்து, பின்னர் தலைமைப்பீட அறிவுறுத்தலின்படி ஆட்டிலெறிகளைச் செயலிழக்கச் செய்யத் தொடங்கினார்கள்.
இந்த நடவடிக்கையில் கரும்புலி மேஜர் தனுசன் வீரச்சாவடைந்தான். பதினொரு ஆட்டிலெறிகளையும் செயலிழக்கச் செய்துவிட்டு எஞ்சிய ஒன்பதுபேரும் பாதுகாப்பாகத் திரும்பினர். ஆட்டிலெறிகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது குடாரப்புவில் தரையிறக்கம் நிகழ்ந்தது.
அவ் ஆட்டிலெறிகள் முற்றாக அழிக்கப்பட்டன. அதன்மூலம், தரையிறங்கிய அணியினருக்கான உடனடி எதிர்ப்பை இல்லாமல் செய்தது. தளத்தை அழித்த கரும்புலியணி மீண்டும் எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளால் இரகசியமாக நகர்ந்து விடிவதற்குள் பாதுகாப்பாகத் தளம் திரும்பினர்.
பளை ஆட்டிலெறித் தள அழிப்பு, ஆனையிறவு மீட்புப் போரில் மிகப்பெரிய திருப்புமுனை. எதிரிக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணியது. இந்த அழிப்போடு தரையிறக்கமும் ஒன்றாக நிகழ்ந்ததால் எதிரி மிகவும் குழம்பிப்போனதோடு, உடனடியான எதிர்வினையை அவனால் செய்யமுடியவில்லை. தன்னை மீள ஒழுங்கமைத்து தாக்குதல் தொடங்க குறிப்பிட்ட அவகாசம் தேவைப்பட்டது.
இந்த தாக்குதலின் பின்னணி குடாரப்புத் தரையிறக்கத்துக்கானது
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, 2000 ஆம் ஆண்டு மாலை நேரம் குடாரப்பு பகுதியினை இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அடைகின்றனர் தமிழீழ விடுதலை புலிகளின் போராளிகள்.
குடாரப்புத் தரையிறக்க மோதல்
குடாரப்பு பகுதியில் மாலை 8:30 மணியளவில் தரையிறங்கும் வேளை ஏற்பட்ட மோதலில் 16 டோறாப் பீரங்கிப் படகுகள் கொண்ட இலங்கை இராணுவத்தினருடன் கடற்புலிகளின் போர்க்கலங்கள் மோதின. தரையிறங்கு கலங்களிலிருந்த தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் சேதம் எதுவும் ஏற்படாது தரையிறக்கப்பட்டனர்.
கண்டி வீதியில் நிலை கொள்ளல்
குடாரப்பு பகுதியில் தரையிறங்கிய தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் தொண்டமனாறு கடல் நீரேரி ஊடே இத்தாவில் பகுதியில் உள்ள கண்டி வீதியில் நிலை கொண்டனர். இக் கண்டி வீதியினூடாகவே ஆனையிறவுப் படைத்தளத்திற்கான பிரதான விநியோகங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பளை ஆட்டிலெறித் தள உள்நுழைவு
கண்டி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் நிலை கொண்டிருக்கும் வேளை பளை ஆட்டிலெறித் தளத்தில் உட்புகுந்த கரும்புலி அணியினர் அங்கு அமைத்திருந்த 11 ஆட்டிலெறிகளைச் செயல் இழக்கச் செய்தனர்.
தமிழீழ விடுதலிப் புலிகளின் வழங்கல் தொடர்பு
வெற்றிலைக்கேணி முதல் குடாரப்பு வரையான 12 கிலோமீற்றர் தூரம் வரையிலான இலங்கை இராணுவத்தினரின் படை முகாம்கள் அழிக்கப்பட்டு அங்குள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் ஆனையிறவின் பல பாகங்களிலும் உள்ள தமது போராளிகளிடையே வழங்கல் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தனர்.
இலங்கை இராணுவத்தின் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளை எதிர்நோக்கிய தீவிர தாக்குதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. டாங்கிகள், கவச வாகனங்கள், எறிகணைகள் எனப் பல்வேறு வகையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களிற்கு எதிர்த் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.
பால்ராச் உயிருடன் பிடிபட்ட செய்தி
இத்தாவில் பகுதியில் நிலைகொண்டிருந்த புலிகளின் அணியினை ஒருங்கிணைத்த தளபதி பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தியினை தம் களமுனைத் தளபதிகளிடமிருந்து கொழும்புப் படைத்தலைமை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
உடுத்துறை வழியான தரைவழி விநியோகம்
வத்திராயன், தாளையடி, மருதங்கேணி முகாம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டு உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் மார்ச் 28 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. இத் தரைவழி விநியோகத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லைப்படை வீரர்களும் பங்காற்றினர். இத்தாவிலில் நிலைகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க எட்டிற்கும் மேற்பட்ட தடவைகள் இலங்கை இராணுவத்தினரால் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தாவிலில் தரையிறங்கி நிலைகொண்ட புலிகள் அணியினரை முறியடிக்க முடியாத நிலைக்கு இலங்கைப் படையினர் தள்ளப்பட்டனர். இதனால், ஆனையிறவுப் படைத்தளத்தில் 53ஆம் படையணியின் தளபதியாக விளங்கிய காமினி ஹெட்டியாராச்சி தனது பதவியிலிருந்து விலக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
ஆனையிறவுப் படைத்தளம் மீதான முற்றுகை
இலங்கைப் படைத் தரப்பினரின் விநியோகங்களைத் தடுத்தவாறே ஆனையிறவுப் படைத் தளத்தினை முற்றுகையிட்டனர் தமிழீழ விடுதலைப் புலிகள். குடாரப்புத் தரையிறக்கத் தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து 34 ஆம் நாட்களின் பின்னர் ஊடறுப்புத் தாக்குதல் யுக்திகளால் ஏப்ரல் 22 ஆம் திகதி ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்தது.
-இது, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமராய்வுப் பிரிவால் தொகுக்கப்பட்ட பதிவு ஆகும்






