நலமோடு நாம் வாழ

விட்டமின் பி12 குறைந்தால் உடலில் என்ன நிகழும்? சைவ உணவாளர்கள் இதை எப்படி பெறுவது?

1 month 2 weeks ago

விட்டமின் பி12, பாதிப்பு, விட்டமின் பி12-ஐக் கொண்டுள்ள உணவுப் பொருட்கள், ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், நித்யா பாண்டியன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 16 மே 2025, 04:05 GMT

விட்டமின் பி12 உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. இதன் குறைபாட்டால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. பொதுவாக சைவ உணவுகளில் இந்த விட்டமின் இருப்பதில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

விட்டமின் பி12 பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்னைகள் என்ன? வாழ்வில் எந்தெந்த காலகட்டத்தில் விட்டமின் பி12-ன் தேவை அதிகமாக இருக்கிறது? விட்டமின் பி12 அதிகமாக உள்ள உணவுகள் என்னென்ன?

சைவ உணவை உட்கொள்ளும் நபர்கள் எவ்வாறு தங்களுக்கான விட்டமின் பி12 வை பெற்றுக் கொள்ள இயலும்? அதற்கான பதில்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

விட்டமின் பி12 என்றால் என்ன?

கோபாலமின் (Cobalamin) என்று அழைக்கப்படும் விட்டமின் பி12 என்பது விட்டமின் பி குடும்பத்தில் இடம் பெற்றுள்ள ஒரு முக்கியமான விட்டமின். இது அதிகமாக விலங்கு சார் உணவுகளில் மட்டுமே காணப்படுகிறது.

நீங்கள் சைவ உணவு உண்ணும் பழக்கத்தைக் கொண்டவர்களாக இருப்பீர்கள் எனில், உங்கள் உடலுக்குத் தேவையான விட்டமின் பி12-ஐ சப்ளிமெண்ட்கள் (supplements) மூலமே பெற்றுக் கொள்ள இயலும் அல்லது பி12 விட்டமினுடன் செறிவூட்டப்பட்ட உணவு உங்களுக்கு கைகொடுக்கலாம்.

உடல் ஆரோக்கியத்துக்கு விட்டமின் பி12-ன் பங்கு என்ன?

"உடலில் உள்ள இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை சீராக வைக்கிறது விட்டமின் பி12. இரத்த சிவப்பு அணுக்கள் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

மேலும், உங்கள் உடலின் நரம்பு மண்டலம் சீராக செயல்படுவதையும் உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது விட்டமின் பி12.

இது மட்டுமின்றி, "டி.என்.ஏ. உருவாக்கத்துக்கும், சேதமடைந்த டி.என்.ஏவை சரி செய்வதற்கும் விட்டமின் பி12 அதிக அளவில் தேவைப்படுகிறது," என்று தெரிவிக்கிறார் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ஊட்டச்சத்து துறையில் பணியாற்றும் மருத்துவர் மீனாட்சி பஜாஜ்.

விட்டமின் பி12, பாதிப்பு, விட்டமின் பி12-ஐக் கொண்டுள்ள உணவுப் பொருட்கள், ஆரோக்கியம்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,விட்டமின் பி12 பற்றாக்குறையால் இளம் வயதினர் மற்றும் கர்ப்பிணிகள் அதிக அளவில் பாதிப்பை சந்திக்கின்றனர்

எந்த வயதினருக்கு எவ்வளவு விட்டமின் பி12 தேவை?

2020-ஆம் ஆண்டு இந்திய மருத்துவ ஆய்வு மன்றம் வெளியிட்ட அறிவிப்பின் படி, பிறந்த குழந்தை முதல் 3 வயதான குழந்தைகள் வரை, நாள் ஒன்றுக்கு 1.2 மைக்ரோ கிராம் விட்டமின் பி12 ஊட்டச்சத்தை உணவில் கொண்டிருக்க வேண்டும்.

ஆறு முதல் 18 வயதினருக்கு இந்த ஊட்டச்சத்து நாள் ஒன்றுக்கு 2.2 மைக்ரோ கிராம் என்ற அளவில் இருக்க வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு விட்டமின் பி12-ன் தேவை அதிகமாக இருக்கலாம் என்று கூறுகிறார் மீனாட்சி.

யார் விட்டமின் பி12 பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள்?

யார் விட்டமின் பி12 பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள் என்று பிபிசி தமிழிடம் விளக்கினார் மருத்துவர் மீனாட்சி.

  • பொதுவாகவே பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களையும் உண்ணாமல் 'வீகன்' உணவுமுறையைப் பின்பற்றுபவர்கள் விட்டமின் பி12 பற்றாக்குறையால் பாதிப்பைச் சந்திப்பார்கள்.

  • லாக்டோஸ் சகிப்புத்தன்மை குறைப்பாட்டால் பாதிக்கப்படும் நபர்களும் விட்டமின் பி12 பற்றாக்குறையால் அவதிப்பட நேரிடும்.

  • விட்டமின் பி12 என்பது நீரில் கரையக்கூடிய (Water Soluble) விட்டமின் ஆகும். இது எளிதில் உட்கிரகித்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டது. ஆனால் சில இணை நோய்களுக்காக மருந்துகளை உட்கொள்ளும் போது விட்டமின் பி12-ஐ உட்கிரகித்துக் கொள்ளும் தன்மையில் பாதிப்பு ஏற்படும். இதன் காரணமாகவும் பி12 பற்றாக்குறையை சந்திக்க நேரிடும்.

  • இதுமட்டுமின்றி வயிற்றில் புற்றுநோய் இருக்கும் போதோ, ஏதேனும் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தாலோ, அல்லது அல்சர் போன்ற நோய்களுக்காக மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தாலோ பி12-ஐ உட்கிரகித்துக் கொள்ளும் தன்மையில் பாதிப்பு ஏற்பட்டு, பி12 பற்றாக்குறையை சந்திக்க நேரிடும்.

  • அதுமட்டுமின்றி, வகை இரண்டு நீரிழிவு நோய்க்கு மருந்துகளை எடுத்துக் கொள்ளும் நபர்களும் இத்தகைய விட்டமின் பி12 பற்றாக்குறைக்கு ஆளாக நேரிடும்.

விட்டமின் பி12, பாதிப்பு, விட்டமின் பி12-ஐக் கொண்டுள்ள உணவுப் பொருட்கள், ஆரோக்கியம்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நாள் ஒன்றுக்கு ஒரு முட்டையை கட்டாயமாக எடுத்துக்கொண்டாலும் அவர்களுக்கு விட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்படாது.

பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

"நரம்பு மண்டலம் மற்றும் இரத்த சிவப்பு அணுக்களின் சீரான வளர்ச்சிக்கு உதவும் மிக முக்கியமான ஊட்டச்சத்தாக விட்டமின் பி12 இருப்பதால், இதன் பற்றாக்குறை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்," என்று எச்சரிக்கிறார் மருத்துவர் மீனாட்சி.

"நான்கு முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் பி12 குறைபாடு மற்றவர்களைக் காட்டிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது," என்று கூறுகிறார் அவர்.

ஃப்ராண்டியர்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள, 'மெட்டர்னல் விட்டமின் பி12 ஸ்டேட்டஸ் ட்யூரிங் பிரக்னன்சி அண்ட் இட்ஸ் அசோசியேசன் வித் அவுட்கம்ஸ் ஆஃப் பிரக்னன்சி அண்ட் ஹெல்த் ஆஃப் தி ஆஃப்ஸ்ப்ரிங்' என்ற ஆய்வறிக்கையில், இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில், விட்டமின் பி12 பற்றாக்குறையால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 70 முதல் 74% ஆக உள்ளது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, கர்நாடகாவில் இந்த பற்றாக்குறையால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 51% ஆகவும் இருக்கிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"பி12 பற்றாக்குறையால் இரத்த சோகையில் பெர்னிசியஸ் அனீமியா (pernicious anemia) என்ற பிரச்னை ஏற்படும்.

நரம்பியல் சார்ந்த பிரச்னைகள், சமநிலையற்ற தன்மை, தலைசுற்றல், பலவீனம் அடைதல், மூச்சுப் பிரச்னைகள் போன்றவை ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மேலும், இதன் பற்றாக்குறை மிகவும் தீவிரமாக இருக்கும் போது, இரத்தத்தில் ஹோமோசிஸ்டெய்ன் (homocysteine) அளவு அதிகமாகும். அளவுக்கு அதிகமாக ஹோமோசிஸ்டெய்ன், ஹைப்பர்ஹோமோசிஸ்டெய்னீமியா (hyperhomocysteinemia) என்ற குறைபாடு ஏற்படும். இதனால் கார்டியோ வாஸ்குலர் என்ற இருதய நோய் ஏற்படக் கூடும்," என்றும் எச்சரிக்கை செய்கிறார் அவர்.

உணவு இல்லாமல் மருந்து மாத்திரைகள் மூலமாக பி12 பற்றாக்குறையை நிவர்த்தி செய்து கொள்ளும் மக்கள், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொள்கின்றனர். ஆனால் அப்படி செய்யக் கூடாது. தொடர்ச்சியாக பி12 சப்ளிமெண்டுகளை எடுத்துக் கொள்வது இது போன்ற அபாயங்களில் இருந்து மக்களை காப்பாற்றும், என்றும் மீனாட்சி விளக்கம் அளித்தார்.

விட்டமின் பி12, பாதிப்பு, விட்டமின் பி12-ஐக் கொண்டுள்ள உணவுப் பொருட்கள், ஆரோக்கியம்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,லாக்டோஸ் சகிப்புத்தன்மை குறைப்பாட்டால் பாதிக்கப்படும் நபர்களும் விட்டமின் பி12 பற்றாக்குறையால் அவதிப்பட நேரிடும்

விட்டமின் பி12 அதிகம் உள்ள உணவுகள்

காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றில் விட்டமின் பி12 கிடையாது. விலங்குகளில் இருந்து பெறப்படும் உணவுப் பொருட்களில் விட்டமின் பி12 அதிகமாக காணப்படுகிறது.

எந்தெந்த உணவுகளில் விட்டமின் பி12 அதிகமாக உள்ளது என்பதைப் பற்றி விளக்கிய மருத்துவர் மீனாட்சி, அதனை பின்வருமாறு பட்டியலிட்டார்.

  • சிலர் சைவமாக இருந்தாலும் அவர்கள் பால் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்களை சேர்க்கும் போது எத்தகைய பிரச்னையும் இல்லை.

  • அதேபோன்று, நாள் ஒன்றுக்கு ஒரு முட்டையை கட்டாயமாக எடுத்துக்கொண்டாலும் அவர்களுக்கு விட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்படாது.

  • ஆனால், மாமிச உணவுகளான, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, மீன்களில், குறிப்பாக கானாங்கெளுத்தி, சாலமன், சூரை மீன்களில் விட்டமின் பி12 செறிவுடன் காணப்படுகிறது.

  • மாட்டிறைச்சியில் குறிப்பாக அதன் ஈரலில் விட்டமின் பி12 அதிகமாக உள்ளது. எனவே, விட்டமின் பி12 பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விரும்புபவர்கள் இந்த உணவை சீராக எடுத்துக் கொள்ள வேண்டும்.

வீகன் உணவு முறையைப் பின்பற்றுபவர்கள், செரல்கள் போன்ற செறிவூட்டப்பட்ட உணவுகளை உட்கொள்ளலாம். மாட்டுப்பால் இல்லாத இதர பால் வகைகளை (non-dairy milks) உட்கொள்ளலாம். மேலும், நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செயலிழக்கப்பட்ட ஈஸ்ட்டைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஃப்ளேக்ஸை உணவாக உட்கொள்ளலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர் லாரா டில்ட், பிபிசிக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c780x9kpel8o

மன ஆறுதலுக்காக கட்டிப்பிடி வைத்தியம்

1 month 2 weeks ago

மன ஆறுதலுக்காக பணம் செலுத்தி கட்டிப்பிடி தெரபி எடுத்துக்கொள்ளும் மக்கள்

கட்டிப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன? கட்டிப்பிடி தெரப்பி

பட மூலாதாரம்,DANNY FULLBROOK/BBC

கட்டுரை தகவல்

  • எழுதியவர், டேனி ஃபுல்ப்ரூக்

  • பதவி,

  • 14 மே 2025

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சமி வுட், முன்பின் அறிமுகமில்லாத நபர்களுடன், 'கடுல் புடுல்' (cuddle puddle) என்ற நிகழ்வுக்குச் செல்கிறார்.

குஷன்கள், போர்வைகளுடன் இந்த நிகழ்வுக்கு வரும் நபர்கள் ஒருவருக்கு ஒருவர் நட்பு ரீதியாக தழுவிக் கொள்கின்றனர்.

பெட்ஃபோர்டைச் சேர்ந்த 41 வயதான சமி, ஒரு தொழில் முறை கட்டிப்பிடியாளர் (cuddler). கட்டிப்பிடிப்பது தொடர்பான தெரப்பியையும் அவர் வழங்குகிறார்.

மனிதர்கள் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளுதல் ஆறுதல் அளிப்பது மட்டுமின்றி அது குறிப்பிட்ட அளவு நலன்களையும் கொண்டுள்ளது என்று சமி நம்புகிறார்.

"நன்றாக உணரவைக்கும் சரோடோனின் அளவு அதிகரிக்கும். அன்பு மற்றும் இணைப்புக்கு காரணமாக இருக்கும் ஆக்சிடோசின் அளவும் அதிகரிக்கும்," என்று கூறுகிறார் சமி.

மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் அளவை, 'தொடுதல்' குறைக்கிறது. மேலும் உங்களின் நரம்பு மண்டலத்தை சீராக்கவும் செய்கிறது என்று தொடுதல்.

சமியிடம் தெரப்பிக்கு வரும் நபர்கள், நரம்பு மண்டல பிரச்னைகள், பி.டி.எஸ்.டி. அல்லது தனிமையால் அவதிப்படுகின்றனர்.

"என்னுடைய இந்த தெரபி சேவைக்கு முழுக்க முழுக்க மோசமான ஆண்களே வருவார்கள் என்று பலர் நம்புகின்றனர். ஆனால் அது அப்படியல்ல. அனைத்து வயதினரும், ஆண்களும், பெண்களும் இந்த சிகிச்சைக்காக வருகை புரிகின்றனர்," என்று விளக்குகிறார் அவர்.

பெட்ஃபோர்ட்டைச் சேர்ந்த பெப் வலேரியோ கடந்த சில மாதங்களாக சமி நடத்தும் இந்த நிகழ்வுக்கு வருகிறார்.

"வார்த்தைகள் ஏதுமின்றியே குணமடையும் உணர்வை அளிக்கிறது இது. அங்கே வரும் நபர்களின் பிரச்னை என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியதில்லை. மாறாக உங்களின் தொடுதல் அவர்களுக்கு தேவையான உதவியை தருகிறது," என்று பெப் கூறுகிறார்.

இந்த தெரப்பி எப்படி நடக்கிறது?

சமி தன்னிடம் இந்த தெரப்பிக்கு வரும் நபர்களை, குறிப்பிட்ட உணர்ச்சிகரமான சூழலை ஏற்படுத்துவதற்காக சில காட்சிகளை கற்பனை செய்து பார்க்கும்படி கூறுவார்.

"நீங்கள் மீண்டும் ஒரு முறை கட்டிப்பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் நபரை தற்போது கட்டியணைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கற்பனை செய்யுங்கள், என்று சில நேரங்களில் நான் கூறுவேன்."

"உண்மையாகவே அது எனக்கு நெகிழ்ச்சி ஏற்படுத்தும் தருணம். அப்போது அந்த நிகழ்வில் பங்கேற்ற ஆண்களும் பெண்களும் அழுது கொண்டிருப்பார்கள்," என்று விளக்குகிறார்.

தனி நபர்களுக்கு அளிக்கும் தெரபிகளின் போது அவர்களின் தனித்தேவைகள் குறித்து மட்டுமே அதிகம் கவனம் செலுத்தப்படும்.

மிகவும் எளிதாக ஒருவர் அருகில் அமர்ந்து கொண்டு, கையோடு கை கோர்த்து பேசிக் கொண்டிருப்பது அவர்களின் தேவையாக இருக்கலாம். அல்லது ஒருவரை கட்டிப்பிடித்த படி படுத்திருக்க வேண்டும் என்று நினைக்கலாம்.

ஆறுதலாக ஒருவரின் முதுகை வருடிக் கொடுத்தல் போன்ற செயல்பாடுகளும் இதில் அடங்கலாம்.

கட்டிப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன? கட்டிப்பிடி தெரப்பி

பட மூலாதாரம்,SAMII WOOD

படக்குறிப்பு,ஆறுதலாக ஒருவரின் முதுகை வருடிக் கொடுத்தல் போன்ற செயல்பாடுகளும் இதில் அடங்கலாம்.

இதற்கு கட்டணமா?

ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிக்கும் இந்த தெரப்பிக்கு கட்டணம் செலுத்த வேண்டுமா என்று சிலர் புருவம் உயர்த்துகின்றனர். ஆனால் இது நட்பு ரீதியில், ஒருவரை ஒருவர் பேணிக்காக்கும் சேவை என்று கூறுகிறார் சமி.

இந்த தெரப்பிக்கு வரும் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சமியிடம் வரும் நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும் இந்த சிகிச்சையின் வரம்புகள் என்ன என்பதை பட்டியலிடும் ஒப்புதல் படிவங்களில் கையெழுத்திட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

"இது முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களால் வழி நடத்தப்படும் நிகழ்வு. அவர்களுக்கு என்ன தேவை? அவர்களுக்கு எது ஆறுதல் அளிக்கிறது? என்பது குறித்து அவர்கள் என்னிடம் தெரிவிப்பார்கள்," என்று கூறுகிறார் சமி.

நெருக்கமான தொடுதல் என்பது பாலியல் ரீதியான உணர்வுகளை ஏற்படுத்தலாம் என்பதை ஒப்புக்கொள்கிறார் சமி. அது போன்ற சூழலில் இடைவேளையை அறிவிப்பார் அல்லது படுத்திருக்கும் நிலைமையை மாற்றி, தெரப்பியின் கண்ணோட்டம் குறித்து கவனம் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்குவார்.

இது போன்ற சிகிச்சைகளுக்கு பிரிட்டனில் ஒழுங்குமுறை அமைப்பு ஏதும் இல்லை. ஆனால் சமி போன்ற நிபுணர்கள் கடுல் ஃப்ரொபெஷ்னல் இண்டர்நேஷனல் (Cuddle Professionals International (CPI)) போன்ற அமைப்புகளிடம் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள இயலும்.

தெளிவாக விளக்கப்பட்டு பெறப்படும் ஒப்புதல் (Informed Consent) சார்ந்துள்ள "தார்மீக ரீதியான நெறிமுறைகளை," கடைபிடிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்த அமைப்பு அதன் உறுப்பினர்களை வலியுறுத்துகிறது.

இந்த சிகிச்சைகள் பொதுவாக நிபுணத்துவமான தரநிலையைக் கொண்டிருந்தாலும் கூட, எளிதாக இந்த சூழலை தவறாக பயன்படுத்திக் கொள்வதற்காக சாத்தியங்களும் இருக்கின்றன.

அப்படியாக ஏதேனும் நடக்கின்ற பட்சத்தில் மக்கள் காவல்துறையினரிடமோ, உள்ளூர் அதிகாரிகளிடமோ, சி.பி.ஐயிடமோ (Cuddle Professionals International ) புகார் அளிக்கலாம் என்று சமி தெரிவிக்கிறார்.

இந்த அமைப்பை க்ளேர் மெண்டெல்சன் என்பவர் துவங்கினார். அவரின் இணையத்தின் கூற்றின் படி, அவர் இந்த சிகிச்சைப் பிரிவில் ஒழுங்குமுறை தேவைப்படுகிறது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

காம்பிளிமெண்டரி மெடிக்கல் அசோசியேஷன் அமைப்பில் பதிவிடப்பட்ட கல்லூரியாக சி.பி.ஐ. செயல்படுகிறது. மேலும் பயிற்சிகள் வழங்குவதற்கான ஒப்புதலை காம்பிளிமெண்டரி சிகிச்சையாளர்களுக்கான சர்வதேச நிறுவனத்திடம் பெற்றுள்ளது சி.பி.ஐ. (Cuddle Professionals International)

கட்டிப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன? கட்டிப்பிடி தெரப்பி

பட மூலாதாரம்,SAMII WOOD

படக்குறிப்பு,இந்த சூழலை தவறாக பயன்படுத்திக் கொள்வதற்காக சாத்தியங்களும் இருக்கின்றன

தயக்கம் காட்டும் மக்கள்

வெளிநாடுகளில் கட்டிப்பிடி வைத்தியம் எவ்வளவு பிரபலமாக இருக்கிறது என்பதை ஆவணப்படம் ஒன்றை பார்த்து அறிந்து கொண்டார் சமி.

இருப்பினும், பிரிட்டனில் மக்கள் பிறரைத் தொடுவதையோ, பிறரால் தொடப்படுவதையோ பெரிதாக விரும்புவதில்லை என்று கூறுகிறார் சமி.

மக்களை "அதிகமாக ஏங்க வைப்பது" மற்றும் "அப்படி ஏங்குவது குறித்து அச்சமடையவைப்பது," என்ற இரண்டுக்கும் கோவிட் பெருந்தொற்றும், அதைத் தொடர்ந்து வந்த ஊரடங்கும் தான் காரணம் என்று கூறுகிறார் சமி.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதிகமாக இந்த பயம் இருக்கிறது. ஆனால் பிரிட்டனில் அது போன்ற சூழல் இல்லை. இங்கு எங்களுக்கு இதற்கான தேவை இருக்கிறது. அப்படி இல்லை என்றால் என்னைப் போன்ற 'கட்டிப்பிடியாளர்களை' நோக்கி மக்கள் வரமாட்டார்கள்.

"நாம் அனைவரும் ஆன்லைனில் இருப்பதால் ஒருவருடன் ஒருவர் நல்ல தொடர்பில் இருக்கிறோம் என்று நினைக்கிறோம். ஆனால் அதனால் (இணையத்தால்) தான் நாம் அனைவரும் தொடர்பில்லாமல் இருக்கிறோம்."

"நம் அனைவரும் நெருக்கத்தை வேண்டுகிறோம். 'என்னை யாராவது கட்டிப்பிடித்தால் நன்றாக இருக்கும். என்னை உண்மையாக மற்றவர்கள் பார்க்க வேண்டும். என் முன்னாள் இருக்கும் மிகப்பெரிய சுவர் உடைந்து ஒருவரால் கட்டிப்பிடிக்கப்பட வேண்டும்,' என்று கூற தயக்கம் தேவையில்லை."

கட்டிப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன? கட்டிப்பிடி தெரப்பி

பட மூலாதாரம்,SAMII WOOD

படக்குறிப்பு,பிரிட்டனில் மக்கள் பிறரைத் தொடுவதையோ, பிறரால் தொடப்படுவதையோ பெரிதாக விரும்புவதில்லை

இதன் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?

ஜெர்மனியின் போகமில் அமைந்திருக்கும் ரூர் பல்கலைக்கழத்தின் காக்னிடிவ் நியூரோசயின்ஸ் துறையின் ஆய்வாளர்களான டாக்டர் ஜூலியன் பகேய்ஷெர் மற்றும் அவர் சகாக்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையில், "தொடுதல் உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்," என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு பழக்கமான நபர் மற்றும் ஒரு சுகாதாரப் பணியாளரின் தொடுதலால் ஏற்படும் நன்மைகளுக்கு இடையே வேறுபாடுகள் ஏதும் இல்லை என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

லண்டனியின் யுனிவெர்சிட்டி கல்லூரியைச் சேர்ந்த, காக்னிடிவ் நியூரோசயின்ஸ் துறைப் பேராசிரியரான சோஃபி ஸ்காட் இது குறித்து கூறும் போது, ஒருவரை மற்றொருவர் தொடும் போது பலன்கள் உள்ளது என்றாலும் கூட, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இடையேயான உறவு முறையானது மிகவும் முக்கியமானது என்றார்.

மக்களை கண்காணிக்கும் பகுதி ஒன்றுக்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு துன்பம் ஏற்படும் போது மூளை எவ்விதம் செயல்படுகிறது என்றொரு ஆய்வு நடத்தப்பட்டது. என்று மற்றொரு ஆய்வறிக்கையை அவர் சுட்டிக்காட்டினார்.

"ஒருவரின் துணை அவரின் கையைப் பிடிக்கும் போது, வலிக்கான எதிர்வினை குறைவாக இருந்தது. சிக்கலான சூழலில் இருந்து கொஞ்சம் ஆசுவாசமாக உணரும் வகையில் அங்கே வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. உங்களின் கையைப் பற்றிக் கொண்டது ஏதோ ஒரு நபர் அல்ல. அவர் உங்களின் துணை."

"தொழில்முறையாக ஒருவர் இதனை செய்யும் போது, நீங்கள் அந்த நபருடன் இப்படியான ஒரு உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது எனக்கு கவலையை அளிக்கிறது. உங்களின் கையை யாரோ ஒருவர் பற்றிக் கொள்ள நீங்கள் அனுமதிப்பதில்லை," என்று அவர் தெரிவித்தார்.

"முடி வெட்டிக் கொள்ள, கை மற்றும் கால் நகங்களை அழகாக்கிக் கொள்ள மக்கள் விரும்புவதுண்டு. ஆனால் அவை அனைத்தும் உடலின் நடுநிலை உணர்வுகளைக் கொண்ட பாகங்கள். ஆனால் ஒருவரை அணைத்துக் கொள்வது என்பது அவர்களின் உணர்வு மிக்க பகுதிகளுக்கு அருகே செல்வதைப் போன்றது. மக்கள் பாதுகாப்பாக உணர வேண்டும் என்று நான் கூறுகிறேன். அவர்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்றால், இது பாதகமான சூழலை உருவாக்கும்," என்று அவர் கூறுகிறார்.

தொடுதலால் ஏற்படும் பலன்கள், அதனால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

கட்டிப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன? கட்டிப்பிடி தெரப்பி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தொடுதலால் ஏற்படும் பலன்கள், அதனால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

டேப்பிங், டை-சீ போன்ற குணமடைதலுக்கான மாற்று வழிகள் குறித்து ஆய்வு செய்த போது வலேரியோவுக்கு கட்டிப்பிடி சிகிச்சைப் பற்றி தெரிய வந்தது.

"இது அழுத்தத்தைக் குறைத்து, அமைதியை ஏற்படுத்துகிறது," என்று அவர் கூறுகிறார்.

மனதிற்கு இதம் அளிக்கும் அமைதியான இசையை இசைக்க வைத்து, முதலில் அங்கே பங்கேற்கும் நபர்கள் அனைவரும் ஒன்றாக ஈடுபடும் வகையில் 'வார்ம்-அப்' மற்றும் கட்டிப்பிடித்தல் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி, பாதுகாப்பான சூழலை சமி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார், என்று வலேரியா தெரிவிக்கிறார்.

உங்களின் மனத்திரையை உடைக்க சில பயிற்சிகளை நீங்கள் மேற்கொண்ட பிறகு, தரையில் படுத்து, முன்பின் அறிமுகம் இல்லாத நபரை கட்டிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு இயற்கையாகவே ஏற்படுகிறது.

"கட்டிப்பிடிப்பதற்கு முன்பே, இந்த பயிற்சிகளை மேற்கொள்ளும் நபர்கள் உடைந்து அழும் நிலையும் ஏற்பட்டுள்ளது. சில உணர்வுகளை அந்த பயிற்சிகள் மேலெழும்ப வைக்கிறது," என்று அவர் தெரிவித்தார்.

சமியிடம் தனி நபருக்கான சிகிச்சைகளை மேற்கொண்ட வலேரியா, இது ஆழமான இணைப்பிற்கு வழி வகை செய்கிறது என்கிறார்.

"பின்னால் இருந்து ஒருவர் கட்டிக் கொள்ளும் போது, ஒரு ஆணை ஒரு பெண் அணைக்கும் போது பலவீனமாக உணர வைக்கிறது. அது ஒருவர் உங்களை தாங்கிக் கொள்வதை உணர வைக்கிறது," என்று அவர் தெரிவித்தார்.

"அதன் பிறகு எனக்கு ஆதரவு கிடைத்தது போன்று உணருகிறேன். என்னுடைய பாரத்தையே இறக்கி வைத்தது போன்று அது உணர வைக்கிறது. என் மனத்திரை கீழிறங்கியது."

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clyqvl1rlnwo

200 முறை பாம்பு கொத்தியும் உயிர் பிழைத்தவர் - பாம்புக்கடி மருந்துக்கு உதவுவது எப்படி?

2 months ago

பாம்புக்கடி மருந்து, பிளாக் மாம்பா, விஷ முறிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கருப்பு மாம்பா என்பது உலகின் மிகக் கொடிய விஷமுடைய பாம்பு என்று கூறலாம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜேம்ஸ் கல்லாகர்

  • பதவி,

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக தனது உடலில் பாம்பு விஷத்தை செலுத்திக்கொண்ட ஒரு அமெரிக்கரின் ரத்தம், பாம்பு விஷத்துக்கு எதிராக "அபூர்வமான" ஒரு புதிய எதிர்ப்பு மருந்தை உருவாக்க வழிவகுத்தது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

டிம் ஃப்ரைடின் என்பவரின் ரத்தத்தில் இருக்கும் ஆன்டிபாடிகள் (உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் உற்பத்தி செய்யப்படும் ஒரு புரதம்) விலங்குகள் மீது நடத்தப்பட்ட சோதனைகளில், பல்வேறு வகையான ஆபத்தான பாம்பு விஷங்களுக்கு எதிராக வலுவான பாதுகாப்பை வழங்குவதாக தெரிய வந்துள்ளது.

தற்போது பாம்புக்கடிக்கு வழங்கப்படும் சிகிச்சைகளில், எந்த வகை விஷப் பாம்பு கடித்ததோ, அதற்கு ஏற்ற வகையில் தான் மருந்துகள் வழங்கப்படுகின்றன.

ஃபிரைட் கடந்த 18 ஆண்டுகளாக, எந்த வகையான விஷப் பாம்பு கடித்தாலும் வேலை செய்யக்கூடிய வகையில் அனைத்துக்கும் பொதுவான எதிர்ப்பு மருந்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்.

பாம்புக்கடியால் ஆண்டுதோறும் 14,000 உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. உயிர் பிழைப்பவர்களில் மூன்று மடங்கு மக்கள், உடல் உறுப்புகளை இழப்பது அல்லது நிரந்தரமாக செயலிழப்பது போன்ற கடுமையான விளைவுகளை எதிர்கொள்கிறார்கள்.

உலகின் மிக ஆபத்தான மாம்பா, நாகப்பாம்பு, தைபான், கிரெய்ட் போன்ற பல வகை பாம்புகளிலிருந்து தயாரித்த 700க்கும் மேற்பட்ட விஷ ஊசிகளை தானாகவே தனது உடம்பில் செலுத்தியுள்ள ஃபிரைட் , 200 தடவைக்கு மேல் பாம்பு கடிகளையும் எதிர்கொண்டுள்ளார்.

ஆரம்பத்தில் பாம்புகளை கையாளும் போது தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தனது நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க விரும்பிய அவர் , தனது முயற்சிகளை யூடியூப்பில் ஆவணப்படுத்தத் தொடங்கினார்.

ஆனால், அடுத்தடுத்து இரண்டு நாகப்பாம்புகள் கடித்ததால் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டபோது, தான் ஆரம்ப காலத்தில் "முற்றிலும் தவறான முடிவு செய்துவிட்டேன்" என்கிறார் முன்னாள் லாரி மெக்கானிக்கான ஃபிரைட் .

"நான் இறக்க விரும்பவில்லை. ஒரு விரலை இழக்க விரும்பவில்லை. வேலையை இழக்க விரும்பவில்லை," என்று அவர் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

உலகின் பிற பகுதிகளுக்கு பாம்புக்கடிக்கு எதிரான சிறந்த சிகிச்சைகளை உருவாக்குவதே ஃபிரைடின் உந்துதலாக இருந்தது.

"இது ஒரு வாழ்க்கை முறையாக மாறியது, நான் இருக்கும் இடத்தில் இருந்து 8,000 மைல்கள் தொலைவில் பாம்புக்கடியில் இறக்கும் மக்களுக்காக, என்னால் முடிந்தவரை கடினமாக தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருந்தேன்." என அவர் விளக்குகிறார்.

'உங்களது ரத்தத்தில் சில துளிகளை பெற விரும்புகிறேன்'

குதிரைகள் போன்ற விலங்குகளுக்கு சிறிய அளவில் பாம்பு விஷத்தை செலுத்துவதன் மூலம் பாம்பு கடிக்கான முறிவு மருந்து ( ஆன்டிவீனோம் ) தற்போது தயாரிக்கப்படுகின்றது.

அந்த விலங்குகளின் நோய் எதிர்ப்பு அமைப்பு அந்த விஷத்தை எதிர்த்து ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. பிறகு அவற்றை சிகிச்சைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஆனால் விஷமும், விஷத்துக்கான முறிவு மருந்தும் ஒரே வகையில் பொருந்த வேண்டும்.

ஏனென்றால் பாம்பு கடிக்கும்போது அதில் உள்ள விஷத்தின் நச்சுப் பொருட்கள் ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனத்திற்கு மாறுபடும்.

ஒரே இனத்தைச் சேர்ந்த பாம்புகளில் கூட பரவலான வகைகள் உண்டு.

இந்தியாவில் பாம்புகளிலிருந்து தயாரிக்கப்படும் விஷ முறிவு மருந்து, இலங்கையில் அதே இனத்தில் உள்ள பாம்பு கடித்தால் அதற்கு எதிராக குறைவான செயல்திறன் கொண்டதாக இருக்கும்.

ஒரே நேரத்தில் பல வகையான நச்சுக் கூறுகளுக்கு எதிராக போராடக்கூடிய வகையில் "பரவலாகச் செயல்படும் ஆன்டிபாடிகள்" எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்து வகைகளை ஆய்வாளர்கள் தேடத் தொடங்கினர்.

இந்த ஆன்டிபாடிகள், ஒவ்வொரு நச்சுப் பொருளிலும் இருக்கும் தனித்துவமான பகுதிகளை அல்லாமல், பல வகை நச்சுகளில் பொதுவாக காணப்படும் பகுதிகளை குறிவைத்து தாக்குகின்றன.

அப்போது தான் பயோடெக் நிறுவனமான சென்டிவாக்ஸின் தலைமை நிர்வாகி மருத்துவர் ஜேக்கப் கிளான்வில், டிம் ஃப்ரைடைக் குறித்து அறிந்து கொண்டார்.

"உலகத்தில் யாராவது பரவலாகச் செயல்படும் ஆன்டிபாடிகளை உருவாக்கியிருக்க வாய்ப்பு இருந்தால், அது அவராகத் தான் இருக்க வேண்டும் . அதனால் அவரை தொடர்பு கொண்டேன்," என்கிறார் ஜேக்கப் கிளான்வில்.

முதல் முறை அவரை அழைத்த போது, 'இது கொஞ்சம் விசித்திரமாக இருக்கலாம், ஆனால் உங்கள் ரத்தத்தில் சில துளிகளை சோதனைக்காக பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்' என்று ஃப்ரைடிடம் கேட்டதாகக் கூறுகிறார் ஜேக்கப் .

அதற்கு ஃப்ரைட் சம்மதம் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் அவர் மீது இன்னும் அதிகமான விஷம் செலுத்தப்படாமல், அவரது இரத்தம் மட்டும் எடுத்துக்கொள்ளப்படுவதால், அதற்கு முறையான அனுமதி கிடைத்தது.

பாம்புக்கடி மருந்து, பிளாக் மாம்பா, விஷ முறிவு

பட மூலாதாரம்,JACOB GLANVILLE

படக்குறிப்பு, பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சைகளை உருவாக்க டிம் ஃப்ரைட் விரும்பினார்.

இந்த ஆராய்ச்சி, விஷ பாம்புகளின் இரண்டு குடும்பங்களில் ஒன்றான 'எலாபிட்களை' மையமாகக் கொண்டது. இதில் பவளப்பாம்புகள், மாம்பாக்கள், நாகப்பாம்புகள், தைபன்கள் மற்றும் கிரெய்ட்கள் போன்ற பாம்புகள் அடங்கும்.

எலாபிட்களின் விஷம் முதன்மையாக நியூரோடாக்சின்கள் மூலம் (நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்) தாக்குகின்றன.

இது பாதிக்கப்பட்டவரின் உடலை முடக்கி, சுவாசிக்க தேவையான தசைகளை செயலிழக்கச் செய்யும்போது உயிருக்கு அச்சுறுத்தலாக மாறும்.

பூமியில் மிகக் கொடிய பாம்புகளில் ஒன்றாக உலக சுகாதார அமைப்பால் அடையாளம் காணப்பட்ட 19 எலாபிட் வகை பாம்புகளை ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுத்தனர். பின்னர், ஆராய்ச்சியாளர்கள் ஃப்ரைடின் இரத்தத்தை பரிசோதித்து, அவரது உடலில் இந்த விஷத்தை முறிக்க உதவும் எதிர்ப்பு சக்தியை கண்டறிய முயற்சித்தனர்.

அந்த ஆய்வில் இரண்டு வகையான நியூரோடாக்சின்களை எதிர்த்துப் போராடக்கூடிய இரண்டு சிறப்பு ஆன்டிபாடிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பின்னர் மூன்றாவது நியூரோடாக்சினை எதிர்க்கும் வகையில், பாம்பு விஷத்துக்கு எதிரான மருந்தை அவர்கள் உருவாக்கினர். அவர்களின் இந்த ஆராய்ச்சி, செல் இதழில் வெளியிடப்பட்டது.

எலிகள் மீது செய்யப்பட்ட பரிசோதனைகளில், 19 விஷ பாம்புகளில் 13 வகை பாம்புகளின் விஷத்திலிருந்து எலிகள் உயிர் பிழைக்க இந்த மருந்து உதவியது. மீதமுள்ள ஆறு வகை பாம்பு விஷங்களுக்கு எதிராக அவை குறிப்பிட்ட அளவு பாதுகாப்பைக் கொண்டிருந்தன.

இந்த எதிர்ப்பு மருந்து " ஒப்பிட முடியாத அளவுக்கு பாதுகாப்பை வழங்குகிறது". பல எலாபிட் பாம்புகளுக்கு எதிராக தற்போது "குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை" என்று மருத்துவர் கிளான்வில் கூறுகிறார்.

பாம்புக்கடி மருந்து, பிளாக் மாம்பா, விஷ முறிவு

பட மூலாதாரம்,JACOB GLANVILLE

படக்குறிப்பு,உலகளாவிய விஷ எதிர்ப்பு மருந்தை உருவாக்குவதற்கு ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஆன்டிபாடிகளை மேலும் மேம்படுத்தி, நான்காவதாக ஒரு பொருளைச் சேர்ப்பது எலாபிட் பாம்பு விஷத்திற்கு எதிராக முழுமையான பாதுகாப்பை வழங்குமா என்பதைக் கண்டறியவும் இந்த ஆய்வாளர்கள் குழு முயற்சிக்கிறது.

மற்றொரு வகையான விரியன் பாம்புகள், நியூரோடாக்சின்களை உருவாக்குவதை விடவும், இரத்தத்தில் ஹீமோடாக்சின்களை உருவாக்குவதன் மூலமாகவே அதிகம் தாக்குகின்றன.

பாம்பு விஷத்தில் சுமார் ஒரு டஜன் நச்சுகள் உள்ளன. இதில் செல்களை நேரடியாக கொல்லும் சைட்டோடாக்சின்களும் அடங்கும்.

"அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில் அந்த நச்சுக்கள் ஒவ்வொன்றிற்கும் எதிராக ஏதாவது ஒன்றை நாம் பெறுவோம் என நான் நினைக்கிறேன்," என்கிறார் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் பீட்டர் குவாங்.

மறுபுறம் ஃபிரைடின் இரத்த மாதிரிகளுக்குள் இதற்கான மருந்தைக் கண்டறிவதற்கான பரிசோதனை முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன .

"டிம்மின் ஆன்டிபாடிகள் அசாதாரணமானவை. ஏனென்றால் பரந்த அளவிலான விஷங்களை அடையாளம் கண்டு செயல்படுவதற்கு அவரது நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார்" என்று பேராசிரியர் குவாங் தெரிவித்தார்.

எல்லா வகை விஷங்களுக்கும் எதிராக போராடக்கூடிய ஒரே ஆன்டிவீனோம் (எதிர்ப்பு மருந்து) அல்லது எலாபிட்களுக்கும் விரியன் பாம்புகளுக்கும் தனித்தனியாக ஒரு மருந்தை உருவாக்குவதே இறுதி நம்பிக்கையாக உள்ளது.

இதுகுறித்து பேசிய லிவர்பூல் ஸ்கூல் ஆஃப் டிராபிகல் மெடிசின் நிறுவனத்தில் பாம்புக்கடியை பற்றிய ஆராய்ச்சி மற்றும் தலையீடுகளுக்கான மையத்தின் தலைவரான பேராசிரியர் நிக் கேஸ்வெல் கூறுகையில்,

"இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அளவு "மிகவும் புதுமையானது". இது ஒரு பயனுள்ள வழிமுறையாக இருக்க முடியும் என்பதற்கான "உறுதியான ஆதாரத்தையும்" வழங்குகிறது" என்றார்.

"இந்த ஆராய்ச்சி புதிய திசையில் இந்தத் துறையை முன்னேற்றுகிறது என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை."

ஆனால், "இன்னும் செய்யவேண்டிய வேலை அதிகமாக உள்ளது" என்றும், மனிதர்கள் பயன்படுத்துவதற்கு முன்பு இந்த ஆன்டிவீனோமை பெரிய அளவில் சோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

இதுகுறித்து ஃப்ரைட் கூறுகையில் இந்த நிலையை எட்டியது "என்னை நன்றாக உணர வைக்கிறது" என்கிறார்.

"நான் மனித குலத்திற்காக நல்லது செய்கிறேன், அது தான் எனக்கு மிகவும் முக்கியமானது. அதைப் பற்றிய பெருமை எனக்குள்ளது. இது மிகவும் நன்றாக உள்ளது".

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0r5lq1kk19o

சுறுசுறுப்பாக இருக்க இந்த காலை உணவு உதவுமா? எப்படி சாப்பிட்டால் முழு பலன் கிடைக்கும்?

2 months ago

காலை உணவு, ஆரோக்கியம், சிறந்த காலை உணவுகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,காலை உணவாக தானியங்களை உண்ணும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அவர்கள் நாட்டின் மக்கள்தொகையில் 53 சதவிகிதம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ் - ஸ்கெல்லி

  • பதவி,

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களின் சிறந்த மூலமாக இருக்கும் தானியங்களை காலை உணவாக உண்பது ஆரோக்கியத்திற்கு உகந்தது.

நமது அன்றாட உணவில் காலை உணவின் முக்கியத்துவத்தைப் பற்றி அடிக்கடி பேசுகிறோம்.

காலையில் சிறப்பான உணவை உட்கொண்டால், அன்றைய நாளில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் சக்தி உடலுக்குக் கிடைக்கும்.

இருப்பினும், சரியான காலை உணவு எது? குழந்தைகளுக்கு காலை உணவாக என்ன கொடுப்பது என்பதை முடிவு செய்வது கடினமானதாக இருக்கிறது.

காலை உணவாக தானியங்களை உண்ணும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அவர்கள் நாட்டின் மக்கள்தொகையில் 53 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்களும் தானியங்களை காலை உணவில் சேர்த்துக் கொள்ள விரும்பினால், பல தெரிவுகள் உள்ளன.

ஓட்ஸ், மியூஸ்லி, கார்ன் ஃப்ளேக்ஸ் போன்ற ஆரோக்கியமான உணவுகள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. ஆனால், மிகவும் பதப்படுத்தப்பட்டவையாக இருந்தால், அவை நமக்கு நல்லதல்ல என்றும் சில விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இந்த விஷயத்தின் உண்மைத்தன்மை என்ன என்பதையும், காலை உணவாக நாம் தானியங்களைச் சாப்பிட்டால் அது எந்த வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்பதையும் தெரிந்துக் கொள்வோம்.

அத்தியாவசிய சத்துக்கள் கொண்ட உணவு வகைகள்

கோதுமை, அரிசி, ஓட்ஸ், பார்லி, மக்காச்சோளம் ஆகியவை தானிய வகைகளில் முக்கியமானவை. ஒவ்வொரு தானியமும் மூன்று முக்கிய சேர்மங்களைக் கொண்டவை ஆகும். தானியத்தின் வெளிப்புற அடுக்கில் நார்ச்சத்து, வைட்டமின் பி மற்றும் தாதுக்கள் உள்ளன. மேலும் தானியங்களில் ஸ்டார்ச் மற்றும் புரதங்கள் உள்ளன. அத்துடன், எண்ணெய், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் நிரம்பியுள்ளன.

தானியங்களை காலை உணவாக மாற்றும் திட்டம்

தானியங்களை காலை உணவாக மாற்றலாம் என்ற யோசனை அமெரிக்க மருத்துவர் ஜான் ஹார்வியின் மனதில் உதித்தது. Battle Creek Sanitarium என்ற நிறுவனத்தில் அவர் பணிபுரிந்துவந்தார்.

நோயாளிகளுக்கு சமச்சீரான உணவை திட்டமிடும் பணியில் அவர் சில புதிய உணவு வகைகளை உருவாக்கினார். அதில் கிரனோலா மற்றும் சோளமும் இடம்பெற்றன.

இன்று இந்த உணவுப்பொருட்கள் அனைத்தும் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. அதுமட்டுமல்ல, அவை பல்வேறு விதங்களில் விற்கப்படுகின்றன.

அறுவடைக்குப் பிறகு, பல்வேறு கட்டங்களில் செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படும் தானியங்கள், இறுதியில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

சில தானியங்கள் முழுமையானதாக இருக்கும். சிலவற்றில், வெளிப்புற அடுக்கு மட்டும் அகற்றப்படும். சில தானியங்கள் பதப்படுத்தப்படுகின்றன. வேறு சில அரைத்து மாவாக்கப்படுகின்றன.

தானியம் உணவுப்பொருளாக மாற்றப்படும்போது, அதன் இறுதிப் பொருளில் உப்பு, சர்க்கரை, வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற பிற கூறுகளும் கலக்கப்படுகின்றன.

பின்னர் அவை சமைக்கப்பட்டு, தேவைக்கு ஏற்ற வடிவத்திற்கு உருமாற்றப்படுகின்றன.

தானியங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால், அவை அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்க போதுமானதாகக் கருதப்படுகின்றன.

ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களும் தானியங்களை காலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், அவர்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான அளவு வைட்டமின்கள் உணவில் இருந்து மட்டுமே கிடைத்துவிடாது.

உதாரணமாக, சைவம் அல்லது வீகன் உணவு முறையை பின்பற்றுபவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு இருக்கும். பால் குடிக்காதவர்களுக்கு போதுமான அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் டி கிடைப்பதில்லை.

அதேபோல, வயதாகும்போது, சில ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறன் பலவீனமடைகிறது. இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் ஆபத்து உள்ளது.

தானியங்களை காலை உணவாக சாப்பிடுவதால் சில நன்மைகள் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், பெரும்பாலான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதற்கு செறிவூட்டப்பட்ட உணவுகள் இல்லாததும் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

கலப்பு தானியங்கள் கொண்ட காலை உணவுகளில் நார்ச்சத்து நிறைந்திருக்கும். நமது வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும் ஊட்டச்சத்து இது என்பதும், பொதுவாக 90 சதவீத மக்களுக்கு நார்ச்சத்து குறைபாடு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

காலை உணவு, ஆரோக்கியம், சிறந்த காலை உணவுகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தானியங்களை காலை உணவில் சேர்த்துக் கொள்ள விரும்பினால், பல தெரிவுகள் உள்ளன.

சர்க்கரை அதிகம் உள்ள தானியம்

"தானியங்களில் சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் செறிவூட்டப்பட்டால், அவை ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்," என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஊட்டச்சத்து பேராசிரியர் சாரா பெர்ரி கூறுகிறார்.

பிரிட்டனில், 11 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் சுமார் 50 சதவீதத்தினர் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அமெரிக்காவில் 14 சதவீத பெரியவர்கள் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறுகிறார்.

"காலை உணவில் கவனமாக இருக்க வேண்டும். சில தானியங்களில் அதிக சர்க்கரையும், குறைந்த நார்ச்சத்தும் உள்ளது. அதேபோல, பழங்கள் மற்றும் காய்கறிகளும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொடுப்பதற்கு சிறந்த தேர்வாக இருக்கும்" என்று சாரா பெர்ரி கூறுகிறார்.

பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் ஆராய்ச்சியின்படி, 30 கிராம் சோளத்தில் தோராயமாக 11 கிராம் அளவு சர்க்கரை உள்ளது.

ஒரே நேரத்தில் அதிக சர்க்கரை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதற்கு காரணமாகிவிடும். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நீரிழிவு நோய் அல்லது இதயம் தொடர்பான நோய்களை அதிகரிக்கும் அபாயமும் சோளத்தில் உள்ளது.

இதுபோன்ற தானியங்கள் நமது ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கலாம் என்று கூறும் சாரா பெர்ரி, ஆனால் அது குறித்து தற்போது அதிக தகவல்கள் கிடைக்கவில்லை என்கிறார்.

காலை உணவு, ஆரோக்கியம், சிறந்த காலை உணவுகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தானிய உணவுகளை எடுத்துக் கொள்வதில் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கம்

சாரா பெர்ரியின் கருத்தை அனைவரும் ஒப்புக்கொள்வதில்லை.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்துமே தீங்கு விளைவிப்பதில்லை என சில நிபுணர்கள் நம்புகிறார்கள். மேலும், காலை உணவாக உண்ணப்படும் அனைத்து வகையான தானியங்களும் ஒரே மாதிரியானவை அல்ல.

மியூஸ்லி, ஆரோக்கியமான காலை உணவு என்று கூறும் பேராசிரியர் சாரா பெர்ரி, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த காலை உணவை உட்கொண்டால் அது ஆற்றலைத் தரும் என்றும், விரைவில் பசி எடுக்காது என்றும் கூறுகிறார்.

அமெரிக்காவில் காலை உணவில் ஓட்ஸ் மிகவும் பிரபலம். சுமார் 5 லட்சம் பேர் பங்கு கொண்ட ஒரு ஆய்வு, ஓட்ஸ் அதிகமாக உட்கொண்டவர்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து, குறைவாக உட்கொண்டவர்களை விட 22 சதவீதம் குறைவாக இருப்பதாகக் காட்டுகிறது.

ஓட்ஸில் உள்ள மிக முக்கியமான நன்மை பயக்கும் காரணி நார்ச்சத்து. ஓட்ஸ் தொடர்பான பல ஆய்வுகள் பீட்டா குளுக்கன் கொளஸ்ட்ரால் அளவை குறைப்பதாகக் கண்டறிந்துள்ளன.

அதிலும், இதய நோய்கள் ஏற்பட காரணமான கெட்ட கொளஸ்ட்ராலான லிப்போபுரோட்டீன் (LDL) அளவை ஓட்ஸ் குறைக்கிறது. இருந்தபோதிலும் நன்றாக அரைத்த ஓட்ஸிலிருந்து தயாரிக்கப்படும் பல வகையான ஓட்ஸ் பொருட்களில் இந்த நன்மை இருப்பதாகத் தெரியவில்லை.

ஓட்ஸ் மாவில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப்பொருள், துரிதமாக செரிமானமாகி, மிகக் குறுகிய காலத்தில் உடலில் அதிக சர்க்கரையை வெளியிடுகிறது.

காலை உணவு, ஆரோக்கியம், சிறந்த காலை உணவுகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஓட்ஸ் மாவில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப்பொருள், துரிதமாக செரிமானமாகி, மிகக் குறுகிய காலத்தில் உடலில் அதிக சர்க்கரையை வெளியிடுகிறது.

ஒரு மருத்துவ பரிசோதனையில், தன்னார்வலர்கள் முழு ஒட்ஸை முதல் நாளும், அடுத்த நாள் அரைத்த ஓட்ஸையும் சாப்பிட்டார்கள்.

இரண்டு வகை ஓட்ஸிலும் நார்ச்சத்து, புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் ஒரே அளவில் இருந்தபோதிலும், நன்றாக அரைத்த ஓட்ஸை சாப்பிட்டவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

முழு தானியங்களை உண்பவர்களுக்கு புற்றுநோய் மற்றும் டைப்-2 நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களின் ஆரோக்கிய நன்மைகள் குறைந்துவிடும்.

"முழு தானியங்கள் நார்ச்சத்து நிறைந்தவை என்பதால் அவை நன்மை பயக்கும்" என்று இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து நிபுணர் ரிக்கார்டோ காவல்லோனெசா கூறுகிறார்.

நார்ச்சத்தின் முக்கியமான பண்பு, உணவை செரிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதும், குளுக்கோஸைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதும் ஆகும் என்று அவர் கூறுகிறார்.

ஆனால், தானியங்களில் உள்ள நார்ச்சத்தை நீக்கினால் குளுக்கோஸ் வேகமாக உற்பத்தியாகும்.

எனவே, காலை உணவாக தானியங்களை உட்கொள்வது நமக்கு நல்லதா அல்லது கெட்டதா? என்ற கேள்விக்கான பதில் என்ன?

"நீங்கள் எந்த வகையான தானியங்களை சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது".

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czd32zg6prpo

மது, சிகரெட் மட்டுமல்ல, இந்த பழக்கங்கள் இருந்தாலும் உங்கள் கல்லீரல் பாதிக்கப்படலாம் என்று தெரியுமா?

2 months 2 weeks ago

குடிபழக்கம் இல்லாத போதும் கல்லீரல் பாதிக்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சாரதா வி

  • பதவி, பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

உலக கல்லீரல் தினம் ஏப்ரல் 19-ஆம் தேதி அனுசரிக்கப்படும் வேளையில் கல்லீரல் ஆரோக்கியம், கல்லீரலுக்கும் குடல் ஆரோக்கியத்துக்கும் இருக்கும் தொடர்பு குறித்து கல்லீரல் மற்றும் கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் ஶ்ரீநிவாசன் பிபிசி தமிழிடம் பேசினார் .

அவருடனான நேர்காணலின் சில பகுதிகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

கல்லீரலை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய முதல் விசயம் என்ன?

உடலில் உள்ள எல்லா உறுப்புகளின் செயல்பாடும் நமக்கு தெரியும். ஆனால், கல்லீரல் குறிப்பாக என்ன செய்கிறது என்று பலருக்கு தெரியாது. ஏனென்றால் கல்லீரல் உடலில் 500 வகையான வேலைகளை செய்கிறது. நாம் சாப்பிடும் உணவை வடிகட்டுகிறது, புரதம் உற்பத்தி செய்கிறது, எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே நாம் சாப்பிடும் சாப்பாட்டை கவனமாக எடுத்துக் கொண்டாலே கல்லீரலை பாதுகாக்கலாம்.

குடிபழக்கம் இல்லாத போதும் கல்லீரல் பாதிக்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு,கல்லீரல் மற்றும் கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் ஶ்ரீநிவாசன்

கல்லீரல் பாதிப்புக்கு பொதுவாக மது பழக்கமே காரணம் என்று கூறப்படுகிறது. அது உண்மையா?

அப்படி இல்லை. முழு உடல் பரிசோதனை செய்யும் போது, பலருக்கும் ஃபேட்டி லிவர் (Fatty-Liver) இருப்பது தெரியவருகிறது. இதில் கிரேட் 1, கிரேட் 2, கிரேட் 3, கிரேட் 4 என்று நான்கு நிலைகள் உள்ளன. இப்போதுள்ள சூழலில் தமிழ்நாட்டில் 30-40% பேருக்கு கிரேட் 1 ஃபேட்டி லிவர் இருக்கும் என்று கூறலாம். ஆனால் அவர்களில் சுமார் 18% பேர் மட்டுமே குடிப் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் அந்த பழக்கம் கிடையாது.

Nonalcoholic steatohepatitis என்ற வகையிலான, குடிப் பழக்கம் அல்லாத காரணங்களினால் கல்லீரல் பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. இதற்கு காரணம் நமது மந்தமான வாழ்க்கை முறை. நாம் உடலின் தேவைக்கு அதிகமாக சாப்பிடுகிறோம். சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுகிறேன் என்று சொல்பவர்கள் சிலர் அதிகமாக குளிர்பானங்கள் குடிக்கலாம், இனிப்புகள் எடுத்துக் கொள்ளலாம், பஜ்ஜி போண்டா போன்ற எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடலாம். இவை எல்லாம் ஃபேட்டி லிவருக்கு இட்டுச் செல்லும்.

ஃபேட்டி லிவர் என்பது பலர் நினைத்துக் கொள்வது போல கொழுப்புச் சத்து அல்ல. ஃபேட்டி லிவருக்கு முக்கிய காரணம் கார்போஹைட்ரேட் எனும் மாவுச் சத்து தான். மாவுச்சத்தை கொழுப்பாக மாற்றும் திறன் கல்லீரலுக்கு உண்டு. எனவே அதிக மாவுச் சத்து, அதிக சர்க்கரை, இவை எல்லாமே கொழுப்பாக மாறி கல்லீரலில் சேரும்.

மிக எளிமையாக இதை சொல்ல வேண்டும் என்றால் - எந்த உணவாக இருந்தாலும் அது முதலில் கல்லீரலில் தான் சேரும். கல்லீரல் தான் உடலுக்கு தேவையான நல்ல உணவை வடிகட்டி அதை மட்டும் இருதயத்துக்கு அனுப்பும். இருதயம் அதனை உடல் முழுவதும் பகிர்ந்து கொடுக்கும்.

குடிபழக்கம் இல்லாத போதும் கல்லீரல் பாதிக்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆரோக்யமற்ற உணவு பழக்கத்தினால் மட்டுமே கல்லீரல் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட வாய்ப்பு உண்டா?

100% வாய்ப்பு உள்ளது. கல்லீரல் பாதிப்பில் தொடங்கி, கல்லீரல் செயல்பாடு முற்றிலும் முடங்கிப் போய் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையும் சில நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் உணவு கட்டுப்பாடுடன் இருக்கவில்லை என்றால் மிக விரைவில் கிரேட் 4 வரை அவர்களின் கல்லீரல் பாதிப்பு தீவிரமாகலாம்.

உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கும் இது பொருந்தும். அவர்கள் மாதத்துக்கு ஒரு முறை குடிப்பவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களின் கல்லீரல் பாதிப்புக்கு குடிபழக்கத்தை காரணம் சொல்ல முடியாது. சொல்லப்போனால், குடிப்பழக்கம் அல்லாத காரணங்களினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் அதிகரிக்கும் சதவிகிதம் வேகமாக உயர்ந்து வருகிறது.

குடிபழக்கம் இல்லாத போதும் கல்லீரல் பாதிக்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொரோனாவுக்கு பிறகு கல்லீரல் பாதிப்புகள் அதிகரிக்கும் விதத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

வாழ்க்கை முறை மாறியுள்ளது. அலுவலகத்துக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள் அதிகமாகியுள்ளனர். குறிப்பாக ஐடி துறையில் இருப்பவர்கள் இரவு நேரங்களில் வேலை பார்க்கும் போது, பசித்த உடன் உணவு டெலிவரி ஆப் மூலம் உடனடியாக ஆர்ட செய்து சாப்பிடுகின்றனர். அந்த உணவை எப்படி சமைக்கிறார்கள், அது என்ன மாதிரியான கடை என்றெல்லாம் பார்ப்பதில்லை, அருகில் இருப்பது எது என்று மட்டுமே பார்க்கிறார்கள். இவை எல்லாம் பாதிப்புகளை அதிகப்படுத்துகிறது.

இரவு நேரத்தில் சாப்பிடுவதால் கல்லீரல் பாதிப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்குமா?

யார் அதிக நாட்கள் வாழ்கிறார்களோ அவர்கள் ஆரோக்யமானவர்களாக கருதப்படுகிறார்கள். அப்படி பார்க்கும் போது கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் சராசரி வாழ்நாள் 85 ஆண்டுகள் ஆகும். நம்மை விட 20 ஆண்டுகள் அதிகம். அவர்களின் உணவுப் பழக்கத்தின் முக்கிய அம்சம் – இரவு உணவை அவர்கள் மாலை 6.30 மணிக்கு சாப்பிட்டுவிடுவார்கள். நாம் இரவு 10மணி, 11 மணிக்கு கூட சாப்பிடுவோம். இப்போது இரவு 2 மணி, 3 மணிக்கு கூட பிரியாணி கிடைக்கிறது.

வயிறு முட்ட பிரியாணி சாப்பிடும் போது உடலில் தேவைக்கு மீறிய கலோரிகள் சேர்கின்றன. அவ்வளவு உணவை சாப்பிட்டு விட்டு, உடனே தூங்கிவிடுவார்கள், எந்த வேலையும் செய்ய போவதில்லை. அந்த உணவு நமது கல்லீரலில் தான் சென்று தங்கும்.

இரவு நேரத்தில் சாப்பிடும் போது உணவு செரிக்க நேரமாகும். அவை குடல் பகுதியிலேயே தங்கிவிடும். அப்போது பாக்டீரியாக்கள் செயல்பாடு அதிகரிக்கும். அதாவது பாலை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அது கெட்டுபோய்விடும் இல்லையா, அதே போல தான். உணவு செரிக்காமல் அதே இடத்தில் நீண்ட நேரம் தங்கியிருந்தால் அதுவும் கெட ஆரம்பித்துவிடும். அதனால் தான் பலருக்கு Irritable Bowel Syndrome போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. பாக்டீரியாக்கள் அதிகமாகும் போது அவை வாயு உற்பத்தி செய்யும். அந்த வாயு குடலை விரிக்கும். குடலை விரிக்கும் போது கழிப்பறைக்கு செல்லும் உந்துதல் ஏற்படும்.

குடிபழக்கம் இல்லாத போதும் கல்லீரல் பாதிக்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கல்லீரல் ஆரோக்கியத்துக்கு குடல் ஆரோக்கியம் (gut health) எவ்வளவு முக்கியம்?

கல்லீரலும் குடல் கிட்டத்தட்ட ஒரே உறுப்பு போல தான். நாம் சாப்பிடும் உணவில் உள்ள பாக்டீரியா, அவை உடலில் சென்ற பிறகு எப்படி வளர்கின்றன, அவற்றுடன் நமது உறவு எப்படி உள்ளது இவை எல்லாம் பற்றி பேசுவது தான் குடல் ஆரோக்கியம். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரே சமையலறையிலிருந்து சமைத்த உணவை தான் ஒவ்வொருவரும் சாப்பிட்டு வந்தனர். காலை உணவு வீட்டில் சாப்பிடுவோம், மதிய உணவு வீட்டிலிருந்து எடுத்துச் செல்வோம், இரவு உணவையும் வீட்டில் தான் சாப்பிடுவோம். வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் இதே வழக்கமாக இருக்கும். அப்போது நமது உடலில் உள்ள பாக்டீரியாக்களுக்கும் நமக்குமான தொடர்பு சீராக இருக்கும். ஆனால் இப்போது வெவ்வேறு வேளைகள் வெவ்வேறு இடத்திலிருந்து சாப்பிடுகிறோம். உடலில் பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் செல்கின்றன. அவை ஒன்றோடு ஒன்று சண்டையிடுகின்றன. அப்போது வாயு உற்பத்தியாகும். இவை எல்லாம் குடலுக்கு உகந்தது அல்ல.

மன அழுத்தம், கல்லீரல், குடல் ஆரோக்கியம் இவற்றுக்கான தொடர்பு என்ன?

சாலையில் நீங்கள் நடந்து செல்லும் போது திடீரென ஒரு லாரி உங்கள் மீது இடிப்பது போல வந்து, நின்றுவிட்டது என்று வைத்துக் கொள்ளலாம். "எனக்கு வயிறு கலக்கிவிட்டது" என்று கூறியிருப்பீர்கள். பதட்டமடையும் போது ஏன் வயிறு கலக்கிறது? நாம் பதட்டம் அடையும் போது வெளியாகும் சில சுரப்பிகள் குடலில் மாற்றங்களை உண்டாக்கும். நிறைய பேருக்கு தற்போது வேலை சூழல் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கிறது. அவர்களது உடலில் அதிகபடியான சுரப்பிகள் வெளியாகின்றன. அவை குடலை பாதிக்கும். குடல் சாப்பாட்டை உடனே வெளியேற்றிவிட வேண்டும் என்று நினைக்கும். எனவே தான் சிலருக்கு சாப்பிட்ட உடன் கழிவறை பயன்படுத்த வேண்டிய உந்துதல் ஏற்படும். இவை எல்லாமே மன அழுத்தம் தொடர்பானது தான்.

பாராசிட்டமால் அதிகமாக சாப்பிட்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுமா?

குடிபழக்கம் இல்லாத போதும் கல்லீரல் பாதிக்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாராசிட்டமாமல் தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது கண்டிப்பாக கல்லீரல் பாதிப்பு, சில நேரங்களில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையும் ஏற்படலாம். குழந்தைகளில் பாராசிடாமல் பாய்சனிங் (paracetamol poisoning) அதிகம் காணப்படுகிறது. குழந்தைகளுக்கு காய்ச்சல் குறையவில்லை என்ற காரணத்தினால் பெற்றோர்கள் அறியாமையினால் மருத்துவர் கூறியதை விட அதிகமாக கொடுப்பார்கள். அதனால் கல்லீரல் பாதிப்பு கண்டிப்பாக ஏற்படுகிறது. மருந்துகள் கொடுத்து நிலைமை சீராகவில்லை என்றால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதை தவிர வேறு வழியில்லை. ஒவ்வொருவரும் எவ்வளவு பாராசிடாமல் எடுத்துக் கொள்ளலாம் என்பது ஒவ்வொருவரின் உடல் நிலையை பொருத்தது. ஏற்கெனவே குடிபழக்கத்தினால் கல்லீரல் பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ள நபருக்கு ஒரு சில மாத்திரைகள் கூட ஆபத்தாக இருக்கலாம். ஆரோக்யமாக இருப்பவர்களுக்கு ஒரு நாளுக்கு பல மாத்திரைகள் சாப்பிட்டால் கூட பாதிப்பு இருக்காது. கல்லீரல் பாதிப்பு நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு வலியை குறைக்கக் கூட பாராசிடாமல் கொடுப்பதை மருத்துவர்கள் தவிர்த்துவிடுவோம். அந்த அளவுக்கு பாராசிட்டமாலும் கல்லீரல் பாதிப்பும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

அதே போன்று உடல் எடை குறைப்பதற்கான பவுடர்களை உட்கொள்வதால் தீவிர கல்லீரல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனக்கு தெரிந்த இரண்டு மருத்துவர்கள் அதனை எடுத்துக் கொண்டனர். ஒருவர் இறந்துவிட்டார் . மற்றொருவருக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டு தற்போது மெல்ல குணமாகிவருகிறார். அந்த பவுடரை எடுத்துக் கொள்ளும் போது திருப்தியாக சாப்பிட்ட உணர்வு கிடைக்கும். எனவே அந்த நாளில் நமக்கு தேவையான சத்துக்கள் எதையும் நாம் உட்கொள்ள மாட்டோம். அந்த பவுடரால் உடல் எடை குறையும். ஆனால் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும். இது குறித்து பல ஆய்வுகள் உள்ளன.

பாதிப்படைந்த கல்லீரல் முழுவதும் பழைய நிலைக்கு திரும்ப வழி உண்டா?

கல்லீரல் நமது உடலின் மிக அற்புதமான உறுப்பாகும். கிரேக்க புராணங்களில் வரும் ப்ரோமதியஸ் என்பவருக்கு உடலிலிருந்து வெளியே தொங்கிக் கொண்டிருக்கும் கல்லீரலை காகம் ஒன்று தினமும் வந்து சாப்பிட்டுச் செல்லும். ஆனால் காகம் ஒவ்வொரு முறை வரும் போதும், கல்லீரல் பழைய நிலையில் வளர்ந்திருக்கும்.

கல்லீரலுக்கு மீண்டு வளரும் திறன் உள்ளது, ஆரோக்யமாக இருப்பவரின் கல்லீரலில் 70% வெட்டி எடுத்துவிட்டாலும், அந்த 30% கல்லீரல் அடுத்த ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 80% ஆக வளர்ந்திருக்கும். குடிபழக்கத்துக்கு அடிமையானவர்கள், அந்த பழக்கத்தை அடியோடு விட்டுவிட்டால் அப்போது வரை ஏற்பட்டிருந்த பாதிப்புகள் நீங்கி கல்லீரல் மீண்டும் பழைய நிலைக்கு மீண்டும் திரும்பிவிடும். ஆனால் இதை தான் குடிப்பவர்கள் சிலர் தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர். குடிப் பழக்கத்துக்கு அடிமையான எனது நோயாளி ஒருவர், அதிகமாக குடிக்கும் போது கண்கள் மஞ்சள் ஆகின்றன, தனக்கு மஞ்சள் காமாலை ஏற்படுகிறது என்று அவருக்கு தெரியும். ஒரு வாரம் சாப்பிடாமல் இருந்தால் சரியாகிவிடும் என்று கூறி கூறி குடித்துக் கொண்டே இருந்தார். இப்போது உயிரிழந்துவிட்டார். கல்லீரல் மீண்டு வளரும் திறன் கொண்டது என்றாலும் அதை தவறாக பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwy7n54q4pyo

நீரிழிவு நோயில் மேலும் ஒரு புதிய வகை: டைப்-5 நீரிழிவு யாருக்கெல்லாம் வரக் கூடும்?

2 months 2 weeks ago

டைப்-5 நீரிழிவு நோய், வேலூர் சிஎம்சி, உலக சுகாதார அமைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், நித்யா பாண்டியன்

  • பதவி, பிபிசி தமிழ், சென்னை

  • 15 ஏப்ரல் 2025, 03:03 GMT

உடல் பருமனாக இருப்பவர்களுக்கே நீரிழிவு நோய் வரும் என்ற எண்ணம் பலரது மனதிலும் உள்ளது. மெலிந்த தேகம் கொண்டவர்கள் மத்தியில் எந்தவிதமான நோயும் வருவதில்லை என்ற எண்ணமும் நம்மிடம் உள்ளது.

ஆனால் குறைவான பி.எம்.ஐ கொண்டவர்கள் மத்தியிலும் நீரிழிவு நோய் ஏற்படும் என்றும் அது ஏற்கனவே மக்கள் மத்தியில் காணப்படும் டைப்-1, டைப்-2 நீரிழிவு நோய் அல்ல என்றும் சமீபத்தில் பாங்காங்கில் நடைபெற்ற நீரிழிவுக்கான உலகளாவிய மாநாட்டில் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். (பிஎம்ஐ- உடல் எடையையும், உயரத்தையும் கொண்டு கணக்கிடுவது. உலக சுகாதார நிறுவனம் 25 அல்லது அதற்கு மேற்பட்ட பிஎம்ஐ இருந்தால், அது உடல் பருமன் பிரச்னை என்கிறது)

இந்த வகை நீரிழிவு நோய் குறிப்பாக மத்திய மற்றும் குறை வருவாய் பிரிவில் உள்ள நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பருமனாக இல்லாத, அதே நேரத்தில் போதுமான அளவு இன்சுலின் சுரக்காத நபர்களிடம் ஏற்படும் நீரிழிவு நோயை டைப்-5 நீரிழிவு நோய் என்று வகைப்படுத்தி, அதற்கான ஆராய்ச்சியை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளார் பேராசிரியர் மருத்துவர் பீட்டர் ஸ்வார்ஸ். அவர் சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

டைப்-5 நீரிழிவு நோய் யாருக்கு ஏற்படுகிறது? அது எவ்விதம் ஏற்படுகிறது? அதனை கட்டுக்குள் கொண்டு வர எத்தகைய நடவடிக்கைகள் தேவை என்பதை ஆய்வு செய்ய சர்வதேச அளவில் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

டைப்-5 நீரிழிவு நோய் என்றால் என்ன? முதன்முறையாக எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? எந்தெந்த சமூகக் குழுக்கள் மத்தியில் இந்த நோய் அதிகமாக பரவுகிறது? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

டைப்-5 நீரிழிவு நோய் என்றால் என்ன?

<19 என்ற அளவில் குறைந்த பி.எம்.ஐ எண் கொண்டிருக்கும் மக்களிடம் காணப்படும் நீரிழிவு நோயே வகை ஐந்து நீரிழிவு நோய் என்று அழைக்கப்படுகிறது. இந்த நீரிழிவு உடல் பருமன் குறைவாக இருக்கும் மக்களிடம் ஏற்படுகிறது.

"டைப்-2 நீரிழிவு நோய் உடைய, உடல் பருமன் அதிகமாக இருக்கும் நோயாளிகளிடம், இன்சுலின் சுரந்தாலும் அவர்களின் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள அந்த இன்சுலின் சுரப்பு போதுமானதாக இருக்காது. அவர்களின் உடலில் இன்சுலின் எதிர்ப்பு அதிகப்படியாக இருக்கும்.

ஆனால், டைப்-5 நீரிழிவு நோயானது உடல் பருமன் குறைவாக உள்ள, அதாவது (<19) என்ற அளவில் பி.எம்.ஐ கொண்ட மக்களிடம் ஏற்படக்கூடியது. இவர்களின் உடலில் இன்சுலின் பற்றாக்குறை இருக்கும்.

ஆனால் டைப்- 2 நீரிழிவு நோய்க்கு ஊசி செலுத்துவது போன்று இல்லாமல், மாத்திரைகள் மூலமாகவே சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இயலும்," என்று பிபிசி தமிழிடம் தெரிவிக்கிறார் மருத்துவர் ஃபெலிக்ஸ் ஜெபராஜ். இவர் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் உட்சுரப்பியல், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றத்துறையில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

டைப்-5 நீரிழிவு நோய், வேலூர் சிஎம்சி, உலக சுகாதார அமைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வகை 5 நீரிழிவு நோயானது உடல் பருமன் குறைவாக உள்ள, அதாவது (<19) என்ற அளவில் பி.எம்.ஐ கொண்ட மக்களிடம் ஏற்படக்கூடியது

யாருக்கெல்லாம் இத்தகைய நீரிழிவு நோய் வரக் கூடும்?

குறைவான மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டக் கூடிய நாடுகளில் இந்த நோய் இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • சிறுவயதில் இருந்தே ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்பட்ட மக்கள்

  • கருவில் இருக்கும் போதே குறைவான பிஎம்ஐ கொண்ட பிரிவினர்

  • 30 வயதிற்கு உட்பட்டவர்கள்

  • ஆண்கள்

  • கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு இருந்தும் கேட்டோனூரியா அல்லது கேட்டோசிஸ் குறைபாடு உள்ளவர்கள்

  • நாள் ஒன்றுக்கு அதிக அளவு இன்சுலின் தேவைப்படும் நபர்கள்

ஆகியோருக்கு டைப்-5 நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம் என்கிறது வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி நடத்திய ஆராய்ச்சி முடிவுகள்.

டைப்-5 நீரிழிவு நோய், வேலூர் சிஎம்சி, உலக சுகாதார அமைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

டைப்-5 நீரிழிவு 1955-ல் கண்டுபிடிப்பு

குறைவான பி.எம்.ஐ. கொண்ட மக்களிடம் காணப்படும் நீரிழிவு நோயை ஹூக் - ஜோன்ஸ் 1955-ஆம் ஆண்டில் உறுதி செய்தார். ஜமைக்காவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் அவர்களுக்கு டைப்-1 மற்றும் டைப்-2 நீரிழிவு நோய் இல்லை என்பதையும் அவர் உறுதி செய்தார்.

குறைவான மற்றும் மத்திய வருவாய் ஈட்டக்கூடிய நாடுகளில் இந்த நோய் இருப்பது அப்போது கண்டறியப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், கொரியா, தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் எத்தியோபியா, நைஜீரியா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் இந்த வகை நீரிழிவு நோய் இருப்பது ஆவணப்படுத்தப்பட்டது.

உலக சுகாதார அமைப்பால் இந்த வகை நீரிழிவு நோய் 1985-ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. அதனை ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நீரிழிவு நோய் (malnutrition-related diabetes mellitus (MRDM)) என்று வகைப்படுத்தியது உலக சுகாதார அமைப்பு.

டைப்-5 நீரிழிவு நோய், வேலூர் சிஎம்சி, உலக சுகாதார அமைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பரவலாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீரிழிவு நோய் பிரிவுகளை முதன்முறையாக 1980-ஆம் ஆண்டு வெளியிட்டது உலக சுகாதார அமைப்பு.

WHO பட்டியலில் இருந்து டைப்-5 நீரிழிவு நீக்கப்பட்டது ஏன்?

பரவலாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீரிழிவு நோய் பிரிவுகளை முதன்முறையாக 1980-ஆம் ஆண்டு வெளியிட்டது உலக சுகாதார அமைப்பு. 1985-ஆம் ஆண்டு அதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வெளியிடப்பட்டது.

1980-ஆம் ஆண்டில் நிபுணர் குழு நீரிழிவு நோயின் இரண்டு பிரிவுகளான ஐ.டி.டி.எம் அல்லது டைப்-1 மற்றும் என்.ஐ.டி.டி.எம். அல்லது டைப்-2 நீரிழிவு நோயை பட்டியலில் இணைக்க பரிந்துரை செய்தது. 1985-ஆம் ஆண்டு ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக ஏற்படும் நீரிழிவு நோய் (MRDM) வகை பட்டியலில் இடம் பெற்றது.

ஆனால் 1999-ஆம் ஆண்டு ஊட்டச்சத்து குறைபாடு அல்லது புரத பற்றாக்குறை காரணமாக ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படும் என்பதை நிரூபிக்க போதுமான சான்றுகள் ஏதும் இல்லை என்பதால் MRDM வகை நீரிழிவு நோயை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது உலக சுகாதார அமைப்பு.

ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக நீரிழிவு நோயில் ஏற்பட்டிருக்கும் திரிபு என்று கூறி அந்த வகையை நீக்கியதோடு மட்டுமின்றி, அதனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

டைப்-5 நீரிழிவு நோய், வேலூர் சிஎம்சி, உலக சுகாதார அமைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,1985-ஆம் ஆண்டு ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக ஏற்படும் நீரிழிவு நோய் (MRDM) வகை உலக சுகாதார அமைப்பின் பட்டியலில் இடம் பெற்றது

முக்கிய அறிவிப்புக்கு வழிவகுத்த ஆராய்ச்சி

கடந்த 2022-ஆம் ஆண்டு வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் குறைவான உடல் பருமன் கொண்ட, ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களிடம் காணப்படும் நீரிழிவு நோயானது டைப்-1, டைப்-2 நீரிழிவு நோய் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

1955-ல் முதன் முறையாக கண்டறியப்பட்ட, ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நீரிழிவு நோயாக (MRDM) இது இருக்கலாம் என்பதையும் அவர்கள் ஆராய்ச்சி முடிவில் உறுதி செய்தனர்.

இது தொடர்பாக அதே ஆண்டு "An Atypical Form of Diabetes Among Individuals With Low BMI," என்ற தலைப்பில் ஆராய்ச்சி முடிவுகளையும் வெளியிட்டனர். அதன்படி, பின்தங்கிய சமூக பொருளாதார பின்னணியில் இருந்து, குறைவாக உடல் பருமன் கொண்ட 73 இந்திய ஆண்களிடம் சோதனை செய்யப்பட்டது. அதில் 20 பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டது.

வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி உட்சுரப்பியல், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றத்துறையில் பணியாற்றி வரும் மூத்த பேராசிரியரும் மருத்துவருமான நிஹல் தாமஸ், அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்திருக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் மெரிடித் ஹாகின்ஸும், இதர துறை சார் நிபுணர்களும் சேர்ந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

"இது தொடர்பான ஆராய்ச்சிகளை நடத்தி, அவர்களுக்கென பிரத்யேக சிகிச்சை வழங்க வேண்டிய தேவையை வலியுறுத்தும் வகையில் பிரகடனம் ஒன்று கடந்த ஜனவரி மாதம் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற 'வேலூர் எண்டோகிரைனாலஜி சர்வதேச மாநாட்டில்' அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே சமீபத்திய அறிவிப்பு பாங்காங்கில் வெளியிடப்பட்டது," என்று தெரிவிக்கிறார் மருத்துவர் ஃபெலிக்ஸ் ஜெபராஜ்.

வேலூரில் நடைபெற்ற மாநாட்டிற்கு பேராசிரியர்கள் நிஹல், மெரிடித் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அமைப்பு செயலாளராக பேராசிரியர் ஃபெலிக்ஸ் ஜெபராஜ் செயல்பட்டார்.

டைப்-5 நீரிழிவு நோய், வேலூர் சிஎம்சி, உலக சுகாதார அமைப்பு

பட மூலாதாரம்,PROFESSOR PETER SCHWARZ/LINKEDIN

படக்குறிப்பு,சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் பங்கேற்ற பேராசிரியர் பீட்டர் ஸ்வார்ஸ் மற்றும் இதர துறைசார் நிபுணர்கள்

டைப்-5 நீரிழிவு நோய் தொடர்பான ஆராய்ச்சி ஏன் அவசியமாகிறது?

"பொதுவாக இத்தகைய நபர்களுக்கு நீரிழிவு நோய் வராது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் அவர்களுக்கும் நீரிழிவு நோய் ஏற்படும். அவர்களுக்கு, டைப்-1 மற்றும் டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பொதுவான சிகிச்சை முறையை கையாள்வது தீங்காக போய் முடியக்கூடும். இன்றைய காலத்தில் ஆதாரங்கள் அடிப்படையில்தான் மக்கள் எந்த ஒரு சிகிச்சையையும் ஏற்றுக் கொள்வார்கள். எனவே இது தொடர்பாக அதிக அளவு மக்களுக்கும், மருத்துவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், டைப்-5 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சிகிச்சை முறையை உருவாக்கவும் இத்தகைய ஆராய்ச்சிகளை தொடர்வது முக்கியமானது," என்று மருத்துவர் ஃபெலிக்ஸ் ஜெபராஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0jz91lvgnlo

மாதவிடாய் நின்ற பிறகான பெண்களின் வாழ்க்கை முறை மாற்றம்

2 months 3 weeks ago

மாதவிடாய் நின்ற பிறகும் பெண்கள் கலவி இன்பத்தை பெறுவது எப்படி?

மெனோபாஸ், உடலுறவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

11 ஏப்ரல் 2025

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

உடலுறவு கொள்வதில் குறைவான ஆசை, பெண்ணுறுப்பில் வறட்சி மற்றும் தீவிர மனநிலை மாற்றங்கள்...

இவை மாதவிடாய் நிறுத்தத்தின்போது (மெனோபாஸ்) பெண்கள் அதிகம் அனுபவிக்கும் சில அறிகுறிகள்.

பலருக்கு, இந்த மாற்றங்கள் மாதவிடாய் இறுதியாக நிற்பதற்கு பத்து ஆண்டுகள் முன்பிருந்தே தொடங்கலாம். இந்தக் காலகட்டம் பெரிமெனோபாஸ் என்று அழைக்கப்படுகின்றது.

கனடாவில் உள்ள வான்கூவரில் தனது 40களில் இருக்கும் சூசன் வசித்து வருகிறார். அவர் தற்போது பெரிமெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கிறார்.

"இந்த நேரத்தில் உடலுறவு கொள்வதென்பது வலி மிகுந்ததாகிவிட்டது. உடலுறவு கொள்ள எனக்கு இன்னும் ஆசை இருக்கிறது. ஆனால் இந்த வலி எனது ஆசைக்குத் தடையாக இருக்கிறது. எனக்குள் என்ன நடக்கிறது என்றே எனக்குத் தெரியாமல் இருந்தது. உண்மையாகச் சொல்ல வேண்டுமெனில், இந்த விஷயத்தைப் பற்றி மருத்துவரிடம் சொல்ல எனக்கு நீண்ட காலம் எடுத்தது" என்று கூறுகிறார் சூசன்.

மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில், பெண்கள் தங்கள் வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியை மாதவிடாய் நின்றதற்குப் பிறகு கழிக்கக் கூடும்.

மெனோபாஸ், உடலுறவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹார்மோன் சுரக்கும் அளவு குறைவதால் பெண்களின் மாதவிடாய் சுழற்சி நின்று போவதே மெனோபாஸ் எனப்படுகிறது. இந்தக் காலத்துக்குப் பிறகு பெண்களால் குழந்தை பெற முடியாது. பெண்களுக்கு உடல் மற்றும் மனம் சார்ந்த பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்.

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைவதுதான் பெண்ணுறுப்பில் வறட்சி ஏற்படக் காரணமாக இருக்கிறது. இதனால்தான் உடலுறவு கொள்ளும்போது வலி ஏற்படுகிறது என்று கூறுகிறார் மருத்துவர் அஸிசா ஸெஸே. இவர் பிரிட்டனில் பொது மருத்துவராகப் பணியாற்றி வருகிறார் மற்றும் சுகாதாரம் சார்ந்த கல்வியை மக்களிடையே ஊக்குவித்து வருகிறார்.

ஆனால் பெண்கள் உடலுறவு பற்றிப் பேசுவது இன்னும் பல கலாசாரங்களில் ஒரு தடையாக இருக்கிறது. "உடலுறவின்போது வலி ஏற்படுவது இயல்பானது என்று கருதும் பெண்கள் இருக்கிறார்கள். அதோடு எதிர்பால் ஈர்ப்பு உறவுகளில் உடலுறவுகொள்ளும்போது ஓர் ஆணை மகிழ்விக்க இந்த வலியைத் தாங்கிக் கொள்வது தனது பொறுப்பு என்று நம்பும் பெண்களும் இன்னும் இருக்கிறார்கள்" என்று கூறுகிறார் மருத்துவர் அஸிசா ஸெஸே.

இதுபோன்ற நம்பிக்கைகள் காரணமாகப் பல பெண்கள் வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும்போது அவற்றைத் தீர்க்க மருத்துவர்களிடம் வருவதைத் தவிர்த்து அமைதியாக அவதிப்படலாம் என்று மருத்துவர் அஸிசா கூறுகிறார்.

ஹார்மோன்களும் மறைந்திருக்கும் அறிகுறிகளும்

மாதவிடாய் நின்ற பிறகு உடலுறவு கொள்வது ஏன் சிரமமாக இருக்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

உடலுறவு கொள்ள ஆசையைத் தூண்ட ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் (இதையும் கருப்பைகள் சுரக்கின்றன) ஹார்மோன்கள் காரணமாக இருப்பதாக மருத்துவர் அஸிசா விளக்குகிறார்.

இந்த ஹார்மோன்களின் அளவு குறையத் தொடங்கும்போது உடலுறவின் மீதான ஆசையில் மாற்றங்களை அனுபவிப்போம் என்கிறார் அவர்.

ஜெர்மனியில் வசிக்கும் ரோஸிக்கு 45 வயதாகிறது. அவரது 30 வயதில் அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, அவருக்கு கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவருக்கு கட்டாய மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்டது. இதனால் தான் அனுபவித்த மாற்றங்கள் தீவிரமானவை என்று அவர் பிபிசியிடம் அவர் கூறினார்.

"எனக்கு உடலுறவு கொள்ள மிகவும் பிடிக்கும். ஆனால் திடீரென்று அந்த ஆசை போய்விட்டது. அதனால் என்னால் எந்த உடல் ரீதியான தூண்டுதலையும் அனுபவிக்க முடியவில்லை," என்றார்.

உடலுறவில் ஆசை குறைவது மற்றும் உடலுறவு கொள்ளும்போது வலி ஏற்படுவது ஆகிய இரு பிரச்னைகளுக்காகத்தான் மெனோபாஸ் காலகட்டத்தில் பெண்கள் தன்னிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வருவதாகக் கூறுகிறார் கலிஃபோர்னியாவில் மனநல மருத்துவராகவும் உடலுறவு சார்ந்த சிகிச்சையாளராகவும் பணியாற்றும் மருத்துவர் நசானின் மாலி.

''பல சந்தர்ப்பங்களில் அவர்கள் முடங்கிப் போகிறார்கள். பல பெண்களுக்கு உடலுறவு கொள்ள விருப்பமில்லாமல் இல்லை. ஆனால், ஆணுறுப்பை தன்னுள்ளே செலுத்தி உடலுறவு கொள்ளும் ஆர்வம் பெண்களுக்கு இல்லாமல் போகிறது" என்று அவர் விவரிக்கிறார்.

ஆனால் பெண்ணுறுப்பில் வறட்சியோ, உடலுறவு கொள்வதில் ஆசை குறைவதோ மட்டும் வாழ்க்கையின் இந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைந்து போவதற்குக் காரணமாக இருப்பதில்லை.

பிரிட்டனில் வசிக்கும் 49 வயதான யாஸுக்கு தொடர்ந்து சிறுநீர்ப் பாதையில் அடிக்கடி தொற்றுக்கள் ஏற்படுவது அவருக்கு உடலுறவு மீதான ஆசை குறையக் காரணமாக இருந்தது.

''ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போதும், அதன் பிறகு மிகவும் வலி மிகுந்த நோய்த்தொற்றுகள் ஏற்படுவதால், உடலுறவு கொள்வதில் எனக்கு சுத்தமாக ஆசை இல்லை. இந்தப் பிரச்னை மெனோபாஸுடன் தொடர்புடையது என்று மருத்துவர்கள் நீண்ட காலமாகக் கண்டறியவில்லை" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவு குறைவதன் விளைவாக சிறுநீர்ப் பாதையில் தோற்றுகள் ஏற்படக்கூடும் என்று மருத்துவர் ஸெஸே தெரிவிக்கிறார்.

"ஈஸ்ட்ரோஜன் வெறும் மாதவிடாய் சுழற்சி மற்றும் இனப்பெருக்கம் சார்ந்த ஒன்று என்றே மக்கள் நினைக்கின்றனர். ஆனால் ஈஸ்ட்ரோஜன் என்பது நமது உடல் முழுவதும் செயல்படும் ஓர் அற்புதமான ஹார்மோன்".

"பெண்ணுறுப்பு மற்றும் சிறுநீர்க் குழாயை வழுவழுப்புத் தன்மையுடன் வைத்திருக்க உதவுவது ஈஸ்ட்ரோஜன்தான். ஈஸ்ட்ரோஜனின் அளவு குறையும்போது , சிறுநீர்க் குழாயைச் சுற்றியுள்ள திசுக்களை மெல்லியதாகவும், வறண்டதாகவும் மாற்றி நோய்தொற்றுக்கு ஆளாக்குகிறது" என்று அவர் விவரிக்கிறார்.

பல கலாசாரங்களில் பெண்கள் உடலுறவு கொள்வது என்பது இனப்பெருக்கத்தோடு மட்டுமே தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. எனவே மாதவிடாய் நின்ற பிறகு அவர்கள் உடலுறவு கொள்வது நின்றுவிடும் என்ற தவறான ஒரு கருத்து இருக்கிறது.

பெண்களின் இளமைக்காக அவர்களை மதிப்பது என்பது அவர்கள் வாழ்வின் இந்தக் காலகட்டத்தைக் கடினமாக்கிவிடும் என்று கூறும் மருத்துவர் மாலி, "சில பெண்களுக்கு இது கஷ்டத்தை தரக் கூடியதாக இருக்கலாம்" என்கிறார்.

ஆனால் மாதவிடாய் முடிந்த பிறகு தங்கள் வாழ்க்கையின் சிறந்த உடலுறவை வைத்துக்கொள்ளத் தொடங்கும் பெண்களும் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

என்ன சிகிச்சைகள் இருக்கின்றன?

மெனோபாஸ், உடலுறவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஹார்மோன் மாற்று சிகிச்சை (HRT) மாத்திரைகள், பேட்ச்கள், ஜெல்கள் போன்ற பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது.

"மெனோபாஸ் சார்ந்த எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வுகள் இருக்கின்றன. பெண்கள் உடலுறவு கொள்ளவும், கூடுதல் இன்பத்தை அனுபவிக்கவும் பல்வேறு மருத்துவம் மற்றும் மருத்துவம் சாராத தீர்வுகள் இருக்கின்றன" என்று மருத்துவர் மாலி கூறுகிறார்.

லண்டனில் வசிக்கும் ஹால்டிடாவுக்கு 65 வயதாகிறது. அவரது மெனோபாஸ் காலகட்டத்தை ஒட்டி அவருக்கு விவாகரத்து ஆனதால், அதன் பிறகுதான் அவரது பாலியல் வாழ்க்கை சிறப்பாக மாறத் தொடங்கியது.

"எனக்கு 43 வயதானபோது எனக்கு விவாகரத்தானது. எனது 45-46 வயதில் பெரிமெனோபாஸ் காலகட்டம் தொடங்கியது. அதன் பிறகுதான் நல்ல ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக உடலுறவு கொள்ளத் தொடங்கினேன். நான் சந்தோஷமாக உணர்ந்தேன். ஒருவழியாக எனக்கு விடுதலை கிடைத்துவிட்டது" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

உடலுறவு கொள்ள வேண்டும் என்ற ஆசையை மீண்டும் தூண்டுவதற்கான வழிமுறையைப் பற்றிப் பேசும் மருத்துவர் மாலி, "உடலுறவு குறித்த உங்களது எண்ணத்தை மறுமதிப்பீடு செய்யுங்கள்" என்று கூறுகிறார்.

"நம் எல்லாருக்குமே உடலுறவு எப்படி இருக்க வேண்டும், மகிழ்ச்சிகரமான உடலுறவு எப்படி இருக்கும் என்று ஓர் எண்ணம் இருக்கும். ஆனால் நம் உடலில் மாற்றம் ஏற்படும்போது, அதற்குத் தகுந்தாற்போல் நமது எண்ணத்தை மாற்றியமைக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான உடலுறவு என்றால் என்ன என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்?" என்று அவர் கூறுகிறார்.

ஃபோர்ப்ளே மற்றும் ஆணுறுப்பை உள்ளே செலுத்தி உடலுறவு கொள்ளாமல் பாலியல் இன்பத்தை அனுபவிக்கும் வழிகள் குறித்து அவர் வலியுறுத்துகிறார்.

"பெண்ணுறுப்பின் திசுக்களில் மாற்றங்கள் ஏற்படும்போது அதன் உணர்திறன் குறையலாம். அதனால் வைப்ரேட்டர் போன்ற பாலியல் சாதனங்களைப் பயன்படுத்தலாம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாதவிடாய் அறிகுறிகள் உங்கள் பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்றால், "மருத்துவ உதவியை நாடுங்கள், தேவைப்பட்டால் மருத்துவரை மாற்றுங்கள், மனம் தளரவேண்டாம், இதைக் கண்டு கூச்சமடையவும் வேண்டாம்" என்று மருத்துவர் அஸிசா ஸெஸே கூறுகிறார்.

மாதவிடாய் நின்ற பிறகு உடலுறவு கொள்வது ஏன் சிரமமாக இருக்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ஹார்மோன் மாற்று சிகிச்சை (HRT) முதலில் வழங்கப்படும். அவை மாத்திரைகள், ஜெல், ஒட்டக்கூடிய பேட்ச்கள் எனப் பல வடிவங்களில் கிடைக்கின்றன. சிலரால் ரத்த ஓட்டத்தில் ஹார்மோன்களை கலக்கும் மாத்திரைகள் போன்றவற்றைப் பயன்படுத்த முடியாமல் போகலாம். சிலருக்கு பெண்ணுறுப்பில் நேரடியாக பூசிப் பயன்படுத்தக்கூடிய மருந்துகளும் இருக்கின்றன" என்று மருத்துவர் ஸெஸே கூறுகிறார்.

நியூசிலாந்தில் வசிக்கும் நெடா, தனக்கு ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக ஹார்மோன் மாற்று சிகிச்சை மாத்திரைகளை எடுத்துக்கொள்ள முடியவில்லை.

"எனது பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த எனக்கு ஹார்மோன் மாற்று சிகிச்சை வேண்டும் என்று கேட்டபோது பெண்ணுறுப்பில் பூசும் க்ரீம் எனக்குத் தரப்பட்டது. எனக்கு மிக மோசமான புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்ததால் மருத்துவர்கள் எனது பாலியல் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை,'' என்கிறார் அவர்.

கடைகளில் கிடைக்கும் லூப்ரிக்கன்ட்கள் மற்றும் பெண்ணுறுப்பில் பயன்படுத்தும் மாய்ஷரைஸர்களையும் வாங்கிப் பயன்படுத்தலாம். ஆனால் அந்தப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்கள் இருக்கிறதா என்று சரிபார்த்து வாங்க வேண்டும் என்று கூறுகிறார் மருத்துவர் ஸெஸே.

இடுப்பு தசைகளில் (pelvic muscles) வலு குறைந்தவர்கள் அதற்காக இருக்கும் ஃபிசியோதெரபி சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

ஆனால் மாதவிடாய் நின்றாலும் இல்லாவிட்டாலும் அனைவரும் தங்களது வாழ்க்கை முறையை மாற்றுவது, உடற்பயிற்சி செய்வது, பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுவது, மது அருந்துவதைக் குறைப்பது அல்லது முற்றிலுமாக நிறுத்துவது, புகை பிடிக்காமல் இருப்பது, உடல் எடையைப் பராமரிப்பது போன்ற விஷயங்களை செய்ய வேண்டும் என்று மருத்துவர் ஸெஸே கூறுகிறார்.

"நமது உடல்நலத்தின் மீது நாம் அக்கறை கொள்வது சுயநலமான விஷயமல்ல. உங்கள் சுற்று வட்டாரத்தில் உங்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கும் விஷயங்களை நீக்க முயற்சி செய்யுங்கள். நாம் ஒரு சூப்பர்வுமன் என்று நினைத்துக்கொண்டு பல விஷயங்களை நம்மீது போட்டுக்கொள்கிறோம். உதவி கேட்பதில்லை என்பதே முக்கியப் பிரச்னை. உதவி கேளுங்கள். உதவி கேட்கப் பிடிக்காவிட்டால் வேறொருவர் தாமாக உதவி செய்ய முன்வரும்போது அதை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று மருத்துவர் அஸிசா ஸெஸே தெரிவிக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c87p15131plo

பெரியவர்கள் தாய்ப்பால் குடிக்கலாமா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?

3 months ago

தாய்ப்பால், நன்மைகள், தீமைகள் , சரிவிகித உணவு, குழந்தை வளர்ப்பு, ஆரோக்கியம், உடல்நலம், உடற்பயிற்சி, தாய்ப்பால் வங்கி, தாய்ப்பால் சேகரிப்பு, தாய்ப்பாலை எப்படி சேகரிப்பது, தாய்ப்பால் வாரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சோஃபியா பெட்டிஸா

  • பதவி, பிபிசி உலக சேவை

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

திரவ தங்கம் என்று அழைக்கப்படும் தாய்ப்பாலை நிபுணர்கள், மாய சக்தியின் பிறப்பிடம் என்றும் கூறுகின்றனர்.

தாய்ப்பாலில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு அம்சங்கள் குழந்தைகளுக்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது என்பதை அறிவியலாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் பெரியவர்கள் தாய்ப்பலை, அதில் உள்ள ஊட்டச்சத்துகளுக்காக சேமித்து வைத்து பயன்படுத்துகின்றனர்.

மூன்று குழந்தைகளுக்கு அப்பாவான ஜேம்சன் ரைடெனூர் அவருடைய 39 வயதில் முதன்முறையாக தாய்ப்பாலை அருந்தினார். அவருடைய துணைவி மெலிசா குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்துவந்தார். அதிகமாக சுரக்கும் தாய்ப்பாலை ஜேம்சன் தன்னுடைய உணவில் ஒரு பகுதியாக சேர்த்து வந்தார்.

"மெலிசா இதனை 'ஒருவிதமாக' நினைத்தாலும் கூட, நான் இதனை 'ஷேக்கில்' பயன்படுத்துகிறேன்," என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

தாய்ப்பாலை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, 'பாடி பில்டர்' ஒருவர் யூடியூபில் பேசியதை பார்த்த பிறகு ஜேம்சன் தாய்ப்பாலின் நன்மை குறித்து அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியுள்ளார்.

"அந்த உடற்பயிற்சி செய்யும் நபர் பெரிய பலசாலியாக இருந்தார்," என்று ஜேம்சன் தெரிவித்தார்.

தாய்ப்பால், நன்மைகள், தீமைகள் , சரிவிகித உணவு, குழந்தை வளர்ப்பு, ஆரோக்கியம், உடல்நலம், உடற்பயிற்சி

பட மூலாதாரம்,JAMESON RITENOUR

படக்குறிப்பு,தாய்ப்பாலை உட்கொள்வதில் அதிக கவனம் தேவை என்று நிபுணர்கள் கூறுகின்ற போதும், ஜேம்சன் தாய்ப்பால் அவருக்கு தேவையான உத்வேகத்தை ஜிம்மில் வழங்குகிறது என்று நம்புகிறார்.

தாய்ப்பாலை உணவில் சேர்த்துக் கொள்வது ஜேம்சனின் தினசரி வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. நாள் ஒன்றுக்கு 226 கிராம் (8 அவுன்சஸ்) நிறை கொண்ட இரண்டு தாய்ப்பால் 'பாக்கெட்டுகளை' அவர்கள் பயன்படுத்துகிறார்.

"என் வாழ்வின் மிகவும் சிறந்த தோற்றத்தில் நான் தற்போது இருக்கிறேன்," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"தசை வளர்ச்சிக்கு இது பெரிய அளவில் உதவுகிறது. 8 வாரங்களில் என்னுடைய தசை வளர்ச்சி மேம்பட்ட அதே நேரத்தில் உடல் எடையும் எனக்கு குறைந்தது," என்று அவர் தெரிவிக்கிறார்.

தாய்ப்பாலை தன்னுடைய உணவில் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்த காலத்தில் இருந்து அவருக்கு உடல் நலக்குறைவோ, காய்ச்சலோ ஏற்பட்டதாக நினைவில்லை என்று அவர் தெரிவிக்கிறார்.

"நான் குழந்தை போலவே வளர்ந்து, குழந்தை போலவே தூங்க விரும்புகிறேன். எனவே நான் குழந்தை போலவே சாப்பிட விரும்பினேன். நான் நன்றாக உணருகிறேன். பார்ப்பதற்கும் நன்றாக இருக்கிறேன்," என்று ஜேம்சன் தெரிவிக்கிறார்.

ஆன்லைனில் வாங்குவது ஆபத்தானது!

தாய்ப்பால் அருந்துவதால் பெரியவர்களின் உடலுக்கு நன்மை கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்த அறிவியல் ரீதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் அதனால் பயன்கள் சில இருக்கின்றன என்று நிகழ்வுச் சான்றுகளை (anecdotal evidence) குறிப்பிடுகின்றனர் நிபுணர்கள்.

"தாய்ப்பாலில் அதீத புரதம் இருக்கிறது. இதனால் குழந்தையின் உடலில் தசை வளர்ச்சியானது வேகமாக இருக்கிறது. 'பாடி பில்டர்களுக்கு' இது தான் தேவை," என்று கூறுகிறார் மருத்துவர் லார்ஸ் போட். அமெரிக்காவின் சாண்டியாகோவில் அமைந்திருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மனித பால் நிறுவனத்தின் (Human Milk Institute) இயக்குநராக போட் பணியாற்றி வருகிறார்.

"பாடி பில்டர்களுக்கு அவர்களின் உடலைப் பற்றிய நல்ல புரிதல் என்பதால், அந்த பயன்பாட்டில் எதோ ஒன்று உள்ளது. இதன் பின்னால் இருக்கும் அறிவியல் என்னவென்று தெரியவில்லை," என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஆனால் முகநூல், க்ரைக்லிஸ்ட் மற்றும் ரெட்டிட் சமூக வலைதளங்கள் மூலம் வாங்கப்படும் தாய்ப்பால் எங்கிருந்து வருகிறது என்பதில் சந்தேகம் நிலவுவதால் இந்த விசயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார் போட்.

"அந்த பால் சோதனைக்கு உட்படுத்தப்படாதது. அதில் குறிப்பிடத்தக்க சுகாதார ஆபத்துகள் இருக்கலாம். எச்.ஐ.வி. மற்றும் ஹெபாடிடிஸ் போன்ற நோய்களின் தொற்று காரணிகள் அதில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன," என்று எச்சரிக்கிறார் போட்.

தாய்ப்பாலை வழங்கும் பெண்ணின் உணவுப் பழக்கவழக்கம் மற்றும் பொது ஆரோக்கியத்தைப் பொறுத்தே தாய்ப்பால் நல்லதாக இருக்கலாம். மேலும் அதில் பல தொற்றுகளுக்கான காரணிகளும் இருக்கலாம்.

முறையாக கிருமி நீக்கம் செய்யப்படாத, ஆரோக்கியமற்ற சூழல்களில் தான் பெண்கள் பெரும்பாலும் தாய்ப்பாலை 'பம்ப்' செய்து சேமித்து வைக்கின்றனர். எனவே தாய்ப்பால் எளிதில் நஞ்சாக மாறலாம்.

அமெரிக்காவில் உள்ள நேஷன்வைட் குழந்தைகள் மருத்துவமனை 2015-ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின் போது ஆன்லைனில் வாங்கப்படும் தாய்ப்பாலில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் ஆபத்தான காரணிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 101 மாதிரிகளில் 75% மாதிரிகளில் ஆபத்தை விளைவிக்கும் நோய்த்தொற்றுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 10% மாதிரிகள் மாட்டுப்பால் அல்லது குழந்தைகளுக்கு வழங்கப்படும் தாய்ப்பால் 'ஃபார்முலாக்கள்' என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தாய்ப்பால், நன்மைகள், தீமைகள் , சரிவிகித உணவு, குழந்தை வளர்ப்பு, ஆரோக்கியம், உடல்நலம், உடற்பயிற்சி

பட மூலாதாரம்,JAMESON RITENOUR

படக்குறிப்பு,ஜேம்சன் ஆன்லைன் மூலம் வாங்கிய தாய்ப்பால் பாக்கெட்டுகள்

மெலிசாவுடனான உறவில் இருந்து ஜேம்சன் வெளியேறிய பிறகு அவருக்கு தாய்ப்பால் கிடைக்கவில்லை. எனவே அவர் ஆன்லைனில் தாய்ப்பாலை வாங்க ஆரம்பித்தார்.

கெட்டுப்போன தாய்ப்பாலால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அவருக்கு போதுமான விழிப்புணர்வு அப்போது இல்லை என்று அவர் தெரிவிக்கிறார்.

"இணையத்தில் யாரோ ஒரு நபரிடம் இருந்து நான் தாய்ப்பாலை வாங்கினேன். நான் முகநூலில் அவரைப் பற்றி தெரிந்து கொண்டேன். அவர் ஒரு சாதாரண பெண்ணாகவே இருந்தார்," என்று தெரிவித்த ஜேம்சன்,"என்னுடைய வாய்ப்புகளை நான் தவறவிடக்கூடாது என்று முடிவெடுத்தேன்," என்று கூறுகிறார்.

போதுமான அறிவியல் ஆதாரம் ஏதும் இல்லாதது அவருக்கு வருத்தம் அளிக்கவில்லை. ஏன் என்று கேட்டதற்கு, அவருடைய சொந்த அனுபவம் மிகவும் நேர்மறையாக இருக்கிறது என்று கூறுகிறார்.

"நான் சந்திக்கும் அவமானங்கள் தான் நேர்மறையாக இல்லை," என்று தெரிவித்த அவர், "மக்கள் என்னை அசௌகரியமாக பார்க்கின்றனர். ஏன் என்றால் தாய்ப்பாலானது குழந்தைகளுக்கானது. ஆனால் அவர்கள் நினைப்பது போன்று அவ்வளவு மோசமானதாக இல்லை," என்று கூறுகிறார் ஜேம்சன்.

தாய்ப்பாலை பெரியவர்கள் அருந்துவது சரியா?, தாய்ப்பால் நன்மைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தாய்ப்பாலில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு அம்சங்கள் குழந்தைகளுக்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது

ஆபத்தில் இருக்கும் குழந்தைகள் என்ன ஆவார்கள்?

தாய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு எப்படி உதவுகிறது என்று ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் மருத்துவர் மேகன் அசாத், "நான் ஒரு போதும் பெரியவர்கள், தாய்ப்பாலை அருந்த வேண்டும் என்று கூற மாட்டேன்," என்று தெரிவிக்கிறார்.

"இது அவர்களுக்கு ஆபத்து விளைவுக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் உண்மையாகவே தாய்ப்பால் தேவை உள்ள குழந்தைகளுக்கு இது சாத்தியமான ஆபத்தை ஏற்படுத்தலாம்," என்று கூறுகிறார்.

மருத்துவர் போட் இது குறித்து பேசும் போது, "தேவைக்கு அதிகமாக இருக்கும் தாய்ப்பாலை லாபத்திற்காக விற்பதற்கு பதில் குழந்தைகளுக்கு நன்கொடையாக வழங்கலாம்," என்று கூறுகிறார்.

"வறுமையில் வாடும் தாய்மார்கள் ஆன்லைனில் தாய்ப்பாலை விற்பனை செய்வதன் மூலமாக பணம் ஈட்டலாம் என்று நினைத்தால், அது பெரியவர்கள் மத்தியில் தாய்ப்பாலை உணவாக எடுத்துக் கொள்ளும் அபாயத்தை அதிகரிக்கும்," என்ற உண்மையை சுட்டிக்காட்டுகிறார் மருத்துவர் அசாத்.

ஆனால் இதில் எந்த விதமான குற்ற உணர்வும் ஏற்படவில்லை என்று ஜேம்சன் தெரிவிக்கிறார்.

"பசியோடு இருக்கும் குழந்தைகளைப் பற்றி கவலைப்படும் மக்கள் என் மீது குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால் நான் ஒன்றும் மருத்துவமனைகளின் முன்பு பாலூட்டும் தாய்மார்களிடம் போய் பால் வேண்டும் என்று கேட்கவில்லை."

உண்மையில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களிடம் சுரக்கும், தேவைக்கு மிஞ்சிய தாய்ப்பாலை வழங்குவதற்காக தொடர்பு கொண்டதாக தெரிவிக்கிறார்.

சாத்தியமான சுகாதார பலன்கள்

தாய்ப்பால் இதுவரை அதிகம் ஆய்வுக்குட்படுத்தப்படாத பகுதியாகும்

"ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கிய மக்கள் நீண்ட காலமாக தாய்ப்பால் குறித்து அதிக கவனம் செலுத்தவில்லை. தேவையற்ற பெண்களின் பிரச்னையாக இதைக் கருதினார்கள்," என்று கூறிய மருத்துவர் அசாத், இது ஒரு "ஆணாதிக்கப்பார்வை," என்று குறிப்பிடுகிறார்.

ஆனால் அது மாறிவருகிறது.

தாய்ப்பால் குடிப்பதால் பெரியவர்களுக்கு ஏற்பட இருக்கும் சாத்தியமான ஆபத்துகளுக்கு மாறாக, அவர்களுக்கு ஏற்படும் கீல்வாதம், இருதய நோய், புற்று நோய் மற்றும் 'இரிட்டேடபிள் பவுல் சிண்ட்ரோம்' உள்ளிட்ட நோய்களுக்கு எவ்வாறு தாய்ப்பாலை கொண்டு சிகிச்சை அளிக்கலாம் என்று ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

தாய்ப்பால், நன்மைகள், தீமைகள் , சரிவிகித உணவு, குழந்தை வளர்ப்பு, ஆரோக்கியம், உடல்நலம், உடற்பயிற்சி

பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK

படக்குறிப்பு,உருகுவேவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் புட்டிகளில் அடைத்து சேமித்து வைக்கப்பட்டுள்ள தாய்ப்பால்

தாய்ப்பாலில் காணப்படும் ப்ரீபையோடிக் நாரிழையான எச்.எம்.ஓ-வின் (Human Milk Oligosaccharides) பலன்கள் குறித்து ஆர்வம் தெரிவிக்கிறார் மருத்துவர் ஆசாத்.

இந்த நாரிழையை மனிதர்களால் செரிமானம் செய்ய முடியாது. ஆனால் குழந்தைகளின் குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் பாக்டீரியா இந்த நாரிழையை பயன்படுத்திக் கொள்கிறது.

"ஆராய்ச்சியாளர்கள் இந்த நாரிழையை பயன்படுத்தி பெரியவர்கள் மத்தியில் குடலில் வீக்கம் மற்றும் அழற்சியை உருவாக்கும், 'அழற்சி குடல் நோய்க்கு (inflammatory bowel disease)' சிகிச்சை அளிக்க இயலுமா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு 'மைக்ரோபையோம்கள்,' மிகவும் முக்கியமானது என்று நம் அனைவருக்கும் தெரியும். எனவே குடல் பகுதியில் இருக்கும் மைக்ரோபையோம்களை மேம்படுத்த புதிய வழிகளை நாம் கண்டுபிடித்தால் அது அனைத்து வகையான நன்மைகளையும் வழங்கும். தாய்ப்பாலில் காணப்படும் எச்.எம்.ஓ நாரிழை சாத்தியமான வாய்ப்புகளை கொண்டிருப்பதாக தெரிகிறது," என்று அவர் தெரிவித்தார்.

2021-ஆம் ஆண்டு எலி மீது நடத்தப்பட்டு வெளியிடப்பட்ட ஆய்வு முடிவு ஒன்றில், ஒரே ஒரு எச்.எம்.ஓ இதயத்தில் உள்ள ஆர்ட்டரிஸில் உருவாகும், அதேரோஸ்க்லேரோசிஸ் (atherosclerosis) என்ற அடைப்பை குறைக்க உதவியதை கண்டறிந்தார் மருத்துவர் போட். இந்த அடைப்பானது மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தும்.

"தாய்ப்பாலில் உள்ள மூலக்கூறுகள் தனித்துவமானவை. மனிதர்களால் மனிதர்களுக்காக உருவாக்கப்படும் ஒரே பொருள் இது தான்," என்று குறிப்பிடுகிறார் மருத்துவர் போட்.

செயற்கை மூலக்கூறுகளைக் கொண்டு உருவாக்கப்படும் மருந்துகள் போன்றில்லாமல், தாய்ப்பால் பாதுகாப்பானது. அதிக திறனுடன் செயல்படும் தன்மை கொண்டது என்று தெரிவிக்கிறார் அவர்.

சாத்தியமான நன்மைகள் குறித்து இவர்கள் பேசினாலும், உண்மையில் ஆய்வக தரவுகள் மிகவும் குறைவாகவே உள்ளது.

மருத்துவர் போட் நம்பிக்கையுடன் இருப்பது போன்று, தற்போது நடைபெற்று வரும் ஆய்வக ஆராய்ச்சிகள் வெற்றி பெற்றால், ஆண்டுக்கு லட்சக்கணக்கானவர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட நோய்களை தடுக்கும் மிகப்பெரிய பொறுப்பை தாய்ப்பால் மூலக்கூறுகள் வகிக்கும்.

"மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கையை குறைக்க இதனால் முடியும் என்று யோசித்துப் பாருங்கள். இது மிகப்பெரிய முன்னேற்றமாக இருக்கும்," என்று மருத்துவர் போட் தெரிவிக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cvgql54g456o

இலங்கையில் மீண்டும் சிக்குன் குனியா

3 months ago

எச்.ஹுஸ்னா

நாட்டில் 2024 ஆம் ஆண்டு டெங்கு நோயினால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன்,  24 உயிரிழப்புகளும் பதிவான நிலையில் இந்த ஆண்டின் 3 மாத  நிறைவில் மட்டும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறான சூழலில் டெங்கு நோயினால் மக்களும் டெங்கு நோயாளர்களினால் வைத்தியசாலைகளும் திண்டாடிவரும் நிலையில், டெங்குவின் குடும்பத்தை சேர்ந்த சிக்குன் குனியாவும் தற்போது ஜோடி சேர்ந்து மக்களை மிரட்டத் தொடங்கியுள்ளது.

இலங்கையில் நுளம்புகளால் பரவும் வைரஸ் நோயான சிக்குன்குனியா (Chikungunya) வேகமாகப் பரவி வருவதுடன்,  நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். எனவே இலங்கை முழுவதும் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருவதால், அதன் அறிகுறிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மருத்துவ ஆலோசகர் டொக்டர் அச்சலா பாலசூரிய எச்சரித்துள்ளார்.

அதேபோன்றே நாட்டின் பல நகரங்களிலும் மீண்டும் சிக்கன்குனியா நோய் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகளும்  எச்சரிக்கை விடுத்துள்ளனர். நுளம்பு பெருக்கம் காணப்படும் இடங்களை அகற்றுவதன் மூலம் மட்டுமே, சிக்குன்குனியா பரவலைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் நுளம்புகள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு இது பரவுகிறது. எனவே  சிக்குன்குனியா நோய் ஏற்படுவதற்கு ஏதுவான காரணிகளை தவிர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

ஏற்கனவே கொரோனாவின் பிடியில் சிக்கி இதுவரையில் அதன் பாதிப்புகளிலிருந்து மீண்டெழ முடியாத நிலையில் தவித்துவரும் மக்களை டெங்கு நோய் புரட்டி எடுத்துவருவதுடன், இப்போது டெங்குவுடன் சிக்குன் குனியாவும் கை கோர்த்துள்ளதால் வைத்தியசாலைகள் டெங்கு, சிக்குன் குனியா நோயாளர்களினால் நிரம்பி வருகின்றன. ஏற்கனவே டெங்கு நோய் தொடர்பில் பல தடவைகள் விளக்கமளிக்கப்பட்டுள்ளதனால் இம்முறை சிக்குன்குனியாவிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என பார்ப்போம்.

சிக்குன்குனியா என்றால் என்ன?

சிக்குன்குனியா என்பது ஆபிரிக்க மொழியான ‘மகோண்டீ’யில் (Makonde) இருந்து வந்தது. இந்தக் காய்ச்சல் வந்தவர்கள், பல்வேறு மூட்டுகளின் வலியால் அவதிப்பட்டு, வளைந்து சுருண்டு படுத்துக்கொள்வார்கள். சிக்குன்குனியா என்றால், அந்த மொழியில் ‘வளைந்துவிடுதல்’ என்று பொருள். இந்தக் காய்ச்சலின் பாதிப்பு 1779-ல் தான் முதன்முதலில் ஏற்பட்டதாக மருத்துவ நிபுணர்கள் கருதுகிறார்கள். ஆனால், இந்தக் காய்ச்சல் குறித்து முழுமையாக விளக்கி விவரித்தவர்கள், மரியன் ரொபின்சன் மற்றும் லம்ஸ்டன் ஆகியோர்தான். இவர்கள்தான், 1952இல்  மோஸாம்பிக் மற்றும் தன்ஸானியா நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட இக்காய்ச்சல் குறித்து ஆராய்ந்தார்கள். 1955ஆம்  ஆண்டு இக் காய்ச்சல் குறித்து முழுமையாக விளக்கினார்கள்.

இலங்கையில் சிக்குன் குனியா

இலங்கையைப்  பொறுத்தவரை, இவ்வகைக் காய்ச்சலின் பாதிப்பு முதன்முறையாக 1960 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது. அப்போது இலங்கை மட்டும் பாதிக்கப்படவில்லை. இலங்கையுடன் சேர்ந்து பிற தெற்காசிய நாடுகளும் பாதிக்கப்பட்டன. அதன்பிறகு, மீண்டும் 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் மீண்டும் இலங்கையில் இந்தக் காய்ச்சலின் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பின்னர்  2005, 2006 மற்றும் 2010 ஆம் ஆண்டு வரை இதன் தாக்கம் தொடர்ந்த்து. ஆனால், 2011 ஆம்  ஆண்டில் இருந்து இதன் தாக்கம் பெருமளவு குறைந்துவிட்டது. தற்போது மீண்டும் இலங்கையில் பரவத் தொடங்கியுள்ளது

 எப்படிப் பரவுகிறது?.

இந்த சிக்குன்குனியா காய்ச்சலையும் டெங்குவைப் பரப்பும் ஏடீஸ் வகை பெண் நுளம்புகள்தான் பரப்புகின்றன. எங்கெல்லாம் டெங்கு பரவும் வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் சிக்குன் குனியாவும் பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக ஏடிஸ் ஈஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் இன நுளம்புகள் ஏற்கனவே வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரை கடித்து விட்டு இன்னொருவரை கடிக்கும்போது வைரஸ் பரவுகின்றது. இந்தக் காய்ச்சல் சிக்குன்குனியா (CHIK-V) வகை வைரஸ் வகையால் ஏற்படுகிறது. இந்த வைரஸில் இரண்டு உள்பிரிவுகள் உள்ளன. ஒன்று, ஆசிய பிரிவிலும், மற்றொன்று ஆபிரிக்கா பிரிவிலும் காணப்படுகிறது. இது ஒரு ஆர்.என்.ஏ. வைரஸ் வகை. டோகோ வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்த வைரஸ், ஆரம்பத்தில் தசைகளிலும் மூட்டுகளிலும் பெருகுவதால்தான் மனிதர்களுக்குப் பல்வேறு தொந்தரவுகளும் ஏற்படுகின்றன. இவை 60 முதல் 70 நானோமீட்டர் அளவு கொண்டவை. கோள வடிவத்தில் காணப்படும். நுளம்பு  கடித்த 3 முதல் 7 நாள்களுக்குள் நோயாளிக்கு சிக்குன்குனியா காய்ச்சல் ஏற்படும்.

பாதிப்புக்கள் என்ன?

காய்ச்சல், மூட்டுவலி இருக்கும். உடல் வலி, தலைவலி, மூட்டுகளில் வீக்கம் ஏற்படும். சிலருக்கு டெங்கு போல், தோல் சிவந்து போகலாம்.  சிலருக்கு வாந்தி, குமட்டல் ஏற்படலாம். பெரும்பாலும், ஒரு வாரத்தில் காய்ச்சல் சரியாகிவிடும். ஆனால், மூட்டுவலி, தசைவலி இரண்டும் பல மாதங்கள் வரைகூட நீடிக்கலாம். தாங்க முடியாத உடல்வலி, தசைவலி, மூட்டுவலி மற்றும் வீக்கம்தான் இக் காய்ச்சலின்முக்கிய பாதிப்புக்கள். இவ்வகைக் காய்ச்சலின் பல பாதிப்புக்கள்  டெங்கு காய்ச்சலைப் போலவே இருக்கும். மேலும், ஜிக்கா  வைரஸ் காய்ச்சலும்  இதுபோன்ற பாதிப்புக்களை  ஏற்படுத்தலாம். இதில் விசேஷம் என்னவென்றால், டெங்கு என்றாலும், சிக்குன்குனியா என்றாலும், ஜிக்கா என்றாலும், இந்த மூன்று வைரஸ் வகைகளையும் பரப்புவது ஏடீஸ் வகை பெண் நுளம்புகள் தான்.

அறிகுறிகள்

சிக்குன்குனியாவின் அறிகுறிகள் பொதுவாக ஏடீஸ் வகை பெண் நுளம்புகள் கடித்த 4 முதல் 8 நாட்களுக்குப் பிறகு தோன்றும். பொதுவான அறிகுறிகளாக அதிக காய்ச்சல்,  102°F (39°C) வரை காய்ச்சல் அடிக்கும், மூட்டு வலி,  தசை வலி,  தலைவலி,  குமட்டல் , களைப்பு,  தோல் அலர்ஜி போன்றன காணப்படும் . இந்த அறிகுறிகள் மிகப் பொதுவாக தெரிந்தாலும் வேறு பல காரணங்களாலும் உண்டாகக்கூடும், சில நாட்களுக்குத் தொடர்ந்து நீடித்தால், ஒரு மருத்துவ நிபுணரிடம் உங்களை பரிசோதனை செய்வது சிறந்ததாக அறிவுறுத்தப்படுகிறது. சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால், கண்கள் அதோடு நரம்புகள் மற்றும் இதயம் சார்ந்த சிக்கல்கள் போன்ற பெரும் பாதிப்புகளை அது உண்டாக்கலாம். வயதான நோயாளிகளில், சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால் இது இறப்புக்குக் கூட வழி வகுக்கலாம்

 எவ்வாறு தவிர்ப்பது?

நம்மால் இயன்றவரை வீடுகளுக்குள்ளும் வீடுகளுக்கு வெளியேவும் நீர் சிறிய அளவு கூட தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏடிஸ் வகை நுளம்புகள் நன்னீரில் முட்டை இட்டு குஞ்சு பொரிப்பவை. மேலும் பகலில் கடிக்கும் தன்மை கொண்டவை. குழந்தைகளுக்கு முழுக்கை சட்டை அணிவிக்கலாம். நுளம்பு வலை உபயோகித்து உறங்கலாம். நுளம்பு  எதிர்ப்பு களிம்புகளை பூசிக் கொள்ளலாம்.   அதீத காய்ச்சல் மற்றும் தீவிர மூட்டு வலி இருப்பின் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். வந்திருப்பது சிக்குன் குனியா இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே வலி நிவாரணிகளை உட்கொள்ள வேண்டும். சிக்குன்குனியா நோயில் வலி நிவாரணிகள் – ரத்தக் கசிவு தன்மையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மருத்துவப் பரிசோதனை 

நோயாளிகள் தங்களுக்கு ஏற்பட்டிருப்பது என்ன வகைக் காய்ச்சல் என்பதைக் கண்டறிய மருத்துவரை நாட வேண்டும். அவரது பரிசோதனைக்குப் பின் சில ஆய்வுக்கூடப் பரிசோதனைகளைச் செய்து சிக்குன்குனியா காய்ச்சலைப் கண்டுபிடிக்கலாம்..பொதுவாக, காய்ச்சலுக்குச் செய்யும் ரத்தப் பரிசோதனைகள்  , சிறுநீர் பரிசோதனைகள், நெஞ்சுப் பகுதி எக்ஸ்ரே ஆகிய அடிப்படைப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். மேலும், சிக்குன்குனியா பிசிஆர் பரிசோதனை மூலம் (RT – PCR – Reverse Transcriptase – Polymerase Chain Reaction) இந்தக் காய்ச்சலைப் பிற வகை வைரஸ் காய்ச்சலில் இருந்து எளிதாக அடையாளம் காணமுடியும்..சிக்குன்குனியா பிசிஆர் பரிசோதனை,  காய்ச்சல் ஏற்பட்ட 6 நாள்களுக்குள் செய்வது நல்லது. ஆறு நாள்களுக்குப் பிறகும் காய்ச்சல் இருந்தால், மேக்-எலிசா (MAC-ELISA) பரிசோதனை செய்யவேண்டி இருக்கும். இதன்மூலம், இவ்வகை வைரஸ் வகைக்கு எதிராக உருவான எதிர்ப்பாற்றல் புரதங்களை  அளவிட முடியும்.

சிகிச்சைகள்

சிக்குன்குனியா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கவும், இந்த வைரஸை அழிப்பதற்கும் இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, இவ்வகைக் காய்ச்சலுக்கும் பொதுவான சிகிச்சைகள், தொந்தரவுகளைக் குறைப்பதற்கான சிகிச்சைகள் என்ற அடிப்படையிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வகை சிகிச்சையில், நோயாளிக்கு முதலில் ஓய்வு எடுக்க வலியுறுத்தப்படுகிறது. காய்ச்சல் அதிகமாக இருந்தால், புற நோயாளியை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். அவருக்கு எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய கஞ்சி, பழரசம், இளநீர் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். இது, அவர்கள் சோர்வைப் போக்கும். வாய்வழி உணவு உட்கொள்ள முடியாமல் போனால், மருத்துவமனையில் அனுமதித்து அவர்களுக்குத் தேவையான திரவ மருந்துகள், விட்டமின் ஆகியவற்றை   குழாய்கள் வழியாகச் செலுத்தி சிகிச்சை செய்ய வேண்டும்.

தொந்தரவுகளைக் குறைப்பதற்கான சிகிச்சை. நோயாளியின் காய்ச்சல், உடல் வலியைக் குறைப்பதற்காக பரசிட்டமோல் மருந்து உட்கொள்ள கொடுக்கலாம். இந்த மருந்தை உட்கொள்ள முடியாத நிலையில், காய்ச்சலை குறைப்பதற்கான திரவ மருந்தை குழாய்  வழியாகச் செலுத்த வேண்டும்.

இதேபோன்றே, நோயாளிக்கு குமட்டல், வாந்தி ஆகியவற்றைக் குறைப்பதற்கான மருந்துகளையும் தொடர்ந்து கொடுப்பதுடன், நோயாளியின் காய்ச்சல் அளவு, நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசத் துடிப்பு, உள்செல்லும் நீர் மற்றும் வெளியேறும் நீரின் அளவு போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த நோயாளிகளுக்கும் அஸ்பிரின் (NSAIDS), பிற வலி குறைப்பான் மருந்துகளை தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே இதய நோயாளியாக இருந்து அஸ்பிரின் மருந்துகளை உட்கொள்வதாக இருந்தால், அதுகுறித்து மருந்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். சிக்குன்குனியா தொற்றுகளைத் தவிர்க்க உடல் நீர் வற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் காய்ச்சல் டெங்குவைப் போல கடுமையான வலி தொந்தரவுகளைத் தந்தாலும், உயிரிழப்பு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதுதான் ஆறுதல் தரும் விஷயம்.

சிக்குன் குனியா தொடர்பில் பொது மருத்துவர் டொக்டர் பரூக் அப்துல்லா கூறுகையில்,

வருடம் தோறும் நுளம்புகளினால் பரவும் காய்ச்சல்களான டெங்கு, சிக்குன் குனியா போன்றவை மழை காலங்களில் கூடும் என்பது நாம் அறிந்ததே. ஆயினும் இம்முறை சிக்குன் குனியா காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ்  மரபணு மாற்றங்களுடன் வெளிப்பட்டு வருவதாக ஆய்வுகள்  தெரிவிக்கின்றன. பொதுவாக காய்ச்சல் மற்றும் தீவிர மூட்டு வலி ஆகியவற்றுடன் மட்டுமே சிக்குன் குனியா வெளிப்படும். ஆனால் இம்முறை  நரம்பியல் பாதிப்புகள் கூடவே பக்கவாதம் ஏற்படுதல் – மூக்கு கறுப்பாக மாறுதல் (இரண்டு வாரங்கள் கழித்து திரும்ப பழைய நிலைக்கு திரும்பி விடுகிறது) – கால் பாத எரிச்சல் – நுரையீரல் மற்றும் வயிற்றுப் பகுதியில் நீர் கோர்த்துக் கொள்ளுதல் – மூன்றில் ஒருவருக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்படுவது போன்ற விசித்திர புதிய அறிகுறிகளுடன் வெளிப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது என்கின்றார்.

எனவே டெங்கு. சிக்குன் குனியாவிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள வேண்டுமானால் நுளம்புகள் கடிக்காமல் தடுப்பது, நுளம்புகளை  ஒழிப்பது , சுற்றுப்புறத்தைச் சுற்றி நீர் தேங்காமல் தடுப்பது, தூய்மையாக வைத்துக்கொள்வது போன்றவைதான் ஒரே வழி.

https://thinakkural.lk/article/316681

நீங்கள் கொழுப்பைச் சுமப்பவரா?

3 months 2 weeks ago

நீங்கள் கொழுப்பைச் சுமப்பவரா?

மார்ச் 16, 2025

-கு.கணேசன்

32-9.jpg?resize=678%2C395&ssl=1

சிகரெட், பீடி, மது… இவற்றுக்கு மட்டும்தான் இதயத்தோடு தொடர்பு இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். நம் உடல் எடைக்கும் இதயத்துக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. பெற்றோரிடம் பொதுவான ஒரு குணம் உண்டு. குழந்தைகள் ஒல்லியாக இருந்தால், “Tonic எழுதிக் கொடுங்க, டொக்டர். சீக்கிரம் உடம்பு வைக்கணும்” என்று டொக்டர்களிடம் ஓடிவருவார்கள்.

“நோய் எதுவும் இல்லாமல் குழந்தை ஆரோக்கியமாக இருந்தால் போதும்; குண்டாக இருக்க வேண்டும் என்பதில்லை” என்று டொக்டர்கள் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஊடக விளம்பரங்களில் வரும் குழந்தைகளைப் போன்று தங்கள் குழந்தைகளும் குண்டு குண்டாக இருந்தால்தான் அழகு, ஆரோக்கியம்!

அதே பெற்றோர், குழந்தை பருவ வயதுக்கு வந்த பிறகு ஒல்லியாகிவிட வேண்டும் என்பார்கள். “என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான், டொக்டர். எப்பவும் எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கான். ஏதாவது மருந்து கொடுத்து உடம்பைக் குறைங்க” என்று மறுபடி டொக்டரிடம் வருவார்கள்.

அதிலும் பெண் குழந்தையாக இருந்தால் இந்தப் பரபரப்பு அதிகமாகிவிடும். குழந்தை குண்டாக இருப்பதால் வரக்கூடிய திருமணத் தடை, கேலி, கிண்டல் போன்ற சமூகக் கவலைகள் பெற்றோருக்கு அதிகரித்துவிடும். அதேநேரம், உடல் எடை அதிகமானால் சமூகக் கவலைகளைத் தாண்டி மருத்துவரீதியாகக் கவலைப்படுவதற்கும் நிறைய காரணங்கள் இருக்கின்றன.

மறந்துபோகும் திசுக்கொழுப்பு:

மை இல்லாமல் பேனாவால் எழுத முடியாது. அது மாதிரிதான், கொழுப்பு இல்லாமல் நம்மால் வாழ முடியாது. அதேநேரம், வெள்ளைத்தாளில் பேனாமை கொட்டிவிட்டால் பார்க்கச் சகிக்காது. அது மாதிரிதான், கொழுப்பின் அளவு கூடினாலும் அது தரும் ஆரோக்கிய ஆபத்துகளைத் தடுக்க முடியாது. கொழுப்பு என்றதும் வயிற்றுக் கொழுப்புதான் நம் நினைவுக்கு வருகிறது.

உள்ளுறுப்புகளில் உறவாடிக்கொண்டிருக்கும் உறுப்புக் கொழுப்பு அல்லது திசுக் கொழுப்பை (Visceral fat) மறந்து விடுகிறோம். குறிப்பாக, இரைப்பை, குடல், கல்லீரல், கணையம், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளைச் சுற்றித் தேவையில்லாமல் படர்ந்திருக்கிற திசுக்கொழுப்பும் நமக்கு எதிரிதான் என்பதைப் புரிந்துகொள்ளத் தவறுகிறோம்.

கொழுப்பைச் சுமப்பவர் யார்?

உடலில் கொழுப்பு கூடுகட்டுவதைப் பொறுத்து நம் உடல் அமைப்பை ‘Apple, pear, inverted triangle, ruler, hour-glass’ என ஐந்து வகையாகப் பிரிக்கிறது நவீன மருத்துவம். இவற்றில் நான்காவது வகையினர்தான் (Ruler) சரியான உடல் அமைப்பைப் பெற்றவர்கள்; தலையிலிருந்து பாதம்வரை அளவெடுத்து வடித்த சிலை மாதிரி இருப்பவர்கள். அதாவது, தேவை இல்லாமல் கொழுப்பைச் சுமக்காதவர்கள். மற்றவர்கள் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் உடலில் கொழுப்பைச் சுமப்பவர்கள்தான் (Obesity). இவர்களில்கூடக் கொழுப்பை வயிற்றில் சுமக்கிறார்களா, இடுப்பில் சுமக்கிறார்களா என்பதுதான் முக்கியம்.

ஏனெனில், இடுப்பில் கொழுப்பு சேருகிறவர்களுக்குத்தான் இதய நோய்க்கும் சர்க்கரை நோய்க்கும் அதிகச் சாத்தியம் இருப்பதாகச் சமீபத்திய ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. ‘இடுப்பின் அளவு அதிகரித்தால் வாழும் நாள் குறைந்துவிடும்’ (Increase in waist line will decrease the life line) என்கின்றன இந்த ஆய்வுகள். இதனால்தான் இப்போதெல்லாம் “வயிற்றில் சேரும் கொழுப்பை மட்டும் பார்க்காதீர்கள்; உங்கள் இடுப்பின் அளவையும் கவனியுங்கள்” என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.

33-11.jpg?resize=450%2C453&ssl=1

உங்கள் எடை சரியா?

மருத்துவத்துறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் உயரத்துக்கு இருக்க வேண்டிய சராசரி எடை அளவு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. அதைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு கணக்கு இருக்கிறது: ஆண்களுக்கு: உயரம் சென்ரி மீட்டரில் மைனஸ் 100. பெண்களுக்கு: உயரம் சென்ரி மீட்டரில் மைனஸ் 105. உதாரணமாக, நீங்கள் ஆணாக இருந்தால், உங்கள் உயரம் 157 செ.மீ. என்றால், அதிலிருந்து 100ஐக் கழியுங்கள். 57 கிலோ கிராம் என்பது உங்கள் சராசரி உடல் எடை. இதில் 20% எடை அதிகமாக இருந்தால் அதை ‘உடல் பருமன்’ என்கிறோம்.

எது உடல் பருமன்?

ஒருவருக்கு உயரத்துக்கு ஏற்ற உடல் எடை சரியாக இருக்கிறதா என்று தெரிவிப்பதற்கு மூன்றெழுத்துச் சமன்பாடு ஒன்றும் இருக்கிறது. அது தான் ‘பி.எம்.ஐ’ (BMI – Body Mass Index). அதாவது, உடல் திண்மக் குறியீடு. பி.எம்.ஐ (BMI) = உடல் எடை (கிலோ கிராமில்) / உயரம் 2 (மீட்டரில்). உலக சுகாதார நிறுவனத்தின் புதிய வழிகாட்டுதலின்படி, இந்தியர்களுக்கு ‘பி.எம்.ஐ’ அளவு 23-24.9க்குள் இருந்தால், அது அதிக உடல் எடை (Over weight); 25 இற்கும் அதிகமாக இருந்தால், அது உடல் பருமன் (Obesity). ஆனால், உடல் பருமனை இப்படிக் கணிப்பது துல்லியமானதா என்பது இப்போது விவாதப் பொருள் ஆகியிருக்கிறது.

ஏன்? என்ன காரணம்?

ஒருவருடைய ‘பி.எம்.ஐ’ அளவானது, அவருடைய தசை எடை எவ்வளவு, திசுக்கொழுப்பு எவ்வளவு என்பதைத் தெரிவிப்பதில்லை. உதாரணமாக, எடை தூக்கும் வீரருக்கு அதிக எடை இருந்தால், அதற்கு அவரது கட்டுக்கோப்பான தசைகள் காரணமாகலாம்; திசுக்கொழுப்பு காரணமாகச் சாத்தியமில்லை. இன்னொன்று, ‘பி.எம்.ஐ’ அளவு சரியாகவே இருக்கிறவர்களுக்கும் திசுக்கொழுப்பு கூடுதலாக இருக்கச் சாத்தியம் இருக்கிறது. ஒருவர் உடலில் 10% திசுக்கொழுப்பு இருப்பது இயல்பு.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) 2023 இல் மேற்கொண்ட ஆராய்ச்சியில், ஒல்லியாகவும் இருந்து, ‘பி.எம்.ஐ’ ஆரோக்கிய வரம்புக்குள் இருந்த பலருக்கும் திசுக்கொழுப்பு 20%க்கும் கூடுதலாக இருப்பது தெரிந்தது. இப்படி இருப்பவர்களுக்கு ‘டோஃபி’ (TOFI) என்று தனிப்பெயர் உண்டு. அதாவது, Thin Outside and Fat Inside. இப்படி ஒல்லியாக இருப்பவர்கள், தங்கள் ‘பி.எம்.ஐ’ அளவு சரியாக இருந்தாலும், உடல் பருமன் உள்ளவர்கள்போலவே இதய ஆரோக்கியம் காப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறது அந்த ஆராய்ச்சி.

கவனம் கோரும் ஒல்லி உடம்பு:

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஆராய்ச்சி முடிவை உறுதிப்படுத்தும் விதமாக என்னிடம் வந்தவர் 50 வயதுள்ள மந்திரமூர்த்தி. அவர் ஒல்லியாக இருப்பதால் உடலில் திசுக்கொழுப்பு சேரவும், இதயப் பிரச்சினைகள் ஏற்படவும் தனக்குச் சாத்தியம் இல்லை என்று நம்பினார். அதனால், அவரது வயதுக்குத் தேவையான உடல் பரிசோதனை எதையும் செய்துகொள்ளவில்லை. ஒரு நாள், நடு நெஞ்சில் வலிக்கிறது என்று என்னிடம் வந்தார் மந்திரமூர்த்தி. ‘இசிஜி’ (Electrocardiogram – ECG) எடுத்துப் பார்த்தேன். மாரடைப்பு பாதிப்பு அதில் தெரிந்தது. மற்ற பரிசோதனைகளையும் பார்க்கச் சொன்னேன். அவருக்கு ‘பி.எம்.ஐ’ அளவு 22.

இது இயல்பான அளவுதான். ஆனால், இடுப்புச் சுற்றளவு அதிகமாக இருந்தது. இரத்தப் பரிசோதனைகளில் அவருக்குச் சர்க்கரை நோய் இருந்தது; கெட்ட கொலஸ்டிரால் (LDL) கூடியிருந்தது; நல்ல கொலஸ்டிரால் (HDL) குறைவாக இருந்தது. இரத்த அழுத்தமும் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. ஆக மொத்தத்தில், ஒல்லியாக இருந்த மந்திரமூர்த்தி தன்னுடைய உடலைக் கவனிக்கத் தவறியதால், உடலுக்குள் பல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதை உணரத் தவறிவிட்டார். இதன் விளைவால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

சரியான நேரத்தில் கிடைத்த சிகிச்சையில் அவர் உயிர் பிழைத்தார். “ஒல்லியாக இருப்பவர்களுக்கும் கொழுப்புத்தன்மை இருக்கும்; கொலஸ்டிரால் கூடும்; சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை வரக்கூடும்; இதயம் பழுதாகிற சாத்தியமும் உண்டு” என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மந்திரமூர்த்தியை உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன்.

35-2.jpeg?resize=678%2C285&ssl=1

சரியான இடுப்புச் சுற்றளவு:

உடல் பருமனை நிர்ணயிப்பதில் ‘பி.எம்.ஐ’ பிரச்சினை ஆனதால், இப்போது இடுப்புச் சுற்றளவைக் (Waist circumference) கணிப்பது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்த அளவுக்கும் வயிற்றுக் கொழுப்பு, உறுப்புக் கொழுப்பின் அளவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

ஆகவே, இனிமேல் ‘பி.எம்.ஐ’ அளவோடு இடுப்புச் சுற்றளவையும் கவனிப்பது அவசியமாகிறது. ஆண்களுக்குச் சரியான இடுப்புச் சுற்றளவு 90 செ.மீ. பெண்களுக்கு இந்த அளவு 80 செ.மீ. இந்த அளவைத் தாண்டுபவர்களையும் உடல் பருமன் உள்ளவர்களாகவே கருத வேண்டும். இன்னும் சொன்னால், இவர்கள் இதய பாதிப்பு, சர்க்கரைநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகளைத் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை வழிகளைப் பின்பற்ற வேண்டும்.

இன்னும் 3 அளவுகள்!

‘பி.ஆர்.ஐ’ (BRI – Body Roundness Index): உங்கள் உயரம், எடை, இடுப்புச் சுற்றளவு ஆகியவற்றை, இணையத்தில் இதற்கென உள்ள கல்குலேட்டரில் பதிவேற்றினால், ‘பி.ஆர்.ஐ’ அளவைக் காண் பிக்கும். இது 4.45 – 5.46க்குள் இருக்க வேண்டும். இது 10ஐத் தாண்டினால் உடல் பருமனால் ஏற்படும் சர்க்கரை நோய், இதய பாதிப்பு, பக்கவாதம் போன்றவற்றுக்குச் சாத்தியம் உண்டு.

‘பிசிஏ’ (BCA – Body Composition Analysis): எடை பார்க்கும் இயந்திரம் போன்று இருக்கும் இந்த இயந்திரத்தின் மீது நீங்கள் ஏறி நின்றால், உங்கள் உடலுக்குள் இருக்கும் உறுப்புக் கொழுப்பு, தசைக் கொழுப்பு, வயிற்றுக் கொழுப்பு எனத் தனித்தனியாகத் திசுக் கொழுப்பின் அளவைச் சொல்லிவிடும்.

வயிற்றுப் பகுதி எம்.ஆர்.ஐ (MRI) பரிசோதனையிலும் வயிற்றுக் கொழுப்பின் அளவை அறியலாம்.

https://chakkaram.com/2025/03/16/நீங்கள்-கொழுப்பைச்-சுமப்/

உலக தூக்க தினம்: இரவு படுத்தவுடன் தூங்க பகலில் இந்த 5 உத்திகளை பின்பற்றுங்கள்

3 months 2 weeks ago

உடற்பயிற்சி, தூக்கம், உடல்நலம், உணவுப் பழக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், அமண்டா ருகேரி

  • பதவி, பிபிசி நியூஸ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

இரவு தூக்கத்திற்குப் பிறகு சுறுசுறுப்பாக உணர்வதற்கான ரகசியம், உங்களது பகல் நேரப் பழக்க வழக்கங்களில் இருந்து தொடங்குகிறது.

உங்கள் தூக்கத்தை மேம்படுத்தவும், சோர்வைக் குறைக்கவும் சில குறிப்புகள் இங்கே அளிக்கப்பட்டுள்ளன.

சோர்வாக உணர்கிறீர்களா? நீங்கள் மட்டுமே அவ்வாறு உணர்வதில்லை.

அதோடு, உங்களது தூக்கப் பழக்கத்தை எப்படி மாற்றுவது என்பது குறித்தும் நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கலாம்.

இதுகுறித்து அடிக்கடி நமக்குச் சொல்லப்படும் உத்திகள் பெரும்பாலும், இரவுநேரப் பழக்கங்களைக் குறித்தானதாகவே இருக்கும்.

அதாவது வழக்கமாக உறங்கும் நேரம், படுக்கையில் கைப்பேசியை உபயோகப்படுத்தாமல் இருப்பது போன்ற உத்திகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

ஆனால் ஒரு நல்ல இரவுத் தூக்கம் என்பது உங்கள் இரவுநேர பழக்கத்தைப் பற்றியது மட்டுமல்ல. புத்துணர்ச்சி என்பது எப்போதும் இரவில் நல்ல தூக்கத்தைப் பெறுவது மட்டும் அல்ல.

ஏனென்றால், நீங்கள் விழித்திருக்கும்போது, அந்த நாள் முழுவதும் செய்யக்கூடிய பிற விஷயங்களும் நன்கு தூங்குவதற்குப் பலனளிக்கலாம்.

உங்கள் தூக்கப் பழக்கங்களை மாற்றாமல், அதிக சுறுசுறுப்புடன் உணரவும், ஆற்றலை அதிகரிக்கவும், உங்கள் தூக்கத்தையும் மேம்படுத்தவும் உதவும் ஐந்து எளிய வழிகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

உங்கள் உடலின் இரும்புச்சத்து அளவை கவனியுங்கள்

உடற்பயிற்சி, தூக்கம், உடல்நலம், உணவுப்பழக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, உடலால் எளிதாக உறிஞ்சப்படும் ஹீம் இரும்புச்சத்து (Heme Iron) இறைச்சி, மீன் மற்றும் முட்டையில் கிடைக்கிறது

உலகளவில் மூன்று பேரில் ஒருவருக்குப் போதுமான அளவு இரும்புச் சத்து இல்லை என அறியப்படுகிறது. குறிப்பாக, பச்சிளம் குழந்தைகள் முதல் சிறுமிகள், பெண்கள் மற்றும் பருவ வயதுடைய பெண்கள், கர்ப்பிணிகள், தடகள விளையாட்டு வீரர்கள், சைவ உணவு உண்பவர்கள் மற்றும் அடிக்கடி ரத்த தானம் செய்பவர்களுக்கு இந்தக் குறைபாடு ஏற்படுகிறது.

ஆனால், இரும்புச்சத்துக் குறைபாட்டின் விளைவாக ஏற்படும் ரத்தசோகை (Anaemia) யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படக்கூடும். இதன் அறிகுறிகளில் உடல் சோர்வு மற்றும் களைப்பைத் தவிர, அமைதியின்மை மற்றும் இரவில் அடிக்கடி விழித்துக்கொள்வது போன்றவையும் அடங்கும்.

உங்கள் தூக்க பழக்க வழக்கங்களை மாற்றிய பிறகும் நீங்கள் அடிக்கடி சோர்வாக உணர்கிறீர்கள் என்றால், உங்கள் உடலில் இரும்புச்சத்தை சேமிக்க உதவும் புரதமான ஃபெரிடின் (Ferritin) அளவையோ அல்லது உடலெங்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ஹீமோகுளோபின் அளவையோ பரிசோதிக்க மருத்துவரை அணுகுவது பயனுள்ளதாக இருக்கும்.

இரும்புச்சத்துக் குறைபாடு இல்லாவிட்டாலும், ஊட்டச்சத்துக் குறைபாடுகளைத் தவிர்க்க விழிப்புடன் இருப்பது அவசியம்.

மனித உடல் எளிதில் உறிஞ்சிக்கொள்ளும் ஹீம் இரும்புச்சத்து (Heme Iron) இறைச்சி, மீன் மற்றும் முட்டையில் கிடைக்கிறது.

ஹீம் அல்லாத இரும்புச்சத்து (Non-Heme Iron) பட்டாணி வகைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளில் இருந்தாலும், வைட்டமின் சி அதிகமாக உள்ள உணவுகளை உண்ணும்போது, அவற்றையும் சேர்த்து உட்கொண்டால் அதிக பலன் கிடைக்கும்.

அதிக காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள்

உடற்பயிற்சி, தூக்கம், உடல்நலம், உணவுப்பழக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெரியளவில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில், அதிக அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுபவர்கள் நன்றாக உறங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், துரித உணவுகள் மற்றும் குளிர்பானங்களை உட்கொள்வோர் குறைவாகத் தூங்குவதாகவும், அவர்களுடைய தூக்கத்தின் தரம் மோசமாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, மத்திய தரைக்கடல் உணவுமுறையை (Mediterranean Diet) பின்பற்றுபவர்கள், அழுத்தமின்றி, நிலைத்த மற்றும் தரமான தூக்கத்தை அனுபவிப்பதையும் ஆய்வுகள் காட்டுகின்றன.

இந்த உணவுமுறையில் அதிக அளவில் காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், முழு தானியங்கள், குறைந்த கொழுப்பு உள்ள பால் பொருட்கள் அடங்கும்.

அதேநேரத்தில், இரவு ஐந்து மணிநேரத்துக்குக் குறைவாகத் தூங்கும் நபர்கள், அதிக நேரம் தூங்கும் நபர்களோடு ஒப்பிடும்போது, இரும்பு, துத்தநாகம், செலீனியம், பாஸ்பரஸ், மக்னீசியம், விட்டமின் சி, லூட்டின், செலீனியம் ஆகிய ஊட்டச்சத்துகளைக் குறைவாக உட்கொள்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் மற்றும் அதன் விளைவு ஆகியவற்றின் தொடர்பைப் புரிந்துகொள்வது எப்போதுமே கடினம்தான். குறிப்பாக ஊட்டச்சத்து மற்றும் தூக்கத்தைப் போன்ற ஆய்வு செய்வதற்குச் சிக்கலான தலைப்புகளில் இது மிகவும் சவாலானது.

இதனால், அதிகம் தூங்கும்போது மக்கள் நல்ல உணவுகளைச் சாப்பிடுகிறார்களா, அல்லது நல்ல உணவுகளைச் சாப்பிடுவதால் நல்ல தூக்கம் கிடைக்கிறதா, அல்லது இரண்டும் சேர்ந்து நடக்கிறதா என்பது பெரும்பாலான ஆய்வுகளில் தெளிவாகத் தெரியவில்லை.

உடற்பயிற்சி, தூக்கம், உடல்நலம், உணவுப்பழக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாம் சோர்வாக இருக்கும்போது, ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் விரும்புவது மட்டுமல்லாமல், அது நம்முடைய தூக்கத்தின் தரத்தையும் பாதிக்க வாய்ப்புள்ளது.

ஸ்வீடனில் 15 இளைஞர்களிடம் நடத்திய ஓர் ஆய்வில், அதிக கொழுப்பு மற்றும் அதிக சர்க்கரை கொண்ட உணவை உட்கொண்டபோது, அவர்கள் தூங்கும்போது மூளையின் அலைகளில் மாற்றம் ஏற்பட்டது மற்றும் அவர்களின் ஆழ்ந்த தூக்கத்தின் தரம் குறைந்தது தெரிய வந்தது.

பின்னர் குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்த சர்க்கரை கொண்ட ஆரோக்கியமான உணவுக்கு மாறிய பிறகு, அவர்களுடைய தூக்கத்தின் தரம் மேம்பட்டது. சில ஆய்வுகள், தினமும் ஐந்து (அல்லது பத்து) வகை காய்கறிகளை உட்கொள்வது நம் தூக்கத்தை மேம்படுத்தும் என்பதை வெளிப்படுத்துகின்றன.

உதாரணமாக, 1,000க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், அவர்கள் தினம் மூன்று வகை பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே உட்கொண்டு வந்தனர் எனத் தெரிய வந்தது.

அவர்கள் உண்ணும் காய்கறிகள், பழங்களின் அளவை அதிகரித்த பின்பு அவர்களின் தூக்கத்தின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. மூன்று மாதங்கள் கழித்து, தினமும் குறைந்தது ஆறு வகை பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொண்ட பெண்களுக்கு, (ஆண்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது) தூக்கமின்மை அறிகுறிகளைக் குறைக்கும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாகவும், தூக்கத்தின் தரம் சற்று மேம்பட்டதாகவும், சரியாக உறங்காதவர்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் வேகமாக உறங்கியதும் கண்டறியப்பட்டது.

அதே நேரத்தில், மற்றோர் ஆய்வில், வாரத்திற்கு ஐந்து முறை பச்சைக் காய்கறிகளை உட்கொள்ளும் குழந்தைகள், தங்களுக்கு அதிக ஓய்வு கிடைத்ததாகவும், தூக்கத்தின் தரம் மேம்பட்டதாகவும் தெரிவித்தனர்.

பச்சைக் காய்கறிகளில் அதிக அளவு வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால், இரும்பு போன்ற உறக்கத்தை ஆதரிக்கும் தாதுக்களை உறிஞ்சுவதை மேம்படுத்துவதால், உடலுக்கு நன்மை ஏற்படக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர்.

உடற்பயிற்சி செய்யுங்கள் (அது மாலை நேரமாக இருந்தாலும் சரி)

உடற்பயிற்சி, தூக்கம், உடல்நலம், உணவுப்பழக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உடற்பயிற்சி, தூக்கம் ஆகிய இரண்டுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டாலும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தாலும் உடற்பயிற்சி செய்வது நம்மை அதிக நேரம் நன்றாகத் தூங்க உதவுவதாக அறியப்படுகிறது.

அதற்காக நீங்கள் கற்பனை செய்யும் வகையில், அளவுக்கு அதிகமாகச் செய்ய வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக, 2015ஆம் ஆண்டில் வெளியான முக்கியமான ஒரு பகுப்பாய்வில், 66 ஆய்வுகளின் முடிவுகள் பகிரப்பட்டுள்ளன.

அதில், சில நாட்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்தாலும், மக்கள் விரைவாக உறங்கத் தொடங்கி, அதிக நேரம் உறங்கியது கண்டறியப்பட்டது. மேலும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தவர்களிடையே தூக்கத்தின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்கங்கள் பெரும்பாலும் சிறிய அளவில் இருந்தாலும், தூக்கக் குறைபாடால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பெரிதாக இருந்தது.

குறிப்பாக, தூக்கக் குறைபாட்டால் பாதிக்கப்படுவோருக்கு, உடலைச் சிறிது வியர்க்க வைக்கும் அளவுக்கு உடற்பயிற்சி செய்தால் அதிக நன்மை கிடைக்கும்.

மற்ற ஆய்வுகள், உடற்பயிற்சிகள் தீவிரமானதாகவோ அல்லது ஒவ்வொரு நாளும் வித்தியாசமாகவோ இருக்க வேண்டியதில்லை என்பதைக் குறிக்கிறது. தினமும் அல்லது வாரத்தில் ஒரேயொரு முறை உடற்பயிற்சி செய்வதைவிட, ஒரு வாரத்தில் மூன்று முறை உடற்பயிற்சி செய்வது தூக்கத்திற்குச் சிறந்த பலன்களை வழங்கும் என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மிதமான உடற்பயிற்சி, தீவிர உடற்பயிற்சியைவிட தூக்கத்திற்கு அதிக உதவியாக இருக்கும். தினமும் குறைந்தது 10 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால்கூட மாற்றத்தைக் காண முடியும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, இரவு நேரத்தில் தூங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்னர் உடற்பயிற்சி செய்வது தூக்கத்தைப் பாதிக்காது என்று மற்றோர் ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. ஆனால் உடற்பயிற்சி செய்வதற்கு வேறு நேரம் கிடைக்காதவர்களுக்கு இதுவொரு நல்ல செய்தி.

உடற்பயிற்சி தூக்கத்தை மேம்படுத்துவது மட்டுமல்ல, அது நம்மை மேலும் புத்துணர்ச்சி பெறச் செய்து, அதிக ஓய்வை உணரவும் உதவும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்வதால், உண்மையாகவே எவ்வளவு நன்றாக உறங்கினோம் என்பது குறித்துக் கவலைப்படாமல், நன்றாக உறங்கியதாக நம்மால் உணர இயலும்.

மது மற்றும் புகையிலையைக் குறைக்கவும்

உடற்பயிற்சி, தூக்கம், உடல்நலம், உணவுப்பழக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மது மற்றும் புகைப்பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்று பலர் புத்தாண்டுக்காகத் தீர்மானங்கள் எடுப்பதுண்டு. ஆனால் மது அருந்தும் அல்லது புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அதைத் திடீரென நிறுத்துவது கடினமாக இருக்கலாம்.

ஏனென்றால், முழுமையான மதுவிலக்கை மையமாகக் கொண்ட இலக்குகளைவிட நேர்மறையான பழக்க வழக்கங்களை அல்லது அளவிடக் கூடிய மாற்றங்களைச் செய்வதில் கவனம் செலுத்தும் இலக்குகள் மிகவும் வெற்றிகரமானவையாக இருக்கலாம்.

அதேபோல் இந்த ஆண்டு நீங்கள் மது அல்லது புகைப் பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட முயற்சி செய்யலாம், இது அதிக ஓய்வை உணர உதவும். புகைப் பிடிப்பது, தூங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளவும், மேலும் ஓய்வளிக்கும் 'மெதுவான அலை தூக்கத்தை' குறைக்கவும் காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேபோல், மது அருந்துவதும் தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது என்று தெரிய வந்துள்ளது. ஆனால் இதில் ஓர் எச்சரிக்கையும் உள்ளது. தூங்கச் செல்வதற்கு முன் இரண்டு அல்லது மூன்று முறை மது அருந்துவது தொடக்கத்தில் தூக்கம் வருவது போல் உணர வைக்கலாம். ஆனால், இதை மூன்று நாட்கள் (அல்லது அதற்கு அதிகமாக) தொடர்ந்தால், அந்த விளைவு எதிராக மாறுகிறது.

மேலும் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பது தூக்கமின்மை ஏற்படும் ஆபத்தைக்கூட அதிகரிக்கிறது. மற்றோர் ஆய்வில், படுக்கைக்கு முன்னால் வெறும் ஒரு கோப்பை மது அருந்துவதும் நம்முடைய தூக்கத்தின் இயல்பை மாற்றுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மது அருந்துபவர்கள் உறங்க ஆரம்பிக்கும்போது விரைவாகவும், முதல் பாதி இரவில் ஆழ்ந்த தூக்கத்தையும் பெறலாம். ஆனால் இரவின் இரண்டாம் பாதியில் அவர்கள் விழித்துவிடக்கூடும்.

அதே போல், மது அருந்துவது நமது உயிரியல் கடிகாரத்தையும் பாதிக்கக்கூடும். இது நாம் பெறக்கூடிய மொத்த தூக்கத்தின் நேரத்தைக் குறைக்கலாம் மற்றும் மூச்சுத் திணறலுடன் தொடர்புடைய தூக்கக் கோளாறுகளை மேலும் மோசமாக்கலாம்.

காலை உணவைத் தவிர்க்காதீர்கள்

உடற்பயிற்சி, தூக்கம், உடல்நலம், உணவுப்பழக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உடல் பருமனைக் குறைப்பதற்கும், ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பதற்கும் காலை உணவு உதவுமா என்ற கேள்விக்கு, பதிலாகக் கிடைக்கும் ஆதாரங்கள் குழப்பமானவையாகவே உள்ளன என்று பிபிசி ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, காலை உணவை உண்ணுதல் அல்லது தவிர்த்தல் ஆகியவை உடல் எடைக்கான விளைவுகளில் தெளிவான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று ஓர் ஆய்வு கண்டறிந்தது.

மனரீதியான விழிப்புணர்வையும் கூர்மையையும் அதிகரிப்பதில் காலை உணவின் நன்மைகள் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. 43 ஆய்வுகளின் மறு ஆய்வு ஒன்று, காலை உணவு உண்பதால் நினைவாற்றல் மற்றும் கவனம் மேம்படும் வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறது. இந்த விளைவுகள் பொதுவாகச் சிறியதாக இருந்தாலும், அவை சீரானதாக இருந்தன.

குழந்தைகளுக்கும் இது பொருந்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. காலை எழுந்த பிறகு உணவு உண்ணும் குழந்தைகளுக்குக் கவனம், நினைவாற்றல் மற்றும் முடிவெடுத்தல் திறன் மேம்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் காலை உணவு எடுத்துக்கொள்வது சோர்வைக் குறைக்க உதவக்கூடும் என்று மற்ற ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

எடுத்துக்காட்டாக, 127 மருத்துவப் பள்ளி மாணவர்களின் ஓர் ஆய்வு, காலை உணவைத் தவிர்த்தவர்களைக் காட்டிலும், காலை உணவை உட்கொண்டவர்களுக்கு சோர்வு குறைவாக இருப்பதாகக் கண்டறிந்தது.

அதேபோன்று ஒழுங்கான நேரத்தில் உணவு உண்பதும் பயனளிக்கலாம். 127 மருத்துவ மாணவர்களைப் பற்றிய ஆய்வும், தைவானில் 1,800க்கும் மேற்பட்ட பட்டதாரி மாணவர்கள் பற்றிய மற்றோர் ஆய்வும், சீரற்ற நேரங்களில் உணவு உண்பவர்கள் அதிக சோர்வாக உணர்ந்தனர் என்பதை வெளிப்படுத்துகின்றன. அதே நேரத்தில், ஒழுங்காக உணவு உண்ணும் நேரத்தைக் கடைபிடித்தவர்கள் குறைவான சோர்வை உணர்ந்துள்ளனர்.

வேறு எதுவுமே உதவவில்லை என்றால், நீண்ட நேரம் சோர்வுடன் போராடுகிறீர்கள் என்றால், வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் இரண்டு முட்டைகள் அல்லது ஒரு கோப்பைக் கஞ்சியைச் சாப்பிட நேரம் ஒதுக்குவது சோர்வைப் போக்குவதற்கான இன்னொரு எளிதான தீர்வாக இருக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crknrr3zejjo

Checked
Fri, 07/04/2025 - 06:13
நலமோடு நாம் வாழ Latest Topics
Subscribe to நலமோடு நாம் வாழ feed