<b>மரபு வழி யுத்தம் நடத்தும் திறன் புலிகளிடம் இல்லை: புதிய தளபதி சரத் பொன்சேகா </b>
[புதன்கிழமை, 7 டிசெம்பர் 2005, 03:54 ஈழம்] [கொழும்பு நிருபர்]
முழு அளவிலான மரபு வழி யுத்தத்தை நடத்தும் திறன் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இல்லை என்று சிறிலங்கா இராணுவத்தின் புதிய தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
கொழும்பு ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது:
விடுதலைப் புலிகளிடம் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான பேர்தான் வலிமையானவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் அனுபவமற்றவர்களும் சிறார்களும்தான்.
இருந்தபோதும் கௌரவமான அமைதிக்கான நாம் முயற்சிக்கிறோம். அதுதான் நமது இலக்கு. அதனால் விடுதலைப் புலிகளுடனான தொடர்புகளை மீளவும் ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
வடபகுதியில் உள்ள இராணுவத்தினரிடம், விடுதலைப் புலிகளுடனான தடைபட்டிருக்கும் தகவல் தொடர்பை உருவாக்கிப் பேச்சுக்கள் நடாத்துமாறு அறிவுறுத்தியுள்ளோம்.
போர்க்களத்தில் விடுதலைப் புலிகளுடனான எனது அனுபவத்தை அவர்கள் கணித்திருப்பார்கள். அவர்களுக்கு எதிரான ஒரு யுத்த களத்தை கூட நான் இழந்தது இல்லை.
யாழ்ப்பாண தாக்குதல்கள் போன்ற செயற்பாடுகளை விடுதலைப் புலிகள் கைவிட வேண்டும். வடக்கு-கிழக்கில் விடுதலைப் புலிகளைத் தவிர வேறு எந்த கெரில்லா குழுவும் இயங்கவில்லை.
3 ஆண்டுகளுக்கு முன்பாக வடக்கு-கிழக்கின் பாதுகாப்புப் படையின் தளபதியா நான் இருந்தபோது இத்தகைய படுகொலைகளைத் தடுக்க மேற்கொண்ட வழிமுறைகளை தொடர்ந்து உறுதியாக மேற்கொள்வேன்.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சர்வதேச சமூகம் வரவேற்ற போதும், இந்த ஒப்பந்தம் மூலம் சிறிலங்கா இராணுவத்துக்குத்தான் நட்டம். தமிழீழ விடுதலைப் புலிகளே பயனடைந்துள்ளனர். அதி உயர் பாதுகாப்பு வலயங்களினால் இடம்பெயர்ந்த 14 ஆயிரம் பேருக்கு நட்ட ஈட்டுத் தொகை வழங்கப்படும்.
http://www.eelampage.com/index10.php?cn=22305