நக்கீரன் (கனடா) அவர்களால் எழுதப்பட்ட "சோதிடப் புரட்டு" தொடர் கட்டுரையில் இருந்து...
'ஒருவன் தான் செய்யும் அற்புதங்களை ஆராய்ந்து பார்க்க அனுமதி மறுப்பவன் களவாளி, அற்புதத்தை ஆராய்ந்து பார்க்கத் துணிச்சல் இல்லாதவன் ஏமாளி, ஒன்றை ஆராய்ந்து பார்க்காது அப்படியே நம்புகிறவன் முட்டாள்" என்று சொன்னவர் வேறு யாரும் அல்ல. புகழ்பெற்ற பகுத்தறிவுவாதியும் உளவியல் வல்லுனருமான டாக்டர் ஏப்ரகாம் கோவூர்.
கோவூர் கடவுள் அவதாரங்களுக்கும், பேய், பில்லி சூனியம், மாயமந்திரம், செப்படி வித்தை செய்பவர்களுக்கு எல்லாம் சிம்மசொப்பனமாக விளங்கினார்.
கடவுள் அவதாரம் என்று கருதப்படும் சாயி பாபாவுக்கு கோவூர் சங்கிலி, மோதிரம், கடிகாரம் என்றெல்லாம் வரவழைத்துக் காட்டுகிறீர்கள, முடியுமென்றால் உங்களால் ஒரு பூசனிக்காயை வரவழைத்துக் காட்ட முடியுமா?" என்று அறைகூவல் விடுத்தார்.
கடவுள் அவதாரங்கள் என்று சொல்பவர்கள் எப்போதும் உள்ளங்கைக்குள் அடங்கக்கூடிய விபூதி, சங்கிலி, மணிக்கூடு, சிவலிங்கம் போன்றவற்றை வரவழைத்துக் காட்டுவார்களேயொழிய பூசனிக்காய் போன்ற பருமனான பொருளை வரவழைத்துக் காட்டுவது கிடையாது. காட்டவும் முடியாது.
கொஞ்சக் காலத்துக்கு முன் தில்லியில் சாயி பாபா கலந்து கொண்ட விழாவில் காற்றில் கையசைத்து ஒரு சங்கிலியை வரவழைத்தார். உண்மையில் அவரது உதவியாளர் கொடுத்த சிலைக்கு அடியில் ஒட்டப்பட்டிருந்த அந்தச் சங்கிலியை அவர் கையால் தடவி எடுத்ததை கையும் மெய்யுமாக வீடியோ கமரா காட்டிக் கொடுத்துவிட்டது. பின்னர் அந்த விழா நிகழ்ச்சியை இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதை நிறுத்தி விட்டார்கள். ஆனால் அந்தக் காட்சியை பிபிசி தயாரித்த Guru Busters என்ற குறும்படத்தில் போட்டுக் காட்டினார்கள்.
டாக்டர் கோவூர் 1978 செப்தெம்பர் 18ம் நாள் இயற்கை எய்தியபோது அவரது விருப்பத்திற்கு இணங்க அவரது கண்கள் இரண்டும் மருத்துவக் கல்லூரிக்கு கொடுக்கப்பட்டது. அவரது உடல் அவர் நீண்ட காலம் விரிவுரையாளராகப் பணியாற்றிய கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரிக்குக் (ColomboTheurstan College) கொடுக்கப்பட்டது. இவை தான் இறந்த பின்பும் தன்னால் மானிடம் (Humanity) பயன்பட வேண்டும் என்ற அவரது உயரிய சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும்.
முழு தொடரையும் படிக்க
இங்கே சொடுக்கவும்