[b]யுத்த ரீதியாக பலப்படுத்துங்கள்- அன்றாட வாழ்வுரிமையைப் பறித்து பலப்படுத்தாதீர்: இறுதி நேர்காணலில் விக்னேஸ்வரன்
சிறிலங்கா அரசானது தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமாயின் யுத்த ரீதியாக பலப்படுத்த வேண்டுமே தவிர தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாழ்வுரிமையைப் பறிக்கிற செயற்பாட்டை மேற்கொள்ளவதன் மூலம் பலப்படுத்தக்கூடாது என்று தனது படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் வ.விக்னேஸ்வரன் தனது இறுதி நேர்காணலில் கூறியிருந்தார்.
விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரலில் ஒலிபரப்பாகிய கருத்துப்பகிர்வு நிகழ்ச்சியில் நேற்று வியாழக்கிமை இரவு அவரது நேர்காணல் ஒலிபரப்பானது.
விக்னேஸ்வரனின் இறுதி நேர்காணலின் எழுத்து வடிவம்:
திருகோணமலையில் சிறிலங்கா கடற்படையினரது அத்துமீறல்கள் சம்பவங்கள் பற்றி கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்ய திருகோணமலை தமிழ் கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள், திருகோணமலை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இன்று (நேற்று வியாழக்கிழமை) சந்திப்பை மேற்கொண்டோம்.
இச்சந்திப்பின் போது திருகோணமலை மாவட்டத்தில் சிறிலங்கா கடற்படையினர் திட்டமிட்ட அடிப்படையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் செயற்படுவதானது எதிர்வரும் 19 ஆம் நாள் நடைபெற உள்ள சமாதானப் பேச்சுவார்த்தையை நிச்சமயமாக குழப்புகின்றன செயல் என்று சுட்டிக்காட்டினோம்.
கடற்படையினர் மேற்கொண்டு வரும் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களானது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றும் கண்காணிப்புக் குழுவினருக்குத் தமிழ் மக்கள் பேரவையினர் தெரிவித்தனர்.
தமிழ் மக்களினது குறிப்பாக தமிழ் மீனவர்களினது தொழில் செய்யும் உரிமையைத் திட்டமிட்ட வகையில் பறிப்பதனூடாக அவர்களது அன்றாடம் சீவிக்கும் உரிமையைப் பறிக்கின்ற காரணத்தால் ஒரு பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளனர்.
எனவே கடற்படையினர் திட்டமிட்டுச் செய்கின்ற இந்த செயற்பாடுகளை நிறுத்தாவிட்டால் இது தொடர்பில் கண்காணிப்புக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டோம்.
இது சம்பந்தமாக ஒவ்வொரு நாளும் அரசாங்கத்துக்கும் கண்காணிப்புக் குழுவின் கொழும்பு தலைமையகத்துக்கும் தெரிவித்து வருவதாக திருமலை கண்காணிப்புக் குழுத் தலைவர் எம்மிடம் கூறினார். இதற்கு முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 17 ஆம் நாளுக்கு முன்னராக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் படி கடல் வயலத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்கி தமிழ் மீனவர்கள் கடலுக்குள் சென்று சுதந்திரமாக மீன்பிடிக்கும் ஏதுவான சூழ்நிலையை உருவாக்காவிட்டால் மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த உத்தேசித்துள்ளோம். அப்போராட்டத்தின் மூலம் திருகோணமலையின் முழு இயல்பு வாழ்க்கையும் குழம்புவதாக இருந்தால் அதற்கான பொறுப்பை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டியதிருக்கும் என்பதை கடற்படையினருக்குத் தெரியப்படுத்துமாறு தமிழ் மக்கள் பேரவையினரும் தமிழ் மீனவர்கள் அமைப்பினரும் கண்காணிப்புக் குழுவினரிடம் கூறினோம்.
கடந்த 2 நாட்களாக மூதூரில் தங்கியிருந்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் இன்றுதான் (நேற்று வியாழக்கிழமை) திரும்பியிருந்தார்.
மூதூர் பிரதேசத்தில் கடற்படையினர் தொடர்ந்து நடத்துகிற தாக்குதல்களைத் தாங்கள் நேரடியாகக் கண்டதாகவும் அச்செயல்கள் தொடர்பாக அரசாங்கத்துக்கும் கொழும்பு தலைமையகத்துக்கும் முறைப்பாடு செய்திருப்பதாகவும் கண்காணிப்புக் குழுவின் தலைவர் கூறினார்.
கடற்பிரதேசம் முழுமையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகவும் தங்களது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தாங்கள் விரும்பிய வகையில் நடவடிக்கை மேற்கொள்வதை யுத்த நிறுத்த ஒப்பந்தம் தடை செய்யவில்லை என்று கடற்படையினர் கூறுவதாக கண்காணிப்புக் குழுவினர் எம்மிடம் தெரிவித்தனர்.
வடக்கு - கிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகப் பிரதேசத்தில் உள்ள நிலங்கள் மட்டுமின்றி கடற்பரப்பும் தமிழ் மக்களுக்குச் சொந்தமானதுதான். தமிழரது தாயகம் என்று சொல்லும்போது நிலத்தை மட்டுமல்ல நிலத்தைச் சுற்றிய கடற்பரப்பையும் குறிக்கிறது என்று கண்காணிப்புக் குழுத் தலைவருக்கு நான் மிகவும் தெளிவாகக் கூறினேன்.
அதற்கு பதிலளித்த கண்காணிப்புக் குழுத் தலைவர், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கடலைப் பற்றி தெளிவான விளக்கம் இல்லாத காரணத்தால் இது தொடர்பில் எம்மால் வற்புறுத்த இயலவில்லை என்றார்.
வடக்கு - கிழக்கு இணைந்த தமிழரது தாயகம் என்கிற போது நிலம் மட்டுமல்ல கடலும் சேர்ந்தது என்பதை கடற்படைக்குச் சுட்டிக்காட்டுங்கள் என்று நாம் கண்காணிப்புக் குழுவினரிடம் தெரிவித்தோம்.
திருகோணமலையில் இத்தகைய யுத்த நிறுத்த மீறல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால் எதிர்காலத்தில் சமாதானம் என்பது இல்லாது போகும்.
கடற்பிரதேசம் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கின்ற காரணத்தால் கடற்பிரதேசத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை தங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டால் ஏன் நிலப்பரப்பில் அத்துமீறிய செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்?
மட்டக்களப்பிலோ, யாழ்ப்பாணத்திலோ கடற்படையினர் சாதாரணமாக கடமையில் ஈடுபடாதபோது திருகோணமலை நகரிலிருந்து புல்மோட்டை வரை சகல கடற்பிரதேசத்திலும் கடற்படையின் ஏன் கடமைக்காக நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பக் கூறினோம்.
திருகோணமலையில் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட அடிப்படையில் தாக்குதலை மேற்கொள்வதும் திருகோணமலையில் தமிழ் மக்களை அச்சுறுத்தி வைப்பதிலும் சிறிலங்கா கடற்படை முனைப்பு காட்டுகிறது.
கடந்த காலங்களில் எங்களுக்கு நிறைய அனுபவங்கள் உண்டு.
1983, 1985, 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்களும், சொத்துக்களை எரித்தவர்களும், தமிழ் மக்களை உடல் மற்றும் உளரீதியாகவும் துன்புறுத்தியவர்களும் கடற்படையினரேதான்.
கடற்படையில் உள்ள சமாதானத்தை விரும்பாத தீய சக்திகள் வேண்டுமென்றே இந்தக் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். இதனை நாங்கள் தொடர்ந்து மெளனமாக இருந்து கொண்டு அனுமதிக்க முடியாது. இதற்கு தீர்வு காணப்படாவிட்டால் விரைவில் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்கு முடிவு செய்திருப்பதை தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறோம்.
மேலும் கடலுக்குள் செல்லும் சிங்கள மீனவர்கள் எல்லை மீறுகின்ற போது அவர்களை ஒன்றும் செய்யாமல் திருப்பி அனுப்புவதும் தமிழ் மீனவர்களை குறிவைத்துத் தாக்கி கொலை அச்சுறுத்தல் விடுப்பதானது இன ரீதியான வன்முறைச் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளோம்.
திருகோணமலை துறைமுகப் பகுதியில் சென்ற கிழமை சாலை மீன் என்ற மீன் பெருந்தொகையாக வந்தது. வாழ்வதற்கு அல்லற்படுகிற மக்கள்- அன்றாட சீவியத்துக்கு அல்லற்படுகிற மக்கள்- 10, 15 வயது சிறுவர்கள் அம்மீன்களை எடுக்கச் சென்ற போது கடற்படையினர் எதுவித காரணமுமின்றி அவர்களைத் தாக்கி உள்ளனர். ஒரு அப்பட்டமான கொடூரச் செயல் என்று குறிப்பிட்டு கடற்படையினர் தங்களது பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக கடல் வலயப் பாதுகாப்பு தடைச் சட்டத்தை அமல்படுத்த முடியாது.
சீனாவிடமிருந்தும் இஸ்ரேலிடம் இருந்தும் எல்லா நாடுகளிலிருந்தும் ஆயுதங்களையும் கப்பல்களையும் வாங்கிக் குவித்திருக்கும் அரசாங்கமானது தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமாயின் யுத்த ரீதியாக பலப்படுத்த வேண்டுமே தவிர தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாழ்வுரிமையைப் பறிக்கிற கடல்வலயத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது நியாயமாகாது என்பதைக் குறிப்பிட்டுள்ளோம்.
இது தொடர்பாக இரு நாட்களுக்குள் எமது சாதகமான பதிலைத் தராவிட்டால் ஏப்ரல் 17 ஆம் நாளுக்குப் பின்னர் தொடர் போராட்டத்தை நடத்த உத்தேசித்துள்ளோம் என்றும் கூறினோம்.
இதற்கிடையில் இன்றைய தினம் (நேற்று வியாழக்கிழமை) நிலாவெளி கடற்பிரதேசத்தில் இரு மீனவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு அதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக கண்காணிப்புக் குழுவினரிடம் நாம் கூறியது என்னவெனில், ஒரு பக்கம் சமாதானம் என்று கூறிக் கொண்டு சமாதானத்தை 100 வீதம் செயற்படுத்துவதாக ஜெனீவாவில் ஒப்புக்கொண்டு வந்துவிட்டு 10 வீதத்தைக் கூட அமல்படுத்தாமல் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை என்று விடுதலைப் புலிகளை அழைப்பது ஏமாற்றுச் செயல். இதை நாங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
எதிர்காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தை தொடர வேண்டுமாயின் எஞ்சியுள்ள நாட்களுக்கு இடையிலாவது ஜெனீவாவில் ஒப்புக்கொள்ளப்பட்ட விடயங்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றத் தவறுமாயின் பேச்சுவார்த்தை நீடிக்குமா என்பது ஐயத்துக்குரிய விடயம். அவ்வாறான நிலை ஏற்படுமெனில் அதற்கு குறிப்பாக சிறிலங்கா கடற்படையினரே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினோம் என்று அதில் விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.
http://www.eelampage.com/?cn=25332