[b]ஜோதிகாவைச் சூர்யா திருமணம் செய்கிறார்
பத்திரிகைகளின் வாய்க்குச் சர்க்கரைதான் போடவேண்டும். சூர்யா ஜோதிகா காதல் ஜோதிகாவைச் சூர்யா திருமணம் செய்கிறார் இது போன்ற செய்திகள் அடிக்கடி வருவதும்... அதை சூர்யாவும் ஜோதிகாவும் மறுப்பதும் நீண்ட நாட்களாகவே வாடிக்கையாக இருந்து வந்தது. அந்தச் செய்திகள், இப்போது உண்மையாகிவிட்டன.
இந்த கிசு கிசு செய்திகளுக்கு நடிகர் சூர்யா, ஐதராபாத்தில் அளித்த பேட்டியில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அங்கு அவர் கூறியதாவது:
தமிழில் நான் நடித்த கஜினி படம், தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு இங்கும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஐதராபாத்தில் ரசிகர்களுடன் ரசிகராக தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்ப்பதற்காகவே வந்தேன். கஜினி படத்தை ரசிகர்கள் மிகவும் ஆரவாரமாகக் கைதட்டி ரசித்தார்கள்... ரசிகர்களுடன் உட்கார்ந்து நானும் படத்தை ரசித்தது, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இது தனிப்பட்ட நபருக்கு கிடைத்த வெற்றி அல்ல; படக் குழுவுக்கே கிடைத்த வெற்றி. எங்கள் படக்குழுவின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. இயக்குநர் முருகதாஸ் ஆலோசனைப்படி படம் உருவானது.
கஜினி படம் 5 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்டோபர் ஜோலன் இயக்கத்தில் ஆங்கிலத்தில் வந்த மெமண்டோ படத்தின் மறுபதிப்பு என்பது முழுவதும் உண்மையல்ல. கதாநாயகன் நினைவு இழக்கும் விஷயம் மட்டும் அந்தக் கதையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள கதை முழுவதும் நமது ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டிருக்கிறது.
சந்திரமுகி, அந்தியன் படங்களைத் தொடர்ந்து கஜினி படமும் தெலுங்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்துடன் ரசிக்கிறார்கள். கஷ்டப்பட்டு வேலை செய்வதை விட இஷ்டப்பட்டு வேலை செய்தால் முன்னேறலாம் என்ற வசனம், தமிழ் ரசிகர்களைப் போல் தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது.
டைரக்டர் பாலா இயக்கத்தில் நான் நடித்த நந்தா படம்தான் என் திரை உலக வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படுத்திய படம். அதன் பிறகு வந்த, பிதாமகன், மௌனம் பேசியதே, காக்க காக்க, என்று எல்லா படங்களுமே வெற்றிப் படங்கள்தான். ஒவ்வொரு படத்தின் வெற்றியும் எனக்கு ஒரு புதிய பாடத்தை கற்றுத் தந்திருக்கிறது.
ஆறு என்ற படம் அடுத்து வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் எனது பெயர் ஆறுமுகம். அதைச் சுருக்கி ஆறு என்று வைத்திருக்கிறார்கள். இதில் என் ஜோடியாக திரிஷா நடிக்கிறார். நல்ல கதை கிடைத்தால் தெலுங்கில் நேரடியாக நடிப்பேன்.
நான் ஜோதிகாவுடன் நடிக்க இருக்கும் ஜில் என்று ஒரு காதல் படத்தின் சில காட்சிகளின் படப்பிடிப்பு ராஜ முந்திரியில் நடக்க இருக்கிறது. என் உறவினர் இந்தப் படத்தை எடுக்கிறார். ஜோதிகாவுடன் என் திருமணம், அடுத்த ஆண்டு நடைபெறலாம். என் தங்கை திருமணம், வருகிற 13ஆம் தேதி நடைபெறுகிறது. அதன் பிறகுதான் எனது திருமணம் பற்றி யோசிப்பேன்.
இவ்வாறு சூர்யா கூறினார்.
www.sify.com
<b> .. .. !!</b>