சுராவின் மறைவு ஒரு மரணத்தைபற்றிய எல்லா சம்பிராதயமான சொற்களையும் கலைத்துவிடகூடியதாக இருக்கிறது. ஒரு எழுத்தாளராகவும் ஆசானாகவும் நண்பராகவும் பத்தாண்டுகளுக்கும் மேலாக சுந்தர ராமசாமியிடம் கொண்டிருந்த ஆழமான உறவின் மீது இந்த மரணம் ஒரு கொடுங்கனவைப்போல படர்ந்துகொண்டிருக்கிறது. அவை வெறும் நினைவுகளோ ஒரு ஆளுமையைப் பற்றிய பதிவுகளோ அல்ல. சுந்தரராமசாமியின் வழியாக உருவாகிவந்த ஒரு தலைமுறைப் படைபாளிகளில் ஒருவன் என்ற முறையில் இந்த மரணத்தை எப்படி நிராகரிப்பது, ஒப்புக் கொள்ள மறுப்பது என்பதுதான் என்னுடைய பிரச்சினை.
இளம்பிராயத்தில் ஜே.ஜே சிலகுறிப்புகளைப் படித்து மனப் பிறழ்வுக்கு ஆளானவர்களில் நானும் ஒருவன். ஜே.ஜே உருவாக்கிய நிம்மதியின்மைகளும் கேள்விகளும் அன்றாட வாழ்வில் என்னுடைய சகஜமான இருப்பை நிலை குலைய வைத்தன. அந்த நிம்மதியின்மையோடு சுராவை போய்பார்த்தேன். இளைஞர்களிடம் அவர் பாராட்டிய தோழமை உணர்வு மகத்தானது. சொல்வதைக் காட்டிலும் அவர் கேட்பவராக இருந்தார். அறிவுறுத்துவதைக் காட்டிலும் புரிந்துகொள்ள விரும்புபவராக இருந்தார். எப்போதும் இது அவருடன் ஒரு இணக்கத்தையும் நம்மைப் பற்றிய பதட்டத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது.
அவர் தொடங்கி இடைநிறுத்திய காலச்சுவடு இதழ் மீண்டும் தொடங்கப்பட்டபோது அதன் ஆசிரியர் குழுவில் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இது சுமார் பத்தாண்டுகாலம் சுராவுடன் தீவிரமான பரிமாற்றங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்தது. இந்தச் சந்தர்ப்பம் எனது மொழியை சிந்தனையை மனோபாவத்தை கடுமையாக பாதித்தது. நான் அவருடைய ஆளுமையால் தீவிரமாக ஆக்கரமிக்கப்படுபவனாகவும் எனக்குள் அதை சிலசமயம் எதிர்த்துப் போராடுபவனாகவும் இருந்திருக்கிறேன்.
சுமார் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக சுரா ஒரு இயக்கமாக இருந்தார். தமிழ் வாழ்வில் சிறுமைகள் குறித்த கண்டங்களும் கேள்விகளும் அவரது எழுத்துக்களின் அடிப்படை நீரோட்டமாக இருந்திருக்கிறது. இந்தக் கேள்விகளை அவர் ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. பல எழுத்தாளர்கள் தங்கள் வாழ்வில் செய்துகொள்ள நேர்ந்த சமரசங்கள் எதையும் சுரா செய்துகொள்ள நேரவில்லை.
தமிழில் மிகவும் அதிகமாக விமர்சிக்கப்பட்ட எழுத்தளாராக சுந்தர ராமசாமியைத்தான் குறிப்பிட முடியும். இலக்கியம் சார்ந்த காரணங்களைவிட இலக்கியம் அல்லாத காரணங்களுக்காவே அவர் பெரிதும் விமர்சிக்கப்பட்டிருக்கிரார். எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. ஆனால் சுரா தனது அரசியலையும் நம்பிக்கைகளையும் தெளிவாக முன்வைத்தார். அதனாலே அவரை விமர்சிப்பவர்களுக்கான ஆயுதங்களை அவரே எப்போதும் வழங்கினார். ஆனால் அவருடைய எல்லா சிந்தனைகளும் செயல்பாடுகளும் ஒரு வெட்ட வெளியில் மூட்டப்பட்ட நெருப்பைப் போல சில சமயம் புகைந்துகொண்டும் சில சமயம் எரிந்துகொண்டும் இருந்தன.
சுரா தமிழில் மூன்று தலைமுறை படைப்பாளிகளை பாதித்திருக்கிறார். அவர் இலக்கியத்தில் உருவாகிய சில மதிப்பிடுகளும் சமூகத்தைப் பற்றிய விமர்சனங்களும் பல்வேறு விவாதங்களை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அவரது கேள்விகள் தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கும். இந்த கேள்விகள் சில சமயங்களில் சுராவைப் பற்றிய கேள்விகளாகவும் பல சமயங்களில் நம்மைப் பற்றிய கேளிவிகளாகவும் இருப்பது தவிர்க்க இயலாது.
சுரா ஒரு யுகத்தின் அடையாளம். அந்த யுகம் மறைந்துகொண்டிருக்கிறது. அது தன்னுடன் சுராவையும் எடுத்துசெல்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அவரது மரணம் சந்திப்பதற்கு கடினமானதாகவும் ஒரு உறைபனியைப்போல சருமத்தை துளைப்பதாகவும் இருக்கிறது.
சுராவின் மரணம் சட்டென ஒரு இடைவெளியை உருவாக்கிவிட்டது. அதைக் கடப்பது அவ்வளவு எளிதாக இல்லை.
<b>மனுஷ்ய புத்திரன்</b>ht
tp://uyirmmai.blogspot.com/2005/10/blog-post_16.html