மகேஸ்வர மகிமை!
நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி யிருக்கின்றார் அமைச்சர் மகேஸ்வரன்.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான அரசியல் சகவாழ்வு நெறிமுறை பிரச்சினைக்கு உள்ளாகி, அரசியல் நெருக்கடி உருவாகி, நாடாளுமன்றம் கலைக்கப்படலாம். பொதுத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படலாம் என்ற ஊகங்கள் கிளம்பியபோதே இத்தகைய வாய்ச்சவடால் பரபரப்புகள் எதிர்பார்க்கப்பட்டவைதான். அவற்றை அரங்கேற்றுவதற்கு வாய்ப்புக் கிடைப்பதற்காகக் காலதாமதமாகியிருக்கின்றது. அவ்வளவே.
வடக்கு - கிழக்கு தமிழ்மக்களின் புனரமைப்புக்குப் பொறுப்பாக ஒரு தமிழரை நியமிக்கவில்லை. அமைச்சரவையில் இலங்கைத் தமிழர்ஒருவருக்குக்கூட இடமளிக்கவில்லை. - என்று அமைச்சர் மகேஸ்வரனின் குற்றச்சாட்டில் கூறப்பட்ட விடயங்கள் எவையும் புதியவை அல்ல. 2001 டிசெம்பர் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய அமைச்சரவையை அமைத்தபோதே இலங்கைத் தமிழருக்கு இழைக்கப்பட்டுவிட்ட அநீதிகள் அவை.
அப்போது அவற்றையெல்லாம் தாம் ஏற்றுக்கொண்டு அங்கீகரித்ததால்தான் பிரதமர் ரணிலின் அரசில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரேயொரு இலங்கைத் தமிழரான தமக்கு, பிச்சை போடுவதுபோல பிரதமர் ரணில் வழங்கிய அரைகுறை அமைச்சுப் பதவியை மகேஸ்வரன் ஏற்றுக்கொண்டார்.
அந்த அமைச்சுப் பதவியையேற்றுக் கொண்டால்தான் இந்து கலாசார அமைச்சு என்ற உயர்வுமிக்க மத அமைச்சின் கீழ் சாராயம் உற்பத்தி செய்யும் திக்கம் வடிசாலையையும் மீன் பிடித்தலோடு தொடர்புடைய வடகடல் நிறுவனத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பை அவர் மேற்கொள்ள முடிந்தது. அமைச்சுக்கள் ஒதுக்கப்பட்ட சமயத்திலேயே - அப்போதே - இலங்கைத் தமிழருக்கு வேண்டுமென்றே அநீதி இழைக்கப்பட்டமை அவருக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. இதுவரை காலமும் பல தடவைகள் இப்பத்தியிலும் திருப்பித் திருப்பி அது சுட்டிக்காட்டப்பட்டும் வந்துள்ளது.
ஆனால், அமைச்சர் மகேஸ்வரன் அவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லை. "அமைச்சர் பதவி" என்ற பந்தாவை - அது அரைகுறை அமைச்சர் பதவி என்பதைக்கூடப் பொருட்படுத்தாமல் - பாய்ந்து பிடித்துக்கொண்டார். இப் போது இரண்டு வருடம் கழித்து தேர்தல் மேகங்கள் சூழத் தொடங்கியதும் - அடுத்த தேர்தலில் தமது பிரதேசத்தில் ஆளும் தரப்புடன் இணைந்து போட்டியிடுவதற்கான சூழ் நிலை, வாய்ப்பு குன்றி வருவதை உணர்ந்ததும் - ஆளும் தரப்பை உதறுவது போன்று புதுக்கதை, புருடா விடுகின்றார் அவர் என்றே எண்ணத் தோன்றுகின்றது. அவர் இப் படித் திறந்த சோடாப் புட்டிபோல சீறி எழுவதும், அதே வேகத்தில் அடங்கிப் போவதும், அவரது இந்த இரண்டு, மூன்று வருட கால அரசியல் செயற்பாட்டில் ஒன்றும் புதுமை யான விடயங்கள் அல்ல.
நாடாளுமன்றத்தில் அதிர்வேட்டுக்களை முழங்குவதும், அரச நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் அதிரடிப் பாய்ச்சல் களை நடத்துவதும், திடீரெனப் போய் எதிர்த் தரப்பில் உள்ள ஜனாதிபதியைச் சந்தித்து, அவருடன் புகைப்படத் துக்கு போஸ் கொடுத்து, பின்னர் ஊடகங்களில் அவரை வானளாவப் புகழ்ந்து தனது கட்சித் தலைமையின் வயிற் றில் புளியைக் கரைப்பதும், இவ்வளவும் செய்துவிட்டு பின் னர் அரசுத் தலைமை சுண்டி எறியும் சலுகைகளை சுவீ கரித்ததும் அடங்கிப் போவதும் ஒன்றும் புதிய விடயங்கள் அல்ல.
கடைசியாக அவரது அமைச்சுக்குப் பிரதமர் ஒதுக்கிய பத்துக்கோடி ரூபாவோடு அடங்கிப்போயிருந்த அவர் அது முடிந்ததும் இப்போது திரும்பவும் திறந்த சோடாப் போத்த லாகியிருக்கின்றார். ஆனால், அவர் எழுப்பிய குற்றச்சாட்டுக்கள், சுட்டிக்காட் டிய விடயங்கள் எவையும் மறுக்கத்தக்கவையல்ல. முற்றும் முழுதும் சரியானவை. ஒவ்வொரு இலங்கைத் தமிழனின தும் மனதில் உள்ளதையே அவர் பிரதிபலித்திருக்கின்றார். ஆனால், அவற்றைப் பிரதிபலிப்பவரும், பிரதிபலிக்கும் நேர மும், முறையும்தான் கொஞ்சம் இடிக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அதேசமயம் சிறுபான்மை இன நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் - அதுவும் அமைச்சர் நிலையில் இருப்பவர் ஒருவர் - தமக்குச் சரியெனப்பட்டதை நாடாளுமன்றத்தில் தெரிவிப்பதற்கு அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்டதும், கேவலமாக நடத்தப்பட்டதும், அச்சுறுத்தப்பட்டதும் சகிக்கமுடியாதவை ஏற்றுக்கொள்ள முடியாதவை. அது தனி அமைச்சர் மகேஸ்வரனுக்குச் செய்யப்பட்ட அநீதி அல்ல. முழுத் தமிழினத்துக்குமே இழைக்கப்பட்ட அநீதி உரிமை மீறல். இத்தகைய சவாலை அமைச்சர் மகேஸ்வரனுடன் சேர்ந்து எதிர்கொண்டு, முகங்கொடுத்துப் போராடி, தங்கள் உரிமையை நிலைநாட்ட முழுத்தமிழ் எம்.பிக்களும் மற்றும் சிறுபான்மையின எம்.பிக்களும் மக்களும் தயாராக வேண் டும். இது விடயத்தில் அன்றையதினம் உத்வேகத்தோடு நாடாளுமன்றத்தில் நடந்துகொண்ட தமிழ் எம்.பிக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
தான் சார்ந்த அரசின் மீது தாமே குற்றச்சாட்டுக்களை அடுக்கி, அதற்கு சரியான முடிவை எடுப்பதற்குத் தாமே காலக்கெடுவையும் விதித்திருக்கும் அமைச்சர் மகேஸ்வரன் காலக்கெடு முடிவில் என்ன செய்வார்?
அரசியல் நெருக்கடி நிலவும் இச்சூழ்நிலையில் அரசியல் குழப்பங்கள் மேலும் இறுகி, தேர்தல் மேகங்கள் மேலும் சூழுமானால் அவரது முடிவு இதுதான் என்பதை இப்போதே அறுதியிட்டுக் கூறிவிட முடியும். இல்லையேல் பழைய குருடி கதவைத் திறவடி என்ற பல்லவியே மீண்டும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.
நன்றி: உதயன்
மகேசுக்கு அடிக்க சேதுக்கு வலிக்கும். வந்து புலம்புவார் பாருங்கள் <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->