தமிழர் கையைக் கொண்டே தமிழர் கண்ணைக் குத்தும் திட்டத்தைப் பொறுப்பேற்ற கதிர்காமர்
Sunday, 14 August 2005
--------------------------------------------------------------------------------
விடுதலைப்புலிகள் சமர்ப்பித்துள்ள இடைக்கால நிர்வாக அதிகாரசபை ஒரு தனிநாட்டிற்குரிய அடிப்படை நகல் வரைபு. அதனை ஏற்றுக் கொள்வது பிரச்சினைக்குரியதாக இருக்கும். என்று அமெரிக்கா வோசிங்டனில் மே 2004இல் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் ஒரேயொரு தமிழர் இவராவார்.
சிறிலங்கா முப்படையினரின் நிகழ்வுகளில் கதிர்காமர் கலந்து கொள்வதுடன், அந்நிகழ்வுகளில் பிரதம விருந்தினராகவும் கௌரவிக்கப்படுகின்றார்.
கதிர்காமரின் சகோதரரான ராஜன் கதிர்காமர் 16.11.1960 தொடக்கம் 01.07.1970 வரை சிறிலங்கா கடற்படை தளபதியாக (றியர் அட்மிரல்) கடமையாற்றியிருந்தார். இவரின் நினைவாக கடற்படையில் தலைசிறந்த மாணவருக்கான விருது வழங்கும் நிகழ்வு வருடாவருடம் கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியில் நடைபெறும். 1998ஆம் ஆண்டிற்கான இவ்விருது வழங்கும் நிகழ்வில் லகஸ்மன் கதிர்காமர் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பேசும் போது மகாபாரதத்தில் அருச்சுனனுக்கு கண்ணபரமாத்மா போதித்ததாகக் கூறப்படும் பகவத்கீதையை உதாரணம் காட்டிப் பேசியுள்ளார்.
இங்கு இவர் உரையாற்றும் போது சிறிலங்கா இராணுவத்தினரை பாராட்டிப் பேசியதுடன், அவர்களை உற்சாகப்படுத்தியும் பேசியுள்ளார். அவர் பேசிய பேச்சிலிருந்து சில பந்திகள் பின்வருமாறு:-
"ஒரு படைவீரனின் வாழ்வு இலேசானதொன்றல்ல. இராணுவத் தொழில் ஒரு விசேடமாகக் கருதக்கூடிய வாழ்க்கைமுறை. அது ஒரு ஒழுங்குக்கும், ஒழுக்கமுறைமைக்கும் அமைவான வாழ்க்கைமுறை, அது பெருமதிப்பிற்குரிய அம்சங்கள் பலவற்றிற்கு கடப்பாடு கொண்டவர்களின் வாழ்க்கை முறை. தமது தோழர்களுக்கும் அதேநேரத்தில் அரசுக்கும் விசுவாசம் காட்டி வாழும் முறை. தனிநபரின் வாழ்க்கைக்கு ஆபத்தைத் தேடித்தரும் வாழ்க்கை முறையும் அதுவே"
"சிறிலங்காவின் இராணுவம் சம்பிரதாயக் கடமைகளை நிறைவேற்றும் ஒரு அமைப்பாக இன்று இல்லை. அது போரில் ஈடுபட்டுள்ள உலகின் எந்தவொரு இராணுவத்திற்கும் சளைக்காத ஒன்று. இன்று இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டுள்ளவர்களே எதிர்காலத்தில் இராணுவத்திற்கு தலைமையேற்கப் போகிறவர்களாவர். வழிகாட்டும் தலைமையை பெறுவதற்கு விரும்பும் ஒருவர்தான் அதற்கான தகுதியைப் பெறுவதற்கு எவ்வாறான சேவையைப் புரியவேண்டுமென்பதை அறிதல் வேண்டும்."
"அண்மைக்காலங்களில் போரில் இறந்துபோன பெரும் அதிகாரிகள் மற்றும் படையினர் விடயத்தில் நாம் மிகுந்த பெருமிதமடைகின்றோம். இவர்களில் பலர் உலகின் வேறுபல நாடுகள் கூட தம்நாட்டவர் என்று அணைத்துக் கொள்ள விரும்பிய உயர் பண்புகளையும் தகுதிகளையும் கொண்டவர்களாயிருந்தனர். அவர்கள் துணிச்சல் மிக்கவர்கள், திறமைசாலிகள், எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் கனவான்களாயிருந்தனர். நான் இன்று இங்கே எடுத்துரைத்த நற்பண்புகள் யாவற்றையும் கொண்டவர்களாயிருந்தனர். இன்று பயிற்சி முடித்து வெளியேறும் அதிகாரிகள் உதாரணமாகக் கொள்ளக்கூடிய முன்னோடிகளாக அவர்கள் திகழ்ந்தனர். ஒருஅதிகாரி பேராண்மையுள்ளவராக மட்டுமன்றி பெருமதிப்பிற்குரியவராகவும் இருத்தல் வேண்டும்."
"எனது இளம் நண்பர்களே. இந்தக் கனவை அடைய நீங்கள் அனைவரும் பாடுபட வேண்டும். உங்களது கடமைகளில் வெற்றிபெற வாழ்த்துகின்றேன். நான் உங்கள் பெற்றோர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் இணைந்து உங்களுக்காக சிரத்தையுடன் பிரார்த்திப்பதுடன் நாம் நம்பிக்கை கொண்டுள்ள கடவுள் நமக்கு கருணையும் பாதுகாப்பும் வழங்குவார் என நான் நம்புகின்றேன். விரைவில் யுத்தம் முடிவடையும்."
ஆழிப்பேரலையால் பாதிப்புற்ற வடக்கு கிழக்கு பகுதியில் நிவாரணம், மீள்கட்டுமானப்பணிகளை மேற்கொள்வதற்கான பொதுக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் மிகவிரைவில் கைச்சாத்தாகும் என ஐ.நா.சபையின் 61ஆவது கூட்டத்தொடரில் பேசுகையில் குறிப்பிட்டார். அத்துடன் இந்தப் பொதுக் கட்டமைப்பிற்கு உதவி செய்யும் வெளிநாடுகளிடமிருந்து உதவி கோருவதாகவும் கூறினார்.
இந்தப் பொதுக் கட்டமைப்பு ஒரு முடிவில்லாத ஒரு கட்டுக்கதையாகவே உள்ளது. இதன்மூலம் வடக்குக் கிழக்கு பயன்பெறும் என்பது பொய்யானதே. இந்த உரையில் கதிர்காமர் குறிப்பிட்ட தரவுகள் பிழையானவை என வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
கதிர்காமர் மேற்கொண்ட அமெரிக்க விஜயத்தின் போது விடுதலைப் புலிகளைத் தடை செய்யும்படி அமெரிக்கப் பாதுகாப்புச் செயலராக இருந்த மெடலின் அல்பிறைட்டிடம் கேட்டிருந்தார். இதற்கமைவாகவே அமெரிக்கா தயாரித்த 30 அமைப்புகளைக் கொண்ட பயங்கரவாதப் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயரையும் இணைத்துக் கொண்டது.
அத்துடன் பிரிட்டனிடமும் விடுதலைப் புலிகளைத் தடை செய்யும்படி நேரடியாக கோரியிருந்தார்.
விடுதலைப் புலிகளின் நடவடிக்கையை முடக்கவும், சீர்குலைக்கவும் கதிர்காமர் மேற்கொள்ளும் தீவிர முயற்சியே காரணமென Janas Defence Weekly யின் இலங்கை ஆய்வாளரும்,ஸ்கொட்லாந்து சென்.அன்றூஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவருமான எழுத்தாளர் றொகான் குணரட்ண தெரிவித்திருந்தார்.
வன்னி மக்களுக்கு உணவு மருந்து வழங்குவதற்கான பாதை திறப்பு விடயத்தில் விடுதலைப் புலிகள் ஒத்துவராவிட்டால் எமது படையினர் வன்னிக்குள் ஊடுருவி மக்களுக்கு உதவி செய்வர் 1999 ஓகஸ்ட்டில் பத்திரிகையாளர் மாநாடொன்றில் தெரிவித்திருந்தார்.
ஐ.நா. மாநாட்டில் உரையாற்றும் போது விடுதலைப் புலிகள் சிறுவர்களை யுத்தத்தில் ஈடுபடுத்துகின்றாhர்கள் எனவும் இதை வந்து நேரில் உறுதிப்படுத்தும்படியும் ஐ.நா சிறுவர் நிதியத்தைச் சேர்ந்த விசேட பிரதிநிதியான ஒலரா ஒட்டுண்ணுவிடம் இவர் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே ஒலரா ஒட்டுண்ணு சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டார்.
மார்ச் 2005இல் BBCக்கு வழங்கிய பேட்டியொன்றில் 'இராணுவ ஆதரவு இல்லாமல் கருணாவால் எவ்வாறு தனித்தியங்க முடிகின்றது' என பேட்டியாளர் கேட்ட கேள்விக்கு 'யுத்தகளத்தில் அவர் ஒரு சிறந்த தளபதியாக செயற்பட்டவர். எனவே தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளக் கூடிய வலிமை அவரிடமிருக்கின்றது.' என்று பதிலளித்தார்.
1990களின் இறுதியில் சந்திரிகா சமாதானப் புறாவாக வேசமிட்டுத் தேர்தல் களமிறங்கி பெரும் மக்கள் ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறிய போது நாட்டின் அதிமுக்கிய பதவிகளில் ஒன்றான வெளியுறவு அமைச்சர் பதவிக்கு முன்பின் அரசியல் அரங்கில் அடிபடாத பெயருக்குரிய புதுமுகமான லக்ஸ்மன் கதிர்காமரை நியமித்த போது தமிழ் மக்கள் மூக்கில் விரலை வைத்து வியந்தே போயினர். சந்திரிகா உண்மையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்வை வழங்குவார் என்றே நம்பினர்.
ஆனால், வரலாறு வேறு விதமாகவே இந்தப் பதவி நியமனத்திற்கான காரணத்தை பதிந்து வைத்துள்ளது.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அதனைப் பயங்கரவாத நடவடிக்கையாக உலகிற்குப் பிரசாரம் செய்துள்ள சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் தமிழ் மக்களுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தவும், விடுதலைப் புலிகளைப் பூண்டோடு அழிக்கவும் ஒரு தமிழரைப் பயன்படுத்த நினைத்த சதியின் காரணமாகவே கதிர்காமரின் அந்த நியமனம் அமைந்தது.
தமிழர் கையைக் கொண்டே தமிழர் கண்ணைக் குத்தும் திட்டத்தைப் பொறுப்பேற்ற கதிர்காமர் அப்போது அமைச்சரானார்.ஜனாதிபதிக்கு விசுவாசமாக, பதவிபக்தியோடு கதிர்காமர் செயற்பட்டதன் காரணமாக ஆட்சி மாறியதும்ஜனாதிபதி அவரைத் தனது ஆலோசகராக நியமித்ததுமல்லாமல் ஒரு அமைச்சருக்கான பாதுகாப்பு உட்பட சகல வசதிகளையும் செய்து கொடுத்தார்.
சமாதானப் பேச்சுவார்த்தை காலத்திலும் ஜனாதிபதியின் குரலாக, சமாதான நகர்வுகளுக்கு எதிரான கருத்துக்களை (தெளிவாகக் கூறுவதானால் மீண்டும் ஒரு யுத்தத்தை ஆரம்பிக்கத் தூண்டும் பிரசாரங்களை) தீவிரமாக்கினார். குறிப்பாக இந்தியாவை சமாதான முயற்சிகள் மீது எரிச்சல் கொள்ள வைக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்தார்.
1950களின் நடுப்பகுதியில் இலங்கை சட்டக்கல்லூரியில் அதிதிறமைச் சித்தி பெற்ற லக்ஸ்மன் கதிர்காமர் 1950களின் இறதியில் லண்டன் சென்று ஒக்ஸ்போட்டில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பின்னரான காலத்தில் லண்டனில் வழக்கறிஞராக கடமையாற்றிய கதிர்காமர் 1970களின் ஆரம்பத்தில் உலகத் தொழிலாளர் அமைப்பின் ஆலோசகராக கடமையாற்றிய பின், அனைத்துலக அறிவுப் பிழைப்பாளர்கள் காப்புரிமை அமைப்பின் இயக்குநராக 1988 வரை கடமையாற்றினார். இக்காலகட்டத்திலான இவரது மேற்கத்தைய அனுபவத்தை சிங்களத்தின் தேவையையொட்டிப் பயன்படுத்துவதற்கான சந்திரிகாவின் எண்ணப்பாடே தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக 62 வயதில் கதிர்காமரைப் பதவியில் அமர்த்தியது.
இவ்வாறு அரசியலுக்குள் தன்னை நுழைத்துக் கொண்ட கதிர்காமர், தனது மேற்குலக அனுபவத்தைப் பயன்படுத்தி, தமிழர் தரப்பு மீதான மேற்குலகின் பார்வையை தலைகீழாக மாற்றும் நடவடிக்கையை மிகக் கச்சிதமாகத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினார். அத்துடன் சிறிலங்கா வெளிவிவகாரத் துறையின் புதிய பரிமாணத்திற்கும் வித்திட்டார்.
சிறிலங்கா விமானப்படையினரால் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மந்துவிலில் 1999ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதலில் அப்பாவிப் பொது மக்கள் உயிரிழந்ததை ஐக்கியநாடுகள் சங்கத்தின் மனித உரிமைகள் சங்கம் கண்டனம் வெளியிட்டதை எதிர்த்து கதிர்காமர் ஐ.நா.வில் நிருபர்களைச் சந்தித்துக் கண்டித்தார். 'இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதை விடுத்து, ஐக்கிய நாடுகள் தனது நடவடிக்கைகளை மலேரியா மற்றும் நுளம்பு குறித்த விடயங்களில் கவனம் செலுத்தும் விதத்தில் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்' எனவும் கூறினார்.இவ்வாறு ஐ.நா அமைப்பை கதிர்காமர் விமர்சித்தமையானது அந்நேரத்தில் பெரும் சர்ச்சைக்குரியதொன்றாக அமைந்தது.
வெளிவிவகார அமைச்சராக இல்லாது சந்திரிக்காவிற்கான ஆலோசகராகக் கடமையாற்றிய காலப் பகுதியில் தாம் பதவியில் அமர்ந்தால் சமாதான செயற்பாடுகளிலிருந்து நோர்வேயின் தலையீடு முற்றாக நீக்கப்படுமென JVP தலைவர் சோமவன்ச அமரசிங்கவிற்கு வாக்குறுதி அளித்திருந்தார்.
சமாதான முயற்சிகளில் நோர்வேயைப் புறந்தள்ளி இந்தியாவை உள்நுழைக்கும் முயற்சியில் கதிர்காமர் (மிகத் தீவிரமான இராஜதந்திர முயற்சிகளில்) ஈடுபட்டு வந்தார். அண்மைக்கால இந்திய விஜயங்களின் நோக்கங்களும் இதற்கமைவாகவே அமைந்திருந்தன. இவரின் இந்திய விஜயத்தின் போது சிறிலங்கா இந்திய பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுவது, சமாதான முயற்சியில் இந்தியா பங்குகொள்வது போன்ற கருத்துக்களே இவரால் முன்வைக்கப்பட்டன.
கதிர்காமர் தன்னை ஒரு தமிழன் என இனங்காட்டிக் கொள்வதைவிட தன்னை ஒரு சிறிலங்கன் எனக் காட்டிக் கொள்வதிலேயே முனைப்பாக இருந்து வந்துள்ளார். இது இவரை மேலும், மேலும் சிங்கள மக்களுடன் நெருக்கமானவராக ஆக்குகின்றது.
சிறிலங்கா இராணுவம் யாழ்.குடாநாட்டை 1995ஆம் ஆண்டின் இறுதியில் கைப்பற்றிய சமயம் ஐந்து இலட்சத்திற்கு மேலானவர்கள் வன்னியில் அகதிகளாக மாறி மரத்தின் கீழ் உணவின்றி வாழ்ந்தார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் ஐ.நா. செயலாளராக இருந்த éட்ரோஸ் காலி சர்வதேச சமுதாயத்தை இலங்கை தமிழர்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கும், கஸ்டத்திற்கும் உதவி புரியும்படி ஒரு இதயéர்வமான கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை இது உள்நாட்டு விடயம் எனக் கூறி நிராகரித்த பெருமை கதிர்காமருக்கே உரியது. தமிழ் அகதிகளுக்கு வெளிநாட்டவர்கள் மனிதாபிமான முறையில் உதவி புரிய வந்ததம்கூட தடுக்கப்பட்டது.
1995 ஜூலையில் நவாலி தேவாலயத்தில் குண்டுவீசி அங்கு தஞ்சம் அடைந்திருந்த மக்களை மரணமடையச் செய்வதற்குப் பொறுப்பாக இருந்த விமானப்படையின் செயலை சர்வதேசத்திற்கு செஞ்சிலுவைச் சங்கம் எடுத்துக் காட்டியது. அதற்காக அமைச்சர் கதிர்காமர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
BBC பேட்டியொன்றின் போது 'நீங்கள் ஒரு தமிழராயிருந்தும் உங்கள் நிலைப்பாடு காரணமாக தமிழ் மக்கள் மத்தியில் ஒரு துரோகியென கருதப்படுகின்றீர்களே' என நிருபர் கேட்ட கேள்வியொன்றிற்கு கதிர்காமர் பதிலளிக்கையில், 'அதனை நான் சிறிதும் பொருட்படுத்தப்போவதில்லை. இனஉணர்வினை அதிகளவில் பிரயோகிப்பது கேடானது' Ethnicity overdon is destructive- என்பது அவர் ஆங்கிலத்தில் அளித்த பதிலாகும்.
இவர் ஒரு தமிழ் மந்திரியாக இருந்தும் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை இனச் சுத்திகரிப்பு மற்றும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் பற்றி சிறிலங்காவிலோ அல்லது பிறநாட்டிலோ ஒரு சந்தர்ப்பத்திலாவது இவர் குரல் கொடுக்கவில்லை. எனவேதான் தமிழ் சமுதாயம் இவருக்கு சிறிலங்காவிலோ அல்லது பிறநாட்டிலோ ஒருவரவேற்பும் கொடுக்கவில்லை.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை முறியடிப்பதற்கு - சிதறடிப்பதற்கு எமது இதயபூமியான மணலாறு, வெலிஓயா என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அங்கு சிங்களக் காடையர்கள் குடியேற்றப்பட்டனர்.
இந்த காடையர்களின் குடியேற்றங்களை அமைப்பதில் மாலிங்க H.குணரட்ண போன்ற தீவிர சிங்கள இனவாதிகள் JR இன் மகனான ரவி ஜெயவர்த்தனவின் உதவியுடன் முன்னின்று உழைத்தனர்.
இந்தத் திட்டத்தை தாம் எவ்வாறு நடைமுறைப்படுத்தினோம் என விளக்கி விபரமாக "For a Sovereign State" எனத் தான் எழுதிய புத்தகத்தில் மாலிங்க H.குணரட்ண குறிப்பிடுகின்றார்.
இதேபாணியில் சிறிலங்காவின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தியும், விசுவாசமாக சிங்கள தேசத்திற்காக உழைத்த புலனாய்வு அதிகாரிகளான ஸேர்னி விஜேசூரிய, கப்டன் S.H.முகமட் நிலாம் போன்றவர்களை சிங்கள தேசப்பற்றாளர்களாக வலியுறுத்தியும், இதே மாலிங்க H.குணரட்ண 'Tortured Island" என்ற புத்தகத்தை அண்மையில் வெளியிட்டிருந்தார்.
இந்தப் புத்தகத்தில் 'பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் LTTE ஐ வெறுக்கின்றார்கள். அவர்கள் ஒன்றுபட்ட சிறிலங்காவிற்குள் வாழ விரும்புகின்றார்கள் என்று குறிப்பிடும் மாலிங்க H.குணரட்ண,
"LTTE ஐ எதிர்த்த தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சிங்கள பொலிஸ், ஆயுதப்படை மற்றும் அரசியல் தலைவர்கள் துரோகமிழைத்து விட்டார்கள்" என்றும் மேலும் குறிப்பிடுகின்றார்.
12.06.2005 அன்று BMICHஇல் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட கதிர்காமர் இந்த நாடு பிளவடையாது தடுத்து, நாட்டின் பிரதேச ஒருமைப்பாட்டை பாதுகாக்க தன்னால் முடிந்த எதையும் செய்யத் தயாராயிருப்பதாகவும், இந்த எழுத்தாளரை தனக்கு 40 வருடங்களாகத் தெரியும் என்றும், தாம் இருவரும் பலமணித்தியாலங்கள் ஒன்றாக இருந்து பல விடயங்கள் பற்றியும் விவாதித்ததாகவும் கூறினார்.
இந்த வைபவத்தில் உரைநிகழ்த்திய இன்னொரு தீவிர சிங்கள இனவாதியாகிய S.L.குணசேகர, 'தான் மதிப்பளிக்கும் ஒரேயொரு அமைச்சரவை அமைச்சர் கதிர்காமர்" என்று குறிப்பிட்டிருந்தார்.
சிறிலங்கா என்ற சிங்கள தேசத்திற்காக உழைத்து உயிர் நீத்த PLOTE மோகன் போன்ற தியாகிகளுக்கு காணிக்கை" என்று கூறி மேற்படி S.L.குணசேகர ABOMINATION என்ற புத்தகத்தை முன்னர் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கல்யாணி, அடானா
http://sooriyan.com/index.php?option=conte...id=2139&Itemid=