பிரிட்டன் மாறிக் கொண்டிருக்கின்றது. அதன் குடிவரவுக் கொள்கைகள் இறுக்கமாகி வருகின்றன என்ற கருத்து பிரிட்டனின் இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து வெளியாகின்றது.
லண்டன் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பின்னரே இந்த மாற்றம் நிகழத் தொடங்கியுள்ளது.
குடியேற்றவாசிகள் குறித்த சர்ச்சை கடந்த சில வருடங்களாகவே காணப்பட்ட போதிலும், ஜூலை குண்டுவெடிப்புக்கள் இதனை தீவிரப்படுத்தியுள்ளன.
பிளயர் அரசாங்கம் இது குறித்து அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளது.
அதேவேளை, பிரிட்டிஷ் மக்கள் மத்தியிலும் குடியேற்ற வாசிகள் குறித்த வெறுப்புணர்வும் அச்சவுணர்வும் அதிகரித்துள்ளன.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நாம் நினைத்துப் பார்க்காத அளவிற்கு பிரிட்டிஷ் மக்களின் உணர்வுகள் இறுக்கமடைந்துள்ளன என்கிறார் ஊடகவியலாளர் ஒருவர்.
பிரிட்டனின் ஊடகங்களுக்கும் இதில் பெரும் பங்குள்ளது. அவை குடியேற்றவாசிகள் குறித்த விடயத்தைக் கையாளும் விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பது அவர் கருத்து.
அந்த நாட்கள் முடிவடைந்து விட்டன என்கிறார் பங்களாதேஷிற்கான பிரிட்டினின் பிரதி உயர்ஸ்தானிகர் ஸ்டீபன் பிரிட்ஜெஸ்.
ஜூலை இதனை முடிவிற்கு கொண்டு வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிடுகின்றார். முன்னரும் நாம் பயங்கரவாதத்தை சந்தித்தோம் எனினும், நாம் தற்போது சந்திப்பது வித்தியாசமான தீமை என்கிறார் அவர்.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் தென்னாசிய பத்திரிகையாளர்களுக்காக அந்த நாட்டிற்கான பிரிட்டிஷ் தூதரகமும், சர்வதேச குடிப்பெயர்வு ஸ்தாபனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே, அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது;
குடிவரவும், குடிப்பெயர்வும் மிக முக்கியமான விடயங்களாக மாறி வருகின்றன. சமீபத்தைய பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில் அடைக்கலம் கோருபவர்கள் குறித்த சர்ச்சை முக்கிய இடத்தைப்பிடித்திருந்தன.
பிரிட்டனுக்கு இது குறித்த பொறுப்புணர்வு உள்ளது. பிரிட்டன் இதனை மதிக்க வேண்டும்.
பிரிட்டனின் மோர்காம் வளைகுடாவில் (More Combe Bay) மூழ்கி இறந்துபோன 19 சீன குடியேற்றவாசிகள் குறித்து அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
பிரிட்டனின் உணர்வுகளை இது புண்படுத்தியதாகவும் கடும் சீற்றத்தை உண்டுபண்ணியது.
பிரிட்டன் காலம் காலமாக காப்பாற்றி வந்த ஜனநாயக மரபுகளை இது போன்ற சம்பவங்கள் பாதித்துள்ளன.
பிரிட்டனின் மிகவும் ஆபத்தான மோர்காம் வளைகுடாவில் மீன்பிடிக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதனால் தங்கள் உயிரை பலிகொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட 19 சீன சட்டவிரோத குடியேற்றவாசிகள் குறித்தே அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
பிரிட்டிஷ் அரசாங்கம் இதுபோன்ற சம்பவங்களை அலட்சியப்படுத்த முடியாது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் அது உள்ளது.
வெளிப்படையான குடிவரவு செயற்பாடுகளை பிரிட்டன் எதிர்பார்க்கின்றது, விரும்புகின்றது.
மக்கள் தம்மிடமுள்ள அனைத்தையும் விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி ஆபத்தான சட்டவிரோத பயணங்களை மேற்கொள்ளும் நிலையை நாங்கள் விரும்பவில்லை.
இவ்வாறான சட்டவிரோத பயணங்கள் மிகவும் இரகசியமான பின்னணிகளை கொண்டிருக்கின்றன.
சீனாவின் பிரபலமான பாம்புத் தலையர்கள் எனப்படும் குழுவின் செயற்பாடுகளை (Snake Head's) பிரிட்ஜெஸ் விபரிக்கின்றார்.
ஐரோப்பாவிற்கு சீனாவிலிருந்து ஆட்களை கடத்துவதில் அல்லது சட்டவிரோதமாக கொண்டு சேர்ப்பதில் இக்குழுவினரே பிரதானமானவர்களாக உள்ளனர்.
பிரிட்டனின் டோவர் துறைமுகத்தில் வாகனமொன்றில் தக்காளி மூடைகளுக்கு மத்தியில் 58 சீன சட்டவிரோத குடியேற்றவாசிகளின் உடல்கள் சில வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டன.
பிரிட்டனை அதிரவைத்த இந்த சம்பவம் சட்டவிரோத குடியேற்றவாசிகள் மேற்கொள்ளும் பயணங்கள் எவ்வளவு தூரம் ஆபத்தானவையாக உள்ளன என்பதை சர்வதேச சமூகத்திற்கு புரிய வைப்பதாக அமைந்திருந்தது.
இது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது 58 சீனர்களும் பலியாவதற்கு காரணம் என பாம்புத் தலைவர்கள் எனப்படும் ஆட் கடத்தல் கும்பல் என்பது தெரியவந்தது.
இதுபோன்று பிரிட்டனின் மோர்காம்வளை குடாவில் 20 சீனர்கள் அடித்துச் செல்லப்படுவதற்கு பின்னாலும் இந்தக் கும்பல் உள்ளது தெரியவந்துள்ளது.
நாங்கள் இது குறித்து தீர்க்கமான முடிவுகளை எடுப்போம். அவ்வாறு தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் போது உங்களுக்கு தெரிவிப்போம்.
எனினும், குடியகல்வு முடிவிற்கு வந்துவிடாது.
ஜூலை தற்கொலை குண்டுதாரிகளுக்கு நாங்கள் விசா வழங்கவில்லை.
அவர்கள் பிரிட்டனின் இரண்டு, மூன்று தலைமுறையை சேர்ந்தவர்கள், பிரிட்டனிலேயே பிறந்து, அங்கேயே வளர்ந்தவர்கள்.
லண்டன் குண்டுவெடிப்பிற்கு பின்னர் வெளியாகும் பல கடும்போக்கான கருத்துக்கள்.
பிரிட்டிஷ் சமூகத்திலிருந்தே உருவாகின்றன.
பயங்கரவாதத்தை தூண்டுபவர்கள் ஊக்குவிப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள் அல்லது தனிமைப்படுத்தப்படுவார்கள்.
நேர்மையான சட்டபூர்வமான குடியேற்றவாசிகளுக்கு பிரிட்டனின் கதவு என்றும் திறந்திருக்கும்.
பிரிட்டனுக்கான விசாவை மறுப்பதை விட, வழங்குவது சுலபமான விடயம். வழங்குவது சுலபம் மறுத்தால் இதற்கான காரணங்களை தெளிவுபடுத்த வேண்டியிருக்கும். மேலும், விசா மறுக்கப்பட்டதற்கு எதிராக மனுத் தாக்கல் செய்யலாம்.
குடிப்பெயர்வை சுலபமாக்குவதற்காக பிரிட்டன் பல புதிய திட்டங்களை காலத்திற்கு காலம் அறிமுகப்படுத்துகின்றது.
வெளிநாட்டு தங்குமிட வேலைவாய்ப்பு விசா முறையை (ஙிணிணூடுடிணஞ் ஏணிடூடிஞீச்தூ –டிஞ்ணூச்ணœ ஙடிண்ச்) நீடிப்பது குறித்தும் பிரிட்டன் சிந்தித்து வருகின்றது.
லண்டன் குண்டுவெடிப்புகளுக்கு பிறகு பிரிட்டனுக்கு மாணவர் விசாவில் செல்பவர்கள் குறித்தும் கவனம் திரும்பியுள்ளது.
மாணவர் விசா பெற்று லண்டனுக்குள் நுழைபவர்களில் எவ்வளவு பேர் தமது கல்வியை தொடர்கின்றனர் என்பது குறித்தும் கவனம் திரும்பியுள்ளது. இதனை, கண்காணிப்பதற்கான திட்டமொன்றை பிரிட்டனின் உள்துறை அமைச்சு தயாரித்துள்ளது.
மாணவர்கள் பிரிட்டனுக்கு கல்வி கற்பதற்காக செல்வதை விரும்புகின்றோம். நாங்கள் அவர்கள் நியாயமான வழிகளில் செல்வதை விரும்புகின்றோம்.
மாணவர்கள் என வரும்போது விசா பெறுவதற்கு மொழி ஆளுமை, அங்கு தங்கியிருந்து கற்பதற்கான பண வசதிகள் போன்றவை அவசியம். விசா வழங்குவதற்கு முன்னர் நடைபெறும் நேர்முகப் பரீட்சையில் இவை குறித்தே அதிகம் கவனம் செலுத்தப்படும்.
நாங்கள் வித்தியாசமான உலகில் வாழ்கின்றோம். சுதந்திரமான குடிப்பெயர்வு அரசியல் தஞ்சம் என்பவற்றில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். நீங்கள் அதனை மாற்ற முயன்றால், நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியிருக்கும்.
http://www.thinakural.com/New%20web%20site...4/Article-1.htm