04-16-2005, 01:20 PM
இந்தியாவுடனான உறவு
சர்வதேச அரசியல் ஒழுங்கில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பதுடன் அவசியமானவையும் கூட. எந்த ஒரு கருத்தையோ அல்லது கொள்கையையோ இறுக்கமாகக் கடைப்பிடித்துக் கொண்டிருப்பது காலத்துக்கேற்ற திசையில் செல்ல முடியாத முட்டுக்கட்டை நிலை ஒன்றை ஏற்படுத்தும் என்பது சர்வதேச அரசியல் நகர்வுகளில் உணர்ந்து கொள்ளப்பட்ட ஒரு விடயம்!
ஈழப் பிரச்சினை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடும் இவ்விதம் காலத்துக்கேற்ற மாற்றத்தை உள்வாங்காத ஒன்றாகவே இருக்கின்றது. இலங்கையில் இந்தியப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் ராஜீவ் காந்தியின் படுகொலை என்ற இரண்டு முடிச்சுக்களாலும் கட்டுண்ட நிலைமையில் இந்த விவகாரம் இறுக்கமானதாக இருக்கிறது.
இந்த இறுக்கத்தைத் தளர்த்துவது காலத்தின் தேவை என்பதை இந்தியத் தரப்பினரும் விடுதலைப் புலிகளும் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் வந்திருக்கின்றது. அதேவேளையில் இரு தரப்பினரது நலன்களுக்கும் இந்த இறுக்கம் தளர்த்தப்பட வேண்டியது அவசியமானதாகும்.
இந்தப் பின்னணியில்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் விஷேட செய்தியொன்று லண்டனிலுள்ள இந்தியத் தூதரகம் ஊடாக இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்களை நோக்க வேண்டியுள்ளது. இந்தச் செய்தியை இந்தியத் தரப்போ அல்லது புலிகளின் தலைமையோ மறுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
குறிப்பிட்ட இணையத்தள செய்தியாளர் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்த பின்னர் வெளியிட்டுள்ள கட்டுரையில் முக்கியமான பல தகவல்களையும் வெளியிட்டிருக்கின்றார். லண்டனிலுள்ள விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் அங்குள்ள இந்தியத் தூதரக அதிகாரி ஒருவரைச் சந்தித்த பின்னர் வன்னி சென்று விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களையும் சந்தித்ததாக இங்கு கூறப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் லண்டன் திரும்பிய போதே பிரபாகரனின் முக்கிய செய்தியுடன் சென்றதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இந்தியாவுடனான உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வதில் தமக்குள்ள விருப்பத்தை விடுதலைப் புலிகள் நீண்ட காலமாகவே வெளிப்படுத்தி வருகின்றார்கள். இருந்த போதிலும் இவ்விடயத்தில் திட்டவட்டமான சமிக்ஞைகள் எதுவும் இந்தியத் தரப்பிலிருந்து வெளியாகியிருக்கவில்லை.
சர்வதேச அரசியலில் முரண்பாடுகள் மோதல்கள் பின்னர் சமாதானம் என்பது ஒரு வழமையான நிகழ்வு. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இறுதியாக நடைபெற்ற யுத்தத்துக்கு காரணகர்த்தா எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர் ஜெனரல் முஷாரப். அவர் பாகிஸ்தான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில்தான் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ஊடுருவலை நடத்தியது. அந்த ஊடுருவலைத் தொடர்ந்தே இரு நாடுகளுக்கும் இடையேயான இறுதி யுத்தம் இடம்பெற்றது.
அதே முஷாரப் இராணுவப் புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றி இந்தியாவுக்கும் சமாதானக் கொடியைக் காட்டினார். இந்தியாவும் செங்கம்பள வரவேற்பளிப்பதுடன் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியொன்றைப் பார்வையிடுவதற்கும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது. அரசியலைப் பொறுத்த வரையில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்ற கோட்பாட்டை இது பிரதிபலிப்பதாகக் கூறப்படுகின்ற போதிலும் சர்வதேச அரசியலில் யதார்த்தமும் அதுதான்!
அந்த யதார்த்தத்தை ஈழத் தமிழர்கள் விவகாரத்திலும் இந்தியா பிரயோகிக்க முற்படாதது பல சிக்கல்களுக்குக் காரணமாக இருந்துள்ளது. இப்போது விடுதலைப் புலிகளுக்கும் இந்தியத் தரப்புக்கும் இடையே எழுதப்படாத புரிந்துணர்வு ஒன்று ஏற்பட்டிருப்பதாகவும் இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது தமிழர்களுடைய நலன்களுக்கு விரோதமாக செயற்படுவதில்லை என இந்தியாவும் இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் செயற்படுவதில்லை என புலிகளும் உறுதியளித்திருப்பதாக இந்த இணையத்தள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தச் செய்தியில் எந்தளவுக்கு உண்மை இருந்தாலும் இரு தரப்பு நல்லுறவுகளை வளர்த்துக் கொள்வதற்கான பாதை இதுதான் என்பது மட்டும் உண்மை.
ஈழப் பிரச்சினையில் இந்தியா கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொள்ளும் தலையிடாக் கொள்கை சிங்கள ஆளும் வர்க்கத்துக்கே சாதகமாக அமைந்திருந்தது. "தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகள் நிறைவு செய்யப்படும் வகையில் இனநெருக்கடி தீர்க்கப்பட வேண்டும்" என இந்திரா காந்தி காலத்திலிருந்து கூறி வந்த இந்தியா பின்னர் - "அனைத்து இனத்தவர்களினதும் அபிலாஷைகளையும் நிறைவு செய்யும் வகையில் இன நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும்" என தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.
இந்தியாவின் இந்த மாற்றத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதிலேயே சிங்கள ஆளும் வர்க்கம் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளது. இந்திய விஸ்தரிப்பு வாதம்' பற்றி தமது இரண்டாவது புரட்சியின் போது போதித்த ஜே.வி.பி.யினர் இன்று இந்தியாவை நண்பனாக அறிவிக்கின்றனர். இந்தியாவுடனான நட்பை விரும்புவதாலல்ல இந்தியாவை தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தலாம் என்ற அவர்களுடைய ஒரே நம்பிக்கையே இதற்குக் காரணம்.
தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தைத் தொடுப்பதினால் இந்தியாவை விட இந்தியாவுக்கு எதிரான சக்திகளை அதிகளவுக்குப் பயன்படுத்தலாம் என்றால் சிங்கள ஆளும் வர்க்கம் அதனைத்தான் விரும்பும். கடல்கோளுக்குப் பின்னரான நிகழ்வுகளும் சமீபத்திய சீனப் பிரதமரின் விஜயமும் உணர்த்துவது அதனைத் தான். இலங்கை தொடர்பான இந்திய இராஜதந்திரம் இந்தச் சந்தர்ப்பங்களில் தோல்வியையே சந்தித்தது!
ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் ஸ்திரமற்ற நிலைப்பாடு - இந்திய நலன்களுக்கே பாதகமானது. இந்தியாவுக்கு எதிரான சக்திகளும் அதனை இந்திய நலன்களுக்கு விரோதமாகவே பயன்படுத்திக் கொள்ளும் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
ஈழத் தமிழர்களுடனான தன்னுடைய உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதன் மூலமாகவே பிராந்தியத்தில் தனக்கெதிரான சக்திகளை பலமிழக்கச் செய்ய முடியும் என்பதை இந்தியா இந்தச் சந்தர்ப்பத்திலாவது புரிந்து கொள்வது அவசியம்.
நன்றி: தினக்குரல்