Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டாலர் தேசம்
#8
<b>டாலர் தேசம் </b>

-பா.ராகவன்

<img src='http://www.kumudam.com/reporter/130604/pg8.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/reporter/130604/pg8-2.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/reporter/130604/pg8-1.jpg' border='0' alt='user posted image'>



ஜார்ஜ் புஷ் பதவிக்கு வந்தபோது, ‘சில காரியங்களைக் கண்டிப்பாகத் தன் ஆட்சிக்காலத்துக்குள் முடித்துவிடவேண்டும்’ என்று ஒரு லிஸ்ட் போட்டுக்கொண்டுதான் அதிபர் மாளிகைக்குள்ளே கால் எடுத்து வைத்தார். ஈராக்கில் சதாமை ஒழிப்பது என்பது அந்தப் பட்டியலில் முதலில் இடம்பிடித்திருந்த விஷயம். புஷ்ஷின் தந்தையான சீனியர் புஷ் காலத்திலேயே நடந்திருக்கவேண்டிய காரியம் அது. குவைத் யுத்தத்தைத் தொடர்ந்துஇ ‘சதாமைத் தட்டிவைக்கக் கிடைத்த வாய்ப்பை அமெரிக்கா தவறவிட்டது’ என்றே அதன் நட்பு நாடுகள் பல அப்போது சொல்லியிருந்தன. அன்றைக்கே சதாமின் ஆட்சியை ஒழிப்பது என்பதை அமெரிக்கா தன் செயல்திட்டங்களுள் ஒன்றாக வைத்திருந்திருக்குமானால் அது சுலபமான காரியமாகவே இருந்திருக்கக்கூடும். ஏனெனில் 2000_ம் ஆண்டில் சதாம் கண்டிருந்த அபாரமான வளர்ச்சிகளெல்லாம் அந்தத் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அவருக்கு இல்லை. மேலும்இ குவைத் மீது அநியாயமாக அவர் படையெடுத்துச் செய்த அழிச்சாட்டியங்கள் உலக நாடுகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. ‘இந்த மனுஷன் ஒழியமாட்டானா’ என்றுதான் பலரும் நினைத்தார்கள்.

ஆனால், சீனியர் புஷ்ஷ§க்கு குவைத்தை விடுவித்தால் மட்டும் போதும் என்று அப்போது தோன்றியது. இதற்கான காரணத்தை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். என்றாலும் சுருக்கமாக இப்போது நினைவுபடுத்திக் கொண்டுவிடுவோம்.

அமெரிக்காவின் முக்கியமான எண்ணெய் நிறுவனங்களுள் ஒன்று புஷ்ஷின் குடும்பச் சொத்து. அதிபராக புஷ் சம்பாதித்ததைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு வருமானம் சேர்க்கிற விஷயம் அது. மத்திய கிழக்கு தேசங்கள் அனைத்துமே எண்ணெய் என்னும் பொன் விளைகிற பூமிதான் என்றாலும், ஈராக்கில் அதன் வளம் மிக அதிகம். ஈராக்கின் எண்ணெய் வளத்தை அநியாயத்துக்கு இழப்பது அமெரிக்காவுக்கும் நல்லதல்ல; அதிபர் புஷ்ஷின் சொந்த நிறுவனத்துக்கும் நல்லதல்ல என்பதால்தான்இ அப்போது சதாமைப் பதவியிலிருந்து விலக்க நடவடிக்கை ஏதும் எடுக்காமல், சமர்த்துப் பையன் மாதிரிஇ குவைத்தைக் காப்பாற்றியதோடு தன் பணி முடிந்தது என்று திரும்பிவிட்டார் சீனியர் புஷ். சதாமுக்கு மாற்றாக வேறு யாராவது ஒரு புது ஷேக்கை அதிபர் நாற்காலியில் உட்கார வைத்து, அவர் சதாமைக்காட்டிலும் பேஜார் தரக்கூடியவராக இருந்துவிட்டால் என்ன செய்வது? இந்தப் பயம்தான் காரணம். சதாமை மிரட்டி உருட்டியாவது தன் காரியம் தடையின்றி நடைபெறச் செய்துவிடலாம் என்று நினைத்தார் சீனியர் புஷ்.

அப்படியன்றும் அவர் நினைப்பு அப்படியே பலித்துவிடவில்லை. சதாம் தொடர்ந்து வாலை மட்டுமல்ல; உடம்பின் அத்தனை உறுப்புகளையும் ஆட்டிக்கொண்டுதான் இருந்தார். புஷ்ஷின் பதவிக்காலம் முடிந்து கிளிண்டன் வந்து, அவரும் போய் ஜார்ஜ் புஷ் அதிபராக வந்தபோது, ‘இந்தப் பிரச்னையை முதலில் தீர்த்துவிடவேண்டும்’ என்று நினைத்ததில் வியப்பில்லை அல்லவா?

அதனால்தான் ஜார்ஜ் புஷ் ஆட்சிக்கு வந்த மிகச் சில நாட்களுக்குள்ளாகவே ஈராக்கிடம், ‘அபாயகரமான ஆயுதங்கள் இருக்கின்றன; அதனால் மானுடகுலத்துக்கே ஆபத்து’ என்னும் புதிய பாடல் எழுதிஇ இசை அமைக்கப்பட்டு பாடப்பட ஆரம்பித்தது. ஆயுதம் என்றால்? ரசாயன, உயிரியல் ஆயுதங்கள். இதையும் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். ‘ஏழைகளின் அணுகுண்டு’ என்று வருணிக்கப்படும் மிக அபாயகரமான ஆயுதங்கள்.

குவைத் யுத்தத்துக்கு முன்பாகவே ஈராக்கில் நடந்த கொடூரமான இனப்படுகொலைகளைச் சுட்டிக்காட்டி, ‘‘சதாம் உசேன் தொடர்ந்து ரசாயன ஆயுதங்களையும் உயிரியல் ஆயுதங்களையும் தயாரித்து வருகிறார்; இன்னும் அதை நிறுத்தவில்லை; இப்போது ஈராக்கில் ஏகப்பட்ட ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம்; சில ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன’’ என்று சொன்னார் புஷ். ஏற்கெனவே 98_ல் இதே பாட்டை வேறு டியூனில் அமெரிக்காவும், பிரிட்டனும் சேர்ந்து பாடி ஒரு யுத்தம் நடத்தியதும் நினைவிருக்கலாம். ஆனால்இ சதாம் ஆரம்பத்திலிருந்தே தன்னிடம் அப்படிப்பட்ட ரசாயன ஆயுதங்கள் எதுவும் கிடையாது என்று அடித்துச் சொல்லி வந்திருக்கிறார்.

ஆயினும் ஜார்ஜ் புஷ் பதவிக்கு வந்ததும், இந்தப் பிரச்னைதான் முதலில் கையில் எடுக்கப்பட்டது. இது தொடர்பான புகார் ஒன்றையும் முறைப்படி ஐ.நா.வுக்கும் அனுப்பினார் அவர்.

ஐக்கிய நாடுகள் சபை நோட்டீஸ் அனுப்பியபோது, சதாம் உசேன் தனது வெளிவிவகாரத்துறை அமைச்சர் நாஜிசப்ரி மூலம் ஒரு பதில் கடிதம் கொடுத்தார். (இது நடந்தது, 2002 _ செப்டம்பரில்.) ‘ஈராக்கிடம் எவ்வித ரசாயன _ உயிரியல் ஆயுதமும் இல்லை’ என்று அக்கடிதத்தில் சத்தியமே செய்திருந்தார் சதாம்.

சரி, ‘உன்னிடம் எதுவுமில்லை என்றால் நாங்கள் வந்து பரிசோதித்துவிட்டுப் போவதில் உனக்கென்ன கஷ்டம்? _என்று கேட்டது அமெரிக்கா.

இங்கேதான் பிரச்னை ஆரம்பமானது. ஈராக் ஒரு சர்வாதிகார தேசம் என்றபோதும், சதாம் ஒரு கொடுங்கோலன்தான் என்றபோதும், ஈராக் மக்களுக்கே சதாமைப் பிடிக்கவில்லை என்றபோதும் _ அதெப்படி இன்னொரு தேசத்தின் ராணுவம் வந்து அங்கே பரிசோதனை செய்யலாம்? உலகில் வேறு எந்த ஒரு தேசமாவது இப்படியரு மிரட்டல் விடுத்தால் அதை அமெரிக்கா சும்மா பார்த்துக்கொண்டிருக்குமா?

உண்மையில்இ இதற்கான ஆதாரக் காரணங்களே வேறு.

‘செப்டம்பர் _ 11 தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற ஆப்கன் யுத்தத்தில் அங்கே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தாலும்இ தாக்குதலின் முக்கிய இலக்கான பின்லேடனைப் பிடிக்க முடியவில்லை என்பது அமெரிக்காவுக்கு மிகவும் அவமானமாக இருந்தது. ஏதாவது மிகப்பெரிய காரியமாகச் செய்து, வெற்றி கண்டாலொழிய அந்த அவமானத்தைத் துடைக்க முடியாது’ என்று நினைத்தார் அதிபர் புஷ். மேலும், பின்லேடன் அண்ட் கோவுக்கு ஈராக் தொடர்புகள் நிச்சயம் இருக்கும் என்றும் அமெரிக்க உளவுத்துறை அப்போது சந்தேகப்பட்டது. சந்தேகத்தையே செய்தியாக்கி, ‘செப்டம்பர் _ 11’ சம்பவத்தில் ஓரெல்லை வரை ஈராக்கின் பங்களிப்பு அவசியம் உண்டு என்று திட்டமிட்டு பிரசாரம் செய்துஇ அதைப் பெரும்பாலான மக்கள் நம்பும்படியும் செய்தது சி.ஐ.ஏ. இது தொடர்பாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் ‘செப்டம்பர் _ 11 சம்பவத்தில் ஈராக்குக்கும் பங்கு இருக்கும்’ என்று சுமார் எழுபது சதவிகித அமெரிக்கர்கள் சொல்லியிருந்தார்கள்!

ஆகவே, ‘ஏதாவது பெரிதாகச் செய்வது’ என்னும் புஷ்ஷின் நோக்கத்துக்கு அந்தச் சமயத்தில் ஈராக்கைவிட உன்னதமான இலக்கு வேறு இல்லை! இதனால்தான் ‘உன்னிடம் ரசாயன ஆயுதங்கள் இருக்கிறதா இல்லையா என்று நான் வந்து பரிசோதித்துவிட்டுச் சொல்லுகிறேன்’ என்று சொன்னது அமெரிக்கா.

சதாம் உசேன் மிகவும் கடுப்படைந்தார். ‘நீ என்ன பெரிய கொம்பா? நீ யார் வந்து என்னைப் பரிசோதிப்பது? ஐ.நா. கேள்வி கேட்டது; நான் உரிய பதில் சொன்னேன். அதோடு தீர்ந்தது விஷயம். உன் மிரட்டல் வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம்’ என்று நேரடியாகவே புஷ்ஷ§க்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால், புஷ் சும்மா இருக்கவில்லை. தனது சொந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, ஐ.நா.வை அவர் தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டே இருந்தார். ஆகவே, வேறு வழியில்லாத ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில், அமெரிக்கா வந்து ஈராக்கில் பரிசோதனை நடத்த சதாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று தானும் கூடச் சேர்ந்து பாட ஆரம்பித்தது. வேறு வழியில்லாமல்தான் இதற்கு சதாமும் சம்மதித்தார்.

ஒரு பக்கம் வேண்டாவெறுப்பாக அனுமதி அளித்தாலும், மறுபுறம் தமது ராணுவ அதிகாரிகளையும், விஞ்ஞானிகளையும், ஆயுதத் தயாரிப்பாளர்களையும், உயர்மட்ட அமைச்சர்களையும் அழைத்து, ஈராக்கின் ஆயுத இருப்பு பற்றியும் ரசாயன _ உயிரி ஆயுதங்கள் ஏதும் இருப்பதற்கான சாட்சியங்கள் கிடையாது என்பது பற்றியும் தக்க ஆதாரங்களுடன் ஒரு விரிவான அறிக்கை தயாரிக்கச் சொன்னார்.

உண்மையில் அது ஒரு கின்னஸ் ரெக்கார்ட்! (ஆனால், சதாம் அப்ளை பண்ணவில்லை!) கிட்டத்தட்ட பன்னிரண்டாயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு பிரும்மாண்டமான அறிக்கை தயாரித்தது ஈராக். ஈராக்கின் ராணுவ பலம் குறித்து அவர்களுக்கே தீர்மானமான தெளிவு உண்டாகும் விதத்தில் மிகவும் நுணுக்கமான விவரங்களுடன் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கை, ‘ஈராக்கில் ஒரு ரசாயன, உயிரி ஆயுதமும் இல்லை’ என்று தெளிவாக எடுத்துச் சொன்னது. அமெரிக்க அதிகாரிகள் பரிசோதனைக்காக ஈராக் வந்து இறங்கிய அதேசமயம், அந்த அறிக்கையை ஐ.நா.வுக்கு அனுப்பிவைத்தார் சதாம் உசேன்.

சரிஇ பரிசோதனைக்குப்போன அமெரிக்க அதிகாரிகள் என்னதான் சொல்லுகிறார்கள் பார்க்கலாம் என்று காத்திருந்தது ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில்.

மாதக்கணக்கில் நீண்ட அந்தப் பரிசோதனையில் துப்புரவாக சல்லடை போட்டுத் தேடியும் ரசாயன ஆயுதம் பற்றிய எந்தவொரு ஆதாரத்தையும் அமெரிக்காவால் கண்டெடுக்க முடியவில்லை. ஆயினும் சளைக்காமல், ‘சதாம் அனுப்பிய அறிக்கை ஒரு புரட்டல்; ஆயுதங்களை எங்கோ பதுக்கி வைத்திருக்கிறார்; ஒரு தீபாவளி கொண்டாடாமல் கண்டுபிடிப்பது கஷ்டம்’ என்று சொன்னது அமெரிக்கா.

‘கொஞ்சம் பொறுமையாக இருங்கள், உங்கள் கருத்தையும், சதாம் அளித்த பன்னிரண்டாயிரம் பக்க அறிக்கையையும் வைத்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவோம்’ என்று கேட்டுக்கொண்டார்கள் ஐ.நா. அதிகாரிகள்.

அந்த அறிக்கையில், ‘ஆராய்வதற்கு ஒன்றுமே இல்லை’ என்று சொல்லிவிட்டார் அமெரிக்க அதிபர் புஷ்.

எப்படியும் ஈராக்கைத் தாக்குவது என்று அவர் முடிவு செய்துவிட்டார். ‘ஆப்கன் யுத்தத்தில் பின்லேடன் பிடிபடாமல் அன்றுவரை தேடுதல் வேட்டை தொடர்ந்துகொண்டே இருந்த கடுப்பு ஒரு பக்கம். யுத்தத்தின் விளைவான பொருளாதார இழப்புகள் மறுபக்கம். மக்கள் மத்தியில் கசப்பு உருவாகியிருக்குமோ என்கிற கவலை இன்னொரு பக்கம். குறைந்தபட்சம் சதாம் உசேனையாவது ஒழித்துக்கட்டினால்தான் தன்னால் பதவியில் நீடித்திருக்க முடியும்’ என்று அவர் நினைத்தார்.

உடனடியாக இதுவிஷயத்தில் அமெரிக்காவை ஆதரிக்கும் நாடுகள் எவை எவை என்று பட்டியல் போடப்பட்டது. தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் தொடர்ச்சியாகவே சொல்லப்பட்ட ஈராக் தாக்குதலுக்கும் அமெரிக்காவுக்குக் கணிசமான தேசங்களின் ஆதரவு கிடைத்தது. ஏனெனில் பின்லேடனைக் காட்டிலும் சதாம் உசேனால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம்.

எப்படியும் ஈராக்கில் சதாமின் ஆட்சியை ஒழித்துவிடமுடியும் என்று நம்பிக்கை கொள்கிற அளவுக்கு அமெரிக்காவுக்கு ஆதரவுகள் பெருகியதும்இ பகிரங்கமாக ஈராக் மீது போர் அறிவித்தார் புஷ்.

ஐ.நா.வின் வேண்டுகோளைப் புறக்கணித்து, முற்றிலும் எதேச்சதிகார மனோபாவத்துடன் அமெரிக்கா மேற்கொண்ட செயல் அது. (அது வேண்டாத காரியம்தான் என்பது போரின் முடிவில் தெரியவந்தது. அதைப் பிறகு பார்ப்போம்.)

2002 _ தொடக்கத்திலிருந்தே இந்தப் போருக்கான பிள்ளையார் சுழியைப் போட்டுவிட்டு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வந்த அமெரிக்காஇ 2003_ம் ஆண்டு மார்ச் மாதம் 19_ம் தேதி ஈராக் மீதான யுத்தத்தைத் தொடங்கியது. அதே மார்ச் 19_ம் தேதி மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சதாம் உசேன் டி.வி.யில் தோன்றி, அமெரிக்கா தொடங்கியிருக்கும் யுத்தம் குறித்து நாட்டு மக்களுக்கு அறிவிப்பு செய்தார். அந்தப் பேச்சில், பகிரங்கமாக அமெரிக்கர்கள் அத்தனைபேரையும் ‘கிரிமினல்கள்’ என்று அவர் சொன்னார்.

(தொடரும்)

Kumudam.com
Reply


Messages In This Thread
டாலர் தேசம் - by AJeevan - 04-22-2004, 10:25 AM
Re: டாலர் தேசம் - by AJeevan - 04-30-2004, 03:10 PM
Re: டாலர் தேசம் - by AJeevan - 05-04-2004, 03:53 AM
Re: டாலர் தேசம் - by AJeevan - 05-16-2004, 10:47 AM
[No subject] - by AJeevan - 05-23-2004, 01:37 AM
Re: டாலர் தேசம் - by AJeevan - 05-31-2004, 11:15 AM
[No subject] - by Eelavan - 06-02-2004, 03:03 PM
[No subject] - by AJeevan - 06-15-2004, 03:01 AM
[No subject] - by AJeevan - 06-25-2004, 01:25 AM
[No subject] - by AJeevan - 06-25-2004, 01:28 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)