Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டாலர் தேசம்
#4
[align=center:45a4840567]<img src='http://www.kumudam.com/reporter/060504/pg8-t.jpg' border='0' alt='user posted image'>[/align:45a4840567]

<span style='font-size:22pt;line-height:100%'><b>பா.ராகவன்</b></span>

<img src='http://www.kumudam.com/reporter/160504/pg8-2.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/reporter/160504/pg8-1.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/reporter/160504/pg8.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.kumudam.com/reporter/160504/pg8-3.jpg' border='0' alt='user posted image'>


உலக வர்த்தக மையக் கட்டடங்களும் ராணுவத் தலைமையகமான பெண்டகனும் தாக்கப்பட்ட நேரத்தில், புஷ் அரசின் முதன்மை மூளை என்று வருணிக்கப்படும் உள்துறைச் செயலாளர் காலின் பாவல், பெரு தேசத்தின் தலைநகரான லீமாவில் இருந்தார். அந்த நாட்டில் அப்போதுதான் புதிய அதிபர் ஒருவர் பொறுப்பேற்றிருந்தார். அவர் பெயர் அலெக்சாண்ட்ரோ டொலடோ. சும்மா கொஞ்சம் நல்லுறவு வளர்ப்பதற்காக அங்கே பலதேச உச்சி மாநாடு ஒன்று கூட்டப்பட்டு, அதில் பங்கேற்பதற்காக பாவல் போயிருந்தார். கியூபா தவிர, பிராந்தியத்திலிருந்த 34 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தார்கள். காலை நேரமல்லவா? டிபன் சாப்பிடுவதற்கென்று பாவல் கையலம்பிக்கொண்டு உட்கார்ந்ததும் அந்தச் செய்திப்பேய் வந்துவிட்டது. அவரது எக்ஸிகியூட்டிவ் அசிஸ்டெண்ட் க்ரெக் கெல்லி (அமெரிக்கப் பதவிகள் பெயரெல்லாம் கொஞ்சம் தமாஷாக இருக்கிறதல்லவா? அமைச்சர்களை செகரட்டரியாகவும் செகரட்டரிகளை அசிஸ்டெண்டுகள் என்றும் அழைப்பது அந்த ஊர் ஸ்டைல்), அறைக்கதவைப் பிளந்துகொண்டு பாய்ந்து வந்து சேதி சொன்னார்.

அவர் சொன்ன நேரத்தில் பெண்டகன் தாக்கப்பட்டிருக்கவில்லை. இரண்டு விமானங்கள் மோதி வர்த்தக மையக் கட்டடங்கள் தகர்க்கப்பட்ட செய்தி மட்டும்தான். காதில் விழுந்த மாத்திரத்திலேயே பாவல், "அது விபத்தல்ல", என்று உடனே இடைமறித்துச் சொன்னார். "ஒன்று மோதினால் விபத்து. இரண்டு என்றால் தீவிரவாதம்."

நாற்காலியைவிட்டு அப்போதே அவர் எழுந்துவிட்டிருந்தார். உடனடியாக உச்சிமாநாட்டில் தொடர்ந்து தாம் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையைச் சுருக்கமாக பெருவின் பிரசிடெண்டுக்கு விளக்கிவிட்டு, விமான நிலையத்துக்கு விரைந்தார். அங்கிருந்து Êஏழு மணிநேரப் பயணம், அமெரிக்காவுக்கு. இருக்கையில் அமர்ந்ததுமே வெள்ளை மாளிகையைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றார். ம்ஹ¨ம். பாதுகாப்பு நிமித்தம் சகல வெளிதேசத் தொலைத்தொடர்புகளையும் அமெரிக்கா அப்போது நிறுத்தியிருந்தது. ஈமெயில் அனுப்பவாவது முடியுமா என்றால் அதுகூட முடியவில்லை. ஒரு தேசம் சுத்தமாகத் தன் கதவுகளை மூடிக்கொள்வது என்றால் அதுதான். பஸ், ரயில், விமானங்களைப் போகவிடாமல் நிறுத்துவது சுலபம். ஆனால் ஒட்டுமொத்தத் தொலைத்தொடர்பு சௌகரியங்களையும் கம்ப்ளீட்டாக நிறுத்தி, உலகிலிருந்து ஒரு தேசம் தன்னைத் துண்டித்துக்கொள்வதென்பது கற்பனைகூடச் செய்து பார்க்கமுடியாத விஷயம். ஆனால் அப்போது அமெரிக்கா அதைச் செய்தது!

என்னவாவது செய்து உள்நாட்டில் யாருடனாவது உடனே பேசியாகவேண்டும். என்ன செய்யலாம்? அதிபுத்திசாலியான பாவலுக்கு உடனே ஒரு யோசனை வந்தது. விமானங்களிலுள்ள ரேடியோ மூலம் தகவல் பரிமாறும் வசதி உண்டு. அதாவது பாதுகாப்பு வளைய சௌகரியமெல்லாம் இல்லாத திறந்த அலைவரிசை, ரேடியோ தொலைத்தொடர்பு. இதில் ரகசியமெல்லாம் பேசக்கூடாது. என்னவாவது ஆபத்து என்றால் மட்டும் அபயக்குரல் எழுப்பப் பயன்படுத்துவார்கள்.

அதனைப் பயன்படுத்தி, தனது டெபுடி செகரட்டரி ரிச்சர்ட் ஆர்மிட்டேஜை ஒருவழியாகப் பிடித்தார், பாவல். நடந்தது என்ன என்பது பற்றி மிக விரிவாக, முழுமையாகக் கேட்டு மனத்தில் பதித்துக்கொண்டார். ஆர்மிட்டேஜ்தான் பெண்டகனும் தாக்கப்பட்டுவிட்ட தகவலை பாவலுக்குச் சொன்னது. வானில் பறக்கிற எல்லா விமானங்களையும் இப்போது சந்தேகிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக அவர் சொன்னதன் முழு அர்த்தம் புரிய பாவலுக்கு வெகுநேரம் ஆகவில்லை. ரீகன் காலத்திலிருந்தே பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்க அரசின் கில்லாடிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிற 64 வயதுக்காரர் அவர்.

அமைதியாக உட்கார்ந்து யோசித்தார். என்னென்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், யார் யாரிடம் விவாதிக்க வேண்டும், உலகுக்கு இதனை எப்படி எடுத்துச் சொல்லவேண்டும் _ என்பதுதான் அவரது சிந்தனையின் சாரம்.

பாவலுக்குத் தகவல் கிடைத்த அதே நிமிஷத்தில்தான் அதிபர் புஷ்ஷ§க்கும் செய்தி போனது. அவரும் அப்போது தலைநகரில் இல்லை. ஃப்ளோரிடா மாகாணத்தில் சரஸொட்டா என்கிற ஊரில் ஒரு எலிமெண்ட்ரி ஸ்கூலில் என்னமோ லெக்சர் கொடுக்கப்போயிருந்தார். செய்தி கேள்விப்பட்டதும் புஷ் சொன்ன வார்த்தை _"பைலட்டுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்குமோ என்னவோ!"

'ஒரு விமானமல்ல; இரண்டு' என்று எடுத்துச் சொன்னபிறகுதான் அவர் புத்தியில் பல்பு எரியத் தொடங்கியது. முகம் இருண்டு, வியர்த்தும்விட்டது. சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பிறகு மெல்லிய குரலில் சொன்னார்: "அவர்கள் யுத்தம் தொடங்கிவிட்டார்கள். நாமும் தயாராக வேண்டியதுதான்."

அவசர அவசரமாக ஒரு பத்துப் பன்னிரண்டு வரிகளில் நாட்டு மக்களுக்கு ஒரு செய்தி எழுதப்பட்டது. அந்தப் பள்ளியின் ஆடிட்டோரியத்துக்கே தொலைக்காட்சிக்காரர்களை உடனே வரவழைத்து, அங்கேயே புஷ் பேசினார். 'சந்தேகமில்லாமல் இது தீவிரவாதிகளின் தாக்குதல்.' அதைத்தான் அவர் முதலில் சொன்னார். அந்தச் சில வரிகளைப் படித்து முடிப்பதற்குள்ளாக நிறைய இடங்களில் தடுமாறினார். பல சொற்கள் அர்த்தம் மாறிப் பொருள் தரக்கூடியவையாக இருந்தன. பதற்றம்தான் காரணம் என்று சொன்னார்கள். இப்படியரு நெருக்கடி நேரத்தில் அதிபருக்கு இத்தனை பதற்றம் ஆகாது என்றும் சொன்னார்கள்.

டி.வி.க்காரர்கள் கிளம்பிய சூட்டிலேயே அதிபரும் விமானநிலையத்துக்குக் கிளம்பிவிட்டார். விமானம் ஏறுமுன் வாஷிங்டனைத் தொலைபேசியில் அழைத்து அவர் அளித்த உத்தரவு: "என் மனைவியும் மகள்களும் பாதுகாப்பான இடத்துக்கு உடனே போகவேண்டும். அவர்களது பாதுகாப்பில் சிறு பிசகும் நேரக்கூடாது!"

உடனே, வெள்ளை மாளிகையில் இருந்த லாரா புஷ்ஷ§க்கும் அவரது இரட்டைப் பெண் குழந்தைகளுக்கும் தகவல் தரப்பட்டது. அவர்கள் வாஷிங்டன் நகரின் அதிபயங்கரமான போக்குவரத்து நெரிசலில் 45 நிமிடங்கள் நீந்தி, ரகசியப் பாதுகாப்புப் படையின் தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கே அவர்களுக்கு சங்கேத வார்த்தைகள் வழங்கப்பட்டு, உடனடியாக ஆளுக்கொரு ரகசிய இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

இதெல்லாம் அன்று காலை 9.39க்கு பெண்டகன் மீது விமானம் மோதியதிலிருந்து சரியாக ஒரு மணி நேரத்துக்குள் நடந்தவை. 9.50க்கெல்லாம் வாஷிங்டனுக்குக் கிளம்பிவிட்டார் புஷ். கிளம்பும்போதே தமது உதவி ஜனாதிபதி டிக்செனியைத் தொலைபேசியில் அழைத்தார். "நாம் யுத்தகளத்தில் இருக்கிறோம். உடனே காங்கிரஸை கூட்டி, சுருக்கமாக விஷயத்தை விளக்கிவிட்டு வந்து சேர்" என்று உத்தரவிட்டுவிட்டு, "பெருவிலிருந்து காலின் பாவல் புறப்பட்டுவிட்டாரா?" என்று கேட்டு விசாரித்து உறுதிப்படுத்திக்கொண்டார். அப்போதுதான் போனை வைத்த டிக்செனி உடனே மீண்டும் புஷ்ஷை அழைத்து, "அவசரமாக ஒரு உத்தரவிட வேண்டும். சந்தேகத்துக்கு இடமான எந்த கமர்ஷியல் விமானம் பறந்தாலும் அமெரிக்க ராணுவ விமானம் அதனைச் சுட்டு வீழ்த்த அனுமதி வேண்டும்" என்று கேட்டார்.

கேட்டுக்கொண்டும் கொடுத்துக்கொண்டும் இருக்கிற நேரமா அது! "என்ன வேண்டுமோ செய்துகொள்" என்றார் புஷ்.

தலைநகரின் அதிகார மையங்களில் செய்திகள் வந்து குவிந்தவண்ணம் இருந்தன. நான்காவதாகக் கடத்தப்பட்ட விமானம் என்ன ஆனது, எங்கே போனது என்று இன்னும் தெரிந்திருக்கவில்லை. கடத்தல்காரர்களின் இலக்கு வெறும் கட்டடங்களாக மட்டும் இருக்க முடியாது; தாக்குதல் வேறு வடிவத்திலும் திடீரென்று தொடங்கலாம் என்பதாகப் புலனாய்வு அதிகாரிகள் சந்தேகப்பட்டார்கள். அதாவது, அமெரிக்க அரசின் மிக உயர்ந்த பதவிகளில் இருப்போர் அனைவருக்குமே ஆபத்து என்பதாகச் சொல்லப்பட்டது.

இத்தகவலை Êஏழெட்டுத் தரப்பிலிருந்து அடுத்தடுத்துக் கேட்க நேர்ந்த டிக்செனிக்கு உடனே கவலை வந்து, மீண்டும் புஷ்ஷை போனில் அழைத்தார். "தயவுசெய்து நீங்கள் வாஷிங்டன் வரவேண்டாம்" என்று சொன்னார். முதலில் அதைக் கடுமையாக மறுத்தாலும், கொஞ்சம் யோசித்தால் அவர் சொல்வதுதான் சரி என்று புஷ்ஷ§க்கும் தோன்றியது. ஆகவே, புறப்பட்ட விமானத்தை திசை திருப்பி, லூசியானாவிலுள்ள பார்க்ஸ்டேல் விமானப்படை தளத்துக்குப் போகச் சொன்னார். பத்தேமுக்கால் மணி சுமாருக்கு லூசியானாவில் இறங்கியதும் புஷ் செய்த முதல் காரியம், ரகசிய இடத்துக்குப் போன தன் மனைவி பத்திரமாக இருக்கிறாரா என்று போன் செய்து விசாரித்ததுதான்.

நாடே பதறிக்கொண்டிருந்தபோது, இப்படி உயிருக்கு பயந்து எங்கோ வந்து ஒளிந்துகொண்டிருக்க வேண்டியிருக்கிறதே என்று புஷ்ஷ§க்கு குற்ற உணர்ச்சி இல்லாமலில்லை. ஆனால், அந்த நேரத்தில் அவரால் எந்த ஒரு முடிவையும் உடனே எடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. அங்கிருந்தபடியே போன் போட்டு, தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் டொனால்டு ரம்ஸ்பீல்டுடன் பேசினார். என்ன நடக்கிறது என்று கேட்டறிந்தார். அழிவின் பாதிப்புகள் குறித்து விசாரித்தார். உயிர் பிழைத்தோருக்கு மருத்துவ சிகிச்சை எங்கெங்கே, யார் யாரால் தரப்படுகிறது என்று கேட்டுக்கொண்டார். சம்பவ இடத்திலேயே மேயர் இருப்பதில் தாம் திருப்திகொண்டிருப்பதாகச் சொல்லச் சொன்னார். மேலும் பிற்பகல் 3.30க்கு தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தைக் கூட்டச்சொல்லிக் கேட்டுக்கொண்டார். எப்படியும் தான் வந்து கலந்துகொள்வதாக உறுதியளித்தார்.

அந்த 3.30 மணிக் கூட்டத்தில்தான் முதன்முதலாக அல்கொய்தா என்கிற சொல் உபயோகிக்கப்பட்டது. தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியவர் பின்லேடன்தான் என்று உறுதிபடத் தீர்மானிக்கப்பட்டது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானங்களில் பயணம் செய்தோரின் விவரங்களை அலசிப் பார்த்ததில், பெண்டகன் கட்டடத்தின்மீது மோதிய பயணிகள் விமானம் போயிங் 77_ல் இருந்த மூன்று பேரின் முகங்கள் அமெரிக்க உளவுத்துறைக்கு மிகவும் பரிச்சயமானவை. அல்கொய்தா இயக்கத் தலைவர்கள்தான் அவர்கள் என்று சூடம் அணைத்து சத்தியம் செய்தது அமெரிக்கப் புலனாய்வுத் துறை. அதில் ஒரு ஆள் மிகவும் பழக்கமானவர். அவர் பெயர் காலித் அல் மிதார். மலேசியாவில் உள்ள சி.ஐ.ஏ.வின் கிளை அலுவலகத்தினரால் முந்தைய வருடம்தான் கண்காணிக்கப்பட்டவர். ஒரு அல்கொய்தா ரகசிய மாநாட்டில் சி.ஐ.ஏ.வின் கூலி ஏஜெண்ட் ஒருத்தனால் அடையாளம் காட்டப்பட்ட போராளி.

காலித் அல் மிதாரின் அடையாளங்களை, அவனைப் பற்றிய விவரங்களைச் சேகரித்துக்கொண்ட மலேசிய சி.ஐ.Êஏ. அதிகாரிகள், அதனை இன்னொரு அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐக்கு அனுப்பி, 'இந்த ஆளை கவனியுங்கள்' என்று ஒரு வருடம் முன்னர்தான் சொல்லியிருந்தார்கள்.

எஃப்.பி.ஐ. அதிகாரிகள், தமது 'கவனிக்கப்பட வேண்டியவர்கள்' பட்டியலில் காலிதின் பெயரைச் சேர்த்து, அவனைத் தொடர்ந்து இரவு பகலாகக் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். அவன் தொடர்ந்து அமெரிக்காவிலேயேதான் அந்த ஆண்டு முழுவதும் இருந்திருக்கிறான். ஆகவே, அவனது முகத்தை அடையாளம் காணுவதில் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை.

மேலும், இந்த மாதிரியரு பிரும்மாண்டமான தாக்குதல் திட்டத்தை அல்கொய்தா தவிர வேறெந்த ஒரு தீவிரவாத அமைப்பும் செய்ய முடியாது என்று தக்க ஆதாரங்களுடன் எடுத்துச்சொன்னார் ரம்ஸ்பீல்டு.

ஆனால், எஃப்.பி.ஐ.யின் இயக்குநரான ராபர்ட் முல்லருக்கு ஒரு சந்தேகம் தீராமல் இருந்தது. எத்தனையோ பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி அதெப்படி ஒரே சமயத்தில் நான்கு விமானங்களைக் கடத்திவிட முடியும்? எனில், இதில் உள்கை சம்பந்தப்படாமலிருக்குமா?

புஷ்ஷால் இந்தச் சந்தேகத்தைக் காதுகொடுத்துக் கேட்கவே முடியவில்லை. அவருக்கு மட்டுமல்ல; அங்கே கூடியிருந்த அத்தனை பேருக்குமே அடிமனத்தில் அந்தக் கேள்வி இருக்கத்தான் செய்தது! ஆனால், வாய்விட்டுச் சொல்லத்தான் யாருக்கும் முடியவில்லை. ஒருவாரம் முன்னதாகத்தான் ராபர்ட் முல்லர் இயக்குநராகியிருந்தார். ஆகவே பளிச்சென்று கேட்டுவிட்டார்.

எப்படியாவது சீக்கிரம் விமானங்களை மீண்டும் இயக்கவேண்டும் என்று புஷ் விரும்பினார். தீவிரவாதிகளுக்கு பயந்து விமான சர்வீஸை நிறுத்திவைத்திருந்ததை மிகவும் அவமானகரமானதொரு விஷயமாகவே அவரால் பார்க்க முடிந்தது. பாதுகாப்புக் காரணங்கள் சொல்லப்பட்டாலும், 'அவர்கள் சிரிக்க ஒரு வாய்ப்பு' என்பதாகவே புஷ் அதனைப் பார்த்தார்.

"மீண்டும் ஓரிரு தினங்களில் இயக்கலாம். அதில் பிரச்னையில்லை. ஆனால் தீவிரவாதிகளைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். அவர்கள் எப்போதும் மீண்டும் தாக்கலாம். இது ஒரு ஆரம்பம்தான் என்று நினைக்கிறேன்" என்றார் ரம்ஸ்பீல்டு.

ஆனால், அன்றைய தினத்தில் இனிமேல் வேறு தாக்குதல் நடவடிக்கைகள் நிகழ வாய்ப்பில்லை என்று எல்லோருமே நினைத்தார்கள். எப்போது பத்து மணிக்கு முன்னதாக அடுத்தடுத்து மூன்று இலக்குகளை வீழ்த்தி ஒரு முயற்சியில் தோல்வி கண்டார்களோ, இனி அடுத்தது நடக்க_குறைந்தது 24 மணி நேரமாவது ஆகும் என்று சொன்னார்கள். அந்த நான்காவது விமானம் எதனை நோக்கிச் செலுத்தப்பட்டது என்பதே இறுதிவரை தெரியவில்லை. பாதி வழியிலேயே விழுந்து நொறுங்கிவிட்டது. விமானத்துக்குள்ளேயே தீவிரவாதிகளை எதிர்த்து பயணிகள் சண்டையிட்டிருக்கலாம். ஆகவே துப்பாக்கிச் சூடு நிகழ்ந்து விமானம் நிலைகுலைந்திருக்கலாம் என்று நினைத்தார்கள்.

சரி, மிச்சத்தை நாளை பார்ப்போம் என்று புஷ் எழுந்துகொண்டார். மனைவியைத் தொலைபேசியில் அழைத்து 'வெள்ளை மாளிகைக்கு வந்துவிடு' என்று சொன்னார். நாலரைமணிக்குத் தான் அங்கே வந்துவிடுவதாகவும் சொன்னார். உண்மையில் அவர் மிகவும் அதிர்ச்சியடைந்து, களைப்புற்றிருந்தார். கொஞ்சநேரம் படுத்துத் தூங்கலாம் என்பதே அவர் விருப்பமாக இருந்தது அப்போது.

ஆனால், அன்றைக்கு அமெரிக்காவில் யாருக்குமே தூக்கம் வரவில்லை. நேற்றுவரை விண்ணைத் தொட்டுக்கொண்டிருந்த இரு கோபுரங்கள் இன்று இல்லை என்கிற உணர்வு, ஒரு பூதம் மாதிரி எல்லோர் மனத்தையும் கவ்வி அலைக்கழித்துக் கொண்டிருந்தது.


(தொடரும்)




Kumudam.com
Reply


Messages In This Thread
டாலர் தேசம் - by AJeevan - 04-22-2004, 10:25 AM
Re: டாலர் தேசம் - by AJeevan - 04-30-2004, 03:10 PM
Re: டாலர் தேசம் - by AJeevan - 05-04-2004, 03:53 AM
Re: டாலர் தேசம் - by AJeevan - 05-16-2004, 10:47 AM
[No subject] - by AJeevan - 05-23-2004, 01:37 AM
Re: டாலர் தேசம் - by AJeevan - 05-31-2004, 11:15 AM
[No subject] - by Eelavan - 06-02-2004, 03:03 PM
[No subject] - by AJeevan - 06-15-2004, 03:01 AM
[No subject] - by AJeevan - 06-25-2004, 01:25 AM
[No subject] - by AJeevan - 06-25-2004, 01:28 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)