05-04-2004, 11:01 PM
தமிழ் நாட்டு சினிமா ஒன்றில் நடித்த ஒருவருக்கு ஐரோப்பிய குறும்படமொன்றில் நடிக்க வேண்டுமென்று ஆசை. என்னோடு தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.
"நான் செய்யும் குறும்படத்தில் ஒரு சிறு பாத்திரம் செய்ய முடியுமா?" என்று கேட்டேன்.
"நீங்கள் சொன்னால் எப்படியான பாத்திரமானாலும் நடிப்பேன்" என்றார்.
சரியென்று சொல்லி குறும்பட ஒளிப்பதிவுக்காக ஆயத்தமாகி, அவரைத் தொடர்பு கொண்டேன். அவரும் உடனே சம்மதித்து, சரியான நேரத்துக்கு வந்தார்.
நடிக்கத் தொடங்கு முன் நான் அவர் என்ன செய்ய வேண்டுமென்பதை விளக்கினேன். இவரோ இன்னுமொரு நடிகரின் சாயலிலேயே நான் சொன்னவற்றைச் செய்யத் தொடங்கினார்.நான் பல முறை சொல்லிப் பார்த்தேன். அவரால் அந்த வட்டத்தை விட்டு மீண்டு வரவே முடியவில்லை.
என்னால் அவரைத் திட்டவும் முடியாது.காரணம் அந்த அளவுக்கு என்னோடு தொடர்பில் பேசுபவர். அவர் மனதைப் புண்படுத்தவும் முடியவில்லை. நாள் முழுவதும் முயன்றும் முடியாத போது இறுதியாக அவருக்குத் தெரியாமலே சில வசனங்களை பயிற்சி செய்யும்படி சொன்னேன். அவர் முன்பு போல் அலட்டிக் கொள்ளாமல் வசனத்தை பயிற்சி செய்வதாக எண்ணிக் கொண்டு தொடர்ந்து பேசிக் கொண்டு இயல்பாக இருந்தார்.
நல்ல காலம் அவருக்கு எனது ஒளிப்பதிவுக் கருவி இயக்கப்படுவது தெரியாமலே இருந்திருக்கிறது. இல்லாவிட்டால் சொதப்பி இருப்பார்.எனக்குத் தேவையானவற்றை அவருக்குத் தெரியாமலே சுட்டுக் கொண்டேன்.
இன்னும் மீதமுள்ளது சிறிதுதான்.அதை ஒளிப்பதிவு செய்ய வேறு ஒரு இடத்துக்கு போக வேண்டியிருந்தது. நாங்கள் (இருந்தவர்கள்) ஆளுக்கு முடிந்த பொருட்களை தூக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். கொஞ்ச தூரம் சென்று திரும்பிப் பார்த்தேன்.
நடிகர் மட்டும் வெறும் கையோடு துரை போல் நடந்து வருவதும், அடுத்தவர்கள் பொருட்களைத் தூக்கிக் கொண்டு வருவதும் தெரிந்தது.
நான் உதவி ஒளிப்பதிவு செய்பவரிடம் கேட்டேன்
"ஏன் அவருக்கும் எதையாவது தூக்கி வரக் கொடுத்திருக்கலாமே?"
அதற்கு என் உதவி ஒளிப்பதிவாளர் சொன்னது தூக்கி வாரிப் போட்டது.
"நடிகர் என்றால் சாமான் தூக்கிற வேலை செய்யக் கூடாது. அதெல்லாம் டெக்னிசினின் வேலையென்று சொல்லி ஆட்டிக் கொண்டு வாரார் என்றார்."
நான் நடப்பதை நிறுத்தினேன். யாரிடம் பாரமான பொருள் இருக்கிறது என்று பார்த்தேன்.மறுபடி என்ன?
இங்க எல்லாரும் ஒண்டுதான்.இது கூட்டு முயற்சியில உருவாகிற படைப்பு.
அண்ண இதை தூக்கிக் கொண்டு வாங்க. என்று சில பொருட்களை ஒப்படைத்தேன்.
ஆட்டின கை, காவிக் கொண்டு நடந்தது.
"ஒளிப்பதிவாளர் இயக்குனர் கூட நடிகர் மாதிரிதான். ஆனால் என் யுனிட்டில எல்லாரும் ஒரேமாதிரிதான்." என்றேன்.
அதன்பிறகு யாரும் சொல்லாமலே அவர் சாமான்களை தூக்கினார்.
அத்தோடு படத்தைப் பார்த்து விட்டு அவர் சிரமப்பட்டு நடித்தவை படத்தில் இல்லாமல் இருக்க மிகவும் வேதனைப்பட்டார்.
"நான் அந்த நடிகர் மாதிரி நடிக்க எவ்வளவு கஸ்டப்பட்டன் தெரியுமா ஒரு கட்டத்தையாவது விட்டு வைக்காமல் வெட்டிட்டீங்களே" என்று வேதனைப்பட்டார்.
"என் படங்கள்ள நடிக்க வேண்டாம். சொன்னதைச் செய்தா போதும். அதுக்கு மேல எது இருந்தாலும் வெட்ட என் கை தயங்காது" என்றேன்.
படத்தை பார்த்தவர்கள் அவர் நடிப்பை வெகுவாகப் பாராட்டியிருந்தார்கள்.
அவர் அவர்களுக்கு சொன்னது,
<span style='color:darkred'>\"என்னால இப்படியும் முடியும்.\"
அவரை மாற்றிக் காட்டியதில் எனக்கு மகிழ்ச்சி.
இன்று நடிக்காமல் இருக்க முடிந்தால் அதுதான் நடிப்பு.AJeevan</span>

