Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டாலர் தேசம்
#3
[align=center:0882f156b5]<img src='http://www.kumudam.com/reporter/060504/pg8-t.jpg' border='0' alt='user posted image'>[/align:0882f156b5]

<span style='font-size:22pt;line-height:100%'><b>பா.ராகவன்</b></span>



[fliph:0882f156b5] <img src='http://www.kumudam.com/reporter/060504/pg8-1.jpg' border='0' alt='user posted image'>[/fliph:0882f156b5]அமெரிக்காவின் நாற்பத்து மூன்றாவது அதிபராக ஜார்ஜ் புஷ் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோது, அமெரிக்க மக்கள் அதனை ஒரே ஒரு வார்த்தையில்தான் குறிப்பிட்டார்கள். 'அதிர்ஷ்டம்.'

சந்தேகமில்லாமல் அது அதிர்ஷ்டம்தான். பத்துப் பதினைந்து வருஷம் சீனியர் புஷ் திட்டமிட்டுத் தன் மகனை தேசிய அரசியலில் பயிற்சியளித்து வளர்த்தார். உட்காருவது எப்படி, நடப்பது எப்படி, சிரிப்பது எப்படி என்று அழகிப்போட்டிப் பெண்களுக்குக் கொடுக்கிற மாதிரியான பயிற்சிகள்அவருக்குக் கொடுக்கப்பட்டன. சுலபத்தில் கிடைக்காத பல பெரிய மனிதத் தொடர்புகள் புஷ்ஷ§க்கு கவனமாக ஏற்படுத்தித் தரப்பட்டன. அரசு ஊழியர் தரப்பு, என்.ஜி.ஓ.க்கள் தரப்பு, தனியார் துறையினர், பெண்கள் அமைப்புகள், மாணவர்கள் என்று டிபார்ட்மெண்ட் டிபார்ட்மெண்டாக முக்கியஸ்தர்களுடன் அவருக்குத் தொடர்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டன.

இதெல்லாம் சீனியர் புஷ், ரீகனின் துணை அதிபராகப் பதவி வகித்த காலத்திலிருந்தே நடந்துவந்தவை. என்ன பிரச்னை என்றால், இந்த ஜூனியர் புஷ்ஷ§க்கு ஏனோ ஆரம்பத்திலிருந்தே மக்களைக் கவரும் சக்தி அத்தனை போதுமானதாக இல்லை. அவருக்கு, அவரது குடும்ப பிசினஸான பெட்ரோலிய உற்பத்தியில் கிடைக்கிற காசே போதுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. அமெரிக்காவின் முன்னணி பெட்ரோலிய நிறுவனங்களுள் ஒன்று புஷ் குடும்பத்தினுடையது. முன்பே நாம் பார்த்தபடி, சீனியர் புஷ் தன் ரத்தத்தையும், வியர்வையையும் முதலீடு செய்து வளர்த்த பிசினஸ் அது.

அப்பா சம்பாதித்த பெரிய பெயர். நல்ல பிசினஸ். ஜம்மென்று கோட்டு சூட் போட்டுக்கொண்டு அதனை கவனித்தபடிக்கு காலத்தை ஓட்டிவிடலாம் என்றுதான் முதலில் புஷ் நினைத்தார். தனக்கு அரசியலெல்லாம் ஒத்துவராது என்பது 1978_லேயே அவருக்கு ஒரு மாதிரி புரிந்துவிட்டிருந்தது. அந்த வருஷம் அவர் மக்கள் சபைத் தேர்தலுக்கு நின்று பார்க்கலாமே என்று முயற்சி செய்து படுதோல்வி கண்டிருந்தார். மாறாக, டெக்ஸாஸ் மாகாண பேஸ்பால் க்ளப் முதலாளிகள் சங்கத்தில் இணைந்து, அதில் நிறைய ஷேர் வாங்கி, நிறைய காசும் பார்த்தார். அரசியலைக் காட்டிலும் மற்றவற்றில் தன்னால் நிறைய சாதிக்க முடியும் என்பதுதான் புஷ்ஷின் அந்தக் கால சித்தாந்தமாக இருந்தது.

ஆனால், 1992_ம் வருஷம் சீனியர் புஷ் தோல்விகண்டு அரசியல் துறவறம் மேற்கொள்ள நேர்ந்தபோது, வலுக்கட்டாயமாகக் தன் மகனை தீவிர அரசியலுக்குள் திணிக்க முற்பட்டார். அதெப்படி, ஒரு குடும்பத்தில் ஒருத்தர் மட்டும் அதிபராக இருந்தால் போதுமா என்ன? எதற்கு தண்டத்துக்கு ஒரு மகனைப் பெற்று வைத்திருப்பது?

திட்டமிட்டு, கவனமாகப் பயிற்சிகள் அளித்து, மனத்தில் நாற்காலி வெறி ஏற்படுத்தி, 'இனி உன் பாதை அரசியல்தான்' என்று தெளிவாகப் பாதை காட்டித்தான் சீனியர் புஷ் தன் மகனை அப்போது டெக்ஸாஸ் மாகாணத்தின் கவர்னர் பதவிக்கு நிறுத்தினார். 1994_ம் வருஷம் நடந்த விஷயம் இது.

மிகச் சில வாக்குகள் வித்தியாசத்தில்தான் அப்போதே ஜார்ஜ் புஷ்ஷால் அந்த கவர்னர் பதவியைப் பெற முடிந்தது. ஆனால், நாலு வருஷம் பதவியில் இருக்க முடிந்ததால் புஷ்ஷ§க்கு அரசியல் கொஞ்சம் புரிந்தது. அதன் நெளிவுசுளிவுகள், தகிடுதத்தங்கள், எங்கே தட்டினால் என்ன விழும் என்கிற சூட்சுமம் எல்லாம் புரிந்தது. ஆகவே, 98_ம் வருஷம் மீண்டும் கவர்னராவதில் அவருக்கு சிரமம் ஏதும் இருக்கவில்லை. இம்முறை கொஞ்சம் கௌரவமான வெற்றியே அவருக்குக் கிடைத்தது என்று சொல்ல வேண்டும்.

ஆனால், புஷ்ஷ§க்கு அப்போதே பேசத் தெரியவில்லை. அதாவது, அதிபர்கள் வழக்கமாக அங்கே பேசக்கூடிய நாகரிக இங்கிலீஷ் அவருக்கு வரவில்லை. படுகொச்சையாக, இலக்கணப் பிழைகளுடன்தான் அவரால் ஆங்கிலம் பேச முடிந்தது. இதனை அநேகமாக அமெரிக்கப் பிச்சைக்காரர்கள் சமூகம் வரைக்கும் கிண்டலடித்துக்கொண்டுதான் இருந்தது (இன்றுவரை இது தொடர்கிறது). தவிரவும், அடித்தட்டு மக்களைக் கவரக்கூடிய எந்தவொரு அம்சமும் புஷ்ஷிடம் இல்லை. அவரது ஒரே தகுதி, சீனியர் புஷ்ஷின் மகன். அவ்வளவுதான். வாரிசு அரசியல் வளர்க்க வந்த வம்சக் கொழுந்து.

[fliph:0882f156b5]<img src='http://www.kumudam.com/reporter/060504/pg8.jpg' border='0' alt='user posted image'>[/fliph:0882f156b5] டெக்ஸாஸின் கவர்னர் என்றால், அத்தனையன்றும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியல்ல அங்கே. ஒருமாதிரி ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் புஷ் தன் எதிர்கால நலனுக்கான சமூகசேவைகளை அங்கே புரிந்துகொண்டிருந்தார். எதிர்க்கட்சியான டெமாக்ரடிக் தலைவர் வேறு அப்போது அங்கே மிகுந்த செல்வாக்குப் படைத்தவராயிருந்தார். சீனியர் புஷ்ஷின் அரசியல் செல்வாக்குதான் மகன் புஷ்ஷ§க்கு உதவி செய்துகொண்டிருந்தது.

அதே செல்வாக்குதான், 2000_ம் வருஷப் பொதுத்தேர்தலுக்கான ரிபப்ளிகன் கட்சி வேட்பாளராக அவரை நிறுத்தவும் உதவிபுரிந்தது. அப்போது அவரைத் தேர்தலில் எதிர்த்து நின்றவர் அல்பர்ட் கோர் என்கிற அல்கோர். கிளிண்டனின் அரசில் துணை ஜனாதிபதியாக இருந்தவர். அற்புதமான திறமைகள் படைத்த அரசியல்வாதி. மகா சாமர்த்தியசாலி. மக்கள் மனம் புரிந்தவர். செல்வாக்கு விஷயத்தில் எந்தப் பிரச்னையும் வராதவர் என்று நம்பப்பட்டவர். மேலும், கவிதை மாதிரி இங்கிலீஷ் பேசுபவர். சந்தேகமில்லாமல் புஷ் உதைபடப்போகிறார் என்றுதான் எல்லோருமே நம்பினார்கள்.

அதற்கு ஏற்றமாதிரி, தேர்தலுக்கு முன் நடந்த பேட்டிகளில் அல்கோரின் பேச்சுத்திறமைதான் வெகுவாக சிலாகிக்கப்பட்டது. தொலைக்காட்சியில் அந்த நேருக்குநேர் வாதங்களைப் பார்த்த அமெரிக்க மக்கள், புஷ்ஷின் ஆங்கிலப் 'புலமை' கண்டு சிரித்தார்கள். மேலும் பிரச்னைகளை அவர் எப்படிக் கையாளுவார் என்பதே புரிந்துகொள்ள முடியாதவண்ணம் இருந்தது. ஒருவிஷயம் மட்டும்தான் எல்லோருக்கும் புரிந்தது. புஷ் தன் பிரசாரத்தில் கணிசமாக வரிகள் குறைக்கப்படும் என்று வாக்களித்திருந்தார். அது ஒரு நல்ல காரியம் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், அதற்காக மட்டுமே ஒருவரை அதிபராக்கிவிட முடியுமா என்ன? தேர்தல் முடிவுகள் வரத்தொடங்கிய தினம் அமெரிக்காவே பரபரப்புக்குள்ளானது. அதற்குமுன் அத்தனை நெருக்கமாக ஓட்டுகள் வந்ததில்லை. ஒன்று அல்லது இரண்டு. இரண்டு அல்லது மூன்று. இத்தனை நெருக்கமான வாக்குகள் வித்தியாசத்தில்தான் இரண்டு பேருக்குமே ஓட்டுகள் வந்திருப்பதாக எண்ணிக்கொண்டிருந்த இடங்களிலிருந்து செய்திகள் வந்துகொண்டிருந்தன.

'கோர்தான் ஜெயிக்கப்போகிறார்' என்று அமெரிக்காவெங்கும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஏனெனில், நிறைய ஓட்டுகள் உள்ள பெரிய பகுதியான ஃப்ளோரிடாவில் அல்பர்ட் கோர்தான் ஜெயிக்கிறார் என்று எக்ஸிட் போல் முடிவுகள் சொல்லிவிட்டன. மறுநாள் காலை அந்த வதந்தியும் உண்மையானது. எண்ணப்படாத சில ஓட்டுகள் தவிர, மிச்சமுள்ள எண்ணி முடிக்கப்பட்ட ஓட்டுகளின் அடிப்படையிலும் அல்கோர்தான் முன்னணியில் இருந்தார். இன்னும் மிச்சமிருந்தது 'எலக்டொரல் காலேஜ்' ஓட்டுகள் மட்டுமே. அதென்ன எலக்டொரல் காலேஜ்?

அமெரிக்காவில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கிற விஷயத்தில் எக்கச்சக்க விதிமுறைகள் உண்டு. நேரடியாக விழுகிற ஓட்டுகள், தபால் ஓட்டுகள்,
ராணுவத்தினர் ஓட்டுகள் என்று இங்கே நம்மூரில் இருக்கிற பல்வேறு விதமான ஓட்டுகள் மாதிரி, அங்கேயும் உண்டு. கூடுதலாக ஒன்று, எலக்டொரல் ஓட்டு. இது என்னவெனில், ஒவ்வொரு அரசியல் கட்சியும் தமது கௌரவப் பிரதிநிதியாகச் சிலரைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்தந்தத் தொகுதிகளிலிருந்து மக்கள் சபைக்குப் போகிற பிரதிநிதிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து இந்த 'கௌரவப் பிரதிநிதி'களின் எண்ணிக்கையில் கூடுதல் குறைச்சல் இருக்கும். தேர்தல் முடிவுகள் கொஞ்சம் முன்னப்பின்ன ஆகும்போது, இந்த கௌரவப் பிரதிநிதிகளின் ஓட்டு, வெற்றி பெறுபவரைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும். பாப்புலர் ஓட்டுகளில் தோற்றால்கூட இந்த எலக்டொரல் ஓட்டுகளின் மூலம் ஜெயித்துவிட முடியும்.

தற்கால அமெரிக்கர்களுக்கு இந்த விஷயத்தில் அத்தனை பரிச்சயம் கிடையாது. ஏனெனில் கடந்த நூறு வருஷங்களில் நடந்த அமெரிக்கத் தேர்தல்களில் இந்த கௌரவ ஓட்டுகளுக்கு அப்படியன்றும் முக்கியத்துவம் ஏற்பட்டதில்லை. கட்டக்கடைசியாக 1888_ல் நடந்த பொதுத்தேர்தலில் (க்ரோவர் க்ளீவ்லண்டும் பெஞ்சமின் ஹாரிசனம் மோதினார்கள் அப்போது. ஹாரிசன் வென்றார்.) எலக்டொரல் ஓட்டு அதிபரைத் தீர்மானித்திருந்தது. அதன்பின் ஏதுமில்லை.

இது நவம்பர் 2000. ஃப்ளோரிடாவில் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் புஷ் முன்னணியில் இருந்தாலும் ஒட்டு மொத்த இருபத்தைந்து எலக்டொரல் ஓட்டுகளும் அவருக்குப் போய்விடும். அதே ஒரு ஓட்டில் அல்கோர் முன்னணியில் இருந்தாரானால் அதே இருபத்தைந்து எலக்டொரல் காலேஜ் ஓட்டுகளும் அவருக்குப் போய்விடும்!

இந்த இக்கட்டான சூழலின்போதுதான் ஃப்ளோரிடா தேர்தலில் நிறைய முறைகேடுகள் நடந்திருப்பதாக கசமுசாக்கள் எழுந்தன. கள்ள ஓட்டு விவகாரங்கள். பல பேர் ஓட்டுப் போடவில்லை என்கிற தகவல்கள். போட்டதெல்லாம் யாரோ என்கிற குற்றச்சாட்டுகள். மறு வாக்கெடுப்பு முறையீடுகள். ரீகவுண்ட் விண்ணப்பங்கள்.

புஷ்ஷ§க்கு ஃப்ளோரிடாவில் பாப்புலர் ஓட்டுகளில் முன்னணி கிடைத்திருந்ததாக அறிவிக்கப்பட்டது. கொதித்தெழுந்த அல்கோரின் வழக்கறிஞர்கள், நீதிமன்றத்துக்குப் போனார்கள். தேர்தல் முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டுக்குத்தான் முதலில் வழக்குபோனது. ஆனால், நீதிபதிகள் கேஸை ஃப்ளோரிடா உயர்நீதிமன்றமே விசாரிக்கலாம் என்று திருப்பி அனுப்பினார்கள். இடையில் என்னென்னவோ கச்சடா கசமுசாக்கள் நடந்ததாக அமெரிக்க மீடியா பலநாள் கழுதையாகக் கத்திக்கொண்டிருந்தது நினைவிருக்கலாம். எந்த ஊராக இருந்தால் என்ன? ஜனநாயகம் என்றும் தேர்தல் என்றும் வந்துவிட்டபிறகு இதெல்லாம் சகஜமாகிவிட்ட விஷயங்கள். அவ்வளவுதான்.

பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த அல்கோரின் வெற்றிக்கனவு கலைந்தது. ஃப்ளோரிடாவில் புஷ் வெற்றி பெற்றதாக நீதிமன்றம் அறிவித்தது. மயிரிழையில் அவர் அமெரிக்க அதிபரானார்.

இந்த கலாட்டாக்களால்தான் 2000_ம் ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் ஜெயித்த புஷ், அடுத்து ஜனவரியில் அதிபராகப் பொறுப்பேற்றுக்கொள்ள நேர்ந்தது. ஆரம்பமே களைகட்டிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். மக்கள் மத்தியில் அப்போது எழுந்த சலசலப்பு அத்தனை சீக்கிரம் அடங்குவதாகத் தெரியவில்லை. புஷ்ஷை அவர்கள் ஒரு சந்தேகக் கண்ணுடனேயே பார்க்கத் தொடங்கினார்கள். மீடியா சுத்தமாக அவரை ஆதரிக்க மறுத்தது. அதிபர் மாளிகை அறிக்கைகளுக்கு ஏனோதானோவென்றுதான் பத்திரிகைகள் வேண்டாவெறுப்பாக இடம்கொடுத்தன. வழக்கமாக, ஒரு புதிய அதிபர் பதவி ஏற்றதும் இருக்கக்கூடிய பரபரப்புகள் ஏதுமில்லை. அதிபர் மாளிகை நிருபர்கள் பெரும்பாலான நேரம் கேண்டீனிலேயே இருந்தார்கள். 'சந்தேகமில்லாமல் இவர் சீக்கிரமே வீட்டுக்குப் போய்விடுவார்' என்று வெளிப்படையாகவே பேசத் தொடங்கினார்கள். அதிபரின் ப்ரஸ் மீட்டுகளுக்கு எப்போதும் கூடும் நிருபர் கூட்டத்தில் பாதிகூடக் கூடுவதில்லை என்றானது.

பார்த்தார் புஷ். என்னவாவது செய்து கொஞ்சமேனும் நல்ல பெயர் தேடிக்கொள்ளாவிட்டால் பிழைப்பது கஷ்டம் என்பது அவருக்குப் புரிந்தது. என்ன செய்யலாம்?

தான் வாக்களித்தபடி வரிகளைக் குறைக்கிற விஷயத்தையே முதலில் கையிலெடுத்தார். அது ஒரு நல்ல முயற்சி என்றுதான் சொல்லவேண்டும். சராசரி மக்களை பாதிக்கக்கூடிய பல்வேறு வரியினங்களில் புஷ் கணிசமான மாறுதல்களைச் செய்தார். பல வரிகளை நீக்கியதும் சிலவற்றைக் கணிசமாகக் குறைத்ததும் அவர் பதவிக்கு வந்ததும் செய்த நல்ல காரியம் என்று சொல்ல வேண்டும்.

ஆனால், இதனாலெல்லாம் யாரும் அங்கே திருப்தியடைவதாகத் தெரியவில்லை. ஒரு முழு பதவிக்காலத்தைக்கூட அவர் தாண்டுவது கஷ்டம் என்றுதான் எல்லோருமே சொன்னார்கள். ஏழெட்டு மாதங்களை ஒருவாறு புஷ் 'ஓட்டினார்' என்றுதான் சொல்ல வேண்டும். அவரது அதிபர் நாற்காலி பிழைத்ததற்கு மூலமுதற்காரணம் ஒசாமா பின்லேடன். அமெரிக்கா மீதான தனது இறுதித் தாக்குதலுக்கு அவர் அப்போது செப்டம்பர் 11_ம் தேதியை முகூர்த்த தினமாக நிச்சயித்திருந்தார்.

(தொடரும்)

Kumudam.com
Reply


Messages In This Thread
டாலர் தேசம் - by AJeevan - 04-22-2004, 10:25 AM
Re: டாலர் தேசம் - by AJeevan - 04-30-2004, 03:10 PM
Re: டாலர் தேசம் - by AJeevan - 05-04-2004, 03:53 AM
Re: டாலர் தேசம் - by AJeevan - 05-16-2004, 10:47 AM
[No subject] - by AJeevan - 05-23-2004, 01:37 AM
Re: டாலர் தேசம் - by AJeevan - 05-31-2004, 11:15 AM
[No subject] - by Eelavan - 06-02-2004, 03:03 PM
[No subject] - by AJeevan - 06-15-2004, 03:01 AM
[No subject] - by AJeevan - 06-25-2004, 01:25 AM
[No subject] - by AJeevan - 06-25-2004, 01:28 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)