04-30-2004, 03:10 PM
[align=center:e91ca97319]<img src='http://www.kumudam.com/reporter/020504/pg8.jpg' border='0' alt='user posted image'>[/align:e91ca97319]
<span style='font-size:22pt;line-height:100%'><b>பா.ராகவன்</b></span>
ஒரு தேசத்தின் சரித்திரப் பக்கங்களை ஒரு தீவிரவாதக்குழு கணிசமாக அபகரித்துக்கொள்வதென்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது விஷயத்தில், அமெரிக்கா_அல்கொய்தா யுத்தங்களுக்கு நிகராக இன்னொரு தேசத்தையும், இன்னொரு தீவிரவாத இயக்கத்தையும் உதாரணத்துக்குக்கூட எடுத்துக்காட்ட முடியாது.
ஏன், இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்தம் நடக்கவில்லையா, இஸ்ரேலுக்கும் ஹமாஸ§க்கும் பகையில்லையா, நேபாள அரசுக்கும் மாவோ தீவிரர்களுக்கும் சண்டையில்லையா என்று வரிசையாக இன்னும்கூட நாலைந்து உதாரணங்கள் தோன்றலாம். ஆனால், இவை எதுவுமே அமெரிக்கா_அல்கொய்தா யுத்தத்துடன் ஒப்பிட முடியாதவை.
மற்ற அனைத்து தேசங்களிலும் அரசுக்கு எதிராகப் போராடும் தீவிரவாத இயக்கங்களுக்கு இருக்கக்கூடிய நோக்கம் பொதுவானது. அதாவது விடுதலை வேட்கை சம்பந்தப்பட்டது அதெல்லாம். இலங்கையில் தமிழர்களின் சுதந்திரத்தை முன்வைத்து விடுதலைப்புலிகள் சண்டை போடுகிறார்கள். இஸ்ரேல் ஆக்கிரமித்திருக்கும் பாலஸ்தீன நிலப்பரப்பை மீட்பது தொடர்பான யுத்தம்தான் ஹமாஸின் அஜெண்டாவில் பிரதானமானது. நேபாளத்தில் மன்னர் ஆட்சிமுறை அருவருப்பாக இருக்கிறது என்பதுதான் அங்குள்ள தீவிரவாதிகளின் கோபம். செசன்யா, ஆப்கனிஸ்தான் போன்ற மற்ற பல தேசங்களிலும் இந்தியாவில் காஷ்மீரை முன்வைத்துச் செய்யப்படும் தீவிரவாத நடவடிக்கைகளிலும்கூட மேற்சொன்ன நிலவியல் காரணங்கள்தான் பிரதானமானவை.
ஆனால், அமெரிக்கா_அல்கொய்தா யுத்தம் ஒன்றுதான் தனிப்பகை தொடர்பானது. அமெரிக்காவை ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகுக்கும் எதிரியாக பின்லேடன் அறிவித்ததற்கும், யுத்தம் தொடர்ந்ததற்கும்கூட அரசியல்தான் காரணம். ஆனால், இது சற்று வேறுவிதமான அரசியல்.
எந்தச் சார்பும் இல்லாத கண்ணுடன் பார்க்க முடியுமானால் இந்த விஷயத்தை இப்படிப் பார்க்கலாம்:
அமெரிக்காவுக்கு இஸ்லாமிய தேசங்கள் மீது எந்தவிதத் தனிப்பகையும் கிடையாது. மாறாக, எண்ணெய் வளம் கொழிக்கும் அரபு தேசங்கள்தான் அமெரிக்காவின் சொத்து மதிப்பைக் கணிசமாக உயர்த்தி வந்திருக்கின்றன. அச்சத்தின் காரணத்தால் சில தேசங்களும், நட்பு அடிப்படையில் சில தேசங்களும், ஆக்கிரமிப்பு காரணமாகச் சில தேசங்களும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா தம் செல்வத்தை எடுத்தாண்டுகொள்ள அனுமதித்து வந்திருக்கின்றன. பதிலுக்கு, அமெரிக்காவிடமிருந்தும் பல உதவிகள் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, பொருளாதார, வர்த்தக, ராணுவ உதவிகள்.
இது இஸ்லாமிய தேசங்களில் மட்டும் நடந்த சங்கதியல்ல. அமெரிக்கா, எந்த ஒரு நாட்டின்மீது யுத்தம் தொடுத்தாலும் அல்லது உறவு வளர்த்தாலும் அதற்கு மேற்சொன்ன பொருளாதாரக் காரணம் அவசியம் உண்டு. 'தன்நலன்' என்பது தவிர அத்தேசத்துக்கு வேறு எந்தவிதமானதொரு சிறப்புக் காரணமும் எப்போதும் இருந்ததில்லை. அத்தேசத்தின் நானூறு ஆண்டு கால சரித்திரம் சொல்லும் உண்மை இதுவேயாகும். அதிபர்கள் மாறலாம். ஆட்சி மாறலாம். ஆனால், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மட்டும் எந்தக் காலத்திலும் மாறியதில்லை. தனக்கு லாபம் உண்டென்றால் அத்தேசம் இஸ்லாமிய நாடு என்றோ, வேறு மதங்களின் அடிப்படையில் ஆட்சி நடக்கும் நாடு என்றோ பார்ப்பதேயில்லை.
சொல்லப்போனால் கியூபாவுக்குத் தராத குடைச்சலை அமெரிக்கா வேறு எந்த ஒரு இஸ்லாமிய தேசத்துக்கும் அளித்ததில்லை. கியூபா என்ன இஸ்லாமிய நாடா? அட, வியட்நாமை எடுத்துக்கொள்ளுங்கள்! எத்தனை வருஷங்கள் நீண்ட யுத்தம்! எத்தனை ஆயிரம் பேர் மாண்டுபோனார்கள்! இத்தனைக்கும் வியட்நாம் ஒரு ஏழை நாடு. மெக்ஸிகோ, ருவாண்டா, ஈக்வடார், ஸ்பெயின் என்று தொடங்கி அமெரிக்கா தன் 'முத்திரை' பதிக்காத தேசமே இல்லை. இது விஷயத்தில் அமெரிக்காவுக்கு இஸ்லாமிய தேசம், கம்யூனிச தேசம், இன்னொரு தேசம் என்றெல்லாம் பாகுபாடுகள் கிடையாது. தனது சௌக்கியத்துக்காக மட்டுமே அமெரிக்கா இதுகாறும் யுத்தங்கள் செய்து வந்திருக்கிறது.
ஆனால், இஸ்லாமிய சமூகத்தின் பிரதிநிதியாகத் தன்னைத்தானே அறிவித்துக்கொண்டு, ஒசாமா பின்லேடன் அமெரிக்காவின்மீது யுத்தம் அறிவித்தது மாதிரி வேறு யாரும் செய்யவில்லை என்பதால்தான், அமெரிக்கா ஒரு இஸ்லாமிய விரோத நாடு என்பதான கருத்தாக்கம் மிகவும் வலுப்பெற்றது. உண்மையில் இதுவிஷயத்தில் அமெரிக்கா, இஸ்லாமிய விரோத தேசம் அல்ல. அமெரிக்கா நீங்கலான ஒட்டுமொத்த மானுட குலத்துக்கே விரோதமான நடவடிக்கைகளைத்தான் தொடர்ந்து அத்தேசம் எடுத்து வந்திருக்கிறது.
இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலான அமெரிக்க சரித்திரத்தை இதுவரை ஆராய்ந்து வந்ததில் நாம் பெறக்கூடிய விடை இதுவாகத்தான் இருக்கிறது.
இதையெல்லாம் ஒரு வல்லரசு, தொடர்ந்து வல்லரசாக நீடிப்பதற்காக மேற்கொள்ளும் சாதாரண நடவடிக்கைகள் என்றும் சொல்லலாம். ஆனால், இன்றைக்கு தீவிரவாதிகளால் உலகுக்கே அச்சுறுத்தல் என்று சொல்லி, தீவிரவாத ஒழிப்பு இயக்கத்தை முன்னின்று நடத்திக்கொண்டிருக்கும் தேசமும் அதுவே. அமெரிக்காவின் இந்நடவடிக்கையை ஒரு ஜம்போ சைஸ் 'சமூகநீதி'ப் போராட்டமாகப் பார்க்கிறவர்களும் உண்டு.
அதைக்கூட, தனக்கொரு ஆபத்து என்று வந்தபிறகுதான் அத்தேசம் மேற்கொண்டது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். உலக வர்த்தக மையத் தாக்குதல் என்பது வெறும் ஒரு கட்டடத்தை இடித்த விஷயமல்ல. அமெரிக்கா என்கிற மிகப் பிரும்மாண்டமான தேசத்தின் ஆன்மாவையே அசைத்துப் பார்த்த சம்பவம். உலகெங்கும் இருக்கும் தீவிரவாத இயக்கங்கள் மிச்சம் மீதி இருந்த துளி அச்சத்தையும், தயக்கத்தையும் உதறித் தள்ள வைத்தசம்பவம் அது. துணிந்து இறங்கினால் எப்பேர்ப்பட்ட கொம்பனையும் ஒரு ஆட்டு ஆட்டிப் பார்த்துவிட முடியும் என்கிற நம்பிக்கையை அவர்களுக்கு அழுத்தந்திருத்தமாக ஏற்படுத்திய சம்பவம்.
அந்த செப்டம்பர் 11_ம் தேதி சம்பவத்துக்குப் பிறகு அமெரிக்கா, ஆப்கன்மீது போர் தொடுத்ததும் தொடர்ந்து தாலிபன்கள், 'துண்டைக் காணோம், துணியைக் காணோம்' என்று கண்காணாமல் ஓடி மறைந்ததும் ஒசாமா மறைவிடத்துக்குப் போனதும், எல்லாம் ஒரு பொதுப்பார்வையில் நமக்குச் சொல்வது _ இனி இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கொட்டம் அடங்கிவிடும் என்பது. ஆனால், உண்மை அதுவல்ல. முன்னைவிடப் பல மடங்கு வீரியத்துடன் தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன என்பதற்கான மறைமுக அறிகுறியே இது. இதனை உறுதிப்படுத்தும்விதமாக உலகெங்கும் உள்ள பல முக்கியமான தீவிரவாத இயக்கங்களுக்கு இடையில் மிக நெருக்கமான ஒருங்கிணைப்பு ஏற்பட்டிருப்பதாக அமெரிக்கப் புலனாய்வுத் துறை சொல்வதை நாம் கணக்கில் எடுத்துக்கொண்டாக வேண்டும்.
சந்தேகத்துக்கு இடமின்றி இதெல்லாம் துரதிர்ஷ்டவசமானவைதான். நிம்மதியைக் குலைக்கிற விஷயங்கள்தான். ஆனால், இதெல்லாம் 'புதிய நூற்றாண்டு' என்று கோலாகலமாக வரவேற்கப்பட்ட 2000_வது வருஷம் பிறந்தபோது நிச்சயிக்கப்பட்டவையே. சென்ற அத்தியாயத்தில் பார்த்தோமல்லவா? ஒசாமாவின் நான்கு அம்ச செயல்திட்டம்? அதன் தொடர்ச்சிதான்!
படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தப் போகிற தனது செயல்திட்டங்களை ஒரு மங்களகரமான காரியத்துடன் ஆரம்பிக்க நினைத்துத்தான் ஒசாமா தன் மகனின் திருமணத்தைத் தன் செயல்திட்டத்தின் முதல் பாயிண்டாக வைத்திருக்க வேண்டும். உண்மையில் ஒரு கல்யாணக் கச்சேரி பண்ணிப் பார்க்கிற விதமான நிலையிலெல்லாம் அப்போது ஆப்கன் இல்லை. அதுவும் ஒசாமா மகனின் திருமணம்!
ஆனாலும், அது நடந்தது. சவுதி அரேபியாவிலிருந்து ஒசாமாவின் தாயார் ரகசியமாக ஆப்கனுக்கு அழைத்துவரப்பட்டு, அவரது முன்னிலையில் அத்திருமணம் நடந்தது. ஒசாமாவின் மூன்று பழைய மனைவிகளும் லேட்டஸ்ட் அடிஷனான ஏமன் புது மனைவியும் அபூர்வமாக அருகருகே நின்று ஆசீர்வதிக்க, ஒரு நல்ல தகப்பனாக இறைவனைப் பிரார்த்தித்து, தன் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார் ஒசாமா. திருமணப் பரிசாக ஒரு கவிதை வேறு எழுதி வாசித்து அளித்ததாகத் தெரிகிறது (ஏமன் துறைமுகத்தை ஒட்டிய பகுதியில் அமெரிக்கப் போர்க் கப்பலைத் தாக்கி வீழ்த்திய சம்பவத்தைக் குறிப்பிட்டு, ‘'திரிகள் இனி காணாமல் போய்விடுவார்கள். நமது ஒளிமயமான எதிர்காலம் வெகு பக்கத்தில்தான் இருக்கிறது; நீ ஹனிமூனை முடித்துவிட்டு சீக்கிரம் வந்தால் நான் உனக்கு அதைக் காட்டுகிறேன்' என்கிற அர்த்தத்தில் வருகிறது அக்கவிதை. மூல அரபியிலிருந்து ஆங்கிலத்தில் அர்த்தம் மட்டும்தான் கொடுக்கப்படுகிறதே தவிர, கவிதை வரிகளாகக் கிடைக்காத காரணத்தால் சரியான மொழிபெயர்ப்பு சாத்தியமாக இல்லை).
இங்கே ஒசாமாவின் மகன் திருமணம் நடந்த அதேசமயம், அமெரிக்காவிலும் ஒரு கல்யாணம் நடந்தது. அத்தேசம் தனது நாற்பத்து மூன்றாவது அதிபராக ஜார்ஜ் புஷ்ஷைத் தேர்ந்தெடுத்து வெள்ளை மாளிகைக்கு அனுப்பியது. முன்னதாக, 'விட்டால் போதுமடா சாமி' என்று பில் கிளிண்டன் தன் மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக்கொண்டு வீட்டுக்குப் போய்விட்டிருந்தார். அதிபராக அவர் இருந்த எட்டு வருஷ காலத்தில் ஒருநாள்கூட அவரால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. எத்தனை வழக்குகள்! எத்தனை விசாரணைகள்! எத்தனை அவமானங்கள்! எத்தனை பித்தலாட்டங்கள்!
தேசமே தீவிரவாத அச்சுறுத்தலில் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தவேளையில் பெண்கள் விவகாரத்தை முன்னிட்டு ஓர் அதிபர், காங்கிரஸின் நீதி விசாரணைக்கு உள்பட நேர்ந்தது _ ஆயிரம் சொன்னாலும் அமெரிக்க சரித்திரத்தில் அழிக்கமுடியாதபடிக்கு ஏற்பட்ட கறைதான். பின்னால் அல்கொய்தாவின் முழுநீளத் திருவிளையாடல்கள் ஆரம்பமானபோது, கிளிண்டன் ஆட்சிக் காலத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. புலனாய்வுத்துறை பல்குத்திக் கொண்டிருந்தது என்றெல்லாம் ஆளாளுக்கு சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்தார்கள்.
உண்மையில் கிளிண்டன், உள்நாட்டுப் பாதுகாப்பு விஷயத்தில் எந்தக் குறையும் வைக்கவில்லை. அவரது காலத்தில் அமெரிக்காவுக்குள் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை. அவரே செய்தது தவிர! தவிரவும் அல்கொய்தா நீங்கலான இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்கள் பலவற்றின் முகாம்கள் வட அமெரிக்கக் கண்டத்திலிருந்து கணிசமாகத் தூக்கியடிக்கப்பட்டதும் கிளிண்டன் காலத்தில் நடந்தவைதான். மத்திய ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலிருந்து ஹமாஸ§க்கு வந்து கொண்டிருந்த நிதி உதவிகளைத் தடுத்து நிறுத்தியது, சாரிடபிள் டிரஸ்டுகளின்பேரில் அமெரிக்காவில் நிதி வசூல் செய்து, தீவிரவாத இயக்கங்களுக்கு அளித்து வந்தவர்களை கோழி அமுக்குவது மாதிரி அமுக்கி, அடக்கி வைத்தது, ஆசிய நாடுகளுடன் கணிசமான நல்லுறவு முன்னேற்றம் கண்டது போன்ற அனைத்தும் கிளிண்டன் ஆட்சியில் நடைபெற்றவையே. இதையெல்லாம் அவர் செய்தாரா, அவர்பேரில் வேறு யாராவது செய்தார்களா என்பதெல்லாம் முக்கியமில்லை. ஆனால், அவரது ஆட்சிக்காலத்தில் நடந்தவை. ஆகவே, அதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொண்டாக வேண்டும்.
எல்லாவற்றையும்விட அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியிருந்த காலகட்டம் அது. ஹிலாரியின் சில புத்திசாலித்தனமான ஆலோசனைகளை அமல்படுத்தி, பல வெளிநாட்டு மென்பொருள் நிறுவனங்கள் அமெரிக்காவில் கடை திறக்க ஏற்பாடு செய்து, பிரச்னையைக் கணிசமாகத் தீர்த்தவர் கிளிண்டன். இதன்மூலம் பல லட்சக்கணக்கான அமெரிக்கப் பட்டதாரிகளுக்கு வேலை கிடைத்தது அங்கே.
கிளிண்டன் இருந்தவரை அமெரிக்காவில் எந்தவிதமான நாசவேலையையும் செய்யாமல் அமைதிகாத்த பின்லேடனுக்கு, அங்கே நடந்த ஆட்சி மாற்றமும் ஒரு விதத்தில் தனக்களிக்கப்பட்ட 'சிக்னலாக'த் தெரியத் தொடங்கியது. வந்திருப்பவர் புஷ். தமது பழைய பகையாளி சீனியர் புஷ்ஷின் திருக்குமாரர். 'கொஞ்சம் மக்குதான்' என்று பரவலாக எல்லோராலும் கணிக்கப்படுபவர். கண்ணில் மண்ணைத் தூவுவது சுலபம் என்று எல்லோருமே சொல்கிறார்கள். அதிகம் காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. உடனே ஆரம்பித்துவிடலாம் என்று அவருக்குத் தோன்றியது. புத்தரிலிருந்து தொடங்கலாம் என்று முடிவு செய்தார் _ பாமியானில் தவமிருந்த புத்தர்.
ஆப்கனுக்குக் கிடைத்துவந்த பல்வேறு சர்வதேச நிதியுதவிகள் அப்போது கணிசமாகத் தடைப்பட்டிருந்தன. அனைத்துக்கும் அமெரிக்க நிர்ப்பந்தங்களே மூலகாரணமாக இருந்தன. தாலிபன்களின் அடிப்படைவாத, அராஜக அரசை விமர்சித்துத் தொடர்ந்து அமெரிக்கா விடுத்துவந்த அறிக்கைகளும், ஆப்கனுக்குச் செய்துவந்த உதவிகளை நிறுத்தும்படி அது தன் தோழமை நாடுகளைக் கேட்டுக்கொண்டதும், ஐ.நா.வை இதுவிஷயத்தில் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததும் பின்லேடனுக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தன.
அமெரிக்காவின் இந்நடவடிக்கைக்குத் தம் எதிர்ப்பை ஆப்கன் அரசு காட்டியே தீர வேண்டும்; அந்த எதிர்ப்பு நடவடிக்கை, சர்வதேச கவனத்தைக் கவரும்விதமாகவும் இருக்க வேண்டும் என்று பின்லேடன் நினைத்தார். நன்கு யோசித்து, தீர்க்கமாக முடிவெடுத்தே பாமியான் மலைப்பகுதி புத்தர் சிலைகளைத் தம் இலக்காகத் தேர்ந்தெடுத்தார். தாலிபன் தலைவர் முல்லா ஓமரும் அதற்குச் சம்மதித்தார்.
(தொடரும்)
Kumudam.com