Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமா கனாக்கள்
#12
[align=center:2f9ab7cc0c]<img src='http://www.kumudam.com/theeranadhi/010404/pg4t.jpg' border='0' alt='user posted image'>[/align:2f9ab7cc0c]

<span style='font-size:21pt;line-height:100%'>புதிய ஈரானிய சினிமாவின் செயல்பாடுகளை சரிவர புரிந்துகொள்ள, ஈரானிய சரித்திரத்தில் நடந்த மாற்றங்களின் பின்னணியில், அதன் வளர்ச்சியை அறிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் அதனுடைய அயராத முயற்சியையும் அதனால் உருவாகும் கதாபாத்திரங்களின் உன்னதமான பயணங்களையும் ஜனநாயகமான சந்திப்புகளையும் நாம் முழுமையாக உணரமுடியும்.

நவீனமயமாக்குதலின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட ஈரானில், 1906ல் வறுமையினால் மக்கள் கலவரங்கள் பல தோன்ற, மொசாபர் ஒதின் ஷா என்ற மன்னன், தன் அதிகாரத்தை குறைக்கும் வகையில் அரசியல் சாசனம் அமைத்து மக்களவை உருவாக வழி வகுத்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து, 1908ல் மஸ்ஜித் சுலைமான் என்ற இடத்தில் எண்ணெய் ஊற்று கண்டுபிடிக்கப்பட்டதால், ஈரான் உலக மூலதன பொருளாதாரத்தின் வசம் இழுக்கப்பட, காலனிய சக்திகள் ஆங்கிலேய உருவிலும் ருஷ்ய உருவிலும், தெற்கிலும் வடக்கிலும் ஆதிக்கம் செய்யத் துவங்கின. அதே சமயம், ஈரானின் பொருளாதார வளர்ச்சி வேகமாக முன்னேற, உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்த, 1921ல் 'தூதே' என்ற ஈரானிய கம்யூனிஸ்ட் கட்சி தோன்றியது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஈரானில் சினிமா தியேட்டர்கள் தோன்றின. 1910களில் மௌன படங்கள், பெரும்பாலாக இந்தியாவில் அமைந்தது போலவே, அமெரிக்காவிலிருந்தும் பாரீஸிலிருந்தும்தான் அதிகமாக ஈரானுக்கு வந்தன.

ரேசா ஷாவின் ஆட்சி:

முதல் ரேசா, ஷா, 1926ல் முடிசூடி ஆட்சியில் அமர்ந்தார். அவரால் கல்வி அமைப்பிலும் சட்டத்திலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு, மதத்தின் அதிகாரம் குறைக்கப்பட்டது. பெண்கள் முகத்திரை அணிவதிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவர்களுக்குச் சாதகமாக விவாகரத்து சட்டம் சீர்திருத்தப்பட்டது. வெளி தேசங்களின் குறுக்கீடுகளிலிருந்தும் நாடு விடுவிக்கப்பட்டது. ஆனால், இச்செயல்களுக்கு மாறாக 1931ல் அவர் 'தூதே' கட்சியைத் தடை செய்து பலரை சிறைச்சாலையில் அடைத்தார். பெரும் கொடூரத்திற்கும் பயங்கரத்திற்கும் அவரது சிறைச்சாலைகள் பெயர் பெற்றன. பொது இடங்களில் கதை சொல்லும் 'தாஜியே' என்ற வடிவத்தையும் தடை செய்தார். இதனால் சினிமாவிற்கு வாய்ப்பு கூடியது.

1939ல் பரூக் யஜ்தீ என்ற கவிஞர் சிறைச்சாலையில் பயங்கர கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, பிறகு தூக்கிலிடப்பட்டார். இந்த காலகட்டத்தில் ஒரு சுய உணர்வுடைய நவீன முதலாளி வர்க்கம் அங்கு உருவாகவில்லை என்பதால், ஓரளவுக்கு வளர்ந்திருந்த நவீன முதலாளி வர்க்கம், பிரபுத்துவ அமைப்புகளையே ஆதரித்து வந்தன. அதே சமயத்தில் 19_ஆம் நூற்றாண்டில் மேலை நாடுகளில் உருவான கீழ்திசை வாதத்தினாலும் இனவாதத்தினாலும் ஈரான் பாதிக்கப்பட்டதால் ஈரானிய சமூகத்தினரிடையே, தாங்கள் உயரின ஆரியர்கள் என்றும் சிறுபான்மை மதங்களையும், இனங்களையும் சேர்ந்த மற்றவர்கள், கீழின மக்கள் என்றும் ஒரு கண்ணோட்டம் வளர்ந்தது. அதன் முக்கியப் பிரதிநிதியாக மன்னரே செயல்பட்டார். இதனால் அவர் இட்லருடன் உறவு ஏற்படுத்திக்கொண்டார். தெற்கில் ஆங்கிலேய ஆதிக்கத்தையும் வடக்கில் ருஷ்யாவின் ஆதிக்கத்தையும் எதிர்க்கவும் அந்த உறவு பலப்படுத்தப்பட்டது.

ஈரானிய திரைப்படம் _ முதல் கட்டம்:

இப்ராஹிம் மொராதி என்பவர் காஸ்பிய கடலோரம், 1929ல் முதல் சினிமா ஸ்டுடியோவை கட்ட இந்த காலகட்டத்தில் சிறுபான்மை மதங்களையும் இனங்களையும் சார்ந்த, ஆர்மேனியர்களும், யூதர்களும், ஜோராஸ்டியர்களும்தான் முதலில் ஈரானிய திரைப்படங்களை எடுக்கின்றனர். ஈரான் உயர்தர பர்ஷியன் மினியேச்சர் ஓவியங்களுக்கும், கலை வேலைபாடுகள் மிகுந்த கம்பளங்களுக்கும் பெயர் பெற்ற இடமாக இருந்தாலும் இஸ்லாமிய மதத்தில் பிம்ப படைப்புகளுக்கு ஒரு தடை இருப்பது இதற்கு ஒரு காரணம். இருப்பினும், நவீனமயமாக்குதலால் சினிமா தியேட்டர்கள் உருவாக, திரைப்படங்களுக்கு நடுத்தர வர்க்க மக்களிடம் ஆதரவு பெருகி வந்தது.

1930ல் ஈரானின் முதல் மௌனப்படமான, 'அபி அண்ட் ராபி' என்ற திரைப்படத்தை அவானஸ் ஓகாணியன் என்ற ஆர்மேனியர் உருவாக்கினார். இரண்டு மனிதர்களின் அனுபவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த நகைச்சுவை படத்தில், ஒருவர் உயரமானவர் மற்றவர் குள்ளமானவர். 1932ல் எடுக்கப்பட்ட, 'ஆஜீ அகா' என்ற அடுத்த நகைச்சுவை படம், சினிமாவை தீவிரமாக வெறுக்கும் ஒரு மத பற்றுடையவர், இறுதியில் ஒரு சினிமா நடிகராக மாறுவதைச் சொல்கிறது. பாரசீக மொழியில் முதல் பேசும் செய்திப் படமும் அதே வருடத்தில் திரைக்கு வந்தது.

இதற்குப் பிறகு, சேபாந்தா என்ற ஈரானிய எழுத்தாளரின் திரைக்கதையைத் தழுவி, இந்தி மொழியில் 1931ல் 'ஆலாம் ஆரா' என்ற முதல் பேசும் படத்தையும், 1932ல் தமிழில் 'காளிதாஸ்' என்ற முதல் பேசும் படத்தையும் உருவாக்கிய அர்தேஷிர் ஈரானி, தனது இம்பீரியல் ஃபிலிம் கம்பேனியின் கீழ், 'லோர் கர்ல்' என்ற பெயரில் முதல் ஈரானிய பேசும்படத்தை 1933ல் உருவாக்கினார். இந்த பேசும் பாடும் படம் அங்கு பெரிய வெற்றியை அடைந்தது. பிறகு சேபாந்தா சிறிது காலம் இந்தியாவிலேயே தங்க, 1934ல் 'ஷிரின் அண்ட் பராத்', 1936ல் 'தி டார்க் அய்ஸ்', 1937ல் 'லைலா மஜ்னு' போன்ற திரைப்படம் எல்லாமே பம்பாயிலோ அல்லது கல்கத்தாவிலோ தயாரிக்கப்பட்டன.

முகமது ரேசா ஷாவின் ஆட்சி _ முதல் கட்டம்:

ஈரானுக்கு 1941ல் வந்த ஜெர்மானிய இராணுவத்தை வெளியேற்ற, முதல் ரேசா ஷா தயங்கியதால், ஒரு பக்கம் அமெரிக்க இராணுவம் ஈரானில் குவிய, மறுபக்கம் ருஷ்ய இராணுவம் குவிந்தது. இதனால் அவர் சிம்மாசனத்தைத் துறந்து தென்ஆப்ரிக்காவிற்கு ஓடிவிட, அவருடைய மகன் ரேசா ஷா முடிசூடினார். 1942ல் அமெரிக்கப் பிரச்சார ஆவண படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்துக் கொள்ள, ருஷ்யா ஈரானின் 'தூதே' கட்சியை ஆதரித்தது.

1945ல் ருஷ்யா, குர்திஸ்தான், அசர்பைஜான் பகுதிகளிலுள்ள எதிர் சக்திகளை ஆதரிக்க, ஈரான் துண்டு துண்டாக சிதறும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் மதஅடிப்படைவாதம் வளர்ந்து வந்தது, 1946ல் அகமது காஸ்ரவி என்ற சமூக சீர்திருத்தாளர் அந்த அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டார். அதே சமயம், அமெரிக்கா மற்றும் ருஷ்யாவின் செயல்பாடுகளால் உலக அரசியல் மீது ஈரான் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவையும் அதிகரித்தது.

இந்தச் சூழலில் உருவான பல வாய்ப்புகளை ஈரானிய அறிவு பிரதிநிதிகள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டனர். தூதே கட்சி ஈரானிய அரசியல் கலாச்சாரத்தை அடியோடு மாற்றியமைத்து, ஒரு புரட்சிகர முன்னணி தொழிலாளர்களை வழிநடத்திச் செல்லுவதற்கான வாய்ப்பை உருவாக்கியது. மக்கள் அவையிலும் ஒரு புதிய வேகம் பிறந்தது. ஈரானின் நவீன முதலாளி வர்க்கம் பிரபுத்துவ அமைப்பை ஆதரித்து வந்தாலும், அதன் சுயஉணர்வு வளரத் துவங்கியது.

1949ல் முகமது ரேசா ஷாவை கொலை செய்ய நடந்த முயற்சியின் விளைவாக, இந்தப் புதுமையான அரசியல் முயற்சிகள் நிறுத்தப்பட்டன. 'தூதே' கட்சி தடை செய்யப்பட்டு தலைமறைவாக இயங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஈரானிய திரைப்படம் _ இரண்டாவது கட்டம்:

ஈரானிய தியேட்டர்களை 1942லிருந்து அமெரிக்க பிரச்சார ஆவணப் படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுடன், ஈரானியர்களுக்கு சினிமா தொழில்நுட்பப் பயிற்சியை அளிக்க, தேவையான உறவுகளை ஈரானிய அரசு ஏற்படுத்திக் கொண்டது. இந்தப் பின்னணியில், 1948ல் 'வாழ்க்கையின் புயல்' என்ற பாரசீக பேசும் படம் முழுமையாக, ஈரானிலேயே முதல் முதலாக இஸ்மாயில் குஷான் என்பவரால் உருவாக்கப்பட்டது. 1949ல் 'இளவரசின் கைதி' என்ற படத்தையும், 1951ல் 'மயக்கத்தை அளிக்கும் காதல்' என்ற இரு ஆண்கள் ஒரே பெண்ணை காதலிக்கும் முக்கோணக் காதல் கதையையும், 1952ல் தந்தையும் மகனும் ஒரே பெண்ணைக் காதலிக்கும் 'வெள்ளை கை உரை' என்ற படத்தையும் இஸ்மாயில் குஷான் உருவாக்கினார். ஆனால் அமித் தபாஷி தனது நூலில் குறிப்பிடுவது போல், கல்வி அறிவு பெற்ற ஈரானிய நடுத்தர வர்க்க வாழ்க்கையை வெளிப்படுத்துவது அந்தக் கட்டத்திலுள்ள ஈரானிய சினிமாவிற்கு மிகவும் கடினமான ஒரு செயலாக இருந்தது. அதை சாமர்த்தியமாக, 1960களின் இறுதியிலிருந்துதான் பஹராம் பேசாயாலும் தாரியூஷ் மெஹ்ருஜீயினாலும் கடக்க முடிகிறது.

முகமது ரேசா ஷாவின் ஆட்சி _ இரண்டாவது கட்டம்:

மத அடிப்படைவாதிகளால், 1951ல் பிரதம மந்திரி ராஜ்மாரா கொல்லப்பட, அந்தப் பதவிக்கு வந்த மோசாதிக் பல முற்போக்கான சீர்திருத்தங்களைச் செய்தார். எண்ணெய்க் கிணறுகளையும் ஆலைகளையும் தேசிய உடைமைபடுத்தினார். 1953இல் ஷாவின் அதிகாரம் மக்களவையின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டதல்ல என்று அவர் அடித்துக் கூற, ஷா மன்னன் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. பிறகு சி.ஐ.ஏ.வின் சூழ்ச்சியால் மோசாத்திக்கின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.. 'தூதே' கட்சி அவரை இந்தச் சமயத்தில் ஆதரிக்காமல் இருந்தது ஒரு பெரிய கொடுமை. நாடு திரும்பிய ஷா மன்னனால், அமெரிக்க அரசின் ஆதரவுடன் ஒரு பயங்கரமான அராஜக ஆட்சிக்கு வழிவகுக்க முடிந்தது. 1958ல் ஷாவின் 'சவாக்' என்ற ரகசிய போலீஸ் படை தோன்றி, தனது அராஜகத்தை மக்கள் மீது செலுத்தி பல கொடூரங்களை நடைமுறையாக்கியது. இது போதாதென்று 1960ல், பல எதிர்ப்புகளை ஒதுக்கி, பக்கத்திலுள்ள அரபிய நாடுகளின் வெறுப்பை அதிகரிக்கும் வண்ணம், ஷா அரசு இஸ்ரேலை அங்கீகரித்தது.

1961ல் அயத்துள்ளா புரௌஜர்தி காலமாக அடுத்த ஷீயைத் மத தலைவர் யார்? என்ற பிரச்சனை பெரிதாக வெடித்தது. இதற்குத் தீர்வுகாண மத குருக்களின் மாபெரும் கூட்டம் தெஹரானில் நடக்கிறது. அதேசமயம், மதச் சார்பற்ற ஈரானிய அறிவுப் பிரதிநிதிகளை, பயங்கரமாகத் தாக்கி எழுதப்பட்ட ஜலால் ஆலேவின் 'வெஸ்டாக்சிகேஷன்' (மேற்கு விஷ பரவல்) புத்தகம் ஒரு அதீத வரவேற்பைப் பெறுகிறது. இப்படி வேகமாக வளர்ந்து வரும் எதிர்ப்பை சமாளிக்க, 1962ல் விவசாயத்திலும் தொழில்துறையிலும் சீர்திருத்தங்களை அமல்படுத்த, ஷா அரசு வெண்மைப் புரட்சி என்ற திட்டத்தை அறிவிக்கிறது. ஆனால், கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல், 1963ல் இதற்கு எதிராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷீயைத் மதத் தலைவர் அயத்துள்ளா கொமினி ஒரு பெரும் போராட்டத்தில் இறங்கினார். அது ஒடுக்கப்பட்டு, கொமினி முதலில் துர்க்கிக்கும் பிறகு ஈராக்குக்கும் நாடு கடத்தப்படுகிறார். இப்படி, ஜனநாயகத்திற்கு எதிராக ஷா செய்த பல அட்டுழீயங்கள் அவருக்கு குழிவெட்டி வருகின்றன என்பதை அறியாமலே அவர் தன் செயல்களைத் திருத்திக் கொள்ளாமல், தன் இஷ்டப்படி நாட்டை ஆண்டு வந்தார்.

ஈரானிய திரைப்படம் _ மூன்றாவது கட்டம்:

<img src='http://www.kumudam.com/theeranadhi/010404/pg4.jpg' border='0' alt='user posted image'>
ஈரானில் தேசியத்தை மையப்படுத்தி 1953லிருந்து படங்கள் உருவாகத் துவங்கின. இதில் லெப்டினன்ட் முகமது தெராம்பகேஷின் திரைக்கதையைத் தழுவி, குலாம் ஹ§சைன் நக்ஷின்னே என்பவரால் இயக்கப்பட்ட, 'The Nationalist'(தேசியவாதி) என்ற படமும், 1957ல் 'Ya ques Layth Saffari' (யாக்ஸ் லேத் சபாரி) என்ற படமும் குறிப்பிடத்தக்கவை. ஆனால், தேசியத்தை மிக மோசமான தந்தை ஆதிக்க கருத்துகளுடனும் (Patriarchal Ideals) ஜஹேலி என்ற ஒரு புதிய சினிமா வகையுடனும் சேர்த்து வெளியிட்ட பெருமை இஸ்மாயில் குஷானுக்கே சேரும். இஸ்மாயில் குஷானின், 'மக்மலி'(Makhmali, 1962) மற்றும் 'பாரீஸில் ஏப்ராம்' (Ebram in Paris, 1964) என்ற திரைப் படங்கள் குறிப்பிடத்தக்கவை. இந்தப் படங்கள் பிற்போக்கான சக்திகளையும் கொடூரமான ஆட்சியையும் நியாயப்படுத்தின.

முகமது ரேசா ஷாவின் ஆட்சி _ மூன்றாவது கட்டம்:

ஷா மன்னன், 1967ல் குடும்பப் பாதுகாப்பு சட்டத்தை நிறுவி, ஓர் ஆண், பல பெண்களை திருமணம் செய்யும் மரபை தடைசெய்தார். விவாகரத்திலும் பல முட்டுக்கட்டைகளை உருவாக்கும் திருத்தங்களைச் செய்தது, ஷீயத் அமைப்பை மேலும் உசுப்பியது. அதை எதிர்கொள்ள, 1968ல் பெண்களை வேலைக்கு அமர்த்தி, ஷாவின் அறிவொளி இயக்கம் பெருமளவில் கிராமங்களுக்குச் சென்று, அங்கு எழுத படிக்கச் சொல்லித் தரும் வகையில், அவருடைய அரசின் பெருமையைப் பறைசாற்ற பயன்படுத்தபட்டது. இதற்கிடையில் மதச் சார்பற்ற சக்திகளை ஒன்றுசேர்க்கும் முயற்சியின் முதல் கட்டமாக, எல்லா எழுத்தாளர்களையும் ஒன்றுபடுத்தும் எழுத்தாளர் கழகம் உருவாகியது. அது அவர்களுடைய ஜனநாயக அரசியல் தாக்கத்தையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது. அதே சமயம், உலக மூலதன பொருளாதாரம் வளர்ந்து வரும் நுகர் பொருள் சந்தையை, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, நுகர்பொருள் சித்தாந்தத்தை நிலைநாட்டி வருகிறது. மதச் சார்ப்பற்ற அறிவாளிகளோ அதிகமாக படித்த வர்க்கங்களிலும் நகரங்களிலும் குறிப்பாக, தெஹரானில் மட்டும்தான் இருக்கிறார்கள் என்பதால், ஈரானின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.

ஆனால், 1971ல் சியாங்கால் கெரில்லா இயக்கம், ஷாவின் இராணுவத்தால் ஒடுக்கப்பட, அரசியல் விழிப்புணர்வு அதிகரிக்கிறது. குறிப்பாக, தெஹரான் பல்கலைகழகத்தில் போலீஸ§க்கும், துணிச்சாலான மாணவர்களுக்கும் அடிக்கடி போராட்டங்கள் நிகழ்கின்றன. இந்தச் சூழலில் பிரசுரங்களும் கட்டுரைகளும் அதிகமாகப் புழங்க ஆரம்பிக்கின்றன.

புதிய ஈரானிய சினிமா _ முதல் கட்டம் :

<img src='http://www.kumudam.com/theeranadhi/010404/pg4a.jpg' border='0' alt='user posted image'>
1960களின் துவக்கத்திலிருந்தே மாற்று கருத்துகள் ஈரானிய சினிமாவைப் பாதிக்கத் துவங்கின. இதற்கு ஒரு காரணம், 1960களின் இறுதிக்குள் உலக சினிமாவின் பல அரிய படைப்புகள் ஈரானில் ஒரு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி இருந்தன. 1962ல் தொழுநோயின் விளைவுகளை கவிநயத்துடன் வெளிப்படுத்திய ஃபரோ ஃபரூக் அஜாதின், 'The House is Black' (இருண்ட வீடு) என்ற படத்தின் அமைப்பு, 1980களிலும் 1990களிலும் படைக்கப்பட்ட புதிய ஈரானிய சினிமாவின் படைப்புகளை எதிர்பார்க்கிறது. 1964ல் இப்ராகிம் குலஸ்தானினால் உருவாக்கப்பட்ட 'செங்கல்லும் கண்ணாடியும்' (The Brick and the Mirror) 1967ல் ஃப்ரேயுதன் ரஹனேமா உருவாக்கிய 'ஃபர்ஸ்ஸிபோலிஸில் செயவாஷ்' (Seyavash in Persipolis) என்ற படங்கள் இந்த முயற்சியை மேலும் விரிவுபடுத்தின.

ஆனால் இந்தியாவில் 1956லேயே சத்தியஜித் ரே 'பதேர் பாஞ்சாலி'யை எடுத்திருந்தும் 1969ல் மிருனாள் சென் எடுத்த 'புவன் ஷோம்' என்ற படத்துடன் புதிய இந்திய சினிமா துவங்குவதாகக் கருதப்படுவது போல், அங்கும் 1969ல் தாரியூஷ் மெஹ்ருஜூயி என்பவரின் 'பசு' (The Cow) என்ற படத்திலிருந்துதான் புதிய ஈரானிய சினிமா துவங்குவதாகக் கருதப்படுகின்றது. ஏனென்றால் இங்கு எப்படி மிருணாள் சென்னின் படத்திற்குப் பிறகு அம்மாதிரியான படங்கள் பெருகியதோ, அதே மாதிரி அங்கும் தாரியூஷின் முயற்சிக்குப் பிறகுதான் புதிய ஈரானிய படைப்புகள் பெருகத் துவங்கின. லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்ற இவரின் படத்தில், ஒரு குடியானவன் மிகுந்த பாசத்துடன் வளர்த்து வரும் பசு இறந்து விட, அதிலிருந்து அதன் ஆத்மாவை உள்வாங்கியது போல் அவன் செயல்படத் துவங்குகிறான். இப்படி உருவக ரீதியில், அன்றாட கிராம வாழ்க்கையின் அவலங்களை ஒரு சமூக யதார்த்த பாணியில் பதிவுசெய்து ஈரானிய சமூகத்தின் நிலைமையை தாரியூஷ் நுணுக்கமாக விமர்சிக்கிறார். எழுத்தாளர் குலாம் உசைன் சையத்தின் திரைக்கதையில் உருவான இந்தப் படத்திற்கு முதலில் ஈரானின் கலாச்சார மந்திரி அலுவலக அனுமதி வழங்கியதுடன், தயாரிப்பிற்குத் தேவையான தொகையையும் வழங்கியது. ஆனால், படம் வெளிவந்த பிறகு அதை தடைசெய்துவிட்டது. இருப்பினும் சர்வதேச திரைப்பட விழாக்களில் அது மிகுந்த வரவேற்பைப் பெற்று, பரிசுகளை வென்றவுடன் தடை நீக்கப்பட்டது. ஏனென்றால், வெளிநாடுகளில் படித்து வரும் ஈரானிய மாணவர்கள் ஈரானிய அரசை கடுமையாக விமர்ச்சித்த Êசூழலை எதிர்கொள்ள, ஈரானில் படைப்பாளிகள் எவ்வளவு சுதந்திரத்துடன் இயங்க முடிகிறது என்பதை ஈரானிய அரசு இந்த வாய்ப்பை பயன்படுத்தி பறைசாற்ற விரும்பியது.

அடுத்ததாக அதே 1969ல், தெற்கு கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் திரைப்படத் தொழில் நுட்பங்களையும் கலை நுட்பங்களையும் பயின்று நாடு திரும்பிய பஹமான் ஃபர்னமாரா, ஹோஷாங் கோல்ஷிரியின் நாவலைத் தழுவி எடுத்த 'இளவரசன் ஏதேஜாப்' (Prince Ethezab) ஷாவின் ஆட்சியை உருவக ரீதியில் விமர்ச்சித்தது. இதனால் அவருடைய அடுத்த முயற்சிகளுக்குப் பல தடைகள் உருவாகின. நாவலை தடை செய்யாவிட்டாலும், இயக்குனர் திரைக்கதையை, கலாச்சார மந்திரி அலுவலகத்தின் அனுமதியைப் பெற சமர்ப்பித்த போது, கோல்ஷிரியின் பெயரைக் கண்டவுடன் அதற்கு அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. சில மாதங்களுக்குப் பிறகு, ஃபர்னமாரா கோல்ஷிரியின் பெயரை அகற்றிவிட்டு, தன் மனைவியின் பெயரில் வேண்டுமென்றே மறுபடியும் அதே திரைக்கதையை சமர்ப்பித்தார். ஆனால், அதை மிகவும் பாராட்டி அனுமதியை உடனடியாக வழங்கியது அரசு. ஈரானிய தேசிய தொலைக்காட்சியின் கீழ் இயங்கும் நிறுவனமான டெல் ஃபிலிம் என்ற அமைப்பு, படத்தைத் தாயரிக்க முன் வந்தது. அந்தப் படைப்பு கான்ஸ் திரைப்பட விழாவில் முக்கிய பரிசான 'க்ரான்ட் ப்ரியை' வென்றது. ஈரானிய அரசியல் சூழலுக்கு எதிரான கருத்துகளும், மதத்திற்கு எதிரான கருத்துகளும், நிர்வாணக் காட்சியும் படத்தில் இருந்ததால் படத்தை ஈரானில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டது. 1970ல் குழந்தைகளின் சிந்தனை வளர்ச்சிக்காக ஈரானிய திரைப்படத்துறையில் ஒரு மையம் அமைக்கப்பட்டது. அதன் மூலம் ஈரானிய சினிமாவை குழந்தைகளின் பக்கம் திருப்பி, ஒரு எளிமையான வடிவத்தை உருவாக்கிய பெருமை அப்பாஸ் கியரோஸ்தமியின் 'எராட்டியும் தெருவும்' (Bread and Alley) என்ற படத்தைத்தான் சேரும்.

முகமது ரேசா ஷாவின் ஆட்சி _ இறுதி கட்டம் :

எண்ணெய் உற்பத்தி செய்யும் மத்திய கிழக்கு நாடுகளின் கூட்டு சேர்க்கை அறிவிப்பால், 1973ல் எண்ணெய் விலை உயர, ஈரானின் வருமானம் பல மடங்கு அதிகரிக்கிறது. ஈரானை மத்தியகிழக்கு ஜப்பானாக உருவாக்கப் போவதாக, ஷா பறைசாற்றுகிறார். ஆனால், அதேசமயம், குலாம் உசைன் என்ற எழுத்தாளரை சிறையில் அடைத்து கொடுமைபடுத்துகிறார். இது போதாது என்று, 1976ல் தனது பல்ஹவி அரச வம்சாவழியை முதன்மைப் படுத்தும் காலண்டரை ஷா அறிமுகம் செய்து, அதன் 2500வது ஆண்டு விழாவை ஏகபோகமாகக் கொண்டாட, எல்லா தேச தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பி வரவேற்கிறார். அந்த மாபெரும் கூட்டத்தில், சைரஸ் மன்னனின் கல்லறையை நோக்கி 'நீ நிம்மதியாக உறங்கு, நாங்கள் விழித்துக் கொண்டிருக்கிறோம்' என்று அறைகூவல் விடுக்கிறார். இந்தச் செயல்களைப் பார்த்து மக்கள் மேலும் ஆவேசம் அடைந்தனர் என்பது அவரது புலனுக்கு எட்டவில்லை.

1977ல் முற்போக்கு ஈரானிய படைப்பாளி அலி ஷரியாத்தி, லண்டனில் காலமானபோது, அதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், ஈரானிய எழுத்தாளர்களும் கவிஞர்களும் தெஹரானில் உள்ள கொய்வதே இன்ஸ்டிட்யூட்டில் ஒன்று கூடி பத்து நாட்கள் கவிதை வாசிக்கின்றனர். இந்தக் கவிதை வாசிப்பு ஒரு துணிச்சலான எதிர்ப்பைப் பதிவு செய்தது. 1978ல் ஷா மன்னனின் Êஆட்சிக்கு எதிர்ப்புகளும் கலவரங்களும் அதிகரிக்க அவற்றை வெளியிலிருந்த படியே தலைமையேற்று கொமினி வழி நடத்துகிறார். 1979ல் கலவரங்கள் உச்சகட்டத்தை அடைய, ஷா மன்னன் நாட்டை விட்டு வெளியேற, கொமினி நாடு திரும்புகிறார். மாணவர்கள் அமெரிக்க தூதரகத்தின் கட்டிடத்தைக் கைப்பற்றி அங்கிருக்கும் அமெரிக்கர்களை சிறை வைக்கின்றனர். 444 நாட்கள் நீடித்த இந்த முற்றுகை, அமெரிக்காவில் கார்ட்டரின் ஆட்சி முடிந்து ரேகனின் அராஜக ஆட்சி துவங்க வழி வகுத்தது. நிகழ்வுகளின் இத்தோற்றத்திற்கு முரணாக, சி.ஐ.ஏ. கொமினியை ஆதரித்தது என்பதற்கும் சான்றுகள் உள்ளன. குறிப்பாக, ஈரானை ஆறாவது உலக சக்தியாக மாற்ற, ஷா முடிவெடுத்து, இருபது பில்லியன் டாலர்கள் செலவில் பல ஆயுதங்களையும் இராணுவ தொழில் நுட்பங்களையும் வாங்கியது, மத்திய கிழக்கில் இஸ்ரேலை விட பலமான சக்தி வளர வழி வகுத்துவிடும் என்பதால், அமெரிக்க அரசு கொமினிக்கு மறைமுகமாக ஆதரவு வழங்கியது. ஷாவின் ருஷ்ய பயணமும் அதன் கோபத்தை ஏற்கெனவே தூண்டியிருந்தது.

புதிய ஈரானிய சினிமாவின் வளர்ச்சி:

1969ல் துவங்கிய புதிய ஈரானிய சினிமா 1970களில் வேகமாக வளர துவங்கியது. 1974ல் ஈரானிய பராம்பரிய கலை நுணுக்கங்களையும், பிராண அதிர்வுகளையும், அவற்றின் நனவிலி ஆழ்மனது தாக்கங்களையும் ஆய்வு ரீதியாக நன்கறிந்து புராண மையங்களை ஒரு புதிய நிலைக்குத் திருப்புவதை பஹராம் பேசாய் தனது 'அந்நியனும் மூடுபனியும்' (The Stranger and the Fog) என்ற படைப்பின் மூலம் செய்கிறார்.

1975_ல் சோராப் சாஹித் உருவாக்கிய 'ஸ்டில் லைஃப்' (Still Life) மெய்மையை அடக்கத்துடனும் அமைதியுடனும் ஆவணப்படுத்தி, கியரோஸ்தமி 'ரொட்டியும் தெருவும்' படத்தில் பயன்படுத்திய யூக்தியை மேலும் செழுமைப்படுத்தியது. இப்படி புதிய ஈரானிய சினிமாவின் முதல் தலைமுறை 1969களில் தோன்றி 1970களின் இறுதியில் தாரியூஷ் மெஜ்ருஜீயீ, பஹமான் பர்மனாரா, அமித் நதேரி, அப்பாஸ் கியரோஸ்தமி, பஹராம் பேசாய் போன்றவர்களின் படைப்புகள் மூலம் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொண்டது.

1973_ல் தெஹரானில் திரைப்பட விழா ஒன்றை ஷாவின் அரசு ஏற்பாடு செய்தது. பஹமான் ஃபர்மனாராவின், 'இளவரசன் ஏதேஜாப்' படத்தின் மீதான தடை திரைப்பட விழாவை ஒட்டி நீக்கப்பட்டது. கிட்டத்தட்ட அதில் ஒன்பது நிமிடங்கள் துண்டிக்கப்பட்டன. ஆனால், அதில் இருந்த நிர்வாணக் காட்சியும், ஒருவன் சுயமைதுனம் செய்யும்போது மாறி மாறி வரும் மத சடங்கு காட்சிகளும் அகற்றப்படவில்லை. மதச்சார்புடைய சக்திகள் இன்னும் ஒரு பெரிய பலத்தை பெறாதலால் ஃபர்மனாராவை அந்தச் சக்திகளால் அப்போது எதிர்க்க முடியவில்லை. ஆனால், 1979_ல் இஸ்லாமிய குடியரசு வரப்போகிறது என்றறிந்தவுடன், ஃபர்மனாரா குடும்பத்தோடு கனாடாவுக்கு புலம் பெயர்ந்துவிட்டார்.

இஸ்லாமிய குடியரசு :

1979_ல் கொமினி நாடு திரும்பியதும், ஈரான் இஸ்லாமிய குடியரசாக மாற்றப்பட்டது. அதை நியாயப்படுத்தும் அரசியல் சாசன திருத்தங்கள் வேகமாக அமலுக்கு வந்தன. இதனாலும் அமெரிக்க தூதரக அலுவலகத்தில் நடந்த முற்றுகையினாலும், ஈரானுக்கும் அமெரிக்காவும் உள்ள தூதரக உறவுகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டன. 1980_ல் ஈரானுக்கும் ஈராக்குக்கும் போரை உருவாக்கி, இரு பக்கங்களிலும் 1988 வரை நடந்த கொடூரங்களை முதலில் ரேகன் அரசும், பிறகு ஜார்ஜ் புஷ்ஷின் அரசும் வேடிக்கை பார்த்தது. போரைக் காரணமாகச் சுட்டிக்காட்டி, ஈரானின் இஸ்லாமிய குடியரசு பல புதிய ஒடுக்குமுறைகளை ஏவியது. பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. பேராசிரியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். மாணவர்களின் சீட்டு கிழக்கப்பட்டது. செய்தித் தாள்களும் பத்திரிகைகளும் மூடப்பட்டன. தெருவில் நடத்தப்படும் ஜனநாயகமான அமைதியான ஊர்வலங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

1981_ல் மதச் சார்பற்ற சக்திகளின் எதிர்ப்பை முறியடிக்க சையது சுல்தான்புரை இஸ்லாமிய குடியரசு தூக்கி விடுகிறது. 1982_ல் பாரீஸ் நகரத்திற்குத் தப்பிச் சென்ற குலாம் உசைன் சையத், மூன்று வருடங்கள் கழித்து அங்கு மரணமடைகிறார். 1983_ல் 'சொரைய்யா இன் கோமா' (Sorayya in Coma) என்ற இஸ்மாயில் ஃபஸ்ஜியின் நாவல், நாட்டுக்கு வெளியே வேகமாக வளர்ந்துவரும் மதச் சார்பற்ற அறிவாளிகளின் முன்னேற்றத்தை மையமாக வைத்து எழுதப்படுகிறது. 1989_ல் அயத்துள்ளா கொமினியின் மரணம் புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கினாலும் மாற்றங்கள் ஏற்படுவது அரிதாகிறது.

புதிய ஈரானிய சினிமாவின் இருண்ட காலம்:

1979_ல் ஏற்பட்ட கலவரங்களிலும் புரட்சியிலும் அதிகமாகத் தாக்கப்பட்ட கட்டிடங்கள் சினிமா தியேட்டர்கள்தான். அபதானிலுள்ள ரெக்ஸ் தியேட்டர் தீக்கிரையானபோது, 400 பார்வையாளர்கள் கொடூரமாக எரிந்து சாம்பலானார்கள். மொத்தத்தில் நாடு முழுவதும் 180 தியேட்டர்கள் தரைமட்டமாகின. ஈரானில் அதுவரை எடுக்கப்பட்ட 2208 படங்கள் மறு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் 1956 படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. பல திரைப்பட இயக்குனர்களும் கதை ஆசிரியர்களும் சிறை செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது . இந்த ஒடுக்குமுறையினால் வெளியிலிருந்த இயக்குனர்கள் குழம்பிப் போக, ஈரானிய சினிமாவில் பெண் கதாபாத்திரங்கள் காணாமல் போயின. ஆனால், தனது ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள இஸ்லாமிய குடியரசு பல மில்லியன் டாலர்களைச் செலவிட்டு திரைப்படங்களை உருவாக்கியது. இந்தப் படங்களில், ஓரிரு முயற்சிகளைத் தவிர, மற்றவைகளுக்கு ஒரு பரவலான வரவேற்பு இருக்கவில்லை. தரைமட்டமாகிய தியேட்டர்களும் புதுப்பிக்கப்படவில்லை என்பதால் ஈரானிய சினிமாவின் நிலைமை மோசமாக இருந்தது. ஆனால், வெளிநாட்டு படங்களின் வருகையும் தடை செய்யப்பட்டிருந்ததால், வேகமாகப் பெருகிவரும் நடுத்தர வர்க்க மக்களிடம் தரமான சினிமாவை நோக்கிய எதிர்பார்ப்புகள் வளரத் துவங்கின.

புதிய ஈரானிய சினிமாவின் மறுபிறவி:

சினிமாவின் மீது செலுத்தி வரும் ஒடுக்குமுறைகளை ஓரளவுக்கு தளர்ச்சி, தொழில்நுட்பம் பெருக, ஒரு புதிய திட்டத்தை 1982_ல் இஸ்லாமிய குடியரசு உருவாக்கி பல சலுகைகளை அளிக்க, புதிய ஈரானிய சினிமா மறுபிறவி எடுத்தது. அமிர் தபாஷி, குறிப்படுவது போல், 'எரிந்து தணிந்த சாம்பலின் கீழ் உருவான தணல்கள் இன்னும் அணைக்கப்படவில்லை' என்பதால் இந்தப் புதிய வாய்ப்பினால், பிரசித்திப் பெற்ற படைப்பாளிகளான பஹராம் பேய்சாய், தாரியூஷ் மெஹ்ருஜூயி, பஹமான் ஃபர்மனாரா, அப்பாஸ் கியரோஸ்தமி, அமித் நதேரி இவர்கள் தங்களது அடுத்தக் கட்ட படைப்புகளை உருவாக்கினர். புதிய ஈரானிய சினிமாவின் இரண்டாவது தலைமுறையினரான மக்மல்பஃப், மஜீத் மஜுதி, ரக்ஷ்ன் பானி_ஏதேமதின் இவர்கள் படைப்புகள் 1980களின் இறுதியில் புதிய ஈரானிய சினிமாவின் வேகமான வளர்ச்சியை வெளிப்படுத்த, 1990களில் பெருமளவில் உலகப்புகழ் பெற்ற இந்த சினிமாவை மேலும் வழி நடத்திச் செல்ல, மூன்றாவது தலைமுறையின் பிரதிநிதியாக, சமீரா மக்மல் பஃப் என்ற 19 வயது பெண் இயக்குனரின் படைப்புகள் ஒரு திடமான அடிக்கல்களை நாட்டியுள்ளன.

புதிய ஈரானிய சினிமாவிற்கு இவ்வளவு வரவேற்பு இருந்தாலும், நான்கு கட்ட தணிக்கையை சந்தித்த பிறகுதான் இந்தப் படங்கள் வெளிவரமுடியும். முதலில் கதை சுருக்கத்திற்கு கலாச்சார மந்திரி அலுவலகத்தில் இருந்து அனுமதி பெற வேண்டும். இரண்டாவது முழு திரைக்கதைக்கு அனுமதி பெற வேண்டும். மூன்றாவதாக, படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும், அதன் தொழில் நுட்ப கலைஞர்களும் அதில் வேலை செய்ய அனுமதி வாங்க வேண்டும். இறுதியாக, படத்தை முடித்தபிறகு அதை வெளியிட தணிக்கை சான்று பெறவேண்டும். இத்தனை முட்டுகட்டைகளையும் தாண்டி தங்கள் வெளிப்பாடுகளைப் பதிவுசெய்து கொள்ள புதிய ஈரானிய சினிமா, பல நுணுக்கங்களை உருவாக்கியுள்ளது. அவை என்னவென்று நாம் அடுத்தபடியாக விவாதிக்கலாம்.</span>

[size=14] 'எரிந்து தணிந்த சாம்பலின் கீழ் உருவான தணல்கள் இன்னும் அணைக்கப்படவில்லை'
- அமிர் தபாஷி,

நன்றி: தீராநதி
Reply


Messages In This Thread
[No subject] - by sOliyAn - 04-08-2004, 02:29 AM
[No subject] - by Eelavan - 04-08-2004, 03:45 AM
[No subject] - by AJeevan - 04-08-2004, 11:56 AM
[No subject] - by sOliyAn - 04-08-2004, 12:25 PM
[No subject] - by AJeevan - 04-24-2004, 07:59 PM
[No subject] - by AJeevan - 04-26-2004, 02:44 PM
[No subject] - by vasisutha - 04-27-2004, 09:59 PM
[No subject] - by AJeevan - 04-30-2004, 01:55 PM
[No subject] - by AJeevan - 04-30-2004, 02:17 PM
[No subject] - by AJeevan - 05-03-2004, 12:43 PM
[No subject] - by Mathan - 05-04-2004, 02:17 PM
[No subject] - by sOliyAn - 05-04-2004, 04:49 PM
[No subject] - by AJeevan - 05-04-2004, 11:01 PM
[No subject] - by sOliyAn - 05-05-2004, 12:53 AM
[No subject] - by Eelavan - 05-05-2004, 02:37 AM
[No subject] - by Eelavan - 05-05-2004, 02:38 AM
[No subject] - by AJeevan - 05-05-2004, 09:53 AM
[No subject] - by Mathan - 05-05-2004, 10:59 AM
[No subject] - by AJeevan - 05-05-2004, 11:36 AM
[No subject] - by AJeevan - 06-02-2004, 01:27 PM
[No subject] - by Mathivathanan - 06-02-2004, 01:44 PM
[No subject] - by Mathan - 06-02-2004, 02:38 PM
[No subject] - by Eelavan - 06-02-2004, 03:55 PM
[No subject] - by shanmuhi - 06-02-2004, 05:09 PM
[No subject] - by kuruvikal - 06-02-2004, 05:38 PM
[No subject] - by vasisutha - 06-03-2004, 12:10 AM
[No subject] - by Mathan - 06-03-2004, 04:08 AM
[No subject] - by Chandravathanaa - 06-03-2004, 07:17 AM
[No subject] - by sOliyAn - 06-03-2004, 08:03 AM
[No subject] - by AJeevan - 06-15-2004, 01:56 AM
[No subject] - by kuruvikal - 06-15-2004, 07:16 PM
[No subject] - by AJeevan - 07-06-2004, 03:39 AM
[No subject] - by sOliyAn - 07-06-2004, 02:36 PM
[No subject] - by AJeevan - 07-06-2004, 07:37 PM
[No subject] - by sOliyAn - 07-06-2004, 09:30 PM
[No subject] - by AJeevan - 07-07-2004, 01:15 AM
[No subject] - by AJeevan - 07-10-2004, 02:03 PM
[No subject] - by sOliyAn - 07-12-2004, 08:48 AM
[No subject] - by AJeevan - 07-12-2004, 11:24 AM
[No subject] - by பரஞ்சோதி - 08-21-2004, 05:23 PM
[No subject] - by AJeevan - 08-22-2004, 12:32 AM
[No subject] - by sOliyAn - 08-22-2004, 02:51 AM
[No subject] - by Mathivathanan - 08-22-2004, 03:12 AM
[No subject] - by sOliyAn - 08-22-2004, 06:14 AM
[No subject] - by AJeevan - 08-22-2004, 04:55 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)