01-27-2004, 12:46 PM
Quote:நேற்றிரவு, மன்னார் இரணைதீவுக் கடற்பரப்பில், எண்ணுறுக்கும் மேற்பட்ட இந்திய இழுவைப்படகுகள், இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்து, மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டன எனவும், இவற்றிற்கு இந்திய கடலோரக் காவற்படையினர் பாதுகாப்பு வழங்கினர் எனவும், மன்னார் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்று, நேற்று முன்தினமும், வடமராட்சிக் கடற்பரப்பில், இந்தியக் கடலோரக் காவல்படையின் துணையுடன், நூறுக்கும் மேற்பட்ட இழுவைப்படகுகள், மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.
நன்றி: Tamildailynews (20.01.2004)
இதன் நோக்கம் என்ன நாம் அறியோம் பராபலனே.... பொறுத்திருந்து பார்ப்போம்...
<b>சர்வதேச கடற்பிராந்திய சட்டத்தை மீறிவரும் இந்திய கரையோர கடற்படையின் நடவடிக்கை</b>
பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் வடபிராந்திய மீனவர் சமுதாயம்
இருபது வருட யுத்தத்தின் விளைவாக ஏனைய சமுதாயங்களைப் போல் மீனவர் சமுதாயமும் அவலங்களையும், துயரங்களையும் மிகவும் கடுமையாக எதிர்கொண்டது.
வடபிராந்திய மீனவர் விடயத்தை 'இரு கோண" பிரச்சினையாக இருபது வருடங்களாகக் கருத வேண்டியிருந்தது. சமீப காலமாக இந்த விடயம் 'முக்கோணப்" பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்துவிட்டது. காலப்போக்கில் முக்கோணப் பிரச்சினையும் மாறி சர்வதேசப் பிரச்சினையாக எழப்போகின்றது.
இரு கோணப் பிரச்சினை
இந்த விடயத்தில் யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களையும், மன்னார் மாவட்ட மீனவர்களையும் பற்றிப் பார்க்கவேண்டும். யுத்தம் ஆரம்பித்த காலத்திலிருந்து மன்னார் மாவட்டத்திலும், யாழ்.குடாநாட்டிலும் சிங்கள இராணுவமும், கடற்படையினரும் அதிகமாக நிலைகொண்டிருந்தார்கள். விடுதலைப்புலிகளுக்குத் தடை செய்யப்பட்ட பொருட்களை இந்த இரு மாவட்ட மீனவர்கள் கொண்டுவந்து கொடுக்கின்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மிக மோசமான கட்டுப்பாடுகளை மீனவர்கள் மீது இராணுவத்தினரும், கடற்படையினரும், பொலிஸாரும் திணித்தார்கள.
இவ்விதமான மிகவும் படுமோசமான கட்டுப்பாடுகளை எதிர்கொண்டபடியினால் அவர்களுடைய வருமானம் மிகக் குறைந்து அதன் விளைவாக வறுமையில் வாடினார்கள். தற்பொழுதும் வறுமையை அனுபவிக்கிறார்கள். சிங்களப் படையினர் விதித்த கட்டுப்பாடுகள் மூன்று வகைப்படும்.
இப்பகுதி மீனவர்கள் கரையோரப் பகுதியில் மட்டுமே மீன்பிடிக்க அனுமதியுண்டு.
படையினரால் விதிக்கப்பட்ட குறித்த நேரங்களில் மட்டுமே மீனவர்கள் தங்கள் தொழிலில் ஈடுபடலாம்.
மீனவர் பாவிக்கும் இயந்திரப் படகுகளில் மிகவும் சக்தி குறைந்த இயந்திரத்தையே உபயோகிக்க வேண்டும். இதன் விளைவாக மீனவர்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள்.
உதாரணமாக: 1988 ஆம் ஆண்டு யாழ்.குடாநாட்டில் 14 702 தொன் மீன்களை மீனவர்கள் பிடித்தார்கள். ஆனால், 1996 ஆம் ஆண்டு இவ்விதமான கடுமையான கட்டுப்பாடு காரணமாக 1540 தொன் மீன்கள் மட்டுமே யாழ்.குடாநாட்டில் பிடிக்கப்பட்டன.
ஆனால், மன்னார் மாவட்டத்தில் 1989 ஆம் ஆண்டு 9050 தொன் மீன் பிடித்தார்கள். 1995 ஆம் ஆண்டு 4577 தொன் தான் அவர்கள் பிடித்தார்கள். இது அரசாங்க மீன்பிடித் திணைக்களத்தின் புள்ளிவிபரம். இதிலிருந்து அறியக் கூடியது யாதெனில், சிங்கள இராணுவம் தமிழ் பிராந்தியத்தில் மீன் வளம் நன்றாக இருந்தபொழுதிலும் அவற்றை அனுபவிக்க முடியாத முறையில் தமிழ் இன ஒழிப்பின் படனமாக இவ்விதமாக மனிதாபிமானத்துக்கு முரணாகக் கட்டுப்பாடுகளை விதித்தார்கள். ஆகவே இது சிங்களப் படையினரால் தமிழ் மீனவர்களுக்குத் திணித்த பொருளாதாரப் பிரச்சினை.
முக்கோணப் பிரச்சினை
இருபது வருட காலமாக சிங்கள இராணுவத்துக்கும் தமிழ் மீனவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை இரு கோணப் பிரச்சினை. ஆனால், தற்பொழுது விரும்பத்தகாத தவிர்க்கப்பட வேண்டிய ஒரு முக்கோணப் பிரச்சினை விஸ்வரூபமெடுத்து விட்டது.
யாழ்.மாவட்ட மீனவர்களும், மன்னார் மாவட்ட மீனவர்களும் அவர்களுடைய கடல் பிராந்தியத்தில் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாத நிலையில் எமது அயல்நாட்டு இந்திய மீனவர்கள் எமது கடல் பிராந்திய இறையாண்மையையும் அத்துமீறி எங்கள் கடலில் எங்களுடைய மீன் வளங்களை பகற்கொள்ளை அடித்து வருகின்றனர். அவர்களுக்கு சொந்தமான கடற்பிராந்தியத்தில் மீன்வளம் வற்றிப் போன காரணத்தினால் எங்கள் கடலில் வந்து எங்கள் மீன் வளங்களை அபகரித்துச் செல்கின்றனர். இந்த அயல்நாட்டு மீனவர்களுடைய செயற்பாடு நீதிக்கும், நியாயத்துக்கும், நேர்மைக்கும் முரண்பட்ட செய்கை. இதை சுருங்கக் கூறுவதாயின் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் எங்கள் மீனவரின் கதை மாறிவிட்டது.
சில காலமாக இந்திய மீனவர்கள் எங்கள் கடலில் பிரவேசித்து மீன்பிடிப்பதை அவதானித்த இலங்கைக் கடற்படையினர் அவர்களை கைது செய்து அவர்களின் படகுகளை கைப்பற்றியும், பொலிஸார் மூலம் வடபிராந்திய நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தார்கள். நீதிமன்ற விசாரணை நடக்கும் பொழுது சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க பொலிஸார் வழக்குகளை வாபஸ் பெற்றனரென பத்திரிகைகள் மூலம் செய்திகள் வெளிவந்தன. கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களையும் அவர்களுடைய படகுகளையும் இந்திய கரையோரக் கடற்படையிடம் கொடுத்து விட்டனர். ஆகவே, இந்த விவகாரத்தில் அரசியல் காரணமாக சட்டம் தன் கடமையைச் செய்யமுடியவில்லை.
இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடல் பிரதேசத்தில் தற்செயலாக சென்று மீன்பிடித்தால் பாகிஸ்தான் கடற்படை அவர்களைக் கைது செய்து அநேக வருடங்கள் சிறையில் தள்ளும். இதேமாதிரி தான் பாகிஸ்தான் மீனவர்களும் தற்செயலாக இந்தியக் கடல் பிரதேசத்தில் மீன்பிடித்தால் இந்தியக் கடற்படை அவர்களைக் கைது செய்து அநேக வருடங்கள் சிறையில் தள்ளும். ஆனால், இலங்கையில் அரசியல் காரணங்களுக்காக 48 அல்லது 72 மணித்தியாலயங்களில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றார்கள்.
சில சந்தர்ப்பங்களில் இந்திய மீனவர்களின் சட்ட மீறல்களை பொறுக்கமுடியாத மீனவப் பொதுமக்கள் அத்துமீறிச் செயலில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்களைக் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைக்கின்றனர். இதன் பிரதிபலிப்பாக வடமராட்சிக் கடலில் அவர்கள் நூற்றுக்கணக்கான இந்தியப் படகில் வந்து எங்கள் கடலில் மீன்பிடிப்பதற்கு பாதுகாப்பாக இந்திய கரையோரக் கடல் படையும் வந்து நிற்கின்றது எனச் செய்திகள் வெளியாகின்றன.
இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் இந்திய மத்திய அரசின் செயற்பாடு இலங்கையின் இறையாண்மையை ஆக்கிரமித்து விட்டதென்பதே கருத்து. அது மட்டுமல்ல இந்தியக் கரையோரக் கடற்படை இந்திய கடற்பிராந்தியச் சட்டத்தை மீறுவதல்லாமல் சர்வதேச கடல் பிராந்தியச் சட்டத்தை மீறிய அப்பட்டமான செயலாகவே அமையும். இது இந்தியாவினுடைய பகிரங்க ஆக்கிரமிப்பை வெளிப்படுத்துகின்றது. இந்த விடயத்தில் இலங்கைக் கடற்படையோ, இலங்கை அரசாங்கமோ, ஜனாதிபதியோ ஒருவித ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லை.
தமிழ் பிரதேச பாராளுமன்ற அங்கத்தவர்கள் விசேடமாக மன்னார், யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர்கள் என்ன காரணத்துக்காக மௌனம் அனுர்;டிக்கிறார்கள் என்பது புரியவில்லை? இந்தியாவினுடைய மிரட்டல்களுக்கு தமிழ் பாராளுமன்ற அங்கத்தவர்கள் பயந்து விட்டார்களோ என்று சந்தேகிக்க இடமுண்டு. இந்திய கரையோரக் கடற்படையினர் எங்கள் கடலில் நிலை கொண்டது உண்மையாயிருந்தால் இது ஒரு பாரதூரமான ஆக்கிரமிப்பு. இந்தியா, இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பமிடமுன் இப்படி நடந்தால் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின் எவ்விதமான ஆக்கிரமிப்பு நடக்குமென்பதை எண்ணிப் பார்க்கலாம்.
சிங்கள அரசாங்கம் தமிழ் கடல் பிராந்தியத்தையும் அதனுடைய இறையாண்மையையும் இந்தியாவுக்குத் தாரை வார்த்து விட்டதா என்ற சந்தேகம் ஒவ்வொரு தன்மானமுள்ள தமிழனுக்கும் உதயமாகின்றது. இவ்விதமான நிகழ்வுகள் நடக்குமென்ற காரணத்தினால் தான் விடுதலைப்புலிகளால் ஏற்படுத்திய இடைக்கால தன்னாட்சி வரைவில் அம்பாறையிலிருந்து புத்தளம் வரையுள்ள தமிழ் கடற்பிராந்தியம் தமிழருக்கு மாத்திரமே சொந்தமாயிருக்க வேண்டுமென்று கூறப்பட்டிருக்கின்றது. இந்த யோசனையிலுள்ள உள் நோக்கங்களையும், தூரதிர்;டிப் பார்வையையும் கொழும்பிலுள்ள தமிழ் புத்திஜீவிகள் உணரமுடியுமா?
இந்திய மீனவர்கள் எமது கடலில் வந்து எங்கள் மீன் வளங்களை அபகரித்துச் சென்றால் தற்பொழுது வறுமையில் வாழும் எங்கள் மீனவர்கள் இனிமேல் பட்டினிச் சாவைத் தான் நிச்சயம் எதிர்கொள்வார்கள். ஆகவே இந்தப் பிரச்சினைக்கு அரசியலை கலக்காமல் மனிதாபிமான முறையில் தீர்வு காண வேண்டும்.
யாழ். மாவட்ட, மன்னார் மாவட்ட பாராளுமன்ற அங்கத்தவர்களும், மனித உரிமை ஸ்தாபனங்களும், பொதுஜன அமைப்புகளும் சமயப் பெரியோர்களும் வடபிராந்திய புத்திஜீவிகளும் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் எங்கள் கடலில் இந்திய மீனவர்கள் அத்துமீறி, மீன்பிடிக்க விடப்படலாகாதென்ற மகஜரை அவசரமாக அனுப்புவது முதற்கடமை. இரண்டாவதாக இவர்கள் இந்தியப்பிரதமருக்கும் இங்கேயுள்ள இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இதுபற்றி மகஜர் அனுப்ப வேண்டும். இந்திய மத்திய அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்காத பொழுது எமது தமிழ் பிரமுகர்கள் இப்பிரச்சினையை மனிதாபிமான பிரச்சினையாகக் கருதி ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு ஓர் அவசர கடிதம் அனுப்புவது முக்கிய கடமையாகும். ஐ.நா. மனித உரிமைக்குழுத்தலைவருக்கும் இவ்விடயம் பற்றித் தெரிவிப்பது மிகவும் சாலச்சிறந்தது. ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு அனுப்பிய மகஜர்களின் பிரதிகளை இங்குள்ள இராஜதந்திரிகளுக்கு அனுப்புவது அவசியம்.
ஐ.நா. இயற்றிய கடல் சட்ட விதிகளின்படி ஒரு நாட்டினுடைய கடல் பிராந்திய இறையாண்மையை பன்னிரண்டு கடல் மைல் வரையுண்டு என்பது தெரிந்த விடயம். ஆனால், நாடுகள் இருநூறு கடல் மைல் வரை பொருளாதார வலயமாகப் பாவிக்க முடியும். ஆனால், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலுள்ள கடல்வெளி மிகவும் குறுகியதென்ற காரணத்தினால் இடைவெளியில் அரைவாசி இலங்கைக்கும் அரைவாசி இந்தியாவுக்கும் சொந்தமென்று கருதுவது தான் யதார்த்தம். இதுதான், சர்வதேச கடல் பிராந்தியச்சட்டம். இந்த விதிகளுக்கு அமையவே இப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும்.
இலங்கையில் தற்பொழுது விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறையிலிருக்கின்றது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நோர்வே நாட்டுப் பிரதிநிதிகள், கண்காணிக்கின்றனர். ஆகவே, நோர்வே அரசாங்கத்தின் ஒத்தாசையுடன் இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகளமைப்பு, இந்திய மத்திய அரசு கொழும்பில் ஒரு மகாநாட்டில் பங்குபற்றி ஒரு தீர்வைக் காணுவது அவசியம். ஆனால், யதார்த்தத்தை மறந்து இந்தியா விடுதலைப்புலிகள் பங்குபற்றும் மகாநாட்டில் தாங்கள் பங்குபற்ற மாட்டோமென்று கூ றினால் அது மனிதாபிமான செயலுக்கு முரண்பாடானதாகக் கருதமுடியும்.
இன்று இந்திய மீனவர்கள் இலங்கைக் கடலில் வந்து மீன்பிடிப்பதை அனுமதித்தால், நாளை பாகிஸ்தான் மீனவர்களும் இங்குவந்து மீன்பிடிப்பார்கள். அதுபோல் தாய்வான் படகுகளும் தாய்லாந்து படகுகளும் நிச்சயம் எங்கள் கடலில் வந்து அவர்களும் மீன்பிடிப்பார்கள். ஆகவே இந்தியா, பாகிஸ்தான், தாய்வான், தாய்லாந்து நாட்டினர் எங்கள் கடலில் வந்து மீன்பிடிக்க முடியும். எங்கள் கடலில் எங்கள் மீனவர்கள் மீன்பிடிக்க அநேக கட்டுப்பாடுகள் உண்டு. ஆகவே, இது நீதி, நியாயம், நேர்மைக்கு முரண்பாடான செயல்பாடு. தன்மானமுள்ள தமிழன் இதை பொறுத்துக் கொண்டும் சகித்துக்கொண்டுமிருக்கமாட்டான்.
நன்றி: தினக்குரல் (தில்லைக்கூத்தன்)

