Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்று கா.வே.பாலகுமாரன் அவர்களின் உரை
#7
மாமனிதர் ஜோசப் படுகொலை, மகிந்தரின் இந்தியப் பயணம், தமிழக எழுச்சி குறித்து கா.வே.பாலகுமாரன் கருத்து

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் இந்தியப் பயணம், தமிழகத்திலே ஏற்பட்டுள்ள எழுச்சி ஆகியன குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.


புலிகளின் குரல் வானொலியில் நேற்று சனிக்கிழமை ஒலிபரப்பாகிய அரசியல் அரங்கம் நிகழ்ச்சியில் அவர் தெரிவித்த கருத்துக்கள்:

வேகமெடுக்கும் எங்கள் விடுதலைப் போராட்டத்தினுடைய நிகழ்வுகள் பற்றியே இம்முறையும் நாம் பேசுகிறோம்.

வேகமெடுக்கும் எங்கள் விடுதலைப் போராட்டத்துக்குத் தடை போடுகிற பணிகளும் மிக வேகமாக முன்னெடுக்கப்படும் காலத்திலே நாங்கள் வாழ்கிறோம்.

இரண்டுக்கும் இடைப்பட்ட அந்த இடைவெளியும் முரணும் தடைகளே எங்கள் போராட்டத்தின் வெறியைத் தூண்டும் படிகளாக மாறுகிற அற்புத பரிணாம மாற்றத்தையும் உங்களோடு பேச உள்ளோம்.

இம்முறை 2 முக்கிய பதிவுகளைத் தொட்டுச் செல்கிறோம்.

எங்கள் மறைந்த மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம், விடுதலை வேள்வியில் தன்னை ஒப்புக்கொடுத்த கடைசிமனிதராக அவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவரை அண்மைக்காலத்தில் சந்தித்த போதெல்லாம் தன்னளவில் தன்னோடு திருப்தியாகவும், தன் பணி குறித்து திருப்தியாகவும் அதேவேளை சாவை அதோடு எதிர்நோக்கிய நிலையிலே தன்னைத் தானே தயார்படுத்திக் கொண்டிருந்தார்.

அவர் பற்றிய வரலாறை பின்னொரு நாள் வரலாறு பேசும். அவரது இறப்பு, இழப்பு என்பது தொடர்பான சில கருத்துகளை ஆலயங்களிலே பரிசுத்தமான இடங்களில் கொல்லப்பட்டவர்களினூடாக நாம் சொல்ல நினைக்கிறோம்.

மாமனிதர் ஜோசப் அவர்கள் இன்னும் விழி திறக்காதவர்களுக்காக தன் கண்களை மூடி இருக்கிறார்கள்.

முதலில் எங்களுடைய வணக்கத்திற்குரிய பஸ்தியான் அடிகளாரைப் பற்றி... உங்களை 85 ஆம் ஆண்டு தை மாதம் நிகழ்வுகளுக்குச் இட்டுச் செல்ல விரும்புகிறேன்.

6.1.1985 ஆம் நாளன்று மன்னார் வங்காலையில் உள்ள புனித ஆனால் ஆலயம்.. நள்ளிரவில் கதவை உடைத்துக் கொண்டுத் திறந்த சிங்கள இராணுவம் செய்த வரலாறு உங்களுக்கு நினைவு இருக்கலாம்.

பஸ்தியான் நித்திரையில் எழுந்து தனது மேலங்கியை அணிந்து கொண்டு செபமாலையை கையில் எடுத்துக் கொண்டும் கையைத் தூக்கிய வண்ணம் ப்ளீஸ் என்று சொல்லிக் கொண்டு வந்த போது அவர் மீது சூடுகள் பாய்ச்சப்பட்டன. அந்த இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார். பாதர் பஸ்தியானின் இறப்பு எங்கள் அன்பிற்குரிய மாமனிதர் சிங்கத்தினுடைய இறப்பு மீள எங்களுக்கு நினைவுட்டியிருக்கிறது.

பாதர் பஸ்தியானை அடிக்கடி கேட்பாளர்களாம், இப்படி மக்கள் நலனுக்காகச் செயற்படுகிறீர்களே உங்கள் உயிருக்கு ஆபத்து இல்லையா? என்று. அதற்கு அவர் சொல்வாராம், "நிச்சயமாக இருக்கிறது. எனக்கு மட்டும் அல்ல என்னைப் போன்ற அனைத்துத் தமிழ் மக்களின் உயிருக்கும் இருக்கிறது. நாளைக்கு என்ன நடக்கும் என்ற சொல்ல முடியாத நிலையில் நாங்கள் வாழ்கிறோம்" என்று சொன்ன அந்த சொற்கள் இன்றைக்கும் எமது தமிழ் மக்கள் மத்தியிலே எதிரொலிக்கிறது.

இன்று எங்கள் மக்கள் மிக மோசமான இராணுவத்தின் பிடியிலே சிக்கி நாளாந்தம் தங்கள் உயிர்களை இழப்பதற்கு என்ன பாவம் செய்தார்கள் என்று கேட்கிறோம்.?

மற்றொரு முக்கியமான சம்பவம். எல்சடேவாரில் நடந்தது. இது மிகவும் அவலமானதும் உருக்கத்திற்குரியதுமாகும்.

ரெவரெண்ட்களின் ஆயர் என அழைக்கப்பட்ட ஆர்ச் பிசப் ரொமாரோ பற்றிய கதைதான்.

மார்ச் 24, 1980ஆம் ஆண்டு நடந்த சம்பவம் அது. ஆயர் அவர்கள் திருப்பலி கொடுத்துக் கொண்டிருந்தபோது துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டன. அந்த இடத்திலேயே ஆயர் அவர்கள் சுருண்டு விழுந்தார்.

அதுபோலவே மதிப்பிற்குரிய ஐயா சிங்கத்தாரும் ஆயரிடமிருந்து நற்கருணை பெற்றுத் திரும்பும் போது சூடுகள் அருகிலிருந்து அனைவரும் பார்க்கும் வகையில் தீர்க்கப்பட்டன. அவர் சுருண்டு விழுந்தார். அவரது துணைவியாரும் சேர்ந்து விழுந்தார்.

இந்த செய்திகளுக்கு அப்பால் நான் சில செய்திகளைச் சொல்ல விரும்புகிறேன். இந்தச் செய்திகள், ஆயர் வார்த்தைகளாக வெளிவந்தன. ஆயரின் வார்த்தைகள் இன்றும் இத்தனை வருடங்கள் கடந்த பின்னரும் மிகவும் காத்திரமாக உலகத்திலே எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. எந்த இணையத்தளத்திற்கும் போனாலும் ஆயருடைய படமும் அவரது கருத்துக்களும் ஓங்கி ஒலித்தவாறு இருப்பதை நினைக்கும் போது எங்களுக்காகச் சொன்ன சொற்களை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

முக்கியமாக அவர் சாவதற்கு சில நாள்களுக்கு முன்னால் நீளமான செய்திகளை எங்களுக்குச் சொல்லி சென்றிருக்கிறார்.

அவரது முக்கியமான செய்தி என்னவென்றால்,

"என்னை கொல்லலாம். ஆனால் நான் வெறும் இறப்பில் நம்பிக்கை கொண்டவன் அல்ல நான் மீண்டும் நிச்சயமாக எல்சடேவர் மக்களோடு உயிர்ப்பேன்" என்று சொன்னார்.

அதுவே எங்களுடைய நிலைப்பாடாக இருக்கிறது. இதற்கு அப்பால் ஒரு முக்கிய செய்தியைச் சொல்லி இருக்கிறார்.

"நீங்கள் மக்களுக்குச் சொல்லுங்கள். என்னைக் கொல்வதே அவர்கள் வென்றால் நான் கொன்றவர்களை ஆசிர்வதிக்கிறேன் என்றும் மன்னிக்கிறேன் என்றும் சொல்லுங்கள். ஏனென்றால் வீணாக என்னைக் கொல்வதில் தங்களது நேரத்தை வீணடிக்கிறார்கள். உண்மையிலே என்னைக் கொல்வதற்காகச் செலவிடுகிற நேரம் ஒரு பயனற்ற நேரம். ஒரு ஆர்ச் பிசப்பை அவர்கள் கொல்லலாம். ஆனால் இறைவனைக் கொல்ல முடியுமா? ஆலயத்தைக் கொல்ல முடியுமா? அந்த ஆலயமும் மக்களும் தங்கி வாழுகிற மக்களைக் கொல்ல முடியுமா? கருத்துகளைக் கொல்ல முடியுமா?" என்று கேட்டார்.

அந்தக் கருத்துகளைத்தான் எங்களுடைய மாமனிதர் பரராஜசிங்கமும் கேட்டார்கள். கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய குரல் எங்கள் மனதிலே இன்றும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அவருடைய சாவுக்காக நேரத்தை வீணடித்தது வீண் வேலை. அவருடைய சாவினால் அவர்களுக்கு எதுவும் நடக்கப் போவதில்லை என்பதை அவர்கள் உணர வேண்டும் என்பதை ரொமாரோ சார்பில் நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.

அதைவிட முக்கியமான செய்தி அவர் சொன்னது என்னவெனில், கடவுளின் பெயரால், எங்கள் மக்களின் பெயரால் நான் இவர்களைக் கேட்கிறேன்..தயவு செய்து உங்களுடைய அடக்குமுறைகளை நிறுத்துங்கள். உங்கள் மக்களையே நீங்கள் கொல்லாதீர்கள் என்று திரும்பத் திரும்பக் கேட்டார்.

நாங்களும் கேட்கிறோம்.. எங்களது விடுதலைப் போராட்டம் சார்பாக...எங்களது மக்கள் சார்பாக திரும்பத் திரும்பக் கேட்கிறோம். இந்தக் கொலைகளை நிறுத்துங்கள் என்று ஆயருடைய வார்த்தைகளுடாக நாங்கள் கேட்கிறோம். எங்கள் மக்கள் இந்தக் குரலை எதிரொலிக்கிறார்கள்.

தென் தமிழீழத்திலே தொடராக நடந்து வருகிற படுகொலைகளை நாங்கள் பார்க்கிறோம். அந்தப் பெரியவர்கள் நடேசன், சிவராம், சந்திரநேரு உட்பட தென் தமிழீழத்தின் மூத்தவர்களை, அறிஞர்களைக் கொல்வதற்கூடாக எதனை நாம் சாதிக்கப் போகிறோம்? இந்தத் தமிழினத்தின் அறிஞர்களைக் கொல்வதற்கு ஊடாக எதையும் நாம் சாதித்துவிட முடியாது என்பதை ஆயரின் வார்த்தைக்கூடாக உங்களை மன்றாட்டமாக, ஆயரின் குரலுக்கூடாக இங்கே நாம் உலகத்துக்கு முன்னால் வைக்கிறோம்.

அதைவிட முக்கியமாக ஆயர் சொன்ன கருத்து ஒன்று உள்ளது.

"இந்த நெல்லை, கோதுமையைப் பாருங்கள். நெல்லுக்கு உமி இருக்கிறது அல்லது கோதுமையைச் சுற்றி உமி இருக்கிறது. அதனுடன் தாங்குகிற தாவரமும் இருக்கிறது. இந்தத் தாவரமும் உமியும் ஒன்றாக நீண்டகாலத்துக்கு இருக்குமேயானால் உள்ளிருக்கும் தானியத்தை நாம் பெற முடியாது. ஆகவே தானியத்தைப் பெற வேண்டுமானால் அதைத் தாங்குகிற உமியும் தாவரமும் இறந்துபட வேண்டும். அப்படி இறந்துபடும்போதுதான் தானியம் வந்துசேரும் என்று சொன்னது போல் நாங்கள் இந்த இறப்புக்கூடாக எங்கள் விடுதலையைப் பெறுவதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற செய்தியை ஆயருடைய வார்த்தைக்கு ஊடாக சொல்ல விரும்புகிறேன்.

அடுத்து இன்னொரு பதிவுக்குச் செல்கிறேன்.

நாளாந்தம் மகிந்தருடைய சுயரூபம் வெளிப்படுகிற அந்த வேகத்தைப் பார்க்கிறபோது மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது. மகிந்தர் இப்போது கிட்டத்தட்ட கொலைகளைப் புரியக் கூடிய சர்வாதிகாரியாக கொலைவெறி பிடித்த, இனவெறி பிடித்த ஒரு இராணுவத்தினுடைய கையிலே சிக்கிய ஒரு பகடைக்காயாக மாறிச் செயல்படுவதைப் பார்க்கும்போது எங்களுக்குப் பெரும் அச்சம் எழுகிறது.

எங்கள் மாமனிதர் சிங்கத்தின் கொலைக்கு அனுமதித்து அல்லது உத்தரவிட்டு அல்லது தெரிந்தும் பேசாமல் இருந்துவிட்டு குருதிக் கறை படிந்த கரத்தோடு மகிந்தர் இந்தியா சென்று இருக்கிறார்.

ஆகவே அவரது குருதிக் கறை படிந்த கரத்தைக் குலுக்கும் போதாவது எங்கள் மாமனிதரைப் பற்றி நிச்சயமாக ஒரு கனம் அதிர்ச்சியுற்றிருப்பார்கள் என்று நாம் நம்புகிறோம். தயவு செய்து உலகம் இந்த செய்தியைப் புரிந்து கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இன்று நடக்கிற மாற்றங்களை நீங்களே பாருங்கள்.

சென்னையிலே வேப்பேரி பெரியார் திடல் எங்களுடைய மையமாக, ஒரு தங்குமிடமாக இருந்திருக்கிறது.

பெரியார் திடலில்தான் நாங்கள் அறிவுக் கருத்துகளை, சமதர்மக் கருத்துகளை, போராட்டக் கருத்துகளை, போராட்ட இளைஞர்களைச் சந்தித்தோம் பேசினோம் என்ற வரலாறு ஒரு காலத்தில் இருந்தது.

மிக நீண்டகாலத்துக்குப் பின்னால் அண்மையில் வேப்பேரி பெரியார் திடலில் அந்த மண்டபத்துக்குள் மிகுந்த திரளுக்கு முன்னாலே எல்லாத் தமிழ்த் தலைவர்களும்-வீரமணி ஐயா தலைமையிலே நெடுமாறன் ஐயா, ராமதாஸ், வைகோ உள்ளிட்டோர் அனைத்துப் பேரும் ஒன்றாகச் சேர்ந்து என்ன தீர்மானம் எடுத்திருக்கிறார்கள் என்று பார்த்திருப்பீர்கள். இங்கே நாங்கள் சொல்ல வருகிற முக்கியமான செய்தி என்னவென்றால், தமிழ் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்பதற்காக ஜெயலலிதா அவர்கள் கூட அந்தச் சந்திப்பை இரத்துச் செய்த வரலாற்றை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் சொன்னார் இது ஒரு பாரிய இக்கட்டான நிலை என்று. ஒரு நாட்டினது ஜனாதிபதியை ஒரு மாநிலத்தின் முதல்வர் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு சந்திக்க முடியாது என்று சொல்லி இருப்பது எத்தகைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறது என்பதை நினைவில் கொள்கிறோம்.

எங்களுக்குச் சில விடயங்கள் தெளிவாகத் தெரிகிறது. மகிந்தர் இந்தியா சென்று எல்லோரையும் பார்த்தார். சோனியா காந்தியையும் பார்த்தார். அங்கேயும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அடுத்த வருடம் ராஜீவ் காந்தி நினைவுநாளை என்னுடைய நாட்டிலே கொண்டாடப் போகிறேன் என்று ஏறுக்கு மாறாக, வாய்க்கு வந்தபடியெல்லாம் ஒரு கத்துக்குட்டி அரசியல்வாதியைப் போல் சொல்லிக் கொண்டு திரிவதைப் பார்க்கும்போதெல்லாம் உண்மையிலேயே சோனியா காந்திக்கு சிரிப்பு வந்திருக்கக் கூடும். இப்படியாக மகிந்தருடைய நிலைப்பாடுடைய முடிவு என்னவென்றால், தமிழ்நாட்டுக்குப் போக முடியாமல் கடைசியாக கொச்சிக்குப் போய் குருவாயவூரப்பன் என்று சொல்லக் கூடிய ஒரு கடவுளை வணங்கப் போகிறாராம்.

நாங்கள் ஒன்றை அறிய விரும்புகிறோம். இது எங்களுக்கு விளங்கவில்லை. தமிழ் மக்கள் மீது படையெடுப்பதற்கு கொச்சிக்கும் காஞ்சி காமகோடிக்கும் சத்யசாயி பாபாவுக்கும் திருவேங்கடத்திலே உள்ள திருப்பதிக்கும் போவது என்பது என்ன செய்தி என்று விளங்கவில்லை.

இதிலே ஒரு முக்கிய கருத்து.. இந்தியாவிலே இதைப் பற்றிச் சொல்கிறார்கள். இலங்கையிலே யாராவது ஒருவர் ஜனாதிபதி பதவிக்கு வந்த உடனே உடனடியாகச் செய்ய வேண்டியது 2 காவடி எடுப்பார்கள். ஒன்று தலதா மாளிகைக்கு. மற்றொன்று புதுடில்லி. இது எங்களுக்கு விளங்கவில்லை. புதுடில்லியிலே என்ன கோவில் கட்டி வைத்திருக்கிறார்களா? அங்கே என்ன குளித்து அபிசேகம் செய்யப் போகிறார்களா? அல்லது நிவேதனம் படைக்கப் போகிறார்களா? அல்லது அங்கே வரம் அள்ளப் போகிறார்களா?

எங்களுக்கு உண்மையிலே விளங்கவில்லை. இந்தியாவில் உள்ள பத்திரிகைகளே கேலியாக எழுதக் கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே மகிந்தர் புதுடில்லிக்குக் காவடி எடுத்து முக்கியமான தலைவர்மார்களைச் சந்தித்த பிறகு மகிந்தர் இது தொடர்பில் எதையும் பேசவில்லை என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

அதேவேளை இந்தியாவின் சார்பாக அதன் வெளிவிவகாரப் பேச்சாளர் திரு. சியாம் சரண் அவர்கள் பத்திரிகையாளர் மகாநாட்டில் சொல்லப்பட்ட கருத்துகள் சிலவற்றைத் தொகுத்துச் சொல்ல நான் விரும்புகிறேன்.

அந்தப் பத்திரிகையாளர் மகாநாட்டிலே 3 முக்கிய கேள்விகள் அவரை நோக்கி எழுப்பப்பட்டன.

1. சிறிலங்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றிய கருத்து என்ன?

2. நீங்கள் 5 ஆவது இணைத் தலைமை நாடாக ஒப்புக்கொள்ளத் தயாராகவிட்டீர்களா?

3. சிறிலங்காவுக்கும் புலிகளுக்குமான பேச்சுவார்த்தைகள் தொடர்பான உங்கள் நிலைப்பாடு என்ற கேள்விகள் கேட்கப்பட்டபோது,

சியாம் சரண் சொன்ன மறுமொழி ஒன்றே ஒன்று, "நாங்கள் இதுபற்றி ஏற்கனவே தெளிவாகச் சொல்லி இருக்கிறோம். இலங்கை சிங்கள அரசு, புலிகளோடு பேச வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. அந்த மூன்று கேள்விகளையும் புறந்தள்ளியிருப்பதனுடைய பரிமாணத்தை நீங்கள் எல்லோரும் புரிந்துகொள்ள முடியும்.

இந்த 3 கேள்வியையும் தூக்கிக் கொண்டுதான் காவடி எடுப்பதற்காக மகிந்தர் அங்கு சென்றார் என்பதும் கடைசியாக வெறுங்கையோடு கொச்சிக்குப் போய் குருவாயூரப்பனை வணங்கிவிட்டு வருவதுதான் அவர் செய்யக் கூடிய பணி என்பதும் இதுக்கு ஒரு ஜனாதிபதி, 8 அமைச்சர். 25 உத்தியோகத்தர் என்று அரைவாசி அரசாங்கத்தைத் தூக்கிக் கொண்டு காவடி எடுக்க வேண்டிய அவசியம் என்ன?என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

நாங்கள் இப்போது சொல்லப் போகிற செய்தி.. இந்தியா எங்கள் பக்கம் மாறிவிட்டது என்பது அல்ல.

இந்திய அரசினுடைய நிலைப்பாடு பற்றி நாங்கள் ஏற்கனவே மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறோம். இப்போது உண்மையிலே சிறிலங்கா அரசுடன் அவர்கள் பொருண்மியக் கூட்டுறவு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக சில ஏற்பாடுகளைச் செய்வாதாக அறிந்தோம். அதுபற்றி நாங்கள் ஒன்றும் பெரிதாக அலட்டிக் கொள்ளப்போவது இல்லை. அது அரசுக்கும் அரசுக்கும் உள்ள செய்தியாக இருக்கிறது.

வைகோ, வீரமணி ஐயா, நெடுமாறன் ஐயா, ராமதாஸ் அவர்கள் சொன்னது போல் எதுவும் வக்கற்ற நிலையில் எல்லாவற்றுக்குமான இறுதித் தீர்வாக இந்தியாவைப் பயன்படுத்த வெளிக்கிடுவது என்பது இந்தியாவை இளிச்சவாயர்கள் என்ற நிலைக்குக் கொண்டு வந்துவிடுவது என்பதை இந்தியர்களே ஏற்றுக்கொள்கிறார் என்பதுதான் இப்போது நாங்கள் சொல்லக் கூடிய செய்தியாக இருக்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்துப் பத்திரிகைகளும், எங்களுக்கு எதிரான பத்திரிகைகளும் கூட தவிர்க்க முடியாமல் உண்மையை எழுத வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

உதாரணத்துக்குப் பாருங்கள், இந்து பத்திரிகை. உங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் இந்துப் பத்திரிகைக்கும் எங்களுக்கும் உள்ள உறவு. நீண்டகாலமாக ஒரு மேட்டுக்குடி செய்தியைத் தாங்கிவரக்கூடிய பத்திரிகை, தமிழ் மக்கள் தொடர்பாக மிகவும் ஒரு மூன்றாம் தரமான நிலைப்பாட்டை எடுப்பதும் எமது விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதும் எங்களுடைய சாவுகளை, இறப்புகளை கணக்கெடுக்கிற மோசமான செயலைச் செய்து வந்த இந்து பத்திரிகை அதனுடைய நிருபர் நிருபமா சுப்பிரமணியன், அவர் இப்போது இந்தியாவில் இருக்கிறார் என நினைக்கிறேன்.

அவர் இப்போது ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இந்தச் செய்தி எழுதப்பட்டது 2 நாட்களுக்கு முன்னர்.

அதனுடைய தலைப்பு சிறிலங்காவும் இந்தியாவும்; மிக நெருங்கி- மிக தொலைவில்..

நாங்கள் சொல்லிக் கொண்டுவருவதை அவர் சொல்லியுள்ளார்.

"என்ன செய்ய முடியாது என்பதில் இந்தியா தெளிவாக உள்ளது. என்ன செய்ய வேண்டும் என்பதில் இந்தியா மிகுந்த குழப்பமாக இருக்கிறது"

இதுதான் மகிந்தருடைய பயணத்தினுடைய நிலைப்பாடு.

மகிந்தர் சென்று வந்த பின்னால் இந்தியா இன்னும் குழம்பியிருப்பதாக நாங்கள் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

இதிலே நிருபமா சுப்பிரமணியம் சொல்லக் கூடிய முக்கியச் செய்திகளை உங்களுக்காக தொகுத்துச் சொல்ல விரும்புகிறேன்.

சில செய்திகள் உண்மையாக வெளிவருகின்றன.

"90-களுக்குப் பின்னால் இந்தியா இலங்கை விடயத்தில் நேரடியாக தலையிடாமல் ஒரு கை கழுவிவிட்ட நிலையில் மறைமுகமான ஈடுபாட்டைக் கொண்டதாகவும்

குறிப்பாகச் சந்திரிகாவின் செயற்பாட்டின் போது புலிகளையும் தமிழ் மக்களையும் பிரிப்பதற்கான ஏற்பாட்டிலே ஒருவகையான ஒத்துழைப்பை வழங்கியதாகவும்

அதேபோல் தவிர்க்க முடியாமல் இந்தியா எதிர்பார்க்காத ரணில் வென்றபோது அமைதி முயற்சியை என்ன செய்வது என்று தெரியாமல் எதிர்க்கவும் முடியாமல் ஆதரிக்கவும் முடியாமல் தத்தளித்ததாகவும்

எதிர்த்தால் போரைத் தாங்கள் ஆதரிக்கிறோம் என்ற பயத்திலே எதிர்க்காமல் இருந்ததாகவும்"

ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை நிருபமா மூலமாகக் கொடுத்திருக்கிறார்கள்.

அதற்கு அப்பால் அவர் சொல்லக் கூடிய செய்தி,

இப்போது உண்மையிலே நடக்கக் கூடிய விசயம் என்னவென்று சொன்னால் ஒரு செய்தியை அவர் வெளியே கொண்டு வந்திருக்கிறார். நாங்கள் ஏற்கனவே அதைச் சொல்லி இருக்கிறோம்.

"ரணிலுடைய காலத்திலே அமைதி முயற்சிக்கு எதிரான சக்திகளோடு இந்தியா தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. குறிப்பாக ஜே.வி.பி.யோடு" என்று செய்தி வந்திருக்கிறது. இதுபற்றி நாங்கள் ஏற்கனவே பேசியிருக்கிறோம்.

இன்று பாருங்கள்...இத்தகைய வெளிப்பாடுகள் எல்லாம் இந்திய மக்கள் முன்னால் வெளிப்படையாக வைக்கப்படுகின்றன.

உண்மையிலே இந்தியாவுக்கு ஒருவிதமான மனநிலை இருக்கிறது. அது பெரியண்ணன் மனநிலை என்று சொல்வார்கள். தன்னைச் சூழ உள்ளவர்கள் தன்னைக் காணவந்து மதித்துப் போனால் அது அவர்களுக்கு ஒரு திருப்தி. ஊர்ச் சண்டியர் என்று கேள்விபட்டியிருப்பியள். அதுபோல இந்தியாவுக்கு ஒரு திருப்தி ஏற்பட்டிருக்கிறது என்பது பத்திரிகைகளுடாக வெளிப்பட்டு இருக்கிறது.

இம்முறை இந்தியா தெளிவாகச் சில செய்திகளைச் சொல்ல வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

இந்தியா, இணைத் தலைமையாகப் பதவியேற்றாலும்

பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் செய்தாலும்

அல்லது வேறு எந்த வகையான உதவியையும் இலங்கைக்குச் செய்ய முற்பட்டாலும்

இந்த முடிவுகளை மேற்கொள்ளும் முன்னால் மகிந்தருக்கு ஒன்றை தெளிவாகச் சொல்ல வேண்டும்-

ஜே.வி.பி., பௌத்த பிக்குகளை அடக்கி வைத்து

தெற்கே அரசியல்வாதிகளுக்கு உண்மையைச் சொல்லி

இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஒற்றையாட்சி முறை உதவாது; இணைப்பாட்சி முறையிலே தீர்க்க முடியும்- அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று மிகக் கடுமையாகத் தெளிவாக மகிந்தருக்குச் சொல்லச் சொல்லி நிருபமா சுப்பிரமணியன் எழுதி இருக்கிறார்.

இந்த ஆதரவை வைத்துக் கொண்டு தமிழீழத்துக்கு இந்தியா ஆதரவு என்று சொல்லிக் கொள்ள முன்வராவிட்டாலும் கூட

நியாயமான உண்மைகளை மறைக்க முடியாததாக இருக்கிறது என்பதை நாங்கள் இன்று உணரக்கூடியதாக இருக்கிறது.

இன்று உள்ள நிலைமை

மகிந்தர் என்ன செய்யப் போகிறார்?

சரத் பொன்சேகாவின் கைப்பாவையாகி போரைத் தொடங்கப் போகிறாரா?

அல்லது

மேற்குலகமும் இந்தியாவும் சொல்வதைப் போல் ஓஸ்லோவுக்குப் போகப் போகிறாரா? என்ற கேள்வி இன்றைக்கு எழுந்து இருக்கிறது.

மகிந்தர் ஓஸ்லோவுக்குப் போகப் போகிறார் என்று எழுதத் தொடங்கிவிட்டார்கள்.

ஏனென்றால்

வேறுவழியில்லை என்பதற்கல்ல.. முழு அளவிலான போரைத் தமிழ் மக்கள் மீது தொடுப்பதற்கு அவருக்குக் கால அவகாசம் ஆகக் குறைந்தது 3 மாதமாவாவது வேண்டும் என்று சொல்லிப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக எழுதுகிறார்கள்.

ஆகவே ஒருவேளை, ஓஸ்லோ போகக் கூடிய முடிவை மகிந்தர் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜே.வி.பி.யை அவர் இந்தியா கூட்டிக் கொண்டுப் போக விரும்பியதே இந்தியாவினது அழுத்தத்தினூடாக ஜே.வி.பி.க்கு ஒரு பாடத்தைப் படிப்பிக்கலாம் என்பதற்காக.

இதுவரை காலமும் போராடுகிற அமைப்புக்குத்தான் கூடிய அழுத்தத்தை உலகம் கொடுத்து வந்தது. எங்களைப் பொறுத்தவரை அப்படித்தான் கொடுத்தார்கள். இந்த அழுத்தங்கள் எங்களுக்குப் பயன்படாது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

இம்முறைதான் சிறிலங்காவின் வரலாற்றில்-தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் சமமான அழுத்தம்- புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் கொடுக்கப்பட்டிருப்பதாக எழுதுகிறார்கள். இந்த சமமான அழுத்தமே ஒருவகையான புதிய பரிணாம மாற்றம்தான்.

புலிகளைப் பொருத்தவரையில் அழுத்தம் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது? நாங்கள் யாரைத் தாங்கி இருக்கிறோம்? எங்களுக்கு எந்த அழுத்தமும் பயன்படாது.

ஆனால் சிங்கள அரசைப் பொறுத்தவரையில் அதனது நாளாந்த உயிரே மேற்குலகத்தின் பிடியில்தான் சிக்கி இருக்கிறது. இந்தியாவின் பிடியில்தான் சிக்கி இருக்கிறது.

ஆகவே அழுத்தம் என்பது எவருக்கு அதிகம் பயன்படும் என்பது வரக்கூடிய நாட்களிலே வரலாற்றிலே தீர்மானிக்கப்படப்போகக் கூடிய செய்தியாக இருக்கிறது.

ஆகவேதான் நாங்கள் சொல்லுகிறோம். இன்று எங்களைப் பொருத்தவரை ஒட்டுமொத்தமாக ஒரு அருமையான சூழல் தமிழ் மக்கள் சிந்திய குருதி காரணமாக, மாமனிதர் சிங்கம் ஐயா சிந்திய குருதி காரணமாக மாறி வருகிறது. சிங்கம் ஐயா இறக்கவில்லை. எங்கள் கூடவே வாழ்கிறார் என்று கூறிக்கொண்டு வருகிறோம். அந்த வார்த்தையைத்தான் மதிப்பிற்கும் அன்பிற்குரிமுரிய ரோமோ அவர்களது வார்த்தைகளிலே கூறினோம்.

(தொடரும்)
நன்றி புதினம்
" "
Reply


Messages In This Thread
[No subject] - by sri - 12-21-2005, 12:42 AM
[No subject] - by kuruvikal - 12-21-2005, 09:06 AM
[No subject] - by sri - 12-26-2005, 09:14 AM
[No subject] - by Anandasangaree - 12-26-2005, 02:58 PM
[No subject] - by தூயவன் - 12-26-2005, 03:49 PM
[No subject] - by sri - 01-01-2006, 04:52 AM
[No subject] - by sri - 01-10-2006, 12:36 PM
[No subject] - by sri - 01-18-2006, 01:18 PM
[No subject] - by sri - 01-24-2006, 12:21 AM
[No subject] - by தூயவன் - 01-30-2006, 04:20 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)