Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிதாமகன்
#20
'இன்று, கோடம்பாக்கம் வேறு அரசு ஆதரவு இல்லாமல், சுய வலிமையில் நிற்க வேண்டியுள்ளது. இது போன்ற நாட்களில் விஷப் பரிட்சை வேண்டாம். வெற்றிப் படம் என்றால், அதற்கு ஃபார்முலா ஒன்று ரெடியாக இருக்கிறது' என... வெள்ளித்திரையின் பிதாமகர்கள் என சொல்லப்பட்ட பலரும் மிகுந்த முன்யோசனைகளோடு படம் எடுக்கும் நிலையில் - பாலாவின் இந்த துணிச்சலான முயற்சி பாராட்டப்பட வேண்டியதுதான், சந்தேகமில்லை. ஆனால்...

போடிநாயக்கனுர். 'போடி' என்று சுருக்கமாக - தமிழ் சிலேடை தன்மையைப் பயன்படுத்தி, உச்சரிப்பு வித்தியாசத்தால் கிண்டலாகவும்..., குறிப்பிடும் ஊரில் இன்னொரு 'கிக்'கான வஸ்தும் உண்டு. கஞ்சா. இப் பகுதியை ஒட்டிய சில தென் மாவட்டங்கள் தவிர, மற்ற மக்களுக்கு அவ்வப்போது செய்தித்தாள்களில் 'கஞ்சா தோட்டம் அழிப்பு' என்று செய்தி வருவதை தவிர, வேறு எதுவும் தெரியாத நிலையில் - கிட்டத்தட்ட ஒரு இன்டஸ்ட்ரி ரேஞ்சில் கஞ்சா வளர்ப்புத் தொழில் திரைமறைவில் நடப்பது எப்படி என்று ஒரு ஆவணப்படமாகவும் 'பிதாமக'னைப் பார்க்கலாம். ஆனால், இது எக்ஸ்ட்ரா. விஷயத்துக்கு வருவோம்.

'போடி' மயானத்தில் ஒரு நிறைமாத கர்ப்பிணி. அங்கேயே பிள்ளை பெற்றவுடன் உயிர்விட, மயானத்து வெட்டியான் குழந்தையை எடுத்து வளர்க்கிறான். அதனால் குழந்தை, 'சித்தன்'-க்கு உணவு, உறங்கல்வரை எல்லாமே மயானத்தில்தான். விழித்தது முதல் பிணங்களோடும், கல்லறையோடும் வாழ்ந்து, அந்த சாம்பல், கொள்ளித் தீ, பிணவாடை எல்லாம் சேர்ந்து சித்தனை, ஒரு 'சித்தன'£கவே (விக்ரம்) - உணர்வுகள் அற்றவனாக (அ) மரத்தவனாக மாற்றிவிடுகிறதாம். பாதி மிருகமாக வாழ்கிறான். வளர்த்த வெட்டியான் காலமான பிறகு, சித்தன் நகரத்துக்குள் நுழைய... நிஜ கதை தொடங்குகிறது.

வெட்டியான் என்பதால் அவனை கடை, காட்சிகளில் சேர்த்துக் கொள்ள மறுக்கிறார்கள். பசிக்காக துடிக்கும் அவன், உணவுக்கு இடைஞ்சலாயிருக்கும் ஆட்களுடன் மோதுகிறான். உள்ளிருக்கும் மிருகத்தன்மை வெளிப்படுகிறது. சில்லறை கஞ்சா வியாபாரி கோமதி (சங்கீதா) அந்த நேரத்தில் ஆதரவாக இருந்து உணவிட, அவள் பின்னால் சித்தன். முதல் உறவு! கோமதியின் சிபாரிசில் கஞ்சா தோட்டத்தில் வேலைக்கு போகிறான் சித்தன். அங்கும் அவன் போக்கு... சிவன்போக்கு!

ஒருமுறை தோட்டத்திலிருந்து கஞ்சா கடத்தும்போது போலிஸ் சுற்றிவளைக்க, கூட வந்த மற்ற எல்லாரும் தப்பி ஓடிவிடுகிறார்கள். ஏன் ஓடுகிறார்கள் என்பதுகூட புரியாத சித்தன், தன்போக்கில் அலட்டிக் கொள்ளாமல் நின்று பிடிபடுகிறான். கஞ்சா கடத்தல் வழக்கில் சிறை வாசம். அங்கேதான் சக்தி (சூர்யா) சித்தனுக்கு அறிமுகமாகிறான். சிறையில், சித்தனைச் சீண்டியவர்களிடம் மீண்டும் மிருகத்தனம். நிஜமாகவே கோர முகம் காட்டுகிறது மிருகம். மோதியவனை தூக்கி எறிய, கொதிக்கும் சாம்பாரில் விழும் அவன் துடிப்பையும் காமிராவில் காட்டுகிறார்கள். இது அதீத மூர்க்கத்தனம். சித்தனை யாரும் கட்டுப்படுத்த முடியவில்லை என, போலிஸார் திட்டமிட்டு சிறைப்படுத்தி - கால், கை கட்டிய நிலையில் தொங்கவிட்டு தாக்குகிறார்கள். இந்த நேரத்தில் பரிவு காட்டுவது சக்தி. அதனால் இருவருக்கும் நட்பு முளைக்கிறது.

இந்த நட்புதான் பின்பு சக்திக்கு பிரச்னையாகிறது. தன்னைக் காட்டிக் கொடுத்தான் என கஞ்சா தோட்ட முதலாளி சக்தியை கொலை செய்ய, அதற்கு சித்தன் எப்படி பதில் சொல்கிறான் என்பதுதான் மீதிக்கதை.

சித்தன் பாத்திரத்திற்கு விக்ரம் முழுமையான நியாயம் செய்திருக்கிறார். ஆனால், இயக்குனர் பாலாதான் அந்த பாத்திரத்தை - நிஜ மிருகமாகவா... இல்லை ஆதி மனிதனாகவா... அல்லது மென்மையான மனித உணர்ச்சிகளும் தலையெடுக்கும் நாகரிக மனிதனாகவா... எப்படி சித்தரிப்பது என்பதில் சற்றே குழம்பி, முன்னுக்கும், பின்னுக்கும் தள்ளாடுகிறார். நம்மில் வெகு சிலரே வெட்டியான் கேரக்டரை நேரில் பார்த்து, உணர்ந்திருக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதால் - வெட்டியான்கள் இப்படியும் இருப்பார்களோ என்ற கருத்து உருவாக்கக்கூடிய அளவு நடிப்பில் அழுத்தம்.

சக்தியாக நடித்திருக்கும் சூர்யா, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் முன்னேறிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் - புத்திசாலித்தனமான ஏமாற்று வேலைகள் செய்து, வாய் ஜாலத்தால் பிழைப்பு ஓட்டும் கேரக்டர். ஆரம்பத்தில் லோக்கல் சூதாடியாக..., ரயில் வண்டியில் ஃபாரின் ஐட்டம் விற்பவராக..., பின்னர் வாயு தொல்லைக்கு லோக்கல் வைத்தியராக... ஒவ்வொரு இடத்திலும் ஒரு மாதிரி. அசத்தலான வார்த்தை ஜாலம்... அதற்கு பொறுத்தமான டெலிவரி... டைமிங் சென்ஸ்... என அம்சமாக பொருந்தி வருகிறது. அதேபோல சிறைக்குள் நுழையும்போது அறிமுகம் செய்து கொண்டு அடிக்கும் லந்து... இப்படி எல்லாவற்றிலுமே.... சூர்யாவுக்குள் ஒரு கலகலப்பு, காமெடி சித்தர் புதைந்திருக்கிறார் என்பதை வெளிக்கொண்டு வந்த பாலாவுக்கு கோடம்பாக்கம் கோடி நமஸ்காரம் போடலாம். பின்பாதியில் உருக்கமான காட்சிகளிலும் சோடை போகவில்லை. குறிப்பாக கோணிப்பையில் பிணமாக காட்டும்போது... யாரந்த மேக்கப் மேன்? ரெட்டை சபாஷ்!! விருதுக்கு போட்டியிடத் தகுதியான காட்சி.

லைலா, ஒரு மாணவியாக அறிமுகமாகிறார். என்ஜினியரிங் மாணவர்கள் வைத்திருக்கும் மினிடிராப்டரைத் தூக்கிக் கொண்டு, காக்கி சாட்டை போட்டு உலவ விட்டிருந்தாலும்... அவர் படிக்கும் இடம் என எதையும் காட்டாமலேயே, குழந்தைத்தனம் மாறாத குறுகுறு மாணவி காரெக்டர் பளிச்சிடுகிறது. முதல்முறை சக்தியிடம் ஏமாந்ததிலிருந்து, அவனைப் பார்க்கும்போதெல்லாம் பரபரப்பு. கடைசியில் போலிசில் பிடித்துக் கொடுத்தபின், அவன் சிறையிலிருந்து திரும்பி வந்து என்ன செய்வனோ என அப்பா வீட்டில் பயந்து நடுங்கிக் கொண்டிருக்க, 'பின்னாடி அவார்ட் வாங்கி வருவேன். அப்ப நீங்க யாரும் தொடக்கூடாது' என்று வீரம் பேசுவதாகட்டும்..., சிறையில் சூர்யாவிடம் பேசி விட்டு வெளியேறும்போதாகட்டும்... பல இடங்களில் கிராமத்து அப்பாவி சூரப்புலி கண்முன் தோன்றுகிறார்.

சங்கீதா, மெச்சூரிட்டி உள்ள கிராமத்துப் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். ஊரெல்லாம் விரட்டும் சித்தனின் பசிக்கு உணவு தந்ததோடு முடிந்தது என்று தன் போக்கில் போனவரை, சித்தன் பின் தொடர... அவனுக்கு வேலை வாங்கித் தந்தது, அப்புறம் சிறையில் இருந்து பெயிலில் எடுத்தது என மெல்ல மெல்ல ஒட்டிக் கொள்ளும் அந்த முரட்டுக் கேரக்டர் மீது காதல் வருவதை இயற்கையாக காட்டியிருக்கிறார். பின்னர் சக்தி அநியாமாக கொலையானதும் உணர்ச்சியில்லாமல் ஓரமாக உட்கார்ந்திருக்கும் சித்தனை கரித்துக் கொட்டுவதாகட்டும், உடலை இடுகாட்டுக்கு தூக்க வரும் சித்தனை துடைப்பத்தால் அடித்து விரட்டுவதாகட்டும்... கிராம பெண் வாழ்க்கையை சித்தரிப்பதில் பாலாவும் சேர்ந்தே ஜெயித்திருக்கிறார்.

பாலாவின் சென்ற படத்தில் கலக்கியிருந்த கருணாஸ§க்கு, இந்த படத்தில் சுருதி குறைவுதான். கனமான, மற்ற நான்கு கேரக்டர்கள் கிளப்பும் வெள்ளத்தில் அவர் இருக்கும் இடம் தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார் - சூர்யா கூடவே படம் முழுக்கத் தோன்றினாலும். மனோபாலாவும் இந்த கம்பெனியில் பக்க மேளம் வாசித்திருக்கிறார். இவர்கள் தவிர, கஞ்சா தோட்ட முதலாளி அதற்கான கர்ணகடுரத்தை காட்டியிருப்பது பிளஸ்.

பாலாவுக்கு மிக முக்கியமான ஆதரவு - பின்னணி இசையைமத்துள்ள இளைராஜா, மற்றும் காமிராமென் பாலசுப்ரமணியன். கஞ்சா காட்டில்... காட்டு பாதைகளில்... மயான பூமியில்... இப்படி ஒவ்வொரு இடத்திலும் இவர்கள் இருவரும் செய்திருக்கும் மாயாஜாலம், சம்பவங்களை அப்படியே கண்முன் நிற்க வைக்கிறது. பாடல்களுக்கும் குறைவில்லை. மசாலா விஷயம் மாதிரி எக்ஸ்ட்ராவாக சேர்க்கப்பட்டிருந்தாலும், சிம்ரன் நடிகையாகவே வந்து ஆடிப்பாடும் காட்சிகளில் இருக்கும் வெரைட்டியும், கலகலப்பும், சுறுசுறுப்பும் படத்தின் போக்கில், வேகத்தில் இடறவில்லை என்பதுடன், ரசிக்க வைக்கிறது.

இவ்வளவு இருந்தென்ன? பாலா முக்கியமான இந்த விஷயத்தில் தூங்கியிருக்கக் கூடாது. படம் முழுக்க காட்டப்படும் கண்முடித்தனமான violenceக்கு நியாயமே, சித்தன் காரண காரியம் புரிந்து..., முன்பின் யோசித்து செயல்படுபவன் அல்ல; Impluse reactive character என்பதுதான். அப்படியான சித்தனுக்கு..., சக்தி இறந்துபோய் சடலம் வீட்டில் இருந்தபோது கூட உணர்வில்லாமல் வானத்தையும் பூமியையும் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தவனுக்கு... லைலா எதுவுமே வாய் திறந்து சொல்லாதபோதும்கூட சக்தியைக் கொன்றது கஞ்சா தோட்ட முதலாளிதான் என்பதை எப்படி தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த அளவுக்கு யோசிக்கத் தெரிந்த காரெக்டராக சித்தனை படத்தில் காட்டவில்லையே! அடுத்து, கஞ்சா தோட்ட முதலாளி இருக்கக்கூடிய வாய்ப்புள்ள இடம் ஒவ்வொன்றாக தேடிதேடி சென்று... காத்திருந்து, விரட்டி விரட்டி... கொடுரமாகக் கொலை செய்யும் முன் லைலாவுக்கு அவன் முகத்தைத் தூக்கிக் காட்டி, பழி தீர்த்துவிட்டதாகச் சொல்லாமல் சொல்லும் சித்தன் காரெக்டருக்கு மற்ற இடங்களில் மட்டும் 6வது அறிவை ஆப் செய்யப்பட்டுள்ளது இடிக்கிறது.

தேவைப்படும்போது தேவையானபடி கூடுவிட்டு கூடு பாய்கிறது அந்த காரெக்டர். கோமதி மீது காதல் உணர்வு வருகிறது... மஞ்சுவும் (லைலா), சக்தியும் காதலிக்க... அவர்களுக்கு Privacy தேவைப்படும் என ஒதுங்கி சென்று வழிவிடுகிறார் சித்தன். இதெல்லாம் படத்தில் காட்டப்படும் அரை மனித, அரை மிருக சித்தனுக்கு சாத்தியமா என்ற கேள்விகள் எழ வாய்ப்பில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இதையெல்லாம் சொல்லத் தவறிவிட்டால் அது பாலாவிற்கும், அவர் மீது தமிழ் மீடியா வைக்கும் எதிர்பார்ப்புக்கும் துரோகம் என்றே தோன்றுகிறது.

மற்றபடி பிதாமகன், நம்ம வீட்டுப் பிள்ளைதான் - அதாவது, குடும்பத்தோடும் போய் பார்க்கலாம்.
- சந்திரன்




--------------------------------------------------------------------------------

நன்றி: அம்பலம்
[i][b]
!
Reply


Messages In This Thread
பிதாமகன் - by aathipan - 10-29-2003, 07:04 PM
[No subject] - by சாமி - 10-29-2003, 08:42 PM
[No subject] - by aathipan - 10-30-2003, 02:36 AM
[No subject] - by AJeevan - 10-30-2003, 10:07 AM
[No subject] - by veera - 10-30-2003, 12:24 PM
[No subject] - by AJeevan - 10-30-2003, 01:37 PM
[No subject] - by aathipan - 10-30-2003, 01:49 PM
[No subject] - by AJeevan - 10-30-2003, 01:59 PM
[No subject] - by aathipan - 10-30-2003, 02:28 PM
[No subject] - by Paranee - 10-30-2003, 04:11 PM
[No subject] - by shanmuhi - 10-31-2003, 08:21 PM
[No subject] - by aathipan - 11-01-2003, 03:55 AM
[No subject] - by சாமி - 11-01-2003, 10:22 PM
[No subject] - by Paranee - 11-05-2003, 01:24 PM
[No subject] - by vasisutha - 11-06-2003, 12:40 PM
[No subject] - by kuruvikal - 11-06-2003, 05:27 PM
[No subject] - by aathipan - 11-06-2003, 05:52 PM
[No subject] - by vasisutha - 11-06-2003, 11:39 PM
[No subject] - by AJeevan - 11-07-2003, 12:15 AM
[No subject] - by சாமி - 11-11-2003, 09:22 PM
[No subject] - by சாமி - 11-11-2003, 09:32 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)