Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறிலங்கா அரசுத்தலைவர் தேர்தல் செய்திகள்
#8
[size=15]<b>பிரதமர் ஜே.வி.பி. இணக்கப்பாடு </b>

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்கவுள்ளமை உறுதியாகி விட்டது. ஜே.வி.பி. முன்வைத்த 12 முக்கிய நிபந்தனைகளுக்கு பிரதமர் இணங்கியதையடுத்தே இந்த ஆதரவினை வழங்க அக்கட்சி முன்வந்துள்ளது.

ஜே.வி.பி. பிரதமரிடம் முன்வைத்துள்ள நிபந்தனைகள் சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரை பாரதூரமான விடயங்களாகவே நோக்கப்படுகின்றன.

சுனாமி பொதுக்கட்டமைப்பினை நடைமுறைப்படுத்துவதனை தவிர்த்தல், இறுதித் தீர்வு குறித்தே விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தல், இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து விடுதலைப் புலிகளுடன் மட்டும் பேசாது சகல தரப்பினருடனும் பேசுதல், இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சியின் அடிப்படையிலேயே தீர்வு, போர் நிறுத்த ஒப்பந்தத்தினை மீளமைத்தல், நோர்வேயின் பணியை மீள் பரிசீலனை செய்தல் ஆகியவை ஜே.வி.பி. யினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளில் முக்கியமானவையாகும்.

இவ்விடயங்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணங்கியுள்ளமையானது எதிர்காலத்தில் சமாதான முயற்சிக்கே பாதகமாக அமையும் செயல் என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட சிறுபான்மைக் கட்சிகளின் கருத்தாகவுள்ளது.

இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள் தீர்வு காண முடியாது என்பதை இனம் கண்டமையினால்தான் சமஷ்டி அடிப்படையில் தீர்வைக் காண்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் இணக்கத்துக்கு வந்திருந்தனர்.

இதேபோல், தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற அடிப்படையிலேயே கடந்த அரசாங்கம் அவர்களுடன் பேச்சுவார்த்தையினை ஆரம்பித்திருந்தது. போர் நிறுத்த ஒப்பந்தம், நோர்வேயின் மத்தியஸ்த்தம் என்பவற்றினால் தான் சமாதான முயற்சி என்பது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சமாதான முயற்சியானது தடைப்பட்டிருந்தாலும் மீண்டும் அதனை ஆரம்பிக்க முடியும் என்ற நம்பிக்கை காணப்படுவதற்கு இவை இரண்டுமே காரணமாகும்.

எனவே, சமாதான முயற்சியையும், சுனாமி பொதுக்கட்டமைப்பினையும் அன்று முதல் எதிர்த்து வந்த ஜே.வி.பி. யுடன் பிரதமர் கூட்டிணைவதானது சிறுபான்மை மக்கள் மத்தியில் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.

சுனாமி பொதுக்கட்டமைப்பை உருவாக்குவதற்கு ஜே.வி.பி. யானது கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இறுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திலிருந்தும் வெளியேறியிருந்தது.

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க துணிவுடன் மேற்கொண்ட முயற்சியினால் பொதுக்கட்டமைப்பு சாத்தியமானது. ஆனால், அதற்கும் கூட நீதிமன்றம் சென்று ஜே.வி.பி. தடைபோட்டுள்ளது. இத்தகைய நிலையில் தான் தற்போது ஜே.வி.பி. யின் நிபந்தனைகளுக்கு பிரதமர் ராஜபக்ஷ இணங்கியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையில் கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவும் ஜே.வி.பி. யின் ஆதரவினை ஜனாதிபதித் தேர்தலில் பெறுவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தது. ஜே.வி.பி. யுடன் நடைபெற்ற பேச்சுக்களின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரி பாலசிறிசேன, அமைச்சர்களான மங்கள சமரவீர, சுசில் பிரேமஜயந்த ஆகியோரும் கலந்து கொண்டனர்.

எனவே, ஜே.வி.பி. யின் நிபந்தனைகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனிப்பட்ட முறையில் இணக்கம் தெரிவித்தார் எனக் கூற முடியாது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜே.வி.பி. யின் நிபந்தனைகளுக்கு இணங்கியதாகவே கருத வேண்டியுள்ளது.

ஜே.வி.பி. யுடன் இணைந்து அமைக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் சமாதான பேச்சுக்களை முன்னெடுக்க முடியாதுபோனமைக்கு காரணம் ஜே.வி.பி. யின் எதிர்ப்பு நடவடிக்கைகளாகவே அமைந்திருந்தன.

இடைக்கால நிர்வாக சபை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இணக்கம் காணப்பட்ட பின்னரே இறுதி தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர். ஆனால், இறுதி தீர்வு குறித்தே பேச முடியும் என்று அரசாங்கம் கூறியிருந்தது. இதனால்தான் பேச்சுக்களை மீள ஆரம்பிக்க முடியாத முட்டுக்கட்டை நிலை காணப்பட்டு வந்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து சமாதான முயற்சியை முன்னெடுப்பதற்கு இவ்விடயமே தடையாக இருந்துள்ளது.

தற்போதும் ஜே.வி.பி. முன் வைத்துள்ள நிபந்தனையில் இறுதித் தீர்வு குறித்தே பேச வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் சமாதானப் பேச்சுக்களை எவ்வாறு ஆரம்பிக்க முடியும்? எவ்வாறு அது சாத்தியமாகும்?

ஜே.வி.பி. யின் நிபந்தனைகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டமை வருத்தமளிப்பதாகவும், யுத்த சூழலையே இது ஏற்படுத்தும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கருத்து தெரிவித்துள்ளார். இதேபோல் நிபந்தனைகளுக்கு இணங்கியதன் மூலம் ஜே.வி.பி. யின் சிறைக்குள் பிரதமர் அகப்பட்டு விட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

எனவே, ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. யின் ஆதரவை பெறுவதற்காக சமாதான முயற்சிக்கு எதிரான நிபந்தனைகளுக்கு பிரதமர் இணங்கியமை சிறுபான்மை மக்களின் மனங்களில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை உணர்ந்து பிரதமரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் செயற்பட முன்வர வேண்டும். நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த தக்க வகையில் அனைவரது செயற்பாடுகளும் அமைய வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்

- <b>Veerakesari Editor's View</b>
Reply


Messages In This Thread
[No subject] - by வினித் - 09-05-2005, 09:59 PM
[No subject] - by வினித் - 09-05-2005, 10:01 PM
[No subject] - by வினித் - 09-05-2005, 10:02 PM
[No subject] - by வினித் - 09-05-2005, 10:03 PM
[No subject] - by RaMa - 09-06-2005, 04:53 AM
Re: பிரதமர் வெற்றி பெற்றால் நாடு பிளவுபடுவது நிச்சயம் - by AJeevan - 09-06-2005, 08:18 PM
[No subject] - by வினித் - 09-07-2005, 10:51 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)