Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடவுளுக்கேன் கருணை இல்லை?...
#1
கடவுளுக்கேன் கருணை இல்லை?...
தொ. சூசைமிக்கேல்


ஆனதுபார் சவூதிவந்து இருப தாண்டு:
அடுக்கடுக்காய்த் துன்பமின்றி இன்ப மில்லை!
ஏனதுநீ சொல்வதென்(று) எல்லாரும் கேட்பர்:
என்னையன்றி அஃதறிவார் எவரும் இல்லை!

சுமைதாங்கி ஓய்வின்றிச் சுமையே தாங்கும்;
சொல்வார்கள்; இதுவரைநான் கண்ட தில்லை.
எமைத்தாங்கும் சுமைதாங்கி சவூதி நாட்டில்
எம்தலையின் சும்மாட்டுக்(கு) ஓய்வே இல்லை!

மாடாக உழைத்துவிட்டோம்; இளமை தன்னை
மாய்த்துவிட்டோம்; என்றாலும் மகிழ்ச்சி இல்லை.
காடாகக் கிடப்பவற்றைக் கழனி யாக்கும்
கனவுகட்குக் கனவில்கூட நனவு இல்லை!



கைநிறையச் சம்பளம்தான்; இருந்தும் என்ன?
கடன்சுமையின் கணக்கினிலே மாற்றம் இல்லை:
மெய்நிறைய நோய்மொய்த்துக் கொண்ட தாலே
மிஞ்சுவது சஞ்சலமே; இதுபொய் இல்லை!

"எத்தனைநாள் இப்படியே வாழ்ந்தி ருப்போம்?"
என்பதொரு கேள்விக்கு விடையே இல்லை:
"அத்தனையும் போதுமடா! போவோம்!" என்றால்
அச்சுறுத்தும் செலவுகட்கோர் அளவே இல்லை!

வங்கிதனில் பணம்செலுத்தி முடித்த பின்னர்
வாய்க்கினிதாய்ச் சாப்பிடவோ காசும் இல்லை;
எங்கிருந்தோ கடன்வாங்கி அவ்வப் போது
இரைபோட்டுக் கொள்வதனால் வலுவும் இல்லை!

பெற்றமகன் பணிதேடிப் பிறிதோர் ஊரில்
பெருஞ்சிரமம் மேற்கொண்டும் விடிவே இல்லை;
உற்றமனை ஒற்றையளாய்த் தனித்த வீட்டில்
உழலுகின்றாள்; வாழ்க்கையிலே பயனே இல்லை!

"கொண்டவளைப் பிரிந்ததெல்லாம் குழந்தைக்(கு)!" என்னும்
கூற்றுக்குப் பிரிவுதினம் வரவே இல்லை:
என்றெனது இல்லாள், தன் கையால் அன்னம்
இட்டென்னை உண்ணவைப்பாள்? விளங்க வில்லை!

ஒவ்வொருநாள் இரவினிலும் உறங்கு தற்(கு)என்
உற்றார்தம்; ஞாபகங்கள் விடுவ தில்லை;
எவ்வளவு தான்புரண்டு படுத்த போதும்
இருவிழிகள் குளமாதல் நிற்ப தில்லை!

இவையனைத்தும் எனக்குமட்டும் நேர்வ தல்ல;
ஏனையர்க்கும் நேர்வதுதான்; ஐயம் இல்லை!
கவலையின்றி சவூதிமண்ணில் ஒருவ னேனும்
கண்துயில்வான் என்றெனக்குத் தோன்ற வில்லை.

தூக்கமிலா இரவுகளின் தொடர்ச்சி யாலே
துக்கமதைத் தாங்குதற்குச் சக்தி இல்லை;
யார்க்குமிலா வேதனையின் விபரம் சொல்லி
யாரிடமும் முறையிடவும் முடிய வில்லை!

கடவுளிடம் முறையிட்டு அலுத்துப் போனேன்:
கண்ணீர்விட்(டு) அழுதழுது களைத்துப் போனேன்;
கடவுளைநான் இல்லையென்று சொல்ல வில்லை;
கடவுளுக்கேன் என்னிடத்தில் கருணை இல்லை?...

- தொ.சூசைமிக்கேல் (tsmina2000@yahoo.com)

நன்றி: கீற்று ( keetru.com )
Reply


Messages In This Thread
கடவுளுக்கேன் கருணை இல்லை?... - by hari - 08-17-2005, 02:54 AM
[No subject] - by Rasikai - 08-17-2005, 03:13 AM
[No subject] - by Jenany - 08-17-2005, 08:43 AM
[No subject] - by kuruvikal - 08-17-2005, 10:08 AM
[No subject] - by Niththila - 08-17-2005, 12:04 PM
[No subject] - by Nitharsan - 08-17-2005, 05:04 PM
[No subject] - by கீதா - 08-17-2005, 06:16 PM
[No subject] - by tamilini - 08-17-2005, 07:02 PM
[No subject] - by அனிதா - 08-17-2005, 07:15 PM
[No subject] - by MUGATHTHAR - 08-17-2005, 08:20 PM
[No subject] - by inthirajith - 08-18-2005, 05:59 PM
[No subject] - by ப்ரியசகி - 08-18-2005, 06:46 PM
[No subject] - by வெண்ணிலா - 08-19-2005, 12:20 AM
[No subject] - by ¦ÀâÂôÒ - 08-19-2005, 01:08 AM
[No subject] - by shanmuhi - 08-19-2005, 05:42 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)