Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நச்சுக் குப்பைகள்
#5
4

Orlando Figes என்பவர் எழுதிய Natasha's Dance என்னும் ஒரு புத்தகம். ருஷ்யக் கலாச்சார வரலாற்றைப் பற்றியது. இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது அடிநாதமாக என்னுள் ஒலித்துக்கொண்டிருந்தது இன்றைய தமிழ் மக்களுக்கும் ருஷ்ய மக்களுக்கும் (குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய ருஷ்யாவின் மக்கள்) இருக்கும் ஒற்றுமைதான். தமிழ் மக்களுக்கு சினிமா, மெகா தொடர்கள்மீது எவ்வளவு பைத்தியமோ அவ்வளவு பைத்தியம் ருஷ்ய மக்களுக்குப் புத்தகங்கள்மீது இருந்தது. மக்கள் புத்தகங்களை அவர்கள் முன்னால் வழிபட்ட புனிதர்களின் படங்களின் icons மீது வைத்திருந்த அதே மரியாதையோடு அணுகினார்கள். வாழ்க்கைக்குப் புத்தகங்கள் வழிகாட்டியாக அமையும் என்னும் ஒரு திடத்தோடும்தான். ருஷ்யாவிற்கு 1937ஆம் ஆண்டு சென்ற ஃபாய்க்ட்வாங்கர் என்னும் ஜெர்மானிய எழுத்தாளர் கூறுவது இது:

'ருஷ்ய மக்களின் படிப்புத் தாகம் அளவிட முடியாதது. புது தினசரிகள், பத்திரிகைகள், புத்தகங்கள் - இவை எல்லாமே இந்தத் தாகத்தைக் கொஞ்சம்கூட அடக்க முடிந்ததாகத் தெரியவில்லை. படிப்பது என்பது அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாக ஆகிவிட்டது. ஆனால் சோவியத் வாசகர்கள் அவர்கள் வாழும் வாழ்க்கைக்கும் புத்தகம் காட்டும் வாழ்க்கைக்கும் இடையே தடுப்புச் சுவர்கள் இருப்பதாகக் கருதுவதே இல்லை. கதையின் நாயகர்கள் அவர்களுக்கு ஊன், உயிர் பெற்று உண்மையிலேயே நடமாடும் நாயகர்கள். இந்த நாயகர்களுடன் அவர்கள் வாக்குவாதம் செய்கிறார்கள். சண்டை போடுகிறார்கள். கதையில் நடப்பவை உண்மையின் ஊட்டம் பெற்றவை என்று நினைக்கிறார்கள்.'

சினிமா மக்களைச் சென்றடையும் மகத்தான சாதனம் என்பது பற்றி போல்ஷெவிக்குகளுக்கு ஒரு ஐயமும் இல்லை. 'கலைகளிலேயே எங்களுக்கு முக்கியமான கலை சினிமாதான்' என்று லெனின் கூறினார். ட்ராட்ஸ்கி சொன்னது இது: சர்ச்சுகள், மதுபானக் கடைகளோடு இளைஞர்களைக் கவர்வதில் சினிமாவும் போட்டியிடும். ஸ்டாலின் காலத்தில் இருந்த கலாச்சார அடக்குமுறை பற்றி நமக்குப் பல விமரிசனங்கள் இருக்கலாம். ஆனால் அவர் காலத்தில் ருஷ்யா புத்தகங்களையும் மற்ற கலைகளையும் அணுகியமுறை புதுமையாக இருந்தது. இதை Isaiah Berlin -இவர் ஸ்டாலினியத்தைத் தீவிரமாக எதிர்த்தவர் - மிக அழகாகச் சொல்கிறார்:

'அந்தக் கடுமையான தணிக்கை முறை என்னென்னவோ செய்திருந்தாலும் மேற்கில் ரயில் நிலையப் புத்தகக் கடைகளில் காணக் கிடைப்பது போன்ற ஆபாசப் படைப்புகள், குப்பை இலக்கியம், மூன்றாந்தர மர்மக் கதைகளை ஒடுக்கியது; சோவியத் வாசகர்கள், நாடகப் பார்வையாளர்கள் ஆகியோரின் எதிர்வினையை நாம் காட்டும் எதிர்வினையை விடத் தூய்மையானதாக, நேரடியானதாக, அப்பாவித்தனம் கொண்டதாக ஆக்கியது. ஷேக்ஸ்பியர் அல்லது ஷெரிடன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆங்கில நாடகாசிரியர்ன நாடகங்கள் நடக்கும்போது பார்வையாளர்கள் - அதில் சிலர் நிச்சயம் நாட்டுப்புற மக்கள் - பாராட்டையோ எதிர்ப்பையோ உரக்க வெளிப்படுத்தி மேடையில் நடந்த செயல்களுக்கு அல்லது நடிகர்கள் பேசிய வசனங்களுக்கு ஏற்ப எதிர்வினையாற்றினார்கள். இவற்றில் உருவான பரபரப்பு சில சமயம் மிகத் தீவிரமாக இருந்தது. அதுவும் மேற்கிலிருந்து வந்த ஒருவருக்கு வித்தியாசமாகவும் நெகிழ்ச்சி தருவதாகவும் இருந்தது.'

நமது மக்களுக்குப் புத்தகங்களின் மீது மாளாக் காதல் ஏற்படும் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் சினிமா, தொலைக்காட்சி சாதனங்களை ருஷ்ய மக்கள் அன்று அணுகியதுபோலவே இன்று அணுகுகிறார்கள். ஒரு சம்பவம் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. தில்லியிலிருந்து சென்னைக்கு வந்தவன் எனது தங்கையின் வீட்டில் நுழைகிறேன். எனது தாயார் உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தது தெளிவாகக் கேட்டது. 'நாசமாப் போறவனே! நீ உருப்படுவயா, இந்த அநியாயம் பண்ணறயே . . .' இன்னும் பல வசவுகள்.

'என்ன அம்மா, ஊரிலிருந்து வந்தவுடனே எனக்கு அர்ச்சனையா?'

தொலைக்காட்சித் தொடரை வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்த அம்மா என்னை அப்போதுதான் கவனித்தார்.

'வா, வா. உன்னை இல்லடா கண்ணா. உன்னைச் சொல்லுவனா? இந்தக் கட்டைல போறவன் பொண்டாட்டிய என்ன பாடுபடுத்தறான். அவ அம்மா ராட்சசியும் பாத்துண்டுருக்காளே.'

மனோதத்துவத்தில் ஒரு சொல் உண்டு. Deindividuation. அதாவது 'தன்னை இழத்தல்.'

இந்த இழப்பு, கூட்டத்தில் நடக்கலாம், தனிமையிலும் நடக்கலாம், வீட்டுக் கூடத்திலும் நடக்கலாம். தொடர்கள் இதைத்தான் செய்துகொண்டிருக்கின்றன. நமது பெண்கள் தங்களை, தங்கள் தனித்தன்மையை, மெல்ல மெல்ல இழந்து மந்தையில் தங்களை அறியாமலே சேர எவ்வளவு வழிவகை செய்ய வேண்டுமோ அவ்வளவையும் செய்துகொண்டிருக்கின்றன. சினிமாவும் பொழுதுபோக்குப் பத்திரிகைகளும்கூட இதைத்தான் செய்துகொண்டிருந்தன. ஆனால் இந்த அளவிற்கு வீட்டுக் கூடத்திற்கும் படுக்கை அறைக்கும் வாரம் ஐந்து முறை தவறாமல் வந்து சாடும் சக்தியை இந்தச் சாதனங்கள் பெற்றிருக்கவில்லை. எனவே தொடருக்கு அடிமையாவது சீக்கிரத்திலேயே நடந்துவிடுகிறது. தொடரின் ஒரு பகுதியைத் தவற விட்டாலே அடிமைகள் துடிக்கிறார்கள். வாழ்க்கையின் மிக முக்கியமான ஏதோ ஒன்றை இழந்துவிட்டதுபோல நினைக்கிறார்கள். இந்த மந்தைத்தனத்தை நாமாகவே தேடிச் செல்கிறோம் என்னும் ஒரு பிரமையும் உண்டாக்கப்பட்டுவிட்டது. தாராளமயமாக்கப்பட்ட சந்தையில் ஏதும் திணிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

எது எப்படியோ, சோவியத் ஒன்றியம் சினிமா மற்றும் இதர மக்கள் தொடர்புச் சாதனங்களை அணுகியதை அதன் கொள்கைப் பிடிப்பு நிர்ணயித்தது என்றால் இன்று தமிழகத்தில் இந்தச் சாதனங்களைத் தங்கள் பிடிக்குள் வைத்துகொண்டிருப்பவர்களின் அணுகுமுறையை நிர்ணயிப்பது தாராளமயமாக்கப்பட்ட சந்தைதான். கள்ளக் காசுகள் நல்ல காசுகளை சந்தையிலிருந்து விரட்டி அடித்துவிடும் என்று சொன்னேன். பத்திரிகைகளிலும் திரைப்படங்களிலும் பல ஆண்டுகளாக இப்படி நல்ல காசுகளை விரட்டி அடித்துக்கொண்டிருந்தவர்கள்தான் இன்று மெகாதொடர் மன்னர்களாக விளங்குகிறார்கள் என்பது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. இவர்களது திறமையைப் பற்றிச் சிறிது ஐயம்கொள்ள முடியாது. இந்தியப் பெண்களின் அடிமன ஆழங்களில் பொதிந்திருக்கும் தங்களைத் தாங்களே வருத்திக்கொள்ளும் தன்மையை இவர்கள் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். எப்படிப்பட்ட குப்பையாக இருந்தாலும் அதன் நாற்றத்தின் வீரியம் பெண்கள்விடும் கண்ணீரினால் வெகுவாகக் குறைக்கப்பட்டுவிடும் என்பதையும் தெரிந்துவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் வெகுசனப் பத்திரிகைகளிலிருந்து மலர் கொஞ்சும் குருக்கத்திச் செடிகள் போன்று சிலரால் வளர முடிந்தது. திரைப்படங்கள் பாலு மகேந்திரா போன்றவர்களை அளித்தன. தொலைக்காட்சிக் குப்பைகள் இத்தகைய அதிசயத்தை நிகழ்த்தும் என்று எனக்குத் தோன்றவில்லை. இவை நச்சுக் குப்பைகள்.

இந்தத் தொடர்களில் நடிப்பவர்கள் பலர் திறமையாக நடிக்கிறார்கள். ஆனால் அவர்களிலும் பெரும்பாலானவர்கள் சுரண்டப்படுபவர்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். அவர்களுக்குத் தனிக்குரல் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
<b> . .</b>
Reply


Messages In This Thread
[No subject] - by kirubans - 08-13-2005, 06:05 PM
[No subject] - by kirubans - 08-13-2005, 06:08 PM
[No subject] - by kirubans - 08-13-2005, 06:31 PM
[No subject] - by kirubans - 08-13-2005, 06:39 PM
[No subject] - by kirubans - 08-13-2005, 06:42 PM
[No subject] - by tamilini - 08-13-2005, 07:05 PM
[No subject] - by narathar - 08-13-2005, 11:00 PM
[No subject] - by stalin - 08-14-2005, 08:57 AM
[No subject] - by Mathan - 08-14-2005, 09:52 AM
[No subject] - by tamilini - 08-14-2005, 02:53 PM
[No subject] - by Mathan - 08-14-2005, 06:19 PM
[No subject] - by MUGATHTHAR - 08-14-2005, 07:32 PM
[No subject] - by vasisutha - 08-14-2005, 07:57 PM
[No subject] - by MUGATHTHAR - 08-14-2005, 08:01 PM
[No subject] - by vasisutha - 08-14-2005, 08:05 PM
[No subject] - by shobana - 08-15-2005, 09:27 AM
[No subject] - by Mathan - 08-15-2005, 09:29 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)