![]() |
|
நச்சுக் குப்பைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: நச்சுக் குப்பைகள் (/showthread.php?tid=3673) |
நச்சுக் குப்பைகள் - kirubans - 08-13-2005 காலச்சுவடு ஆகஸ்ட் மாத இதழில் வந்த தொலைக்காட்சித் தொடர் பற்றிய கட்டுரை ஒன்றை கீழே தருகின்றேன். புலத்தில் சின்னத்திரை தொடர்களில் ஊறித்திளைக்கும் நம்மவர்களுக்கும் இக்கட்டுரை பொருந்தும். - kirubans - 08-13-2005 நச்சுக் குப்பைகள் பி.ஏ. கிருஷ்ணன் 1 ஒரு மகத்தான திரைப்படம் பார்த்து வந்த கையோடு இதை எழுதுகிறேன். பதேர் பாஞ்சாலி வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடுவதற்காகத் தில்லியில் சத்யஜித் ரேயின் திரைப்படங்கள் காட்டப்பட்டு வருகின்றன. பதேர் பாஞ்சாலி ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றுதான் அலர்ந்தது போன்று புதிதாக இருக்கிறது. உலகளாவிய உண்மைகளைப் பேசும் படைப்பின் விளிம்பைக்கூடக் காலம் சுரண்ட முடியாது என்பதற்கு இந்தப் படத்தைவிடச் சிறந்த உதாரணம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மாறி மாறி வரும் பிம்பங்கள் அழகாகக் கதை சொல்லுகின்றன; கவிதையாகின்றன. மனிதகுலத்தின் அபூர்வங்களையும் அவலங்களையும் - அன்றாடம் நடப்பவை - நேராக மனம்வரை கொண்டுவருகின்றன. இங்கு இயக்குநர் எவரெஸ்டுகள் என்று பட்டம் பெற்று அலைபவர்கள் அடிக்கோடிட்டும் கூச்சலிட்டும் திரும்பத் திரும்பச் சொல்லியும் கூற முடியாதவற்றை ஒரு கணமே தோன்றி மறையும் சட்டத்தில் (frame) ரேயால் கூற முடிகிறது. இந்த ஐம்பது ஆண்டுகளில் திரைப்படங்கள் வெகுதூரம் பயணித்துவிட்டன. வங்காளத் திரையுலகுகூட ரேயை மறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. தொழில்நுட்பம் மட்டுமே படத்தை விலைபோக வைத்துவிடும் என்னும் நம்பிக்கை உறுதிப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கள்ளக் காசுகள் நல்ல காசுகளைச் சந்தையிலிருந்து வெகு எளிதாக விரட்டிவிடும் என்பதற்கு இன்றைய திரைப்படங்கள் உதாரணம். மற்றொரு மிகப் பெரிய உதாரணம், தினமும் நம் வரவேற்பு அறைகளில் ஓலமிடும் தொலைக்காட்சித் தொடர்கள். ஆனால் இங்கு நல்ல காசுகள் இருந்ததாகவே எனக்கு நினைவில் இல்லை. - kirubans - 08-13-2005 2 சில மாதங்களுக்கு முன்னால் நான் 'Five Immutable Laws of a Tamil Serial' என்று தமிழ்த் தொடரின் அசைக்க முடியாத ஐந்து விதிகளை நண்பர்களுக்கு அனுப்பியிருந்தேன். அவற்றின் தமிழாக்கம் கீழ்வருமாறு. முதல் விதி: தொடர் சம்பந்தப்பட்டவர்களின் மொத்த நுண்ணறிவு ஈவு (Intelligence Quotient) ஒரு மனிதக் குரங்கினுடையதைவிடக் குறைவாகவோ அதற்குச் சமமாகவோ இருக்கும். இரண்டாம் விதி: தொடரில் வரும் பாத்திரங்கள் இந்த மூன்று வகைகளிலேயே அமைவர்: மட்டி, மடையன், முட்டாள். ஆனால் முழு முட்டாள் என்னும் பட்டத்திற்குத் தகுதி பெற்றவர் தொடரில் வரும் போலீஸ் அதிகாரியாக இருப்பார். மூன்றாம் விதி: கற்பழிப்பவன் அல்லது கல்யாண வளையத்திற்கு அப்பால் ஒரு பெண்ணோடு தொடர்புவைத்துக்கொள்பவன் எப்போதும் ஒரு பொலிகாளையின் தன்மையைப் பெற்று இருப்பான். பெண்ணுக்கு எந்த வயதாக இருந்தாலும் ஒரு முறை புணர்வதே கருத்தரிப்பதற்குப் போதுமானது. நான்காம் விதி: தொடரின் நாயகன்-நாயகி வாழ்க்கைப் பாதையில் வருகிற தற்செயல்களின் எண்ணிக்கை அவர்கள் முதல் இரவுப் படுக்கையில் தூவப்பட்ட ரோஜா இதழ்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகவோ அவற்றிற்குச் சமமாகவோ இருக்கும். ஐந்தாம் விதி: கடவுள்தான் ஒரு தொடரை முடிவிற்குக் கொண்டுவருவார் - அவருடைய பொறுமை முழுவதுமாகச் சோதிக்கப்பட்ட பின். இந்த விதிகளை மீறிய தொடர்களை நான் இன்றுவரை பார்க்கவில்லை. இந்தத் தொடர்களைப் பார்த்துப் பரவசம் அடைபவர்களைப் பற்றிய விதிகள் இன்னும் அமைக்கப்படவில்லை. ஆங்கிலத்தில் cretinism என்று ஒரு பதம் உண்டு. தொடர்கள் பார்ப்பவர்கள் அனைவரும் அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் இந்தத் தன்மையினால் பீடிக்கப்படுகிறார்களோ என்னும் சந்தேகம் எனக்கு உண்டு. தமிழில் வரும் எல்லாத் தொடர்களுக்கும் இந்த மறுபெயர் பொருந்தும் - கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது எப்படி? எல்லாத் தொடர்களிலும் கொக்குகள் மிக மகிழ்ச்சியுடன் ஒத்துழைக்கின்றன. மற்றொன்று, எல்லாத் தொடர்களிலும் திட்டக் கமிஷன்கள் தீவிரமாக இயங்குகின்றன. இந்த நிலைமைக்குத் திட்டங்கள் தள்ளப்படும் என்று ஜவகர்லால் நேருவிற்கு முன்பே தெரிந்திருந்தால் இந்தியா திட்டங்களிலிருந்து விடுபட்டிருக்கலாம். வலதுசாரிகளின் கெட்ட காலம், நேரு காலத்தில் மெகாத் தொடர்கள் எடுக்கப்படவில்லை. - kirubans - 08-13-2005 3 சமீபத்தில் ஒரு தொடரைக் காண நேர்ந்தது. ஒரு பெரிய மனிதர் தன் மனைவியையும் நான்கு குழந்தைகளையும் தவிக்கவிட்டு, மற்றொரு பெண்ணோடு மும்பை சென்றுவிடுகிறார் (தமிழ்த் தொடர்களின் ஆறாம் விதி இதுவாக இருக்கலாம்: தொடரில் வருகிற எல்லா ஆண்களுக்கும் குறைந்தது இரண்டு பெண்களுடனாவது தொடர்பு இருக்க வேண்டும்). திரும்பச் சென்னை வரும்போது அவர் பெற்ற குழந்தைகள் பெரியவர்கள் ஆகிவிடுகிறார்கள். எல்லாக் குழந்தைகளையும் பல இடங்களில் அவர் சந்திக்கிறார். அவரது மகன் அவரிடமே ஓட்டுநராக இருக்கிறான். ஆனால் அடையாளம் தெரியவில்லை! மனைவியைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இருவரும் ஒருவரோடு ஒருவர் உரசிப் போகும் தருணங்கள் - திகில் தருணங்கள் - வருகின்றன. ஆனால் தொடர் எடுப்பவர் இன்னும் காசு பார்க்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்துவிட்டதால் இருவரும் பார்த்துக்கொள்ள முடிவதில்லை. மனைவி கணவர் படத்தை ஒரு பெட்டியில் ஒளித்து வைத்து, சமயம் கிடைக்கும்போதெல்லாம் (தொடரை இழுக்க வேறு வழியில்லாதபோதெல்லாம்) பார்த்துப் பார்த்து அழுகிறாள். ஆனால் குழந்தைகளிடம் காட்டமாட்டாள். இந்தப் பெரிய மனிதருக்கு மூளை அதிகம் இல்லை. ஆனால் பெற்ற குழந்தைகளின் பெயர்களையும் சாயல்களையும் ஞாபகம் வைத்துக்கொள்ள மூளை அதிகம் அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்தக் குறைந்தபட்ச சலுகையைக்கூடத் தொடரை எழுதியவர் இவருக்குத் தரத் தயாராக இல்லை. இந்தத் தொடரின் இன்னொரு அம்சம், ஒரு புரட்சிப் பெண் ஆண்களின் கோட்டையான ப்ளாட்டுகள் கட்டும் தொழிலில் நுழைவதுதான். இவர் ஆண்களின் கோட்டையில் நுழைவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் இவரது கட்டிடம் கட்டும் ஞானத்தையும் கட்டுவதற்குப் பணம் தேடுவதையும் படம் பிடித்திருக்கும் விதத்தைப் பார்த்தால் இவர் கட்டப்போகும் ப்ளாட்டுகளில் இருக்கப் போகிறவர்களுடைய நிலைமை பற்றி எனக்குக் கவலையாக இருக்கிறது. மற்றொரு தொடர்: ஒரு மண்டையில் மணி விழுந்த கேஸ் (அதாவது கோவிலில் வழிபடச் சென்றவர் தலையில் கோவில் மணி - அவரது குழந்தைகளால் வேகமாக அடிக்கப்பட்டதால் - விழுந்துவிடுகிறது). இந்த கேஸைக் கவனிப்பவர்கள் எல்லார் தலைகளிலும் மணி விழுந்துவிட்டதா என்று பார்ப்பவர்கள் நினைக்கும் வகையில் தொடரில் நிகழ்வுகள் நடக்கின்றன. உதாரணமாக, அமெரிக்காவிலிருந்து டாக்டர் (coma specialist என்று அழைக்கப்படுபவர்) வரவழைக்கப்படுகிறார். அவர் விமான நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு வரும் வழியில் நடக்கும் உரையாடல்களின் சுருக்கம்: டாக்டர்: பேஷண்டுக்கு என்ன ஆச்சு? காரில் இருக்கும் ஒருவர்: மண்டையில் மணி விழுந்துவிட்டதால் கோமாவில் இருக்கிறார். டாக்டர்: அப்படியா? அமெரிக்காவிலிருந்து அவரை என்ன சொல்லி வரவழைத்தார்கள்? சபரி மலைக்குச் செல்லலாம் என்று சொல்லியா? இவற்றிற்கும் மேலாக வெளியே ஓடும் சாக்கடையை வீட்டுக் கூடத்தில் திருப்பிவிட்டால் என்ன ஓர் உணர்வு ஏற்படுமோ அத்தகைய உணர்வைத் தவறாமல் ஏற்படுத்தும் ஒரு தொடர். இதில் ஒருவனுக்கு மூன்று பெண்கள் அமைகிறார்கள். எல்லோரும் அவன்மீது விழுந்து பிறாண்டும் அளவிற்கு அவனிடம் காதல் கொண்டவர்கள். ஒருத்தி அவனோடு திருமணம் ஆனவள். மற்றொருத்தி அவனால் கருத்தரித்துக் குழந்தையைப் பெற்றவள். மூன்றாமவள் கல்யாணம் ஆகிக் கணவனுக்கு ஆண்மை இல்லாததால் இவனிடம் வந்தவள். இந்தத் தொடர் முழுவதையும் விடாமல் பார்க்க நினைப்பவர்கள் தொடரின் கடைசிப் பகுதிகளை மனநோய் மருத்துவமனையிலிருந்து பார்க்க நேரிடலாம். பதேர் பாஞ்சாலியில் ஒரு குழந்தை இறக்கிறது. இந்தத் தொடரிலும் ஒரு குழந்தை இறக்கிறது. பதேர் பாஞ்சாலியில் இறப்பு காட்டப்படுவது ஒரு சில நிமிடங்கள். தொடரில் பல அரைமணி நேரங்கள். மிகக் கேவலமான மனிதச் சுரண்டல்களில் ஒன்றாக இந்தத் தொடரில் வரும் காட்சிகளை நான் கருதுகிறேன். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைப்பட அழகியலின் அரிச்சுவடி தெரியாமலே திரைப்படம் எடுத்துவந்தவர்கள் தொலைக்காட்சித் தொடர்களில் திரைப்படங்களைவிட அதிகக் காசு இருக்கும் என்று நினைத்ததால் வந்த விளைவே இத்தகைய காட்சிகள். குழந்தைகளுக்காக ஒரு தொடர் காட்டப்படுகிறது. பழம் 'பெரும்' நடிகை ஒருவரால் எடுக்கப்பட்டது. இந்தத் தொடரிலும் சோரம் போகிறவர்கள், இரு பெண்களிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் வருகிறார்கள். கொலைக் காட்சிகள் தாராளமாகக் காட்டப்படுகின்றன. சிறுவர்கள் வெறிபிடித்து அலைகிறார்கள். நரகல் மொழி (நடிகைக்குக் கைவந்த மொழி இது ஒன்றுதான் என்று எண்ணுகிறேன்) பேசுகிறார்கள். பெற்றோர்கள் யாரும் இந்தத் தொடருக்கு எதிராகக் குரல் கொடுத்ததாகத் தெரியவில்லை. அவர்கள் தாங்கள் பார்க்கும் தொடர்களின் போதையிலிருந்து வெளிவர விரும்புவதாகத் தெரியவில்லை. மனித மனம் எப்போதும் அழகை, உண்மையைத் தேடிச் செல்லவேண்டும் என்னும் கட்டாயம் இல்லை. அழுகல்களையும் அது சில சமயம் நாடுகிறது. கனவு காண்கிறது. பொய்யின் பல வண்ணங்களில் தன்னை இழக்கிறது. அதீதமான கற்பனை உலகில் சஞ்சரிக்க நினைக்கிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் இத்தகைய எண்ணங்களின் கலவைகளால்தான் நிர்ணயிக்கப்படுகின்றன. மனித வாழ்வைக் கோடிட்டுக் காட்டுவதாகச் சொல்லிக்கொள்ளும் சாதனங்களைக் கையாளுபவர்கள் இந்தக் கலவையின் ரகசியங்களை ஓரளவாவது அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் அவர்கள் படைப்பு உயிரோட்டம் பெறும். ஆனால் தமிழ்த் தொடர்களைத் தயாரிப்பவர்கள் (இந்தித் தொடர்களும் இதே ரகம்தான்) நம்முன் கொண்டுவந்து நிறுத்துவது அட்டையில் வெட்டி ஒட்டிய படங்கள் கை கால்களை அசைப்பது போன்ற பிம்பங்களைத்தான். இவற்றை உயிருள்ளவையாக நினைப்பது நாம் உயிருக்குச் செய்யும் அவமரியாதை. இந்த அவமரியாதையைத்தான் இந்தத் தொடர்களை வெறிகொண்டு பார்ப்பவர்கள் தினமும் செய்துகொண்டிருக்கிறார்கள். - kirubans - 08-13-2005 4 Orlando Figes என்பவர் எழுதிய Natasha's Dance என்னும் ஒரு புத்தகம். ருஷ்யக் கலாச்சார வரலாற்றைப் பற்றியது. இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது அடிநாதமாக என்னுள் ஒலித்துக்கொண்டிருந்தது இன்றைய தமிழ் மக்களுக்கும் ருஷ்ய மக்களுக்கும் (குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய ருஷ்யாவின் மக்கள்) இருக்கும் ஒற்றுமைதான். தமிழ் மக்களுக்கு சினிமா, மெகா தொடர்கள்மீது எவ்வளவு பைத்தியமோ அவ்வளவு பைத்தியம் ருஷ்ய மக்களுக்குப் புத்தகங்கள்மீது இருந்தது. மக்கள் புத்தகங்களை அவர்கள் முன்னால் வழிபட்ட புனிதர்களின் படங்களின் icons மீது வைத்திருந்த அதே மரியாதையோடு அணுகினார்கள். வாழ்க்கைக்குப் புத்தகங்கள் வழிகாட்டியாக அமையும் என்னும் ஒரு திடத்தோடும்தான். ருஷ்யாவிற்கு 1937ஆம் ஆண்டு சென்ற ஃபாய்க்ட்வாங்கர் என்னும் ஜெர்மானிய எழுத்தாளர் கூறுவது இது: 'ருஷ்ய மக்களின் படிப்புத் தாகம் அளவிட முடியாதது. புது தினசரிகள், பத்திரிகைகள், புத்தகங்கள் - இவை எல்லாமே இந்தத் தாகத்தைக் கொஞ்சம்கூட அடக்க முடிந்ததாகத் தெரியவில்லை. படிப்பது என்பது அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாக ஆகிவிட்டது. ஆனால் சோவியத் வாசகர்கள் அவர்கள் வாழும் வாழ்க்கைக்கும் புத்தகம் காட்டும் வாழ்க்கைக்கும் இடையே தடுப்புச் சுவர்கள் இருப்பதாகக் கருதுவதே இல்லை. கதையின் நாயகர்கள் அவர்களுக்கு ஊன், உயிர் பெற்று உண்மையிலேயே நடமாடும் நாயகர்கள். இந்த நாயகர்களுடன் அவர்கள் வாக்குவாதம் செய்கிறார்கள். சண்டை போடுகிறார்கள். கதையில் நடப்பவை உண்மையின் ஊட்டம் பெற்றவை என்று நினைக்கிறார்கள்.' சினிமா மக்களைச் சென்றடையும் மகத்தான சாதனம் என்பது பற்றி போல்ஷெவிக்குகளுக்கு ஒரு ஐயமும் இல்லை. 'கலைகளிலேயே எங்களுக்கு முக்கியமான கலை சினிமாதான்' என்று லெனின் கூறினார். ட்ராட்ஸ்கி சொன்னது இது: சர்ச்சுகள், மதுபானக் கடைகளோடு இளைஞர்களைக் கவர்வதில் சினிமாவும் போட்டியிடும். ஸ்டாலின் காலத்தில் இருந்த கலாச்சார அடக்குமுறை பற்றி நமக்குப் பல விமரிசனங்கள் இருக்கலாம். ஆனால் அவர் காலத்தில் ருஷ்யா புத்தகங்களையும் மற்ற கலைகளையும் அணுகியமுறை புதுமையாக இருந்தது. இதை Isaiah Berlin -இவர் ஸ்டாலினியத்தைத் தீவிரமாக எதிர்த்தவர் - மிக அழகாகச் சொல்கிறார்: 'அந்தக் கடுமையான தணிக்கை முறை என்னென்னவோ செய்திருந்தாலும் மேற்கில் ரயில் நிலையப் புத்தகக் கடைகளில் காணக் கிடைப்பது போன்ற ஆபாசப் படைப்புகள், குப்பை இலக்கியம், மூன்றாந்தர மர்மக் கதைகளை ஒடுக்கியது; சோவியத் வாசகர்கள், நாடகப் பார்வையாளர்கள் ஆகியோரின் எதிர்வினையை நாம் காட்டும் எதிர்வினையை விடத் தூய்மையானதாக, நேரடியானதாக, அப்பாவித்தனம் கொண்டதாக ஆக்கியது. ஷேக்ஸ்பியர் அல்லது ஷெரிடன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆங்கில நாடகாசிரியர்ன நாடகங்கள் நடக்கும்போது பார்வையாளர்கள் - அதில் சிலர் நிச்சயம் நாட்டுப்புற மக்கள் - பாராட்டையோ எதிர்ப்பையோ உரக்க வெளிப்படுத்தி மேடையில் நடந்த செயல்களுக்கு அல்லது நடிகர்கள் பேசிய வசனங்களுக்கு ஏற்ப எதிர்வினையாற்றினார்கள். இவற்றில் உருவான பரபரப்பு சில சமயம் மிகத் தீவிரமாக இருந்தது. அதுவும் மேற்கிலிருந்து வந்த ஒருவருக்கு வித்தியாசமாகவும் நெகிழ்ச்சி தருவதாகவும் இருந்தது.' நமது மக்களுக்குப் புத்தகங்களின் மீது மாளாக் காதல் ஏற்படும் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் சினிமா, தொலைக்காட்சி சாதனங்களை ருஷ்ய மக்கள் அன்று அணுகியதுபோலவே இன்று அணுகுகிறார்கள். ஒரு சம்பவம் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. தில்லியிலிருந்து சென்னைக்கு வந்தவன் எனது தங்கையின் வீட்டில் நுழைகிறேன். எனது தாயார் உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தது தெளிவாகக் கேட்டது. 'நாசமாப் போறவனே! நீ உருப்படுவயா, இந்த அநியாயம் பண்ணறயே . . .' இன்னும் பல வசவுகள். 'என்ன அம்மா, ஊரிலிருந்து வந்தவுடனே எனக்கு அர்ச்சனையா?' தொலைக்காட்சித் தொடரை வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்த அம்மா என்னை அப்போதுதான் கவனித்தார். 'வா, வா. உன்னை இல்லடா கண்ணா. உன்னைச் சொல்லுவனா? இந்தக் கட்டைல போறவன் பொண்டாட்டிய என்ன பாடுபடுத்தறான். அவ அம்மா ராட்சசியும் பாத்துண்டுருக்காளே.' மனோதத்துவத்தில் ஒரு சொல் உண்டு. Deindividuation. அதாவது 'தன்னை இழத்தல்.' இந்த இழப்பு, கூட்டத்தில் நடக்கலாம், தனிமையிலும் நடக்கலாம், வீட்டுக் கூடத்திலும் நடக்கலாம். தொடர்கள் இதைத்தான் செய்துகொண்டிருக்கின்றன. நமது பெண்கள் தங்களை, தங்கள் தனித்தன்மையை, மெல்ல மெல்ல இழந்து மந்தையில் தங்களை அறியாமலே சேர எவ்வளவு வழிவகை செய்ய வேண்டுமோ அவ்வளவையும் செய்துகொண்டிருக்கின்றன. சினிமாவும் பொழுதுபோக்குப் பத்திரிகைகளும்கூட இதைத்தான் செய்துகொண்டிருந்தன. ஆனால் இந்த அளவிற்கு வீட்டுக் கூடத்திற்கும் படுக்கை அறைக்கும் வாரம் ஐந்து முறை தவறாமல் வந்து சாடும் சக்தியை இந்தச் சாதனங்கள் பெற்றிருக்கவில்லை. எனவே தொடருக்கு அடிமையாவது சீக்கிரத்திலேயே நடந்துவிடுகிறது. தொடரின் ஒரு பகுதியைத் தவற விட்டாலே அடிமைகள் துடிக்கிறார்கள். வாழ்க்கையின் மிக முக்கியமான ஏதோ ஒன்றை இழந்துவிட்டதுபோல நினைக்கிறார்கள். இந்த மந்தைத்தனத்தை நாமாகவே தேடிச் செல்கிறோம் என்னும் ஒரு பிரமையும் உண்டாக்கப்பட்டுவிட்டது. தாராளமயமாக்கப்பட்ட சந்தையில் ஏதும் திணிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. எது எப்படியோ, சோவியத் ஒன்றியம் சினிமா மற்றும் இதர மக்கள் தொடர்புச் சாதனங்களை அணுகியதை அதன் கொள்கைப் பிடிப்பு நிர்ணயித்தது என்றால் இன்று தமிழகத்தில் இந்தச் சாதனங்களைத் தங்கள் பிடிக்குள் வைத்துகொண்டிருப்பவர்களின் அணுகுமுறையை நிர்ணயிப்பது தாராளமயமாக்கப்பட்ட சந்தைதான். கள்ளக் காசுகள் நல்ல காசுகளை சந்தையிலிருந்து விரட்டி அடித்துவிடும் என்று சொன்னேன். பத்திரிகைகளிலும் திரைப்படங்களிலும் பல ஆண்டுகளாக இப்படி நல்ல காசுகளை விரட்டி அடித்துக்கொண்டிருந்தவர்கள்தான் இன்று மெகாதொடர் மன்னர்களாக விளங்குகிறார்கள் என்பது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. இவர்களது திறமையைப் பற்றிச் சிறிது ஐயம்கொள்ள முடியாது. இந்தியப் பெண்களின் அடிமன ஆழங்களில் பொதிந்திருக்கும் தங்களைத் தாங்களே வருத்திக்கொள்ளும் தன்மையை இவர்கள் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். எப்படிப்பட்ட குப்பையாக இருந்தாலும் அதன் நாற்றத்தின் வீரியம் பெண்கள்விடும் கண்ணீரினால் வெகுவாகக் குறைக்கப்பட்டுவிடும் என்பதையும் தெரிந்துவைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெகுசனப் பத்திரிகைகளிலிருந்து மலர் கொஞ்சும் குருக்கத்திச் செடிகள் போன்று சிலரால் வளர முடிந்தது. திரைப்படங்கள் பாலு மகேந்திரா போன்றவர்களை அளித்தன. தொலைக்காட்சிக் குப்பைகள் இத்தகைய அதிசயத்தை நிகழ்த்தும் என்று எனக்குத் தோன்றவில்லை. இவை நச்சுக் குப்பைகள். இந்தத் தொடர்களில் நடிப்பவர்கள் பலர் திறமையாக நடிக்கிறார்கள். ஆனால் அவர்களிலும் பெரும்பாலானவர்கள் சுரண்டப்படுபவர்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். அவர்களுக்குத் தனிக்குரல் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. - kirubans - 08-13-2005 5 தமிழ்த் தொடர்களின் மையப் புள்ளிகளாக இயங்குவது இரண்டு. ஒரு மையப் புள்ளி, பழிவாங்கும் உணர்வு. இந்த உணர்வைப் பலமுறை கசக்கிப் பிழிந்து தோய்த்து உலர்த்தியாகிவிட்டது. மிச்சம் இருப்பது கந்தலிலும் கந்தல். ஆனால் கந்தலே இந்தத் தொடர்களைவிடாமல் பார்க்கும் பெண்களுக்குப் போதும் என்று தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். மற்றொரு மையப் புள்ளி, பெண்ணின் கருப்பை. தமிழ் மெகா தொடர்கள் அனைத்தும் பெண்ணின் கருப்பையைச் சுற்றிச் சுற்றி வருபவை. கருத்தரித்த, குழந்தை பெற்ற பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் அவலங்களைப் பல மடங்கு மிகைப்படுத்திக் காட்டுபவை. பெண்ணைச் சந்தை நடுவில் நிறுத்தி மனத்தளவில் துகிலுரிந்து எவ்வளவு தூரம் அவளை அவமானப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் அவமானப்படுத்துபவை. தமிழுக்காகவே வாழ்வதாகச் சொல்லிக்கொள்பவர்கள், அவர்கள் தயவில் நடைபெறும் தொலைக்காட்சி நிறுவனங்கள் மக்களுக்கு விடாது நஞ்சை அளித்துக்கொண்டிருப்பதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது பற்றி எனக்கு எந்த வியப்பும் இல்லை. ஆனால் பெண்ணியத்தைத் தூக்கிப் பிடிப்பதாகக் கூறிக்கொள்பவர்கள் இத்தகைய தொடர்களைப் பற்றி ஏதும் சொல்லாமல் மெüனமாக இருப்பது வியப்பைத் தருகிறது. ஒரு நாள் கோபம் தாங்க முடியாமல் ஒரு புகழ்பெற்ற பெண் கவிஞர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். இத்தகைய அவமானங்களை எப்படிச் சகித்துக்கொள்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் நான் இந்தத் தொடர்களைப் பார்ப்பதே இல்லை என்று சொன்னார். பார்க்காமல் இருப்பது தீர்வு ஆகும் என்று எனக்குத் தோன்றவில்லை. தமிழ் மொழிமீதும் தமிழ்க் கலாச்சாரம்மீதும் தமிழ்ப் பெண்கள்மீதும் அக்கறை கொண்டவர் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கவேண்டிய காலம் வந்துவிட்டது. பின்நவீனத்துவம் மற்றும் முன், இடை நவீனத்துவங்களுக்குக் கொடி பிடிப்பது, கட்டுடைப்பது, இலக்கிய எதிரியின் பற்களை உடைப்பது, யதார்த்த இலக்கியத்திற்குப் பாடை கட்டுவது போன்ற வேலைகளை இலக்கியவாதிகள் சிறிது தள்ளிவைத்துக் கொள்ள வேண்டும். தமிழுக்கும் தமிழ்ப் பெண்களுக்கும் இன்று மிகப் பெரிய எதிரிகள் மெகா தொடர்களும் அவற்றை மனசாட்சியே இல்லாமல் விற்றுக்கொண்டிருப்பவர்களும்தான். - tamilini - 08-13-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> சமீபத்தில் ஒரு தொடரைக் காண நேர்ந்தது. ஒரு பெரிய மனிதர் தன் மனைவியையும் நான்கு குழந்தைகளையும் தவிக்கவிட்டு, மற்றொரு பெண்ணோடு மும்பை சென்றுவிடுகிறார் (தமிழ்த் தொடர்களின் ஆறாம் விதி இதுவாக இருக்கலாம்: தொடரில் வருகிற எல்லா ஆண்களுக்கும் குறைந்தது இரண்டு பெண்களுடனாவது தொடர்பு இருக்க வேண்டும்). திரும்பச் சென்னை வரும்போது அவர் பெற்ற குழந்தைகள் பெரியவர்கள் ஆகிவிடுகிறார்கள். எல்லாக் குழந்தைகளையும் பல இடங்களில் அவர் சந்திக்கிறார். அவரது மகன் அவரிடமே ஓட்டுநராக இருக்கிறான். ஆனால் அடையாளம் தெரியவில்லை! மனைவியைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இருவரும் ஒருவரோடு ஒருவர் உரசிப் போகும் தருணங்கள் - திகில் தருணங்கள் - வருகின்றன. ஆனால் தொடர் எடுப்பவர் இன்னும் காசு பார்க்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்துவிட்டதால் இருவரும் பார்த்துக்கொள்ள முடிவதில்லை. மனைவி கணவர் படத்தை ஒரு பெட்டியில் ஒளித்து வைத்து, சமயம் கிடைக்கும்போதெல்லாம் (தொடரை இழுக்க வேறு வழியில்லாதபோதெல்லாம்) பார்த்துப் பார்த்து அழுகிறாள். ஆனால் குழந்தைகளிடம் காட்டமாட்டாள். இந்தப் பெரிய மனிதருக்கு மூளை அதிகம் இல்லை. ஆனால் பெற்ற குழந்தைகளின் பெயர்களையும் சாயல்களையும் ஞாபகம் வைத்துக்கொள்ள மூளை அதிகம் அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்தக் குறைந்தபட்ச சலுகையைக்கூடத் தொடரை எழுதியவர் இவருக்குத் தரத் தயாராக இல்லை. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> எழுதியவர் இன்னொன்றை விட்டிட்டாரே.. அதாவது பழைய நினைவுகளை மறப்பது. பல நாடகங்களில் இப்படிக்கதையைப்போட்டு அறுத்தார்களே சில வேளை இரண்டுக்கு மேற்பட்ட நாடகங்களில் ஒரே நேரத்தில் பழைய நினைவுகளை இழந்த பாத்திரம் நடித்துக்கொண்டிருக்கும். இந்த சின்னத்திரை என்பது பெண்களை மட்டும் அல்ல சின்னப்பிள்ளைகள் ஆண்கள் என்று எல்லாரையும் தான் கட்டி வைத்திருக்கிறது. அண்மையில் மெட்டி ஒலி என்ற மெகா சீரியலின் கடைசி நிகழ்வை முழுமையாக(அந்த நிகழ்ச்சி 1 நாள் முழுதாக நடைபெற்றிருக்க வேண்டும்) பார்க்க விடவில்லை என்பதால் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாராம். :? இது எங்க போய் எப்படி முடியப்போதோ தெரியவில்லை. - narathar - 08-13-2005 சின்னப் பிள்ளைகள் ஆண்கள் எவரும் இந்த தொடர்களைப் புலத்தில் பார்ப்பதாக எனக்குப் படவில்லை,கொழும்பில்.யாழ்ப்பானத்தில் எவ்வாறோ? ஆனால் யாழ்ப்பாணத்தில் நிலமை வெகு மோசம் என்று கேள்விப் பட்டுருக்கிறேன்,ஒரு தொலைக்காட்சி நிலயம் ,இந்தக் காரணத்திர்காகவே குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானது என்று கேள்விப் பட்டுருக்கிறேன்.இந்த நச்சு விதைகள் எமது மண்ணில் வளர விடாது களயப் படவேண்டும். NTT யும் நிதர்சனமும் தரமான படைப்புகளை உருவாக்க வேண்டும்,இதற்கான முயற்ச்சிகள் புலத்திலும் நடை பெற வேண்டும்.புலத்தில் இருக்கும் தொலைக்காட்ச்சிகளும் இந்த தொடர்களை ஒள்பரப்புவதை நாம் எதிர்த்து குரல் எழுப்ப வேண்டும்,உருப்படியான இக் காரியத்தைச் செய்வோமா? நமது நாட்டிலும், புலத்திலும் திறமையானவர்கள் குறுந் திரைப்படங்களை எடுத்துவருகின்றனர்,இவர்களை தொலக் காட்சித் தொடர்களை எடுப் பதற்கான சந்தர்பந்தை ஏன் இங்குள்ள தொலைக்காட்ச்சிகள் வழங்கவில்லை.இப் போதிருக்கும் Digital தொழில் நுட்பத்தினால் மிக சிக்கனமாக இதைச் செய்யலாம்.இந்தக் களத்திலும் இதில் திறமையான விற்பன்னர்கள் இருக்கிறார்கள்.என்ன சொல்லுறிங்கள் அஜீவன் அண்ணா, ஏன் நீங்கள் இதைச் செய்ய முற்சிக்கக் கூடாது? இந்த கட்டுரையை இங்கு இட்டதற்கு நன்றிகள் கிருபன். - stalin - 08-14-2005 சித்தி சீரியல் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில ஊரடங்கு சட்டம் போட்ட மயனஅமைதி நிலவினதை இந்தியாவில் நின்றபோது அவதானித்தேன். இந்த சீரியல் பார்ப்பவர்கள் அபின் றக்ஸ் பாவிப்பவர்கள் பார்க்க அடிமைபட்டிருப்பதை கண்டேன். இந்த சீரியல் பார்க்காதவர்கள் ஏதோ தகமை இழந்தவர்களாக கருதப்படும் நிலையை அவதானித்தேன். சீரியல் மேனியாவிலிருந்து நம்மவர்களை விழ செய்யாமாலிருப்பதற்ககு மாற்றீடாக நாரதர் சொன்னமாதிரி குறும்படங்களை பார்க்கும் ரசனையை ஊக்குவிப்பதுதான் நல்ல முறையெனறு கருதுகிறேன்.........கட்டுரையை வழங்கிய கிரூபனுக்கு நன்றிகள் - Mathan - 08-14-2005 narathar Wrote:சின்னப் பிள்ளைகள் ஆண்கள் எவரும் இந்த தொடர்களைப் புலத்தில் பார்ப்பதாக எனக்குப் படவில்லை. இது உண்மையல்ல தொடர்களை ஒளிபரப்பும் போது நேரடியாக பார்க்காவிட்டாலும் பதிவு செய்யப்பட்ட கசட்டுக்களை வீடியோ கடைகளில் இருந்து வாடகைக்கு எடுத்து பார்க்கும் பல ஆண்களை நான் சந்தித்திருக்கின்றேன், - tamilini - 08-14-2005 Quote:சின்னப் பிள்ளைகள் ஆண்கள் எவரும் இந்த தொடர்களைப் புலத்தில் பார்ப்பதாக எனக்குப் படவில்லை,கொழும்பில்.யாழ்ப்பானத்தில் எவ்வாறோ? Quote:இது உண்மையல்ல தொடர்களை ஒளிபரப்பும் போது நேரடியாக பார்க்காவிட்டாலும் பதிவு செய்யப்பட்ட கசட்டுக்களை வீடியோ கடைகளில் இருந்து வாடகைக்கு எடுத்து பார்க்கும் பல ஆண்களை நான் சந்தித்திருக்கின்றேன், வேலைக்கு செல்லும் ஆண்களுக்காக. சில நாடகங்களை பதிவு செய்து வைத்ததை கேட்டிருக்கிறேன். அதே போல சின்னப்பிள்ளைகளுக்கும் ஜிபூம்பா.. மாயமச்சிந்திரா என்று அவர்களை கவரக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட நாடகங்கள் பல உண்டு. ஒருமுறை இந்தியா சென்றிருந்த போது இவற்றை தரிசிக்க கிடைத்தது. :wink: குறிப்பிட்ட ஒரு சில நாடகங்களிற்காக சகல வேலைகளையும் விட்டுவிட்டு ரீவிக்கு முன்னால் இருக்கின்ற குடும்பத்தலைவர்கள் இருக்கிறார்கள். குறிப்பா சக்தி ரீவியில் கங்கா யமுனா சரஸ்வதி. அப்புறம் சித்தி.. அண்ணாமலை இப்படியான மெகா சீரியலுக்கு ஆண்பெண் பேதமின்றி ரசிகர்கள் அதிகம். தமிழ்மணம் வலைப்பூவில இதற்குரிய தாக்கத்தை காணலாம். மெட்டி ஒலி பற்றி தங்கள் கருத்துக்களை ஆண்கள் பலர் பதிந்திருந்தார்கள்.? அதில் ஆண்களும் அடக்கம். ஒரு பதிவில் அந்த நேரம் பிள்ளையை வெளியில் அனுப்புவதாக ஒருபதிவில் வாசிக்க கூடியதாய் இருந்தது. :wink: - Mathan - 08-14-2005 ம் தொடர் நாடங்களில் பெண்கள் மட்டும் மூழ்கி கிடப்பதாக சொல்லமுடியாது, வேண்டுமானால் பெண்கள் பார்ப்பது அதிகம் என்று சொல்லலாம். வேலைக்கு செல்லாத வீட்டில் இருக்கும் பெண்கள் ஓய்வு நேரங்களில் பொழுதுபோக்கிற்க்காக முன்னர் படங்களை பார்ப்பார்கள் ... இப்போது படங்களின் வரவும் சுவாரசியமும் குறைந்த நிலையில் தினமும் அரைமணி நேரத்த்தில் ஒரு திருப்பத்துடன் முடியும் தொடர் நாடங்களை பார்க்க ஆரம்பித்து அதில் கட்டுண்டு விட்டார்கள். வேலைக்கு செல்லாதோரின் நிலை இப்படி என்றால் வேலைக்கு செல்லும் ஆண்கள் பெண்கள் இவற்றை பதிவு செய்பட்ட நிலையில் எடுத்து பார்க்கிறார்கள். இவர்களுக்கு வேறு பொழுதுபோக்கு இல்லா நிலையில் அல்லது மற்றய பொழுதுபோக்குகல் பண செலவை ஏற்படுத்துகையில் நாடகம் பார்ப்பதில் தவறேதும் இல்லை என்றாலும் இவை பார்ப்போரை அடிமையாக்கி நேரத்தை விழுங்கி வேறு வேலைகள் செய்ய முடியாத நிலையை உருவாக்குவது தான் பிரைச்சனையாக இருக்கின்றது. - MUGATHTHAR - 08-14-2005 ஜயா எந்த டிவிதான் டெலிராமா இல்லாமல் நடத்துறார்கள் மேலே குறிப்பிட்ட நாடமான "கோலங்கள்" கூட ரி.ரி.என் ல் போடுகிறார்களே. இண்டைக்கு சண் ரிவிதான் முழுக்க முழுக்க டெலிராமாக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது இரவு 7மணிக்குத் "ஆனந்தத்தில்" தொடங்கினால் 10 மணிக்கு "கணவனுக்காக" எண்டு சொல்லி முடிக்கிறார்கள் அதுவும் யுரோப் சைட்டில்தான் கட்டணச் சனலாக இருக்கிறது எங்கடையாட்களை நம்பித்தான் தொடங்கினார்கள் அதில் அவர்கள் வெற்றியும் அடைந்துள்ளார்கள். தனிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆரம்பிக்கப் பட்ட வெக்டோன் டிவியும் டெலிராமாக்களை போடத் தொடங்கிவிட்டார்கள் எண்டால் மக்களை கவர வேண்டுமானால் ராமாக்களை போடத்தான் வேண்டும் சனம்தான் ஓய்வு நேர பொழுதுபோக்காக இந்த டிவி நிகழ்ச்சிகளை மாற்றவேண்டும் அதற்கு அடிமையாகக் கூடாது... - vasisutha - 08-14-2005 <!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin--> தனிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆரம்பிக்கப் பட்ட வெக்டோன் டிவியும் டெலிராமாக்களை போடத் தொடங்கிவிட்டார்கள் எண்டால் மக்களை கவர வேண்டுமானால் ராமாக்களை போடத்தான் வேண்டும் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்படியா? எப்போதிருந்து? hock:
- MUGATHTHAR - 08-14-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> அப்படியா? எப்போதிருந்து <!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஏன் பார்க்கவில்லையா "ஓவியம்" "19-46 லவ்ஸ்ரோரி" இப்பிடி 2யைத்தான் பாத்தன் அவையும் அடுத்த மாதம் 1ம் திகதியுடன் கட்டண சனலாக மாத்தினமாம்............ - vasisutha - 08-14-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> ஏன் பார்க்கவில்லையா \"ஓவியம்\" \"19-46 லவ்ஸ்ரோரி\" இப்பிடி 2யைத்தான் பாத்தன் அவையும் அடுத்த மாதம் 1ம் திகதியுடன் கட்டண சனலாக மாத்தினமாம்............<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இல்லை தற்பொழுது 3 மாதங்களுக்கு மேலாகிவிட்டது தொலைக்காட்சிகள் பார்த்து. அதுதான் கேட்டேன். கட்டணமாக மாற்றப்போவதாக முன்னரே அறிவித்து இருந்தார்கள் என நினைக்கிறேன். இலவசமாக விட்டு கட்டுப்படியாகவில்லை போல. - shobana - 08-15-2005 கிருபன் அண்ணா கட்டுரை அருமை நன்றிகள் - Mathan - 08-15-2005 நீங்க டிராமா பார்ப்பீர்களா? |