Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நச்சுக் குப்பைகள்
#4
3

சமீபத்தில் ஒரு தொடரைக் காண நேர்ந்தது. ஒரு பெரிய மனிதர் தன் மனைவியையும் நான்கு குழந்தைகளையும் தவிக்கவிட்டு, மற்றொரு பெண்ணோடு மும்பை சென்றுவிடுகிறார் (தமிழ்த் தொடர்களின் ஆறாம் விதி இதுவாக இருக்கலாம்: தொடரில் வருகிற எல்லா ஆண்களுக்கும் குறைந்தது இரண்டு பெண்களுடனாவது தொடர்பு இருக்க வேண்டும்). திரும்பச் சென்னை வரும்போது அவர் பெற்ற குழந்தைகள் பெரியவர்கள் ஆகிவிடுகிறார்கள். எல்லாக் குழந்தைகளையும் பல இடங்களில் அவர் சந்திக்கிறார். அவரது மகன் அவரிடமே ஓட்டுநராக இருக்கிறான். ஆனால் அடையாளம் தெரியவில்லை! மனைவியைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இருவரும் ஒருவரோடு ஒருவர் உரசிப் போகும் தருணங்கள் - திகில் தருணங்கள் - வருகின்றன. ஆனால் தொடர் எடுப்பவர் இன்னும் காசு பார்க்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்துவிட்டதால் இருவரும் பார்த்துக்கொள்ள முடிவதில்லை. மனைவி கணவர் படத்தை ஒரு பெட்டியில் ஒளித்து வைத்து, சமயம் கிடைக்கும்போதெல்லாம் (தொடரை இழுக்க வேறு வழியில்லாதபோதெல்லாம்) பார்த்துப் பார்த்து அழுகிறாள். ஆனால் குழந்தைகளிடம் காட்டமாட்டாள். இந்தப் பெரிய மனிதருக்கு மூளை அதிகம் இல்லை. ஆனால் பெற்ற குழந்தைகளின் பெயர்களையும் சாயல்களையும் ஞாபகம் வைத்துக்கொள்ள மூளை அதிகம் அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்தக் குறைந்தபட்ச சலுகையைக்கூடத் தொடரை எழுதியவர் இவருக்குத் தரத் தயாராக இல்லை. இந்தத் தொடரின் இன்னொரு அம்சம், ஒரு புரட்சிப் பெண் ஆண்களின் கோட்டையான ப்ளாட்டுகள் கட்டும் தொழிலில் நுழைவதுதான். இவர் ஆண்களின் கோட்டையில் நுழைவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் இவரது கட்டிடம் கட்டும் ஞானத்தையும் கட்டுவதற்குப் பணம் தேடுவதையும் படம் பிடித்திருக்கும் விதத்தைப் பார்த்தால் இவர் கட்டப்போகும் ப்ளாட்டுகளில் இருக்கப் போகிறவர்களுடைய நிலைமை பற்றி எனக்குக் கவலையாக இருக்கிறது.

மற்றொரு தொடர்: ஒரு மண்டையில் மணி விழுந்த கேஸ் (அதாவது கோவிலில் வழிபடச் சென்றவர் தலையில் கோவில் மணி - அவரது குழந்தைகளால் வேகமாக அடிக்கப்பட்டதால் - விழுந்துவிடுகிறது). இந்த கேஸைக் கவனிப்பவர்கள் எல்லார் தலைகளிலும் மணி விழுந்துவிட்டதா என்று பார்ப்பவர்கள் நினைக்கும் வகையில் தொடரில் நிகழ்வுகள் நடக்கின்றன. உதாரணமாக, அமெரிக்காவிலிருந்து டாக்டர் (coma specialist என்று அழைக்கப்படுபவர்) வரவழைக்கப்படுகிறார். அவர் விமான நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு வரும் வழியில் நடக்கும் உரையாடல்களின் சுருக்கம்:

டாக்டர்: பேஷண்டுக்கு என்ன ஆச்சு?

காரில் இருக்கும் ஒருவர்: மண்டையில் மணி விழுந்துவிட்டதால் கோமாவில் இருக்கிறார்.

டாக்டர்: அப்படியா?

அமெரிக்காவிலிருந்து அவரை என்ன சொல்லி வரவழைத்தார்கள்? சபரி மலைக்குச் செல்லலாம் என்று சொல்லியா?
இவற்றிற்கும் மேலாக வெளியே ஓடும் சாக்கடையை வீட்டுக் கூடத்தில் திருப்பிவிட்டால் என்ன ஓர் உணர்வு ஏற்படுமோ அத்தகைய உணர்வைத் தவறாமல் ஏற்படுத்தும் ஒரு தொடர். இதில் ஒருவனுக்கு மூன்று பெண்கள் அமைகிறார்கள். எல்லோரும் அவன்மீது விழுந்து பிறாண்டும் அளவிற்கு அவனிடம் காதல் கொண்டவர்கள். ஒருத்தி அவனோடு திருமணம் ஆனவள். மற்றொருத்தி அவனால் கருத்தரித்துக் குழந்தையைப் பெற்றவள். மூன்றாமவள் கல்யாணம் ஆகிக் கணவனுக்கு ஆண்மை இல்லாததால் இவனிடம் வந்தவள். இந்தத் தொடர் முழுவதையும் விடாமல் பார்க்க நினைப்பவர்கள் தொடரின் கடைசிப் பகுதிகளை மனநோய் மருத்துவமனையிலிருந்து பார்க்க நேரிடலாம்.

பதேர் பாஞ்சாலியில் ஒரு குழந்தை இறக்கிறது. இந்தத் தொடரிலும் ஒரு குழந்தை இறக்கிறது. பதேர் பாஞ்சாலியில் இறப்பு காட்டப்படுவது ஒரு சில நிமிடங்கள். தொடரில் பல அரைமணி நேரங்கள். மிகக் கேவலமான மனிதச் சுரண்டல்களில் ஒன்றாக இந்தத் தொடரில் வரும் காட்சிகளை நான் கருதுகிறேன். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைப்பட அழகியலின் அரிச்சுவடி தெரியாமலே திரைப்படம் எடுத்துவந்தவர்கள் தொலைக்காட்சித் தொடர்களில் திரைப்படங்களைவிட அதிகக் காசு இருக்கும் என்று நினைத்ததால் வந்த விளைவே இத்தகைய காட்சிகள்.

குழந்தைகளுக்காக ஒரு தொடர் காட்டப்படுகிறது. பழம் 'பெரும்' நடிகை ஒருவரால் எடுக்கப்பட்டது. இந்தத் தொடரிலும் சோரம் போகிறவர்கள், இரு பெண்களிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் வருகிறார்கள். கொலைக் காட்சிகள் தாராளமாகக் காட்டப்படுகின்றன. சிறுவர்கள் வெறிபிடித்து அலைகிறார்கள். நரகல் மொழி (நடிகைக்குக் கைவந்த மொழி இது ஒன்றுதான் என்று எண்ணுகிறேன்) பேசுகிறார்கள். பெற்றோர்கள் யாரும் இந்தத் தொடருக்கு எதிராகக் குரல் கொடுத்ததாகத் தெரியவில்லை. அவர்கள் தாங்கள் பார்க்கும் தொடர்களின் போதையிலிருந்து வெளிவர விரும்புவதாகத் தெரியவில்லை.

மனித மனம் எப்போதும் அழகை, உண்மையைத் தேடிச் செல்லவேண்டும் என்னும் கட்டாயம் இல்லை. அழுகல்களையும் அது சில சமயம் நாடுகிறது. கனவு காண்கிறது. பொய்யின் பல வண்ணங்களில் தன்னை இழக்கிறது. அதீதமான கற்பனை உலகில் சஞ்சரிக்க நினைக்கிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் இத்தகைய எண்ணங்களின் கலவைகளால்தான் நிர்ணயிக்கப்படுகின்றன. மனித வாழ்வைக் கோடிட்டுக் காட்டுவதாகச் சொல்லிக்கொள்ளும் சாதனங்களைக் கையாளுபவர்கள் இந்தக் கலவையின் ரகசியங்களை ஓரளவாவது அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் அவர்கள் படைப்பு உயிரோட்டம் பெறும். ஆனால் தமிழ்த் தொடர்களைத் தயாரிப்பவர்கள் (இந்தித் தொடர்களும் இதே ரகம்தான்) நம்முன் கொண்டுவந்து நிறுத்துவது அட்டையில் வெட்டி ஒட்டிய படங்கள் கை கால்களை அசைப்பது போன்ற பிம்பங்களைத்தான். இவற்றை உயிருள்ளவையாக நினைப்பது நாம் உயிருக்குச் செய்யும் அவமரியாதை. இந்த அவமரியாதையைத்தான் இந்தத் தொடர்களை வெறிகொண்டு பார்ப்பவர்கள் தினமும் செய்துகொண்டிருக்கிறார்கள்.
<b> . .</b>
Reply


Messages In This Thread
[No subject] - by kirubans - 08-13-2005, 06:05 PM
[No subject] - by kirubans - 08-13-2005, 06:08 PM
[No subject] - by kirubans - 08-13-2005, 06:31 PM
[No subject] - by kirubans - 08-13-2005, 06:39 PM
[No subject] - by kirubans - 08-13-2005, 06:42 PM
[No subject] - by tamilini - 08-13-2005, 07:05 PM
[No subject] - by narathar - 08-13-2005, 11:00 PM
[No subject] - by stalin - 08-14-2005, 08:57 AM
[No subject] - by Mathan - 08-14-2005, 09:52 AM
[No subject] - by tamilini - 08-14-2005, 02:53 PM
[No subject] - by Mathan - 08-14-2005, 06:19 PM
[No subject] - by MUGATHTHAR - 08-14-2005, 07:32 PM
[No subject] - by vasisutha - 08-14-2005, 07:57 PM
[No subject] - by MUGATHTHAR - 08-14-2005, 08:01 PM
[No subject] - by vasisutha - 08-14-2005, 08:05 PM
[No subject] - by shobana - 08-15-2005, 09:27 AM
[No subject] - by Mathan - 08-15-2005, 09:29 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)