திருமலை வன்முறைத் தாக்குதல் ஆத்திமூட்டும் பேரினவாதத்தின் கொடூரத்தை வெளிப்பாடே - ஜெயானந்தமூர்த்தி
திருகோணமலையில் திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி வன்மையாகக் கண்டித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழர் தலைநகரான திருமலையில் கடந்த பல ஆண்டுகளாக பேரினவாதிகளும் சிங்கள அரசும் திட்டமிட்டு தமிழ் மக்களை அழிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றன. தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை திட்டமிட்டு ஆக்கிரமித்தும் குடியேற்றங்களை நடத்தியும் வந்ததுடன் கடந்த வருடத்தில் நகரின் மத்தியில் புத்தர் சிலை அமைக்கப்பட்டு தமிழர் தலைநகரை மேலும் ஆக்கிரமிப்புச் செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக தேசியத்திற்காகக் குரல் கொடுத்த பலர் கொலை செய்யப்பட்டதுடன் நேற்றைய தினம் தமிழ் மக்களை மேலும் ஆத்திரமூட்டும் வகையில் திட்டமிட்டு குண்டுவெடிப்பை நடத்தி தமிழ் மக்களின் மீது தாக்குதல் நடத்தியது மாத்திரமின்றி சொத்துக்களையும் தீயிட்டு அழித்துள்ளனர்.
இச்சம்பவம் தமிழ் மக்களை மேலும் ஆத்திரமூட்டும் ஒரு நடவடிக்கையாகவே உள்ளதுடன் சிறிலங்காவின் பேரினவாதத்தின் கொடூரத்தை வெளிக்காட்டியுள்ளது. இதனால் இன்று தமிழ் மக்கள் தமது இருப்புக்காகவும் தமிழ் மண்ணைக் காப்பதற்காகவும் தமிழ் தேசியத்தை வலியுறுத்தி சுயநிர்ணய உரிமையைப் பெறுவதற்காகவும் இறுதி முடிவெடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. என்று தெரிவித்துள்ள அவர் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது தேசிய போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டிய நேரம் இதுவாகும். என்றும் மேலும் தெரிவித்துள்ள அவர்
திருமலைச் சம்பவத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இம்முறை புதுவருடப் பிறப்பை வடகிழக்கில் மக்கள் ஆடம்பரமின்றி அமைதியாக அனுஸ்டிக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தகவல்: பதிவு புள்ளி கோம்
www.pathivu.com