கீழே உள்ள கருத்து சிலவருடங்களுக்கு முன் எழுதியது.. அது இன்றும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். மேலும் கருத்துகளை பார்த்து தொடருவோம்!! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
எல்லோரும் சந்தோசப்படக் கூடியவகையில் கடந்த சில வருடங்களின் முன்னால் தமிழ் வானொலிகளின் வருகை நிகழ்ந்தது.
புலம்பெயர் நாடுகளில் தமிழ் இனி மெல்லமெல்லச் சாகும் என்று பல தமிழ் அறிஞர்கள் கூறியவற்றை, இவ் வானொலிகள் தகர்த்தெறிந்து, அவர்களையும் வியப்புற வைத்தன.
இலைமறை காயாக இருந்த எத்தனையோ கலைஞர்களும், கவிஞர்களும் வெளிச்சத்துக்கு வந்தார்கள். எத்தனையோ தமிழ்ச் சிறார்கள் தமது தமிழறிவை ஏனைய சிறார்களுடன் பகிர்ந்து, அவர்களையும் தமிழின் பக்கமாகத் திரும்ப வைத்தார்கள்.
பலரது அறிவுபூர்வமான கருத்துகள் ஒன்றாகச் சங்கமித்து, நல்லன எமது சமூகத்துள் விளையவேண்டும் என்ற ஆர்வத்தையும் துாண்டுதல்களையும் வானலைகளில் விதைத்து நின்றன.
ஆகவே, தமிழ் வானொலியின் வருகையால் புலம்பெயர் தமிழினமானது எதிர்காலம்பற்றிய அச்சம் குறைந்து மனமகிழ்வெய்திய வேளையில்தான் எமது இனத்துக்கே உரித்தான சாபக்கேடான பல விடயங்கள் அரங்கேறின.
ஒரே குடும்பம் என்றும், தொப்புள்கொடி உறவுகளென்றும், ஒரே இனமென்றும் வார்த்தைக்கு வார்த்தை முழங்கிய வானொலிகளுக்குள் பிரிவுகள் முளைத்தன.
வானலைகளிலே நேயர்களுடன் ஐக்கியமான பல குரல்கள் தலைமறைவாகின. தமிழ்ச் சிறார்களை தாயன்புடன் அரவணைத்த குரல்கள் திடீரென மாயமாகி, அந்தக் குழந்தைகளின் பிஞ்சுமனங்களிலே ஏக்கத்தை விதைத்தன.
ஒரே குடும்பம், உறவுகள் என்றெல்லாம் கூறிய வானொலிப் பாசைகள் பொய்த்துப்போயின. நேயர்களிடையே இரசிப்புப் பிரிவினைகள் தோன்றின. வானொலிகள் பெருகப்பெருக நேயர்களாகிய தமிழ் மக்களிடையே குழுக்களாகும் பிரிவினைகள் அதிகரித்து, இன்று புலம்பெயர் தமிழ்மக்கள் 'இன்ன வானொலி இரசிகர்" என்ற கோதாவில் இறங்கி தொலைபேசியில் மனம்போனபோக்கில் வார்த்தைகளைக் கக்கி மகிழ்வதையும், இனஒற்றுமை உணர்வு உருக்குலைவதையுமே தற்போது காணக்கூடியதாக உள்ளது.
எல்லோரும் திறமை உள்ளவராக வளரவேண்டும் என்கிறார்கள். எல்லோரும் திறமை உள்ளவர்களாக வளர்ந்தால்தான் அந்த சமூகம் முன்னேற்றமடையும் என்கிறார்கள்.
இது தமிழ் மேடைகளிலும் வான் அலைகளிலும் வெகு வீரியமாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிற சமாச்சாரம். ஆனால், 'இவை வெறும் உதட்டளவில் எழும் சுலோகங்கள்" என்றே எண்ணத் தோன்றுகிறது.
தினம்தினம் நிகழும் வானொலிச் சங்கதிகளைக் கேள்வியுறும்போது இவ்வாறுதான் எண்ணத் தோன்றுகிறது.
வெறும் ஒற்றுமையும், இன உணர்வும், நாட்டுப்பற்றும் தமிழ் மக்களைக் கவரப் பிரயோகிக்கப்படும் வார்த்தை ஜாலங்கள் என்ற எண்ணம், குறிப்பாக வானொலிகளின் போக்குகளையும் தடுமாற்றங்களையும் அவதானிக்கும்போது நியாயமானது என்றே தோன்றுகிறது.
எங்கே நியாயம் இருக்கிறது?
எங்கே அநியாயம் நிகழ்கிறது?
எங்கே நிறை உண்டு?
எங்கே குறை குறுக்கிடுகிறது?
இவ்வாறான கேள்விகளைக் கேட்க விடாதவாறு, இந்த விடுதலை, ஒற்றுமை, இன உணர்வு, நாட்டுப்பற்று என்ற பதங்கள் புலம்பெயர் தமிழர்கள் பலரையும் அமுக்கிக் கட்டிப்போடுகின்றனவோ என்ற நியாயமான சிந்தனைச் சீண்டல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல் உள்ளது.
புலம்பெயர் மக்களின் துயர்களுடனும், பாசப் பிணைப்புகளுடனும், மனிதாபிமானத்துடனும் சில சுயநலவாதிகள் விளையாடி, தமது நலன்களைப் பேணுவதையும், அதற்கு எம்மவர்கள் பலர் கண்மூடித்தனமாகப் பின்னின்று தோள்கொடுத்து ஆலவட்டம் பிடித்து, அவர்களை யுகபுருசர்களாக்க முயல்வதையும் பார்க்கும்போது, புலம்பெயர் தமிழ் சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற பயம்கலந்த கேள்வி எழுவது தவிர்க்கமுடியாததாகிறது.
தங்களுக்குள் ஒற்றுமையைக் கடைப்பிடிக்க இயலாமல், புதுப்புதுப் பெயர்களுடன் பிரிவடையும் வானொலிகள், தமது நேயர்களுக்கு எவ்வாறான ஒற்றுமை உணர்வைப் போதிக்கின்றன? இன ஒற்றுமை உணர்வையா? அல்லது தம்மைவிட்டு விலகிச் செல்லாத ஒற்றுமை உணர்வையா?
அரிசி வியாபாரம் தெரிந்தவன் அரிசி வியாபாரம் ஆரம்பிப்பதில் தவறில்லைத்தான். ஆனால், ஏற்கெனவே பல அரிசிக் கடைகள் இருக்கும்போது புதிதாக ஒரு அரிசிக்கடை ஆரம்பிப்பதால், யாருக்கு என்ன இலாபம்?! இதனால் ஏற்கெனவே உள்ள அரிசி வியாபாரிகளும் புதிதாக வியாபாரம் ஆரம்பிப்பவரும் நட்டமடைவது அல்லது அவர்களின் உழைப்பிற்கான பலன் சுருங்குவதுதானே சாத்தியமான விளைவாக அமையும்.
ஆகவே, அரிசி வியாபாரம் புதிதாக ஆரம்பிப்பவர், ஏற்கனவே அரிசி வியாபாரம் செய்பவருடன் கூட்டாக வியாபாரத்தை நடாத்த முற்பட்டால், வியாபாரம் மேலும் புது உத்வேகத்துடன் வளர்ச்சி அடையும் என்பதை ஏன்தான் எம்முள் இருக்கும் திறமையான வியாபாரிகள் நினைக்கத் தவறுகிறார்களோ தெரியவில்லை.
ஒற்றுமையைப் பற்றியும் சமூக மேம்பாட்டைப்பற்றியும் மூச்சுக்கு முந்நுாறு தடவை பேசுபவர்கள், தம்மைப் பொறுத்தளவில் இவைகளின் பக்கம் திரும்பிப் பாராததையும், இப்படியான போக்குகளை கண்மூடித்தனமாக வரவேற்கும் நேயர் நெஞ்சங்களையும் அவதானிக்கும்போது, எமது புலம்பெயர் தமிழ்ச் சமூகமானது அன்றும் இன்றும் தனக்கேயுரிய பிற்போக்கான பாதையிலேயே செல்கிறது என்றே கூறத் தோன்றுகிறது.
.