<img src='http://worldtamilpress.com/images/stories/news/ours/wtm_logo.jpg' border='0' alt='user posted image'>தடையுடன் தொடர்பு பட்டு கனடா உலகத்தமிழர் இயக்கம் "அறம் செய்ய விரும்பு" எனத் தலைப்பிட்டு விடுத்துள்ள அறிக்கை.
எம்மினிய உறவுகளிற்கு வணக்கம்!
நாம் பிறந்த தேசம் மீண்டும் பற்றி எரிகிறது. பேரினவாதம் பட்டப்பகலில் இனி அழிப்பை மேற்கொள்கின்றது. இணையத்தளங்கள் தோறும் தோய்ந்திருக்கும் நம் உறவுகளின் குருதி நம் உறவுகளின் குருதி நம் இதயத்துள்ளும் இறங்கி வழிகிறது. யார் உதவியும் இல்லாது அல்லற்படும் எம் உறவுகளின் நிலையுணர்ந்து துடிக்கும் உள்ளத்தினால் சீரற்றுப்போன சுவாசம் நெஞ்சை அழுத்துகின்றது. நிர்க்கதியாய் நின்று நாம் 'இதைக் கேட்பாரில்லையா' என கதறுகிறோம். எனினும் வழமைபோல் சர்வதேசம் எம்மைத்தான் குற்றவாளிகளாய் பார்க்கின்றது. நம் உறவுகளிற்கான எமது ஆதரவும் இன்று கனேடிய மண்ணில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கனேடிய மண்ணில் கடந்த எட்டாம் நாள் இடப்பட்ட சட்டமாகிய தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை எவ்வகையிலும் எம் பிறந்த மண்ணின் சமாதான முன்னெடுப்புகளிற்கு உதவப்போவதில்லை என்பதை தமிழ் கனேடியர்கள் நன்கறிவோம். சிங்களப் பேரினவாதம் இத்தடையினைத் தமது தமிழ் இன அழிப்பு நடவடிக்கைக்குக் கிடைத்த இன்னுமொரு அங்கீகாரமாக ஏற்றுக்கொண்டு செயற்படுவது திருகோணமலையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கள தேசத்தில் மட்டுமன்றி கனேடிய மண்ணிலும் கூட சிறிலங்கா அரசின் முகவர்கள் இச்சட்டத்தால் அகமகிழ்ந்து ஆடுவதை நாம் பார்க்கின்றோம். சர்வதேசம் தமக்குத் தங்கு தடையற்ற ஆதரவினை எப்போதும் வழங்கும் என்று சிங்களம் கொண்டுள்ள மமதையின் காரணமாகவே, தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை அடக்கி தமிழ் இனத்தை அழிக்கும் அவர்களது நடவடிக்கைகள், இலங்கைத்தீவு சுதந்திரம் பெற்றதாகக் கூறப்படும் நாளிலிருந்து சமீபத்தில் திருமலையில் நடந்தது வரை, இன்னும் தொடர்கின்றன. ஈழத்தில் வாழும் நமது உறவுகளின் எதிர்காலம் மட்டுமன்றி கனேடிய தமிழர்களாகிய எமது அடிப்படை மனித உரிமைகளும் கனேடியத் தடைச்சட்டத்தால் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசானது தனது தமிழ் மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனஙடகளை மறைப்பதற்காக, கனேடிய அரசிற்குத் தமிழர் தரப்பு பற்றிய தவறான தரவுகளைத் திட்டமிட்டு வழங்கி வருகின்றது.
இந்த வகையில்தான் 'உலகத் தமிழர் இயக்கம்' மற்றும் தாயக மேம்பாட்டிற்காக உழைக்கும் அல்லது குரல் கொடுக்கும் பல அமைப்புக்களையும் பற்றிய அவதூறுகள் சிறிலங்கா அரசால் பரப்பப்பட்டு வருகின்றன. காலம் காலமாக தாயகத்தில் எமது மக்களின் மனிதாபிமானப் பணிகளில் பெரும் பங்காற்றி வரும் 'உலகத் தமிழர் இயக்கம்' போரிற்கும் ஆயுதங்களிற்குமாக நிதி சேகரிப்பதாகவும், மக்களை வற்புறுத்துவதாகவும் பல்வேறு விசமப் பிரச்சாரங்களை அது கட்டவிழ்த்து விட்டுள்ளது.
உலகத்தின் இதயத்தில் ஓங்கியறைந்த சுனாமிப் பேரலையினால் இலங்கைத்தீவில் ஏற்பட்ட பாரிய உயிர், உடைமை அழிவுகளில் இருந்து மீண்ட மக்களிற்கான உடனடி நிவாரணப் பணிகளை செயற்படுத்தவென சர்வதேச சமூகத்தினால் வரைந்து கொடுக்கப்பட்ட பொதுக்கட்டமைப்பை இல்லாது செய்த சிறீலங்கா அரசு இன்று எமது மக்கள் தம்முடைய உறவுகளின் நிலைகண்டு வழங்கிவரும் ஆதரவினையும் தடுக்க கடும் பிரயத்தனம் செய்து வருகின்றது.
கடந்த ஐந்து வருடங்களிற்கும் மேலாகத் தொடரும் நிரந்தர சமாதானத்திற்கான முயற்சிகளின் போது தமிழரிற்கு எவ்வித நன்மைகளும் ஏற்படாதவண்ணம் திட்டமிட்ட முறையில் செயற்பட்டுவரும் இலங்கையரசை எவ்வகையிலும் கண்டிக்காமலும், கடந்த பல தசாப்தங்களிற்கும் மேலாக தொடரும் கொடிய இன அழிப்புப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்கு ஆக்கபுர்வமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாமலும் இருந்த எமது கனேடிய அரசானது எவ்வகையிலும் பொருத்தமற்ற இன்றைய சூழ்நிலையில் சிறிலங்கா அரசிற்கு சார்பாக எடுத்திருக்கும் தற்போதைய நிலைப்பாடு எமக்கு மிகுந்த கவலையையும் மனவருத்தத்தையும் தருகின்றது.
தமிழ் மக்களால் தமது ஏக பிரதிநிதிகளாக, சனநாயக வழியில் சர்வதேச கண்காணிப்பின் மத்தியில் நடைபெற்ற தேர்தல்களில் தாயக மக்கள் வழங்கிய தீர்ப்பு தமிழீழ விடுதலைப்புலிகளே தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் எனத் தெரிந்து கொண்டும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ககேடிய அரசினால் விதிக்கப்பட்டுள்ள தடையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பினும், சட்டத்தை மதிக்கும் கனடியத் தமிழர்களாக நாம் இச்சட்டத்திற்குக் கட்டுப்பட்டு மதிப்பளித்தே எமது அனைத்துச் செற்பாடுகளையும் கனேடியத் தமிழ் மக்களாகிய நாம் மேற்கொண்டு வந்துள்ளோம். எனினும், கனேடியத் தமிழ் மக்களின் உரிமைகள் பாதிப்பிற்கு உள்ளாகும் இடத்து இச் சட்டத்தை அல்லது அதனது பகுதிகளை கனேடிய வழிமுறைகளிற்கு ஏற்ப சட்டரீதியாக நாம் எதிர்கொள்வோம். எமது உரிமைகளை இம்மண்ணில் தக்கவைத்துக் கொள்வதற்கு அத்தகைய வழிமுறைகள் எமக்கு அவசியமாகின்றது. எனவே, எமது சமூகம் கனேடிய தடைச்சட்டத்தினை மிகக் கவனமாக ஆராய்கின்றது. சட்டவல்லுனர்களின் சேவையினையும் நாம் பெற்றுள்ளோம்.
எமது அன்புக்குரியவர்களே!
நீங்கள் கொடுக்கின்ற ஒவ்வொரு சதமும் மனிதாபிமான பணிகளிற்கே செலவிடப்படுகின்றது. உங்களது நிதியும் உன்னத பணியும் சேர்ந்ததனால் தான் சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட எமது உறவுகள் பட்டினிச்சாவைத் தவிர்க்க முடிந்தது. உங்களது உதவியால் தான் இடம்பெயர்ந்து அல்லலுறும் எமது உறவுகள் தமக்கென ஓர் இடத்தைப் நிர்மாணித்து உயிரையேனும் காக்க முடிகிறது. இது விடயத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் மிகத் தெளிவாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டுமென நாம் வேண்டுகிறோம்.
கனேடியத் தமிழராகிய நாம், <b>சிறீலங்கா அரசின் திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கையினால் காலம் காலமாக எமது மக்கள் இரத்தமும் அழிவுமாய்ப் பட்ட துன்பங்களைச் சுமந்த எமது நீண்ட வரலாற்று உண்மைகளை சக கனேடிய உறவுகளிற்கும், அரசிற்கும் தெரியப்படுத்துவதுடன் </b>எமது நாட்டின் சட்டதிட்டங்களிற்கு அமைவாக எமது தாயக உறவுகளின் துயர் துடைப்பிற்கான செயற்பாட்டுகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம். அவர்களது நீதியான, நேர்மையான அரசியல் அபிலாசைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்போம்.
நன்றி,
உலகத்தமிழர் இயக்கம்
(கனடா)
ஆதார இணைப்பு
உலகத்தமிழ் ஊடகம் - World Tamil Press