<b>ஹேராம்.</b>
இதுவும் கமலகாசனின் படம்தான்.
கமலகாசனே திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு என்பதோடு கதாநாயகனாக நடித்துமுள்ளார்.
கிட்டத்தட்ட உண்மைச்சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்ட படம். அதனால்தான் இப்படம் தயாரிப்பில் இருந்தபோதே பலத்த எதிர்ப்புக்களும் சர்ச்சைகளும் எழுந்தன.
ஆனால் அவற்றையும் மீறி அருமையான படமொன்றைத் தந்ததுக்கு கமலுக்கு நன்றி.
படத்தின் கதை இதுதான்.
தன் காதலி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதுட்பட பல சம்பவங்களுக்குக் காரணம் மகாத்மா காந்தி தான் என உறுதியாக நம்பவைக்கப்படும் ஓர் இந்து வாலிபன், காந்தியைக் கொல்லத் தீர்மானிக்கிறான். இதற்குள் அவனுக்கு இரண்டாவது திருமணமும் வற்புறுத்திச் செய்யப்படுகிறது.
புது மனைவியுடன் தன் இலக்கு நோக்கிச் செல்கிறான். இடையில் இந்து முஸ்லீம் கலவரங்கள். காந்தியைக் கொல்வதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்குகிறான். தன் மனைவியை விட்டுவிட்டு தன் நோக்கத்துக்காக வீட்டைவிட்டுப் புறப்படுகிறான்.
பின் காந்தியின் உண்மை முகத்தைக் கண்டு மனம் மாறுகிறான். காந்தியின் மீது தீராப் பற்றுக் கொள்கிறான். ஆனால் அவன் முன்னாலேயே வேறொருவன் (கோட்சே) காந்தியைச் சுட்டுக்கொல்கிறான்.
சாகக்கிடக்கும் கிழவரொருவரை (சாகீத் ராம்)மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுடன் கறுப்பு வெள்ளையாகப் படம் தொடங்குகிறது. அந்தக் கிழவர் தான் மேற்சொன்ன பத்தியில் காந்தியைக் கொல்லப் புறப்பட்ட கதாநாயகன். அக்கிழவர் கொண்டுசெல்லப்படும் வழியில் மதக்கலவரம். அதனால் கிழவரைக் கிடங்கொன்றினுள் பத்திரமாகி இறக்கிவைக்கின்றனர். கிழவரின் ஞாபகங்கள் விரிகிறது நிறக்காட்சிகளாக. கிழவரின் இளமைப்பாத்திரம் தான் கமலகாசன். அனைத்துச் சம்பவங்களும் சொல்லப்பட்டு காந்தியின் இறப்பின் பின் அவர் தீவிர காந்திப் பக்தனானன். கிழவன் இறந்தபின் காந்தியின் பேரனை அழைத்துவந்து அவர் சேகரித்து வைத்த நிறையப் பொருட்களைக் கொடுக்கிறார் அக்கிழவரின் மகன். இப்பாத்திரத்தில் காந்தியின் பேரனாக நடித்தவர் உண்மையிலேயே காந்தியின் பேரன்தான்.
<img src='http://www.thenisai.com/img/mov/heyram2.jpg' border='0' alt='user posted image'>
இப்படத்தில் ஏராளமான நட்சத்திரப் பட்டாளம். எந்த இந்தியப்படத்திலும் இவ்வளவுக்கு முன்னணி நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்காது என்பது திண்ணம்.
கமலகாசன், அப்பாஸ், நாசர், செளகார் ஜானகி, டெல்லி கணேஸ், கவிஞர் வாலி, இந்தி நடிகர் சாருக்கான், மூத்த நடிகை ஹேமமாலினி, ஓம்பூரி, ராணி முகர்ஜி, நசூரிதின் ஷா, வசுந்துராதாஸ், குல்கர்னி இன்னும் எனக்குப் பெயர் தெரியாத தமிழ், இந்தி நட்சத்திரப் பட்டாளம் இந்தப் படத்திலுண்டு. கமலின் மனைவியாக வரும் வசுந்துராதாசுக்கு இதுதான் முதற்படம். முதற்படத்திலயே கமலுக்கு ஈடுகொடுத்து வெளுத்தி வாங்கியிருக்கிறா.
படத்தின் மூலக்கதை ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்ட உண்மைச் சம்பவத்தைத் தழுவியது. அதாவது கோட்சேக்கு முன்பே காந்தியைக்கொல்ல தமிழன் ஒருவன் முயன்றான் என்ற தகவல்தான் படத்தின் மூலக்கதை. அதை வைத்து அருமையான திரைக்கதையை இழைத்திருக்கிறார் கமல்.
கதை நடப்பது நாற்பதுகளில். படத்தில் அக்காலப்பகுதியை அப்படியே கொண்டு வருகிறார். அந்தக் கால கார், வாகனங்கள், வீடுகள், பாதைகள், கட்டடங்கள், மனிதர்கள் என்று அனைத்துமே அப்படியே காலத்தோடு பொருந்துகிறது. மிகுந்த பொருட்செலவு இருந்திருக்குமென்து திண்ணம்.
மேலும் கமராவின் வர்ணஜாலங்கள் பாராட்டத்தக்கது. அதிலும் கமலை விதவிதமான நிறங்களில காட்டும்போது நிறங்கள் உணர்வைப் பிரதிபலிக்கின்றன். கமல் துப்பாக்கி சுட்டுப் பயிற்சியெடுக்கும்போதும் சரி, மனைவியுடனும் காதலியுடனும் களிக்கும்போதும் சரி, காட்சிகள் அருமையாக இருக்கிறது.
படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்தப் பாட்டுமில்லை. அதுதான் படத்தின் வெற்றியும்கூட. பின்னணி இசையின் உச்சப் பயன்பாட்டைப் பற்றி உதாரணம் காட்டிப் பேச வேண்டுமானால் ஹேராம் தான் அதியுச்ச உதாரணம். வேற ஆர்? எங்கட இளையராசா தான்.
மதக் கலவரக் காட்சிகள் அருமை. இவ்வளவு யதார்த்தமாக உண்மைச் சம்பவத்தை திரையில் கொண்டு வந்துள்ளார்.
<img src='http://www.rediff.com/entertai/1999/nov/18hey1a.jpg' border='0' alt='user posted image'>
சரித்திரப் படமோ, உண்மைச் சம்பவத்தைத் தழுவிய படமோ எங்கள் தமிழ்ச்சினிமாவில் குறைவு. அதுவும் இப்படி சீரியசான பிரச்சினைகளைப் படமாக்குவது அறவேயில்லை. சிறைச்சாலை போன்று ஓரிரு படங்கள் வந்திருந்தாலும் ஹேராம் அளவுக்கு எவையும் இயக்கத்திறன் வாய்ந்தவையில்லை.
முதன் முதல் ஆங்கிலப் படங்களுக்கிணையான ஒரு சரித்திரப் படம் தமிழ் வந்துள்ளதாகவே நான் நினைக்கிறேன்.
----------------------------------------------------------------
இப்படத்தில் முதன்மையாகப் பலரால் சுட்டிக்காட்டப்பட்ட குறை, ஆபாசமான காட்சிகள் அதிகம் என்பதுதான். என்னைப்பொறுத்தவரை அவை ஆபாசமான காட்சிகளல்ல. இன்று படங்களில் வரும் குலுக்கல் நடனங்களிலோ இரட்டை அர்த்த வசன பாட்டுக்களிலோ, அரைகுறை ஆடைகளின் ஆட்டங்களிலோ இருக்கும் ஆபாசம் அப்படத்தின் காட்சிகளில்லை.
இக்காட்சிகள் அனைத்தையும் வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் அனைவரும் பார்க்கும் நிலையில் ஹேராமை பாலியற்படம் என்று விமர்சிப்பது சுத்த கயமைத்தனம். ஹேராமில் வரும் காட்சிகள் நிச்சயமாகக் கதையோடு சேர்ந்தது தான். நாயகன் தன் காதலியோடு மென்மையான அணுகுமுறையையும் கட்டாயப் படுத்தித் திருமணம் செய்தவளோடு வன்மையான அணுகுமுறையையும் கொண்டிருப்பதும், காந்தியைக் கொல் சில சக்திகளால் உருவேற்றிவிடப்பட்ட நிலையில் அவன் கொள்ளும் உறவு அப்படியே காந்தியின் மீதான அவனது வெறியின் வெளிப்பாடு.
ஆனால் வயது வந்தவர்கள் மட்டும் பார்ப்பதற்கு இப்படம் சிறந்தது. குழந்தைகளுக்கோ சிறுவர்களுக்கோ இப்படம் புரியப்போவதுமில்லை. அவர்கள் விரும்பும் சண்டைக்காட்சிகளோ நகைச்சுவைக்காட்சிகளோ இப்படத்திலில்லை. மேலும் வன்முறைக் காட்சிளும் உள்ளபடியால் இப்படம் நிச்சயமாக வயதுவந்தவர்களுக்கு மட்டுமே. இச்சந்தர்ப்பத்தில் இப்படத்தில் கதைக்கு அவசியமாக வரும் பாலியல் சம்பந்தப்பட்ட காட்சிகளைக் குற்றம் சொல்லத் தேவையில்லை.
-----------------------------------------------------------------
இப்படத் தயாரிப்பிலிருந்தபோது ஏகக்பட்ட எதிர்ப்புக்கள், மிரட்டல்கள் கமலுக்கு. இவற்றுக்கிடையில் முக்கிய பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்த இந்தி நடிகரொருவர் இறந்துவிட்டார். பின் வேறொருவரைப் போட்டு அத்தனைக் காட்சிகளும் படமாக்கப்பட்டன. இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் உருவான அருமையான படம் தமிழர்கள் மத்தியில் எடுபடவில்லை. இந்தியிலும் இப்படம் வெளிவந்தது, ஆனால் இந்தியில் நிலைமை தெரியவில்லை. ஆனால் சிறந்ததொரு படமாகச் சிலாகிக்கப்பட்டதைக் காணும்போது சந்தோசம் வருகிறது.
இயக்குநர் பாலாவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி. சேதுவுக்குச் சிறந்தபடத்துக்கான விருது கிடைக்கவில்லையென்ற வருத்தமுண்டா?
அதுக்கு பாலா சொன்னார், "அட போங்க சார், ஹேராமான ஹேராமுக்கே கிடைக்கவில்லையாம், சேதுவுக்கெங்கே கிடைக்கப்போகுது. ஹெராமுக்குக் கிடைக்காதது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது" என்றார். இதே ஆண்டு தமிழக அரசின் சிறந்த பட விருது எதற்குக் கிடைத்தது தெரியுமா? அந்த ஆண்டு வெளிவந்த சேதுவுக்குக் கிடைக்கவில்லை. அதேயாண்டு வெளிவந்த ஹேராமுக்குக் கிடைக்கவில்லை. மாறாக படையப்பாவுக்குக் கிடைத்தது. இந்த அரசியலுக்குள் சிறந்தபடமாவது மண்ணாங்கட்டியாவது. அரசே இப்படிக் கோமாளிக்கூத்து ஆடும்போது மக்களை நொந்து என்ன பயன்?
----------------------------
ஆங்கில விமர்சனமொன்று.
http://www.thenisai.com/tamil/movies/heyram.htm