மதிப்புக்குரிய நடுவர்களுக்கும், உற்சாகமாகவும் - உறுதியாகவும் எமதணியின் நிலைப்பாட்டை இடித்துரைத்த எனதணித் தோழர்களுக்கும், எதிரணியின் குரலாய் ஒலித்த சோழியான் அண்ணாவுக்கும், இணையம் இளையோரை சீரழிக்கிறது என்று ஒப்பாரி வைத்து ஓய்ந்த எதிரணியினருக்கும், நமது கருத்துமோதல்களை களையாமல் படித்துக்கொண்டிருக்கும் யாழ்களப் பாவனையாளர்களுக்கும் மறுபடியும் எனதணி சார்பில் அன்பும் பண்பும் கலந்த வணக்கங்கள்.
எனதணி சார்பில் எமது கருத்துக்களை எல்லாம் தொகுத்து எதிரணியினருக்கு கடைசி வாய்ப்பாக மறுபடியும் இங்கே தொகுத்தளிக்க முனைகிறேன்.
<b>மொழி</b>
இணையத்தால் மொழி சீரழிகிறது என்கிற வாதத்தை முன்வைத்திருந்த எதிரணியினருக்கு - மொழியின் வளர்ச்சிக்கு இணையத்தின் ஊடாக இளையோரின் பங்கு எப்படியானது என்று எமது அணி ஆணித்தரமாகக் கூறியது:
உலகளாவிய வலைப்பின்னலால் உருவானது இணையம் என்கிற ஊடகம். அந்த வகையில் உலக மொழிகளின் உறவாடல்களும், வளங்களைப் பகிர்தலும் அதனூடே நிகழ்கின்றன. இணையம் ஊடாக சாத்தியப்பட்டுள்ள உலகளாவிய தொடர்பாடல்களும், கருத்துப் பகிர்வுகளும், எண்ண வெளிப்பாடுகளும் ஒரு மொழியின் வளத்தை மெருகேற்றுகின்றன. அந்த வகையில் பாவனையாளர்களின் - குறிப்பாக இளைஞர்களின் எழுத்தாளுமை அல்லது மொழியாளுமை விரிவடைகிறது. இதனடிப்படையில் பார்ப்போமாயின் - இளையோரால் மொழியும், மொழியால் இளையோரும் - ஒரு சுற்று வட்டத்தில் பயனடைந்துகொண்டு இருக்கிறார்கள் என்பதை எமது அணியினர் உறுதிபடத் தெரிவித்திருந்தார்கள்.
இன்னும் சிலபத்து ஆண்டுகளில் அழிந்து போய்விடக்கூடும் என்று கருதப்பட்டுக்கொண்டிருக்கிற ஒரு மொழி - தமிழ் மொழி - புத்துணர்ச்சி பெற்று இணையத்தில் ஒளிர்கிறது. புதிய காற்றினை சுவாசிக்கிறது. காரணம் - "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்த" அதன் பாவனையாளர்கள். அந்தப் பாவனையாளர் வட்டம் என்பது இணைய ஊடகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் இளைஞர்களை உள்ளடக்கியது. அது ஒருபுறமிருக்க, "உலகக் கலைகளெல்லாம் தமிழுக்குக் கொணர்ந்து சேர்க்கும்" பணியையும் இதே பாவனையாளர்கள் செய்கிறார்கள். அவர்கள் "வாங்கல், வழங்கல்" என்கிற இந்த இரு செயற்பாடுகளின் மூலமும் நன்மைபெறுகிறார்கள் - நன்மையளிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
புதிதாக எழுதத் தொடங்குகிற தமிழ் இளையோருக்கு களமமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மொழி சார்ந்த அவர்களின் தேடல்களுக்கும், முயற்சிகளுக்கும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்புக் கொடுக்கப்படுகிறது. வாசிப்பு என்பது ஒரு மனிதன் முழுமையடைவதில் பங்கு வகிக்கிறது. வாசிப்பு தேடல்களை, கேள்விகளை, சந்தேகங்களை உற்பத்தி செய்கிறது. அந்த வாசிப்பு தனக்குப் பழக்கப்பட்ட ஒரு மொழியூடாக - தாய்மொழியூடாக நிகழ்கிற போது பெறப்படுகிற வினைத்திறன் அளப்பெரியதாக இருக்கிறது. இந்த வாசிப்பனுபவம் என்பதை வேறு ஊடகங்களைக் காட்டிலும் இலகுவாகவும் - வேகமாகவும் - மலிவாகவும் பெறக்கூடிய இடமாக இணையம் உள்ளது என்பதே எமது அணி சார்பாக நாம் சுட்டிக்காட்டிய விடயமாகும். அதேபோல் எழுத்து. இலக்கியம் என்பது எட்டாப்பழம் அல்ல. அது எல்லோருக்கும் - இளையோருக்கும் எட்டும். எப்படி? இணையம் என்கிற "கொக்கத்தடியால்" அது முடியும். எழுத எழுதத் தானே தேர்ச்சி பெறுகிறோம் - பயிற்சி பெறுகிறோம். இலக்கியம் சார் படைப்புக்களை சுதந்திரமாக எழுதிப் பழக முடிகிறதே இணையத்தில். வீட்டில் ஒரு பேப்பரில் எழுதி மடித்து வைக்கலாம். ஒரு குறிப்பிட்ட சிறு காலத்துக்கு அது தொடரலாம். எமக்கே அது அலுத்துவிடும். ஆனால் இணையம் என்பது அப்படியில்லை. நாம் எழுதுகிறோம் - எதிர்வினைகள் வருகிறது - மதிக்கிறோம் - கருத்துப் பகிர்கிறோம் - மாற்றங்கள் செய்கிறோம் - மெருகேற்றுகிறோம் - உற்சாகம் அடைகிறோம் - புதிதாய் எழுதுகிறோம் - மறுபடி மறுபடி மறுபடி தொடர்கிறோம் - பயிற்சி பெறுகிறோம் - நன்மை அடைகிறோம்.
தமிழ்ப் பண்பாட்டை, கலைகளை, இலக்கியங்களை அறிவிக்கவும் - அரங்கேற்றவும் - அடைகாக்கவும் - தாலாட்டவும் தளம் தருகிறது இணையம். குறிப்பாக தமிழ் இணையப் பல்கலைக்கழகம் என்கிற தொழில்நுட்பப் படைப்பை எமது அணி சுட்டிக்காட்டி நின்றது. இவற்றின் அடிப்படையில் தமிழ் மொழியின் வளர்ச்சியும், அதன் பாவனையாளர் பெறும் பயன்பாடுகளும் - தேவைகளையும், தொழில்நுட்ப மாற்றங்களையும் கருத்தில்கொண்டே நிகழ்கின்றன என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறோம்.
இதனோடு பன்மொழித் தளங்களினால் தமிழ் இளையோர் பெறுகிற நன்மைகளையும் - அந்த நன்மைகளால் தமிழ் மொழிக்கு கிடைக்கிற வளங்களையும் நாம் பலமுறை எதிரணியினருக்கு உதாரணங்களுடன் தெரிவித்திருக்கிறோம். அதுமட்டுமல்லாது மொழிக்கல்வியை இலகுவாக நடைமுறைப்படுத்தக்கூடியதாக உள்ளமை இணையத்தால் இளையோர் அடைகிற நன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
<b>கல்வி</b>
இணையம் என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனமாகவே உள்ளது என்ற குறுகிய பார்வையை வெளிப்படுத்திய எதிரணி நண்பர்களுக்கு - இல்லை, இணையம் கல்வித்துறையில் ஆற்றும் நன்மை அளப்பெரியது என்றும் - அதனைத் தமிழ் இளையோர் பயனுள்ளதாகவே பயன்படுத்துகிறார்கள் என்றும் எமது அணி எடுத்துக் கூறியது:
அநேகமாக பாடசாலைகளுக்கென்று - பல்கலைக்கழகங்களுக்கென்று அதிகாரபூர்வமான இணையப்பக்கங்கள் உள்ளன. அவற்றில பாடசாலை பற்றிய விபரங்களும், துறைகள் பற்றிய விளக்கங்களும், தொடர்பு விபரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் பாடசாலைகளின் விபரங்களை அறிந்துகொள்வதோடு, தொடர்புகளை ஏற்படுத்தி விண்ணப்பங்களையும் மேற்கொள்ள முடியும்.
வீட்டுப்பாடங்கள் செய்வதற்கு உதவி செய்வதற்கும் நிறைய இணையப்பக்கங்கள், கருத்துக்களங்கள் போன்றன உள்ளன. குறிப்பிட்ட சிறுதொகை பணம்செலுத்தியோ, இலவசமாகவோ இந்த சேவைகளை இளையோர் பயன்படுத்துகிறார்கள். மூத்த மாணவர்கள், ஆசிரியர்கள், நிபுணர்கள் என பலரும் இணையமூடாக விளக்கங்களைக் கொடுப்பதற்கும், உதவிகளை செய்வதற்கும் தயாராக உள்ளார்கள்.
அதேபோல் பார்த்தோமென்றால் பாடசாலை தவிர்ந்த நேரங்களிலும் ஆசிரியர்கள் - மாணவர்களுக்கிடையிலான தொடர்பைப் பேணுவதற்கும் இணையம் வழிசெய்கிறது. இணையம் வழி அவர்கள் பாடசாலை விடயங்கள் பற்றிக் கலந்துரையாட முடிகிறது. இது இவர்களுக்கிடையே புரிந்துணர்வை வளர்க்கவும் உதவுகிறது.
இணையம் ஊடாக வீட்டிலிருந்தபடியே விரிவுரைகளை வாசிக்கவும், விரிவுரையை ஒலிவடிவில் பரிமாறிக்கொள்ளவும், ஒப்படைகளை சமர்ப்பிக்கவும் முடிகிறது. இது சுகவீனமாக வீட்டிலிருக்கும் சமயங்களிலும், வேறு ஒரு முக்கிய நிகழ்வு காரணமாக தவறவிடும் சமயங்களிலும் பேருதவியாக இருக்கிறது.
புதிய வகுப்புத் தொடங்கும்போது பாட அட்டவணைகளை நேரத்துக்கே பெற்றுக்கொள்ளவும், பாடத்திட்டங்களை அறிந்துகொண்டு விடுமுறைக்காலங்களில் அதற்குத் தயாராகவும் முடிகிறது. புதிய வகுப்புக்கான பாடங்களும் இணையத்தில் இணைக்கப்பட்டிருப்பதால் சுயமாகவே நாம் படித்து எங்கள் திறனை வளர்த்துக்கொள்ள முடிகிறது. இவை தவிர நூலகக் கணக்கை நீடிக்கவும், புதுப்பிக்கவும் உதவியாக இருக்கிறது. புத்தகங்களை இணையம் ஊடாக வாசிக்கவும் வழிகள் உள்ளன.
இப்படியாக பாடங்கள், பயிற்சிகள், உதவிகள், கலந்துரையாடல்கள் என கல்வித்துறையில் மிகுந்த பயனை தமிழ் இளையோரும் அடைகிறார்கள் என்று கூறி எதிரணியினரின் விதண்டாவாதங்களுக்கு எமது அணி பொறுமையாக பதிலளித்தது.
<b>அனுபவங்கள் சில:</b>
***எனது பல்கலைக்கழகக் கல்வியைத் தேடித் தேர்ந்தெடுத்தது இணையம் ஊடாகத்தான். அதற்கான விண்ணப்பத்தை செய்திருந்ததும் இணையம் ஊடாகத்தான். காரணம்: பள்ளி இருக்கும் இடம் வீட்டிலிருந்து தூரமாக இருந்தது.
***முன்னர் எனது பள்ளிக் காலத்தில் ஒரு நிறுவனத்தில் பயிற்சி செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்ட போது அதற்கான நிறுவனத்தைத் தேடிப் பெற்றதும், அவர்களோடான தொடர்பை மேற்கொண்டதும் இணையம் ஊடாகத்தான்.
***எமது துறைக்கான ஒரு தனித்தளம் உள்ளது. இங்கு எமதும், எமக்கு முன்னர் படித்த மாணவர்களது Project களும் அவைபற்றிய விபரங்களும் சேமிக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஒவ்வொரு மாணவர்களும் தமக்கான ஒரு இணையப்பக்கத்தை வைத்திருக்கவேண்டியது அவசியமாக்கப்பட்டுள்ளது. இது தவிர தனியான ஒரு கருத்துக்களம் உள்ளது - இங்கு பேராசிரியர்களும் நாங்களும் கலந்துரையாட முடிகிறது. மற்றும் விரிவுரைகள், பரீட்சைகள், முக்கிய நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் ஒவ்வொருநாளும் புதுப்பிக்கப்படுகின்றன. சில பாடங்களுக்கு பல்கலைக்கழகத்துக்கு போகாமலே எமது தளத்தில் உள்ள "பாட மின்னூல்களை" படித்துவிட்டு பரீட்சைக்குத் தோன்றினாலே போதுமானது.
<b>அரட்டை அறை & துரித தூதர்</b>
அரட்டை அறைகளால் தமிழ் இளையோர் சீரழிந்து போகிறார்கள், சமூகச் சீர்கேடுகள் அரங்கேறுகின்றன, பாலியல் தவறுகள் நிகழ்கின்றன போன்ற வாதங்களை வைத்து இணையம் தமிழ் இளையோரை சீரழிக்கின்றது என்று ஒப்பாரி வைத்த எதிரணியினருக்கு - எமது அணி அரட்டை அறைகளால் நிகழ்கிற பல நன்மைகளை எடுத்துக்காட்டி அவற்றின் பயன்பாட்டுத்தளத்தை தெளிவாகக் கோடுபோட்டுக் காட்டியது.
ஆசிரியர்கள் - மாணவர்களிடையேயான உரையாடல்களை மேற்கொள்வதற்கு அரட்டை அறைகள் (chat rooms) பெரிதும் உதவுகின்றன. எழுத்துவடிவில், ஒலிவடிவில், ஒளிவடிவில் என பலவடிவங்களிலும் இந்த கலந்துரையாடல்கள் நிகழ்கின்றன. வீட்டுப்பாடங்களை செய்வதற்கும், அதுசம்பந்தமான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இவை பயன்படுகின்றன. அத்தோடு மட்டுமல்லாது பொழுதுபோக்குத்துறைகளிலும், சமூகசேவைத் துறைகளிலும் தோழர்களுடன் வினைத்திறன்மிக்க தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கும் இவை உறுதுணையாக இருக்கின்றன. ஒரே துறை சார்ந்தவர்கள் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கும், ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும், கருத்துக்களைப் பகிர்ந்து திருத்தங்களை செய்வதற்கும் உதவுகின்றன.
அதுமட்டுமல்லாது ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து கனடாவில் அண்ணன் - பிரித்தானியாவில் தம்பி - பிரான்சில் அக்கா - சுவிசில் மாமா - ஒஸ்ரேலியாவில் அப்பா என்று உறவுகளைப் பிரிந்து வாழுகிற இளம் சமூகம் தமது சொந்தங்களுடன் பிணைப்பைப் பேணுவதற்கும், தொடர்பாடல்களைப் புரிவதற்கும் துணையான ஊடகமாக "அரட்டை அறை" திகழ்கின்றது. ஏன், நீண்டகாலம் பார்க்காத தனது சொந்தங்களையெல்லாம் துரித தூதர் (Messenger) மூலமாக - ஒளிவடிவில் (Webcam) காண்பதற்கும் முடிகிறதே.
ஐயா நடுவர் அவர்களே, சில எனது அனுபவங்களையும் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவை எமது அணியினரின் வாதத்துக்கு மேலும் வலுச்சேர்க்கும் எனவும் நம்புகிறேன்:
***அப்பால் தமிழ், தமிழமுதம், வன்னித்தென்றல், tyo-germany உட்பட சில இணையத்தளங்களை நான் வடிவமைத்திருக்கிறேன். இதில் அப்பால் தமிழை நிர்வகிக்கும் கி.பி.அரவிந்தன் அண்ணா பிரான்சில் இருக்கிறார். தமிழமுதத்தை நிர்வகிக்கும் எதிரணித் தலைவர் சோழியான் அவர்கள் எனது நகரிலிருந்து 600கிமீ தள்ளி வசிக்கிறார். வன்னித்தென்றலை நிர்வகிக்கும் எதிரணியில் வாதாடும் நிதர்சன் கனடாவில் வசிக்கிறார். இணையத்தள வடிவமைப்பு, வலைத்தள நிர்வாகம், ஒழுங்கமைப்பு, ஒருங்கமைப்பு, ஆக்கங்கள் பரிமாறல், கருத்துக்கள் பகிர்தல், திருத்தங்கள் மேற்கொள்ளல், சரிபார்த்தல் போன்ற அத்தனை வேலைகளையும் எதனூடாக நிகழ்த்துகிறோம் என்று நினைக்கிறீர்கள்? இந்த துரித தூதர் (Messenger) ஊடாகத்தான்.
***எனது கவிதைப் புத்தகம் உருவாக்கும் போது அதற்கு பெரிதும் பயன்பட்டது இந்த துரித தூதுவர். கவிதைகளை தொகுத்தல், கவிதைகளில் உள்ள எழுத்துப்பிழைகளைத் திருத்தல், நூல் வடிவமைப்பை மேற்கொள்ளல், ஓவியருடனான தொடர்பு, அச்சுப் பதிப்பதற்கான ஆயத்தம், வெளியீட்டு நிகழ்வை ஒழுங்குபடுத்துவதற்கான தொடர்பாடல் போன்ற பலவிடயங்களுக்கும் இந்த துரித தூதர் பயன்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
***எனது பள்ளியில் கடந்த 5 மாதங்களில் மொத்தம் 7 Projectகள் செய்திருந்தோம். இவற்றில் 5 Projectகள் குழுவேலையாகும். எனவே பள்ளி தவிர்ந்த வேளைகளில் அநேகமாக "துரித தூதர்" தான் எமக்கு பலமாக இருந்தது. வேலைத்திட்டங்களை வகுத்தல், பகிர்தல், கோப்புக்களை அனுப்புதல் - பெறுதல், சரிபார்த்தல், பிழைதிருத்தல் போன்ற வேலைகளை இதனூடாகத் தான் பெரும்பாலும் செய்தோம். காரணம் ஒவ்வொரு Project க்கும் வெவ்வேறு குழுக்களில் இருப்போம். ஒரேநேரத்தில் எல்லாக் குழுவையும் சந்தித்து வேலை செய்யமுடியாது. இரவு நேரங்களில் பல்கலைக்கழகத்தில் சந்திக்க முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடங்களில் இருப்பார்கள். எனவே இரவு நேரங்களில் "துரித தூதர்" ஊடாக சந்தித்துத்தான் செயற்பட்டோம்.
***ஐயா நடுவர் அவர்களே, யாழில் நான் இணைத்த digital images சிலவற்றை நீங்கள் பார்த்தீர்களோ தெரியாது. அது எனது project ஒன்று. அந்தப் படங்களை கணினியில் உருவாக்குவதற்கு ஈழம் சம்பந்தப்பட்ட நல்ல தரமான நிழற்படங்கள் எனக்குத் தேவையாக இருந்தது. இதற்காக நான் ஈழம் சென்று படங்கள் எடுத்துவரவா முடியும்? எனவே அருச்சுனா இணையத்தளம் நடாத்துகிற மகிழன் அண்ணாவுடன் messenger மூலமாக தொடர்பை ஏற்படுத்தி எனது Concept ஐ அனுப்பி, அண்ணா! இதற்கேற்ற படங்கள் தேவை எடுத்து அனுப்புவீர்களா என்றேன். அவரும் எனக்கு நல்ல தரமான நிழற்படங்கள் சிலவற்றை அனுப்பி வைத்தார். அவற்றை வைத்தே நான் அந்தப் படங்களை உருவாக்க முடிந்தது.
<b>கருத்துச்சுதந்திரம்</b>
இணைய ஊடகத்தில் ஆபாச வார்த்தைகளை கூச்சமற்றுப் பயன்படுத்துகிறார்கள் என்று முகம்சுழித்த எதிரணியினர்க்கு - பெரியோரே, இணையத்தின் கருத்துச் சுதந்திரத்தால் எம் இளைய சமூகம் எப்படியெல்லாம் நன்மையடைகிறார்கள் பாருங்கள் என்று வெளிச்சம் போட்டு காட்டியது எமது அணி:
ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருந்த இளைய சமுதாயத்தின் சிந்தனையை புதிய பரிமானத்திற்கு அழைத்து வந்திருக்கிறது இந்த இணைய ஊடகம். இளைய சமூகம் தமது எண்ணங்களை, ஆளுமைகளை, கருத்துக்களை சுயமாகவும் சுதந்திரமாகவும் தங்குதடையின்றி வெளிப்படுத்துவதற்கு களம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு நில்லாமல் சிந்தனையை விரிவாக்கம் செய்வதற்கும், அதனை செயற்திறன் மிக்கதாக மாற்றுவதற்கும் பக்கபலமாக இருக்கிறது.
ஆங்காங்கே புலம்பெயர்ந்து பிரிந்து வாழ்கிற நமது ஈழத்தின் இளைய சமூகம் - தான் வாழ்கிற சூழலில் தான் பெற்ற வாழ்வியல் அனுபவங்களையும் - அவற்றினின்று தோன்றுகின்ற தனது எண்ணங்களையும், கருத்துக்களையும், உணர்வலைகளையும் - தமக்குள்ளே பகிர்ந்துகொண்டு - தமக்குள்ளே விவாதங்களை மேற்கொண்டு - விடைகாணக்கூடிய சாத்தியத்தை தந்தது எது எனக் கேட்கின் இணையமன்றி வேறிலை என்றே சொல்லமுடியும்.
நமது சமூகத்தில் - அதன் குறைபாடுகளை, அதன் முரண்நிலைகளைப் பற்றி நாம் நமது எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்த முனையும்போது அதற்கெதிராய் வருகிற குரல்கள் அதிகம் - நம்மை முடக்கவும், அழுத்தங்கள் தந்து அடக்கவும் விளைகிற கைகள் அதிகம். நாம் புறக்கணிக்கப்படவேண்டியவர்களாகக் கருதப்படுவோம். இப்படியான சமூக சூழல் நிலவும் போது அதற்கு மாற்றாக ஒரு "இணைய சமூகத்தை" உருவாக்கி எமது எண்ணங்களுக்கான அரங்கொன்றை நிறுவித் தந்திருப்பது இணைய ஊடகம் தானே?
குறிப்பாக, இளம் தமிழ்ப் பெண்களுக்கான கருத்துச்சுதந்திரம் என்பது இணையத்தில் தான் ஓரளவு முழுமையாக சாத்தியப்பட்டிருக்கிறது என்று சொல்லவேண்டும். கருத்துக்களை சுதந்திரமாக தன்னுடைய பெயரில், தன்னுடைய சுயஅடையாளத்தோடு ஒருவரால் இணையத்தில் வெளிப்படுத்த முடியுமா என்று எதிரணியினர் கேள்வி எழுப்பினர். சுதந்திரமாக தனது எண்ணங்களை வெளிப்படுத்துவது இணையத்தில் சாத்தியம் - ஆனால் அதனால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் வெளியுலகில் தான் நிகழ்கின்றன என்பதை அவர்களால் மறுக்கமுடியாது. முகமூடி அணிந்தால் என்ன? தான் யார் என்பதை மறைத்தால் என்ன? கருத்துக்களை அவர்களால் சுதந்திரமாக வைக்க முடிகிறதே - இதுதானே முக்கியம். மூளைக்குள் பூட்டிவைத்த எண்ணங்களையெல்லாம் சுதந்திரமாக சிறகடிக்க வைக்கிறார்களே - இது தொடக்கம். எண்ணங்கள் தெளிவுபட - எண்ணங்கள் விரிவுபட - மாற்றங்கள் நிகழும். அப்போது சுய அடையாளங்களோடு கருத்துக்களை அவர்கள் வைப்பார்கள் - வெளியுலகில் எதிர்கொள்ள நேரும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பார்கள். இதைத் தான் எமது அணி தெளிவுபட சொல்லிற்று.
<b>நண்பர்கள் & உறவுகள்</b>
இணையம் ஊடான நட்பு போலித்தனமானது என்றும் - நிலையற்றது என்றும் - அதனால் சீரழிவுகளையே இளைஞர்கள் எதிர்நோக்குகிறார்கள் என்றும் எதிரணியினர் முனகியபோது, இல்லை இணையம் ஊடான உறவுகளாலும், நட்பாலும் நன்மைகள் தான் பெருமளவு நிகழ்கின்றன என்று மிகச் சத்தமாக எமது அணி கூறியது:
இணைய ஊடகத்தின் பல்வேறு பாவனைத்தளங்களூடாகவும் - குறிப்பாக கருத்துக்களங்கள், வலைப்பதிவுகள், அரட்டை அறைகள், துரித தூதுவர், மடலாடற் குழுக்கள் - போன்றவற்றினூடாக அறியப்பெறுகிற புதிய மனிதர்கள் - அதனுமூலம் உருவாகிற நட்பு என்பது வெறும் போலித்தனமானது அல்ல. நீங்கள் சேர்கிற கூட்டம் சரியாக இருந்தால் நட்பு ஏன் போலித்தனமாகிறது? புலம் பெயர்ந்து வாழ்கிற தமிழ் இளையோரைப் பொறுத்தவரையில் இணையம் ஊடான சந்திப்புக்கள் தான் அவர்களுக்கு பெரும் ஆறுதல்.
இந்த நட்பு சாதி பார்த்து, மதம் பார்த்து, ஊர்ப்பாகுபாடு பார்த்து உருவாவதில்லை. இந்த இணைய ஊடகத்தில் நமது போலித்தனமான அடையாளங்களையெல்லாம் அவிழ்த்துப் போட்டு நிர்வாணமாகவே நிற்கிறோம். நன்றாகப் பழகுகிறாரா - வெளிப்படையாகப் பழகுகிறாரா - அப்போது நட்பு உருவாகிறது. ஒருவரை ஒருவர் அறிந்துகொள்கிறோம் - புரிந்துகொள்கிறோம் - நலம் விசாரிக்கிறோம் - வாழ்த்துக்கள் அனுப்புகிறோம் - சுகவீனம் உற்றால் கவலைப்படுகிறோம் - சோகமாய் இருந்தால் ஆறுதல் கூறுகிறோம் - சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போது சந்திக்கிறோம் - இது போலித்தனமானது அல்ல.
இப்படி உருவாகிற நட்பு வெறும் பொழுதுபோக்கோடு நின்று விடுவதில்லை. வினைத்திறன்மிக்க செயலாற்றவும் துணைபுரிகிறது. துறைசார் நண்பர்கள் தங்களுக்குள் புதிய படைப்பு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இணைந்து ஒரு பணியைச் செய்கிறார்கள். ஒருவருக்கொருவர் தகவல்களையும், செய்திகளையும் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆலோசனைகளையும், எதிர்வினைகளையும் செய்கிறார்கள். புதிய நண்பர்களை தங்களுக்குள் அறிமுகப்படுத்தி வைக்கிறார்கள். புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள்.
இந்த நட்பு ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் பேதங்கள் பார்ப்பதில்லை. அந்த வகையில் வயது வித்தியாசம், பால் வேறுபாடு என்பனவற்றையும் அது கணக்கிலெடுப்பதில்லை. இதனால் பெண்களும் சுதந்திரமாக ஆண் நண்பர்களுடன் பழகுகிறார்கள். இளையவர்கள் மூத்தவர்களுடன் இயல்பாகப் பழகுகிறார்கள். அந்தவகையில் துறைசார் வல்லுனர்களையும், கலைஞர்களையும், எழுத்தாளர்களையும், நிபுணர்களையும் நாம் அறிந்து நட்பு வளர்த்துக்கொள்ளவும், தொடர்புகளைப் பேணவும் முடிகிறது. இவர்கள் மூலமாக புதிய புதிய மனிதர்களை எம்மால் அறிந்து பழக வாய்ப்புக் கிடைக்கிறது. இணையம் இல்லாவிட்டால் இவற்றின் சாத்தியப்பாடு பற்றி யோசித்துப் பாருங்கள்.
<b>அனுபவங்கள் சில:</b>
*** ஒருமுறை The Lord Of The Rings படத்தில் visual effects செய்த குழுவில் முக்கிய பங்காற்றிய யேர்மனியரோடு கலந்துரையாடவும் கேள்விகள் கேட்கவும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது அவரிடம் ஒரு கேள்விய நாம் கேட்டிருந்தோம். இப்படி படங்களில் பணியாற்றுகின்ற வாய்ப்பைப் பெறுவதற்கு என்ன தகுதி வேண்டுமென்று. அவர் சொன்ன பதில் இதுதான்: "கல்வித் தகமை கலைத்திறன் போன்றவை முக்கியமாக இருந்தாலும், இந்தத் துறைசார்ந்தவர்களின் - நண்பர்களின் தொடர்புகளும் அவசியமாக இருக்கிறது. சாதாரணமாக யேர்மனிய சினிமாத் துறையில் தொழில்நுட்பவியலாளனாக பணியாற்றிய நான் எனது நண்பரின் தொடர்பின் மூலம் தான் இந்த visual effects துறைக்குள் நுழைந்தேன்" என்று குறிப்பிட்டார்.
இதனை நான் எதற்கு குறிப்பிடுகிறேன் என்றால், இணையம் ஊடான நட்பு இப்படியான நன்மைகளையும் எமக்கு அளிக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தவேயாகும். ஒரு குறும்படம் செய்கிற ஆவலிருந்தால் அதற்கு தொழில்நுட்பவியலாளர்களை, கலைஞ்களை இந்த இணையநட்பின் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.
<b>செய்திகள் & தகவல்கள்</b>
இணையம் தரும் செய்திகளிலும் தகவல்களிலும் திரிபுகள், பொய்கள், உறுதிப்படுத்தப்படாதவைகள் உள்ளன என்கிற கருத்தை முன்வைத்த எதிரணியினர்க்கு - தாயக செய்திகளையும் உலக செய்திகளையும் உடனுக்குடன், உறுதிபடுத்தக்கூடியாதாக பெற்றுக்கொள்ளமுடிகிறது என்கிற கருத்தை ஆதாரபூர்வமாக எமது அணி முன்வைத்தது:
உத்தியோகபூர்வ செய்தித் தளங்களில் உண்மைச் செய்திகளையும், உறுதிபடுத்தப்பட்ட தகவல்களையும் பெற்றுக்கொள்ளமுடியும். (திரிபுகள் எங்குதான் இல்லை?). இவற்றுடன் காலநிலை அறிதல், போக்குவரத்து விபரங்கள் அறிதல், பாதை விபரங்களை பெறுதல் போன்ற சேவைகளையும் இணையத்தில் பெற்றுக்கொண்டு நன்மையடைய முடிகிறதே.
உலகத் தரவுகளை அறியவும் அவற்றை பிறருடன் பகிர்ந்துகொள்ளவும் முடிகிறது. உத்தியோகபூர்வமற்ற தளங்களில் செய்திகளையும், தகவல்களையும் பெறுவதை விடுத்து நம்பத்தகுந்த, உத்தியோகபூர்வத் தளங்களில் செய்திகளைப் படித்தால் நன்மைகளைப் பெரியளவில் பெற்றுக்கொள்ள முடியும்.
இன்று தாயக செய்திகளை உடனுக்குடன் வேகமாக அறிந்து கொள்ளவும் - தாயக நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட நிழற்படத் தொகுப்புக்களை பார்வையிடவும் எம்மால் முடிகிறதென்றால் இணையத்தின் நன்மைதானே அது. உலகம் முழுதும் பந்துவாழ்கிற தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அந்தந்த நாடுகளிலிருந்து வெளிவருகிற இணையசஞ்சிகைகள், இணையப்பக்கங்கள், கருத்துத்தளங்கள், வலைப்பதிவுகள் ஊடாக அறிந்துகொள்ள முடிகிறது என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
<b>நாளிதழ்கள் + வானொலி + தொலைக்காட்சி = இணையம்</b>
தனித் தனியாக இருந்த எழுத்து, ஒலி, ஒளி ஊடகங்களை ஒன்றிணைத்து இணையம் என்கிற ஊடகம் வழி நாம் பெறுகிறபோது - தனித்தனியாக நாம் பெற்ற நன்மைகளை - சேர்த்துப் பெறுவதாக அமைகிறது அல்லவா?
<b>வேகம் - மலிவு - தெரிவுசெய்தல் - பன்முக விளக்கம் - பல்தரப்பு நியாயம்</b> - இவையெல்லாம் இணையத்தின் வழி சாத்தியமாகிறது அல்லவா? தனித்தனியாக ஊடகங்கள் இருந்த போது பெறமுடியாத நன்மைகளையும் ஒருசேர இணையத்தில அவை காட்சியளிக்கிறபோது நம்மால் பெறமுடிகிறதே. இது நன்மைதானே?
<b>தாயகம்</b>
ஏற்கனவே குறிப்பிட்டாற் போல், தாயக செய்திகளை தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடிகிறது. அத்தோடு தமிழர் தரப்பு நியாயங்களை, தமிழர் தரப்பு செய்திகளை உலகளவில் எந்தத் தடைகளும் இன்றிக் கொண்டு செல்ல முடிகிறது அல்லவா. இந்த வகையில் தாயகம் - தேசியம் - சுயநிர்ணயம் சார் அறிவையும் உணர்வையும் பெற்றுக்கொள்ளவும், வளர்த்துக்கொள்ளவும் இணையம் துணைபுரிகிறது என்பதை எந்தளவு தூரம் எதிரணியினரால் மறுக்கமுடியும்?
<b>சேவைகள் & மென்பொருட்கள்</b>
இணையத்தின் மூலம் வழங்கப்படுகிற இலவச சேவைகள் முதற்கொண்டு குறிப்பிட்ட அளவு பணம் செலுத்திப் பெறுகிற சேவைகள் வரை பல நன்மைகளைப் பெறக்கூடியதாக உள்ளது. இலவச மின்னஞ்சல் சேவை (email), தொலைபேசிச் சேவை (voip), செய்திச்சேவை, வங்கிச்சேவை போன்ற சிலவற்றை நாம் இங்கே குறிப்பிடலாம். இவை தவிர அனைத்துத் துறைகள் சார்ந்த சேவைகளையும் இன்று இணையம் வழி பெறக்கூடியதாக இருக்கிறது. ஏன் மனநல ஆரோக்கியத்துக்கான சேவைகளைக் கூட இணையம் ஊடாக செய்கிறார்கள். ஒவ்வொன்றாக பட்டியலிட்டால் நிச்சயமாக ஒரு நீளமான பட்டியல் ஒன்று உருவாகும்.
மற்றும் கணினி சார் மென்பொருட்களை இலவசமாகவும் பணம் செலுத்தியும் இணையம் வழி பெற்றுக்கொள்ள முடிகிறது. எதிரணியினர் குறிப்பிட்டார்கள் மென்பொருள் திருட்டு பற்றி. ஆனால் அவற்றினால் கூட இந்த மென்பொருள் துறையில் நன்மைகளே நிகழ்கின்றன. கிடைக்கிற மென்பொருளை வைத்து தவறாகவா இளம் சமூகம் பயன்படுத்துகிறது? தமது பள்ளித் தேவைகளுக்காகவே பெரும்பாலான இளைஞர்கள் மென்பொருட்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். இதன்காரணமாக, இன்று Learning Edition போன்ற இலவச மென்பொருட்களை உரிய நிறுவனங்கள் மாணவர்களுக்காக வழங்குகிறது. இவற்றை வியாபாரரீதியாக அல்லாமல் தனது தேவைகளுக்காக மட்டும் பயன்படுத்திக்கொள்ள முடியும். லினுக்ஸ் போன்ற இயங்குதளம் இலவசமானது - அந்த இயங்குதளத்தில் பயன்படுத்தக்கூடிய மென்பொருட்களும் இலவசமானது.
<b>தொழில் & வியாபாரம்</b>
தொழிற் துறை சார்ந்தும் பல நன்மைகளை இளைஞர்களுக்கு இணையம் வழங்கியிருக்கிறது. வேலைகளைத் தேடுவதற்கும், வேலைத்தளங்கள் பற்றி அறிந்துகொள்வதற்கும், விண்ணப்பிப்பதற்கும் இது துணைபுரிகிறது. உங்களைப் பற்றிய தரவுகளோடு ஒரு தனியான இணையப்பக்கத்தை மாணவர்கள், வேலை தேடுபவர்கள் உருவாக்கி வைத்திருப்பார்கள். நிறுவனங்கள், அமைப்புகள் போன்றவை இதன்மூலம் பணியாளர்களை தெரிந்தெடுத்துக்கொள்வார்கள். உதாரணமாக: பள்ளிக்காக உருவாக்கி வைத்திருந்த எனது அறிமுகப்பக்கத்தைப் பார்த்துவிட்டு ஒரு நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றக் கேட்டிருந்தார்கள்.
வியாபாரத்தை விரிவுபடுத்தவும், அது சம்பந்தமான விளம்பரங்களை மேற்கொள்ளவும், வியாபாரத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும், நிறுவனத்தை வேறொரு இடத்திலிருந்து நிர்வகிக்கவும் இணையம் பெரிதும் பயன்படுகிறது.
<b>சீரழிவுக்கான சில காரணங்கள்</b>
எதிரணியினர் இணையத்தால் இளையோர் சீரழிகிறார்கள் என்பதற்கு இணையத்தைக் காரணம் காட்டியிருந்தார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. உண்மை இதோ வெளி உலகில், சமூகத்தில், தனிமனிதனில் உள்ளது என்று ஆதாரபூர்வமாக எமதணி கருத்துக்களை முன்வைத்தது. காரணங்களைப் பட்டியலிட்டது:
:: ஏற்கனவே சமூகத்திலும், தனிமனிதனிலும் இருந்த வக்கிரங்கள்தான் இணையத்திலும் வெளிப்படுகிறது.
:: தென்னிந்திய சினிமா மீதான மோகம் என்பது தமிழச் சமூகத்தின் வழிதான் இளைஞர்களிடம் சேர்ந்திருக்கிறது.
:: இணையத்தின் பாற் போதை என்பதும் அடிமைத்தனம் என்பதும் தனிமனித மனக்கட்டுப்பாடின்மை காரணமாக நிகழ்வது.
:: சரியான வழிநடத்தல் இல்லாமையும் இளையோர் சீரழிவதற்கு காரணமாக அமைகிறது. எனவே எந்த ஒரு ஊடகம் கிடைத்தாலும் அதை தவறாகவே பயன்படுத்துவார்கள்.
:: காலத்திற்கேற்ப அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டியது சமூகத்தின் கடமை. அந்தவகையில் கணினி - இணையம் பற்றிய அறியாமையும் இளையோர் சீர்கெடுவதற்கு காரணமாக இருக்கிறது. எனவே அதுபற்றிய விழிப்புணர்வை இளையோர் மத்தியிலும், முழுச் சமூக மட்டத்திலும் ஏற்படுத்தவேண்டும்.
:: தனிமனித பலவீனங்கள் என்பன சீரழிவுகளில் பெரும்பங்கை வகிக்கின்றன.
:: வன்முறைகள் என்பவை வெளியுலகிலிருந்தே இணையத்துக்கு வருகிறது. சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்?
:: நல்லவற்றை நுகரத் தெரியாதவர்கள் தவறான வழி சென்று மூக்குடைபடுவர். அவர்களுக்கு தரமான ஒரு சஞ்சிகை கிடைத்தாலும் அதன் ஏதோ ஒரு மூலையில இருக்கிற தவறான விடயம் தான் கண்ணில் படும்.
:: தீமைகள் புரிவதற்கும், தவறுகள் செய்வதற்கும் புறச்சூழல்கள் கதவு திறந்துவைத்திருக்கிற போது இணையத்தை மட்டும் குறைகூறி தப்பித்துக்கொள்வது சிறந்ததல்ல.
:: சோம்பேறித்தனம் என்பது தனிமனித பலவீனம் - அது அவர்களின் குறைபாடு.
<b>சீரழிவுகள் தொடர்பான சில கேள்விகள்</b>
எதிரணியினர் முன்வைத்த சில நகைச்சுவையான வாதங்களுக்கு எமதணி முன்வைக்கிற கேள்விகள்:
:: இணையம் உருவாவதற்கு முதல் காதல் என்பது இல்லையா? காமம் என்பது இல்லையா? இணையம் உருவான பின்பு தான் இவையெல்லாம் கண்பிடிக்கப்பட்டனவா? விட்டால், இணையம் ஊடாகத்தான் எய்ட்ஸ் பரவுகிறது என்கிற மிகப்பெரிய உண்மையை போட்டுடைப்பீர்கள் போலுள்ளதே. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:: அரட்டை அறைகள் வருவதற்கு முன் இளையோர் வாழ்வில் குப்பைகள் இல்லையா? ஆக அந்தக் குப்பைகள் தான் இணையத்திலும் கொட்டப்படுகின்றன அல்லவா?
:: வக்கிரங்களை இறக்கி வைக்க வேறு மார்க்கங்கள் இவ்வுலகில் இருக்கவே இல்லையா? ஆக வக்கிரங்களை வைத்திருக்கும் மனிதர்கள் அதை எந்த ஒரு ஊடகம் கிடைத்தாலும் இறக்கி வைப்பார்கள் அல்லவா?
:: துறைசார் வளர்ச்சி என்பது இணையத் தீமையினாலா சாத்தியமாயிற்று?
:: இணையத்தளங்களால் யாராவது மதம் மாறினார்களா? வீட்டுக் கதவை நேரடியாகவே அவர்கள் தட்டுகிறார்களே? இன்னொருவரின் கலாசாரம் பற்றி அறிவது நன்மைதானே? புரிந்துணர்வுகளை வளர்த்துக்கொள்ள அது உதவுகிறதுதானே?
:: இணையம் சீரழிக்கிறது என்கிறார்களே - அதற்கான மாற்றுத்தீர்வை முன்மொழிவார்களா?
<b>சில யோசனைகள்</b>
எதிரணியினர்களின் இணையம் பற்றிய சில முனகல்களுக்கு எமது அணி சில யோசனைகளை முன்மொழிகிறது:
இணைய ஊடகத்தில் பாதுகாப்பு வழிமுறைகள் நிறைய உள்ளன. அவற்றைப் பயன்படுத்துங்கள். பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்.
தொழில்நுட்ப அறிவை விருத்தி செய்யுங்கள். நாள்தோறும் உங்கள் அறிவை புதுப்பித்துக்கொள்ளுங்கள். இயக்கநிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.