தமிழகச் செய்திகள்

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்!

3 months 2 weeks ago

சென்னை: தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் மூத்த அரசியல்வாதியும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத். திமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் மதிமுக, அதிமுக, அமமுக என ஒரு வலம் வந்துவிட்டு தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.

விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னரே, பல்வேறு பேட்டிகளில், “விஜய் அரசியல் கட்சித் தொடங்கினால், என்னை அழைத்தால் அரசியல் ஆலோசனைகள் வழங்குவேன்” என்று அவர் கூறியிருந்தது இந்த வேளையில் நினைவுகூரத்தக்கது.

யார் இந்த நாஞ்சில் சம்பத்? - எந்தக் கூட்டத்தில் பேசினாலும் தனது கம்பீரமான உரையால் பார்வையாளர்களை தன் வசம் இழுப்பதில் கைதேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். கல்லூரிக் காலத்திலேயே தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டவர், அந்தக் காலத்திலேயே கருணாநிதியால் பாராட்டப்பட்டார். இருப்பினும் வைகோ மீதான ஈர்ப்பால் அவர் மதிமுகவைத் தொடங்கியபோது அவர் பின்னால் நின்றார்.

தொடர்ந்து வைகோவுடனும் மனக்கசப்பு வர, அதிமுகவில் ஐக்கியமானார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு தினகரன் அணிக்குச் சென்றவர், அமமுக உதயமானதும் கட்சியின் பெயரில் திராவிடம் இல்லை எனச் சொல்லி தினகரனை விட்டு விலகினார். பின்னர் திராவிடப் பேச்சாளர் என்னும் அடைமொழியோடு திமுக மேடைகளில் பேசினார். ஆனால் திமுக அவரை பெரிதாக அங்கீகரிக்கவில்லை. அதனை அவருமே வெளிப்படையாகப் பல்வேறு இடங்களில் ஆதங்கத்துடன் கூறிவந்தார்.


அரசியல் தவிர பள்ளி - கல்லூரி விழாக்களிலும் தொடர்ந்து பேசிவந்தார் நாஞ்சில் சம்பத். அதனால் இலக்கிய மேடைகளும் அவருக்கு புகழ் வெளிச்சமும், வருமானமும் கொடுத்தன. ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இன்று (டிச.5) தவெகவில் அவர் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், அதிமுகவின் அடையாளங்களில் ஒருவராக இருந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். தற்போது திமுக, அதிமுக, மதிமுக என பல கட்சிகளிலும் அனுபவம் பெற்ற சிறந்த பேச்சாளரான நாஞ்சில் சம்பத்தும் தவெகவில் இணைந்துள்ளார்.

“தவெகவை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பேன்” - இந்நிலையில் இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழக வெற்றிக் கழகத்தில் தம்பி விஜய் முன்னிலையில் என்னை இணைத்துக் கொண்டேன். என்னை பார்த்ததும் “நான் உங்கள் ஃபேன் தெரியுமா?” என்றார், நான் மெய்சிலிர்த்துப் போனேன். தமிழக வெற்றிக் கழகத்தை நாடு முழுக்க கொண்டு சேர்க்கின்ற பணியில் ஈடுபடுவேன். வெற்றி நமதே!” என்று தெரிவித்துள்ளார்.

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்!

திருப்பரங்குன்றம்: `தீபத்தூண் கோவிலை விட பழமையானதா?’ - நீதிபதிகள் கேள்வி

3 months 3 weeks ago

திருப்பரங்குன்றம்: `தீபத்தூண் கோவிலை விட பழமையானதா?’ - நீதிபதிகள் கேள்வி

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்

முருகக் கடவுளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதனை ஒட்டி திருக்கார்த்திகை தினமான நேற்று மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

ஆனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றாமல் வழக்கமான தீபத்தூணில் தீபம் ஏற்றியதால், அங்கு கூடியிருந்த இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இதனால் பெரும் பரபரப்பான, பதட்டமான சூழல் காணப்படுகிறது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்

மனுதாரருக்கு ஆதரவாக சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் சென்று தீபமேற்ற உத்தரவிட்டார் நீதிபதி. அதையும் தமிழ்நாடு காவல்துறை உறுதியாக மறுத்துவிட்டது. 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்தது,

இந்த விவகாரங்களெல்லாம் பேசுபொருளான நிலையில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா கதிரவன் முறையிட்டார்.

இதை ஏற்றுக் கொண்ட நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ``மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன். மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும்.

கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம்

கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம்

பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன, மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவதே சி.ஐ.எஸ்.எஃப்-ன் பணி, அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே. அதைத்தாண்டி மனுதாரருக்கு பாதுகாப்பாக அனுப்பியது ஏற்புடையதல்ல. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது முதலில் முடிவு செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும்." என்றது.

அதைத் தொடர்ந்து, ``தீபத்தூண் கோவிலை விட பழமையானதா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அரசு தரப்பு,``தீபத்தூண் பழமையானதா என்றெல்லாம் தெரியவில்லை. 100 ஆண்டுகளாக அந்த தீபத்தூண் பயன்பாட்டில் இல்லை. 1862-ல் இருந்தே இந்த தூண் பயன்பாட்டில் இல்லை. அதை நீதிபதி சுவாமிநாதன் ஏற்றுக்கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் 100 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோவில் அருகேதான் எந்த சச்சரவுமின்றி தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன்

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன்

100 ஆண்டுகள் வழக்கத்தை ஒரு நொடியில் மாற்ற சொல்லி இருக்கிறார் நீதிபதி. இதை உடனடியாக மாற்ற இயலுமா? ஒரு இடத்தில் ஒரு தீபம் தான் ஏற்ற வேண்டும் பல தீபங்கள் ஏற்ற இயலுமா?. வழக்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை உடனே நடைமுறைப்படுத்த உத்தரவிட என்ன அவசியம் என்பதும் தெரியவில்லை. தர்கா தரப்பில் மேல்முறையீடு செய்ய போதிய கால அவகாசம் வழங்கவில்லை.

30 நாட்கள் மேல்முறையீடு செய்ய அவகாசம் இருக்கையில் விளக்கம் அளிக்கவும் வாய்ப்பு தரப்படவில்லை. நீதிபதி சுவாமிநாதனின் செயல்பாடு நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டு உள்ளது.

அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது. அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். திருப்புரங்குன்றம் தீப விவகாரத்தில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவால் சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். மதப்பிரச்சினை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது." என வாதிடப்பட்டது.

தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது....

https://www.vikatan.com/government-and-politics/governance/the-government-is-arguing-in-the-madurai-high-court-regarding-the-thiruparankundram-issue

Checked
Wed, 03/25/2026 - 20:27
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed