ஊர்ப்புதினம்

த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு!

2 days 9 hours ago

த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 


ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1991ஆம் ஆண்டு இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. அதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்தத் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு தடை நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


தற்போது விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இந்திய ஒன்றிய அரசின் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 


தடை குறித்த அறிவிப்பில், 'விடுதலைப் புலிகள் இன்னும் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இந்திய ஒன்றிய அரசு கருதுகிறது. இலங்கையில் நடைபெற்ற போரில் கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட போதிலும், தனி ஈழம் என்ற கருத்தை அவர்கள் கைவிடவில்லை. பரப்புரை மற்றும் நிதி சேர்க்கை நடவடிக்கைகள் என தனி ஈழத்துக்கான நடவடிக்கைகள் தொடர்ந்து ரகசியமாக நடைபெறுகின்றன. போரில் உயிர் தப்பிய விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகிகள் இலங்கையிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டமைக்க தேவையான முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் மக்கள் மத்தியில் பிரிவினைவாதப் போக்கைத் தொடர்ந்து வளர்த்து வருவதோடு, இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவுத் தளத்தை மேம்படுத்துகின்றன. இது இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்' என்று கூறி தடைக்கான காரணங்களாக இந்திய ஒன்றிய அரசின் மத்திய உள்துறை சுட்டிக்காட்டியுள்ளது. (அ)

த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு! (newuthayan.com)

யாழில் ஐஸ் போதைப்பொருள் ஆய்வுகூடம் சுற்றிவளைப்பு - இருவர் கைது

2 days 9 hours ago
image
 

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (12)  முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்வதற்கு பயன்படும் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் கண்காணிப்பில் உள்ளனர்.

குறித்த வீடானது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் ஆய்வுகூடமாக செயற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வீடானது சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பில் இருந்து இரசாயன பகுப்பாய்வாளர்களை வரவழைத்து பகுப்பாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பிரதான சந்தேக நபர் தப்பியோடியுள்ள நிலையில் அங்கு பணிபுரியும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் ஐஸ் போதைப்பொருள் ஆய்வுகூடம் சுற்றிவளைப்பு - இருவர் கைது | Virakesari.lk

34,000 முன்பள்ளி ஆசிரியர்களில் 6,000 பேர் மட்டுமே டிப்ளோமா பெற்றவர்கள்: சுசில்

2 days 9 hours ago

இலங்கையில் 34,000 முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களில் 6,000 பேர் மட்டுமே டிப்ளோமா பெற்றவர்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்தார்.

இலங்கையில் 18,800 முன்பள்ளிகள் உள்ளதாகவும், பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் டிப்ளோமா பெற்றவர்கள் அல்ல என்பது பாரதூரமான விடயம் எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

SJB பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவின் கேள்விக்கு பதிலளித்த அவர், மொண்டிசோரி மற்றும் முன்பள்ளி என்ற சொற்களை கூட பயன்படுத்துவது தவறானது என்றும் சரியான பதம் ஆரம்ப குழந்தை பருவ அபிவிருத்தி நிலையங்களாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில், குழந்தைகளின் கல்வியின் மிக முக்கியமான கட்டமாக இருப்பதால், குழந்தை பருவ வளர்ச்சிக்கு கல்வியில் முதலிடம் கொடுக்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.

முன்பள்ளிக் கல்வியைப் பெற வேண்டிய குழந்தைகளில் 20 வீதமானோர் கல்வி கற்க வாய்ப்பில்ல்லாமல் இருப்பதாக யுனிசெஃப் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

https://thinakkural.lk/article/301570

யாழில் உரும்பிராய் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

2 days 9 hours ago

Published By: DIGITAL DESK 7

14 MAY, 2024 | 03:28 PM
image
 

 

யாழ்ப்பாணம் உரும்பிராய் மேற்கு இளைஞர்களால், தியாகி பொன். சிவகுமாரனின் சிலை முன்பாக முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரத்தின் மூன்றாவது நாளான இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

IMG_20240514_123738.jpgIMG_20240514_124156.jpg

IMG_20240514_123407.jpg

இதில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் பேரியக்க ஒருங்கிணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல்வருமான வேலன் சுவாமிகள் மற்றும் உரும்பிராய்  மேற்கு இளைஞர்கள் கிராம மக்கள் பயணிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

யாழில் உரும்பிராய் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! | Virakesari.lk

தலைவர் வீட்டின் முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

(இனிய பாரதி)

 

541588265.jpg

 

 

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் இன்று காலை 11 மணியளவில்  தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது வீட்டின் முன்றலில் அமைந்துள்ள வல்வெட்டித்துறை ஆலடிச்சந்தியில் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.


இதன் பொழுது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து  இரு மாவீரர்களின் தந்தையான தங்கேஸ்வரனால் பொதுச்சுடரேற்றி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஈகச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.  தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும்  விநியோகிக்கப்பட்டது.  இதன் பொழுது முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றை உள்ளடக்கிய துண்டறிக்கையும் வழங்கி வைக்கப்பட்டது.

தலைவர் வீட்டின் முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி (newuthayan.com)

மட்டக்களப்பில் பொலிஸாரின் தடைகளின் மத்தியில் மூன்றாவது நாளாகவும் தொடரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள்

2 days 9 hours ago

Published By: DIGITAL DESK 3

14 MAY, 2024 | 04:02 PM
image
 

இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் பொலிஸாரின் பல்வேறு தடைகளையும் அச்சுறுத்தலையும் மீறி நடைபெற்றது.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து மூன்றாவது நாளாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு மட்டக்களப்பு நகரில் விமான நிலைய வீதியில் உள்ள ஸ்ரீபரிபூர்ண விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,ஜேசுசவை துறவி அருட்தந்தை ஜோசப்மேரி, சிவில் சமூக செயற்பாட்டாளர் வி.லவகுமார்,தமிழரசுக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் திருமதி ஆர்.ஜெயபிரகாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆலயத்திற்கு முன்பாக கஞ்சி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கு பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் பெருமளவு புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டிருந்தனர்.

அங்கு வந்த மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸார் அங்கு கஞ்சி வழங்கும் செயற்பாடுகளை செய்யவேண்டாம் என்று அங்கிருந்து அனைத்தையும் எடுத்துக்கொண்டு செல்லுமாறும் பணித்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து தமது செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் சுகாதார நடைமுறையினை பின்பற்றவும் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைகள் இன்று கஞ்சி செயற்பாடுகளை முன்னெடுக்கமுடியாது என மீண்டும் தடைகளை ஏற்படுத்துவதற்கு பொலிஸார் முயற்சித்த நிலையில் அங்கு பொதுச்சுகாதார பரிசோதர் ஒருவரையும் அழைத்துவந்து நிகழ்வினை தடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் அங்குவந்த பொதுச்சுகாதார பரிசோதகர் சுகாதார நடைமுறைகளைப்பேணி செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு தெரிவித்ததை தொடர்ந்து சுகாதார நடைமுறைகளை பேணியவாறு கஞ்சி காய்ச்சும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது கஞ்சியை பரிமாறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது விமான நிலைய வீதியின் இரு மருங்கிலும் போக்குவரத்து பொலிஸார் நிறுத்தப்பட்டு வீதியில் செல்வோருக்கு கஞ்சியை பரிமாறும் செயற்பாடுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கஞ்சியை பருக வாகனங்களை நிறுத்தியவர்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்திருந்த நிலையிலும் பெருமளவான மக்கள் கஞ்சியை வாங்கி பருகும் நிலைமையை காணமுடிந்தது.

A1EC916E-3894-4ADB-B734-B3975F3CD4E6.jpe

16588485-3B67-474B-8064-7D7CABB7134E.jpe

9E4C77A7-6B4C-4941-84A8-62E80C1A7BF7.jpe

21BACBD2-9ED5-4883-997F-B4F2D8F3DAC6.jpe

6F8E8B6F-200C-401B-81E9-51420CFE84E7.jpe

மட்டக்களப்பில் பொலிஸாரின் தடைகளின் மத்தியில் மூன்றாவது நாளாகவும் தொடரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் | Virakesari.lk

நினைவேந்தும் உரிமையை நிராகரிக்கவே முடியாது சம்பந்தன் எடுத்துரைப்பு; மூதூர் கைதுகளுக்கு கடும் கண்டனம்

2 days 9 hours ago
image
 

ஆர்.ராம்

தமிழ் மக்கள் தங்களது உயிர்நீத்த உறவுகளை நினைவேந்துவதற்கான முழுமையான உரிமை உடையவர்கள். அது அவர்களின் அடிப்படை உரிமையாகும். அதனை நிராகரிக்கவே முடியாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை மூதூர் சேனையூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை விநியோகித்தவர்கள் இரவு நேரத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கல்முனையிலும் கஞ்சி விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கருத்து வெளியிடும்போது சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் வைகாசி மாதம் உணர்வுப் பூர்வமானது. அவர்கள் தமது உறவுகளை நினைவு கூருவதற்கான புனிதமான மாதமாகும்.

அவர்கள் போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவதற்கு முழுமையான உரித்துடையவர்கள். அவர்களின் அந்த அடிப்படை உரித்தினை யாரும் நிராகரிக்கவே முடியாது. அவ்வாறு நிராகரிப்பதற்கு இடமளிக்க முடியாது.

அவ்வாறு இடையூறுகளை ஏற்படுத்துவம், நிராகரிப்பதும் அடிப்படைச் சட்டங்களை மீறுவதாகும். அதேநேரம், திருகோணமலை மூதூரில் தமது உறவுகளை நினைவு கூர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கல்முனையில் நினைவு கூரல் தடுக்கப்பட்டுள்ளது.

இது அடிப்படை மனித உரிமை மீறலாகும். இவ்விதமான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றேன். அத்துடன், கைது செய்யப்பட்டவர்கள் தாமதமின்றி விடுவிக்கப்படுவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பகிரங்கமான கோரிக்கை விடுகின்றேன்.

எமது மக்களின் உரிமைகளைக் கடந்த ஏழு தசாப்தமாக பறிந்து வருகின்ற நிலையில் தான் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரங்களைப் பகிருமாறு கோரிவருகின்றோம் என்றார்.

நினைவேந்தும் உரிமையை நிராகரிக்கவே முடியாது சம்பந்தன் எடுத்துரைப்பு; மூதூர் கைதுகளுக்கு கடும் கண்டனம் | Virakesari.lk

பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பொறுப்புக்கூற வேண்டும் - சஜித்

2 days 9 hours ago

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இஸ்ரேலின் கொலைகார அரச பயங்கரவாதம் பலஸ்தீன அப்பாவி மக்கள் மீது மேற்கொண்டுவரும் இனப்படுகொலையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த இனப்படுகொலைக்கு இஸ்ரேல் பிரதமர் நெததன்யாஹு பொறுப்புக்கூறவேண்டும். 

அதேநேரம் பலஸ்தீன்,  இஸ்ரேல் இரண்டு நாட்டு தீர்வுக்கு வரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற பலஸ்தீனின் தற்பாேதைய நிலை தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

கொலைகார அரசாக இஸ்ரேல் அரசு பலஸ்தீன மக்களின் வாழ்வை முற்றாக அழித்து, அவர்களின் தாயகத்தை அழித்து, அரச பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தி பலஸ்தீன மக்கள் மீது நடத்தி வரும் மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு எதிராக இலங்கையர்களாகிய நாம் உலக மக்களோடு  முன் நிற்போம் 

உடனடியாக போர் நிறுத்த்திற்குச் சென்று பட்டினியால் வாடும் பலஸ்தீன மக்களின் வாழும் உரிமை எல்லாவற்றுக்கும் முதல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று முழு உலகுமே கோரிக்கை விடுக்கிறது. இஸ்ரேல் அரசாங்கம் மருத்துவமனைகளுக்கு குண்டுத்தாக்குதல் நடத்துகிறது. பாடசாலைக்கு குண்டுத் தாக்குதல் நடத்துகிறது. சிவில் குடிமக்களை அப்பட்டமாக கொலை செய்து வருகிறது. இந்த கொலைகார இந்த அரச பயங்கரவாதத்தை கண்டிக்கின்றோம்.

இஸ்ரேலும் பலஸ்தீனும் சமாதானமாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என இதற்கு முன்னர் நாம் பேசும் போதெல்லாம் கூறினோம்.இஸ்ரேல் அரசாங்கம் தொடர்ச்சியாக பலமுறை பேச்சுவார்த்தைகளை நிராகரித்து, பலஸ்தீன தாயகத்தை அழிக்கும் அரச பயங்கரவாதத்தை கண்டிக்கின்றேன், இந்த கொலைகார பயங்கரவாதத்தை கைவிடுமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் ஹிட்லர் என்ற கொலைகாரன் அன்று யூதர்களை படுகொலை செய்ததுபோன்று இன்று இஸ்ரேலை ஆட்சி செய்யும் படுகொலை அரசாங்கம் பலஸ்தீன அப்பாவி மக்களை படுகொலை செய்துவருவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த  அரச பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறோம். அதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் நாங்கள் நிபந்தனையின்றி வழங்கவேண்டு்ம்.

நெதன்யாகு அரசாங்கம் தொடர்ச்சியாக இடைவிடாது மேற்கொண்டு வரும் மிலேச்சத்தனமான, கீழ் தர செயலை, பயங்கரவாத நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமையை மாத்திரமல்ல, அவர்களது நாட்டுக்குள் வாழும் உரிமை அவர்களுக்குள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு, பலஸ்தீன், இஸ்ரேல் இரண்டு நாடு தீர்வாகும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.

பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பொறுப்புக்கூற வேண்டும் - சஜித் | Virakesari.lk

திருகோணமலையில் மாணவி உயிர்மாய்ப்பு

2 days 10 hours ago

Published By: DIGITAL DESK 3

14 MAY, 2024 | 04:44 PM
image
 

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவாநகர் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் கோணேஸ் துசானி (வயது 17) என்ற மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை தேவாநகர் பகுதியில் வசித்துவரும் குறித்த சிறுமிக்கும் தாய்க்கும் இடையே இன்றைய தினம் காலை வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதன் பின்னர் தாய் குறித்த சிறுமியின் அக்காவை பாடசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரியவருகின்றது. 

இதன் பின்னர் காலை 7.00 மணியளவில் குறித்த சிறுமி உயிரை மாய்க்க முயற்சித்ததாகவும் அயலவர்கள் சிறுமியைக் காப்பாற்றி திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், இன்றையதினம் (14) கிண்ணியாவைச் சேர்ந்த 18 வயதான சிறுமி ஒருவரும் உயிர்மாய்த்த சம்பவமும், கடந்த 12ஆம் திகதி மூதூர் - பாரதிபுரத்தில் 32 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்த சம்பவமும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக உயிரை மாய்த்துக்கொள்பவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இதனை தடுக்க அல்லது கட்டுப்படுத்த சமூக அமைப்புக்கள் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

https://www.virakesari.lk/article/183540

சாதாரண தர பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தர கற்கையை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்

2 days 10 hours ago

Published By: DIGITAL DESK 3   14 MAY, 2024 | 04:34 PM

image

(எம்.மனோசித்ரா)

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை முடிந்தவுடன் பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை முடிந்தவுடன் அதன் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு  பரீட்சைகள் திணைக்களத்துக்கு குறைந்தது மூன்று மாதங்கள் தேவையாகும். இக்காலப்பகுதியில்  மாணவர்கள் பாடசாலைக் கல்வியிலிருந்து விலகியிருப்பதால், அவர்கள் கல்வி பொதுத்தராதர  உயர்தரத்தை பயில்வதற்கான போக்குகள் குறைவடைவதால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள்  உருவாவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

இவ்விடயத்தைக் கருத்தில் கொண்டு மாணவர்களுடைய நேரத்தை பயனுள்ளவாறு முகாமைத்துவப்படுத்துவதற்கும் க.பொ.த உயர்தர  பாடவிதானங்களை  உள்ளடக்குவதற்காக  ஆசிரியர்களுக்கு போதியளவு நேரத்தை ஒதுக்கி வழங்குவதற்கு இயலுமாகும் வகையில்  2024ஆம் ஆண்டில் சாதாரண பரிட்சை பூர்த்தியானதுடன் பாடசாலைகளில் உயர்கல்வி கற்கை நடவடிக்கைகளை ஆரம்பிப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய 2023ஆம் ஆண்டுக்கான  க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்காக, அப்பரீட்சை முடிந்தவுடன் க.பொ.த உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/183537

அதிகரித்து வரும் இன்ஃப்ளூயன்ஸா : சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!

2 days 10 hours ago

இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகள் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வரும் நிலையில், தலைவலி மற்றும் சோர்வு. காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல், தசை அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில்,
இது குழந்தைகள் மத்தியில் அதிகமாகக் காணப்படுவதாகவும், எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

“வழக்கமாக நவம்பர் முதல் பெப்ரவரி வரை மற்றும் ஏப்ரல் முதல் ஜூலை வரை காய்ச்சலின் இரண்டு உச்சநிலைகள் உள்ளன,” என்று அவர் கூறினார்.

“இந்த நேரத்தில், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியிலும் தொற்றுகள் கணிசமாக உயர்ந்துள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நோயாளர் தொகை இரட்டிப்பாகியுள்ளன. நோய் அறிகுறிகள் தொடர்ந்தால், உடனடி மருத்துவ உதவியை நாடுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

கர்ப்பிணித் தாய்மார்கள், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு, ராகம, களுபோவில, நீர்கொழும்பு வைத்தியசாலைகள், லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலை மற்றும் தொற்று நோய் வைத்தியசாலை உட்பட 20 வைத்தியசாலைகளில் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் கண்காணிப்பை அதிகரிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

https://thinakkural.lk/article/301578

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

2 days 13 hours ago

நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய கல்வி அமைச்சும், சமூக வலுவூட்டல் அமைச்சும் இணைந்து குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளன.

இதேவேளை இலங்கை வரலாற்றில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவது குறித்த யோசனை முன்வைக்கப்படுகின்றமை இதுவே முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/301557

யாழ்ப்பாணம்  சென்ற  உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர்

2 days 17 hours ago

யாழ்ப்பாணம்  சென்ற  உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர்
adminMay 14, 2024
3-1.jpg

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் ஜெரால்ட் ரெபெல்லி (Gerald Rebelli) மூன்று நாள் உத்தியோகபூர்வ  பயணமாக யாழ் மாவட்டத்திற்கு   சென்றுள்ளார்.  இந்த பயணத்தின் போது யாழ் மாவட்ட பதில் செயலர்  மருதலிங்கம் பிரதீபனை மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.

இச் சந்திப்பில் “Food for Assets ” செயற்றிட்டத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் மற்றும் இச்செயற்றிட்டம் குறித்து எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

குறித்த குழுவில் உலக உணவு திட்ட அரசாங்க பங்குடமை அதிகாரி முஸ்தபா நிஹ்மத், உலக உணவுத்திட்ட பொறியியலாளர் W.A.சந்திரதிலக, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வ.தர்சினி ஆகியோர் கலந்துகொண்டனர்.

3-2-800x533.jpg3-3-800x533.jpg
 

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு: சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க முடியாது - அரச அதிபர்

2 days 17 hours ago

Published By: VISHNU

14 MAY, 2024 | 02:42 AM
image
 

மன்னார் மாவட்டத்தில் அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் டைட்டானியம் சான் லிமிடெட் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ள கனிய மணல் அகழ்வு தொடர்பாக பொது மக்களின் விருப்பத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு அவசர கூட்டம்  திங்கட்கிழமை (13) மதியம் 2 மணி முதல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

DSC_0573.JPG

அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் டைட்டானியம் சான் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் சாலிய உள்ளடங்களாக குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

DSC_0569.JPG

சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான மதிப்பீட்டை பெற்றுக் கொள்ளும் வகையில்,குறித்த நிறுவனத்தினர் தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு செல்லும் போது மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தி வந்தனர்.

DSC_0571.JPG

இந்த நிலையில் ஜனாதிபதி  செயலகத்தின் வேண்டுகோளுக்கு அமைய,பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் மன்னார் பிரஜைகள் குழு,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,மீனவ அமைப்புகள்,சமூக மட்ட அமைப்புகள் திணைக்கள தலைவர்கள், கலந்து கொண்டிருந்தார்கள்.

இதன் போது அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் டைட்டானியம் சான் லிமிட்டெட் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ள கனிய மணல் அகழ்வு தொடர்பாக திட்டம் தொடர்பாக மக்களுக்கு முன் வைக்கப்பட்டது.இதன் போது மன்னாரிற்கு குறித்த திட்டத்தினால் பாரிய பாதிப்புகள் உள்ளமை குறித்து மக்களாலும்,பொது அமைப்புகளின் பிரதி நிதிகளினாலும் சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா குறித்த திட்டம் மன்னாரில் அமுல் படுத்தும் பட்சத்தில் மன்னாரில் பாரியைப் பாதிப்புகள் ஏற்படும் என்ற விடையத்தைச் சுட்டிக்காட்டினார்.

அவரது கருத்தை வருகை தந்த பொது அமைப்புக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள்,பிரஜைகள் குழுவினர் வரவேற்றனர்.

இதேவேளை மன்னார் தீவில் குறித்த திட்டத்தை அமுல் படுத்துவதை மக்கள் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் மன்னார் தீவைத் தவிர்த்து வேறு நிலப்பரப்பில் குறித்த திட்டம் தொடர்பான ஆய்வை மேற்கொள்ள அனுமதி வழங்குவது என்றும் மன்னார் தீவில் கனிய மணல் அகழ்வுக்கு ஆதரவு வழங்காத நிலையில்   சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான மதிப்பீட்டை  மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க முடியாது எனப் பொதுமக்கள் உறுதிய உள்ள காரணத்தினால் குறித்த கூட்டம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டது.

மன்னார் தீவில் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாததன் காரணத்தைச் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிக்கை மூலம் தெரியப்படுத்த உள்ளதாக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மாக்கஸ் அடிகளார்,பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் உட்பட சமூக மட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

https://www.virakesari.lk/article/183462

கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விசேட செயலமர்வு

3 days 7 hours ago
13 MAY, 2024 | 08:08 PM
image
 

மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் அவற்றை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், முன்மொழிவுகள் பற்றிய தகவல்களை கலந்துரையாடுவதற்கான விசேட செயலமர்வு இன்று (13) கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்றது.

இந்த செயலமர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளுக்கான முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் பணி மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைமையில் மாத்தறை மாவட்டத்தில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவதாக கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.

இதன்போது நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான பொறிமுறையை நிறுவுவதற்குத் தேவையான தகவல்களும் முன்மொழிவுகளும் சேகரிக்கப்பட்டன.

இந்த கலந்துரையாடலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி மதுர விதானகே, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் ரசாஞ்சலி பத்திரகே, தேசிய ஐனநாயக நிறுவனத்தின் ஆலோசகர் சியாமா சல்காது, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் (காணி) இ. நளாயினி, உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா, யாழ் மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ், வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன், பிரதேச செயலாளர்கள், துறை சார்ந்த திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், மாற்றுவலுவுள்ளோர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/183439

தமிழ் இன அழிப்பையும் தமிழர் வரலாற்றையும் மூடி மறைக்க முயலும் அரசாங்கம்: அம்பிகா சற்குணநாதன் குற்றச்சாட்டு

3 days 11 hours ago

தமிழருக்கு எதிரான இன அழிப்பையும், மறைக்கப்பட்ட தமிழரின் வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையிலாக ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் இவ்வருடம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியவர்களை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவதை தடுத்து நிறுத்தும் நோக்குடன் நீதிமன்ற தடை உத்தரவையும் பெற்றுள்ளனர்.

எனவே நோய் பரவும் ஆபத்து என தெரிவித்து முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தினை தடுத்த இலங்கை பொலிஸார் இதே காரணத்திற்காக வெசாக் தன்சல்களை தடை செய்யுமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுப்பார்களா என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுமக்களின் உயிரிழப்பிற்கு அரசாங்கம் காரணமில்லை என காண்பித்து வரலாற்றை அழிப்பதும் மறைப்பதுமே நினைவேந்தல்களை தடுப்பதன் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஒன்றுகூடுவதன் மூலமும் உணவை பரிமாறிக்கொள்வதன் மூலமும் நோய் பரவும் என்பதாலேயே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், ஏன் மே தினக்கூட்டங்களை தடை செய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களை கேட்டுக்கொள்ளவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் வெசாக் தன்சல்களையும் தேர்தல் பிரச்சார பேரணிகளையும் தடைசெய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களிடம் வேண்டுகோள் விடுப்பார்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்கட்சிகள் இதற்கு எதிராக குரல்கொடுப்பார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

https://thinakkural.lk/article/301493

வடக்கு ஆசிரியர் சேவையில் தொல்லியல் பட்டதாரிகள் புறக்கணிப்பு

3 days 18 hours ago
12 MAY, 2024 | 06:12 PM
image

ஆசிரியர் சேவைக்குள் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்பின்போது வடக்கு மாகாணத்தில் மாத்திரம் தொல்லியல் துறை பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கவலை தெரிவித்துள்ளதோடு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் படித்து பட்டம் பெற்றவர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பட்டதாரிகள் மேலும் தெரிவிக்கையில்,

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இந்த விண்ணப்ப கோரலின்போது வடக்கில் தொல்லியல் பட்டதாரிகள் தவிர்க்கப்பட்டே விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

இருப்பினும், தொல்லியல் பட்டதாரிகளை வரலாறு பாடத்துக்கு ஆட்சேர்ப்பு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் சில தொல்லியல் பட்டதாரிகளும் விண்ணப்பித்திருந்தனர். அதற்கமைவாக 30.03.2024 நடந்த ஆட்சேர்ப்பு பரீட்சையில் அவர்கள் சித்தியடைந்து 24.04.2024 நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 09.05.2024 அன்று வெளியான நேர்முகத் தேர்வு முடிவுகளில் தொல்லியல் பட்டதாரிகள்  நீக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது. 

கடந்த 2018ஆம் ஆண்டு பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கும் திட்டத்தின் போது தொல்லியல் பட்டதாரிகளும் உள்வாங்கப்பட்டு, அவர்கள் தெரிவு செய்யப்பட்டு, தற்போது வடக்கில் உள்ள பல பாடசாலைகளில் வரலாறு பாட ஆசிரியர்களாக உள்ளனர் என கூறியுள்ளனர். 

மேலும் அவர்கள், இவ்வருடமே தொல்லியல் பட்டதாரிகள் வடக்கில் மாத்திரம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் ஏனைய மாகாணங்களில் தொல்லியல் துறை பட்டதாரிகள் ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

எனவே, இது தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவனுடன் தொடர்புகொண்டு வினவியபோது வடக்கு மாகாணத்தில் பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கும் வர்த்தமானி  அறிவித்தலில் தொல்லியல் துறை பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்த அவரிடம் கடந்த 2018ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டது என்றும் ஏன் இவ்வருடம் உள்வாங்கப்படவில்லை என வினவியபோது  இது தொடர்பில் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பட்டதாரிகள் குறிப்பிடுகையில், 

வடக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.திருவாகரன் அவர்களை தொடர்புகொண்டு வினவிய போது வடக்கு மாகாணத்தில் தொல்லியல் துறையில் வெற்றிடங்கள் இன்மையால் ஆட்சேர்ப்பு செய்யவில்லை என்றும் வரலாறு பாட ஆசிரியர் பதவிக்கு தொல்லியல் துறை பட்டதாரிகள் உள்வாங்கப்படுவதாக இருப்பின் அவர்கள் தங்களின் பாடத்தில் மூன்றில் ஒன்று என்ற அடிப்படையில் சம்பந்தப்பட்ட பாடங்களை கற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் பட்டதாரிகளாக வெளிவரும் பட்டதாரிகளை மத்திய அரசின் கீழ் இயங்கும் தொல்லியல் திணைக்களம், அருங்காட்சியகம் போன்றவற்றுக்கு உள்வாங்கப்படுவதில்லை. இப்போது ஆசிரியர் சேவைக்குள்ளும் உள்வாங்காது தவிர்க்கப்பட்டிருப்பதனால் எங்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது என்று பட்டதாரிகள் கவலையோடு கூறுகின்றனர்.  

https://www.virakesari.lk/article/183354

முள்ளிவாய்க்கால் கஞ்சி : திருகோணமலையில் நால்வர் கைது

3 days 18 hours ago
13 MAY, 2024 | 09:50 AM
image

(துரைநாயகம் சஞ்சீவன்)

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவி ஒருவருமாக நால்வர் சம்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது சம்பவம் நேற்றைய தினம் (12) ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு முப்பது மணிக்கு பின்னர் இடம்பெற்றுள்ளது. 

இச்சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவி உட்பட 3 பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டு சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பின்வரும் நபர்களே கைது செய்யப்பட்டு இன்றைய தினம் (13) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரியவருகின்றது. சமூக செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா (வயது 40),  பல்கலைக்கழக மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22), சமூக செயற்பாட்டாளர் செல்வவினோத்குமார் சுஜானி (வயது 40), தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் முன்னாள் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் (வயது 43) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையின் போது பல்கலைக்கழக மாணவியின் தாயாரான கமலேஸ்வரன் விஜிதா என்பவரை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மகளான தேமிலா தனது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதாகவும் அதனை தடுக்க முயற்சித்த பெண் பொலிசாருக்கு கத்தி வெட்டி காயம் ஏற்பட்டதால் அவர் தற்போது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் இதனால் பல்கலைக்கழக மாணவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக நேற்றைய தினம் (12) ஞாயிற்றுக்கிழமை சேனையூர் பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தபோது சம்பூர் பொலிசாரினால் நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து குறித்த நடவடிக்கையை நிறுத்துமாறு கூறப்பட்டிருந்த நிலையில் அதில் ஈடுபட்டிருந்தவர்கள் தடை உத்தரவை வாங்காமல் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுத்ததாகவும், இந்நிலையிலேயே குறித்த கைது சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

Screenshot_20240513_085759_WhatsAppBusin

Screenshot_20240513_085752_WhatsAppBusin

Screenshot_20240513_085727_WhatsAppBusin

Screenshot_20240513_085716_WhatsAppBusin

Screenshot_20240513_085712_WhatsAppBusin

WhatsApp_Image_2024-05-13_at_07.50.09__1

https://www.virakesari.lk/article/183370

தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம்

4 days ago

தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம்.
திகதி: 12 May, 2024
breaking

12.05.2024

 

 

தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம்.

 

அன்பார்ந்த தமிழீழ மக்களே

                             

தமிழீழத்தில் சிறிலங்கா அரசு நடாத்திய தமிழின அழிப்புப்போரில், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரைநிகழ்த்தப்பட்ட பேரவலத்தில் படுகொலை செய்யப்பட்டமக்களை நினைவேந்திடும்,தமிழின அழிப்பு நினைவுநாள்- மே18 இன் பதினைந்தாம் ஆண்டு நிறைவில், வையகம்முழுவதும் பரந்துவாழும் தமிழர்கள் உணர்வெழுச்சியோடுநினைவேந்திட தயாராகும் வலிநிறைந்த காலத்தில் நாம்நின்று கொண்டிருக்கிறோம். 

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்அவர்களின் சிந்தனையில்> கட்டியெழுப்பப்பட்ட தமிழீழவிடுதலைக்கான மாபெரும் விடுதலைப்போராட்டமாகஎமது போராட்டம் விளங்குகின்றது. பல்லாயிரக்கணக்கான  மாவீரர்களையும் பலஇலட்சக்கணக்கான மக்களையும் ஆகுதியாக்கிவளர்த்தெடுத்த, தியாக நெருப்பு இன்னும் சுடர்விட்டுக்கனன்று தேசவிடுதலையை நோக்கிநகர்ந்துகொண்டிருக்கிறது. 

 

சிங்களப் பேரினவாத அரசிற்குப்பொருளாதார, இராணுவ, தொழில்நுட்ப உதவிகளைவழங்கியதன் காரணமாக, 2009 மே 18 இல் தமிழீழநடைமுறை அரசின் தேசிய இராணுவம் ஒரு தற்காலிகப்போரியல் பின்னடைவைச் சந்தித்தது. பல நாடுகளின்ஒத்துழைப்போடு நடாத்தப்பட்ட ஒரு பெருஞ்சமரின்  பின்னடைவை, ஒரு பாரிய வெற்றியாகச் சிங்கள அரசுஇறுமாப்புடன் கொண்டாடியது. ஆனால், தமிழினத்தின்அசைவியக்கமும் பலமும் தேசியத்தலைவர் மேதகுவே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக் கோட்பாடுதான்  என்பதை, சிறிலங்காவின் பேரினவாத அரசும் அதன்அடிவருடிகளும் கணிக்கத் தவறிவிட்டனர். 

 

உலகின் அசைவியக்கதில் சுயமாக உருவாகிய எதனையும்எவரும் அழித்ததாக வரலாறுகள் கிடையாது. ஒருஇனத்தின் விடுதலைக்காக ஆயிரம் ஆண்டுகள்தன்னுள்ளே அடக்கி வைத்திருந்தபேராண்மையை, தமிழன்னை ஓரிடத்தில் இறக்கினாள். தமிழ்த்தாயின் ஆற்றல்கள் அத்தனையையும் தன்னுள்ளேஉள்வாங்கி, தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டதமிழினத்தின் வழிகாட்டியே தமிழீழத் தேசியத்தலைவர்மேதகு வே.பிரபாகரன் அவர்கள். ஆகவே, அவர்இயல்பாகவே உருவாகிய தலைவர், உருவாக்கப்பட்டவர்அல்ல. தமிழீழக் கோட்பாட்டின் சிந்தனைச் சிற்பியும்அவர்தான். இந்த ஒப்புவமையற்ற தமிழீழ விடுதலைச்சிந்தனையை அழிக்கவேண்டுமாயின், தேசியத்தலைவர்மேதகு வே.பிரபாகரன் அவர்களை வீரச்சாவு எனஅறிவித்து,விளக்கேற்றி, தமிழீழக் கோட்பாட்டிற்குச்சாவுமணி அடிக்க வேண்டும்.  இவ்வறிவிப்பின்ஊடாக,தமிழீழ விடுதலையை நோக்கித் தமிழர்களைவழிநடாத்தும் தன்னிகரில்லாத் தலைமையை, தமிழினம்இழந்து விட்டது என தமிழ்மக்களின் ஆழ்மனங்களில்பேரிடியாக இறக்கி, அவர்களின் உளவுரணைச்சிதைத்தழிக்க வேண்டுமென்பதே எதிரிகளின் திட்டமாகும். 

இவையெல்லாம் சரிவரநடந்தேறினால், தேசியத்தலைவரின்சிந்தனைக்கேற்ப, மாவீரர்களின் உயிர்விதைகளால்அத்திவாரமிட்டு, மக்களின் அர்ப்பணிப்புக்களால்உறுதியாகக் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழவிடுதலைப்போராட்டம், தன்னைத்தானே அழித்துவிடும்என எதிரிகள் கனவுகாண்கின்றனர். இதுதான்> எமதுஎதிரியான சிங்களப் பேரினவாதத்தின் தெளிவானநிகழ்ச்சிநிரலாகும். 

 

தமிழீழக் கோட்பாட்டை அழிக்கவல்ல, நுணுக்கமானஇப்புலனாய்வுப் போரிற்கு இந்திய ஒன்றிய வல்லாண்மைவாதமும் தென்கிழக்காசியாவைத் தங்களுடையபூகோள, வர்த்தக நலன்களிற்காகப் பயன்படுத்தத்துடிக்கும் உலக வல்லாதிக்க நாடுகளின் ஏகாதிபத்தியவாதமும் இணைந்து ஒத்துழைப்பு வழங்குகிறது.

 

இது இவ்வாறிருக்க, தமிழீழ விடுதலைப்போராட்டத்தின்இயங்குவிசையையும் தளத்தையும் செல்நெறியையும்மடைமாற்றம் செய்வதற்காக, தேசியத்தலைவரின் குடும்பஅங்கத்தவர்கள் சார்ந்தும்; புதல்வி துவாரகா,அரசியல்தலைமைத்துவத்தை ஏற்றுச் சனநாயக ரீதியில்போராட்டத்தைக் கொண்டு நடாத்தப் போகிறார் எனவும்சூழ்ச்சிகரமான கருத்துருவாக்கத்துடன் சிலநடவடிக்கைகள்  களமிறக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கைகள் ஊடாகப் பலரிடம் நிதிதிரட்டப்பட்டதாகவும் அறியமுடிகிறது. இந்தக்குழுவின்அரசியல் கட்டுக்கதைகளைமுத்திரையிடுவதற்காக, உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (WTCC) என்னும் புலம்பெயர் தேசத்தில் செயற்பாடற்றகாகித நடவடிக்கை அமைப்பொன்று,மக்கள் மத்தியில்குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில்,மட்டுப்படுத்தப்பட்டசமூக ஊடக வெளிப்பாடுகளையும் செய்துவருகிறது. தேசியத்தலைவரின் விடுதலைப்போராட்டப்பாரம்பரியங்களையும் கட்டுக்கோப்புகளையும்சிதைத்து,தமிழீழ விடுதலைக்கோட்பாட்டைஅழித்து, தேசியத்தலைவரின் பெருமதிப்பைஇல்லாதொழிக்கவே இவர்கள் முயற்சித்துவருகின்றார்கள்.

 

அன்பார்ந்த மக்களே

 

ஒருபுறம், தமிழீழத் தேசியத்தலைவரின் புதல்வியின்வருகை என்னும் தமிழீழவிடுதலைப் போராட்டமரபுகளைத்தாண்டிய தமிழீழக் கோட்பாட்டுச் சிதைப்புநடவடிக்கை,மறுபுறம் தமிழீழத்தின் வாழும்சித்தாந்தமாகிய தமிழீழத் தேசியத்தலைவர் மேதகுவே.பிரபாகரன் அவர்களை வீரச்சாவு என்னும்சொல்லாடலினுள் அடக்கி,விளக்கேற்றுதல் என்னும்நடவடிக்கை. இவ்விரண்டு நடவடிக்கைகளும் தமிழீழக்கோட்பாடு என்னும் தேசியத்தலைவரின்  சிந்தனைமூலோபாயத்தை அழிப்பதற்காக, எதிரிகளினால்திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில்தயாரிக்கப்பட்டவையாகும். இந்நடவடிக்கைகள்,தமிழீழவிடுதலைப்போராட்டத்தில் ஏற்படுத்தப் போகும்பின்னடைவுகளைவிளங்கிக்கொள்ளாமல்,உணர்வெழுச்சியினால்உந்தப்பட்டு சில தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்கள்மடைமாற்றப்பட்டுள்ளமை எமக்குக் கவலையளிக்கிறது. ஆனால், தேசியத்தலைவரின் சிந்தனையானதுஇதிலிருந்து அவர்களை மீட்கும் எனத் திடமாகநம்புகிறோம். 

 

பேரன்புமிக்க எமது மக்களே !

 

காலத்திற்குக் காலம் எதிரிகளால் திட்டமிட்டுஉருவாக்கப்படும் பொய்ப்பரப்புரைகளை நாம்கண்டறிந்து, முறியடித்து வருகிறோம். எனவே இவ்வாறானஉண்மைக்குப் புறப்பான கதையாடல்களைப்புறந்தள்ளி,இச் சூழ்ச்சிகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல்விழிப்புடன் இருக்குமாறு அன்புரிமையுடன்வேண்டிக்கொள்கின்றோம்.

 

காலநதியில் கரைந்து போகாத எமது விடுதலைப்பயணங்கள்,தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்என்னும் பேராளுமையின் சிந்தனையின்வழிகாட்டலில், தமிழீழ விடுதலையை  நோக்கித்தொடர்ந்தும் பயணிக்கும். அது,எந்நிலையிலும் எதிரிகளின்சதிவலைப்பின்னல்களில் அகப்படமாட்டாது. எனவே, தமிழினத்தை அழிப்பதற்கான எதிரிகளின்சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுக்காமல், மாவீரர்கள்காட்டிய வழித்தடத்தில், தமிழீழத் தேசியத்தலைவரின்ஒளிரும் சிந்தனைப் பாதையில் உறுதியுடன்வழிநடந்து, தமிழீழ விடுதலை நோக்கித் தொடர்ந்தும்போராடுவோமென உறுதியெடுத்துக் கொள்வோம்.

 

``புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

 

அனைத்துலகத் தொடர்பகம்.

தமிழீழ விடுதலைப் புலிகள்.

 

 

XRxBQZMVFo49TBQwNwrj.jpg

 

hxqgzfwSwWQmOZ35DUbt.jpg

https://www.thaarakam.com/news/1e76217f-f8c4-4ac6-8d5b-a3ff75860a06

ராஜபக்ஷர்களுக்காக பாராளுமன்றத்தை கலைப்பதா? நாட்டுக்காக கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்வதா? ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும் - சம்பிக்க

4 days 5 hours ago
12 MAY, 2024 | 03:38 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ராஜபக்ஷர்களுக்காக பாராளுமன்றத்தை கலைப்பதா அல்லது நாட்டுக்காக கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதா என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும். நாட்டில் மீண்டும் ஒரு அரசியல் நெருக்கடியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தோற்றுவிக்கமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மஹரகம பகுதியில் நேற்று சனிக்கிழமை (11) மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடற்ற வகையில் நிறைவடைந்துள்ளன. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவதற்கு தம்மிடம் வேட்பாளர் இல்லை என்பதையும், அவ்வாறு களமிறக்கினால் படுதோல்வியடைய நேரிடும் என்பதை ராஜபக்ஷர்கள் நன்கு அறிவார்கள். அதனால்தான் இவர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை கோருகிறார்கள்.

பாராளுமன்றத்தின் தற்போதைய பலத்தை கொண்டு பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை அமைக்க ராஜபக்ஷர்கள் முயற்சிக்கிறார்கள். ராஜபக்ஷர்களுக்காக பாராளுமன்றத்தை கலைப்பதா அல்லது கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதா என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானிக்க வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தனது பிரதான இலக்கு என்று ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார். வெளிநாட்டு அரசமுறை கடன் மறுசீரமைப்பு எதிர்வரும் ஜூலை மாதம் நிறைவு பெறும் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. இவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தை கலைத்தால் நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் நிலைமை தோற்றம் பெறும். அது கடன் மறுசீரமைப்புக்கு தாக்கம் செலுத்தும் என்பதை ஜனாதிபதி நன்கறிவார்.

அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்தினால் முரண்பாடான அரசாங்கமே தோற்றம் பெறும். ஜனாதிபதி ஒரு கட்சியையும், அரசாங்கம் பிறிதொரு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தும்போது அரசியல் நெருக்கடிகள் தோற்றம் பெறும். ஆகவே நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடி தோற்றம் பெறுவதற்கு ஜனாதிபதி இடமளிக்கமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/183321

வியாழனன்று இலங்கை வருகிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் - முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்பார்

4 days 12 hours ago

Published By: DIGITAL DESK 7   12 MAY, 2024 | 01:03 PM

image

(நா.தனுஜா)

மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், இவ்வாரம் இலங்கைக்கு வருகைதரவுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ளார்.

யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான வன்முறைகள் என்பன தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதுடன், சர்வதேச அரங்கில் இலங்கை மீதான அழுத்தங்களையும் பிரயோகித்துவருகிறது.

அந்த வகையில் யுத்த முடிவின் 15 வருடப் பூர்த்தியையொட்டி லண்டனைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் எதிர்வரும் வியாழக்கிழமை (16) இலங்கைக்கு வருகைதரவுள்ளார். அன்றைய தினம் சர்வதேச மன்னிப்புச் சபையில் கொழும்பு அலுவலக செயற்பாட்டாளர்களைச் சந்தித்துப் பேசவிருக்கும் அவர், வெள்ளிக்கிழமை (17) முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அங்கு சில முக்கிய இரகசிய சந்திப்புக்களை நடாத்துவதற்கு உத்தேசித்திருக்கும் அக்னெஸ் கலமார்ட், யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் சனிக்கிழமை (18) நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்திக்கவுள்ள அவர், நாட்டின் சமகால மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான தனது அவதானிப்புக்களைப் பகிர்ந்துகொள்ளவுள்ளார்.

அதேவேளை செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு நேரம் வழங்குமாறு மன்னிப்புச் சபையின் கொழும்பு அலுவலகம் ஓரிரு மாதங்களுக்கு முன்னரே ஜனாதிபதி செயலகத்திடம் கோரியிருக்கின்ற போதிலும், அதற்கு இன்னமும் உரிய பதில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/183307

Checked
Thu, 05/16/2024 - 20:57
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr