சமூகச் சாளரம்

உங்களால் முடியும் - சோம.அழகு

1 day 19 hours ago

உங்களால் முடியும் !

சோம.அழகு

நானும் வாழ்க்கையில் ‘தன்னம்பிக்கை’ கட்டுரைகள், ‘சுய முன்னேற்ற’ கட்டுரைகள் எல்லாம் வரைவேன் என்று தப்பித்தவறி கூட கனவு கண்டதில்லை. But here we are மக்களே! இக்கட்டுரை விளிம்பு நிலையில் அல்லாத அனைத்து மனித உயிர்களுக்குமானது. ‘வாழ்வில் உருப்பட வேண்டுமா? இக்கட்டுரையை உடனடியாக வாசியுங்கள்’ என்றெல்லாம் கூவி அழைப்பது சற்றே மிகையாக இருக்கும்.

இக்கட்டுரை சிலரைச் சிந்திக்க வைக்கலாம்; ஆமோதிக்க வைக்கலாம்; இன்னும் சில பெருந்தகைகளைக் கூனிக் குறுகி நாண வைக்கலாம்; வேறு சிலரைத் துணுக்குறச் செய்யலாம்….. அல்லது இதன் சாரத்தைத் தூசியைப் போலத் தட்டி விட்டு மீண்டும் தமது வழக்கத்தைத் தொடரவும் வைக்கலாம். இவற்றில் ஏதோ ஒன்றை நிச்சயமாகச் செய்யும். ஏனெனில்… இவ்வளவுதானே சாத்தியக் கூறுகள்!

அதி முக்கியமான பழக்கம் ஒன்றைக் கற்றுக் கொடுப்பதே இவ்வெழுத்தின் நோக்கம் - ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்குவது, அதுவும் காசு கொடுத்து. அக்’குறிப்பிட்ட’ பொருளை உருவாக்கியவரிடமே நேராகச் சென்று ‘எனக்கு ஒன்று வேண்டும்’ (உட்பொருள் : இலவசமாக) எனக் கூச்சமில்லாமல் மானமில்லாமல் கேட்டு வைப்பதற்குப் பதில் இன்னொரு உன்னதமான மரியாதையான வழியின் மூலம் அப்பொருளை அடையலாம். அதற்கான கையேடுதான் இக்கட்டுரை.

இதற்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று அதற்கே உரித்தான பிரத்யேகக் கடைக்குச் செல்லலாம்; அல்லது இணையத்தில் பணிப்பை(order) கொடுக்கவும் செய்யலாம். அடுத்த கட்ட வழிமுறைகளைப் படிப்படியாகக் கடக்க ஓரளவு என்னால் இயன்ற வரை உதவுகிறேன். ஆரம்பிக்கலாங்களா?

வேண்டிய அப்பொருளைத் தேர்வு செய்த பின், (ஆண்கள் எனில்) காற்சட்டையின்/ (பெண்கள் எனில்) கைப்பையின் எந்தப் பகுதியில் பணப்பை(wallet/purse) இருக்கிறது என்று அய்யனாரிலிருந்து அல்லா வரை அனைத்து தெய்வங்களையும் ஒரு முறை கும்பிட்டுவிட்டு இடது வலது மூளைகளைக் கசக்கிப் பிழிந்து யோசிக்கவும். விடையைக் கண்டெடுத்துத் தந்த அதே மூளையிடம் நமது கையை அத்திசையில் கொண்டு செல்ல வேண்டி ஆணையிடவும். பலிக்கவில்லை எனில் இறைஞ்சி மன்றாடவும். அதற்கும் மசியவில்லை எனில், ‘மூளையை மீறிச் செயல்பட முடிகிறதா?’ (overriding brain mechanisms) என்பதைப் பரிசோதித்துப் பார்க்கும் வகையில் கையைப் பணப்பையை நோக்கிக் கொண்டு செல்லவும். பின்னர் ஒரு நொடி நம்மை நாமே ஜெல்லி மீனாக நினைத்து எதையும் யோசிக்காமல் பணப்பையைத் தொட்டு விட வேண்டும். இப்போது உடல் முழுக்க மின்சாரம் பாய்ந்ததைப் போன்றதொரு உணர்வு வரும். அந்தக் கற்பனையான மின் அதிர்ச்சியிலிருந்து மீண்டு அடுத்த கட்டத்துக்கு நகர்வோமாக….

அந்தப் பொருளை…. ஓ! அது எந்தப் பொருள் என்று சொல்லாமலேயே ஊக்கப்படுத்திக் கொண்டிருந்திருக்கிறேனா? அதுதான்…. புத்தகம், நூல், ஏடு எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் அப்’பொருள்’தான்.

வழமைக்கு மாறாக அன்றைக்குப் பார்த்து Purseல் இருக்கும் zip கடுமையாகச் சிக்கிக் கொண்டிருக்கும் என்பதால் அதைப் பொறுமையாகத் திறக்க முயல வேண்டும். Walletல் உலகின் சக்தி வாய்ந்த பசை ஒட்டியிருப்பதால் அதுவும் கூட பிரிந்து திறந்து கொள்ள மறுக்கும். இரண்டையும் கிழித்தாவது ‘திறந்திடு சீசே’ செய்ய வேண்டும். பணப்பை கிழிந்தால்தான் என்ன? ‘நூல்’தானே வாங்குகிறோம்? தைத்துக் கொள்ளலாம். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி! முயற்சி தன் மெய்வருத்தக் கூலியைத் தந்தே ஆக வேண்டும் ஆதலால் நமது இடையராத உழைப்பின் விளைவாக பை தன் வாயைப் பிளந்து நம்மைப் பாவமாகப் பார்க்கும். அல்லது அது அப்படிப் பார்ப்பதாக நமக்குத் தோன்றும். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நம் மனதை இரும்பாகவோ டங்க்ஸ்டனாகவோ டைட்டானியமாகவோ மாற்ற வேண்டிய பொழுது இது.

நம் மொத்த ஆற்றலையும் பயன்படுத்தி ரூபாய்த் தாள்களை எடுத்துக் கடைக்காரரிடம் நீட்ட வேண்டும். மிகச்சரியாக இத்தருணத்தில் வாதம் தாக்கி கை செயலிழந்தது போகலாம்; நரம்புத் தளர்ச்சியால் கை நடுக்கம் ஏற்படலாம். துவண்டு போய்விடக் கூடாது! Come on, உங்களால் முடியும். உங்களால் நிச்சயம் முடியும். உலகின் சர்வ வல்லமை பெற்றவராக உங்களை இப்போது கருதிக் கொள்ள வேண்டும். கைகளைக் கம்பீரமாக வலுக்கட்டாயமாகப் பிடிவாதமாக நீட்டிக் காசைக் கொடுத்து விடவும். மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டு நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்தியவாறே பொருளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்தப் படிநிலைகளும் இன்னல்களும் பணப்பைக்குப் பதில் செயலியின் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய விரும்பும் அலைபேசியினருக்கும் பொருந்தும். ஆயிரக் கணக்கில் செலவழித்து வாங்கிய அலைபேசியில் அப்பொருளுக்கான இருநூறு ரூபாயைச் செலுத்துவதற்கு உண்டாகும் மனத்தடையை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லையென்றாலும் அந்த மனப்போராட்டத்தைப் பச்சாதாபத்தோடு அணுகும் கடமை… அடக் கண்றாவியே! அதுவும் முடியவில்லை. என்ன மாதிரியான மனநிலை அது? என்னவோ ஒண்ணு… நமது மங்காத மனவலிமையினால் அவ்வளவு பெரிய ரொக்கத்தை அனைத்துத் தடுமாற்றங்களையும் தயக்கங்களையும் கடந்து செலுத்திய பின் ‘க்ளியாங்க்’ என்னும் சத்தத்துடன் ‘பெறப்பட்ட தொகை…. இருநூறு ரூபாய்’ என்னும் குரல் நாராசமாய் ஒலிப்பதாகக் கூட உணர வாய்ப்புண்டு.

முதல் முறை காசு கொடுத்து வாங்கும் போது அப்படித்தான் இருக்கும். கை கால் வெடவெடவென உதறலெடுக்கும். அவ்வளவு பெரிய தொகை ஒரேடியாகக் கையை விட்டுப் போகிறதே என்ற சோகம் கவிந்து கொள்ளும். இப்படி ஒரு மாபெரும் தெண்டச் செலவு வாழ்க்கையில் செய்தே இருக்க மாட்டோம் ஆகையால் அச்சோகம் நம்முள் ஒரு குமுறலாகக் கூட மாறலாம். கவலை வேண்டாம்! இதுவும் கடந்து போகும். இதிலிருந்து மீள்வதற்கான உள வலிமையை நிச்சயம் அந்த உப்பிலியப்பன் உரித்தாக்குவாராக. உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் - யோவான் 16:20, சங்கீதம் 30:5, 126:5, ஏசாயா 61:3 ஆகியவையும் அதையே அருளுகின்றன.

**********************************

‘ஒரு (துவக்க நிலை) எழுத்தாளரின் புத்தகத்தை நான் வாசிப்பதே அவருக்குச் செய்யும் பெரிய உபகாரம். நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்கி(!) வாசித்தலை மேற்கொள்வது எனது பெருந்தன்மையை எடுத்துரைக்கிறது’ – இப்படியெல்லாம் அதி மேதாவித்தனமான சிந்தனைகளுடன் வலம் வருவதால்தான் எழுத்தாளரிடமே சென்று “புத்தகம் இன்னும் எனக்கு வரல” என்று தடித்தனமாகக் கேட்க முடிகிறது. “உங்க புத்தகம் எங்கே கிடைக்கும்?” என்று கூட நாகரிகமாகக் கேட்கலாம். நாவுக்கு ஒரு சேதமும் வராது.

எழுத்தாளர் அன்பின் மிகுதியாலும் அளவு கடந்த மரியாதையாலும் தமக்கு நெருக்கமான சிலருக்குப் பிரியப்பட்டுத் தாம் எழுதிய புத்தகத்தைத் தருவார்/அனுப்பி வைப்பார். அவ்வாறாக அன்பளிப்பாகப் பெறும் உரிமையைத் தாமாக எடுத்துக் கொள்ளும் இன்னபிற வினோத வினோபா பாவேக்களின் வதனத்திற்கு நேரே ‘சட்டத்தைக் கையில் எடுக்காதீங்க சார்/மேடம்’ என்று ஒரு நாள் சொல்ல ஆசை.

இன்னும் சில அரிய பிறவிகள் இருக்கிறார்கள். நேரடியாக எழுத்தாளரிடம் சென்று இலவசமாகக் கேட்கக் கொஞ்சம் வெட்கம் ஒட்டிக் கொண்டிருக்கும் போலும். எழுத்தாளர் யாருக்கெல்லாம் விருப்பப்பட்டுக் கொடுத்தாரோ அவர்களில் ஒருவரைப் பிடித்து அவரிடம் இருந்து வாங்கிக் கொள்வார்கள். பிறகு அந்த மரியாதைக்குரிய நபர் எழுத்தாளரிடம் புது பிரதி ஒன்றை மீண்டும் ‘இனாமாக’ப் பெற்று மரியாதையை அனாமத்தாக இழப்பார். இங்கிதமற்று நடந்து கொள்ளும் ஓசி ஆத்மாக்கள் எல்லாம் நல்ல… நல்ல என்பதை விட பொருளாதாரத்தில் உயர் நிலையில் இருப்பவர்கள்.

இன்றைய காலத்தில் பதிப்பகம் நடத்துவது எவ்வளவு சவாலான விஷயம் என்பதைப் பெரும்பாலானோர் உணர்வதே இல்லை. தமது எழுத்து அதற்கான தளத்தைச் சென்று அடைய வேண்டுமெனில் ஓர் எழுத்தாளர் இப்படியெல்லாம் செலவு செய்தே ஆக வேண்டும் என எதிர்ப்பார்க்கும் சமூகத்தின் மேல் என்ன மரியாதை வரும்?

**************************

திடீரென இதை எழுதுபொருளாகக் கையிலெடுக்கக் காரணம் தேவா அண்ணாவும் அவரது மனைவி சத்யா அக்காவும் (ஒரு தம்பதியை இப்படி உறவுமுறை சொல்லி அழைக்கக் கூடாதுதான். ஆனால் இப்போது இந்த ஆராய்ச்சி இக்கட்டுரைக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாதது ஆகையால் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வீர்களாக!). புத்தகங்களைப் பொறுத்த வரை ‘அன்பின் பொருட்டு’ என்பதைச் சற்றும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் இவர்கள். “அட பரவாயில்லை! இருக்கட்டும்” என்று எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் பிடிவாதமாகக் காசு கொடுத்துதான் வாங்குவார்கள். போதாக்குறைக்கு தம்மைச் சார்ந்தவர் யாரேனும் நம்மிடம் புத்தகம் கேட்டு நாம் இலவசமாகக் கொடுக்கிறோம் என்றால் அதற்கும் காசு தந்து அநியாயத்திற்கு நியாயமாக நடந்து கொள்வார்கள். கையில் காசு வாங்க மறுத்தால் gpay செய்து நம்மை நெளிய வைப்பார்கள். இப்படிப்பட்ட நல்லோர் வாழும் இதே தொல்லுலகில்தான்…..

ஒரு நியாயமான கற்பனை : காசு கொடுத்து புத்தகங்கள் வாங்குவோர், எழுத்தாளர்களிடம் இருந்து உளப்பூர்வமாக இனாமாகப் புத்தகங்கள் கிடைக்கப் பெறுவோர் – இவர்களுக்கு மட்டுமே அப்புத்தகங்களில் உலகின் அத்தனை சுகந்தங்களும் பொதிந்திருக்கக் கடவதாக!

மற்றபடி கவர்தல் மூலம் புத்தகம் கிட்டும் அனைவருக்கும் அதிலிருந்து வரும் முடை நாற்றம் மூளையைத் துளைக்கட்டும்!

வாச்சாத்தி - உண்டால் அம்ம இவ்வுலகம்

3 weeks 4 days ago

வாச்சாத்தி - உண்டால் அம்ம இவ்வுலகம்

- சுப.சோமசுந்தரம்

           கருப்பு, சிவப்பு, நீலம் என்ற இந்த மூன்று வண்ணங்களில் எதிலுமே நிற்காத ஒருவரிடம் நான் அரசியல் பேச விரும்புவதில்லை. அந்த மாதிரியான நபரிடம் என்ன இழவு அரசியலைப் பேசுவது என்று தெரியாததே காரணம். இந்த மூன்று வண்ணங்களும் முறையே திராவிட இயக்க அரசியல், இடதுசாரி அரசியல், தலித் அரசியல் இவற்றைக் குறிப்பன என்பது இன்று தமிழ்நாட்டில் சிறு பிள்ளைகளுக்கும் தெரியும், தெரிய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த மூன்று வண்ணங்களையும் எனக்குச் சொந்தமாக்கிக் கொண்டவன் நான். அதாவது இவற்றில் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியிலும் உறுப்பினர் ஆகாமலே மூன்றையும் கொண்டாடும் உரிமை பெற்றுள்ளேன். ஆங்கிலத்தில் சொல்வது சுருக்கமாகவும் அழுத்தமாகவும் இருக்கும் என நம்புகிறேன், "I own them, I belong to them". இதில் ஆகச் சிறந்த நன்மை ஒன்று உண்டு. ஏதாவது ஒரு நிலைப்பாட்டில் மூன்றில் எந்த ஒரு அணியும் மேற்சென்று இடித்தற் பொருட்டாய்க் கடிந்து கொள்ளும் உரிமையே அது. அந்த உரிமை அவர்களிடம் எடுத்து எனக்கு நானே கொடுத்துக் கொள்வது. ஆனால் எந்த நிலையிலும் எதிரிகளிடமும், தன் பெண்டு தன் பிள்ளையென மட்டும் வாழும் சராசரிகளிடமும் இந்த மூவண்ணத்தாரை நான் விட்டுத் தருவதில்லை. நான் வகுத்த வர்ணாசிரமம் இதுவே ! ஏன் இந்தப் பீடிகை ?

          இப்போது நாம் கையில் எடுத்துள்ள வாச்சாத்திக்கு வருவோம். வெகு சமீபத்தில் செங்கொடியினரால் வெளியிடப்பட்ட 'வாச்சாத்தி' எனும் ஆவணப்படத்தை மானிடர் அனைவரும் பார்க்க வேண்டும். அதன் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

            வாச்சாத்தி தர்மபுரி மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஒரு மலைவாழ் மக்களின் கிராமம். 1992 ஜூன் மாதம் 20, 21, 22 தேதிகளில் தமிழ்நாடு வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை இம்மூன்று அரசு இயந்திரங்களாலும் சூறையாடப்பட்ட சுமார் 200 குடும்பங்களைக் கொண்ட கிராமம். சுமார் 600 கோடி பெறுமானமுள்ள (1992 டிலேயே) சந்தன மரங்கள் சூழ்ந்திருந்த நிலையில், அப்போது தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த அதிமுகவினராலும் துணை போன அதிகார வர்க்கத்தாலும் மூன்றில் ஒரு பங்கு சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டதாகவும் அரசு இயந்திரங்களின் உதவியோடு மேலும் அத்தனையையும் வெட்டத் திட்டமிருந்ததாகவும் கேள்வி. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடையூறாக இருந்த அந்தக் கிராமத்தினரை அப்புறப்படுத்தவே வன்முறை, பாலியல் வல்லுறவு, வீடுகளை அடித்து நொறுக்குதல், கிராமத்துக் கிணற்றில் மோட்டார் கழிவு எண்ணெயைக் கலத்தல் என எழுத்திலடங்கா வன்கொடுமை கட்டவிழ்த்து விடப்பட்டது. அதுவும் ஏதோ ரவுடிக் கும்பலால் அல்ல; மேலே குறிப்பிட்டுள்ள மூன்று அரசுத்துறைகள் எனும் கும்பலால். கிராம மக்கள் மீது சந்தனம் வெட்டிக் கடத்திய குற்றம் சுமத்தப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். எந்தக் குற்றத்தை அவர்கள் எதிர்த்தார்களோ அந்தக் குற்றமே அவர்கள் மீது சுமத்தப்பட்டது பேரவலம். மேலும் அவர்களுக்கு ஏற்பட்ட சொல்லொணாத் துயரங்களை இப்போது வெளியாகி உள்ள ஆவணப்படத்தில் அனைவரும் கண்ணீருடன் கண்டு குமுறலாம். அரசுத் துறைகளில் மெத்தப் படித்தோரும் பாதகஞ் செய்தனர். பாதிக்கப்பட்ட மக்களோடு நின்று அவர்களைச் சரியாக வழிநடத்தி 31 ஆண்டுகள் ஜனநாயக வழியில் நீதிப் போராட்டம், வீதிப் போராட்டம் என்று நடத்தி அவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தந்த வீரமும் ஈரமும் கொண்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள்; அவர்கள் மட்டுமே ! அரசுத் துறை ரவுடிகளால் வன்புணர்வு எனும் கொடுமைக்கு ஆளான 18 பெண்கள் உட்பட அதிகார வெறியாட்டத்திற்கு ஆளான மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தந்ததோடு அரசுத் துறைகளைச் சார்ந்த 269 பேர் குற்றவாளிகள் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வாங்கித் தந்தனர். 269 பேரில் இந்த 31 ஆண்டுகளில் மரணித்த 54 பேரைத் தவிர ஏனைய 215 பேரும் சிறைத் தண்டனை பெற்றனர். தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய நம் செங்கொடித் தோழர்கள் மட்டுமா போற்றுதலுக்குரியவர்கள் ? பாதிக்கப்பட்ட அத்தனை பேரும் இத்தனை ஆண்டுகள் உறுதியோடு நின்றார்களே ! ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து அம்மக்களில் ஒவ்வொருவருக்கும், பிறழ் சாட்சியாக மாற, அவர்கள் நினைத்துப் பார்க்காத பணம் பேரம் பேசப்பட்டிருக்கும். ஒவ்வொருவரும் மிரட்டப்பட்டிருப்பர். ஆனால் ஒருவர் கூட உடன்படவில்லை, அஞ்சவில்லை என்பது வரலாற்றில் வேறு எங்கும் நிகழ முடியாத ஒன்று. CPI(M) மாநிலச் செயலாளர் தோழர் பி.சண்முகம் கூறியதைப் போல அந்த மக்களே தலையாய கதாநாயகர்கள் (protagonists). மக்கள் இயக்கம் என்பது எவ்வளவு வலுவானது என்பதை உலகுக்கே உணர்த்தியவர்கள்.

              அரசியல் சூட்சமங்கள் அவ்வளவாகத் தெரியாத பாமரர் மனதில் சில கேள்விகள் எழுவது இயல்பு. வாச்சாத்தி கொடுமை நிகழ்ந்தது அதிமுக ஆட்சியில். மணக்கும் சந்தன காசை இழக்க மனமின்றி எத்தகைய கொலை பாதகத்திற்கும் அவர்கள் துணிந்தது புரிந்து கொள்ள முடிகிறது. போராட்டத்தில் மும்முரமாக நின்ற தோழர் பி.சண்முகம், தோழர் அண்ணாமலை இவர்களை ஏதாவது ஆக்சிடென்ட் செய்து கதையை முடிக்கச் சொன்ன அப்போதைய வனத்துறை அமைச்சர் செங்கோட்டையனின் தொலைபேசிப் பேச்சின் பதிவிலிருந்து தெளிவாகத் தெரிகிறது - அதிலும் அப்பதிவு தோழர்களின் கையில் கிடைத்ததால். இடையில் கலைஞர் கருணாநிதியின் திமுக ஆட்சி ஏற்பட்டபோது வழக்கைத் துரிதப்படுத்திக் குற்றவாளிகளை மக்களுக்கு இனங் காட்டியிருக்கலாமே ! மாறாக நீதிமன்ற உத்தரவின் படி சிறைப்படுத்தப்பட்ட 269 காவலர்களை கலைஞர் ஏன் விடுவித்தார் ? இதே கேள்வி ஸ்டெர்லைட் விவகாரத்திலும் எழுகிறது. அமைதி வழியில் போராடிய 13 போராளிகள் குருவிகளைச் சுடுவது போல் சுட்டுத் தள்ளப்பட்டது எடப்பாடியாரின் அதிமுக ஆட்சிக் காலத்தில்தான். ஆட்சி மாறிய பின் நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையப் பரிந்துரையின்படி, குற்றம் (குற்றேவல்) புரிந்த காவல் அதிகாரிகளின் மீதும் அரசு நிர்வாக அதிகாரிகளின் மீதும் ஸ்டாலின் அவர்களின் திமுக அரசு ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை ? இக்கேள்விக்கெல்லாம் அனுபவத்தால் முதிர்ச்சி பெற்ற தோழர் ஒருவர் பதிலிறுத்தார், "ஆட்சி மாறினாலும் காவல்துறையின் உயரதிகாரிகளும் நிர்வாக அமைப்பின்  உயரதிகாரிகளும் உரியோரைச் சந்தித்து, தங்கள் ஆட்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் மொத்த அமைப்பும் நிலை குலைந்து போகும் - அதாவது demoralise ஆகும் - என்று ஓதிவிட்டு வருவார்கள் (சரியாகச் சொன்னால், எச்சரித்து விட்டு வருவார்கள்). என்ன இருந்தாலும் இவர்களை வைத்துதானே ஆட்சி நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் எந்த ஆளும் கட்சியும் அடக்கி வாசிக்கும்". இது மட்டுமா ? முதுகுளத்தூர் கலவரத்தில் தலித்துகளின் பக்கம் முழுமையாக நிற்க வேண்டிய பெருந்தலைவர் காமராஜரும் பேரறிஞர் அண்ணாவும் பஞ்சாயத்து பண்ணத்தானே முயற்சி செய்தார்கள் ? அங்கு பெரும்பான்மையாகத் திகழ்ந்த ஆதிக்க உயர்சாதியினரைப் பகைப்பது வாக்கு வங்கி அரசியலுக்குச் சரிவராது என்ற நிதர்சனம் அன்றி வேறென்ன ? அதுபோலவே கவின் கொலை போன்ற ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் கொண்டு வருவதில் இப்போது காலதாமதம் ஏன் ? இதுதான் ஜனநாயகத்தின் அவலம். இந்த அரசியலை எதிர்கொள்ள வீதிமன்றத்திலும் நீதிமன்றத்திலும் போராடி ஆள்வோரை நிர்பந்திக்க மக்களும் மக்கள் இயக்கங்களும் முன்வர வேண்டும். இப்பணியினை வாச்சாத்தியில் பாதிக்கப்பட்டோரும் செங்கொடியினரும் செவ்வனே செய்து முடித்திருக்கிறார்கள். வாக்கு வங்கி அரசியலில் பங்கு கொள்ளாத கருப்புக் கொடியினரும் தலித் அமைப்பினரான நீலக் கொடியினரும் இதுபோல் இங்கு நிரம்பப் பணியாற்ற வேண்டும். ஏன் செங்கொடித் தோழர்கள் கூட, தம்மால் முன்னெடுக்கப்படாத ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்திலும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திலும், இன்ன பிறவற்றிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டிக் குரல் கொடுக்க வேண்டும். தமக்காக மட்டுமல்லாமல் பிறருக்காகவும் போராடும் ஒவ்வொருவரும் கம்யூனிஸ்ட்தானே ! இதை விட பொதுவுடைமைக்கு வேறு என்ன சிறந்த வரையறை இருக்க முடியும் ?

                உரைநடையில் கூட மரபுப் பாடல் ஒன்றினை வலுக்கட்டாயமாக இழுக்கும் மன நோய் எனக்கு உண்டு. குறைந்தது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புறநானூற்றுப் பாடல் ஒன்றைப் பாடி இக்கட்டுரைக்கு நிறைவுத் திரை போட விழைகிறேன். பொதுவுடைமைவாதிகளால்தான் இவ்வுலகமே இயங்குகிறது என ஆணிப்பொன்னாய் ஆணித்தரமாய்ச் சொல்கிறது பாடல். வாச்சாத்தியில் அயராது போராடிய மக்களுக்கும் அவர்களைச் செவ்வனே வழி நடத்திய செங்கொடியினருக்கும் பாடும் மங்கல வாழ்த்தாக இதனைக் கொள்ளலாம். எனது வலைப் பதிவிலிருந்து படி எடுத்து இங்கு பதிவு செய்கிறேன் :

"உண்டால் அம்ம, இவ்வுலகம்! இந்திரர்  அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்; துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சி ரபுகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்,  உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்; அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மை யானே !"       

                      ----புறநானூறு 182.

(பொருள் கருதி சீர் பிரித்து எழுதப்பட்டுள்ளது).

பாடியவர் கடலுள் மாய்ந்த பாண்டியன் இளம் பெருவழுதி. பாராளும் மன்னவரும் பாவலராய்த் திகழ்ந்த சங்க காலத்தில் இவர் பாண்டிய மன்னராய் அறியப் பெறுகிறார்.

பாடற்பொருள் : " இவ்வுலகம்  உண்டெனில் இதனால்தான் !" (உண்டால் அம்ம இவ்வுலகம் - அம்ம என்பது வியப்பு குறித்த அசைச்சொல்)  எனத் தொடங்குகிறது பாடல்.  இத்தன்மை உடையோரால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்று அத்தன்மைகளைப் பட்டியலிடுகிறார் புலவர். அவையாவன :- இந்திரலோகத்து அமிழ்தமே கிடைத்தாலும், சுயநலத்துடன் இனியது எனத் தாம் மட்டும் உண்ண மாட்டார்கள்;  பிறரிடம் சினம், வெறுப்பு கொள்ள மாட்டார்கள் (முனிவிலர்); தாம்  மேற்கொண்ட பணியில் சோம்பல் பாரார்(துஞ்சலுமிலர்); பிறர் (நல்லோர்) அஞ்சும் தீமைக்குத் தாமும் அஞ்சுவர்; உலகம் புகழும் நற்செயல்களை மேற்கொள்ள உயிரையுங் கொடுப்பர்; பழிச்சொல் தரும் செயல்களுக்கு உலகையே பரிசாகக் கொடுத்தாலும் ஏற்க மாட்டார்கள்; செயல்திறனில் சோர்வு இலாதார் (அயர்விலர்); இந்த மாண்புகள் பொருந்தியவராகி (அன்ன மாட்சியர் அனையராகி), வலிமையான முயற்சி (நோன் தாள்) உடையவரெனினும், தமக்கென முயலாமல் பிறர்க்கென உண்மையாகவே  முயலும் தன்மையர். இத்தகைசால் பண்புகள் வாய்க்கப் பெற்றவர்களாலேயே இவ்வுலகம் இயங்குகிறது.

அந்த... நூறு பேர், யார்?

1 month 1 week ago

924714-diwali1.webp

வாழ்க்கை என்பது இயற்கையிலேயே ஒரு அழகான பயணம். ஆனால், அந்தப் பயணத்தை நாம் ரசித்துப் பயணிப்பதை விட, நம்மைச் சுற்றி இருக்கின்ற அந்த ‘நூறு பேர்’ என்ன நினைப்பார்கள் என்பதிலேயே நம் முழுக் கவனத்தையும் செலுத்தி விடுகிறோம்.

இந்த நூறு பேர் யார்?

நம் குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் மற்றும் நம்மை மேலோட்டமாகத் தெரிந்த சில உறவுகள். இவர்களுக்காகவே நாம் எப்போதும் ஒரு முகமூடியை அணிந்து கொள்கிறோம். அவர்கள் நம்மை ‘நல்லவன்’ என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவே, நம்முடைய நிஜமான ஆசைகளையும் உணர்வுகளையும் பல நேரங்களில் அடக்கி வைத்துக் கொள்கிறோம்.

நம் அண்டை வீட்டார் ஒரு வசதியான பொருளை வாங்கினால், நமக்கும் அதை வாங்கத் துடிக்கும் அந்தப் போட்டி மனப்பான்மை இருக்கிறதே, அது உண்மையில் நமக்காக எழுந்தது அல்ல அந்த நூறு பேரின் முன்னிலையில் நாம் தாழ்ந்து போய்விடக் கூடாது என்ற பயத்தினால் உருவானது.

கொஞ்சம் நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.

நம்முடைய கொள்ளுத் தாத்தாவின் பெயரோ, அவர் வாழ்ந்த விதம் பற்றியோ இன்று நமக்குத் தெரியுமா?

அவர் அன்று யாருக்கெல்லாம் பயந்தாரோ, அந்த ஊரும் அந்த மக்களும் இன்று எங்கே இருக்கிறார்கள்?

காலச்சக்கரம் சுழலச் சுழல, ஒரு காலத்தில் மிகப் பெரியதாகத் தெரிந்த பல பிம்பங்கள் இன்று சுவடு தெரியாமல் மறைந்துவிட்டன.

இன்னும் ஒரு நூறு வருடங்கள் கழித்து நம்முடைய நிலையும் இதுதான். நாம் இன்று யாருக்காகப் பயந்து நம் சந்தோஷங்களைத் தொலைக்கிறோமோ, அன்று அந்த நூறு பேரும் இருக்க மாட்டார்கள்

நாமும் இருக்க மாட்டோம். அப்படியிருக்க, இன்றைய பொழுதை மற்றவர்களின் திருப்திக்காகத் தியாகம் செய்வது எவ்வளவு பெரிய அறியாமை?

வாழ்க்கை என்பது நமக்குக் கிடைத்த ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு. இதில் நாம் எடுக்கும் முடிவுகளும், நாம் அடையும் வெற்றிகளும், ஏன் நாம் சந்திக்கும் தோல்விகளும் கூட நம்முடையதாக மட்டுமே இருக்க வேண்டும்.

மற்றவர்களின் கைதட்டலுக்காகவோ அல்லது விமர்சனங்களுக்காகவோ நாம் நம் பாதையை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. யாரையும் காயப்படுத்தாமல், எவரையும் ஏமாற்றாமல், நம் மனசாட்சிக்கு உண்மையாக வாழ்வதே ஒரு மனிதன் அடையும் ஆகச்சிறந்த வெற்றியாகும்.

நம்முடைய வாரிசுகள் என்றாவது ஒருநாள் நம் புகைப்படத்தைப் பார்க்கும்போது, “இவர் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று பயந்து பயந்து வாழ்ந்தவர்” என்று சொல்லாமல், “இவர் தனக்குப் பிடித்த மாதிரி, யாருக்கும் அஞ்சாமல், மிக நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார்” என்று சொல்ல வேண்டும்.

அதுதான் நாம் விட்டுச் செல்லும் உண்மையான சொத்து. எனவே அன்பானவர்களே, அந்த நூறு பேரின் விமர்சனங்களுக்குச் செவிசாய்க்காமல், உங்கள் மனதின் குரலுக்கு மதிப்புக் கொடுங்கள். உங்களது தனித்துவமான வாழ்க்கையை முழுமையான மகிழ்ச்சியோடு வாழுங்கள். ஏனெனில், உங்கள் கதையில் நீங்களே நாயகன்.

Balaji Srinivasan 

பராசக்தி - சுப.சோமசுந்தரம்

2 months ago

பராசக்தி

- சுப.சோமசுந்தரம்

இது பராசக்தி படத்தின் விமர்சனப் பார்வை அல்ல. அப்படம் ஏற்படுத்திய பரபரப்பு பற்றியது.     

 தற்போது வெளியாகியுள்ள புதிய 'பராசக்தி' திரைப்படம் பெரும் வரவேற்பையும், சிலரிடம் ஏதோ அரசியல் காரணங்களுக்காக வெறுப்பையும், சில தரமான திரை விமர்சகர்களிடமிருந்து அரசியல் கலக்காத விமர்சனப் பார்வைகளையும் பெற்று சமூக வலைத்தளங்களைப் பரபரப்பாக்கி விட்டது. பெயர் ராசியோ என்னவோ, பழைய பராசக்தியும் அக்காலத்தில் அரசியல் களத்தில் சூடேற்றியது. 1930 களிலேயே சூடு பிடித்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1950 களின் இறுதியிலும் 1960 களிலும் தீப்பிடித்துப் பரவியதை ஓரளவு தொட்டுக் காட்டிப் பெரும் வெற்றி கண்டுள்ளது தற்போது வெளிவந்துள்ள பராசக்தி. இந்தி எதிர்ப்பு அல்ல, இந்தித் திணிப்பு எதிர்ப்பாக்கும் எனும் பம்மாத்து எனக்கு அவசியமில்லை என்று நினைக்கிறேன் - நாங்கள் பார்ப்பனர்க்கு எதிரி அல்ல, பார்ப்பனியத்திற்கே எதிரி என்பது போல. தணிக்கைத் துறையைச் சரிக்கட்டவும், ஏதோ நாகரிகம் கருதியும் 'தமிழ் வாழ்க' முழக்கத்தை மட்டுமே படம் முன்னெடுத்துள்ளதை என்னைப் போன்றோரால் புரிந்து கொள்ள முடிகிறது. பாசிசத்திற்கு மட்டும்தான் பம்மாத்து தேவையா என்ன ? அறிஞர் அண்ணா போன்று சமூகத்திற்கு நன்மையாற்ற நினைக்கும் கொள்கைச் சான்றோர்க்கும் பம்மாத்து தேவைப்படவே செய்தது. இறை மறுப்பாளரான அண்ணா 'ஒருவனே தேவன்' என்று ஏற்றுக் கொண்டதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும் ? மனோன்மணீயம் சுந்தரனாரின் பாடலைத் தமிழ் மொழிவாழ்த்து ஆக்கிய கலைஞர் கருணாநிதி அப்பாடலில், ஆரியம் (சமஸ்கிருதம்) வழக்கழிந்து ஒழிந்து சிதைந்தது பற்றிய வரியினை நீக்கியதும் அவ்வாறுதானே ? இவை அரசியல் நாகரிகம் என்று சொல்லிக் கடந்து செல்லும் பக்குவம் பகுத்தறிவாளரிடம் உண்டு. ஆனாலும் 'இந்தி ஒழிக, தமிழ் வாழ்க !' என்று அன்றைய முழக்கம் சேர்ந்தேதான் ஒலித்தது, சரியாக ஒலித்தது என்பதை இங்கு பதிவு செய்யவே விழைகிறேன். இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி ஏதுமறியாத இளம் தலைமுறையினர் இதனையும் தெரிந்து கொள்ள வேண்டும். நிற்க.

            சங்கிகளும், யாரோ வேறொரு கதாநாயகனைத் தெய்வமாய் வழிபடும் ரசிகக் கண்மணிகளும் பராசக்தி படத்தைப் பற்றி கன்னா பின்னாவென்று பதிவு செய்வதைப் புறந்தள்ளி விடலாம். அவர்களை ஆட்டத்துக்கே சேர்த்துக் கொள்ள வேண்டியதில்லை.

              உலக சினிமா இலக்கணமெல்லாம் பேசி அந்த அளவுகோலை இந்தப் படத்திற்கு வைத்துப் பேசும் தரமான சினிமா விமர்சகர்களுக்கு நாம் சொல்ல வேண்டியது,  "உங்களின் நிலைப்பாட்டிற்குப் பெயர் அறிமடம் (அறிந்தும் அறியாதார் போல் செயல்படுதல்). இது ஒரு வணிக நோக்கிலான சினிமா. மொழிக் கொள்கை கூட படம் எடுத்தவர்களுக்கு வணிக நோக்கில் அமைந்த ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் மொழிப்போரைப் பற்றி ஏதுமறியாத, வாசிப்பு அதிகம் இல்லாத பெரும்பாலான இளைய தலைமுறையைச் சென்றடைந்து விட்டது இப்படம். பலருக்கு சரியாக மொழி உணர்வைக் கடத்தி இருக்கிறது. அவ்வளவே !".

              அடுத்து, இதனைத் தங்களுக்கு எதிரான படமாக நினைக்கும் காங்கிரஸ்காரர்களுக்கு : ஐயா ! உங்கள் காங்கிரஸ் என்பது அந்தப் பழைய காங்கிரஸிலிருந்து பிரிந்து, அது ஒன்றுமில்லாமல் ஆனபின் 'இனி இதுதான் காங்கிரஸ்' என்று ஆன ஒன்று. எனவே 'படத்தில் காட்டப்பட்டது பழைய சித்தாந்தங்களுடன் திகழ்ந்த காங்கிரஸ். நாங்கள் இந்தியாவின் பன்முகத்தன்மையை நன்கு உணர்ந்த புதிய காங்கிரசாக்கும்' என்று சொல்லி நீங்கள் கடந்து சென்றிருக்கலாம். அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலம் இந்திக்குப் பெரிய ஆதரவாளராயிருந்து மொழிப் போராளிகளை ஆங்காங்கே சுட்டுத் தள்ளியது நிஜம். அடுத்த தேர்தலில் காமராஜரை மக்கள் தோற்கடித்ததற்கும் பெரும் பங்களிப்புச் செய்தவர் பக்தவத்சலம். அவரை உள்ளது உள்ளவாறு படத்தில் காட்டியதற்கு இன்றைய காங்கிரஸ்காரர்களுக்குக் கோபம் வரவேண்டிய அவசியம் இல்லை. இந்திரா காந்தி அம்மையாரைக் காட்டிய விதத்திலும் பெரும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. அன்று வடக்கில் இருந்த தலைவர்கள் எவரும் மொழிப்போரில் நம்முடைய நிலையைப் புரிந்து கொள்ளத் தயாராக இல்லை என்பது நமது முகத்திலறையும் நிதர்சனம்.

              இறுதியாக தற்போது சிறிய சர்ச்சைக்கு உள்ளானது என்னவென்றால் பராசக்தி படக்குழு டெல்லியில் மோடி தலைமையில் நிகழ்ந்த பொங்கல் விழாவில் பங்கேற்றது. தமிழ்த் திரையுலகில் எத்தனையோ பேர் இருக்க, இப்படக் குழுவை பாஜக அழைத்ததும் இவர்கள் அதில் கலந்து கொண்டதும் ஒரு வேடிக்கை அரசியலாகத் தெரிகிறது; கேவலமான அரசியலாகவும் இருக்கலாம். ஆனால் தமிழ் கூறும் நல்லுலகம் இவ்வாறான நிகழ்வுகளை உதாசீனப்படுத்திக் கடந்து செல்ல வேண்டும். படம் தமிழ்ச் சமூகத்திற்கு நல்ல செய்தியைத் தந்தது என்பதோடு நிறுத்த வேண்டும். படக்குழுவினரை நிஜ வாழ்விற்கு அழைத்து வந்து நாயகர்களாக ஆக்க வேண்டிய அவசியமில்லை. இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் நாயகன் சிவகார்த்திகேயன் தாங்கள் திராவிட இயக்கத்தினர் என்றோ குறைந்தபட்சம் தமிழ் உணர்வாளர் என்றோ கூறிக் கொள்ளவில்லை. பாஜக நாளைக்கே இவர்களை அழைத்து ஒரு இந்தி ஆதரவுப் படத்தை எடுக்கச் சொன்னால், "நீ காசு குடு மாமே ! மத்ததை நாங்க பாத்துக்குறோம்" என்று இவர்கள் ஆனந்தக் கூத்தாடலாம். இதை விட இவர்களிடம் பெரிதாக ஏன் தமிழ்ச் சமூகம் எதிர்பார்க்க வேண்டும் ? இது விஷயத்தில் பாசிச பாஜகவை வேண்டுமானால் கடுமையாக விமர்சிக்கலாம். அவ்வளவுதான்.

             சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'ரகு தாத்தா' திரைப்படமும் ரசிக்கும் படியாக இருந்தது. இதுவும் இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்தின் பின்னணியில்  உருவான கதை. ஆனால் இது அப்போது நிகழ்ந்த வரலாற்றைக் கூற வரவில்லை. மாறாக, பெண்ணியம் பேசும் கதையில் கதாபாத்திரங்கள் இந்தி எதிர்ப்பைப் பதிவு செய்தன. பராசக்தி திரைப்படம் போன்று ரகு தாத்தா பரபரப்பாகப் பேசப்படாததற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம் - கீர்த்தி சுரேஷ் தவிர நட்சத்திர நடிகர்கள் இல்லாமையும், முழுமையான வணிக நோக்கில் இளையோரைக் கவரும் உத்திகள் இல்லாமையும் அவற்றில் சில. எது எப்படியோ, இது போன்று தமிழரின் தன்னுணர்வை விழிப்புறச் செய்யும் திரைப்படங்கள் அவ்வப்போது திரையில் தோன்றுவது அவசியமாகிறது. சுதந்திரப் போராட்டம் நாட்டு விடுதலைக்கானது என்றால் மொழிப்போர் தமிழ் இன விடுதலைக்கானது என்பதை இந்நிலத்து இளையோர் புரிந்து கொள்ளத்தான் வேண்டும்.

           ரகு தாத்தா திரைப்படம் குறித்து முன்னர் நான் முகநூலில் எழுதியவை பின்வரும் இணைப்பில் :

https://www.facebook.com/share/p/1bL1fCKieF/

மாவளி கண் பார்

3 months 1 week ago

மாவளி கண் பார்

--------------------------

large.Maavali.jpg

சொக்கப்பானை தான் அதன் பெயர் என்று நினைத்திருந்தேன். ஐம்பது வயதில் கூட அப்படித்தான் நினைத்திருந்தேன். முன்னர் இறைவனுக்கும், மனிதர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்த காலம் ஒன்றில் இப்படியான ஒரு நெருப்புக்குள் புகுந்து சொர்க்கத்திற்கு போகும் ஒரு வழி இருந்திருக்கின்றது போல என்று ஒரு கதையை எனக்கு நானே சொல்லியும் இருக்கின்றேன். அந்தக் காலங்களில் கடவுள் அடிக்கடி தோன்றி மனிதர்களை காப்பாற்றிய கதைகள் ஏராளம் உண்டு தானே. சொக்கப்பானையின் நெருப்புக்குள் புகும் மனிதர்களையும் கடவுள் காப்பாற்றினார் ஆக்கும் என்று நான் நினைத்ததில் பெரிய பிழை என்று எதுவும் இல்லை.

நடுவில் பச்சை தென்னை மரம் ஒன்றையே வைத்திருந்தார்கள் என்று நினைக்கின்றேன். நீண்ட காலமாக இந்த நிகழ்வை நேரடியாக பார்க்கும் சந்தர்ப்பங்கள் எனக்கு அமையவில்லை. 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நட்ட தென்னை மரத்தைச் சுற்றி கூம்பு வடிவில் பச்சை தென்னை ஓலைகளை கட்டியிருந்தார்கள். பின்னர் சடங்கு மற்றும் பூசைகளின் பின் அதை எரித்தார்கள். பச்சை ஓலைகள் வெடித்து வெடித்து எரிந்ததும், எரி துகள்கள் மின்னி மின்னிப் பறந்ததும், ஒரு சிறுவன் காற்சட்டையுடன் சற்றுத் தள்ளி நின்று ஆவென்று பார்த்ததும், சுற்றியுள்ள இடங்கள் இருட்டாக இருந்ததும், கார்த்திகை மாத ஈரமும் நேற்று நடந்தவை போல நினைவில் இருக்கின்றது. எரிந்தது தென்னை மரம் என்றபடியால் பனை பற்றிய யோசனையே என்றும் மனதில் எழவில்லை.

சொக்கப்பனை என்ற சொல்லை முதலில் கண்ட போது அது எழுத்துப்பிழை என்றே நினைத்தேன். மக்கள் என்பதைக் கூட மாக்கள் என்று எழுதினாலும், அது மக்களே என்று அனுசரித்து வாசித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு நாங்கள் வந்துவிட்டோம். எழுத்துப்பிழைகள் ஒரு குற்றமே கிடையாது, 'விசயம் விளங்குது தானே.....................' என்று எழுத்துப்பிழைகளை ஏற்றுக் கொள்வதும், அமெரிக்க ஆங்கிலத்தை ஆங்கிலம் என்று ஏற்றுக் கொள்வதும் ஒன்றே. விசயம் விளங்குது தானே.

நேற்றிரவு கூட பாடசாலையில் தமிழ் படிப்பித்த ஆசிரியர் பற்றி நினைக்க வேண்டியதாக இருந்தது. ஆறாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை அவரே தமிழும், சமயமும் படிப்பித்தார். அவர் எதுவுமே படிப்பிக்கவில்லை என்று தான் நேற்றிரவும் நான் முடிவெடுத்து இருந்தேன். பின்னர் அப்படியே நித்திரை ஆகிவிட்டேன். சொக்கப்பனை பற்றி அவர் வகுப்பில் ஒரு மூச்சுக் கூட விட்டதில்லை. ஆனால் மாக்கள் என்ற சொல்லை அவர் வகுப்பில் சில தடவைகள் சொல்லியிருந்தது இப்போது ஞாபகத்தில் வருகின்றது. அவருக்கு தமிழ் தெரிந்திருக்கின்றது, ஆனால் வகுப்பில் படிப்பிக்க வேண்டும் என்ற விசயம் விளங்கயிருக்கவில்லை போல.

பனை தமிழர்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்த ஒன்று என்கின்றார்கள். பனை ஒன்றை நடுவில் வைத்து, பனை ஓலைகளால் கூம்பாக மூடி எரிப்பதே சொக்கப்பனை என்ற விளக்கத்தை இணையங்களில் பார்த்தேன். சொக்கனின் பனை சொக்கப்பனை. அந்தக் காலத்தில் விவேகானந்தா சபையினரால் நடத்தப்படும் சமயப் பரீட்சைகளில் இப்படி ஒரு கேள்வியையும் கேட்டிருக்கலாம். நான் ஐம்பது வயதுகள் வரும் வரையும் இப்படி விசயம் விளங்காமல் இருந்திருக்க வேண்டியதில்லை.

ஆரியர் திராவிடச் சொத்துகளை எரித்து அழிப்பதற்கு இதை ஒரு வழியாகப் பயன்படுத்தினார்கள் என்கின்றார்கள். சமஸ்கிருத ஆதரவாளர்கள் தமிழை நெருப்பில் தள்ளி விட சொக்கப்பனையை உபயோகித்தார்கள் என்கின்றார்கள். ஆரியம் - திராவிடம் - தேசியம்  அந்த நாட்களில் ஆஸ்பத்திரிகளில் கொடுத்த திரிபோசா மா போன்ற ஒன்று. அந்த மா இலவசமாகக் கிடைத்தது, ஆனால் மனிதர்களை உசாராக வைத்திருக்க உதவியது. ஆனால் நான் சொல்ல வந்த விசயம் அதுவல்ல. சொக்கப்பனையை பிடித்த உடன், மாவளி என்றால் என்ன என்பதே அடுத்த கேள்வியாக எழுந்தது. அடுத்த 50 வருடங்கள் காத்திருக்க முடியாது என்பதால் மாவளியைத் தேடினேன்.

வீட்டுக்கு முன்னால் நாலு திசைகளிலும் நாலு தீபச் சுட்டிகளை வைத்து விட்டு, அதை மூன்று தடவைகள் கைகளைத் தட்டிக் கொண்டு சுற்றவேண்டும். அப்படிச் சுற்றும் போது, 'மாவளி கண் பார். எங்களை கண் பார். எல்லோரையும் கண் பார்..................' என்று பாட வேண்டும். சங்கீத சாரீரம் இல்லாதவர்கள் வசனமாகக் கூட சொல்லிக் கொள்ளலாம். இது எந்த ஊர் வழக்கம் என்று கேட்காதீர்கள். இது எனக்கு தெரிய வரும்போது நான் குடும்பஸ்தனாகி இருந்தேன். அதுவரை காலமும் இப்படி ஒரு பாடல் இருக்கின்றது என்பதே தெரியாமல் இருந்ததற்கு ஆசிரியரை குறை சொல்வதா, பிறந்த வீட்டைக் குறை சொல்வதா, உற்றார் உறவுகள் நட்புகளை குறை சொல்வதா என்று ஒரே குழப்பமாக இருக்கின்றது.

உங்கள் வீட்டில் இன்று என்ன செய்வீர்கள் என்று கேட்டிருக்கின்றார்கள். கொழுக்கட்டை என்ற சொல்லை விட மோதகம் என்னும் சொல் நல்ல ஒரு ஓசையுடன் வருவதால் மோதகம் என்று சொல்லியிருக்கின்றேன். மோதகமா........... அப்படி என்றால் என்ன என்று சிலர் திருப்பிக் கேட்டிருக்கின்றார்கள். கேட்டது தமிழ்நாட்டு நண்பர்கள் தான். அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் வல்லின கொழுக்கட்டை என்ற சொல்லே கைகொடுத்தது. அவர்களில் ஒருவர் தனியே என்னைக் கூட்டிப் போய், 'அது மோதகம் இல்லை சார்....................... மோதஹம்................' என்று மோதகத்தின் ஓசையை ஒரு மந்திரம் போல ஆக்கினார். திராவிடருக்கு கொழுக்கட்டை, ஆரியருக்கு மோதஹம் என்று நான் நினைவில் வைத்துக்கொண்டேன். 

மோதகமா, மோதஹமா அல்லது கொழுக்கட்டையா என்னும் பெயர் பெரிய பிரச்சனையே அல்ல. மாவளி பாடி முடிந்து ஒரு ஐந்து நிமிடங்களின் பின் தான் அந்த வஸ்துவை சாப்பிட முடியும் என்பது தான் நடைமுறை. அதனாலேயே வாழ்வில் மாவளி முக்கிய ஒன்றாகிவிட்டது. கொழுக்கட்டையை காக்க வைக்கும் இந்த மாவளி என்ன சாமியாக இருக்கும் என்று தான் முதல் சந்தேகம் வந்தது. பின்னர் தான் இதுவும் பனையின் பொருட்களில் இருந்து செய்யப்படும் ஒன்று என்று தெரிந்தது. மேலே படத்தில் இருப்பது. பனையின் பூக்களை பதமாக எரித்து விறகாக்கி, பச்சை பனை மட்டையை இடையில் மூன்றாகப் பிளந்து, அதற்குள் பூ விறகை வைத்துக் கட்டி, எரித்து, தலைக்கு மேல் வேகமாகச் சுற்றும் ஒரு தமிழர் பாரம்பரியமே விளக்கீடு அன்று மாவளி செய்து சுற்றுதல் என்று தகவல்கள் சொல்கின்றன.

தமிழர் சமூகங்களில் மிகப் பழைய காலத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்றால், முழுக் கல்லை தூக்கு, அரைவட்டக் கல்லை தூக்கு, குஸ்தி போடு என்று எல்லாம் சொல்வார்களாம். இந்த விடயத்துக்காக ஆரியர்கள் வில்லையே வளைத்து இருக்கின்றார்கள். அந்த நாட்களில் எங்கள் முன்னோர்கள் விளக்கீடு அன்று கொழுக்கட்டை வேண்டும் என்றால் மாவளி செய்து, கொழுத்தி, தலைக்கு மேல சுற்று என்றும் சொல்லியிருப்பார்கள் போல. வீரப் பரம்பரை தான், சந்தேகமே இல்லை, ஆனால் மாவளியையே சுற்றிக் கொண்டிருந்திருக்காமால், வெடிமருந்தையும் கண்டு பிடித்திருக்கலாம்.          

     

Checked
Tue, 03/17/2026 - 19:17
சமூகச் சாளரம் Latest Topics
Subscribe to சமூகச் சாளரம் feed