அரசியல் அலசல்

கருத்துச் சுதந்திரமா?  அது கிரிமினல் குற்றம்

3 months 2 weeks ago
கருத்துச் சுதந்திரமா?  அது கிரிமினல் குற்றம்
 
சமூக வலைத்தளங்களில் பொய்யான கூற்றுகளை அறிவிக்கின்ற நபர்களுக்கு அத்தகைய கூற்றுகள் அறிவிக்கப்படுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தவும், பணிப்புரை வழங்கவும் தடை செய்யப்பட்ட கூற்றொன்றைக் கொண்டுள்ள நிகழ்நிலை அமைவிடமொன்றுக்குள் (online location) இந்த ஆணைக்குழு உறுப்பினர்கள் பிரவேசித்து விசாரணை நடத்தும் சந்தர்ப்பத்தைப் பெற்றிருக்கின்றனர்.  

அரசாங்கத்தால் அவசரமாக முன்மொழியப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தின் ஆபத்துக்களை ஊடக அமைப்புகளும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டியபோதும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அதனைச் செவிமடுக்கும் நிலையில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 12 (1) ஆவது சரத்தை வெவ்வேறு வழிகளில் மீறுவதற்கு இடமளிக்கக்கூடும் என்று ஊடக அமைப்புகள் எச்சரித்துள்ளன. இணையப் பாதுகாப்பு எனப்படும் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை மீறும் ஒருவர் கிரிமினல் குற்றவாளியாகக் கருதப்படும் ஆபத்தும் உண்டு.
கருத்துச் சுதந்திர மீறல் என்பது கிரிமினல் குற்றச்சாட்டாக நிரூபிக்கப்பட்டால், ஒருவருக்கு ஆகக் குறைந்தது இருபது வருடங்கள் வரை சிறைத் தண்டனை வழங்க முடியும்.

செய்தி அல்லது ஒரு தகவல் தவறான முறையில் வெளியிடப்பட்டிருந்தால் அதனைத் திருத்துவதற்கு அல்லது தண்டிப்பதற்கு வேறு வழிகள் உண்டு. ஆனால் இச் சட்ட மூலம் எந்த ஒரு சாதாரண பொதுமகனும் சிந்திப்பதைத் தடுக்கிறது.

நிகழ்நிலை காப்பு நகல் சட்டமூலம் (Online Safety Bill) அரச வர்த்தமானியில் சென்ற வருடம் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நகல் சட்ட மூலத்துக்கு எதிராகச் சுமார் நாற்பத்து ஐந்து மனுக்கள் இலங்கை ஒற்றையாட்சி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அவற்றைப் பரிசீலனைக்கு உட்படுத்தியிருந்த நீதியரசர்கள் சில திருத்தங்களோடு நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையோடு நிறைவேற்ற முடியும் என்று சபாநாயகருக்கு அறிவித்திருந்தனர்.

ஆனால் 23 ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட குறித்த நகல் சட்டமூலத்தில் உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகள் சேர்க்கப்படவில்லை. அதுபற்றி விவாதிக்கவும் இல்லை.

எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்களும் ஏற்றுக் கொள்ளப்படாமல் இச் சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு 46 மேலதிக வாக்குகளினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

இச் சட்டம் குறித்து ஊடகவியலாளர்கள், சமூகவலைத்தள செயற்பாட்டாளர்கள் மாத்திரமல்ல வர்த்தகர்களும் அரசசார்பற்ற நிறுவனங்களும் அச்சமடைந்துள்ளன.

மூன்று வருடங்கள் பதவிக்காலம் கொண்ட ஐந்து பேர் கொண்ட Online Safety Commission எனப்படும் நிகழ்நிலை காப்பு ஆணைக்குழு ஒன்றை அமைத்துச் சில தொடர்பாடல்களை தடை செய்வது இதன் பிரதான நோக்கமாகும்.

ஐந்து உறுப்பினர்களின் எண்ணிக்கை தேவைகளைப் பொறுத்து மேலும் அதிகரிக்கப்படலாம். ஆணைக்குழு உறுப்பினர்களை ஜனாதிபதியே நியமிப்பார்.

தடை செய்யப்பட்ட நோக்கங்களுக்காக நிகழ்நிலை கணக்குகள் (Online Account) மற்றும் போலி நிகழ்நிலை கணக்குகளை பயன்படுத்துவதை தடுப்பது உள்ளிட்ட சில விடயங்கள் இந்த நகல் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

போலி நிகழ்நிலை கணக்குகள் குறிப்பாக முகநூல், ரூவிற்றர் போன்ற சமூகவலைத்தளங்களை ஒருவர் போலியாக வைத்திருப்பதாக இந்த ஆணைக்கு கருதினால் அல்லது முறைப்பாடு கிடைத்தால் அந்தக் கணக்குகள் தடை செய்யப்படும்.

ஆனால் உண்மையான முகநூல் கணக்கு ஒன்றையும் அரசியல் நோக்கில் இந்த ஆணைக்குழு போலியானது எனக் கூறித் தடை செய்யலாம் என்று ஊடக அமைப்புகள் அச்சம் வெளியிட்டுள்ளன.

ஏனெனில் பிரதான ஊடகங்களில் வெளியிட முடியாத பல விடயங்களை குறிப்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல்சார்ந்த உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், மற்றும் அரசாங்கத்துக்கு விசுவாசமானவர்கள் மேற்கொள்ளும் ஊழல் மற்றும் அதிகாரத் துஸ் பிரயோகங்களை சமூகவலைத்தளங்கள் வெளிப்படுத்துகின்றன.

இதனால் குறித்த சமூகவலைத்தளக் கணக்குகளை இந்த ஆணைக்குழு அரசியல் நோக்கில் திட்டமிட்டுத் தடுக்கக்கூடிய ஏற்பாடுகள் இச் சட்ட மூலத்தில் உண்டு என்பது பகிரங்கமாகும்.

ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தகவல் தொழில்நுட்பவியல், சட்டம், ஆட்சி, சமூக சேவைகள், ஊடகவியல், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் அல்லது முகாமைத்துவ துறைகளின் ஒன்றில் அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் தகைமைகள் மற்றும் அனுபவத்தைக் கொண்டவர்களாக இருப்பர்.

spacer.png

இவ்வாறு நிபுணர்களைக் கொண்ட குறித்த ஆணைக்குழு பிரதான செய்தி ஊடகம் ஒன்றில் வெளியான செய்தி ஒன்றினால் பாதிக்கப்பட்ட அல்லது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட அறிக்கையை வெளியிட்ட நபருக்கு (ஊடகவியலாளருக்கு) அல்லது அவற்றுடன் தொடர்புடைய நபர்களுக்கு எச்சரிக்கை உத்தரவுகளை இந்த ஆணைக்குழு வழங்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.

இந்த எச்சரிக்கைக்கு எதிராக குறித்த செய்தியாளர் அல்லது குறித்த சமூகவலைத்தளச் செயற்பாட்டாளர் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க இயலாது.

அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், அத்தகைய தடை செய்யப்பட்ட அறிக்கையிடலுக்கு பதிலளிப்பதற்கான வாய்ப்பை வழங்குமாறு பணிப்புரை வழங்கவும் முடியும்.

சமூக வலைத்தளங்களில் பொய்யான கூற்றுகளை அறிவிக்கின்ற நபர்களுக்கு அத்தகைய கூற்றுகள் அறிவிக்கப்படுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தவும், பணிப்புரை வழங்கவும் தடை செய்யப்பட்ட கூற்றொன்றைக் கொண்டுள்ள நிகழ்நிலை அமைவிடமொன்றுக்குள் (online location) இந்த ஆணைக்குழு உறுப்பினர்கள் பிரவேசித்து விசாரணை நடத்தும் சந்தர்ப்பத்தைப் பெற்றிருக்கின்றனர்.

அல்லது அத்தகைய நிகழ்நிலை அமைவிடத்தில் இருந்து தடை செய்யப்பட்ட கூற்றை அகற்றுவதற்கு எவரேனும் இணைய சேவை வழங்குநர்களுக்கு அல்லது இணைய இடையீட்டாளர்களுக்கு அறிவித்தல்களை வழங்கவும் நீதிமன்றத்தை அவமதிக்கும் அல்லது நீதித்துறையின் அதிகாரம் மற்றும் பக்கசார்பின்மையின் பேணுகைக்கு பாதகமாகவுள்ள எவையேனும் தொடர்பாடல்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.

இந்த ஐந்து பேர் கொண்ட ஆணைக்குழுவிற்கு எதிராக எந்தவிதமான சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றைத் தொடுக்க முடியாது. இணையத்தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு செயற்பாடுகள் இந்த நகல் சட்டமூலத்தில் குற்றங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கைக்குள் இடம்பெறுகின்ற சம்பவங்கள் தொடர்பாக பொய்யான கூற்றுக்களை பகிர்தல், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான பொய்யான அறிவிப்புகளை செய்தல், கலகத்தை ஏற்படுத்துவதற்காக பொய்யான கூற்றுகள் மூலம் அநாவசியமான முறையில் ஆத்திரமூட்டுதல், பொய்யான கூற்றொன்றின் மூலம் மதக்கூட்டம் ஒன்றைக் குழப்புதல், மத உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்ற திடமான உள்நோக்கத்துடன் போலியான கூற்றுகளை பகிர்தல், மோசடி செய்தல், ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் பொய் கூற்றுகளின் மூலம் வேண்டுமென்றே நிந்தை செய்தல், கலகத்தை அல்லது அரசாங்கத்திற்கு எதிரான குற்றமொன்றை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் பொய்யான அறிவிப்புகளை பரப்புதல், துன்புறுத்தல்களை மேற்கொள்வதற்கான சம்பவங்கள் தொடர்பான கூற்றுகளை தொடர்பாடல் செய்தல் குற்றங்களாகும்.

அத்துடன் சிறுவர் துஸ்பிரயோகம், தவறொன்றைச் செய்வதற்காக தன்னியக்கச் செய் நிரல்களை உருவாக்குதல் அல்லது மாற்றுதல், ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பணிப்புரையுடன் இணங்கி செயற்படத் தவறுதல் என்பன இந்த சட்டத்தின் கீழ் பாரிய குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த சட்டத்தின் கீழ் தவறிழைக்கும் ஒருவருக்கு விளக்கமறியல் உத்தரவை பிறப்பிக்க, அபராதம் விதிக்க அல்லது குறித்த இரண்டு தண்டனைகளையும் ஒரே தடவையில் விதிக்க முடியும் எனவும் இ;ச் சட்டமூலம் தெளிவாகக் கூறுகின்றது.

இதேபோன்றதொரு சட்ட அமைப்பு பிரித்தானியாவில் கடந்த யூலை மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த நான்கு வருடங்களாக பொதுமக்கள். ஊடகத்துறையினர், சமூகவலைத்தளச் செயற்பாட்டாளர்கள் என பலரோடும் கலந்துரையாடியே சட்டம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

எவருக்கும் பாதிப்பில்லாத வகையில் அதேநேரம் இணையப் பாதுகாப்புக்கு ஏற்ற முறையிலும் சமூகவலைத்தளச் செயற்பாட்டாளர்களின் உரிமைகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் பாதிக்காத முறையில் சட்டம் இயற்றப்பட்டிருக்கின்றது.

ஆனால் இலங்கைத்தீவில் இச் சட்டமூலம் உருவாக்கப்பட்டபோது எவருடனும் கலந்துரையாடப்படவில்லை. குறிப்பிட்ட சில சட்டத்தரணிகளும் சட்டமா அதிபர் திணைக்களமும் இச் சட்ட மூலத்தை தயாரித்திருக்கின்றன.

அத்தோடு உயர் நீதிமன்றம் கூட இதனை அங்கீகரித்திருக்கிறது. குறிப்பிட்ட சில சரத்துக்களில் மாத்திரம் நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காக எதிர்வரும் 23 ஆம் திகதி புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்டாலும் ஐந்துபேர் கொண்ட ஆணைக்குழுவை நியமிக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்படுமா அல்லது ஜனாதிபதிக்கு தன்னிச்சையாக நியமிக்கும் அதிகாரம் வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவருக்குமே தெரியாது.

உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்களின் பிரகாரம் திருத்தங்களைச் செய்வதற்குக் கூட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.

போர் நடைபெற்ற 2009 மே மாதம் வரையும் சமூகவலைத்தளங்கள் இலங்கைத்தீவில் பெரியளவில் இயங்கவில்லை. ஆனால் ஊடகங்களைக் கட்டுப்படுத்த குறிப்பாக தமிழ் ஊடகங்களையும் தமிழ் ஊடகவியலாளர்களையும் கட்டுப்படுத்த மிகக் கடுமையான முறையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் வடக்குக் கிழக்கில் நடைமுறைப்படுத்தியிருந்தது.

தமிழ் ஊடகத்துறை விவகாரத்தைக் கையாள இராணுவமும் புலனாய்வுத் துறையும் தன்னிச்சையாகவும் செயற்பட்டிருந்தது.

இதுவரை தமிழ் ஊடகத்துறையைச் சேர்ந்த 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஊடக நிறுவனங்கள் பல தடவைகள் குண்டு வீசித் தாக்கப்பட்டிருக்கின்றன.

1981 ஆம் ஆண்டு யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரையும் தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தை இலங்கை அரசாங்கம் கிரிமினல் குற்றமாகவே ஓரக் கண்ணால் பார்க்கிறது.

ஆனால் தற்போதுதான் சிங்கள ஊடகத்துறையும், சிங்கள சிவில் சமூக அமைப்புகளும், சிங்கள சமூகவலைத்தளச் செயற்பாட்டாளர்களும் கருத்துச் சுத்தந்திரத்தைக் கிரிமினல் குற்றமாகக் கருதக்கூடிய அளவுக்குச் சட்டங்களை இயற்ற முடியுமா என்று கேள்வி எழுப்பி அச்சமடைகின்றனர்.

அதேநேரம் மட்டக்களப்பு மயிலத்தமடுமாதவனை கூளாவடி குளத்துவெட்டை பகுதிகளில் அத்துமீறிப் பயிர் செய்கையிலீடுபடும் சிங்கள விவசாயிகள், இராணுவத்தின் ஒத்துழைப்புடன் போடப்பட்ட மின்வேலிகளில் சிக்கி உயிரிழக்கும் பசுமாடுகள் பற்றிய செய்திகளை வெளியிட சிங்கள ஆங்கில ஊடகங்கள் வெளியிட மறுக்கின்றன.

அவ்வாறு வெளியிட்டாலும் சிங்கள விவசாயிகளைத் தடுக்கும் தமிழ்ப் பயங்கரவாதிகள் என்றே குறிப்பிடுகின்றன.

ஆகவே இச் சட்டமூலத்தை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான கிரிமினல் குற்றம் என்றால், தமிழர்கள் விடயத்தில் சிங்கள ஊடகத்துறையினர் கையாளும் செய்தியிடல் முறையும் கிரிமினல் குற்றமல்லவா?

போர்க் காலத்தில் சில சிங்கள ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதை மறுப்பதற்கில்லை. அவ்வாறு முற்போக்காகச் சிந்திக்கக் கூடிய சிங்கள ஊடகவியலாளர்கள் தற்போது மிகவும் அரிதாகவே உள்ளனர்.

 

http://www.samakalam.com/கருத்துச்-சுதந்திரமா-அ/

 

தமிழரசை சாகடிக்கும்  தலைமைகள்…! 

3 months 2 weeks ago
தமிழரசை சாகடிக்கும்  தலைமைகள்…! 
தமிழரசை சாகடிக்கும்  தலைமைகள்…!      (மௌன உடைவுகள்:68)

 — அழகு குணசீலன் —

தமிழரசுக்கட்சியின் அன்றைய தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் எப்போது “தமிழ்மக்ளை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொன்னாரோ அன்றே இந்தக்கட்சி கலைக்கப்பட்டு இருக்கவேண்டும். தமிழ்மக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய தகைமையை அது இழந்து விட்டது. எஸ்.ஜே.வி.யின் இந்த வார்த்தைகள் கட்சியின்,தலைமைத்துவத்தின் இயலாமையின் வெளிப்பாடு. இந்த இயலாமையை மறைத்து வீரவசனங்களைப்பேசி உசுப்பேத்திய அமிர்தலிங்கம் முதல் மாவை, சம்பந்தர் முதலான கூட்டம் மக்கள் நலன் சார்ந்து அன்றி அரசியல் வியாபாரத்திற்காகவே -பதவிக்காக வண்டியை கொண்டு இழுத்தது.

இந்த நிலையில் கடந்த அரை நூற்றாண்டு கால  தலைமைத்துவ இயலாமை   வட்டுக்கோட்டை தலைநகர் திருகோணமலையில் சந்திக்கு வந்திருக்கிறது. யாழ்.மேலாதிக்கம் அதிகார,பதவி வெறி பிடித்தது என்பதை தமிழரசு நிர்வாகத்தேர்வு  மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. தமிழரசில் தலைவர்தெரிவு பாரம்பரியம் போட்டியற்ற ஏகமனதானது (?) என்று காதிலே பூச்சுத்திய கதை பொய்யாகி ஒரு வாரமாகிறது. இந்த பொய்யை மறைக்க -தவிர்க்க முடியாத நிலையில்  போட்டி இடம்பெறுவது ஜனநாயகமானது என்று மறு வளத்துக்கு கயிறு திணிக்கப்பட்டது. மொத்தத்தில் இங்கு “ஏகமனதும்” இல்லை ஜனநாயகமும் இல்லை. இந்த இரண்டும் கெட்டான் நிலைதான் தமிழரசின் இன்றைய நிலை.

27 ஜனவரி 2024 இல் திருகோணமலையில் நடந்த பொதுச்சபை கூட்டத்தில் அனைத்து சாணக்கியங்களும், குள்ளத்தனங்களும், சுத்துமாத்துக்களும்  அரங்கேற்றப்பட்டுள்ளன. பதவி வெறிக்கு கிழக்குமாகாண மக்களை பயன்படுத்துவதும், பலிக்கடாவாக்குவதும்  யாழ்ப்பாண  அரசியல் தலைமைகளின் வரலாறு. அதுவே ஆயுதப்போராட்டத்திலும் கொலைவெறியாகத் தொடர்ந்தது. தட்டிக்கேட்ட கிழக்குமாகாண மக்கள், சிவில் சமூகத்தினர், சமூகச்செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், புத்திஜீவிகள் துரோகிகளாக பட்டம் சூட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்கள். வால்பிடித்த கோடரிக்காம்புகளுக்கு பட்டம், பதவி வழங்கி ஆராதனை செய்யப்பட்டது.

ஜீ.ஜீ.பொன்னம்பலம் மந்திரி பதவிக்கு மலையக மக்களை அரசியல் அநாதைகளாக்கினார். தனக்கு தலைமைப்பதவிக்காக எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தமிழரசுக்கட்சியை ஆரம்பித்தார். அ. அமிர்தலிங்கம் இராசதுரையின் தலைமைப்பதவியை தடுக்க காசி ஆனந்தனை கருவியாக்கினார். தொடர்ந்த இந்த பதவிவெறி வே.பிரபாகரனையும் விட்டு வைக்கவில்லை. இவர் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும். யாழ்.மையவாதத்தின் இரத்தம் இவருக்கும் தானே ஓடியது.

இந்த பதவிவெறி குணாம்சம் இன்னும் முடிந்த பாடில்லை. இரா.சம்பந்தர்  எம்.பி. பதவியிலும், கூட்டமைப்பு பதவியிலும் இருக்க சாகாவரம்பெற்றவராம். மாவை சேனாதிராஜாவுக்கு தமிழரசின் தலைமைப்பதவியை விட்டு சுயமாக விலகும் எண்ணம்  துளியும் இல்லை.

ஜனவரி 21, தலைவர் தெரிவுக்கு முன்னர் மத்திய குழுவை கூட்ட மாவை எடுத்த முயற்சி செயலாளர் சத்தியலிங்கம் சுகவீனம் (?) என்று அறிவித்ததால் சாத்தியப்படவில்லை. இதன்  உள்ளார்ந்த நோக்கம் சூழ்நிலையைப் பயன்படுத்தி தலைவர் தெரிவை பின்போடுவது. தானே தலைவர் பதவியில் தொடர்வது. ஜனவரி 27. பொதுச்சபை கூட்ட குழப்ப சூழல்  அதை அவருக்கு சாத்தியப்படுத்தியிருக்கிறது.

 பதவி ஆசை தில்லுமுல்லுகளுக்கு மத்தியில் நிர்வாகத்தெரிவை செல்லுபடியற்றதாக்கி, ஜனவரி 28 இல் நடக்கவிருந்த தமிழரசுக்கட்சி மாநாட்டை காலவரையின்றி பின்போட்டிருக்கிறார் மாவை. பழம் நழுவி பாலில் விழுந்த கதை. இதன் விளைவுகள் என்ன?  தமிழரசுக்கட்சிக்கு மாவை சேனாதிராஜாவே உத்தியோகபூர்வ தலைவராக தொடர்வார். புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.சிறிதரன் பதவி ஏற்கும் வரை உத்தியோகபூர்வ தலைவர் அல்ல.  சிறிதரனுக்கு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை. ஆக, 21ம்திகதிக்கு முந்திய “பாரிசவாத” தமிழரசுக்கட்சி நிருவாகம்தான் இன்னும் தமிழரசுக்கட்சி நிருவாகம்.

ஜனவரி 27 சனிக்கிழமை அன்று திருகோணமலையில் நடந்திருப்பது என்ன? தமிழரசுக்கட்சியின் தலைவர் வடக்கை (யாழ்ப்பாணம்) சேர்ந்தவராக இருந்தால் செயலாளர் கிழக்கை (மட்டக்களப்பை) சேர்ந்தவராக இருக்கவேண்டும். இதை  மட்டக்களப்பு தமிழரசாரே எழுதாத நியதியாக இதுவரை பெருமையடித்துக் கொண்டார்கள். ஒருவகையில் இந்த நியதி தலைமையை வடக்கில் வைத்துக்கொள்வதற்கான ஒரு பொறி. இது இனிப்பு முலாம் பூசப்பட்ட கசப்பு. பெருமையடிக்க  இதில் எதுவும் இல்லை. உண்மையில் இதன் உள்நோக்கம் எப்போதும்  யாழ்ப்பாணத்துக்கே தலைமைப்பதவி. மட்டக்களப்புக்கு செயலாளர் என்பதுதான். இது உண்மை இல்லை என்றால் சி.மு.இராசமாணிக்கத்திற்கு முன்னரும், அல்லது பின்னரும் தலைவராக  கிழக்கு மாகாணத்தவர் தெரிவு செய்யப்படாதது ஏன்? என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது.  கடந்த 50 ஆண்டுகளாக கிழக்குக்கு  தலைமைப்பதவி உரிமை மறுக்கப்பட்டுவந்துள்ளது . 

தலைமைப்பதவிக்கு போட்டியிடவிருந்த சீ.யோகேஸ்வரன் சிறிதரனுக்கு ஆதரவு வழங்கியதால் கிழக்குமாகாண வாக்குகளால் சிறிதரன் சுமந்திரனை இலகுவாக வெற்றி பெற முடிந்தது. அதே வேளை  வேட்பாளர் யோகேஸ்வரன் தொடர்பாகவும், அவர் சிறிதரனுக்கு ஆதரவளிப்பது தொடர்பாகவும்  நடுநிலை தவறிய சுமந்திரனின் ஆதரவாளரான  மேலாண்மை சிவஞானம்  யோகேஸ்வரனை டம்மி என்று “இழக்காரமாக” பேசியிருந்தார். இது நடந்தும் சூடு,சொரணை இன்றி ஏதாவது ஒரு பதவிக்காத யோகேஸ்வரன் அன் கோ இன்னும் திருகோணமலைக்கு காவடி எடுக்கிறார்கள்.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனின் பெயரை பொதுச்செயலாளர் வேட்பாளராக அறிவித்தவர் மட்டக்களப்பு முன்னாள் எம்.பி. அரியநேத்திரன். இவர்கள் தலைவர் தெரிவில் சிறிதரனை ஆதரித்தவர்கள் என்பதால் அதைத் தடுப்பதற்கான “சகுனி” திட்டத்தை சாணக்கியனும்,சுமந்திரனும் சேர்ந்து தீட்டினர். கூட்டத்தில் சாணக்கியனின் ஆதரவுடன் தான் செயலாளராக வருவதற்கு முயற்சி செய்துள்ளார் சுமந்திரன். கிழக்குக்கு  வழங்கப்பட்ட போடுகாய் செயலாளரையும் சுருட்டும் எண்ணம். இது யாழ்மேலாதிக்க பிரதேசவாதமாகிவிடும் என்று பலரும் மந்திரம் ஓதியதால் பிளான் “B” யில் இறங்கினார்கள் சகுனிகள்.

அம்பாறை மாவட்ட தமிழரசுக்கட்சி தலைவர் கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி தலைவர் சாணக்கியன், திருகோணமலை மாவட்ட தமிழரசுக்கட்சி தலைவர் குகதாசன் இவர்களில் ஒருவர் செயலாளராக தெரிவு செய்யப்படுவதே சரியானது என்று வாதாடியுள்ளார் சுமந்திரன். நிரபராதியை குற்றவாளி என்று உள்ளே தள்ளுவதை தொழிலாக கொண்டவருக்கு இதில்  வாதாடுவதில் என்ன கஷ்டம் கிடக்குது?

இந்த மூவரில் தான் சீனியர் எனக்குத்தான் செயலாளர் பதவி என்று தனக்குத்தானே குகதாசனும் ஆஜரானார். எப்படியோ சிறிநேசன் செயலாளராவதை தடுப்பதே சகுனிகளின் திட்டம். யோகேஸ்வரன் அணி பலமாக இருந்ததாலும், மட்டக்களப்புக்கு நன்றிக் கடன்செலுத்த வேண்டிய தேவை சிறிதரன் தரப்புக்கு இருந்ததாலும்  பிளான்” B”  பிசுபிசுத்தது. ஆனால் சிறிதரனுக்கோ தான் பதவி ஏற்பதற்கு பொதுச்சபை கூடியாகவேண்டும் என்பதால், ஒரு கட்டத்தில் சிறிநேசனை குகதாசனுக்கு விட்டுக்கொடுக்க சொன்னதால் மட்டக்களப்பார் ஆத்திரம் அடைந்திருக்கிறார்கள். கூட்டத்தில் குழப்பமும் கூச்சலும் ….. தனது பதவியை தக்க வைக்க தன்னை ஏற்றிய கிழக்கு ஏணியை தள்ளிவிடும் தந்திரோபாயம்.

 கூட்டத்தில் நிலவிய குழப்பத்தால் மாவை சேனாதிராஜா கூட்டத்தை காலவரையின்றி ஒத்தி வைத்ததும் ஒருபகுதி உறுப்பினர்கள் மண்டபத்தை விட்டு வெளியேறிய நிலையில் மாவையையும் மீறி கூட்டத்தை நடாத்தி இருக்கிறார் சுமந்திரன். அந்த வாக்கெடுப்பில் தான் குகதாசன் 113 வாக்குகளையும், சிறிநேசன் 104 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதில் வாக்குகளை கணக்கிட்ட (கைஉயர்த்தும் வாக்கெடுப்பு) சுமந்திரன் இரண்டு கைகளை உயர்த்தியவர்களையும், அங்கத்தவர்கள் அற்ற மண்டபத்தில் உணவு பரிமாற்றம், மற்றும் கடமையில் இருந்தவர்களின் கைகளையும் சேர்த்து கணக்கிட்டுள்ளார்.  இந்த சுமந்திரன்தான்  இணைய வழி பாதுகாப்பு சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் வாசிக்க தெரியாதவர்கள் என்று பாராளுமன்றத்தில் பேசியவர். இவருக்கு கணக்கு. … ? தெரிந்ததெல்லாம் கள்ளக்கணக்கு!

இந்த குளறுபடியில் மாவை திட்டவட்டமாக கூட்டத்தைப்பின்போட்ட நிலையில் “கட்சிக்கு எதிராக வழக்குப்போடுவேன்” என்று தனது அப்புக்காத்து தனத்தையும் காட்டியுள்ளார். “ஏலுமென்டால் போடு மேன்” என்றாராம் சிறிதரன்.

இதற்கெல்லாம் முன்னர் நிர்வாகத்தேர்வை மத்திய குழு தேர்வு செய்து பட்டியலை பொதுச்சபையில் வாசித்தபோது பொதுச்சபை மத்திய குழுவின் நியமனங்களை நிராகரித்து செயலாளர் பதவிக்கு வாக்கெடுப்பு கோரியுள்ளது. அந்த கணக்கெடுப்பில்தான் சட்டாம்பி தப்புக்கணக்கு போட்டுள்ளார். மத்திய குழு பட்டியலில் பொதுச்செயலாளராக குகதாசன். சிறிநேசனுக்கு இணைப்பொருளாளர்பதவி. ஐந்து துணைத்தலைவர்களில் கலையரசன், அரியநேத்திரன் இருவர். ஐந்து இணைச்செயலாளர்களில் சாணக்கியனும், சரவணபவனும்.  மட்டக்களப்பாருக்கான இந்த போடுகாய் பதவிப்பங்கீடட்டிலும் கோஷ்டி அரசியலையும், குள்ளத்தனங்களையும் காணமுடிகிறது. செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட சிறிநேசனுக்கு இணைச்செயலாளர் பதவி கூட வழங்கப்படாத அளவுக்கு கதவுக்கு பின்னால் திட்டம் வலுவாக இருந்துள்ளது.

தமிழரசு யாப்பு என்ன உள்ளடக்கத்தை கொண்டிருந்தாலும், பொதுச்சபையே அதிகாரம் மிக்கது. மத்திய குழுவை நியமிப்பதும் பொதுச்சபைதான். பாரம்பரிய பழக்க தோஷத்தில் பதவிகளை மத்திய குழுவுக்குள் பங்கிட்டுக்கொண்டு அதற்கு பொதுச்சபையில் அங்கீகாரம் கோரியதே அனைத்துக் குழப்பங்களுக்கும் அடிப்படைக்காரணம். அதனால் வெளிப்படைத்தன்மையற்ற, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட இந்த வழிமுறையை பொதுச்சபை நிராகரித்திருக்கிறது.  இதனால் கிழக்குக்கு எதிரான சுமந்திரன் அணியின் திட்டம் தோல்வியில் முடிந்தது.

பழம்பெருமை பேசுகின்ற தமிழரசுக்கட்சி இருபத்தியோராம் ஆண்டின் சமகால அரசியலுக்கு பொருத்தமற்றது. அதனை முற்று முழுதாக இளைய தலைமுறை பொறுப்பு ஏற்று முழுமையான புனரமைப்பைச் செய்யவேண்டும். அது தனது இயலாமையை மக்களுக்கு பகிரங்கமாக அறிவிப்பது மட்டுமன்றி கடந்த 50 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றியதற்கும், யாழ்மையவாதத்தை முதன்மைப்படுத்தி கிழக்கு, மலையக, வன்னி மக்களுக்கான சம உரிமையை மறுத்து ஏமாற்றி போலி அரசியல் செய்ததற்காகவும் பொதுவாக ஒட்டுமொத்த தமிழ்மக்களிடமும் சிறப்பாக கிழக்குமாகாண மக்களிடமும் மன்னிப்புக் கோரவேண்டும்.

இல்லையேல்……

கட்சியை கலைத்துவிட்டு கடையை மூடுவதற்கான காலம் இன்னும் அதிக தூரத்தில் இல்லை.

https://arangamnews.com/?p=10400

சிறீதரனுக்கு முன்னுள்ள பொறுப்புக்கள் – நிலாந்தன்.

3 months 2 weeks ago
சிறீதரனுக்கு முன்னுள்ள பொறுப்புக்கள் – நிலாந்தன்.
January 28, 2024
spacer.png

தமிழரசு கட்சிக்குள் நடந்த தேர்தல் ஏன் முக்கியத்துவமுடையது? செல்வநாயகம் தமிழ் மக்களைக் கடவுளிடம் ஒப்படைத்த பொழுதே அக்கட்சி செயல்பூர்வமாக இறந்து போய்விட்டது. அப்படிப்பட்ட ஒரு கட்சிக்கு யார் தலைவராக வந்தாலும் எதுவும் நடக்கப் போவதில்லை என்று ஒரு விமர்சனம் சமூக வலைத்தளங்களில் வைக்கப்படுகின்றது. கோட்பாட்டு ரீதியாக அது சரி. ஆனால் நடைமுறையில் தமிழரசுக் கட்சி இப்பொழுதும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. உள்ளதில் பெரிய கட்சி அது. தமிழ் மக்கள் மத்தியில் மக்கள் இயக்கம் எதுவும் கிடையாது. இருக்கின்ற கட்சிகளின் பிரதிநிதிகள்தான் தமிழ் அரசியலை முன்னெடுக்கின்றார்கள். அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. இருப்பதை வைத்துத்தான் அரசியல் செய்யலாம். இருப்பதை வைத்துத்தான் அரசியலை எழுதலாம். கற்பனைகளில் இருந்தோ அல்லது விருப்பங்களில் இருந்தோ அரசியலை ஆய்வு செய்ய முடியாது. உள்ளதில் பெரிய கட்சி; அதற்குள் நடக்கும் தேர்தல் என்று பார்க்கும்பொழுது தமிழரசு கட்சிக்குள் நடக்கும் தேர்தலுக்கு முக்கியத்துவம் உண்டு.

அதே சமயம் அது தமிழ் அரசியலின் இயலாமையைக் காட்டும் ஒரு தேர்தல் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஏனென்றால் தமிழ் அரசியல் கட்சி தேர்தல் மைய அரசியலாகச் சுருங்கிபோய் இருப்பதை அது காட்டுகின்றது. இது முதலாவது காரணம். இரண்டாவது காரணம், தமிழரசுக் கட்சியின் ஆங்கிலப் பெயர் சமஸ்டி கட்சி. அதற்கு இப்பொழுது 73 வயது. 73 ஆண்டுகளாக கட்சி தன் பெயரில் வைத்துக் கொண்டிருக்கும் சமஸ்டியை அடைய முடியவில்லை. எனவே அதன் தேர்தல் வாக்குறுதிகள், இலட்சியங்கள் என்பவற்றின் அடிப்படையில் சொன்னால், தமிழரசுக் கட்சி ஒரு தோல்வியுற்ற கட்சி. அதன் புதிய தலைவர் கட்சியை வெற்றிப் பாதையில் செலுத்துவாரா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

spacer.png

அவர் கடந்த 73 ஆண்டு கால தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதுபோல, அண்மையில் கட்சிக்குள் நடந்த தேர்தலில் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும்.

73 ஆண்டு கால தோல்விக்குக் காரணம் தமிழரசுக் கட்சியிடம் பொருத்தமான வினைத்திறன் மிக்க வழிவரைபடம் இருக்கவில்லை என்பதுதான். விக்னேஸ்வரன் கூறுவது போல எல்லாருமே சமஸ்டிப் பண்புடைய தீர்வைதான் கேட்கின்றார்கள். ஆனால் ஒருவரிடமும் சமஷ்டிக்கான வழிவரைபடம் கிடையாது. சமஸ்டியை எப்படி அடைவது?

நிச்சயமாக நாடாளுமன்ற அரசியலுக்கு ஊடாக மட்டும் அடைய முடியாது. நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியே ஒரு மக்கள் இயக்கம் தேவை. அதே சமயம் அந்த மக்கள் இயக்கத்தின் வழிநடத்தலின் கீழ் பொருத்தமான ஒரு வெளிவிவகாரக் கொள்கையை முன்னெடுக்கும் வினைத்திறன் மிக்க ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்பு வேண்டும்.

ஏனென்றால், எல்லாத் தேசிய இனப் பிரச்சினைகளும் சாராம்சத்தில் பிராந்திய மற்றும் அனைத்துலகப் பிரச்சினைகள்தான். அவற்றுக்கு அனைத்துலகத் தீர்வுதான் உண்டு. அவை உள்நாட்டுப் பிரச்சினைகள் அல்ல. உள்நாட்டுப் பிரச்சினை ஒன்றை வெளிநாடுகள் கையாளும்போது அது அனைத்துலகப் பரிமாணத்தைப் பெறுகின்றது. எனவே வெளிநாடுகளின் அழுத்தத்தால்தான் அதற்குத் தீர்வு வரும். இந்த அடிப்படையில் பார்த்தால்,வெளிநாடுகளைக் கையாள்வதற்குத் தேவையான பொருத்தமான வினைத்திறன்மிக்க ஒரு வெளியுறவுத் தரிசனமும் வெளியுறவுக் கட்டமைப்பும் வேண்டும். தமிழ் அரசியலில் அப்படியேதும் உண்டா?

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் இந்தச் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். சிறீதரன் இப்பொழுது ஒரு மாவட்டத்தின் பிரதிநிதி மட்டுமல்ல. அவர் ஒரு கட்சியின் தலைவர். எனவே மூன்று தளங்களில் அவர் ஒருங்கிணைப்பைச் செய்ய வேண்டும்.

முதலாவதாக, கட்சிக்குள் ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும். தேர்தலின் விளைவாக கட்சி துருவமயப்பட்டிருக்கிறது. இரண்டு பகை அணிகளையும் ஒன்றாகச் சேர்ந்து செயல்படும் ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டும். தேர்தலை நடத்தி ஒரு தலைவரை தேர்வு செய்த விடயத்தில் தமிழரசுக் கட்சி ஒரு முன்னுதாரணத்தை ஏனைய கட்சிகளுக்குக் காட்டியிருக்கின்றது. பெருமளவுக்கு பரம்பரை பரம்பரையாக வரும் தலைவர்களையும் கேள்விக்கிடமற்ற தலைவர்களையும் கொண்ட ஒரு பிராந்தியத்தில், தமிழரசுக் கட்சியின் முன்னுதாரணம் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளும் பின்பற்ற வேண்டிய ஒன்று. தேர்தலில் தோற்ற தரப்பு கட்சியை விட்டு வெளியேறினால், அந்தத் தேர்தல் மூலம் வெளிப்படுத்தப்பட்ட ஜனநாயக மாண்பு சிதைந்து விடும். சுமந்திரன் அனைத்துலகத் தொடர்புகளை அதிகமாக வைத்திருப்பவர். அது ஒரு வளம். ஒரு வெளியுறவுக் கட்டமைப்புக்குள் அவருக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு வெளியுறவுக் கொள்கைக்கு அவர் பொறுப்புக்கூற வேண்டும்.

ஒரு தேர்தலை நோக்கி நிலைமைகளை நகர்த்தியவர் அவர்தான். ஏனெனில் வெற்றி தனக்கே என்று அவர் திட்டவட்டமாக நம்பினார். அதற்காக அவர் பல ஆண்டுகள் உழைத்துமிருக்கிறார். சிறீதரன் அவமானகரமான ஒரு தோல்வியைத் தழுவுவார் என்று சுமந்திரனின் ஆதரவாளர்கள் தொடக்கத்தில் நம்பினார்கள். ஆனால் சிறீதரன் கடுமையாக உழைத்தார். அவருடைய பிரதான பலம் கிளிநொச்சியில் இருக்கின்றது. அதோடு, மட்டக்களப்பு தொடக்கத்திலிருந்து அவரோடு நின்றது. சிறுதொகுதி உறுப்பினர்கள் சாணக்கியனோடு நின்றார்கள். ஏனையவர்கள் திட்டவட்டமாக சிறிதரனை ஆதரித்தார்கள். வெற்றிக்குரிய அடிப்படை வாக்குகளில் மட்டக்களப்பு வாக்குகள் உண்டு.
அடுத்தது, யாழ்ப்பாணம் தீவுப்பகுதி. அமிர்தலிங்கத்திற்கும் காவலூர் நவரத்தினத்துக்கும் இடையிலான பகிரங்க விவாதத்தில் தொடங்கி தீவுப் பகுதிக்கு என்று சிறப்பான முன்னுதாரணங்கள் உண்டு. நவரத்தினம் தனிநாட்டுக் கோரிக்கையின் பிதாக்களில் ஒருவர். பலமான தமிழரசுக் கட்சியின் தலைமையை அவர் எதிர்த்தார். அவரோடு பக்கபலமாய் நின்றவர்கள் அநேகர் தீவுகளைச் சேர்ந்தவர்கள்தான். அண்மையில் கட்சிக்குள் நடந்த தேர்தலில் தீவுப்பகுதி உறுப்பினர்கள் ஒரு சிறிய தொகை. எனினும் அச்சிறு தொகை அசையாது சிறீதரனோடு நின்றது. இவைதவிர கடைசி நேரத்தில் வெல்பவரின் பக்கம் சாய்பவர்கள் சிறீதரனை வெற்றிபெற வைத்தார்கள். சிறீதரன் அதற்காகத் திட்டமிட்டு உழைத்தார். வெல்லமுடியும் என்ற நம்பிக்கையை அவர் தொடக்கத்திலிருந்து இழக்கவில்லை.

spacer.png

அதை ஒரு கொள்கை வெற்றி என்று கூறுவது மிகைப்படுத்தலாக இருக்கலாம். தமிழரசுக் கட்சி மட்டுமல்ல ஏனைய கட்சிகளுக்குள்ளும் விசுவாசக் கட்டமைப்புகள் கொள்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படவில்லை. அவை நலன்களின் அடிப்படையில்தான் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றன. தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் நேர்மையானவர்கள்? எத்தனை பேர் தேசியம் என்றால் என்ன என்பதனை அதன் நடைமுறை அர்த்தத்தில் விளங்கி வைத்திருக்கிறார்கள்? கடந்த 15 ஆண்டுகளில் தேசியம் எனப்படுவது திருடர்களும் பொய்யர்களும் பாலியல் குற்றவாளிகளும் எடுத்தணியும் முகமூடியாக மாறியிருக்கிறது.

இதை இவ்வாறு கூறுவதன்மூலம் தமிழரசுக் கட்சிக்குள் இருக்கக்கூடிய நேர்மையான தேசியவாதிகளை இக்கட்டுரை கொச்சைப்படுத்தவில்லை. ஆனால் அது ஒரு பொதுப்போக்கு. கடந்த 15 ஆண்டு கால தேசிய நீக்க அரசியலின் விளைவு. எனவே கட்சியை கொள்கை ரீதியாக வார்த்தெடுக்க வேண்டிய ஒரு பொறுப்பு சிறீதரனுக்கு உண்டு. அவர் இப்பொழுது தனது சொந்த வெற்றியின் கைதி. தனக்குக் கிடைத்த வெற்றி கொள்கை வெற்றிதான் என்று அவர் நிரூபித்துக்காட்ட வேண்டும். இது முதலாவதாக சிறீதரன் செய்ய வேண்டியது. அதாவது கட்சிக்குள் கூட்டொருமைப்பாட்டை ஆகக்கூடியபட்சம் கட்டியெழுப்புவது.

இரண்டாவதாக, சிறீதரன் தனது சொந்த மாவட்டத்திலேயே தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்க வேண்டும். அங்கே அவர் அரசியலை துருவமயப்படுத்தி வைத்திருக்கின்றார். தமிழரசுக் கட்சியின் ஏனைய மாவட்டக் கிளைகளோடு ஒப்பிடுகையில், கிளிநொச்சியில்தான் துரோகி-தியாகி என்ற உரையாடல் அதிகமாக உண்டு. அதற்குக் காரணம் சந்திரகுமாரின் சமத்துவக் கட்சி அங்கே ஒரு பலமான வாக்குத் தளத்தைக் கொண்டிருப்பதுதான். அதற்கு ஒரு பலமான காரணம் உண்டு.

கிளிநொச்சி போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இறுதிக்கட்டத் தலைநகரமாக இருந்தது. 2009க்குப் பின் அங்குள்ள புனர்வாழ்வு பெற்ற போராளிகளில் ஒரு பகுதியினருக்குச் சந்திரக்குமார் பெருமளவுக்குப் புகலிடம் கொடுத்தார்; பாதுகாப்புக் கொடுத்தார்; தொழில் கொடுத்தார். அவ்வாறு அவரால் அரவணைக்கப்பட்ட முன்னாள் இயக்கத்தவர்கள் பலர் முன்பு இயக்கத்தில் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்தவர்கள். அந்த ஊரவரல்லாத சந்திரக்குமாருக்கு அவர்கள் பலமான ஒரு வாக்குத்தளத்தைக் கட்டியெழுப்பினார்கள். சந்திரகுமாரின் சமத்துவக் கட்சியில் மாவட்ட அமைப்பாளரும் உட்பட முக்கிய பொறுப்புக்களில் பல முன்னாள் புலிகள் இயக்கத்தவர்கள் உண்டு. தமிழ்த் தேசியப் பரப்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கு வெளியே அதிகம் முன்னாள் விடுதலைப் புலிகளைக் கொண்ட கட்சி சமத்துவக் கட்சிதான்.

மேலும் சந்திரக்குமார் அங்கே பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் அதிகமாக வேலை செய்திருக்கிறார். அவருடையது அபிவிருத்தி மைய அரசியல். இவ்வாறு சிறீதரனின் சொந்த மாவட்டத்துக்குள்ளேயே அவருக்குச் சவாலாக பலமான எதிர் வாக்குத்தளம் உண்டு. அது இனப்படுகொலையாளிகளின் வாக்குவங்கி என்று கூறி முத்திரை குத்திவிட்டுப் போக முடியாது. அல்லது தியாகி-துரோகி என்ற அளவுகோல்களால் அதை மதிப்பிடவும் முடியாது. இந்த விடயத்தில் சிறீதரன் பண்புருமாற்றம் ஒன்றுக்குத் தலைமை தாங்கத் தயாராக இருக்க வேண்டும்.இது இரண்டாவது.

மூன்றாவது,கட்சிகளை ஒருங்கிணைப்பது. 2009க்கு முன் இருந்த அதே ஐக்கியத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. கடந்த 15 ஆண்டுகால அனுபவத்தின் அடிப்படையில் தேசத் திரட்சியை எப்படிப் பாதுகாப்பது என்று சிந்திக்க வேண்டும். எல்லாவற்றையும் கடடமைப்புக்குள்ளால் சிந்திக்க வேண்டும். குறைந்தபட்சம்வெளி விவகாரத்திலாவது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தேசிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இந்தியாவையும் ஐநாவையும் மேற்கு நாடுகளையும் அக்கட்டமைப்புத்தான் கையாள வேண்டும். தனிநபர்கள் தனியோட்டம் ஓடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. அது சிறீதரனுக்கும் பொருந்தும்.

எனவே சிறீதரன் முதலில் கட்சிக்குள் துருவ நிலைப்பட்டிருக்கும் உறுப்பினர்களை ஒரு திரளாக வார்த்தெடுக்க வேண்டும். ஒரு கூட்டுணர்வை உருவாக்கவேண்டும். இரண்டாவதாக, தனது மாவட்டத்தில் அதைச் செய்ய வேண்டும். மூன்றாவதாக,தேசிய மட்டத்தில் அதைச் செய்யவேண்டும். அதாவது ஒரு பண்புரு மாற்றத்திற்குத் தலைமை தாங்க வேண்டும்.அதற்கவர் தயாரா?



https://globaltamilnews.net/2024/200153/

 

சமனற்ற நீதி ? – நிலாந்தன்.

3 months 2 weeks ago
Unequal-justice.jpg?resize=750,375&ssl=1 சமனற்ற நீதி ? – நிலாந்தன்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் மண்டபத்தில் ஒரு வெளியீட்டு விழா நடந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த ஈழத் தமிழராகிய ராஜ் ராஜரத்தினத்தின் “சமனற்ற நீதி” என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம் அது.

ராஜ் ராஜரத்தினம் அமெரிக்காவில் துலங்கிக் கொண்டு மேலெழுந்த ஒரு பங்குச்சந்தை வர்த்தகர். உலகப் பணக்காரர்கள் வரிசையில் முன்னணியில் நிற்கும் தமிழர்களில் ஒருவர். அவர் பங்குச்சந்தை வியாபாரத்தில் “இன்சைடர் ரேடிங் ” என்று ஆங்கிலத்தில் கூறப்படும் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் தொடர்பான ரகசிய தகவல்களைக் கசியவிடுவதன் மூலம் லாபம் ஈட்டும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டு குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர். அவருடைய தண்டனைக் காலத்தின் போது சிறையில் இருந்து எழுதத் தொடங்கிய அந்த நூல் முதலில் ஆங்கிலத்திலும் இப்பொழுது தமிழிலும் வெளி வந்திருக்கிறது.

இந்த நூல் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. முதலாவது அது ஒரு தன் வரலாறு.இரண்டாவதாக, அது ஒரு சட்டப் பரிமாணத்தைக் கொண்ட நூல். மூன்றாவதாக, அது பங்குச்சந்தை வாணிபம் தொடர்பான தகவல்களைக் கொண்ட ஒரு நூல். நான்காவதாக, புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் எப்படிப்பட்ட உச்சங்களைத் தொட்டிருக்கிறது என்பதற்கு உதாரணமாகக் காணப்படும் ஒரு தமிழ் முதலீட்டாளரின் வாக்குமூலம் அது.

இப்பொழுது அந்த நூலைச் சற்று ஆழமாகப் பார்க்கலாம்.ராஜ் ராஜரத்தினத்தின் பூர்வீகம் வடமராட்சியில் உள்ள அல்வாய். அவருடைய தகப்பனின் தொழில் காரணமாக சிறுபிராயத்திலேயே குடும்பம் ஊருக்கு வெளியே பயணம் செய்யத் தொடங்குகின்றது. தன்னுடைய பட்டப்படிப்புகளை மேற்கில் தொடர்கிறார். மிக இளம் வயதிலேயே அமெரிக்க பங்குச் சந்தைக்குள் பிரகாசிக்கத் தொடங்குகிறார். உலகின் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய தமிழ் முதலீட்டாளர்களில் ஒருவராக வெற்றி பெறுகிறார்.

2000 ஆவது ஆண்டின் முதல் தசாப்தத்தின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்கா பொருளாதார மந்த நிலைக்குள் சிக்கியது. அந்த பொருளாதார நெருக்கடியின் போது ராஜ் கைது செய்யப்படுகிறார். அமெரிக்காவின் பொருளாதாரத் தோல்விகளுக்கு ஒரு பலியாட்டை முன் நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது என்றும், அதற்கு தன்னைப் போன்றவர்களை அவர்கள் கைது செய்து தண்டித்ததாகவும், ராஜ் குற்றம் சாட்டுகிறார்.

தன்னை கைது செய்த எஃப்.பி.ஐ அதிகாரிகளுக்கு பங்குச் சந்தை பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை என்றும், தன்னை விசாரித்தவர்களுக்கும் தெரிந்திருக்கவில்லை என்றும், தனது வழக்கறிஞர்களில் பெரும்பாலானவர்களுக்கு அது தெரிந்திருக்கவில்லை என்றும், தன்னைக் குற்றவாளியாகக் கண்ட ஜூரிகளுக்கும் அது தெரிந்திருக்கவில்லை என்றும், தன் மீது புனைவுகளை அவிழ்த்துவிட்ட அமெரிக்காவின் ஸ்தாபிக்கப்பட்ட ஊடகங்களுக்கும் அது பற்றித் தெரிந்திருக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

தன்னோடு கூட இருந்து லாபமடைந்தவர்களும், தன்னோடு நெருக்கமாகப் பழகியவர்களும் தனக்குத் துரோகம் செய்ததாக அந்த நூலில் அவர் விவரிக்கின்றார். அவர்களுடைய பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு என்று ஒவ்வொரு அத்தியாயங்களை ஒதுக்கி, அவர்கள் மீது கடுமையான வார்த்தைகளில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்.

தன்னைக் காட்டிக் கொடுத்தவர்கள் மீது மட்டுமல்ல, அமெரிக்காவின் நீதிபரிபாலானக் கட்டமைப்பையும் அவர் மிகக் கூர்மையான வார்த்தைகளால் விமர்சிக்கின்றார். அந்த அடிப்படையில் இந்த நூல் அமெரிக்காவின் நீதிபதிபாலனக் கட்டமைப்பை, அதன் விசாரணைப் பொறிமுறையை, மிகக் கடுமையாக விமர்சிக்கும் ஒரு நூல் எனலாம். அப்படி ஒரு நூலை அமெரிக்கா எப்படி சகித்துக் கொள்கிறது? அப்படி ஒரு நூல் இலங்கையில் வெளியிடப்பட்டிருந்திருந்தால், அந்த நபர் நீதிமன்ற அவமதிப்பின் கீழே அல்லது வேறு குற்றச்சாட்டுகளின் பெயராலோ மீண்டும் கைது செய்யப்படக்கூடிய ஆபத்து உண்டு. ஆனால் அமெரிக்க ஜனநாயகத்தின் விரிவை அந்த நூல் காட்டுகிறது.

ஒருபுறம் அந்த நூல் அமெரிக்க நீதிபரிபாலான கட்டமைப்பின் மீதான மிகக் கூர்மையான கடும் வார்த்தைகளால் ஆன விமர்சனமாக காணப்படுகின்றது. இன்னொரு புறம்,அந்த நூல் அமெரிக்க ஜனநாயகத்தின் செழிப்பையும் நமக்குக் காட்டுகின்றது.

ராஜ் ராஜரத்தினம் கூறுகிறார், அமெரிக்க நீதி சமனற்றது என்று. அதற்கு அவர் ஆதாரங்களைத் தொகுத்துக் காட்டுகிறார். இன்சைடர் ட்ரேடிங் என்று அழைக்கப்படும் பங்குச் சந்தை உள் விவரங்களைக் கசிய விடுகின்ற, அல்லது உள் ஆட்களின் மூலம் பங்குச் சந்தை உள் விவரங்களை ரகசியமாக திரட்டுகின்ற நடவடிக்கைகள் அமெரிக்காவில் சட்டவிரோதமானவைகளாக இருந்த ஒரு காலகட்டத்தில் அவர் கைது செய்யப்படுகிறார். ஆனால் அதற்காக அமெரிக்கா கையாண்ட வழிமுறைகள் அநீதியானவை என்று அவர் கூறுகிறார். அதே குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்கள் சிலர் கைது செய்யப்படாததையும் அவர் தொகுத்து காட்டுகின்றார். தன்னைக் கைது செய்வதற்காக அமெரிக்க உள்ளகப் புலனாய்வுத் துறை ஆனது தன்னோடு சேர்ந்து வேலை செய்தவர்கள் அல்லது தனக்கு தெரிந்தவர்கள் போன்றவர்களை எவ்வாறு எனக்கு எதிரான சாட்சிகளாக மாற்றியது என்பதையும் அவர் கூறுகிறார். குற்றமழைத்தவர்களை அக்குற்றத்திலிருந்து விடுவிப்பது என்ற வாக்குறுதியின் பெயரில் அரசுதரப்பு சாட்சிகளாக மாற்றும் நடைமுறையை அவர் அம்பலப்படுத்துகின்றார். தனக்கு வழங்கப்பட்ட நீதி சமனற்றது என்பதனை அவர் அந்த நூல் முழுவதிலும் ஸ்தாபிக்கின்றார்.

ஒரு உலகப் பேரரசின் நிதியானது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரிவது போல புனிதமானது அல்ல என்று அவர் நிரூபிக்க முற்படுகின்றார். அது ராஜ்ஜுடைய தனிப்பட்ட அனுபவம். பேரரசுகளின் நீதி அல்லது உலக சமூகத்துக்கு ஜனநாயகத்தை, நீதியை அறத்தைப் போதிக்கும் மேற்கத்திய நாடுகளின் நீதியெனப்படுவது எப்படிப்பட்டது என்பதற்கு வரலாறு முழுவதிலும் உதாரணங்கள் உண்டு.

கிராம்சி கூறுவது போல மேற்கத்திய நாடுகள் தமது நாட்டின் பிரஜைகளுக்கு ஜனநாயகத்தை வழங்குகின்றன. ஆனால் தாங்கள் ஆக்கிரமித்த நாடுகளில் அவை அவ்வாறு நடந்து கொள்ளவில்லை,அல்லது ஆக்கிரமிப்புத் தேவைகளுக்காக அவை தாங்கள் போதிக்கும் ஜனநாயகம், நீதி, அரசியல் அறம் போன்ற எல்லாவற்றையும் தலைகீழாக வியாக்கியானம் செய்கின்றன.

உதாரணமாக ஈராக்கிற்குள் மேற்கு நாடுகள் படையெடுத்தபோது அங்கே மனித குலத்துக்குத் தீங்கான ஆயுதங்கள் இருப்பதாக குற்றம் சாட்டினர். ஆனால் அப்படிப்பட்ட ஆயுதங்கள் அவையும் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அது தொடர்பான உட் தகவல்களை அதில் சம்பந்தப்பட்டவர்களே பின்னாளில் தங்கள் வாக்குமூலங்களின் மூலம் வெளிப்படுத்தினார்கள். ஆனால் ஈராக் சிதைக்கப்பட்டு விட்டது.ஆசியாவின் மிகச் செழிப்பான நாகரிகம் ஒன்று சிதைக்கப்பட்டு விட்டது.அதை சிதைப்பதற்காக கூறப்பட்ட காரணம் உண்மையற்றது.ஆதாரம் அற்றது. இதுதான் மேற்கு நாடுகளின் நீதி.

ஏன் அதிகம் போவான்?காசாவில் இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது? இஸ்ரேல் புரியும் இனப்படுகொலையை எல்லாம் மேற்கு நாடுகளும் மௌனமாக அங்கீகரித்துக் கொண்டிருக்கின்றன. அதற்கு எதிராக ஆப்பிரிக்க நாடாகிய தென்னாபிரிக்கா உலக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றது.உலக நீதிமன்றத்தை ஸ்தாபித்த பொழுது அமெரிக்காவும் பிரித்தானியாவும் பெரிய பங்களிப்பை நல்கின.ஆனால் தென்னாபிரிக்கா தொடுத்திருக்கும் வழக்கிற்கு எந்த ஒரு மேற்கத்திய நாடும் உத்தியோகபூர்வமாக ஆதரவைக் காட்டவில்லை.

இங்கு மேலும் ஒரு உதாரணத்தைக் காட்டலாம். ரஷ்யா உக்ரேனுக்குள் இறங்கிய பொழுது, அதை மேற்கு நாடுகள் எதிர்த்தன. புட்டின் புரிவது இனப்படுகொலை என்று குற்றஞ்சாட்டும் அமெரிக்கா இஸ்ரேல் காசாவில் புரிவது இனப்படுகொலை என்று கூறத் தயார் இல்லை.எனவே இங்கே எது நீதி என்பதனை எது தீர்மானிக்கின்றது?

நிச்சயமாக அறநெறிகளோ நீதி நெறிகளோ அல்ல. அரசுகளின் உலகத்தில் தூய நீதி கிடையாது. அது ஈழத் தமிழர்களுக்கு முன்மொழியப்பட்ட நிலைமாறு கால நீதியாகட்டும் அல்லது ஈழத் தமிழர்கள் கேட்கின்ற பரிகார ரீதியாகட்டும், எதுவானாலும் அது அரசுகளின் நீதிதான். அதாவது அது ஒர் அரசியல் தீர்மானம். அரசுகள் தமது ராணுவ அரசியல் பொருளாதார நோக்கு நிலைகளில் இருந்து தீர்மானங்களை எடுக்கின்றன. நிச்சயமாக அறநெறிகளின் அடிப்படையில் அத் தீர்மானங்கள் எடுக்கப்படுவதில்லை.

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் நேற்றோவின் நோக்குநிலையில் இருந்து எடுக்கப்படுகின்றது.அப்படித்தான் ரஷ்யா கிரீமியாவை ஆக்கிரமித்ததும் நீதியின் அடிப்படையில் அல்ல.அங்குள்ள ரஸ்ய மொழியைப் பேசும் மக்களை பாதுகாப்பதற்காக என்று கூறப்பட்டவை எல்லாம் பிரதான காரணங்கள் அல்ல. பிரதான காரணம் உக்ரைனைப் பலவீனப்படுத்துவது.

இந்தியா பங்களாதேஷை பிரித்தெடுத்தது. அது பங்களாதேஷின் மீது கொண்ட காதலால் அல்ல. பாகிஸ்தானை உடைக்க வேண்டும் என்ற பாதுகாப்பு நோக்கு நிலையில் இருந்து எடுக்கப்பட்ட முடிவு அது.

இங்கே பெரிய நாடு சிறிய நாடு என்ற வேறுபாடு இல்லை. அரசுகள் தங்களுடைய ராணுவ பொருளாதார அரசியல் நோக்குநிலைகளில் இருந்து நீதிகளை வழங்கி வருகின்றன. இப்பொழுது இனப்படுகொலைக்கு உள்ளாகும் பலஸ்தீனம் 2009இல் ஈழத் தமிழர்களின் பக்கம் நின்றதா? இல்லை. போராடி விடுதலை பெற்ற கியூபா ஈழத் தமிழர்களின் பக்கம் நிற்கின்றதா? இல்லை. 1980 களின் பிற்பகுதியில் பலஸ்தீன் அதிகார சபை உருவாக்கப்பட முன்னரான ஒரு காலகட்டத்தில் பலஸ்தீனம் ஈழத் தமிழர்களுக்கு பயிற்சி வழங்கியது. ஆனால் பலஸ்தீன் அதிகார சபை உருவாக்கப்பட்ட பின் அது மஹிந்த ராஜபக்சவுக்குத் தான் நட்பாகக் காணப்படுகின்றது. மஹிந்த ராஜபக்சவுக்கு 2014 ஆம் ஆண்டு அந்நாட்டின் உயர் விருது ஆகிய பலஸ்தீன நட்சத்திரம் விருது வழங்கப்பட்டது. அங்குள்ள வீதி ஒன்றுக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது.இவை அனைத்தும் 2009 மே மாதத்துக்குப் பின் நிகழ்ந்தவை.

எனவே இப்பொழுது நமக்கு தெளிவான ஒரு சித்திரம் கிடைக்கின்றது. அரசுகளின் நீதி எத்தகையது என்று.

ஆனால் ஈழத் தமிழர்கள் அதே அரசுகளிடம்தான் நீதியைக் கேட்டுப் போராடுகிறார்கள். ஐநாவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானங்களைக் கொண்டு வரும் நாடுகள்தான் காசாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராகக் காணப்படுகின்றன. இங்கே யார் யாரை ஆதரிப்பது? எப்பொழுது ஆதரிப்பது? என்பவையெல்லாம் நீதியின் பாற்பட்டு முடிவெடுக்கப்படுவதில்லை. நலன்களின் பாற்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட அரசுகள் அல்லது பேரரசுகள் தனி மனிதர்களுக்கு மட்டும் நீதியை வழங்கும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்?

இப்படிப்பட்டதோர் உலக நீதியின் பின்னணியில், ராஜரத்தினம் எங்கே நமக்கு முக்கியமானவராகத் தெரிகிறார்? அவருக்கு தண்டனை வழங்கப்பட்டு அதை அவர் அனுபவித்த பின்னர்தான் வெளியே வந்திருகிறார்.ஆனால் தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அந்த நூலை எழுதுகிறார்.

அது ஒரு உலகப் பேரரசின் நீதிக்கு எதிரான புத்தகம் மட்டுமல்ல, புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நிதி ரீதியாக உச்சத்தை தொட்ட ஒருவர் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார் என்பது இங்கு முக்கியம். இது புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் தாயகத்தில் வசிப்பவர்களுக்கும் ஒரு கூர்மையான செய்தியை வெளிப்படுத்துகின்றது.முதலாவது செய்தி, ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் கடும் உழைப்பின் மூலம் எந்தளவுக்கு முன்னேறலாம் என்பது. இரண்டாவது செய்தி, நீதிக்காகப் போராடுவதற்கும் நிதிப் பலம் இருக்க வேண்டும் என்பது.

ராஜ் ஒரு கோடீஸ்வரனாக இருந்த காரணத்தால், தனக்கு வழங்கப்பட்ட நீதியை எதிர்த்துப் போராடினார்.அப்படித்தான் ஈழத் தமிழர்களும் நீதி கேட்டுப் போராடுவது என்று சொன்னால், பொருளாதார ரீதியாக தங்களை பலப்படுத்த வேண்டும்.அப்படிப்பட்ட பலம் இல்லாத காரணத்தால்தான் அண்மை மாதங்களாக தாயகத்தில் இருந்து மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் மக்களின் ஜனத்தொகை படிப்படியாகக் கரைந்து போகின்றது. எனவே தமிழ் மக்கள் நிதி ரீதியாகப் பலமானவர்களாக மாற வேண்டும்.புலம் பெயர்ந்த தரப்பில் இருக்கும் முதலீட்டாளர்கள் தாயகத்தில் முதலீடு செய்ய வேண்டும். அந்த முதலீடுகள் கொழும்பின் நோக்கு நிலையில் இருந்தன்றி, தமிழ் நோக்கு நிலையில் இருந்து, தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து, தேச நிர்மாணத்தின் ஒரு பகுதியாக, முதலீடு என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தேசத்தை நிர்மாணிக்கத் தேவையான கட்டமைப்புகளை புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் கட்டியெழுப்ப வேண்டும்.

சமனற்ற நீதி நூல் வெளியீட்டின் போது நான் ஆற்றிய உரையில் அதை யூதர்களின் தேசிய நிதியத்யோடு ஒப்பிட்டேன். முதலாவது சியோனிச மாநாடு 1897 ஆம் ஆண்டு இடம்பெற்றது. அதிலிருந்து 5 ஆண்டுகளில் அதாவது 1901 ஆம் ஆண்டு “ஜூவிஸ் நஷனல் ஃபண்ட்” என்று அழைக்கப்படும் யூத தேசிய நிதியம் உருவாக்கப்பட்டது. அந்த நிதியம் தான் இப்போதிருக்கும் இஸ்ரேலைக் கட்டி எழுப்பக் காரணம். அந்த நிதியத்தைப்கபயன்படுத்தி பலஸ்தீனர்களின் நிலங்கள் விலைக்கு வாங்கப்பட்டன.அங்கு கொமியூன்கள் என்று அழைக்கத்தக்க கூட்டுப் பண்ணைகள் உருவாக்கப்பட்டன.அக்கூட்டுப் பண்ணைகளின் விரிவாக்கமே இஸ்ரேல் என்ற நாடு. இந்த விடயத்தில் யூதர்கள் பலஸ்தீன்களை ஏமாற்றினார்கள்;இனப்படுகொலை செய்தார்கள் என்பவையெல்லாம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.

இஸ்ரேலை ஒரு முன்னுதாரணமாகக் காட்டுவதன் மூலம் இக்கட்டுரையானது யூதர்கள் பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்வதை நியாயப்படுத்தவில்லை.ஆனால் புலம்பெயர்ந்த சமூகம் ஒன்று தாயகத்தில் எவ்வாறு ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு நிதி ரீதியாகப் பங்களிப்பை நல்க முடியும் என்பதற்கு அது ஒரு முன்னுதாரணம்.ராஜ் ராஜரட்னத்தைப் போன்ற புலம்பெயர்ந்த தமிழர்களை தேசத்தை நிர்மாணிப்பது ஏன்ற அடிப்படையில் எவ்வாறு தாயகத்தில் முதலீடு செய்ய வைப்பது என்று ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.ஏற்கனவே ஒரு தொகுதி புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் வெவ்வேறு தொழில்துறைகளில் முதலீடு செய்யத் தொடங்கி விட்டார்கள்.இந்த முதலீடுகளை நெறிப்படுத்தக்கூடிய ஒரு கட்டமைப்பை ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களோடு இணைந்து உருவாக்க வேண்டும். எதையும் கட்டமைப்புக்குள்ளால் சிந்திக்க வேண்டும்.அரூபமாகச் சிந்திப்பதால் பயனில்லை. கற்பனைகளில் மிதப்பதால் பயனில்லை. செயலுக்குப் போக வேண்டும்.

நீதிமான்களிடம் தான் எழுத்தமிழர்கள் நீதியைக்கேட்கலாம் என்றால் அதற்கு ஒன்றில் யாகங்கள் செய்ய வேண்டும்,அல்லது பரலோக ராஜ்ஜியத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும்.ஓர் ஆபிரிக்கப் பழமொழி கூறுவதுபோல…. “நீ நீதியாக இருக்கிறாய் என்பதற்காக உலகம் உன்னிடம் நீதியாக நடக்கும் என்று எதிர்பார்க்காதே. அப்படி எதிர்பார்ப்பது, நீ சிங்கத்தைச் சாப்பிட மாட்டாய் என்பதற்காக சிங்கம் உன்னைச் சாப்பிடாது என்று நம்புவதைப் போன்றது.

https://athavannews.com/2024/1367335

சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணத்தை நாடி நிற்கும் அரசாங்கம்

3 months 2 weeks ago

Published By: VISHNU   23 JAN, 2024 | 12:41 PM

image
 

கலாநிதி ஜெகான் பெரேரா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை அதன் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட முறையில் மீண்டும்  முக்கியத்துவத்தைப் பெறத்தொடங்கியிருக்கிறது போன்று தெரிகிறது.

ஆபிரிக்க நாடான உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் தற்போது நடைபெறும் அணிசேரா நாடுகளின் 19 வது உச்சிமாநாட்டிலும் 77 நாடுகள் குழு மற்றும் சீனாவின் மூன்றாவது தெற்கு உச்சிமகாநாட்டிலும் ஜனாதிபதிக்கு  முக்கியத்துவம் வாய்ந்த  இடம் கிடைத்தது. உகண்டா ஜனாதிபதி ஜோவெரி முசவெனியின் அழைப்பின் பேரில் விக்கிரமசிங்க  முக்கியமான சந்திப்புகளில் பங்கேற்றது மாத்திரமல்ல, அணிசேரா உச்சிமாநாட்டிலும் தெற்கு உச்சிமகாநாட்டிலும் உரையாற்றினார் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கம்பாலாவுக்கான தனது விஜயத்தின்போது அவர் ஆபிரிக்க பிராந்தியத்தைச் சேர்ந்த தலைலர்களுடன் இரு தரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதில் முக்கிய கவனத்தைச் செலுத்தியதுடன் தெற்கு உலக நாடுகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

அணிசேரா இயக்கத்தின் 120 தலைவர்களும் ஒன்றாக எடுத்த படத்தில் உச்சிமகாநாட்டை நடத்தும் உகண்டா ஜனாதிபதிக்கு பக்கத்தில் முன்வரிசையில் நின்றதைக் காணக்கூடியதாக இருந்தது. 1976 ஆண்டு  கொழும்பில் பிரதமர் திருமதி சிறிமா பண்டாரநாயக்க அணிசேரா நாடுகளின் உச்சிமகாநாட்டை நடத்தியபோதே இறுதியாக இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் கிடைத்தது. சர்வதேச பொருளாதார நீதிக்கு கோராக்கை விடுத்து அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் நடத்திய ஒரு முக்கியமான மகாநாடாக அது அமைந்தது.

அந்த நேரத்தில் இலங்கை சர்வதேச அரங்கில் பொருளாதார கொள்கையில் உதாரணம் வகுக்கும்  ஒரு நாடாக விளங்கியது. சமத்துவத்துடனான அபிவிருத்திக்கான சாத்தியப்பாட்டை வெளிக்காட்டியது. ஏனைய பல நாடுகளையும் விட உயர்ந்த ஆள்வீத வருமானத்துடன் தரம்வாய்ந்த பௌதீக வாழ்க்கைக் குறிகாட்டியில் முன்னிலையில் இலங்கை அன்று விளங்கியது.

உச்சிமகாநாட்டில் ஜனாதிபதி விக்கிரமசிங்க நிகழ்த்திய உரை முன்னுதாரணமானதாக அமைந்ததுடன் அங்கு கூடியிருந்த உலகத் தலைவர்களின் பெரும் மதிப்பையும் பெற்றது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் அக்கறைக்குரிய இரு முக்கிய பிரச்சினைகளை  அவர் தனதுரையில் மிகவும் துணிச்சலான முறையில் கையாண்டார்.

மத்திய கிழக்கில் காசா போர் நெருக்கடிக்கும் தெற்கு உலகம் மீதான வடக்கு உலகின் தொடர்ச்சியான ஆதிக்க்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர் உரையாற்றினார்.

காசா பள்ளத்தாக்கின் மனிதாபிமான நெருக்கடியையும் இலங்கையில் இனமோதலைக் கையாண்டதில் தனக்கு இருக்கும் அனுபவங்களைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட பெருவாரியான தீர்மானங்களுக்கும் இந்த அணிசேரா உச்சிமாநாட்டின் பிரகடனத்துக்கும் இசைவான முறையில் மேற்கு ஆற்றங்கரை, காசா பள்ளத்தாக்கு மற்றும் கிழக்கு ஜெரூசலேம் ஆகியவை பாலஸ்தீன அரசின் எல்லைகளுக்குள் வருவதை அங்கீகரிக்கவேண்டும் என்றும் காசாவின் இனரீதியான குடிப்பரம்பலில் மாற்றம் இருக்கக்கூடாது  என்றும் வலியுறுத்தினார்.

மதிப்பாய்வுடனான அணுகுமுறை

அமெரிக்காவின் தலைமையிலான சர்வதேச கடற்படையில் இணைந்து கொள்வதற்கு இலங்கையின் போர்க்கப்பல்களை செங்கடலுக்கு அனுப்புவதற்கு ஜனாதிபதி எடுத்த சர்ச்சைக்குரிய தீர்மானத்துக்கு பிறகு இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் முஸ்லிம்களின் உணர்வுகளை சாந்தப்படுத்துவதற்கு பெருமளவு உதவக்கூடியதாக ஜனாதிபதியின் உச்சிமகாநாட்டு உரை அமைந்தது.

சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்காக ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இலங்கைக் கடற்படைக் கப்பல்களை அனுப்புவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் இலங்கையில் உள்ள மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் அவரைச் சந்தித்துப் பேசவேண்டிய அவசியத்தை உருவாக்கியது.

சனத்தொகையில் கால்வாசிக்கும் அதிகமானவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஒரு நாட்டைப் பொறுத்தவரை பெரும் செலவுபிடிக்கிற ஒரு கடற்படை நடவடிக்கையில் இறங்குவது கட்டுப்படியாகாத ஒன்று என்று கடுமையான விசனமும் வெளிப்படுத்தப்பட்டுவருகிறது. 

அத்துடன் பாலஸ்தீனப் போராட்டத்துக்கு உணர்ச்சிபூர்வமாக ஒருமைப்பாட்டை வெளிக்காட்டும் இலங்கை முஸ்லிம் மக்களின் உணர்வுகளை அவமதிப்பதாகவும் ஜனாதிபதியின் தீர்மானம் அமைந்தது.

நாட்டின் நலன்களை சர்வதேச சமூகத்தின் முன்னால் முன்னுரிமைப்படுத்தும் அக்கறை காரணமாகவே ஜனாதிபதி பெருவாரியன வெளிநாட்டுப் விஜயங்களை மேற்கொள்கிறார் என்று அடிக்கடி  வெளிநாடுகளுக்கு சென்றுவருவதற்கு ஒரு நியாயப்பாட்டை அவரின் சீடர்களில் ஒருவரான ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரான வஜிர அபேவர்தன முன்வைக்கிறார். மேலதிக செலவினங்கள் நாட்டுக்கு கட்டுப்படியாகாத ஒரு நேரத்தில் பெருமளவு பணத்தை ஜனாதிபதி செலவுசெய்கிறார் என்ற ஒரு விமர்சனம் இருக்கிறது.

ஒன்றரை வருட காலத்தில் நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுத்து அபிவிருத்தப் பாதையில் நகர்த்துவதற்கான தனது முயற்சிகளின் விளைவாக இலங்கைமீது  உலகின் கவனத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க திருப்பியிருப்பதாகவும் அதற்காக தனது வெளிநாட்டு விஜயங்களை அவர் பயனுறுதியுடைய முறையில் பயன்படுத்தியிருப்பதாக அபேவர்தன கூறுகிறார்.

உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் போன்ற சர்வதேச நிறுவனங்களினதும்  பல்வேறு நாடுகளினதும் ஆதரவுடன் இலங்கையை முன்னேற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

நாட்டுக்கு உச்சபட்ச பயன்களைப் பெறுவதற்காக செங்கடலுக்கு மதிப்பாய்ந்த ஒரு வெளியுறவுக் கொள்கையை ஜனாதிபதி கடைப்பிடிக்கிறார் என்று தெரிகிறது. கடற்படையை அனுப்பும் தீர்மானத்தில் இருந்து ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ பின்வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உகண்டாவில் அணிசேரா நாடுகளின் உச்சிமகாநாட்டில் ஜனாதிபதியின் உரையின் முற்பகுதியைப் போன்றே பிற்பகுதியும் நிச்சயம் பாராட்டவேண்டியதாக இருக்கிறது.அணிசேரா நாடுகள் குழுவுக்கு அறிவுத்திறனுடைய தலைமைத்துவம் ஒன்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். வடக்கு - தெற்கு பிளவு குறித்தும் தெற்கு உலகம்  தன்முனைப்புடன் செயற்படவேண்டிய அவசியம் குறித்தும் அவர் உணர்ச்சியைக் கிளறும் வகையில் பேசினார்.

"எமது உறுப்பு நாடுகள் இனிமேலும் பலவீனமான அரசுகளின் ஒரு குழுவாக இல்லை.ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களின் சில நாடுகளின் துரித முன்னேற்றம் மற்றும் பொருளாதார மேம்பாட்டின் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டது எனபதை நாம் அங்கீகரிக்கவேண்டும்.2050 ஆம் ஆண்டளவில் உலகின் பத்து முன்னணி பொருளாதாரங்களில் பெரும்பாலானவை அணிசேரா இயக்கத்துக்கு சொந்தமானவையாக விளங்கும்.அவை தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தயாராக வேண்டும் " என்று விக்கிரமசிங்க தனதுரையில் கூறினார்.

நம்பிக்கையை வென்றெடுத்தல் 

அணிசேரா உச்சிமகாநாட்டில் பங்கேற்ற 120 நாடுகளில் அனேகமாக அரைவாசி நாடுகள் ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்தவை என்கிற அதேவேளை அவற்றின் ஆதரவு இலங்கைக்கு தேவை என்பதை கருத்திற் கொண்டதாகவே கம்பாலாவில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் அமைந்தன.

" இலங்கையில் நல்லிணக்கம், பொறப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்" என்ற தொனிப்பொருளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட 46/1, 51/1 தீர்மானங்களின்  நடைமுறைப்படுத்தல்  தொடர்பில் எதிர்வரும் மார்ச்சிலும் பிறகு செப்டெம்பரிலும் பேரவையின் கூட்டத்தொடர்களில் ஆராயப்படவிருக்கிறது.

உள்நாட்டுப்போர் 2009 ஆண்டில் முடிவுக்கு வந்த பிறகு இலங்கை மனித உரிமைகள் பேரவையின் அறிவுறுத்தல்களுக்கு உள்ளாகிவருகிறது. பேரவையில் ஒரு தடவை மாத்திரம் வெற்றி பெறக்கூடியதாக இருந்தது. போருக்கு பின்னரான பிரச்சினைகளை கையாளுவதில் இலங்கை அக்கறையுடன் செய்படுவதாக கலாநிதி தயான் ஜெயதிலக தலைமையிலான இராஜதந்திரிகள் குழுவினரால் தெற்கு உலகின் நாடுகளை நம்பவைக்கக்கூடியதாக இருந்தது. ஆனால் அதற்கு பிறகு தீர்மானங்கள் மீதான சகல வாக்கெடுப்புக்களிலும் இலங்கை தோல்வி கண்டது. மனித உரிமைகள் பேரவைக்கு அளித்தை உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்றத் தவறியதே அந்த தோல்விகளுக்கான காரணமாகும்.

தற்போது போருக்கு பின்னரான நீதியைப் பொறுத்தவரை இலங்கை நிறைவேற்றுவதற்கு பல உறுதிமொழிகள் இருக்கின்றன.

இலங்கையில் பதவியில் இருந்த அரசாங்கங்கள் உறுதிமொழிகளைக் காப்பாற்றத் தவறியதனால் சர்வதேச மனித உரிமைகள் சமூகம் " இலங்கையில் இடம்பெற்ற மனித பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான உரிமை மீறல்கள் தொடர்பில்ஆராய்ந்து  தகவல்களையும் சான்றுகளையும் திரட்டுவதற்கும் எதிர்காலப் பொறுப்புக் கூறலுக்கான செயன்முறைகளுக்கு சாத்தியமான தி்ட்டங்களை வகுப்பதற்கும் பலியானவர்களுக்கும் உயிர்தப்பியவர்களுக்கும் நீதி கிடைப்பதற்காக குரல்கொடுப்பதற்கும் தகுதிவாய்ந்த நியாயாதிக்கமுடைய உறுப்புநாடுகளில் பொருத்தமான நீதிச் செயன்முறைகளை முன்னெடுப்பதற்கும் உதவியாக ஜெனீவாவில் சர்வதேச தரவு திரட்டல் பிரிவு ஒன்றை அமைத்திருக்கிறது.

ஆனால், உகண்டாவில் ஜனாதிபதி முன்னெடுத்த ஆதரவு திரட்டும் முயற்சிகளுக்கு பிறகு இலங்கை மீண்டும் ஒரு தடவை (2009 ஆம் ஆண்டில் இடம்பெற்றதைப் போன்று) மனித உரிமைகள் பேரவையின் பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெறக்கூடியதாக இருக்கும்.

காசா பள்ளத்தாக்கில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இயலாமற்போன சூழ்நிலைகளில் ஐக்கிய நாடுகளின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டிருக்கின்றமையால் இலங்கை தற்போது சர்வதேச ரீதியில் ஆதரவைத் திரட்டும் பணிகள் சுலபமாகிவிட்டன எனலாம்.

இந்த மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒன்றின் மூலமாக  நல்லிணக்கப் பொறிமுறைகளை குறிப்பாக தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை அமைக்கும் செயன்முறைகளைை முன்னெடுப்பதில் வெற்றிகாணமுடியும் என்று அரசாங்கம் இரண்டு மடங்கு நம்பிக்கையுடன் இருக்கிறது. உண்மை,  ஐக்கியம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டமூலம் இப்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்தின் இந்த முன்முயற்சிகள் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கத் தவறுவதற்கு வாய்ப்பில்லை. அரசாங்கம் சர்வதேச அரங்கில் அதன் போராட்டங்களை ஒவ்வொன்றாக வென்றுகொண்டு வருகிறது.

ஆனால் நாட்டுக்குள் மக்களின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் அரசாங்கத்தினால் வென்றெடுக்க இயலுமா என்பது முக்கியமான கேள்வி. பிரதான தமிழ்க்  கட்சியின் புதிய தலைவர் தேர்தலில் மிதவாத வேட்பாளரின் தோல்வி மேலும் பல விடயங்களைச் செய்யவேண்டிய தேவையை உணர்த்திநிற்கிறது.

https://www.virakesari.lk/article/174594

தமிழரசுக் கட்சியின் தலைவராகச் சிறிதரன் - விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்?

3 months 2 weeks ago
விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்?

— கருணாகரன் —

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகச் சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்திருப்பதை அடுத்து அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறு கருத்துகள் முன்வைக்கப்படுவதொன்றும் புதியதுமல்ல. பெரியதுமல்ல. அரசியற் கட்சிகளின் விடயங்கள் என்றால் பொதுப்பரப்பில் அதைப்பற்றிய உரையாடல்கள் நிகழ்வதுண்டு. ஆகவே இதொரு சாதாரணமான விடயம். ஆனால், இதைக் கடந்து இந்தக் கருத்துகளின் பின்னால் செயற்படுகின்ற உளநிலையும் அரசியற் காரணங்களும் முக்கியமானவை. இதற்கு அடிப்படையாகச் சில காரணங்கள் உண்டு.

1.        இதற்கு முன்னெப்போதும் தமிழரசுக் கட்சியின் தலைமைக்கான போட்டி  இப்படிப் பகிரங்க வெளியில் நடந்ததில்லை. இப்போதுதான் அது முதற்கடவையாக இந்த நிலைமையைச் சந்தித்திருக்கிறது. அதற்குக் கட்சிக்குள் நிலவும் உட்பலவீனங்கள் காரணமாகும். ஆனாலும் இதொரு சாதாரணமான உட்கட்சி விடயமே. இதைப்போல, தமிழ்நாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், இலங்கையில் ஐ.தே.க, சு.க போன்ற பெருங்கட்சிகளுக்கும் தலைமைப் போட்டிகள் நடந்ததுண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைமைப் போட்டியில் நீதி மன்றம் வரையில் சென்றது. அப்படிச் சில கட்சிகளுக்குள் சில சந்தர்ப்பங்களில் நிகழ்வது வழமை. கட்சியின் அரசியல் யாப்பே இதை உரைக்கிறது. இதையெல்லாம் உணர்ந்து கொள்ளாமல் அல்லது இதைத் தெரிந்து கொண்டும் இந்தப் போட்டியை ஏதோ தேசிய அளவிலான ஒரு போட்டிபோலக் காட்டியதால் – ஊதிப்  பெருப்பித்ததால் ஏற்பட்டதே இந்தப் பரபரப்பு.

2.        இதைப் பெரிய விவகாரமாக்கி, ஊதிப்பெருப்பிக்கக் காரணமாக இருந்த தரப்புகள்,  ஊடகங்களும் தமிழ்ப் பத்தியாளர்களுமாகும். காரணம், ஏற்கனவே இருக்கின்ற தமிழ்த்தேசிய அரசியற் கட்சிகளிடத்தில் காணப்படுகின்ற போதாமை உணர்வே இந்தத் தரப்புகளை தமிழரசுக் கட்சியின் தலைமைப் போட்டியின்மீது கவனத்தை உண்டாக்கியது. ஏற்கனவே தலைமைப் பொறுப்பிலிருந்த மாவை சேனாதிராஜாவும் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் திரு. சம்மந்தனும்  முதுமை மற்றும் செயலின்மை காரணமாக கட்சியையும் அரசியலையும் மந்த நிலைக்குள்ளாக்கி விட்டனர் என்று பலராலும் கருதப்பட்டது. மறுபக்கத்தில் கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோர்  தமிழ்த்தேசியவாத அரசியலைத் தீவிரமாகப் பேசினாலும் அதற்கான கட்டமைப்பு – செயற்பாட்டு விளைவு போதாதிருக்கிறது என்ற உணர்வு பலரிடத்திலும் காணப்பட்டது.                            அந்தப் போதாமை உணர்வென்பது எதிர்ப்பரசியலின் மீதான நாட்டத்தினால் ஏற்பட்டது. ஆக இன்று ஈழத்தமிழ் அரசியல் வெளியானது எதிர்ப்பரசியலிலேயே மையம் கொண்டுள்ளது. அதனுடைய விளைவே இதுவாகும்.

3.        இன்னொரு நிலையில் இன்னொரு சாரார், தீவிர எதிர்ப்பரசியலுக்குப் பதிலாக மென்போக்கான முறையில் பலரோடும் பேசக்கூடியவாறு தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அவர்களே சம்மந்தன், சுமந்திரன், சாணக்கியன் போன்றோரை ஆதரிக்கின்றனர். ஆனாலும் அந்தத் தரப்பு பொதுவெளியில் இன்னும் பலமடையவில்லை.

4.        ஆகவே மென்போக்கான முறையில் பன்மைத்துவத்தோடு கட்சியின் கொள்கையைக் கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு சாராரும் (சுமந்திரனை ஆதரிப்போர்) அப்படியல்ல, தமிழரின் அரசியலை, விட்டுக் கொடுப்புகளற்ற முறையில் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்று மறுசாராரும் (சிறிதரனை ஆதரிப்போரும்) கருதுவதால் ஏற்பட்டுள்ள எதிரெதிர் முனைப்புகளால் இந்தப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

5.        எப்போதும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாகவே சிறிதரன் இருப்பதாகும். மட்டுமல்ல, கட்சிக்கு உள்ளும் வெளியிலும் ஒரு தொகுதியினரின் எதிர்ப்புகள் அவருக்கு  உண்டு என்பதால் ஏற்பட்ட அலைகள். அதைப் போல அவரைத் தீவிர நிலையில் ஆதரிப்போரும் உண்டு. இதனால் உண்டாகும் உள் – வெளி முரண்கள் வெளித்தெரிகின்றன.

6.        சிறிதரன் முன்னெடுக்க முயற்சிக்கின்ற அரசியலானது,  கஜேந்திரகுமார் முன்னெடுத்து வரும் அதிதீவிரவாத அரசிலை ஒத்திருப்பதால், இரண்டு அரசியற் தரப்புகளுக்குமிடையில் முன்னரைப்போல (இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் – இலங்கைத் தமிழரசுக் கட்சி மோதல் அல்லது ஜீ.ஜீ.பொன்னம்பலம் – எஸ்.ஜே.வி. செல்வநாயகம் மோதல்) இரு தரப்புப் போட்டிகள், உரசல்கள், மோதல்களைக் கொண்டிருக்கும் என்பது. இதனுடைய விளைவுகள் அவ்வளவு நல்லதாக அமையாது என்ற உணர்வினால் எழும் அச்சம் இந்த விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

7.        சிறிதரன் முன்னெடுக்க விரும்பும் அரசியலானது, தமிழரசுக் கட்சியின் காலாவதியாகப் போன அரசியல் மட்டுமல்ல, விடுதலைப் புலிகளின் தொடர்ச்சி போன்ற பாவனையைக் கொண்டிருக்கிறது என்ற தோற்றப்பாட்டைக் கொண்டது என்பதால் இரண்டும் நிகழ்காலத்திற்கோ எதிர்காலத்திற்கோ உரியதல்ல என்பதால் எழுந்துள்ள கருத்துகள்.

8.        புலிகளைப் போற்றிப்பாடித் தன்னுடைய அரசியல் வழிமுறையை முன்னெடுப்பதாகக் காட்டிக் கொண்டாலும் புலிகள் மேற்கொண்ட அரசியற் கொள்கை, அவர்களுடைய செயற்பாடுகள், அவர்கள் உருவாக்கிய நடைமுறை போன்றவற்றுக்கு அப்பாலேயே சிறிதரன் நிற்கிறார் என்பது. அதாவது அவர் புலிகளின் பிரதிநிதிபோல நாடகமாடுகிறார் என்பது. இல்லையென்றால் குறைந்த பட்சம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்ளாள் உறுப்பினர்கள், அவர்களுடைய இயக்கத்தைச் சேர்ந்த மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கான இடம் இனி அளிக்கப்படுமா என்று எழுகின்ற கேள்வி.

9.        விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியைப் பேணும் அரசியலுக்கு தென்னிலங்கையிலும் பிராந்திய ரீதியாக இந்தியா, சீனா மற்றும் சர்வதேச ரீதியில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் அங்கீகாரமும் கிடைக்குமா என்ற கேள்விகள்.

இவ்வாறு பல கேள்விகளும் அடிப்படைக் கருத்து நிலைகளும் தமிழரசுக் கட்சியின் மீதும் அதனுடைய தலைமை (சிறிதரனின்) மீதும் முன்வைக்கப்படுகின்றன.

ஈழத் தமிழரின் அரசியல், ஆயுதப் போராட்டத்துக்கு முன்பும் ஆயுதப் போராட்டத்துக்குப் பின்பும் தமிழரசுக் கட்சியின் கைகளில்தான் இருந்தது, இருக்கிறது. அதற்கான தகுதி அதற்கு இருக்கிறதோ இல்லையோ வரலாற்றுச் சூழல் அப்படித்தான் அமைந்துள்ளது. இதற்கு இன்று தமிழ் அரசியல் பரப்பிலுள்ள ஏனைய சக்திகளின் பலவீனமும் ஒரு காரணமாகும்.

விடுதலைப் புலிகளால் பல கட்சிகளையும் இயக்கங்களையும் இணைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டாலும் அதற்குத் தமிழரசுக் கட்சியே தலைமை தாங்கும் நிலை வளர்ந்தது. இதற்கு மாறாக தமிழரசுக் கட்சியின் திமிர்த்தனத்தினால் (ஜனநாயக முரண்பாடுகளால்) ஏனைய கட்சிகள் வெளியேறினாலும் அவற்றினால் தமிழரசுக் கட்சியை மீறி நிற்க முடியவில்லை. இவ்வளவுக்கும் தமிழரசுக் கட்சியின் பாராம்பரியத் தொடர்ச்சியைக் கொண்டவர்கள் இன்றில்லை. புதியவர்களே அதற்குத் தலைமை ஏற்றுள்ளனர். இருந்தும் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களால்  (அவர்களுக்கு நீண்டதொரு செயற்பாட்டு அரசியற்பாரம்பரியம் – விடுதலை இயக்க அரசியல் வழித் தொடர்ச்சி இருந்தாலும்)  தமிழரசுக் கட்சியின் இந்தப் புதிய முகங்களை எதிர்கொள்ள முடியாமலே உள்ளனர்.

இவ்வளவுக்கும் தமிழரசுக் கட்சி செயற்பாட்டுத் தளத்தில் மிகப் பலவீனமானது. அதற்கு  75 ஆண்டுகாலப் பாரம்பரியமிருந்தாலும் அதனால் நிகழ்கால அரசியலையோ எதிர்காலத்துக்கான அரசியலையோ முன்னெடுக்கக் கூடிய சிந்தனைத் திறன் (கொள்கை), செயற்பாட்டுத் திறன் எதுவும் இல்லை. தமிழ் மக்களுடைய அரசியல் விடுதலைக்கும் சமூக மேம்பாட்டுக்கும் எந்த வகையிலும் பயன்தராத, பங்களித்திருக்காத, பங்களிக்கவே முடியாத நிலையில்தான் அது இன்னமும் உள்ளது. உண்மையில் திரு. S.J.V.செல்வநாயகம் காலத்துக்குப் பிறகு அது தேவையற்ற ஒன்றாக ஆகி விட்டது.

அதாவது அது காலாவதியாகி (Expired) விட்டது. அதைச் செல்வநாயகமே “தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று பகிரங்கமாக வெளிப்படுத்தியுமிருந்தார். அதைச் சற்று வேறுவிதமாக்கி தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய லேபிளில் வைத்திருந்தார் திரு. அ. அமிர்தலிங்கம். அதுவும் பின்னர் செல்லாக்காசாகி விட்டது.

விடுதலைப்புலிகள் தம்முடைய அரசியல் தேவைக்காக தாம் ஏற்றுக்கொள்ளாமல் வெளியே தள்ளி வைத்திருந்த தமிழ்க்கட்சிகளையும் இயக்கங்களையும் தற்காலிகமாகப் பயன்படுத்த விளைந்ததன் விளைவாக மீண்டும் செயற்கைச் சுவாசமளிக்கப்பட்டு அரங்குக்குக் கொண்டு வரப்பட்டதே தமிழரசுக் கட்சி.

அவர்கள் கூட முதலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தையே பயன்படுத்தினார்கள். திரு. வீ. ஆனந்தசங்கரியுடன் ஏற்பட்ட பிணக்கையடுத்தே தமிழரசுக் கட்சியின் வீடு சின்னம் புலிகளால் பயன்படுத்தப்பட்டது.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அரசியல் செய்து வருகிறது தமிழரசுக் கட்சி.

ஆயினும் அதனுடைய பலவீனங்கள் அதை வளர்த்துப் புதிய – காலப் பொருத்தமுடைய அரசியல் இயக்கமாக மாற்றவில்லை. அதற்கான அனைத்து வாய்ப்புகளும் அதற்கிருந்தன.

பதிலாக அந்தப் பலவீனங்கள் இன்றைய சீரழிவுக்கும் தலைமைப் போட்டிக்கும் அதைக் கொண்டு வந்து விட்டுள்ளது. அதாவது அதைச் சேற்றுக்குள் தள்ளி விட்டுள்ளது.

உண்மையில் இப்பொழுது தன்னுடைய மனச்சாட்சியின்படி தமிழரசுக் கட்சி அரசியல் அரங்கிலிருந்தே விலகுவதே தமிழ் மக்களுக்கும் இந்தக் காலத்துக்கும் செய்கின்ற பெரும்பணியாக இருக்கும்.

நல்லதைச் செய்ய முடியாது விட்டால் பரவாயில்லை. நல்லன நிகழ்வதற்கு முட்டுக்கட்டையாக இருக்காது விட்டாலே அது ஒரு பெரிய பணியும் பங்களிப்பும்தான். ஏனென்றால் சரி பிழைகளுக்கு அப்பால் புலிகள் உருவாக்கியளித்த கூட்டமைப்பு என்பதைக் கூட தமிழரசுக் கட்சியினால் தக்க வைக்க முடியவில்லை.

புலிகளுக்குப் பிறகு காலம் அளித்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழ்ச்சமூகத்தின் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு அடிப்படைகளைக் கூட அது நிர்மாணம் செய்யவில்லை. ஆனால் அதற்கான கடப்பாடும் பொறுப்பும் அதற்கிருந்தது. அதைச் செய்யாமல் பதிலாக எல்லாவற்றையும் சிதைத்து, இறுதியில் தன்னையே அழிக்கும் நிலைக்கு வந்துள்ளது.

இதற்குத் தனியே தமிழரசுக் கட்சியினர் மட்டும் பொறுப்பில்லை. அதை ஆதரித்தும் அனுசரித்தும் நின்ற, நிற்கின்ற அனைவருக்கும் இந்தப் பொறுப்பும் பழியும் உண்டு. வரலாறு நிச்சயம் இவர்களை நிந்திக்கும்.

இப்பொழுது சிவஞானம் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தலைவராகியவுடன் சிறிதரன் சென்றது கிளிநொச்சியில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்துக்கு. இது  ஏற்கனவே கூறப்பட்டுள்ளதைப்போல அவர் தன்னைப் புலிகளின் அரசியல் தொடர்ச்சியாகக் காட்ட முற்பட்டதற்காகவாகும். ஆனால், இதை தென்னிலங்கைச் சக்திகள் நற்சமிக்ஞையாகப் பார்க்கப் போவதில்லை. ஏன் முஸ்லிம்கள் கூட இதை எதிராகவே பார்ப்பார்கள். அவ்வாறே இந்தியாவும் மேற்குலகும் எதிர்நிலை நின்றே நோக்கும்.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு என்ற பேர் இருந்தாலும் சம்மந்தன் அதனைக் கடந்து பல்வேறு தரப்பினருடைய கவனத்தையும் கோரக் கூடிய அரசியலை முனனெடுத்து வந்தார். இந்த நிலைப்பாடு சர்வதேசப் பரப்பிலும் தமிழ்த் தரப்பின் தலைவர் என்ற அடையாளத்தைச் சம்மந்தனுக்குக் கொடுத்தது, அவர் மேற்கொண்ட பன்மைத்துவத்தை நோக்கிய அரசியலாகும். ஆனால், அதுதான் தமிழ்த்தரப்பில் சம்மந்தனுக்கும் அவரைத் தொடர்ந்த சுமந்திரனுக்கும் எதிரான விமர்சனங்களையும் கடந்த காலத்தில் உருவாக்கியிருந்தது. சுமந்திரன் தலைமைக்கு வர முடியாமல் போனதற்குக் காரணமும் இதுதான்.

ஆனால் போருக்குப் பிந்திய அரசியலை தனியே எதிர்ப்பு அரசியலாக முன்னெடுக்க முடியாது. இன்றைய  யதார்த்தம் வேறு. இதைத் தெளிவாகவே சர்வதேச சமூகமும் இந்தியாவும் இலங்கையும் பொதுவாக உலகப் போக்கும் சொல்கின்றன. இப்படியான நிலைக்குப் பிறகும் தமிழ் மக்கள் (இங்கே மக்கள் என்பது அவர்களுக்காகச் சிந்திப்பதாகக் கருதப்படும் ஊடகவியலாளர்கள், அரசியற் பத்தியாளர்கள், தமிழர்களின் கல்விசார் துறையினர், சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்பட எனப் பொருள்படும) தமிழரசுக் கட்சியை தமக்கான மீட்புப் படகாகக் கருதினால் அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியுள்ளது. அவர்களைக் குறித்தே கேள்வி எழும்புகிறது.

விடுதலைக்காக ஒரு சிறிய மக்கள் கூட்டம் தன்னுடைய சக்திக்கு அப்பால், மாபெரும் தியாகங்களைச் செய்துள்ளது. அளவுக்கு அதிகமான  இழப்புகளைச் சந்தித்திருக்கிறது. இந்த இழப்புகள் சாதாரணமாகக் கடந்து போகக் கூடியவையல்ல. மட்டுமல்ல, உள் நாட்டிலும் நாட்டிற்கு வெளியேயும் தொடர் அலைச்சல்களில்  சந்தித்த பிறகும் திக்குத் தெரியாத காட்டில் தடுமாறுவதைப்போலிருந்தால்,

ஈழத்தமிழரின் ஊடக, அரசியல், அதுசார் அறிவு நிலையைப் பார்த்தால் சிரிப்பு வரும். சற்று ஆழமாகச் சிந்தித்தால் கடுமையான கோபமே ஏற்படும். தங்களுடைய சொந்த அனுபவத்திலிருந்து கூட எதையும் கற்றுக் கொள்ள முடியாத சமூகமாக ஈழத்தமிழர்கள் சீரழிந்துள்ளனர். இல்லையென்றால் நாற்பது ஆண்டுகளாகப் போராடிய பட்டறிவைக் கூட நினைவில் வைத்துப் பரிசீலிக்க முடியாத அளவுக்கு, எல்லாவற்றையும் மறந்து போய், நாற்பது ஆண்டுகளுக்கு முன்னான அரசியல் குழிக்குட் போய்க் கண்மூடித்தனமாக விழுவார்களா? 

“விதியே விதியே, தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்?” என்று பாரதியார் பாடியதை இங்கே நினைவிற் கொண்டு பேச வேண்டியதாக உள்ளது.

பாரதியார் மனம் வருந்தி இதைச் சொன்னது, இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலாகும். அப்போது வரலாற்றுச் சிறப்பெல்லாம் இருந்தும் கூட தமிழர்கள் உள்நாட்டிலும் உலகம் முழுவதும் கூலிகளாகவும் ஏதிலிகளாகவும் சிதறிப் பரந்து அல்லலுற்றுக் கிடந்தனர். அதைப் பார்த்து வெம்பித் துயரடைந்தார் பாரதி. கவிஞரின் மனம் சிறுமை கண்டு, கொடுமை கண்டு கொதிப்பதைப்போல, அறியாமையைக் கண்டும் கொதிப்படைவது.

காலம் கடந்தாலும், சூழல் மாறினாலும் ஈழத்தமிழரின் நிலையில் மாற்றமில்லை. வரவர நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது.
 

https://arangamnews.com/?p=10397

Checked
Mon, 05/13/2024 - 20:17
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed