அரசியல் அலசல்

ஜேவிபி பதில் கூறுமா? நிலாந்தன்!

1 month 1 week ago
anura-kumara-dissanayake-700x375.jpg ஜேவிபி பதில் கூறுமா? நிலாந்தன்!

அனுரகுமார கவர்ச்சியாகப் பேசுகிறார். மேடையைத் தனது பேச்சினால் கட்டிப்போடவல்ல ஒரு பேச்சாளராக அவர் தெரிகிறார். இனப்பிரச்சினை தொடர்பாக, இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக அவர் கவர்ச்சியாகப் பேசுகின்றார். கனடாவிலும் அவர் அப்படித்தான் பேசினார். யாழ்ப்பாணத்திலும் அவர் அப்படித்தான் பேசினார். ஆனால் அவர் இதுவரை பேசிய அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. என்னவெனில், அவர் இனப்பிரச்சினையை, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை, எல்லாவற்றையும் மனிதாபிமானக் கண் கொண்டுதான் பார்க்கின்றார். மாறாக அவற்றுக்குரிய அரசியல் அடர்த்தியோடு, அரசியல் பரிமாணத்தோடு, அவற்றை விளங்கி வைத்திருக்கிறாரா என்று கேட்கத்தக்க விதத்தில்தான் இனப்பிரச்சினை தொடர்பான அவருடைய கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.

அவர் மொழிப் பிரச்சினை பற்றிப் பேசுகிறார். அதைத் தீர்க்க வேண்டும் என்று பேசுகிறார்.மரபுரிமைச் சொத்துகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பற்றிப் பேசுகிறார். அதைத் தீர்க்க வேண்டும் என்று கூறுகிறார். ஒரு காலம் தன்னுடைய சிறு பிராயத்தில் தன்னுடைய கிராமத்தில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இன பேதம் இன்றி ஒன்றாக வாழ்ந்ததைக் கூறுகிறார். சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் ஒரு மக்கள் மயப்பட்ட விடயம் அல்ல என்றும் கூற வருகிறார். இனப் பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தத்தை அவர் இன்னமும் வெளிப்படையாக உறுதியாக ஆதரிக்கும் ஒரு நிலைப்பாட்டுக்கு வரவில்லை.ஆனால் அதைப் பரிசீலிக்கும் ஒரு நிலைப்பாட்டுக்கு ஜேவிபி வந்துவிட்டது. இவைதான் அவர் பேசியவற்றின் சாராம்சம்.

தமிழ் லிபரல் ஜனநாயகவாதிகளுக்கு அவை உற்சாகமூட்டக்கூடிய கருத்துக்கள்.இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு புதிய வெளிச்சம் தோன்றியிருப்பதாக அவர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து பார்த்தால், அனுராவிடம் ஆழமான சில கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது.

கேள்வி ஒன்று, இலங்கைத் தீவு பல்லினத்தன்மை மிக்கது என்பதனை ஜேவிபி ஏற்றுக்கொள்கின்றதா?

ஆயின்,இரண்டாவதாக,தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஜேவிபி ஏற்று கொள்கின்றதா?

அவ்வாறு தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டால், ஒரு தேசிய இனத்திற்குள்ள சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஜேவிபி தயாரா?

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஒரு தீர்வு என்று பார்க்கும் பொழுது, தமிழ் மக்கள் இப்பொழுது கூட்டாட்சியைத் தான் கேட்கின்றார்கள். உலகம் முழுவதிலும் உயர்ந்த ஜனநாயகங்களில் கூட்டாட்சி ஒரு வெற்றிகரமான ஆட்சி முறைமையாகக் காணப்படுகின்றது. ஜேவிபி தமிழ் மக்களுக்கு ஒரு கூட்டாட்சி தீர்வைத் தரத் தயாரா?

இதைத் தமிழ் மக்களுக்கான தீர்வு என்பதனை விடவும்,இலங்கை முழுவதுக்குமான ஒரு தீர்வு என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்ளும் ஒரு கட்சியானது அந்த அடிப்படையில், பல்லின; பல் சமய ; இரு மொழிப் பண்பைப் பேணும் விதத்தில் ஒரு தீர்வைதான் முன்வைக்க வேண்டும். உலகில் பல்லினத்தன்மை மிக்க நாடுகளில்; பழமொழி ;பல மதங்கள் ; பயிலப்படும் நாடுகளில் ; கூட்டாட்சி அதாவது சமஸ்டி ஒரு வெற்றிகரமான ஆட்சி முறையாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே சமஸ்ரித் தீர்வு எனப்படுவது தமிழ் மக்களுக்கு உரியது என்பதை விடவும், இலங்கைத் தீவை ஒரு தேசமாகக் கட்டி எழுப்புவதற்கானது என்பது தான் மிகச் சரியான விளக்கம்.

நாலாவது கேள்வி, 2009க்கு முன்பு ஆயுத மோதல்களின் போது ஜேவிபி போரை ஆதரித்தது. போரில் ஈடுபடும் படை வீரர்களை ஆதரித்தது. படைத்தரப்புக்கு ஆட்சேர்த்துக் கொடுத்தது. அதுதொடர்பாக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயாரா?

ஐந்தாவது கேள்வி,இந்திய இலங்கை உடன்படிக்கையின் மூலம் இணைக்கப்பட்ட வடக்கையும் கிழக்கையும் ஒரு வழக்கின் மூலம் பிரித்தது ஜேவிபி. அதாவது தமிழ் மக்களின் தாயகத்தை சட்ட ரீதியாகப் பிரிக்க முற்பட்ட ஒரு கட்சி.அவ்வாறு தமிழ் மக்களின் தாயகத்தைச் சட்ட ரீதியாகப் பிரித்தமைக்காக தமிழ் மக்களிடம் ஜேவிபி மன்னிப்புக் கேட்குமா ? இதை ஐநா தீர்மானங்களின் வார்த்தைகளில் கேட்டால், ஜேவிபியானது, இறந்த காலத்துக்குப் பொறுப்புக் கூறுமா? இறந்த காலத்தில் அது தமிழ் மக்களுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடுகளுக்கும், தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுத்த செயற்பாடுகளுக்குப் பொறுப்புக் கூறுமா?

ஐந்தாவது கேள்வி, ஜேவிபியின் முதலாவது கிளர்ச்சியின் போது அது இந்தியத் தமிழர்களை குறிப்பாக, மலையகத் தமிழர்களை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவியாகக் காட்டியது.இப்பொழுதும் ஜேவிபி அதே நிலைப்பாட்டோடுதான் காணப்படுகின்றதா? அது தொடர்பாக மலையக மக்களிடம் ஜேவிபி மன்னிப்புக் கேட்குமா ?

மேற்கண்ட கேள்விகள் தமிழ் மக்களால் அனுரகுமரவிடம் பகிரங்கமாகக் கேட்கப்பட வேண்டியவை. தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரித்தால், தமிழ் மக்களுக்குச் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான கூட்டுரிமைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். அனுரகுமார உதிரியாகப் பேசுகின்ற மொழிப் பிரச்சினை; வழிபாட்டுப் பிரச்சினை; காணிப்பிரச்சினை; கல்விப் பிரச்சினை…முதற்கொண்டு பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் வரை அனைத்தும் அந்தக் கூட்டு உரிமைகளுக்குள் அடங்கும்.

தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமக்குரிய கூட்டு உரிமைகளை பாதுகாப்பதற்கான ஒரு தீர்வைதான் கேட்கின்றார்கள். எனவே கோட்பாட்டு ரீதியாகவும் அரசறிவியல் அர்த்தத்திலும் ஜேவிபி முதலில் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்கிறதா இல்லையா என்பதனைத் தெளிவாகக் கூற வேண்டும்.

இனப்பிரச்சனை ஒரு மனிதாபிமானப் பிரச்சினை அல்ல.முதலில் இனப்பிரச்சினை என்றால் என்ன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இனப் பிரச்சினை எனப்படுவது, இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை பெரிய இனமாகிய பெரிய மதமாகிய சிங்கள பௌத்தர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தமைதான். அதனால் தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்வதற்குரிய அடிப்படைகளை அவர்கள் அழிக்க முற்பட்டார்கள். தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டியெழுப்பும் மொழி, நிலம், பண்பாடு ,பொருளாதாரம் போன்ற அம்சங்களைக் குறி வைத்துத் தாக்கினார்கள். தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பதற்குரிய அடிப்படைகளை அழிப்பதுதான்.

எனவே இனப்பிரச்சினை தோன்றியது எங்கிருந்து என்றால், இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதில் இருந்துதான். அதற்குத் தீர்வும் எங்கிருந்து தொடங்க வேண்டும் என்றால்,இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்வதில் இருந்துதான்.

இதைத் தமிழ் நோக்கு நிலையில் இருந்து சொன்னால்,தமிழ் மக்களை ஒரு தேசமாக ஏற்றுக் கொள்வதில் இருந்துதான் அதைத் தொடங்கலாம். ஆனால் ஜேவிபி அவ்வாறான அரசறிவியல் ஆழத்துக்குள் இறங்கத் தயார் இல்லை. தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரிப்பதன்மூலம், சமஸ்ரித் தீர்வு ஒன்றை ஏற்றுக் கொள்வதன்மூலம், தென்னிலங்கையில் தங்களுக்கு கிடைக்கக்கூடிய சிங்கள பௌத்த வாக்குகளை இழப்பதற்கு அவர்கள் தயார் இல்லை.

அதேசமயம் தமிழ் வாக்குகள் அவர்களுக்குத் தேவை.அனுரகுமார கூறுகிறார், நான் வாக்கு வேட்டைக்கு வரவில்லை, நான் தீர்வைத் தருகிறேன் வாக்கைத் தாருங்கள் என்று வியாபாரம் செய்வதற்கு வரவில்லை… என்று கேட்க அது கவர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இனப்பிரச்சினைக்கு ஜேவிபியின் தீர்வு என்ன என்பதனை வெளிப்படையாகச் சொல்வதில் இருந்து அவர் தப்ப முயற்சிக்கின்றார். தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் பல தசாப்தங்களுக்கு முன் இருந்த நல்லுறவை மீளக்கட்டி எழுப்பப் போவதாகக் கூறுகிறார். அந்த நல்லுறவு எங்கே பாதிப்படைந்தது? தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்வதற்குரிய அடிப்படைகளை அழிக்க முற்பட்ட பொழுதுதானே? அந்த நல்லுறவை எங்கிருந்து கட்டி எழுப்பலாம்? தமிழ் மக்களை ஒரு தேசமாக ஏற்றுக் கொள்வதில் இருந்துதானே ?ஆனால் ஜேவிபி அதை வெளிப்படையாகச் சொல்ல தயாரில்லை.

இந்த விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ இனப்பிரச்சினைக்கு 13 பிளஸ் தீர்வு என்று வெளிப்படையாகக் கூறி வருகிறார். ரணில் விக்கிரமசிங்க மாகாண சபைகள்தான் தீர்வு என்கிறார். ஆனால் ஜேவிபி தீர்வை வெளிப்படையாகப் பேசத் தயங்குகின்றது.

அதாவது, ஜேவிபி வெளிப்படையான, அரசியல் அடர்த்தி மிக்க, வார்த்தைகளுக்கு ஊடாக கதைப்பதைத் தவிர்த்து, மழுப்பலான, பொத்தாம் பொதுவான, சமூகநீதி மற்றும் மனித உரிமைகளின் பாற்பட்ட வார்த்தைகளுக்கு ஊடாகப் பேச விளைகின்றது. அந்த அமைப்பில் இருந்து விலகிய ஒருவர் எழுதிய நாட்குறிப்பில்…“மகிந்த ராஜபக்ஷ வெளிப்படையாகத் தெரியும் ஓர் இனவாதி. ஆனால் ஜேவிபியோ சமூக நீதியின் பின் பதுங்கும் ஓர் இனவாதி” என்று கூறியிருப்பது தவறு என்பதனை நிரூபிக்கும் விதத்தில் ஜேவிபி இக்கட்டுரையில் முன் வைக்கப்படும் பகிரங்க கேள்விகளுக்கு பதில் கூறுமா?

https://athavannews.com/2024/1376894

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதம் - நிலாந்தன்

1 month 1 week ago
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதம் - நிலாந்தன்
 
Screenshot-2024-04-06-225418-ccc.png
 
Screenshot-2024-04-06-225531-ccc.png

கடந்த 19ஆம் திகதி தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஒரு கூட்டுக் கடிதம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உப தூதரகத்தில் கையளிக்கப்பட்டது. திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த மூன்று அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு தமிழக முதல்வரிடம் அக்கூட்டுக் கடிதம் கோரிக்கை விடுத்திருந்தது. திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களின் நலன்களைக் கவனிக்கும் ஒரு வழக்கறிஞரின் பங்களிப்போடு அக்கூட்டுக் கடிதம் தயாரிக்கப்பட்டது. கடந்த 17 ஆம் தேதி உத்தியோகப் பற்றற்ற விதத்தில் தமிழக முதல்வரிடம் கையளிக்கப்பட்டது. பின்னர் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள உபதூதரகம் ஊடாக அனுப்பப்பட்டது. தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12பேர் ஒன்றாக இணைந்து அப்படி ஒரு கடிதத்தை அனுப்பியமை முக்கியமான ஒர் அடைவு. உடல்நலக் குறைவு காரணமாக சம்பந்தர் கையெழுத்திடவில்லை.

2021ஆண்டும் ஒரு கூட்டுக் கடிதம் தயாரிக்கப்பட்டது. அந்த ஆண்டு நடக்கவிருந்த ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரை  முன்னிட்டு அந்த ஆண்டு ஜனவரி மாதம் அக்கடிதம் அனுப்பப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளின் பின் மீண்டும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஒரு கூட்டுக் கடிதத்தை  தமிழக முதல்வருக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

அதிகம் கவனத்தை ஈர்க்காத அந்த முயற்சி மகத்தானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் சிறப்பு முகாம் கைதிகளின் விடயத்தில் ஒன்றிணைந்த  அதே கட்சிகள் ஏனைய  எல்லா விடயங்களிலும் ஒன்றிணையும் என்று கற்பனை செய்யத் தேவையில்லை. தமிழரசுக் கட்சிக்குள் நடப்பவை முழுத் தமிழ் அரசியலுக்கும் பொருந்தும். தமிழ் மக்களுக்கு இப்பொழுது எதிரிகள் வெளியில் இல்லை . சொந்த வீட்டுக்குள்தான் இருக்கிறார்கள். ஒரு தேர்தல் ஆண்டில் தமிழ் மக்கள்  ஒருமித்து முடிவெடுக்க முடியாத ஒரு நிலை.

434968357_3732817976984188_2299633173007

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், தமிழ் மக்கள் மத்தியில் மூன்று விதமான முடிவுகள் காணப்படுகின்றன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப்  புறக்கணிக்கின்றது. ஆனால், அந்த முடிவை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்று அக்கட்சி சிந்திக்கவில்லை. அதாவது தன்னுடைய முடிவு சரி என்று மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்து தேர்தலைப் புறக்கணிக்கும் ஒரு மக்கள் மக்கள் ஆணையைப் பெற அக்கட்சி முயற்சிக்கவில்லை.

தமிழரசுக் கட்சி இரண்டாகி நிற்கிறது. ஒரு பிரிவு சஜித்தோடு நிற்பதாகத் தோன்றுகிறது. மற்றொரு பிரிவு தமிழ்ப் பொது வேட்பாளருக்குக் கிட்டவாக நிற்கிறது. குத்துவிளக்கு  கூட்டணிக்குள், ஈபிஆர்எல்எப்   தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற முடிவை எப்பொழுதோ எடுத்துவிட்டது. ஏனைய கட்சிகள் அது தொடர்பாக தமது உத்தியோகபூர்வ நிலைப்பாடுகளை அறிவிக்கவில்லை. விக்னேஸ்வரன்,பொது  வேட்பாளரை ஏற்றுக்கொள்கிறார். இப்படியாகத்  தமிழ்த் தரப்பில் மூன்று நிலைப்பாடுகள் உண்டு.

ஆனால் அவை நிலைப்பாடுகள்தான். கருத்துருவாக்கம் என்ற செயற்பாட்டுக்கும் அப்பால் என்பதற்கும் அப்பால் அதை நோக்கிய கட்டமைப்புகள் எவையும் இதுவரை உருவாக்கப்படவில்லை. அதாவது கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் வரக்கூடிய ஒரு தேர்தலை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தரப்பு இப்படித்தான் தயாராகக் காணப்படுகின்றது.

அதேசமயம் தென்னிலங்கையில் பிரதான கட்சிகள்  ஜனாதிபதித் தேர்தலை நோக்கி திட்டமிட்டு உழைக்கின்றன. ஜேவிபிதான் முதலில் உற்சாகமாக உழைக்க தொடங்கியது. “அரகலய”வின் விளைவு அது. அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய  பசில் அதிகரித்து எதிர்பார்ப்போடு உழைத்து வருகிறார். அமெரிக்காவிலிருந்து வந்த பசில் தமது பேர பலத்தை அதிகரிக்கும் நோக்கத்தோடு கருத்து தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலை முதலில் வைப்பதற்குப் பதிலாக பொதுத் தேர்தலை முதலில் வைக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். ஏனென்றால் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மக்களுக்கு முற்கற்பிதங்களை ஏற்படுத்தும். முன் முடிவுகளை உருவாக்கும். ஒரு வெற்றி அலையானது தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல்களிலும் எதிரொலிக்கும். எனவே ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பொதுத் தேர்தலிலும் மக்கள் வாக்களிக்கக்கூடும். ஒரு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவாராக இருந்தால், அவர் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்காக கிடைத்த வெற்றியாக அது காட்டப்படும். அதனால் ரணிலின் பேரபலம் அதிகரிக்கும். அதன்பின் நடக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் தாமரை மொட்டுக் கட்சி, ரணிலோடு பேரம் பேசி வேண்டிய அமைச்சுகளைப் பெறுவது கடினமாகலாம்.  எனவேதான் முதலில் ஒரு பொதுத் தேர்தலை வைக்க வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள்.

ஒரு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றி பெறுவாராக இருந்தால் அது அவருடைய சொந்தக் கட்சியின் வாக்கு வங்கியால் அல்ல என்பது அவருக்கே தெரியும். தாமரை மொட்டுக்களின் பலமின்றி வெற்றிபெற முடியாது என்ற நிலைதான் இப்பொழுதுவரை உண்டு. அவருடைய சொந்தக் கட்சியின் பலம் அவருக்கு குறைவு. எனவே அவருடைய சொந்தப் பலம் எது என்பதனை அவருக்கு உணர்த்தும் விதத்தில் ஒரு பொதுத்  தேர்தலை முதலில் வைத்தால் அதில் ரணில் தன்னுடைய சொந்தப் பலம் எது என்பதைக் கண்டுபிடித்து விடுவார். அப்பொழுது அவருடைய பேரம் குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் ராஜபக்சங்கள் அவருடன் பேரம் பேசுவது இலகுவாக இருக்கும். நாமலை பிரதமராக நியமிக்கும்படி கேட்கலாம்.

எனவே முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடந்தால் அதில் ரணிலுக்குப் பேர பலம் அதிகரிக்கும். முதலில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் அதில் ரணிலின் பேரம் குறையும். எனவே ரணிலின் பேரத்தைக் குறைப்பதுதான் ராஜபக்சகளின் திட்டம். இதை இன்னும் ஆழமாகச் சொன்னால் அடுத்த நாடாளுமன்றத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான் அவர்களுடைய திட்டம்.

எனவே ராஜபக்சத்தை தங்களுடைய பேரபலத்தை நிரூபிப்பதற்குத் தயாராகி வருகிறார்கள் என்று பொருள். இதை அதன் சாராம்சத்தில் சொன்னால், ராஜபக்சக்கள் தற்காப்பு நிலையில் இருந்து வலிந்து தாக்கும் நிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று பொருள். கடந்த 2021 ஆம் ஆண்டு “அரகலய”வின் பொது  அவர்கள் பின்வாங்கும் நிலையில் இருந்தார்கள். சொந்தத் தேர்தல் தொகுதிகளிலேயே அவர்களுக்குப் பாதுகாப்பு இருக்கவில்லை. படை முகாம்களில் அவர்கள் அடைக்கலம் தேட வேண்டி வந்தது. ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய வெளிநாடு ஒன்றுக்கு தப்ப வேண்டி வந்தது. ஆனால் அவ்வாறான தற்காப்பு நிலையில் இருந்து இப்பொழுது வலிந்து தாக்கும் ஒரு நிலையைத் தாங்கள் அடைந்து விட்டதாக அவர்கள் நம்புகிறார்கள். எனவே அதை நோக்கித்தான் அவர்கள் திட்டமிடுகிறார்கள். கோட்டாபயவின் புத்தகமும் அந்த அடிப்படையில் எழுதப்பட்டதுதான்.

ஆனால் அமெரிக்காவிலிருந்து வந்த பசில் நினைத்தபடியெல்லாம் அரசியலை நகர்த்த முடியாது என்பதைத்தான் அண்மையில் அமெரிக்காவுக்கு சென்று வந்த மைத்திரியின் சர்ச்சைக்குரிய கூற்று வெளிப்படுத்துகின்றதா? மைத்திரி கூறுகிறார், ஈஸ்டர் குண்டு வெடிப்புத் தொடர்பாக தனக்கு ரகசியங்கள் தெரியும் என்று. அவர் ஏன் அவ்வாறு கூறுகிறார் ? அதுவும் ஒரு ஜனாதிபதித் தேர்தல் வர இருக்கும் பின்னணியில் ஏன் அப்படிக் கூறுகிறார்? ஏனென்றால், ஈஸ்டர் குண்டு வெடிப்பைப்பற்றிப் பேசினால் அதன் விளைவின் விளைவுகள் ராஜபக்சக்களைத்தான் பாதிக்கும்.

ராஜபக்சக்கள் தற்காப்பு நிலையில் இருந்து வலிந்து தாக்கும் நிலைக்கு முன்னேறுவதை, மேற்கு நாடுகள் விரும்பவில்லையா? அப்படிப் பார்த்தால், மைத்திரி கிளப்பிய சர்ச்சையும் “சனல் நாலு” வீடியோவை போன்றதுதானா? இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், ராஜபக்சக்களை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்குச் சவாலாக  எழாதபடி பார்த்துக் கொள்வதுதான் மேற்கு நாடுகளின் திட்டமா ? அதாவது ரணிலுடைய வழிகளை இலகுவாக்கிக் கொடுத்தல்?

மேற்கு நாடுகளும் மேற்கத்திய பெரு நிறுவனங்களாகிய பன்னாட்டு நாணய நிதியம் போன்றனவும் ரணில் பதவியில் தொடர்ந்துமிருப்பதைத்தான் விரும்புவதாகத் தெரிகிறது. மேற்கத்திய பாரம்பரியத்தில் வந்த அவரைக் கையாள்வது இலகுவானது என்று அவை நம்புகின்றன. கத்தியின்றி ரத்தமின்றி,தேர்தலின்றிக் கிடைத்த ஆட்சிமாற்றத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் தொடர விரும்புகின்றன. எனவே மேற்கு நாடுகளின் விருப்பத் தெரிவு ரணில்தான்.

ராஜபக்சக்கள் தாம் வலிந்து தாக்கும் நிலைக்கு வளர்ந்து விட்டதாக நம்பினாலும்கூட, தங்களுக்குப் பொருத்தமான முன் தடுப்பு ரணில் விக்கிரமசிங்கதான் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். எனவே, அவர்கள் ரணிலுடன் தமது பேரத்தை அதிகப்படுத்த விரும்பினாலும், ரணிலை விட்டால் அவர்களுக்கு வேறு தெரிவில்லை. அப்படித்தான் மகா சங்கத்திற்கும், படைத்தரப்புக்கும். அதாவது உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் மேற்கு நாடுகள் மத்தியிலும் ரணில் விக்கிரமசிங்கவுக்குத்தான் அதிகம் வரவேற்புக் காணப்படுகின்றது. அதனால்தான் ராஜபக்சக்கள் அவருடைய வழிகளைத் தடுக்காமல் இருக்க மைத்திரி அவ்வாறு பேச வைக்கப்படுகின்றாரா?

GJfmLgJWMAAO708-1-1024x723.jpg

ஆயின், இந்த விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? ரணில் விக்கிரமசிங்க எல்லாப் பேரரசுகளையும் சம தூரத்தில் வைத்துக் கையாளக்கூடிய ஒருவர். அப்படிப்பட்ட ஒருவர் இந்தியாவைப் பொறுத்தவரையிலும் கையாளக் கடினமானவர். அப்படிப் பார்த்தால் இந்தியா ரணிலை ஒரு விருப்பத் தெரிவாக எடுக்க முடியாது.

அது ரணிலுக்கும் விளங்கும். அதனால்தான் அவர் ஜனாதிபதித் தேர்தலில் இந்தியா தனக்கு எதிராகப் போகாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தியாவுடன் குறிப்பிடத்தக்க அளவுக்கு இணங்கிப் போக முயற்சிக்கின்றார். யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளிலும் இந்திய நிறுவனங்களுக்கு மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்களை வழங்கும் உடன்படிக்கைகள் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி கையெழுத்திடப்பட்டன. அதுபோலவே ராமர் பாலம் என்ற விடயத்திலும் ரணில் உண்மையாக இருக்கிறார் என்ற ஒரு தோற்றம் வெளிக்காட்டப்படுகிறது. ராமர் பாலத்தை கட்டப் போவதாக ரணில் இந்தியாவை நம்ப வைக்கின்றார். தன்னை நம்பத் தயாரற்ற  ஒரு பக்கத்து பேரரசுக்கு நாட்டை  முழுமையாகத் திறக்கத் தயார் என்று காட்ட  ரணில் முற்படுகிறாரா?

இந்தியப் பொருளாதாரம் அண்மை ஆண்டுகளில் வளர்ச்சி கண்டு வருகிறது. தமிழகத்திலும் அதுதான் நிலைமை. இவ்வாறு ஒரு பெரிய பொருளாதாரத்தோடு சிறிய இலங்கைத் தீவை நிலத்தால் இணைத்தால், இலங்கைத் தீவு விழுங்கப்பட்டு விடும் என்ற ஒரு பயத்தை சிங்கள மக்கள் மத்தியில் இலகுவாகத் தூண்ட முடியும். இந்த விடயத்தை ரணில் எப்படிக் கையாள்வாரோ தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி. பாலங் கட்டத் தயார் என்று சொன்னதிலிருந்து அவர் பின்வாங்க முடியுமா இல்லையா என்பது இந்தியா அந்த விடயத்தை எப்படிக் கையாளப்போகிறது என்பதில்தான் தங்கியிருக்கின்றது.

புதுடில்லி ஜேவிபியை அழைத்து கதைத்தமையும் ரணில் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் நோக்கிலான ஒரு நடவடிக்கைதான். ரணிலுக்கு எதிராகக் கையாளப்படத்தக்க சக்திகளை இந்தியா அரவணைக்கிறது என்று பொருள்.

எதுவாயினும், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரையிலும் இந்தியா தனக்கு நெருக்கடிகளைத் தரக்கூடாது என்று ரணில் கருதுவதால், அவர் இந்தியாவை எப்படியும் சுதாகரிக்கத்தான் முயற்சிப்பார்.

இவ்வாறாக தென்னிலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி கட்சிகள் வியூகங்களை அமைத்து உழைத்து வருகின்றன. தமிழ்த் தரப்பிலோ பிரதான கட்சி நீதிமன்றத்தில் இருந்து வீட்டுக்கு  வரமுடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. ஒரு கட்சி புறக்கணிப்பு என்று சொல்லிவிட்டு ஒதுங்கி விட்டது. தமிழ்ப் பொது வேட்பாளரை  முன்னிறுத்தும் கட்சிகள் கருத்துருவாக்கம்  என்ற கட்டத்தைத் கடந்து அதற்கான கட்டமைப்பு சார்ந்த நடவடிக்கைகளில் இன்னமும் இறங்கவில்லை. தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டது போல, தமிழ் ஐக்கியந்தான். கடந்த 15 ஆண்டுகளாக முடியாமல் போன காரியம் அது.கடந்த மாதம் தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்ட கூட்டுக் கடிதத்தைப் போல, அரிதாக ஏதாவது நடக்கும். மற்றும் படி கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதில் எல்லாக் கட்சிகளுமே தோல்வியடைந்து விட்டன. இந்த லட்சணத்தில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நோக்கி இதே கட்சிகளை எப்படி ஒருங்கிணைப்பது? அல்லது கட்சிகளைக் கடந்து மக்கள் அமைப்புகள் அதை முன்னெடுக்க வேண்டுமா ?

 

ரணில் விக்கிரமசிங்க: One Man Government

1 month 1 week ago
ரணில் விக்கிரமசிங்க: One Man Government
ரணில் விக்கிரமசிங்க: One Man Government

— கருணாகரன் —

இலங்கை அரசியலில் One Man Government ஆகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க. மட்டுமல்ல, அரசியல், பொருளாதாரம், பண்பாடு என அனைத்தையும் தீர்மானிக்கும் ஒரே ஆளாகியுள்ளார். ரணில் என்ன நினைக்கிறாரே அதுவே நடக்கிறது. அதுவே நடக்கக் கூடிய சூழலும் உள்ளது. அவரை மீறி எதுவும் இல்லை என்ற நிலை.

இதைக் கட்டுப்படுத்தவோ இடையீடு  செய்யவோ முடியாமல் எதிர்க்கட்சிகள் படுத்து விட்டன. எதிர்ப்பு அரசியல் என்பது காணாமலே போய் விட்டது. அங்கங்கே மெல்லிய தொனியில் அனுங்கலாகக் கேட்கும் குரலைத் தவிர, வேறெதுவும் இலங்கையில் இல்லை. 

நெடுங்காலமாக இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்தி வந்த ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் உடைந்து, சிதறிச் சிறுத்து விட்டன. ஐ.தே.க உடைந்து ஒரு பகுதி ஐக்கிய மக்கள் சக்தி என சஜித் பிரேமதாசவின் தலைமையில் இயங்குகிறது. மற்றப்பகுதி ரணில் விக்கிரமசிங்கவோடு. சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுண்டு ஒரு அணி பொதுஜன பெரமுன என ராஜபக்ஸக்களின் செல்வாக்கோடு செயற்படுகிறது. மற்றது மைத்திரிபால சிறிசேனவின் கீழ். அதிலும் ஒரு துண்டு தனியாகச் செயற்படவுள்ளதாக சொல்லிக் கொண்டிருக்கிறது.

ஆயுதப்போராட்ட அரசியல், தேசிய நீரோட்ட அரசியல் என்ற பாராளுமன்ற ஜனநாயக அரசியல் ஆகிய இரண்டு வழி அனுபவங்களையும் கொண்ட ஜே.வி.பி ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் குழந்தையாகத்தான் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் அதனால் எழுந்து நடக்க முடியவில்லை. 

தமிழ்த்தரப்பின் அரசியற் குரலைக் காணவே இல்லை. அது ஆழக்கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பதைப்போல யாருக்குமே பெரிதாகக் கேட்பதில்லை. அதற்குள் ஆயிரத்தெட்டுப் பிரிவினைகள். ஒரு காலம் ஈழ விடுதலை இயக்கங்கள் பெருகிக் கிடந்ததைப்போல இப்பொழுது தமிழ்த்தேசியக் கட்சிகள் பெருகிக் கிடக்கின்றன. 

ஈழவிடுதலை இயக்கங்களிலிருந்து பெற்ற அனுபவமோ என்னவோ தெரியவில்லை. இப்பொழுது தமிழ் மக்களும் தமிழ் அரசியற் குரலைப் பெரிதாகக் கவனத்திற் கொள்வதில்லை. அதற்கு உருவேற்றுவதற்குச் சிலர் உடுக்கடிகாரர்களைப்போல எப்படியெல்லாமோ முயற்சிக்கிறார்கள். ஆனால், சனங்கள் சன்னதங்கொள்வதைக் காணோம். பட்டறிவாக இருக்கலாம்.

பதிலாகப் பலரும் தம்மை விட்டாற் காணும் என்ற நிலையில், இன, மத பேதமின்றி நாட்டை விட்டுத் தப்பியோடுகிறார்கள். 

உயர் பதவியிலுள்ளவர்கள் கூட பதவியாவது மண்ணாவது என  அரசு வழங்கியிருக்கும் ஐந்தாண்டுகள் ஊதியமற்ற விடுமுறையைப் பயன்படுத்திக் கொண்டு வெளியே பறக்கிறார்கள். 

போர்க்காலத்தில் நாட்டை விட்டு வெளியேறியோரின் தொகையை விட இப்பொழுது வெளியேறுவோரின் தொகை அதிகம் என்று சொல்கின்றன புள்ளிவிவரங்கள்.

உண்மையும் அதுதான். கடவுச் சீட்டுப் பெறும் அலுவலகமும் வெளிநாட்டுத் தூதுவரகங்களும் சனங்களால் நிரம்பி வழிகின்றன. 

எஞ்சியிருப்போரில் பலரும் இனியும் காலத்தைக் கடத்த முடியாது என்று இலங்கைத் தேசிய அரசியலில் கலந்தும் கரைந்தும் போகிறார்கள். இதனால்தான் அங்கயன் ராமநாதன், சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), டக்ளஸ் தேவானந்தா போன்றோர் அதிகூடிய வாக்குகளைப் பெறுகிறார்கள். 

நாடு யுத்த நெருக்கடியிலிருந்து மீண்டு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டிருக்கிறது. 

எல்லாவற்றுக்கும் காரணம் தேசியப் பிரச்சினைகளில் ஒன்றான இனவாதம் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை விட்டுத் தொலைப்பதற்கு யாரும் தயாரில்லை. 

அரசியல் கட்சிகளும் சரி, அரசியல் ஆய்வாளர்கள், பத்தியாளர்கள், ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள், மத பீடங்கள், புத்திஜீவிகள், அறிவு மையங்கள், விளிம்புகள் என எல்லா இடங்களிலும் எல்லாத்  தரப்புகளிலும் இனவாதம் தாராளமாக ஊறிப்போய்க் கிடக்கிறது.

மூன்றுவேளை சாப்பாட்டைப் போல இனவாதம் பலருக்கும் அவசியமான – பழக்கமான ஒன்றாகி விட்டது. 

அதை விட்டால் உயிரே போய் விடும் என்று எண்ணுகிறார்கள். 

சமாதானத்தை விட, அமைதியை விட, சுபீட்சமான எதிர்காலத்தை விட, அந்நிய தலையீடுகள், ஆக்கிரமிப்புகளை விட, பிற சக்திகளிடம் முழந்தாழில் நின்று கையேந்துவதை விட, நாடு கடனில் மூழ்குவதை விட, அரை வயிறு பட்டினி கிடப்பதை விட இனவாதம் ருசிக்கிறது எல்லோருக்கும்.

இந்த மாதிரி மூடத்தனம் வேறில்லை. என்னதான் சொல்லுங்கள். நாங்கள் மூடர்களாகவும் முட்டாள்களாகவும் இருந்து விட்டுப் போகிறோம். நம்முடைய முயலுக்கு ஒன்றரைக் கால்தான் என்பதிலிருந்து எவரும் முன்னகரத் தயாரில்லை.

இந்தப் பைத்தியக்காரத்தனத்துக்கு எந்த வைத்தியமுமில்லை. 

இந்தச் சூழலில்தான் தான் ஒரு சிறந்த ஜனநாயகவாதி. அரசியல், பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க வந்த ஆபத்பாந்தகர். இனவாதத்துக்கு எதிரான பேர்வழி. அமைதியின் நேசன். மூழ்கும் நாட்டை மீட்க வந்த ஒரேயொரு மாலுமி என்று தோற்றம் காட்டுகிறார் ரணில் விக்கிரமசிங்க.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவியிலிருக்கும் ரணில் இன்று சர்வ வல்லமை பொருந்திய பெருந்தலைவர். 50 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் அனுபவம் ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தாராளமாகக் கை கொடுக்கிறது. சர்வதேச நாடுகளின் ஆதரவு ஒரு பக்கம் அவருக்குக் கிடைக்கிறது என்றால், சர்வதேச நாடுகளை லாவகமாகக் கையாளும் அவருடைய கலை இன்னொரு பக்கமாகக் கைகொடுக்கிறது. 

இதனால் ரணில் விக்கிரசிங்கவை எவராலும் எதுவும் செய்ய முடியவில்லை. பலருக்கும் அவர் மீது பொருமல்கள் உண்டு. ஆனால், அடுப்படிக்குள் புகைவதைப்போல அடிவயிற்றில் புகைவதோடு எல்லாம் அடங்கிப் போகின்றன. 

அறுதிப் பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் வைத்திருக்கின்ற ராஜபக்ஸக்களின் ‘பொது ஜன பெரமுன’ கூட ரணிலை எதுவும் செய்ய முடியாதுள்ளது. மட்டுமல்ல, ரணிலுக்குச் சவால் விட்டுக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி, ஒரு பெரும் அணியாகத் திரண்டிருக்கும் சஜித்தின் கூட்டணியினாலும் ரணிலை ஆட்ட முடியவில்லை.

இவ்வளவுக்கும் இந்தச் சீமான் ஒரு வாக்கைக் கூட, தான் இப்பொழுது வகிக்கும் பதவிக்காகப் பெற்றவரில்லை. ஏன், இதற்காக நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலிலேயே போட்டியிட்டதுமில்லை. ஆனால், அவரே நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி – நாட்டின் அதிபராகி ஆட்டுவிக்கிறார். 

இலங்கை அரசியல் சாசனத்தின்படி ஜனாதிபதிக்கே உச்ச அதிகாரமுண்டு. அமைச்சரவையும் பாராளுமன்றமும் முப்படைகளும் என முழு நாடுமே ஜனாதிபதிக்குக் கீழேதான். 

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தனக்கு எதிரான திசையிலிருந்தவர்களை வைத்தே வெற்றிகரமாக ஆட்சியை நடத்துகிறார். அமைச்சரவையில் உள்ள அத்தனை பேரும் எதிரணியைச் சேர்ந்தவர்கள். இருந்தாலும் ரணிலுக்குக் கட்டுப்பட்ட பெட்டிப் பாம்புகளாகவே இருக்கின்றனர். 

இதற்கெல்லாம் காரணம், இவர்கள் அனைவரும் பலவீனமான நிலையில், கடந்த காலத்தில் தவறுகளை இழைத்தவர்களாக இருப்பதேயாகும்.

இந்தத் தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமென்றால், தவிர்க்க முடியாமல் ரணிலை ஆதரித்தே ஆக வேண்டும். அவருடைய கால்களைப் பிடித்தே ஆக வேண்டும். ராஜபக்ஸக்களைக் காப்பாற்றி வைத்திருப்பதே ரணில்தான். 

இந்த நிலையிலிருந்து நாடு மீள்வதென்றால், பல காரியங்கள் நடக்க வேண்டும். முதலில் பொருளாதார நெருக்கடி தீர வேண்டும். இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அதற்கு அரசியலமைப்பில் மாற்றம் வேண்டும். அதற்கு மக்களின் மனதிலும் அரசியற் கட்சிகள் – அரசியல்வாதிகளின் மனதிலும் மதவாதிகளின் தலைக்குள்ளும் மாற்றம் நிகழ வேண்டும். அதற்கு ஏற்றமாதிரிப் பல தரப்பிலும் வேலைகள் நடக்க வேண்டும். சமாதானத்தின் மீதும் தீர்வின் மீதும் விருப்பமும் உறுதிப்பாடும் வேண்டும். ஜனநாயக ரீதியான – மாண்புடைய தேர்தல் நடக்க வேண்டும். இப்படிப் பலவும் நடப்பது அவசியம்.  

பொருளாதார நெருக்கடியை வைத்தே ரணில் தன்னைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். 

ரணிலை விட்டால் பொருளாதார நெருக்கயைக் கையாளக் கூடிய வேறு ஆட்களில்லை என்றமாதிரியே நாட்டின் பெரும்பான்மையான சனங்கள் எண்ணுகிறார்கள். ஏன் அரசியற் கட்சிகள், பிற தலைவர்களுக்கும் கூட அப்படியான எண்ணம்தான். 

ஆனாலும் ரணில் விக்கிரசிங்கவை வீழ்த்தி விட வேண்டும் என்றே ஒவ்வொருவரும் யோசிக்கிறார்கள். இதற்காக அவர்கள் குறுக்கு வழியில் பயணிப்பதைப்போல தேர்தலை எதிர்பார்க்கிறார்கள்.

தேர்தல் நடந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று சிந்திக்கிறார்கள். இதுதான் சிரிப்புக்கிடமான சங்கதி. ஒரு தேர்தல் அல்ல ஒன்பது தேர்தல் நடந்தாலும் பிரச்சினைகள் தீராது. 

ஏனென்றால் நாட்டின் பிரச்சினைகளுக்குத் தேர்தல் மூலமாகத் தீர்வைக் காணவே முடியாது. தீர்வு காண வேண்டிய வேலைகளில் தேர்தல் மூலமான அதிகார மாற்றமும் ஒன்றாக இருக்கலாமே தவிர, அதுதான் தீர்வைப் பெற்றுத்தரும் என்று சொல்வதற்கில்லை.

இதற்கு முன்பும் பல தேர்தல்கள் நடந்திருக்கின்றன. பல விதமான வாக்குறுதிகளின் மத்தியில்தான் அந்தத் தேர்தல்களும் அவற்றின் வெற்றியும் அமைந்தது.

மக்களும் பெரும் எதிர்பார்ப்புகளோடுதான் வாக்களித்திருக்கிறார்கள். 

ஆட்சி பீடம் ஏறியவர்கள் மாபெரும் பிரகடனங்களோடு கதிரையில் அமர்ந்தனர். 

இரண்டு மாதம் சென்றதும் பழையபடி வேதாளம் முருங்கையில் ஏறிய கதையே நிகழ்ந்தது.

அதிகம் ஏன், யுத்தம் முடிந்தபோது நாட்டிலுள்ள பெரும்பான்மையோரிடம் இனிப் பிரச்சினை இல்லை என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.

ஆனால் நடந்தது என்ன? 

அதற்குப் பிறகுதான் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகளும் பொருளாதார நெருக்கடியும் அந்நியத் தலையீடுகளின் அதிகரிப்பும்.

இன்று நாடு இருக்கின்ற நிலை?

தேர்தலினால் சிலவேளை ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிக்கலாம்.  நாட்டின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது நடக்கும் என்றில்லை. அதற்கு ஏற்கனவே சொல்லப்பட்டதைப்போல பல காரியங்கள் நடக்க வேண்டும். அதற்கான திடசங்கற்பம் ஒவ்வொருவரிடமும் ஏற்பட வேண்டும். அதற்கு நாட்டையும் மக்களையும் நேசிக்கும் ஒரு பண்பு உருவாக வேண்டும். அரசியல் வணிகத்திலிருந்து கட்சிகளும் தலைவர்களும் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளரும் விடுபட வேண்டும். தனி நலனை விட பொது நலன் என்ற சிந்தனை எழ வேண்டும். தேசப்பற்றும் மக்களின் மீதான மதிப்பும் ஒரு அலைபோல மேற்திரள வேண்டும். இதை முன்னெடுக்கும் ஒரு அணி அல்லது தலைமை உருத்திரள வேண்டும்.

இப்போதிருப்பவை சவலைகள். இவற்றினால் எதையுமே செய்ய முடியாது. இதை அவை நன்றாக நிரூபித்துள்ளன. இவற்றை விட இருக்கின்ற One Man Army அல்லது One Man Government பரவாயில்லை. இதை நான் சொல்லவில்லை. சனங்கள் சொல்கிறார்கள். 

00

 

https://arangamnews.com/?p=10600

"தமிழர்கள் கற்க மறந்த பண்பு எது?"

1 month 1 week ago

"தமிழர்கள் கற்க மறந்த பண்பு எது?"


தமிழர் அல்லாத நண்பர்களிடம் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு கேள்வி:  "தமிழர்களின் குரல் முக்கியமான விடயங்களில் கூட ஒரு சேர ஒலிப்பதில்லையே ஏன்?" என்னையும் கூட நீண்ட காலமாக அரிக்கிற கேள்வி இது. தமிழர்களாகிய நாம் பெற்றிருக்கும் வளங்கள் - குறிப்பாக - அறிவுசார் வளங்கள், பல துறைகளில் நம்மவர்கள் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் - பிரமிப்பானவை;  உலகின் எந்த ஓர் இனத்துக்கும் சவால் விடக் கூடியவை. அப்படியிருந்தும், ஏன் சக்திமிக்க ஓரினமாக நாம் உருவெடுக்க முடியவில்லை? தமிழர்களாகிய நாம், குறிப்பாக கொஞ்சம் யோசிக்கக் கூடியவர்கள், படித்தவர்கள், ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ், ஒரு பொது நோக்கத்தின் கீழ் பணியாற்றும் பண்பை இன்னும் ஏனோ கற்றுக் கொள்ள வில்லை. தமிழர்களில் பெரும் பான்மையினரிடத்தில் - அதாவது, அவர்கள் எவ்வளவு பெரிய மேதைகள், ஆளுமைகள், சாதனையாளர்களாக இருந்தாலும் சரி - 
 இந்தப் பலவீனத்தை அதிகமாக இன்னும் கொண்டு உள்ளார்கள். இன்னும் சொல்லப் போனால், இந்த விடயத்தில், சாமானியர்களைக் காட்டிலும் கொஞ்சம் யோசிக்கத் தெரிந்தவர்களே மிக மோசமாக இருக்கிறார்கள். ஒற்றுமையாக வாழத் தெரியாமல், இருப்பதையும் போட்டு உடைக்கிறார்கள்!  அவர்களிடம் "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற வாழ்வை இன்னும் காணோம்!" 

ஆனால் தமிழர் சரித்திரத்தில் ஒரு முறை கண்டோம். அது கி மு 300 அளவில். அதன் பின்பு இன்று வரை நாம் ஒன்றுபடவில்லை. இனி இதை எங்கு காண்போம்? இத்தனை அழிவு கண்ட பின்பாவது திரிந்தினோமா ?

வட இந்தியாவை ஆண்ட நந்த வம்சம் [Nandhas] தென் இந்தியாவை ஆண்ட மூன்று பேரரசுகளுடனும் சகோதரரைப் போன்ற ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருந்தனர். என்றாலும் அவர்களை தொடர்ந்து வந்த மௌரியப் பேரரசு [Mauryas] (322–185 கிமு) தென் இந்தியா மேல் படையெடுத்தது. சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயம் வரை படை நடத்திச் சென்றவன். வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப் பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற் கடித்துச் சிறைப் பிடித்தவன். அது மௌரியர்களை சேர நாட்டின் மேல் பலி வாங்கும் தாக்குதலுக்கு தூண்டியது. என்றாலும் மௌரியப் பேரரசால் சோழ எல்லைக்குள் நுழைய முடியவில்லை. இந்த படை எடுப்பு மூவேந்தர்களுக்கும் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியது. இதனால் 313 B.C, யில் இவ் மூவேந்தர்களும் ஒரு ஒற்றுமைக்கான உடன்படிக்கை ஒன்றில் ஒப்பம் இட்டார்கள் என Dr.மதிவாணன் [author Dr.Mathivanan] கூறுகிறார்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கருங்கை ஒள் வாட் பெரும் பெயர் வழுதி, 70 ஆவது பாண்டியனாகிய தேவ பாண்டியன் ஆகிய மூவரும் கையொப்பம் இட்ட அந்த ஒற்றுமை ஒப்பந்தம் ஆக 113 வருடமே நிலைத்து இருந்தது. அது, அந்த ஒற்றுமை, வட இந்தியர்களின் தாக்குதல்களில் இருந்து தமிழகத்தை அசைக்க முடியாத குன்றாய் நின்று காப்பற்றியது. சங்க பெண் புலவர் முடத்தாமக் கண்ணியார் தாம் இயற்றிய பொருநராற்றுப் படை [53-55] யில் மூவேந்தர்களும் ஒரே மேடை யில் இருக்க கண்டதாக பதிந்து உள்ளார்.

“பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள்
முரசு முழங்கு தானை மூவருங்கூடி
அரசவை இருந்த தோற்றம் போலப்
பாடல் பற்றிய பயனுடைய எழாஅல்
கோடியர் தலைவ கொண்டது அறிந
அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது
ஆற்று எதிர்ப் படுதலும் நோற்றதன் பயனே
போற்றிக் கேண்மதி புகழ் மேம் படுந (53 – 60)

பெருமையுடைய செல்வத்தையும், பெரிய பெயரையும், வலிய முயற்சியையும், வெற்றி முரசு முழங்கும் படையையும் உடைய மூவேந்தர்கள் ஒன்றாகக் கூடி அரச அவையில் இருக்கும் தோற்றம் போல, பாடல்களையும் பற்றித் தோன்றும் இசைப் பயனையுடைய யாழினையும் உடைய கூத்தர்களின் தலைவனே!  பிறர் மனதில் கொண்டதைக் குறிப்பால் அறிய வல்லவனே! அறியாமையினால் வழியைத் தவறிச் செல்லாது, இந்த வழியில் என்னைக் கண்டது உன்னுடைய நல்வினையின் பயனே!  நான் கூறுவதை நீ விரும்பிக் கேட்பாயாக புகழை உடையவனே!


{(பொரு. ஆற். படை: 53-60) போரொழுக்கத்தில் வெற்றிகளைச் சாதித்த மூவேந்தர்களை அப்பாடல்களில் சந்திக்கின்றோம்.} 

மேலும் இரண்டாம் பத்தை பாடிய குமட்டூர்க் கண்ணனார் என்பவரும் தாணும் இதை கண்டதாக பதிந்து உள்ளார். பின் ஔவையாரும் இதை கண்டுள்ளார். ஆனால் அந்த ஒற்றுமை அதன் பிறகு இன்று வரை ஏற்படவே இல்லை. இப்ப நாம் காரிக் கண்ணனார் என்ற இன்னும் ஒரு சங்க புலவர் கண்ட காட்சியை பார்ப்போமா ?

ஒருசமயம், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர். அதைக் கண்ட புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பெருமகிழ்ச்சி அடைந்தார். சோழனும் பாண்டியனும் ஒருங்கே இருந்ததைப் பலராமனும் திருமாலும் ஒருங்கே இருப்பதற்கு ஒப்பிட்டு, “அவர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்தால் இவ்வுலகம் அவர்கள் கையகப்படுவது உறுதி" என்று இப்பாடலில் கூறுகிறார்.

"நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே,
முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்
......................................................
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் 
உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப்
பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே;
..........................................................
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே."
[புறநானூறு 58]

நீ குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்; இவன் முன்னோர் புகழைக் காப்பாற்றும் பஞ்சவர் ஏறு. இன்னும் கேள். ’நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிடுவீர். இருவரும் இப்படி இணைந்திருந்தால் இந்த உலகம் முழுவதும் உங்கள் கையில் இருக்கும். பிறருடைய நாடுகளிலுள்ள குன்றுகளில், வளைந்த கோடுகளையுடைய புலிச் சின்னமும், பெரிய நீரில் வாழும் கயல்மீன் சின்னமும் பொறிக்கப்படுவதாகுக.


இதை ஏன் எம் இலங்கைத் தமிழ் தலைவர்கள் இன்னும் உணரவில்லை. அன்று ஒரு கட்சியில் ஆரம்பித்து ஒரே ஒரு தமிழ் தலைவன் இருந்தான், இன்று எத்தனை காட்சிகள், எத்தனை தலைவர்கள் ? இது இன்னும் வேண்டுமா எமக்கு ?? 


"இருந்ததும் இல்லை நிலமும் இல்லை
சிதைந்து போராடி வெற்றியும் இல்லை   
புதைந்து போனது மண்ணின் மைந்தர்களே!" 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

தமிழ்ப் பொது வேட்பாளர்: யாரால்? யாருக்கு? யாருக்காக ? - நிலாந்தன்

1 month 2 weeks ago

தமிழ்ப் பொது வேட்பாளர்: யாரால்? யாருக்கு? யாருக்காக ? - நிலாந்தன்

 

image_140aba5788-c.jpg

சில மாதங்களுக்கு முன்பு வடமராட்சி கட்டை வேலி கிராமத்தில் ஒரு மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. சமகால நிலைமைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டும் நோக்கிலான அச்சந்திப்பின் போது, வளவாளர் அங்கு வந்திருந்த மக்களை நோக்கி பல்வேறு கேள்விகளையும் கேட்டார். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள்? ஏன் வாக்களிக்க விரும்புகிறார்கள்? என்றும் கேட்டார். கேள்விகளின் போக்கில் அவர் ஒரு கட்டத்தில் கேட்டார், தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் அவருக்கு நீங்கள் வாக்களிப்பீர்களா? என்று. அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஏறக்குறைய ஒரே குரலில் ஆம் என்று பதிலளித்தார்கள். அதில் யாரோ ஒரு பெண் ரகசியமான குரலில் சொன்னார் “அந்தப் பொது வேட்பாளர் தமிழ் ஈழம் கேட்டால் சந்தோஷமாக வாக்களிப்போம்” என்று.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, சில மாதங்களுக்கு முன்னரே ஈபிஆர்எல் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் முன் வைத்தார். அதன் பின் அவர் அங்கம் வகிக்கும் குத்துவிளக்குக் கூட்டணி அதை ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது. அதன்பின் விக்னேஸ்வரன் அவ்வாறு ஒரு பொது வேட்பாளராக நிற்பதற்குத் தான் தயார் என்று அறிவித்திருந்தார்.

இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சி அதன் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை இன்றுவரை வெளிப்படுத்தவில்லை. அவ்வாறு ஒருமித்த முடிவை எடுக்க முடியாதபடி அக்கட்சி நீதிமன்றம் ஏறிக்கொண்டிருக்கிறது. எனினும், தமிழரசுக்  கட்சிக்குள் தேர்தல் நடப்பதற்கு முன்பு, சாணக்கியன் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருந்தார். அதேசமயம் அண்மையில் டான் டிவி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு சிவில் சமூகம் ஒழுங்குபடுத்திய ஒரு கருத்தரங்கில் பேசிய சிறீதரன் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாகக் கருத்துரைத்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வழமை போல தேர்தலைப் பகிஷ்கரிக்கப் போகின்றது.

இதனிடையே, புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர் ஒருவருடைய தூதுவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர், சில மாதங்களுக்கு முன், தமிழ்க் கட்சிகள் சிலவற்றோடு உரையாடியிருக்கிறார். குறிப்பிட்ட முதலீட்டாளர் தென்னிலங்கையில் உள்ள இரண்டு கட்சிப் பதிவுகளை விலைக்கு வாங்கி வைத்திருப்பதாகவும், அதில் ஒரு கட்சியின் பதிவின் கீழ் தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சிப்பதாகவும் கூறப்பட்டது. அத்தமிழ்ப் பொது வேட்பாளர், தமிழ் வாக்குகளை ஒன்று திரட்டி ரணில் விக்ரமசிங்கவை நோக்கித் திருப்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது ரணிலை வெல்ல வைப்பதற்கே அந்த முயற்சி என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் அக்கோரிக்கைக்கு இணங்கவில்லை என்றும் தெரிகிறது.

அதேசமயம் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட டான் டிவி ஒரு சிவில் சமூகத்தை முன்னிறுத்தி, தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக ஒரு கருத்தரங்கை சில கிழமைகளுக்கு முன் நடத்தியது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர ஏனைய பெரும்பாலான கட்சிகள் அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தன.

articles_oqF2dgHWywdy2xvr1yHd-1c-1024x53

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவை தமிழ் மக்கள் பேரவை கையில் எடுத்தது. அது வெற்றி பெறவில்லை. இப்பொழுது குத்துவிளக்குக் கூட்டணி, புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர், டான் டிவியின் சிவில் சமூகம் போன்றன அதைக் கையில் எடுத்திருக்கின்றனவா?

இந்த விடையத்தில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்கள் பேரவை ஏன் வெற்றி பெறவில்லை என்ற கேள்விக்கு விடை முக்கியம்.

அன்றைக்கு அந்த முயற்சிக்கு சம்பந்தர் ஆதரவாக இருக்கவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்தது. ஆனால் ஏனைய கட்சிகள் தயக்கத்தோடு தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்க முன்வந்தன. அவ்வாறு ஆதரித்த கட்சிகளை ஒன்று திரட்டி அதை ஒரு அரசியல் செய்முறையாக பரிசோதிப்பதற்கு பேரவையால் முடியவில்லை. அதற்குத் தேவையான பலமும் கட்டமைப்பும் தமிழ் மக்கள் பேரவையிடம் இருக்கவில்லை.

இப்பொழுதும் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தத் தேவையான பலம், அது பற்றி உரையாடுபவர்களிடம் உண்டா?

இது ஏறக்குறைய கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியின் மறு வடிவம்தான். அதை இன்னும் தெளிவாகச் சொன்னால், ஜனாதிபதி தேர்தல் என்ற ஒர் அரசியல் நிகழ்வை முன்வைத்து தமிழ் ஐக்கியத்தைக் கட்டி எழுப்புவது; தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டியெழுப்புவதுதான்.

ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக அதைச் செய்யத்தான் தமிழ் பரப்பில் ஆட்கள் இல்லையே? தமிழ்க் கட்சிகளை ஒன்றாக்குவதற்கு ஏதாவது ஒரு பலம் இருக்க வேண்டும். கட்சிகளைக் கூப்பிட்டுக் கருத்தரங்கை வைக்கலாம். ஆனால் கட்சிகளை ஒன்று திரட்டி இதைச் செய்யுங்கள் என்று நெறிப்படுத்த ஒரு பலமான அரசியல் கட்டமைப்பு வேண்டும். அது தமிழ் மக்களிடம் உண்டா? இல்லையென்றால் தமிழ் ஐக்கியத்தைப் போலவே தமிழ்ப் பொது வேட்பாளர் தெரிவும் நெருக்கடிக்கு உள்ளாகும்.

உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி இந்த விடயத்தில் ஆதரவளிக்காவிட்டால் அது வெற்றி பெறாது என்ற கருத்து குத்துவிளக்கில் உள்ள சில கட்சிக்காரர்களிடம் உண்டு. இதில் தன்னம்பிக்கை குறைவும் தாழ்வுச் சிக்கலும் உண்டு என்பதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். தன் சொந்தப் பலத்தில்; சொந்த உழைப்பில்; தான் சரியென்று கருதும் ஒன்றை வெற்றிபெறச் செய்வதற்கான திடசித்தம் குத்துவிளக்குக் கூட்டுக்குள் எத்தனை கட்சிகளிடம் உண்டு?

தமிழரசுக் கட்சி இந்த விடயத்தில் முடிவெடுக்க முடியாதபடி இரண்டாக நிற்கின்றது. அது நீதிமன்றத்தில் இருந்து வீட்டுக்குத் திரும்பும் வரையிலும் இந்த நிலைமை தொடரும். இவ்வாறு அக்கட்சி இரண்டாகி நிற்பது தென்னிலங்கை வேட்பாளர்களுக்குச் சாதகமானது.

ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் என்ற விடயத்தை தமிழ் மக்கள் உருப்படியாகச் செய்து முடிப்பார்கள் என்று தென்னிலங்கையில் உள்ள எந்த ஒரு வேட்பாளரும் நம்பவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்கள் பேரவையின் சுயாதீனக் குழுவோடு உரையாட சஜித் பிரேமதாச முயற்சித்தார். அவருடைய மனைவி “ஜெட் விங்” ஹோட்டலில் தங்கியிருந்து அதற்கான அழைப்பையும் எடுத்தார். இம்முறை சஜித் அந்த விடயத்தைப் பொருட்படுத்தவில்லை என்று தெரிகிறது. சுமந்திரனும் சாணக்கியனும் தனக்குச் சாதகமாக தமிழ் வாக்குகளைத் திரட்டுவார்கள் என்று அவர் நம்புகிறார் போலும். மனோ கணேசன், ரவூப் ஹக்கிம் போன்றவர்கள் தமிழ் வாக்குகளையும் முஸ்லிம் வாக்குகளையும் தன்னை நோக்கிச் சாய்க்கலாம் என்றும் அவர் நம்புவதாகத் தெரிகிறது. அதனால், தமிழ்ப் பொது வேட்பாளரைக் குறித்து அவர் அலட்டிக் கொள்ளவில்லை.

276238730_523328779139985_62592831040002

அப்படித்தான் ரணிலும் ஜேவிபியும். தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் சிங்கள வேட்பாளர்களுக்குப் பதட்டத்தை ஏற்படுத்தும் ஒரு வளர்ச்சிக்கு இன்னும் வரவில்லை. அதை நோக்கி தமிழ்க் கட்சிகள் கட்டமைப்பாக ஒன்றிணைையவில்லை.

அவ்வாறு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்தாலும், சிங்கள வேட்பாளர்களுடன் பேரம் பேசுவது என்ற தெரிவை முதன்மைப்படுத்துவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்துவதாக அமையலாம்.

ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரின் கோரிக்கைகள் தொடர்பாக குத்துவிளக்குக் கூட்டணியோ அல்லது சிவில் சமூகமோ இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. தமிழ்ப் பொது வேட்பாளரின் கோரிக்கைகள் சிங்கள வேட்பாளர்களுடன் பேரம் பேசக்கூடியவைகளாக அமைய வேண்டும் என்று குத்து விளக்குக் கூட்டணிக்குள் உள்ள சில கட்சிகள் கருதுவதாகத் தெரிகின்றது. அவ்வாறு சிங்கள வேட்பாளர்களை நோக்கித் தமிழ்ப் பொது வேட்பாளரின் கோரிக்கைகளை வளைப்பது என்பது, 13 ஐ அமல்படுத்துவது வரையிலும் போக முடியும். ஆனால்,தமிழ் மக்களின் கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்களை நோக்கி வளைப்பதற்கு ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் தேவையில்லை. தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதற்குத்தான் அது தேவை.

தமிழ்ப் பொது வேட்பாளர் தெரிவு எனப்படுவது பேரம் பேசலுக்கானது என்பது அதன் முதன்மை நோக்கம் அல்ல. முதன்மை நோக்கம் எதுவென்றால், தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டியெழுப்புவதும் தமிழ் மக்களின் ஐக்கியத்தை உலகத்துக்குக் காட்டுவதும் தமிழ் மக்களின் உச்சமான கோரிக்கைகளுக்குரிய ஆகப் பிந்திய மக்கள் ஆணையை பெறுவதும்தான். தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுவது தமிழ் ஐக்கியத்தின் குறியீடு. தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டியெழுப்பும் ஒரு தெரிவு. தமிழ் மக்களின் உச்சமான கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதித் தேர்தலை ஒரு மறைமுக பொதுசன வாக்கெடுப்பாகப் பயன்படுத்தும் ஒரு தெரிவு. தேர்தல் முடிவை தமிழ் மக்களின் ஆகப் பிந்திய மக்கள் ஆணையாக உலகத்துக்கு காட்டப்படலாம்.

மாறாக,பேரம் பேசுவதை அடிப்படையாக வைத்து சிந்தித்தால், அது தமிழ் மக்களின் கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்களை நோக்கி வளைப்பதில்தான் போய்முடியும். மேலும், பொது வேட்பாளர் உச்சமான கோரிக்கைகளை முன்வைத்தால் பேரம் பேசலுக்கான வாய்ப்புக் குறைந்து விடும். எந்த ஒரு சிங்கள வேட்பாளரும் அவரோடு பேரம் பேசி தனக்குரிய சிங்கள பௌத்த வாக்குகளை இழக்கத் தயாராக இருக்க மாட்டார்.

அதேசமயம், தமிழ் மக்களின் உச்சமான கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் ஆணையைப் பெறுவதற்குரிய மறைமுக வாக்கெடுப்பாக ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்தி அதில் தோல்வி கண்டால், அது தமிழ் மக்கள் ஒரு தேசமாக இல்லை என்பதை வெளியுலகத்திற்கு நிரூபித்து விடும் ஆபத்தும் உண்டு.  எனவே ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவு எடுத்தால், அதற்காகக் கூட்டாக உழைக்க வேண்டும். அர்ப்பணிக்க வேண்டும். அது ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்கான உழைப்பு என்பதைவிட, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான உழைப்பு என்பதே சரி.
 

https://www.nillanthan.com/6668/

உயிர்த்த ஞாயிறு தாக்குதலும், மைத்திரி கிளப்பிய சர்ச்சைகளும் – நிலாந்தன்.

1 month 2 weeks ago
gotabaya-rajapaksa-mahinda-rajapaksa-mai உயிர்த்த ஞாயிறு தாக்குதலும், மைத்திரி கிளப்பிய சர்ச்சைகளும் – நிலாந்தன்.

கோத்தாபய ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அது அவருடைய குடும்பத்துக்குள்ளேயே போதிய வரவேற்பைப் பெறவில்லை என்று தெரிகிறது. அவர் தன் நிலைப்பாட்டில் மாறவில்லை என்பதை அந்தப் புத்தகம் நிரூபிப்பதாக அதை வாசித்தவர்கள் கூறுகிறார்கள். அதைவிட முக்கியமாக 2022 ஆம் ஆண்டில் தற்காப்பு நிலையில் காணப்பட்ட அவர் இப்பொழுது தன்னை நியாயப்படுத்தும் ஒரு வளர்ச்சிக்கு வந்துவிட்டார் என்பதுதான் அந்த நூலில் உள்ள செய்தி. அதாவது ராஜபக்சக்கள் தற்காப்பு நிலையில் இருந்து வலிந்து தாக்கும் ஒரு நிலையை நோக்கி முன்னேறி வருகிறார்கள் என்று பொருள்.

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பஸில் தெரிவித்த கருத்துக்களும் அதைத்தான் அதாவது ராஜபக்சக்கள் தற்காப்பு நிலையில் இருந்து வலிந்து தாக்கும் நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

அதே சமயம் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் குண்டுவெடிப்பைக் குறித்து புதிதாகத் தகவல்களை வெளியிடப் போவதாகக் கூறுகிறார்.

பசில் ராஜபக்ச நாடு திரும்பியதும் தெரிவித்த கருத்துக்களில் முக்கியமானது ஒரு பொதுத் தேர்தலை முதலில் வைக்க வேண்டும் என்பதாகும். ஏனென்றால் ஜனாதிபதித் தேர்தலை முதலில் வைத்தால் அதில் வெற்றி பெற்ற கட்சி அல்லது கூட்டு,பொதுத் தேர்தலில் போட்டியிடும்பொழுது, இயல்பாகவே மக்கள் அதை நோக்கிப் போவார்கள். அந்தக் கூட்டின் வெற்றி என்பது ஒரு முற்கற்பிதமாக அமையும். அது மக்களை முன் முடிவுகளோடு வாக்களிக்கச் செய்யும். அதாவது ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அதற்குப் பின் நடக்கக்கூடிய தேர்தல்களில் வாக்காளர்களின் மனோநிலையின் மீது செல்வாக்கைச் செலுத்தலாம் என்று பொருள். எனவே மக்கள் இயல்பாக முன் முடிவுகள் இன்றி வாக்களிப்பதற்கு முதலில் பொதுத்தேர்தலில் வைக்க வேண்டும், பின்னர் ஜனாதிபதித் தேர்தலை வைக்கலாம் என்று பசில் கூறியுள்ளார். அதை மஹிந்தவும் ஆதரித்துள்ளார். அதாவது தாமரை மொட்டுக் கட்சி முதலில் பொதுத்தேர்தல் வைப்பதை வலியுறுத்துகின்றது.

ஆனால், மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் பொதுத் தேர்தலை அவர்கள் முதலில் வைக்கவில்லையே? இப்பொழுது மட்டும் ஏன் மக்கள் முன் முடிவுகள் இன்றி சுயாதீனமாக, சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்? ஏனென்றால் ஜனாதிபதி தேர்தலை வைத்தால் அதில் சில சமயம் ரணில் வெல்லக் கூடும். அத்தேர்தலில் அவர் ராஜபக்சக்களின் பொது வேட்பாளராக இறங்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆனாலும் அவர் பெறக்கூடிய வெற்றியானது பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மெல்ல மெல்ல மீட்டுக் கொண்டு வருவதற்கான ஒரு பரிசாகவே பார்க்கப்படும். அது இயல்பாகவே ரணிலின் பேரம் பேசும் பலத்தை அதிகப்படுத்தும். அவ்வாறு தனது பேர பலத்தை உறுதிப்படுத்திக் கொண்ட பின், ஒரு பொதுத் தேர்தலை அவர் வைப்பாராக இருந்தால், அப்பொழுது ராஜபக்சக்கள் ஒப்பிட்டுளவில் பலவீனமாக இருப்பார்கள். யாரைப் பிரதமராக நியமிக்க வேண்டும்? யார் யாரை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்? போன்ற விடயங்களில் ரணிலின் கை பலமாக இருக்கும்.

சரி அப்படியென்றால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் பொதுத் தேர்தலை வைத்தால் என்ன நடக்கும்? பொதுத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் சொந்தக் கட்சியை விடவும் ராஜபக்ஷர்களின் கட்சிக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். கிராமப்புறங்களில் யுத்த வெற்றிவாதம் இப்பொழுதும் சூடாகவே இருக்கிறது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். எனவே ராஜபக்சக்கள் பொதுத் தேர்தலில் யுஎன்பியை விட அதிக வாக்குகளை பெறுவார்களா இருந்தால், அவர்களுக்குப் பேர பலம் அதிகரிக்கும். அப்பொழுது அவர்கள் விரும்பிய அமைச்சைக் கேட்டுப் பெறலாம். நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்ற நோக்கம் அவர்களிடம் இருப்பதாகத் தெரிகிறது. அதனால்தான் முதலில் பொதுத் தேர்தலை வைக்க வேண்டும் என்று அவர்கள் கேட்கின்றார்களா?

ஆனால் ராஜபக்சக்கள் ஒன்றை நினைக்க, மேற்கு நாடுகள் வேறு ஒன்றை நினைப்பதாகத் தெரிகிறது. ராஜபக்சக்கள் மீண்டும் பலமடைந்து அதாவது தற்காப்பு நிலையிலிருந்து தாக்கும் நிலைக்கு வருவதை, மேற்கு நாடுகள் விரும்பவில்லை என்று தெரிகிறது. அதனால்தான் மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னணிகள் பற்றிப் பேசத் தொடங்கியுள்ளாரா?

அவர் கூறுவது உண்மையா பொய்யா? அவருக்கு பின் யார் இருக்கிறார்கள்? என்பதற்கெல்லாம் அப்பால்,ஈஸ்டர் குண்டு வெடிப்பைப்பற்றி ஞாபகப்படுத்துவது என்பது,அதுவும் ஒரு ஜனாதிபதித் தேர்தல் நடக்கவிருக்கையில் அதைச் செய்வது என்பது,ராஜபக்சக்களுக்கு பாதகமானது.சிலசமயம் மைத்திரி கூறப்போகும் தகவல்கள் கிறீஸ்தவர்களைக் கோபமடையச் செய்யலாம். கர்தினால் மல்க்கம் ரஞ்சித் மீண்டும் ஒரு சுயாதீன விசாரணையைக் குறித்துக் கேட்கலாம். இவையெல்லாம் ராஜபக்சங்களுக்குப் பாதகமானவை. அதாவது வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் முன்னுக்கு வர முடியாத ஒரு நிலைமையை அது தோற்றுவிக்கலாம். எனவே ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பாக வெளிப்படுத்தப்படக்கூடிய புதிய தகவல்கள் ராஜபக்ச குடும்பத்தை மீண்டும் தற்காப்பு நிலைக்கு தள்ளக்கூடியவைகளாக இருக்கக் கூடும். அவர்களை “ஹை ப்ரோபைலில்” இருந்து “லோ ப்ரோபைல்” நிலைக்கு மாற்றுவது அதன் நோக்கமாக இருக்கலாம். அதாவது ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் வழிகளை இலகுவாக்கிகி கொடுப்பது?

மேற்கு நாடுகள் ஆகட்டும், ஐநாவாகட்டும், பன்னாட்டு நாணய நிதியம் ஆகட்டும் அனைத்துமே ரணில் மீண்டும் ஜனாதிபதியாக வருவதைத்தான் விரும்புகின்றன. அவர்களுக்கு ரணிலை விட்டால் வேறு தெரியவில்லை. ஏன் ராஜபக்சங்களுக்கும் மகா சங்கத்துக்கும்கூட ரன்னிலை விட்டால் வேறு தெரிவில்லை. தேர்தலை முன்னிட்டு பன்னாட்டு நாணய நிதியம் அவரைப் பலப்படுத்த விளையும். அது மட்டுமல்ல, படித்த ஆங்கிலம் தெரிந்த மேல் தட்டு வர்க்கத்தின் மனதில் அவர் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மெல்ல மெல்ல மீட்டு வருகிறார் என்ற ஒரு கருத்து பலமடைந்து வருகிறது.

நாட்டுக்குள் வரும் உல்லாசப் பயணிகளின் தொகை முன்னுரை விட அதிகரித்து வருகின்றது. வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்கள் அனுப்பும் பணத்தின் தொகையும் அதிகரித்து வருகிறது. தவிர மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தமை, எரிபொருள் விலையை அதிகரித்தமை, வரியை அதிகரித்தமை போன்ற நகர்வுகளின் மூலம் அரசாங்கத்தின் வருமானம் பெருகி வருகிறது. இவை போன்ற பல காரணங்களினாலும் அரசாங்கம் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மெல்ல மெல்ல மீட்டு வருகிறது என்ற ஒரு கருத்து உயர் குழாத்தின் மத்தியில் உண்டு.

ஆனால் நடுத்தர வர்க்கம் கீழ் நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் அவ்வாறு இல்லை. அவர்களில் அநேகர் ஜேவிபிக்கு ஆதரவாகவே காணப்படுகின்றார்கள். இளம் பட்டதாரிகள் ஒரு மோட்டார் சைக்கிள் கூட வாங்க முடியாதுள்ளது என்று புலம்புகிறார்கள். ஒரு மோட்டார் சைக்கிள் 8 லட்சத்துக்கு மேல் போகின்றது. ஒரு மோட்டார் சைக்கிள் கூட வாங்க முடியாத ஒரு நாட்டை விட்டு அவர்கள் வெளியேறத் துடிக்கிறார்கள். அல்லது ஜேவிபியை ஆதரிக்கின்றார்கள். இப்படிப்பட்டதோர் பின்னணியில், முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடந்தால், அதில் வாக்குகள் மூன்றாகப் பிரியும் நிலைமைகள் அதிகரிக்கின்றன.

ரணிலை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர விரும்பும் மேற்கு நாடுகள், ராஜபக்சக்கள் அவருக்குத் தடையாக இருக்கக் கூடாது என்று நம்புகின்றன. இந்தியா இந்த விடயத்தில் என்ன நிலைப்பாட்டை எடுக்கும்?

ரணில் புத்திசாலி, தந்திரசாலி. எல்லாப் பேரரசுகளையும் சம தூரத்தில் வைத்திருக்கக் கூடியவர்.அப்படிப் பார்த்தால், இந்தியா அவரைக் கையாள்வது கடினம். ஆனால் இந்த விடயத்தில் ரணில் முந்திக் கொண்டு விட்டார் என்று தெரிகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் இந்தியா தனக்கு எதிராகச் சிந்திக்கக் கூடாது என்று திட்டமிட்டு அவர் உழைக்கிறார். அதனால்தான் மூன்று தீவுகளிலும் மீளப் புதுப்பிக்கும் எரிசக்தித் திட்டங்கள் தொடர்பான உடன்படிக்கை இம்மாதம் முதலாம் திகதி கைச்சாத்தாகியது. அதைவிட முக்கியமாக ராமர் பாலத்தை மீண்டும் கட்டப் போவதான ஒரு தோற்றத்தை அவர் வெற்றிகரமாகக் கட்டியெழுப்பி வருகிறார்.அவர் நிறைவேற்று அதிகாரமுடைய ஒரு ஜனாதிபதி. அவர் பாலம் கட்டத் தயார் என்று பகிடிக்குக் கூற முடியாது. ஆனால் இந்தியப் பொருளாதாரம் மோடியின் ஆட்சியின் கீழ் அடைந்து வரும் அபரிதமான வளர்ச்சி, குறிப்பாக தமிழகம் அடைந்து வரும் அபரிதமான வளர்ச்சி,என்பவற்றின் பின்னணியில் வைத்துப் பார்க்கும் பொழுது,அந்தப் பாலம் ஊடாக சிறிய இலங்கை தீவு இந்தியாவால் விழுங்கப்பட்டு விடும் என்ற அச்சத்தை சிங்கள மக்கள் மத்தியில் விதைப்பது இலகுவானது.அதை ரணில் எப்படி எதிர்கொள்வார்?

அவரைப் பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தல் வரையிலும் இந்தியாவைச் சமாளித்தால் போதும். ஜனாதிபதித் தேர்தலில் இந்தியா அவருக்கு எதிராகச் செயல்படா விட்டால் சரி என்று அவர் சிந்திப்பதாகத் தெரிகிறது.

ஆக மொத்தம், ரணில் ஜனாதிபதித் தேர்தலை நோக்கித் தன்னைப் பலப்படுத்தி வருகிறார் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகின்றது. ஆனால் மூன்றாகப் பிரியப் போகும் சிங்கள வாக்குகள் யாரைத் தெரிவு செய்யும்?

https://athavannews.com/2024/1375842

சுமந்திரனின் மென்வலு அரசியலும் உட்கட்சி ஜனநாயகமும்

1 month 2 weeks ago

Courtesy: Mossad

 

இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.

இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும்.

வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.

சுமந்திரனின் மென்வலு அரசியலும் உட்கட்சி ஜனநாயகமும் | Sumandran Politics And Internal Party Democracy

 

அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது.

கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும்.

தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது.

இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்?

இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.

சுமந்திரனின் மென்வலு அரசியலும் உட்கட்சி ஜனநாயகமும் | Sumandran Politics And Internal Party Democracy

 

அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்?

ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும்.

இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும்.

தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது.

தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது.

இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது.

அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது.

சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.

சுமந்திரனின் மென்வலு அரசியலும் உட்கட்சி ஜனநாயகமும் | Sumandran Politics And Internal Party Democracy

 

ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது.

தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன.

மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது.

மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும்.

அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம்.

உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது.

உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில்,

01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம்.

02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை.

03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது,

04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு.

06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது.

07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது.

உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது.

ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது.

ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும்.

எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.  

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764

வங்கத்து முற்போக்கு அரசியல் சாதியற்றதா?

1 month 2 weeks ago

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் பெரும்பாலும் இடதுசாரிகளின் ஆட்சியில் இருந்தது. தலைசிறந்த அறிவுஜீவிகளும், இலக்கியவாதிகளும் அங்கிருந்து வந்தனர். அவர்களின் முற்போக்கு அரசியல் சாதிபேதம் அற்றது என்பது ஒரு பொதுவான பார்வையாக இருக்கின்றது. இந்தக் கட்டுரை இன்னொரு உண்மையை முன் வைக்கின்றது. இதை சுபஜீத் நஸ்கர் எழுதியிருக்கின்றார். வ. ரங்காச்சாரி அவர்கள் இதை தமிழில் மொழி பெயர்த்து, 'அருஞ்சொல்' இதழில் இக்கட்டுரை பிரசுரம் ஆகியிருந்தது.

***********************************************

வங்கத்து முற்போக்கு அரசியல் சாதியற்றதா?
சுபஜீத் நஸ்கர்
26 Mar 2024

மேற்கு வங்கத்தில் அரசியல் முற்போக்கானது – சாதி பேதம் அற்றது என்று போற்றப்படுகிறது, அதேசமயம், வட இந்தியாவின் இந்தி பிராந்திய மாநிலங்களில்தான் சாதி உணர்வு தலைவிரித்தாடுகிறது என்று தூற்றவும்படுகிறது. இது உண்மைதானா? வங்கம் இருவேறு உலகங்களால் ஆனது என்பதை நாம் புறக்கணிக்கிறோம் என்பதே உண்மை! 

வங்கத்தின் சமூக மேல் அடுக்கில் பிராமணர்கள், காயஸ்தர்கள், வைத்தியாக்கள் உள்ளனர்; இன்னொரு அடுக்கில் விளிம்புநிலையில் வாழும் பட்டியல் இனத்தவர், ஆதிவாசிகள் வாழ்கின்றனர். சாதி அடிப்படையில் தலைமுறை தலைமுறைகளாகத் தொடரும் உரிமைகளால் தலித்துகளையும் பழங்குடிகளையும் அடக்கி ஒடுக்குகின்றனர் சவர்ணர்களான முற்பட்ட சாதியினர்,

இந்தப் பிளவு, புவியியல் அடிப்படையிலானது அல்ல; சமூக முதலீடு - பொருளாதார வளங்கள் - அரசியல் ஆதிக்கம் ஆகியவற்றில் இது பரவியிருக்கிறது. நகர்ப்புறங்களில் பெரும்பாலும் வசிக்கும் முற்பட்ட சாதிகள் தங்களை முற்போக்காளர்களாகக் காட்டிக்கொள்வதால், சாதி அடிப்படையிலான சமூக படிநிலை இருப்பது மறைக்கப்படுவதல்லாமல், கேள்விகளுக்கும் உள்ளாவதில்லை. இந்த ‘முற்போக்குக் கண்ணோட்டமும்’ முற்பட்ட சாதியினரின் சாதி உணர்வுகளின் மீதுதான் கட்டியெழுப்படுகிறது. 

விளிம்புநிலை மக்களின் நிலை
வங்க சமூகத்திலும், ஊடகங்களிலும், கல்விச்சாலைகளிலும், மக்கள்குழு அமைப்புகளிலும் - மிகவும் குறிப்பாக அரசியலிலும் பட்டியல் இனத்தவரின் விருப்பங்கள் – லட்சியங்கள் யாவும் அன்றாடம் நிராகரிக்கப்படுகின்றன; அதுவும் எப்படி என்றால், ‘உத்தர பிரதேசம், பிஹாரைப் போல வங்கத்தில் சாதி அரசியலே கிடையாது’ என்று மிகவும் கவனத்துடன் கட்டமைக்கப்பட்ட தோற்றத்தால்!

மும்பையில் 'இந்தியா கூட்டணி' நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டபோது, அதைத் தீவிரமாக எதிர்த்தார், இதில் அவர் பாஜகவின் நிலையைத்தான் எடுத்தார்.

மாநிலம் முழுவதும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது சாதியையும் சேர்த்து தரவுகளைச் சேகரித்தால் முற்பட்ட சாதியினர் அடைந்துள்ள மகத்தான முன்னேற்றம் அம்பலமாகும், வங்காளத்தில் ஏழை - பணக்காரன் என்று இரண்டு சாதிகள்தான் உள்ளனவே தவிர வேறு சாதிப் பிரிவினைகள் இல்லை என்ற கம்யூனிஸ்ட்டுகளின் பொய்யுரையும் தவிடுபொடியாகும்.

பிஹாரில் எடுத்த சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எப்படி தலித்துகள் (பட்டியல் இனத்தவர்) எல்லா வகைகளிலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டனர் என்பதையும் காயஸ்தர்கள் எப்படி எல்லாவற்றிலும் உயர்நிலையில் இருக்கின்றனர் என்பதையும் வெளிக்காட்டியது.

தலித் மக்கள் எண்ணிக்கையில் அதிகம் வாழும் மூன்று மாநிலங்களில் வங்கமும் ஒன்று என்பதை 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு காட்டியது. அதுவே முற்பட்ட சாதிகளுக்கும், தலித்துகள் – பழங்குடிகளுக்கும் இடையிலான சமூக - பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருமளவுக்கு இருப்பதையும் ஓரளவு வெளிப்படுத்தியது.

மாநிலம் முழுவதிலும் வாழும் தலித்துகள் எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் 23.51% என்றாலும் மாநிலத் தலைநகரமான கொல்கத்தாவில் அவர்களுடைய எண்ணிக்கை வெறும் 5.4% மட்டுமே. பழங்குடிகள் எண்ணிக்கை மாநிலத்தின் மொத்த எண்ணிக்கையில் 5.8% ஆக இருந்தாலும் கொல்கத்தாவில் வாழ்வோர் எண்ணிக்கை வெறும் 0.2% மட்டுமே. இவ்விரு குழுவினரும் எந்த அளவுக்கு அதிகாரமற்றவர்களாகவும் நகர்ப்புறங்களில் குடியேறக்கூட தகுதி பெறாதவர்களும் விளிம்புநிலையில் வாழ்கின்றனர் என்பதைக் காட்டுகின்றன இந்தத் தரவுகள்.

வங்க சமூகத்தில் முற்பட்ட சாதியினருக்குக் கிடைக்கும் அரசியல் – சமூக அரவணைப்பு காரணமாக, ஒடுக்கப்பட்ட பிரிவினர் தொடர்ந்து அதே பின்தங்கிய நிலையில் மாநிலத்தின் பிற பகுதிகளில் வாழ்கின்றனர்.

பிராமண மேலாதிக்கம்
வங்க சட்டப்பேரவைக்கு 2021இல் நடந்த பொதுத் தேர்தலின்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஆதரவைப் பெற, அவர்களுக்கு கல்வி – வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டு உரிமை வழங்கப்படும் என்று பாஜக அறிவித்தது.

இதனால் மிரட்சி அடைந்த மம்தா பானர்ஜி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுவேந்து அதிகாரியைப் பார்த்து எச்சரிக்கை விடுத்தார்: “நானே பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவள், உங்களுடைய மத உணர்வுத் தூண்டலை என்னிடம் வைத்துக்கொள்ளாதீர்கள், தினமும் காலையில் காளி பூஜை செய்துவிட்டுத்தான் மற்ற வேலைகளைக் கவனிக்கிறேன்” என்று முழங்கினார். அது மறைமுகமாக முற்பட்ட சாதியினருக்குக் கொடுக்கப்பட்ட சமிக்ஞை. இன்னொரு புறத்தில் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்கள், தங்களுக்கு சாதி அபிமானமெல்லாம் கிடையாது என்று கூறிக்கொண்டே, தங்கள் சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் எல்லாம் கிடைப்பதை உறுதிசெய்தனர். பாஜகவைப் பற்றி விவரிக்கவே தேவை இல்லை.

வரலாற்றுரீதியாகவே வங்கத்தின் முற்பட்ட சாதியினருக்கு, சமூக – மத அமைப்பில் சாதிகள் எவ்வளவு முக்கியமானவை என்பது நன்றாகவே தெரியும். எந்த இயக்கமுந் இதில் மாறுபட்டது இல்லை.

படித்த முற்பட்ட சாதியினரைக் குறிவைத்து 19வது நூற்றாண்டில் ‘இந்து மேளாக்கள்’ நடத்தப்பட்டதையும், இந்து மதத்தின் புனிதத்தைக் காக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அங்கே தீர்மானிக்கப்பட்டதையும் சுமந்த பானர்ஜி என்ற எழுத்தாளர், புத்தகமே எழுதியிருக்கிறார். ‘அனைத்து இந்தியர்களுக்குமான தேசியம்’ என்ற அடிப்படையில் சுரேந்திரநாத் பானர்ஜி என்ற காங்கிரஸ் கட்சியின் பிராமணத் தலைவர், வங்காள இந்து இளைஞர்களை ஒன்று திரட்டினார். சந்திரநாத் பாசு என்ற காயஸ்தர், ‘இந்துத்வா - இந்துர் பிராக்ரித இதிஹாஸ்’ என்ற தலைப்பில் வங்க மொழியில் கட்டுரை எழுதினார்.

உலகமே புகழும் ரவீந்திரநாத் தாகூர்கூட, சாதி என்ற அமைப்பை ஏற்றுக்கொண்டவர்தான்; இந்திய மக்களுடைய சகிப்புத்தன்மை என்ற உணர்வால் உருவானதுதான் சாதி அமைப்பு என்று கருதினார் தாகூர். எனவே, வங்காளிகள் ‘சாதி பாராத’ – ‘சாதி உணர்வற்ற’ முற்போக்காளர்கள் என்பது முற்பட்ட சாதி இந்துக்களால் உருவாக்கப்பட்ட தோற்றம். இதற்காக, தங்களுக்கு இணக்கமாக இருக்கக்கூடிய நலிவுற்ற பிரிவினர் சிலரைத் தங்களுடைய அமைப்பில் இணையாக அவ்வப்போது சேர்த்துக்கொள்வார்கள்.

அமைச்சரவையில் இடமில்லை
மேற்கு வங்கத்தில் 1977 பொதுத் தேர்தலுக்குப் பிறகு இடதுசாரி முற்போக்கு முன்னணி பதவிக்கு வந்தபோது தலித்துகள் எவரையும் அமைச்சராக, சேர்த்துக்கொள்ளவில்லை முதல்வர் ஜோதிபாசு.

கட்சியின் தலித் தலைவர்கள் தங்களுக்குப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று மிகவும் வற்புறுத்திய பிறகு, இளைஞர் நலத் துறை அமைச்சராக காந்தி பிஸ்வாஸ் நியமிக்கப்பட்டார். 1982 முதல் 2006 வரையில் தொடக்கக் கல்வித் துறை அமைச்சராக தொடர்ந்து பதவி வகித்தார் காந்தி பிஸ்வால். “தான் அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு நூற்றுக்கணக்கான புகார் கடிதங்கள், மார்க்சிஸ்ட் கட்சியின் முற்பட்ட சாதி உறுப்பினர்களால் தொடர்ந்து முதல்வருக்கு அனுப்பப்பட்டன” என்று பின்னாளில் ஒரு பத்திரிகைப் பேட்டியில் தெரிவித்தார் காந்தி பிஸ்வாஸ்.

மோனோபினா குப்தா என்ற நூலாசிரியர், ‘வங்காளத்தில் இடதுசாரி அரசியல், பத்ரலோக் மார்க்சிஸ்டுகளிடையே காலவெளி கடந்த பயணம்’ (Left Politics in Bengal: Time Travels Among Bhadralok Marxists) என்ற தலைப்பில் புத்தகம் எழுதினார். காந்தி பிஸ்வாஸ் அமைச்சர் ஆனதைச் சகித்துக்கொள்ள முடியாமல் பட்டாசார்யா என்றொருவர் பட்பாரா என்ற ஊரிலிருந்து எழுதிய கடிதம் குறித்து அதில் குறிப்பிட்டிருக்கிறார். ‘பிஸ்வாஸ் தன்னுடைய திறமையை நிரூபித்திருந்தாலும் முற்பட்ட சாதி பிராமணர்கள் எப்படி ஒரு சண்டாளபுத்திரனிடமிருந்து கல்வியைப் பெறுவது?’ என்று கேட்டிருந்தார் பட்டாசார்யா!

இவை அனைத்துமே வங்காளிகளின் கூட்டுணர்வில், பிராமண மத ஆதிக்கம் எப்படிப் பரவியிருந்தது என்பதைக் காட்டுவதற்குத்தான். மாநில அமைச்சரவையில் தலித்துகளுக்கான  பிரதிநிதித்துவம் புறக்கணிக்கும் அளவிலோ அல்லது மக்கள்தொகைக்குப் பொருத்தம் இன்றி மிகவும் அற்பமாகவோதான் இருக்கிறது.

எல்லாமே அரசியல் ஆட்டம்
2021 சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ‘தபாசிலி சங்கல்ப்’ என்ற பெயரில், ‘தலித்துகளுடன் ஓர் உரையாடல்’ என்ற நிகழ்ச்சியை நடத்தியது ஆளும் திரிணமூல் காங்கிரஸ். 2024 மக்களவை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால் இப்போது மீண்டும் அந்த முயற்சி புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் தேர்தலுக்காக செய்யப்படும் நாடகங்கள்.

வங்கத்தில் எந்த அரசியல் கட்சியுமே தலித்துகள் – பழங்குடிகளுக்கு உண்மையான அதிகாரமும் பிரதிநிதித்துவமும் அளிக்கும் திட்டங்களைத் தீட்டியதும் இல்லை, அறிவித்ததும் இல்லை. தேர்தல் நாள் நெருங்கிவிட்டதால் களமும் சூடேறிக்கொண்டிருக்கிறது. சந்தேஷ்காளியில் தலித் பெண்களுக்கு நேரிட்ட கொடூரத்தை பாஜக பெரிதுபடுத்திப் பேசுகிறது.

திரிணமூல் காங்கிரஸோ அதை யாரும் தொடர்ந்து கவனத்தில் கொள்ளாமல் இருக்க, அனைத்து மறக்கடிப்பு வேலைகளையும் செய்கிறது. விளிம்புநிலை மக்கள் தங்களுடைய உரிமைகளுக்காகப் புறப்பட்டிருப்பதை யாருமே கவனிக்கவில்லை. விளிம்புநிலை மக்களுடைய ஆசைகள், உரிமைகள் நிராகரிக்கப்படும்போது அவர்கள் அணிதிரண்டு பொங்கி எழுந்து தங்களுடைய உரிமைகளை நிலைநாட்ட முற்படுவதே வரலாறு.

வங்கத்தின் அரசியல் களம் பெரும்பாலும் முற்பட்ட சாதி வங்காளிகளின் எண்ணப்போக்குக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது. அதனால்தான் அங்கு பிராமணர்கள் ஆதிக்கம் அதிகம். மாநில முதல்வராக தலித் ஒருவரைக் கொண்டுவரும் சாத்தியம் இப்போதைக்கு எந்தக் கட்சியிலும் இல்லை.

எனவே, வங்க அரசியலிலிருந்து பிராமணமயத்தை விலக்க வேண்டும், முற்பட்ட சாதி கண்ணோட்டத்தில் சமூக – பொருளாதாரப் பிரச்சினைகளை அணுகுவதைக் கைவிட வேண்டும், சாதி உணர்வை உள்ளூர வைத்துக்கொண்டு, சாதியுணர்வே எங்களுக்குக் கிடையாது என்கிற மாய்மாலத்தைக் கைவிட வேண்டும், தலித் சமூகத்தினரின் நீண்ட காலக் கனவுகள் நனவாக சமூக நீதியையும் அதிகாரத்தையும் வழங்கும் அரசியல் மாற்றத்தை வங்காள அரசியல் தலைமைகள் தழுவ வேண்டும்.

https://www.arunchol.com/subhajit-naskar-article-on-west-bengal-politics-has-to-be-de-brahminised

 

‘குடி’ உயர…!

1 month 2 weeks ago
24 MAR, 2024 | 05:07 PM
image

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் நட்பு நாடுகளிடமிருந்தும் அரசாங்கம் நிதியுதவிகளைப் பெற்றிருந்தமை அனைவரும் அறிந்ததொரு விடயம். உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்தும் பொறிமுறைகள் தற்போதைய சூழலில் சாத்தியப்படாத ஒன்றாக உள்ளதால், அதன் காரணமாக, வரிகளை அதிகமாக அறவிட்டும் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தும், மின் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொண்டும் நெருக்கடிகளைத் தவிர்க்க அரசாங்கம் முயற்சி செய்கின்றது.

அந்நிய செலாவணியை அதிகரிக்க அண்மைக்காலமாக சில நாடுகளுக்கு விசா முறைகளில் தளர்வுகளை ஏற்படுத்தி அந்நாட்டு உல்லாசப்பயணிகளை நாட்டுக்கு வரவழைக்கும் திட்டத்தையும்  அரசாங்கம் மேற்கொண்டது. இறுதியில் சில நாடுகளின் உல்லாசப்பயணிகள் இங்கு வருகை தந்து பாலியல் வர்த்தகத்தின் மூலம் தாம் அதிக வருமானத்தைப் பெற்றுச் செல்லும் அளவுக்கு நிலைமை  மோசமானது. 

எந்த வகையிலாவது வருமானத்தை அதிகரித்து கடன் சுமையை குறைக்கும் அரசாங்கத்தின் திட்டங்கள் மேலும் மேலும் மக்களை நசுக்குவதாகவே இருந்தன. இந்நிலையில், தேர்தல்களை இலக்கு வைத்து மேலதிகமாக மதுபான உரித்துகளை அரசாங்கம் விநியோகிக்க திட்டமிட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த வாரம் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார். இருநூறு மதுபான உரித்துகள் விநியோகிக்கப்பட உள்ளதாகவும் இதில் 15 உரித்துகள் ஏலவே விநியோகிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். 

கலால் சட்டங்களுக்கு புறம்பாக அரசாங்கம் இயங்கவில்லையென்ற பதிலே அரசாங்கத்தரப்பிலிருந்து கிடைத்துள்ளதே ஒழிய, அரசாங்கத்தரப்பில் எவரும் இதை மறுக்கவில்லையென்பது முக்கிய விடயம். தேர்தலை இலக்கு வைத்து மதுபான உரிமங்கள் விநியோகிக்கப்படுகின்றதோ இல்லையோ…ஆனால் பொருளாதார நெருக்கடிகளில் உழலும் மக்களை அதிலிருந்து மீட்டெடுக்கும் வழிகளை விடுத்து, அவர்கள் சட்டரீதியாக போதை உலகத்தில்  தள்ளும் முயற்சியாகவே இது தெரிகின்றது. 

அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்கள், அதற்கு துணை போகும் அதிகாரிகள், சம்பவங்களை கடந்து செல்லும் காவல்துறை,  பொறுப்பு கூற வேண்டிய அரசாங்கம் என சகல தரப்பினரிடமும் எந்த கேள்விகளையும் எழுப்ப முடியாமல், மக்களை தொடர்ச்சியாக போதையில் வைத்திருக்க அரசாங்கம் விரும்புகின்றதோ தெரியவில்லை. 

இது இவ்வாறிருக்க  வருடாந்தம் மதுபான உரித்துகளை விநியோகிப்பதன் மூலம் கிடைக்கும் வரிவருமானம் இவ்வருடம் வீழ்ச்சியடையும் என கலால் திணைக்கள ஆணையாளர் ஜெனரல் எம். ஜே. குணசிறி கவலை தெரிவித்துள்ளார். அதிகரிக்கப்பட்டிருக்கும் வரி விகிதங்களைப் பார்க்கும் போது, கலால் திணைக்களத்துக்கு  2024 ஆம் ஆண்டுக்கான  வரி வருமான இலக்கான 232 பில்லியன் ரூபாவை அடைவது சந்தேகமாகவுள்ளதாக அவர் கூறுகின்றார். அதாவது வரி அதிகரிப்பின் காரணமாக மதுபானங்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக கடந்த ஆண்டுக  மதுபான நுகர்வு நாட்டில் குறைந்துள்ளது என வேதனை தெரிவிக்கின்றார் அவர்.    மத்தியதர வர்க்கத்தினராக போராடி வந்த நாட்டின் பல இலட்சம் மக்கள் தற்போது வலிந்து வறுமை கோட்டுக்குக் கீழ் தள்ளப்பட்டுள்ளனர். மூன்று வேளை உணவை நிறைவாக அவர்கள் பெறும் அளவுக்கு அவர்களுக்கு வருமானம் இல்லை. இப்படியிருக்கும் போது மதுபானத்தை நுகர்வோர் நாட்டில் குறைந்துள்ளனர் என்கிறார் கலால் திணைக்கள ஆணையாளர்.

2022 ஆம் ஆண்டை விட கடந்த 2023ஆம் ஆண்டு நாட்டின் மதுபாவனையானது 65 இலட்சம் லீற்றர்கள் குறைந்துள்ளதாக அவர் கூறுகின்றார். 2022இல் 26.5 மில்லியன் லீற்றர் மதுபானம் உற்பத்தியானது 2023இல் 20 மில்லியன் லீற்றராக அது குறைக்கப்பட்டுள்ளது என்கிறது கலால் திணைக்களம்.

மதுபான நுகர்வு  மற்றும் அது தொடர்பான புள்ளிவிபரங்களை கவலையோடு வெளியிடும் அரசாங்கம் நாட்டில் எத்தனைப் பேர் பட்டினியால் வாடுகின்றார்கள் என்பது குறித்து தேடிப்பார்ப்பதில்லை. உள்ளூர் காய்கறிகளின் விலைகள் ஆயிரங்களையும் தாண்டிச் சென்றது ஏன் என்பது பற்றி கவலைப்படவில்லை. நாட்டு மக்களின்  மூன்று நேர உணவாக பயன்படும் அரிசி கிலோ ஒன்று தொடர்ந்தும் சராசரியாக முன்னூறு ரூபாவாக இருப்பதை கண்டு கொள்வதில்லை.  

 ‘ஒரு நாட்டு குடிமக்களின் பொருளாதார நிலை உயர்ந்தால் அந்நாட்டு அரசனின் நிலை உயரும்’ என்ற அர்த்தத்தில் ‘குடி உயர  கோல்  உயரும்'  என  பல நூறு வருடங்களுக்கு முன்பு ஒவ்வையார் பாடினார். இக்காலகட்டத்தில் கோலும் கோனும் உயர்வதற்கு மக்களின்  ‘குடி’ உயர வேண்டும் அரசாங்கம் நினைக்கின்றது. இப்படித்தான்  எமது நாட்டின் நிலைமை உள்ளது.

https://www.virakesari.lk/article/179598

டொலர் பெறுமதி குறைவடைய என்ன காரணம்?

1 month 2 weeks ago
22 MAR, 2024 | 07:25 PM
image

ரொபட் அன்டனி 

டொலரின் பெறுமதி தொடர்ச்சியாக குறைவடைந்து ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருவதை காண முடிகிறது. 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது டொலரின் பெறுமதி பாரிய அளவில் எகிறியது. 2022ஆம் ஆண்டு 200 ரூபா என்றவகையில் காணப்பட்ட டொலரின் பெறுமதி செயற்கைத்தனமாக கட்டுப்படுத்தப்பட்டு கொண்டிருந்தது.  ஒரு கட்டத்தில் அதனை தளர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவ்வாறு தளர்த்தப்பட்டதன் பின்னர் டொலரின் பெறுமதி கிட்டத்தட்ட 400 ரூபா வரை சென்றது. எனினும் இலங்கை    மேற்கொண்டு வருகின்ற பல்வேறு மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள், சர்வதேச நாணய நிதியத்துடனான   விரிவாக்கப்பட்ட நிதிவசதி உடன்படிக்கை, கடன் மறுசீரமைப்பு செயல்பாடுகள் போன்றவற்றின் காரணமாக இன்று டொலரின் பெறுமதி குறைவடைந்து ரூபாவின் மீண்டும் அதிகரித்து செல்வதை காண முடிகிறது. 

சாதக நிலை 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் 400 ரூபாவாக காணப்பட்ட டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று 300 ரூபா வரை உயர்வடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வந்து கொண்டிருக்கின்ற சூழலில் இவ்வாறு டொலரின் பெறுமதி வீழ்ச்சி அடைந்து வருகின்றமையும் ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருகின்றமையும் மிக முக்கியமான ஒரு நிலைமையாக காணப்படுகிறது. 

டொலரின் பெறுமதி குறைவடைய என்ன காரணம்?  

அதாவது கடந்த மூன்று வருடங்களாக முற்றாக செயல் இழந்திருந்த சுற்றுலாத்துறை ஊடான வருமானம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.  2022இல் ஒரு பில்லியன்  டொலர்கள்,  2023 இல் 2 பில்லியன் டொலர்கள் என வருமானம் அதிகரித்துள்ளது. 2024 இலும் சுற்றுலாத்துறை வருமானம் அதிகரித்து செல்கின்றது. வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் அனுப்பும்  டொலர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும் தற்காலிகமாக கடன் மீள்  செலுத்தலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச வங்கிகளின் கடன்களும் கிடைக்க ஆரம்பித்துள்ளன. இதனால் டொலர் உள்வருகை அதிகரிக்கிறது.  எனவே டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிக்கிறது.  அதாவது டொலரின் பெறுமதி டொலர் இலங்கைக்கும்  கிடைக்கும் அளவிலும் அதற்கான கேள்வியிலும் தங்கியுள்ளது.  தற்போது டொலர் அதிகளவு கிடைக்க ஆரம்பித்துள்ளதால்  டொலரின் பெறுமதி குறைவடைந்து ரூபாவின் பெறுமதி அதிகரிக்கிறது. அதன் காரணமாகவே  400 ரூபா அளவுக்கு உயர்வடைந்த டொலரின் பெறுமதி தற்போது 300 ரூபா அளவுக்கு குறைவடைந்துள்ளது.  

நெருக்கடிக்கு பிரதான காரணம் 

இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் செயற்பாட்டில் இது ஒரு சாதகமான நிலைப்பாட்டை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது.  2022 ஆம் ஆண்டு   நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு நாட்கணக்கில்,  கிலோமீட்டர் கணக்கில் வரிசைகளில்  நிற்பதற்கும் என்ன காரணம் என்பது சகலருக்கும் தெரியும்.  

அதாவது  பொருளாதார நெருக்கடி 2022 ஆம் ஆண்டில் ஏற்படுவதற்கான பின்னணி காரணங்கள்,  உடனடி காரணங்கள்,  நீண்ட கால காரணங்கள்   தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தற்போது அலசி ஆராய்ந்து வருகின்றனர்.    அதாவது 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக டொலர் பற்றாக்குறையே அமைந்தது.  அதாவது இலங்கைக்குள் வருகின்ற டொலர்கள் குறைந்தது.  அதன் காரணமாகவே அந்த நெருக்கடி ஏற்பட்டது என்பது சகலருக்கும் தெரியும்.  

டொலர் உள்வருகை, வெளி செல்தல்? 

இலங்கையை பொறுத்தவரை   இறக்குமதி செய்வதற்கு வருடந்தோறும் கிட்டத்தட்ட 20 முதல் 24 பில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றன.  ஆனால் இலங்கை செய்கின்ற ஏற்றுமதிகள் ஊடாக  கிட்டத்தட்ட 10 முதல் 12  பில்லியன் டொலர்களே கிடைக்கின்றன. எனவே ஒவ்வொரு வருடமும் இலங்கைக்கு மறைபெறுமதியாக 10 பில்லியன் டொலர்கள்  காணப்படுகின்றன. அதாவது டொலர் இடைவெளி 10 முதல் 12 பில்லியன் டொலர்களாக உள்ளன. அதேநேரம் வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் இலங்கைக்கு கிட்டத்தட்ட 6  தொடக்கம் 7 பில்லியன் டொலர்களை  அனுப்புகின்றனர். சுற்றுலாத்துறை ஊடாக கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர்கள் கிடைக்கின்றன. அதேபோன்று  வெளிநாட்டு உதவிகள் கடன்கள் மூலமும் டொலர்கள் உள்வருகின்றன. அதேநேரம் இலங்கை வருடந்தோறும் 5 முதல்  6 பில்லியன் டொலர்கள் வரை  வெளிநாட்டு கடன்களை செலுத்தவேண்டும். (தற்போது வெளிநாட்டு கடன் செலுத்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளது)   

2020 பின்னர் என்ன நடந்தது?  

எப்படியிருப்பினும் 2020 ஆம் ஆண்டு முதல் டொலர் வருகையின் பாதகமான நிலை ஏற்பட்டது.  கொரோனா வைரஸ் தொற்று  காரணமாக சுற்றுலாத்துறை வருமானம் முற்றாக  செயலிழந்து போனது.    வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் அனுப்புகின்ற அந்நிய செலாவணியின் அளவு குறைவடைந்தது.  50 வீதமாக அந்நிய செலாவணி வருகை   குறைவடைந்தது. இதன்  காரணமாக இலங்கையின் டொலர் உள்வருகை கடுமையாக பாதிக்கப்பட்டது.

மேலும் 2020 ஆம் ஆண்டு  இலங்கையின் அரச வருமானம் குறைவடைந்தமையினால்  சர்வதேச கடன் தரப்படுத்தல்  நிறுவனங்கள் இலங்கையின் பொருளாதாரக் குறிகாட்டிகளை பாதகமாக வெளிக்காட்டியமையினால்  இலங்கையினால்  சர்வதேச கடன்களையும்  பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.   

நெருக்கடி நிலை  

இந்த பின்னணியிலேயே இலங்கையில் டொலர் பற்றாக்குறை 2022 ஆம் ஆண்டு ஏற்பட்டது.  இதனால் டொலரின் பெறுமதி கிட்டத்தட்ட 400 ரூபாய் சென்றது.  இதன் காரணமாக இலங்கையில் உற்பத்தி செலவுகள் அதிகரித்தன.  இறக்குமதி    பொருட்களின் விலைகள் அதிகரித்தன.  மக்கள்  பொருளாதார துன்பங்களை எதிர்கொண்டனர்.  வாழ்க்கைச் செலவு உயர்வடைந்தது.  எரிபொருட்கள் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு டொலர்களில் இருக்கவில்லை.  வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியவில்லை.    எப்போதும் வெளிநாட்டு கையிருப்பில் கிட்டத்தட்ட ஆறு பில்லியன் டொலர்கள் இருக்க வேண்டும்.  ஆனால் 2022 இல்  17 மில்லியன் டொலர்களே கையிருப்பில் இருந்தன.   இதன் காரணமாகவே எரிபொருள் மற்றும் எரிவாயுவை கோரி  மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஒரு லிட்டர் எரிபொருளை பெறுவதற்கு  எரிவாயுவை பெறுவதற்கும் மக்கள் நாட்கணக்கில் கிலோ மீட்டர் கணக்கில் வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. 

பற்றாக்குறை  

இவை அனைத்துக்கும் இந்த டொலர் பற்றாக்குறையே  காரணமாக இருந்தது. அதாவது இந்த நெருக்கடி ஏற்படுவதற்கும் டொலர் பற்றாக்குறை ஏற்படுவதற்கும் பல காரணங்கள் இருந்தாலும் டொலரின் பெறுமதி உயர்வடைந்து ரூபாவின் பெறுமதி சரிந்தமைக்கு டொலர் பற்றாக்குறை மிக முக்கிய காரணமாக அமைந்தது. 2020 ஆம் ஆண்டியே  நாணய நிதியத்தை நாடியிருந்தால் ஓரளவு 2022ஆம் ஆண்டு நெருக்கடியை தவிர்த்திருக்கலாம். 

நாணய நிதியத்துடனான உடன்படிக்கை  

2022 ஏப்ரல் மாதமளவில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை நாடியது. பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. தொடர்ந்து இலங்கை நாணய  நிதியத்துடன்  விரிவாக்கப்பட்ட நிதிவசதி திட்டத்திற்குள் சென்றது.  அதன் பின்னர் இலங்கைக்கு 48 மாதங்களில் 2.9 பில்லியன் டொலர் கனை தவணையாக வழங்க நாணய நிதியம் முன்வந்தது. அதுமட்டுமின்றி நாடு வங்குரோத்து நிலையிலிருந்தும் வெளியே வந்து கொண்டிருக்கின்றது.  இவற்றின் காரணமாக தற்போது   உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி  போன்றன இலங்கைக்கு கடன்களை வழங்க முன்வந்திருக்கின்றன.  

மறுசீரமைப்புக்கள் 

இலங்கை சர்வதேச நாண நிதியத்தின் நிபந்தனைக்கு உட்பட்டு அரசாங்க வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றது. பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.  உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு முடிந்துள்ளதுடன் சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுக்கள்  இடம்பெறுகின்றன.   இவற்றின் விளைவாக  டொலர் உள்வருகை அதிகரித்துள்ளது. நாண நிதியம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை இலங்கையின் பொருளாதார மீளாய்வை செய்யும். அதன்படி நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் பீற்றர் ப்ரூவர் தலைமையிலான குழுவினர் இரண்டாவது மீளாய்வை முன்னெடுத்துவருகின்றனர். 

தற்போது என்ன நடக்கிறது? 

மறுசீரமைப்புக்கள், நாணய நிதிய உடன்படிக்கை என்பனவற்றின் விளைவாக  சுற்றுலாத்துறை தற்போது மீள் எழுந்து வருகிறது. சுற்றுலாத்துறை ஊடான    டொலர் வருமானம் அதிகரித்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டில் 2 பில்லியன் டொலர்கள் கிடைத்துள்ளன. மேலும் வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்களும் இலங்கைக்கு அந்நிய செல்லாவணியை அனுப்புவதை  அதிகரித்திருக்கின்றனர். மீண்டும் கிட்டதட்ட 6 பில்லியன் டொலர் அளவில் அந்நிய  செலாவணி வந்து கொண்டிருக்கின்றது.  வாகனங்களுக்கு இறக்குமதி தடை தொடர்வதால்   இறக்குமதிக்காக வெளிச்செல்லும் டொலர்களின் அளவும் குறைவடைந்துள்ளது.  

இதன்காரணமாக தற்போது டொலர் பெறுமதி வீழ்ச்சி அடைந்து ரூபாவின் பெறுமதி அதிகரித்துவருகின்றது. எனவே உள்நாட்டில் உற்பத்தி செலவுகள் குறைவடையும். பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியும். அதாவது பொருளாதார மீட்சி செயற்பாடுகளில் இது முக்கியமானதாக காணப்படுகின்றது.  தற்போது  மீண்டும் டொலர்கள் உள்வர ஆரம்பித்துள்ளதால் பொருளாதாரம் சாதக நிலையை நோக்கி நகர்கிறது. ஆனால் ஏற்கனவே ஏற்பட்ட நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் அவசியமாக இருக்கின்றன.

https://www.virakesari.lk/article/179464

ராஜபக்சக்கள் ஏன் பொதுத் தேர்தலைக் கேட்கிறார்கள்? நிலாந்தன்.

1 month 3 weeks ago
spacer.png ராஜபக்சக்கள் ஏன் பொதுத் தேர்தலைக் கேட்கிறார்கள்? நிலாந்தன்.

ஜனாதிபதி தேர்தலை நோக்கித் தமிழ்க் கட்சிகள் துடிப்பாக உழைப்பதாகத் தெரியவில்லை. அது தொடர்பில் முதலில் கருத்து தெரிவித்தது குத்துவிளக்கு கூட்டணியைச் சேர்ந்த சுரேஷ் பிரம்மச்சந்திரன். ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அவர் சில மாதங்களுக்கு முன்னரே தெரிவித்திருந்தார். அதன் பின் அவரும் இணைந்திருக்கும் குத்து விளக்கு கூட்டணி, மன்னாரில் நடந்த கட்சிகளின் கூட்டத்தில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவது என்று அறிவித்தது. அதற்கு ஆதரவாக விக்னேஸ்வரனும் கருத்து தெரிவித்திருந்தார். ஒரு பொது தமிழ் வேட்பாளராக நிற்பதற்குத் தான் தயார் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதே காலப்பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான் தேர்தலைப் பகிஸ்க்கரிக்கப் போவதாகக் கூறியது.

தமிழரசுக் கட்சி இன்று வரை தன் நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறவில்லை. எனினும் சாணக்கியன் பொதுத் தமிழ் வேட்பாளருக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருந்தார். கட்சித் தலைமைப் பீடத்துக்கான தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது என்பதனால் அக்கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் உத்தியோகபூர்வமாக அதுதொடர்பாக கருத்து எதையும் தெரிவித்திருக்கவில்லை. கட்சித் தலைமைக்கான தேர்தல் முடிந்த பின்னரும் அது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்க முடியாத ஒரு நிலைமை கட்சிக்குள் காணப்படுகின்றது. ஏனென்றால், ஒருமித்து உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை எடுக்க முடியாதபடி கட்சி நீதிமன்றத்தின் நிற்கின்றது.

இத்தகையதோர் பின்னணியில், அண்மையில், யாழ்ப்பாணத்தில், தந்தை செல்வா கலையரங்கில் ஒரு கருத்தரங்கு இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டான் டிவியால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு சிவில் சமூகம் அக்கருத்தரங்கை ஒழுங்கு படுத்தியது. “மக்கள் மனு” என்று பெயரிடப்பட்ட அக்கருத்தரங்கில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை முன்னிறுத்துவது தொடர்பாகவே பெருமளவுக்கு கருத்துக்கள் கூறப்பட்டன. கருத்தரங்கில் தமிழரசு கட்சித் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட தலைவராகிய சிறீதரனும் பங்குபற்றினார். அவருமுட்பட அங்கு உரை நிகழ்த்திய பெரும்பாலான அரசியல் தலைவர்கள், ஒரு தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாகவே கருத்துத் தெரிவித்தார்கள்.

மக்கள் மனு என்ற பெயரிலான அந்த நிகழ்ச்சி திட்டத்தின் அடிப்படையில் மேற்படி சிவில் சமூகமானது தென்னிலங்கையில் உள்ள அரசியல்வாதிகளையும் சந்திக்க தொடங்கியுள்ளது.

ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை தமிழரசுக் கட்சி ஆதரிக்கவில்லை என்றால் குத்துவிளக்கு கூட்டணி அதில் அதிகம் ஆர்வமாக இருக்காது என்று தெரிகிறது. தமிழரசுக் கட்சி ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை ஆதரிக்குமாக இருந்தால் அது ஒரு பலமான நகர்வாக மாறும் என்ற அபிப்பிராயம் குத்துவிளக்கு கூட்டணிக்குள் இருக்கும் சில கட்சி முக்கியஸ்தர்கள் மத்தியில் காணப்படுகின்றது. தமிழரசுக் கட்சி அதில் இணையவில்லை என்றால் அந்த கோரிக்கை பெருமளவுக்கு வெற்றி பெறாது என்பது மட்டுமல்ல, அதில் கிடைக்கக்கூடிய தோல்வியானது, சில சமயம் குத்துவிளக்குக் கூட்டணியின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்ற அச்சம் கூட்டணிக்குள் உள்ள சிலரிடம் உண்டு.

எனவே தமிழ் பொது வேட்பாளர் வெற்றி பெறுவாரோ இல்லையோ அதற்கு முன் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்ற கோரிக்கையின் வெற்றி என்பது பெருமளவுக்குத் தமிழரசுக் கட்சியின் முடிவில்தான் தங்கியிருக்கின்றது போலத் தெரிகிறது. தமிழரசு கட்சியோ தலைமைப் போட்டியால் தத்தளித்து கொண்டிருக்கிறது. ஒரு பொது முடிவை எடுக்க முடியாத கட்சியாக அது காணப்படுகின்றது. நீதிமன்றத்தில் இருந்து கட்சியை வெளியே எடுக்காதவரை ஒரு பொது முடிவை எடுக்க அவர்களால் முடியாது என்று தெரிகிறது.

இதுதான் தமிழ்த் தரப்பில் உள்ள நிலமை. அதே சமயம் சிங்களத்தரப்பைப் பொறுத்தவரையிலும் அங்கேயும் விளைவுகளை எதிர்வுகூற முடியாத ஒரு குழப்பமான நிலைமைதான் காணப்படுகின்றது. இப்போதுள்ள ஜனாதிபதி பொதுஜன பெரமுனவின் வாக்குப் பலத்தில் தங்கியிருப்பவர். ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷர்களின் பொது வேட்பாளர் ஆகவன்றி, தனித்து தன் சொந்தப் பலத்தில் நிற்பதற்கு அவர் தயாரில்லை என்று தெரிகிறது. உடைந்து போய் இருக்கும் அவருடைய கட்சியை ஒட்ட வைப்பது இன்றுவரை கடினமாகவே உள்ளது.எனினும்,ஜேவிபி என்ற இடதுசாரி கட்சிக்கு எதிராக முதலாளித்துவ அரசியல்வாதிகள் ஒன்றிணைக்ககூடிய வாய்ப்புகள் இப்பொழுதும் உண்டு.

ஜேவிபியின் எழுச்சி என்பது ஒரு விதத்தில் இடது மரபுக்கு எதிரான முதலாளித்துவக் கட்சிகளை ஐக்கியப்படுத்தக்கூடியது. ஜேவிபியின் வாக்கு வங்கி எழுச்சி பெறுகிறது என்ற மதிப்பீடு மிகையானது என்ற கருத்து ஒருபுறமிருக்க, அதுதொடர்பான பயம், அதற்கு எதிரான முதலாளித்துவக் கட்சிகளை ஒன்றிணைக்க வல்லது. 2022 இல் “அரகலய”வின் போது அதுதான் நடந்தது. மக்களின் தன்னெழுச்சியைக் கண்டதும் அரசியல் எதிரிகள் ஒன்றிணைந்தார்கள். மக்கள் தன்னெழுச்சியைத் தோற்கடிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவை முன்னிறுத்தி ராஜபக்சக்கள் அவருடைய மறைவில் பதுங்கிக் கொண்டார்கள்.

ஆனால் இப்பொழுது ராஜபக்சக்கள் தங்களை பலப்படுத்திக் கொண்டு விட்டதாக நம்புவதாகத் தெரிகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் அவர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன் பொதுத் தேர்தலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்று கொழும்பில் உள்ள ஊடக வட்டாரங்கள் கருதுகின்றன. அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பசில் ராஜபக்ச, ஒரு பொதுத் தேர்தலை முதலில் வைக்க வேண்டும் என்று கூறுகிறார். அதன் பின் மகிந்தவும் அதை வலியுறுத்தினார். ஒரு பொதுத் தேர்தலில் மக்கள் விருப்பம் என்னவென்பது துலக்கமாகத் தெரியவரும். அதன்பின் ஒரு ஜனாதிபதித் தேர்தலை வைக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஜனாதிபதி தேர்தலை முதலில் வைத்தால் அதில் வெல்லக் கூடிய கட்சி அல்லது கூட்டு, அடுத்தடுத்த தேர்தல்களை வைத்துத் தன் வெற்றியை மேலும் உறுதிப்படுத்த விளையும். அதாவது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மக்களுக்கு ஒரு முற்கற்பிதமாக அமையுக்கூடும்.அது அடுத்தடுத்த தேர்தல்களில் மக்களுடைய வாக்களிப்பு மனோநிலையின் மீது செல்வாக்குச் செலுத்தக்கூடும். மாறாக, பொதுத்தேர்தலை முதலில் வைத்தால் மக்கள் எந்த விதமான முன் முடிவுகளும் இன்றி சுயாதீனமாக வாக்களிப்பார்கள் என்று பசில் நம்புகிறாரா?.

ஆனால் அவர் அவ்வாறு கூறுவது, மக்களுடைய முடிவு சுயாதீனமாக வெளிப்பட வேண்டும் என்பதற்காக அல்ல. ரணிலுக்கும் தங்களுக்கும் இடையிலான பேரத்தில் தங்களுடைய பேர பலத்தை அதிகப்படுத்துவதற்காகத் தான். ஒரு பொதுத் தேர்தல் வைத்தால் நிச்சயமாக ரணிலுக்கு எவ்வளவு கிடைக்கும் என்று கூற முடியாது. பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதில் அவர் பெற்ற வெற்றிகள் எந்தளவுக்கு வாக்குகளாக மாறும் என்றும் எதிர்வு கூற முடியாது.

அதேசமயம் பொதுஜன பெரமுன நம்புகிறது, யுத்த வெற்றி வாக்குகள் தனக்கு இப்பொழுதும் கிடைக்கும் என்று.அவ்வாறு பொதுஜன பெரமுன ஒரு பொதுத் தேர்தலில் ரணிலை விட அதிக வாக்குகளை பெறுமாக இருந்தால், அது ரணிலுக்கும் அவர்களுக்கும் இடையிலான பேரபலத்தை மாற்றி அமைக்கும் என்று அவர்கள் கணக்குப் போடக் கூடும். எதுவாயினும், பொதுஜன பெரமுன தனது பேர பலத்தை அதிகப்படுத்த முற்படுகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில் ஒரு ஜனாதிபதித் தேர்தல் முதலில் வைக்கப்பட்டால் அதில் யார் வெல்ல கூடும் என்பதனை சரியாக கணிப்பிட முடியாத ஒரு நிலைமைதான் இப்பொழுது நாட்டில் காணப்படுகின்றது.

அது ஜேவிபியின் பலம் அதிகரித்து வருவதால் ஏற்பட்ட ஒரு நிச்சயமின்மை. எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒரு பலமான ஐக்கியம் ஏற்பட முடியாததால் வந்த ஒரு நிச்சயமின்மை. பொதுஜன பெரமுனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான பேர விளையாட்டு முடியாத காரணத்தால் வந்த ஒரு நிச்சயமின்மை.

அதாவது கூட்டிக் கழித்துப் பார்த்தால், ஜனாதிபதித் தேர்தலை முன்வைத்து தென்னிலங்கையில் பேரப் பேச்சுக்கள் முடிவுறாத காரணத்தால், நிலைமைகளைத் திட்டவட்டமாக எதிர் கூறுவது கடினமாக உள்ளது. அதே சமயம் தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் ஸ்திரமற்ற, நிச்சயமற்ற நிலைமைகளைக் கையாண்டு தன்னுடைய பேர வாய்ப்பை அதிகப்படுத்தும் விதத்தில், ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இறங்கி விளையாடத் தமிழ்த் தரப்பு எந்தளவுக்குத் தயார்?

https://athavannews.com/2024/1374680

வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும்! - நிலாந்தன்

1 month 3 weeks ago

வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும்! - நிலாந்தன்

வெடுக்குநாறி மலை விவகாரம் பெரும்பாலான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒன்றுபடுத்தியிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழ்க் கட்சிகளை ஒன்றுபடுத்துவது எதிர்த் தரப்புத்தான்.

சிவ பூசையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கான போராட்டக் களத்தில் எல்லாக் கட்சிகளும் ஒன்றாக நின்றன. பரவாயில்லை. குறைந்தது ஒரு விவகாரத்தை மையமாகக் கொண்டாவது கட்சிகள் அவ்வாறு ஒன்றாகத் திரள்வது நல்லது. ஆனால் இந்த விவகார மைய ஐக்கியம் மட்டும் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டப் போதாது. தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது என்ற அடிப்படையில் கட்சிகள் ஒன்றிணையும் போதுதான் கடந்த 15 ஆண்டு காலத் தேக்கத்தில் இருந்து விடுபடலாம். அல்லது அவ்வாறு கட்சிகளை ஒன்றிணைக்கத்தக்க பலத்தோடு ஒரு கட்சி பலமானதாக  மேற்கிளம்ப வேண்டும்.

எதுவாயினும் சிவராத்திரியன்று கைது செய்யப்பட்டவர்களை மீட்பதற்காக கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டது வரவேற்கத்தக்கது. இது போன்ற “கலெக்டிவ்” ஆன அதாவது ஒன்றிணைந்த கூட்டு முயற்சிகள்தான் வெற்றியளிக்கும் என்பதற்கு இங்கு அரசியல் அல்லாத வேறு ஒரு உதாரணத்தைச் சுட்டிக் காட்ட வேண்டும்.

எங்களில் எத்தனை பேர் எமது வீடுகளில் உள்ள தென்னை மரங்களில் விளைச்சல் குறைந்து வருவதை அவதானித்திருக்கிறோம்? தென்னோலைகளில் மேற்பரப்பில் கறுப்பாக எண்ணெய்த் தன்மையோடு ஏதோ ஒட்டிக் கொண்டிருக்கிறது. ஓலைகளின் கீட் பகுதிகளில் பூஞ்சனம் போல வெள்ளையாக ஏதோ ஒட்டிக் கொண்டிருக்கிறது. அது தென்னை மரங்களில் இருந்து தொடங்கி கொய்யா,மா,நாவல்,வாழை, வெண்டி, எலுமிச்சை, செம்பருத்தி, சீத்தாப்பழம், கருவேப்பிலை என்று ஏனைய மரங்களின் மீதும் பரவுகிறது. ஒரு வீட்டில் மட்டுமல்ல, ஒரு கிராமம், ஒரு பிரதேசம் முழுவதும் அது பரவி வருகின்றது.

குறிப்பாக வெக்கையான காலங்களில் தென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈ-Spiral Whitefly(Aleurodicus disperses)-அதுவென்று துறைசார்ந்த திணைக்களங்கள் தெரிவிக்கின்றன. அதன் தாக்கத்துக்கு இலக்காகிய தென்னோலைகள் சத்திழந்து, காய்ந்து கருகி ஒரு கட்டத்தில் மட்டையோடு கழண்டு விழுகின்றன.

கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களிலும் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரிக்கின்றது. புத்தளம் மாவட்டத்தில் தங்கொடுவ,நாத்தாண்டிய, சிலாபம், முகுனுவடவன,ஆரியகம,பட்டுலுஓயா,முந்தலம ஆகிய பிரதேசங்களில் வெள்ளை ஈயின் தாக்கம்  உள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளது. தீவிரமாகப் பரவும் வெள்ளை ஈயினால் இலங்கையில் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் தென்னந் தோப்புகள்  சேதமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

432445520_955774939431338_82872337086383
432405971_955774856098013_77385212686959

மழைக் காலங்களில் வெள்ளை ஈயின் தாக்கம் குறைவாக இருக்கின்றது. தென்னோலைகள் கழுவப்படும் போது வெள்ளை ஈயின் பெருக்கம் குறைகிறது. ஆனால் வறட்சியான காலங்களில் வெள்ளை ஈ தென்னந் தோப்புக்களுக்கு எதிராக ஓர் உயிரியல் போரைத் தொடுக்கின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை விருதுகள் வழங்கும் நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் பேசிய அந்த அமைப்பின் தலைவராகிய ஐங்கரநேசன் வெள்ளை ஈ தொடர்பாகவும் சுட்டிக்காட்டினார். வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்கு ஒஸ்ரேலியாவைச் சேர்ந்த ஒரு தமிழர் கூறிய ஒரு பரிகாரத்தை அவர் மேடையில் வைத்துச் சொன்னார். வீடுகளில் நாங்கள் பயன்படுத்தும் சலவைத் தூளில் இரண்டு அல்லது மூன்று கரண்டிகளை எடுத்து 5 லிட்டர் நீரில் கரைத்த பின் அதனை தென்னோலைகளுக்குத் தெளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். சலவை தூளுடன் ஒரு மரத்துக்கு 200 மில்லி லீட்டர் வேப்பெண்ணெயையும் கலந்து அடித்தால் பயன் தரும் என்று தென்னை பயிர்ச் செய்கை சபையைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள்.

குறிப்பிட்ட கலவையை தென்னோலைகளின் மீது தெளிப்பதற்கு உயர் அழுத்தப் பம்பிகள் தேவை. வடபகுதி தென்னை பயிர்ச் செய்கை சபையிடம் 10 பம்பிகள் உண்டு என்று கூறப்படுகிறது. சீனாவில் இருந்து சிறிய பம்பி ஒன்றை கிட்டத்தட்ட 40,000 ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் என்று ஒரு வணிகர் கூறினார்.

வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தத் தவறினால், ஒருகட்டத்தில் தேங்காய்த் தட்டுப்பாடு ஏற்படும். அது நேரடியாக வயிற்றில் அடிக்கும். இறுதிக்கட்டப் போரில் தேங்காய்க்கு அலைந்த ஒரு மக்கள் கூட்டம் நாங்கள். இறுதிக் கட்டப் போரில் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆனந்தபுரத்தில் நடந்த சண்டையோடு பெரும்பாலும் தேங்காய் இல்லாமல் போய்விட்டது. முள்ளிவாய்க்கால் கடற்கரையில் தென்னைகள் இருந்தன. ஆனால் அங்கிருந்த அசாதாரண சனத்தொகைக்குப் போதுமான தேங்காய்கள் இருக்கவில்லை. ஆனந்தபுரத்தில்தான் ஒப்பீட்டளவில் அதிக தென்னை மரங்கள் இருந்தன. ஆனந்தபுரத்தை இழந்ததோடு தேங்காய்த் தட்டுப்பாடு தொடங்கியது. அதன் பின் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்குத் தேங்காய்ப் பாலுக்குப் பதிலாக பால்மாவை பயன்படுத்தப்பட்டது. ஒரு கஞ்சிக்கலயத்துக்கு இரண்டு பால்மா பக்கெட்டுகள்.

அது போர்க்காலம். ஆனந்தபுரத்தோடு தேங்காய் இருக்கவில்லை. ஆனால் இப்பொழுது 15 ஆண்டுகளின் பின் வெள்ளை ஈ ஏறக்குறைய ஒரு போரைத் கொடுத்திருக்கிறது. அது ஒரு கூட்டுத் தாக்கம். இத்தாக்கத்திலிருந்து தென்னை மரங்களைப் பாதுகாக்கத் தவறினால் தேங்காய்க்கு அலைய வேண்டி வரும். தேங்காய் எண்ணையின் விலை கூடும். தேங்காய் எண்ணெயை பயன்படுத்தும் எல்லா உணவுப் பொருட்களின் விலையும் கூடும். பொருளாதார நெருக்கடிக்கு முன்னரே தேங்காய் எண்ணெயின் விலை அதிகரித்துவிட்டது. இப்பொழுது ஒரு லிட்டர் 600 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரை போகிறது.

432433726_955774902764675_55941379207253

நுகர்வுக் கலாச்சாரத்துள் சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்திய நல் விளைவுகளில் ஒன்றை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும். பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் தேங்காய் எண்ணையின் தரம் குறித்த சந்தேகங்கள், சமூக வலைத்தளங்களில் பரவலாக வரத் தொடங்கிய ஒரு பின்னணியில், வீட்டில் தென்னைகளை வளர்ப்பவர்கள் தங்களுக்குத் தேவையான தேங்காய் எண்ணெயைத் தாங்களே உற்பத்தி செய்யத் தொடங்கினார்கள். அது ஒரு அற்புதமான செயல். தமிழ்ப் பகுதிகளில் அதிகம் தென்ன மரங்களைக் கொண்ட காணிகளை வைத்திருப்பவர்கள் தங்களுக்கு தேவையான தேங்காய் எண்ணெயைப் பல்பொருள் அங்காடிகளில் வாங்குவதைத் தவிர்க்கத் தொடங்கினார்கள். ஆனால், இப்பொழுது வெள்ளை ஈ எல்லாவற்றையும் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது.

வெள்ளை ஈயின் உயிரியல் எதிரிகளான பூச்சிகளை, வண்டுகளைப் பெருக்குவதின்மூலம் அதைக் கட்டுப்படுத்தலாமா என்று தென்னை பயிர் செய்கை சபை கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் ஒரு பரிசோதனை முயற்சியைத் தொடங்கியிருக்கிறது. அதன் விளைவுகள் விரைவில் தெரிய வரலாம் என்று கூறப்படுகின்றது. வெள்ளை ஈயின் தாக்கத்துக்கு உள்ளாகிய தென்னை மர உரிமையாளர்கள், தென்னை பயிர்ச் செய்கை சபையை அணுகி பரிகாரத்தைப் பெறலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.ஒவ்வொரு பிரதேசத்துக்கும் உரிய கமநல சேவை நிலையத்தில் தென்னை பயிர்ச் செய்கை சபையின் ஒரு பிரிவு இயங்குவதாகவும் அங்கே பாதிக்கப்பட்டவர்கள் தமது முறைப்பாடுகளைச் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட ஒருவர் அல்லது சில பண்ணையாளர்கள் அதற்கு தீர்வு காண்பதன்மூலம் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த முடியாது. அது ஒரு கூட்டுத் தாக்கம். ஒரு முழுப் பிரதேசத்தையும் அது தாக்குகின்றது. ஒரு வீட்டில் கட்டுப்படுத்தினால் சிறிது காலத்தின் பின் பக்கத்துக்கு வீட்டிலிருந்து வெள்ளை ஈ மீண்டும் வரும். எனவே ஒரு வீட்டில் அல்லது ஒரு பண்ணையில் மட்டும் அதை கட்டுப்பட்டுவதால் பிரியோசனம் இல்லை. அதை முழுச் சமூகத்துக்கும் உரிய ஒரு கூட்டு செயற்பாடாக முன்னெடுத்தால் மட்டுமே வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தலாம் என்று சம்பந்தப்பட்ட துறைசார் திணைக்களங்கள் தெரிவிக்கின்றன.

 

ஏற்கனவே தமிழ் மக்கள் முள் முருக்கு மரத்தை பெருமளவுக்கு தொலைத்து விட்டார்கள். தமிழ் பண்பாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு நிகழ்வாகிய திருமணத்தில் கன்னிக்கால் என்று கூறி நடப்படுவது முள்முருக்கு. முள் முருக்கில் ஏற்பட்ட ஒரு நோய்த் தாக்கம் காரணமாகவும் நகரமயமாக்கத்தின் விளைவாக  உயிர் வேலிகள் அருகிச் செல்வதன் காரணமாகவும் முள் முருக்கு அழிந்து செல்லும் ஒரு தாவரமாக மாறி வருகிறது.

தமிழ் மக்கள் மத்தியில் உயர் கல்வி நிறுவனங்களில் தாவரவியல் ஓர் ஆராய்ச்சிப் பிரிவாக உண்டு. தமிழ் பண்பாட்டில் தனக்கென்று தவிர்க்க முடியாத ஒரு தாவரவியல் இருப்பைக் கொண்டிருக்கும் முள்முருக்கைக் காப்பாற்ற ஏன் அதில் சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள் அல்லது புலமையாளர்களால் முடியவில்லை? திருமணங்களில் முள்முருக்கிற்குப் பதிலாக குரோட்டன் முருக்கந்தடியைப்  பயன்படுத்துவதுபோல, தேங்காய்க்குப் பதிலாக வேறு எதையாவது பயன்படுத்தப் போகிறோமா?

Erythrina-variegata-L.-1-1024x730.jpg

முள் முருக்குப் போலவே வெள்ளை ஈயின் விடயத்திலும் பொருத்தமான துறை சார்ந்த ஆய்வுகள் அவசியம். வடக்குக் கிழக்குப் பகுதிகள் உலர் வலையத்துக்குரியவை. நாட்டில் உலர் வலையத்துக்கு என்று தென்னை ஆராய்ச்சி மையம் எதுவும் கிடையாது. அதனால், உலர் வலையத்துக்குரிய தென்னை ஆராய்ச்சி மையம் ஒன்று தமிழ்ப் பகுதிகளில் உருவாக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

எனவே, வெள்ளை ஈயிடமிருந்து தமிழ்ச்  சமையலைப் பாதுகாக்க, துறைசார் ஆராய்ச்சியாளர்களும் திணைக்களங்களும் சமூக நலன் விரும்பிகளும் சுற்றுச்சூழலியலாளர்களும் கிராமமட்ட அமைப்புகளும் குடிமக்கள் சமூகங்களும் ஊடகங்களும் ஒன்றிணைய வேண்டும். பொதுவாக சமூகம் தழுவிய கூட்டு முயற்சிகள் என்று வரும்பொழுது அங்கே அரசியல் தலைமைத்துவம் அல்லது சமூகச் செயற்பாட்டு அமைப்புக்களின் தலைமைத்துவம் தேவைப்படுவதுண்டு. எனவே வெள்ளை ஈ தமிழ் மக்களின் சாப்பாட்டு மேசைக்கு வரமுன்னரே அதைத் தடுக்கும் முயற்சிகளில் கூட்டாகத் தமிழ்ச் சமூகம் இறங்க வேண்டும். வெடுக்குநாறி மலையில் உள்ள தமிழ் மரபுரிமை சின்னத்தைப் பாதுகாப்பதற்காகத் தமிழ்க்கட்சிகள் ஒன்று திரண்டதைப்போல.

 

https://www.nillanthan.com/6647/

 

 

 

 

 

இலங்கையில் ராஜபக்ஸவை விரட்டியடித்தது யார்? தமிழர்கள், வெளிநாட்டு சக்தி பற்றி அவர் கூறுவது என்ன?

1 month 3 weeks ago
இலங்கை, ராஜபக்ஸ
கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றிய சூழ்ச்சி’ என்ற பெயரில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ புத்தகமொன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார்.

இந்த புத்தகத்தின் ஊடாக கோட்டாபய ராஜபக்ஸ, பௌத்த மேலாதிக்கத்தை நியாயப்படுத்தி, ஏனைய மதத்தவர்களை சூழ்ச்சிக்குள் உள்ளடக்கும் வகையில் இந்த புத்தகத்தை எழுதியிருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து பிபிசி தமிழ் ஆராய்கின்றது.

ராஜபக்ஸேவின் புத்தகம், இலங்கை
‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றிய சூழ்ச்சி’

‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றிய சூழ்ச்சி’ என்ற 192 பக்கங்களை கொண்ட புத்தகமொன்றை கோட்டாபய ராஜபக்ஸ அண்மையில் வெளியிட்டார்.

தான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் காணப்பட்ட பொருளாதார நிலைமை முதல் தான் பதவியை விட்டு வெளியேற்றப்பட்ட காலம் வரையான விடயங்களை உள்ளடக்கும் வகையில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

பௌத்த மதத்தை தவிர்த்து, ஏனைய அனைத்து தரப்பினரும் தன்னை பதவியிலிருந்து வெளியேற்றும் சூழ்ச்சியில் உள்ளடங்கியுள்ளதாக பிரதிபலிக்கும் வகையில் இந்த புத்தகத்தின் உள்ளடக்கங்கள் காணப்படுகின்றன.

தமிழர்கள் குற்றம்சாட்டும் யுத்தக் குற்றங்கள், இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டும் கோவிட் மரணங்ளை அடக்கம் செய்ய நிராகரித்த விடயங்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குற்றம் சாட்டும் ஈஸ்டர் தாக்குதல் போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்தி இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

ராஜபக்ஸேவின் புத்தகம், இலங்கை
ஜெனீவா யோசனை தொடர்பான விவகாரம்

2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ஆட்சியிலிருந்த அரசாங்கம், ஜெனீவா மனித உரிமை பேரவையின் 30/1 யோசனைக்கு அனுசரணை வழங்கியமையை கோட்டாபய ராஜபக்ஸ இந்த புத்தகத்தின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த யோசனைக்கு இணை அனுசரணை வழங்கியமையானது, சிங்கள மக்களை இலக்காக கொண்டு செய்த ஒரு விடயம் என பலரும் உற்று நோக்கியதாக அவர் தனது புத்தகத்தின் குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஜெனீவா அறிக்கையின் பிரகாரம், இலங்கை ராணுவம் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டது என்பதை அப்போதைய அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக இதில் கூறப்பட்டுள்ளது.

''இலங்கை ராணுவம் மீதான யுத்தக் குற்றங்களை விசாரணை செய்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணை அதிகாரிகள் அடங்கிய நீதிமன்ற கட்டமைப்பொன்றை ஸ்தாபிப்பதற்கும், கடந்த காலங்கள் குறித்து ஆராய்வதற்கு மேலும் பல நிறுவனங்களை ஸ்தாபிப்பதற்கும், அனைத்து பொறிமுறைகளுக்கும் சர்வதேச தரப்பிடமிருந்து நிதியுதவி, தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ளும் சுதந்திரத்தை வழங்குவதற்கும் 2015ஆம் ஆண்டு அரசாங்கம் 30/1 யோசனையின் ஊடாக இணக்கம் தெரிவித்தது" என அவர் கூறுகின்றார்.

''உத்தேச நீதிமன்ற கட்டமைப்பின் முன்னிலைக்கு, ஆயுதம் ஏந்திய ராணுவ உறுப்பினர் ஒருவரை ஆஜர்படுத்துவதற்கு போதுமான சாட்சியங்கள் இல்லாத போதிலும், மனித உரிமை மீறல் அல்லது யுத்தக் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் கீழ் ராணுவ அதிகாரிகளை உள்ளக நிர்வாக செயற்பாடுகளின் ஊடாக சேவையிலிருந்து நீக்குவதற்கு ஜெனீவாவில் 2015ஆம் அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது" என கோட்டாபய ராஜபக்ஸ தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தேசிய நலனுக்கு முரணான வகையில் பல விடயங்கள் ஜெனீவா யோசனையில் உள்ளடங்கியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான விடயங்களினால் 2015-2019 அரசாங்கம் தேசிய விரோத மற்றும் சிங்கள விரோத அரசாங்கம் என்ற விதத்தில் மக்கள் நோக்கினார்கள் என கோட்டாபய ராஜபக்ஸ தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

2015 - 2019 அரசாங்கத்தை பாதுகாத்த உள்நாட்டு, வெளிநாட்டு சக்தி?

2015 - 2019ஆம் ஆண்டு முதல் ஆட்சியிலிருந்து அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக செயற்பட்ட வெளிநாட்டு சக்திகள், 2022ஆம் ஆண்டு தன்னை வெளியேற்றும் போராட்டத்தை செயற்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

''2018ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் அப்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இடையில் விரிசல் ஏற்பட்ட போது, அந்த அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக செயற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள், 2022ஆம் ஆண்டு தன்னை வெளியேற்றும் போராட்டத்தை முன்னெடுத்ததாக அவர் தனது புத்தகத்தின் ஊடாக குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பான்மை சிங்கள மக்கள் என்ற விதத்தில் தமது நாட்டிற்குள் காணப்படுகின்ற இடம் தமக்கு இல்லாது போயுள்ளது என்ற உணர்வினாலேயே 2019ஆம் ஆண்டு தனக்கு வாக்களிக்க மக்கள் ஒன்று திரண்டதாகவும் அவர் கூறுகின்றார்.

 
ராஜபக்ஸேவின் புத்தகம், இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோவிட் காலத்தில் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள நேர்ந்தமை

கோவிட் காலப் பகுதியில் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள நேர்ந்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தனது புத்தகத்தில் இணைத் தலைப்பாக இந்த விடயத்தை அவர் தெளிவூட்டியுள்ளார்.

2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை சுற்றுலாத்துறை முழுமையாக பாதிக்கப்பட்டதுடன், 2020 முதல் 2021 செப்டம்பர் வரை குறைந்தளவான சுற்றுலா பயணிகளே வருகைத் தந்ததாகவும் அவர் கூறுகின்றார்.

2020ஆம் ஆண்டு 7,104 டாலர் அந்நிய செலாவணியே நாட்டிற்கு கிடைத்துள்ளது. 2021ஆம் ஆண்டு 5,491 டாலர் அந்நிய செலாவணி நாட்டிற்கு கிடைத்துள்ளது. 2022ஆம் ஆண்டு 3,789 டாலர் அந்நிய செலாவணி கிடைத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், வாகனம் உள்ளிட்ட இறக்குமதிகளை தடை செய்ய நேர்ந்ததாகவும், வெளிநாட்டிற்கு அனுப்பும் பணத்தை 5000 டாலர் வரை மட்டுப்படுத்த நேர்ந்ததாகவும், வெளிநாட்டு கடன் செலுத்துவதை நிறுத்த நேர்ந்ததாகவும் அவர் கூறுகின்றார்.

கோவிட் பெருந்தொற்று தனது ஆட்சி காலத்தில் பொருளாதார வீழ்ச்சிக்கு பாரிய தாக்கத்தை செலுத்தியது என அவர் குறிப்பிடுகின்றார்.

இதனால், வாழ்வாதாரம் ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியமை, மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கியமை உள்ளிட்ட விடயங்களை அவர் இந்த புத்தகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோவிட் காலப் பகுதியில் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கமாக கோட்டாபய ராஜபக்ஸ இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அத்துடன், கோவிட் பாதிப்புகளை தவிர்த்துக் கொள்வதற்காக உடனடி தடுப்பூசி திட்டத்தை செயற்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

கோவிட் தொற்று காணப்பட்ட காலப் பகுதியில் நடாத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில், தமது கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தன்வசப்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்ஸேவின் புத்தகம், இலங்கை
எரிபொருள் தட்டுப்பாடு, வரிசை மற்றும் வன்முறை

கோவிட் தொற்று காரணமாக நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியினால், 2022 மார்ச் மாதம் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், மின்தடையை ஏற்படுத்த வேண்டிய நிலைமையும் காணப்பட்டது என அவர் குறிப்பிடுகின்றார்.

2022 மார்ச் மாதம் 28ஆம் தேதி 7 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டதுடன், மார்ச் 31ஆம் தேதி அந்த மின்வெட்டு நேரம் 12 மணிநேரம் வரை அதிகரிக்கப்பட்டது.

இதையடுத்து, 2022 மார்ச் 31ஆம் தேதி தனது மிரிஹான வீட்டு வளாகம் யுத்த களமாக மாறியது என கோட்டாபய ராஜபக்ஸ கூறுகின்றார்.

முதலில் சிறு குழுவினரால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், ஒரு தொலைக்காட்சி மற்றும் சமூகவலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதை அடுத்து, அது பாரிய போராட்டமாக மாற்றம் பெற்றது என அவர் குறிப்பிடுகின்றார்.

போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக வருகை தந்த பாதுகாப்பு பிரிவினர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடாத்தியதை அடுத்து, போராட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகத்தை பாதுகாப்பு பிரிவினர் நடாத்தியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதற்காக பெருமளவான வழக்கறிஞர்கள் முன்னிலையானதாக கூறிய அவர், தான் பதவியிலிருந்து விலகும் வரை அந்த செயற்பாடு தொடர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து, 2022 ஏப்ரல் 09ஆம் தேதி காலி முகத்திடல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் கூறுகின்றார்.

 
ராஜபக்ஸேவின் புத்தகம், இலங்கை
காலி முகத்திடல் போராட்டத்தில் சிறுபான்மையினர்

''விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிரான யுத்தத்தை நாம் வென்ற தருணத்திலிருந்து, நான் தமிழ் மக்களின் எதிரியாக சித்தரிக்கப்பட்டேன். ஒன்றிணைந்த நாட்டிற்கு பதிலாக ஐக்கிய இலங்கையை கோரி நின்ற புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி நிரல் இந்த போராட்டத்தில் தெளிவாகியது.

சமஷ்டி அரசாங்கமொன்றை தமிழ் கட்சிகள் நீண்டகாலமாக கோரியதுடன், காலி முகத்திடல் போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்தின் மீது மின்விளக்குகளின் ஊடாக அந்த கோரிக்கை காட்சிப்படுத்தப்பட்டது." என அவர் குறிப்பிடுகின்றார்.

''2012ஆம் ஆண்டு பொதுபல சேனா அமைப்பு உருவானதுடன், அந்த அமைப்புடன் எனக்கு தொடர்புள்ளது என்ற அடிப்படையில், நான் முஸ்லிம்களின் எதிரி என்ற கருத்து வெளியானது. கோவிட் மரணங்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில் கூட முஸ்லிம்களுக்கு எதிரானவன் என கருத்தை காணக்கூடியதாக இருந்தது."

''2019ஆம் ஆண்டு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள், எனது எதிர் போட்டியாளருக்கு கிடைத்த நிலையிலேயே நான்; அதிகாரத்தை கைப்பற்றினேன். பௌத்த மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் இடமான ருவன்வெலிசேய புனித பூமியிலேயே நான் பதவி பிரமாணம் செய்துக்கொண்டேன். சிங்கள பெரும்பான்மை வாக்குகளினால் நான் தெரிவு செய்யப்பட்டமை குறித்து நான் பதவி பிரமாணம் செய்துக்கொண்டதன் பின்னர் பல்வேறு அர்த்தங்கள் வெளிப்படும் வகையில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன." என அவர் குறிப்பிடுகின்றார்.

தனது அமைச்சரவையில் அறுமுகன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா ஆகிய தமிழர்கள் இருந்த போதிலும், முஸ்லிம்கள் எவரும் இருக்கவில்லை. ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்ததன் பின்னர் அவரது மகன் தெரிவு செய்யப்பட்டபோதிலும், அவருக்கு வயது குறைவு காரணமாக அமைச்சர் பதவி வழங்கவில்லை. தேசிய பட்டியல் ஊடாக அலி சப்ரியை தெரிவு செய்து, அவருக்கு அமைச்சர் பொறுப்பை வழங்கினேன்." என அவர் கூறுகின்றார்.

'போராட்டத்திற்குள் 'சிங்கள பௌத்த தரப்பில் குறுகிய அளவினரே பங்குப்பற்றினர். சில பௌத்த மத குருமார்களே பங்குப்பற்றினார்கள். போராட்டத்திற்கு ஒரு மூத்த பௌத்த பிக்கு மாத்திரமே ஆதரவு வழங்கினர். ஓமல்பே சோபித்த தேரர் மாத்திரமே ஆதரவு வழங்கினார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வசமிருந்த சிங்கள பௌத்த அதிகாரம் இல்லாது போனது என சோபித்த தேரர் ஹிரு தொலைக்காட்சிக்கு தெரிவித்தார். ஜனாதிபதி பதவிக்கு தெரிவாகி பெற்றுக்கொண்ட சிங்கள பௌத்த வாக்குகளை போராட்டத்தின் ஊடாக இல்லாது செய்து நோக்கம் என்பது அவரது கருத்திலிருந்து விளங்கிக்கொள்ள முடிகின்றது" என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த போராட்டமானது சிங்கள எதிர்ப்பு மற்றும் பௌத்த எதிர்ப்பு போராட்டம் என்பதுடன், அது வெளிநாட்டு தரப்பினரின் தூண்டுதல் மற்றும் அனுசரணை என கோட்டாபய ராஜபக்ஸ கூறுகின்றார்.

ராஜபக்ஸேவின் புத்தகம், இலங்கை
கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் விவகாரம்

கோவிட் தொற்று காரணமாக ஏற்படும் மரணங்களை அடக்கம் செய்ய கூடாது என சுகாதார தரப்பினர் வழங்கிய ஆலோசனைகளுக்கு அமைய, தான் நடவடிக்கை எடுத்த போதிலும், அதனை முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கையாக சிலர் சித்தரித்ததாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

இந்த முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கையானது, பின்னரான காலத்தில் தனக்கு எதிரான வைராக்கியமாக மாற்றம் பெற்றதை அடுத்து, தன்னை பதவியிலிருந்து விரட்டியடிக்கும் திட்டத்திற்கு அதனை பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் கூறுகின்றார்.

''கோவிட் மரணங்களை அடக்கம் செய்வதற்கு மாலத்தீவு அரசாங்கத்திடம் தான் உதவி கோரிய நிலையில்,அதற்கு மாலத்தீவு அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது. எனினும், இனவாத இலங்கை அரசாங்கத்திற்கு இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கு ஏன் உதவி செய்கின்றீர்கள் என இலங்கைக்கான ஐரோப்பிய தூதுவர் ஒருவர் மாலத்தீவு அரசாங்கத்திடம் கோரினார். ஜெனீவா மனித உரிமை பேரவை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அரசாங்கத்தை நிர்க்கதி நிலைக்கு தள்ள சர்வதேச வல்லரசு நாடுகள் இந்த பிரச்னையை பயன்படுத்திக் கொண்டன" என அவர் குறிப்பிடுகின்றார்.

அதனைத் தொடர்ந்து சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளின் அடிப்படையில் 30 அடி ஆழத்தில் நிலத்தடி நீர் இல்லாத பகுதிகளில் கோவிட் சடலங்களை புதைக்க அனுமதி வழங்கப்பட்டது என அவர் தெரிவிக்கின்றார்.

எனினும், இந்த விடயத்தை முன்னிலைப்படுத்தி, முஸ்லிம்களை தனக்கு எதிராக திசை திருப்பியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

 
ராஜபக்ஸேவின் புத்தகம், இலங்கை
ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்

'என்னை பதவியிலிருந்து விரட்டியடிக்கும் விவகாரத்தில் கார்தினல் உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயத்தின் சிலர் தரப்பினர் பாரிய பொறுப்புக்களை நிறைவேற்றினார்கள். காலி முகத்திடல் போராட்டத்தில் கத்தோலிக்க சமூகத்தையே அதிகளவில் காணக்கூடியதாக இருந்தது. தன்னை வெளியேற்றும் நடவடிக்கைகளின் கத்தோலிக்க சமூகத்தினர் மறைமுகமாகயின்றி நேரடியாகவே களமிறங்கினார்கள்." என அவர் கூறுகின்றார்.

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் இரகசிய சாட்சியங்கள் காணப்பட்டமையினால், அதனை வெளிப்படுத்த வேண்டாம் என பரிந்துரை செய்யப்பட்டடிருந்தது. அதனால், கார்தினல் உள்ளிட்ட எவருக்கும் அதனை கையளிக்க முடியவில்லை. எனினும், 2021 பிப்ரவரி 25ஆம் தேதி ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அனைத்து சாட்சியங்களுடனும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த பிரதிகள் பௌத்த மகாநாயக்க தேரர்கள் மற்றும் கார்தினல் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. எனினும், இந்த தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கார்தினல் கோரிக்கை விடுத்தார். எனினும், அந்த அறிக்கை குறித்து கார்தினல் திருப்தி கொள்ளவில்லை" என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டே கத்தோலிக்க சபை தனக்கு எதிராக போராடியது என கோட்டாய ராஜபக்ஸ தனது புத்தகத்தின் தெளிவூட்டியுள்ளார்.

தன்னை ஆட்சியிலிருந்து வெளியேற்ற பல நாடுகள் தொடர்புபட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள போதிலும், அந்த நாடுகளின் பெயர்களை தெளிவாக உறுதிப்படுத்த இந்த புத்தகத்தில் கோட்டாபய ராஜபக்ஸ கூறவில்லை.

 
ராஜபக்ஸேவின் புத்தகம், இலங்கை

பட மூலாதாரம்,SIVARAJA

படக்குறிப்பு,

மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா

பத்திரிகையாளரின் பார்வை

''சிங்கள் மக்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றார். அவருக்கு மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லாவிட்டாலும் கூட, தனது ஆட்சி மோசமான ஆட்சி என வரலாற்றில் பதிந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு வியாக்கியானத்தை கொடுக்க முயல்கின்றார்.

எனினும், அவரது குடும்பத்திற்குள் வந்த அழுத்தங்களை அவர் சொல்லவில்லை. வெளிநாட்டு சக்திகள் என கூறுகின்றார். ஆனால் வெளிநாட்டு சக்திகள் யார் என்பதை அவர் கூறவில்லை. குறிப்பாக இந்தியா இறுதி நேரத்தில் அவரது விமானத்தை தரையிறக்க அனுமதி மறுத்ததாக செய்திகள் வந்தது.

ஆனால், அதற்கான காரணத்தை அவர் சொல்லவில்லை. அதேபோன்று, அமெரிக்க பிரஜாவுரிமைக்காக அவர் அமெரிக்காவிற்கு போவதற்கான விசாவை கேட்கின்றார். அதற்கும் அமெரிக்கா அனுமதி வழங்கவில்லை. மேற்குலக சக்தி என கூறுகின்ற போதிலும், அது எந்த நாடு என கூறவில்லை.

ரஷ்ய விமானம் நிறுத்தப்பட்டது ஒரு சதி என சொல்லும் அவர், ரஷ்ய தூதரகம் விளக்கத்தை கேட்ட போதிலும், அவர் அதற்கான விளக்கத்தை கூட சொல்லவில்லை. அனுதாபத்தை தேடி வரலாற்றில் தனக்கு அவப் பெயர் வந்து விடக்கூடாது என யோசிக்கும் கோட்டாபய, வரலாற்றை திரிபுபடுத்தும் வகையில் அந்த புத்தகத்தை எழுதியுள்ளார்." என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.

''இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தவறிய அந்த தவறை இவர்கள் இன்னும் சீர்செய்யவில்லை. பௌத்த மேலாதிக்க வளர்ச்சி தனது ஆட்சியில் வளர்ந்து விடும் என்பதை தடுத்து விடுவதற்காகவே இந்த விடயம் நடந்தது என கோட்டா சொல்கின்ற நிலையில், பௌத்தர்களின் அனுதாபத்தை வென்றெடுக்க முயற்சிக்கின்றார். இன்னும் இவர்கள் பாடம் கற்கவில்லை." எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

''இந்த புத்தகத்தின் ஊடாக இனவாத தோற்றம் ஒன்று நிச்சயமாக தெரிவிக்கின்றது. மூத்த பௌத்த தேரர்கள் கூட போராட்டத்தில் இருந்தார்கள். ஓமல்பே சோபித்த தேரர். கோட்டா வெளியேறுவதற்கு கூட நான் உதவி செய்தேன் என அவர் கூறுகின்றார். அதாவது பதவியை விட்டு போங்க என சொன்னதே பிக்குகள் தான்.

கோட்டாவின் ஆட்சி காலத்தில் மாதத்திற்கு ஒரு முறை பௌத்த மதத் தலைவர்களை மட்டும் அவர் சந்தித்தார். அவர்களுக்கு பாரிய உதவிகளை செய்தார். ஆனால், கோட்டாவை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.

இன்றும் கூட அவர் சொன்ன கருத்தை எந்தவொரு பௌத்த மதத் தலைவரும் ஆதரவில்லை. பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்திய அவர், இப்போது தன்னை நியாயப்படுத்த வருவதாகவே அவர்கள் நினைக்கின்றார்கள். சொல்ல வேண்டிய விடயங்களை அவர் இந்த புத்தகத்தில் சொல்லவில்லை." என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/articles/c3ge7n831wdo

Checked
Tue, 05/14/2024 - 14:27
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed