20ஆவது அகவையில் யாழிணையம்

உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது.

கதை கதையாம்

துர்சலை

8 hours 22 minutes ago
துர்சலை - கணேசகுமாரன்

ஓவியங்கள் : செந்தில்

 

இரவுக் காற்றுக்கென்று தனி இசை உண்டு. அது தடாக நீரின் சிகை கலைத்து விளையாடிக்கொண்டிருந்தது, விளையாட்டுப் பிள்ளையின் குதூகலத்துடன். காற்றின் மெல்லிய வருடலில் நீரில் மிதந்துகொண்டிருந்த முழுமதி நெளிந்து நெளிந்து தடாகப் படியைத்தொட்டு மீண்டு
கொண்டிருந்தது.

‘‘உங்கள் கண்களில் தெரியும் சோர்வினைப் பார்த்தால், இரவுறக்கம் இன்று தள்ளிப்போகும்போல் தெரிகிறது துர்சலை’’ என்றாள் மாதங்கி.

துர்சலை வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்திருந்தாள். ஒரு முழுநீளத் துகில்; அவ்வளவுதான். அதைத்தான் உடல் முழுவதும் சுற்றியிருந்தாள். தான் அமர்ந்திருந்த இடம்வரை தன்னிருப்பைப் படரவிட்டிருந்த நிலவொளியைத் தன் வெண்சங்கு நிறப் பாதத்தால் நிரடியபடி சொன்னாள். ‘‘ஆமாம். நான் இன்று இரவுநீராடல்கூடப் புரியப் போவதில்லை’’ குரலில் கிளர்ந்த அலட்சியப் பெருமூச்சுக்கு தடாகத்தினை ஒட்டி வளர்ந்திருந்த மரமொன்றிலிருந்து மலர் உதிர்ந்தது. உடன் அப்பிரதேசமெங்கும் சுவாசம் நிறைக்கும் பரிமளமொன்று எழுந்து அலைந்தது. இடைப்பகுதியை இறுக்கியிருந்த வெண்ணிற ஆடையைச் சற்றே நெகிழ்த்தினாள் துர்சலை.

90p1_1522063131.jpg

‘‘இதென்ன அரசகுலத்தில் இல்லாத புது வழக்கம். இளவரசி இப்படி நடந்து கொண்டால், குழைத்த சந்தனமும் தயாரான அகிற்பொடியும் தங்கள் ஜீவனை மறந்தல்லவா போகும்?’’ என்றாள் மாதங்கி. அப்போது அவளின் வலதுகரம் துர்சலையின் தோள் தொட்டபடியிருந்தது.

‘‘துரதிருஷ்டமான விதிபோலும். சந்தனத்துக்கும் அகிற்பொடிக்கும் கவலைப்படுபவர்கள், அதன் ஆயுளை அனுபவிப்பர்களின் மனநிலையை ஏனோ புரிந்துகொள்வதில்லை’’ - துர்சலையின் இமைக்கா விழிகள் நனைந்த முழு நிலவை உற்று நோக்கிக்கொண்டிருந்தன.

‘‘என்ன துர்சலை... சில நாள்களாகப் புதிரின் வழியே நடமாடிக் கொண்டிருக்கிறீர்கள்?’’ ஆச்சர்யமானாலும் வினாவில் துயரம் ஒளிந்திருந்தது.

‘‘என் அந்தரங்க வடு அறிந்தவள் நீதானே மாதங்கி. உனக்குமா எனது வாதை புரியவில்லை. அஸ்தினாபுரமோ, காண்டவப் பிரஸ்தமோ மாறினாலும் மாறாதது இந்தச் சாபம்தானே...’’
90p3_1522063169.jpg
குழப்பமாகப் புருவம் நெறித்த மாதங்கியின் நுதலிலிருந்து காய்ந்த சந்தனம் உதிர்ந்தது. ‘‘உங்களுக்கென்ன வருத்தம். நூறு சகோதரர்களுக்கும் ஒரே சகோதரி என்ற கொடுப்பினை யாருக்கு வாய்க்கும் துர்சலை? இது முன்ஜென்மப் புண்ணியம்.’’

அவசரமாக மறுத்தாள். ‘‘இல்லை மாதங்கி. இது இப்பிறவிச் சாபம். நூறு பேர்களுக்குப் பிறகான மிச்சம்தானே நான். என் மூத்த குடிமகள் வானதி வழி வந்த சாபம்தான் என் நாழிகைகளில் எந்தவோர் ஆடவனும் இடம் பெறாமல் போனான்போலும்’’ துர்சலையிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டு, அணிந்திருந்த ஆடையைக் கருக்கியது.

‘‘புதிராக வாழ்கிறேன் மாதங்கி. கண்களை மூடினால் ஏதாவது ஒரு குறுநில மன்னனை வெல்ல களத்தில் வாள் பிடித்து நிற்பதுபோன்ற காட்சிதான் வருகிறது. இரவுறக்கத்தில் வரும் கனவுகள் உன்னிடம்கூடச் சொல்ல முடியாதவை மாதங்கி’’ - கண்ணீர் திரண்டு வழிந்து கனவைப் பேசியது. ‘‘அது ஓர் அழகிய நந்தவனம். மலர்களின் அளவோ அங்கிருக்கும் மலர்ச்செடிகளையே மறைத்தபடி மிகப் பெரியதாகவும் நுரையீரல் ஆழம் சென்று படியும் பரிமளத்துடனும் வீற்றிருக்கின்றன. இப்போதுகூட என் நாசியில் உறங்கிக்கொண்டிருக்கிறது அம்மலர்களின் நறுமணம். மெல்லிய துகில் அணிந்து நந்தவனத்தின் ஊடே நடந்து கொண்டிருக்கிறேன். ஒரு மலருக்குப் பின்னால் ஓர் ஆடவன் மறைவது கண்களுக்குத் தெரிகிறது. எனக்குள் ஓர் உற்சாகம். அவனைத் தேடி அலைகிறேன். மிக அகலமான தோள்கள், பின்புறத்திலிருந்து பார்க்கும்போதே திரண்ட அவன் புஜங்களும் இறுகிய மார்பின் ஓரங்களும் தெரிந்து தெரிந்து மறைகின்றன. பரந்த முதுகைத் தழுவியபடி நீண்ட கறுஞ்சிகை. காற்றில் ஆட ஆட மலரின் மணம் என்னை அவனை நோக்கித் தள்ளுகிறது. வானமே புதிதாய் ஒரு வண்ணத்தில் கிடந்ததுபோல் ஒரு நினைவு. என்ன ஓர் ஆச்சர்யம். அவனை நான் நெருங்க நெருங்க அவன் விட்டு விலகித் தூரம் செல்கிறான். என் பார்வையில் படுவதெல்லாம் அவன் சிகையும் அது அலையாடும் விதமும். நான் அவனை நோக்கி ஓடத் தொடங்குகிறேன். என்னுடம்பில் வியர்வை அரும்பத் தொடங்குகிறது. காற்றில் மிதந்த மணத்தை மாற்றுகிறது, என் வியர்வையிலிருந்து வெளிப்படும் கற்பூரம் கரைந்த காமத்தின் மணம், அத்தனை வெப்பமாய் நந்தவனத்தையே எரிக்கும் மணம் அது. ஒரு நிலையில் கண்ணீர் திரள அவனை நோக்கி விரைகிறேன். கரங்களில் அவன் சருமத்தினை உணரும் வேளை, என் விரல் வழி காமம் வழிவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவனைத் தொட்டுத் தழுவி அவன் பின்னங்கழுத்தில் என்னிதழ் பதிக்கிறேன். முகம் காணும் ஆவலில் என்னிதழ்கள் துடிக்க அவனை என் பக்கம் வளைக்கிறேன். அந்த முகம்... அந்த முகம்...’’ வழியும் கண்ணீருடன் துர்சலை போராடிக்கொண்டிருந்தாள்.

90p2_1522063154.jpg

நெற்றியில் அரும்பித் துளிர்த்த அவளின் வியர்வைத் துளிகளைத் தன் ஆடையால் ஒற்றித் துடைத்த மாதங்கி, ‘‘துர்சலை...துர்சலை...’’ என்று தோள் அசைத்தாள்.

இமைகளைத் திறந்த துர்சலை, ‘‘அது என் சகோதரன் மகாபாகு’’ என்றாள். ‘‘எங்கு நோக்கினும் ஆடவர்கள். ஆனால், அத்தனை பேரும் என் சகோதரர்கள் என்றால், எனக்கான ஆடவனை எப்படி நான் கற்பனைகொள்வது?’’ துர்சலையின் சொற்கள் வறண்டு வெளிப்பட்டன.

‘‘சற்றே எழுந்து வாருங்கள். தடாகம் சுற்றி வரலாம்’’ - மாதங்கியின் கைப்பிடித்து எழுந்த துர்சலை, இடையிலிருந்து தளர்த்தியிருந்த ஆடையைச் சிறு முடிச்சிட்டு இறுக்கினாள். நடந்தவாறு பேசினாள்.

‘‘ஒவ்வொரு சுயம்வரத்திலும் இதுதான் நடக்கிறது. எல்லா ஆண்களும் இப்படி என் சகோதரர்களில் எவரையாவது நினைவில் கொண்டுவந்தால், எனக்கென்று எவரை நான் உணர்வது. ஆழி நடுவில் நெடுந்தாகத்துடன் கடற்பயணம் மேற்கொள்பளின் நிலைமையடி எனக்கு.’’ தடாகம் அருகில் வந்ததும் நின்று நிமிர்ந்து வான் நோக்கினாள். முழுநிலவு நாள். கூடுதலாய் வெண்ணிற ஒளியில் ஆடையொன்றைப் போர்த்திக் கிடந்ததுபோல் ஆகாயம். ‘‘துளி முகிலற்ற ஆகாயம், விண்மீன்கள் கொண்டு சமநிலைப்படுத்திக்கொள்கிறது. அப்படி ஒரு வாய்ப்பும் இல்லா வெற்று ஆகாயம் நான். வானதி, அம்பை வழியின் சாபம்தானே என் தந்தையின் பிறப்பு. ஈருடல்கள் ஒற்றைக் காமத்தில் கூடிக் களித்து அதன்வழி பிறப்பதுதானே இன்பமும் சிசுவும். இங்கு எந்தப் பெண்ணிற்கு அது சீராக வாய்த்தது. மனமுவந்து தன்னுடல் ஈந்திருக்கும் கூடலில் கண் மூடியிருக்க மாட்டாள் என் முதுகிழவி. கர்ப்பம் கண் மூட என் தந்தைக்குக் காட்சிகள் மூடப்பட்டன. நியாயமாக அவள் தன் சுவாசத்தைத்தானே மூடியிருக்க வேண்டும். அப்போதே எல்லாம் மாறிவிட்டது. அது நூற்று ஒன்றாக என் சிரசில் படிய வேண்டுமென்பது விதி’’ - மேல் வரிசைப் பற்களால் உதடு கடித்து அழுகையை அடக்கினாள் துர்சலை.

மாதங்கியின் வலதுகரம் துர்சலையின் இடது உள்ளங்கையை இறுகப் பிடித்தது. ‘‘என் உலகம் ஆண்கள் நிறைந்ததாயிருக்கிறது. ஆனால், நான் எந்த ஆணுடனும் இல்லை. என் கனவில் நான் மட்டுமே இருக்கிறேன். முத்தம் என்றால் எப்படியிருக்குமென்று எம் குலப் பெண்கள் எவருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை மாதங்கி. நான் மட்டும் விதிவிலக்கா?’’ பேசிக்கொண்டே தான் அணிந்திருந்த ஆடையின் இடை முடிச்சை நீக்கினாள். நெகிழ்ந்த ஆடை குவியலாக அவள் காலடியில் விழுந்தது.

துர்சலையின் மார்புகளின் திரட்சியினைக் கவனித்தவாறே மாதங்கி தன் கரம் நீட்ட... அதைப் பற்றியபடி தடாகப் படியில் கால் வைத்தாள் துர்சலை. ‘‘முன்னிரவு நாழிகை கடந்துவிட்டது துர்சலை’’ என்றாள் மாதங்கி.

‘‘என்னுடலுக்கு இந்நீர்தான் இப்போதைக்கான ஆண் மாதங்கி. எத்தனை சுதந்திரமாய் என் வெப்பம் தீண்டுகிறது. நீருக்குள்ளிருக்கும் கணம்தான் நான் முழுமையான பெண்ணாக என்னை உணர்கிறேன். நீ சந்தனம் கொண்டுவா. நான் என்னுடலுடன் பேசிவிட்டு வருகிறேன்’’ அடுத்த படியில் கால்வைத்தவள், நிர்வாணமாக நீருக்குள் மூழ்கினாள். நிலா உடைந்து உடைந்து ஒன்று சேர்ந்துகொண்டிருந்தது.

https://www.vikatan.com

மனம் - தேவகாந்தன்

1 day 12 hours ago
 
மனம்
தேவகாந்தன்
 
 
‘நிக்கலஸ் ஏன் அவ்வாறு செய்தான்?’
 
விடை தேடிக்கொண்டு ஏற்கனவே கிடந்த கேள்விகளோடு, அப்போது இன்னொரு கேள்வியும் இராஜலிங்கத்தின் மனத்துள் சேர்ந்துகொண்டது.
‘அதெல்லாம் கள்ளக் கூட்டம். கறுவல்களோடெல்லாம் சேர்ந்து நீ இனிமேல் விளையாடப் போகவேண்டாம்’ என மகன் அனூஷனுக்கு கண்டிப்புச் சொன்ன ஆனந்தி, கூடத்துள்ளிருந்து எல்லாம் கண்டுகொண்டிருந்த தந்தையிடம் திரும்பி, ‘பாத்தியளேயப்பா, அதுகள் செய்த வேலையை? நாளைக்கு ஸ்கூலுக்குப் போய் இதைப்பற்றி கொம்பிளெய்ன் பண்ணியிட்டு வந்திடுங்கோ. எல்லாத்தையும் இப்பிடியே சும்மா விட்டிடேலாது’ என்றுவிட்டு மேலே போய்விட்டாள்.
 
மூன்று நாட்களுக்கு முதல் பள்ளி லொக்கரில் வைத்த அனூஷனின் ஜாக்கெற் அன்றைக்கு திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியை அவள் கொஞ்சம்கூட பட்டுக்கொள்ளவில்லையென அவருக்குத் தெரிந்தது. அதில் சிறிது நியாயமிருப்பதாக இராஜலிங்கம் எண்ணினார். அந்த ஆண்டில்மட்டும் அனூஷனின் இரண்டு ஜாக்கெற்றுக்கள் காணாமல் போயிருக்கின்றன. திரும்பக் கிடைத்திருந்தாலும் அது மூன்றாவது சம்பவம்.
 
அனூஷனுக்கு இட்ட கட்டளையின் பின்னாலிருந்த ஆனந்தியின் தீர்மானத்தையா அவரும் அது விஷயத்தில் கொண்டுவிடப் போகிறார்? ‘கறுவல்களெல்லாம் கள்ளக் கூட்டம்!’
 
அவருக்கு யோசிக்கவேண்டி இருந்தது.
 
ஜுலையில் கிடைத்த விடுமுறைப் பணத்தில் ஆனந்தி அனூஷனுக்கு விலை சிறிது கூடிய ஜாக்கெற் ஒன்று வாங்கிக் கொடுத்திருந்தாள். 
செப்ரெம்பரில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கியபோது, காலம் கோடையெனினும் காலத்துக்கு முன்னதாகவே அந்த ஆண்டில் கோடையும் பனியும் இடைமாறும் காலமான இலையுதிர் காலத்தின் குளிர் ஆரம்பித்திருந்தது. வடதுருவத்திலிருந்து அடித்து வந்த காற்றால் குளிர் மண்டிப்போனது. கதகதத்துக்கொண்டிருந்த கட்டிடங்கள், தருக்கள், வீதிகள், நீர்நிலைகளெல்லாம் குளிரேறத் தொடங்கிவிட்டிருந்தன. பல வீடுகளில் கணப்பிகளை போடத் துவங்கிவிட்டிருந்தார்கள்.
 
அனூஷன் அந்த புதிய ஜாக்கெற்றை போட்டுக்கொண்டு பள்ளிக்குப் போயிருந்தான்.
 
வீட்டிலிருந்து பள்ளிக்கு பத்து நிமிஷ நடைதான்.
 
மூன்றரை மணிக்கு விடுகிற பள்ளியிலிருந்து ஆனந்தி வேலை முடிந்து நான்கு மணியளவில் திரும்பியிருந்தும், அனூஷன் வரவில்லை. அப்போதும் ஆனந்தி வழக்கம்போல் தந்தையிடம்தான் கேட்டாள், ‘அப்பா, ஒருக்கா அனூஷனைப் போய்ப் பாத்துக்கொண்டு வந்திடுங்கோவன்’ என்று.
 
 
இராஜலிங்கம் வெளிக்கிட்டுக்கொண்டிருக்க அனூஷன் வீடு வந்துசேர்ந்தான். ஆனந்தி தாமதத்துக்கு காரணம் கேட்டபோது, அனூஷன் கண்கலங்க நின்று ஜாக்கெற் தொலைந்துபோன விஷயத்தைக் கூறினான். 
‘காலங்காத்தால அஞ்சு மணிக்கு எழும்பி ஓடி நான் பக்டரியில முறிஞ்சு உழைச்ச காசு…’ என்று ஆனந்தி வயிறெரிந்ததோடு அன்றைக்கு விஷயம் முடிந்திருந்தது. 
 
சனி, ஞாயிறான பள்ளியற்ற நாட்கள் கழிய திங்கட்கிழமை காலையில் அனூஷனும் தன் பழைய ஜாக்கெற்றை போட்டுக்கொண்டு பள்ளிக்குப் போனான். 
 
அன்றைக்குத்தான் புதிய ஜாக்கெற் திரும்பக் கிடைத்திருந்தது. அவர் திருப்தியும், அனூஷன் மகிழ்ச்சியும்பட்ட வேளை, ஆனந்திக்கு கோபம் வந்திருக்கிறது. பள்ளியில் முறையிடவும் அவரிடம் சொல்லிவிட்டாள்.
அதையா அவரும் செய்யப்போகிறார்?  
 
உண்மையில் ஜாக்கெற் தொலைந்த அன்றைக்கேதான் தன் வயிற்றெரிச்சலோடு ஆனந்தி அவருக்குச் சொல்லியிருக்கவேண்டும், பள்ளியிலே சென்று முறைப்பாடு செய்வதுபற்றி. 
 
அந்தத் தொலைவில் ஆனந்தி வயிறெரிய மட்டும்தான் செய்திருக்க முடியுமென்றும் இராஜலிங்கத்துக்கு தெரிந்தது. ஏனெனில் கோபத்தை எறிவதற்கும் ஒருவர் அல்லது ஒன்று தேவைதானே? ஒருவேளை அது நிக்கலஸென்று தெரிந்ததால்தான் அந்தக் கோபமே அவளிடம் வந்ததோவென்றும் அவருக்கு யோசனை தோன்றியது. பொதுவாக கறுப்பின மக்களைப்பற்றி கனடிய ஆசியர்களிடம் அவ்வாறான ஒரு மனநிலை, குழப்பகாரர் கள்ளர்கள் என்பதாக, இருந்து வருவதை அவர் அறிவார். 
 
இராஜலிங்கத்துக்கு அவ்வாறான எண்ணம் இல்லாவிட்டாலும், நிக்கலஸ் ஏன் அவ்வாறு செய்தானென்ற கேள்விமட்டும் விடைதேடி அவரிடத்தில் நின்றுகொண்டிருந்தது.
 
அனூஷன் சாப்பிட்டு வர, இராஜலிங்கம் அவனை அழைத்து ஜாக்கெற் கிடைத்த விபரத்தை விசாரித்தார்.
 
கைகளை ஆட்டியும், கேலியாய் சிரித்தும் கொண்டான அபிநயத்தோடு அன்று மாலையில் நடந்ததைச் சொன்னான் அனூஷன்.
 
பள்ளி முடிய லொக்கருக்கு வந்து தன்னுடைய பையையும் பழைய ஜாக்கெற்றையும் எடுத்துக்கொண்டு அனூஷன் வெளியே வர, முன்னால் போய்க்கொண்டிருக்கிறான் நிக்கலஸ், எந்த ஜாக்கெற்றை அனூஷன் தொலைத்தானோ, அதேபோன்ற ஒன்றை அணிந்துகொண்டு.
அனூஷனுக்கு நெஞ்சு திக்கென்றது. கொஞ்சம் கோபம்கூட வந்தது. 
விரைந்து அவனிடம் போய், ‘நிக்கோ, இந்த ஜாக்கெற்றை நீ எப்போது வாங்கினாய்?’ எனக் கேட்டான்.
 
நிக்கோ கலகலவெனச் சிரித்துவிட்டு, ‘இது நான் வாங்கியதில்லை. இங்கேதான் எறிந்துகிடந்து எடுத்தேன்’ என்றான்.
 
‘போன வெள்ளிக்கிழமை எனது புதிய ஜாக்கெற் லொக்கரில் வைத்திருந்த இடத்தில் காணாமல் போனது.’
 
‘இதுமாதிரியானதா அது?’
 
‘இதுமாதிரியானதேதான்.’
 
‘இதுவேயா அது?’
 
கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘இதுவேதான்’ என்றான் அனூஷன்.
 
நிக்கலஸ் நின்றான். அனூஷனும் நிற்க, அவனது முகத்தை ஏறிட்டு நோக்கினான். அனூஷன் உண்மைதான் சொல்கிறானா என்பதை அறியப்போல் அவனது கண்களை கூர்ந்து கூர்ந்து கவனித்தான்.
தனது இலவசத்தை தட்டிப்பறிக்க அனூஷன் செய்கிற சூழ்ச்சியில்லை அது என்பதைக் கண்டிருப்பான்போல. சிறிதுநேரத்தில் ஜாக்கெற்றைக் கழற்றி அனூஷனிடம் கொடுத்துவிட்டு விறுவிறுவென நடந்தான்.
 
பின்னால் அனூஷன், ‘நன்றி’ என்றான்.
 
திரும்பிப் பாராமலே அதெல்லாம் ஒன்றுமில்லை என்பதுபோல் கையைத் தூக்கிக் காட்டிவிட்டு சர்வசாதாரணமாய் போய்க்கொண்டிருந்தான் நிக்கலஸ்.
 
பள்ளியில் நிகழ்ந்ததைச் சொல்லிவிட்டு அனூஷன் கணினி மேசையில் சென்று அமர்ந்துகொண்டான்.
 
அனூஷன் விளக்கிய சம்பவத்திலிருந்து நிக்கலஸ் ஒரு வாழ்வியல் உண்மையாய் அவருள் உருவம் கொண்டபடியிருந்தான்.
நிக்கலஸை அவருக்குத் தெரியும். அந்தப் பகுதியிலே குடியிருக்கிற பையன்தான். நல்ல உயரமான கறுப்பு பையன். ஒட்ட வெட்டிய புலுட்டை முடி. எப்போதும் சிரித்தபடியிருக்கிற முகம். பற்கள், கதைக்கும்போதும் பளீரென்று ஒளியடிக்கும். அனூஷனோடு அவரைக் காணுகிறவேளைகளில் ‘ஹாய், தாத்தா’ என்பான். அனூஷனின் வயதுதானிருப்பான். அவனது தாயைக்கூட பள்ளி வருகிற தருணங்களின் அவர் கண்டிருக்கிறார்.
ஒரு நீண்ட ஐந்து வருஷ காலத்தில் கறுப்பின மக்களோடு ஆசிரியப் பணி நிமித்தம் அவர் நைஜீரியாவில் வாழ்ந்திருக்கிறார். அவர்களது வாழ்வும், மனப்போக்குகளும் அதனால் ஓரளவு அவருக்குத் தெரிந்திருந்தன.
 
மனப்போக்கு என எண்ணியபோது நைஜீரியாவில் ஏறக்குறைய இதற்கு நிகராக நடந்த சம்பவமொன்று அவருக்கு உடடனடியாக ஞாபகம்வந்தது.
குரூமி என்கிற ஒரு கட்டையான அகன்ற தோற்றமுடைய ஒரு நடுத்தர வயது விதவைப் பெண், சனி ஞாயிறுகளில் வீட்டு வேலைகள் செய்வதற்காக அவரதிடத்துக்கு வந்துகொண்டிருந்தாள்.
 
ஒருநாள் அவரது இரண்டு நீலநிற சேர்ட்டுகளில் ஒன்று காணாமலாகியிருப்பது அவரது கவனத்தில் வந்தது. களவு போவதற்கான வாய்ப்புகள் குறைந்த இடம் அது. அவரது உடுப்புகள், படுக்கை விரிப்பு முதலியவற்றை தோய்த்துக்கொடுப்பவள் குரூமிதான். ஆனால் அவளிடம் கேட்க அவருக்குத் தயக்கமாக இருந்தது. அதனால் நேரடியாக அவளிடம் கேட்காமல், அவள் அங்கே நிற்கிறபோது எதையோ தேடுவதுபோல் பாவனை செய்தபடியிருந்தார்.
 
அதைக் கண்ட குரூமி கேட்டாள்: ‘என்ன தேடுகிறீர்கள்?’
 
‘இல்லை, எனது நீலச் சேர்ட்டுகளில் ஒன்றைக் காணவில்லை, அதைத்தான் தேடுகிறேன்’ என்றார் அவர்.
 
‘நீலச் சேர்ட்தானே? அதை நான் எடுத்துக்கொண்டு போய்விட்டேன்.’
 
‘ஏன்?’
 
‘எனது மகனுக்கு போடுவதற்கு சேர்ட் இல்லை. உங்களிடம் நீலச் சேர்ட்டிலும் இன்னொன்று இருக்கிறதுதானே? அதனால் கொண்டுபோனேன்.’
 
‘அப்போ, உனக்குத் தேவையானால் எதையும் நீ எடுத்துக்கொண்டு போய்விடுவாயா?’
 
‘அதெப்படி முடியும்? உன்னிடம் அது இரண்டாக இருக்கவேண்டும். அப்போதும் எனக்கு அது தேவையானதாக இருக்கவேண்டும்.’
 
குரூமி சிரித்துக்கொண்டு நின்றிருந்தாள், தான் நியாயமெதையும் மீறி நடந்துவிடுபவளில்லை என்பதுபோல்.
 
இராஜலிங்கம் யோசித்தார், நிக்கலஸ்கூட அப்போது குரூமிபோல்தான் சிரித்துக்கொண்டு நின்றிருப்பானா என்று.
 
அவரால் தன் அப்போதைய கேள்விக்கு விடையொன்றை அடைய முடிந்தது.
 
குளித்துவிட்டு கீழே வந்த ஆனந்தி, மறுநாள் பள்ளிசென்று நடந்த சம்பவம்பற்றிய முறைப்பாட்டைச் செய்ய மறுபடி அவரிடம் ஞாபகப்படுத்தினாள்.
 
மௌனமாயிருந்த இராஜலிங்கம் சிறிதுநேரத்தில், “வேண்டாம், இந்த விஷயத்தை அப்பிடியே விட்டிடுவம், ஆனந்தி. இதில களவெண்டு எதுவுமிருக்கிறமாதிரி எனக்குத் தெரியேல்லை” என்றார்.
 
“அப்ப?”
 
“மனம்தான். அது ஒவ்வொரு மனிசருக்கும் ஒவ்வொரு வடிவமாய் இருக்கு. வடிவத்துக்கேற்றதாய் அது சிந்திக்குது. நிக்கலஸின்ர மனம் என்ன வடிவங்கொண்டு இருந்துதோ?”
 
ஆனந்தி சிறிதுநேரம் தந்தையைப் பார்த்தபடியே நின்றுவிட்டு எதுவும் சொல்லாமல் மேலே போனாள்.
 
தான் சொன்னதை அவள் புரிந்துகொள்ளவில்லை என்பது அவருக்குத் தெரிந்தது.
 
அவள் நின்ற இடத்தில் அப்போதும் அவள் விட்டுச்சென்ற அதிருப்தியை அவர் கண்டார்.
 
000 
 

அருட்பெருஞ் சோதி

1 day 14 hours ago
அருட்பெருஞ் சோதி

 

 

அந்த மனித வாழிடம் அமைக்கப்பட்ட கோளிற்கு ஜோதி என்று பெயர் வைத்து நூறு வருடங்கள் ஆகின்றன. இரண்டு சூரியன்களில் ஒன்று மறைந்து மற்றொன்று வடமேற்கே உதித்துக் கொண்டிருக்கிறது. மொத்தம் ஆறு நிலவுகள். எதுவுமே முழு நிலாவாகத் தெரியாது. நிரந்தர பிறைகள். இரு சூரியன்களும் மாறி மாறி  களைப்பின்றி வழங்கும் ஒளி வெள்ளம். இருள் வராதது என்பதால் ஜோதி என்று ஒரு காலத்தில் மனிதன் அறிந்த முதல் புவியை ஒத்த இந்த கோளுக்கு பெயர் வைத்தார்கள். பூமிகா நடுங்கிய இதயத்தோடு ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். அவளது அண்ணன் துபிவிய போர் வீரர்களின் பிடியில் சிக்கி திமிறிக் கொண்டிருந்தான். இதை அவளால் ஏற்க முடியாது.
3.jpg
தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும். ஆதவன் வலியைப் பொறுத்துக் கொண்டு பல்லைக் கடித்தபடி நடப்பதை அவளால் இங்கிருந்தே உணர முடிந்தது. எதிர்த்தாக்குதல் என்ற பேச்சுக்கே இடமில்லை, இந்தக் கோளை வந்து ஆக்கிரமித்த போது. அப்போது பூமிகாவின் அப்பா அம்மா கூட பிறந்திருக்கவில்லை. அருட்பெருஞ்ஜோதி... தனிப்பெருங்கருணை என்பது மட்டுமே இருவரி சட்டம். ஆயுதம், வன்முறை, அடிதடி எதற்குமே இடமிருக்கக்கூடாது; ஜீவகாருண்யமே எல்லாம் என்று இந்தக் கோளில் புவியிலிருந்து கோடானுகோடி மைல்களுக்கு அப்பால் வந்து குடியமர்ந்தவர்கள் செய்த முடிவு. இரு சூரியன்கள் என்பதால் தொடர்ந்து பிரகாசித்த இந்தக் கோளுக்கே அவர்கள் ஜோதி எனப் பெயரிட்டு வணங்கினார்கள்.

ஆயிரம் வருடங்கள் முன் புவியில் வாழ்ந்து ஜீவகாருண்ய கொள்கையை போதித்த இரண்டாம் புத்தரான அடிகளார் புனிதத்தவம் பெற உதவிய அருட்பிரகாசம் இந்த ஜோதி கோள் என பிற்காலத்தில் முழுக்க தனிப்பெருங்கருணைக்காக மனித வாழிடத்தை அமைத்தார்கள். புவியிலிருந்து புனிதப் பயணம் மேற்கொண்டு ஜோதிக்கு வருவதும் இந்த துபிவியர்களின் ஆக்கிரமிப்பால் நின்றுபோய் இரண்டு வருடங்கள் ஆகின்றன. துபிவியர்கள், துபிகோள் வாசிகள். உயிரற்றவர் போலவே இருக்கும் உயிரிகள். கைகளை விட நீண்ட நகங்கள் கொண்ட மூன்று கண் உள்ள கோரப் பிறவி கள். தலைக்கு பதில் முட்டை ஓடு. அதில் மூன்று திக்கிலுமாக பெருத்த விழிகள்.

அந்த உருவங்கள் ஒவ்வொன்றும் ஏழெட்டு அடி உயரம். மனிதர்களை விட நாலைந்து மடங்கு பலம். அதனால் அவர்களால் எந்த எதிர்ப்பும் காட்ட முடியவில்லை. எதிர்ப்பவர்கள் தூக்கி வீசப்பட்டார்கள். எத்தனையோ பேர் இந்தப் போரில் கொல்லப்பட்டார்கள். இது ஓர் ஆக்கிரமிப்புப் போர். ஜோதிக்கோளில் வாழ வேண்டியது யார்? புவியின் மனிதர்களா துபிவியக்கோள் உயிரிகளா? தனிப் பெருங்கருணை என்று கோளில் எந்த பிரபஞ்ச உயிரி வந்தாலும் விடாமல் மின் வெப்பமூட்டிகள் மூலம் சமைத்து  உணவு தரும் பழக்கத்தை குடியமர்ந்த ஜீவகாருண்யர்கள் ஏற்படுத்தி விட்டதால் ஜோதிக்கோள் பற்றிய செய்தி எல்லா இடத்திலும் பரவிவிட்டது.

ஆனால், துபிவிய வான் கப்பல் வந்திறங்கியபோதும் உணவு நாடி அவர்கள் வந்ததாகக் கருதி அப்பாவிகளாக மனிதர்கள் வீழ்ந்தார்கள். அப்பாவும், அம்மாவும் இறந்து விடுவார்கள் என்று பூமிகாவோ ஆதவனோ எண்ணியதே இல்லை. அப்பா, புவி போக்குவரத்தில் புனித யாத்திரை அலுவலக உதவியாளர். அம்மா, மடப்பள்ளி போதகர். வெள்ளை உடுப்பில் கச்சிதமாய் வார்க்கப்பட்ட ஆசிரியை. அம்மா, பூமிகாவின் தாய் மட்டுமல்ல ஆசிரியையும் கூட. அருட்பிரகாசரின் நூல்களையும் ஜீவகாருண்யத்தின் அடிப்படைகளையும் குழந்தைகளான அவர்களுக்குப் போதித்தார்கள். திருவருட்பா ஒரு சட்ட நூல்போல பயன்பெற்றது. மெல்ல துபிவியர்களுக்கு எதிராக ஜோதிக்கோள்வாசிகள் போராட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

பலவிதமாக அவர்கள் போராடிப் பார்த்து விட்டார்கள். மனிதர்களே குறைந்து போகும் அளவுக்கு கொல்லப்பட்டிருக்கிறார்கள். மூன்று துபிவிய பறக்கும் தட்டுகள் களமிறங்கி ஆயிரம் துபிவிய வீரர்கள் கொடூரத் தோற்றத்தோடு வந்திறங்கினார்கள். இன்று அதைவிட கூடுதலாக இருப்பார்களோ என்ற சந்தேகம் எங்கும் நிலவியது. மனிதர்கள் கொத்து கொத்தாக அங்கங்கே பதுங்கு குழிகளில் இருக்கிறார்கள். இரவு பகல் என்று எதுவுமில்லை. ஜோதிக்கோளில் எப்போதும் பகல்தான். பல மைல்கள் கடந்து காணவல்ல ஆற்றலோடு  துபிவியர்களின் விழிகள் பரிணாமம் அடைந்திருந்தால் யாருமே தப்ப முடியாது.

ஆனால், அப்பா போன பிறகு அம்மா பூமிகாவையும் ஆதவனையும் அவர்கள் உருவாக்கிய பதுங்குமிடத்தில் உட்கார வைத்துப் பேசியவற்றை அவள் எப்படி மறப்பாள்? ‘‘நாம் எதிர்த்துப் போராட வேண்டும். உயிர்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்பது அடிப்படை போதனை. அதற்காக எதிரிக்கு அஞ்சி கோழைத்தனமாக ஓடுவது ஜீவகாருண்யமல்ல. நாம் எதிர்த்துப் போராட வேண்டும்...’’பிறகு நீண்டநேரம் அவர் அழுதார். ‘‘உங்கள் அப்பா அதற்கு வழிகாட்டிச் சென்றார்… அவரது போராட்ட உத்திகள் அபாரமானவை…’’ உண்மைதான். தியான வெளிக்கு துபிவிய வீரர்கள் பலரை வரவழைத்து, தான் உருவாக்கிவைத்திருந்த பெரிய குழிகளில் விழவைத்த சூரர் அவர்.

அவைகளில் அப்படி விழுந்தவைகளுக்கு குழியிலிருந்து வெளிவரத் தெரியவில்லை. விரைவில் அவரது உத்தி தோற்க துபிவிய வீரர்களிடம் அவர் சிக்கினார். ஆதவனைப் போலவே அவரையும் அன்று இழுத்துச் சென்றார்கள். அப்படி அழைத்துப் போகிறவர்களை தங்களது பறக்கும் தட்டில் உள்ளே வைத்துக் கொன்று விடுகிறார்கள். ‘‘அதைவிட மேலான போராட்ட உத்தியை நாம் கண்டுபிடிக்க வேண்டும்...’’  என்றார் அம்மா அவர் புவி வரலாறு படித்தவர். பலரோடு சேர்ந்து புவிக்கு செய்தி அனுப்ப பலவாறு முயற்சி செய்தார். மூன்று பயணக்கலன்களில் அவர்கள் வந்து இறங்கியிருந்தார்கள். புவியாண்டு ஆறு ஓடிவிட்டது. அவர்கள் பிடியில் ஜோதிக்கோள் ஏறத்தாழ முழமையாக சிக்கிவிட்டது.

இன்னும் கொஞ்சம் பேர்தான். ஆயிரம் பேர் இருக்கலாம். எஞ்சி இருப்பது சொற்பம்தான். தன்னிகரில்லாத திரு அருட்பா கனவு இப்படி முடிந்துவிடவேண்டுமா? ஆதவனையாவது காப்பாற்றத் துடித்தாள் பூமிகா. இப்போது அவர்கள் அதிகம் தென்படாத தென்திசை பாராயண மதில்களின் ஓரமாக நடந்தாள் அவள். எட்டு திசைக்கும் அருட்பெருஞ்ஜோதி என பாராயணம் செய்தால் எதிரொலி வழங்கும் அதிசயப் பிரதேசம். அங்கே புவியிலிருந்து கொண்டு வரப்பட்ட ஏராளமான பொருட்கள் இருந்தன. கூடவே அம்மாவின் பங்களிப்பு. இனி இதுதான் அம்மா. ‘அம்மா உங்களது திருக்கரங்களால் உருவான இடத்தில் எனக்கு ஏதேனும் பதில் கிடைக்குமா...’ பூமிகாவின் மனம் விம்மியது.

அம்மாவின் வரலாற்று ஆவணக் காட்சியகம். புவி மனிதர்களின் தோற்றம், வளர்ச்சி குறித்த குறிப்பு காட்சிச்சாலை. யாருமே இல்லை. எல்லாமே வெறிச்சோடிப்போயின. பூமிகா குட்டிக் குழந்தையாக ஆறு ஏழு புவியாண்டுகள் முன் பார்த்திருக்கிறாள். திருப்பள்ளிச் சிறார்கள், பெரியவர்கள், பல கோள்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் என எப்போதும் இங்கே கூட்டம் இருக்கும். அம்மாவும் அவரது மாணவர்களும் அந்த அழகான இடத்தில் அறிவு சேவை செய்வார்கள். வந்தவர் யாவருக்கும் விளக்கங்கள். அம்மா இடுப்பில் பூமிகா இருப்பாள். தூளியை அம்மா இடுப்பில் கட்டியிருந்த காலம். படிக்கட்டுகள். அவற்றில் ஏறினால் பாராயண மதில்களின் மேல்மட்டத்திற்கு போகலாம். மெல்ல ஏறினாள்.

மதிலுக்கு மறுபுறம் அந்த உயர்ந்த பீடத்திலிருந்து பார்த்து சட்டென்று மறைந்து கொண்டாள் பூமிகா. அங்கே துபிவிய பறக்கும் தட்டுகள் மூன்றையுமே பார்க்க முடிந்தது. கூழ் போன்ற ஏதோ ஒரு திரவம் பறக்கும் கலன்களின் மேலிருந்து கீழ்நோக்கி ஊற்றுபோல ஓடிக்கொண்டே இருப்பதை இப்போது தெளிவாகக் காண முடிகிறது. கிர் என்று சப்தம். அவற்றில் ஒன்றில் ஆதவன் இப்போது அடைக்கப்பட்டிருக்கிறான். பூமிகா எத்தனை மணிநேரம் எத்தனை நாட்கள் அங்கே இருந்தாளோ, யாருக்குமே அவள் தென்படவில்லை. அவள் அங்குலம் அங்குலமாக விடைதேடி அந்த இடத்தைத் துழாவினாள். மடப்பள்ளியின் வித்தியாசமான மாணவி அவள். எதையும் ஒரு முறை செய்து பார்க்க கூசாதவள்.

அம்மாவோடு பல தடவை இதற்காக சண்டை கூட வந்தது உண்டு. மூங்கிலிலிருந்து புல்லாங்குழல் செய்ய முதலில் கற்றாள். பிறகு வாடிய பயிர்களுக்கு மறுபிறப்பு தர தன்னால், முடியும் என்று கூறி தழைகள், செத்தைகளை, உதிர்ந்த இலைகளை செடி போல உருவம் தந்து காட்சிக்கு வைத்தவள் அவள். எல்லாம் பழங்கதை ஆகிவிட்டது. பலவாறு அங்கே சுற்றித்திரிந்த பூமிகா இந்தச் சூழலிலிருந்து ஜோதிக்கோளைக் காப்பாற்ற புவி மனிதர்களின் வரலாறு ஏதாவது விடை தருமா என்ற ஒற்றைத் தேடலில் ஈடுபட்டாள். பிறகு ஒரு நாள்... பூமிகா தனது தவத்திலிருந்து வெளியே வந்தாள்.

‘அருட்பெருஞ் ஜோதி… அருட்பெருஞ்ஜோதி…’ அவளது சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதானது. மூன்று பறக்கும் கலன்களுக்கும் சற்று அருகே வரை சென்றாள். மெல்ல மெல்ல உதிர்ந்த தழைகள்... செத்தைகள்... காய்ந்த மரத்துண்டுகள்... என குவித்துக்கொண்டே இருந்தாள். ஒன்றை அவர்கள் கவனிக்கவில்லை அல்லது ஒரு குட்டிச் சிறுமி என்ன ஆபத்தை பெரிதாகக் கொண்டுவரப் போகிறாள் என நினைத்திருக்கலாம். ‘அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை’... கலன்கள் மூன்றும் நின்ற வெளியைச் சுற்றிலும் வட்டம் போல அங்கங்கே குப்பை, இலை மேடு அமைத்து விளையாடுவது போல இருந்தது.

துபிவியர் சிலர் அந்த குழந்தை விளையாட்டை வேடிக்கை கூட பார்த்தார்கள். ஆனால், ‘அருட்பெருஞ் ஜோதி... அருட்பெருஞ் ஜோதி...’ என தொடர்ந்து அவள் பாராயணம் செய்வது மட்டும் நிற்கவே இல்லை. உணவு அருந்தினாளா? தண்ணீர் குடித்தாளா? எப்படி அவளால் இப்படி இருக்க முடிந்தது... இனி வரலாறுகள் அது பற்றி எழுதட்டும்...சட்டென்று ஒருநாள் அவள் ‘அருட்பெருஞ் ஜோதி... அருட்பெருஞ்ஜோதி...’ என வெறியோடு மிகச் சத்தமாக, ஏறத்தாழ முழக்கமிட்டபடியே வாடிய இலைக் குவியல் ஒன்றின் முன் அமர்ந்தாள். புவி மனிதர் வளர்ச்சி குறித்த காட்சிச் சாலையிலிருந்து, பூமியிலிருந்து கொண்டுவரப்பட்ட கூழாங்கற்களைக் கையில் வைத்திருந்தாள் பூமிகா.

‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி...’ அவள் கூழாங்கற்களை வேகமாகத் தேய்த்து உரசி தமது புவி முன்னோர்கள் கண்டடைந்த உண்மையான ஜோதியை வரவழைத்தாள். தீப்பொறிகள் செத்தைகளை எரிக்க... புகை கிளம்பி எரிய... ஜோதி வெளிப்பட்டது, அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!... எப்போது சுற்றிலும் ஒவ்வொரு இடத்திலும் குவிந்த சுள்ளிகளைப் பற்றவைத்தாளோ... ‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி’ என்று சத்தமாகக் கூவியபடியே மனிதர்கள் தங்களது பதுங்கு குழிகளில் இருந்து வெளியே வந்து குவிந்தார்கள். துபிவிய பிறவிகள் தீயைப் பார்த்ததே கிடையாது.

அங்கும் இங்கும் ஓடியவற்றில் ஒன்று தைரியமாக ஜோதியைத் தொட்டதும் நீண்ட நகம் தீப்பற்றிட உடலில் சூடுபட்டு எங்கே பார்த்தாலும் ஓடி பொத்தென விழுந்து கருகியது… மற்றவை ஓடிய ஓட்டம்... ‘அருட்பெருஞ்ஜோதி... அருட்பெருஞ்ஜோதி...’ உயிரோடு இருந்த ஆதவனையும் இன்னும் சிலரையும் அவசரமாகத் தூக்கி வீசிவிட்டு அந்த மூன்று கலன்களும் அலறியபடியே விண்ணில் மறைந்தன. ஆதவன் ஓடிவந்து பூமிகாவைக் கட்டிக்கொண்டான். உண்மையான ஜோதி அங்கே வானளாவ எரிந்து மனிதனின் வெற்றியைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.
 

ஆயிஷா இரா.நடராசன்

http://www.kungumam.co.in

ஒரு நிமிட கதை: கண்டிஷன்

2 days 15 hours ago
ஒரு நிமிட கதை: கண்டிஷன்

 

 

condition-oru-nimida-kadhai

 

“மணி! நம்ம வீட்டுல குடியிருக்கிறவங்க அடுத்தவாரம் வீட்டைக் காலி பண்ணிடுவாங்க. வேற ஆள் யாராவது இருந்தா கூட்டிட்டு வாப்பா!” வீட்டு புரோக்கர் மணியின் கடைக்குள் ஏறி வந்த பழனியப்பன் சொன்னார்.

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பழனியப்பனின் வீட்டு மாடி போர்ஷனுக்கு வாடகைக்கு ஆள் கூட்டி வருவது மணிதான். பழனியப்பனின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இதுவரை ஐந்து குடும் பங்களுக்கு மேல் வாடகைக்கு வந்து போய் விட்டார்கள்.

“அதுக்கென்னங்கய்யா… பார்த்துட்டாப் போச்சு. இந்தப் பத்து வருஷத்துல எத்தனை பேரை கூட்டிட்டு வந்திருக் கிறேன். யாராவது எந்தப் பிரச்சனையாவது பண்ணினாங் களா? சரிங்க ஐயா… வாடகை ஏதாச்சும் ஏத்தியிருக்கீங்களா… இல்ல அதே எட்டாயிரம்தானா?” தன் பங்குக்குக் கேட்டான் மணி.

“வாடகை என்ன வாடகை? அது பார்த்துக்கலாம்… ஆனா ஒரு கண்டிஷன்…” பழனியப்பன் சொல்லி முடிக்க வில்லை…

“அதான் தெரியுமேய்யா. வாடகைக்கு வர்றவர் சின்ன வயசா இருக்கணும். பேங்க் அல்லது கவர்மென்ட் வேலையா இருக்கணும். அப்பதான் ரெண்டு வருஷத்துல டிரான்ஸ்பராகி வீட்டைக் காலி பண்ணுவாங்க. குடும்பத்துல நாலு பேருக்கு மேல இருக்கக்கூடாது. முக்கியமா வயசானவங்க யாரும் இருக்கக்கூடாது அதானே? ” - கேட்டான் மணி.

“இல்லே மணி! நான் இத்தனை வருஷமா அப்படி கண்டிஷன் போட்டு எத்தனையோ வயசானவங்களை அவங்க பிள்ளைங்ககிட்டேயிருந்து பிரிச்சுட்டேன். அந்தப் பாவமோ என்னவோ, என் ரெண்டு பிள்ளைகளும் எங்களைத் தனியா விட்டுட்டு வெளிநாட்டுல செட்டிலாகிட்டாங்க.

இப்போ வாடகைக்கு வரப்போற குடும்பத்துல பெரியவங்க இருந்தா எனக்கும் என் மனைவிக்கும் சகலத்துலயும் துணையா இருப்பாங்கன்னு நினைக்கிறேன். அதனால வாடகைக்கு வர்ற குடும்பத்துல வயசானவங்க இருக்கணும். அதான் கண்டிஷன்! வாடகையைக்கூட குறைச்சுக்கலாம்!” சற்று தழு தழுத்த குரலில் சொல்லிவிட்டு இறங்கிச் சென்றார் பழனியப்பன்.

http://www.kamadenu.in

ஒரு நிமிடக் கதை: யானை

3 days 10 hours ago
ஒரு நிமிடக் கதை: யானை

 

 

yanai-oru-nimida-kadhai

 

மன்னரின் கை நாடியைப் பிடித்துப் பார்த்த அரண்மனை வைத்தியர் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை அமைச்சர் நல்லசிவம் உணர்ந்தார்.

“வைத்தியரே... மன்னர்..”

உதட்டைப் பிதுக்கினார் வைத்தியர்.. தலையை இருபக்கமும் அசைத்தார்.

“துடிப்பு குறைகிறது.. தாங்காது.”

திரைக்கு அப்பால் அறையின் வெளியே தளபதி, ராஜகுரு, பிரதானி கள், பிரபுக்கள், நிலக்கிழார்கள், ஜமீன்தார்கள்.

“சரி விஷயம் நம்முடன் இருக்கட்டும்.. வெளியே கசிய வேண்டாம்.”

திரைக்கு வெளியே வந்த அமைச்சர்.. “மன்னர் நலமாக இருக்கிறார்.. கவலை வேண்டாம்..ஆனால் ஒரு வாரத்துக்குள் புதிய மன்னரைத் தேர்ந்தெடுத்து விடுவது நல்லது” என்றார்.

“நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்... திருமணம் செய்து கொள்ளாது அல்லும் பகலும் உழைத்தவர்.. வாரிசு என வும் யாரும் இல்லை.. இப்போது என்ன செய்யலாம்?” என்றார் தளபதி.

அமைச்சர், “வழக்கம் போல யானை தும்பிக்கையில் மாலை கொடுக்க வேண்டியதுதான்..இவரும் அப்படி மன்னர் ஆனவர் தானே” என்றார்.

யானைப் பாகன் வரவழைக்கப்பட்டான்.

நிறைந்த பவுர்ணமியன்று மாலையை யானையிடம் தந்தனர்.

முரசு அடித்து அறிவித்தபடி கூட்டத்தில் நின்ற ஒரு இளைஞனின் கழுத்தில் யானை மாலையைப் போட, மக்களின் வாழ்த்து கோஷத் துடன் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டான் புதிய மன்னன்.

இரவு இருட்டியதும், அமைச்சர் மாளிகையில், “சரி போய் வா.. இந்தா பத்தாயிரம் காசுகள். நான் சொன்ன ஆளை சரியாக அடையாளம் வைத்து மாலை போட யானையைப் பழக்கியதற்கு உனக்குப் பரிசு” என்று கூறி பொற்கிழியை வழங்கினார் அமைச்சர். அவரை வணங்கி விடைபெற்றான் பாகன்.

http://www.kamadenu.in

சிறுகதை - ரவிதாஸா இன்னும் என்ன யோசனை!

4 days 3 hours ago
அன்று அமாவாசையின் மூன்றாம் நாள், தஞ்சைக் கோட்டையைச் சுற்றி எங்கும் காரிருள் சூழ்ந்திருந்தது. நடுசாமம் ஆனதால் காவலர்களின் ஓசை மெல்ல மெல்லக் குறைந்து, அனைத்து ஜீவராசிகளும் நித்திரா தேவியின் நிழலில் உறங்கிக் கொண்டிருந்தன அந்த நான்கு கண்களைத் தவிர. இன்று நிகழப் போகும் கொடூரத்தைக் காண விரும்பாத நிலவும் வெறுப்பினூடே மறைந்து நின்றது. 
tumblr_inline_n331m08EXv1rkje59.jpg
 
அப்போது கோட்டைக்கு மிக அருகில் மரங்களடர்ந்தப் பகுதியிலிருந்து ஆந்தையின் ஓசை கேட்டது.  மரப்புதர்களில் ஒளிந்து கொண்டிருந்த ரவிதாஸனின் காதில் அதில் இன்பகானமாக ஒலித்தது. அனைத்தும் ஒன்று கூடி வருவதாக எண்ணிக்கொண்டான்.
 
இந்தச் சுரங்கப் பாதையைக் கண்டறிந்த தன் நுண்ணறிவை நினைத்துச் சிலாகித்துக் கொண்டான். இதுவரை மன்னர் மற்றும் முதன்மந்திரியான அநிருத்தப் பிரம்மராயரைத் தவிர வேறு யாரும் அறிந்திராத இந்நிலவறை ரகசியத்தை அறிந்து கொண்ட அவன் முகத்தில் கர்வம் நிறைந்திருந்தது. விகாரமான அவன் புருவங்கள் மேலெழுந்து, கண்கள் இன்னும் பெரிதாகி பழிதீர்க்கும் படலம் அவன் மனக்கண் முன் தோன்றியது. 
 
அவனது இக்கர்வத்திற்கான காரணமும் இருந்தது, சோழ மன்னனின் பாதுகாப்பு அரணாக விளங்கும் பெரிய பழுவேட்டரையரும் அறிந்திராத அதிசயம்தான் கோட்டைக்குள் செல்லும் இச்சுரங்கப் பாதை.
 
கையிலிருந்த பந்தத்தில் நெருப்பை மூட்டி தாழ்வார வழியிலிருந்தப் படிக்கட்டுகளில் ஓசைபடாமல் இறங்கினான். படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட விதத்தை எண்ணி வியப்படைந்து, ``என்னதான் சோழர்கள் நமக்கு எதிரிகளாக இருந்தாலும், கட்டிடக்கலையில் அவர்களுக்கிருந்த அறிவைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்’’ என்றெண்ணி சிறிது வாய்விட்டுக் கூறினான்.
 
பந்தத்திலிருந்து வரும் வெளிச்சம் அங்கு மூலையில் குவிக்கப்பட்டிருந்த பிராணிகள், விலங்குகளின் எலும்புக்கூட்டில் விழுந்ததில் கொடூரனான ரவிதாஸனக்குள்ளும் சிறிது கிளியை ஏற்படுத்தியது. தொடர்ந்து செல்லச் செல்ல வளைவில் நடைபாதை குறுகி, சுவரின் ஓரத்தில் செங்குத்தானப் படிகள் இருப்பதைக் கண்டான். நிலவறைக் கதவுகளுக்கருகில் வந்துவிட்டதை எண்ணி பெருமூச்சுவிட்டான்.
 
இடது கையில் பந்தத்தைப் பிடித்துக் கொண்டு, சுவரிலிருந்த அந்த வாள் போன்றத் திருகைக் கீழ்ப்புறமாக அழுத்தி வெளிப்புறமாக இழுத்தான். மெல்ல மெல்ல நிலவறையின் கதவுகள் திறக்கும் சப்தம் கேட்டது, பந்தத்திலிருந்த நெருப்பை அணைக்கும் போது கதவிற்க்கருகில் ஒரு உருவம் நின்றிருப்பதைக் கண்டதில் அவன் மூச்சு முழுவதும் நின்றுவிடுவது போலிருந்தது.
 
வெளியிலிருந்த சோமன் சாம்பவனின் குரல் கேட்ட பின்னர் தான் மூச்சு சீராகி இந்த உலகத்திற்கு வந்தான். உள்ளிருந்த பயத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல், ``நீ இங்கு வந்து எவ்வளவு நேரமாகிறது?’’ என்று வினவினான்.
 
``நான் இங்கு வந்து வெகு நேரமாகிறது, நீ வர ஏன் இவ்வளவு கால தாமதமானது’’ என்று சோமன் சாம்பவன் கோபத்தில் கேட்டான்.
 
``நீ நினைப்பது போல் இங்கு வருவதென்பது எளிய காரியமா? நம் திட்டப்படி ஆந்தையின் குரல் கேட்ட பின்னர் தான் நான் வருவேனென்பது உனக்குத் தெரியாதா? இதுபோன்ற இராஜ்ஜிய சதிகாரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். சரி நம் சம்பாசனையை இன்னொரு நாளில் வைத்துக் கொள்ளலாம், இப்போது அந்தப் புலியிருக்கும் குகைக்குச் செல்லும் வழியைக் காட்டு’’ என்று கூறி அவனைத் தொடர்ந்தான்.
 
``ரவிதாஸா இதுதான் அருள்மொழிவர்மரின் சயன அறை. தாதிப் பெண்ணின் உதவியுடன் இரவு உணவில் தேவையான அளவு மயக்க மருந்தைக் கலந்து இருக்கிறேன். அவர் கண் விழிக்கக் குறைந்தது இன்னும் இரண்டு நாழிகைகளாகும்'' என்றான்.
 
``நல்லது, இவனிருக்கும் நிலையைப் பார்க்கும்போது, நீயளித்த மயக்கத்துளிகள் நன்று வேலை செய்திருப்பதாகத் தோன்றுகிறது`` என்ற ரவிதாஸனின் விழிகளில் ஏளனப் பார்வை இருந்தது.
 
ரவிதாஸன் உறையிலிருந்த விஷக்கத்தியை தடவிப் பார்த்து நிம்மதியடைந்தான். நம்முடைய கடும்உழைப்பு வீண்போகவில்லை; நாம் அளித்த நரபலிகளை அந்த  மகாகாளி ஏற்றுக்கொண்டுவிட்டாள், இல்லாவிட்டால் தஞ்சையின் பொக்கிஷத்தை அழிக்கும் வாய்ப்பு இவ்வளவு எளிதில் கிட்டுமா? எல்லாம் காளியின் செயல். சோழ சாம்ராஜ்ஜியம் பாண்டிய நாட்டிற்கு இழைத்த அநீதிகளுக்கெதிராக பழிதீர்க்கும் நாள் வந்துவிட்டது. இன்று சோழ நாடு இருக்கும் நிலையில், அரச குடும்பத்தில் இரண்டாவது  கொலை நிகழ்ந்தால் நாட்டில் புரட்சியும், குழப்பமும் இன்னும் அதிகமாகும். சிதறிக்கிடக்கும் நமது ஆபத்துதவிகளை ஒன்று திரட்டி, கோட்டைக்குள் வரவழைத்து அரச குடும்பத்தவர்களை ஒவ்வொருவராக பழி தீர்த்துக் கொள்ள இதுவே நல்ல சந்தர்ப்பம்.
 
அவன் கண் முன்னே வீரபாண்டியரின் கழுத்தும் முண்டமும் தனித்தனியே எழுந்து நின்றது; வீரபாண்டியனின் உதட்டிலிருந்து ஓசை வரவில்லை மாறாக குருதி படர்ந்த அக்கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிவது போல் தோன்றிற்று.
 
இன்றுடன் நாம்பட்ட துயரமெல்லாம் முடிந்து விடும், சோழ நாடு அழியும் நேரம் வந்துவிட்டது.  தஞ்சைக் கோட்டையில் மீன்கொடி ஏறும் நாள் வெகுதொலைவில் இல்லை. சோழ நாடே `பொன்னியின் செல்வன்` என்று போற்றும் அருள்மொழிவர்மன் என் கண் முன்னே கிடக்கிறான். புலியின் குகைக்குள்ளேப் புகுந்து புலியை அழிப்பதுதான் வீரம். இந்நாள் பாண்டிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டிய நாள் என்று மனதில் எண்ணிக் கொண்டு அருள்மொழிவர்மன் முன் நின்றான்.
 
தூரத்திலிருந்த தீபத்தின் ஒளி உறங்கிக் கொண்டிருக்கும் அருள்மொழிவர்மனின் திவ்விய முகத்தில் விழுந்தது. எதிரியின் முகத்தைப் பார்த்தான், அவன் கண்கள் கூசுவது போன்று இருந்தது. மீண்டும் உற்று நோக்கும்போது சாந்தமான குழந்தையின் முகத்தைப் பார்ப்பதுபோல தோன்றியது; நெஞ்சத்துனுள் இருந்த குரூரமும், வஞ்சமும் வெளிவராமல் அந்த வசீகர முகத்தில் ஒளிரும் பெரும் தீட்சை உணர்ந்தான். ரவிதாஸன் மெல்ல மெல்ல தன் சுயநினைவை இழப்பதுபோன்று பிரமையடைந்தான்.
 
அருகிலிருந்த சோமன் சாம்பவன் உரக்கக் குரலில், ``ரவிதாஸா இன்னும் என்ன யோசனை? உறையிலிருக்கும் விஷக்கத்தியை அவன் மார்பில் பாய்ச்சிக் கொன்றுவிடு! யோசிக்க நேரமில்லை, அரண்மனை வேலையாட்கள் விழிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. வந்த வேலையை சீக்கிரம் முடி, அவர்கள் கண்ணில் நாம்பட்டால் நிச்சயம் திரும்பிப் போக முடியாது, அத்துடன் நம் ஆயுள் முடிந்துவிடும்'' என்று பயத்துடன் கூறினான்.
 
சிலை போல நின்றுகொண்டிருந்த ரவிதாஸனின் காதுகளுக்கு அவன் சொன்ன எதுவும் எட்டவில்லை, திக்பிரமை பிடித்தது போல கல்லாக நின்றான்.
 
சோமன் சாம்பவனுக்குக் கோபம் தலைக்கேறியது, ``ரவிதாஸா நீ உயிருடன் தான் இருக்கிறாயா அல்லது உனக்கு சித்த பிரமைப் பிடித்துவிட்டதா?'' என்று உரக்கக் கத்தினான். 
 
சற்றே உரக்கக் கத்தியதில் ரவிதாஸன் தன் சியநினைவை அடைந்தான். தொலைவில் காவலாளிகள் நடந்துவரும் சத்தம் கேட்டது.
 
மீண்டும் சோமன் சாம்பவன், ``ரவிதாஸா உனக்கு ஞாபகம் இருக்கிறதா, அன்று நள்ளிரவில் கொடும்பாளூர் கோட்டையில் ஆதித்தகரிகாலனைப் பழிதீர்த்தது. அதன்பின் சுந்தர சோழனின் உடல்நிலை இன்னும் மோசமானது. இன்று நிகழப்போகும் இந்தக் கொடூரக் கொலையைக் கேள்விப்பட்டாலே அக்கிழவனின் உயிர் போய்விடுமென்று எனக்குத் தோன்றுகிறது. இன்னும் ஏன் தாமதம்? இன்று பாண்டிய நாட்டிற்கு நீ செய்யும் இப்பேருதவி, காலம் அழியும்வரை நிச்சயம் இருக்கும்''.
 
''அந்தப் பெண்புலியான குந்தவையின் கொட்டத்தை அடக்க வேண்டாமா? அளித்த மயக்கத்துளிகள் செயலிழக்கும் முன் நெஞ்சிலிருக்கும் குரோதத்தைக் கொட்டி அவனைக் கொன்றுவிடு. நம்மையே நம்பியிருக்கும் நந்தினிதேவிக்கும் வருங்கால இளவரசருக்கும் இதுவே நாம் செய்யும் நன்றிக்கடன். நம் அரசர் வீரபாண்டியரின் கழுத்தைக் கொய்து, தஞ்சைக் கோட்டையின் மதிலில் ஏற்றிய சோழர்களைப் பழிவாங்க வேண்டாமா? இன்னமும் தாமதிக்காதே, காவலர்கள் வரும் முன் விரைந்து செய்!''  என்று இரைந்தான்.

ரவிதாஸனுக்குள்ளிருந்த வெறி மிகுதியடைந்து, அவன் கண்கள் தீப்பிழம்பாகின. பாண்டிய நாட்டு மக்களின் குரல்கள் ஒன்றாகச் சேர்ந்து பேரிரைச்சலாக அவன் காதுகளுக்குக் கேட்டது. உறையிலிருந்த விஷக்கத்தியை கைகளில் ஏந்தி அருள்மொழிவர்மனின் மார்பை நோக்கி இறக்கினான்.
 
``என்னங்க, எத்தனை தடவ கத்தறது? தனவ் ஸ்கூலுக்குப் போகணும் டைம் ஆகுது. இன்னைக்கு பேரண்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங் இருக்கு, சீக்கிரமா வந்து இந்தக் காபியைக் குடிச்சிட்டு, குளிச்சிட்டு வாங்க. நான் அவனை ரெடி பண்றேன்''.
 
``ச்சே லீவு  நாள் அதுமா உன் தொல்லை தாங்க முடியல! கரெக்டா அருள்மொழிவர்மனை கத்தியால குத்தவரும் போது  டிஸ்டர்ப் பண்ணிட்ட. கனவுல என்ன நடந்துச்சுன்னு தெரியலையே?''.
 
''நான் இருக்கும் போது வேற யாரு உங்கள கத்தில குத்தவர்றாங்க! நீங்க தான் அருள்மொழிவர்மன்னு புனைப்பேர் வைச்சிட்டு இருந்தீங்க. இந்த வெட்டிப் பேச்ச கொஞ்சம் நிறுத்திட்டு, காபி ஆர்ரதுக்குள்ள பிரஷ் பண்ணிட்டு வாங்க, நான் இட்லி எடுத்து வைக்கறேன். தனவ் நீயும் உங்கப்பா மாதிரி கனவு காண்கறத நிறுத்திட்டு, டேபிள் மேல இருக்கற மில்க் எடுத்துக் குடி''.
 
ஹூம் கண்டிப்பா ராஜராஜ சோழன் தப்பிச்சிருப்பாரு.
 
லீவு நாள் வந்தாலே காலைல கனவுதான்!!!!
 
 
அன்புடன்,
அருள்மொழிவர்மன்

தளை

4 days 11 hours ago
தளை   k3

 

"காதே காந்தா- தனகத சிந்தா
வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா!
த்ரிஜகதி ஸஜ்ஜன-ஸங்கதி-ரேகா
பவதி பவார்ணவ- தரணே நெüகா'

அந்த விடியற்காலை ஐந்து மணிக்கு பக்கத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலிலிருந்து ஒலிபெருக்கியில் ஆதிசங்கரரின் பஜகோவிந்த ஸ்லோகம் ராகத்துடன் ஒலித்து, கோமளவல்லியை தூக்கத்தில் இருந்து எழுப்பியது.
ஒலி சன்னமாக இருந்தாலும் கோமளவல்லியின் செவிகள் வழியாக பயணித்து, நாளங்களை உசுப்பி, அவளை முழு விழிப்பு நிலைக்கு கொண்டு வந்தது.
ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்தில் கோமளவல்லியின் கணவர் வேதமூர்த்திக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அவரும் தூக்கத்தினின்று விழித்து கேட்கிறாரா என்பதை அறிய சற்று தள்ளி தனியாக அவர் படுக்கும் கட்டிலைப் பார்த்தாள்.
அவளுக்கு "துணுக்'கென்றது.
கட்டிலில் அவர் இல்லை.
சற்று சுதாரித்துக் கொண்ட பின்புதான் அவளுக்கு நினைவுக்கு வந்தது.
முன்தினம் அவர் புறப்பட்டு தாம்பரம் முடிச்சூர் மெயின் ரோட்டில் உள்ள அவர்களது பெண் வீட்டிற்கு அவர் சென்றது நினைவுக்கு வந்தது.
முன்தினம் மாலை நான்கு மணி இருக்கும். பெண் அகிலா போன் செய்தாள்.
கோமளவல்லிதான் போனை எடுத்து அவளுடன் பேசினாள். 
"அம்மா... உங்க மாப்பிள்ளை இன்னைக்கு கார்த்தால கிளம்பி ஆபீஸ் போயிட்டு அங்கேந்து டைரக்டா பாம்பேக்கு கிளம்பி போறார். அவரோட கூட இன்னும் ரெண்டு பேர் போறாங்க. ஏதோ டிரெய்னிங்னு சொன்னார். திரும்பி வர நாலு நாள் ஆகுமாம். நானும் உன் பேத்தியும் தனியா இருப்போம். நான் சாயங்காலம் ஆறு மணி சுமாருக்கு கார் அனுப்பறேன். நீயும் அப்பாவும் வந்துடுங்கோ. எங்களுக்கு துணையா இருக்கும். உங்களுக்கும் ஒரு மாறுதலா இருக்கும்'' என்றாள் அகிலா.
"அகிலா, என்னால வர முடியும்னு நெனைக்கலை. நான் பெருமாளுக்கு வேண்டிண்டு ஒன்பது நாள்ல பாராயணம் முடிக்கறா மாதிரி "சுந்தரகாண்டம்' பாராயணம் ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் நாலுநாள் பாக்கியிருக்கு'' என்றாள் கோமளவல்லி.
"அதனாலென்னம்மா? இங்கே பெருமாள் சந்நிதியிலே ராமர் பட்டாபிஷேகம் படம் இருக்கு. இங்கேயே மீதி நாள் பாராயணத்தை நீ முடிச்சிக்கலாம்'' என்றாள் அகிலா.
"இல்ல அகிலா. இங்கேயே பாராயணத்தை முடிச்சாதான் எனக்கு திருப்தியா இருக்கும். இங்க இருக்கற ரவிவர்மா வரைஞ்ச பட்டாபிஷேகம் படத்துல இருக்கற சீதையைப் பார்க்கறப்போ எனக்கு நேர்ல சீதையைப் பார்க்கறா மாதிரியே இருக்கும். நான் இப்ப வரலை. அப்பாவோட பேசிட்டு போன் பண்றேன். அவரை அனுப்பறேன்'' என்றாள் கோமளவல்லி.
கோமளவல்லி விஷயத்தைச் சொன்னதும் வேதமூர்த்தி எகிறினார்.
""கோமளா. நீ சொல்றது சரியேயில்லை. அகிலா இது மாதிரி சந்தர்ப்பம்னு சொல்லி கூப்பிடறச்சே, நாம ரெண்டு பேரும் போகத்தான் வேணும்'' என்றார்.
"இதோ பாருங்கோ... நான் அவகிட்டே என்னைப் பத்தி சொல்லிட்டேன். அவளும் சரின்னுட்டா. உங்களால முடியலேன்னா நீங்களும் போக வேண்டாம். அவ பாத்துப்பா. ஏன் கோபப்படறேள்?'' என்றாள் கோமளவல்லி.
"நீ சொன்னாலும், சொல்லாட்டாலும் நான் போகத்தான் போறேன்'' என்றார்.
அகிலா கார் அனுப்ப தனியாக கிளம்பிப் போனார்.

அன்று மாலை அவர் போனதும் அன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஆதி கேசவ பெருமாள் கோயிலுக்கு கோமளவல்லி போனாள்.
""மாமி... தனியா வந்துருக்கேள்... மாமா ஏன் வரலை'' என்று கோயில் பட்டாச்சாரி கேட்டார்.
""பெண் வீட்டுக்கு போயிருக்கார். வர நாலு நாள் ஆகும்'' என்றாள்.
"உங்களை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டாரே...?'' என்றார் பட்டாச்சாரி.
சிரித்தபடி கோமளவல்லி பேசாமலிருந்துவிட்டாள்.
வீட்டிற்கு வந்து சுந்தரகாண்டம் பாராயணம் செய்து, வேலைகளை முடித்து, இரண்டு தோசைகளை மட்டும் வார்த்து சாப்பிட்டு ஊஞ்சலில் உட்கார்ந்தாள்.
தந்தை வந்து சேர்ந்து விட்டதை அகிலா போனில் சொன்னாள். வேதமூர்த்தி போன் பேசவில்லை.

 

இரவு படுக்கப் போனபோதுதான் கோமளவல்லிக்கு வேதமூர்த்தி இல்லாதது நெருட ஆரம்பித்தது. அவரும் அவளும் தனித்தனியாக கட்டில்களில் தூங்குவார்கள். ஒரே அறையில்தான். அவர் விளக்கை போட்டுக்கொண்டு இரவு பத்தரை மணி வரை அன்றைய தின பேப்பரில் காலையில் படிக்காமல் விட்டவற்றை வரிவரியாகப் படிப்பார். விளக்கு எரிவதால் அவளுக்குத் தூக்கம் வராது. அதனால் கோமளவல்லி படுக்கும் வரை ஹாலில் ஊஞ்சலில் படுத்து தூங்கிவிட்டு பிறகு உள்ளே வருவாள். அன்று அவர் இல்லாது அவரது கட்டில் காலியாக இருந்தது நெருடியது.
தூங்கிப் போனாள்.
ஆனால் மறுநாள் பஜகோவிந்தம் பாடலை கோயில் ஒலிபெருக்கியில் கேட்டு விழிப்பு வந்த பின்புதான் வேதமூர்த்தி வீட்டில் இல்லாத வெறுமை கோமளவல்லியை அணு அணுவாக பாதிக்கத் தொடங்கியது.
விழிப்பு வந்த பின்பும் எழுந்திருக்காமல் தன் கட்டிலில் புரண்டபடி அவரைப் பற்றிய சிந்தனைகள் மேளதாளத்துடன் அவளுள் வலம் வந்தன.
""கோமளா, எனக்கு பஜகோவிந்தம் ஸ்லோகத்துல தனி ஈடுபாடு உண்டு. அதுவும் கவிஞர் கண்ணதாசன் "ஞான ரகசியம்'ங்ற பேர்ல பஜகோவிந்தத்துக்கு உரையும், கவிதையையும் படிச்சப்புறம் பிரீத்தி இன்னும் ஜாஸ்தி ஆயிடுத்து. பஜகோவிந்தமும், விவேக சூடாமணியும் ஆதிசங்கரர் நமக்கு அளித்துள்ள இரண்டு பொக்கிஷங்கள். வேதத்துல பல இடங்கள்ல "தத் த்வம் அஸி' அப்படின்னு வந்துண்டே இருக்கு. அப்படி இருக்கச்சே "நீயேதான் பிரம்மம்' என்று ஆயிடறப்போ "த்வைதம்' எங்கேந்து வரும்னு அவர் லாஜிக்கா ஆர்க்யூ பண்ணினத்துக்கு இன்னிக்கி வரை சரியான பதில் வரலை'' என்பார். முழுவதும் புரியாவிட்டாலும் அவள் கேட்டுக் கொள்வாள்.
அவளைத் தனியே விட்டு அவர் இதுமாதிரி போனதே இல்லை. திருமணமான புதிதில் ஒருமுறை நான்கு நாட்கள் பிரிந்து இருந்துள்ளனர். அகிலா பிறந்த சமயத்தில் கூட அவர் அவளைப் பார்க்காமல் ஒருநாள் கூட இருந்ததில்லை.
வேதமூர்த்திக்கு திடமான உடல்வாகு. திருப்தியாக சாப்பிடுவார். முற்பகல் டிபனுக்கு காஞ்சிபுரம் இட்லி என்றால் மிகவும் பிடித்தமாக சாப்பிடுவார். ஐந்துக்கும் குறைவின்றிச் சாப்பிடுவார். அதனுடன் மிளகாய்பொடி, நல்லெண்ணெய், நெய், தேங்காய் சட்னி இருக்க வேண்டும். பிற்பகல் டிபனும் சாப்பிட்டு விட்டு இரவும் ஸ்கொயராக சாப்பிடுவார். ரசம் சாதம், தயிர்சாதம் கூட ஏதாவது கறிகாய் இருக்க வேண்டும்.
டிபனுக்கு பூரி செய்தால் "தள தள'வென்று உருளைக்கிழங்கு "சப்ஜி' செய்தாக வேண்டும். அதுவே சப்பாத்தி என்றால் "குருமா' கூட வேண்டும்.
உணவில் மட்டுமின்றி எல்லா விஷயங்களிலும் அவருக்கு சிறப்பான தனி ரசனை உண்டு. அதில் கவனிப்பும் விஷய ஞானமும் கூடி நிற்கும்.
கோமளவல்லியை விட அவருக்கு ஒன்பது வயது கூட. சென்ற வருடம் அவளுக்கு அறுபது வயது பூர்த்தியானபோது, அதை அவர் கொண்டாடியதை அவளால் ஒருநாள் கூட நினைக்காமல் இருக்க முடியாது.
""கோமளா... மத்தவங்க என்ன சொல்வாங்கங்கிறதைப் பத்தி எனக்கு கவலை கிடையாது. உன்னோட அறுபது வயது நிறைவை நான் கொண்டாடப் போறேன்'' என்று சொன்னவர், ஐந்து பவுன்ல தங்கச் சரடு வாங்கி வடபழனி முருகன் சந்நிதியில் அவளுக்கு அணிவித்து, முருகனுக்கு அபிஷேகம் செய்தார்.
அன்று ஓர் அநாதை ஆஸ்ரம சிறுவர்களுக்கு உணவளிக்க பத்தாயிரம் ரூபாய் நன்கொடை அளித்து அந்த குழந்தைகளுடன் அவரும் அவளும் சேர்ந்து உணவருந்தவும் ஏற்பாடு செய்தார்.
கோமளவல்லி மகிழ்ந்து போனாள்.
எல்லா விஷயங்களிலும் தனக்கென தனியான அபிப்ராயம் சொல்வார். வாதம் செய்யாமல் எதையும் ஒப்புக் கொள்ள மாட்டார். ஆனால் மற்றவர்கள் வாதத்தையும் உன்னிப்பாகக் கேட்டுக் கொள்வார். அது சரியென்றால் தயங்காமல் ஒப்புக் கொள்வார்.
கர்நாடக சங்கீதத்தில் அபரிமிதமான ரசிப்பு அவருக்கு. சாஸ்தீரிய சங்கீத ஞானமும் உண்டு. 
""கோமளா, நீ பாடறச்சே எனக்கு லோகமே மறந்து போயிடறது. ஆபோகியும், ஆபேரியும் கரகரப்பிரியாவோட ஜன்யங்கள்தான். நீ அவைகள்ல பாட்டு பாடறச்சே அதோட தனித்தனியான ஸ்வரூபங்களைக் கொண்டுவந்து பாடறது எவ்வளவு அபூர்வமா இருக்கு தெரியுமா? நீ சங்கீதத்துல எவ்வளவோ உயர்வு நிலைக்கு போக வேண்டியவ. என்கிட்டே வந்து மாட்டிண்டு எனக்கு மட்டும் பாடும்படி ஆயிடுத்து!'' என்றார்.
சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போவாள்.
"ஏன், நான் பெருமாள் சந்நிதியிலே உட்கார்ந்து பாடறச்சே அவருக்கு போய் சேர்ந்துடறது. எனக்கு அது போதும்!'' என்பாள்.
ஒருநாள் சங்கீதம் சம்பந்தமாக அவளை ஒரு கேள்வி கேட்டது கோமளவல்லியின் நினைவுக்கு வந்தது.
""கோமளா, எனக்குள்ளே ஓர் அபிப்பிராயம் இருக்கு. அது சரிதானான்னு நீ "கன்ஃபர்ம்' பண்ணனும். கேட்கட்டுமா?'' என்றார் வேதமூர்த்தி.
"இதிலென்ன யோசனை? கேளுங்கோ!'' என்றாள்.
""நீலாம்பரி, பிலஹரி ரெண்டுமே சங்கராபரண ராகத்தின் ஜன்யங்கள்தான். ஆனா பிலஹரிலே "தொரகுனா'வை நீ பாடி கேட்கறப்போ எனக்குள் ஏற்படுகிற சந்தோஷமும் மனதிருப்தியும் ஆதிசங்கரர் சொல்ற "பிரம்ம ஆனந்தமாவே' தோணறது. ஏனோ "நீலாம்பரிலே' அது எனக்கு கெடைச்சதே இல்லை. உன்னோட அபிப்ராயம் சொல்லேன்'' என்று கேட்டார்.
"அதெல்லாம் அவரவர் மனோ ரசனையைப் பொருத்தது. இதுக்கு நான் பதில் சொல்லலை'' என்று ஒரு புன்முறுவலுடன் அவள் ஒதுங்கிக் கொண்டது அவளது நினைவுக்கு வந்தது.
பொதுவாக "ஆர்க்யுமெண்ட்' என்று வந்துவிட்டால் அவர் அடங்கவே மாட்டார். "டென்ஷன்' ஆகிவிடுவார். "பிளட் பிரஷர்' அந்த சமயங்களில் ஏகமாக கூடிவிடும் என்பதால் அவள் எதுவும் பேசாமல் அடங்கி விடுவாள். ஆனால், பிறகு தானாக அவர் அவளிடம், தவறாக இருந்தால், தன் கருத்து தவறுதான் என்று ஒப்புக்கொள்வார்.
படுக்கையில் புரண்டபடி இவ்வாறு கணவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த கோமளவல்லி காலை ஆறு மணி ஆனதை கடிகாரத்தில் கண்டதும்தான் திடுக்கிட்டு எழுந்தாள்.
"அதென்ன, இன்று என் மனசு அலைபாய்கிறது? பெண்ணுக்கு உதவ வேண்டும் என்பதற்காகத்தானே நாலு நாளைக்கு போயிருக்கிறார். இந்தப் பிரிவுக்காக மனசு ஏன் கிலேசப்பட வேண்டும்?' என்கிற எண்ணம் உள்ளத்தில் ஓடினாலும், உள்ளுக்குள் நிதானமின்மையும் ஒருவித படப்படப்பும் இருந்து கொண்டே இருந்தது அவளுக்குப் புரிந்தது.

காபி போடும்போது அவளுக்கு மறுபடியும் கணவரின் நினைவு!
கலந்த காப்பியை சுட வைத்து கொடுத்தால் முதல் முழுங்கிலேயே கண்டுபிடித்து விடுவார். பயங்கர கோபம் வரும். டிகாஷனையும், பாலையும் தனித்தனியாக சுட வைத்து "ஸ்ட்ராங்காக' கலந்து சர்க்கரை கம்மியாக அவருக்குக் கொடுக்க வேண்டும்.
அகிலாவிடமிருந்து அங்கு வரச்சொல்லி போன் வருவதற்கு முன்பு அவர் சொன்ன ஒரு விஷயம் அவளது நினைவுக்கு வந்தது.
""கோமளா, நாம்ப ரெண்டு பேரும் வெளியூர் போய் ரொம்ப நாளாகறது. ஒரு கார் எடுத்துண்டு சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி போய் ஈஸ்வரனையும், அம்பாளையும் தரிசனம் பண்ணிட்டு வரலாமா?'' என்று கேட்டார்.
"ஓ... போகலாமே... அப்படியே போகிற வழிலே திருவிடந்தை போய் நித்ய கல்யாண பெருமாளையும், கோமளவல்லி தாயாரையும் தரிசனம் பண்ணி மாலை சாத்திட்டு போகலாம். என்னோட அப்பாவுக்கும், அம்மாவுக்கும் அங்கே போய் வேண்டிண்டுதான் கல்யாணம் நடந்ததாம். அதனாலதான் கோமளவல்லின்னு அந்த ஊர் தாயார் பெயரை வெச்சாளாம்'' என்றாள்.
""நானும் போனதில்லை. போகலாம்'' என்றார்.
நினைவுகளினின்று மீண்டு வேலைகளை கவனிக்கத் தொடங்கினாள்.
இதே மாதிரி நாலு நாள் தன்னால் தனியாக தள்ள முடியாது என்று தோன்றியது.
மாலையில் படிக்கும் சுந்தரகாண்டத்தை காலையிலேயே பாராயணம் செய்தாள்.
தளிகை எதுவும் செய்யாமல் இரண்டு தோசை வார்த்து சாப்பிட்டாள்.
பெருமாள் சந்நிதியில் இருந்த ரவிவர்மா வரைந்த ராமர் பட்டாபிஷேக படத்தை எடுத்து கண்ணாடி மற்றும் ஃப்ரேமை ஈரத்துணியால் துடைத்து சுத்தம் செய்து ஒரு ந்யூஸ் பேப்பரில் சுற்றி ரப்பர் பேண்ட் போட்டு தயார் செய்தாள். சுந்தர காண்டம் புத்தகத்தையும் எடுத்துக் கொண்டாள்.
தானும் பெண் அகிலாவின் வீட்டிற்கு போய் தங்கி விடுவதுதான் அவள் முடிவு.
பெண்ணை கார் அனுப்பச் சொல்லாமல் அவர்கள் வழக்கமாக செல்லும் ஆட்டோகாரருக்கு போன் செய்து அரை மணியில் வரச் சொன்னாள்.
சொல்லாமல் திடீரென்று போய் பெண்ணையும் கணவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டும் என்பது அவளது திட்டம்.
அவள் கட்டுவது ஒன்பது கஜம் மடிசார் புடவைதான். கணவருக்குப் பிடித்த கிளிபச்சை நிற உடம்பும், சிவப்பு நிற பார்டர் மற்றும் தலைப்புமான சில்க் காட்டன் ஒன்பது கஜ புடவையை கட்டிக்கொண்டு, தலையும் மல்லிகைப் பூ வைத்துக் கொண்டு கிளம்ப தயாரானாள். போகும் வழியில் பெண்ணுக்கு இரண்டு மூன்று வித பழங்கள் வாங்கிக் கொள்ள முடிவு செய்தாள்.
கையில் பையை எடுத்துக் கொண்டு கிளம்ப அவள் தயாரானாள்.
வாசல் "காலிங் பெல்' அடித்தது.
போய் கதவை திறந்தாள்.
வேதமூர்த்தி நின்று கொண்டிருந்தார்.
" பேப்பர் வெளியிலேயே கிடக்கறது'' என்று கூறியபடி பேப்பருடன் உள்ளே வந்தார்.
"என்ன விஷயம் சீக்கிரம் வந்துட்டீங்க?''
"உள்ளே வா சொல்றேன்'' என்றார்.
அவர் ஊஞ்சலில் உட்கார, அவள் தரையில் உட்கார்ந்து கொண்டாள்.
அவளை ஏற இறங்க பார்த்தார். ஒன்றும் சொல்லவில்லை.
""ம்..ம்.. சொல்லுங்க'' என்றாள்.
"அவளோட மச்சினன் பையன் வந்து தங்கிக்கறேன்னு சொன்னானாம். அகிலா என்கிட்ட சொன்னா. நான் கிளம்பறேன்னு சொன்னேன். சரின்னா. வந்துட்டேன். கார்ல அனுப்பிட்டா'' என்றார்.
கோமளா எதுவும் பேசவில்லை.
போன் மணி அடித்தது.
வேதமூர்த்தி பேப்பரில் மூழ்கினார். 
போன் மணி அடித்ததும் கோமளவல்லிதான் எடுத்தாள். மறுமுனையில் பெண் அகிலா.
"அம்மா... அப்பா வந்துட்டாரா?'' அகிலா கேட்டாள்.
"ம்... ம்... வந்துட்டார்'' என்றாள் மெதுவாக.
"அம்மா... அப்பாவால உன்னை விட்டு ஒரு நிமிடம் கூட இருக்க முடியலை. மொத்த பேச்சும் உன்னைப் பத்திதான்! எந்த "டாபிக்கை' பேசினாலும் அவர் முடிவுல உன்னைப் பத்தி பேசிதான் முடிப்பார். டி.வி. பார்க்க அவர் இஷ்டப்படலை. அவருக்குப் பிடிச்ச சமையல்தான் செஞ்சேன். சரியா சாப்பிடலை. உன்னோட சமையல் பத்திதான் பேசினார்.
ராத்திரி பதினோரு மணிக்கு தூங்காம கட்டில்ல "பிரம்மம்' மாதிரி உட்கார்ந்திருந்தார். அவரை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னுதான் மச்சினர் பிள்ளையை வரச் சொல்லிட்டேன். அந்த பையன் வரான்னு சொன்னதுமே, "நான் கிளம்பறேன்'னு சொல்லிட்டு அப்பா கௌம்பிட்டார். இனிமே நீ கூட இல்லாம அவரை எங்கேயும் அனுப்பாதே!'' என்று சொல்லிவிட்டு அகிலா போனை வைத்தாள்.
வேதமூர்த்தி பேப்பரில் இருந்து பார்வையை எடுத்து கோமளவல்லியை உற்றுப் பார்த்துவிட்டு எதுவும் கேட்காமல் மறுபடியும் பேப்பரில் மூழ்கினார்.
கோமளவல்லியும் அவரிடம் எதுவும் கூறாமல் வேலைகளை கவனிக்கச் சென்றாள், உள்ளத்தில் விவரிக்க முடியாத சுகானுபவத்துடன்!

http://www.dinamani.com

காட்டுப்பேச்சிகள் காடுகளில் வசிப்பதில்லை!

6 days 1 hour ago
காட்டுப்பேச்சிகள் காடுகளில் வசிப்பதில்லை! - சிறுகதை

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

 

பெரியவர் நிறைக்குலத்தானுக்கு இன்று நிச்சயமாகக் கடைசி நாள்தான்!

'நிறைக்குலத்தான்’ - இந்தப் பெயரை, ஒரு முறை உங்களின் வாய் திறந்து நாக்கைக் கடித்து ஒலி எழுப்பிச் சொல்லிப் பாருங்களேன்.  பெரிய ஓர் ஆலமரம், அந்தப் பெயர் முழுவதும் தன் நிழல் பரப்பி இருப்பதுபோல உங்களுக்குத் தோன்றும். ஆனால், அந்த ஆலமரம் விழுதுகள் இல்லாத ஆலமரமாக, இலைகள் இல்லாத ஆலமரமாக, துளி பச்சைகூட இல்லாத ஆலமரமாக, பங்குனி வெயிலில் எப்போது வேண்டுமானாலும் பற்றி எரிகிற மொட்டை ஆலமரமாக இருந்தால் எப்படி இருக்கும்? நினைத்துப் பார்த்தாலே உங்கள் கண்கள் தீப்பிடித்து எரிந்து கசங்குகின்றனதானே! அப்படி ஒரு மொட்டை ஆலமரம்தான், பெரியவர் நிறைக்குலத்தான். அவரின் சரியான வயது தெரியவில்லை. நரைத்த நரையையும் சுருங்கிய உடலையும் வைத்துச் சொன்னால், பெரியவரின் பிறப்பு எப்படியும் இந்தியச் சுதந்திரத்துக்கு முன் நிகழ்ந்ததாக இருக்க வேண்டும்.

p76e.jpgமுதலில், ஊரில் உள்ளவர்களுக்கு முடி திருத்துவதற்காகத்தான் நிறைக்குலத்தானைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்கள். அப்புறம் எப்படியோ அவருக்கு எட்டுக் கை, நான்கு கால், ஆறு கண்கள் இருப்பதைக் கண்டுபிடித்து, அறுந்த செருப்பு தைப்பது, ஊர் துணி துவைப்பது, இறந்தவர்களுக்குத் தேர் கட்டி, சடங்கு செய்து, சங்கு ஊதுவது, புரியாத சில நோய்களுக்குப் புரியாத வைத்தியங்களைப் பார்ப்பது என, எல்லா வேலைகளையும் அவருக்கே கொடுத்துவிட்டார்கள்.

ஆரம்பத்தில், ஊருக்கு வெளியே எல்லை பேச்சியம்மன் கோயிலுக்குப் பின் ஒரு குடிசை போட்டுக்கொடுத்து, பெரியவரைத் தங்கவைத்திருந்தார்களாம். அப்போது ஆழ்வார்தோப்பில் இருந்து ஐஸ் விற்க வந்த கிழட்டு ஐஸ்காரன் ஒருவனின் குளிர்ச்சியான மரத்துப்போன விரல்களின் வழியே ஊருக்குள் புகுந்து, சேமியா ஐஸ்களை வாங்கி நக்கிச் சொட்டாங்கி போட்டுக்கொண்டிருந்த குழந்தைகளின் உச்சி முடிக்குள் குடியேறி குழந்தைகளைப் பைத்தியம் பிடிக்கவைத்ததாம் ஒரு பிசாசு. அது 'ஆத்துரங்கால் அமலிசொக்கி’தான் என்பதைக் கண்டுபிடித்து, அரைக் கிலோ மைதா மாவில் ஓர் உலக்கை செய்து அவளை அடித்து விரட்டியதில் இருந்து பெரியவர் நிறைக்குலத்தானை பில்லி-சூன்ய வைத்தியராக்கி, ஊருக்கு நடுவிலே வாசகசாலைக்குப் பின்னாடியே ஊர் பொது ஓட்டு வீட்டில் தங்கவைத்தார்களாம். அதன் பிறகு அவ்வளவு பெரிய ஊரின் மையப்புள்ளியே நிறைகுலத்தான்தான். அவரைச் சுற்றியே ஊர் இயங்கியிருக்கிறது; வாழ்ந்திருக்கிறது.

முடி திருத்தும் நாசுவணனான தன்னை, ஊர் துணி வெளுக்கும் வண்ணாரனான தன்னை, அறுந்த செருப்பு தைக்கும் சக்கிலியரான தன்னை, இறப்புத் தேர் கட்டும் வெட்டியானான தன்னை, ஊருக்கு மத்தியில் ஊரின் வாசகசாலைக்குப் பக்கத்திலே ஊர் பொது வீட்டுக்குள்ளே தங்கவைத்திருக்கும் அந்த ஊரின் பெருமை, சிறுமை குறித்து எந்தக் கேள்வியும் எந்தக் குற்றமும் எப்போதும் பெரியவரிடம் இருந்தது இல்லை.

ஆனால், அவரை அப்படியே நிறை மனிதனாக, மூத்த மனிதனாக, அந்த ஊரின் முதல் மனிதனாக ஏற்றுக்கொண்ட அந்த ஊர் மனிதர்களுக்கும், பறவைகளுக்கும், ஆடு - மாடுகளுக்கும், வயல்வெளி எலிக்குஞ்சுகளுக்கும் இவ்வளவு ஏன்... அந்த ஊர் தெய்வங்களுக்குக்கூட அந்த நாளில் இருந்து இப்போது பெரியவரின் ஆகக் கடைசி நாளான இன்று வரை, ஒரு கேள்விக்கு மட்டும் பதில் இல்லாமல் இன்னும் உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ முறை எவ்வளவோ பேர் கேட்டுப் பார்த்தும், கெஞ்சிப் பார்த்தும், இன்னும் சரியான பதில் கிடைக்காமல் ஊர் வாசகசாலையின் பழைய கதவு இடுக்கில் சிக்கி, அவ்வப்போது கிரீச் என்று சத்தமிட்டுக்கொண்டிருக்கும் அந்தக் கேள்வி இதுதான்.

'எதுக்கு இந்த மனுசன் இவ்வளவு வயசாகியும் கல்யாணம் பண்ணிக்காம, குழந்தை பெத்துக்காம தனியா மொட்டையா அலையிறாரு? ஏன் இப்படிப் பொம்பளைங்களைக் கண்டா  ஓட்டமா ஓடுறாரு?’ என்பதுதான் அந்த மொத்த ஊருக்கும் பெரியவரிடம் இருந்த ஒரே கேள்வி.

பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள்... என எல்லோரும் கேட்டுக் கேட்டு அலுத்துப்போன கேள்வி. ஊர் பெண்கள் பேயாக, பிசாசாக நடித்து நாக்கைத் துருத்திக்கூடக் கேட்டுப் பார்த்துவிட்டார்கள். எல்லோருக்கும் பதிலாகக் கொடுத்த அதே பிசிறு தட்டாத, பங்கம் இல்லாத அந்தச் சிரிப்பைத்தான் பெரியவர் பேய், பிசாசுகளுக்கும் பதிலாகக் கொடுத்தார்.

வேறு வழி இல்லாமல் கடைசி ஆயுதமாகத்தான் சிறுவன் முத்துவிடம் சொல்லி அந்தக் கேள்வியை அப்படியே பெரியவரிடம் கேட்கச் சொன்னார்கள். ஆமாம்... முத்து கேட்டால் ஒருவேளை பெரியவர் வாய்த் திறந்தாலும் திறக்கலாம். அதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கின்றன.

''எங்க எல்லாருக்கும் முடி வெட்டிவிடுறியே தாத்தா... உனக்கு யாரு முடிவெட்டிவிடுவா?''  - இதுவரை யாருமே கேட்காத கேள்வியை, 10 வயது இருக்கும்போது முத்துதான் நிறைக்குலத்தானைப் பார்த்துக் கேட்டான்.

''தாத்தனுக்குப் பேரன்தான் முடி வெட்டிவிடணும். நீ வெட்டிவிடுறியா?''

''எனக்குத்தான் முடி வெட்டத் தெரியாதே!''

''வித்தையை நான் சொல்லித்தாறேன்... கத்துக்கிறியாடே!''

''ம்ம்ம்... நீ சொல்லித்தந்தா கத்துக்கிறேன் தாத்தா'' என்று இருவரும் விளையாட்டாகப் பேசி முடித்த அன்றைக்கே, சிறுவன் முத்துவுக்குக் கத்தரியைப் பிடிக்கக் கற்றுக்கொடுக்கத் தொடங்கிவிட்டார் பெரியவர். பையன் முத்துவும் சளைத்தவன் இல்லை. மூன்றே வாரங்களில் முழு வித்தையையும் கற்றுக்கொண்டு ஊருக்கு மத்தியில் நிறைக்குலத்தானை உட்கார வைத்து முழு முகச்சவரம் செய்தான்.

'இன்னும் பேய், பிசாசு ஓட்ற வித்தையை மட்டும் கத்துக்கிட்டான்னா, பெரியவரோட முழு வாரிசா முத்து மாறிடுவான்’ என்று ஊர் முழுவதும் அப்பவே பேசவைத்துவிட்டான். ஆனால், பெத்த பிள்ளை சவரக் கத்தி பிடிக்க, முத்துவின் தாய்-தகப்பன் சம்மதிக்கவில்லை. அடிச்சி விரட்டி, குளத்து வேலைக்கு அனுப்பிவிட்டார்கள். ஆனாலும், பெரியவர் தத்து எடுத்து ஒளிச்சு வளர்த்த கக்கத்துப் பிள்ளை முத்து என்பது ஊருக்கே தெரியும். அதனால்தான் அவர்கள் கடைசி நம்பிக்கையாக முத்துவைக் கேட்கச் சொன்னார்கள்.

ன்று, சின்ன ஆலமரத்தின் நிழலில் வைத்து பெரியவருக்கு முகச்சவரம் செய்துகொண்டிருந்தான் முத்து. கன்னம் இரண்டையும் மழித்து அப்படியே தாடைக்கு வரும்போது, மேலும் கீழுமாக ஏறி இறங்கிக்கொண்டிருந்த பெரியவரின் தொண்டைக்குழியைப் பார்த்துக்கொண்டே கேட்டான்.

''ஏதோ ஒரு பெரிய உண்மையை இன்னும் யாருகிட்டயும் சொல்லாம ஒளிச்சு வெச்சிட்டுருக்க நீ!''

''என்னடே சொல்ற... என்ன உண்மை?''

p76d.jpg''உன் தொண்டையைப் பார்த்தாலே தெரியுதே! விஷம் முழுசா மேல ஏறி, நீலக்கலரா மாறி, இறங்கவும் முடியாம ஏறவும் முடியாம அது தவியாய்த் தவிக்கிறது! ஊருக்கே தெரிஞ்சுபோச்சு... எனக்கு மட்டும் தெரியாம இருக்குமா என்ன?''

பெரியவர் பதிலே சொல்லவில்லை. தன் கழுத்துக்குப் பக்கத்தில் இருந்த முத்துவின் கத்தியை மெதுவாக இடது பக்கமாக நகர்த்தி வைத்தார். பின்பு, அந்தக் கத்தியை அவன் கையில் இருந்து பிடுங்கி, தானாகவே தன் தாடையை வேகமாகச் சவரம் செய்துகொண்டு முகத்தைக் கழுவிவிட்டு எழுந்து நடக்கத் தொடங்கினார்.

''எப்பவும் போல, எதுவும் சொல்லாம போறல்ல. போ... போ! இனிமே உங்கிட்ட நான் வர மாட்டேன்; பேச மாட்டேன். 'நான் செத்தா நீதான் முத்து எனக்குக் கொள்ளி வைக்கணும்’னு சொல்லிட்டு, என்கிட்ட ஏதோ இன்னும் சொல்லாம ஒளிச்சுவெச்சிருக்க. நான் ஏன் உனக்குக் கொள்ளி வெக்கணும்? இனி நீ யாரோ... நான் யாரோ!'' என்ற முத்து, நிலத்தைப் பார்த்தபடி குனிந்துகொண்டான்.

இவ்வளவு வேகமாக, படபடவெனப் பேசுவான் என்று பெரியவர் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் நிலைகுலைந்துதான் போய்விட்டார். முத்துவைப் பார்த்தார். 'இன்னைக்கு ஒரு முடிவு தெரியாமல் முகத்தை நிமிர்த்த மாட்டேன்’ என்பதுபோல குனிந்துகொண்டு நின்றான். அவனுடைய தாடையைப் பிடித்து முகத்தை உயர்த்தினார். சிறுவன் என்றாலும் விவரமானவன் என்பதால், முத்து தன் கண்களை இறுக்க மூடிக்கொண்டான்.

''கண்ணைத் திறடே...''

''நீ சொன்னாத்தான் திறப்பேன்!''

''என்ன சொல்லணும்... சொல்லு!''

''நீ எதுக்கு கல்யாணமே பண்ணிக்கல? என்னை மாதிரி ஏன் ஒரு புள்ள பெத்துக்கல?''

''ஓ... அதுவா! அதைச் சொன்னா எனக்கு அழுகை வரும் பரவாயில்லையா?''

''பரவாயில்லை. ஒரு நாள்தானே, பக்கத்துல வேற ஆளும் இல்ல. அழுக வந்தா, அழுதுட்டு போ!''

''அழுதுக்கிட்டு இருக்கும்போதே, செத்தாலும் செத்துப்போய்டுவேன்... என்ன செய்வ?''

''பரவால்ல... சொல்லிட்டுச் செத்துப்போய்டு!''

''அது சரி. கத்தரி பிடிச்சுப் பழகிட்டல்லா... மனுசன் மனசும் உனக்கு இனி மசுரு மாதிரிதான தெரியும். சரிடே சொல்றேன். கண்ணைத் திற!''

முத்து, மெதுவாகக் கண்களைத் திறந்தான். இரண்டு கைகளாலும் முகத்தை ஒரு முறை அழுத்தித் துடைத்துவிட்டு, 35 வருடங்களாக ஊரே கேட்ட கேள்விக்கு, தொண்டையைச் செருமியபடி சிறுவன் முத்துவிடம் பதில் சொல்லத் தொடங்கினார் நிறைக்குலத்தான்.

'' 'நினைப்பு’னா உனக்கு என்னன்னு தெரியுமாடே?''

''நினைப்புனா ஆசைதான?''

''முதல்ல நானும் அப்படித்தான்டே நினைச்சேன். ஆனா, அது அப்படி இல்லடே. இனிமே அப்படிச் சொல்லாத. நினைப்புனா அது ஒரு வாழ்க்கைடே. எனக்கு அப்படித்தான் சொல்லத் தோணுது. இப்போ முழுசா வாழ்ந்து பார்த்த பிறகு, நிச்சயமா அதுதான் உண்மைனும் தெரியுது.

கடைசியாப் பார்த்த ஒரு பொண்ணு முகம்,  மாறாம, முடி நரைக்காம, சிரிச்ச பல்லு சிரிச்ச மாதிரியே, பார்த்த கண்ணு பார்த்த மாதிரியே நம்ம புத்திக்குள்ள அப்படியே குத்தவெச்சுக்கிட்டு இருந்தா... அதை வெறும் 'நினைப்பு’னா சொல்ல முடியும். நம்ம வாழ்க்கைனுதானடே சொல்லணும். பார்க்கிற பொண்ணெல்லாம் பொண்டாட்டியாத் தெரியுற வயசுல, ஒரே ஒரு பொண்ணு மட்டும் நம்மளை அள்ளிட்டுப் போற தேவதையாட்டம் தெரிஞ்சா, மனசுக்குள்ள ஒரு கிறுக்கு வருமே... அந்தக் கிறுக்குதான்டே எனக்கும் வந்துச்சு.

அப்போலாம் கருங்குளம் வெங்கடாசலம் ஐயருக்குச் சவரம் செய்ய நான்தான் போவேன். அவங்க வீட்டுக் கொல்லைப்புறத்துல வைச்சுதான் முகச்சவரம் செய்வேன். அங்க இருந்து பார்த்தா ஐயரு வீடு, எனக்குக் குகை மாதிரி தெரியும். உள்ள அலையுறவங்க எல்லாரும் நரி மாதிரி தெரிவாங்க. அவருக்கு நிறைய நாள் சவரம் பண்ணிருக்கேன். அவரையும் அவங்க வீட்டு வேலைக்காரங்களையும் தவிர, வேற யாரையும் நான் ஒரு நாளும் பார்த்தது இல்லை.

ஒருநாள், அந்தக் குகைக்குள்ள இருந்து ஒரு பொண்ணு சிரிக்கிற சத்தம் கேட்டுச்சு. அப்புறம் ஒரு பூனைக்குட்டி சத்தம். மறுபடியும் சிரிப்புச் சத்தம். மறுபடியும் பூனை சத்தம். இப்படியே அந்தப் பொண்ணும் பூனையும் சேர்ந்து சிரிக்கிற, அதுவரைக்கும் நான் கேட்காத ஒரு மாதிரியான மனசைப் புரட்டுற சத்தம் என் புத்தி முழுசா விஷம் மாதிரி அன்னைக்கே பரவிருச்சு.

உடனே, அடுத்த நொடியே அந்தப் பொண்ணையும், அந்தப் பூனையையும் பார்க்கணும்னு மனசு பேதலிக்க ஆரம்பிச்சுட்டு. ஆனா, அது எப்படி ஒரு நாசுவணன், ஒரு ஐயர் பொண்ணையும் ஐயர் வீட்டுப் பூனையையும் அவ்வளவு சீக்கிரத்துல பார்க்க முடியும்? எந்த வழியும் இல்லாம ஒரு வருஷமா பூனையும் பொண்ணும் கலந்து விரவி காத்துல வர்ற சிரிப்பை மட்டுமே கேட்டுக் கேட்டு, உடம்பு முழுக்க விஷம் ஏறிப்போய்த் திரிஞ்சேன். 'எப்படா... கடவுள் கண்ணைத் திறப்பான்; அந்தப் பொண்ண கண்ல காட்டுவான்’னு வெறி பிடிச்சு அலைஞ்சேன். கடைசியா ஒருநாள் என் மேல இரக்கப்பட்டானோ என்னவோ, அந்தக் கடவுள் கொஞ்சம் கருணை காட்டி கண்ணைத் திறந்தான்.

முதல் அதிர்ஷ்டமா, அந்தப் பூனையை மட்டும் ஐயர் ஒரு பையில போட்டு கொல்லப்புறத்துக்குத் தூக்கிட்டு வந்தார்.

'ஏப்பா... இந்தப் பூனைக்கு எவனோ தெருவுல போற பய வாயக் கட்டிப்புட்டான்பா. எதுவும் சாப்பிடவும் மாட்டேங்குது... எந்தச் சத்தமும் போட மாட்டேங்குது. கொஞ்சம் என்னன்னு பாரேன். பூனையோட பேசாம என் மக தவிச்சுக்கிடக்கா!’ என்றார் ஐயர்.

என் மண்டைக்குள் தொந்தரவு செய்து கொண்டிருந்த பூனை சத்தத்தை வைத்தும், கொல்லைப்புறத்தில் கிடந்த ஒரு கொத்துப் பூனை முடியை வைத்தும், நான் அந்தப் பூனையின் வாயைக் கட்ட கொல்லைப்புறத்தில் இருந்தே முணுமுணுத்த மந்திரம் பலிச்சிருந்தது. அப்போதுதான் பிறந்த ஒரு பூங்குழந்தை போல கண்ணை மூடிக்கிடந்த பூனையைக் கையில் வாங்கி, பக்கத்தில் கிடந்த ஓலை மிட்டாய்க் கொட்டான் ஒன்றுக்குள் அதன் தலையைச் செருகி, கொட்டானில் உள்ள ஓட்டை வழியாக என் ஆள்காட்டி விரலால் அதன் காதுக்குள் தண்ணீரை ஒரு சொட்டு விட்டு மந்திரத்தை முணுமுணுக்க, பூனை தலையைச் சிலுப்பி 'மியாவ்...’ என்றதும் ஐயருக்கு அவ்வளவு சந்தோசம்.

'எம்மா காமாட்சி... உம் மவள ஓடி வரச் சொல்லு. இங்க வந்து பாருங்க... பூனைக்குச் சரியாயிடுச்சு’ என்று ஐயர் சொன்னதும், என் வாழ்வின் முழு அதிர்ஷ்டமும் அடுத்தடுத்து நிகழத் தொடங்கியது.

என் புத்திக்குள்ள இருந்து அதுவரைக்கும் சிரிச்சுட்டே இருந்த அந்தப் பொண்ணு, அந்த வீட்டுக்குள்ள இருந்து எப்படி வந்தா தெரியுமா? ஓடி வந்தாடே! முத்து... நம்ம பழைய கத்தரி மேல சத்தியமாச் சொல்றேன். அது பொண்ணே இல்லடே. என் கையில் இருந்து அந்த மிட்டாய்க் கொட்டானோடு அந்தப் பூனையை வாங்கிட்டு என் முகத்தைப் பார்க்காம முழுசா என் ரெண்டு கண்ணை மட்டும் பார்த்து, அவ கண்ல கண்ணீர் தேங்கக் கைகூப்பி நன்றி சொல்ற மாதிரி, பாதி உதடு பல்லுல ஒட்ட, ஒரு சிரிப்புச் சிரிச்சா பாரு... உன்கிட்ட அதை எப்படிச் சொல்றது? என் உடம்பு முழுக்க அந்த நிமிசமே ஆயிரம் காடை றெக்கைகளை முளைக்க வெச்சுட்டா!

p76c.jpg

பக்கத்துல போய்ப் பார்த்த பிறகுதான் தெரியுது, அவ ஐயர் வீட்ல வாழ்ற நம்ம காட்டுப்பேச்சிடே. கருவிழி ரெண்டும் அப்படி இருக்கு பாத்துக்கோ. வெறிச்சிப் பார்க்கிறவனை ஓட ஓட விரட்டிக் கொல்ற கொள்ளை அழுகுடே. அப்படியே பூனையை வாங்கிட்டு உள்ளே போய் அந்தக் குகைக்குள்ள இருந்து மறுபடியும் அந்தப் பழைய சிரிப்பைச் சிரிச்சா பாரு... யாரோ தொட்டுச் சுருங்கிப்போன தொட்டாச்சிணுங்கியை கடவுள் வந்து மறுபடியும் தொட்டு விரியவைப்பாராமே! அப்படி அடுத்த நொடியே அவ்வளவு பெருசா விரிஞ்சுபோச்சு என் மனசு.

அப்புறம் விடிஞ்சாலும் அடைஞ்சாலும் ஏதாவது காரணம் சொல்லி, ஐயர் வீட்டுக்  கொல்லைப்புறத்துக்குத்தான் போவேன். அந்தக் குகைக்குள்ள இருந்து அதே சிரிப்புச் சத்தம் கேக்கும். நின்னு தலை கிறுகிறுக்கக் கேப்பேன். நான் நிக்கிற இடம் மட்டும் என்னோட சேர்த்து சுத்துற மாதிரி இருக்கும்.

திடீர்னு ஒருநாள், காது ரெண்டும் அடைச்ச மாதிரி அந்தச் சிரிப்புச் சத்தம் நின்னுபோச்சு. பூனை சத்தமும் கேக்கல; அவ சத்தமும் கேக்கல. இப்படி ஒரு மாசமா உலகத்துல எந்தச் சத்தமுமே கேக்காத மாதிரி ஆகிருச்சு. எட்டிப் பார்த்தா, அந்தக் குகைக்குள்ள நரிங்க நடமாட்டம் மட்டும்தான் தெரியுது. என்னோட பூனைங்க நடமாட்டம் சுத்தமா இல்லை.

வீட்டுக்குப் பின்னாடி வேலைக்காரங்க கூட்டிப் பெருக்குன குப்பையில பூனை முடியும் இல்லை... அவ முடியும் இல்லை. தாழம்பு வாசம் இல்லாத காட்டுக்குள்ள நாகப்பாம்பு சிக்கிக்கிட்டு எப்படிக்கிடந்து ஊர்ந்து அலையும்? அப்படிக் கிறுக்குப் பிடிச்சுப்போச்சுடா எனக்கு. என்ன செய்யுறதுனு தெரியாம, ரொம்பத் தயங்கித் தயங்கி ஐயர் வீட்டு வேலைக்காரங்ககிட்ட போய் விசாரிச்சதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது... அந்தப் பொண்ணுக்குக் கல்யாணமாகி ஒரு மாசம் ஆகிருச்சினு.

நான் பின்னாடி அவங்க வீட்டுக் கொல்லைப்புறத்துல நின்னு, அவ சத்தம் போட்டுச் சிரிக்க மாட்டாளா, அப்படியே வெளிய பூனைக்குட்டி யோட வர மாட்டாளானு ஏங்கிட்டு இருந்த என்னைக்கோ ஒரு நாள்லதான் அவளுக்கு முன் வாசல்ல கல்யாணம் ஆகிருக்கு. கல்யாணம் ஆகிப் போனவ, சும்மா போகல... அந்தப் பூனையையும் கொண்டுபோய்ட்டா போல.

'ஐயர் வீட்டுக்கு முன்னாடி அந்தத் தெருவுல நடந்து போய், என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்க முடியாத சாதியில போய்ப் பிறந்துட்டோமே!’னு அன்னைக்குத்தான்டா உடம்பும் உசுரும் நடுங்க, என்னை நானே அடிச்சிக்கிட்டு அப்படி அழுதேன். அன்னைக்கு மட்டுமா... இப்பவும் நடுராத்திரி எங்க பூனை சத்தம் கேட்டாலும், பொண்ணுங்க சிரிப்பு சத்தம் கேட்டாலும் தானா அழுகை வந்துடுது.

அப்புறம் எப்படி அடுத்தவளை கல்யாணம் பண்ணிக் குடும்பம் நடத்த? அதுதான் அஞ்சாறு பூனைக்குட்டிகளை வீட்டுக்குள்ள புடிச்சுப் போட்டு, அதுங்ககூட வாழப் பழகிட்டேன். இதை ஊர் முழுசுக்கும் சொல்லி, 'பாருடா முடிவெட்ட வந்த நாசுவணன், ஐயர் பொண்ணு மேல ஆசை வைச்சானாம். எவ்வளவு கொழுப்பு...’னு மொத்த ஊரும் பேசணுமா? அதான் யார்கிட்டயும் சொல்லலை. நல்லா இருப்ப... நீயும் யார்கிட்டயும் சொல்லாதடே'' - ஒரு மூச்சில் தன் கண்களில் இருந்து நீர் சொட்டுவதற்குள் அத்தனையும் சொல்லி முடித்துவிட்டார் பெரியவர்.

எல்லாவற்றையும் 'உம்’ கொட்டாமல் கேட்டுக்கொண்டிருந்த முத்து, அவர் மீது துளி இரக்கமும் இல்லாமல், இன்னொரு கேள்வியையும் அவசர அவசரமாகக் கேட்டான்.

p76.jpg''அதுக்கு அப்புறம் அந்தப் பொண்ணை நீ போய்ப் பார்க்கவே இல்லையா? உனக்குப் பார்க்கணும்னு தோணலையா?''

''தோணும். தினமும் வயித்துல பசியெடுக்கிறது மாதிரி மனசுல பசியெடுத்துக் கூப்பாடு போடும். பார்த்தே ஆகணும்னு தோணும். எங்க இருக்கா, யார்கூட இருக்கா எல்லாம் தெரியும். எந்திரிச்சா, ஓடிபோய்ப் பார்க்கிற தூரம்தான். ஆனா, அந்தத் தெருவுக்குள்ள நான் போக முடியுமா... விடுவாங்களா என்னை..? அந்த நேரத்துல பூனைக்குட்டியோடு பூனைக்குட்டியா மாறி 'மியாவ்... மியாவ்..!’னு கத்திக் கதவு இடுக்கிலே என் காலத்தைத்தான் கழிக்க முடிஞ்சது!''

''சரி... அப்போதான், அந்தத் தெருவுக்குள்ள நீ போகக் கூடாது. இப்போதான் யார் வேணும்னாலும் போலாமே. எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கிட்டாங்களே! வா... இப்போ போய்ப் பார்ப்போம்.''

''இப்போவா... போடா! சின்னப் பையன் சகவாசம்கிறது சரியாத்தான் இருக்கு!''

''ஏன்... அந்த அம்மா வயசாகி செத்துப் போயிருப்பாங்கனு பயப்படுறியா?''

''வாயை மூடுடா... தினமும் ஒவ்வொரு அடுப்புல ஒவ்வொரு சட்டியில கொதிக்கிற நானே உசுரோட இருக்கேன். அவ மாட்டு மடியில காலத்துக்கும் கசியாம உறைஞ்சுபோன ரத்தம்டா... அவளுக்கு எதுவும் ஆகிருக்காது. நிச்சயமா அப்படியே இருப்பா!''

''அப்படினா வா போய்ப் பார்ப்போம்.

நீ பார்க்கிறியோ இல்லையோ... நான் அவங்களைப் பார்த்தே ஆகணும்... வா!''

முத்து, தீர்மானமாக நிறைக்குலத்தானை சைக்கிளில் ஏற்றி மிதிக்கத் தொடங்கிவிட்டான். 35 வருடங்கள் கழித்து நிறைக்குலத்தானுக்கு ரொம்ப நெருக்கமாகக் கேட்ட அந்தச் சிரிப்புச் சத்தம், முத்துவின் புத்திக்குள்ளும் கேட்கத் தொடங்கியிருந்ததோ என்னமோ.

அவன் சைக்கிளை திருக்களூரைப் பார்த்து வேகவேகமாக மிதித்துக்கொண்டு போனான். ஐயர் தெருவுக்குள் சைக்கிள் நுழைந்ததுமே பெரியவருக்கு உடம்பு முழுவதும் அதே ஆயிரம் காடைகளின் றெக்கைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன.

'இப்போது எப்படி இருப்பாள் அந்தக் காட்டுப்பேச்சி? நிச்சயமாக என்னைப் போல அவளுக்கும் முடி நரைத்திருக்கும், கை-கால் எல்லாம் ஆட்டம் கண்டாலும் கண்டிருக்கும், எனக்குக் கடவாய் பற்கள் விழுந்தனபோல, அவளுக்கும் முன் பற்கள் விழுந்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. எது எப்படி இருந்தாலும் அந்தக் கண்கள் அவ்வளவாக மாறியிருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

நிச்சயமாக அந்த ஒளி அப்படியேதான் இருக்கும். ஒரு பூனையைப் போல கத்தினால், அது என்னைப் பார்த்து இன்னும் பிரகாசமாக ஒளி காட்டினாலும் காட்டும். வாசலில் உட்காந்திருப்பாளா..? ஐயர் வீட்டு வயசான பெண்கள் எல்லாம் வாசலில்தான் கால் நீட்டி அமர்ந்திருப்பார்கள். இவளும் இருப்பாள்... நிச்சயம் இருப்பாள்’ - நினைக்க நினைக்க நிறைக்குலத்தானின் உடம்பு குறுகுறுத்தது. அந்தச் சைக்கிளில் இருந்து மேலெழும்பி ஒரு காடை பறப்பதுபோல் இருந்தது அவருக்கு. இந்த ஏழு கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து வருவதற்கு, 35 வருடங்கள் ஆகியிருக்கின்றன அவருக்கு.

தெருவுக்குள் நுழைந்துவிட்டார்கள். மூன்று தெருக்களிலும் நின்று நிதானமாக வாசலில் அமர்ந்திருக்கும் மூதாட்டிகளின் முகங்களைக் கூர்ந்து பார்த்தவாறு தேடிவிட்டார்கள். எல்லா தெருக்களிலும் வாசலில் நிறைய மூதாட்டிகள் கால் நீட்டி இருந்தார்கள். ஆனால், அவர்கள் யாரும் அந்தப் பெண் இல்லை. நிச்சயமாக எந்தப் பெண்ணிடத்திலும் நிறைக்குலத்தானைச் சிலிர்க்கவைக்கிற அந்த ஒளி இல்லை. இன்னும் ஒரே ஒரு தெருதான் மிச்சம் இருக்கிறது. 'அந்தத் தெருவுக்குள் அந்தப் பூனைச் சிரிப்பு, பாட்டி’ நிச்சயம் இருக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு, முத்து சைக்கிளை மிதித்தான். பெரியவர் நிறைக்குலத்தான் சைக்கிளில் இருந்து குதித்து இறங்கி, சைக்கிளைத் தடுத்து நிறுத்தினார்.

''ஏன்... என்னாச்சு இந்த ஒரு தெருதான் பாக்கி இருக்கு. வா... பார்த்துரலாம்!''

''இல்ல... வேண்டாம்டே. ஒருவேளை இந்தத் தெருவுல இல்லண்ணா!''

''அதெல்லாம் இருப்பாங்க!''

''ஆமா, இந்தத் தெருவுலதான் அவ இருக்கானு நானும் நம்புறேன். அது உண்மையா இருக்கணும்னா, நாம தெருவுக்குள்ள போய்த் தேடக் கூடாது. ஆமாடே, அவ உயிரோட இல்லைனு தெரிஞ்சுட்டா, அதுக்கு அப்புறம் எப்படி வாழணும்னு நான் இன்னும் யோசிக்கலடே. வேணாம் வா. அவ இங்கதான் இருக்கானு நாம நம்புவோம். வா போயிடலாம் முத்து!''

ஆரஞ்சு மிட்டாய்க்குக் கை நீட்டும் ஒரு குழந்தையைப் போல கெஞ்சிய பெரியவரின் முகத்தைப் பார்த்த முத்து, அதன் பிறகு எதுவும் பேசவில்லை.

வரை எப்படிக் கூட்டிக்கொண்டு போனானோ, அப்படியே கூட்டிக்கொண்டு வந்து வீட்டில் விட்டுவிட்டான். வந்தவுடன் உடல் முழுவதும் பூனைகளைப் பரப்பி, மனம் முழுவதும் அந்தச் சத்தங்களைப் பரப்பி அன்று கட்டிலில் படுத்தவர்தான்... இன்னும் எழுந்திருக்கவில்லை.

p76b.jpgமூன்று மாதங்கள் ஆகின்றன. ஆனால், இன்று அவருக்குக் கடைசி நாள் என்று அவருக்கே தெரிந்துவிட்டது. மூச்சுவிட முடியவில்லை. உடல் அசையவில்லை, கண்களுக்கு, காட்சிகள் புலப்படவில்லை. புத்திக்குள் மட்டும் பூனை சத்தமும், அவளின் சத்தமும் கேட்கின்றன. அது, எப்போதும் இல்லாத அளவுக்கு அவரின் கபாலத்தை உடைக்கச் செய்யும் அளவுக்குச் சத்தமாகக் கேட்கிறது. இதுக்குத்தான் நிறைக்குலத்தான் காத்திருந்தார் போல. இப்படித்தான் அவர் சாவு அமைய வேண்டும் என்று விரும்பினார் போல.

திடீரென்று அந்தப் பெண் அந்தப் பூனையோடு இப்போது அவர் மார்பின் மீது சாய்ந்து சிரிக்கிறாள். ஆச்சர்யம்... அவளுக்கு இன்னும் வயதாகவில்லை. முடி நரைக்கவில்லை. பெரியவருக்கு வரும் கண்ணீரைத் துடைக்காமல் சிரித்துக்கொண்டே இருக்கிறாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் பெரியவருடைய மூக்கின் இடது குழலை தன் விரலால் அடைத்தாலும் அடைத்துவிடுவாள். பெரியவரும் அதை எதிர்பார்த்துதான் மூக்கை விடைத்துக்கொண்டு விழி இரண்டிலும் இவ்வளவு நீர் கசிய இப்படிப் படுத்திருக்கிறார் போல.

ஆனால், முத்து வரும் வரை அவர் உயிர் பிரியக் கூடாது. அவன் வந்துதான் அவரின் கண்ணீரைத் துடைக்க முடியும். அவன் அந்தக் கண்களைத் துடைத்து அவர் கைகளை எடுத்து ஒரு பூனைக்குட்டியைக் கொஞ்ச நேரம் வருடச் செய்து, சரியான நேரத்தில் அவர் கண் சிமிட்டும்போது அவரின் கை விரல்களை அவன் இறுக்கப் பிடிக்க, கன்னியில் இருந்து விடுபட்ட காடையைப் போல அவர் பறந்து போக ஆயத்தமாகும்போது, அவசர அவசரமாக அந்தப் பூனைச் சிரிப்புச் சிரிக்கும் காட்டுப் பேச்சியின் பெயரை அவன் காதில் மட்டும் அவர் சொல்லிவிட்டுப் போகக்கூடும்.

ஆனால், முத்துதான் இன்னும் வரவில்லையே..!

https://www.vikatan.com/

புறாப்பித்து

6 days 15 hours ago
புறாப்பித்து - சிறுகதை
 
 

சிறுகதை: எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ஸ்யாம்

 

p50aa_1523340127.jpg

ற்செயலாகத்தான் அலுவலக மாடி ஜன்னலில் சாய்ந்தபடியே அந்தப் புறாக்களை கோவர்தன் பார்த்தார். அவரது அலுவலகத்தின் எதிரில் மத்திய உணவு சேமிப்புக் கிடங்கு இருந்தது. அதன் சுற்றுச்சுவர் மிக உயரமானது. கறுத்த சுவரின்மீது புறாக்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தன. ஒரேயொரு சாம்பல் நிறப் புறா. மற்றவை வெள்ளை நிறப் புறாக்கள்.

மொத்தம் எத்தனை என எண்ணிப்பார்த்தார். பதினாறு புறாக்கள். அலுவலகம், கோவர்தன் இயல்பை மாற்றியிருந்தது.  இளைஞனாக இருந்த நாள்களில் இதுபோன்ற புறாக்களைப் பார்த்திருந்தால் இப்படி எண்ணியிருக்க மாட்டார். புறா என்றாலே காதலுக்குத் தூது விடுவது என்ற கற்பனையில் அமிழ்ந்து போயிருப்பார். ஆனால், இன்னும் ஓய்வுபெறுவதற்கு மூன்று வருடங்களே இருக்கும் அரசாங்க குமாஸ்தாவால் இதுபோன்ற கற்பனைகளில் ஈடுபட முடியாது அல்லவா? ஆகவே, வெறுமனே எண்ணிக்கொண்டிருந்தார்.

உண்மையில் 30 வருடங்களுக்குமேல் அரசுப் பணிபுரிந்தவர்களுக்கு, அரசாங்கத்தின் குணங்கள் வந்துவிடுகின்றன; அவர்களை அறியாமலேயே முகமும் உடலும் செய்கைகளும் மாறிவிடுகின்றன. அரசு அலுவலக நாற்காலி மேஜைகளைப்போல அவர்களும் உருமாறிவிடுகிறார்கள். அதுவும் காலையில் அலுவலகம் வந்தது முதல் இரவு வரை வெறும் கூட்டல் கழித்தல் டோட்டல் என எண்ணிக்கைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிற ஒருவருக்கு, எதைப் பார்த்தாலும் எண்ணத்தானே தோன்றும்!

கோவர்த்தனை, அவரின் பிள்ளைகள் கேலி செய்தார்கள். சாப்பிட ஹோட்டலுக்குப் போனால், சாப்பிட்டு முடிப்பதற்குள் டோட்டல் எவ்வளவு என மனக்கணக்காகச் சொல்லிவிடுவார். ``அதான் கம்ப்யூட்டர்ல பில் வருமேப்பா... நீ எதுக்குக் கணக்குச் சொல்றே?” என மகள் கேட்பாள். என்ன பதில் சொல்வது?

ஒவ்வொரு பைசாவையும் பார்த்துப் பார்த்துச் செலவழிக்க வேண்டும். சுத்தமாகக் கணக்குத் தர வேண்டும் என்று வளர்த்த தலைமுறை அல்லவா! இப்போது யார் அப்படிக் கணக்குப் பார்க்கிறார்கள்? ஐந்து பைசா பலசரக்குக் கடையில் விடுதல் என்பதற்காக அம்மா எவ்வளவு சண்டை போட்டிருக்கிறாள். இன்று பைசாக்களும் முக்கியமில்லை; ரூபாய்களுக்கும் அப்படித்தான்.

p50a_1523340115.jpg

ஆனால், அந்தப் பழக்கத்தில் ஊறியவர்களால் கணக்குப் போடாமல் இருக்க முடியாது. ஆகவே, சமீபமாக ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனால் மனதுக்குள் மட்டும் கணக்குப்போட்டுக் கொள்வார்.

`சென்னையில் வாழ்க்கையைத் தொடங்கப் போகிறோம்’ என, கல்லூரி முடித்த நாள்களில் நினைத்தபோது எவ்வளவு சந்தோஷமாக இருந்தது! ஆனால், இந்த 33 வருஷ மதராஸ் வாழ்க்கை அப்படியொன்றும் சோபிக்கவில்லை. வீடு வாங்கியதும் பிள்ளைகள் படித்து முடிக்கப் போவதும்தான் மிச்சம்.

சிதம்பரம், கடலூர், கரூர், ராசிபுரம் என வேலைக்காக மாறிய ஊர்கள் எதுவும் மனதில் ஒட்டவேயில்லை. உண்மையில் ஒரு கோடி பேருக்கும் அதிகமாக வசிக்கும் இந்த மாநகரில், அவரும் ஒரு துளி; அடையாளமில்லாத துளி. கொட்டும் மழையில் தனித்துளிக்கு ஏதாவது அடையாளம் இருக்கிறதா என்ன? எல்லாத் துளிகளும் ஒன்றுபோல்தானே இருக்கின்றன.

வேலை கிடைத்துச் சென்னை வந்த நாள்களில் அறை எடுத்துதான் தங்கினார். அலுவலகம் விட்டவுடன் உடனே அறைக்குப் போய்விட மாட்டார். ஊர் சுற்றிக்கொண்டே இருப்பார். கோயில், கடற்கரை.  திருவல்லிக்கேணி வீதிகள், அரசியல் பொதுக்கூட்டம், நூலகம், பிரசங்கம், இசைக் கச்சேரி, இரவுக் கடைகள் என நேரம் போவதே தெரியாது.

மேன்ஷன் அறையில் ஒரு வசதியும் கிடையாது. ஆனால், அது எதுவும் மனதில் ஒரு குறையாகத் தோன்றவேயில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் சில வேளை மூன்று திரைப்படங்கள்கூடப் பார்த்திருக்கிறார். இரவு தேடிப் போய் பிலால் பிரியாணி சாப்பிட்டுவிட்டு வருவார். எல்லாமும் திடீரென அலுத்துப்போனது. உடனே திருமணம் செய்துகொண்டார். புதுமனைவியுடன் சென்னை வந்து தனி வீடு பிடித்துக் குடியேறிய பிறகு, மதராஸ் மிகவும் சுருங்கிப்போய் விட்டது.

கடற்கரைக்குப் போய் வருவதே கூடச் சலிப்பூட்டும் வேலையாகி விட்டது. ஒருமுறை கடற்கரையில் ஆயிரக்கணக்கான ஆள்கள் கூச்சலிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டதும் அவருக்கு மூச்சுத் திணறத் தொடங்கியது. ``கடல் அலைகள் காலில் படும் வரை போகலாம்’’ என மகள் அழைத்தபோது `அலைகள் தன்னை இழுத்துக்கொண்டு போய்விட்டால் என்ன ஆவது!’ என்ற பயம் மேலோங்கியது.

அவர் போகாதது மட்டுமின்றி, மகளையும் `அருகில் போகக் கூடாது’ எனத் தடுத்தார். ``உங்களுக்கு வயதாகிவிட்டது. அதான் தேவையில்லாமல் பயப்படுகிறீர்கள்’’ என மனைவி கோபித்துக் கொண்டாள்.

அது நிஜம்தான் என உணர்ந்தார். உண்மையில், இது தேவையில்லாத பயம்தானா, வயதானவுடன் ஏன் உலகின் சின்னஞ்சிறு விஷயங்கள்கூட இத்தனை பூதாகரமாகத் தெரிகின்றன? எதற்கெடுத்தாலும் பயம் வருகிறது. கவலையும் கோபமும் பீறிடுகின்றன. ஒருநாள் அதைப் பற்றி அவரது அலுவலகத்தில் பேச்சு வந்தபோது டைப்பிஸ்ட் சுந்தரி சொன்னாள்,

``உடம்பு நாம சொன்னபடி கேட்காமப் போக ஆரம்பிச்சுட்டா,   மனசு நிலையில்லாமப்போயிடும். அதுக்கப்புறம் நாள்பூரா  உடம்பைப் பற்றியேதான் நினைச்சுக்கிட்டு இருக்கணும்னு தோணும். இருபது வயசுல யாரு உடம்பைப் பற்றிக் கவலைப்பட்டா? இரும்பைக் குடுத்தாலும் கடிச்சுத் தின்னுட்டுப் போயிட்டே இருந்தோம். அது இப்போ முடியுமா? உளுந்துவடை சாப்பிட்டா ஜீரணமாக அரை நாள் ஆகுது.``

அதை கேட்டுப் பலரும் சிரித்தார்கள். ஆனால், கோவர்தனுக்குத் துக்கமாக இருந்தது. அவள் சொல்வது உண்மை. தனது பயத்தின் ஆணிவேர் உடம்பு. உண்மையில் நாமாகத்தான் அதைக் கெடுத்துக்கொண்டோம். அதில் அரசாங்க அலுவலகத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. இனி கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது? மாநகரில் ஒவ்வொரு நாளையும் கடந்து போவதும் சலிப்பாக இருக்கிறது.

சினிமா, நியூஸ்பேப்பர், கோயில், பாட்டு எதையும் பற்றிக்கொண்டுவிட முடியவில்லை. எல்லாமும் சலிப்பாக இருக்கின்றன. அலுவலகத்தில் முன்பெல்லாம் கேரம் ஆடுவார்கள். டீ குடித்தபடியே மணிக்கணக்கில் அரட்டையடிப்பார்கள். அதெல்லாமே செல்போன் வந்தவுடன் முடிந்துபோனது. அலுவலகத்தில் கூடி விளையாடுவதும் பேசிச் சிரிப்பதும் அறுந்து போய்விட்டன.

கோவர்தனுக்கு, ஒவ்வொரு நாள் அலுவலகத்துக்கு வரும்போதும் விருப்பமே இல்லாத வேலையைச் செய்வதாகவே தோன்றும். டிபன்பாக்ஸை மேஜைக்குக் கீழே வைத்துவிட்டு மேஜை டிராயரை இழுக்கும்போது 30 வருடங்களை இழுப்பதுபோலவே தோன்றும். அலுவலகத்தில் மட்டுமல்ல, தன் மீதும் சிலந்திவலை படிந்து கொண்டேவருகிறது. அதைத் துடைத்துச் சுத்தம் செய்ய முடியாது. இனி, தான் ஒரு சிலந்திவலை படிந்த மனிதன் மட்டுமே என நினைத்துக்கொள்வார்.

இப்படிச் சொல்ல முடியாத மனவேதனையும் இறுக்கமும் சலிப்புமான ஒரு நாளில்தான் கோவர்தன் அந்தப் புறாக்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.

ஐந்து நிமிடம் பார்த்தபிறகு அந்தப் புறாக்களின் வெண்மை மீது ஈர்ப்பு உருவாக ஆரம்பித்தது. எவ்வளவு வெண்மை, தூய்மை! இந்த நகரின் எந்தத் தூசியாலும் புகையாலும் அந்த வண்ணத்தை மாற்ற முடியாது.
புறாக்கள்  வரிசையாக உட்கார்ந்திருந்தன. எதற்கோ காத்திருப்பது போன்ற அதன் பாவனை. இவற்றில் யார் பாஸ், யார் ஸ்டெனோ, யார் ஹெட்கிளார்க்? புறாக்களுக்குள் ஒரு பேதமும் இல்லை. ஒரு புறா, சிறகைக் கோதிவிட்டபடியே இருந்தது. இன்னொரு புறா, பறக்க எத்தனிப்பதுபோல் தயாராக இருந்தது. இரண்டு புறாக்கள், ஒன்றோடு ஒன்று அலகை உரசிக்கொண்டிருந்தன. இந்த வரிசையைவிட்டு ஒரு புறா தனியே விலகி உட்கார்ந்திருந்தது. தன்னைப்போல அதற்கும் இந்த நகரம் சலிப்பாகியிருக்கும்போல!

கோவர்தன் புறாக்களையே பார்த்துக்கொண்டிருந்தார். சட்டென எல்லாப் புறாக்களும் கோட்டைச் சுவரைவிட்டு வானில் பறந்தன. எங்கே போகின்றன? இந்தப் புறாக்கள் எங்கே தங்கியிருக்கின்றன? எதற்காக இந்த அவசரம்?

புறாக்கள் இல்லாத கோட்டைச் சுவரைக் காணும்போது, விடுமுறை நாளில் காணப்படும் அரசாங்க அலுவலகத்தின் சாயல் தெரிந்தது. அந்தச் சுவரையே நெடுநேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.ஹெட்கிளார்க் அருணன் திரும்பிப் பார்த்து, ``என்ன சார்... குடோன்ல அப்படி என்ன பார்க்கிறீங்க?’’ எனக் கேட்டார்

``சும்மாதான். காற்று வரலை!’’ என்று சமாளித்தார்.

அன்று கோவர்தன் வீடு திரும்பும் வரை மனதில் புறாக்களே நிரம்பியிருந்தன.  வீட்டுக்கு வந்தவுடன் வழக்கத்துக்கு மாறாகப் பழைய டைரி ஒன்றில் பென்சிலால் புறா ஒன்றை வரைய முற்பட்டார். அதையும் ஏதோ அலுவலக வேலை என்றே மனைவி நினைத்துக் கொண்டாள். கோவர்த்தனால் நினைத்ததுபோலப் புறாவை வரைய முடியவில்லை. நான்கைந்து முறை வரைந்து பார்த்துத் தோற்றுப்போனார்.

மறுநாள் காலையில் அலுவலகம் போனவுடன் புறாக்கள் சுவருக்கு வந்துவிட்டனவா என ஆர்வமாகப் பார்த்தார். புறாக்களைக் காணவில்லை. மதியம் வரை அடிக்கடி எட்டிப்பார்த்துக் கொண்டே இருந்தார். 3 மணி அளவில் ஒவ்வொரு புறாவாக வந்து அமர ஆரம்பித்தது. சரியாக அதே 16 புறாக்கள். பிரிக்க முடியாத தோழர்களைப் போன்று ஒன்றாக அமர்ந்திருந்தன.

தானியத்தைக் கொத்திக்கொண்டு வந்து சாப்பிடத்தான் அமர்ந்திருக்கின்றன என முதலில் நினைத்தார். ஆனால், அந்தப் புறாக்களை உன்னிப்பாகக் கவனித்தபோது அவை எதையும் உண்ணவில்லை என்பதைத் தெரிந்துகொண்டார். பிறகு என்னதான் செய்கின்றன, எதற்காக இங்கே கூடுகின்றன?

புறாக்கள் திடீரென பறந்து ஒரு வட்டமடித்துவிட்டுத் திரும்பவும் அதே இடத்தில் வந்து அமர்ந்தன.  இந்தச் சுவர், அதன் விளையாட்டு மைதானமா... அல்லது தியான மண்டபமா?  அந்தப் புறாக்களுக்குள் எது வயதானது? இவை எந்த ஊர்ப் புறாக்கள்? எதையுமே அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், அவற்றைப் பார்க்கப் பார்க்கக் கிளர்ச்சியூட்டுவதாகயிருந்தது. ஜன்னலில் நீண்டநேரம் சாய்ந்தபடி புறாக்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது பின்னால் நின்றபடி ஹெட்கிளார்க்  சுந்தரம் சொன்னார், ``முன்னாடியெல்லாம் நிறைய புறாக்கள் வரும் சார். இப்போ குறைஞ்சிருச்சு.’’

``நீங்க வாட்ச் பண்ணியிருக்கீங்களோ?’’ எனக் கேட்டார் கோவர்தன்.

``சும்மா பார்ப்பேன். இந்த ஆபீஸ்ல பொழுதுபோக வேற என்ன இருக்கு?’’ என்றபடியே தைலத்தை எடுத்து நெற்றியில் தேய்த்துக்கொண்டார்.

``இந்தச் சுவர்ல மட்டும்தான் புறா வருதா, இல்லை வேற இடங்களும் இருக்கிறதா?’’ எனக் கேட்டார் கோவர்தன்

``மசூதி முன்னாடி நிறைய புறாக்கள் இருக்கும். பழைய சஃபையர் தியேட்டர் எதிர்லகூட நிறைய நிக்கும். இப்போ அமெரிக்காக்காரன் எம்பசிக்குப் பயந்து அதுவும் ஓடிப்போயிருச்சோ என்னவோ!’’ எனச் சொல்லிச் சிரித்தார்

`ஒரே எண்ணிக்கையில் எதற்காக புறாக்கள் வருகின்றன,  எப்படி இந்த இணக்கம் உருவானது, இது வெறும் பழக்கம்தானா, புறாக்கள் ஏன் காட்டைத் தேடிப் போகாமல் இப்படி மாநகருக்குள் சுற்றிக் கொண்டிருக்கின்றன?’

அலுவலகத்தைவிட்டு இறங்கிப் போய்ப் புறாக்களை அருகில் பார்க்கவேண்டும்போலிருந்தது. செருப்பை மாட்டிக்கொண்டு கீழே இறங்கிப் போனார். கேட்டில் வாட்ச்மேனைக்கூடக் காணவில்லை. உலர்ந்துபோன புற்களும் பெயர் அறியாத செடிகளும் அடர்ந்திருந்தன. உள்ளே நடக்க நடக்க நெல் வேகவைக்கும்போது வரும் வாசனைபோல அடர்ந்த மணம். மழைத்தாரை வழிந்து கறுப்பேறிய சுவரில் சினிமா போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுக் கிழிந்துகிடந்தது.

கோவர்தன், புறாக்கள் நின்றிருந்த சுவரின் அருகில் போனார். ஆள் அரவம் கேட்டால் பறந்துவிடுமோ எனப் பதுங்கியபடியே ஓரமாக நின்றார். அந்தப் புறாக்களில் ஒன்று, அவரைக் கண்டபோதும் காணாதது போல கழுத்தைத் திருப்பிக்கொண்டது. புறாக்களின் விம்மல் சத்தம் தெளிவாகக் கேட்டு க்கொண்டிருந்தது. அது  காசநோயாளியின் இழுப்புச் சத்தம்போல இருந்தது.  புறாக்கள், தங்கள் நேரம் முடிந்துவிட்டது என்பதுபோல எழுந்து அவரைக் கடந்து பறந்தன.  விலகி நின்றிருந்த ஒற்றைப் புறா, தனியே கடந்து போனது.

அவர் அலுவலகத்துக்குப் போவதற்காகத் திரும்பி நடந்து வந்தபோது வாட்ச்மேன் ``என்ன சார், உள்ளே யாரைப் பார்க்கப் போனீங்க?’’ என்று கேட்டார்.

``பக்கத்து ஆபீஸ்’’ என்று சொல்லி, பொய்யாக ஒரு சிரிப்பை வெளிப்படுத்தினார்.

அதற்குமேல் வாட்ச்மேன் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. `இது என்ன பைத்தியக்காரத்தனம்... எதற்காக இப்படிப் புறாக்களைக் காண்பதற்காக இறங்கி வந்திருக்கிறேன்?’ என, தனக்குத் தானே கேட்டுக்கொண்டார். பிறகு, ஆபீஸ் வந்தபோதும் அந்தப் புறாக்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார்.

அன்றைக்கு ஆபீஸிலிருந்து நேரடியாக வீட்டுக்குப் போகாமல் எங்கெங்கெல்லாம் புறாக்கள் தென்படுகின்றன எனப் பார்க்கத் தொடங்கினார். அது வேடிக்கையான செயலாக இருந்தது. ஆனால், அவர் நினைத்ததுக்கு மாறாக நகரின் பல்வேறு இடங்களில் புறாக்கள் தென்பட்டன. ஒவ்வொன்றாக எண்ணத் தொடங்கினார். மனது ஏனோ மிகுந்த சந்தோஷமாகயிருந்தது.

p50b_1523340147.jpg

அதன் பிறகு ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தி.நகர், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், குரோம்பேட்டை, தாம்பரம் என வீட்டுக்கு வரும் வழியெங்கும் புறாக்களைத் தேடிக் காண ஆரம்பித்தார்.  எங்கே, எந்த இடத்தில் எத்தனை புறாக்கள் ஒன்றுசேருகின்றன. அவை எப்படி இருக்கின்றன என ஆராய ஆராய, மகிழ்ச்சி பெருகியது.

புறாக்களின் எண்ணிக்கையைக் குறித்துக்கொள்வதற்காகச் சிறிய பாக்கெட் நோட் ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டார். திடீரென நகரம் புதிதாக உருமாறியதுபோல் இருந்தது. எத்தனையோ அறியாத ரகசியங்களுடன் நகரம் இயங்கிக்கொண்டிருக்கிறது எனத் தோன்றியது. இத்தனை ஆயிரம் புறாக்கள் இந்த நகரில் இருப்பது ஏன் மக்கள் கவனத்தை ஈர்க்கவேயில்லை?

இந்தப் புறாக்கள் ஏன் இடிபாடுகளுக்குள்ளேயே அதிகம் வாழுகின்றன? புறாக்கள் துறவிகளா, ஏன் அவை எதற்காகவும் உரத்துச் சண்டையிடுவதில்லை? மசூதிகளில், கோயில்களில், தேவாலயங்களில் ஏன் அதிகம் புறாக்கள் காணப்படுகின்றன? ஒருவேளை, புறாக்கள்தான் வானுலகின் தூதுவர்களா!  பார்க்கப் பார்க்க, புறா விசித்திரமான பறவையாகத் தோன்ற ஆரம்பித்தது.

வீட்டுக்கு வந்த பிறகு ஏதேனும் ஒரு சேனலில் புறாவைப் பற்றி ஏதாவது காட்ட மாட்டார்களா எனத் தேட ஆரம்பித்தார். இணையத்தில் தேடி விதவிதமான புறாக்களின் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டே இருந்தார். வீட்டில் அவரது திடீர் மாற்றத்தை மகளோ, மகனோ, மனைவியோ புரிந்துகொள்ளவேயில்லை

ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் புறாக்களைத் தேடிச் சுற்ற ஆரம்பித்தார். `புறாக்கள் ஒருமுறை ஜோடி சேர்ந்தால் அது பிரிந்திடாது’ என்றார்கள். அது உண்மைதான் என நினைத்துக்கொண்டார். வளர்ப்புப் புறாக்கள் எங்கே விட்டாலும் வீடு திரும்பிவிடக்கூடியவை என்பது அவருக்கு வியப்பாக இருந்தது.

தன்னைப்போல்தான் அந்தப் புறாக்களுமா? வீடுதான் அதன் உலகமா? கூண்டை ஏன் இவ்வளவு நேசிக்கின்றன? வானம் எவ்வளவு பெரியது... அதில் பறந்து மறைந்து போய்விடலாம்தானே!

தாங்கள் எப்போதும் அமரும் சுவரை இடித்துவிட்டால்கூட அதே இடத்துக்குப் புறாக்கள் திரும்பி வந்துகொண்டிருக்கும் என்றான் உணவு சேமிப்புக் கிடங்கு வாட்ச்மேன். இது மடமைதானா, அல்லது `அந்தச் சுவர்கள் வெறும் தங்கிச் சென்ற இடமில்லை’ என புறாக்கள் உணர்ந்துள்ளனவா!

புறா பித்து பிடித்துக்கொண்ட பிறகு, அவர் சில நாள்கள் மின்சார ரயிலில் பயணம் செய்தார். சில வேளைகளில் நகரப் பேருந்தில் இருந்தபடியே புறாக்கள் நிற்கும் இடத்தைக் கடந்து போனார். ஒருமுறை அப்படி ராயப்பேட்டையில்  ஷேர் ஆட்டோ ஒன்றில் போய்க்கொண்டிருந்தபோது அருகில் அமர்ந்திருந்த பர்தா அணிந்த இளம்பெண் ஒருத்தி, ஆள்களை இடித்துக்கொண்டு இறங்க முற்படுவள்போல உடலை வெளியே இழுத்துத் தகரக்கூரை ஒன்றின் மீதிருந்த புறாக்களை வேடிக்கை பார்த்தாள். அது அவருக்குச் சிரிப்பாக இருந்தது.

ஷேர் ஆட்டோவில் இருந்தவர்கள், அவளது செய்கையால் எரிச்சலடைந்து திட்டினார்கள். அதைப் பொருட்படுத்தாதவள்போலச் சிரித்துக்கொண்டாள். பிறகு அவர்  கேட்காமலே சொன்னாள்,

``எனக்குப் புறான்னா ரொம்பப் பிடிக்கும். எங்க வீட்ல புறா வளர்த்திருக்கோம். வாப்பா, புறா பந்தயமெல்லாம் விடுவாங்க!’’

`அப்படியா!’ என்பதுபோலத் தலையாட்டிக் கொண்டார்

ஷேர் ஆட்டோ போய்க்கொண்டேயிருந்தது. ஒரு வளைவை நோக்கிச் செல்லும்போது அவராகச் சொன்னார் ``உங்க லெஃப்ட்ல ஒரு மெக்கானிக் ஷாப் வரும். அதுமேல புறாக்கூட்டம் இருக்கும் பாருங்க.``

அவர் சொன்னதுபோலவே புறாக்கள் கூட்டமாக இருந்தன. அவள் அவசரமாகப் புறாக்களை எண்ணத் தொடங்கினாள். அவள் எண்ணி முடிப்பதற்குள் அவர் எண்ணிக்கையைச் சரியாகச் சொன்னார்.
``உங்களுக்கு எப்படிப் புறா இங்க நிக்கும்னு தெரியும்?`` என்றாள்.

`இருபது வயதுப் பெண் இப்படிச் சிறுமிபோல வியப்போடு கேட்கிறாளே!’ என நினைத்தபடியே ``எல்லாப் புறாக்களையும் எண்ணி, கணக்கு எடுத்து வெச்சிருக்கேன்`` என்று தனது சிறிய நோட்டை எடுத்துக் காட்டினார்.

அவளால் நம்ப முடியவில்லை.

சட்டைப்பையில் இருந்த பாக்கெட் நோட்டை அவளிடமே கொடுத்தார். அவள் அவசரமாக அதைப் புரட்டினாள். உள்ளே இடம்வாரியாகப் புறாக்களின் எண்ணிகை பதிவுசெய்யப்பட்டிருந்தது

``எதுக்குப் புறாவை கவுன்ட் பண்றீங்க?`` என்று கேட்டாள்.

``சும்மாதான்`` எனச் சொல்லிச் சிரித்தார்

``எனக்கும் இப்படிச் செய்யணும்னு ஆசையா இருக்கு. ஆனா, ஹஸ்பண்டுக்கு இதெல்லாம் பிடிக்காது`` என்றபடியே அந்த நோட்டைத் தடவிக்கொடுத்தாள்.

பாலத்தையொட்டி ஷேர் ஆட்டோ நின்றபோது, அதிலிருந்து இறங்கும் முன்னர் அவரிடம் அந்த நோட்டைக் கொடுத்தபடியே சொன்னாள், ``புறாவை ஃபாலோ பண்ணக் கூடாது. அப்படிப் பண்ணினா, அது கனவுல வந்துடும்.``

அப்படி அவள் சொன்னது, அவரை மிகவும் சந்தோஷப்படுத்தியது. அன்றைய கனவில் ஒரு புறாவாவது வந்துவிடாதா என ஏங்கினார். உண்மையில் அவருக்குக் கனவு வருவதேயில்லை. அலுவலகத்தில் சில வேளை பகற்கனவு வந்திருக்கிறது. ஆனால், இரவில் கனவே வருவதில்லை.

வீட்டுக்கு வரும்போது அந்தப் பெண்ணைப் பற்றியும் புறாக்களைப் பற்றியுமே நினைத்துக்கொண்டு வந்தார். இரவு 9 மணிக்கெல்லாம் உறங்கவும் சென்றுவிட்டார். அவர் கனவில் புறாக்கள் வரவேயில்லை. ஆனால், அவரது வாழ்க்கையில் முன்பு ஒருபோதுமில்லாத புதிய சந்தோஷம் பரவத் தொடங்கியிருந்தது.

காலையில் சவரம் செய்து கொள்ளும்போதே `அந்தப் பர்தா அணிந்த பெண்ணை மீண்டும் காண்போமா?’ என யோசித்தபடியே சவரம்  செய்தார்.  திடீரென அவரும் புறாவைப்போல வெள்ளை உடை அணிந்துகொள்ள ஆசைப்படத் தொடங்கினார்.  கோபத்தில் கத்துவதைவிட்டு, மெதுவாகப் பேச ஆரம்பித்தார். கண்ணுக்குத் தெரியாத ஒழுங்கு, புறாக்களுக்குள் இருக்கின்றன. அவை உத்தரவுக்காகக் காத்திருப்பதில்லை. ஆனால், சட்டென ஒரே நேரத்தில் ஒன்றாகப் பறக்கின்றன. காகங்களைப்போலக் கத்திச் சத்தம்போட்டுப் பசியை வெளிக்காட்டிக்கொள்வதில்லை எனப் புறாக்கள் அவருக்குப் புதிய வகை அனுபவத்தின் கதவைத் திறந்துவிட்டன.

நகரம் என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல, ஆயிரமாயிரம் புறாக்கள், பறவைகள், நாய்கள், பூனைகள், எலிகள், நுண்ணுயிர்கள் எல்லாமும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கும்தான். அதனதன் பசிக்கு அதனதன் தேடல். யாருக்கும் எதுவும் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. நகரில் எதுவும் நிரந்தரமில்லை. கிடைக்கிற சுவரில் நிற்கவேண்டியதுதான். அவருக்கு, வாழ்க்கையைப் பற்றியிருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போக ஆரம்பித்தது.

பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று  ராயப்பேட்டை மணிக்கூண்டுப் பகுதியில் புறாக்களைத் தேடி அலைந்துகொண்டிருந்தபோது ``நான்தான் முதல்ல  பார்த்தேன்” என்ற குரல் கேட்டது.
அதே பர்தா அணிந்த இளம்பெண். கையில் ஒரு கூடையுடன் இருந்தாள். அவளைப் பார்த்துச் சிரித்தார்.

``இங்கேயா சார் உங்க வீடு?`` என்று கேட்டாள்

``இல்லை, கிழக்குத் தாம்பரம்`` என்றார்.

``புறாவைத் தேடியா இங்க அலையுறீங்க?” எனக் கேலிசெய்தாள்.

``அதெல்லாமில்லை. இன்னிக்கு ஹாலிடே. அதான் இப்படி...” எனச் சமாளித்தார்.

அவள் சிரித்தபடியே ``எங்க வாப்பாகூட உங்களை மாதிரிதான். எந்நேரமும் புறா புறானுதான் கிடப்பாரு. அவரு புறாகூடப் பேசுவாரு. நீங்க பேசுவீங்களா?”

``அதெல்லாம் தெரியாது”

``நாம பேசினா புறாவும் பேசும்னு வாப்பா சொல்வாரு”

``நீங்க சொன்னா நிஜமாத்தான் இருக்கும்” என்றார் கோவர்தன்.

``என்மேல அவ்வளவு நம்பிக்கையா?” எனக் கேட்டாள் அந்த இளம்பெண்.

என்ன சொல்வது எனத் தெரியாமல் மௌனமாக நின்றார்.

``அந்த நோட்டை எனக்குக் குடுப்பீங்களா?”

``தந்தா, என்ன குடுப்பே?”

``ஒரு டீ வாங்கித் தர்றேன்”

``நிஜமாவா?”

``ஆமா. ஆனா, நோட்டை எனக்கே குடுத்தரணும்”

``நீ என்ன செய்வே?”

``வீட்ல அதை வெச்சுக்கிட்டு நானா கற்பனை பண்ணிக்கிட்டு இருப்பேன். அதான் எந்த இடத்துல எத்தனை புறா வருதுனு டீடெயிலா போட்டிருக்கீங்களே!”

``நேர்ல போய்ப் பார்க்க ஆசை வராதா?”

``நான் என்ன ஆம்பளையா... புறா பின்னாடி சுத்திக்கிட்டே இருக்கிறதுக்கு, பொழப்பைப் பார்க்க வேணாமா?”

அவள் சொன்னவிதம் அவரைக் குத்திக் காட்டியதுபோல அவளுக்குத் தோன்றியிருக்கக் கூடும்.

``நான் உங்களைச் சொல்லலை” என்று மறுபடியும் சிரித்தாள்.

``உண்மையைத்தானே சொன்னே?” என்றார்.

``உங்களுக்குக் கோபம் வரலையா?” எனக் கேட்டாள்

``இல்லை” எனத் தலையாட்டினார்.

``அப்போ வாங்க” என அருகில் உள்ள டீக்கடைக்கு அழைத்துப்போய் ஒரு டீ வாங்கித் தந்தாள்.

``நீ குடிக்கலையா?” என்றதற்கு ``ஐயயோ! ரோட்ல நின்னு டீ குடிச்சேன்னு தெரிஞ்சா கொன்னுபோட்ருவாங்க” என்றாள்.

கோவர்தன் டீயை மெதுவாக உறிஞ்சிக் குடித்தபடியே அவளையே பார்த்துக்கொண்டிருந்தார். அவள் கைகள் அந்த பாக்கெட் நோட்டுக்காக நீண்டபடியிருந்தன.

``நோட்டைத் தர மாட்டேன்” என்றார் கோவர்தன்.

``என்னை ஏமாத்திட்டீங்களா?” என வருத்தமான குரலில் கேட்டாள்.

``இல்லை, சும்மா சொன்னேன். இந்தா” என அந்த நோட்டை எடுத்து நீட்டினார்.

p50c_1523340165.jpg

அவள் வாங்கிப் பிரிக்கக்கூட இல்லை. கையில் இருந்த கூடையில் போட்டுக்கொண்டாள்.

``உன் பேரு என்ன?” என்றார் கோவர்தன்.

அவள் பெயரைச் சொல்லாமலேயே ரோட்டைக் கடந்து போனாள். டீக்கடை முன்பாகவே நெடுநேரம் நின்றுகொண்டிருந்தார் கோவர்தன். சந்தோஷமும் வருத்தமும்  ஒன்றுகலந்து  மனதில் பீறிட்டுக்கொண்டிருந்தன.
அன்று இரவு, கடைசிப் பேருந்தைப் பிடித்துதான் வீடு திரும்பினார். வீடு வந்த பிறகும் உறக்கம் கூடவில்லை. எழுந்து சாய்வு நாற்காலியில் படுத்தபடியே அந்தப் பெண்ணைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தார். `அந்தப் பெண் இந்நேரம் வீட்டில் தன் பாக்கெட் நோட்டை வைத்துக்கொண்டு புறாக்களைக் கற்பனையில் பார்த்துக் கொண்டிருப்பாள்’ எனத் தோன்றியது

திடீரென, தான் 25 வயதுக்குத் திரும்பிவிட்டதுபோல் இருந்தது. தனது பழைய கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்களை பீரோவிலிருந்து எடுத்துப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பையன் நான் அல்ல. அந்தப் புகைப்படங்களிலிருந்து வெகுதூரம் விலகி வந்துவிட்டேன். இப்போதைய தன் முகம் தனக்கே பிடிக்க வில்லை. அன்று அவளது நினைவாகவே சாய்வு நாற்காலியில் உறங்கிப்போனார். கனவில் புறா வந்திருந்தது.
அதன் பிறகு அவர் ஒவ்வொரு முறை புறாவைக் காணும்போது அவருக்கு அந்த இளம்பெண் நினைவு வரத் தொடங்கியது. புறாக்களை எண்ணத் தொடங்கியபோது அவரை அறியாமல் ஒரு குற்றவுணர்ச்சி எழுந்தது. `இதைத் தன் மனைவி கண்டுபிடித்துவிடுவாளா!’ எனச் சந்தேகம்கொண்டார். பிறகு, தனக்குத்தானே `இது வெறும் சந்திப்புதான்.  அதற்குமேல் ஒன்றுமில்லை’ எனச் சொல்லிக் கொண்டார்.

பர்தா அணிந்த இளம்பெண்ணைப் பற்றி நினைக்க நினைக்க, தன் மீது ஒரு புறா வந்து அமர்ந்துவிட்டுப் பறந்து போய்விட்டதுபோல் இருந்தது.

`தான் ஒரு கற்சுவர். சுவர்கள் விரும்பினால் புறாக்கள் வந்து விடுவ தில்லை. புறாக்கள் அமர்வ தாலேதான் சுவர் அழகுபெறுகிறது. சுவர்கள், புறாக்களை நினைத்து வருந்திக்கொண்டே இருக்க வேண்டியதுதான்போலும்’ என நினைத்துக்கொண்டார்

ஹெட்கிளார்க், அவர் காதில் விழும்படி யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்...

``திங்கறதும் தூங்குறதும் மட்டுமா சார் மனுஷன்... அவனுக்குனு ஒரு சந்தோஷம் வேணாமா? என்ன சார் இருக்கு இந்த ஊர்ல? எல்லாத்துக்கும் காசு காசுனு புடுங்கிருறாங்க. வீடும் அப்படித்தான் இருக்கு... ஊரும் அப்படித்தான் இருக்கு.’’

``சரிதான்’’ என்று சத்தமாகச் சொன்னார் கோவர்தன்.

ஏன் இவ்வளவு சத்தமாகச் சொன்னார் என, குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் ஹெட்கிளார்க்.

அவர் பார்வையில் படாமல் தலையைக் குனிந்துகொண்டார் கோவர்தன். அந்த நிமிடம் இருக்கையையொட்டிய ஜன்னல் திறந்திருப்பது தொந்தரவாகத் தோன்றியது.

https://www.vikatan.com/

ஒரு நிமிடக் கதை: விழுதுகள்

1 week ago
ஒரு நிமிடக் கதை: விழுதுகள்

 

 

vizudhukal-oru-nimida-kadhai

 

தோட்டத்தில் சாய்ந்து கிடந்த மரங்களை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் அருணகிரி.

“பாருங்க , புள்ளைய போல பாத்து பாத்து முப்பது வருஷமா வளர்த்து வந்தீங்க.. ஒரே நாள்ல அடிச்ச புயல்ல எல்லாம் சாஞ்சிடுச்சு” என்றார் அவரது மனைவி கமலா.

அருணகிரி ஓய்வு பெற்ற அரசு அலுவலர். எழுபது வயதாகிறது உழைத்து சம்பாத்தித்து கட்டிய வீட்டைச் சுற்றி தென்னை, மா, கொய்யா, வாழை என மரங்களை நட்டு ஆசையாக வளர்த்து வந்தார்.

அவரின் இரண்டு மகன்களும் வெளிநாட்டில் செட்டிலான பிறகு, அவருக்கும், கமலாவுக்கும் அந்த மரங்கள்தான் துணை. அதிகாலை நேரத்தில் நடை பயிற்சி செய்யவும், நண்பகலில் ஆசுவாசப்படுத்துவதும், மாலை நேரங்களில் பறவைகளின் ஒலியை கேட்கவும், அந்த மரங்கள்தான் அவர்களுக்கு துணையாக இருந்தன.

விழுந்து கிடந்த மரக்கிளை ஒன்றை வாஞ்சையுடன் தடவியவாறு அதை ஓரமாக இழுத்துப் போட்ட அருணகிரியிடம், “உங்களுக்கு எதுக்குங்க இந்த வேலை? ஆளைக் கூட்டி வந்து எல்லாத்தையும் சுத்தப்படுத்திட்டு இந்த எடத்துல ஒரு அறையை கட்டிவச்சா வெளிநாட்டுல இருந்து நம்ம பசங்க வந்தா தாங்குவாங்க” என்றார் கமலா.

அதை காதில் போட்டிக்கொள்ளாத அருணகிரி, “கமலா, இங்க பாரேன்” என்றார். அவர் காட்டிய இடத்தில் பறவை கூடு ஒன்று கீழே விழுந்து பறவை முட்டைகள் நொறுங்கிக் கிடந்தன.

கண் கலங்கிய அருணகிரி, “30 வருஷம் இந்த மரங்களை வளர்த்து வீணாகிடுச்சுன்னு வருத்தப்பட்டியே.. முப்பது வருஷம் வளர்த்த நம்ம புள்ளைங்க மட்டும் நம்மள விட்டுட்டு போகலையா? ” என்றார்.

“அது அவங்கவங்க ஆசாபாசம்ங்க . அவங்களை வளர்க்கறதோட நம்ம கடமை முடிஞ்சுடுது” என்றார் கமலா.

“வெளிநாட்டுக்கு போன உன் புள்ளங்களுக்காக வீடு கட்டணும்னு நினைக்கிற. இந்த மரங்களை நம்பி இங்க வந்து கூடு கட்டுன பறவைகளோட கதியை பாரு. நம்மை நம்பி வர்ற பறவைகளுக்கு நாம ஏன் திரும்பவும் இருப்பிடம் தரக்கூடாது?” என்றார் அருணகிரி.

மறுநாளே தன் தோட்டத்தில் புதிய மரக்கன்றுகளை நட குழி வெட் டியவாறு, “இந்த மரம் வளர்ந்து நிக்கறப்போ நாம இருக்க மாட் டோம். ஆனா பறவைங்க இங்க நிச்சயம் இருக்கும்” என்றார் நம்பிக்கையுடன்.

http://www.kamadenu.in/

உதிரக் கள்: இலங்கைப்பயண அனுபவங்கள்

1 week 1 day ago
உதிரக் கள்: இலங்கைப்பயண அனுபவங்கள்
29386887_10209200878613573_584066072583487421_n

விமான நிலையத்தில்

ஒவ்வோர் ஆண்டும் தொடங்குவதற்கு முன்னரே அந்த ஆண்டுக்கான வல்லினத்தின் செயல்திட்டங்களைக் குழுவாக அமர்ந்து விவாதிப்பது வழக்கம். பெரும்பாலும் திட்டமிடப்படும் 95 சதவிகிதம் நடவடிக்கைகள் செயலாக்கம் பெற்றுவிடுவதுண்டு. திட்டங்கள் வகுப்பதில் இரண்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம். முதலாவது, அது தனி ஒருவருக்கு மட்டும் பலனளிக்கும் விதமாக அமைந்துவிடக்கூடாது. அடுத்தது, அத்திட்டம் ஏதோ ஒருவகையில் மலேசியத் தமிழ் இலக்கியத்தை ஒருபடி முன்னகர்த்திச் செல்ல வேண்டும். இலங்கைப் பயணம் அப்படி மனதில் தோன்றியதுதான். ‘வல்லினம் 100’ களஞ்சியத்தை இலங்கையில் அறிமுகம் செய்வதன் வழி மலேசிய – சிங்கப்பூர் நவீன தமிழ் இலக்கியம் மட்டுமல்லாது சமகாலத்தில் இந்நாட்டின் அரசியல், சமூகச் சூழலையும் இன்னொரு நிலப்பரப்புக்குக் கடத்த முடியும் எனத்தோன்றியது.

பொதுவாகவே ஒரு நாட்டின் பொருளியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களோடு அந்நாட்டில் பல்லடுக்கு நிலையில் வாழும் மக்களையும் எவ்வித ஆய்வும் இன்றி பொருத்திப் பார்ப்பது மந்தமான பார்வை. மலேசியத் தமிழர்கள் கலை வெளிப்பாட்டின் சாதக, பாதகங்களை அறிய அவர்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் உள்வாங்க வேண்டியுள்ளது. ‘வல்லினம் 100’ களஞ்சியம் அத்தகையதொரு குறுக்குவெட்டு பார்வையை வழங்கவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. எனவே அதை சிங்கப்பூர், தமிழகத்தை அடுத்து இலங்கையில் பரவலான கவனத்திற்கு எடுத்துச் செல்வது உலகத் தமிழர்கள் பார்வைக்கு மலேசியத் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பக்கத்தைக் காட்டும் பணி என்றே உருவகித்துக்கொண்டோம்.

பயணம் தொடங்கும் முன்னரே இரு குழப்பங்கள் உருவாயின. முதலாவது மலிண்டோ விமானத்தில் ஐவருக்கு மட்டுமே டிக்கெட் இருப்பதாகக் காட்டியது. பகல் நேர விமானம். விலையும் மலிவாக இருந்தது. பகலில் சென்றால் ஓய்வெடுக்க நேரம் கிடைக்கும் என ஐவருக்குப் பதிவு செய்ததும், விமானத்தில் இருக்கைகளின் எண்ணிக்கை குறைந்தபடியால் மேலும் இருவருக்கான டிக்கெட் இருப்பதாகக்கூறி விலையை அதிகரித்துக்காட்டியது. எனவே அதே நேரத்தில் பயணமாகவிருந்த ஏர் ஆசியாவில் டிக்கெட்டை பதிவு செய்தேன். அடுத்ததாக, பயணத்துக்கு இரு வாரம் இருக்கும்போது மலிண்டோ தனது பயண நேரத்தை இரவுக்கு மாற்றி மன்னிப்பும் கேட்டுக்கொண்டது. விமானச் சேவை நிலையங்களின் மன்னிப்புக் கோரல் காதலிகளின் மன்னிப்புக் கோரலை ஒத்தது. அதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். மறுத்தால், அடம்பிடித்தால் சிக்கல் நமக்குத்தான். எனவே மார்ச் 18 காலையில் ஏர் ஆசியா விமானத்தில் ஶ்ரீதர் ரங்கராஜும் சரவண தீர்த்தாவும் இலங்கைக்குப் பயணமாக நாங்கள் (நான், அ.பாண்டியன், விஜயலட்சுமி, தயாஜி, கங்காதுரை) நள்ளிரவில் இலங்கையை அடைந்தோம்.

இது எனக்கு இரண்டாவது இலங்கைப் பயணம். 2011இல் முதல் முறை சுற்றுப்பயண நிறுவனத்தின் ஏற்பாட்டில் சென்றதால் அம்மாவின் கைப்பிடித்துச் செல்லும் குழந்தையைப்போல வேடிக்கை பார்த்தபடியே இழுக்கும் இடமெல்லாம் கேள்விகள் இன்றித் திரிந்தேன். இப்போது அப்படியில்லை. முழுப் பயணத் திட்டத்தையும் நானே வடிவமைத்திருந்தேன். எனவே ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. பள்ளியிலும் தொடக்ககால வல்லினம் நண்பர்களுடனும் இவ்வாறு பயண ஏற்பாடுகளைச் செய்த அனுபவம் உண்டு. பயண உற்சாகத்தைக் கெடுப்பவர்கள் இரு ரகம். ஒன்று குசுகுசுவென குழுவில் யாருடனாவது ஒருவர் ரகசியமாகப் புலம்பிக்கொண்டே இருப்பதைக் காணலாம். அவர் ஒருவரே குழுவின் மொத்த மன உந்துதலையும் நஞ்சாக்குபவராக இருப்பார். அவர் குறைகள் வெளிப்படையானவை அல்ல. எல்லாவற்றிலும் சிறு சலிப்பையும் அதிருப்தியையும் பிசுபிசுவென நத்தைச் சுவடுபோல் இழுத்துச் செல்வார். அடுத்தது புகார்களுடனேயே சுற்றும் நண்பர்கள். அவர்களிடம் எப்போதும் ஒரு குற்றப்பத்திரிகையும் அதற்கு சரியான தீர்வுகளும் இணைந்தே இருக்கும். ஆலோசனை வழங்குவதில் திறம் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் எந்தக் காரியத்திலும் ஈடுபட்டுச் செய்யமாட்டார்கள்.

இது இலக்கியம் சார்ந்த பயணம் என்பதாலும் கட்டுப்பாடான செலவுகளுக்குட்பட்டது என்பதாலும் இதில் உண்டாகும் அசௌகரியங்களுக்கு நான் மட்டுமே பொறுப்பில்லை என்பதில் நண்பர்களுக்கும் தெளிவிருந்ததால் கொஞ்சம் இலகுவாகவே பயணம் தொடங்கியது. 14 பேர் அமரக்கூடிய பெரிய வேனுடன் வந்தார் திலிப். அடுத்த 7 நாட்கள் எங்களுடனே பயணம் செய்யப்போகிறவர். போர்க் காலத்தில் அரசு சார்பற்ற இயக்கமான unicefஇல் பணியாற்றியவர். இப்போது அவ்வியக்கத்தின் தேவை குறைந்துவிட்டதால் வாகன ஓட்டுனராகப் பணியாற்றுகிறார். வண்டி இரவோடு இரவாக கண்டியை நோக்கிச் சென்றது.

19.3.2018 – கண்டி

32

எம்.ஏ.நுஃமானுடன்

பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் எங்களுக்காகக் காத்திருந்தார். 70 வயதைக் கடந்துவிட்டது என அவர்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவ்வதிகாலையில் அவரது சுறுசுறுப்பு ஆச்சரியமாக இருந்தது. கமலஹாசனின் ஒப்பனையாளர் மூலம் வயதைக் கூட்டிக்காட்டுகிறாரோ என ஐயம் எழாமல் இல்லை. எப்போதும்போல மாறாத அன்பு. சரவண தீர்த்தாவும் ஶ்ரீதரும் பேராசிரியர் மகேஸ்வரன் அவர்களின் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். மறுநாள் பேராதனை பல்கலைக்கழகத்தில் நடக்கவிருந்த எங்களது முதல் சந்திப்புக்கூட்டம் சாத்தியப்படாதென புறப்படும் முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர் போராட்டம் தொடர்ந்து நடந்ததால் நுவரெலியா செல்வதெனத் திட்டமிட்டோம். கடந்த முறை பயணத்தில் என்னை அதிகம் கவர்ந்த மாவட்டம். கிட்டத்தட்ட கேமரன் மலை. ஆனால் பிரேசரைப் போன்ற திடுக்கிடவைக்கும் வளைவுகள். வளைவுப் பாதையில் நுழைந்த ஒரு மணி நேரத்தில் காலையில் உண்ட சம்பலில் கலந்திருந்த தேங்காய்பூ ஒத்துக்கொள்ளாமல் குமட்டியது. பாதி மலையில் இறங்கி வாந்தி எடுத்தேன். பின் சீட்டில் அமர்ந்திருந்ததால், வளைவுகளின் தாக்கம் அதிகமாக இருந்தது. பயணத்தில் எங்களுடன் பேராதனைக் கல்லூரி மாணவன் டர்ஷனும் இணைந்துகொண்டார். பயணத்தில் பெரும்பாலும் அமைதியாக வந்தவர் பின்னர் மெதுவாக “நீங்கதான் நவீனா?” என்றார். கேள்விப்பட்டிருப்பதாகக் கூறினார். நல்லபடியாகத்தான் கேள்விப்பட்டுள்ளார் என அவர் முகத்தில் தெரிந்தது. இலக்கியம் வழி நெருக்கமானார்.

01-1.jpg

கண்டியில் இருந்து சில மணி நேர பயணத்துக்குப்பின் நுவரெலியாவில் எங்களைப் பேராதனைப் பல்கலைக்கழக  விரிவுரையாளர் சரவணகுமார் வரவேற்றார்.  மலையகத் தமிழர். பேராசிரியர் எம்.ஏ.நுஃமானின் மாணவர். நிறைந்த அக்கறையுடன் எங்களுக்கு விளக்கங்கள் வழங்கினார். மலேசிய இலக்கியம் குறித்தும் நாங்கள் வந்த நோக்கம் குறித்தும் உரையாடினோம். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மலேசியத் தமிழ் இலக்கியத்தை அறிமுகம் செய்துவைக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டோம். மலேசியத் தமிழ் இலக்கியம் என்பது எழுத்தாளர் சங்கம் கொண்டு செல்லும் சத்தற்ற சதைப்பிண்டம் இல்லை என்றும் அதன் உயிர்ப்பான பகுதிகள் மறைக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினேன். அவரும் இலங்கை இலக்கியங்களில் வாசிக்கப்பட வேண்டிய நூல்கள் குறித்துக் கூறினார்.

29594449_1666276790075724_1872431180308015054_n

 

அவர் வழிகாட்டலில் ஆங்கிலேயர்கள் ஆட்சியின் எச்சங்களை ஆங்காங்கு பார்க்க முடிந்தது. பிரிட்டிஷ் ஆட்சியில் உருவாகி இன்றும் செயல்பட்டு வரும் முதன்மை தபால் நிலையம் அங்கு வரலாற்றுத் தடமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மலைப் பிரதேசங்களில் காணப்படும் வெண் கட்டிடங்களாக இல்லாமல் சிவப்பு செங்கற்களால் தனித்துத் தெரிந்தது. நிறைய வீடுகளை நெருக்கி ஒட்டிவைத்ததைப் போல தொலைவில் இருந்து பார்க்கும்போது அந்தத் தபால்நிலையம் காட்சியளித்தது.  பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்தே விடுமுறைத்தளமாக உள்ள இந்தப் பகுதியில் புராதன வரலாற்றுத் தடங்கள் என ஒன்றும் இல்லை என்றார் சரவணகுமார். ஆனால் தொன்மங்கள் இருந்தன.

03

அசோகவனத்தில்…

இங்கு சீதா கோவில் உள்ள இடம்தான் சீதை இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த அசோகவனமாக நம்பப்படுகிறது. கோயிலுக்கு அருகில் ஓடும் நதிக்கு எதிர்ப்புறம் காடுடன் ஒட்டியிருக்கும் பெரும்பாறையில் உள்ள பள்ளம் அனுமனின் பாதமாக வணங்கப்படுகிறது. குரங்குகள் நிறைந்த வனப்பகுதி. பத்துமலையில் திரிவதைப்போன்ற குரங்குகள்தான் என்றாலும் இவை வேறு ரகம். தலைமுடி மட்டும் நடுவில் வகிடெடுத்து சீவியதுபோல இருந்தது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் அந்த நதி பெரும் வீச்சில் பாய்ந்திருக்கும். பின்னிருக்கும் கானகம் மிரட்டும் முரட்டுத்தோற்றத்தில் இருந்திருக்கும். இரண்டுக்கும் நடுவில் ஒரு பெண் தன்னந்தனியாக நின்றிருந்தால் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்து பார்த்தேன். தொன்மங்கள் அவ்வாறு கற்பனையைக் கிளறுபவைதான். அந்தக் கற்பனையைச் சுமந்துகொண்டுதான் ஆதாரங்களை அதற்கேற்ப திரட்டித் திரட்டி உருவாக்குகிறார்கள். அங்கிருந்த சில ஏரிகளைப் பார்த்துவிட்டு மலையக மக்களைப் பார்க்கச் சென்றோம்.

தோட்ட வீடுகள்

மலையக லயங்கள்

மலேசியத் தமிழர்களைப் போலவே 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தேயிலை, ரப்பர், காப்பி முதலிய தோட்டப்பணிகளுக்காகத் தமிழ்நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட மலையகத் தமிழர்களைச் சந்தித்து உரையாட ஆர்வம் இருந்தது. இவர்களுடன் தெலுங்கர்களும் மலையாளிகளும் உடன் வந்திருந்தாலும் பெரும்பாலும் இங்கு தமிழ் பேசுபவர்கள் வாழ்ந்ததால் பொது மொழி தமிழாக உள்ளது. மலேசியா போல தோட்டத்தில் வேலை செய்தால்தான் வீடு வழங்கப்படும் எனும் சட்டமெல்லாம் அங்கு இல்லை. ஆனால் நாங்கள் பார்த்த தோட்ட வீடுகள் மலேசியாவில் 70களில் இருந்த லயன் வீடுகளை நினைவுபடுத்தின. ஒரே காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து மலேசியாவுக்கும் இலங்கைக்கும் குடிபெயர்ந்திருந்தாலும் மலையகத்தமிழர்கள் மலேசியத்தமிழர்கள் அடைந்துள்ள வளர்ச்சியை எட்டாமல் இருப்பது வருத்தத்தைக் கொடுத்தது. அவர்கள் இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்தப்படும் நிலை, குறைந்த நாள்கூலி, அரசு வேலை வாய்ப்பில் பாகுபாடு, மிக சமீபத்தில் வழங்கப்பட்டுள்ள ஓட்டுரிமை என சரவணகுமார் அவர்களின் வாழ்வியல் சிக்கல்களை கொஞ்சம் விளக்கினார்.  வீடுகளின் அருகில் இருக்கும் நிலங்களில் பயிர் செய்கின்றனர். நிலம் அவர்களுக்குச் சொந்தம் இல்லை. ஆனால் பயிர் செய்யவோ அதை விற்கவோ தடையில்லை. நாங்கள் ஒரு குடும்பத்தினரிடம் பேச்சுக் கொடுத்தோம். அவர்கள் கன்னடத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். தமிழைச் சரளமாகப் பேசினர். வீட்டின் உட்புறம் பார்க்க அனுமதி கொடுத்தனர். தொடக்ககாலத்தில் கட்டித்தரப்பட்ட வீடுகள் இன்னமும் சில எஞ்சியிருந்தன. உபயோகத்தில் இல்லாத அவற்றில், ஆரம்பகால மலேசியத் தோட்ட வீடுகளின் கதவுகள் இரண்டாகவும் நான்காகவும் இருப்பதுபோன்றே பகுக்கப்பட்ட கதவுகள். ஆனால் தமிழக கிராம வீடுகளைப்போல சிறிய செவ்வக பரப்பில் அடக்கப்பட்ட வாழ்வு.

மதிய உணவுக்கு இரு குழுவாகப் பிரிந்து சென்று மீண்டும் சந்தித்தபோது நண்பர்களுக்கு முகம் கொஞ்சம் வெளிரிதான் இருந்தது. அமர்ந்த கடையில் ஈழப்போர் குறித்து வேகமாகப் பேசிக்கொண்டிருக்க அவ்வூர் தமிழர் “இப்பதான் கொஞ்சம் நிம்மதியா வாழறோம். ஏதும் இப்படி பொதுவுல பேசாதீங்க” என எச்சரித்ததாகச் சொன்னார்கள். அதன்பின் பயணம் முடியும்வரை நண்பர்கள் பொது இடங்களில் பெரும்பாலும் உஷாராகவே இருந்தனர். போர் முடிந்துவிட்டாலும் அதன் தாக்கமும் பயமும் அவ்வூர் காற்றில் கலந்துள்ள குளிர்போல வியாபித்தே இருந்தது.

02

சரவணகுமாருடன்

விரிவுரையாளர் சரவணகுமாரிடம் விடைபெறும்போது ‘வல்லினம் 100’இல் சில பிரதிகளை வழங்கினேன். அவர் அதை பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் வைப்பதாகச் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது. மீண்டும் கண்டியை நோக்கி இறங்கும்போது பாண்டியன் வாந்தியெடுத்தார். அதற்குப்பின் பெரும்பாலும் அவர் சோர்ந்தே பயணத்தில் இருந்தார். நான் அப்படியல்ல. வாந்தி எடுத்துவிட்டால் உற்சாகமாகி விடுவேன். அப்படி ஒரு வரம். இடையில் சுற்றுலா பயணிகளுக்கென விற்கப்படும் கலைப்பொருட்களின் விற்பனைக்கூடம் ஒன்றில் வண்டி நிறுத்தப்பட்டது. அதன் அருகில் தேயிலை தூள் கண்காட்சிக்கூடமும் விற்பனை மையமும் இருந்தன. பொதுவாகவே அதுபோன்ற விற்பனை மையங்கள் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளுக்கானவை. விலை பன்மடங்கு அதிகம். எனவே கவனமாக இருக்கும்படி நண்பர்களிடம் எச்சரித்தேன். கூடத்தின் உள் புகுந்து நாசுக்காக விற்பனைக்கூடத்தின் மேல் ஏறிச் சென்றேன். சுற்றிலும் மூன்று அருவிகள் பாலாக வடிந்துகொண்டிருந்தன. மாலை நெருக்கத்தில் கிரங்கடிக்கும் காட்சி. சரவணதீர்த்தா எனக்கு முன் கிரங்கிக் கிடந்தார். கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு கீழே இறங்கினால் விற்பனைக்கூட ஊழியர் ஶ்ரீதரிடம் அன்பொழுக விடைகொடுத்துக் கொண்டிருந்தார். தன் வாழ்நாளில் அந்த விற்பனை முகவர் அத்தனை அன்பை யாருக்கும் கொடுத்திருக்கமாட்டார். ஒரு புத்தர் சிலையை மலேசிய மதிப்பில் 300 ரிங்கிட் கொடுத்து ஶ்ரீதர் வாங்கியதன் உற்சாகம் கடைக்காரனுக்கு. அன்புக்கும் உண்டோ அடைக்கும்தாழ்.

20.3.2018 – மட்டக்களப்பு

05

காலையிலேயே கண்டியில் இருந்து மட்டக்களப்புக்குப் புறப்பட்டோம். பயணம் முழுவதுமே உரையாடல்கள்தான். பெரும்பாலும் அரசியல், சினிமா, இசை எனப் போனது. இசை குறித்த பேச்சு வரும்போதெல்லாம் நான் பெரும்பாலும் வாயை மூடிக்கொண்டேன். நான் வரிகளின் மூலம் பாடலை அணுகிச் செல்பவன். சரவணதீர்த்தா, ஶ்ரீதர், கங்காதுரை கொஞ்சம் விலாவாரியாகவே இசையமைப்பாளர்கள் குறித்தும் சில பாடல்களின் சிறப்புகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தனர். இடையில் பொலனறுவையில் வண்டி நிறுத்தப்பட்டது. இலங்கையில் சோழர்கள் ஆட்சி நடந்தது எனக் கேள்விப்பட்டிருந்தேனே தவிர அதன் தடயங்கள் குறித்து அவ்விடத்தில் வண்டி நிற்கும்வரை அறிந்திருக்கவில்லை; கேள்விப்பட்டதுமில்லை. உள்ளே சென்று சுற்றிவர இரண்டு மணி நேரம் ஆகும் என்றார் திலிப். அப்போது நேரம் நண்பகலைக் கடந்திருந்தது. மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் ஏதும் பாதகம் வந்துவிடுமோ எனப் பயமாக இருந்தது. இலங்கை செல்வதென முடிவானதிலிருந்து நண்பர் கணேசன் திலிப்குமார் மட்டக்களப்பு நிகழ்ச்சி ஏற்பாட்டில் மும்முரமாகியிருந்தார். எங்களுக்கான போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்ததும் அவர்தான். எனவே இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக அங்கு இருப்பது அவசியம் எனப்பட்டது. ஏதும் எங்களால் தாமதமானால் இன்னொருவரின் உழைப்பைக் கொச்சைப்படுத்துவதாகிவிடும். ஆனால் பொலனறுவை அவ்வளவு சீக்கிரம் எங்களை வெளிவரவிடவில்லை.

04

பொலனறுவையில்

பொதுவாக ஒரு வரலாற்று தடமுள்ள இடத்துக்குச் செல்லும் முன் அது குறித்து ஓரளவு வாசித்துச்செல்வது வழக்கம். பழங்கால கோயில்களின் சிற்பங்களை வரலாற்றுப் பின்புலம் இல்லாமலும் ரசிக்க முடியும். ஆனால் சிதைந்து எஞ்சியிருக்கும் ஒரு நகரம் அப்படியானதல்ல. போதுமான விளக்கமோ வாசிப்போ இல்லாமல் என்னால் பொலனறுவையைக் கிரகிக்க முடியவில்லை. ஆர்வம் தோன்றித் தோன்றி துண்டிக்கப்பட்டப்படி இருந்தது. பின்னர் அறை திரும்பியபின் தேடி வாசித்ததில் அது கி.பி 10 நூற்றாண்டு முதல் கி.பி 13 நூற்றாண்டு வரை இலங்கையின் தலைநகரமாக இருந்த நகரம் எனத் தெரியவந்தது. பண்டுகாபய மன்னனால் (இவர் யார் என தேடி வாசித்தால் இவர் சிங்களவர் என்றும் தமிழர் என்றும் இரு வேறு கருத்துகள் உள்ளதைக் காண முடிகிறது) கி.மு. 377இல் அனுராதபுர இராட்சியம் நிறுவப்பட்டுள்ளது. 1,500 ஆண்டுகள் நடந்த இந்த ஆட்சியில்தான் புத்த மதம் இலங்கையில் அறிமுகமானதாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்த அனுராதபுர இராட்சியம் சோழர்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் அவர்களால் இலங்கையில் உருவாக்கப்பட்ட தலைநகரமே பொலனறுவை என்று குறிப்புகள் இருந்தன. இப்படி கடாரத்தில் (மலேசியா – கெடாவின் ஒரு பகுதி) நடந்த ஒரு ஆட்சியைத்தான் சோழர்கள் அழித்தார்கள் என முன்பு டாக்டர் ஜெயபாரதி கூறியுள்ளார். அவர் கடார ஆய்வுக்காக தன்னை முழுக்கவே அர்ப்பணித்துக்கொண்டவர். அப்படி அழிக்கப்பட்ட ஆட்சி எதுவென்றுதான் முழுமையான ஆய்வுகள் இல்லை. ஆனால் பொலனறுவையில் உள்ள பழங்கால தட்டையான செவ்வகக் கற்கள் பூஜாங் பள்ளத்தாக்கில் உள்ள சண்டிகளை நினைவுறுத்தின.

நான் என் நினைவில் இருந்துதான் பொலனறுவையை மீட்டுக்கொண்டிருந்தேன். ஒருவேளை அதன் முழு வரலாறு தெரிந்திருந்தாலும் எங்களால் அதிக நேரம் செலவழித்திருக்க முடியாது. நேரக்கட்டுப்பாடு அப்படி. பாண்டியன் எப்படியோ உட்புறங்களில் நுழைந்து சில படங்கள் பிடித்து வந்திருந்தார். சொற்பமான நேரத்தில் அவரால் அதைச் செய்ய முடிந்திருந்தது. எப்படி எனக்கேட்டேன். “உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்காகக், ஜப்பானில் கட்டுப்படுத்தப்பட்ட இடத்தில் குறுகிய நேரமே அனுமதி கிடைக்க, எம்.ஜி.ஆர் மிகுந்த வேட்கையோடு கேமராவைத் தூக்கிக்கொண்டு ஓடியதாக ஒரு கதை உண்டு. அப்படி கேமராவை தூக்கிக்கொண்டு ஓடினேன்” என்றார். அதிக நேரம் செலவளிக்க வேண்டிய இடமென அவர் சேகரித்த காட்சிகளைப் பார்க்கும்போது தோன்றியது. அப்படித் தோன்றினால் அங்கு மீண்டும் செல்வேன் எனப்பொருள்.

சுற்றுலா விடுதி

சுற்றுலா விடுதி

மட்டக்களப்பு சென்றபோது கணேசன் திலிப்குமாரின் ஏற்பாடுகள் பரவசப்படுத்தின. கடல் அருகில் தங்கும் விடுதியை ஏற்பாடு செய்திருந்தார். தென்னை அபிவிருத்தி சபையின் சுற்றுலா விடுதி அது. தென்னந்தோப்புக்கு நடுவில் வீடு. சூழ்ந்த அமைதி. அவரது அம்மாவின் சமையலில் தடபுடலான உணவுடன் உற்சாகமாக உபசரித்தார். வல்லினம் செயல்பாடுகள் குறித்து நன்கு அறிந்து வைத்திருந்தார். வித்தியாசமான கேசம் அவருக்கு. எளிதில் நெருக்கமாகிவிடும் குணம். பேசிக்கொண்டே சாப்பிட்டோம். வெப்ப சீதோஷண நிலையால் குளித்துவிட்டு வந்தவுடன் வியர்த்தது. நான்கு மணி நிகழ்ச்சிக்குச் சற்று தாமதித்தே நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் சென்று சேர்ந்தோம். மட்டக்களப்பு நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நிகழ்ச்சி. இருபது பேர் கொண்ட சிறிய கூட்டத்துடன் அறை இருந்தது. உரையாடல் நிகழ்ச்சிகளில் வருகையாளர் எண்ணிக்கை குறித்த கவலைகள் இல்லை. எத்தனை பேர் இருந்தாலும் உரையாடல் என்பது ஒன்றுதான். எங்கள் நோக்கத்தை சரியாகப் புரிந்துகொண்ட ஒருசிலரின் அறிமுகம் கிடைத்தாலே வந்த நோக்கம் நிறைவேறியது போல்தான். அவர்கள் மூலமே அடுத்தடுத்த நகர்ச்சிகள் சாத்தியம். விவாதங்களும் கேள்விகளுமே ஒரு கூட்டத்தை வெவ்வேறு கோணங்களுக்கு இட்டுச்செல்கின்றன. ஆனால் நிகழ்ச்சியில் அதற்கான சாத்தியம்தான் குறைந்திருந்தது.

09

மௌனகுரு

மட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் தொடக்கமாக கணேசன் திலிப்குமார் உரையாற்றினார். எச்.ராஜா தமிழகத்தில் பெரியார் சிலையை உடைப்பதைக் கண்டித்து அவரது படத்தை எரித்தபோது நான் திடுக்கிட்டுத்தான் போனேன். மேலும் அதற்கு எதிர்வினையாக இலங்கையில் பெரியாருக்குச் சிலை வைக்கப்போவதாகக் கூறினார். தமிழகத்தில் ஒரு சிலை குறைந்தால் இலங்கையில் அதற்கு மாற்று உருவாகும் என்பதாக அவர் பேச்சு அமைந்தது. அதன் பின்னர்  எழுத்தாளர் கௌரி பாலன், வல்லினம் 100இல் இடம்பெற்ற நேர்காணல் மற்றும் விமர்சனக்கட்டுரைகள் குறித்து விரிவாக உரையாற்றினார். ‘மறுகா’ எனும் சஞ்சிகையை நடத்தும் எழுத்தாளர் மலர்ச்செல்வன் வல்லினம் 100இல் உள்ள சிறுகதைகள் மற்றும் கவிதைகள் குறித்து தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.  கணேசன் திலிப்குமார் கட்டுரைகள் மற்றும் பத்திகள் குறித்து தம் கருத்துகளைக் கூறினார். நிகழ்ச்சிக்கு இடையில் மௌனகுரு வந்து சேர்ந்தார். நாடக ஆய்வாளர், பயிற்சியாளர், இயக்குநர் என பல ஆளுமைகள் கொண்டவர். அவரும் பொதுவான தனது இலக்கிய அபிப்பிராயங்களைப் பகிர்ந்துகொண்டார். தனது நூல்கள் சிலவற்றைக் கொடுத்தார். பெரும்பாலும் நிகழ்ச்சி மையம் இல்லாமல் இருந்தது. அவரவர் பேச தனிப்பட்ட கருத்துகள் இருந்ததால் ஆங்காங்கு தனித்தனியாகப் பேசிக்கொண்டிருந்தனர். மலேசியாவில் இருந்து வந்துள்ளவர்கள் என்ன பெரிதாகச் சொல்லிவிடப்போகிறார்கள் என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம். கவனம் குவித்து செவிமடுக்கும் சிலருக்காகப் பேசிக்கொண்டிருந்தோம் எனச் சொல்லலாம். ஆனால் அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான கணேசன் திலிப்குமார் பொறுப்பேற்க முடியாது என அறிவோம். மூத்தவர்களைக் கட்டுப்படுத்துவதில் அவருக்குத் தயக்கமும் சிக்கலும் இருந்தது.

06

கணேசன் திலிப்குமாருடன்

நிகழ்ச்சி முடிந்து விடைபெற்று மீண்டும் வீட்டுக்குச் சென்றோம். இரவில் மீண்டும் கணேசன் திலிப்குமார் அம்மாவின் சமையலில் நண்டுக்குழம்பு கிடைத்தது. உண்டு ஓய்வெடுத்தோம். அவரவர் அவரவருக்குப் பிடித்த இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். எனக்கு மனம் சோர்வடைந்திருந்தது. நாங்கள் இலங்கை சென்ற நோக்கம் மிகத் தெளிவானது. மிக உறுதியாக  அதில் சுயநலம் இல்லை. அங்கிருந்த நாட்களில் யாருமே தத்தம் படைப்பிலக்கிய முயற்சிகள் குறித்த தனிப்பட்ட உரையாடல்களை ஏற்படுத்த முயலவில்லை. மொத்த மலேசியத் தமிழ் இலக்கியத்தில் எங்களின் பங்களிப்பு என்னவென்று பேசவே விரும்பினோம். ஆனால் அதற்கான செவிமடுக்கும் கூட்டம் இல்லாமல் போனது வருத்தம். தங்கள் கருத்துகளைச் சொல்ல வேறொரு அரங்கை பயன்படுத்துபவர்கள், தங்களை அறிவுஜீவிகளாகக் காட்ட சதா முனைப்புடன் இருப்பவர்கள் இலங்கையிலும் இருப்பதை அறிய ஒரு சந்தர்ப்பம் என நினைத்துக்கொண்டேன்.

நிகழ்ச்சி முடிந்து இரவில் கணேசன் திலிப்குமாரிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஆளுமை வழிபாடு ஆரோக்கியமான செயல் அல்ல என்பதை பெரியார் சிலை அமைப்பு மற்றும் எச்.ராஜா புகைப்பட எரிப்பை மையமாக வைத்துச் சொன்னேன். இதுபோன்ற செயல்களில் இறங்கும்போது ஏற்படும் மனஎழுச்சி தற்காலிகமானது. அது பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது என்றேன். அவர் மனதை என்னால் அறிய முடிந்தது. நானும் முன்பு அப்படித்தான் இருந்திருக்கிறேன் எனத்தோன்றியது. செயலூக்கம் மிக்க அவரிடம் மனதில் படுவதை விளக்குவதுதான் சரியெனப்பட்டது. அதுவே நான் அவருக்குத் தெரிவிக்கும் நன்றியாக இருக்கும். நகுதல் பொருட்டன்று நட்டல் அல்லவா.

21.3.2018 – மட்டக்களப்பு முதல் முல்லைத்தீவு வரை

எந்த நாட்டிலும் அங்குள்ள அரசு ஆரம்பப்பள்ளிகளே அந்நிலத்தை எளிதாகப் பிரதிபலிக்கும் அடையாளங்கள். நான் அவ்வாறு செல்லும் ஊர்களில் பள்ளிகளில் நுழைந்து பார்த்து விடுவதுண்டு. கணேசன் திலிப்குமாரிடம் கேட்டுக்கொண்டதன்படி எங்களை அங்குள்ள ஆரம்பத் தமிழ்ப்பள்ளி ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். வாழைச்சேனை இந்துக்கல்லூரி என பெரிய பதாகை இருந்தது.

தமிழகம் போலவே ஒரே வளாகத்தில் ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளிகள் இயங்கிய வளாகம் அது. கணேசன் திலிப்குமார் பயின்ற அப்பள்ளியில் அவருக்குப் போதித்த ஜெய ஜீவன் என்ற ஆசிரியர் இப்போது தலைமை ஆசிரியராக இருந்தார். அவரே எங்களை வாசல் வரை வந்து வரவேற்றார். இடைநிலைப்பள்ளிக்கான சோதனை நடப்பதால் ஆரம்பப்பள்ளி வகுப்புகளை மட்டும் பார்வையிட்டோம்.

12

தலைமை ஆசிரியருடன்

அரசின் முழு மானியத்தில் பள்ளிகள் இயங்குகின்றன. பெற்றோர்- ஆசிரியர் சங்கக் கட்டணத்தைத் தவிர வேறெந்தக் கட்டணமும் பல்கலைக்கழகம் வரை மாணவர்களிடம் வாங்கப்படுவதில்லை. பாடநூல்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன. உடைகளுக்கும் பற்றுச்சீட்டு கொடுக்கிறார்கள். ஒரு வருடத்தில் ஒரு ஜோடி உடையை அதைக்கொண்டு இலவசமாகப் பெற இயலும்.  மலேசியாவில் எல்லா மக்களுக்கும் மலாய் கட்டாய மொழியாக இருப்பதுபோல சிங்களம் இலங்கையில் கட்டாயப் பாடமாக இல்லாதது ஆச்சரியமளித்தது. ஆனால் பணியிடத்தில் உயர் பதவிகளுக்குச் செல்ல சிங்களம் பயில்வது அவசியம் என்றார்கள். தமிழ்ப் பள்ளிகளின் பயிற்றியல் மொழி முழுக்கவே தமிழில் நடக்கிறது.

நாங்கள் ஒவ்வொரு வகுப்பாகச் சென்றோம். அப்போது ஓய்வு வேளை. மாணவர்கள்11

வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். எல்லோருடைய உணவும் ஏறக்குறைய ஒன்றுபோலவே இருந்தது. பள்ளியில் மாணவர்களுக்கு உணவுப்பட்டியல் வழங்கப்படும் என்றும் ஒவ்வொரு நாளும் பெற்றோர்கள் அந்தப் பட்டியலின் அடிப்படையில் உணவைத் தயாரித்து வழங்க வேண்டும் எனவும் விளக்கப்பட்டது. வழங்கப்பட்ட பட்டியலில் உள்ள உணவுகளை பெற்றோர்கள் அவரவர் திறனுக்கும் ரசனைக்கும் ஏற்ப வித்தியாசமாகச் சமைக்கலாம். எனவே ஒரு மாணவனிடம் பொரித்த முட்டை இருந்தால் மற்றுமொரு மாணவனிடம் அவித்த முட்டை இருந்தது. ஏற்றத்தாழ்வற்ற மனநிலையை மாணவர்களிடம் விதைக்க இந்த ஏற்பாடு என்றும் இது இலங்கையில் அனைத்துப் பள்ளிகளிலும் அமுலில் உள்ளது என்றும் தலைமை ஆசிரியர் விளக்கினார். எனக்கு ‘டோட்டோ சான் ஜன்னலின் ஓரம் சிறுமி’ நூல் நினைவுக்கு வந்தது. அந்தப் பழைய இரயில் பெட்டியில் பயின்ற ஜப்பானிய மாணவர்கள் கடலில் இருந்து கொஞ்சமும் மலையில் இருந்து கொஞ்சமும் உணவை வீட்டிலிருந்து கொண்டுவந்து உண்ணும் காட்சி விரிந்தது. அந்த நூலில் உள்ளதுபோலவே இம்மாணவர்களும் உணவு கொண்டுவராத மாணவர்களுடன்  உணவுகளைப் பகிர்த்து கொள்கின்றனர்.

பள்ளிகளில் தொடக்கநிலை மாணவர்கள் ஆங்கிலத்தைத் பேசுவதற்கே அதிகம் முக்கியத்துவம் தருகிறார்கள். காலம் செல்லச் செல்லவே எழுத்து வாசிப்பு என கவனம் தரப்படுகிறது. அறிவியல், கணிதமெல்லாம் தமிழில்தான் போதிக்கப்படுகிறது. சில வகுப்புகளில் சமயப் பாடம் நடந்துகொண்டிருந்தது. இந்து மத போதனை எனச் சொன்னாலும் சைவமே பிரதான பாடமாக இருந்தது. வகுப்பில் கிருஸ்தவ மாணவர்களும் இருப்பதால் எல்லா வகுப்புகளிலும் இரு மத தெய்வ உருவங்களும் இணைத்து வைக்கப்பட்டு ஒரே மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. கிருத்துவ மாணவர்களுக்கு வேறு வகுப்பில் கிருத்துவ சமய கல்வி போதிக்கப்படுகிறது என்றும் முஸ்லிம் மாணவர்களுக்கென தனியாகத் தமிழ்ப்பள்ளிகள் உள்ளன என்றும் தலைமை ஆசிரியர் விளக்கினார். ஒரு பள்ளியில் பயிலப் போகும் மாணவர்கள் அவ்வட்டாரத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது அவசியம் என்றும் அப்பள்ளியின் முன்னாள் மாணவர்களின் குழந்தைகள் என்றால் பள்ளியில் உடனடியாகச் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்றும் தலைமை ஆசிரியர் விளக்கம் கொடுத்தார். நான் எழுதிய ‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ நூலை அவரிடம் கொடுத்தேன். மேலும் வல்லினம் பிரசுரத்தில் பதிப்பிக்கப்பட்ட சில நூல்களை நூலகத்தில் வைக்கும்படி வழங்கிவிட்டு திருக்கோணேஸ்வரம் கோயிலை நோக்கிப் புறப்பட்டோம்.

இராவணன் வெட்டு

இராவணன் வெட்டு

திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரம் கோயில் ஞானசம்பந்தராலும் அருணகிரிநாதராலும் பாடல்பெற்ற தளம். ஏற்கனவே இலங்கைச் சுற்றுலாவுக்கு வந்தபோது எங்கள் சுற்றுலா வழிகாட்டி அங்குள்ள இராவணன் வெட்டு பாறையையே அதிசயமாகக் காட்டியது நினைவுக்கு வந்தது. இராவணன் வாளால் வெட்டிப்பிழந்த பாறை என்ற நம்பிக்கையால் அப்பெயர் இடப்பட்டிருந்தது. கோயிலின் வரலாற்றை மறந்துவிட்டு அனைவரும் அந்தப் பாறைப்பிளவையே வாய்பிளக்க பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் திறன் கைபேசி இல்லாததால் பேராசிரியர் நுஃமானை அவ்வப்போது அழைத்து தெளிவுபெற்று நான்தான் அக்கோயிலின் வரலாற்றுச் சிறப்புகளை விளக்குபவனாக இருந்தேன். இப்பயணத்தில் அனைவருமே எளிதாக அந்தத் தகவல்களை அறிந்துகொண்டனர். ஆனாலும் அப்போதுபோலவே இப்போதும் இராவணன் வெட்டில் சில்லரை காசை பிளவுகளில் படாமல் வீசுவது சுவாரசியமாக இருந்தது. தரை கொதித்தது. கடும் உஷ்ணம். இளநீர் வாங்கிக் குடித்தோம். ஓய்வெடுத்தோம். தனியாக வந்த சீனப் பெண்ணிடம் கங்காதுரையும் சரவணதீர்த்தாவும் கடலைபோட அனுமதித்தோம். பின்னர் யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணம் தொடர்ந்தது.

பொதுச்சந்தை

யாழ்ப்பாணத்தை அடையும் முன்பு இறுதிக்கட்ட ஈழப் போர் நடந்த முல்லைத்தீவுக்குச் சென்றோம். போரின் அடையாளமாக உள்ள வட்டுவாகல் பாலத்தில் நிற்பது சிறுநடுக்கத்தை ஏற்படுத்தியபடி இருந்தது. பல லட்சம் உயிர்ப்பலியைப் பார்த்த பாலம். அருகிலேயே இராணுவ முகாம். ஒருவகையில் இது முல்லைத்தீவின் வாயில் எனலாம்.  முல்லைத்தீவு புலிகளின் கட்டுப்பாட்டுக்குச் சென்ற பின்னர் குண்டு வீச்சிலும் சுனாமி பேரலையாலும் பாதிக்கப்பட்ட பாலம் இன்னமும் ஒரு முதியவனைப்போல அலட்டல் இல்லாமல் நீண்டு படுத்திருந்தது. பாலத்தில் சென்றால் சுடப்படுவோம் எனப் பயந்து நீரில் இறங்கி சென்றவர்களும் சுடப்பட்டு சடலங்களாக மிதந்தனர் என திலிப் சொன்னபோது அகோரக்காட்சி மேலும் மேலும் விரிந்தது. அங்கிருந்து புறப்பட்டு முள்ளிவாய்க்காலுக்குள் நுழைந்தோம். சிங்களப்படையின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கற்கள் இருந்த இடத்தில் வண்டி நின்றது. முன்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட கற்கள் இருந்ததாகவும் இப்போது அவை அகற்றப்பட்டு விட்டதாகவும் திலிப் சொன்னார். இப்படியே சிதிலமடைந்த சந்தை, வீடுகள், சாலைகள் என பார்த்தபடியே பயணித்தோம்.

பிரதான சாலை ஓரங்கள் மட்டுமே ஒப்பேற்றப்பட்டிருக்கும் முல்லைத்தீவின்

உட்பகுதிக்குச் சென்று பார்ப்பதென முடிவெடுத்தபோது வேனில் மௌனம் சூழ்ந்துகொண்டது.

பொதுச்சந்தை 02

 

 உட்புறமாகப் பயணத்தைத் தொடர போரின் உக்கிர வடுக்களைக் காண முடிந்தது. பொதுமக்கள் சிலரிடம் பேச முயன்றோம். இன்னும் அவர்களிடம் அச்சம் தொற்றியிருந்தது. மனம் திறந்து பேச மறுத்தனர். ஒரு மாது, குண்டு போடும்போது வீட்டில் அமைக்கப்பட்டிருந்த குழிகளில்தான் பதுங்கிக்கொள்வோம் என்றும் குழிகளின் மேல் பனை மட்டையைப் போட்டு அதன் மேல் இன்னும் சில தடுப்புகளைப் போட்டு மூடிக்கொள்வோம் என்றும் சொன்னார். அப்படியானால் தப்பிவிடுவீர்களா என அப்பாவியாகக் கேட்டோம். “அந்தக் குழியிலதான் என் அம்மா தலை துண்டாகி விழுந்தது” என்றார்.

அரசு சார்பற்ற இயக்கங்களின் உதவிகள் கிடைத்தாலும் இயல்பான வாழ்வுக்கு அவர்கள் இன்னமும் திரும்பவில்லை எனத்தெரிந்தது. மீண்டும் முல்லைத்தீவின் பிரதான சாலைக்கு வந்தபோது மக்கள் நடமாட்டம் இருந்தாலும் ஒருவித அமைதி படர்ந்திருந்தது. ஒரு கடையில் அமர்ந்து கொத்துப்பரோட்டாவுக்கு ஆர்டர் செய்தோம். ஒரு தாள லயத்துடன் பரோட்டாவை கொத்தும் சத்தம் எங்களை இயல்பு நிலைக்கு மீட்க முனைந்தது.

22.3.2018 – யாழ்ப்பாணம்

யோ.கர்ணனுடன்

யோ.கர்ணனுடன்

யோ.கர்ணனும் தேவா அண்ணனும்தான் முதல் நாள் இரவில் எங்களை விடுதிக்கு அழைத்துச் சென்றனர். பீச் ரோட்டில் (கொய்யாத் தோட்டம்) அமைந்திருந்த விடுதி அது. தேவா அண்ணன் எனக்கு மலேசியாவில் நடந்த பகுத்தறிவாளர் மாநாட்டின் வழி அறிமுகமானவர். அப்போது அவர் சுவிட்சர்லாந்தில் இருந்தார். போருக்குப் பின் இலங்கைக்குத் திரும்பியிருந்தார்.  ‘குழந்தைப் போராளி’, ‘அனோனிமா’, ‘அம்பரய’  போன்ற மிக முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியவர். யோ.கர்ணனை ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ சிறுகதைத் தொகுப்பின் மூலமே அறிவேன். அவரை அப்போதே மலேசியாவுக்கு அழைத்துவரும் முயற்சி நிறைவேறாமல் போனது. ‘கொலம்பஸின் வரைபடங்கள்’, ‘சேகுவேரா இருந்த வீடு’ என மேலும் இரு தொகுப்புகளை வெளியிட்டுள்ளது அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது. இலங்கையில் அடுத்த தலைமுறை படைப்பாளிகளில் முக்கியமானவர்களில் ஒருவர் யோ.கர்ணன்.

29

கடல் கோட்டை

மறுநாள் காலையிலேயே எங்களை காரை நகர் கடல் கோட்டைக்கு அழைத்துச் செல்ல இருவரோடு நண்பர் சத்தியனும் வந்திருந்தார். அம்மாச்சி உணவகத்தில் காலை பசியாறல் என முடிவானது. மலேசியாவில் நெடுஞ்சாலை உணவகங்கள் போன்ற அமைப்பில் அவ்வுணவகம் இருந்தது. இது விவசாயத்துறை அமைச்சினால் நடத்தப்படும் உணவகம். அவ்வமைச்சில் மாதர் சங்கங்கள் தங்களை இணைத்துக்கொண்டு தங்கள் உறுப்பினர்களில் சிரமப்படும் பெண்களுக்கு உணவகம் நடத்த வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. ஒருநாளைக்கு 400 ரூபாய் மட்டுமே வாடகை. மலேசிய பணத்துக்கு 10 ரிங்கிட். அரசே அடுப்பு உள்ளிட்ட சமையல் தளவாடங்களை வழங்கி விடுகிறது. சமைப்பதற்கான பொருள்களை அவரவர் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். இலங்கையின் பாரம்பரிய உணவுகளுக்கே இங்கு இடம். வண்ணக் கலவைகள் சுவை கூட்டிகள் இல்லாத உணவுகளாகத் தயாரித்து விற்பனை செய்ய மட்டுமே அனுமதி. சிங்கள மொழியில் ஹெல போஜன (இலங்கை உணவுகள்) என்று தொடங்கப்பட்ட திட்டம் அம்மாச்சி உணவகம் என தமிழ்ப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் அமோகமான ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. நண்பர்கள் மிகவும் விரும்பியே கடைக்குக் கடை தாவிச் சென்றனர். சுவையான சைவ உணவு கிடைத்ததில் சரவண தீர்த்தாவும் ஶ்ரீதரும் மிகுந்த உற்சாகமாகக் காணப்பட்டனர்.

அம்மாச்சி உணவகம்

அம்மாச்சி உணவகம்

சரவண தீர்த்தாவுக்கு இலங்கையில் எங்கும் காணும் சுத்தம் பிடித்திருந்தது. அதை புகழ்ந்துகொண்டே இருந்தார். அவர் கடந்த ஆண்டு எங்களுடன் தமிழகம் வந்திருந்ததால் சுத்தத்துக்கு தமிழக மக்கள் காட்டும் அலட்சியத்தை அறிந்தே வைத்திருந்தார். குப்பையை குப்பைத் தொட்டியில் போடுவதற்கு ஜனத்தொகையைக் காரணம் காட்டுவதற்கும் பெரும் போருக்கும் அழிவுக்கும் பின்பும் தங்களின் சுற்றுவட்டாரங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ளும் பண்புக்கும் அவரால் வித்தியாசம் காண முடிந்தது. எங்கும் தைரியமாக அமர்ந்து சாப்பிடலாம் எனும் அளவும் தூய்மை பேணப்பட்டது. கழிவறைகள் சுத்தமாக இருந்தன. கை கழுவும் இடங்களில் சிறு கூடைகள் வைக்கப்பட்டு கையில் ஒட்டியுள்ள மிச்சங்கள் அதில் தேங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதனால் கைக்கழுவும் தொட்டி எப்போதும் சுத்தமாக இருந்தது.

காரை நகர் கடல் கோட்டைக்குச் செல்லும் வழியெங்கும் பனைமரங்கள் புதிய நிலத்தில் பயணிக்கும் உணர்வை ஏற்படுத்தியபடியே இருந்தன. காரை நகர் கடல் கோட்டையை அடைந்தபின் அனைவருக்கும் உற்சாகம் கூடியது. கடலில் படகு வழியாகவே பயணித்து கோட்டைக்குச் செல்ல வேண்டும் என்பதை குதூகலமான அனுபவமாக உணர்ந்தோம். இயந்திரப்படகும் சவாலான வளைவுகளை உருவாக்கி எங்களை கோட்டையில் இறக்கியது.

30

தேவா

யாழ்ப்பாணக் கடல் வழிப்பாதையிலே காரைதீவு  அமைந்திருப்பதனால் அது முன்பிருந்தே முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகின்றன. 17ஆம் நூற்றாண்டின் மத்தியில் போர்த்துகீசியரால் சுண்ணாம்பைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட கோட்டைதான் கடல் கோட்டை. ஏறக்குறைய மலேசியாவின் A famosa கோட்டையைப் போல என நினைத்துக்கொண்டேன். போர்த்துக்கீசரிடம் இருந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய டச்சுக்காரர்கள் 1680இல் அப்பகுதியிலிருந்த ஐயனார் கோயிலை இடித்து, அதன் கற்களைக் கொண்டு கற்கோட்டையைக் கட்டியிருக்கலாம் என கோட்டையின் நுழைவாயிலில் பொறுப்பாளர் விளக்கினார். இந்தக் கோட்டையில் இருந்து, யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்க்க முடியும் என்றார் பொறுப்பாளர். கற்களைத் தடவிப் பார்த்தேன். பல இடங்களில் கடலில் இருந்து எடுத்த பவளப்பாறைகளை இணைத்திருந்தனர். நவீன விடுமுறை விடுதியாக மாற்றப்பட்டுள்ள இந்தக் கோட்டையில் உள்ள சிறைகள் நன்கு பராமரிக்கப்படுகின்றன. சிறை அனுபவம் வேண்டுமானாலும் 2,000 ரூபாய் செலுத்திவிட்டு தங்கலாம் என்றார்கள். வெளிப்புறத்தைவிட சிறை குளுமையாகவே இருந்தது.

ரோகண விஜயவீர

ரோகண விஜயவீர

டச்சுக்காரர்களிடமிருந்து  இலங்கையைக் கைப்பற்றிய பிரிட்டி‌‌ஷார், இதனை பிற்காலத்தில் குஷ்டநோய் மருத்துவமனையாகவும் பயன்படுத்தினர் என விளக்கம் கொடுத்தார். இந்த கோட்டையில் 1971ஆம் ஆண்டு ஜேவிபி கிளர்ச்சியின்போது கைதான ஜனதா விமுக்தி பேராமுன என்ற அந்தக் கட்சியைத் தோற்றுவித்த ரோகண விஜயவீரவும் அவர் சகாக்களும்  பாதுகாப்புக் கருதி சிலகாலம் சிறை வைக்கப்பட்டனர் என்று பொறுப்பாளர் தெரிவித்தார். ரோகண விஜயவீர கற்களால் கீறி வரைந்த எழுத்துகளை அங்கே காண முடிந்தது. தேவா அண்ணனும் கர்ணனும் ரோகண விஜயவீர குறித்து விளக்கினர்.

சிங்களவரான இவர் ஒரு மார்க்சியப் புரட்சியாளர் என்றும் அவர் அமைத்த ஜே.வி.பி என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி தீவிரவாத இயக்கமாகக் கருதப்பட்டதாகவும் நாட்டில் புரட்சி செய்ததால் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதும் சுருக்கமான வரலாறு. மீண்டும் படகில் திரும்பி அங்கிருந்த விடுதியில் வயிறார உணவு உண்டோம். இலங்கை மக்கள் பராமரிப்பார்கள் என்றால் அங்கேயே தங்கி விடலாம்போல் தோன்றியது.

யாழ் நூலகம்

யாழ் நூலகம்

திரும்பும்போது யாழ் நூலகத்துக்குச் சென்றோம். 1981இல் இந்த நூலகம் எரிக்கப்பட்டு புத்துருவாக்கம் பெற்றிருந்தது. இலங்கை இனக்கலவரத்தின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் இந்தச் சம்பவத்தை ஒட்டி ‘புத்தரின் படுகொலை’ என பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் எழுதிய கவிதை பிரபலமானது. முன்பு நான் பயணம் வந்தபோதே இந்நூலகத்தை முழுமையாகச் சுற்றிப் பார்த்திருந்ததால் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டேன். வழக்கமான முதுகெலும்பு வலி. இப்போதெல்லாம் வலியின் காத்திரம் மூளைக்கு வருவதில்லை. மூச்சுவிட சிரமமாக இருந்தால் நானாக முதுகுத்தண்டில் வலி இருப்பதை கூர்ந்து அவதானித்துக்கொள்வேன். நண்பர்கள் நூலகத்தில் இருந்த பழமையான ஓலைச்சுவடிகளைப் பார்க்கச் சென்றனர். விஜயலட்சுமி நூலகத் தலைமை நிர்வாகியிடம் பேச வேண்டும் என்றதால் அவரை நண்பர் சத்தியனின் பொறுப்பில் அங்கேயே விட்டுவிட்டு நாங்கள் வீடு சென்று நிகழ்ச்சிக்குக் கிளம்பினோம். சத்தியன் அந்ந நூலகத்தில் நன்கு அறிமுகமானவர். விஜயலட்சுமியும் நூலகர் என்பதால் அவருக்கு அச்சந்திப்பு முக்கியத்துவமானதாக இருந்தது.

குளித்து புதுப்பித்துக்கொண்டு மீண்டும் நிகழ்ச்சிக்குச் செல்லும் வழியில் விஜயலட்சுமியும் சத்தியனும் ஏறிக்கொண்டனர். ‘வல்லினம் 100’ களஞ்சியம் யாழ் நூலகத்துக்குச் சில பிரதிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி நல்லூர் பவனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவகத்தை ஒட்டிய சிறிய கலாபூர்வமான அறை. அருகில்தான் நல்லூர் கந்தசுவாமி கோயில் இருந்தது.

18

நிகழ்ச்சி திட்டமிட்டபடி சரியாக நான்கு மணிக்குத் தொடங்கியது. கிருஷ்ணன் அறிமுக உரையாற்றினார். வல்லினம் செயல்பாடுகள் குறித்து விரிவாகவே விளக்கம் கொடுத்தார். தொடர்ந்து நான் மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்தின் தோற்றம் அதன் வளர்ச்சி இப்போதைய அதன் தேவை எனும் அடிப்படையில் பேசினேன். வல்லினம் 100 களஞ்சியத்தில் பிரசுரமான கட்டுரைகள் குறித்து தேவா அண்ணனும் கவிதைகள் குறித்து கவிஞர் கருணாகரனும் சிறுகதைகள் குறித்து ரமேஷ் உரையாற்றினர். மூன்றும் வல்லினம் 100ஐ நன்கு உள்வாங்கப்பட்ட உரைகள். தொடர்ந்து அ.பாண்டியன் மலாய் இலக்கியம், கங்காதுரை சீன இலக்கியம், விஜயலட்சுமி கெ.எஸ்.மணியத்தை அடிப்படையாக வைத்து ஆங்கிலத்தில் எழுதும் தமிழ் எழுத்தாளர்கள் என சுருக்கமாக உரையாற்றினர். தொடர்ந்து கேள்வி பதில் அங்கம் நடந்தது. பல்வேறு கேள்விகளுக்கு நண்பர்கள் பதில் கூறினர். ஆச்சரியமாக மட்டக்களப்பில் கேட்கப்பட்ட கேள்விகளை ஒத்தே யாழ்ப்பாணத்திலும் எனக்கான கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

கேள்விகளின் சாரத்தை இவ்வாறு தொகுத்துக்கொள்ளலாம். வல்லினம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் செயல்பாடுகளுடன் சார்புநிலை கொண்டதா? ஜெயமோகன் எனும் ஆளுமை வழிபாட்டின் வழி மலேசிய இலக்கியம் வளருமா? வல்லினம் குழு ஜெயமோகனுடன் அதிகம் இணக்கம் காட்டுவது ஏன்? ஜெயமோகன் கறாரான விமர்சனம் வைப்பதுபோல ஆரோக்கியமற்ற முறையில் நான் அவரைப் பின் பற்றி விமர்சனம் வைக்கிறேனா?

17

அ.பாண்டியன்

நான் கொஞ்சம் கடுமையான தொணியிலேயே இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்தேன். மட்டக்களப்பிலும் கடுமையைச் சொற்களில் ஏற்றியே பேசினேன். முதலாவது வல்லினம் பல எழுத்தாளர்களை மலேசியாவுக்கு அழைத்து வந்து இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளது. நான் தனிப்பட்ட முறையில் பல எழுத்தாளர்களுடன் நெருக்கமான நட்பு கொண்டுள்ளேன். ஆனால் இந்தக் கேள்வி ஜெயமோகனை மட்டுமே வட்டமிடுவது கேட்பவர்களின் பலவீனத்தையே காட்டியது. மேலும் என் தனிப்பட்ட நட்பும் பகையும் வல்லினத்தின் நிலைபாடுகளில் சேராது.

16

கங்காதுரை

முதலில் வல்லினம் விஷ்ணுபுரம் வட்டத்துடன் இணங்கி செயல்பட்டிருக்கிறதா என்றால் ஆம். சீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோது இணங்கி, ஒத்துழைத்து ஆர்வத்துடனே செயல்பட்டோம். அதுமட்டுமல்ல 2015ல் கொடுக்கப்பட்ட வல்லினம் விருது விஷ்ணுபுரம் விருது செயல்பாட்டு முறையை உள்வாங்கிய ஒரு  முயற்சிதான். விருது பெறுபவரின் எழுத்துகளை நூலாக்குவதையெல்லாம் நான் அங்கிருந்துதான் கிரகித்தேன். மேலும் மூத்த படைப்பாளிகளைக் கவனப்படுத்துவது இளம் படைப்பாளிகளை அடையாளப்படுத்துவது எனத் தொடங்கி மொழி பெயர்ப்பாளர் எம்.ஏ.சுசிலா போன்றவர்களின் பணிகளை அங்கீகரித்து ஊக்குவிப்பது வரை விஷ்ணுபுரம் இலக்கியக் குழுவின் செயலூக்கத்தில் எனக்கு எந்தப் புகாரும் இல்லை.

20

கருணாகரன்

இன்னும் சொல்லப்போனால் மலேசியாவின் தீவிர இலக்கியப்போக்கை முன்னெடுக்கும் வெளிநாட்டவர் அனைவருடனும் ஏதாவது ஒருவகையில் வல்லினம் இணங்கியே செயல்பட்டுள்ளது. பலரை மலேசியாவுக்கு அழைத்து வந்து நிகழ்ச்சிகள் நடத்தியிருந்தாலும் வெகுசிலரே மலேசிய இலக்கியத்தை வெளியே எடுத்துச்செல்ல முனைப்பு காட்டுகின்றனர். எனக்குத் தெரிந்து எழுத்தாளர் இமையம் மட்டுமே தொடர்ந்து மலேசியப் படைப்புகள் குறித்து கட்டுரைகள் எழுதி வருகிறார். ஷோபா சக்தி ‘குவர்னிகா’ தொகுப்பில் மலேசிய நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்தவேண்டும் என முனைப்புக்காட்டியபோது அதில் தொகுப்பாசிரியர்களில் ஒருவராகப் பங்காற்றினேன். அந்த நூலையும் மலேசியாவில் வெளியீடு செய்துக்கொடுத்தோம். தமிழவன் தனது சிற்றேடு இதழ்களில் தொடர்ந்து மலேசிய இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தபோது மலேசியாவில் சந்தாதாரர்களை உருவாக்கி இதழ்களை விற்பனை செய்துக்கொடுத்தோம். இதன் உச்சமாக சீ.முத்துசாமிக்குக் கிடைத்த விஷ்ணுபுரம் விருதும் அதை ஒட்டிய கலந்துரையாடல்களும் மலேசிய இலக்கியத்தின் மேல் பெரும் வெளிச்சத்தைப் பாய்ச்ச உதவியது எனலாம். எனவே  பத்து ஆண்டுகளாக மலேசியாவின் தரமான படைப்பிலக்கிய முயற்சிகளை மலேசியாவுக்கு வெளியில் கொண்டுச்செல்லும் எங்கள் முயற்சியை  சுருக்கி “நீங்க அவங்க குரூப்பா?” எனக்கேட்பது சங்கடமாக இருந்தது. அது அத்தனைக்கால உழைப்பை முற்றிலும் புரிந்துகொள்ளாமல் எளிமைப்படுத்தும் பாணி.

21

தேவா

அடுத்தது, ஜெயமோகனின் கறாரான இலக்கிய விமர்சனப்போக்கில் எனக்கு முழு உடன்பாடே. ஆனால் இந்த உடன்பாட்டை வல்லினத்தின் உடன்பாடாகத் திரிக்க முடியாது. அந்தப் பாணியை நான் பின்பற்றுகிறேனா என்றால் நிச்சயம் அதற்கான தேவை மலேசிய – சிங்கப்பூரில் உண்டு. அவ்வாறான விமர்சனப்போக்கு இல்லாமல்தான் கல்விக்கூட திறனாய்வுகள் மூலம் எழுதப்படும் எல்லாமே இவ்விரு நாட்டுச் சூழல்களிலும் இலக்கியங்களாகி விடுகின்றன. ஆனால் எனது இலக்கியப் பார்வையும் ரசனையும் ஜெயமோகனை அடியொட்டியதா என்றால் இல்லை. நான் உரையாடியவரை/ வாசித்தவரை ஜெயமோகனின் ரசனையில் சாதத் ஹஸன் மண்டோ, காஃப்கா, காம்யூ, கூகி வா தியாங்கோ போன்றவர்களுக்கு இலக்கியத்தில் உச்ச இடங்கள் இல்லை. ஆனால் எனக்கு அப்படியல்ல. நான் எழுதும் பல கட்டுரைகளில் இவர்கள் படைப்புகள் குறித்துப் பேச முனைகிறேன். என்னை பாதித்தப் படைப்பாளிகள் இவர்கள். என்னளவில் நான் வாசித்து என்னை ஈர்க்கும் படைப்புகள் குறித்தே எழுதவும் பேசவும் செய்கிறேன். நாளை எனது இந்த அபிப்பிராயங்கள் மாறலாம். வாசிப்பின் வளர்ச்சி என்பது அதுதானே. ஆனால் மலேசிய- சிங்கை சூழலில் நிராகரித்துப் பேசும் படைப்புகள் குறித்த மாற்று அபிப்பிராயம் இருக்காது என்றே நம்புகிறேன். கலைப்படைப்பின் தொழில்நுட்பக் குறைபாடு, கருத்தியல் முரண்பாடு, தத்துவப் பிசகு போன்றவற்றுக்கும் வெற்று தொழில்நுட்பத்தின் எழுத்துக்குவியலுக்கும் வித்தியாசம் உண்டல்லவா.

19

ரமேஷ்

நான் கடுமையான தொணியில் பதில் சொல்ல இக்கேள்விகள் உருவான மனநிலையே காரணமாக இருந்தது. இந்த மனநிலை குறிப்பிட்ட தேசம் என இல்லாது தமிழ் நிலங்களெங்கும் வியாபித்துள்ளது. முதலில் ஜெயமோகனின் மேல் உள்ள மிரட்சி இவர்களை எளிய பரிகாசத்தை கைக்கொள்ள வைக்கிறது. நான் இவ்வாறான நபர்களை அதிகம் சந்தித்துள்ளேன். ஓர் ஆளுமையைப் பற்றிக் கூறியவுடன் எதிர்த் தரப்பில் இருந்து காலம் காலமாக அவர்மேல் வைக்கப்பட்டு வரும் ஒரு விமர்சனத்தைத் தூக்கி வீசுவார்கள். பாரதியைப் பற்றிப் பேசினால் அவர் கஞ்சா பித்தனென்றும் ஷோபா சக்தியைப் பற்றி பேசினால் அவர் தமிழினத் துரோகி என்றும் சொல்லப்படுவதை சாதாரணமாக இன்றும் செவிமடுக்கலாம். அதைத்தாண்டி ஒரு மொழியில் அவர்களது சாதனைகளை அறிந்திருக்கவே மாட்டார்கள். அது குறித்து ஒரு தெளிவும் இருக்காது. ஆனால் இந்த வசைகளால் அவர்களும் இலக்கியப் பரப்பில் ஜீவிப்பதாக ஒரு பாவனையை உருவாக்குவார்கள். அதன் வழி முகத்தில் பரிகாசச் சிரிப்பை வைத்துக் கொள்வார்கள். இன்னும் சிலர் தனிப்பட்ட தங்களது அனுபவத்தைப் பொது அனுபவமாக மாற்ற முனைவார்கள்.

காழ்ப்புகளுடன் மை ஸ்கில்ஸ் அறவாரியம் குறித்தும் வழக்கறிஞர் பசுபதி குறித்தும் அவதூறுகள் எழுந்தபோது அவர் சமூகத்துக்கு ஆற்றிய சேவைகள் குறித்து நான் விரிவான கட்டுரை ஒன்றை எழுதினேன். அறம் வீழும்போது அதன் அருகில் நிற்பது எழுத்தாளனின் கடமை. அப்போது ஒன்றைக் கவனித்தேன். அவருடன் தனிப்பட்ட பிணக்குகளைக்கொண்ட சிலர் அவர்களுக்கும் பசுபதிக்குமான தனிப்பட்ட அனுபவங்களைக் கண்ணில் ரத்தம் கொப்பளிக்கக் கூறினர். எழுத்தாளர் சங்கத்தலைவர் ராஜேந்திரன் இயக்கத்தின் மூலமாக மலேசிய இலக்கியத்தை மலினமாக்குவதாக எழுதியபோது அவர் தனக்கு தனிப்பட்ட உதவிகள் செய்த கதையை ஆனந்தக்கண்ணீர் தழும்ப கூறியதையும் இந்த மனநிலையோடுதான் ஒப்பிட இயலும்.

என்னளவில் இவர்கள் பரிதாபமானவர்கள். தங்களை மிகச் சிறியதாய் உணரும் அற்பத்தனத்திலிருந்து பேசத் தொடங்குபவர்கள். ஆளுமை வழிபாட்டுக்கு நான் எதிரானவன். ஆனால் விமர்சனம் என்பதை மொத்தப் பரப்பையும் கவனத்தில்கொண்டு வைக்கவேண்டும். ஒருவரின் குறிப்பிட்ட ஒரு செயலை/ கருத்தை விமர்சிப்பதும்; மொத்தமாக அவரது ஆளுமையை விமர்சிப்பதும் வெவ்வேறு அளவீடுகளைக் கொண்டது. காந்தி தொடங்கி கார்ல் மார்க்ஸ் வரையில் முன்வைக்கும் கருத்துகள் விமர்சனத்துக்கு உட்பட்டவைகளே. அப்படியே ஜெயமோகனதும். சமகாலத்தில் இத்தனை தீவிரமாக புனைவிலக்கியம், விமர்சனம், இலக்கியச் செயல்பாடுகள் என இயங்கிக்கொண்டிருக்கும் ஒருவரை நமட்டுச் சிரிப்புடனும் வெற்றுக் கோஷத்துடனும் பொதுவெளியில் அணுகுவதை நான் அனுமதிப்பது ஒருவகையில் வல்லினத்தை முன்வைத்த எங்கள் செயல்பாடுகளை நானே அவமதிப்பதுபோலத்தான்.

என் விளக்கத்துக்குப் பின்னர் கவிஞர் கருணாகரன் மட்டும் கைத்தட்டி “சரியான பதில்தான்” என்றார். மற்றபடி மொத்த அமைதி. மலேசிய கவிதைப்போக்கு குறித்து பேச்சு எழுந்தபோது 2005இல் அப்படி ஒரு உற்சாகமான போக்கு எழுந்து வந்ததையும் பின்னர் மனுஷ்யபுத்திரன் நகல்களாக தேங்கி விட்டதையும் கூறினேன். என் வாசிப்பில் மலேசியத் தமிழ்க் கவிதைக்கென தனி அடையாளம் இல்லை என்றும் 2006 -டன் அதன் எழுச்சி அமிழ்ந்துபோய்விட்டதையும் எஞ்சி இருக்கும் அடையாளங்களுடன் யோகி போன்றவர்கள் தமிழகப் பதிப்பாளர்கள் மூலம் கவிஞர்களாகக் காட்டப்படும் பரிதாபநிலையையும் சுட்டிக்காட்டினேன்.

கேள்வி எனது ‘மசாஜ்’ கதை குறித்து திரும்பியது. அதில் இறுதியாக வரும் இலங்கை பெண்ணைப் பாலியல் தொழிலாளியாகச் சித்தரிப்பதாகவும் அது தமிழ்ச் சூழலில் இலங்கை மக்களின் மேல் உள்ள பரிதாபத்தை அதிர்ச்சி மதிப்பீட்டின் மூலம் கவனப்படுத்தும் முயற்சியா எனும் தொணியில் அமைந்தது. ஒரு வகையில் நக்கீரனும் சிவபெருமானும் பேசிக்கொள்ளும் சங்கதிதான். சிவபெருமான் மங்கையின் கூந்தல் மணத்தைப் புகழ்ந்திருப்பார். நக்கீரர் அதை மிகவும் புறவயமாக உள்வாங்கி பெண்கள் கூந்தலில் இயற்கையில் மணம் உண்டா என வாதத்தை வைப்பார். நக்கீரர் தமிழ் அறிந்தவர்தான். ஆனால் இலக்கிய நுட்பம் புரியாதவர் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு பதில் சொல்லப்போனால் நான் அச்சிறுகதையுள் பேச முனையும் மெல்லிய உணர்ச்சிகள் எல்லாம் கவனிக்கப்படாமல் “அப்படியானால் இலங்கைப் பெண்களெல்லாம் மோசமா?” என விவாதம் திசை திரும்பிவிடலாம். எனவே அமைதி காத்தேன். ஶ்ரீதர் அக்கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருப்பதாகச் சொன்னதால் அப்படியான இலங்கை தமிழகப் பெண்கள் மலேசியாவில் உள்ளனர் என்றும் ஆனால் கதை அதை மையப்படுத்தியதல்ல என்றும் கூறினேன். வேறு எது குறித்தும் விவாதம் செய்யலாம். ஒரு படைப்பாளி தன் படைப்பை தற்காத்து விவாதம் செய்வது மகா கொடுமை. அதிலிருந்து விரைந்து தப்பினேன்.

மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் ஜெயமோகன் குறித்து கேள்வி எழுப்பியவர்கள் பின்னர் நண்பர்களாகவே கட்டியணைத்துப் பிரிந்தனர். உண்மையில் எனக்கு அவர்கள் மேல் கோபம் இல்லை. எல்லா பெரிய முயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் தங்களின் குறுகிய பார்வையைக்கொண்டு அதற்கேற்ப அதை உள்வாங்கி, தங்களுக்கு இருக்கும் எளிய கருத்துகளைக்கொண்டு கோஷம் எழுப்பும் ஒரு பெரும் திரளின் மேல் உள்ள கோபம் அது. வலுவான எதிர்க் கருத்தை உருவாக்க உழைப்பில்லாத கூட்டத்தைப் பார்த்து பார்த்து உருவான கசப்பின் வெளிப்பாடு அது. இந்தக் கசப்புகளை காதுபடவே கேட்டுக்கொண்டுதான் முன்னகர வேண்டியுள்ளது. சிலசமயம் நம்முடனே இருப்பவர்கள் உருவாக்கும் அவதூறுகளைப் பொறுத்துக்கொண்டுதான் செயல்பட வேண்டியுள்ளது.

நிகழ்ச்சி முடிந்ததும் வீடு திரும்பினோம். யோ.கர்ணனும் தேவா அண்ணனும் உடன் இருந்தனர். நிகழ்ச்சி எனக்கு பிடித்திருந்ததைச் சொன்னேன். நல்ல ஏற்பாடு. இலங்கை, மலேசிய இலக்கியங்கள் குறித்த தொடர் உரையாடல்களை உருவாக்குவது பற்றிப் பேசினோம். கர்ணன் இலங்கையில் வெளியாகும் தீபம் இதழ் பணியில் தன்னை இணைத்துக்கொண்டபின் பெரும்பாலும் புனைவிலக்கியம் எழுதுவதை நிறுத்தியிருந்தார். அவரது ‘தேவதைகளின் தீட்டுத்துணி’  என்னைக் கவர்ந்த தொகுப்புகளில் ஒன்று. அவர் மீண்டும் எழுதவேண்டும் எனக்கேட்டுக்கொண்டேன். அவர் அமைதியாகவே புன்னகைத்தார். எப்போதும்போல.

23.3.2018 – கிளிநொச்சி

22

தமயந்தியுடன்

காலையில் கவிஞர் தமயந்தியுடன் பேசிக்கொண்டிருந்தோம். அவர் முதல் நாள் இரவே வந்திருந்தார். ஆனால் அமர்ந்து பேச நேரம் கிடைக்கவில்லை. எங்களுக்காகச் சுவையான மீன் குழம்பு வைத்திருந்தார். ஈழப்போர் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். அப்படியே இலக்கியம் குறித்து பேச்சு போனதும் ஆதிரை நாவல் குறித்து பேசினேன். அநேகமாக அங்கிருந்த நாட்களில் பெரும்பாலும் ஆதிரை குறித்து பேசிக்கொண்டிருந்தேன். ஒரு முக்கியமான படைப்பு குறித்து தொடர்ந்து பேசுவதை பிறரையும் வாசிக்கத் தூண்டும். அக்னி நதி, நீலகண்ட பறவையைத் தேடி போன்ற நாவல்களை அவ்வாறு தொடர்ந்து பேச்சில் கேள்விப்பட்டே வாசிக்கத்தொடங்கினேன். தமயந்தி ஷோபாவின் படைப்புகளோ சயந்தனின் நாவலோ உண்மையின் மேல் கற்பனையை ஏற்றும் படைப்புகள் என்றும் அதில் உண்மையான போர் வரலாற்றை அறிய முடியாது என்றும் கூறினார்.. முழு வரலாற்றை உள்வாங்கி எழுதக்கூடியவர்கள் (வரலாறு அறிந்தவர்கள்) தன்னுடன் சேர்த்து நான்கைந்து பேர் மட்டுமே உண்டு என்றார். அப்படியானால் அப்பணியைச் செய்யச் சொன்னேன். பொதுவாக இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகளுக்கு ஏராளமான முகங்கள் உள்ளன. அதில் எந்த முகம் சரி அல்லது தவறு என கூறுவது கடினம். அதுவும் இந்த விசயத்தில் அதிகம் தெரியாத என்னைப்போன்ற அறைகுறைகள் அடக்கி வாசிப்பதுதான் நல்லது. தமயந்தியிடம் வேறொன்றும் பேச இயலாது. அவர் சொல்வதை அவர் அனுபவத்தின் வழி உள்வாங்கலாம். ஆனாலும் அதுவும் ஒரு தரப்பு மட்டுமே என்று மனம் சொல்லிக்கொண்டே இருந்தது.  நான் நாவல் எனும் கலைப்படைப்பின் புனைவுநிலை குறித்து பேசுபவன். வரலாற்றின் அதன் நம்பகத்தன்மையை ஆராய்வது என் பணியல்ல. புனைவின் பணியும் அதுவல்ல. சற்று நேர உரையாடலுக்குப் பின் யாழ்பாணம் புறப்பட்டோம்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் செல்வதென்பது நீண்ட பயணம்தான். ஆனால் நண்பர்களுடன் பேசிக்கொண்டே செல்லும்போது பயணக் களைப்பு தெரியாது. மேலும் வேடிக்கை பார்த்தபடியே செல்லலாம் என்பதால் பகல் நேரப் பயணத்துக்கு முடிவெடுத்திருந்தேன். போகும் முன் நண்பர்கள்  கந்தசுவாமி ஆலையத்தில் வழிபட வேண்டுமென விரும்பினர். பிரம்மாண்டமான ஆலயம்.

கொழும்புக்குச் செல்வதற்கு முன் கவிஞர் கருணாகரன் இல்லத்திற்குச் செல்லலாம் எனத் திட்டம். ஈழத்தின் முக்கியமான தமிழ்க் கவிஞர் கருணாகரன். ஈரோஸ் அமைப்பில் இணைந்து ஈழவிடுதலைப் போராட்டத்தில் செயற்பட்டவர். நான் 2011ஆம் ஆண்டு இலங்கைப் பயணத்தில் யோ.கர்ணன் அறிமுகப்படுத்தலில் அவரைச் சந்தித்தேன். அப்போது தொடர்ந்து அரசியல் பத்திகளை எழுதிவரும் எழுத்தாளராகவே அறிமுகமானார். பல துறைகளைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கிய நூற்றுக்கு மேற்பட்ட நேர்காணல்கள் அவரால் செய்யப்பட்டுள்ளன என்றும் ‘வெளிச்சம்’ என்ற கலை, இலக்கிய ஏட்டின் ஆசிரியராக நீண்டகாலம் செயல்பட்டிக்கும் அவர்,  தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் பணியாளராகவும் இருந்துள்ளார் என்றும் அப்போதைய உரையாடலின் வழி உள்வாங்கிக்கொண்டேன். ஈழப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் ஒரு போராளியாகச் செயற்பட்ட கருணாகரன், அந்தப் போராட்டத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் களத்தில் நின்றே கண்ட அனுபவத்தைக் கொண்டவர் என்பதால் அப்போதைய உரையாடலில் இலக்கியத்தைவிட ஈழ அரசியலே அதிகம் இருந்தது. ஆனால் விடைபெறும்போதே பல்வேறு கவிதை, சிறுகதை, கட்டுரைத்  தொகுப்புகள் எழுதியுள்ளார் என அறிந்துகொள்ள முடிந்தது.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி, சேரன் போன்றவர்களை அறிந்து வாசிக்க முடிகிற சூழலில் இலங்கையில் தீவிரமாக இயங்குகிற படைப்பாளிகளை அறிய முடியாமல் போனது அப்போது கூச்சமாகவே இருந்தது. முதல் பயணத்தில் கிடைத்த நூல்களை வாசித்ததில் ஓரளவு அங்குள்ள இலக்கியச் சூழலை அறிய முடிந்தது. கருணாகரன் படைப்புலகை கவிதைகள் வழியே நெருக்கமாக அறிந்திருந்தேன். எனவே பல்வேறு படைப்பிலக்கியத்துறை சார்ந்து இயங்கினாலும் அவரைக் கவிஞராக அடையாளப்படுத்துவதே எனக்கு உவப்பாக உள்ளது.

கருணா

கருணாகரனுடன்…

அவரது இல்லம் கிளிநொச்சியில் இருந்தது. சுற்றிலும் சிறிய தோட்டங்களோடு  பண்ணை வீடுபோல அமைப்பு. கருணாகரன் எங்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். பேச்சு இலக்கியத்தில் தொடங்கி ஈழப்போருக்குத் திரும்பியது. அப்படித் திரும்பும் என அனுமானித்ததுதான். கருணாகரன் விரிவாகவே ஈழப்போர் குறித்து விளக்கினார். நான் ஜி.புஷ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியங்கள்’ நூலை முன்பே வாசித்திருந்தேன். காத்தான் குடி பள்ளிவாசல் உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக்கொள்ளப்பட்ட பட்டியல், பொது மக்கள் மீது நடத்திய தாக்குதல்கள், சகோதர இயக்கங்களை அழித்தது என  சான்றுகளுடன் எழுதப்பட்ட நூல் அது. அதேபோல ‘அகாலம்’ என்ற புஷ்பராணியின் (இவர், ஈழவிடுதலைப் போராட்டம் ஆயுதப்  போராட்டமாக உருவெடுத்தபோது அதில் பங்கெடுத்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். அப்படி மாறியபோது சிறை சென்ற முதல் பெண் போராளியும் ஆவார்.) நூலும், புலிகள் நடத்திய போர் இராணுவ ரீதியாக முக்கியமானவையாக இருக்கலாம் ஆனால் தார்மீக ரீதியில் பயங்கரவாதமானது எனச் சொல்லி சான்றாய் நின்றது. ஆனால் இந்த அனுபவங்களுக்கு அல்லது கருத்துகளுக்கு முற்றிலும் மாறுபட்ட நியாயங்களும் இல்லாமல் இல்லை. ‘கொலைநிலம்’ என்ற உரையாடல் நூலில் ஷோபாசக்தியிடம் தியாகு வைக்கும் வாதங்கள் அப்படி ஒரு எதிர்த்தரப்பு எனலாம். கடைசியாக தமிழினி எழுத்தில் நான் வாங்கிய ‘ஒரு கூர்வாளின் நிழலில்’  என்ற நூலை இதுபோன்ற குழப்பங்களாலேயே முழுமையாக வாசிக்காமல் வைத்துவிட்டேன். எந்த எதிர்க்கருத்து கொண்ட நூலுக்கும் திரிக்கப்பட்ட வரலாறு என விமர்சனங்கள் எழுவது வாசிப்புக்குத் தடையாக உள்ளது என கருணாகரனிடம் கூறினேன்.

கருணாகரன் மிகத்தெளிவாக சில விளக்கங்கள் கொடுத்தார். அவரது கருத்துகள் சார்பற்ற சமநிலையில் இருந்தது. அந்நூல் ஏன் அசலானதாக இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களைச் சொன்னார். தன்னுடைய அனுபவத்தில் தான் கண்ட நிஜங்களின் அடிப்படையில் உள்வாங்கிக்கொண்ட வரலாற்றை விரிவாகப் பேசினார். பேச்சு பிரபாகரன் குறித்து போனது.

கருணாகரன் வீட்டில்

கருணாகரன் வீட்டில்

கருணாகரன் பிரபாகரனின் மூன்றாவது மகனான பாலச்சந்திரன் குறித்து பேசும்போது தோளில் கைலியைப் போர்த்தியவாறு பலகை பெஞ்சில் அமர்ந்திருக்கும் அச்சிறுவனின் அப்பாவிக் கண்கள் நினைவுக்கு வந்தது. யார் எதைக்கொடுத்தாலும் எவ்வளவு நெருங்கிப் பழகியிருந்தாலும் எதையும் வாங்கி உண்ணமாட்டான் என அவர் சொன்னபோது இராணுவப்பிடியில் அவன் அருகில் இருந்த குவளை நினைவுக்கு வந்தது. அதன் பின்னர் அவனுக்கு நேர்ந்த கொடூரமும் மனதில் கரும்புகைபோல பரவியது. அப்படம் இணையத்தளங்களில் வெளிவந்தபோது மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டிக்கொண்டே இருந்தது. ஒட்டுமொத்த மானுடமும் நசிந்துவிட்டதுபோன்றதொரு பெருவலி. தொண்டை வரை வந்த கேள்வியை விழுங்கிவிட்டேன்.

கருணாகரன் மீண்டும் மீண்டும் தான் அனைத்தையும் மறக்கப் பழகுவதாகக் கூறினார். உள்நோக்கிச் சுருங்கி அதற்கு எதிர்நிலையில் வெடித்து சிதறும் கவிஞர்களின் மனம் அவரிடம் இயல்பாகவே பேச்சில் தொணித்தது. “சாலையில் போகும்போது ஒரு ஆர்மிகாரனைப் பார்க்கிறேன். பக்கத்திலேயே ஒரு கால்களை இழந்த சிறுமியும் இருக்கிறாள். சிறுமி அப்படி ஆக ஆர்மி முன்பொரு காலத்தில் காரணமாக இருந்திருப்பான் என்பதை நான் மறந்தால் மட்டுமே இந்த நிலத்தில் வாழ்வது சாத்தியம்” என்றார்.

வேனில் ஏறி புலிகளின் நிர்வாகத்தில் இருந்த பகுதிகளைப் பார்வையிட்டோம். இன்னும் சில இடங்களில் இராணுவ நடமாட்டம் இருந்தது. பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாகியிருந்தன. 2002ஆம் ஆண்டு புலிகள்  அனைத்துலக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய மண்டபம் தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. அந்தச் சந்திப்புக்குச் சென்ற அக்கினி (மலேசிய பத்திரிகையாளர்) எழுதிய ‘மண்ணே உயிரே’ நூல் மூலம் அந்நிலம் உயிர்ப்புடன் இருந்த ஒரு காலத்தை கற்பனையிலேயே கண்டிருக்கிறேன். இப்போது அது செத்துக்கிடந்தது.

26

போராட்டத்தில்

மீண்டும் மையச் சாலைக்கு வந்தபோது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி வவுனியாவில் மக்கள் நடத்தும் போராட்டத்தைக் காண முடிந்தது. ஒரு வருடத்திற்கும் மேலாக நடத்தப்பட்டுவரும் இந்தப் போராட்டத்துக்கு தங்களுக்கான தீர்வு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து தொடர்ந்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நாங்கள் அதில் ஈடுபட்டிருந்த ஒரு தாயிடம் பேசினோம். கடந்த வருடம் ஜனவரி மாதம் 23இல் இப்போராட்டம் தொடங்கியதாக கூறிய அவர் தாங்கள் காணாமற்போன பிள்ளைகளுக்காக போராட்டம் மேற்கொள்ளவில்லை. காணாமல் போகச் செய்யப்பட்ட பிள்ளைகளுக்காகவே போராட்டம் மேற்கொண்டு வருகின்றோம் என்றார். காணாமல் போனவர்களின் படங்களைத் தாங்கிய பதாகைகள் சுற்றிலும் இருந்தன. நான் யார் இதில் உங்கள் மகன் என்றேன். அவ்வளவு நேரம் துடிப்புடன் பேசிக்கொண்டிருந்தவர் “என் மகனா?” என்ற கேள்வியுடன் சட்டெனத் தாயாக மாறினார். அவர் முகத்தில் அத்தனை சிரிப்பு. தன் மகனை வாரியனைத்து தூக்கப்போகும் உற்சாகச் சிரிப்பு. ஓடிச்சென்று ஒரு சிறிய மங்கலான படத்தைக் காட்டினார்.

வண்டியில் ஏறும்போது மனம் கனத்துக் கிடந்தது. கருணாகரன் எல்லாவற்றையும் தெளிவாக விளக்கிக்கொண்டே இருந்தார். நான் வீட்டில் அடக்கி வைத்திருந்த அந்தக் கேள்வியைக் கேட்டேவிட்டேன். “பாலச்சந்திரனின் சுடப்பட்ட படத்தைப் பார்த்தபோது எல்லா மரணங்களையும்போல அதையும் ஏற்றுக்கொள்ளும் வலு இருந்ததா?” ஒருவகையில் இது அபத்தமான கேள்வி. இன்னும் சொல்லப்போனால் மானுட நுண்ணுணர்வு அற்றவர்களிடம் வெளிப்படக்கூடிய கேள்வி. ஆனால் அதை நான் கேட்டுத்தான் ஆகவேண்டும் எனத்தோன்றியது. அதன் நியாயம் என்னவென்று பல நேர்காணல்களைச் செய்த அவரால் புரிந்துகொள்ள முடியும். அவர் பதில் கொடுத்தார். சொற்கள் சிக்கிக்கொண்ட நெஞ்சடைக்கும் பேரழுகையை பதிலாக அவர் கொடுத்தார். வேனில் மௌனம் அப்பியது.

காணாமல்போன குழந்தையின் நினைப்பு எழும்போது தாயிடம் எழும் சிரிப்பும் மாண்ட குழந்தைக்காக கருணாகரனின் அழுகையும் ஒரே உக்கிரத்தைக் கொடுப்பதுதான். இரண்டும் இயலாமையின், இழப்பின் பிரதிபலிப்பு. நம் கண்முன் துன்பத்தில் உழலும் ஒவ்வொருவரும் யாரோ ஒருவரின் குழந்தைகள் என நினைப்பு வரும்போது எழும் வலியின் பிரதிபலிப்பு.

24.3.2018 – கொழும்பு

முதல்நாள் இரவில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில்தான் தங்கியிருந்தோம். பேராசிரியர் நுஃமான் அவர்களின் ஏற்பாடு. வசதியான அறை என்றாலும் இலங்கை சீதோஷண நிலை உஷ்ணமாக இருந்ததால் புழுக்கம் தாள முடியாமல் இருந்தது. எல்லோரிடமும் பொதுவாக சோர்வு காணப்பட்டது. பயணக் களைப்புடன் போர் காலச் சிதைந்த காட்சிகள் காரணமாக இருக்கலாம். பல சமயங்களில் நமக்கு ஏற்படும் உணர்வு மாற்றங்களையே நாம் ஆராய்வதில்லை. புலன்களின் வழி அவை மனதை சுரண்டிக்கொண்டே இருக்க அறிவை வேறெங்கோ அலைய விட்டுவிடுகிறோம். ஒரு சிறிய உறக்கத்துக்குப் பின் பாண்டியனிடம் பேசினேன். “புலிகள் போரில் வென்று நிரந்தர ஆட்சி அமைத்திருந்தால் இப்போது எழும் எதிர்வினைகள் எல்லாமே அர்த்தம் இல்லாமல் போயிருக்கலாம்” என்றார். அது உண்மைதான். வரலாற்றை அதிகாரங்களே உருவாக்குகின்றன. ஒருவேளை இராணுவம் எஞ்சிய தடயங்களை அழிக்காமல் வைத்திருந்தால் சோழர்கள் ஆண்ட தடயங்களைப் பார்க்கச் செல்வதுபோல பல வருடங்களுக்குப் பின் அது வரலாற்றில் ஒரு பெருநிகழ்வாக நிலைக்கலாம். அதைச்சுற்றி பல புனிதப் புனைவுகள் உருவாகலாம். சோழர்கள் தம் மக்களை கொல்லாமலா பெரும் ராஜியங்களை உருவாக்கியிருப்பர். எல்லாமே ஒரு துளி அதிகாரத்தில் இருந்து தொடங்குபவை. ஆனால் வரலாற்றில் எல்லாவற்றுக்கும் இடம் உண்டு. நேர்மையைப் போல வஞ்சகத்துக்கும். எழுச்சியைப் போல வீழ்ச்சிக்கும்.

மேமன்

மேமன் கவியுடன்

அன்று காலை பத்து மணிக்கு பூபாலசிங்கம் புத்தகக் கடையில் மேமன் கவி அவர்கள் சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியைவிட நான் தெளிவத்தை ஜோசப் அவர்களைச் சந்திக்க வேண்டும் என ஆர்வம் கொண்டிருந்தேன். அவர் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமானவர். அவரது ‘குடை நிழல்’ நாவலை வாசித்திருந்தேன். ஆனால் சந்திப்புக்கு அவரால் வர முடியாமல் போனது. அதை நண்பர்களுடனான ஒரு சிறிய சந்திப்பு எனலாம். மிகச் சிலர் வந்திருந்தனர். வல்லினத்தில் உள்ள அனைவருமே பேசினோம். நிகழ்ச்சியில் இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர் வந்திருந்ததால் இலங்கை படைப்பாளிகளை மலேசியாவுக்கு வரவழைத்துக் கலந்துரையாடல் நடத்த விரும்பும் எங்கள் திட்டத்துக்கு உதவும்படி கேட்டுக்கொண்டேன். மேமம் கவி விரிவாக பல கேள்விகள் கேட்டு பதிவு செய்துகொண்டார். அன்று நாங்கள் தங்கியிருந்த கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நிகழ்ச்சி ஒன்று நடப்பது பலரும் வர முடியாததற்குக் காரணம் என்றார். மேமன் கவி அக்கறையானவர். வாயில் வடை சுட்டுக்கொண்டிருக்காமல் எழுத்தில் இயங்குபவர். வல்லினம் பதிப்பில் வந்த இரண்டு நூல்கள் குறித்து முன்பே விரிவான கட்டுரைகள் எழுதியுள்ளார். அவ்வாறான முயற்சிகள்தான் அயலகங்களில் தேவை. ஸ்ரீதரசிங் பூபாலசிங்கம் அவர்களும் அக்கறையுடன் கவனித்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார். வருங்காலத்தில் விரிவான சந்திப்புகள் நடத்த இணைந்து செயல்படலாம் என உறுதியளித்தார்.

நாடகம்

சாவித்திரி

கடல் ஓரம் மதிய உணவுக்குப் பின் நண்பர்கள் நினைவுப் பொருட்களை வாங்கச் சென்றனர். நான் வேனிலேயே அமர்ந்திருந்தேன். திலிப்புடன் பேசிக்கொண்டிருந்தேன். இலங்கையில் இருந்தாலும் எங்களுடனான இந்தப்பயணம் அவருக்கும் புது அனுபவம்தான். ஶ்ரீதர் மற்றும் சரவணதீர்த்தாவுக்கு விமானம் முன்னரே கிளம்புகிறது என்பதால் வாடகை வண்டியில் புறப்பட்டனர். அடுத்த சில மணி நேரத்தில் எங்கள் விமானம். குளிக்க விருப்பம் இன்றி எல்லோரும் ஒவ்வொரு மூலையில் கிடந்தோம். கீழே மண்டபத்தில் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. பேச்சுச் சத்தம் உரக்கக் கேட்டுக்கொண்டே இருந்தது. கீழே இறங்கினேன். சத்தியவான் சாவித்திரி நாடகம் அரங்கேற்றம் கண்டிருந்தது. பின்னால் சாயம் வெளுத்த பழைய திரைச்சீலை. பழக்காலத்து பாணியிலான நாடகம். ஆண்களே பெண் வேடமும் போட்டிருந்தனர். கூட்டம் நிறைந்திருந்தது. பலரும் நாடகத்தை ரசித்தனர். இடையில் போனதால் எனக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. சோகமும், கோபமும், அச்சமும் என கதாபாத்திரங்கள் காட்டும் வெவ்வேறு உணர்வுகளை உற்சாகமாக உள்வாங்கினர் பார்வையாளர்கள். புராணங்கள் அவ்வாறு எல்லா உணர்ச்சிகளையும் தள்ளி நின்று ரசிக்க வைத்துவிடுகின்றன. மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு ஒரு சகஜமான கதையாக மனதில் நிலைத்து விடுகிறது. ஈழத் தமிழர்களின் சோக வரலாறும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டதுதான். இன்னும் சகஜமாகாமல் ஒவ்வொருமுறையும் நெஞ்சை குத்தி ரணமாக்குவது மட்டும் ஏனென்று தெரியாமல் பெட்டிகளைக் கட்டினேன்.

திலிப் நெருங்கிய நண்பராகியிருந்தார். “இலங்கையில் பனங்கள் பிரபலம். நீங்கள் அதை இறுதிவரை முயலவே இல்லை” என்றார். அது குறித்த பெரிய திட்டங்கள் இல்லாவிட்டாலும்  சம்பந்தமில்லாமல் ‘வெள்ளையானை’ நாவலின் இறுதி காட்சி நினைவுக்கு வந்தது. மனிதர்களை வதைத்து தயாராகும் ஐஸ் கட்டியினுள் ரத்தம் உரைந்திருப்பதாக ஆங்கிலேயன் ஒருவனுக்குத் தோன்றும். ஐஸ் கட்டி தயாராகும் தொழிற்சலையில் நடக்கும் மானுட சித்திரவதைகளைத் தடுக்க முடியாமல் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த தனது குற்ற உணர்ச்சியை வெல்ல வலுக்கட்டாயமாக அதை விஸ்கியில் கலந்து குடிப்பான்.

இங்குள்ள பனைமரங்கள் இரத்தம் குடித்து உதிரக்கள்ளை உற்பத்தி செய்திருக்குமா என அப்போது தோன்றியது. “சீச்சீ” எனச்சொல்லிக்கொண்டேன். எப்படி இருந்தாலும் குற்ற உணர்ச்சி அழியாமல் அப்படியே இருக்கட்டும் என நினைத்துக்கொண்டேன்.

 

http://vallinam.com.my/version2/?p=5191

சாய்வு - அனோஜன் பாலகிருஷ்ணன்

1 week 1 day ago
சாய்வு

நான் உனைச் சந்தித்தது ஒரு குளிர்காலப் பொழுதில். மரங்கள் இலைகளை உதிர்த்து அலுமினியக் கம்பிகள் போல் விறைப்பாக சலனம் அற்று நின்றிருந்தன. என் அறை ஜன்னலுக்கால் எட்டிப்பார்க்க துமிக்கும் பனித்துளிகள் பருத்திப் பஞ்சுபோல் வீழ்ந்து கொண்டிருந்தன. சோர்வுடன் தலையை போர்வைக்குள் உள்ளீர்த்து அமிழ்ந்தேன். அப்போது தான் உன் வருகைக்கான சத்தம் கேட்டது. பீடித்திருந்த தூக்கம் கலைந்து கொண்டிருந்த பொழுதுகள் அவை. சோம்பலோடு கைகளை உதறி ஜன்னலுக்கால் வெளியே பார்த்தேன். வெண்ணொளி என் கண்களை கூசச் செய்தது. தடுமாறி எழுந்து கதவை இழுத்துத் திறந்தேன். காலுக்குள் நேற்று இரவு அருந்திய ஹனிக்கேன் பியர் டின்கள் இடறியது. என் முன்னே நீ நீண்ட சூக்கேசோடு நின்றிருந்தாய். நீரில் அலையும் தாமரை இலையின் சலனம் போல் உன் உதடு புன்னகையால் அசைந்தது. ஒரு கணம் திகைத்து பின் சுதாகரித்து யார் நீ என்பது போல் விழியசைத்து உன்னைப் பார்த்தேன்.

நான் தங்கியிருக்கும் வீட்டில் நீயும் தங்க வந்திருந்தாய் பக்கத்து அறையில். இங்கிலாந்துக்கு வந்த பொழுது உள்ளத்தில் ஒரு குதூகலம் ஓய்ந்து சோர்வு என்னையறியாமல் பீடித்திருந்தது. தனிமை என்பதைவிட வெறுமை என்றே சொல்லலாம். இசையாலும் மதுவாலும் என்னை நிரப்பிக்கொண்டிருந்தேன். பல்கலைக்கழகம் மூன்று நாட்கள் மட்டும்தான். மிகுதி நேரங்களை நூலகத்திலும், வளாகம் அருகேயிருக்கும் வாவியில் நீச்சல் அடிக்கும் நாரைகளைப் பார்த்துக்கொண்டிருப்பதோடும் பொழுதுகளை செலவளித்தேன். உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு நண்பர்கள் குறைவு என்பதைவிட நண்பர்களை பிடித்துக்கொள்வது சவாலாக இருந்தது. நெருங்கிப்பழகுவதில் தயக்கமே கொழுந்துவிட்டு எரிந்தது. மீண்டும் யோசித்துப்பார்க்க தாழ்வு மனப்பான்மையோ என்று தோன்றினாலும் அதை புரிந்துகொள்வதில் கடினமே இருந்தது.

உடலோடு ஒட்டிய பாம்பின் வழுவழுப்பான தோல்கள் போன்ற நீண்ட கருப்பு நீள்சட்டையும், அதே நிறத்தில் முழுநீள மேல்சட்டையும் மணிக்கட்டுவரை அன்று அணிந்திருந்தாய். ஒற்றைப் பின்னல் முதுகுவரை செந்நிறத்தில் அசைந்தது. சீனப் பெண்ணொருவரை ஒற்றைப் பின்னலுடன் கண்டது இதுவே முதல் முறையாக இருந்தது. எங்கள் ஊரில் பெரும்பாலான பெண்கள் ஒற்றைப் பின்னலோடு திரிவார்கள்.

நீ உன்னை “கிஜூகி மின்” என்று என்னிடம் அறிமுகப்படுத்திவிட்டு இங்கு தங்கவந்திருப்பதைப் பற்றிச் சொன்னாய். பக்கத்து அறையில் ஒருவர் தங்க வருவதாக முன்னமே உரிமையாளர் சொல்லியிருந்தார். அதுவொரு பெண்ணாக அதுவும் சீனப்பெண்ணாக இருக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. உன்னுடைய பொருட்கள் வாசலில் இருந்தன. உன் அறையில் எடுத்து வைப்பதற்கு உதவி செய்தேன். நீ எளிதில் தீராத புன்னகையை சுடராக ஏந்திக்கொண்டு என் முன்னம் நின்றாய். என்னைப்பற்றி நான் சொல்லாதபோதும் ஒவ்வொரு பொருட்களாக தூக்கி தூக்கி உன் அறையில் அடுக்க நீ என்னிடம் என்னைப்பற்றி வினவிக்கொண்டிருந்தாய். என்னைப்பற்றிச் சொல்ல அதிகம் ஒன்றுமில்லை. ஸ்ரீலங்காவில் இருந்து வந்திருக்கிறேன் என்ற போது, நீ புருவங்களை நெளித்து வளைத்து அது எங்கே இருக்கிறது என்று தெரியாமல் விழித்தாய். இந்தியாவிற்குக் கீழே இந்து சமுத்திரத்தில் சிறிய தீவாக மாம்பழ வடிவில் இருக்கும் என்று சொன்னபோது, உன் தயக்கங்களை கலைந்து தெரியும் தெரியும் என்று சொன்னாய். நான் பொறியியல் துறையில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கிறேன் என்றபோது நீ கட்டடக்கலை என்றாய். அவ்வாறு தான் நம் முதல் சந்திப்பு நிகழ்ந்தது.

இருவருக்கும் ஒரே பொதுக் குளியலறை. அதைப்பற்றி உனக்கு எந்தவித கவலையும் இல்லை. குறைந்தவிலையில் வாடகை வீடு கிடைத்ததில் மகிழ்ச்சி என்றுதான் சொல்லியிருந்தாய்.

புத்தகங்கள் எதையாவது படிக்கும்போது மட்டும் கண்டாடி அணிவாய். அகண்ட நீள்சதுரக் கண்டாடி. உன் முகத்துக்கு மிக எடுப்பாகவே இருந்தது. எப்போதும் புத்தகம் கையுமாகவே இருப்பாய். நான் வீட்டில் பார்க்கும்போது இறுக்கமான காற்சட்டை அணிந்து உன் தொடைகளும் கால்களும் வெளியே தெரியும் வண்ணம் மிகச்சுதந்திரமாக இருப்பாய். முதலில் நான் சங்கடப்பட்டாலும், வெகுவிரைவில் அது சகஜமாகியது. பொது வரவேற்பறையில் நீ சகஜமாக காலைத்தூக்கிப் போட்டுவிட்டு காதில் நீலநிற இயர்போனை மாட்டிக்கொண்டு புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பாய்.

ஒருமுறை என் அறையில் புகையிலையை எடுத்து அதற்குரிய மெல்லிய வெள்ளைப் பேப்பரில் பில்டரை வைத்து சுருட்டிக்கொண்டிருந்தபோது, அறைக்கதவைத் தட்டினாய். என்னவென்று கதவைத்திறந்து கேட்டபோது அறையினுள்ளே எட்டிப்பார்த்து “உள்ளே வரலாமா?” என்று கேட்டுக்கொண்டே என் பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே வந்தாய். படுக்கையில் என் உடைகள் குதம்பலாகக் கலைந்திருந்தன. குடித்து முடித்த தேநீர் கோப்பைகள் கழுவாமல் இருந்தன. நீ அவற்றைப் பொருட்படுத்தாமல் மேசையில் சுருட்டிய சிகரட்டை எடுத்துப் பார்த்தாய்.

“இதை எப்படிச் செய்வது” என்று கேட்டுக்கொண்டே என் படுக்கையில் அமர்ந்தாய். உன் கேசங்கள் உயிருள்ள குட்டிப்பாம்புகள் போல் நெற்றியில் புரண்டுகொண்டிருந்தன. நான் புன்னகைத்துவிட்டு என் மேசையின் முன்னிருந்த நாட்காலியில் அமர்ந்து புகையிலையை பேப்பரில் வைத்து ஒரு சிகரெட்டைச் சுருட்டிக்காட்டினேன். நீயும் ஒன்றைச் சுருட்ட முயன்று தோற்றாய். மறுபடி மறுபடி சொல்லித்தந்தேன். இறுதியில் ஒன்றை சீராகச் சுருட்டி முடித்தாய்.

நான் ஜன்னலைத் திறந்துவிட்டு வெளியே புகை போகும்வண்ணம் புகைக்க ஆரம்பித்தேன். நீ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாய். நான் உன்னிடம் திரும்பி ”இங்கே வீட்டில் புகைக்க அனுமதியில்லை தெரியுமா? என்றேன்.

நீ தெரியும் என்றும் இதை வீட்டு உரிமையாளரிடம் சொல்ல மாட்டேன் என்றும் சொல்லிச் சிரித்தாய். உன் கண்கள் மிகச்சிறியன. ஈசல்களின் இறக்கைகள் போன்று சிறிய அரைவட்டமானவை. சிரிக்கும்போது இன்னும் உன் கண்கள் சுருங்கும். முழுச்சந்திரனை விழுங்கிய பூமியின் நிழல்போல் உன் நெற்றியை விழுங்கும் உன் முன் கேசம் துள்ளித் துள்ளி அடங்கியது.

“நீ ஏன் எப்போதும் அமைதி, என்னுடன் பேசுவதேயில்லை?” என்றாய். உண்மையில் அந்தக் கேள்வி என்னை நிலைகுலைய வைத்தது. அது ஏனோ என்னால் வலிந்து பேசவே முடிவதில்லை. நான் “அப்படியல்ல..” என்று பொதுவாகச் சிரித்தேன். “உனக்கு எல்லாத்துக்கும் சிரிப்பு” என்று என் பிரடி மண்டையை செல்லமாக தட்டினாய். என் மிக அருகிலே நீ இருந்தாய். உன் முழங்கால் என் கால்களை தட்டியது. என் சிகரெட் ஒன்றை வாங்கி நீயும் புகைக்க ஆரம்பித்தாய். முதல் இழுப்பில் கடுமையாக இருமினாய். இருந்தும் அனுபவம் உண்டு என்று என் மறுப்பையும் மீறி தொடந்து புகைத்தாய். உன் நீண்ட விரல்களுக்குள் கடினப்பட்டு சிகிரெட் அமர்ந்திருந்தது. இருவரும் திறந்திருந்த ஜன்னலுக்கால் தலையை வெளியே விட்டுக்கொண்டு படுக்கையில் அமர்ந்தவாறு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு பேசினோம். வானம் டோவ் பறவையின் விரிந்த இறக்கையின் சாம்பல் நிறத்தில் மிக அமைதியாகவிருந்தது. ஒரு முழுநீளச் சிகரெட்டை புகைத்து முடித்திருந்தாய். அதற்குப் பிறகு நீ கேட்டதுதான் ஆச்சர்யமாக இருந்தது.

“Weed இருக்கிறதா?”

“என்ன weedடா… இல்லை; அதெல்லாம் நீ உபயோகிப்பியா?” ஆச்சரியம் துகிலுரித்த விழிகளுடன் நேர்பார்வை கொண்டு கேட்டேன்.

உன் கன்னம் உள்ளே ஒடுங்கி புன்னகையாக மலர்ந்தது. நெற்றியில் புரண்ட முடிக்கற்றையைக் கோதி கீழுதட்டைக்கவ்வி “ம்ம்… ஒரேயொரு தடவை; உன்னால் முடிந்தா எடு. இருவருமாகப் புகைப்போம்” என்று சொல்லிக்கொண்டு சிரித்துக்கொண்டே என் அறையைவிட்டு நீங்கினாய். ததும்பும் நீர்ச்சுனைபோல் என் உணர்வுகள் மெலிதாக பொங்கிவிட்டு அணைந்தது. என் அறையின் மின் குமிழைப் பார்த்தேன். மிகப்பிரகாசமாக ஒளிர்ந்தது.

அதற்குப்பின் என் அறைக்கு நீ வருவதேயில்லை. உன்னைக் காண்பதும் அபூர்வமாக இருந்தது. பனிபடர்ந்த தெருக்களில் நடந்து செல்ல எதிர்ப்படும் அனைத்து சீன முகங்களும் உன் நினைவையே கிளர்ந்தின. நூலகத்தில் புத்தக மட்டையை திறக்க உன் முகம் ஆழமாக விரிந்து எனக்குள் நீந்திச் சென்று எங்கையோ தொலைந்தது. மீண்டும் அதைக் கண்டுபிடிக்க தூண்டில்விட்டு அலைந்தேன்.

உன் அறை சாத்தியே இருக்கும். நீ இருப்பதும் தெரியாது, பல்கலைக்கழகம் முடிந்து வந்ததும் தெரியாது. நீண்ட நாட்களுக்குப்பின் வரவேற்பறையில் உன்னைக் கண்டேன்.  குஷன் சோபாவில் காலிரண்டையும் நீட்டிப்படுத்து கைப்பிடியில் தலையை சாய்த்து தன்னிலை மறந்து மூழ்கி புத்தகத்தைப் படித்து படித்துக்கொண்டிருந்தாய். என் சப்பாத்துச் சத்தம் கேட்டு தலையை கீழாகத் தொங்கப்போட்டு என்னைப் பார்த்தாய். தலைகீழாகத் தெரிந்த உன் முகத்தில் புன்னகை வளர நித்தியகல்யாணிப் பூக்கள் கிளையில் ஆடியசைந்தது போல் இருந்தது.

“weed கிடைச்சுதா?” என்று முதல் கேள்வியிலே கேட்டாய். விளையாட்டாக நீ கேட்கிறாய் என்று நினைத்திருந்தேன். அது அப்படியல்ல என்று புரிய ஒரு கணம் எடுத்தது.

“இல்லை, கிடைக்கவில்லை; விரைவில் முயல்கிறேன்” என்றேன். ஒரு புன்னகையை சாய்வாக விட்டெறிந்துவிட்டு மீண்டும் புத்தகத்துக்குள் மூழ்கினாய். உன் கால்கள் வெள்ளை வெளிறென்று இருந்தது. ஏதோவொரு வித்தியாசத்தை ஒரு கணத்தில் உன்னில் ஆழமாக உணர்ந்தேன்.

இரண்டாவது வாரத்திலே இருபது பவுண்ட் கொடுத்து நண்பனின் நண்பன் மூலம் கஞ்சா பொதியைப் பெற்றேன். நான்  நினைத்த அளவுக்கு அது அத்தனை கடினமாக இருக்கவில்லை. பொழுத்தின் கவரில் சுற்றப்பட்ட கஞ்சா துகள்களை என்னுடன் வைத்திருப்பது ஓவ்வொரு கணத்திலும் என்னைப் பலவீனப்படுத்திக் கொண்டிருந்தது. இளகி இளகி மெழுகாக வீழ்ந்துகொண்டிருந்தேன்.

மூன்று நாட்களாக உன்னைத் தேடினேன். கண்டுகொள்ளவே இயலவில்லை. வாட்ஸப்பில் குறுஞ்செய்திகள் அனுப்பியபோதும் பதில்களில்லை. உன்னுடைய பதில்களுக்காகவே ஏங்க ஆரம்பித்தேன். அதை எண்ணிப்பார்க்க எனக்குள்ளே எரிச்சல் வெந்து புறப்பட்டது. நான்காவது நாள் சமயலறையில் உன்னைக் கண்டேன். கோப்பி தயாரித்துக் கொண்டிருந்தாய். ஒரு கையை இடுப்பில் வைத்து தலையை ஒருபக்கம் சாய்த்து எதையோ தீவிரமாக எண்ணி அதிலே திளைத்து மிக மெதுவாக கரண்டியால் கலக்கிக்கொண்டிருந்தாய். முற்றிலும் அமைதியில் நீ ஆழமாக வீழ்ந்தது போல் இருந்தது.

“ஹேய்” என்றேன். நீ என்னை திரும்பிப்பார்த்தாய். முதல் இரண்டு கணம் சிரிக்கவில்லை. மூன்றாவது கணம் வழமையாக நீ சிரிக்கும் தாமரைச் சிரிப்பை மெலிதாக என் மீது திறந்தாய்.

“நீ நலமா, என்னாச்சு உனக்கு?” என்றேன்.

“யா… நான் நலம், கோப்பி உனக்கும் வேணுமா?” என்றாய்.

இல்லை என்றுவிட்டு உன்னை கூர்ந்து பார்த்துவிட்டு “weed இருக்கு, புகைப்போமா?” என்றேன்.

நீ சலனப்படாமல் புருவங்களை நெளித்து யோசித்துவிட்டு மெதுவாகச் “சரி” என்றாய். உன்னிடம் இருந்து நீண்ட குதூகலம் வெடித்து எழும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். மாறாக ஏமாற்றமே எரிச்சலுடன் என்னுள் எஞ்சியது. நீ உன்னுடயை கோப்பியோடு என் அறைக்கு வந்தாய்.

வழமையாக சிகிரெட் சுருட்டும் அதே பேப்பரில் புகையிலைக்குப் பதிலாக கஞ்சா துகள்களை வைத்து சுருட்டத் தொடங்கினேன். இடைமறித்து கஞ்சா துகளை எடுத்து முகர்ந்தாய். உன் முகத்தில் நித்திய அமைதி தோன்றியது போல் எனக்குள் எண்ணம் எழுந்தது. என் தோள்மூட்டை இருகையால் பிடித்து அழுத்தினாய்.

01.jpg

என் உதட்டில் பொருத்தி லைட்டரால் எரியூட்டி நிதானமாக உள்ளே இழுத்தேன். நடுக்கத்தை மறைத்தேன். இதற்கு முன் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது கேரளா கஞ்சா இரண்டு முறை பயன்படுத்தியதுண்டு. அன்றல்லாத பதற்றம் இன்று முழுமையாச் சூழ்ந்திருந்தது. முழுக்க முழுக்க சட்டவிரோதம். கைதுசெய்தால் என்ன ஆகும் என்று தெரிந்தே இருந்தது. “டோன்ட் வொரி” இதை பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள் என்று வாங்கித்தந்த நண்பன் சொல்லியிருந்தான். எனக்கு இதைப் புகைக்கும் எண்ணம் இருந்ததேயில்லை. உனக்காகத்தான். இதற்காக நான் செய்த பிராயச்சித்தத்தை மிகையூட்டி விபரீத சாகாமாகச் சித்தரித்து உனக்கே சொல்லிக்காட்ட வேண்டும், குற்றவுணர்சியில் தூண்ட வேண்டும் என்று ஆழமாக விரும்ப ஆரம்பித்தேன்.

மூன்று இழுப்புக்குப் பின் உனக்குத் தந்தேன். மிக அலட்சியமாக வேண்டி கட்டிலில் அமர்ந்து சுவற்றில் முதுகைச் சாய்த்து நிதானமாகப் புகைக்க ஆரம்பித்தாய். பூக்களின் நறுமணம் உன்னைச்சுற்றிப் படர்ந்தது. உன் கன்னங்கள் மெல்ல மெல்ல ஊதி சிவந்து மங்குஸ்தான் பழம் போல் ஆனதாக உணர்ந்தேன். இனிமையான இசையில் ஏறிப்பயணிப்பது போல ஒன்றின் மீது வழுக்கிக்கொண்டிருந்தேன். ஆனால், வழமைக்கு அதிகமாகன நிதானத்தில் இருந்தேன்.

நீ அமைதியாக இருந்தது என்னை கடுமையாக உறுத்தியது. எதுவுமே பேசாமல் குறைந்த பட்சம் என்னைப் பொருட்படுத்தாமல் இருந்தது என்னைக் கடுமையாக எரிச்சல்படுத்தியது. எங்கோ ஓர் இடத்தில் ஆழமாக விறாண்டியது போல் அகங்காரத்தில் தேய ஆரம்பித்தேன்.

“உனக்கு என்ன பிரச்சினை? ஆர் யூ ஆல்ரைட்?” உன் முழங்கால் தொடையைத் தொட்டுக் கேட்டேன். நீ நிதானமாக என்னிடம் திரும்பி “ எட் ஷீரனின் பாடல்கள் இருக்கிறதா?” என்று கேட்டுக் கொண்டே திறந்திருந்த என் மடிக்கணனியை நோக்கிச் சென்று யூடியூப்பில் பாடல்களைத் தேடினாய். கொஞ்சம் அளவாக சத்தத்தை கூட்டி ஒலிக்கவிட்டு கட்டிலில் வந்தமர்ந்து “அடுத்த சுற்றை சுருட்டச் சொன்னாய்..” நான் ஆச்சரியமாக உன்னை நிமிர்ந்து பார்த்தேன்.

மீண்டும் இரண்டு சுற்றுகளைச் சுருட்டினேன். நாம் புகைத்தோம் புகைத்தோம். நீண்ட நேரம் புகைத்தோம். என் மடியில் நீ வீழ்ந்தாய். உன் விழிகளால் என்னை ஊடுருவிக்கொண்டு சட்டென்று இமைகளை மூடினாய். நான் அசையாமால் அப்படியே இருந்தேன். பதினைந்து நிமிடம் கடந்திருக்கும் என் தொடை இரத்தோட்டம் குன்றி விறைக்கத் தொடங்கியது. நீயே எதையோ உணர்ந்ததுபோல் திடுக்கிட்டு எழுந்தாய். உன் கண்களின் நரம்புகள் பின்னிப்பிணைந்த சிவந்த பாம்பாகக் கடுமையாக உறைந்திருந்தன. என் டீஷேர்ட் காலரைப் பிடித்து குளியல் அறைக்குள் இழுத்துச் சென்றாய். ஷவரை திறந்துவிட்டு என் தோள்மூட்டை பிடித்துக்கொண்டு அப்படியே கீழே அமர்ந்தாய். நீர் எம் மீது சீறிச் சாரலாக வடிந்தது. நீ அழுதது போல் தோன்றியது. நீருக்குள் உன் கண்ணீரைப் பிரித்தறிய முடியாமல் இருந்தது. என் தோள்மூட்டில் சாய்ந்தே இருந்தாய். ஒரு சொல்லைக் கூட நாம் இருவரும் பேசவேயில்லை.

உன் தலையை துவட்டி, முடிந்தவரை உன் ஆடையில் ஊறிய ஈரங்களை ஒற்றி எடுத்து உன் அறைப் படுக்கையில் படுக்கவைத்தேன். கசிந்த நீர் மெத்தையை கொஞ்சம் ஈரமாக்கியது. மிகுந்த தெளிவுடன் உன் முகம் உறக்கத்திலிருந்தது. உதட்டில் ஒரு புன்னகை ஓரமாகப் பூரித்துவைத்திருந்தாய். மூன்றுநிமிடம் அறை வாசலில் நின்று உன்னையே பார்த்தேன். உன் கால்கள் மாசற்று, உரித்த பனங்கிழங்கு போல் நீண்டிருந்தன. கைகள் பிடிப்பற்று இறுக்கம் தளர்ந்து முறிந்துவீழ்ந்த கைவிடப்பட்ட மரக்கிளையாகத் தனிமையில் இருந்தன.

என் ஒற்றை பக்கத் தலை கடுமையாக வலித்தது. ஆடைகளை மாற்றிவிட்டு என் படுகையில் வீழ்ந்தேன். வரமறுத்த நித்திரை மெல்ல மெல்ல சதையில்  நுழையும் கூரிய கத்தியாக என்னைத் துளைத்து இறங்கியது. மூளை நரம்புகள் கடுமையாக நொந்தன.

தூங்கி எழுந்து தேநீர் தயாரிக்க சமையலறைக்குச் செல்லும்போது உன்னை வரவேற்பறையில் கண்டேன். வழமையாக இருக்கும் அதே பாணியில் அமர்ந்திருந்தாய். “நலமாக இருக்கிறீயா?” என்று கேட்டேன். உன்னிடமிருந்து எந்தப்பதிலும் வரவில்லை. குறைந்த பட்சம் உன்னிடமிருந்து ஒரு நன்றிகூட கிடைக்கவில்லை என்பது என்னைச் சீண்டியது. அதைப் புறந்தள்ளிக் கொண்டு தேநீர் தயாரிக்கச் சென்றேன்.

மின்கேத்தலில் தண்ணீரை கொதிக்கவைக்கும்போது விசும்பல் ஒலிகளை விட்டுவிட்டுக் கேட்டேன். உன்னிடம் இருந்துதான் அவை எழுகின்றனவோ என்ற ஐயத்துடன் எட்டிப்பார்த்தேன். உன்னிடமிருந்துதான், உன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. உன்னிடம் வந்து பேசுவோமா வேண்டாமா என்ற சில கணம் யோசித்துவிட்டு விலகிச்சென்றேன். உனக்கும் சேர்த்து கோப்பியை தயாரித்துக்கொண்டு வந்தேன். நீ உன் அறைக்குள் சென்று அமர்ந்திருந்தாய். வழமையாக நீ அமர்ந்திருக்கும் இருக்கை உன் இருத்தல் இல்லாமல் தனிமையில் அமைதியிழந்திருந்தது.

என் அறைக்குள் செல்ல எத்தனிக்கும்போது அந்த முடிவை ஒரு கணத்தில் எடுத்தேன். உன் அறைக்கதவை அனுமதியில்லாமலே திறந்தேன். என் இரண்டு கைகளிலும் கோப்பி நிறைந்த கோப்பைகள் இருந்தன. தடுமாற்றத்துடன் உள்ளே நுழைந்தேன். படுக்கையில் கால்களுக்கிடையே தலையாணியை வைத்து அதற்குள் முகத்தைப்புதைத்து உறைந்திருந்தாய். மேசையில் கோப்பைகளை சத்தம் வராமல் மென்மையாக வைத்துவிட்டு, உன் அருகே வந்து முதுகைத் தொட்டு “மின்” என்று உன்னை அழைக்க விழைய உடல் குலுங்கி திடுக்கிடலுடன் என்னை நிமிர்ந்து பார்த்தாய். உன் உடல் ஒருமுறை உதறியது. உன் கண்கள் ஆழமான வெறுப்பை என் மீது கக்கியதை உணர்ந்தேன். நான் என் கைகளை உன் முதுகிலிருந்து விளத்த எத்தனிக்க நீ பலம்கொண்டு தட்டிவிட்டாய். நான் என் செயல்திறன் குன்றி இயலாமையை அடைந்து தாழ்வில் தவிக்க, நீ எழுந்து என் கன்னத்தில் ஓங்கி அறைந்தாய். நான் தடுக்கவில்லை, இரண்டாம் மூன்றாம் அடிகள் மாறி மாறி கன்னத்தில் விழ நான் பின்னால் நகர என்னையே தாக்கிக்கொண்டு முன் நகர்ந்தாய். வரவேற்பறையின் நடுவரை வந்தோம். வலி பொறுக்க முடியாமல், சமநிலை குழைந்து நான் “ஹேய்” என்று சுதாகரிக்க என் தோள் மூட்டைப் பிடித்துத் தள்ளிவிட்டாய். நிலைதடுமாறி சுவரில் சாய்ந்து பிடிமானம் ஏதும் கிடைக்காமல் தத்தளித்து பின்னால் வீழ்ந்தேன். என் இடுப்பில் இரண்டு உதை உதைந்தாய். மிக கூர்மையான அடிகள் அவை. உச்சக்கட்ட வலியை ஏற்படுத்தியது. மூச்சு எடுப்பதில் சிரமம் படர்ந்த்தது. வலி உடம்பு முழுவதும் மின்சாரமாக குறைவழுத்தத்தில் ஓடி என்னை அதிரச்செய்தது.

“எங்கள் பூர்வீகம் சீனா என்றாலும், நான் பிறந்து வளர்ந்தது ஹோங்கொங்கில்” என்றாய்.

“ஹ்ம்ம்”

“எனக்கு ஒரு சகோதரன் இருக்கிறான்…” என்றுவிட்டு நீ உன் அறைக்குள் சென்றாய். நான் புரியாமல் அப்படியே கொஞ்ச நேரம் அங்கேயே இருந்தேன். வீரிட்டு உன் அறையிலிருந்து படபடக்கும் புறாபோல் மீண்டும் என் முன்னே வந்து “எனக்கு மாதவிடாய் முடிந்த பிற்பாடு மூன்றாவது நாள் நானும் அவனும் உடலுறவு கொள்வோம். விளையாட்டாக பதின்மூன்று வயதில் தொடங்கிய இந்த பழக்கம் மூன்று வருடங்கள் தொடர்ந்தது… எப்போதும் அல்ல வருடத்துக்கு மூன்று நான்கு முறை இவ்வாறு செய்துள்ளோம்” என்றாய்.

நான் உன்னையே பார்த்துக்கொண்டிருந்தேன். அதைச் சொல்லிவிட்டு அழுவது போல் என்னைப் பார்த்தாய். உன் கண்கள் பழுப்பு நிறத்திலிருந்தன. இப்போது என்ன பதிலைச் சொல்வது என்று தடுமாறினேன். ஏதோவொரு ஆறுதலை என்னிடம் இருந்து எதிர்பார்க்கிறாய் என்று புரிந்தது. புண்படுத்தவே விரும்பி அமைதியாக இருந்தேன். என்னையே பார்த்துக் கொண்டிருந்தாய். நான் உன் கண்களையே பார்த்தேன். அப்படியே பின்னால் நகர்ந்து காற்றில் வீழும் ரிப்பன் துண்டுபோல் மென்மையாக உன் அறைக்கதவுக்குள் சென்று வீழ்ந்தாய்.

குளியலறையின் பெரிய நிலைக்கண்ணாடியில் என் முகத்தைப்பார்த்தேன். வீங்கி சிவந்திருந்தது. சுடுதண்ணியால் ஒத்தடம் கொடுத்தேன். என் அறைக்கு வந்து டிஷேர்டை நீக்கிவிட்டு கழுத்தின் பின்புறத்தைத் தடவிக்கொண்டு மௌனமாகச் சற்றுநேரம் இருந்தேன். சிறிது நேரத்தில் நீ என் அறைக்கதவைத் திறந்து உள்ளே வந்தாய். பதற்றம் எழுந்த சுடரின் தவிப்புடன் அலைக்களிந்து உன்னைப் பார்த்தேன். என்னை வாரிக்கட்டிக்கொண்டாய். உன் மார்புத் துடிப்பு தெளிவாக எனக்குக் கேட்டது போல் இருந்தது. குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாய். என் கழுத்தில் உன் கண்ணீர் ஓட்டிப் பிசுபிசுத்தது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து சட்டென்று என் சாய்வுகளை உதறி உன் கேசத்தை ஆதரவாக தடவினேன். நீ இன்னும் என்னைத் தழுவி இறுக்கமாக அழத் தொடங்கினாய்.

உன்னை சமநிலைப்படுத்தி இருக்கச்செய்தேன். ஏதோ சொல்ல எடுப்பதும், தவிப்பதுமாக உனக்குள்ளே மூழ்கி மூழ்கி எழுந்து நிலையிழந்து சரிந்துகொண்டிருந்தாய். கஞ்சாவை சுற்ற ஆரம்பித்தேன். நாவறண்டிருந்த உனக்கு குடிக்க தண்ணீர் தந்துவிட்டு, கஞ்சாவை இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு உனக்குத் தந்தேன். வாங்கும்போது உன் கைகள் தடுமாறிச் சரிந்தாலும் நிதானமாக புகைக்க ஆரம்பித்தாய். உன் கண்களில் வழிந்த கண்ணீர் உறைந்து நின்றது. மூக்கிலிருந்து வடிந்த நீரை துடைக்க பேப்பர் துண்டு தந்தேன்.

சிறிதுநேரத்தில் நீயாகவே பேச ஆரம்பித்தாய்.

“நானும் அவனும் சேர்ந்து கஞ்சா புகைப்போம்; என் பதினெட்டாவது வயதில் கஞ்சா அப்படிப் புகைக்க ஆரம்பித்தோம்…” என்றாய். அந்த அவன் யார் என்று எனக்குப் புரியவில்லை. அது உன் அண்ணனாக இருக்கும் என்று ஊகித்தேன்.

02.jpg

“ஆனால் நாங்கள் ஒருபோதும் அதைக்குறித்து பேசியதில்லை” என்றாய். எதை என்று என்னுளே கேட்டுப்பார்த்தேன். நீயே என் புரிதல் இன்மையைப் பார்த்து “எனக்கும் என் அண்ணனுக்கும் இருந்த அந்த ஆரம்பகால உறவை” என்றாய்.

நான் அதைக்குறித்து ஆழமாக சிந்திக்கவில்லை. நினைக்கும்போது அதன் வீரியம் என்னைத் தாக்கியது. கொஞ்சம் தடுமாறி “ம்ம்..” என்றேன். மூன்று இழுப்புகள் இழுத்திருந்தாய். நான்காவது இழுப்புக்கு தயாராகிவிட்டு என்னிடமே மிகுதியைத் தந்தாய். இப்போது எனக்குத் தேவையாக இருந்தது. வாங்கி ஆழமாக உள்ளே மூச்சுக்காற்றோடு இழுத்தேன்.

“என் அப்பா மிகப்பெரிய வியாபாரி; பிலிப்பைன்சில் ஏகப்பட்ட வாழைத்தோட்டங்கள் இருந்தன, கொலம்பியாவில் கோப்பி தோட்டங்களும் இருந்தன. எப்போதும் விமானத்தில் பறந்து கொண்டிருப்பார். நானும் அண்ணாவுமாகவே வளர்ந்தோம். எங்கள் அன்னை சிறுவயதிலே தவறிவிட்டார். எங்களைப் பார்த்துக்கொள்ள நிறையவே பணியாட்கள் இருந்தார்கள்” நீ சொல்வதை புகைத்துக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்தேன். உன் மெல்லிய குரல் மிகக்கூர்மையாக உக்கிரம்கொண்டு என்னுளே இறங்கிக்கொண்டிருந்தது.

“எனக்கும் அண்ணாவுக்கும் அந்த உறவு உருவாகி சிறிதுகாலத்திலே ஓய்ந்தது; நாங்கள் அதைப்பற்றி பேசிக்கொள்வதில்லை. அதுவொரு விளையாட்டாக இருக்கவேண்டும் என்று எனக்குள்ளே விரும்ப ஆரம்பித்தேன். நாங்கள் வளர்ந்த பின் அண்ணா காதிலித்து ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டான். அப்பாவுக்கு அந்த திருமணத்தில் பெரிய விருப்பம் இல்லை. இருத்தும் மறுப்பேதும் சொல்லவில்லை. இரண்டு வருடங்கள் அண்ணா நன்றாகத்தான் இருந்தான். தனியாகவே வியாபரம் செய்தான். கொஞ்ச நாளில் அவனுக்கும் அவன் துணைவிக்கும் இடையில் பிரச்சினை ஆரம்பமாகியது. அவள் வேறோர் ஆணுடன் சென்றுவிட்டாள்”

நீ சொன்னவை எனக்குள் எந்தவித அதிர்ச்சியையும் உருவாக்கவில்லை. ஒரு திரைப்பிரதியை மீட்டுப்பார்ப்பது போல, காட்சித் துண்டங்களாக ஓட்டிப்பார்த்துக் கொண்டிருந்தேன்.

“அவன் அதனால் மிகநொந்து நூலாகினான். மிக விரத்தியில் புண்பட்டு இருந்தான். அவனுக்கு ஆறுதல் அளிக்க அப்பா என்னை அனுப்பிவைத்தார் அவன் இடத்துக்கு. முடிந்த வரை பேசி அவனை இயல்புக்கு கொண்டுவர முயன்றேன். பெண்கள் மீது கடும் வெறுப்பில் இருந்தான். என்னை போ போ என்று சீறிக்கொண்டிருந்தான். இருந்தாலும் பொறுமையாக அவனுடன் இருந்தேன். ஒரு முறை நான் எதிர்பார்க்காத நேரத்தில் என்னை உறவுக்கு அழைத்தான். மறுத்தேன். மறுபடி மறுபடி அவன் அழைக்க சண்டையாகியது. அவனின் இடுப்பில் இரண்டு உதை உதைந்துவிட்டு அன்றே புறப்பட்டு வந்தேன்…” இப்போது எனக்கு நீ என் இடுப்பில் உதைந்தது நினைவுக்கு வர தேகம் விறைத்துப் பதறியது. புகைத்த கஞ்சா எந்த மாற்றத்தையும் உள்ளே விதைக்காதது போல் இருந்தது. ஆழமாக இழுத்தேன்.

“அதன் பின் அவனுடன் பேசுவதில்லை; முற்றிலும் அந்நியமான சூழல் வேண்டும் என்பதற்காக இங்கிலாந்தை தேர்வு செய்து படிக்கவந்தேன்” என்றாய்.

“சரி இப்போது என்ன பிரச்சினை?” என்றேன்.

“அவன் நம் சிறுவயது உடலுறவு நினைவுகள் இருக்கிறதா என்று கேட்டு மின்னஞ்சல் செய்திருந்தான். நான் பதில் எதுவும் கொடுக்கவில்லை. இப்போது அதை வர்ணித்து, என் யோனிவாசல் வேண்டும் என்று மின்னஞ்சல் செய்துகொண்டிருக்கிறான்” என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக்கொண்டு மேலே பார்த்தாய்.

“இப்போது இதிலிருந்து வெளிவர எனக்கு ஒரே வழிதான் உண்டு” மேலும் நீ தொடர்ந்தாய். எனக்கு பெரிதாக புரிதல்கள் வராமல் நெளி நெளியாக குழம்பிக் கொண்டிருந்தது.

“என்ன?” என்றேன். உன்னில் மௌனம் கொடியாகப் பரவிவிரிந்து சென்று கொண்டிருந்தது. கண்களைத்திறந்து என்னை உற்றுப்பார்த்தாய். உன் விழிகளில் நீர்த்திரை வடிந்து ஓய்ந்து கனிவு சுரந்தது. எழுந்து என்னருகில் வந்து என் தோள்மூட்டை இறுகிப் பற்றி என்னை இறுக்கமாக அணைத்தாய். உன் உடலின் மென் சூடு எனக்குள் ஊடுருவியது. நானும் ஆதரவாக உன்னைத் தழுவி ஆறுதல் வார்த்தை ஏதும்சொல்ல எனக்குள் துழாவினேன். வார்த்தைகள் சிக்காமல் தடுமாறி சிதறினேன். உன் உடலின் மென்மை என்னைத் தீண்டி விரிந்தது.

கொஞ்சம் தடுமாறி சாய்வாக மனதை சரித்துக்கொண்டேன்.

உன் உதட்டால் எட்டி என் உதட்டின் விளிம்புகளைக் கவ்வினாய். வாழப்பழத்தின் தோலை உள்பக்கமாகக் கவ்வியது போல் என் உதடு உணர்ந்து மூர்க்கம் கொண்டது. நாக்குகள் பிணைந்து தீண்டி உக்கிரமாகியது. முத்தங்கள் தீயாக வருடி தேகம் எங்கும் பெய்தது. நிலைதடுமாறி சரிய ஓர் நிதானம் படகாக எனக்குள் நீந்தி வந்தது.

அன்றைய பொழுது ஓய நிர்வாணமாக ஆடி இருவரும் ஓய்ந்திருந்தோம். இன்பம் தேய்ந்து சுரந்து மறுபடியும் அடங்கியிருந்தது. படுக்கையில் வீழ்ந்திருந்திருந்தவாறே என்னைப் பார்த்து “கஞ்சா வேண்டும்” என்றாய். அசதியுடன் நழுவும் ஆடைகளை சரிபடுத்திக்கொண்டு பேப்பரை எடுத்து விரிந்து நிதானமாகச் சுற்றத் தொடங்கினேன். கண்களை மூடி தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தாய். நான் உன்னை நோக்குவதை உள்ளுணர்வில் அறிந்தோ என்னவோ கண்களை விழித்து என் கண்களையே பார்த்தாய். உன் கண்களில் அமைதி செந்நிறமாகத் தெரிந்தது. மீண்டும் புகைத்தோம். இந்தமுறை புகைத்து முடிய என் மார்பில் நீ புதைந்தாய். உன் கேசத்தை வருடிக்கொண்டு மிகுதியை புகைத்து முடிந்தேன். அதன் பின்பும் கலவி புரவி வேகத்தில் எழுந்து திமிறியது.

மறுநாள் பல்கலைக்கழகம் முடிந்த பிற்பாடு உடை மாற்றிவிட்டு என் அறைக்குள் வந்து என்னை தள்ளி வீழ்த்தி என்மேல் ஏறி அமர்ந்து நாக்கால் என் முகத்தை வருடினாய். அன்றும் கலவி கொண்டோம். மிக உக்கிரமாக என்னை புரட்டி எடுத்தாய். புன்னகைத்துக்கொண்டே இருந்தோம்.

தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வந்தது. இருள் வடியும் அன்றைய பின்னேரப் பொழுதிலே நீ உன் நண்பர்களுடன் ஸ்காட்லாந்துக்கு விடுமுறையை கழிக்கச் சென்றாய். நீல நிற அங்கியுடன் நீ புறப்பட்டுச் சென்றதை விழியசையாமல் பார்த்தவாறிருந்தேன். எனக்கு ஆய்வு வேலைகள் குமிந்திருந்தன. இந்த நான்கு நாட்களில் அதனை முடிப்பதாக தீர்க்கமாக முடிவெடுத்திருந்தேன்.

நீயற்ற வெறுமை எனக்குள் முளைக்க, உன் மீதான தங்குதலை உணர்ந்து என்னையே வெறுத்து உன் மீதான நினைவுச் சுழிப்புகளை உடைக்கத் தொடங்கினேன். கலவியை விட அதன் மீதான நினைவுகள் எத்தனை உக்கிரம் கொண்டவை. அதன் இன்பத்துக்குள் வீழ்ந்து திகைத்து தட்டுத்தடுமாறி என் ஆய்வு வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்ய ஆரம்பித்தேன்.

நீயொரு சீனப் பாடலை உற்சாகமாக முணுமுணுத்துக்கொண்டு வீட்டின் கதவைத்திறந்து ஐந்தாம் நாள் விடுமுறையை முடித்துக்கொண்டு உள்ளே வந்தாய். உன் முகம் பூரிப்பால் அலைவுற்றவாறிருந்தது. என்னைப் பார்த்து தாமரைச் சிரிப்பை எறிந்துகொண்டு உன் அறைக்குள் சென்று வீழ்ந்தாய்.

அதன் பின் உன்னைக் காண்பதே மறுபடியும் அபூர்வமாகத் தொடங்கியது. உன் அறையை விட்டு நீ வெளியாகுவதே இல்லை. சமையலறையிலும், வரவேற்பறையிலும் உன் வருகைக்காக காத்திருந்து தேய்ந்தேன். உன் அறைக்குள் நுழைய அச்சம் விம்மியது. வெறுமை என்னைச் சூழ, தத்தளிப்புக்குள் வீழ்ந்து நொறுங்கினேன். உன் அடர் வாசம் என் நாசிக்கால் நுழைந்து என்னைப் படுத்தி நண்டு கால்களால் எண் திசையிலும் கீறியது. நீண்ட தடுமாற்றத்திற்குப்பின் உனக்கு வாட்ஸப்பில் குறுஞ்செய்தி அனுப்பத் தொடங்கினேன். உன் புறக்கணிப்புகள் எனக்குள் சீற்றம் பெற “”உன்னோடு உடலுறவு கொள்ள வேண்டும் வா” என்று செய்தி அனுப்பினேன்.

தூக்கத்திலிருக்கும் போது என் அறையின் கவதை தடாலாகத் திறந்து உள்ள வந்தாய். நான் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுப் போர்வையை விலத்தி எழுந்து பார்த்தேன். உன் கேசம் தீ நாக்குகளாக அலைந்தது. மௌனமாக என்னைப் பார்த்தாய். அந்த மௌனம் என்னைச் சாய்த்தது. எதுவும் சொல்லாமல் என் அறையை விட்டு நீங்கினாய். உடனே எழுந்து வாசலுக்கு வந்து உன் கைகளை எட்டிப்பிடித்து இழுத்தேன். நீ திமிறினாய். அந்தத் திமிறலுக்குள் என் மீதான உன் சாய்வைக் கண்டேன். என் மார்புக்குள் நீ சாய்ந்தாய். எனக்கு அழுகை வெடித்துக் கசிய கண்ணீர் வடிந்து உன் கேசத்தில் கோடுகள் வரைந்தன.

“நாயே என்னை நிம்மதியாக இருக்க விடமாட்டியா?”

என் இடிப்பில் எட்டி வலிமை தெறிக்க உதைந்தாய். அதை எதிர்பார்த்தவன் போல் வாங்கிக் கொண்டேன்.

“எல்லாத்தையும் மறக்கப் பயணம் போய் வந்தேன்; இப்போதுதான் மகிழ்ச்சி துமித்தது. நீ மீண்டும் நினைவுபடுத்தி ஆரம்பிக்கிறாய்”

இடுப்பு மிக வலிக்க, இன்னும் மிகை உணர்ச்சியைக்கூட்டி மௌனமாகத் தரையில் அமர்ந்தேன்.

“நடிக்காத நாயே” என்றாய் உக்கிரம் தீயாகப்பாய. அமைதியாகவே இருந்தேன். என்னை இழுத்து எழுப்பினாய், பின் என் முகத்தை எட்டி உதட்டில் முத்தம் இட்டாய், “நாயே என்ன இத்தனை மெசேஜ்? அண்ணன் போல் இப்படி அனுப்பியிருக்கிறாய்” என்று விட்டு என்னை இறுக்கி அணைத்தாய்.

இருவருமாக மொட்டை மாடிக்குச் சென்று வான் நோக்கி முகம் பார்க்க நட்சத்திரங்களைப் அவதானித்தவாறு கஞ்சா புகைத்தோம். குளிர் காற்று வீசித் தீண்ட, கைகளை இறுக்கி என்னை இன்னும் நெருக்கமாக அணைத்தாய். உன் மூச்சுக்காற்று என்னுள் ஊர்ந்தது. இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. அமைதியை கீறும் வண்ணம் “அண்ணாவை எனக்கு மிகப்பிடிக்கும்” என்றாய் சட்டென்று யோசனையிலிருந்து விடுபட்ட அம்பாக.

“தெரியும்” என்றேன்.

என் மார்பில் கைகளை ஊன்றி எழுந்து என் முகம் பார்த்து “எப்படி என்றாய்?” நான் வெறுமே புன்னகைத்தேன். எனக்குள் ஓர் அதிர்வு கிளர்ந்து வளர்ந்து சரிந்தது.

“குற்றவுணர்வை கடப்பது என்பது எத்தனை கடினம்” என்றாய் ஒரு பெருமூச்சு வெளிப்பட.

“அதை யார் மீதாவது சாய்த்துவிட்டு கடப்பது தான் இருக்கும் வழி” என்றேன்.

நீ உடல் அசைய என்னை ஊடுருவிப்பார்த்தாய். நானும் உன் முகத்தை ஊடுருவி உன் விழிகளை ஊடுருவிப் பார்த்தேன் என் முகம் கலங்கலாக உன் சிறிய விழிகளில் தெரிந்தது, அந்த மென் ஒளியிலும்.

அன்றைய பொழுதில் மீண்டும் நிர்வாணமாக ஆடி இருவரும் ஓய்ந்திருந்தோம். காலையில் எழுந்து உன் வருகையிலிருந்து எனக்குள் நடந்ததை சொல்லிப்பார்த்துக் கொண்டே இருந்தேன்.

என்னைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டே அன்றைய தின வகுப்புக்கு நீ புறப்பட்டுச் சென்றாய். உன் அண்ணாவின் பெயரை இதுவரை நான் கேட்டதில்லை, நீயும் சொன்னதில்லை. என் பெயரை எனக்குள் நானே சொல்லிப் பார்த்தேன்.

முற்றும்

 

http://www.annogenonline.com/2018/04/10/saaivu/

ஒரு நிமிடக் கதை: பாட்டீஸ் டே அவுட்

1 week 2 days ago
ஒரு நிமிடக் கதை: பாட்டீஸ் டே அவுட்

 

 

one-minute-story

 

கார் A 4 போலீஸ் ஸ்டேஷன் வாசலில் டயர்களைத் தேய்த்தபடி நின்றது. லேசான கால் நடுக்கத்தோடு பின் இருக்கையிலிருந்து ஜானகி பாட்டி இறங்கினாள். உடல்
ஒரு ஆட்டம் ஆடி சம நிலைக்கு வந்தது.

"அய்யோ பாட்டி கீழே விழுந்து கிழுந்து வெச்சுடப்போற... நில்லு, என் கைய புடிச்சுகிட்டு வா"

போனில் தன் ப்ரமோஷனுக்குத் தேவையான பேச்சுக்களைப் பேசிக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் காக்கி உடையை விட அதிக மொறமொறப்புடன் விழித்துக் கண்களை
உருட்டினார். ஒரு பக்கத்து ஐப்ரோவையும் ப்ரியா வாரியர் கணக்கா மேலே தூக்கி என்ன விஷயம் என்று பேசாமல் பேசினார்.

"இந்த அம்மா, ரோடுலே என் காருல அடிபட இருந்தாங்க. கீழே இறங்கி விசாரித்ததுலே லாங் டேர்ம் மெமரி லாஸ் போல எது கேட்டாலும் முழிக்கிறாங்க. பெயர் மட்டும்
சொல்லத்தெரியுது. வீடு எங்கேன்னு கேட்டால் 'அங்க இருக்குன்னு' பொத்தாம்பொதுவாக சொல்றாங்க. தெரியாமல் தொலைஞ்சு போயிட்டாங்க போல"

"ஏம்மா.... அட்ரஸ் என்ன... புள்ளைங்க இருக்கா, கணவர் இருக்காரா?"

"இவர் நடராஜன்... என்ன தனியாவிட்டுட்டு போய் சேர்ந்துட்டாரு...வீடு...வீடு...அதான் அந்தப் பெரிய துணிக் கடை பக்கம் இருக்குமே"

“இருக்கும் வேலையிலே இது வேற..அம்மா S2 இந்தம்மாவை போட்டோ பிடிச்சு வாட்ஸப்லே போடு. நம்ம ஜீப் எடுத்துகிட்டு இவங்க சொல்லும் துணிக்கடை பக்கம்
இட்டுண்டு போ... யாராவது கண்டுபிடிச்சு கேட்கராங்களா பார்கலாம். இவுங்கலைப்பார்த்தால் சாப்பாட்டுக்கு கஷ்டப்படறவங்க போல் இல்ல.கைல காதுல நகை வேற
இருக்கு..சரி போய் பாரு”

"அம்மா, ஏதானு சாப்பிட்றீங்களா..."

"ஜில்லுனு ஏதானு...லஸ்ஸி, ஐஸ்க்ரீம்..."

ஜில்லுவின் கூடவே டிபன் முடிந்தது.

அந்தப்பெரிய புடவைக்கடை இருந்த ஒவ்வொரு ஏரியாவும் சென்றார்கள்.

'இங்கேயா...?'

"இல்லியே..."

"பச்... இத்தோடு தாம்பரம், புரசைவாக்கம், தி நகர், போரூர்...எல்லாம் பாத்துட்டோம்..சரி அண்ணா நகர் போங்க டிரைவர்"

"அம்மா... அங்கே வேண்டாம். ஏதோ ஒரு பள்ளிக்கூடத்திலே பாம் வெச்சுட்டாங்களாம்..ஏரியாவே அல்லோலப்படுது.."

ஜானகி துள்ளி அமர்ந்தாள்

"அய்யோ என் பேரன் அங்கே ஒரு பள்ளியில் படிக்கிறானே...அப்பா, புண்ணியமா போகட்டும்...அங்கே மொதல்ல போப்பா..."

S2 திடுக்கிட்டாள்

"பாட்டி, எல்லாம் நினைவிருக்கில்ல... பின்ன எதற்காக நடிச்ச..?"

ஜானகி கண்களில் குறும்பு கொப்புளிக்க

"பின்ன, வயசாயிடுத்துனால் வீட்டுலேயே அடைஞ்சு கிடக்கணுமா..? வெளியே எங்கும் போக விடமாட்டேங்கிறாங்க..nஜில்லுனு எதுவும் நாக்குல படக்கூடாதாம், ஹோட்டல்
சாப்பாடு உடலுக்கு ஒத்துக்கொள்ளாதாம்... பாரு ஒரு நாள் முழுக்க எப்படி சென்னையை சுற்றிப்பார்த்தேன்"

S2 மயக்கம் போட்டு விழுந்தார்.

http://www.kamadenu.in/news/stories

அவை ஊளையிடுகின்றன

1 week 3 days ago
அவை ஊளையிடுகின்றன - கலைச்செல்வி

ஓவியங்கள் : ரமணன்

 

சுவரின் மறுபக்கம் அவை உறுமத் தொடங்கியிருந்தன. ஆரம்பக்கட்ட உறுமல்தான். ஆனால், அந்த ஒலியே அவளை மருளவைத்தது. கைகள் இரண்டையும் மடித்து, உடலைக் குறுக்கிச் சுவரோரமாகப் பம்மிக்கொண்டு அமர்ந்திருந்தாள். சில சமயங்களில் உறுமலோடு நின்றுவிடலாம். ஆனால், அது வெகுசில நேரங்களில் மட்டுமே. பெரும்பாலும் அவை பெருங்குரைப்புகளாக மாறிவிடும். தொடர்ந்து உறுமல் ஒலி கேட்பதுபோலிருந்தாலும் சாளரத்தின் வழியே எட்டிப் பார்க்கும்போது, ஏதும் தட்டுப்படுவதில்லை. ஆனால், அதுகூட வெகுசில நேரங்களில் மட்டுமே. ஒருவேளை இப்போதும் அப்படித்தானோ... சுவரோடு காதை நெருக்கிவைத்துக்கொண்டாள். இல்லை... அவை நடமாடுகின்றன. அவளைக் கண்காணிப்பதற்குத் தோதான இடத்தைத் தேடி அங்குமிங்கும் அலைகின்றன. விறுக்கென்று அடிவயிறு குழைந்து பயம் கவ்வி இழுத்தது அவளை.

72p1_1522059078.jpg

அவளைக் கண்காணிக்கவே அவை வருகின்றன. அவளுடையவை அத்தனையும் இப்படித்தான் உருவப்பட்டன. தொடர்ந்து தான் கண்காணிப்பில் இருப்பதை அவள் உணர்ந்தேயிருந்தாள். முதலில் உறுமல்கள் சன்னமாக எழும். பிறகு, குரைப்பாக மாறும். குரைப்பு முதலில் ஒன்றிலிருந்துதான் தொடங்கும். பிறகு, நாலைந்து இல்லையில்லை... ஏழெட்டு இருக்கலாம். குரைப்பு அடக்க முடியாததாகிவிடும். அடர்க் கருப்பில், அல்லது திட்டுத்திட்டான கருப்பில், வெளிர் செம்மண் நிறத்தில்... நிறம் வெவ்வேறாக இருந்தாலும் எல்லாமே வளர்த்தியாகவும் தாட்டியமாகவும் இடைவிடாது குரைக்கும் சுபாவத்துடன் இருந்தன. கலவரத்தோடு கதவை ஏறிட்டாள். தாழிடப்பட்டுத்தானிருந்தது. ஆனாலும், உளுத்துப்போன தாழ்ப்பாள். எப்படியாக இருந்தாலும் தாழ்ப்பாள் வீட்டுக்குப் பாதுகாப்பு; வீடு அவளுக்குப் பாதுகாப்பு. வீடு என்றாலே பாதுகாப்புதானே... அதுவும் நிறைந்த வீடென்றால்... கணவன், மூன்று மகன்கள் என நிறைந்த வீடு. பூர்விக வீட்டை இடித்துவிட்டு, புதிதாகக் கட்டத் தொடங்கியபோது அகலக்கால் வைக்கிறோமோ என அவளுக்குப் பயம் வந்தது. கணவன் சொன்னான், “வருசம் ஒருக்காவா கட்றோம்..?” பிறகு கணவனுக்குப் பயம் வந்தது. ‘‘மூணு பயலுவன்னு ஆயிடுச்சு. சின்னதுன்னாலும் ஆளுக்கொரு ரூமா தடுத்துட்டா நல்லாருக்கும்.” அவள் சொன்னாள், “நல்லாதான் இருக்கும்.” ஆமோதித்தான். இரட்டைக்கட்டு வீடோ முற்றம்வைத்த பெரிய பரப்போ இல்லையென்றாலும், முன்கூடம், சமையலுக்கு ஒன்று, பத்தாயம் வைக்க ஒன்று, படுக்க ஒன்றுமாக இருந்த அறைகளைப் புதிதாக்கினார்கள். மிஞ்சிய மணலில் பயல்கள் ஏறி விளையாடுவதும், விளையாடிய களைப்பில் அதிலேயே உறங்குவதுமாக நாள்கள் கடந்தபோது, அந்தத் தொழிற்சாலை அங்கு வரப்போவது யாருக்கும் தெரியவில்லை அல்லது யாரும் உணரவில்லை.

அவை நடமாடத் தொடங்கிவிட்டன. உக்கிரமான நடமாட்டம். பெருங்குரைப்பை உள்ளே அழுத்திக்கொண்டு உறுமலை உயர்த்தியிருந்தன. சன்னல்களை அடைக்க முடியாது. கதவுகள் உளுத்து உதிர்ந்துவிட்டன. வெறும் கம்பிகள் மட்டுமே... அதுவும் துருவேறி... ஒருமுறை கம்பியை இறுகப் பிடித்தபோது அது கையோடு பிடுங்கிக்கொண்டு வந்தது. நல்லவேளை, அந்த இடைவெளியில் அவற்றின் உடல் நுழைய முடியாது. ஆனால், புழுதிக்குத் தடையில்லை. தெருப்புழுதி... ஓட்டமும் நடமாட்டமுமாக அவை கிளர்ந்தெழுப்பும் புழுதி. வெயிலும் சேர்ந்துகொண்டதால் உக்கிரமாக இருந்தது. மகன்கள் விளையாடும்போதும் இப்படித்தான் புழுதி கிளம்பும். ஒருவேளை விளையாடச் சென்ற பயல்கள்தான் புழுதியைக் கிளப்பிவிடுகிறான்களோ? அய்யய்யோ... இத்தனை சனியன்களை ஒண்ணா பாத்தா சின்னப்பய பயந்துக்குவானே. தாழ்ப்பாளை நீக்க எழுந்தபோது, அவை ஒருசேர பெருவொலியில் குரைக்கக் தொடங்கின. பேரொலி... குடலை உருவி இழுப்பதுபோன்று காதில் அறையும் ஒலி. காதுகளை இறுகப் பொத்திக்கொண்டு குத்துக்காலிட்டு அமர்ந்தாள். சுவர் பலவீனத்தில் அதிர்ந்துகொண்டிருந்தது. எந்நேரமும் விழுந்துவிடலாம். உடலை நகர்த்தி நகர்த்தி நடுக்கூடத்துக்கு வந்தாள்.
72p2_1522059116.jpg
நடுக்கூடத்தில்தான் அவள் கணவன் படுத்திருப்பான். இறுதியாகவும் இங்குதான் கிடத்திவைக்கப்பட்டிருந்தான். முடிந்துவிட்டது, எல்லாமும் முடிந்துவிட்டது. அந்தத் தொழிற்சாலை இங்கு ஆரம்பிக்கப்பட்டபோது, எல்லோருக்கும் எல்லாமும் முடிந்துவிடும் என்று யாருக்கும் தெரியவில்லை. “மண்ணுந்தண்ணியும் வெஷமாப் போச்சு”னு இப்போ சொல்வதுபோல அப்போ ஒருவர்கூடச் சொல்லவில்லை. சொன்னால் மட்டும் என்ன செய்ய முடியும். சொற்களை அம்பலம் ஏற்றப் பணம் வேண்டுமே. அது சில்லறையாகக்கூட இல்லாததால் எல்லோரும் சிதறிப்போனார்கள். சிலர் அதே தொழிற்சாலையில் கூலிகளாகச் சேர்ந்தார்கள். இவளின் பிள்ளைகள் அதற்கும் லாயக்கற்ற வயதில் இருந்தனர். ஆனாலும், பெரியவன் பத்து முடித்திருந்ததில், ‘‘கம்பெனியில் வேலை இருக்கும்’’ என்றான் குமார், வேலைக்கு ஆள் பிடிக்கும் ஏஜென்ட். நான்குவழிச் சாலைப் பணிக்குச் சிலர் சென்றுவிட்டனர். வயதானவர்கள் பிடிவாதமாக நகர மறுத்துவிட்தைப்போல இவள் கணவனுக்கும் பிடிவாதம் இருந்தது.

காதைப் பிளக்கும் சத்தம். குரைப்புக்கும் ஓட்டத்துக்கும் ஈடுகொடுக்க முடியாமல் வறண்ட பூமி புழுதியாக எழுந்தாடியது. முன்பெல்லாம் மண்ணுக்கு இத்தனை வறட்சியில்லை. பொட்டல்தன்மை இல்லை. ஆற்றை ஒட்டிய மண் இப்படியா வறண்டுவிடும்? ஆனால், அதில் ஆச்சர்யம் இல்லையாம். “கம்பெனிக்காரன் பொழுதன்னைக்கும் மிசினு போட்டு உறிஞ்சுறான். அப்றம் வெள்ளாமைக்குத் தண்ணி எப்டிக் கெடைக்கும்?” இவளுக்கு மட்டுமல்ல... எல்லாருக்குமே புரியத் தொடங்கியது. அதிகாரி அதிகாரியாக, அலுவலகம் அலுவலகமாக எறி இறங்கியாயிற்று. கையூட்டு பெற்றுக்கொண்டு, கள்ளச் சிரிப்பை மறைத்துக்கொண்டு, “ஆவன செய்கிறோம்” என்றார்கள். “எப்போங்க...” என்றபோது, கோபப்பட்டார்கள். எப்போ இதுக்கெல்லாம் விடிவுகாலம். மனசு முழுக்க அரிப்பு. பிறகுதான் உடலிலும் அரிப்பு. ஆலைக்கழிவு கலந்த நீரால் ஏற்பட்ட அரிப்பாம். யாராரோ வந்தார்கள். ஆவேசப்பட்டார்கள். ஆதரவாகப் பேசினார்கள். ஒவ்வொரு முனையிலும் நம்பிக்கை எழும். பிறகு, அதிகாரத்தில் அமிழ்ந்துபோகும். பிறகுதான் ஊரை விட்டுட்டு ஊரே கிளம்பியது.

இவளும் கேட்டாள்.. “ஏங்க நாமளும் போயிரலாமா..?”

“எப்டிறீ போறது... கடனை வாங்கி வீட்ட வேற இடிச்சுக் கட்டித் தொலச்சிட்டோம். எங்கன்னு போறது..?” ஆனாலும், போய்விட்டான் ஒரேடியாக.

“தண்ணியில கனிமம் கலந்துபோச்சு. அதைக் குடிச்சதனாலதான் இந்தச் சீக்கு”. ஆனால், பெரியாஸ்பத்திரியில் அதைக்கூடச் சொல்லவில்லை. வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.

72p3_1522059091.jpg

அன்றிரவும் அவை கூடின. ஏழெட்டுக்கு மேலிருக்கும் எண்ணிக்கையில். ஆனால், குரைக்கவில்லை. இரண்டு கால்களைக் குத்துவசத்திலும் இரண்டு கால்களை நீள்வசத்திலும் வைத்தப்படி தரையிலமர்ந்து தலையை உயர்த்தி ஊளையிட்டன. நீண்ட நெடிய ஊளை. சாளரத்தின் கதவை இழுத்து மூடினாள். அப்போது சாளரத்துக்குக் கதவிருந்தது. அவளுக்கும் கணவன் இருந்தான். ஆனால், அவன் அவளுக்குத் தெம்பு சொல்ல முடியாமல் அல்லது அன்றே இறந்துபோக வேண்டிய கட்டாயத்தில் படுக்கையில் முடங்கிக் கிடந்தான். இதே கூடம்தான். இதே முன்கூடம்தான். அன்று மகன்கள் சுற்றிலும் நின்றிருந்தது, அவளுக்கு ஆதரவாக இருந்தது.

‘‘குடுக்கக் கூடாதத தூக்கிக் குடுத்துட்ட... பேசாமப் புள்ளங்கள அழச்சுக்கிட்டு நீயும் கௌம்பி வந்துருடீ...” புருஷன இழக்கக் கூடாதுதான். இந்தப் பூமியும் நிலமும்கூட அப்படித்தான். ஏன், இந்த வீடுகூட இழக்க முடியாத ஒன்றுதான்.

“புடிவாதம்டீ ஒனக்கு...” பிடிவாதம் என்று ஏதுமில்லை. கணவன் இருந்தபோது கிளம்புவதற்கு மனம் ஒப்பவில்லை. கணவன் போன பிறகு தைரியம் வரவில்லை.

வெளியில் சத்தம் அடங்கியிருந்தது. குரைத்து அடங்கி எங்கோ ஓடியிருக்கலாம். இதுதான் அவள் வெளியே கிளம்பும் தருணம். கம்பெனி ஷிப்ட் முடியும் நேரம். நெடுக நடந்து பெரிய சாலையைக் கடந்து செல்வாள். தொழிலாளிகளுக்கு இவளைத் தெரியும். பைத்தியக்காரியாக, பிச்சைக்காரக் கிழவியாக. ஆனால், ஒருகாலத்தில் இங்கே பூரிப்பாக வாழ்ந்தவளாக, பிறகு, எல்லாவற்றையும் தொலைத்தவளாக அறிந்தாரில்லை. எல்லோருமே எல்லாமே புதுசு. அவளுக்குக் காசு வாங்கும் பழக்கமுமில்லை. அப்படியே கிடைத்தாலும் அதை என்ன செய்வதென்றும் புரியவில்லை. மீந்த உணவு போதாதா?

ஆனால், தன் கையில் விழும் அந்த உணவுக்காக நாய்கள் சண்டையிட்டால், அவளால் தாங்க முடியாது. ஓலமிட்டு அழுவாள். பயந்து வரும். கணவன் இருந்தால் சாய்ந்துகொள்ளலாம். மகன்கள் இருந்தால் சாய்த்துக்கொள்ளலாம். அவர்களோ இவளின் கதறலைக் கண்டும் காணாமலுமாகத் தள்ளி நின்றுவிடுகிறார்கள். ஓடி ஓடிப் பிடித்தாலும் கைக்கு அகப்படுவதில்லை. இவளின் பரட்டைத் தலையும் அரைகுறையான நைந்த ஆடைகளும் சிறுவர்களுக்குச் சிரிப்பை வரவழைக்கும். இவள் மீது கற்களை, குச்சிகளை விட்டெறிவார்கள். சிறுவர்கள்தான் ஆனால், அவர்கள் இவளின் மகன்கள் அல்ல... விளையாடப் போன மகன்கள் இன்னும் திரும்பவில்லை. திரும்பிவரும்போது, வெந்நீர் காயவைத்துப் புழுதிபோகக் குளிக்க ஊற்ற வேண்டும். ஆனால், குளித்த பிறகும் உடலே பிய்ந்துவிடும்போல அரிப்பு, அரிப்பு.

ஒருமுறை இவளின் பரிதாப நிலையைப் பார்த்துக் கணவன் இவளை நோக்கிக் கைகளை நீட்ட, விம்மியெழுந்த உவகையோடு அருகே ஓடியபோது, அவன் கறிவேப்பிலைக் குச்சியால் அடித்தான். கிழிசலான ஆடையில் சுண்டி விழுந்த அடிகள் அவளைத் துள்ளவைத்தன. ஆனாலும் திரும்பிப் பார்த்துக்கொண்டுதான் ஓடினாள். அது கணவனல்ல... கணவனல்ல... யாரோ ஒருவன். குச்சியோடு துரத்துகிறான். மூச்சிரைக்க வீட்டுக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக்கொண்டாள்.

 அவையும் அவளைத் துரத்தியிருக்கின்றன. மூச்சிரைக்க ஓடியிருக்கிறாள். கூடவே மகன்களும். தாயும் மகன்களுமாகக் கதவை மூடிக்கொண்டு ஆசுவாசிக்க நினைத்த தருணத்தில், திடீரென மகன்களைக் காணவில்லை. தொண்டை வறள வறள அழுதாள். இத்தனை சத்தமாகக் குரைக்கும் அவற்றுக்குத் தொண்டை வறளாதா? வறண்டிருந்தது. ஒருநாள், பின்னும் ஒருநாள், பின்னும் ஒருநாள். இரண்டு கால்களைக் குத்துவசத்திலும் இரண்டு கால்களை நீள்வசத்திலும் வைத்தபடி தரையிலமர்ந்து தலையை உயர்த்தி ஊளையிட்டன. மகன்கள் ஒவ்வொருவராகக் கை நழுவிய தினங்கள் அவை.

கனிந்த இரவின் பின்னணியில் தொழிற்சாலை மின்னியது. கழிவு நீரின் துர்நாற்றம் காற்றில் கலந்து குளிராக வீசியது. சிமென்ட்டும் மணலுமாகக் காரை பெயர்ந்திருந்த தரையில் படுத்துக்கிடந்த அவளை எதுவோ கடித்தது. செவ்வெறும்புகளாக இருக்கலாம். வெற்று மரச்சட்டங்களாகத் தொங்கும் கதவை மூடியிருப்பதும் மூடாமலிருப்பதும் ஒன்றுதான். பூரான், தேள், பாம்பு என எது வேண்டுமானாலும் வரலாம். நாய், நரிகள், ஏன் தொழிற்சாலை ஆட்கள்கூட வரலாம். வீட்டைப் பிடுங்கிக்கொள்ளலாம்.

 திடீரென்று அவளுக்கு உதறலெடுத்தது. அந்தச் சனியன் பிடித்த கண்காணிப்பு நாய்கள் ஒட்டுமொத்தமாகக் கூடி இவளைப் பிடுங்கிக் கடித்து, கடித்துப் பிடுங்கி... எழுந்து உட்கார்ந்துகொண்டாள். நடுங்கும் கைகளால் சேலையைக் கால்கள் வரை இழுத்து விட்டுக்கொண்டபோது கிழிசல்கள் பெரிதாகி விரிந்தன. இரத்தம் வடிந்த புண்களில் ஈக்கள் உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்தன. துணியை இழுத்து உதறியதில் யாரோ போட்டுவிட்டுப்போன ப்ரெட் பாக்கெட் பொத்தென்று நழுவி விழுந்தது. சாப்பிட்டு நாலைந்து நாள்களாகி இருக்கலாம். ஆனாலும், சாப்பிடும் உத்தேசமில்லை. கொஞ்சம் முன்புதான் கருஞ்சாந்தாய் பொங்கி வழிந்த ஆலைக்கழிவு நீரைக் குடித்திருந்தாள்.

அவள் கனவிலும் இதே கூடத்தில்தான் உறங்கிக்கொண்டிருக்கிறாள். அவள் அருகில் படுத்துக்கொள்ள கணவன் உள்பட நான்கு பேருக்கும் கடும்போட்டி. அவர்களிடமிருந்து விடுபட்டு விளையாட்டாகப் பத்தாய அறைக்குள் ஒளிகிறாள். மூன்றாவது மகன் முந்தானையைப் பிடித்தபடி தூக்கிக்கோ என்று கைகளை உயர்த்துகிறான். வீடு முழுக்க அலையலையாய்ச் சிரிப்பு, பேச்சு, சத்தம், விழிப்பு, தூக்கம், விழிப்பு, குரைப்பொலி. இதோ வரும் நேரம்தான்... ஒன்றா இரண்டா நான்கைந்தா இல்லை ஆறேழா? அத்தனையும் இதோ உறுமத் தொடங்கும். பிறகு, ஒலி, ஒலி குரைப்பொலி. ஆனால், நிசப்தம்... எங்கும் நிசப்தம்! அப்படியானால் அவை வரவேயில்லையா. சாளரத்தின் திட்டில் வலதுகையை வைத்து எவ்விப் பார்க்க முயன்றாள். எவ்வி எவ்வி எவ்வ முடியாமல் துவண்டாலும், காதுகள் அவற்றின் வருகையை, காலடியோசையைச் சொன்னது. நடுக்கூடத்தில் பம்மிக்கொண்டாள். பிடிப்பில்லாமல் உட்காரவியலாத தேகம் அவளைக் குப்புறக் கவிழ்த்தியது.

அந்நேரம் அவை வந்திருந்தன. இரண்டு கால்களைக் குத்துவசத்திலும் இரண்டு கால்களை நீள்வசத்திலும் வைத்தப்படி அமர்ந்து தலையை உயர்த்தி ஊளையிட்டன.

https://www.vikatan.com

ஒரு நிமிடக் கதை: நம்பிக்கை!

1 week 4 days ago
ஒரு நிமிடக் கதை: நம்பிக்கை!

 

 

nambikkai-oru-nimida-kadhai

 

ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் மகனையும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகளையும் அழைத்துக்கொண்டு உள்ளூர் பள்ளிக்குச் சென்றபோதுதான் அதைப் பார்த்தேன். மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் தன் மகளைப் பள்ளி வேனில் ஏற்றிவிட காத்துக்கொண்டிருந்தார் தேவி டீச்சர். இவர் என் பிள்ளைகள் படிக்கும் அரசுப் பள்ளியின் ஆசிரியை.

அவரைப் பார்த்ததும் எனக்கு எரிச்சல் வந்தது. பிள்ளைகளைப் பள்ளிக்குள் அனுப்பிவிட்டு, தேவி டீச்சரின் வருகைக்காக பள்ளிக்கூட வாசலில் காத்திருந்தேன். சரியான நேரத்துக்கு அவர் வந்துவிட்டார். கொப்பளித்து வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, சிரித்தபடியே கேட்டேன், ‘‘உங்க மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனால் உங்க மேலயே உங்களுக்கு நம்பிக்கை இல்லையே?’’

‘‘என்ன சார் சொல்றீங்க?’’

‘‘நீங்க நல்லா சொல்லித் தருவீங்க என்ற நம்பிக்கையிலதான் என் பிள்ளைகளை உங்க பள்ளிக்கு அனுப்புறேன். ஆனால், நீங்க உங்க பிள்ளையைப் பக்கத்து ஊருல இருக்கிற மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு அனுப்புறீங்களே? ’’

மெலிதாகப் புன்னகைத்த ஆசிரியை, ‘‘என் மகள் ஒன்றாம் வகுப்பு படிக்கிறா. நான் ஒன்றாம் வகுப்பு டீச்சர். நம்ம பள்ளியில எல்லா வகுப்புலயும் ஒவ்வொரு பிரிவுதான் இருக்கு. இதே பள்ளியில, அதுவும் என் வகுப்பிலேயே என் மகளும் படிச்சா, என்னை அறியாம என் கவனம் முழுவதும் அவள் மேலதான் இருக்கும். மத்த குழந்தைகளை நல்லா கவனிக்க முடியாதுன்னுதான், அவளை அந்தப் பள்ளியில சேர்த்திருக்கேன். இந்த ஒரு வருஷம்தான். அடுத்த வருஷம் ரெண்டாம் வகுப்பு படிக்க நம்ம பள்ளிக்கே வந்துடுவா’’ என்று கூறிவிட்டு பள்ளிக்குள் சென்றார்.

அவர் மீதான நம்பிக்கை பலமடங்கு உயர்ந்திருந்தது.

http://www.kamadenu.in/

ஆகாசத்தின் உத்தரவு

1 week 5 days ago
ஆகாசத்தின் உத்தரவு - சிறுகதை

நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... இமையம், ஓவியங்கள்: பாலு

 

சிமென்ட் மேடையில் ஒரு குதிரையின் மீது கிழக்கு பார்த்த நிலையில் முனியசாமி மாதிரி கொடூரத் தோற்றத்தில் ஒரு சாமி உட்கார்ந்து இருந்தது. சாமி சிலைக்கு முன் எந்த அவசரமும் இல்லாமல் கருத்த நிறமுடைய ஓர் ஆள் கும்பிட்டுக் கொண்டிருந்தான். நடந்து வந்த களைப்பால் வழிந்த வியர்வை யைக்கூடத் துடைக்க வில்லை.

கீழே வைத்திருந்த பையில் இருந்து செய்தித்தாள் ஒன்றை எடுத்து, தரையில் விரித்துப்போட்டான். பையில் இருந்த பொரிகடலை பொட்டலத்தை எடுத்துப் பிரித்துவைத்தான். ஒரு சீப்பு வாழைப்பழத்தை எடுத்துவைத்து அதில் ஊதுவத்தியைச் செருகினான். குவாட்டர் பிராந்தி பாட்டில் இரண்டு, சிகரெட் டப்பி ஒன்றை எடுத்து அடுக்கினான். எலுமிச்சைப்பழம், கற்பூரம், தேங்காய், பூ, வெற்றிலைபாக்கு... என்று படையலுக்கு உரிய பொருள்களை எடுத்துவைத்தான். கற்பூரத்தை எடுத்து, சாமி குதிரையின் காலடியில் வைத்து ஏற்றினான். கற்பூர தீபத்தில் மூன்று முறை காட்டிவிட்டு தேங்காயை உடைத்தான்; ஊதுவத்தியைக் கொளுத்தினான். எலுமிச்சைப்பழத்தை எடுத்து, அருகில் இருந்த சூலத்தில் செருகி இரண்டு இரண்டாக நான்கு பழங்களைப் பிளந்தான். அதில் திருநீறு, குங்குமத்தைத் தடவிவைத்துவிட்டு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிட்டான். எழுந்து எலுமிச்சைப்பழத் துண்டுகளை எடுத்துக் கும்பிட்டு, கண்களில் ஒற்றிக்கொண்டு நான்கு திசைகளிலும் விட்டெறிந்தான்.

பொரிகடலையை ஒரு பிடி அள்ளி, குதிரை மீது இருந்த சாமியின் பக்கம் விசிறினான். எஞ்சியதை நான்கு திசைகளிலும் தூவினான். பிராந்தி பாட்டிலில் ஒன்றைத் திறந்து தண்ணீர் தெளிப்பது மாதிரி சாமி மேடையைச் சுற்றிவந்து தெளித்தான். குதிரையின் மீதும் கொஞ்சம் தெளித்தான். நான்கு வாழைப்பழங்களை எடுத்து தோலை உரித்துவிட்டு, மாவு பிசைவது மாதிரி பிசைந்தான். நான்கு உருண்டைகளாக்கி நான்கு திசைகளிலும் விட்டெறிந்தான். குதிரையின் காலடியில் கொட்டிக்கிடந்த திருநீறு, குங்குமத்தை அள்ளி நெற்றி நிறையப் பூசிக்கொண்டு விழுந்து கும்பிட்டுவிட்டு எழுந்தான்.

p74c.jpg

நான்கு திசைகளிலும் பார்த்தான். ஏழு, எட்டு வன்னிமரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்றுகொண்டிருந்தன. ஒரு வேப்பமரம், கால் மைல், அரை மைல் தூரம் தள்ளி சவுக்குத் தோப்புகள், மக்காச்சோளக் காடுகள் இருந்தன. கோயிலைச் சுற்றி எதுவும் இல்லை. வெறும் கட்டாந்தரை, களர் நிலமாக இருந்தது. ஆடு-மாடுகள்கூடக் கண்ணில் படவில்லை. சாமியின் பக்கம் திரும்பிக் கும்பிட்டான். ரகசியம் மாதிரி முணுமுணுத்தான்.

''இன்னிக்கி மாசி மகம். தெப்பத் திருநா நடக்கிற எடத்துக்குத் தொழிலுக்குப் போவப்போறேன். அதான் ஒங்கிட்ட உத்தரவு கேக்க வந்தேன். நீ உத்தரவு குடுத்தாப் போறேன். இல்லைன்னா, திரும்பி வூட்டுக்குப் போறேன்!'' என்றபடி அவன் கோயிலைச் சுற்றிலும் பார்த்தான். ஆட்கள் நடமாட்டம் இல்லை. காக்கா-குருவிகள்கூட இல்லை.

காற்றின் அசைவு மட்டும்தான் இருந்தது என்பதைக் கவனித்தவன்... சாமியிடம் ரகசியம் மாதிரி சொன்னான், ''இன்னிக்குத் தொழிலுக்குப் போகவா... வாணாமா? உத்தரவு குடு. பல்லி வந்து எனக்குச் சகுனம் சொன்னாத்தான் போவேன். அதுவும் பீச்ச கை பக்கம் தாங்கல்ல சொல்லக் கூடாது. போற காரியம் விடியாது. சோத்து கை பக்கம் ஏவல்ல சொல்லணும். அப்பத்தான் போற காரியம் ஜெயிக்கும். புரியுதா? இன்னம் செத்தயில இருட்டிப்புடும். சட்டுனு உத்தரவு குடு'' என்று சொல்லிவிட்டு அந்த ஆள் தரையில் உட்கார்ந்தான்.

அவனுடைய பார்வை சிமென்ட் மேடை, குதிரை, சாமி சிலை... என்று அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தது. அதோடு தன்னைச் சுற்றிலும் பார்த்தான். பல்லியின் சத்தம் கேட்கிறதா என்று காதுகளைக் கூர்மையாகத் தீட்டி வைத்துக்கொண்டிருந்தான்.

ஐந்து, பத்து நிமிடங்கள் வரை உட்கார்ந்திருந்தான். தட்டான் பறக்கிற சத்தம்கூடக் கேட்கவில்லை. மேற்கில் பார்த்தான், சூரியன் சீக்கிரத்தில் மறைந்துவிடும் போல் இருந்தது. அவனுடைய முகம் கடுகடுவென்று மாறியது. சாமியிடம் கோபித்துக்கொண்டவன் மாதிரி சொன்னான், ''இங்கிருந்து நடந்து ரெண்டு மைலு தாண்டிப் போயித்தான் காரப் புடிக்கணும். அப்பறம் அங்க இருந்து அரை மணி நேரம். கார வுட்டு எறங்குனா தெப்பத் திருநா நடக்கிற எடத்துக்கு நடந்து போவணும். இங்கியே லேட்டாப் போனா, காரியம் ஆவுமா? கூட்டம் கலஞ்சிப்புடாதா? கூட்டம் கலஞ்சிப் புட்டா? நான் போயி அலஞ்சி, திரிஞ்சி வெறும் ஆளா திரும்பணுமா? ஏன் எதுக்கும் பதிலு சொல்லாம குந்தியிருக்க? 'காயா... பழமா?’னு சொல்லிடு. முடியாதுனா அப்பறம் எதுக்கு ஒம் மூஞ்சியில முழிக்கப்போறன்!'' - தரையில் இருந்து அந்த ஆள் எழுந்தான்.

சாமி மேடையைச் சுற்றி வந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். தரை, சிமென்ட் மேடை, குதிரை, சாமி என்று எல்லா இடத்திலும் பார்த்தான். பல்லி இருக்கிற மாதிரியே தெரியவில்லை. சத்தம் வருகிறதா என்று கவனித்தான். சாமி கோயிலுக்கு வரும் வழியைப் பார்த்தான். ஆட்கள் யாரும் வரவில்லை. மேற்கில் பார்த்தான். இன்னும் சற்றைக்கெல்லாம் சூரியன் மறைந்துவிடும்போல் இருந்தது.

நேராக சாமியின் முன் வந்து கோபமாகக் கேட்டான், ''குவாட்டரு பாட்லு, சிகரெட், எலுமிச்சங்கா, பூ, பழம்னு ஒனக்கு வேண்டிய எல்லாத்தையும் கொண்டாந்து படையல் போட்டுட்டேன். எல்லா கருமாதியும் செஞ்சப் பின்னாலயும் எனக்கு ஏன் உத்தரவு குடுக்க மாட்டேங்கிற? கை நெறயப் பொருளு கெடைக்கணும்; கெடைக்கிறதுலதான் பாதியக் கொண்டாந்து ஒனக்கு சூலம், மணி, அங்கவஸ்திரம், கோழி காவு, குவாட்டரு பாட்லுனு கல்லு கருமாந்தரம் எடுக்கிறனே அப்பறம் என்ன? எனக்கு ஏன் உத்தரவு குடுக்காம லேட்டாக்கிற?

போன வெள்ளிக்கிழமை வேப்பூர் சந்தைக்குப் போனேன். பாவப்பட்ட சனியந்தான் மாட்டுச்சி. பாவப்பட்டதுனு நெனச்சா, நான் எப்புடிச் சோறு திங்கிறது? என் வவுறு மண்ணையாத் திங்கும்? மறுநாளு ஒனக்குப் படையல் போட்டனா... இல்லியா? நேரமாவறது ஒனக்குத் தெரியலியா?'' என்று கேட்ட அந்த ஆள், பல்லியின் சத்தம் கேட்கிறதா என்று கவனமாகக் கேட்டான்.

சலிப்பு மேலிட, ''சகுனத் தடங்கலோட போவக் கூடாதுனு ஒனக்குத் தெரியாதா?'' என்று கேட்டான்.

வேப்பமரத்துக்குப் போனான். சிறிது நேரம் நின்றுகொண்டிருந்தான். சகுனம் கிடைக்கவில்லை. வேப்பமரத்துக்கு வடக்கில் இருந்த வன்னிமரத்துக்குக் கீழே போய் நின்றுகொண்டிருந்தான். நேரம் போனது. ஆனால், அவன் நினைத்த காரியம் நடக்கவில்லை. வெறுப்போடு திரும்பி வந்து சாமிக்கு நேரெதிராக நின்றுகொண்டு கோபத்தோடு கேட்டான்.

''உத்தரவு குடுக்காட்டி போ. போனவாட்டிக்கும் மொதவாட்டி என்னா செஞ்ச? ஒரே ஒரு செயினுதான் அம்புட்டுச்சி. வெரலு மொத்தத்துல இருக்கேனு பார்த்தா, கடைசியில அது கவரிங். அதுக்குத்தான் அம்மாம் அடி... ஒதை. மயிரான்... நீயா அம்மாம் அடியும் ஒதையும் வாங்குன? கவரிங் நகைக்குத்தான் பெரிய கூட்டமாக் கூடி அடிச்சானுவ. நகைக்காரி வந்து 'கவரிங்’னு சொன்னதாலதான் உசுரோட உட்டானுவ. இல்லைன்னா போலீஸ், கோர்ட்டுனு ஒரு மாசம் ஜெயிலுக்குப் போயிருக்கணும்.

பெரிய கோயிலுக்கு உள்ளாரப் போவயிலதான் குண்டா இருக்கா, கிழவியா இருக்கானுதான் செயினை அறுத்தேன். அறியாப்புள்ளைவுளவிட அந்தக் கிழட்டு முண்டதான் அதிகமாச் சத்தம் போட்டா. 'செயினை அறுத்திட்டான். புடி... புடி’னு அவ போட்ட சத்தத்துலதான் வழியில இருந்த தேங்காக் கடைக்காரன் வளைச்சிப் புடிச்சிட்டான். 'ஓடியாங்க... ஓடியாங்க’னு கிழவி போட்ட சத்தத்துல கூட்டம் கூடிப்போச்சி. கதறக் கதற அடிச்சானுவ. பாவ-புண்ணியம் பார்க்கலை. சாமி கும்புட வந்த மொத்தக் கூட்டமும் கூடிப்போச்சி. ஆம்பள, பொம்பள எல்லாருந்தான் அடிச்சாங்க. காறி எம் மூஞ்சியிலயே துப்புனாங்க. தரும ஞாயம் பார்க்கலை!'' - அந்த ஆளுடைய கண்களில் இருந்து நீர் வழிந்தது.

கண்ணீரை, புறங்கையால் துடைத்துவிட்டு உள்ளடங்கின குரலில் சொன்னான், ''அன்னிக்கி வாங்கின அடியை நெனச்சா, இப்பியும் வலிக்குது. கூட்டத்தில் இருந்து என்னைக் காப்பாத்திவுட ஒன்னால முடியல. எங் காலுக்கு ஓடுறதுக்குத் தெம்பக் குடுக்க ஒன்னால முடியல. ஒண்ணும் செய்யாததுக்கு நீ எதுக்கு 'குலசாமி’னு இருக்கே? 'ஆகாச வீரன்’னு ஒனக்கு எந்த மயிராண்டி பேரு வெச்சான்? என்னைவிட ஓக்கியன் ஒலகத்துல யாருங்கிறமாரிதான் எல்லாரும் அடிச்சாங்க.

ஒலகத்துல எவன் ஓக்கியம்? 'பொய் சொன்னது இல்லை; பித்தலாட்டம் செஞ்சது இல்லை; அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்பட்டது இல்லை; தொட்டதும் இல்லை’னு சொல்ற ஓக்கியன் எவனும் இன்னும் பூமியில பொறக்கலை. நேரம் சரியில்லை. ஒன்னோட துணை எனக்கு இல்லை; ஒன்னோட அருளு இல்லை. அதான் அன்னிக்கி மாட்டிக்கிட்டேன்.

20 வயசுல காத்து மாரி ஓடுனேன். அப்ப முயலுகூட எங்கூடப் போட்டிபோட முடியாது. இப்ப ஓட முடியலை. வயசாயிடிச்சு. எங் காலுக்கு மின்னலா ஓடி மறையுற தெம்ப நீ குடுத்திருந்தா, நான் எதுக்கு மாட்டிக்கப்போறேன்? அம்மாம் அடியையும் ஒதையையும் வாங்கிக்கிட்டு ஒங்கிட்டத்தான் வந்து நிக்கிறேன். நீ உத்தரவு குடுக்க மாட்டேங்கிற. படையல வாங்கித் தின்னுப்புட்டு, எத்தனை தடவை என்னை அலையவெச்சி வெறுங்கையோட அனுப்பியிருக்க? அப்பல்லாம் ஒன்னையைத் திட்டுனனா? அன்னிக்கி பெரிய கோயில்ல நீதான் என்னை மாட்டிவுட்டுட்ட, மின்ன மாரி ஊராங்க அடியை என்னால தாங்க முடியுதா? நீ என்ன எனக்குப் பிறத்தியாளா... அந்நியமா? நீ எனக்குக் குலசாமி.

என்னை ஒனக்கே நல்லாத் தெரியும். திருநாவுக்குத் திருநா வந்து படையல் போடுற ஆளில்லை நானு. என்னோட மூணு புள்ளைங்களுக்கும் ஒன்னோட சந்நதியிலதான், மொட்டை போட்டேன்; காது குத்துனேன்; பேரும் வெச்சேன். எல்லாத்துக்கும் மேல எங்கம்மா ஒன்னோட பேரைத்தான எனக்கு 'ஆகாசம்’னு வெச்சா. பேரைச் சொன்னா ஊருல மட்டும் இல்லை, போலீஸ் ஸ்டேசன்ல, கோர்ட்டுல எல்லாரும் சிரிக்கிறாங்க. ஆனா, ஒன்னைப் பத்தி நான் எல்லார்கிட்டயும் பெருமையாத்தான் சொல்றேன். குத்தம் சொன்னனா? அதுக்கும் மேல எம் பெரிய மவனுக்கு ஒம் பேரைத்தான் 'ஆகாஷ்’னு வெச்சிருக்கேன். 'பிரமாதமான பேரு’னு சொல்றாங்க. அதுக்காச்சும் உத்தரவு குடுடா திருட்டுப்பயலே'' என்று சொன்ன அந்த ஆள், மடியில் இருந்த ஒரு பீடியை எடுத்துப் பற்றவைத்துக் குடித்துக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான். சகுனம் கிடைக்கிறதா என்று கூர்மையாகக் கவனித்தான். அவன் கேட்டது கிடைக்காததால் வெறுப்புற்று எஞ்சியிருந்த ஒரு பாட்டில் பிராந்தியைத் திறந்து கையில் ஊற்றி குதிரையின் மீதும், சாமியின் மீதும் சுள்ளென்று தெளித்தான்.

கோபம் மேலிட, ''இப்பயாச்சும் ஒன் ஆக்ரோசம் அடங்கி உத்தரவக் குடுடா'' என்று கேட்டான். சுற்றும் முற்றும் பார்த்தான். பல்லி, கண்ணில் படவில்லை. வெறுப்படைந்துபோய் சொன்னான், ''இப்பத்தான் எல்லாம் பயலுவலும் ஒரம், பூச்சிமருந்துனு தெளிச்சி காட்டுல இருக்கிற பூச்சி, பொடுவ எல்லாத்தையும் கொன்னுப்புட்டானுவ. அப்பறம் எங்க இருந்து வரும் பல்லி?''

மேற்கில் பார்த்தான். சூரியன் மறைந்துவிட்டிருந்தது. லேசாக இருள் படர ஆரம்பித்திருந்தது தெரிந்தது. எப்போதையும்விட இப்போது அவனுக்குக் கோபம் கூடுதலாக வந்தது. வேகமாகக் கேட்டான், ''நேரமாவுறது ஒனக்குத் தெரியலியாடா?'' - கோபத்தில் மேடையைச் சுற்றிச் சுற்றி வந்தான். வெறுத்துப்போய் தரையில் உட்கார்ந்தான்.

சிறிது நேரம் தலையைக் கவிழ்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தவனுக்கு என்ன தோன்றியதோ வெடுக்கென்று தலையைத் தூக்கி 'நீயெல்லாம் சாமியா?’ என்பது மாதிரி பார்த்தான். பிறகு, சண்டைக்காரனிடம் கேட்பது மாதிரி சாமியிடம் கேட்டான், ''எனக்குச் சோதனை வெக்கிறியா? இத்தினி வருசமா இல்லாம இன்னிக்கி ஏன் எனக்கு உத்தரவு குடுக்க மாட்டேங்கிற? ஒன்னோட உத்தரவு இல்லாம என்னிக்காச்சும் திருடப் போயிருக்கனா? நீ திருட்டுக்குப் பேர்போன சாமிதானே? திடுதிப்புனு நீ திருந்திப்புட்டா, நான் என்னா செய்யுறது? கருமாதி... எனக்கு வேற தொழிலும் தெரியாதே. ஒங்கிட்ட நான் என்னா கேக்கிறேன்? என்னை எம்.எல்.ஏ. ஆக்கு, எம்.பி. ஆக்கு, மந்திரியாக்கு, பணக்காரனாக்குன்னா கேட்கிறேன்? திருடப்போற எடத்துல மாட்டக் கூடாதுனுதானே கேட்கிறேன். அது பெரிய குத்தமா?

p74b.jpgநான் திருடப்போறது மாடி வூடு கட்டவா? காரு, பங்களா வாங்கவா? நெலம் நீச்சு வாங்கவா? எம் பொண்டாட்டிக்கி வைரத்துல ஒட்டியாணம் செஞ்சி போடவா? கருமாதி... சோத்துக்குத்தானே செயினை அறுக்கப்போறேன். ஒரு நாளு போனா, ஒரு மாசம், ரெண்டு மாசம் பொழப்பு ஓடிப்புடும். கையில காசு இருக்கிறப்ப நான் திருடப் போறனா? எங்கப்பா, எங்கம்மா சம்பாரிச்சி வெச்சிருந்தா, நான் எதுக்கு சாமி சாட்சியா கட்டுன தாலியை அறுக்கப்போறேன்? பால் குடிக்கிற புள்ள இடுப்புல கெடக்கிற கொடிய அறுக்கப்போறேன்?''.

அப்போது, பல்லி கத்தியது மாதிரி அவனுக்குத் தோன்றியது. பேச்சை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தான். ஒரே நேரத்தில் பல்லி சகுனம் சொன்ன மாதிரியும் இருந்தது. சொல்லாத மாதிரியும் இருந்தது. சந்தேகத்தில் அசைவின்றி உட்கார்ந்திருந்து சத்தம் கேட்கிறதா என்று கவனித்தான். காற்றின் அசைவுகூட இல்லை. அவன் கடுப்பாகிவிட்டான். சாமியிடம் முறைப்பது மாதிரி சொன்னான், ''உத்தரவைக் குடு. முடியாதுனா வுடு. இங்க நிக்கிற சூலத்தை எல்லாம் புடுங்கிக்கிட்டுப் போயி பழைய இரும்புக் கடையில போட்டுட்டு அரிசி, பருப்பு வாங்கிப்புடுவேன். குலசாமியுமாச்சி... மசுருமாச்சினு போற ஆளு நானு... தெரியுமில்ல!'' என்று சொன்னவனின் குரலின் வேகம் குறைந்தது.

தனக்குத்தானே சொல்லிக்கொள்வது மாதிரி சொன்னான், ''இதென்ன பழைய காலமா? சோளக் கதிரை அறுக்கிறது, நெல்லு கதிரை அறுக்கிறது, பூசணிக்காய், பரங்கிக்காய் அறுக்கிறதுன்னு அறுத்தாந்து சோறு திங்கிறதுக்கு. இப்பத்தான் எல்லாப் பயளுவுலும் பருத்திய ஊணுறான். சவுக்க நட்டுப்புடுறான். மிஞ்சினா கருப்பங்கயி. அதுவும் இல்லன்னா பிளாட்டா போட்டுடுறான். அப்பறம் எங்கேயிருந்து கதிரை அறுத்தாந்து சோறு திங்கறது? கோழி திருடுறது, ஆடு-மாடு திருடுறது, மோட்டார் கொட்டாயில் கரண்டு கம்பியைத் திருடுறதுனு எல்லாம் செஞ்சி பாத்தாச்சு. அதெல்லாம் ஒரு வார சோத்துக்குக்கூடத் தேற மாட்டேங்கிது. அதோடவும் உள்ளூர் பயலுவோ அடையாளம் கண்டுபுடிச்சி வந்துடுறானுவ. திருடன்கிற பேரோட உள்ளூர்ல குடும்பம் நடத்த முடியுமா?

இப்பல்லாம் எவன் ஆடு-மாடு வளக்குறான்? திருடறதுக்கு. ஊர்நாட்டுல கோழிகூட இல்லை. ஊருக்கு ஊரு பிராய்லர் கோழிக் கடையைப் போட்டுட்டானுவோ. காலம் மாறி, ஊரு நாடெல்லாம் மாறிப்போச்சுன்னு ஒனக்குத் தெரிய மாட்டேங்குது. அதனாலதான் ஒண்ணுத்துக்கும் ஒதவாத களர் நெலத்துல ஒன்னைக் கொண்டாந்து குடிவெச்சியிருக்கானுவ. ஒனக்கு ஒரு கூரைகூட போடல தெரியுமில்ல.

இப்பல்லாம் மோட்டார் வண்டி, காரு எடுத்துக்கிட்டுப் போயி திருடுறாங்க. ஊர் ஊராப் போயி ரூம் போட்டுத் தங்கித் திருடுறாங்க. சொல்லப்போனா கோயில்லயே திருடுறாங்க. உண்டியலை ஒடைக்கிறாங்க. கொஞ்சம் துணிஞ்சவங்க, சாமி சிலையவே திருடி விக்கிறாங்க. நான் அந்த மாரியா செய்யுறேன்? விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, பெண்ணாடம், உளுந்தூர்பேட்டைனு சுத்திச் சுத்தி வரேன். பட்டப்பாட்டுல பாதிக்குப் பாதி வீணாப்போவுது. பாதிக்குப் பாதி கவரிங்கா இருக்கு. ஒனக்கு படையல் போடுற செலவு தண்ட கருமாதியாப் போவுது.

தங்கம், வைரம்னு போட்டுக்கிட்டு இருக்கிற நாயிவோ எல்லாம் எந்த எடத்துக்கு வந்தாலும் காருலியே வருதுவோ, எந்த எடத்துக்குப் போனாலும் காருலியே போவுதுவோ. கவரிங் மாட்டியிருக்கிற நாயிவோதான், சந்தைக்குச் சந்தை மஞ்சப்பையத் தூக்கிக்கிட்டு நடக்குதுவோ. காயி வாங்க வர்ற கிராக்கிவோ கவரிங்கத்தான் மாட்டியிருக்கும். பகலா இருந்தா, பார்த்து அறுக்கலாம். இருட்டுல எப்புடிப் பார்த்து அறுக்கிறது? முட்டுச்சந்துல, இருட்டுல வரும்போதுதானே செயினைப் புடிச்சி இழுக்க முடியும்? கவரிங் அம்புட்டுதுனு ஒனக்குப் படையல் போடாம இருந்திருக்கிறேனா? எப்ப கொற வெச்சேன்?''

சத்தம் கேட்டது மாதிரி இருக்கவே திரும்பிப் பார்த்தான் அந்த ஆள். ஆட்கள் யாரும் கோயிலுக்கு வரவில்லை என்பது தெரிந்தது. ஆடு, மாடு எதுவும் இல்லை. காக்கை, குருவி, பருந்து எதுவும் பறக்கவில்லை. மரங்கள்கூட அசையவில்லை. பிறகு எப்படி ஆள் வருவது மாதிரி சத்தம் கேட்டது? மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தான். ஆள் யாரும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டதும் மீண்டும் சாமியிடம் சொன்னான், ''நெய்வேலியில் கைநெறயா பொருளு அம்புட்டப்ப ஒனக்கு ஒரு சூலம் வாங்கியாந்து நட்டுவெச்சேன். ஒரு கல்யாண ஊட்டுல செயின் அடிச்சப்ப, அதே விருத்தாசலம் ரெட்டைத் தெருவுல இருக்கிற கொசவன்கிட்ட சொல்லி ஒனக்கு வேட்டைக்கிப் போறதுக்கு ஒரு மங்குதிர வாங்கியாந்து வெச்சேன். ரெண்டு, மூணு முறை அங்கவஸ்திரம் வாங்கியாந்து போட்டேன்.

ஒருமுறை வெங்கல மணி வாங்கியாந்து கட்டினேன். வருசா வருசம் கோழி காவு கொடுத்து முப்பூசை போட்டிருக்கேன். எல்லாத்தையும் வாங்கித் தின்னுப்புட்டு இப்ப உத்தரவு குடுக்க மாட்டேங்கிற. குடுக்காட்டிப் போ. எம் மசுருக்கென்ன, நீதான் பட்டினி கெடப்ப!''

அந்த ஆள், பீடி ஒன்றைப் பற்றவைத்தான். புகையை ஊதிக்கொண்டே பல்லியைத் தேடினான். அது கண்ணில் படும் என்பதற்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. வாயில் இருந்து பீடியை எடுத்து தரையில் தேய்த்து அணைத்துவிட்டு சலிப்புடன் சொன்னான், ''என்னிக்கும் இல்லாம இன்னிக்கென்ன எங்கிட்ட ஒனக்கு வெளயாட்டு? எதுக்காக சகுனத்தைக் குடுக்காம சோதனை வெக்கிற? இப்பல்லாம் நான் செல்போனு எடுக்கிறதையும் உட்டுட்டேன். இப்ப அதுக்கு கிராக்கி இல்லை. ஆயிரத்துக்கே போனு வந்துடுச்சி. கஷ்டப்பட்டு அடி, மிதிபட்டு திருடிக்கிட்டுப் போயி கொடுத்தா 100, 50-தான் தரேன்ங்கிறானுவோ'' - லேசாகச் சிரித்தான்.

பிறகு, ''திருட்டுப் பொருளுக்கு அதுக்கு மேல எவன் தருவான்? திருட்டுப் பொருளுனாலே அடிமாட்டு விலைதானே! அதனால இப்ப நான் செல்போன தொடுறதில்லைனு ஒனக்குத்தான் தெரியுமே!'' - சட்டென்று வேகம் வந்துவிட்ட மாதிரி அடுத்து ஒரு பீடியைப் பற்றவைத்தான்.

மேற்கில் பார்த்தான். மறுநொடியே அவனுடைய முகம் கருத்துவிட்டது. வார்த்தைகளும் தடித்துவிட்டன. ''ஒன்னைச் சொல்லிக் குத்தமில்லடா. என்னைப் பெத்தவளைச் சொல்லணும். எல்லா கருமாதியும் அவதான் கத்துக்கொடுத்தா. இருட்டுனதும் பக்கத்து ஊட்டுல நின்ன முருங்கை மரத்துல இருந்து யாருக்கும் தெரியாம முருங்கக் கீரயை அவதான் ஒடிச்சியாரச் சொன்னா. நடைபாதையில நின்னுக்கிட்டு வயக்காட்டுல போயி புளிச்சக் கீரையைப் புடுங்கியாரச் சொன்னா. கம்பு கதிரை ஒடிச்சியாரச் சொன்னா. பரங்கிக்காயை, பூசணிக்காயை அறுத்துத் தூக்கியாரச் சொன்னா. எவன் ஊட்டு காட்டுலியோ கல்லச்செடியைப் புடுங்கியா. கத்திரிக்காயை, வெண்டக்காயைப் பறிச்சிக்கிட்டு வா. ஊரான் ஊட்டு புளியமரத்துல புளியாம்பழம் பறிச்சி வானு அவதான் சொன்னா. பஸ்ஸுல போவயில வயசைக் கொறச்சிச் சொல்லுனு சொல்லி, டிக்கெட் வாங்காம சண்டை போட்டா. கூலி வேலைக்குப் போனா வயசைக் கூட்டிச் சொல்லி சம்பளம் கேட்டு சண்டை போட்டா. தட்டு மாத்திப் பேச அவதான் கத்துக்குடுத்தா. எல்லா கருமாதியும் அந்தச் சண்டாளிதான் கத்துக்கொடுத்தா.

காலுல போட்டுக்கிட்டுப் போனா செருப்போட வாரு அறுந்துபோவும்னு நாளெல்லாம் கையிலயே செருப்பைத் தூக்கிக்கிட்டுப் போன உண்ணாமலை பெத்த புள்ளதான நானு? எல்லாத்துக்கும் அவ ஒங்கிட்டதான் வந்தா. நானும் ஒன்னத்தான் சுத்திச் சுத்தி வரேன். மத்தவங்கள மாரி மாசத்துக்கு ஒரு சாமிக்கிட்டியா போறேன்? மாசத்துக்கு ஒரு கோயிலுன்னா போறேன்? ஒரே சாமி நீதான்னு ஒங்கிட்டியே வரேன். நீ என்னடான்னா, சகுனம் சொல்ல மாட்டேங்கிற; உத்தரவு குடுக்க மாட்டேங்கிற!'' என்று சொல்லிவிட்டு, வேகம் வந்தவன் மாதிரி தரையில் விழுந்து கும்பிட்டபடியே கிடந்தான்.

p74.jpgமுனகுவது மாதிரி சொன்னான், ''என்னமோ ஒலக அதிசயமா நான் மட்டுந்தான் அடுத்தவனைக் கெடுக்கிறதுக்கு வேண்டுறேன்னு நெனக்காத. எவன் வந்து எனக்கு அடுத்தவனைக் கெடுக்காத மனசைக் குடு, அடுத்தவன் பொருளு மேல ஆசப்படாத மனசைக் குடு, அடுத்தவனைப் பார்த்துப் பொறாமைப்படாத, அடுத்தவன் பொண்டாட்டியைப் பார்த்து ஆசைப்படாத மனசைக் குடு. என்னிக்கும் என்னை ஏழையாவே, பிச்சைக்காரனாவே வெச்சிருனு வேண்டுறவன் யாரு? கூரை வூட்டுலியே என்ன வெச்சிருனு சொல்றவன் யாரு?'' என்று கேட்டபோது, பல்லி கத்தியது மாதிரியும், அதுவும் வலது கை பக்கம் கத்துவது மாதிரியும் இருந்தது. வெடுக்கென்று தலையைத் தூக்கி வலது கை பக்கம் பார்த்தான். பல்லி சகுனம் சொல்லிவிட்டதாகவே நம்பி உற்சாகத்தோடு எழுந்தான். சாமி கும்பிட்டான். சிரித்துக்கொண்டே, ''போதும்டா!'' என்று சொன்னான்.

''இரு 'பூவா, தலையா?’னு ஒரு தடவை பார்க்கிறேன். 'காயா... பழமா?’னு தெரிஞ்சிட்டா துணிஞ்சி போயிடுவேன்'' என்று சொல்லிக்கொண்டே பாக்கு தடிமனில் சிறு சிறு கற்களாக ஒரு பிடி பொறுக்கி எடுத்தான். இரண்டு கைகளுக்கு உள்ளும் கற்களை வைத்துக்கொண்டே சாமி கும்பிட்டான். மூன்று, நான்கு முறை குலுக்கிவிட்டு தரையில் போட்டான். உட்கார்ந்துகொண்டு பதற்றம் கூடக் கூட இரண்டு இரண்டு கற்களாக ஜோடி சேர்த்து பக்கத்தில் வைத்தான். கற்கள் குறைய குறைய அவனுடைய பதற்றம் கூடிக்கொண்டே இருந்தது. விரல்கள் நடுங்கின. லேசாக வியர்த்தது. கடைசி ஜோடி கற்களை எடுத்த பிறகு ஒரே ஒரு கல் மட்டும் எஞ்சிக்கிடப்பதைக் கண்டதும் அவனுடைய முகம் மலர்ந்தது; சிரித்தான். தங்கம் மாதிரி அந்தச் சிறு கல்லை எடுத்து மடியில் பத்திரப்படுத்தினான். ''ஒனக்கு அப்பப்ப கிறுக்குப் புடிச்சிப்போவும். என்னை வீணா அலையவுடுவ; காத்திருக்க வைப்ப. சில நேரம் புடிச்சிக் குடுத்திடுவ. ஆனா, இந்த முறை சகுனம் சொல்லிடிச்சு. இப்ப கல்லுலயும் பூ குடுத்திட்ட. ஒன்னோட தொண இல்லாம, ஒம் பேச்சைக் கேக்காம ஒரு எடத்துக்கும் அடி எடுத்துவைக்க மாட்டேன் தெரியுமில்ல!'' என்று சொல்லிக்கொண்டே எழுந்தான்.

''நீ சக்தி உள்ள தெய்வம்டா. காரணம் இல்லாமியா ஒன்ன நான் கும்புடுவன்?'' என்று கேட்டான். கும்பிட்டுக்கொண்டே சிமென்ட் மேடையை மூன்று சுற்றுச் சுற்றி வந்தான். குதிரையின் காலடியில் கிடந்த திருநீற்றை அள்ளி நெற்றி நிறையப் பூசிக்கொண்டு, 'போற காரியம் நல்லபடியா முடிஞ்சதும் நாளக் காலையில வரேன்'' - சொல்லிவிட்டு, நடைபாதையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

இருட்டாக இருந்தாலும் அவனுடைய கால்களுக்குப் பாதை தெளிவாகத் தெரிந்தது!

https://www.vikatan.com

ஒரு நிமிடக் கதை: பெண் புத்தி

1 week 5 days ago
ஒரு நிமிடக் கதை: பெண் புத்தி

 

 

one-minute-story

 

"கதவைப்பூட்டிக்கொள். ராத்திரி சமையல் போனிலே சொல்றேன். எங்கேயும் வெளியே போகாதே " சாந்தி அலுவலகம் கிளம்பிய பத்தாவது நிமிடம் ராஜி பக்கத்துவீட்டுக்குக் குதித்தபடி சென்றாள்.

* மாமி, சமையல் முடிச்சுட்டீங்களா....ஓ.. ஆரம்பிக்கிறீங்களா...கொடுங்க நான் காய் வெட்டித்தரேன்.... குழம்புக்கா..." கேட்டபடி வேலை செய்யத்தொடங்கினாள்.

" என்ன ராஜி...நேத்து என்ன ஏதாவது முக்கியமா நடந்துதா?" வம்பு கேட்கத்தொடங்கினாள் மாமி.

இது அன்றாடம் நடப்பது தான். ராஜியை சாந்தி வீட்டில் முழு நேர வேலைக்கு வைத்திருந்தாள். வீட்டில் யாரும் இல்லாதபோது, ராஜி பக்கத்துவீட்டுக்குச்சென்று வம்பு பேசத்தொடங்குவாள். உபரியாக மாமிக்குச் சமையல் வேலையில் கூடமாட ஒத்தாசையாகவும் இருப்பாள். மாமிக்கு டபுள் தமாக்கா...அதனால் சாந்தியிடம் வாயைத்திறக்கவே மாட்டாள்.

அன்று இதே போல் அவள் சென்றபோது சாந்தியின் கணவர் திடீரென்று வீட்டுக்கு வந்து விட ராஜியின் நடவடிக்கை தெரிந்துபோயிற்று.

சாயந்திரம் சாந்தி அலுவலகம் முடிந்து வந்த உடன் அவன்

" சாந்தி, இனி இந்த ராஜி வேலைக்கு வேண்டாம். நீ ஆபீஸ் சென்ற உடன் பக்கத்து வீட்டு மாமியோடு பேசப்போய்விடுகிறாள்..உடனே பாக் செய்து அனுப்பு"

சிரித்துக்கொண்டே " அய்யோ...ரொம்ப அப்பாவியா இருக்கீங்க...நான் செஞ்ச ஏற்பாடுதான் இது. ராஜிக்கு சமையல் அவ்வளவாகத்தெரியாது. பக்கத்துவீட்டு மாமி நல்லா சமைப்பாங்க. கேட்டுப்பார்த்தேன் .சொல்லிக்கொடுக்க மறுத்துட்டாங்க. அதுக்குதான் இந்த ஏற்பாடு. பாருங்க, காய் நறுக்கிக்கொடுப்பது போல் பேச்சுக்கொடுத்துக்கொண்டே இப்போது ராஜி எவ்வளவு கற்றுக்கொண்டுவிட்டாள். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். நம்ம வீட்டில் மினி சரவண பவன் ஒன்றை ஏற்படுத்திடலாம்"

-லதா ரகுநாதன்

http://www.kamadenu.in/news/stories/1694-one-minute-story.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

ஒரு நிமிடக் கதை: காவிரி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது..

1 week 6 days ago
ஒரு நிமிடக் கதை: காவிரி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது..

 

 

one-minute-story

  

சத்தமாக வைக்கப்பட்ட தொலைக்காட்சியின் முன் அமர்ந்து மறியல் போராட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் பார்வதி.

"என்ன ஐபிஎல்தானே..” என்று கேட்டபடி , ரிமோட்டைப்பிடுங்கி "படக்" என்று தொலைக்காட்சியை நிறுத்தினார்.

 

1523365589.jpg

"தண்ணீருக்கு போறாடறாங்க , விளையாட்டு இப்ப கேக்குதா?"

அய்யப்பனுக்கு வேண்டுதல் போல் கறுப்பு வேட்டி , கறுப்புச்சட்டை. அவர் கைகளில் கறுப்புப்புடவை.

"இந்தா, இத கட்டிக்கிட்டு வாக் போகலாம் புறப்படு"

மனைவி நடக்க , சகாக்களுடன் மரத்தின் நிழலில் அமர்ந்தார் .

"ஏதோ என்னால் முடிந்த போராட்ட பங்களிப்பு. விவசாயின்னா, விளையாட்டா? நல்லாத்தான் கேக்குறாங்க.. பாழான நிலத்தைப்பார்த்தா ரத்தக்கண்ணீர் வருது சார், தமிழன்னா இளிச்சவாயன்னு நினைக்கிறாங்க. தண்ணீர் தர மறுக்குறாங்க பாரு அவங்களைத் தட்டிக்கேட்க ஆள் இல்லை , இது தண்ணீர் புரட்சி இல்ல கண்ணீர் புரட்சி , சில துளி தண்ணீருக்காக எப்புடி போராடறாங்க பாருங்க, ஹட்ஸ் ஆப்....வீட்டுல டிவி கூடப் பார்க்கவுடல நான். 
விவசாயிகளுக்குத்தெரியும் தண்ணீரோடு அருமை. ஒரு வாய் சோறு கிடைக்காமல் போனாதான் நமக்கும் தெரியும் தண்ணீரோட அருமை " பெருமையாக எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தார். அனைவரும் தலை ஆட்டிக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

மெட்ரோ வாட்டர் அலுவலகத்தில் ஆள் ஒருவரைப்பிடித்து, பணம் கொடுத்து, சில வருடங்களுக்கு முன் எல்லோர் வீட்டையும் விட மிகத் தாழ்வாக மெட்ரோ தண்ணீர் குழாய் அவர் போட்டுக்கொண்டிருந்தார். அதன் வழியாகத் தண்ணீர் தொட்டிய நிரம்பி காவிரியாக ஓடிக்கொண்டிருந்தது அவர் வீட்டின் பின் புறத்தில்.

வாக் கிளம்பும் முன் அணைக்க மறந்த தண்ணீர் மோட்டார் போராட்டமாக ஓடிக்கொண்டிருந்தது..

- லதா ரகுநாதன்

http://www.kamadenu.in/news/stories/1736-one-minute-story.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner

அமைதியாக ஒரு நாள்!

1 week 6 days ago
அமைதியாக ஒரு நாள்!

 

white_spacer.jpg

       

p96.jpg ம னசு அபூர்வமாக ஒரு தினம் அமைதியாக இருந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. இத்தனைக்கும் அன்றைய தினம் மனைவி வீட்டில்தான் இருந்தாள். வீடும் பழைய வீடுதான். சமையலும் மாமூல் சமையல்தான். டெலிபோனிலோ தபாலிலோ வாய்வழிச் செய்தியாகவோ செய்தித்தாளிலோ என் சம்பந்தப்பட்ட எந்த மகிழ்ச்சித் தகவலும் கிடையாது.

பின், எதனால் அந்த மகிழ்ச்சி என்று தெரியவில்லை. ஊமைக்காயம் என்பது போல் ஊமை மகிழ்ச்சி. இத்தனைக்கும் ஞாயிற்றுக்கிழமையோ வேறு லீவு நாளோ இல்லை. ஒன்பதரை மணிக்கு வழக்கம் போல் ஆபீஸ் கிளம்ப வேண்டியதுதான்.

பஸ் ஸ்டாப்பில் கூட்டம் நெரியுமே, ஸ்டாண்டிங் கிடைப்பதுகூடச் சிரமமாயிருக்குமே என்றெல்லாம் எழும் வழக்கமான படபடப்புகூட எழவில்லை. அவ்வளவு ஏன், மனைவி கட்டிக்கொடுத்த சாம்பார் டப்பாவை மத்தியானம் லன்ச் டைமில் ஆபீஸில் பிரித்தால், கப்பென்று வாடை எழுமே என்கிற வழக்கமான மனச் சோர்வுகூட ஏற்படவில்லை.

எதனால் இப்படி மனசு எந்த விதச் சலனமும் இல்லாமலிருக்கிறது? திடீரென்று செத்துகித்து விடப் போகிறாமோ? ஆச்சர்யம் பாருங்கள்... சாவு எண்ணம் வந்தபோதுகூட மனசில் கவலை தோன்றவில்லை.

என் மனைவி வழக்கம் போல் காலைப் பரபரப்புடன், ‘‘ஆபீஸ் புறப்படலையா? ஏன் உட்கார்ந்துட்டீங்க? என்ன பண்ணுது உடம்புக்கு?’’ என்றாள். ‘‘ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?’’ என்று பதறினாள்.

‘‘ஒரு மாதிரியும் இல்லை. சும்மா ஒரு அஞ்சு நிமிஷம் அமைதியாக உட்கார்ந்திருக்கலாமேனு தோணிச்சு!’’ என்றேன். மனைவியின் காபரா அதிகமாயிற்று. ‘‘ஏன், மாரை கீரை வலிக்கிறதா? கொஞ்சம் தண்ணி கொண்டு வரவா?’’ என்றவள், நான் சொல்லாமலே சமையலைறைக்கு ஓடிப் போய் ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்தாள்.

என் மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் ஒரே சீராக இருந்தது. இது மாதிரி மனநிலை, எட்டு கிரகங்கள் ஒன்று சேரும் வானியல் நிகழ்வு மாதிரி வெகு அபூர்வமாகத்தான் ஒரு சிலருக்கு, ஒரு சில நிமிட நேரத்துக்கு வாய்க்கும் என்று தோன்றியது. ஆகவே, அந்த நிலையை முழுசாக அனுபவிப்போமே என அமைதியாக மனைவியை ஏறிட்டுப் பார்த்தேன்.

‘‘என்னவோ மாதிரி பார்க்கறீங்களே... எனக்குப் பயம்மா இருக்கே! டாக்டருக்குப் போன் பண்ணவா? நிஜத்தைச் சொல்லுங்க... மாரை என்னவோ பண்றதுதானே?’’ என்று மறுபடி பதறினாள் மனைவி.

‘‘ஒண்ணுமில்லே! நான் கொயட் ஓ.கே!’’ என்று புன்னகைத்தேன்.

‘‘இன்னிக்கு நீங்க ஆபீஸ் போக வேணாம். தலகாணி கொண்டு வரேன். சட்டையைக் கழற்றிட்டு, பேசாம இப்படி ஊஞ்சலிலேயே படுத்துக்குங்க! ஃபேனைப் போடறேன்...’’

 

p96.jpg ‘‘அடடா! எனக்கு ஒண்ணுமில் லேம்மா! ஏன் பதர்றே? நான் முழு அமைதியா இருக்கேன்!’’ என்றேன்.

 

மனைவிக்குக் குரல் கரகரத்தது... ‘‘இப்படியெல்லாம் நீங்க பேச மாட்டீங்களே..! நான் சொல்றதைத் தயவு பண்ணிக் கேளுங்க. இன்னிக்கு உங்க மூஞ்சே சரியில்லை. எனக்கென் னவோ பயமா இருக்கு! இன்னிக்கு ஒரு நாள் லீவு போட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்குங்க. தோள்பட்டையிலே வலிக்கிறதா? தைலம் தடவி விடட்டுமா? என் கையைப் பிடிச்சுக்குங்க...’’ என்று என்னை சர்வ ஜாக்கிர தையாக நடத்தி அழைத்துச் சென்று ஊஞ்சலில் படுக்கவைத்து விட்டாள். என் கையைப் பிடித்துக் கொண்டாள். ‘‘என்னை மோசம் செஞ்சுடாதீங்க! பகவானே, திருப்பதி வேங்கடேசா! உன் சந்நிதானத் துக்கு வந்து உண்டியல்லே ஆயிரம் ரூபா போடறேன். என் மாங்கல்யத் தைக் காப்பாத்து!’’

 

நினைத்துக்கொண்டவள் போல் எழுந்து போய் போன் செய்தாள்... ‘‘மாமி! மாமா இருந்தார்னா ஒரு நிமிஷம் இங்கே வந்துட்டுப் போகச் சொல்றீங்களா? இங்கே இவருக்கு என்னவோ பண்றது... சொல்லத் தெரியாம திணர்றார். சீக்கிரம் வாங்களேன். எனக்குக் கையும் ஓடலே, காலும் ஓடலே!’’

 

அடுத்த நிமிடம், பட்டாபி மாமா பாய்ந்தோடி வந்தார்.

‘‘என்னய்யா பண்றது உடம்புக்கு? எதுவானாலும் பயம் வேண்டாம். எல்லாத்துக்கும் இன்னிய தேதில மருந்து இருக்கு. தைரியமா இரு. ஐஸோர்டில் மாத்திரை ஒண்ணை நாக்கு அடியில் வெச்சுக்கிட்டா, பத்து நிமிஷத்துல வலி குறையும்.’’

‘‘அதுக்கெல்லாம் அவசிய மில்லை, பட்டாபி சார்!’’

‘‘வாயே திறக்கப்படாது! லீவ் எவ்ரிதிங் டு மி! டாக்டருக்குப் போன் பண்ணி யிருக்கேன். இப்போ வந்துடுவார். உன்னைக் காப்பாத்தி அவர் கையிலே ஒப்படைக்கிறவரை தயவு செய்து என் சொல்படி கேளு. மாத்திரைக்கு வெங்கிட்டுவை அனுப்பிட்டேன். பைக்கிலே பாலத்துக் கடைக்குப் போயிருக்கான். தோ வந்தாச்சு..!’’

பையன் வாங்கி வந்த மாத்திரையைத் திணிக்காத குறையாக என் வாயில் போட்டார். ‘‘முழுங்கிடாதே. நாக்கு அடியில் வெச்சுக்கோ! எதுவும் வொர்ரி பண்ணிக்காதே. நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம், அக்கம்பக்கத்திலே..! லேசா பின்னாலே சாஞ்சுக்கோ!’’

வாசலில் கார் சத்தம். டாக்டர் வந்தாச்சு! ‘‘வேர்த்ததைத் துடைச்சிட் டீங்களா... இல்லே, வேர்க்கவே இல்லையா?’’ என்று என் நாடியைப் பிடித்தபடி, வாட்சைப் பார்த்தபடி, என் மனைவியிடம் கேட்டார்.

‘‘வேர்க்கலை டாக்டர்... தப்பா?’’

‘‘வேர்த்தால்தான் தப்பு. காட் இஸ் கிரேட்! ஒண்ணும் பயப்பட வேண்டாம். ஐஸோட்ரிக் டெம்ப்ரரி ரிலீஃப் கொடுத்திருக்கு. நீங்க இன்டென்சிவ் கேருக்கு உடனே போன் போட்டு ஆம்புலன்ஸை அனுப்பச் சொல்லிடுங்க. நான் இருந்து பார்த்து அனுப்பிட்டுப் போறேன். தே வில் டேக் கேர். அழா தீங்க மாமி, நத்திங் டு வொர்ரி!’’

பத்து நிமிஷத்தில் தடபுடலாக ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. வெள்ளை யூனிஃபார்ம் அணிந்த கிங்கரர்கள் மாதிரி இரண்டு சிப்பந்திகள். என்னை ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து, ஆம்பு லன்ஸுக்குள் தள்ள, அழுதபடியே மனைவியும் வந்து ஏறிக்கொண்டாள்.

ஆஸ்பத்திரியில் உடனடியாக டாக்டர் குழாம் வந்து பரிசீலனை செய்தனர். பிரஷர் எடுக்கப்பட்டது. சலைன் பாட்டில் நிலை நாட்டப் பட்டது. நாடி நரம்பைத் தேடி, குத்த வேண்டிய இடத்தில் குத்தி, மருந்து ஏற்ற வழி செய்யப்பட்டது.

அப்ஸர்வேஷனில் மூன்று நாள் இருக்கவேண்டுமென்று இதய சிகிச்சைப் பிரிவின் உதவி ஸ்பெஷ லிஸ்ட் உத்தரவு போட்டார். 15 நிமிடத்துக்கு ஒரு தரம் பிளட்பிரஷர் பார்க்கும் ஆட்டோமேட்டிக் கருவி பொருத்தப்பட்டது. 100 கி.மீ. ஓடக் கூடிய தெம்பு இருந்தும், மூன்றடி தூரமுள்ள டாய்லெட்டுக்கு நடந்து போகத் தடை! பெட்பான் பொருத்தப்பட்டது.

மூன்றாம் நாள்... இறுதி ரிப்போர்ட்டில், நான் எல்லா வகையிலும் ஆரோக்கியமாக இருப்பதாக ரூ.18,000-க் கான பில்லுடன் அறிவித்தது ஆஸ்பத்திரி.

வீடு வந்ததும் மனைவி மீது வள்ளென்று விழுந்தேன்... ‘‘அறிவு வேணாம்! நான்தான் ஒண்ணுமில்லைன்னு தலைப்பாடா அடிச்சுக் கிட்டேனே, கேட்டியா? பட்டாபி... அவன் என்ன பெரிய எம்.டியா... எம்.எஸ்ஸா? அவனா இப்போ பணம் கட்டினான்? நீ ஒரு மூளை கெட்டவள்..!’’

நான் இவ்வளவு திட்டியும், என் மனைவி வருந்தவே இல்லை. மாறாக மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும், ‘‘அப்பாடா! இப்பதான் நீங்க நார்மலா இருக்கீங்க. வெங்கடாசலபதி என்னைக் கை விடலை. நாளைக்கே திருப்பதி போய் உண்டியல்ல ஆயிரம் ரூபாய் போட்டுடறேன்’’ என்றாள்.

இனிமே என் மனசில் எப்பவாவது சாந்தம், அமைதின்னு ஏதாவது தலைகாட்டட்டும்... கத்தற கத்தலில் எல்லாம் ஓடி ஒழியணும்... ஆமா!

https://www.vikatan.com/

ஒரு நிமிடக் கதைகள்

2 weeks ago
நன்றி

 

நிவேதாவுக்கு வெறுத்துப் போயிற்று. சமையலில் அவள் கெட்டி. தன் குடும்பத்தினருக்காக ஒவ்வொரு நாளும் எதையாவது புதுசு புதுசாகச் செய்ய வேண்டுமே என பதைபதைப்பாள். அதில் தன் திறமை முழுவதையும் காட்டி சுவை கூட்டுவாள். அவள் புத்தக கலெக்‌ஷன் முழுவதுமே சமையல் கலை புத்தகங்களால் நிரம்பி வழியும். ஆனாலும் என்ன? ஒரு சின்ன பாராட்டுகூட கிடைக்காது! இன்று அவள் பார்த்துப் பார்த்து செய்த அரிதான ரெஸிபி... சாப்பிட்ட யாருமே ‘‘நல்லா இருக்கு’’ என வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. கணவன் சாப்பிட்டு கை கழுவிய வேகத்தில் ஆபீஸ் கிளம்பிப் போய் விட்டான். குழந்தைகள் இருவரும் வேகவேகமாக அள்ளிப் போட்டுக்கொண்டு பள்ளிக்கு ஓடிவிட்டனர்.

16.jpg

மாமியாரும் சாப்பிட்டு முடித்தவுடன் அரட்டை அடிக்க பக்கத்து வீட்டுக்குப் போய்விட்டார். ‘‘நன்றியே யாருக்கும் இல்லை!’’ - இந்தப் புலம்பலின் முடிவில் நிவேதாவுக்கு அழுகையே வந்துவிட்டது. ‘‘சே, செய்த ரெஸிபிக்கு ஒரு சின்ன அங்கீகாரம் கூட கிடைக்கலையே! எதுக்காக கஷ்டப்படணும்?’’ - முணுமுணுத்தபடியே சாப்பிட்டவள், மீதத்தை நாய்க்குக் கொண்டுபோய் போட்டாள். அதைச் சாப்பிட்ட விக்கி, வாலை ஆட்டிக்கொண்டு வந்து நிவேதாவின் காலை நக்கிற்று. மனதுக்குள் ஒரு சின்ன பூரிப்பு. மலர்ச்சியுடன் மறுநாள் சமையலுக்கான ரெஸிபியைத் தேடத் துவங்கினாள் நிவேதா!    

 

இல்லை

தெருமுனையில் தியாகராஜனின் தலை தெரிந்ததும், பால்கனியில் நின்றிருந்த பால்சாமி ‘சட்’டென தன் அறைக்குள் நுழைந்தார். மனைவியை அழைத்து, ‘‘இதோ பார்! தியாகு வர்றான். என்னைக் கேட்டால் ‘வெளியூர் போயிருக்கார். வர ஒரு வாரம் ஆகும்’னு சொல்லி அனுப்பிடு. எப்போ பார்த்தாலும் கடன் கேட்டு வந்து நிக்கறான்’’ என்று சொல்லிவிட்டுப் பதுங்கிக்கொண்டார். அவளும் அப்படியே செய்ய, தியாகராஜன் திரும்பிப் போய்விட்டார். ஒரு வாரத்துக்குப் பின் தியாகராஜன் போன் செய்து, ‘‘நீ வெளியூர் போயிருந்த நேரத்துல ஒரு நல்ல ஆஃபர். ஒரு பெரிய பார்ட்டி ஆயிரம் ஜோடி ஷூ ஆர்டர் கொடுத்தாங்க. நீ இல்லாததால வேறு ஆள் மூலமா சப்ளை செஞ்சேன்!’’ என்று சொல்ல, பால்சாமிக்கு பகீரென்றது.

10.jpg

போனை கட் செய்துவிட்டு தன் மனைவி பக்கம் திரும்பிய தியாகராஜன், ‘‘நண்பனா இருந்து என்ன பிரயோஜனம்? ஒரு ஆத்திர அவசரத்துக்கு ஆயிரம் ரூபா கூட கடன் தரமாட்டேங்கறான். கஞ்சப் பய. வீட்ல இருந்துக்கிட்டே இல்லைன்னு வேறே பொய் சொல்றான். அதான் வருத்தப்படட்டும்னு சும்மா புருடா விட்டேன்’’ என்றார்.    

 

 

தெய்வம்

‘‘ஹலோ, சம்பத் சாரா? சுதா நர்சிங் ஹோமுக்கு உடனே வாங்க!’’ ‘‘என்ன விஷயம்? நீ யாருப்பா?’’ ‘‘என் பேர் பொன்னுச்சாமி... சீக்கிரம் வாங்க சார், நேர்ல சொல்றேன்!’’ இருபது நிமிடங்களில் அங்கிருந்தான் சம்பத். ‘‘சார், உங்க பையன் ஸ்கூல் விட்டு வரும்போது ஆட்டோக்காரன் மோதிட்டுப் போயிட்டான். தம்பியோட பள்ளிக்கூட அட்டையில இருக்கிற உங்க போன் நம்பரை வச்சுதான் போன் பண்ணேன். தம்பிக்கு தலையில பலமா அடி பட்டிருச்சி. எல்லாரும் வேடிக்கை பாக்கறாங்களே தவிர, உதவிக்கு வரல. அதான் நானே ஆட்டோ பிடிச்சி இங்கே கொண்டுவந்து சேர்த்தேன்!’’ - முடிக்கும் முன்னமே பதட்டமாகிவிட்ட சம்பத், ஓடிப் போய் டாக்டரைப் பார்த்தான்...

2.jpg

‘‘சரியான சமயத்தில் தூக்கிட்டு வந்ததால ஆபத்து ஒண்ணுமில்ல... காப்பாத்திரலாம்!’’ என நம்பிக்கை தந்தார் டாக்டர். நிம்மதிப் பெருமூச்சோடு வெளியே வந்த சம்பத், அப்போதுதான் பொன்னுச்சாமியை கவனித்துப் பார்த்தான். அழுக்கேறிய உடை... ஒரு கால் செயல் இழந்து தொங்கிக் கொண்டிருந்தது. ‘‘நீங்க...’’ ‘‘நான் அந்த ஸ்கூல் பக்கத்தில் இருக்கிற கோயில்ல பிச்சை எடுக்குறவன் சார்!’’ அதிர்ச்சியில் உறைந்த சம்பத், தெய்வம் கோயிலுக்கு உள்ளே மட்டுமல்ல, வெளியிலும் இருக்கிறது எனப் புரிந்துகொண்டான்!

http://kungumam.co.in

Checked
Mon, 04/23/2018 - 18:45
கதை கதையாம் Latest Topics
Subscribe to கதை கதையாம் feed