ஊர்ப்புதினம்

யாழ். வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து கும்பல் ஒன்று அடாவடி

1 week 6 days ago

Published By: DIGITAL DESK 3

07 MAY, 2024 | 12:57 PM
image
 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இளைஞனின் உயிரிழப்பை அடுத்து , அவரின் நண்பர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டதுடன், மருத்துவர்கள், தாதியர்கள், நோயாளிகளுடன் முரண்பட்டனர். 

அது தொடர்பில் மருத்துவ சேவைக்கு இடையூறு ஏற்படுத்தினார் என வைத்தியசாலை நிர்வாகத்தினரால், யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் அடாவடியில் ஈடுபட்டவர்களை இனம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/182883

யாழில் வெப்பத்தால் 5 பேர் வரை உயிரிழப்பு - வைத்திய நிபுணர்கள்

1 week 6 days ago

Published By: DIGITAL DESK 3

07 MAY, 2024 | 12:49 PM
image

அதிக வெப்பத்தினால் ஏற்பட்ட வெப்ப பக்கவாதம் (Heat stoke) நோய் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரு விடுதியில் கடந்த வாரத்தில் மாத்திரம் நான்கு முதல் ஐந்து வரையான இறப்புக்கள் பதிவாகியுள்ளதென வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக உடலின் வெப்பநிலை அதிகரித்து வெப்ப பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்புஉள்ளது.

வெப்ப பக்கவாதம் மூலம் எமது விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த பல நோயாளிகளை இழந்து இருக்கின்றோம். இனிவரும் காலங்களிலும் வெப்பநிலை அதிகரித்துச் செல்லக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

எனவே, வெப்பநிலை அதிகரிப்பை தடுக்கும் நோக்கில் அதிகளவிலான மரங்களை நடவேண்டும். 

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை தவிர்க்க வேண்டும்.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனைகளின் அதிகரிப்பு மற்றும் அதிகளவிலான மரங்கள் அழிப்பு என்பனவற்றின் மூலம் தான் தற்பொழுது வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. எனவே மக்கள் அனைவரும் வீட்டுக்குவீடு மரங்களை நட்டு சுற்றாடலை குளிர்மையாக வைத்திருக்கவேண்டும்.

அதிக நீர் மற்றும் குளிர்மையான பானங்களை அருந்த வேண்டும். 

கடந்த இரு வாரங்களில் வெப்ப பக்கவாதம் காரணமாக எமது நோயாளர் விடுதிகளில் அனுமதிப்பட்டிருந்த நான்கு தொடக்கம் ஐந்து நோயாளிகளை இழந்து இருக்கின்றோம்.

இந்த நோய் வராமல் இருப்பதற்கு அதிக நீரை அருந்த வேண்டும்.

வீட்டில் உள்ள வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதிய நீர் ஆகாரங்களை வழங்கவேண்டும். 

தர்பூசணி, வெள்ளரிப்பழம், தோடம்பம் போன்ற பழங்களை கூடுதலாக உண்ணக் கொடுக்க வேண்டும்.

வயது போனவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுப்பது தெரியாது. எனவே நீர் ஆகாரங்களை தொடர்ச்சியாக வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடலின் வெப்பத்தை குறைத்து வெப்ப பக்கவாதம் வாராமல் தடுக்கமுடியும் என்றார்.

https://www.virakesari.lk/article/182880

மீள் மின் இணைப்பை 90 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளாவிடின் மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும் - மின்சாரத்துறை அமைச்சர்

1 week 6 days ago

Published By: DIGITAL DESK 3

07 MAY, 2024 | 01:33 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக் கொள்ளாத மின்பாவனையாளர்களின்  மின்கணக்கு இரத்து செய்யப்பட்டு மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும். மீள் மின் இணைப்புக்காக அறவிடப்படும் கட்டணம்  தற்போது குறைக்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற அமர்வின் போது எதிர்க்கட்சியின் உறுப்பினரான கெவிந்து குமாரதுங்க முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

2022 மே மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னரான காலப்பகுதியில் 70 இலட்சம் மின்பாவனையாளர்கள் மின்விநியோக கட்டமைப்பில் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.பல மணித்தியாலங்கள்  மின்விநியோக துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டன.ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து மின்கட்டமைப்பில் கொள்கை  ரீதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

மின்விநியோக கட்டமைப்பின் கொள்கை திருத்தம் செய்யப்பட்டதால்  தற்போது பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கட்டணத்தை தொடர்ந்து குறைக்க முடியுமா என்று முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

சிவப்பு எச்சரிக்கை கட்டண படிவம் விநியோகிக்கப்பட்டு நிலுவை கட்டணம் செலுத்தாத சுமார் 10 இலட்சம் மின்பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் நிலுவை கட்டணத்தை செலுத்தாவிடின் மின்விநியோகம் முழுமையாக துண்டிக்கப்பட்டு, மின்பாவனைக்கான கணக்கும் இரத்து செய்யப்படும்.

மின்கட்டணத்தை செலுத்தாத தரப்பினரை இலக்கு வைத்து அவர்களுக்காக விநியோகத்தை துண்டிக்குமாறு எவருக்கும் பொறுப்பு வழங்கவில்லை.

கட்டணம் செலுத்தாவிடின் மின்விநியோகம் துண்டிக்கப்படும் இது நான் அமைச்சரான பின்னர் எடுத்த தீர்மானமல்ல,காலம் காலமாகவே அமுல்படுத்தப்படுகிறது.

சிவப்பு எச்சரிக்கை கட்டண படிவம் வழங்கப்பட்டு,கட்டணம் செலுத்துவதற்கு காலவகாசம் வழங்கப்படும். அந்த காலப்பகுதிக்குள் கட்டணத்தை செலுத்தாவிடின் தான் மின் விநியோகம் துண்டிக்கப்படும்.

மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு, மீள இணைப்பு பெற்றுக்கொள்ளப்படும் போது அறவிடப்படும் கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/182884

இவா்களை யாராலுமே தட்டிக்கேட்க முடியாது – ரவிகரன் துரைராஜா செவ்வி

1 week 6 days ago

இவா்களை யாராலுமே தட்டிக்கேட்க முடியாது – ரவிகரன் துரைராஜா செவ்வி
May 7, 2024
 
 

ravikaran இவா்களை யாராலுமே தட்டிக்கேட்க முடியாது - ரவிகரன் துரைராஜா செவ்வி

 

போா் முடிவுக்கு வந்த பின்னா் முல்லைத்தீவை சிங்கள மயப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலுடன் அரசாங்கம் செயற்படுகிறது. இதற்காக, தமிழா்களின் காணிகளை அபகரித்தல், சிங்களக் குடியேற்றங்கள் என்பன தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரமும் கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி அபகரிப்பு இடம்பெற்றது. இவை குறித்து அதனை நேரில் பாா்வையிட்ட வடமாகாண முன்னாள் உறுப்பினா் துரைராஜா ரவிகரன் வழங்கிய நோ்காணல்

கேள்வி – கொக்குத் தொடுவாய்ப் பகுதிக்கு கடந்த வாரம் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தீா்கள். அங்கு என்ன நடைபெறுகின்றது?

பதில் – வடமாகாண சபையில் நான் உறுப்பினராக இருந்த காலத்தில் இந்தக் காணிகள் சுமாா் 25 ஏக்கா் படி 30 வழங்கப்படவிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, மாகாண சபையிலும் இந்த விடயத்தை நான் கதைத்திருந்தேன். இது தமிழா்களுடைய பூர்வீக நிலம். இங்குள்ள பிரதேச செயலகமோ அல்லது மாவட்ட செயலகமோ சம்பந்தப்படாமல், மகாவலி அபிவிருத்தி அதிகார சபைதான் இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமாா் 4,326 ஏக்கா் காணியை இந்தத் திட்டத்தின் மூலமாக அபகரிப்பதற்கான நடவடிக்கைகளை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்திருந்தது. இந்தத் திட்டத்தில் அமைச்சா் நிமால் சிறிபால டி சில்வாவின் சகோதரிக்குக் கூட 25 ஏக்கா் காணி வழங்கப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

இவா்கள் சிங்கள ஆதிக்கத்தைக் கொண்டுவந்து தமிழா்களின் பூர்வீக காணிகளை பறிக்கும் நோக்கத்துடன்தான் இவா்களுடைய செயற்பாடுகள் அமைந்திருந்தன. 25 ஏக்கா் தமிழா்கள் வைத்திருக்க முடியாதாம். எங்களுக்கு 2 ஏக்கா் காணி மட்டும்தான் வைத்திருக்க முடியுமாம்.

இந்தப்பின்னணியில்தான் கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் காணி அபகரிப்பு இடம்பெறுவதாக தகவல் வந்ததால் அங்கு னெ்றேன். என்னுடன் சூழலியல், சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களும் வந்தாா்கள். ஆனால், அன்றைய தினம் காட்டை தள்ளிக்கொண்டிருந்த ஒருவரும் இருக்கவில்லை. ஆனால், பெருமளவிலான இடங்களை அவா்கள் தம்வசப்படுத்தியிருந்தாா்கள். கிணறுகள் வெட்டி, கொட்டில்கள் அமைத்து குடியிருப்பதற்கு ஏற்றவாறு தயாா்படுத்தியிருந்தாா்கள்.

முல்லைத்தீவு பறிபோய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், கருணாட்டுக்கேணி, மணலாறு என்ற எங்களது இதயபுமி என்று சொன்ன பகுதியில் இன்று 13 ஆயிரத்துக்கும் மேலான சிங்களவா்கள் உள்ளாா்கள். வசதியான மக்களுக்கு, கிணறுகள் அமைத்து, பாதுகாப்புக்காக யானை வேலிகள் அமைத்து கொடுக்கின்றாா்கள். இதனைத் தட்டிக்கேட்கக்கூடிய நிலையில் இங்குள்ள அரச அதிகாரிகள் இல்லை.

நாங்கள் பாா்த்த இடங்களில் 145 ஏக்கருக்கும் அதிகமான பகுதி அழிக்கப்பட்டிருந்தமையை நாங்கள் பாா்த்தோம். அதாவது, அழிக்கப்பட்டு அவா்களுடைய இருப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் இவ்வாறு இடம்பெற்றிருக்கின்றது. இப்போது அழிக்கப்பட்ட பகுதிகளை 30 பேருக்கு 25 ஏக்கா் வீதம் மகாவலி அதிகார சபை வழங்கியிருக்கின்றது. இந்தக் காணிகளின் உறுதிகள் தமிழா்களிடம் இன்றைக்கும் உள்ளது. ஒரு காணிக்கு ஒரு ஆவணம் இருக்கும் போது, மற்றொரு ஆவணம் வழங்கப்படுமாக இருந்தால் முதலில் வழங்கப்பட்ட ஆவண்தான் செல்லுபடியாகும் என இலங்கைச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.

கேள்வி – நீங்கள் மகாவலி அதிகார சபையின் செயற்பாடுகள் குறித்தும் சொல்லியிருந்தீா்கள். முல்லைதீவு மாவட்டத்தில் அவா்கள் எவ்வாறான நிகழ்ச்சி நிரலுடன் செயற்படுகின்றாா்கள்?

பதில் – அவா்கள் தங்களுக்கென்று ஒரு செயற்பாட்டை வைத்துள்ளாா்கள். அவா்களை யாரும் தட்டிக்கேட்க முடியாது. மாவட்ட செயலாளரோ, பிரதேச சபைகளின் செயலாளா்களோ அவா்களிடம் கேள்வி கேட்க முடியாது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கும் அவா்கள் வரமாட்டாா்கள். மாகாண சபை இருந்த காலத்தில் எப்போவாவது கூட்டத்துக்கு வருவாா்கள். இந்தக் காணிகள் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இருப்பதாகக் காட்டப்படுகின்றது. ஆனால், மகாவலி – எல் திட்டத்துக்குட்பட்டதாக இந்தக் காணிகள் காட்டப்படுகின்றது. இதனைவிட மேலும் பல காணிகள் மகாவலி எல் திட்டத்துக்கு உட்பட்டதாகக் காட்டப்படுகின்றது. இதன்படி முல்லைத்தீவில் மேலும் பெருமளவு தமிழ் மக்களின் காணிகள் பறிக்கப்பட்டு சிங்களவா்களுக்குக் கொடுக்கப்படும் ஆபத்து இருக்கின்றது. இந்த விடயத்தில் எம்மவா்களும் சரியான ஒரு திட்டத்தைப் போட்டு உறுதியான ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

மகாவலி அதிகார சபை எல் என்ற ஒரு திட்டத்தின் மூலமாக முல்லைத்தீவின் கிழக்குப் பக்கமாக ஒட்டுசுட்டான், கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களுக்கு ஒரு திட்டத்தையும், மேற்குப் பக்கமாக மாந்தை கிழக்கு, துணுக்காய் போன்ற பகுதிகளுக்கு மகாவலி ஜே என்ற ஒரு திட்டத்தையும் கொண்டுவந்திருக்கின்றாா்கள். இது இன்னும் ஆரம்பிக்கவில்லை. இந்த மகாவலி அதிகார சபை காலுான்றுகின்ற இடங்களில் தமிழ் மக்களுக்குக் காணி கொடுத்ததாக எந்தத் தகவலும் இல்லை. தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்கள மக்களைக் குடியேற்றும் நடவடிக்கைதான் நடந்துகொண்டிருக்கின்றது. இதனால், பெருந்தொகையான சிங்களவா்கள் முல்லைத்தீவு பகுதியில் காலுான்றிவிட்டாா்கள். இதனால், சிங்களப் பிரதேச சபை ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதனால், எமது அடுத்த சந்ததிகள் சிங்கள மயமாக்கப்பட்ட முல்லைத்தீவுக்குள்தான் வாழப்போகின்றாா்களா என்ற அச்சம் ஏற்படுகின்றது. மகாவலி அதிகார சபையை கட்டுப்படுத்தும் நிலையில் அரசாங்க அதிபா் கூட இல்லை. அவா்களுடன் பேசும் போது அதனை அறிய முடிகின்றது.

கேள்வி – முல்லைத்தீவு இவ்வளவு பிரச்சினைகளையும் எதிா்கொண்டு சிங்கள மயமாகிக்கொண்டுள்ள நிலையிலும் தமிழ்க் கட்சிகள் அதில் போதிய கவனத்தைச் செலுத்துவதில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்கிறாா்கள். உண்மை நிலை என்ன?

பதில் – கிழக்கு மாகாண நிலைமைகள் அனைவருக்கும் தெரியும். அங்கு தமிழா்களுடைய எண்ணிக்கை குறைக்கப்பட்டு சிங்கள மயமாக்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும். அதேநிலைதான் முல்லைத்தீவிலும் நடந்துகொண்டிருக்கின்றது.

குருந்துாா்மலை விடயத்திலும் பெரும்பாலானவா்கள் வந்தாா்கள். ஆனால், எவ்வளவு போா் அதில் கவனத்தை எடுத்துச் செயற்பட்டாா்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். கொக்குளாய் விவகாரை கட்டப்பட்ட இடத்தில் நாங்கள் பிரதிநிதிகளாகப் போய் ஒரு மாதமோ என்னவோ தொடா்ச்சியான ஒரு போராட்டத்தை நடத்தியிருந்தால் அது பெரிதாக வெடித்திருக்கும். அவ்வாறான ஒரு போராட்டத்தை முன்னெடுக்காமல், இடையில் ஒரு தடவை போய்ப் பாா்த்துவிட்டு வருவது. ஒரு கோரிக்கையை முன்வைப்பது என்பன எந்தப் பயனையும் தரப்போவதில்லை. அவா்கள் குடியேற்றிக்கொ்டுதான் இருக்கின்றாா்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 32 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணி படையினரால் அபகரிக்கப்பட்டிருக்கின்றது. விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் 2 இலட்சத்து 22 ஆயிரம் ஏக்கா் அடா்ந்த காடுதான் வன இலாகாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், அதற்குப் பின்னா் சுமாா் ஒரு லட்சம் ஏக்கா் காணியை வன இலாகா அபகரித்திருக்கின்றது. இவ்வாறு இந்த காணி அபகரிப்பு தொடா்ந்துகொண்டுதான் இருக்கின்றது. இவை அனைத்தும் தமிழ் மக்கள் பாவித்த காணி. சிறுதானிய பயிா்ச் செய்கைக்கு நெற்செய்கை என்பவற்றுக்காக மக்கள் பயன்படுத்திய காணிகள்.

வன இலாகா திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், மகாவலி அதிகார சபையின் எல் திட்டம் மற்றும் படையினா் என ஒவ்வொரு தரப்பினரும் தமது பங்குக்கு காணிகளை அபகரித்துக்கொண்டிருக்கின்றாா்கள்.

இதனைத் தடுக்க வேண்டுமானால், எம்மவா்கள் அங்கு களத்தில் இறங்கி தொடா்ச்சியாகப் போராட வேண்டும். கேப்பாப்புலவை நாங்கள் இவ்வாறான தொடா்ச்சியான போராட்டத்தினால்தான் மீட்டிருந்தோம்.

 

https://www.ilakku.org/இவா்களை-யாராலுமே-தட்டிக்/

வட மாகாண அபிவிருத்திக்கு ஒத்துழைப்புகளை வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் தெரிவிப்பு!

1 week 6 days ago

வட மாகாண அபிவிருத்திக்கு ஒத்துழைப்புகளை வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் தெரிவிப்பு!
1896595026.jpg

இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை இன்று திங்கட்கிழமை(06) சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கையின் முன்னேற்றங்கள், காணி விடுவிப்பு, கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கல்வி, இயற்கை சக்தி வளங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், சுற்றுலா வழிகாட்டிகள் போதிய எண்ணிக்கையில் இல்லை எனவும்,  தங்குமிட வசதிகள் போதுமான அளவு இல்லை எனவும் குறிப்பிட்ட ஆளுநர், சுற்றுலாத் துறையை மேம்படுத்த முதலீடுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

கற்றல் செயற்பாடுகள் மற்றும் தொழிற்கல்வியை பெற முடியாது போகும் இளைஞர், யுவதிகள் தொடர்பில் மாற்று வழிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்தார்.   

விடயங்களை கேட்டறிந்துக் கொண்ட இலங்கைக்கான நோர்வே தூதுவர், வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ச்சியாக வழங்கத் தயார் எனவும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார். (ச)

 

https://newuthayan.com/article/வட_மாகாண_அபிவிருத்திக்கு_ஒத்துழைப்புகளை_வழங்குவதாக_இலங்கைக்கான_நோர்வே_தூதுவர்_தெரிவிப்பு! 

ஆயுர்வேதத் திணைக்களத்தால் 359 சித்த மருத்துவ மாணவர்கள் பாதிப்பு

1 week 6 days ago

ஆயுர்வேதத் திணைக்களத்தால் 359 சித்த மருத்துவ மாணவர்கள் பாதிப்பு
adminMay 7, 2024
1-1-1170x878.jpg

ஆயுர்வேதத் திணைக்களத்தின் குளறுபடியான சில நடவடிக்கைகள் மூலம் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம் என சித்த மருத்துவ மாணவர்களின் பிரநிதியான வர்ணகுலசிங்கம் பிரவீன் தெரிவித்துள்ளார்.  யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை பூராகவும் 359 சித்த மருத்துவ மாணவர்கள் உள்ளக பயிற்சிக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.  ஆயுர்வேதத் திணைக்களத்தின் குளறுபடியான சில நடவடிக்கைகள் மூலமே நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுடைய பிரச்சனை தொடர்பில் பேசியிருந்த போது, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு 60 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

உள்ளக பயிற்சி என்பது அனைத்து மாணவர்களுக்குமான உரிமையாகும். எவ்வாறு 60 மாணவர்களுக்கு மாத்திரம் இந்த அனுமதியினை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு வழங்க முடியும். அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அவ்வாறாயின் அது அரசாங்கத்தின் தவறு ஒழிய மாணவர்களுடைய தவறல்ல.

இதற்குக் காரணம் ஆயுர்வேத திணைக்களம் உள்ளிட்ட ஏனைய திணைக்களங்கள். இவர்களுடைய இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நமது கற்க நெறியை பூரணமாக நிறைவு செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம். தற்பொழுது 30 வயதினை எட்டி இருக்கின்ற போதிலும் நீண்ட காலமாக உள்ளகப் பயிற்சியினை முடிக்காததனால் எமது கற்கை பூரணப்படுத்தப்படவில்லை.

உள்ளக பயிற்சி நிறைவு செய்யப்பட்டால் மாத்திரமே ஆயுர்வேத சங்கத்தில் எங்களை ஒரு வைத்தியராக பதிவு செய்ய முடியும். எனவே நமது எதிர்காலத்தை கருத்தில் எடுத்து கற்கை நெறியை பூர்த்தி செய்ய ஏதுவாக உள்ளக பயற்சியை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறோம் என்றார்.

https://globaltamilnews.net/2024/202518/

வித்தியா வழக்கு – நீதியரசர் எஸ். துரைராஜா விலகல்

1 week 6 days ago

வித்தியா வழக்கு – நீதியரசர் எஸ். துரைராஜா விலகல்
adminMay 7, 2024
resignation.jpg

2015ஆம் ஆண்டு   யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவி கடத்தப்பட்டு  கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட  சுவிஸ்  குமார் உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்காக பிரதம நீதியரசரால் நியமித்த ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் தலைமை நீதியரசர் எஸ். துரைராஜா நேற்று (06) குறித்த குழாமில் இருந்து விலகியுள்ளாா்.

இந்த மனுக்கள் நேற்று எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட, ஏ. எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்ட போது,  அமர்வின் தலைமை நீதியரசர் எஸ்.துரைராஜா, தான் சட்டமா அதிபர் திணைக்களத்தில் கடமையாற்றிய காலத்தில் இந்த வழக்கின் விவகாரங்களை மேற்பார்வையிட்டதால் இந்த மேன்முறையீட்டு விசாரணையில் இருந்து விலக தீர்மானித்ததாக தெரிவித்தார்.

இதனையடுத்து , இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை ஜூலை 30-ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்ப்புகள் உரிய முறையில் கிடைக்கப்பெறாத காரணத்தினால் இந்த வழக்கின் விசாரணை சுமார் 06 வருடங்களாக தாமதமாகியுள்ளதாக மேன்முறையீட்டு பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தமைக்கு . பதிலளித்த நீதியரசர் துரைராஜா, மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறையால் இந்த நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அப்போது, சட்டமா அதிபர் சார்பில்  முன்னிலையான   சொலிசிட்டர் ஜெனரல் அயேஷா ஜினசேன, இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்ப்பு பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதாகவும், இதுவரை செய்யப்பட்ட மொழிபெயர்ப்புகளில் உள்ள பழுதடைந்த பகுதிகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். .

இதனையடுத்து , மொழிபெயர்ப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்ட நீதியரசர்கள் குழாம், பணியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய உரிய மேல்முறையீட்டு மனுக்களை ஜூலை 30-ஆம் திகதி அழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் 18 வயது பாடசாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியாவைக் கடத்திச் சென்று கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சுவிஸ் குமார் உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவிற்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் தமக்கு எதிராக தண்டனை வழங்கிய விதம் சட்டத்திற்கு முரணானது எனவும், எனவே அந்த தண்டனைகளில் இருந்து தம்மை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறும் குறித்த பிரதிவாதிகள் உயர் நீதிமன்றில் இந்த மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 

https://globaltamilnews.net/2024/202533/

 

இலங்கையின் பொதுவான கல்வி முறையை டிஜிட்டல் நிலையுருமாற்றம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் !

1 week 6 days ago
07 MAY, 2024 | 10:16 AM
image

சாத்தியவளக் கற்கையின் அறிக்கையின் பிரகாரம் உத்தேசக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியது.

இலங்கையின் பொதுவான கல்வி முறையை டிஜிட்டல் நிலையுருமாற்றம் செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவுக்கமைய உதவிகளை வழங்குவதற்கு சீனா அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. 

குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய சாத்தியவளக் கற்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உத்தேசக் கருத்திட்டத்தின் மூலம் மிடுக்கான பார்த்தறியும் திரையுடன் கூடிய வகுப்பறை (Delivering Class Room) மிடுக்கான ஏற்புப்பரப்பு திரையுடன் கூடிய வகுப்பறை (Receiving Class Room) குறித்த பணிகளை நெறிப்படுத்துவதற்காக கல்வி அமைச்சின் கீழ் தரவு மையம் (Data Centre) ஒளிப்பதிவு அறை (Studio Room) மாநாட்டு அறை (Conference Room) போன்றவற்றை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 

கலப்புக் கற்றல் முறைமையை முறைசார்ந்த வகையில் மேற்கொள்ளல், வளங்களைப் பகிர்ந்து கொள்ளல், விசேட திறன்களைக் கொண்டுள்ள ஆசிரியர்களின் அறிவை தேவையான சந்தர்ப்பங்களில் மாணவர்களுக்கு வழங்கல், ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் வேளைகளில் ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தவிர்த்தல் மற்றும் மற்றும் உத்தேசக் கல்வி மறுசீரமைப்புக்களுக்காக வசதிகளை வழங்கல் போன்ற பணிகளை வினைத்திறனாகவும் பயனுறு வகையிலும் மேற்கொள்வதற்காக குறித்த உபகரணங்கள் மூலம் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும். 

அதற்கமைய, குறித்த சாத்தியவளக் கற்கையின் அறிக்கையின் பிரகாரம் உத்தேசக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/182858

இலங்கை கல்வி முறை மாற்றத்திற்கு சீனா அரசு உடன்பாடு! 03-1.jpg

இலங்கையின் பொதுவான கல்வி முறையை டிஜிட்டல் நிலையுருமாற்றம் செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவுக்கமைய உதவிகளை வழங்குவதற்கு சீனா அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய சாத்தியவளக் கற்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்தேசக் கருத்திட்டத்தின் மூலம் மிடுக்கான பார்த்தறியும் திரையுடன் கூடிய வகுப்பறை (Delivering Class Room), மிடுக்கான ஏற்புப்பரப்பு திரையுடன் கூடிய வகுப்பறை (Receiving Class Room), குறித்த பணிகளை நெறிப்படுத்துவதற்காக கல்வி அமைச்சின் கீழ் தரவு மையம் (Studio Room), ஒளிப்பதிவு அறை (Studio Room), மாநாட்டு அறை (Conference Room) போன்றவற்றை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

கலப்புக் கற்றல் முறைமையை முறைசார்ந்த வகையில் மேற்கொள்ளல், வளங்களைப் பகிர்ந்து கொள்ளல், விசேட திறன்களைக் கொண்டுள்ள ஆசிரியர்களின் அறிவை தேவையான சந்தர்ப்பங்களில் மாணவர்களுக்கு வழங்கல், ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் வேளைகளில் ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தவிர்த்தல் மற்றும் மற்றும் உத்தேசக் கல்வி மறுசீரமைப்புக்களுக்காக வசதிகளை வழங்கல் போன்ற பணிகளை வினைத்திறனாகவும் பயனுறு வகையிலும் மேற்கொள்வதற்காக குறித்த உபகரணங்கள் மூலம் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அதற்கமைய, குறித்த சாத்தியவளக் கற்கையின் அறிக்கையின் பிரகாரம் உத்தேசக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://thinakkural.lk/article/301054

மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரலை அதானி நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

1 week 6 days ago
07 MAY, 2024 | 10:36 AM
image
 

20 வருடங்களுக்கு மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரலை  இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு ( M/s Adani Green Energy SL Limited ) வழங்குவதற்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியது.

இந்தியாவின் அதானி நிறுவனத்தினால் ( M/s Adani Green Energy Limited ) மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு 2022.03.07 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, குறித்த கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவை மதிப்பீடு செய்வதற்காக அமைச்சரவையால் பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழு நியமிக்கப்பட்டது. 

குறித்த குழுவின் விதந்துரைகளின் பிரகாரம் உத்தேசக் கருத்திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்னலகொன்று கிலோவாற்று மணிக்கு 8.26 சதம் அமெரிக்க டொலர் பெறுமதி (உண்மையான வெளிநாட்டு செலாவணி சரிவிகிதத்திற்கமைய இலங்கை ரூபாவில்  செலுத்துவதற்கு) இறுதிக் கட்டணமாக அங்கீகரிப்பதற்கும் 20 வருடங்களுக்கு மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரலை M/s Adani Green Energy SL Limited இற்கு வழங்குவதற்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/182862

மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி

1 week 6 days ago

Published By: DIGITAL DESK 3

07 MAY, 2024 | 09:22 AM
image
 

மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி கிடைத்துள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டிட நிர்மாண பணிகளுக்கும், மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்குமாக இந்த 600 மில்லியன் ரூபா நன்கொடை பயன்படுத்தப்படவுள்ளது.

வடக்கு மாகாண   ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் நெறிப்படுத்தலின் கீழ், மாகாண சபையால் திட்ட முன்மொழிவு தயாரிக்கப்பட்டு சுகாதார அமைச்சின் ஊடாக கொழும்பிலுள்ள இந்திய  உயர்ஸ்தானிகராலயத்திடம் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய அரசாங்கம்  600  மில்லியன் ரூபா நன்கொடையை வழங்குவதற்கான அனுமதியை அளித்துள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இன்மையால் மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். 

இவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் முகமாக வடக்கு மாகாண ஆளுநரினால் இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/182852

180 கடவுச்சீட்டுகளை வடிகானில் வீசிவிட்டு, பொதுமக்களின் 26 M கோடி ரூபாவையும் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய எஜென்சிகாரன்

2 weeks ago
1000226440.jpg
மஹரகம பகுதியில் உள்ள வடிகால் ஒன்றில் கடவுச்சீட்டுகள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
 
விசாரணையின் போது, அந்த பையில் மஹரகமவில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட 180 கடவுச்சீட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
 
வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக பலரின் கடவுச்சீட்டுகளையும் வாங்கி வைத்து இருந்த குறித்த நபர் சுமார் 26 கோடி ரூபாவை மோசடி செய்துவிட்டு தற்போது தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

இந்த மடவளவுகாரங்களின் தொல்லை வாயிலையும் தமிழை சிதைச்சு கொள்வார்கள் உங்களுக்கு அரபு வேணுமென்றால் அரபியில் செய்தியை போட்டு தொலைகிறதுதானே ?

அரச உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உரிமம்

2 weeks ago
06.jpg

ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்கள், மாகாண அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உரிமம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை 65 வரை நீட்டித்து, பின்னர் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்பட்ட நிலையில், அதற்கிடையிலான காலத்தில் 60 வயது பூர்த்தியான பின்னர் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்காக இந்த வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவினால் வௌியிடப்பட்ட சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர தேவைகளை பூர்த்தி செய்யும் உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உரிமம் வழங்க கடந்த மார்ச் 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/301006

அரசுக்கு சொந்தமான கல்மடு வனப் பிரதேசத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த ஐவர் கைது

2 weeks ago
06 MAY, 2024 | 06:19 PM
image
 

கிளிநொச்சியில் அரசுக்கு சொந்தமான கல்மடு வனப் பிரதேசத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி - இராமநாதபுரம் பிரிவுக்குட்பட்ட கல்மடு வனப் பிரதேசத்துக்குள் அனுமதியின்றி உள்நுழைந்து மரங்களை வெட்டி, மரக்குற்றிகளை இரண்டு உழவு இயந்திரங்களில் ஏற்ற முற்பட்ட ஐந்து இளைஞர்கள் இராமநாதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட ஐவரும் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் அவர்கள் வெட்டிய மரக்குற்றிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

IMG-20240506-WA0043.jpg

IMG-20240506-WA0042.jpg

https://www.virakesari.lk/article/182838

ஏப்ரலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி

2 weeks ago

Simrith   / 2024 மே 06 , மு.ப. 07:43 - 0      - 55

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
instapaper sharing button

இந்த ஆண்டு முதல் தடவையாக சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 200,000க்கு கீழ் வீழ்ச்சியடைந்ததன் மூலம் இலங்கை சுற்றுலாத்துறை ஏப்ரல் மாதத்தில் வேகமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மொத்தம் 148, 867 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) தற்காலிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தை விட 41 சதவீதம் அதிகமாக இருந்தாலும், கடந்த மாதத்தில் (மார்ச்) பதிவு செய்யப்பட்ட 209,181 சுற்றுலாப் பயணிகளின் வருகையை விட இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.

டிசம்பர் 2023 முதல், இலங்கை ஒவ்வொரு மாதமும் 200,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் வெற்றிகரமாக உள்ளது, இது கொவிட் தொற்றுநோய் வெடித்ததில் இருந்து முதல் முறையாக மைல்கல்லை எட்டியது.
இந்த வேகம் நான்கு மாதங்கள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டது, ஆனால் ஏப்ரல் மாதத்தில் ஒரு சுருக்கம் காணப்பட்டது

எவ்வாறாயினும், ஒரு சுருக்கம் எதிர்பார்க்கப்பட்டாலும், சுற்றுலா அதிகாரிகள் கடந்த வாரம் வீழ்ச்சிக்கு பிற காரணிகளும் காரணம் என சுட்டிக்காட்டியுள்ளனர். ஏப்ரல் 17 முதல் நடைமுறைக்கு வந்த புதிய விசா முறையானது, இது மிகவும் விலை உயர்ந்ததுடன் முன்பு இருந்த ETA போல வசதியாக இல்லாததால், அது வெளியிடப்பட்டதிலிருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதற்கிடையில், மாதாந்திர சுற்றுலா வருகை புதுப்பிப்பில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விசா வகைகளின்படி வருகை எண்கள் "புதுப்பிக்கப்பட்டுள்ளன" என்று SLTDA குறிப்பிட்டது.

புதுப்பிப்பு வருகை எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காட்டுகிறது.
இது தொடர்பில் குடிவரவு அதிகாரிகளிடம் இருந்து தெளிவுபடுத்தப்பட்டதன் பின்னர் இன்னும் தெளிவான யோசனையை இன்று பகிர்ந்து கொள்ள முடியும் என்று அதன் தலைவர் பிரியந்த பெர்னாடோ தெரிவித்தார். 

“வருகைத் தரவைப் பெறுவதற்கான ஆதாரம் குடியேற்றம். அவற்றை வகைப்படுத்தலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்வையிடுதல், வணிகம், MICE போன்றவை" என்று அவர் கூறினார்.

ஏப்ரலில் இலங்கை சுற்றுலாவுக்கான சிறந்த மூல சந்தைகளாக இந்தியா, ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் இங்கிலாந்து ஆகியன இருந்தன, அவை மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் முறையே 18 சதவீதம், 10 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என பங்களித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilmirror Online || ஏப்ரலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் சட்ட விரோத விளையாட்டு பூங்காவுக்கு எதிர்ப்பு!

2 weeks ago

கிளிநொச்சியில் சட்ட விரோத விளையாட்டு பூங்காவுக்கு எதிர்ப்பு!

யோகி.

கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் இராணுவத்தினரின் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்ட இடத்தில் சட்ட விரோதமாக இராணுவத்தினர் விளையாட்டு பூங்கா ஒன்றை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் நேரில் சென்று பார்வையிட்டதோடு இவ்விடத்தில் தொடர்ந்து இராணுவத்தினர் ஆதிக்கம் செலுத்துவதை தொடர்ந்தால் மக்களே ஒருமித்து அளவிலான போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் பூநகரி பொன்னாவெளியில் வளங்கள் சூறையாடப்படுகின்றது. உருத்திரபுரம் உருத்திரபுரீச்வரர் ஆலயம் ஆக்கிரமிக்க முயற்சிக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் அனுமதியில்லாது இராணுவம் மேற்கொள்ளும் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.

அத்துடன்  கரைச்சி பிரதேச சபைக்குச் சென்று அங்கு கரைச்சிபிரதேச செயலரிடம் இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)

கிளிநொச்சியில் சட்ட விரோத விளையாட்டு பூங்காவுக்கு எதிர்ப்பு! (newuthayan.com)

புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த நபரை கைது செய்யக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

2 weeks ago
புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய நபரை கைது செய்யக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
06 MAY, 2024 | 04:26 PM
image
 

வவுனியா, புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் முன்னிலையில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய நபரை கைது செய்யுமாறு கோரி வவுனியா - கண்டி வீதியில் அமைந்துள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக இன்று (06) கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

தாக்குதலுக்குள்ளான நபர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் 'பொலிஸார் பக்கசார்பாக செயற்படாது குழாய் கிணறு ராசனை கைது செய்', 'பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து தாக்கியவருக்கு பாதுகாப்பு கொடுக்காதே', 'பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீதும் நடவடிக்கை வேண்டும்' என்றவாறு கோஷங்களை எழுப்பினர்.

இதனையடுத்து, வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்ப்பாட்டக்காரர்களின் சார்பாக 10 பேரை அழைத்துப் பேசியிருந்தார். 

இதன்போது பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய வெளிநாட்டில் இருந்து வருகைதந்த நபரை 3 தினங்களுக்குள் கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் மீதும் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். அதன் பின்னரே ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றிருந்தனர்.

கடந்த மாதம் 15ஆம் திகதி வவுனியா, சின்னப் பூவரசன்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தரை புளியங்குளம் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உட்பட சில பொலிஸார் பிடித்து வைத்திருக்க, வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து அந்த தந்தையை தாக்கியிருந்தார். 

தாக்குதலால் பாதிக்கப்பட்ட நபர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_20240506_110331.jpg

IMG_20240506_110313.jpg

IMG_20240506_110455.jpg

புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய நபரை கைது செய்யக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் | Virakesari.lkIMG_20240506_110524.jpg

புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய நபரை கைது செய்யக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk

மட்டக்களப்பில் சிறுமிக்கு ஊசி ஏற்றிய சம்பவம் போலியானது !

2 weeks ago

Published By: DIGITAL DESK 3

06 MAY, 2024 | 04:53 PM
image
 

மட்டக்களப்பில் பாடசாலை சிறுமி ஒருவருக்கு இனம் தெரியாத நபரொருவர் ஊசி ஏற்றியதால் சிறுமி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதுடன், அந்த பொய் செய்தியை திரிவுபடுத்தி சமூக ஊடகங்களில் குரல்பதிவிட்ட ஆசிரியரை எச்சரித்து இன்று திங்கட்கிழமை (6)  விடுவித்துள்ளதாக  மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜி.எம்.பி.ஆர். பண்டார தெரிவித்தார்.

“நகரிலுள்ள  உள்ள பாடசாலையில் தரம் 5 ஆம் ஆண்டில் கல்விகற்றுவரும் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த வியாழக்கிழமை (02) பாடசாலை முடிந்து பிற்பகல் 2.30 மணியளவில் பாடசாலை வளாகத்தில் பெற்றோர் வருவதற்காக காத்திருந்துள்ளார்.

அப்போது அங்கு கறுப்பு நிறத்திலான ரவுசரும் சேட்டும் முகத்திற்கு கறுப்பு நிறத்திலான முகக்கவசமும் அணிந்துகொண்டு  இளைஞன் ஒருவர் வந்து பெற்றோரதும் சிறுமியின் பேரை கேட்டு பாடசாலையில் அனைவருக்கும் ஊசி பேடுவதாகவும், உங்களுக்கு ஊசி போடவில்லை என தெரிவித்து சிறுமிக்கு ஊசி ஒன்றை ஏற்றிவிட்டு அவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். அதனால் சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனவே ஏனைய பிள்ளைகள் கவனம் என ஆசிரியர் ஒருவர் குரல்பதிவிட்டு  சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது. இது தொடர்பாக மட்டு தலைமையக சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி சப் இன்பெக்ஸ்டர் விவேகானந்தன் தலைமையில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சம்பவதினமான கடந்த வியாழக்கிழமை (02) சிறுமியை பாடசாலையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு வீட்டிற்கு தந்தையார் மோட்டர் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.

அதன் பின்னர் சிறுமி தாயாரிடம் பாடசாலையில் இன்று ஊசி போட்டதாகவும் அதனால் வாந்தி எடுத்ததாகவும் மயக்கமாக இருப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தாயார் வகுப்பு ஆசிரியர், அதிபர் மற்றும் மாணவர்களின் பெற்றோரிடம் விசாரித்தபோது அப்படி ஊசி எதுவும் போடவில்லை என அறிந்து கொண்டுள்ளார்.

இதன் பின்னர் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை சிறுமிக்கு காய்ச்சல் காரணமாக பாடசாலைக்கு செல்ல வில்லை. இந்நிலையில், தந்தையாரிடம் தாயார் சிறுமி தனக்கு ஊசி போட்டதாக தெரிவித்த சம்பவத்தை தெரிவித்தநிலையில் மாலை 3 மணிக்கு மட்டு. போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் சிறுமியை அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலையில், சிறுமி தெரிவித்ததை தெரிவித்து இரத்த சோதனை செய்யுமாறு  தந்தையர் கேட்டுக் கொண்டதையடுத்து இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  பாடசாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி கமராவை சோதனை செய்த பொலிஸார்  சிறுமிக்கு ஊசி ஏற்றியதாக  சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என தெரிய வந்துள்ளது.

சிறுமி பொய்  செல்லியுள்ளார் என்பதும், சிறுமி தெரிவித்தமை பொய் என அறியாது அதனை ஆசிரியர்களுக்கு தந்தையார் தெரிவித்துள்ளார்.

அதனை தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் குரல்பதிவிட்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே குறித்த சிறுமி மீது ஊசி ஏற்றிய எந்த தடையமும் இருக்கவில்லை என வைத்திய பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாரஞ்சனி தெரிவித்தார்.

இதனையடுத்து சமூக ஊடகங்களில் குரல் பதிவிட்ட ஆசிரியரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டு அவரை எச்சரித்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் சிறுமிக்கு வைத்திய பரிசோதனையின் இடம்பெற்று வருகின்றது.

எனவே, இவ்வாறு உறுதிப்படுத்தப்படாமல் சமூக ஊடகங்களில் பதிவிட்டு  பொதுமக்களை பீதியடைச் செய்பவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் சிறுமிக்கு ஊசி ஏற்றிய சம்பவம் போலியானது ! | Virakesari.lk

போதனா வைத்தியசாலைகள் தொடர்பில் வெளியாகும் போலி செய்திகளால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை - சுகாதார அமைச்சர்

2 weeks ago

Published By: DIGITAL DESK 3

06 MAY, 2024 | 05:01 PM
image
 

(எம்.மனோசித்ரா)

போதனா வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் சத்திரசிகிச்சைகள் வெற்றியளிப்பதில்லை என தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை. எனவே மக்கள் இவ்வாறான போலி செய்திகள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் திங்கட்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

போதனா வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் சத்திரசிகிச்சைகள் வெற்றியளிப்பதில்லை என தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை. நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான போதனா வைத்தியசாலைகளில் ஆயிரக்கணக்கான சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

உலகில் இலவச சத்திரசிகிச்சைகளை வழங்கும் நாடுகள் பாரியளவில் இல்லை. ஆனால் இலங்கையில் சாதாரண காய்ச்சலுக்கான மருந்து உட்பட மூளை சத்திரசிக்சை வரை இலவச தரமான சுகாதார சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

கொவிட் காலத்திலுள் மிகவும் வெற்றிகரமாக தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. உலகில் வளர்ச்சியடைந்த பல நாடுகளை விட இலங்கை முன்னிலை வகித்தது. அந்த வகையில் இந்த கட்டமைப்பை மேலும் மேம்படுத்தி முன்னெடுத்துக் கொண்டு செல்வதற்கு துறைசார்ந்தவர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

யாழ் போதனா வைத்தியசாலை என்பது மிகவும் சிறந்த சேவையை வழங்கும் ஒரு வைத்தியசாலையாகும். எனவே போதனா வைத்தியசாலைகள் தொடர்பில் தெரிவிக்கப்படும் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் மக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.

போதனா வைத்தியசாலைகள் தொடர்பில் வெளியாகும் போலி செய்திகளால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை - சுகாதார அமைச்சர் | Virakesari.lk

விசா நடைமுறை குறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

2 weeks ago
06 MAY, 2024 | 08:26 PM
image
 

 

வெளிநாட்டவர்கள் எமது நாட்டுக்கு வரும்போது 30 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட  50 டொலர்  கட்டணத்தை  மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு இன்று திங்கட்கிழமை (6) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் , மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச விசா  சேவையை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேலும்,  வெளிநாட்டவர் ஒருவர்  நாட்டிற்குள் நுழையும் போது  அதற்கான விசா விநியோகிக்கும்  முழுப் பொறுப்பையும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் ஏற்கும் ஏற்கும் என்றும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விசா நடைமுறை குறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Virakesari.lk

கடன் மறுசீரமைப்புத் திட்டம் தோல்வி! – அரசாங்கம் கையில் எடுக்கவுள்ள புதிய துருப்புச் சீட்டு

2 weeks ago

கடன் மறுசீரமைப்புத் திட்டம் தோல்வி! – அரசாங்கம் கையில் எடுக்கவுள்ள புதிய துருப்புச் சீட்டு
May 6, 2024

அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் முற்றாகத் தோல்வியடைந்துள்ள நிலையில், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக பாரிஸ் கிளப் தொடர்பான ஒரு வேலைத் திட்டத்தையும் சீனாவுடன் மற்றொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தற்போது திட்டமிட்டுள்ளது.

வெற்றிகரமான வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு என்ற தலைப்பை எதிர்வரும் தேர்தல்களில் பிரதான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை மகத்தான வெற்றியைப் பெற்றதாகக் காட்டி அதனைப் பெரிய துருப்புச் சீட்டாக மாற்ற அரசாங்கம் திட்டங்களைத் தயாரித்திருந்தது.

ஆனால் அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத் திட்டம் முற்றாகத் தோல்வியடைந்துள்ளதாகவும், இலங்கையின் பிரதான கடனாளியான சீனா, பாரிஸ் கிளப் முன்வைத்த பிரேரணைக்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து அரசாங்கம் புதிய திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. இதன்படி, வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக பாரிஸ் கிளப் தொடர்பான ஒரு வேலைத்திட்டத்தையும் சீனாவுடன் மற்றொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தற்போது திட்டமிட்டுள்ளது.

அல்லது இரண்டு கொள்கைகளின் கீழ் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தைச்செயல்படுத்த வேண்டும். ஆனால் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக உலகில் எந்த நாடும் இதுபோன்ற இரண்டு திட்டங்களைச் செயல்படுத்தியதாகத் தெரியவில்லை. அப்படி நடந்தால், ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளுடன் செய்து கொள்ளும் கடன் ஒப்பந்தங்களை அது கடுமையாகப் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் அனைவரும் ஒரே திட்டத்தின் கீழ் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ஆனால் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், சீனா மற்றும் பாரிஸ் கிளப்புடன் தனது கடைசித் துருப்புச் சீட்டாக இரண்டு கடன் திட்டங்களை செயல்படுத்த ஒரு உடன் பாட்டை எட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/கடன்-மறுசீரமைப்புத்-திட்/

 
Checked
Tue, 05/21/2024 - 04:08
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr